நிசப்தத்தைக் கொண்டிருக்கிறது இரவு. இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒடுகிற இரயில் வண்டியின் மீது கோபம் கொப்பளிக்கிறது. அரக்கத்தனமாய் இருளைக் கிழித்துக் கொண்டு ஒடுகிற இரயிலுக்கு ஏனிந்த கொலைவெறி. நகரத்தின் பகல் இரைச்சலைக் கொட்டி நிரப்புகிறது. காதுக்குள் அடங்கிவிட முடியாத ஒலிக்கற்றைகள் அமைதியற்ற இருப்பைத் தருகிறது. சத்தமற்ற பொழுது இனிமையானது. ஆத்மார்த்தமாக சிந்தனையோடும், உடலோடும், உபாதைகளோடும் ஒன்ற முடிகிறது.
நிராசைகளைக் குவிக்கிற தனிமையை உணர்கிற வாழ்க்கையின் மீது நம்பிக்கையின்மையை உணர்கிற நொடிகளின் போது தாய் மடியில் படுக்கத் தோன்றும். யாரேனும் தலைகோதினால் வராத தூக்கத்தையும் வரவைத்துவிடலாம். வராத தூக்கத்திற்கும் வரும் துக்கத்திற்கும் இடையில் திணறிக் கொண்டிருக்கும் சமயங்களில் இரவையே தாயின் கருவறையாய் உணர்ந்து கொள்கிறேன். எனது இயலாமைகளை தன்னிரக்கத்தைச் சுருட்டி இரவின் கருவறைக்குள் வைத்துக் கொண்டு அயர்ந்து உறங்குகிறேன். விடியலில் புதிய பனித்துளிகளின் குளிர்ச்சியை நுகர்ந்தவாறு கண்விழிக்கையில் புதிதாய்ப் பிறந்துவிடுகிறேன். என்னைச் சுமந்த இரவுத் தாய் இருளைத் தனக்காக வைத்துக் கொண்டு உள்ளொளியை எனக்குள் ஏற்றிவிடுகிறாள்.
மேடிட்ட என்வயிற்றில் வாரியோடிக் கிடக்கிறது. அவ்வப்போது நமைச்சல் காணுகிறது. கொஞ்சம் எண்ணெயை எடுத்து தேய்த்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். அம்மா பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். என்னைத்தவிர எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். வயிற்றில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிற குழந்தையை ஆறுதலாய் வருடிவிட அமைதியாய் பூனைக்குட்டியைப்போல் அடங்கிவிட்டது.
வயிற்றின் எடை கூடக்கூட உடம்பில் பெருத்த மாற்றம். ஆங்காங்கே சதை கூடிவிட்டது. நடந்தால் பெருமூச்சு விடுகிறேன். இரத்த அழுத்தம் சமீபமாய்க் குறைந்திருக்கிறது. அடிக்கடி பசிக்கிறது என்பதை மீறி இரவு எனக்கும் என்குழந்தைக்குமான இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
மழை அவ்வப்போது பெய்து கொண்டிருந்தது. மழை காற்றின் ஈரப்பதம் தூக்கத்தை மிக இலகுவாக்கியது. இன்னும் கொஞ்சம் வேண்டும் வேண்டும் என கண்கள் இறைஞ்சிக் கேட்கும்படியான தூக்கத்தைத் துறந்து நாட்களாகிவிட்டன.
வயிற்றில் பிசைந்தெடுத்தது சொல்லமுடியாத உணர்வுகளையும் வலிகளையும் இரவில் உணர ஆரம்பித்து விட்ட நாட்கள் இவை. இதற்குமுன் கண்ணை மூடினால் விடியலில் கண்விழித்தால் தான் உண்டு இடையிடையே திடுக்கிடும் சப்தத்திற்கு மட்டுமே அதிர்ந்து எழுவேன். தூக்கம் வரவில்லை என்று இருளோடு உறவாடிக் கொண்டிருந்தது கிடையாது. படுத்தும் தூக்கம் நினைக்கவே ஆனந்தமாக இருக்கிறது.
இரவு உறக்கம் எனும் மகுடியைக் கொண்டு மயக்கிவிட்டதே என்ற பிரம்மையை ஏற்படுத்தும். தூக்கத்திற்கு கட்டுப்டாதவர்கள் யாரேனும் உண்டா?…. என்ற கேள்வி இதற்குமுன் எழவில்லை. இப்பொழுது அடிக்கடி தோன்றுகிறது…. எங்காவது கேட்டும் இருமல் ஒலி……. இரவு கூர்க்காவின் கைத்தடி சத்தம்….. சுவர்ப்பல்லியின் ஒலி என ஒவ்வொன்றும் காதுக்குப் புலனாகும். கண்முன் காட்சி விரியத் தொடங்கும் நினைவிற்கு திரும்புகையில் பலமணி நேரங்கள் கடந்திருக்கும்
இரவை அழகெனக் கருதாது வண்ண மின்னொளிகளைப் பரப்பி இரசிக்கின்றனர். சரம்சரமாய் தொங்கும் விளக்குகள் குடும்பத்தின், குறிப்பிப்பிட்ட நிகழ்வுகளின் ஆளுமையை வெளிப் படுத்துவதாய் நினைத்துக் கொள்கின்றனர். தொங்கும் விளக்குகள் எதற்காகவோ ஊசலாடிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.
அடர்ந்த இருளின் அழகை இரசிக்கப் பழகாதவர்களாக மாறிவிட்டதன் காரணம் உயிர்பயமா? இருக்கலாம்……. இரவச்சம் உயிரைப்பிடித்துக் கொண்டு தற்காத்துக் கொள்ள ஓடிய காலத்திலேயே இருந்திருக்கும். கற்களின் உராய்வில் மின்னிய ஒளி அற்புதமான கண்டுபிடிப்பு மனிதன் அச்சத்திலிருந்து மீட்டுக்கொள்ள ஒளி பயன்படுகிறது. ஜோதியில் இலயித்தவர்களுக்கு இருளை அழித்துவிடும் நாட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. தீபத்தை முன்னிட்டு விழாக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
விளக்கேற்றினால் மின்மினிப்பூச்சிகளும் அதுபோன்ற பிறவும் இறந்துவிடுமென்றஞ்சி உயிர்வதை வேண்டாமென பொழுதோடு உணவருந்திவிட்டு துயிலப்போனவர்கள் குறித்து கேட்டிருக்கிறேன். ஒரே ஒளி ஓரிடத்தில் கொண்டாட்டத்தையும் மற்றொரு இடத்தில் தானல்லாத பிற உயிர்கள் மாயும் என்ற உயிரச்சத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.
நீர்நிலைகளை ஒட்டி தங்க நேர்ந்த சிறுவயதின் இரவுகள் தவளைச் சத்தத்தையும் இனம்புரியா வண்டுகளின் ஒலியையும் கேட்கையில் தூக்கத்தைத் துறந்துவிடும். இரவுகளின் நிசப்பத்தை எடுத்து பதுக்கி வைத்துக்கொள்ள பெருங்கடத்தல்காரியைப் போல முயன்று முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இரவோடு தோற்றுப் போகிற தருணங்கள் உண்டு.
எனது இயலாமையை என்மீது செலுத்தும் வஞ்சகத்தை நினைவூட்டும் இரவுகள் வெறுப்பின் விளிம்புக்கே இட்டுச் சென்றுவிடும். தன்னைத் தானே வெறுக்கும் அவலத்தின் கடைசி விளிம்பு அது…… மீட்டுக் கொள்ளப் போராடிப் போராடி தன்னிடம் தானே தோற்கும் இரவது. இந்த இரவுகளை மறந்து விடவேண்டும். நினைப்பவையெல்லாம் மனதுக்கு இதமானதாக இருந்தால் உறங்கிவிடுவேன். மீண்டும் வயிற்றில் அசைவு….. அடங்காம இப்படித்தான் துள்ளிகிட்டே இரு….. உன்ன என்ன செய்யறதுன்னு தெரியல பளுதாங்காமல் கால் நரம்புகள் புடைத்து இழுத்தன.
மனிதன் இயந்திரமாகிப் போய்விட்டான். பகல் இரவுகளைக் கடந்து வாழத் துவங்கிவிட்டான். பருவநிலை மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாத தீவிரவாதத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கிறோம். மனித உயிர்ச்சங்கிலியும் மரபணுக்களும் விபரீதங்களைச் சந்தித்து வருகிறது….. இதற்கிடையில் நீ பிறந்து வளர்ந்து கலந்து விடுவாய்…. என குதூகளிக்கும் பிள்ளையிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். வீயூகங்களுக்குள் நுழையக் கற்று விடுகிறோம்….. வெளிவருவதற்கான வழிகளை தேடிக் கண்டுபிடிப்பதற்குள் ஓய்ந்து விலகிவிடுகிறோம்..
மனதை உடலை அனுபவங்களை அசை போடத்தக்க தனிமையை படரவிட்டிருக்கிற இருள் எனக்கு என்னை உணர்த்திக் கொண்டிருக்கிறது. மதகுகள் உடைபட்டுப் பேராறு உருவாகிக் கொண்டிருப்பதுபோல உணர்ந்தேன். கால்இடுக்கில் தட்டுப்பட்ட ஈரப்பிசுக்கு அருவருப்பாக இருந்தாலும் வேறேதும் செய்துவிட முடியாதே என தேற்றிக் கொண்டேன். வலியின் முனகலைக் கட்டுப்படுத்திக் கொள்ள உதடுகளை அழுந்தக் கடிப்பதும் கைக்கு அகப்பட்டவற்றை பலங்கொண்டமட்டும் அழுத்திப் பிடிப்பதுமாக ஓடிக் கொண்டிருந்த வலியைப் பார்ப்பவர் மனங்களுக்குக் கடத்திக் கொண்டிருந்தேன்.
இடுப்பில் சுடச்சுட நீரை ஊற்றிக் கொண்டு கஷாயத்தைக் குடித்து முடித்ததும் கொஞ்சம் இதமாக இருந்தது. தொலை பேசியில் அழைத்தவுடன் வந்து சேர்ந்தது வாகனம். மருத்துவமனை வசதியாகத்தான் இருக்கிறது. இரவு பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. பொய்வலியா மெய்வலியா என சொல்லத் தோன்றாமல் விட்டுவிட்டு வலித்துக் கொண்டிருந்தது. மருத்துவர் பரிசோதித்துவிட்டு கொஞ்சம் வலி கூடனும் என சொல்லி விட்டுச் சென்றார்.
அருகிலிருந்த பாட்டியின் அனுபவங்களைக் கேட்டுக் கொண்டிருக்கலாமென நினைந்தேன். அவளது உடலெங்கும் சுருங்கியிருந்தது. அத்தனை சுருக்கங்களும் அவளது அனுபவங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிற சுருக்குப்பைகளாகத் தோன்றியது நான் சொன்னதும் அந்நள்ளிரவிலும் உற்சாகமான பாட்டியைப்பார்த்துத் திகைத்தேன். வீட்டிலேயே மருத்துவச்சியைக் கொண்டு பிரசவம் பார்த்துப்போம் எனக் கூறத் தொடங்கிவிட்டாள் பாட்டி.
’பாட்டி உங்க கடைசி மகன் பிறந்தப்போ என்ன செஞ்சீங்க!’ என்ற எனது கேள்வி அவளது பொது அனுபவத்தைக் குறிப்பிட்ட அனுபவமாகச் சுருக்கியது பகலெல்லாம் சமையற் கட்டிலும் மாடுகன்றுகளோடும் மூன்று மாமியார்களோடும் உழைப்பெடுத்து விட்டு குத்திவைத்த நெல்லை அடுத்த நாள் உணவுக்காக புடைத்துக் கொண்டிருக்கையில் இரவு அனைவரையும் தூங்க வைத்துவிட்டிருந்தது. அதிகரிக்கும் அதிகரிக்க இரவெல்லாம் தூங்காமல் நடந்தும் உட்கார்ந்தும் என்ன செய்வதெனப் புரியாமலும் அவளின் முந்தைய பிரசவங்களை நினைத்துக் கொண்டுமிருந்து பிறரைத் தொந்தரவு செய்யத்தயங்கிய அந்த இரவை விவரித்தான் பாட்டி. எனக்கு வலி தோன்றும் போது நிறுத்திவிடுவதும் குறைந்ததும் கூறத் தொடங்குவதுமாக இருந்தாள்.
பகலில் கூப்பிட்ட குரலுக்கு பெண்கள் ஓடிவந்து சூழ்ந்து கொள்வார்கள். இரவில் எந்த மாமியாரை எழுப்புவது ஒருத்தியை எழுப்பினால் அடுத்தவள் கோபித்துக் கொள்வாள். சத்தமாகக் குரலெழுப்பி விடலாமெனில் அவமானமாக இருக்கிறது. திண்ணையில் படுத்திருக்கும் கணவனை எழுப்பலாமென்றாலும் மூன்று மாமியாரிடமும் பேச்சு வாங்கிக் கொள்ள வேண்டிவரும் அவனை எழுப்பத் தெரிந்தவளுக்கு எங்களை எழுப்பத் தெரியலையா என்பாள் ஒருத்தி, பொய்வலிக் கெல்லாம் குரல் கொடுக்காதே என்பாள் மற்றொருத்தி, காதைக் கிழிக்கும்படி கத்தினாலும் எழுந்துக் கொள்ள முடியாத அளவு தூங்குவாள் ஒருத்தி. இரவு கடந்து விடிந்து விடாதா…நடமாட்டம் ஏற்பட்டு விடாதா என ஏங்கிக்கொண்டிருந்த அந்த இரவை வலியோடு கூடிய தன்மையைப் பாட்டி சொல்லி முடிக்கவும் எனக்கு வலி கூடவும் சரியாயிருந்தது.
சுகப்பிரசவம் என்று முன்பே கூறியிருந்தார்கள். நர்ஸ் வந்து எனிமா குடுக்கனும் என்றாள். மணி இரண்டைத் தொட்டுவிட்டது வலியில் உடனே பிறந்து விட்டால் நன்றாக இருக்கும் நேரமாக நேரமாக தாங்கிக் கொள்ள வேண்டிய வலி ஆயாசத்தைத் தந்தது.
பிரசவத்தின் போதான அழுகை உடலை அந்நியப்படுத்தி விடுகிறது. பிரசவ அறையிலிருந்து வெளிப்படும் அலறல் தன்னிலிருந்து உடலைப் பிரித்தெடுத்து வைத்து விட்டதைக் காட்டுகிறது. அதனால் அழுதுவிடக்கூடாதென கட்டுப்படுத்திக் கொண்டேன்
இது என் உடல் பெரும் அதிசயங்களை மாயாஜாலத்தோடு ஒப்பிட முடியாத ஆற்றலைக் கொண்டிருக்கிற உடல் இன்று பெருக்கெடுத்து நீர்மமாய் வழிந்து கொண்டிருக்கிறது.
இன்னும்…இன்னும்…. இன்னும்…எனும் மருத்துவரின் குரலை இடையீடு செய்து வீலென அலறிய சப்தத்தோடு தூக்கிக் காட்டினர். ஆதங்கத்தோடு பார்த்தேன்…அந்த இரவிலும் விடியலின் வெளிச்சம் குருதி வாசனையோடு மெல்லப் பரவியது.
– 02/01/2012, கடந்த ஆண்டு இரவு தொகுப்பில் வெளிவந்தது.
நன்றி: https://peruvelippen.wordpress.com/2012/01/02/கருவறைபோன்று/