கரை சேராதக் கலங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 8,316 
 
 

“டெலிபோன் அடிச்சிட்டே இருக்கு இந்த வீட்லே எல்லோரும் என்ன செத்து
தொலைச்சிட்டீங்களா? ” கத்தினான் பிரம்மநாயகம். மெதுவாக வந்து எட்டிப்பார்த்தாள் செல்வி.

“அங்க என்னத்தைப் பிடிங்கிட்டு இருக்கே.. உன் சாதிசனமாத்தான் இருக்கும்.
என்னடீ பாக்கே .. ராத்திரி கூட நிம்மதியா பேப்பர் படிக்க இந்த வீட்டிலே
முடியுதா..?” கோபத்துடன் அவன் அன்றைய செய்தித்தாளை எறிந்தான்.

செல்வி மெதுவாக வந்து டெலிபோனை எடுத்தாள். டெலிபோனை எடுக்கும்போது அவள் கைகள் நடுங்கின. தொண்டைக்குழி வறண்டு போனது. அவளால் எதிர்முனையில் எதுவும் பேசமுடியவில்லை. மெதுவாக டெலிபோனை
வைத்துவிட்டு நகர்ந்தாள்.

“ஏய் உன்னைத்தாண்டீ..எவன் மண்டையைப் போட்டான்.. ”

அவள் அவனருகில் இருந்த காலி கிளாஸை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

இப்போது அவனுக்கு எரிச்சல் வந்தது.

“நான் பாட்டுக்கு கேட்டுட்டிருக்கேண். நீ என்னடானா இந்தப் பய போக்கத்துப்போயி உங்கிட்டே கேட்கிறமாதிரி நடந்தா என்னடீ அர்த்தம்? ஏய் உன்னைத்தாண்டீ”

அவள் ‘என்ன கேட்கிறீர்கள்?’ என்பது போல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“பாருடீ.. நான் தொண்டை வத்தறமாதிரி உங்கிட்டே பேசிட்டிருக்கேன்.
இந்த திமிருக்கு மட்டும் குறைச்சலில்லே.. யாருடீ போன்லே?”

அவள் ஒன்றுமே சொல்லாமல் நடந்தாள்.

“கொழுப்புடீ.. கேட்டுட்டிருக்கேன்லே எவன் பொண்டாட்டிடீ தாலி அறுத்தா?”
அவள் கோபத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஆமா இதுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சலில்லே.. ஒரு மாசத்துக்கு அப்புறம்
இன்னிக்கி வீட்டுக்கு வந்திருக்கேன். அழுது மூக்கைச் சீந்திக்கிட்டு வந்து
நிக்காதே”

எல்லாம் என் தலைவிதி.. எல்லா அம்மா அப்பாவும் பையனுக்கு நல்ல வசதியான இடத்திலே பொண்ணு பாத்து கல்யாணம் செய்யனுன்னு நினைப்பாங்க, எங்க அப்பா மாதிரி கொடும்மை யாரும் செய்திருக்க மாட்டாங்க.. ஒரு நல்ல நாளூ பண்டிகை நாளுக்கு மாமனார் வீட்டுக்கு போனோம் வந்தோம்னு ஏதாவது உண்டா? சரி அதுதான் இல்லை. ஒரு அனாதையைக் கட்டினோம்னு இருந்திட்டு போயிடலாம். வருஷத்துக்கு ஒரு எழவு மட்டும் விழுந்துடும். இவ ராத்திரியும் பகலும் அழுது அழுது .. ச்சே.. உறவுச் சங்கிலி.. விட்டுப்போயிடக் கூடாதுனு என் தலையிலே கட்டிவச்சிட்டு போயி சேர்ந்திட்டாரு.. சங்கிலியாவது.. மண்ணாங்கட்டியாவது.. எல்லாம் என் தலைவிதி.. சிகிரெட் நுனி கையில் சுட்டது. சன்னல் வழியாக தூர எறிந்தான். அவள் படுக்கைக்கு வர நேரமாகும் என்பது புரிந்தது.

டி.வி.யில் செய்திகள் ஒடிக்கொண்டிருந்தன
.
“சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது தமிழர்கள் பகுதி
தாக்கப்பட்டது..குறித்து நார்வே அமைதிப் பேச்சுவார்த்தைக் குழு அதிர்ச்சி
அடைந்துள்ளது. இரண்டு பக்கமும் பதட்ட நிலை நீடிக்கிறது..”

வேறு வேலைச்சோலி இல்லை. கோபத்துடன் ரிமோட்டை அமுக்கினான்.
போர்வையை இழுத்து போத்திக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டான்.
எதுவும் தெரியவில்லை, அந்த போர்வைக்குள் அவன் கண்கள் அசதியில்..

அவள் எப்போது வந்து தூங்கினாள் என்பது தெரியவில்லை. அதிகாலையில்
குளிர். எழுந்து போய் சன்னல் கதவுகளை இழுத்து மூடினான். அவள் கால்களை
மடக்கி வளைந்து குளிரில் போர்வையில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தாள்.

மெதுவாக அவளருகில் படுத்து போர்வையை அவளுக்கு சேர்த்து போர்த்திக்கொண்டு அவன் மூச்சுக்காற்று அவள் குளிர்ந்த உடம்பில் ..கதகதப்பாக.. அவன் மெதுவாக அவள் முதுகைத் தடவி கழுத்தில் முகம்புதைத்து..

அவள் தூக்கம் களையவில்லை. கண்கள் மூடியே இருந்தன. ஆனாலும்..”ப்பீளீஸ்..” என்று அவள் வாய் முணுமுணுத்தது. அவனையும் அவன் அணைப்பையும் நிராகரிக்க முடியாத அவள் காதல் ..அந்த நிமிடம் அவள் ப்பீளீஸ் என்று சொன்ன மறுப்பிலும் இருந்தது. அவள் முகத்தை அவன் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவள் கைகள் அவன் முதுகில் அவனுடைய பனியனை இறுக்கப்பற்றி இருந்தன.
அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் அவளிடம் எதுவுமே கேட்கவில்லை.

ISD கால் வரும்போதெல்லாம் அவள் மனம் பட படவென அடித்துக்கொள்ளூம்.
என்ன செய்தி வரப்போகிறதோ என்று அச்சத்தில். ஆரம்பத்தில் தம்பி குண்டுவீச்சில் இறந்தபோது.. அம்மா அப்பா தப்பிவரும்போது தாக்கப்பட்டபோது … தமிழ்நாட்டுக்கு தப்பிவந்த அண்ணன் காணாமல் போய் இருக்கின்றானா அல்லது எங்காவது சிறையில் செத்துக்கொண்டிருக்கின்றானா என்பதே தெரியாமல் தவித்தபோது.. அவள் அழுதப் போதெல்லாம் அவன் அவளுடன் உட்கார்ந்து ஆறுதல் சொல்லித்தானிருக்கின்றான்.

அவள் தம்பி இறந்தவுடன் உறவினர்கள் எல்லோருக்கும் சொல்லிவிட்டு எல்லோரும் இவளிடம் வந்து துக்கம் விசாரித்து சென்றார்கள். 16வது நாள் இவளை
மகாலட்சுமி கோவிலுக்கு அழைத்துச்சென்றான். அவளுடைய தம்பியின்
ஆத்மா சாந்தியடைய. அப்படித்தான் அம்மா அப்பா செய்திகேட்டும்.
இப்போ.. ? அவனைச் சொல்லி என்ன பயன்? துக்கம் வாழ்க்கையில் வரும்
போகும். ஆனால் துக்கம் மட்டுமே தங்கி துக்கமே துணையாகி வாழ்வதில்
எவ்வளவு சங்கடம்?

” யாரையாவது இனி உயிருடன் பார்க்க முடியுமா? எப்போதாவது என் தோட்டத்தில் கால்வைக்க முடியுமா? இதுதான் நான் படிச்ச ஸ்கூலு.. இந்த புளியமரத்தடியில்தான் எங்கள் பி.சுசிலா கச்சேரி.. ஒரே ஒருமுறை இதை எல்லாம் என் பிள்ளைகளுக்கு காட்டமுடியுமா? எட்டு பேருடன் பிறந்து வளர்ந்து.. இன்னிக்கி.. தனியா..”

கடைக்குட்டி தங்கை மட்டும் லண்டணில். யாரையோ இரண்டாம்தாரமாக கல்யாணம் செய்துகொண்டதாக எழுதியிருந்தாள். அவள் எதையும் யோசித்து செய்பவள். சரியாகத்தான் இருக்கும். அதன் பின் அவளிடமிருந்து கடிதங்களே கிடையாது. ஏதோ ஹோட்டலில் வேலை. அதை நாயகத்திடம் சொன்னபோது அவன் கிண்டலித்தது இப்போது வலிக்கிறது. “பின்னே என்ன .. உங்க ஊருக்காரங்க எல்லோரும் என்ன ஆபிஸ்லேயா வேலைப் பாக்காறாங்க. இந்த மாதிரி ஹோட்டல்லே கோப்பைக் கழுவித்தான்..”

..என்ன முறைக்கிறே.. உண்மையைச் சொன்னா உனக்கு கோபம் பொத்துக்கிட்டு
வருமே.. இந்தப்பாரு,..நீதான் கொடுத்து வச்சவா..மகாராணி மாதிரி உன்னை
நான் வச்சிருக்கேனாக்கும்! ”

அவன் சொல்வதில் உண்மைகூட இருக்கலாம். சில உண்மைகள் சந்தோசப்படுத்தும்.

சில உண்மைகள் சங்கடப்படுத்தும், சில உண்மைகள் உண்மைகளாக முகம்
காட்டாமல் இருந்தாலே நல்லது என்று தோன்றும். இவன் சங்கடப்படுத்தும்
உண்மைகளை சங்கடமில்லாமல் சொல்வதுதான் அவளை ரொம்பவே
சங்கடப்படுத்தும். மகாராஷ்டிரா தேர்தல் சூடுபிடித்தது. அரசியல் தலைவர்கள் ஓட்டு வாங்குவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து கொண்டிருந்தார்கள். இந்த தேர்தலை வைத்துதான் மத்திய அரசின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்பதால் டில்லியிலிருந்து எல்லோரும் மும்பை சிவாஜி பார்க்கில் ஒரு நாள் லீவு போடாமல் மேடை ஏறிக்கொண்டிருந்தார்கள்.

பத்திரிகைகளுக்கு நல்ல தீனி. விளம்பரத்தீனி வேறு.

தீடீரென மண்ணின் மைந்தர்கள் ஆயுதத்தை எதிர்க்கட்சி தலைவர் கையில்
எடுத்தார். இந்த மண்ணிற்கு 15 வருடங்களுக்கு முன்பு வந்தவர்கள் தவிர
மற்றவர்கள் எல்லோரும் வெளியேற வேண்டும் என்றார். அப்படி வெளியேற
மறுப்பவர்களுக்கு எந்த அரசியல் சட்டமும் உதவமுடியாது..” என்று சொல்ல
பெரிய பதட்டநிலை.

பத்திரிகை பார்த்த நாயகம் ‘என்ன பைத்தியக்காரத்தனம் ‘என்றான்.
மறுநாள் இதுவே கலவரமாக வெடித்தது. நாயகத்தின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.

அவன் முகத்தில் அவன் ஒரு தமிழன் என்ற முகவரி அழிக்கமுடியாமல்
எழுதப்பட்டிருந்ததை அவர்கள் வாசித்தார்கள். நெற்றியில் உடைந்தப்
பாட்டில்களின் கீறலில் ரத்தம்..

வீட்டில் வந்து கத்திக்கொண்டே இருந்தான்.

” இவனுக என்ன நினைச்சுக்கிட்டு இருக்கானுக? எங்களை எல்லாம் என்ன
இளிச்சவாயனுகனு நினைச்சானுகளா? நான் ஒரு கவர்மெண்ட் எம்ப்ளாயி.
என்னை இவனுகளா விரட்ட முடியுமா? “..

அவளுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

அவனுடைய வேதனையை அவளால் வாசிக்க முடிந்தது.

அவன் காயங்களுக்கு டாக்டர் கொடுத்திருந்த களிம்பை அவள் தடவிக் கொண்டிருந்தாள்.

அவனுடைய அப்பா ஊரில் பஞ்சாயத்து போர்டு எலக்ஷனில் ஜெயித்துவிட்டதாக
போன் செய்தார்.

உடல்வலி எல்லாம் மறந்து போனது.

“செல்வி.. இங்க வாயேன்” சந்தோஷத்தில் கத்தினான்.

“செல்வி.. அப்பா ஜெயிச்சுட்டாரு.. செல்வி.. நாம ஜெயிச்சுட்டோம்..!! செல்வி என்னடா இந்த பஞ்சாயத்து போர்டு எலக்ஷெனில்

ஜெயிச்சதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்னு நினைக்கியா? உனக்கு அதெல்லாம் தெரியாது செல்வி.. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் நம்ம

தெரு ஆளு ஒருத்தர் துணிச்சலா தேர்தல்லே நின்னு.. அதுவும் ஜெயிக்கறதுங்கறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?”

அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. எவ்வளவு பெரிய்ய போராட்டத்திற்கு
பிறகு இந்த வெற்றி.. அவன் இவ்வளவு சந்தோஷத்தில் சிரித்ததை அவள்
இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறாள்.

அவனுடைய சிரிப்பை அப்படியே மனசில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்
போலிருந்தது. ஊருக்குப் போயிட்டு வந்திடனும் செல்வி.. அப்பாவை பஞ்சாயத்து போர்டு தலைவரா பாத்துட்டு வந்துடனும்.. அவன்

சொல்லிக்கொண்டே இருந்தான்.

அவள் அவனுடைய சந்தோஷத்தில் சந்தோஷம் சேர்த்துக்கொண்டிருந்தாள்.
அவர்களுடைய சந்தோஷத்தை விலை பேசிக்கொண்டிருந்தது அவர்களின் கிராமத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு.

– puthiyamaadhavi@hotmail.com (பதிவுகள் செப்டெம்பர் 2005; இதழ் 69)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *