திலகவதி பாட்டிம்மா தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கும் அறைக்குள் நுழைந்ததும் “யாரோ துபாய் காரன் பொண்டாட்டி வந்து பணம் எடுத்துட்டு போயிருக்காள். செண்டு வாசம் மல்லிகைப்பூவாசமும் மூக்கை துளைக்குது” என்று கூறிய படி கணவன் பாலசுப்பிரமணியன் தாத்தாவைப் அண்ணாந்துப் பார்த்து சிரித்தது.
கீழே சிந்தி கிடந்த மல்லிகைப்பூவைப் பார்த்த தாத்தா பாட்டியின் நுனிமூக்கு புடைக்கும் அழகை கனிந்து நோக்கி ஏதோ சொல்லவந்தவர் பாட்டியம்மாவின் வைரமூக்குத்தி ஜொளிப்பதை கண்டு களித்தார். பாட்டிம்மாவின் மஞ்சல்பூசிய நெற்றியில் வைத்திருந்த காசளவு குங்குமம் அடுக்கு செம்பருத்தி வண்ணம் காட்டி தாழ்பூ மணம் பரவசெய்தது.
பணம் எடுக்கும் பாட்டிம்மாவின் பின் கழுத்தை தாத்தா பார்த்துக்கொண்டு அருகில் நின்றார். பாட்டிம்மா கழுத்தில் இரட்டைவடம் தங்கசங்கிலி மின்னியது. தோளில் நழுவிய பட்டுத்துண்டை இழுத்து விட்டுக்கொண்டு அடர்த்தியான தனது வெள்ளை மீசையை வலது கையால் நீவினார். நெய் தடவிய வெள்ளைமீசை மின்னியது. முதுகுக்கு பின்னால் சாலையில் சென்ற வாகனங்களின் விளக்கொளி அவர்கள் முதுகை தடவி நழுவியது.
பாட்டிம்மாவின் வெள்ளைமுடிக்கொண்டையில் மலர்ந்து இருந்த கதம்பப் பூச்சரம் மணத்தது. மரிக்கொழுந்து வாசாம் அறைமுழுவதும் நிரம்பியது பணம் எடுக்கும் கவனத்தில் பாட்டிம்மாவின் முகம் கொண்ட கூர்மையில் பாட்டிம்மா சின்னக்குழந்தையாக தெரிந்தது. அந்த முதுதாயிக்குள் அரும்பும் குழந்தைமையை நினைத்து தாத்தா புன்னகைத்தார். பெண்மையின் இருபெரும் எல்லைகளை அந்த ஒரு முகத்தில் காட்டி விளையாடியது அந்த கணம். பாட்டிம்மாவின் பின் கழுத்தில் அரும்பிய வியர்வையை தனது வெள்ளை பட்டுத்துண்டால் ஒற்றினார் தாத்தா.
வெடுக்கென்று திரும்பி அவர் கையை தட்டிவிட்டு யாரும் தங்களை பார்க்கிறார்களா? என்று கண்களை சுருக்கி வீதியைப் பார்த்துவிட்டு, யாரும் பார்க்கவில்லை என்று தெரிந்ததும் புருஷனைப்பார்த்து பொய் கோபம் காட்டி முறைத்தது பாட்டிம்மா. தாத்தா மென்மையாக சிரித்தார். பாட்டிம்மாவின் முகத்தில் புன்னகைகீற்று. மீண்டும் அந்த முகத்தில் குழந்தையும் கிழவியும் ஒன்றுகலந்து வந்து அழகுகாட்டும் விளையாடல். பாட்டியின் கனிந்த பனம்பழம்போன்ற முகம் விளக்கொளியில் பளபளத்தது.
நெற்றில் விபூதியும் தூக்கிய வாரிய சுருண்ட அடர்த்தியான வெள்ளை முடியும், கன்னத்தில் பஞ்சுபோன்ற முடியும் தாத்தாவின் முகத்தை ஒரு வெண்கல் சிற்பமென நினைபடுத்தியது. தாத்தா பூசியிருந்த விபூதியின் பன்னீர்மணம் காற்றில் மணத்தது.
இயந்திரம் வெளித்தள்ளிய பணத்தை உருவி எடுத்து தாத்தாவின் வெள்ளை சட்டைபையில் திணித்தபடியே தாத்தாவின் நெஞ்சை தடவியது பாட்டிம்மாவின் தங்கவளையல் கை. கழுவியும்போகாத பாட்டிம்மாவின் உள்ளங்கை மஞ்சல் பூச்சால் கையில் தங்கம் மின்னியது.
“நீயே வச்சிக்க, நீயே வச்சிக்க” என்று தடுத்த தாத்தா, கையில் இருந்த துண்டால் நிதானமாக பாட்டியின் பின் கழுத்து வியர்வையை துடைத்துவிட்டு, தனது முகத்தையும் துடைத்துக்கொண்டார். அது பாட்டிம்மாவின் வியர்வை மணத்தை முகர்ந்ததுபோல் இருந்தது.
தாத்தாவின் முகத்தை அண்ணாந்துப்பார்த்த பாட்டிம்மா தாத்தாவின் மீசையில் ஒட்டி இருந்த பூவிதழை தனது ஆள்காட்டி விரலால் ஒற்றி எடுத்து தனது வாயில்போட்டு சாப்பி துப்பியது. அது காற்றில் ஓவியம் வரைந்துக்கொண்டே சென்று விழுந்தது.
தாத்தா தடுத்தும் கேட்காமல் சில ஐநூறு ரூபாய் நோட்டை தாத்தா சட்டையில் திணித்துவிட்டு, மீதி பணத்தை தனது கைப்பையில் வைத்துக்கொண்டு முன்னால் நடந்து ஏடிஎம் இயந்திரத்தின் வாயிலை தாண்டி படியிறங்கியது பாட்டிம்மா. பாட்டிம்மாவின் கைப்பையில் இருந்து ரோஜா இதழ்மணம் எழுந்தது.
படி இறங்கியபடியே “பக்கத்துவீட்டில் யாரோ நெய்சோறு சமைக்கிறார்கள், பொதினா வதங்கும் மணம்” என்றது பாட்டிம்மா.
சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தை ஓட்டிய பையன் இரண்டு கைகளையும் தூக்கி காற்றில் ஆட்டிவிட்டு மீண்டும் வண்டியை பிடித்துக்கொண்டான். பின்னால் சென்ற யாரோ வசைபாடுவது ஒசையாக கேட்டது. அவன் வண்டியில் இருந்து வந்த புகையின் மணத்தால் பாட்டிம்மா மூக்கை முந்தானையால் மூடிக்கொண்டது.
சிதம்பரத்தில் உறவினர்கள் வீட்டு கல்யாண வரவேற்பு. மகனும் மருமகளும் வேறு ஒரு கல்யாணத்திற்கு நேற்று இரவு சென்றுவிட்டு கல்யாணம் முடிந்து காலையில்தான் வந்தார்கள். மகனும் மருமகளும் தாங்கள் போய் வருவதாகத்தான் சொன்னார்கள். வீட்டுவேலையையும் கவனித்துக்கொண்டு அங்க இங்க என்று அலைந்தால் உடம்பு என்ன ஆவது என்றுதான் மருமகளை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு தாத்தாவும் பாட்டியும் வந்தார்கள். மாமனார் மாமியார் நல்லபடியாக போயிட்டு வரவேண்டும் என்று மருமகள் தவிப்பவது அவள் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிந்தது. பெரியவர்கள் இப்படி கல்யாணம் காட்சி என்று கலந்துகொண்டால் மனம் ஆனந்தபடுமே என்று நினைத்துக்கொண்டும் அனுப்பி வைத்தாள்.
“பாத்து இறங்கு, காலை நன்றாக ஊன்றி வைத்து இறங்கு” என்று பாட்டிம்மாவின் தோளை பிடித்துக்கொண்ட தாத்தாவின் கை பாட்டிம்மாவின் பட்டுப்புடவை வழவழப்பில் வழுக்கியது. “நீங்கள் பார்த்து வாங்க” என்று முந்தானையோடு சேர்த்து தாத்தாவின் கையை பிடித்துக்கொண்ட பாட்டி படியில் நிதனமாக அழுத்தமாக காலை எடுத்து வைத்து இறங்கியது. பாட்டிம்மாவின் கறுத்தபாதத்தில் மஞ்சல்பூச்சு மினுங்கியது. சிற்பச்சிலை பாதம். மஞ்சல்பளபளப்பு. மஞ்சலால் கறுப்பும், கறுப்பால் மஞ்சலும் தெய்வீக வண்ணம் காட்டியது. பட்டுப்புடவையின் தங்கசரிகையும் வீதி விளக்குகளும் பாட்டிம்மாவின் பாதத்திற்கு ஒரு பளபளப்பை கொடுத்தது.
பாட்டிம்மா கட்டி இருந்த பச்சை பட்டுப்புடவையின் பிரதிபளிப்பா? பாட்டியம்மாவின் பாதமும் பச்சையாக இருப்பதுபோல் விழிமயக்கு. தாத்தா கண்களை மூடி திறந்து மீண்டும் பார்த்தார். ஒவ்வொரு படிக்கும் பாட்டியின் பாதம் ஒன்று வெளிவந்து முகம் காட்டுவதும், மற்றொன்று உள்சென்று மறைவதுமாக நடனம் நடத்தியது. பாட்டிம்மாவின் வெள்ளிக்கொளுசு மெல்ல இசைத்தது.
பாட்டிம்மா இப்பொழுதும் பாதத்தில் மருதாணி வைத்து உள்ளது. மருமகள் வைத்துவிட்டது. மருமகளுக்கு பாட்டிம்மா வைக்கும்போது நடந்தது. மைவண்ண கறுப்புக்கு ஒரு சிறப்பு உள்ளது. அது நினைக்கும் அடர் வண்ணத்தை விழிகளில் அள்ளிப்பூசும் சக்திக்கொண்டது. அதனால்தான் அன்னை சத்தியை கறுப்பு மேனியள் என்று கொண்டாடுகின்றார்களா? அவள் கறுப்புதான் என்றாலும், கறுப்பாக மட்டுமா இருக்கிறாள்? சிவப்பாக நினைத்தால் அவள் கருஞ்சிவப்பு, நீலமாக நினைத்தால் அவள் கரும்நீலம், பச்சையாக நினைத்தால் அவள் கரும்பச்சை. அவள் வண்ணங்களின் கருவூலம். அவள் வண்ணத்தின் மூலம். அவளிடமிருந்தே அனைத்து வண்ணமும் வருகிறது. அனைத்துவண்ணமும் அவளிடமே சென்று ஒடுங்குகின்றது. அதனால்தான் அவள் கறுத்துகிடக்கிறாளோ? கறுத்தம்மா! கறுப்பாயி! கறுமாரி!
மங்கலைசெங்கலசம்முலையாள்மலையாள்வருணச்
சங்கலைசெங்கைச்சகலகலாமயில்தாவுகங்கை
பொங்கலைதங்கும்புரிசடையோன்புடையாள்உடையாள்
பிங்கலைநீலிசெய்யாள்வெளியாள்பசும்பெண்கொடியே
என்றுதாத்தாபாட்டிக்குமட்டும்கேட்கபாடியஅபிராமிஅந்தாதிப்பாடல்பாட்டியின்செவியை இனிக்க வைத்து, பாட்டியைகுழைய செய்தது. தாத்தாவின் கையை இருக்கிப்பிடித்தது பாட்டிம்மா. அது அன்பு உருவம்கொள்ளும் கணம். பெண்மை உருகும் தருணத்தில் வலிமை கொள்வது எப்படி?!
பாட்டிம்மா சாலையில் இறங்கி வீதியில் நின்றபோது. நடராஜர்கோயில் மேற்கு கோபுரம் விளக்கொளியில் வானைதொட்டது. அங்கும் மட்டும் பனியிறங்குபது போன்ற காட்சி.பாட்டி கையெடுத்து கோபுரத்தை கும்பிட்டுவிட்டுநடக்கதொடங்கியது.
சாலையோரத்தில் பூப்பந்துகளை ஏந்தி முழம்போட்டு கொடுத்துக்கொண்டு இருந்த பெண்களில் தாவணிப்போட்ட பெண்ணொருத்தி ஓடிவந்து முழம்போட்டுக்காட்டி பூவாங்கிக்கச் சொன்னாள். அவள் இடதுகையில் உயர்கூடையை தொங்கவிட்டிருந்தாள். தாத்தா இரண்டு முழம் பூவாங்கி பாட்டியிடம் கொடுக்க தலையில் கதம்பத்தோடு சேர்த்து வைத்துக்கொண்டு நடந்தது. பக்கத்தில் இருந்த டீக்கடையில் பெரிய இருப்பு வாணலியில் காயும் மசாலாபால் வாசம்காட்டி இழுத்தது.
பாட்டிம்மா கால் வைக்க போன இடத்தில் ஏதோ காகித குப்பை என்றுதான் தாத்தா பாட்டிம்மாவை தோள்தொட்டு இழுத்து நிறுத்தினார். அது காப்பித்தூள் வண்ண மணிபர்ஸ். அந்தபுழுதி படிந்த மணிபர்ஸை எடுத்து புழுதிபோக தட்டியபடியே யாராவது உடையவர்கள் தேடுகிறார்களா? வருகிறார்களா? என்று சுற்றும் முற்றும் பார்த்தார் தாத்தா.
தாத்தா பார்த்தவர்களில் சிலர் பேருந்து ஆட்டோ இருச்சக்கரவாகனத்தில் உட்கார்ந்து ஓடினார்கள்கள். நடந்தவர்கள்எங்கோஇருக்கும்வாழ்க்கையைஇங்கிருந்தேபிடித்தபடிநடந்தார்கள். எல்லா இயக்கங்களுக்குள்ளும் இருந்து வெளிவரும் ஒசை கலந்து வீதியே ஓசையின் காடாக இருந்தது. ஓசைக் காட்டுக்குள் உலவும் ஓசையின் பயணம். அங்குஇருந்தயாரும்அங்குஇல்லை. தொலைத்தவன் எங்கே ஓடிக்கொண்டு இருக்கிறோனோ? இங்கே தொலைத்துவிட்டு எங்கே தேடிக்கொண்டு இருக்கிறானோ? வாழ்க்கை ஒரு இடத்தில் கொடுக்கிறது. ஒரு இடத்தில் எடுக்கிறது. வேறு எங்கேயோ தேடவைக்கிறது. தாத்தா மீண்டும் பார்த்தார்.
மனிதமுகங்கள் மட்டும் ஏன் விடையில்லா கேள்விகளின் கூண்டுகளாகிவிட்டன?
தாத்தாகையில் இருந்த பர்ஸை வாங்கி பாட்டிம்மா திறந்துப் பார்த்தது. புது பர்ஸ். உள்ளே வெண்மையாக இருந்த பர்ஸில் இருந்து தோல்வாசம் வந்தது. இன்னும் பணத்திற்கு பழகவில்லை. பர்ஸின் உள் உறையில்ஒருநடுத்தரவயது பெண்ணின்கறுப்புவெள்ளை சிறியபடம்.
பர்ஸை வாங்கிய தாத்தா, பார்த்தமுகமாகஇருக்கிறதேஎன்று நெற்றியைசுருக்கிவலதுகையால்தடவினார்.
“அட நம்ம கீழ மூங்கிலடி அலமேலு” என்றவர். “அது போயிதான், ஒரு வருசம் ஆச்சே. அது புருஷன் சேதுபதி பர்ஸூன்னு நினைக்கிறேன்” என்ற தாத்தா பர்ஸை திறந்து பணம்இருக்கா என்று பார்த்தார். எல்லாம் புது நோட்டுகள், பணத்தை தாத்தா கையில் எடுத்ததும் பணம் ஒலித்தது. புதுப்பணத்திற்கு வாசமிருந்தது.
“பத்தாயிரம் பணம் இருக்குதிலகா” என்று தாத்தா முடிப்பதற்குள் பாட்டிம்மா “என்னை பஸ் ஏத்திவிட்டுட்டு நீங்க கீழ மூங்கிலடி போயி இந்தபணத்தகொடுத்துட்டுவாங்க” என்றது. வீதி ஓரம் பாணிபூரி விற்பவன் பாணிப்பூரியை எடுத்து தட்டில் அடுக்கிக்கொண்டு இருப்பதை பார்த்தபடி இருவரும் நடந்தார்கள்.
“சும்மாவிடுவியா? அவன்என்னஇந்தபணத்தபார்க்காதவனா? நாலும்ஆம்பிளபிள்ள, நாலுக்கும்கல்யாணம்பண்ணி வச்சிபேரன்பேத்திய பார்த்துவிட்டான். மகன்களுக்கு ஆளுக்கு ஒரு வீடு கட்டிக்கொடுத்து தனிகுடித்தனம் வைத்துவிட்டான். கொத்துவேலை கத்துகிட்டபெரியமொவன்துபாயிலபில்டிங்கட்டிக்கொடுக்கறகாண்ராக்ட்வேலைப்பாக்கிறான். இப்பகூடவண்டிக்கேட்டுலகடைவீடுன்னுகட்டிஅமக்களபடுத்தி இருக்கிறான். மகன் மாசத்துலலட்சகணக்குலசம்பாதிக்கிறான். சேதுபதி, எங்க என்ன பார்த்தாலும் பிள்ளைகள் பணம் சம்பாதிப்பதையும், வீடு நிலம் மனை கடை என்று நாளுக்கு நாள் சொத்தை வாங்கி குவிப்பதைப்பற்றிதான் பேசுவான். அவன் குரல்தான் தெரியுமே, சிதம்பரத்துல பேசுனா கடலூர்ல கேட்கும். உனக்கு போனே வேண்டாம்டா என்று நான்கூட கிண்டல் செய்வேன். ” என்று தாத்தாசிரித்துக்கொண்டேமனைவியைப்பார்த்தார்.
அதே நேரத்தில் பாட்டிம்மாவின் செல்போன் ஒலித்தது. மருமகள்தான். தெற்குவீதி பஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருப்பதாய் பாட்டிம்மா சொல்லிவிட்டு போனை நிறுத்தி பையில் வைத்துக்கொண்டது. மருமகள் அழைப்பு பாட்டிம்மா முகத்தில் நிலவொளி எழச்செய்தது.
“அதற்காக. ஊரான்வீட்டு பணத்தை நீங்களே வைத்துக்கொள்வீர்களா?” என்றுபாட்டிம்மாமுறைத்தது. முகத்தில்நீர்கிழியும்கோபம். கோபம்தோன்றியபோதேமறைந்துகொண்டும்வந்தது. தாத்தா முகம் கூம்பி மலர்ந்தது.
“சரிசரி. நம்மபெரியபயல்கிட்டகொடுத்தா, நாளை காலை பைக்கிலபோயிகொடுத்துட்டுவந்துடுவான். நான்பேத்திக்குபால்கோவாவாங்கியாறேன். நீஇங்கேயே உட்காரு” என்று பஸ்டாண்ட் சிமெண்ட் கட்டையை தனது துண்டால் விசிறி பாட்டிம்மாவை உட்கார வைத்து விட்டு “உனக்குஎன்னவேண்டும்” என்றார்.
“மருகளுக்கு குண்டுமல்லி பூ பிடிக்கும், வாய்விட்டு கேட்க மாட்டா அதுல ஐந்துமொழம் வாங்கிக்குங்க. குலோப்ஜாமுன்விரும்பிசாப்பிடுவாள்அதுல கொஞ்சம் தாராளமா வாங்கியாங்க” என்ற பாட்டி தன் தலையில் இருந்து மடியில் விழுந்த மல்லிகை பூவை தூக்கி முகத்திற்கு முன் வைத்துப்பார்த்தது.
பாட்டிம்மாக்கையில் இருந்த மல்லிகைப்பூவை புடுங்கி முகர்ந்தபடி “உனக்குஎன்னவேண்டும்?” என்று தாத்தா கேட்பதே சிரிப்பதுபோல் இருந்தது.
“எல்லாம்நமக்குதாங்க, உங்களுக்குபிடித்ததவாங்கிவாங்க. மகன்மருமகள், பேரன்பேத்திஎல்லாம்நாமரெண்டுபேரும்தானே” என்று சொல்லியபடிசிரித்தபாட்டியின்கன்னத்தில்குழிவிழுந்தது. வயதின்ஏற்றத்தால்அதுகொஞ்சம்நீண்டு வளைந்துவயதைநீட்டிக்காட்டியது. தாத்தா கனிவுடன் பார்த்தார். தாத்தா பார்ப்பது முதன்முதலில்அவர்பார்த்தஅந்தகன்னக்குழியின்ஆதி நினைவுஅலையை.
தாத்தா இடதுதோளில்முன்பின்கிடந்ததுண்டைஇழுத்து இடது வலதுதோளில் மாலையாகபோட்டுநடந்தார். எட்டுமுழபட்டு வேட்டியின்தங்கம்மின்னும்பெரியகரைஅப்போதுஒருகம்பீரத்தைகொடுத்தது.
மனைவியுடன் ஸ்கூட்டியில் போகும் மெக்கானிக்கிடமிருந்து டீசல்வாசம் வந்தது. பாட்டிம்மா அவன் மனைவி ஒதுங்கி தள்ளி உட்கார்ந்து இருப்பதை பார்த்து அவர்களுடனே பார்வையை அனுப்பி திரும்பி அழைத்துக்கொண்டது. அவள் ஐந்துமாத வயிற்றை ஒரு கையால் பிடித்திருந்தாள். தலையில் வைத்திருந்தபூவோடு வேப்பிலைக்கீற்றொன்றை சொருகியிருந்தாள்.
பேண்ட்சர்ட்டில்நடந்துபோவோரைபார்த்துவிட்டுமீண்டும்தனதுகணவன்நடக்கும்அழகைப்பார்த்ததுபாட்டிம்மா “என்ன பேண்ட்போட்டால்என்ன? நடக்கும்போதுவேட்டியில்ஆணுக்குஒருகம்பீரஅழகுவரத்தான்செய்கிறது. அது ஆடையின்உயிரோட்டம், ஆண்மையின்கோலாகலம். கோயில்குளம்கல்யாணம்என்று ஆம்பளபுள்ளைங்கவேட்டிக்கட்டிநடந்தாஅந்தஅழகேஅழகுதான். எப்பபுரியும்? யார்புரியவைப்பது?. ஏன்உலகம்தொட்டிச்செடிபோலவாழ்வதில்நாகரீகம்காணுது” பாட்டிம்மா தெற்குரதவீதியில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்திருந்தபடியே எதிரே மரவல்லி கிழங்கு வறுவல்விற்கும் தள்ளுவண்டியை பார்த்துக் கொண்டுஇருந்தது. அருகருகே தள்ளுவண்டியில் ஒரு பழக்கடையும். துணிக்கடையும். மரவல்லிக்கிழங்கின் வறுவல் மணம் மண்ணெண்ணெய் தீச்சுடர் வாசமும் இங்குவரை வந்து சென்றது.
பூ பொட்டலத்துடன் சண்முகவிலாஸ்இனிப்பையும் வாங்கிவந்ததாத்தா. “96 படம்ஓடுது. நாளைக்கு வந்து பார்ப்போமா? பேரன்பார்த்துவிட்டுவந்துநல்லபடம்என்றான்” என்றார்கண்கள்மின்ன.
சண்முக விலாஸ் இனிப்பின் நெய்வாசமும், குண்டுமல்லி பூவாசமும் பாட்டியின் முகத்தில் சுவை இதழ்களை மலர்த்தியது. பாட்டிம்மா உட்கார்ந்திருந்தபடியே நிமிர்ந்து தாத்தாவின் கண்களைப் பார்த்தபடியே “மைனருக்கு, காலேஜ்பையன்னுநினைப்பா? அது சின்ன வயசுல பிரிந்த காதலனும் காதலியும் காதலியின் கல்யாணத்திற்கு பிறகு சந்திச்சிகிற படமாமில்ல, மருமக சொன்னா. உங்களுக்குயாருபழையகாதலி? அந்தநினைப்பு இன்னும் இருக்கா?” என்றுபாட்டி சிரித்துக் கொண்டே தாத்தாவின் கையில் இருந்த இனிப்பையும் பூவையும் வாங்கியபடியே அவர் கையை தடவியது. பாட்டிம்மாவின் உள்ளங்கையில் இருந்து மஞ்சல் வாசாம் எழுந்தது.
பாட்டியின்பக்கத்தில்இருந்த சிமெண்ட் கட்டையைதுண்டால்விசிறிவிட்டுஉட்கார்ந்ததாத்தா. “நீதான் என் காதலி! நமக்கும்பழைய கால நினைப்புஇருக்குல்ல. அது என்னமோதிலகா. வயது கூடக்கூடத்தான் மனசு இளமையா ஆவுது. இன்னும் னசு உன்ன பார்த்த அந்த நாட்களில்தான் இருக்கு. மாமா மட்டும் அன்னைக்கு உன்ன கொடுக்கல என்று மறுத்திருந்தால் தூக்கிட்டுவந்து குடும்பம் நடத்திருப்பேன்”
பாட்டிதாத்தாவின் பேச்சை விரும்பினாலும், பக்கத்தில் உள்ளவர்கள் பார்ப்பதை பார்த்ததும்பேச்சைமாற்றவிரும்பி “யாரு, தருமதுரையில நடித்தானே அந்த பையனா? நல்லாத்தான்நடிக்கிறான். ஆனால், எல்லாபடத்திலேயும் ஒரே மாதரிதலையகுனிந்துகிட்டு. கழுத்தசாச்சிகிட்டுபேசுறான். நடிக்கனும்ன்னா அந்த பாத்திரத்திற்கு ஏத்த மாதரியே மாறிடனும்” என்றபடியேமுந்தானையைவிசிறிபோலஆக்கிதனக்குவிசுறுவதுபோலதாத்தாவிற்கும்விசிறியதுபாட்டிம்மா. “ஊரெல்லாம் காங்கிரட் கட்டிடம், புழுங்காமல் என்ன செய்யும். இராத்திரி மாதரியா இருக்கு? காத்தே இல்ல, காத்து இருந்தாலும் காத்தில் உயிரில்ல”
தாய்ப்பால் மணம் தொட திரும்பிய பாட்டிம்மா பின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் முந்தானையை விளக்கி குழந்தைக்கு பால் கொடுத்ததைப் பார்த்தது. பிள்ளையின் கடைவாயில் பால் ஒழுகியது, அந்த பெண்ணின் முந்தானையை இழுத்து குழந்தையின் வாயை துடைத்துவிட்டு, குழந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு குழந்தையின் முகத்தையும் தாயின் மாரையும் முந்தானையால் மூடிவிட்டது. குழந்தையிடமிருந்து ஜான்சனன் ஜான்சன் பேபி பவுடர் வாசம் பாட்டிம்மாவின் கையிலும் ஓட்டிக்கொண்டது.
“கண்ணு பட்டுடபோவுது, பிள்ளைக்கு மூச்சு முட்டாம பாலை பாத்துக்கொடு’’ குழந்தையின் தாய் பாட்டிம்மாவைப் பார்த்து வெட்கத்தோடு குழந்தைபோல் சிரித்தாள். அவள் மேல் உதட்டில் இருந்த மிளகு அளவு மச்சம் அவள் முகத்தை மீண்டும் பார்க்க தூண்டியது.
“திலகா!, நடிப்புன்னாசிவாஜிகணேசன்தான், ஓவர்ஆக்டிங்குன்னுஇந்தகாலத்துபயலுகசொல்லுவாங்க. அவருடையகண்ணின்மணிகூடநடிக்கும். உயர்ந்தமனிதன்படத்தில்காதலியைஇழந்துவிட்டு, பணக்காரமனைவியுடன்உயர்ந்தமனிதனாகநடிக்கும்பாத்திரம். அந்தகண்ணுக்குள்காதலிய இழந்த சோகமும், பணக்கார மனைவிக்காக பந்தாவும் பணக்காரத்தனமும்சேர்ந்துநின்றுஅவரைவேறுஒருமனிதனாககாட்டும். அப்பப்பாமனுசன்நடிப்பதற்காகவேபிறந்ததெய்வபிறவி. தன் மகன் என்று தெரியாமல் தன்வீட்டில் வேலையாளாக வைத்திருக்கும் தன்மகனை திருடன் என்று எல்லோரும் சொல்லும்போது, தான் நம்பியவன் ஏமாற்றிவிட்டானே என்ற தன் நம்பிக்கை தொலைந்த சோகத்தில் ஒரு பார்வை, ஒரு பாவனை காட்டுவார், அதெல்லாம் நடித்து உருவாக்க முடியாது. தானா வரனும் திலகா!.” தாத்தாசிவாஜிகணேசன்நடிப்புஉலகத்திற்குள்ஆழ்ந்துபோனார். பன்னீர்புகையிலை மணக்க மணக்க வெற்றிலைப்போட்டுக்கொண்டு வந்த பெரியவர் திரும்பி பஸ்வருகிறதா என்று பார்த்தார்.
“போதும்போதும்பஸ்வருகிறதுவாங்கபோகலாம். வரும் ஞாயிற்குகிழமை பிள்ளைகளோடவந்துபடம்பார்க்கலாம்” என்றுபாட்டிதாத்தாவின்கையைபிடித்துஇழுத்துக்கொண்டுநடந்தது.
எதையோ நினைத்துக்கொண்டு நின்ற பாட்டிம்மா “ஏனோமனம்இந்தபர்ஸையும்பணத்தையும்அலமேலுபுருஷன்கிட்ட இன்னைக்கேகொடுத்துட்டுபோன்னுசொல்றமாதரிஇருக்குதுங்க. ரெண்டுபேரும்கீழமூங்கிலடிபோயிகொடுத்துட்டுஅப்படியேஒருஆட்டோபிடித்துக்கொண்டுவீட்டுக்குபோயிடுவோம். வெள்ளாத்ததாண்டினாநம்மஊருதானே”
“நாளைக்கு கொடுத்துடுலாம் திலகா”
“எவ்வளவுபணம்இருந்தால்என்ன? தொலைந்தபணத்தில்மனம்சிக்கிபடும்பாடு, சொல்லிமாளாது. என்னத்துக்காக வைத்திருந்த பணமோ? மண்டபம்பஸ்வருதான்னுபாருங்கள்” என்றபாட்டிம்மாமீண்டும்வந்துஉட்கார்ந்துக்கொண்டு. கைப்பையை திறந்து போனை எடுத்து மருமகளுக்கு கீழ மூங்கிலடி போயிட்டு வருகிறேன் என்ற செய்தியை சொன்னது. பாட்டியின் கைப்பையில் இருந்து ரோஜா இதழ்மணம் மீண்டும் வெளிவந்து பரவியது.
“பணத்தை கொடுக்கவேண்டாமுன்னுநினைக்கிலதிலகா, அந்தஆள பார்த்தாபுள்ளைகள்புராணம்பாடியேகொன்னுடுவாறு. அதான். அதும்பெரியபையன்துபாய்போனதிலிருந்து, கையிலகாசுபுரளஆரம்பித்ததும். ரொம்பபேசுறான்”
“மனுசன்னா அப்படிதாங்க. எல்லா மனுசனுக்கும் நாம பெருசுங்கற நினைப்பு இருக்கத்தானே செய்யும்” பாட்டிம்மா கொஞ்சியபடி தாத்தாவின் நடுவிரலை நீவியது.
“போனமாசம்பரங்கிப்பேட்டைசந்தையிலபார்த்தேன் திலகா. பார்த்துட்டுபார்க்காதமாதரிபோகக்கூடாதேன்னுடீசாப்பிடகூப்பிட்டேன். பெரியமகன்வண்டிக்கேட்டில் புதுசா இப்ப பெரியவீடுகட்டிகுடிபோயிருப்பதைசொன்னார். பேரபிள்ளைகள்சேலத்திற்கு ஹாஸ்டலில்படிக்கபோவதாலமருமகள் வண்டிகேட்டுவீட்டுக்குப்போயிடுச்சாம். மகன் இந்த வீட்ட பூட்டிட்டு அங்க போயி இருங்குறான். பெரிய மருமகள் தங்கத்தில் கொளுசு வாங்கி இருக்காம். மருமகள் யாரும் இவர் பேச்சை கேட்பதில்லை என்று ஊரில பேச்சு” என்றுகூறிவிட்டு. தூரத்தில்வரும்பஸ்கீழமூங்கிலடி போகுமாஎன்றுகையைதூக்கிநெற்றிக்குமேலேவைத்துப்பார்த்தார். விளக்குவெளிச்சத்தில் கண்கள் கூசியது.
கடலூர் பஸ் வந்து நின்று ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றது. பின்னலேயே சேலம் பஸ் வந்து நின்றது. குல்பி ஐஸ் விற்பவன் அருகில் வந்து மணியடித்துக்கொண்டு நின்றான்.
“அலமேலும்அவரும்ஒற்றைகாணியைவைத்துக்கொண்டுபட்டப்பாட்டைநினைத்தால்கண்ணுலதண்ணிவந்துரும். இந்தநாலுபுள்ளைகளைவளர்க்கஅலமேலுகொஞ்சம்பாடாபட்டா. அவபட்டபாட்டுக்குஆண்டவன்கண்ணதொறந்துட்டான். ஆத்தாலதான்விட்டுட்டானுங்கஅப்பனையாவதுநல்லாபார்த்துக்கிட்டாசரிதான். அலமேலு அந்த பயலுகள வைத்துல வைச்சிகிட்டு காய்கறிகூடைய தலையில தூக்கிகிட்டு நடந்தத நினைச்சா கண்ணுல தண்ணிவந்துவிடும் ” என்றுபாட்டி கண்களை துடைத்துக்கொண்டது.
“எத்தனை கஷ்டப்பட்டு அது குடும்பத்தை காப்பாத்தியது. வாழ்க்கை வந்தபோது ஏன் உட்கார்ந்துசாப்பிட கொடுத்துவைக்கல. வாழ்க்கையின்னா அப்படித்தான்போல. அதுக்கு வயிலுத்துல கட்டி வந்துடுச்சின்னு அவரும் பார்க்காத டாக்டரில்ல. ஒரு கோயில் குளத்த விட்டதில்ல. அது அவருக்கு பொண்டாட்டி இல்ல தெய்வம். அது செத்த அன்னைக்கு மனுசன் அழுத பாத்து பதறிவிட்டேன்” தாத்தாவும் கண்களை துடைத்துக்கொண்டார்.
தாத்தா கொஞ்சநேரம் எதிர்திசையைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்தார்.
அந்த மனநிலையின் வெக்கையை தணிக்க நினைத்த தாத்தா “அம்மாபுரத்தில் என் கூட்டாளி கல்யாணசுந்தரம் இருந்தானே” என்று ஆரம்பித்தார்.
“யாரு பால்கார கல்யாணமா?”
“ஆமாம் அவன்தான். அம்பிகா நடித்த படத்த பார்த்தா அன்னைக்கு ராத்திரி பொண்டாட்டிய போட்டு அடித்து இருப்பான். பாவம், மாமியார்தான் தவி்ட்டு ஒத்தடம் கொடுக்கும். ஒருநாள் அது கிடந்த கிடைய பார்த்துட்டு அடிக்கபோயிட்டேன்”
“ஏன்”
“அத இப்ப சொல்ல முடியாது, ராத்திரி சொல்றேன்“ என்று தாத்தா கண்சிமிட்டினார்.
“நீங்களும் உங்க கூட்டாளியும். நீங்கதான் மெச்சிக்கணும், இதுமாதரி கூட்டிளியெல்லாம் உங்களுக்குதான் கிடைக்கும். ஆளபாரு” என்று பாட்டி உதட்டை சுழித்துக்காட்டிவிட்டு. “எனக்குமட்டும் இது தெரிந்து இருந்தால் எம்ஜியார் படத்துக்கு கூட்டிட்டுபோ இல்லாட்டி பட்டினி போட்டுறுவேன்னு சொல்ல வச்சிருப்பேன். அம்பிகாவாம் அம்பிகா. விலக்கமாத்து கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கேக்குதா?”
தாத்தா கடைவா பல்தெறியிற மாதரி அண்ணாந்துப்பார்த்து பஸ்டாப் என்பதையும் மறந்து பகபகவென்று சிரித்தார். பாதிநிலா வானம் நட்சத்திரங்களால் மின்னயது.
பாட்டி சுதாரித்துக்கொண்டு. “அலமேலுவோட மற்ற புள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க” என்று தாத்தாவை பஸ்டாப்புக்கு இறங்கிவரவைத்தது.
“ஒருபையனுக்குசொந்ததங்கச்சிமகளகட்டிவைத்திருகிறார். எப்பசந்தைக்குவந்தாலும்மருமகபேரபுள்ளைங்களுக்கு என்று மூட்டைதான்கட்டிதூக்கிபோவார். பொண்டாட்டி இல்லங்கற கவலை இருக்குமி்ல்ல. ஆயிரம் அன்பு இருந்தாலும் அம்மாவின் அன்புபோல வருமா? ஆயிரம் உறவு இருந்தாலும், மனைவின் உறவாகுமா? மனுசன் இளைத்துதான் போய்விட்டார். மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காததுபோல அந்த பேச்சு மட்டும் இன்னும் வெங்கலமணிதான் ” என்றுபாட்டியின்கையைமெல்லதடவினார்.
அலமேலு புருஷன் இளைத்துவிட்டார் என்ற இடத்தி்ல் பாட்டிம்மா தாத்தாவை நிமிர்ந்து கூர்மையாகப்பார்த்துவிட்டு தலையை “இல்லை” என்பதுபோல ஆட்டிக்கொண்டது.
கடலூர் பஸ்வந்து நின்றது. சென்னை பஸ்நிற்பதுபோல வந்து நிற்காமலே போய்விட்டது. ஆரஞ்சி கலர் சுடிதாரில் காலேஜ் பெண்ணொருத்தி ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு செல்போன் பேசியடிபோனாள்.
“நீங்கபோயிஎதுத்தாபலஇருக்கிறபாண்டியன் மெஸ்சுல ஒரு சிக்கன் பிரியானி பார்சல்வாங்கிவாங்க” என்று தாத்தாவை அவசரப்படுத்தியது பாட்டிம்மா.
பாட்டியை தாத்தா வித்தியாசமாக பார்த்தார். பாட்டி ஹோட்டலில் சாப்பிடாது. பாட்டியால் தாத்தாவும் ஹோட்டலில் சாப்பிடுவதையே விட்டுவிட்டார்.
“ஏன்?”
“போயிவாங்கிட்டுவாங்க. ஒத்தவீட்டு கனகம், பிள்ளதாச்சி, ஏதாவது வாயிக்கு ருசியா தின்னா தேவலம்போல இருக்கு என்று புருஷன்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தத வரும்போது கேட்டேன். குடிகார பைய என்னத்த வாங்கிட்டு வரபோரான். பஸ்சுவந்திடபோகுது” என்றுபாட்டிம்மாதாத்தாவைதள்ளியது.
தாத்தாஎதுவும்சொல்லாமல்மடமடவென்று நடந்து பிரியாணி கடைக்கு சென்றார்.
சோன்பப்புடி வாசம் வர பாட்டிம்மா திரும்பிப்பார்த்தது. கண்ணாடி குடுவையை திறந்து சோன்பப்புடியை அள்ளி காகித சுருளில் மடித்துக்கொண்டு இருந்தான் தள்ளுவண்டிக்காரன்.
பார்சலுடன் வந்து தாத்தா நிற்கவும் கீழ மூங்கிலடி மினி பஸ் வரவும் சரியாக இருந்தது. தாத்தா கையில் இரண்டு பார்சல் இருந்தது.
பாட்டிம்மா பார்சலை வாங்கியபடியே “சோற்றை அடி பிடிக்க விட்டுட்டான்” என்றது. பாட்டிம்மாவின் வாச நிபுணத்துவம்.
பஸ் கீழ மூங்கிலடியில் அலமேலு வீட்டுக்குமுன்னாலேயே நின்றது. வீதியின் இரண்டு பக்கமும் அலமேலு பிள்ளைகள் வீடுதான். ஏதோ ஒரு வீட்டின் கறிகுழம்பு வாசம் நாசியைவிசாரித்து. நாக்கை ஊறவைத்தது.
“பணத்தை நாளைக்கு வந்து கொடுத்துக்கலாம் வா வீட்டுக்கு போயிடுவோம்” என்றார் தாத்தா.
“நாளைக்கு நாளைக்கு என்கிறது உங்க குடும்ப மந்திரமா” என்று முறைத்த பாட்டிம்மா எட்டி நடக்க தொடங்கியது.
பாட்டிம்மா கையை தாவிப்பிடித்த தாத்தா பாட்டிம்மாவின் கோபத்தை தணிக்க “இதுதான்சின்னமகன்வீடு, கதவு ஜன்னல் எல்லாம் தேக்கு” என்றார். வீட்டை திரும்பி பார்த்த பாட்டிம்மா “இந்த வீட்டுக்காரி மத்திமீனு வறுவலும், ரசமும் வைத்திருக்கிறாள்” என்றது. பாட்டிம்மாவின் முகத்தில் கோபம் இருந்த இடமே தெரியவில்லை.
“நல்ல மூக்கு உனக்கு” என்று தாத்தா பாட்டிம்மாவின் நுனிமூக்கை ஆள்காட்டி விரலால் தட்டினார். பாட்டிம்மாவின் வலதுபக்க வைரமூக்குத்தியில் இருந்து ஒளி பூக்கள் உதிர்ந்தது. பாட்டிம்மாவின் வைரதோடு வெண்பூக்காய் சிரித்தது.
இதுமூன்றாவதுமகன்வீடு. இவனுக்குதான்தங்கச்சிமகளைகட்டிவைத்திருக்கிறார். அதோஅதுதான்அவர்தங்கச்சி” தாத்தாசுட்டிக்காட்டிய வீட்டில் தங்கச்சிவரந்தாவில் உட்கார்ந்து தட்டை மடியில் வைத்துசாப்பிட்டுக்கொண்டுஇருந்தது. அங்கிருந்துதான்கறிகுழம்புவாசம்வருகிறது.“கறிக்குழம்புக்கு இஞ்சி அதிகமாக அறைத்துவிட்டு இருக்கிறாள். ஒரே இஞ்சி வாசமாக இருக்கு, அப்பதான் கறிவேகுன்னு நினைச்சிருப்பா, ஆனா குழம்போட சுவையை அது குறைத்துவிடும். கறியும் இஞ்சிவாசம் அடிக்க ஆரம்பித்துவிடும்” என்றது பாட்டிம்மா. தாத்தா மீண்டும் பாட்டியின் மூக்கை தட்டப்பார்த்து வலிக்காமல் கிள்ளிவிட்டார்.
“இதுதான்இரண்டாவதுமகன்வீடு. டூரிஸ்ட்வேன் வாங்கி வச்சி ஓட்டி சம்பாதிக்கிறான்” என்றுஇடதுபுறம்சுட்டிகாட்டினார்.இந்தமருமகள்புதுசத்திரம்ஸ்டேசனில்போலிஸ். வரந்தாவில் உட்கார்ந்திருந்த குழந்தைகள் சிக்கன் சால்னாவில் ஹோட்டல் பரோட்டாவை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். காற்றில் விஸ்கிவாடை. பாட்டிம்மா முந்தானையால் மூக்கை மூடிக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டது. “எப்படிதான் குடிக்கிறனுவோளோ? எதுக்குதான் குடிக்கிறானுவோளோ?” என்று பாட்டி சொன்னபோதுதான் தாத்தாவின் மூக்கிற்கு டாஸ்மாக் வாடை வந்து தொட்டது.
தாத்தா அதை சாக்காக எடுத்துக்கொண்டு “வா திலகா போய்விடலாம். நாளைக்கு பையன்கிட்ட கொடுத்துவிடுவோம்” என்றார்.
பாட்டிம்மா நின்று தாத்தாவை துளைத்துவிடுவதுபோல் பார்த்தது.
“சரி சரி” என்ற தாத்தா. “அதோஅதுதான்பெரியமகன்வீடு. இதுதான்முதலில்கட்டியவீடு. இதில்தான்அலுமேலும்அவரும்வாழ்ந்தார்கள். அந்த வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கொட்டைகையில் டாக்டர் நின்றது. பக்கத்தில் மாடுகள் நிற்பது நிழலாக தெரிந்தது.
“ வீடுபூட்டிஇருக்கே” என்றுபாட்டிமுடிப்பதற்குள்வரந்தாவில்யாரோபடுத்திருப்பதுதெரிந்தது. ஜீரோவாட்பச்சைவிளக்குமட்டும்போர்ட்டிகோவில் தனித்துஎரிந்தது.
“சேதுபதி” என்றுதாத்தாஅழைத்ததும். “யாரது” என்று சுரத்தி இல்லாமல் புரண்ட சேதுபதி பின்பு மெதுவாக எழுந்து அவிந்த வேட்டியை இழுத்து கட்டிக்கொண்டே தளர்ந்து நடந்து வந்தவர் பாட்டியைபார்த்ததும் “வாங்கம்மா.வாங்கம்மா” என்றுகைபதறினார்.
“இது சேதுபதி குரலா” தாத்தாவால் நம்பமுடியவில்லை. வெங்கலமணியில் அலுமினிய பாத்திர ஓசையா?
“வராதவங்கவந்திருக்கிங்க. உட்காரவைக்ககூடஇடமில்லையே. அவளோட எல்லாம் போச்சி” என்றவர்கைஅவரையும் அறியாமல்குவிந்தது. கண்களின்ஓரத்தில்விளக்குஒளிமுத்தாகமின்னியது.
அந்த சின்ன வரந்தாவின் அடுக்கிய மூட்டைகளின் இடையில்தான் சேதுபதி படுத்திருந்தார் என்பதை புரிந்துக் கொண்டார் தாத்தா. சாக்குநெடி, புழுங்கல்நெல்மணம், தவிட்டு மணத்தோடு தவிட்டுபூச்சி வாசம். வேப்பம் புண்ணாக்கு நாற்றம். பாட்டிம்மாவிற்கு நெடியேறியது.
அதிகநேரம் அங்கு நின்று அவரை சங்கடப்படுத்த விரும்பாவில்லை தாத்தா.
“சிதம்பரம்போனப்ப, ஒருபர்ஸ்கீழகிடந்துஎடுத்தேன். பார்த்தா! அதில்உங்கமனைவியோட போட்டோ. உங்கபர்ஸுன்னுதெரிந்ததுஅதகொடுத்துட்டுபோகலாமுன்னுவந்தோம். நேரம்ஆகிவிட்டது, அப்புறம்ஒருநாளைக்கு பகல்ல வரோம்” என்றுசொல்லியபடிதாத்தாபர்ஸைஅவர்கையில்தினித்தார். அதைவாங்ககூடமனம்இல்லாமல்பேச்சுஎழாமல்சேதுபதிநின்றார். பசி களைப்பு கண்களில் தெரிந்தது. அவர் கண்களில் ஈரம் தெரியாமல் இருக்க குனிந்துக்கொண்டார்.
தாத்தாவுடன் திரும்பி நடக்க தொடங்கிய பாட்டிம்மா கால்கள் தயங்க நின்றது “இந்த வீட்டில் கஞ்சிவாசம்கூட வரவில்லையே” என்ற நினைப்பு பாட்டிம்மாவிற்குள் எழுந்ததும் மனம் பதைத்தது. கைகள் நடுங்கியது.
கையில் வைத்திருந்த பிரியாணி பார்சலில் ஒன்றைபாட்டிம்மா அவர் கையில் வைத்ததும் அவசரமாக வாங்கி நெஞ்சோடுஅனைத்துக்கொண்டார்.
“அம்மா!” என்றசொல் அவரின் ஆழத்தில் இருந்து எழுந்துவந்து அவர் உதட்டில் உட்கார்ந்து கொண்டது. வெளிவரவில்லை. உதடு கோணி துடித்தது. “அம்மா!” என்ற அவரின் அந்த சொல்லுக்கு ஓசையில்லை ஆனால் பாட்டிம்மாவிற்குள் அந்த சொல் கேட்டுக்கொண்டே இருந்தது.
அவர் கண்ணில் மின்னிய நீர்த்துளி பாட்டியின் கையில்பட்டு விளக்கின் ஒளிசிதறலாக மாறியது.
வீடு வரும்வரை தாத்தாவும் பாட்டியும் பேசிக்கொள்ளவி்ல்லை ஆனால் வீடுவரும் வரை தாத்தாவின் கையை பிடித்தபடியே இருந்தது பாட்டிம்மா.
– அக்டோபர்-16-2019