நிலா வந்தது. நந்தா என்ற அந்தப் பெண் சிறுக்கியைப் பார்க்கும் போது, அப்படித்தான் தோன்றியது. அவளைச் சுற்றி பெரியதோர் ஒளி வட்டம் தோன்றி சூழ்ந்து மயக்கிற்று. இது அவளுடைய பாவனை நிழல, தானே சிருஷ்டித்துக் கொண்டு, இறுமாப்பாக அவள் எங்கள் வீட்டின் முற்றத்து ஒர்றையடிப் பாதை வழியாக வரும் போது தான் வாசலில் நின்றபடியே, நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. அரை குறையாகப் படித்து விட்டு வீட்டில் இருந்த நேரம். இது வீடல்ல. ஓர் அரண்மனை மாதிரி அப்பா இதை செதுக்கி வைத்திருந்தார். அந்தக் காலத்தில் இதை கட்டி முடிக்க எவ்வளவு காசு முடிந்திருக்குமென்று எனக்குத் தெரியவில்லை.
ஏழெட்டு அறைகள் கொண்ட பெரிய வீடு. நடு முற்றம் இல்லாமல் அமைந்த வீடு. முன்னும் பின்னுமாய் நீண்ட வராந்தாக்கள். அவற்றின் சுவர் முழுதும் அணி செய்யும் சுவாமி படங்கள். பிள்ளையார் லட்சுமி என்றில்லாமல் கிருஷ்னனின் லீலையைக் கனகச்சிதமாக வரைந்து காட்டும் அழகான படங்கள் வேறு. நாள் முழுக்கப் பார்த்து கொண்டேயிருக்கலாம் அவற்றின் அழகை. அழகான வாழ்க்கை தான் இது, அழகான மனிதர்கள் வேறு. ஆனால், இவற்றின் சிரஞ்சீவி இருப்பு எத்தனை நாளைக்கு?
அது தான் காலம் பதில் சொல்லி இருக்கிறதே? எல்லா இடிபாடுகளுக்கும் நடுவே, கண்ணை விழித்துப் பார்த்தால், நந்தா எனும் நிலாவே தெரிந்தாள். யார் இந்த நந்தா? உறவு விட்டுப் போகாத ஒரு பாசத் தொடர்பு எனினும் அவள் நிலாவாகத் தெரிந்தாள்.
இருட்டைக் கிழித்துக் கொண்டு அந்த நிலா தேவதை ஒளியூற்றாய் வருவது தெரிந்தது அப்போது அவளுக்கு பத்துப் பன்னிரண்டு வயதிருக்கலாம். பள்ளிக் கூடம் போகிறாள். அதுவும் பெரிய கல்லோரிப் படிப்பு. யாழ் இந்து மகளிர் கல்லூரியில் எத்தனையாம் வகுப்போ தெரியவில்லை, அதற்குள் சிறகு முளைத்து வானிலேயே பறக்கிற பரவசம் அவளுக்கு.
முதுகில் புத்தகப் பை சுமந்து கொண்டு, உலகமே தன் கைக்குள் என்பது போல், ஏகத்துக்கு அவள் பரப்பிய அகங்காரப் பார்வை நெஞ்சையே சுட்டெரித்துவிடும் போல். நான் நிலை குலைந்தேன். இந்த நிலை குலைதல் இத்தோடு முடியவில்லை.
இதுநடந்து ஒரு யகம் போலாகிறது, வாழ்க்கை திசை மாறிப் போனது. நந்தாவுக்கு கனடா வாழ்க்கை அவளின் காலுக்கடியில் புதைந்து போனது எனது வீடு. அவள் நிலாவாக இருந்தது, வாழ்ந்தது எல்லாம் ஒரு கெட்ட கனவு போலாகியது. அவள் எப்போது அக்கினிப் பிழம்பாய் தோன்றி, சுட்டெரிக்கும், கறுப்பு நிலா போலானாள்? அது ஒரு பெரிய சோகக் கதை.
எனக்கு கல்யாண வாழ்க்கையே ஒரு பெரும் சவால். கை விலங்கு பூட்டி, என் கழுத்தில் மங்கல நாண் ஏற்ற, என் கணவரை இழுத்து வந்த போதே, எனக்குப் புரிந்திருக்க வேண்டும். என் தலையைக் கொய்து நெருப்பில் போடத்தான், இந்தக் கல்யாண, காட்சி நாடகமென்று. இதில் தலையே போய் விட்ட வெற்று மனம் தான் எனக்கு. எப்பொழுதோ கண்ணீரும் கம்பலையுமாகத் தான், நான் நடந்து பாதை அது முடிவுறாத நிலையிலேயே மீண்டும் நான் தீக்குளித்து எழ நேர்ந்தது. எங்கே எழுந்தேன்? விழுந்தது நரகம் தான். நரகம் எப்படி இருக்குமென்று ,சூனியம் பிடித்து வெறிச்சோடிக் கிடக்கிற, என் வீட்டைப் பார்த்தேகண்டு, கொள்ளலாம். அப்பா எவ்வளவோ கனவுகளூடன் ஆசை ஆசையாய் அரும் பாடுபட்டு கட்டித் தந்த பெரிய வீடு.
அம்மா வீட்டிற்குப் பக்கத்தில் அப்படி அவர் கட்டித் தந்த வீடு, இன்று காற்றில் கரைந்து, காணாமலே போய் விட்டது. அந்தக் காலத்தில் சீமெந்து தட்டுப்பாடு நிலவியதால், பர்மிட் எடுத்துத் தான் அப்பா அதற்காக காங்கேசன் துறை சீமெந்து பாக்டரிக்கும் போய்த் தான் அதை வாங்க நேர்ந்தது. அதில் நானும் என் குடும்பமும் சிரஞ்சீவியாக இருப்போம் என்ற அதீத நம்பிக்கையுடன் அவர் கட்டித் தந்த வீடு.
அதிலே நான் உயிர்ப்புடன் வாழவிலையென்பதே கசப்பான உண்மை. விதி வலிது மனதில் சந்தோஷ இருப்பு வந்தால், தான் வாழ்ந்த கதை நிலைத்திருக்கும் சிறு வயதிலிருந்தே அன்பு வழிபாடு செய்தல் ஒன்றே என் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஆசை வலையில் சிக்கி அழிந்து போகும் நிலை எனக்கு வராமலே போனது. பெரிய பெரிய ஆசைகள் எதுவும் எனக்கு வரவில்லை. கல்யாணம் குறித்து வருகின்ற கனவுக் கோட்டையும் எனக்கு வராமலே போனது. ஆகவே என்னைத் துடிக்க துடிக்க அழ வைத்து குளிர்காய்கிற ஒரு கணவனுக்கு வாழ்க்கைபட்டும் அன்பில் சுற்றும் குறையாத, ஓர் ஆதர்ஸதேவதையாகவே என்னால் இருக்க முடிந்தது. பிறர் கண்ணீரைத் துடைக்கும் , கருணை மனம் ஒன்று மட்டுமே எனக்கு வாய்த்த சிரஞ்சீவியான சொந்த இருப்பு.
அப்படியும் என்னைப் புறம் தள்ளி ஓடமட்டுமல்ல, நெஞ்சில் சுட்டு வீழ்த்தவும் தான் இந்த வாழ்க்கை சவாரி. வாழ்க்கை மனிதர்கள் அதில் முக்கியமான ஒரு வில்லிப் பாத்திரம் தான் இந்த நந்தாவுக்கு.
அவள் வில்லியவதற்கு அவள் ஏற்றுக் கொண்டிருக்கும் பாவனை நிழல் தான் காரணம். எத்தனையோ அழிவுகளை, மனிதர்களின் மரணசம்பவங்களைக் கண்டும் அன்பு வழிபாட்டினையே மறந்த அரக்கி தான் அவள் தான். ஒரு பூரண நிலா பெரிய அழகி என்ற திமிர்தான் அவளுக்கு. அது அவளூடனே நிற்காமல், பிறரை எரிப்பதற்கே, என் மனதில் அவள் ஒரு கறுப்பு நிலாவாகி விட்டிருந்தாள்.
இது நடந்துஒரு யுகம் போலாகிறது. ஒட்டாத கணவனால் எனக்கு மூன்று பிள்ளைகள். மூன்றும் பெண் பிள்ளைகள் தாம். மூத்தவளுக்கு பதினாறு வயசு. தாரணி என்று பெயர் அப்பா மாதிரி நெடுதுயர்ந்த தோற்றம் போஷாக்குக் குறைபாட்டினால் நோஞ்சான் மாதிரி இருப்பாள். ஆனால் படிப்பிலே படு திறமைசாலி. கணக்கு நன்றாக செய்வாள். நந்தாவெனும் கறுப்பு நிலாவால் அதுவும் கவிழ்ந்து, வாழ்க்கையும் போனது.
இருவரும் ஒரே கல்லூரியில் தான் படித்தார்கள் . ஒன்றாகவே பஸ்ஸில் போய் வருவார்கள். இருவர்க்கும் சம வயது தான். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அப்போது நான் வாசலில் இருந்தேன். கல்லூரி விட்டு நந்தா வேலி பொட்டு வழியாகப் போய்க் கொண்டிருக்க, என் முன்னால் நிலை குலைந்த கோலமாய் இருள் கவிந்த ஒரு நிழல் சித்திரமாய் தாரணி வந்து நிற்பதைப் பார்த்ததும், பெரும் திடுக்கீடாக இருந்தது.
என்ன பிள்ளை இடி விழுந்த மாதிரி, இந்தக் கோலம். ஏதேனும் விபரீதம் நடந்திட்டுதோ என்று பதறிய குரலில் நான் கேட்க பெரும் விம்மலுடன் குரலை உயர்த்தி அவள் சொன்னாள் நந்தா முதல் அழகி.
அதற்கு நான் சொன்னேன் அவள் மட்டுமென்ன? நீயும் தான். அதில்லை அவள் வடிவு நான் வடிவில்லை. வரேக்கை கண்ணாடி எடுத்து அவள் முகம் பார்க்க அதைப் பறித்து நான் பார்க்க, அவள் என்ன சொன்னாள் தெரியுமே? என்னைப் பார்த்து மூஞ்சியும் முகரக் கட்டையும் என்றாள்.
தொடர்ந்து அவள் அம்மா என்னைப் பெத்தது நீ தானே. நான் அப்படியே இருக்கிறன் சொல்லு என்றாள். பதறி வெடிக்கும் குரலில் அதற்கு நான் வேதமாகவே ஒரு வார்த்தை சொன்னேன்.
இல்லை குஞ்சு நீயும் நல்ல வடிவு தான்.
இல்லை நான் அவலட்சணம் வடிவில்லையென்று உரத்து குரலெடுத்து அவள் அழுத போது நான் ஸ்தம்பித்து வாயடைத்துப் போயிருந்தேன். அவள் குரல், ஓயாமல் என்னைத் துரத்திக் கொண்டேயிருந்தது, நிலையாமை பற்றி அறியாத மூட உலகமே இப்படி வருகிற வெறும் மேனி அழகை நம்பி, குதர்க்க வாதம் செய்கிறது ஒருநாள் பிணமாகி வீழ்கிற உடலை முன் வைத்து, அழகை சிலாகித்துப் பேசுகிற, அறிவீனர்களூக்கு சத்தியம் சொல்லவே நந்தா எனும் கறுப்பு நிலா தோன்றினாள்.
அப்போது தாரணியின் வெறும் குரல் மட்டுமல்ல, உள்ளே வெடித்துப் பிளந்த அவள் இதயத்திலிருந்து குருதி மழையே கொட்டுவதாய் உணர்ந்தேன். அதை மீண்டும் ஒட்ட வைக்க முடியாமல் பின் அவள் புதைகுழிக்குள் வீழ்ந்து மறைந்து போனதை ஒரு கோரக் காட்சியாகவே நான் காண நேர்ந்தேன். அதன் பின் அவள் படிக்கப் போகாமல், வெறும் நடைப் பிணமாகவேயாகி விட்டிருந்தாள். மனப் பிறழ்வு நோய் உண்டான காரணத்தினால், அவளுக்கு வாழ்கையுமில்லை வானமுமில்லை. ஊனம் பிடித்த வெறும் நிழல் தான் இப்போது அவள். நீண்ட காலம் மாத்திரைகள் எடுத்து வந்ததால் உடலில் எல்லாம் செயலிழந்த உருக்குலைந்த பொம்மை போலவே இப்போது அவள் நிலை. ஆனல் ஒளி பிரகாசமான, நந்தா என்ற அழகு, நிலா தன்னை அப்படிக் கற்பித்துக் கொண்டவள். இப்போது என் கண்களில் ஒரு மனோ விகாரம் பிடித்த உணர்வுக் கொலையாளியாக, மட்டுமல்ல. கரு நிழல் வந்து மூடிய ஒரு கறுப்பு நிலாவாகவுமே அவள் என் கண்களில் வந்து, தடம் பதித்து விட்டுப் போனாள். முன்பு இப்படியொரு கறுப்பு நிலாவைக் கற்பனையில் கூட நான் கண்டதில்லை. உலகம் முழுவதுக்குமாய் பூரண ஒளி வழங்கி வாழவைத்துக் கொண்ருக்கும் அந்த ஒளிக் கடவுளான பூரண நிலா எங்கே? இவள் எங்கே? மாறாக கருந் தீட்டுப் படிந்து, எமக்கெல்லாம் ஒரு காலனாய் வந்து சேர்ந்த அவள் ஒரு ஒளி நிலாவல்ல, கறுப்பு நிலவாகவே அவளை என்னால், உணர முடிந்தது. இந்த மிக வருத்தமான, உணர்வு எழுச்சிக்கு முன்னால், நிஜதரிசனமென்பது, பொய்த்துப் போன ஒரு கனவாகவே நெஞ்சை சுட்டது.