கறுத்த கொழுப்பான் மரத்தடியில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 7,094 
 
 

சிவநேசன் நேசையா தன் வீட்டு வாசல் முற்றத்தில் கறுத்தக் கொழும்பான் மரத்துக்கு அடியில் போடப்பட்டிருந்த அந்த சிமெண்ட் பெஞ்சியில் அமர்ந்து கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தார் . பத்து வருடங்களுக்கு முதல் அவுஸ்ரேலிய நாட்டுக்கு சென்று குடியேறிவிட்ட அவரது மகனும் மகளும் அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர் . அவர்களுக்கு அங்கே வேலையும் வீடும் கூட கிடைத்துவிட்டது. அங்கே அவர்களுக்கு திருமணமும் நடந்து பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டனர் . அவரது மனைவி காலமாகி சில வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. அவர் ஒண்டிக்கட்டையாக அவரது ஒன்றுவிட்ட தங்கச்சியின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார் . அவர் இப்போது ஒரு ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்.

அண்மைக் காலமாகவே அவரது பிள்ளைகள் அவரை அவுஸ்திரேலியாவுக்கு வந்து விடும்படி நச்சரித்துக் கொண்டிருந்தனர் . அவர்தான் இன்னும் சில காலத்தில் பென்ஷன் பெற்று விடுவதாகவும் அதன் பின்னர் வந்துவிடுகிறேன் என்றும் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டிருந்தார் . அவர் அவுஸ்திரேலியாவுக்கு போகாமல் இழுத்தடிப்பதற்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. அவர் சிறு வயதில் இருந்தே ஆஸ்துமா மற்றும் சளித்தொல்லையால் அவதிப்படுபவர். அதனால் குளிர் சீதோசனம் உள்ள அவுஸ்திரேலியா போன்ற நாடு அவர் ஜீவிக்க அவ்வளவு உகந்தது அல்ல வென மருத்துவர்கள் அவரை எச்சரித்து இருந்தனர் . எனினும் அத்தகைய காரணங்களை சொல்லி இனிமேலும் தனது பிள்ளைகளிடமும் பேரப்பிள்ளைகளிடமும் செல்லாமல் இருப்பது உகந்ததல்ல என்று அவர் இப்போது யோசித்தார் .என்ற போதும் உறுதியாக முடிவு செய்யமுடியாமல் அவர் இரண்டும் கெட்டான் நிலையிலேயே இருந்தார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நாட்டின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கொடிய யுத்தம் நிலவிய போது , அது வடக்கு கிழக்கு பிரதேசத்தை மாத்திரமன்றி முழு நாட்டையும் உலுக்கிப்போட்டுக் கொண்டிருந்தது . ஆயிரம் பல்லாயிரக்கணக்கான மக்கள் குறுகிய காலத்தில் செத்து மடிந்து கொண்டிருந்தனர் . மக்களின் அன்றாட வாழ்க்கை தலைகீழாக புரட்டிப் போடப்பட்டிருந்தது . இலங்கை எங்கும் ராணுவம் மற்றும் போலீஸ் ஆட்சியே நிலவியது . எல்லாவற்றுக்கும் மேலாக “பயங்கரவாத தடைச் சட்டம் ” என்று ஒன்று கொண்டுவரப்பட்டு சந்தேகத்தின் பெயரில் பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர் . 16 வயதிலிருந்து ௩௦ வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அவர்கள் அத்தகைய வயதுக்காரர்கள் என்றபடியாலும் வடக்கு-கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த தமிழர்கள் என்றபடியாலும் மாத்திரமே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர் . அதனால் பலரும் தமது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று காரணம் காட்டி பல்வேறு மேற்கு நாடுகளையும் அடைந்து தமக்கு உயிர் தஞ்சம் தருமாறு கோரி சரணடைந்தனர்.

அத்தகைய நாடுகளில் கூட இவ்வாறு வந்து உயிர்ப்பிச்சை கேட்டு தஞ்சம் அடைந்தவர்களுக்கு தங்குமிடம் அளித்து உபசரித்து உதவி வழங்க மனிதாபிமான சட்ட ஏற்பாடுகள் இருந்தன.

உண்மையில் இவ்வாறு உயிர் தஞ்சம் கோரி சரணடைவதற்கு பலமான காரணங்கள் இருந்தபோதும் அதிகமானோர் பொய்யாக அவ்விதம் காரணம் காட்டி தமது பொருளாதார முன்னேற்றத்துக்காக வெளிநாடுகளில் சென்று குடியேறினர். தேவநேசனின் இரண்டு பிள்ளைகளும் கூட அவ்வாறு அவுஸ்திரேலியாவில் குடியேரிவர்கள் தான் .

அவர்கள் தேவனேசனுக்கும் அவரது தங்கச்சி குடும்பத்தினருக்கும் கூட போதுமான பணம் மாதாமாதம் அனுப்பிக் கொண்டுதான் இருந்தார்கள். இருந்தாலும் குடும்ப உறவுகள், அன்பு, பாசம்,அரவணைப்பு என்பவற்றயெல்லாம் பண வசதிகளால் பூர்த்தி செய்து விட முடியாது. இக்காலத்தில் தேவநேசனும் அவரது மனைவியும் கூட மிகுந்த ஏக்கத்துடனே வாழ்ந்து வந்தனர். இவ்விதமான ஏக்கம் அங்கே அவுஸ்திரேலியாவில் அவரது பிள்ளைகளிடமும் இல்லாமல் இல்லை.

தேவநேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏனைய உறவுகளுக்கும் கூட அங்கு அவரது ஊரில் வீடு , நிலபுலன்கள் , காணிகள், வயற்காடுகள் என்பன காணப்பட்டன. அவற்றை அவர் குத்தகைக்கு விட்டு பயிர் செய்து வந்தார் .

அதற்கு மேலதிகமாக பல பரப்பு காணிகளில் கறுத்தக் கொழும்பான் மாம்பழச் செய்கையும் செய்திருந்தார் . அவற்றில் இருந்தும் அவருக்கு கணிசமான வருமானம் கிடைத்து வந்தது . அவரும் கூட நல்ல உழைப்பாளி . தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வயற் காட்டிலும் தோட்டத்திலும் ஏதாவது வேலை செய்து, மண்ணைக் கொத்திக் கொண்டு இருப்பார் . ஓய்வு நேரத்திலும் அதிகாலையிலும் மாலை நேரத்திலும் தனது வயல்காட்டை சுற்றியும் , கம்மாய் களனிகளின் மீதும் காலார நடந்து வருவது என்பது அவர் மனதிற்கு பிடித்த பிரியமான பொழுதுபோக்காகும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு எவ்வாறு அவுஸ்திரேலியா என்ற கண்காணாத நாட்டில் சென்று வாழ்வது என்பது அவருக்கு மிகப்பெரிய மன சஞ்சலத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே அவர் ஆஸ்திரேலிய பயணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்.

இப்போது எல்லா விஷயங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு தாம் அவுஸ்ரேலியா நாட்டுக்கு போவதா இல்லையா என்ற ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டிய ஒரு திரிசங்கு நிலைகு அவர் தள்ளப பட்டிருந்தார் . அவரது மனதுக்குள் இந்த விடயம் போட்டு குடைந்து கொண்டே இருந்தது . அவர் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். இனிமேலும் என்ன சாக்குப்போக்கு சொல்லியும் அவரது அவுஸ்திரேலிய பயணத்தை தள்ளிப்போடுவது என்று அவருக்கு விளங்கவில்லை . அவர் அவுஸ்ரேலியா போவதென்றால் அது அங்கு சென்று ஒரேயடியாக தங்குவதற்காக மட்டும்தான் இருக்கும் . அங்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வரலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை .அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கூட இந்த நாட்டுக்கு திரும்பி வருவதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் இருந்தார்கள் . என்னதான் இங்கே சமாதானம் நிலவினாலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஏதேனும் ஒரு சம்பவம் நிகழ்ந்து மக்களின் நிம்மதியைக் குழைத்துக் கொண்டேதான் இருந்தன. அண்மையில் இடம்பெற்ற” பாஸ்க்கு தின” குண்டுவெடிப்பு காரணமாக வெளிநாடுகளிலிருந்து திரும்பி இலங்கைக்கே வந்துவிடவேண்டும் என்று விரும்பியவர்கள் பலரிலும்கூட தமது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வைத்துவிட்டது . அவ்விதம் திரும்பி வந்த ஒரு சிலர் கூட மேறபடி குண்டு வெடிப்பில் இறந்து போய்விட்டனர். உலகெங்கும் இந்த சம்பவத்திற்கு மிகுந்த பிரச்சாரம் வழங்கப்பட்டிருந்தது . இதனாலும் கூட தேவனேசனின் பிள்ளைகள் தேவநேசனை விரைந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிடும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் மீறி தன்னால் செயல்பட முடியாது என்று நன்றாக புரிந்து கொண்ட தேவநேசன் இறுதியாக தமக்கிருந்த சொத்துக்களையெல்லாம் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவுஸ்திரேலியாவில் இருக்கும் தம் பிள்ளைகளிடம் போய் சேர்ந்து விடுவது என்று தீர்மானித்தார். அவர் மிகுந்த கலக்கத்திற்கு மத்தியில் தன் உறவினர் எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு தான் பயணிக்கும் ஒரு நாளை தேர்ந்தெடுத்தார் . அதனையும் கூட பிள்ளைகளே தீர்மானித்து பிரயாண ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடித்து அவருக்கான விமான டிக்கெட்டையும் அனுப்பி வைத்திருந்தனர் . அன்றைய தினம் அவரின் நெருங்கிய உறவினர்கள் சிலருடன் அவர் விமான நிலையம் சென்று உரிய விமானத்தில் அவுஸ்திரேலியா
நோக்கி பயணமானார்.

அவரது அவுஸ்திரேலியா நோக்கிய விமானப் பயணம் சுகமாகவே அமைந்தது. என்றாலும் அவர் ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரில் காலடி எடுத்து வைத்ததுமே அவர் மூக்கை துளைத்துக் கொண்டு ஜில்லென்ற காற்று அவர் உடலெங்கும் ஊடுருவிப் பரவியது. ஒருகணம் அவர் மேனி சிலிர்த்து மயிர்க்கால்கள் அனைத்தும் குத்திட்டு நிமிர்ந்து நின்றன. திக் என்றஒரு பயம் அவர் மனதுக்குள் குடி கொண்டுவிட்டது. தான் தவறான ஒரு முடிவு எடுத்து ஒரு தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ என்ற குழப்ப நிலை மனதில் தோன்றியது.

அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த அவரது பிள்ளைகள் நெஞ்சில் சந்தோஷத்துடனும் முகத்தில் குதூகலத்துடனும் அவரை அழைத்துச் சென்றனர்.

அவர் கண்களில் தோன்றிருந்த பயத்தை அவர்கள் அவதானிக்க வில்லை. அவர் அவுஸ்திரேலியா வந்து மூன்று நாட்களிலேயே சளியும் இருமலும் தோன்றி மூச்செடுக்க அவர் மிக சிரமப் பட்டார். அவருக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என பல டாக்டர்களிடம் அவரது பிள்ளைகள் அவரை அழைத்துப் போயினர்.

சில நாட்களில் அது பழகிப் போய்விடும் என்று ஆறுதல் கூறினர் . ஆனால் யாழ்ப்பாணத்தின் வெப்ப காலநிலைக்கு பழக்கப்பட்டு இருந்த அவரால் அவுஸ்திரேலியாவின் கடும் குளிர் காலநிலையை தாங்கிக்கொள்ள முடியவில்லை .

அவர் எழ முடியாமல் படுக்கையில் விழுந்தார். அவர் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக அபாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நெஞ்சுக்குள் சளி கட்டுதல் வரவர அதிகரித்ததேயன்றி குறைந்தபாடில்லை. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தன்னை சூழ்ந்து கொண்டிருந்த ஒரு சோகமான மாலைப் பொழுதில் அவரது உயிர் அவரைவிட்டுப் பிரிந்து போனது . இதனைத்தான் விதி என்கிறார்களா இன்று உறுதியாக சொல்ல முடியாது உள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *