கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 13,827 
 
 

முதல் இரவில் கோவிந்தன் தன் மனைவியிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

“”ஏன் ஒனக்கு தாமரைன்னு பேரு வைச்சாங்க?” இதைக் கேட்ட தாமரைக்கு அச்சம் வந்தது. தயக்கத்துடன் “”ஏங்க மாமா கேக்கறீங்க?” என்று கேட்டாள். “”ஒண்ணும் பயப்படாத; சும்மாதான் கேட்டேன்” என்றான் கோவிந்தன்.

“”எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பூவுன்னா ரொம்ப பிடிக்குங்க; மொதபுள்ளங்க ரெண்டும் ஆம்பளயா பொறந்ததால பூ பேர வக்க முடியலியேன்னு அவங்களுக்கு ரொம்ப கொறை. அதனாலதான் நான் பொறந்ததும் எனக்கு ஒரு பூவு பேர வக்கணும்னு வைச்சாங்க.”

“”அப்பா அம்மாவுக்குத்தான் புடிக்குமா? ஒனக்கு பூவுன்னா புடிக்காதா?”

“”என்னாங்க நீங்க? பூவுன்னா எனக்கு ரொம்ப புடிக்குங்க; அதுவும் மல்லின்னா உசிருங்க”

கறுப்பு ஆடுஅதைக் கேட்ட அன்றிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளாக தாமரை எப்போது பூ கேட்டாலும் கோவிந்தன் மறுப்பேதும் சொல்வது இல்லை. தினம்தோறும் அவனே வேலை முடித்து வரும்போது வாங்கிக் கொண்டு வந்துவிடுவான். சில நாள்களில் அவளே தெருவில் விற்கும் பூக்காரர்களிடம் வாங்கிக் கொள்வாள்.

இத்தனைக்கும் தாமரை தலை நிறைய பூ வைத்துக்கொண்டு போவதும் இல்லை. அவள் ஒருமுழம் பூவைத்தான் தன் தலையில் வைத்துக் கொள்வாள். ஆனால் தினமும் பூக்கள் வாங்குவாள். அவற்றைச் சாமி படங்களுக்குப் போட்டு அழகு பார்ப்பாள். தெருவில் போகும் பெண்களை அழைத்துத் தருவாள். சில நேரம் அவள் அரும்புகளும் வாங்குவது உண்டு. அவற்றை அவள் தொடுத்துக் கட்டுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதற்காகவே தாமரை பூ கட்டும்போது கோவிந்தன் வந்து உட்கார்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பான்.

தேர்ந்த கலைஞன் ஒருவன் ஓவியம் வரையும்போது, சிறு பெண் ஒருத்தி மணல் வீடு கட்டும்போதும் மேற்கொள்ளும் கவனத்துடன் அதைச் செய்வாள். பூ தொடுக்கும்போது அவள் கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அல்லது பிறரிடம் பேசிக்கொண்டோ பூ கட்டுவது அவளுக்குப் பிடிக்காது. பூக்களை நூல்களில் கட்டுவது அவளுக்குப் பிடிக்காத ஒன்று. பூ தொடுப்பதற்கென்றே வாழை நாரை மிக மெல்லியதாக நூல்போல் கிழித்துப் பந்தாகச் சுருட்டி வைத்திருப்பாள். பூ கட்டுவதற்கு முன் அதைத் தண்ணீரில் நனைத்துக் கட்டுவாள்.

சொந்தமாக வீடு கட்ட வேண்டும். அதில் நிறைய பூக்கள் பூக்கும் செடி, கொடி, மரங்களை வளர்க்க வேண்டும் என்பதே அவளின் ஆசை. ஏனெனில் வாடகை வீடுகளில் வீட்டுச் சொந்தக்காரர்களின் கெடுபிடிகள் மிக அதிகம். தவிர இப்போது வீடுகளில் தோட்டமே இல்லை. இருந்தாலும் மண் தரைகளைப் பார்ப்பது மிக அபூர்வம். எல்லாமே சிமெண்ட் தரைகள்தாம்.

ஒருமுறை வாடகை வீட்டில் இருந்தபோது தோட்டத்தில் வைக்க முடியவில்லை என்று இரண்டு பூந்தொட்டிகளை வாங்கி மாடியில் வைத்ததற்கு அந்த வீட்டுக்காரர் உடனே காலி செய்யச் சொல்லிவிட்டார்.

தாமரையின் கனவு இந்த வீடு கட்டி முடித்து இங்கு வந்த பின்னரே நனவாகியது. இங்கும் அதிக அளவு தோட்டம் இல்லாததும், மண் தரை குறைவாக இருப்பதும் அவளுக்குக் குறையே. ஆனால் தாமரையோ இருந்த பத்தடியில் ரோஜா, டிசம்பர், கனகாம்பரம், அரளி போன்ற செடிகளோடு பவள மல்லி, மரமல்லி போன்ற மரங்களும் வைத்துவிட்டாள். வீட்டின் இரு பக்கங்களிலும் மல்லிகை, முல்லை என்று வைத்து அவற்றைக் கயிறுகளின் வழியாய் மாடிக்கு ஏற்றிவிட்டாள்.

கோவிந்தன் கூட “”என்னா நம் வீட்டையே தொங்கும் தோட்டமா மாற்றிட்ட?” என்று கிண்டலடிப்பான். ஐந்து ஆண்டுகளில் அந்தத் தெருவில் உள்ள அனைவருமே வந்து இலவசமாகப் பூக்கள் வாங்கிக்கொண்டு போகும் அளவிற்கு நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்க தாமரையும் கோவிந்தனும் அவர்களது பிள்ளைகளும் மகிழ்ந்து போனார்கள். அவர்கள் வீட்டுக்கே பூக்காரங்க வீடு என்று பெயர் வந்துவிட்டது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை ஏழு மணி இருக்கும். செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்தவனை, “”ஏங்க, நீங்களும் கொஞ்சம் வாங்க; மல்லிகை நிறைய பூத்திருக்கு; சீக்கிரம் பறிச்சுடலாம்” என்ற தாமரையின் குரல் அழைக்க “”நீ போ; நான் பின்னாலயே வரேன்” என்று பதில் கூறினான். அவன் எழுந்துபோக பிள்ளைகளும் உடன் செல்ல அதற்குள் “”ஐயோ, ஐயோ சீக்கிரம் ஓடி வாங்க” என்று தாமரை அலறும் குரல் கேட்டது. ஒருவேளை கீழே விழுந்து விட்டாளோ என எண்ணி ஓடியவனுக்கு தாமரை ஓரமாக உட்கார்ந்து அழுதுகொண்டு இருப்பதுதான் முதலில் கண்ணில் பட்டது.

“”என்னா தாமரை? என்னாச்சு?” என்று கேட்டவனுக்கு அவள் தன் விசும்பலுக்

கிடையே கையால் சாடை காட்டினாள். அங்கே இருந்த மல்லிகைக் கொடியில் பூக்களும் இல்லை; இலைகளும் இல்லை; கிழக்குப் பக்கம் இருந்த கொடியும் அப்படியே இருந்தது. கொடி வெறும் குச்சிகளுடன் விகாரமாகக் காட்சியளித்தது. “”எது வந்தது? எப்படி நடந்தது? என்று புரியாமல் திகைத்தவன் “”சரி, தாமரை அழுவாதெ; சீக்கிரம் வளர்ந்துடும்” என்று அவளுக்கு ஆறுதல் கூறினான். இரண்டு நாள்களுக்கு தாமரை வாட்டமான முகத்துடன் அதிகம் யாரிடமும் பேசாமல் இருந்தாள். பிள்ளைகளுடன் கூட விளையாடவில்லை.

அடுத்த நாள் மாலை வீடு வந்தவனிடம், “”ஏங்க, நான் கண்டுபிடிச்சுட்டேங்க” என்று அவள் கூறியதும் அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

“”அதாங்க, மாடியில யாரு மல்லிகையை அப்படி செஞ்சது தெரியுமா? ஆடுதான் போய் மேஞ்சிருக்கு”

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “”ஆடா? அங்க எப்படி போச்சு?” என்று கேட்டான்.

“”அதுவா? நம்ம பக்கத்து வீட்டுக்கு அந்தாண்ட காலி மனை இருக்குல்ல; எல்லார் வீட்டு காம்பவுண்டு செவரும் ஒயரம் குறைவாதானே இருக்கு; அங்கிருந்து பக்கத்து வீட்டுக்குத் தாவி அப்படியே நம்ம வீட்டுக்கு வந்து மாடிக்குப் போயிடுது”.

“”நீ பாத்தியா? ஒனக்கு எப்படித் தெரியும்?”

“”ஆமாங்க; துணி காய வைக்க மாடிக்குப் போனேனா? அங்க தின்ன ஒண்ணும் இல்லையேன்னு நின்னுக்கிட்டிருக்கு; என்னைப் பாத்தும் பயமே இல்லீங்க; மெதுவா கீழே எறங்குது. பெரிய கறுப்பு கெடா ஆடுங்க”

“”ஒரு போடு போடறதுதானே?”

“”அதை ஏன் கேக்கறீங்க? கீழே ஓடிவந்து ஒரு கல்லை எடுத்துப் போட்டேன். அது மேலயே படல; அதுக்குள்ள தெருவுல போன ஒருத்தி, அம்மா அது சாமி ஆடும்மா; அடிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டுப் போறா”

“”சரி, போகட்டும் வுடு” என்று அவன் சாதாரணமாகச் சொல்லி விட்டாலும் அடுத்து அடுத்து அப்படியே நடந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாடிப் படிகள் போய் முடியும் இடத்தில் கற்களை வைத்து அடுக்கி வழியை மறித்துப் பார்த்தார்கள். சிறு முள்கிளைகளை வெட்டிக்கொண்டு வந்து போட்டுப் பார்த்தார்கள். எல்லாவற்றையும் அது அனுமார் லங்கையைத் தாண்டியதுபோல் தாண்டிச் சென்று மேய்ந்து கொண்டுதான் இருந்தது. அதுவும் அதற்கு என்று அது தனியாக ஒரு கணக்கு வைத்திருந்ததுபோல் தெரிந்தது. மேய்ந்து முடித்த கொடிகளில் இலைகள் எப்பொழுது துளிர்க்கும். அவற்றை எப்பொழுது வந்து மேய வேண்டும் என்பதெல்லாம் அதற்குச் சரியாகத் தெரிந்திருந்தது.

சாமியாடு என்றதால் அடிப்பதற்கும் பயமாக இருந்தது. ஆனால், இப்போது கொஞ்சம் பரவாயில்லை. மேற்குப் பக்கம் பூக்க வைத்துவிட்டுக் கிழக்குப் பக்கம் பதினைந்து நாள்களும், பிறகு கிழக்கே பூக்கும்போது மேற்கேயும் மேய்ந்து கொள்வதுபோல ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இருந்தது. அந்த எழுதப்படாத ஒப்பந்தம் மீறி அது இரண்டு பக்கங்களையுமே மொட்டையாக மாற்றியபோதுதான் தாமரைக்குத் தாங்க முடியாத கோபம் வந்தது.

அன்று மாலை அலுவலகம் விட்டு வந்த கோவிந்தன், கீழே கிடந்தவற்றைக் காட்டி, “”ஏன் தாமரை இப்படி செஞ்சுட்டே” என்று வருத்தத்துடன் கேட்டான். கீழே இலைகள் இல்லாத மல்லிகைக் கொடிகள் கலைந்த கோலங்கள்போல தாறுமாறாய்க் கிடந்தன.

“”ஆமாம் மாமா, மனசு கேக்காமதான் செஞ்சேன்; பின்ன என்னா அது எப்படா நான் தூங்குவேன்னு பாத்து இப்பல்லாம் மதியமே வந்து மேய ஆரம்பிச்சுட்டது. கொழந்தைங்க மாதிரி வளர்த்து அது வாயிக்கா குடுக்கணும்; அதனாலதான் எல்லாத்தையும் புடுங்கிட்டேன்” என்றாள் தாமரை.

“”நாங்க வாணாம் வாணாம்னுதான் சொன்னோம்; அம்மா கேக்கல” என்று கூறிய பெரிய மகன் அந்தக் கொடிகளை வாரித் தூக்கி வெளியே போடப் போனான்.

நான்கு நாள்கள் சென்றிருக்கும். மதியம் கண்ணயர்ந்த நேரம்; ஏதோ சத்தம் கேட்டுத் தாமரை வெளியே வந்தாள். அந்த ஆடு மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது.

“”வா, வா ஏமாந்து போனியா? இப்ப என்ன செய்வே? இனிமே இங்க ஒண்ணும் கெடைக்காது. எல்லாத்தையும் ஒரே நாளிலே மேஞ்சிட்டுப் போன இல்ல; அதான் இப்படிப் புடுங்கிப் போட்டுட்டேன்” என்று அதனிடம் சிரித்துக்கொண்டே தாமரை சொல்ல அதுவும் ஏதோ புரிந்ததுபோல தலையை ஆட்டிக்கொண்டே பக்கத்து வீட்டுக்கு ஒரே தாவாய்த் தாண்டிச் சென்றது.

அடுத்து ஒரு வாரம் சென்றிருக்கும்; “”அம்மா ஆடு வந்து நிக்குது” பையன் கத்தினான். தாமரை போய்ப் பார்க்கும்போது அதே கறுப்பு ஆடு பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்க்கும்போதே பரிதாபமாக இருந்தது. கொஞ்சம் இளைத்தது போலவும் அவள் கண்ணுக்குத் தெரிந்தது. அது தன் கண்கள் மூலம் கெஞ்சுவதுபோல் இருந்தது.

அடுத்த வாரம் வீட்டின் போர்டிகோவுக்குப் பக்கத்தில் இருந்த மண் தரையில் சிறு மல்லிகைக்கொடி நடப்பட்டு அது மாடியின் மேலே ஏறுவதற்கு வசதியாகக் கயிறும் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட கோவிந்தன், “”என்ன தாமரை, மறுபடியும் வளக்க ஆரம்பிச்சுட்ட? ஆடு வந்து திங்காதா?” என்று கேட்டான்.

“”ஆட்டுக்குதாங்க அது, அதைப் பாத்தா பாவமா இருக்குதுங்க; ஏன் இப்படி செஞ்சு என்ன பட்டினி போட்டன்னு கேக்கற மாதிரி தோணுதுங்க; அது நம்ம வீட்டுக்கு எப்பப் போனாலும் கெடைக்குன்னு நம்பி இருந்ததுங்க; அதான் எனக்கு மனசு கேக்கலைங்க; கொண்டு வந்து வைச்சுட்டேன்; அது தின்னுட்டது போக மீதி பூக்கட்டுங்க” என்று முக மலர்ச்சியுடன் சொன்ன தாமரையை அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.

– ஜனவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *