கருப்பியைக் காணவில்லை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 3,816 
 
 

விடிந்ததும் விடியாததுமான வேளை. மாணிக்கப் பெத்தாச்சி சுருட்டைப் புகைத்தபடி கறுப்பியைக் கூப்பிட்டுப் பார்த்தாள. பெத்தாச்சியின் ஒரு குரலிற்கே ஓடி வந்துவிடும் கறுப்பியைக் காணவில்லை.

‘எங்கோ போயிட்டுது’ என்று முதலில் தனக்குச் சமாதானம் கூறிக் கொண்ட பெத்தாச்சியால், நேரம் செல்லச் செல்லப் பொறுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் கூப்பிட்டுப் பார்த்தாள்.

கறுப்பியைக் காணவில்லை.

சுருக்கம் விழுந்த பெத்தாச்சியின் முகத்தில் கவலை குடிகொண்டது. வளவ முழுவதும் கறுப்பியைத் தேடிப் பார்த்தாள். கிணற்றுக்குள்ளும் எட்டிப் பார்த்தாள். வேலிகளின் பொட்டுகள் ஊடாசப் பக்கத்து வீடுகளையும் நோட்டம் விட்டாள்.

‘கறுப்பியைக்காணேல்லை .. எங்கை போச்சுதோ ……….! காலுக்கை கையுக்கையே சுற்றிச் சுற்றி நிக்கும்…..

Karuppi-picநேரம் போய்க் கொண்டே இருந்தது; சிறகடித்துப் பறந்தது.

மாணீக்கப் பெத்தாச்சிச்குக் கையும் ஓடவில்லை: vசாலும் ஓடவில்லை. காலைத் தேநீர் குடியாத களைப்பு ஒரு பக்கம்; காப்பியைத் தேடிய இளைப்பு ஒரு பக்கம். திண்ணைக் குந்தில் தலையில் கையை வைத்தபடி அமர்ந்து விட்டான்.

“என்ரை மோளுக்கு நான் என்ன பதில் சோல்லப் போறன்……. நான் ஆசைப்பட்டிட்டன் எண்ட துக்காக என்னட்டை வளர்க்கத் தந்தவள். எனக்குத் தணயும் அது தானே? எப்படி வளர்த்தன் இராசத்துக்கு என்ன பதில் சொல்லப் போறன்” என்று பெத்தாச்சி கலங்கினாள்.

“என்ன மாணிக்கம், உன்ரைபாட்டுக்குப் புறு புறுக்கிறாய்….?”

வேலி யோரம் நின்று பக்கத்து வீட்டுச் செல்லம்மா கேட்டாள்.

“என்ரை வயிற்றெரிச்சலை ஏண்டி கேட்கிறாய், செல்லம்மா! என்ரை கறுப்பியைக் காணவில்லை… எல்லா இடமும் தேடிப் பார்த்திட்டன்… நீ கண்டனியே?”

“கறுப்பியைக் காணேல்லையோ… எங்கை போறது இங்கனேக்கைதான் திக்கும்…. வடிவாப்பார்!” என்று கூறி விட்டுச் செல்லம்பா நடந்தாள்

“உவளுக்குக் கறுப்பினயக் காணேல்லை என்று வலு சந்தோஷம்… பொரிஞ்சு போவாள்..”

மீண்டும் மீண்டும் கூப்பிட்டுத் தேடிப்பார்த்தாள் பெத்தாச்சி சுறுப்பியைக் காணவில்லை.

‘ஆராவது இருக்காலும் எங்கை யாவது விட்டுத் தேடிப் பார்க்கலாம்…மூன்று பிள்ளையள் இருந்தும் என்ன பயன்? அனாதைப்போலக் கிடக்கிறான்…

“ஏணோய்…… அக்கா …! …ஏணோய்” படலையடியில் நின்று யாரோ கூப்பிடுகின்றார்கள். குரலிலிருந்தே கூப்பிட்டவாயார் என்பது பெத்தாச்சிக்கு விளங்கிவிட்டது.

“யார்…. சுப்பரப்பாவே ? வா…. வா உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறன்…”

படலையைத் திறந்தபடி சுப்பரப்பா வந்தார். அறுபது வயது மதிக்கலாம். இடுப்பில் பழுப்பேறிய செம்மண் வேட்டியும் சால்வையும். முன் பக்கத்தலையில் முகம்பார்க்கலாம்.

“என்ன அக்கை, விஷயம்! அப்படி அவசரமாகத் தேடினனீ?…. கூப்பன் எடுக்க வேணுமே…??”

“இல்லையடா..” என்று பெத்தாச்சி அக்கை பெருமூச்சு விட்டாள். ‘என்ரை கறப்பிபைச் காணேல்லை …. தேடிப்பார்த்திட்டன்…இன்னும் மோங் கழுவி ஒரு சொட்டுத் தண்ணி குடிக்கவில்லை..”

“என்ன… கருப்பியை … காணவில்லையோ?”

“ஓமோம்- கையுக்கை நிண்டது…”

“ஆரோ… இண்டைக்குச் சனிக் கிழமையல்லே…. சட்டிக்கை வைச்சிட்டினம்…”

“ஆங்…” என்று பெத்தாச்சி வீரிட்டாள் : “இருக்கும் அப்படியும் இருக்கும் கள்ளக் கோழி பிடிச்சுத் தின்னியள் அயலுக்கை இருக்குதுகள்…! உவளவை நல்லா இருப்பாளவையே…..! என்ரை கோழியைப் பிடிச்சவளவை குடி தெட்டுப் போவாளவை ! கண்கெட்டுப் போவாளவை… முழுக்குக்குப் பதமா, பல்லுக்கு ருசியாக் கள்ளக் கோழி திரிகியளவையின்ரை கழுத்துக்குக் கேடுவரும்…முனியப்பரே. நீ தான் கேள்! என்சை வயிறு பத்தி எரியுது நீ தான்வே! தோறையள்… பொறுக்யெள்…! இண்டைக்கு உதுக்கு நான் ஒரு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை! இழைக் கட்டிக் கறுப்பியைத் திண்டவளவையின்ரை கழுத்தை நெரிவிக்காமல் விடப்போவதில்லை” என்று பெத்தாச்சி முற்றத்து மண்ணையள்ளிக் காற்றிலே தூவித் திட்டினாள்; பெத்தாச்சி அக்கையின் நர்த்தனத்தைக் கண்ட சுப்பரப்பா அசந்து போனார்.

“அக்கை கத்தாதை … இஞ்சை வந்து திண்ணையிலை குந்து…. நான் சொல்லுறதை வடிவாக் கேள்”

“எட தம்பி, கறுப்பியைத் திண்ட வளவையை ஒருக்காக் கண்டுபிடிக்க வேணும்… நீ வா, தனையாளிச் செல்லப்பரிட்டை போய் மை போட்டுப் பார்க்க வேணும்….. அந்தாள் மையிலை பார்த்துச் சரியாச் சொல்லிவிடும்”

“உன்ரை ஆசையையும் ஏன் கெடுப்பான். பின்னை வா…” என்று சுப்பரப்பா புறப்பட்டார்.

தலையாளிச் செல்லப்பர் மை பார்ப்பதில் பிரசித்தி பெற்றார். வெற்றிலையில் ஏதோ மையைத் தடவி விளக்கில் பிடித்து வெகு நேரம் பார்த்தார். அவருடைய முகத்தையே பெத்தாச்சி கவலையோடு பார்த்தாள்.

“ஏதாவது மையிலை தெரியுதே?”

“ஆ… இதோ ஒரு மரம்….. என்ன மரம்…?” என்று நிறுத்தினார், செல்லப்பர்.

“முருங்கை மரம் அதிலைதான் கறுப்பி இரவிலை படுக்கிறது…!” என்றாள் பெத்தாச்சி.

“இதோ கோழி கீழே குதிக்கிறது தென்புறமாகப் போகிறது…. ஒரு நாய் துரத்துகிறது …”

“கோதாரி விழுவான்ரை நாய்! உது கனகன்ரை நாய்தான் …. அது தான் கோழியளைத் துரத்துறது…” என்று பெத்தாச்சி கூவினாள்.

“நாய் துரத்த…” என்று செல்லப்பர் தொடர்ந்தார். “கோழி வேலிப் பொட்டுகளால் வேகமாக ஓடுது. ஒரு வேலி …. இரண்டு வேலி… இதோ மூன்று நாலு… ஐந்து … ஆறு ஆ இதோ ஒரு வீடு–தலை வாசல ஒரு கிழவி இருக்கிறா…”

“வடிவாப் பாருங்கோ வடிவாப் பாருங்கோ ஆ ரெண்டு தெரியுதே…?” என்று ஆவலோடு பெத்தாச்சி கேட்டாள்.

“சீ…தெரியவில்லை… அடுப்படிக்குள் கோழி பயந்து நுழையுது – ‘லபக்’ அடுப்படிக்குள் இருந்த ஆரோ கோழியைப் பிடிக்கினம். அவ்வளவு தான்” என்றார் செல்லப்பர்.

“ஆரெண்டு தெரியேல்லையே?” – சுப்பரப்பா.

“தெரியேல்லை அங்காலைமை இருண்டு போச்சுது! தெற்குப் பக்கமா யாரோ பிடிச்சிருக்கினம்”

“இவ்வளவும் போதும் நான் ஆரெண்டு கண்டு பிடிக்கிறன் நீ கிளம்பு அக்கை …!” என்றார் சுப்பரப்பா.

செல்லப்பருக்கு மை பார்த்த உழைப்பு. இரண்டு ரூபா.

Karuppi-pic2வீடு திரும்பும் வழியில் சுப்பரப்பா கேட்டார்.

“அக்கை உனக்கு ஆரிலையாவது சந்தேகம் இருக்கே…உன்ரை வீட்டிற்குத் தெற்கலை ஒழுங்கை’ ஒழுங்கையிலை முதல் வீடு கனகற்றை என்ன?”

“கனகற்றை நாய் தான் துரத்தினதாம்!”

நாய் துரத்த அது வேலிப் பொட்டுக்குள்ளாலை ஓடினது அடுத்த வீடு நம்மடை மாஸ்ரர் வீடு”

“அதுகள் நல்ல சனம். அண்டைக்கும் அவையின்ரை வைக்கல் பட்டறையிலை கறுப்பி முட்டையிட கொண்டு வந்து தந்தவை! எனக்கு உவள் செல்லம்மாவிலும் சீனியற்றை தங்காத்தையிலும் தான் சந்தேகம்! உவள்தையல் முத்துவும் கள்ளக் கோழி பிடிக்கிறவன்……! நீ ஒருக்கா இந்த வீடுகளிய ஒரு நோட்டம் பார்…! தம்பி சுப்பரப்பா, நீ மட்டும் ஆர் கறுப்பியைப் பிடிச்சது எண்டு கண்டு பிடிச்சியெண்டால்!”

“எனக்கு விளங்கும். அக்கை! ஒரு போத்திலுக்கு நீ வழி பண்ணுவாய் .. நீ கவலைப்படாதை. எப்படியாவது ஒண்டைக்கு நான் கண்டுபிடிச்சிடுவன்.. உது பெரிய வேலையே..? சிம்பிளு” என்றார். சுப்பரப்பா .

சுப்பரப்பா புறப்பட்டுவிட்டார். இவரைப் ‘பெட்டைச் சுப்பரப்பா’ என்று ஊரார் கூறுவார்கள். ஒரு முறை ஒருவன் சுப்பரப்பாவை அடித்து நொறுக்குவதற்காகப் பொல்லைப் பிடித்தபடி, துரத்தி வந்தான். பயந்து போன சுப்பரப்பா ஓட்டமாய் ஓடி தன் வீட்டிற்குள் நுழைந்து மனைவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாராம். அதில் இருந்து இந்தப் பெயர் அவருக்கு, எல்லா விஷயத்திலும் தலையிடுவார்; எல்லாருக்கும் ‘அரைப் போத்திலு’க்காக உதவுவார்.

கறுப்பியை எப்படியாவது கண்டு பீடிப்பது என்று சுப்பரப்பா புறப்பட்டு விட்டார். கோழியைப் பிடித்தவர்கள் இப்போது பதம் பார்த்திருப்பார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். யார் பிடித்தார்கள் என்று தெரிந்தால் போதும்.

கனகரின் வீட்டு வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்தார், சுப்பரப்பா; “உங்கைதான கறுப்பியை நாய் துரத்தினது”.

“கோதாரியிலை போவான். ஆரடா அது ? வேலிக்கு மேலாலை எட்டிப் பார்க்கிறது? வீடு வாசலிலை பெண் புரசுகள் இருக்க முடியாமல் இருக்குது” என்று கனகரின் தாய்க் கிழவி கூச்சல் போட்டாள் “நான் உவனுக்குப் படிச்சுப் படிச்சுச் சொன்னனான். கேட்டானே? வேலியலை நல்லா உயர்த்தியும் இழை நல்லாப் பதிச்சும் அடை எண்டு..! கேட்டானே? உதார் உவன் … திரும்பவும் எட்டிப் பார்க்கிறது…?”

“அது நான், அக்கை …!”

“நான் எண்டால் ஆர்?”

‘சுப்பரப்பா! நாய் படுத்திருக்கோ எண்டு எட்டிப் பார்த்தனான்”

“நீயே ! வா… இஞ்சை நாயில்லை, வலு காவலா நீண்டது… அது நிக்கு மட்டும் ஒருத்தர் வளவுக்கை வரமாட்டினம்” என்றாள் கனகரின் தாய்க் கிழவி.

“ஓமோம்…. நாய் வீட்டிற்குத் தேவைதான்…! கள்ளர் காடையர் இப்ப அதிகம். கண்டியோ? உங்கடை நாய் ஒரு கோழியைக் கூட வர விடாது என்ன?” என்று கேட்டார், சுப்பரப்பா.

“ஓமோம்! எனக்கக் கோழியளைப் பிடிக்காது! ‘திண்ணை முத்தத்தை அசிங்கப்படுத்திப் போடுங்கள்…”

“இப்ப உங்கடை நாய் எங்கை?”

“அதை தான் மூன்று நாளைக்கு முதல், போன புதன் கிழமை குறுக்காலை போவான் ஒருத்தன் காராலை அடிச்சுப் போட்டான்…..”

“குறுக்காலை போயிருக்கும்….! போன புதன் கிழமையே? அப்போ கறுப்பியைத் துரத்தினது ஆற்றை நாய் ..?”

“ஆரைத் துரத்தினது…?” என்று கேட்டாள் கனகரின் தாய்.

“ஆச்சி, இஞ்சை ஒருக்கா வானை..”. என்று பேத்தி ஒருத்தி கிழவியைக்கூப்பட்டாள்.

“அப்ப, நான் வாறன் அக்கை” என்றார் சுப்பரப்பா.

‘கறுப்பியைத் துரத்தினது ஆற்றை நாய் – வேற நாயா இருக்கும்… எதுக்கும் சீனியற்றை தங்காத்தை வீட்டை ஒருக்காப பாப்பம்…!’

தங்கம்மா தான் தங்காத்தையாக மாறிவிட்டது.

“என்னடா. சுப்பரப்பா, கன காலமா இந்தப் பக்கம் காணேல்லை…..? இண்டைக்கு மழைதான் வரப்போகுது … மத்தியான நேரத்திலை வந்திருக்கிறாய்…?” என்று திண்ணையில் இருந்தபடி தங்காத்தை சுப்பாப்பாவை வரவேற்றாள் : திண்ணையின் கீழ், முருக்க மரத்தடியில் படுத்திருந்த பெட்டை நாயொன்று தலையை நிமிர்த்தி இவரைப் பார்த்து உறுமியது.

“சீ” என்றார் சுப்பரப்பா. “அக்கை ….எங்கை நேரம் ? இண்டைக்குச் சனிக்கிழமை அதுதான் இப்படி வந்தன் …! முந்திப்போயா பிறிப்போயாவிலை நாளும் தெரியாது. கிழமையும் தெரியாத !” என்றபடி திண்ணையில் இருந்தார். இருந்தவருடைய கண்களில் திண்ணையின் மூளையில் ஒரு கடகம் மெதுவாக அசைவது தெரிந்தது.

“உதென்னனை அக்கா!… கடகம் அசையுது….? கோழின அடைச்சு வைச்சிருக்கிறியளே?”

“ஓமோம்…! முட்டையிடக் சேரிக் திரிஞ்சுது பிடிச்சு அடைச்சி வைச்சிருக்கிறன்…!”

“உது கறுப்புக் கோழியோ, வெள்ளைக் கோழியோ?” என்று சுப்பரப்பா கேட்டார்; பெத்தாச்சியின் கறுப்பி இங்கைதான் இருக்க வேண்டும் என்று மனம் கூறியது.

“ஏன் கேட்கிறாய்? விடுப்பு விண்ணானமா….?” என்றாள் தங்காத்தை.

“உப்ப இந்க லெக்கோன் சோழி முட்டைகளைத் தானே கடைகளிலை விக்கினம். வெள்ளைக் கோழி முட்டை …சத்தில்லை! கறுப்புக் கோழிமுட்டை நல்ல சத்தாம்…” என்றார் சுப்பரப்ப.

தங்காத்தை எதுவும் பேசவில்லை; சுப்பரப்பாவிற்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. கிழவி முழிக்கிற முழியிலை தெரியுது விஷயம்! கடகத்துக்கை கறுப்பிதான் … திறக்கு மட்டும் இருந்து பாக்கத்தான் வேணும்……!

பல விஷயங்களையும் பேசித்தீர்த்தார்கள். சோமற்றை பெட்டை ஓடின கதை .. மணியம் கத்தியாலை தம்பிநாதனைக் குத்தின சுதை …பார்வதியக்கை பொசிடோல் குடிச்ச கதை … உம்… கோழி முட்டையிட்டுவிட்டுச் கொக்கரிப்பதாகத் தெரியவில்லை! இறுதியில் –

“அடைக்கோழியே? இன்னமும் முட்டையிடாமல் கிடக்குது..?” என்று கேட்டார் சுப்பரப்பா.

“சீச்சி ….” என்றாள், தங்காத்தை .

வெகு நேரத்துக்குப் பிறகு கோழி கொக்கரித்தது.

“அறுவான் போகாமல் இருக்கி நான் உன்ரை கண்பட்டால் முட்டையும் இடாது” என்று தங்காத்தை தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

“திறந்து விடனை …” என்றார் சுப்பரப்பா.

வேண்டா வெறுப்பாக எழுந்து! போய் கடகத்தைத் திறந்தாள். கோழி கொக்கரித்தபடி முற்றத்ததில் தாவியது. சுப்பரப்பா கோழியப் பார்த்தார். பேயறைந்தவர் போலானார்.

அது ஒரு சிவப்புக் கோழி!

‘தையல்முத்து அக்கை வீட்டை ஒருக்காப் போய்ப்பார்க்கவேண்டியது தான்’ என்று முடிவு செய்தபடி தையல்முத்து வீட்டிற்குள் சுப்பரப்பா துழைந்தார்.

தலைவாசலில் தையல் முத்துவின் மகன் நடராசா, உடம்பெல்லாம் முழுக்கிற்காக எண்ணெய் வழிய வழிய வைத்தக்கொண்டு இருந்தான். வாங்கிற்குக் கீழே இரண்டு போத்தல் பனங்கள் மணம் வீசியபடி இருப்பதைச் சுப்பரப்பா பார்த்தார்.

“எங்கை, அம்மான்! உத்த வெயிலுக்கை வந்தியள்” என்றான் நடராசா.

அவனது கேள்வி இந்த நேரத்தில் அவர் அங்கு வந்ததை விரும்பவில்லை என்பதைத் தெளிவு படுத்தியது.

“சும்மாதான்!…. இண்டைக்கு என்ன ழுழுக்கே ? இறைச்சி பங்கு எடுத்தனியே? செல்லன் ஆடொன்று அடிச்சவன்…” என்று கூறியபடி வாங்கில் சுப்பரப்பா அமர்ந்தார். அடுக்களையில் தையல்முத்து பெருஞ் சீரக வாசனையோடு இறைச்சி சமைப்பது மூக்கிலேறி, நாக்கில் சுரந்தது.

“இல்லை அம்மான் – கோழி ஒன்று காய்ச்சினனான்” என்றான் நடராசா.

“உதார், சுப்பரப்பாவே? கோழி ஒண்டு ஒரு மாதிரி தூங்கிச்சுது. பின்னை மண்ணுக்கை ஏன் வைப்பான் எண்டு சமைச்சனாங்கள்” என்றபடி தையல் முத்து வெளியே வந்தாள். கெதியிலை உவரை அனுப்பவேணும். என்று உள்மனம் கூறுகிறது.

‘நாயாலை துரத்தின கோழி சோர்ந்து தூங்கித்தான் நிக்கும்! உலையள் கறுப்பியைத் தான் முடிச்சிருக்கினம். தையல் அக்கை கள்ளக் கோழி புடிச்சு மோனுக்கு புழுக்குக்குக் காய்ச்சுறா….! உதை எப்படி அறிகிறது?…’ என்று எண்ணினார்.

‘உதென்ன லெக்கோன் கோழியோ ?…..’

‘இல்லை…..! லெக்கோன் கோழியிலை எங்கை இறைச்சி இருக்கும்?’ என்றான் நடராசா.

கிணற்றடியில் காகங்கள் கரைகின்ற சத்தம் கேட்க, பல காகங்கள் கூட்டமாகக் கரைந்தன.

‘நீ கோழியை உரிச்சுப் போட்டு வடிவாத் தாக்கவில்னப்போல இருக்குது … கோதாரி நாயள் கிளரி இருக்கும்! அது தான் செட்டையளைப் பாத்திட்டு காகங்கள் சத்தம் போடுதுகள் .. முந்தநாள் பூனை விழுந்து இறைச்ச கிணறு! குடலைச் கிடலக் காகங்கள் கிணற்றிலை போட்டிடும்!’ என்றாள் தையல் முத்து.

நடராசா எழுந்தான்.

‘நீ இரு தம்பி எண்ணெய் வச்சிட்டு மண் கொத்தக்கூடாது… அக்கை எங்கை மண் வெட்டி… நான் ஆழமாத் தாட்டுவிடுறன்’ என்றபடி சுப்பரப்பா எழுந்தார்.

‘நீ பாவம்’… என்றாள் அக்கை.

சுப்பரப்பா கிணற்றடிக்கு மண் வெட்டியுடன் போனார். அவர் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது, கறுத்தக் கோழி ஒன்றின் செட்டைகள் கிடங்கு ஒன்றைச் சுற்றிக் கிடந்தன. இவரைக் கண்ட நாய் ஒன்று ஓட, காகங்கள் கரைந்தன.

அக்கை …அக்கை… இரு, இரு … கோழி இறைச்சி தின்னுறதுக்கை மாணிக்கப் பெத்தாச்சியை இங்கை அனுப்பி வைக்கிறன்..!

விரைந்து, வேர்த்து விறு விறுக்க மாணிக்கப் பெத்தாச்சியின் வீட்டிற்கு ஒடி வந்தார் சுப்பரப்பா.

அக்கை.. கறப்பியைப் பிடிச்ச வையைக் கண்டுபிடிச்சிட்டன்!

‘என்ன விஷர் கதை பேசுறாய்?’ என்றாள் பெத்தாச்சி ‘மாஸ்ரர் வீட்டு வைக்கல் பட்டறையிலை முட்டையிட்டுது’ என்று மாஸ்ரர் பொடியன் கோழியையும் முட்டையையும் கொண்டு வந்து தந்திட்டுப் போறான். உங்கை பார், உந்தச் சீமைக்கிளுவயிலை கறப்பியைக் கட்டி வைக்சிருக்கிறன்.

சுப்பரப்பா சீமைக்கிளுவ மரத்தைப் பார்த்தார். கறப்பி நிலத்தைக் கிளறி எதையோ கொத்தித்தின்றபடி நின்றது.

சுப்பரப்பாவின் கண்கள் இருள ஆயிரம் மின்னல்கள் மின்னின.

“போயிடதை இரு. களைச்சுப் போனாய், தேத்தண்ணி கொண்டு வாறன்” என்றாள் பெத்தாச்சி.

– அஞ்சலி மாத சஞ்சிகை – நவம்பர் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *