கருப்புப்பசு (என்கிற) பாத்திமா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 12,797 
 
 

இப்படி அதிகாலை ரயிலில் வந்து இறங்கி வீட்டிற்கு நடந்துபோவது நன்றாகத்தான் இருந்தது.

இருட்டுக்குள் தண்டவாளங்கள் வளைந்து கிடந்தன. ஒன்றுமே தெரியாத முகத்துடன் அவை எந்தச் சம்பந்தமும் அற்றது போல அப்படிக் கிடப்பது எனக்குப் பிடித்திருந்தது. நான் கூட இறங்கி வந்த ரயிலை முற்றிலும் மறந்து விட்டிருந்தேன். எடை பார்க்கிற இயந்திரம் சிவப்பாக மினுங்கியது. குடும்பத்துடன் வரும்போது யாராவது ஒருவரை மட்டுமாவது எடை பார்க்கத் தூண்டிவிடுகிற அது ரொம்பச் சோர்வுடன் இப்போது நிற்பது போலிருந்தது. படிகளின் திருப்பங்களில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மூத்திரவாடை அவர்களை ஒன்றும் செய்யவில்லை. வழியெல்லாம் வீசி எறியப் பட்டிருக்கிற மஞ்சள் பயணச் சீட்டுக்கள்.

ஸ்டேஷனுக்கு வெளிச்சுவரில் புதிதாக ஒட்டப்பட்டிருக்கிற சுவரொட்டிகளை இன்றைக்கும் படிக்காமல் இருக்க முடியவில்லை. இருட்டில் சுவரொட்டி முகங்கள் வினோதமாகச் சிரித்தன. சைக்கிள் ரிஷாவின் மேல் வேப்பிலைகள் உதிர்ந்து கிடக்க, ரிஷாவில் படுத்திருந்தவன் கரண்டைக் காலின் மேல் கட்டுப் போடப்பட்டிருந்தது. ஆட்டோ உறுமல் இல்லை . பூக்காரி வரிசை இல்லை என்றாலும் அந்தந்த இடங்களில் வாடிக்கையாக உட்கார்ந்து வியாபாரம் பண்ணுகிற முகங்களும் குரல்களும் ஞாபகத்திற்கு வந்தன. ஒரு குரல் பக்கத்தில் கைப்பிள்ளை உட்கார்ந்திருந்தது. இன்னொரு குரலில் இருபக்கம், ஊன்றுகோல்களுடன் ஒருத்தர் கையேந்திக் கொண்டிருந்தார்.

பிள்ளையார் கோவிலில் பூட்டுத் தொங்கியது. மடக்குக் கதவு போட்டு நவ்தால் பாதுகாப்புடன் விபூதிவாசனை வந்து கொண்டிருந்தது.

ஸ்டேஷன் பக்கத்திலிருந்து ஆரம்பித்துக் கடைசிவரை நிற்கிற காய்கறிக் கடைகள் மூடியிருந்தன. இரண்டு பக்கங்களிலும் ஜாதிக்காய் பெட்டி, சாக்கு மூட்டைகள் என்று அங்கங்கே அடுக்கப்பட்டு, அதன்மேலேயே ஒன்றிரண்டு பேர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கடலைக் கடைக்குப் பக்கத்திலுள்ள காய்கறிக்கடைக்காரர் முகம் தூங்கும்போது பச்சைப்பிள்ளை முகம் மாதிரி இருந்தது. முறுக்கிவிடப்பட்டிருக்கிற மீசைக்கும் கட்டியிருக்கிற தாயத்துக்கும் ஏற்ப, வியாபாரம் செய்யும்போது அவரிடம் தென்படுகிற கறார் இப்போது எங்கே போயிற்று என்று தெரியவில்லை . அவர் படுத்திருக்கிற சாக்கு விரிப்பிலேயே, முன்னங்கால்களின்மேல் முகத்தை வைத்துக்கொண்டு ஒரு கருப்பு நாய் தூங்கியது.

கருப்பு நாயைப் பார்த்ததும் கருப்புப் பசுவின் ஞாபகம் வந்துவிட்டது எனக்கு. பசுவா அது? காளையாகவோ யானையாகவோ பிறந்திருக்க வேண்டியது. தப்பித்தவறி பசுவாகப் பிறந்துவிட்டது. இவ்வளவு பெரிய உருவத்துடன் பசுக்கள் இருக்க முடியும் என்பதும், தன் இஷ்டத்திற்கு அவை இரைதேடிக்கொண்டு, இப்படிச் சர்வசாதாரணமாக அலைய முடியும் என்றும் இங்கேதான் எனக்குத் தெரிந்தது.

நானும் ஈஸ்வரியும் என்றைக்கு எல்லாம் இங்கே வந்து காய்கறி “வாங்குகிறோமோ அன்றைக்கு எல்லாம் இந்தக் கருப்புப்பசு வந்து பயங்காட்டியிருக்கிறது.

ஒன்று, அது என் முன்னால் வரும். அல்லது பின்பக்கத்துக் கடையில் முட்டைக்கோஸ் இலையை ஒரு வாய் கவ்விக் கொண்டு, ‘பூஸ்’ என்று நல்லபாம்பு மாதிரி மூச்சுவிடும். மூச்சுவிடுவது கூடப் பரவாயில்லை . அந்தச் சமயத்தில் குனிந்திருக்கிற தலையை அது உயர்த்துகிற விதம்தான் நம்மைக் கலவரப்படுத்தும்.

யாராவது ஒரு காய்கறிக் கடைக்காரர் அடித்து விரட்டுவார். அந்த விரட்டலில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற சைக்கிள்களைத் தள்ளிவிட்டுக் கொண்டு, நேராக என்னை முட்டிச் சாய்க்க முடிவு செய்துவிட்டது போல், தடக்தடக் என்று ஓடிவரும். நான் ஈஸ்வரியையும் இழுத்துக்கொண்டு, பக்கத்திலிருக்கிற மெடிக்கல் ஸ்டோர் நடையிலோ, தேங்காய் கடையிலோ ஏறுவேன். அப்படி உடனடியாக ஏறமுடியாத ஒருசமயத்தில், அந்த இடத்தில் இருந்த ஒரு தந்திக் கம்பத்தோடு தந்திக் கம்பமாய் நான் சாய்ந்து கொண்டு வாய்விட்டு அலற, அவ்வளவு தூரம் ஓடியே வந்த கருப்புப் பசு, சடன் பிரேக் போட்டதுபோல எனக்கு முன்னே வந்து நின்றபடி, சாதுவாகக் கழுத்தைத் திருப்பி, உடம்பை நக்கிக் கொடுத்துக் கொண்டது. வெளிறின என்முகத்தில் பதட்டம் இருந்திருக்கும்.

“ஒரு பசுமாட்டுக்குப்போய் இப்படிப் பயப்படுவாங்களா?” ஈஸ்வரி சிரிப்பாள். காய்கறிப் பையின் வெளியே தொங்குகிற கொத்துமல்லித் தழையும் சிரிப்பது போல இருக்கும்.

“முட்டித் தள்ளினால் அல்லவா தெரியும்” என்று நான் சொல்லுவேன். “அதை பார்த்தால் முட்டுகிற மாதிரியா இருக்கு? அதன் கண்ணைப் பார்த்தால் அப்படியா தெரியுது? கொம்பைப் பாருங்க. கண்ணு கொம்பு எல்லாம் இருக்கட்டும், சொம்புகணக்காகத் தொங்கிக் கிட்டுக் கிடக்கிற மடியைப் பார்த்தா கன்னுக்குட்டியைத் தேடிக்கிட்டு அலைகிற மாதிரி இருக்கே தவிர, முட்டுகிறதுக்கு வருகிற மாதிரியா இருக்கு?”

இப்படிச் சொல்லிக்கொண்டே ஈஸ்வரி என்னிடமிருந்து நகர்ந்து போவாள். இவளும் கன்றுக்குட்டியைத் தேடுகிறமாதிரித் தான் இருக்கிறது. எல்லோரும் அவரவர் பெண்களைப் பையன்களைத் தேடிக்கொண்டு அலைவது மாதிரித் தோன்றியது.

பின்னால் உள்ள இலைக்கடையில் நறுக்கிப் போடப்பட்டிருக்கிற இலைத்துண்டுகளைக் குனிந்து ஈஸ்வரி அள்ளிக் கொண்டிருந்தாள். கருப்புப் பசு ஒரு எட்டு அவள் பக்கம் நகர்ந்து வாயில் வாங்கிக் கொண்டது. அது சவைக்கச் சவைக்க வாழையிலையின் வாசனை வந்தது. இலையின் நடுத்தண்டு கரகரவென்று அறைபட்டது. ஈஸ்வரி ஒரு பிள்ளையைத் தடவிக் கொடுப்பது போல அந்தப் பசுவின் கருப்பும் வெளுப்புமான அடிவயிற்றை மேலிருந்து கீழாக நீவி விட்டுக் கொண்டு நின்றாள்.

சினிமாக்களில் எல்லாம் பாட்டுச் சொல்லிக்கொடுக்கிற வேடங்களில் ஒல்லியாக ஒரு அம்மா வருவாரே, அவர் மாதிரி இருந்தது ஈஸ்வரியைப் பார்க்க. அவளுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத உயரமும் பருமனுமாக அந்தக் கருப்புப் பசு நின்றது. அதன் காதுகள் இரண்டு பக்கமும் மடங்கி நிமிந்து ஈஸ்வரியிடமிருந்து ஏதோ ஓர் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டதுபோல மறுபடியும் அசையாது நின்ற தோற்றம் அழகாக இருந்தது. ரகசியம் நிரம்பிய அழகுடன் ஈஸ்வரியும் நின்றாள்.

சட்டென்று தெரு முழுவதும் மின்சார வெளிச்சம் அணைந்தது. மின்சாரம் போகிற எல்லா நேரத்திலும் உடனடியாக வருகிற ஒரு சிறு பதற்றத்தை இன்றும் தவிர்க்க முடியவில்லை. இருட்டில் நின்று கொண்டு, சற்று உரக்கவே அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். கருப்புப் பசு அவளை முட்டிவிடும், என்னை முட்டிவிடும் என்ற பயம் என் குரலுடன் இருட்டில் துளாவியது.

இரண்டு மூன்று நிமிட அமைதிக்குப் பிறகு, மின்சாரம் வந்து எல்லா விளக்குகளும் எரிந்தபோது; ஈஸ்வரி அந்தப் பசுவின் பக்கமே இன்னும் நின்று கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அவளுடைய வலது முழங்கையின் ஆடுசதையைப் பசு நக்கிக் கொண்டிருந்தது.

“சரியான பயந்தாங்கொள்ளி மாஸ்டர்” ஈஸ்வரி சொல்லிக் கொண்டே வந்து அந்தப் பசுமாட்டைத் தடவிக்கொடுத்த கையை என் மூக்கில் வைத்தாள். காய்ச்சல்காரர் உடம்பைத் தொட்டது போல வெதுவெதுப்பாக இருந்தது அந்த உள்ளங்கை.

“உன் தைரியம் தெரியாதாக்கும்?” ஈஸ்வரியைக் கேட்டேன்.

“என் தைரியத்துக்கு என்னவாம்?” அவள் இன்னமும் தன்னுடைய கையையே பார்த்துக் கொண்டு நடந்தாள்.

“சில பேருக்குக் கொம்பு இருக்கிறதுக்கிட்டே பயம். சிலபேருக்குக் கொம்பு, இல்லாததுகிட்டே பயம்”. நான் சிரித்தேன்.

“என்ன நடுரோட்டில வச்சு அழிப்பாங்கதை போட்டு விளையாடி ஆகுது!” என்று ஈஸ்வரி புருவம் சுருக்கிக் கேட்ட போது, இன்னும் சற்றுப் பக்கத்தில் போய், ‘பாத்திமா’ என்று அந்தப் பெயரை மட்டும் சொன்னேன்.

“சும்மா இருங்க”- சட்டென்று ஈஸ்வரி பதறினாற்போல் நின்றாள். என்னுடைய மேல் கை, முன்கை இரண்டையும் பற்றிக் கொண்டாள். மேல்கைச் சதையில் புதைந்த அவளுடைய கை இறுகிக் கொண்டே போயிற்று. முகமும் கன்னச்சதையும் தோளில் அழுந்தியது. தலையின் உச்சி வகிடு பிளந்து கொண்டு தெருவில் ஓடியது.

“மாமா. மாமா. பசிக்குது மாமா” – நான் பாத்திமா கேட்பது போலவே கேட்க ஆரம்பித்தேன். பாத்திமாவின் குரலை இத்தனை நாள். உள்ளுக்குள்ளேயே, பதிவுசெய்து வைத்திருந்தது போல், தொண்டை நெரிந்த அந்தக்குரல் என்னிடமிருந்து தலையைச் சொறிந்து கொண்டு கைநீட்டியது ஈஸ்வரியிடம். –

பாத்திமா பரட்டைத் தலையும், கந்தல் மூட்டையுமாகச் சமீபகாலமாக எங்கள் தெருவில், அதுவும் எங்கள் வீட்டுப் பக்கத்தில் உள்ள ஒரு நடையிலேயே உட்கார்ந்திருக்கிறாள். தெரு விளக்கு, குப்பைத்தொட்டி, தெருமுனையில் இருக்கிற டீக்கடை, பக்கத்தில் இருக்கிற கல்யாணமண்டபம் இப்படி ஏதோ ஒன்று அவளை இங்கே இருக்கச் சொல்லியிருக்க வேண்டும்.

சாதாரணமாக வீடுபக்கத்தில் வந்துவிட்ட மனநிலையில் நடந்து வந்து கொண்டிருப்போம். சற்று உள்ளடங்கின அடுத்த வாசல் நடையில் இருந்து சரேல் என்று பாத்திமா எழுந்து நின்று கொண்டு குரல் கொடுப்பாள். ஒவ்வொருதடவையும் ஒருவித பயம் வரத்தான் செய்தது.

“மாமா. மாமா. பசிக்குது மாமா” என்பதையே வேறு ஒரு வடக்கத்தி பாஷையில் அவள் சொல்கிறதாகச் சொன்னார்கள். வெள்ளைக் களி மண்ணில் பொம்மை செய்து ஊர் ஊராக விற்பார்களே அந்த ஜாடைப் பெண்கள் மாதிரி இருந்தது. ஒரு கையில் நிறைய வளையல்கள் இருந்தன. கிளிப்பச்சை நிறத்தில் அவள் போட்டிருந்த சட்டை முன்கைவரை நீண்டு, இடுப்புவரை தொங்கிக் கொண்டிருந்தது. மாமா, மாமா என்று கேட்கும் போது பாவமாகவும் சிரிக்கும்போது விகாரமாகவும் இருந்தது. புத்திக்குச் சரியில்லாத முகத்துக்கு விகாரம் என்ன, அழகு என்ன என்பது உண்மைதான். ஆனால் அவள் சிரிக்கச் சிரிக்கத்தான் ஈஸ்வரி ரொம்ப பயந்தாள்.

“கொஞ்ச நாளாகத்தான் அவளை எங்கேயோ காணோம். உங்களைப் பார்த்தால், அந்தச் சத்தமும் முகமும், அப்படியே அவளே திரும்பி வந்து விட்டது மாதிரி இருக்கு சாமி” -சிலிர்த்தது மாதிரி ஒருமுறை உடம்பு குலுங்கியது ஈஸ்வரிக்கு.

“மறுபடியும் அவளை ஞாபகப்படுத்தாதீங்க. கும்பிடுதேன் உங்களை” – ஈஸ்வரி நிஜமாகவே கைகளைக் கூப்பிக் கும்பிட்டது ஆச்சரியமாக இருந்தது. கண்களில் மிரட்சி. கலங்கல் கூட.

மின்சாரம் போயிருந்த சமயம் கருப்புப் பசு பக்கம் நின்று கொண்டிருந்த ஈஸ்வரியும் இவளும் வேறு வேறு என்கிறது போல முகம் தொலைந்திருந்தது.

ஸ்டேஷன் ரோடு முடியப் போகிறது. ரயில்வே ஸ்டேஷன் ரோடுகளுக்கு உண்டான அழகை வேறு எதுவும் அபகரித்துக் கொள்ள முடியவில்லை. இந்த அதிகாலையில் அந்த அழகு நீண்டு கொண்டே போவது போல இருந்தது. குளிர்ந்து அமைதியாகக் கிடந்த தெருவில், இன்னும் இரண்டொருவருடன், பெட்டியும் கையுமாக நான் நடப்பது மட்டுமே அசைவுகளாக இருந்தன. மௌனமாகச் செல்லும்படி அந்தச் சாம்பல் இருட்டில் ஏதோ ஒரு உத்தரவு இருந்தது.

குறுக்குத் தெருக்களை எல்லாம் தாண்டி, பிரதானமான தெரு அகன்று வழிவிட்டுக் கொண்டே போனது. கடல் எனக்கு வழிவிடுவது போல நினைத்துக் கொண்டேன். தெருவின் முடிவில் கடல் இருப்பது போலவும் கடற்கரையில் அடர்ந்த தென்னைகள் அசைந்து, கூட்டத்தில் ஒரு தலைக்குப்பின்னால் இன்னொரு தலை எக்கிக்கொண்டு எட்டிப் பார்ப்பது போல, நான் வருவதையே அந்தத் தென்னை மரத் தோகைகள் பார்த்துக் கொண்டு இருப்பதுபோலவும் இருந்தன.

வீட்டுக்கு வருகிற தபால்கள் செருகப்பட்டிருப்பதுபோல, நிலா கூடக் கீழ்ப்பக்கமாகத் தேய்ந்து வானத்தில் செருகிக் கிடந்தது. ஒரு சைக்கிள் ரிஷாவுக்கு இதெல்லாம் தெரியுமா. அது தன்போக்கில் கீச்கீச் என்று சப்தம் போட்டுக் கொண்டே வந்து பெருமாள் கோயில் பக்கம் நின்றது. துளசியை இப்படி மூடை மூடையாக இறக்குவார்களா என்ன? துளசியின் மணத்தில் நடந்து சென்று கொண்டிருக்கிற இந்தத்தெருவே நிரம்பின மாதிரி ஆகிவிட்டது. இந்த நேரத்தின் வாசனை இதுவாகத்தான் இருக்கும்.

கண்களை மூடி ஆழமாக மூச்சு இழுத்துக் கண்களைத் திறந்த போதுதான் அது நிகழ்ந்தது.

வலது பக்கத்து சந்திலிருந்து அந்தக் கருப்புப்பசு வந்து கொண்டிருந்தது. தேய்த்துக் குளிப்பாட்டிவிடப்பட்டது மாதிரி உடம்பின் கருப்பு மினுமினுத்தது. இவ்வளவு அதிகாலையில், ஆளே அற்ற இந்தத் தெருவில் நிரம்பியிருக்கிறதுளசியின் மனத்தில் புகுந்து கொள்ளப் போவது போல் அந்த கருப்புப்பசு நடந்துவந்தது.

எனக்கு நேர் எதிராக அது வரவர, அதை நோக்கியே போய்க்கொண்டிருந்தேன். இடையில் இருந்த தெருப்பகுதியை இரண்டு பக்கத்திலிருந்தும் குறைத்துக் கொண்டு, நெருங்கிக் கொண்டிருந்த போது, மறுபடியும் அந்த வலதுபக்கச்சந்திலிருந்து ஒரு கன்றுக்குட்டி ஓடிவந்தது. கருமெழுகுபோல ஓட்டமும் நடையுமாக வந்த விதத்தில் கருப்புப்பசுவின் பின்னால் மிச்சம்கிடந்த தெரு நிரம்பிவிட்டிருந்தது. முதலில் கருப்புப்பசு, அப்புறம் கன்றுக்குட்டி, அதற்குப் பத்தடி தள்ளி, பால் குவளையும் கயிறுமாகக் கருப்புப் பனியன் போட்ட மனிதர் சைக்கிளில் வந்தபடி இருந்தார். போதுமான இடைவெளிகளுடன், அந்தக் கருப்புப்பசு இதுவரை ஈஸ்வரிக்கும் எனக்கும் காட்டாத தன்னுடைய கன்றுக்குட்டியுடன், யாருடைய எந்த விரட்டலும் இன்றித் தன் நடையாக, மேச்சலுக்குப் புறப்பட்ட மாதிரி வந்து கொண்டிருந்தது. தீராத புல்வெளிகளின் அடர்த்திக்குள் குளம்புகள் மறைய மறைய அது நடக்கிறபோது, புல் மிதிபடுகிற வாசம் வருவது போல இருந்தது. புல்லுக்குள் இருந்த குஞ்சுத்தவளை குதித்து என்பக்கம் தாவுகிறதாகத் தோன்றியது.

எனக்கு மிக அருகில், என் கை எட்டுகிற தூரத்தில் வந்து நின்று கொண்டு அது சற்றுத்திரும்பிப் பார்த்தது. திரும்பிப் பார்ப்பதற்காகச் சிறு வட்டமாக அதன் முகம் திரும்பிய விதம் சொல்லமுடியாத நேர்த்தியுடன் இருந்தது.

என்னை அது பார்த்தது மாதிரியே தெரியவில்லை.

ஓடிவந்து சேர்ந்து கொண்ட கன்றுக்குட்டி, பின்கால்கள் வழியாக மடியை முட்டிக் கடிக்க ஆரம்பித்த போது, இரண்டு பக்கவாட்டிலும் பளீர் என்று சரிந்திருந்த உடம்பு சிலிர்த்துக் கொள்ளக் கருப்புப்பசு நடக்க ஆரம்பித்தது.

கையிலிருந்த பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, நகர்கிற அதன் உடம்பை ஒருமுறை தடவிக் கொடுத்தேன். விரல்களை அகலவிரித்து மெத்தென்று பதித்துக் கொண்டேன். பசு நகர நகர கை வழுக்கிக் கொண்டு சரிந்தது.

தடவின உள்ளங்கையுடன் அப்படியே போய் ஈஸ்வரியை முகர்ந்து பார்க்கச் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஈஸ்வரி ஞாபகம் வந்தவுடன் பாத்திமா ஞாபகமும் வந்தது. சற்றே நடைபாதையில் நின்று திரும்பிப் பார்த்தேன்.

முன்பைவிட வெளிச்சம் வந்துவிட்ட தெருவில், சீரான நடையில் கருப்புப்பசுவும் கன்றும் மறைந்து, பாத்திமாவும் அவள் பிள்ளையும் நடந்து போவது போல இருந்தது.

பின்னால் கருப்பு பனியனுடன்சைக்கிளில் போவது அவளுடைய மாமாவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

– சென்னை வானொலி – 1997

வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர். ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *