கருப்பட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 7,005 
 

அது 1954.

பாளையங்கோட்டை.

இசக்கிப்பாண்டி பிறந்த பதினைந்தாவது நாள் அவனுடைய அப்பா குலசேகரப்பாண்டி திடுதிப்னு மார் வலிக்குதுன்னு சொல்லித் தரையில் சாஞ்சவன் திரும்பி எந்திரிக்கவே இல்லை.

“பாத்தீங்களா… பனங்காட்டுப் பயல் பொறந்ததுமே அப்பனை எமபட்டனத்துக்கு அனுப்பிச்சிட்டான்.”

“பெத்தவனையே முழுங்கியவன் வேற எவனைத்தான் முழுங்க மாட்டான்?”

“எனக்குத் தெரியும் பூரணிக்கு இப்படியொரு எமப்பயல்தான் பொறப்பான்னு.”

இப்படித்தான் ஆளுக்கு ஆள் நல்லா நாக்கை வளைத்து வளைத்துப் பேசினார்கள். ஆனா, அப்ப அப்படிப் பேசினதை ஒரேயடியா தப்புன்னும் சொல்லிட முடியாது. ஏன்னா, அந்த மாதிரி திடுதிப்னு மாரை வலிக்குதுன்னு சொல்லிச் சாகிற வயசு குலசேகரப்பாண்டிக்கு கிடையாதே! வயசு இருபத்தி எட்டுதானே.

பாக்கிறதுக்கு இளம் பச்சைப்பனை மாதிரி இருப்பான். சின்ன வயசில் இருந்தே பனை மரத்தில் ஏறி இறங்கின உடம்பாச்சே… அந்த உரம் உடம்பு பூராவும் கருப்பட்டி கணக்கா திண்டு திண்டா தெரியும். செக்கு மாடுக்குக்கூட மூச்சு வாங்கிடும்; குலசேகரப்பாண்டிக்கு வாங்காது. அப்படியாப்பட்ட ஆம்பளை. அந்த ஆம்பளை திடீர்ன்னு மண்டையைப் போட்டுட்டான்னா எந்த ஊர் வாய்தான் சும்மா கெடக்கும்? நூறு விதமா பேசத்தானே செய்யும்?

பேசினது பாளையங்கோட்டை சனம் மாத்திரம் இல்லை; திருச்செந்தூர் சனமும்தான். குலசேகரப்பாண்டி பிறந்து இருபது வயசுவரை வளர்ந்து வாழ்ந்த ஊர் திருச்செந்தூர். பிரபலமான முருகன் கோயில். ஆனால் சின்ன ஊர். ஒரு பக்கம் பரந்த கடல். மற்ற மூணு பக்கத்துலேயும் ஒரே பனங்காடும், கருவேல மரக் காடும்தான்.

இந்த மரங்களுக்குள்ளே கொஞ்ச தூரம் போயிட்டாலே திசையும் தெரியாது ஒரு எழவும் தெரியாது; உள்ளே அவ்வளவு தூரம் அநியாயத்துக்கு. அப்பப்ப கள்ளு இறக்கிறவன், நொங்கு வெட்டறவன்னு வர்ர பயலுவளைத் தவிர அந்தப் பனங் காட்டுக்குள்ள வேற ஆள் போக்குவரத்தே இருக்காது. அதேமாதிரி மேய வர்ர ஆடுங்களைத் தவிர கருவேலமரக் காடுகளுக்குள்ளேயும் வேற எந்தக் குஞ்சும் வராது.

இந்தக் கருவேலமரக் காடு இருக்கே, அதுக்கு ஒரு தனி அழகு உண்டு. ‘பச்சைப் பசேல்’ன்னு கொடை பிடித்த மாதிரி இலைகளும் அதன் கொப்புகளும் பாக்கிறதுக்கே ரொம்ப ரம்மியமா தெரியும். கருவேல மரத்துப் பூ இருக்கே, அது ‘மஞ்ச மஞ்சே’ன்னு இன்னும் ரொம்ப அழகு. அந்தப் பூவெல்லாம் உதிர்ந்திட்டா கேட்கவே வேண்டாம். தரை பூராவும் மஞ்சள் கலர் வெல்வெட்டைப் போர்த்திய மாதிரிதான் கிடக்கும். மேய வர்ர ஆடுகள் இந்தப் பூவை ரொம்பப் பிரியமா தின்னும். தின்னு தின்னு அந்த ஆடுங்களோட ஈரல் கருவேல மரத்துப் பூ மாதிரியே ‘மெத்து மெத்து’ன்னு அப்படி இருக்குமாம். அதனால் அங்கு மேய்ந்து வளரும் ஆடுகளுக்கு எப்பவுமே கிராக்கி ரொம்ப ஜாஸ்தி. செந்தூர் ஆடுகள் வந்திருக்குன்னு கேள்விப்பட்டால் போதும், பாளையங்கோட்டை கசாப்புக் கடைகளில் எனக்கு உனக்குன்னு ஒரே அடிதடி கலாட்டாதான்.

அப்படிப்பட்ட புகழ்பெற்ற செந்தூர்க்காரன்தான் குலசேகரப்பாண்டி. இருபது வயசு ஆகிற வரைக்கும் அண்ணன் தம்பிகளுடன் செந்தூரில் பனை மரத்தில் ஏறி இறங்கிக்கொண்டு கருப்பட்டி செய்கிற தொழிலைத்தான் பார்த்து வந்தான். செந்தூர் கருப்பட்டிக்கு எல்லா ஊரிலுமே நல்ல மார்க்கெட் இருந்தது. அப்பல்லாம் கருப்பட்டிதானே எல்லாத்துக்கும். சீனி ஏது? கருப்பட்டி வடை; கருப்பட்டி ஆப்பம்; காப்பி வந்தபிறகு அதுகூட கருப்பட்டிதான். இன்றைக்கும் பாளையங்கோட்டையில் நிறைய வீடுகளில் கருப்பட்டி காப்பிதான். சீனிக் காப்பியே கிடையாது. அதெல்லாம் விருதுநகரைத் தாண்டி மதுரைப் பக்கம்தான். இன்னைக்கும் மதுரைக்காரர்களுக்கு பாளையங்கோட்டை மனிதர்கள் என்று சொன்னால் கொஞ்சம் இளக்காரம்தான். ஏன்னா ‘அவங்க’ள்ளாம் கருப்பட்டி காப்பி குடிக்கிறவங்களாம். அவர்களுக்குத் தெரியல கருப்பட்டி உடம்புக்கு எவ்வளவு நல்லதுன்னு…!

செந்தூர்க்காரன் ஒவ்வொருத்தனும் காலையில் எந்திரிச்சு பல்லைத் தேய்த்ததும் வட்டிலை எடுத்து அவிச்ச உளுந்துச் சுண்டலையும் கொஞ்சம் கருப்பட்டியையும் சேத்துப் பிசைஞ்சி உருண்டை உருண்டையா உருட்டி வாயில போட்டான்னா, ராத்திரி வரைக்கும் வயிறு மூச்சுக் காட்டாமே இருக்கும். அது மட்டுமில்லே… உடம்பும் பிசஞ்சி வச்ச ஈரக் களிமண் மாதிரி எந்தச் சீக்கும் வராமே அப்படியே ‘திண்’னென்று இருக்கும். அப்படியொரு ஊட்டம் உளுந்துக்கும் கருப்பட்டிக்கும். அதே மாதிரி பத்துப் பன்னிரண்டு உளுந்து வடையைத் தின்னுப்புட்டு அப்படியே ஒரு லோட்டா ‘அப்ப இறக்கின’ பனங்கள்ளை குடிச்சா இன்னும் விசேஷம்.

செந்தூரில் அப்படியெல்லாம் தின்று வளர்ந்தவன் குலசேகரப்பாண்டி. பொழுது போகாத நேரங்களில் பறித்த பனம் பழத்தை அவிப்பான். அவித்து கருப்பட்டிப் பாலில் ஊற வைத்து முழுங்குவான். பதநீர் வேண்டுமென்றால் கலையத்தில் சுண்ணாம்புத் தடவி தொங்கவிட்டு விடுவார்கள். இதற்கெல்லாம் மேல் பனங்கிழங்கு வேறு! குலசேகரப்பாண்டி செந்தூரில் இருந்தவரைக்கும் வண்டி வண்டியாக பனங்கிழங்கு தின்றிருப்பான்.

எல்லாம் கடைசியில் அல்பாயிசில் போறதுக்குத்தானோ என்னவோ? போனவன் போனவன்தான். கூடப் பிறந்தவர்களெல்லாம் ஓடி வந்து அழுதார்கள். இப்படி இந்த வயதில் அநியாயத்துக்குச் சாவறதுக்குத்தான் ஊரு விட்டு ஊரு வந்து சேர்ந்தாயா என்று புலம்பினார்கள். அப்படி அவர்கள் அழுததிலும் ஒரு நியாயம் இருந்தது. குலசேகரப்பாண்டியும் அவன் பாட்டுக்கு இருபது வயசு வரைக்கும் சிவனேன்னு செந்தூரில்தானே கிடந்தான். எல்லாம் இந்த பாளையங்கோட்டை வியாபாரிகளோட தலை கிறுக்குத்தனம்தானே குலசேகரப்பாண்டியை மூட்டை கட்டிக்கிட்டு ஊரை விட்டுக் கிளம்பச் செய்தது? இல்லாட்டா வந்திருப்பானா?

பாண்டி குடும்பத்துக்காரர்களுக்கு கருப்பட்டி செய்து விற்பது ஒரு முக்கியமான தொழில். கருப்பட்டி தயாரானதும் அதை ‘கொட்டானில்’ அடுக்கி வண்டி போட்டுக்கொண்டு பாளையங்கோட்டை போய் மொத்த வியாபாரிகளிடம் கருப்பட்டியை விற்றுவிடுவது குலசேகரப்பாண்டியின் வேலை.

பாளையங்கோட்டை வியாபாரிகள் நெஞ்சில் ஈவு இரக்கம் இல்லாதவர்கள். கருப்பட்டியை ஈனக் கிரயத்துக்கு கேட்பார்கள். குலசேகரப்பாண்டிக்கு வயிற்றைப் பற்றிக்கொண்டு எரியும். ‘இப்படி இருக்காகளே… இவுகளுக்கென்ன டவுன்ல நல்லா ரட்னகாலை போட்டு ஆட்டிக்கிட்டே சம்பாரிச்சிப்புடுவாக…! செந்தூர் பனங்காட்ல உச்சி வெயில்ல வேகிற எனக்கில்ல தெரியும், மார் எலும்பு தேஞ்சி போறது…

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான் குலசேகரப்பாண்டி. வியாபாரிங்க ஒண்ணும் இறங்கி வர்றதா தெரியலை. என்னத்துக்கு இந்த வியாபாரிங்களுக்கு ஈன விலைக்குக் குடுத்திட்டு வேகு வேகுன்னு செந்தூருக்கு ஓடணும்? நாமே பாளையங்கோட்டையில் ஒரு கடையைப் பிடிச்சி சின்னதா ஒரு கருப்பட்டி மண்டியை ஆரம்பிச்சா என்னன்னு யோசிச்சான். நல்ல யோசனையாகத்தான் தெரிஞ்சது. கூடப் பிறந்தவர்களிடம் ஆலோசித்தான். அவர்களுக்கும் ரொம்ப உருப்படியான யோசனையாகத்தான் பட்டது. உடனே குலசேகரப்பாண்டி பாளையங்கோட்டைக்கு வண்டி கட்டிக்கொண்டு வந்து திமிர் பிடித்த வியாபாரிகளுக்கு ஈனக் கிரயத்துக்கு கருப்பட்டியை விக்கிற பழக்கத்தை நிறுத்திவிட்டான்.

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் ஒரு சின்னக்கடை பிடிச்சான். நல்ல நாள் பார்த்து நாலாம் இடம் சுத்தமா இருக்கணும் என்கிற கணக்கெல்லாம் போட்டுப்பார்த்து ரிஷப லக்னத்தில் புதுக் கணக்கெல்லாம் எழுதி குலசேகரப்பாண்டி கருப்பட்டி வியாபாரத்தை ஆரம்பிச்சிட்டான்.

இதுதான் குலசேகரப்பாண்டி என்கிற பட்டிக்காட்டான் டவுனுக்கு வந்து வியாபாரியா குடியேறின கதை. இதை ரொம்ப சுருக்கமாச் சொல்லியாச்சே தவிர, அந்தக் கதை ஒண்ணும் சுருக்கமானது கிடையாது. தலைமுறை தலைமுறையா வியாபாரம் பண்ணிட்டு வர்ற எமகாதகங்களுக்கு மத்தியில் ஒரு செந்தூர் அப்பாவி வந்து துணிஞ்சி கடை போடறதும் சும்மா இல்லை. ஆனால் குலசேகரப்பாண்டி போட்டானே…!?

பாளையங்கோட்டை வியாபாரிகள் அதிர்ந்துதான் போனார்கள். ‘யாருய்யா இவனுக்கு இந்தத் தைரியத்தை கொடுத்தது’ என்று இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு ஆச்சர்யப் பட்டார்கள். அட என்னதான்னு பன்றாகன்னு பார்த்துப்பிடலாமே என்று குலசேகரப்பாண்டியும் ஊர் விட்டு ஊர் வந்து கடை போட்டிருந்தான். அதனால் பயப்படாமல் இருந்தான். யாரும் எதுவும் பண்ணலை. வியாபாரிகள் ஆளுக்கு ஆள் அவரவர் கடைகளுக்குள் உட்கார்ந்துகொண்டு குலசேகரப்பாண்டியை வைது தீர்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, நேரில் அவனைப் பார்த்தபோது வாயை மூடிக்கொண்டு கப்சிப்பென்று போனார்கள். அவர்களின் இந்தப் பவிசு பாண்டிக்கும் தெரிந்துவிட்டது. ‘போங்கலே கோட்டிக்காரப் பயலுவளா’ என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு குலசேகரப்பாண்டி அவனுடைய வியாபாரத்திலேயே குறியாய் இருந்துவிட்டான்.

கூடப் பிறந்தவர்கள் செந்தூரிலேயே இருந்து கருப்பட்டி தயார் செய்து குலசேகரப்பாண்டிக்கு அனுப்பி வைத்தார்கள். பாண்டி நியாயமான விலை சொல்லி விற்றான். சரக்கும் தும்பு தூசி இல்லாத சுத்தமான சரக்கு. வாயில் போட்டால் வெண்ணை மாதிரி கரையும். விக்கறதா கஷ்டம்? பாண்டிக்கு வியாபாரம் செழித்தது.

இதைப்பார்த்த செந்தூர் பனங்காட்டுப் பயல்கள் ஏழெட்டுப்பேர் தாங்களும் பாண்டி மாதிரியே நேரடியா கருப்பட்டி வியாபாரம் பண்ணி துட்டு சம்பாரிச்சிடலாம்னு பாளையங்கோட்டைக்கு கிளம்பி வந்துவிட்டார்கள். அரண்டு போனார்கள் பாளையங்கோட்டை வியாபாரிகள். அவர்களின் பிழைப்பில் அல்லவா மண் விழுந்துவிட்டது! இது லாயக்குப் படாதே அவர்களுக்கு.

“ஒத்த ஒத்த பனையேறிப் பயலா இங்கன வந்துகிட்டு இருக்கான். இனிமேயும் நாம இதைப் பாத்துகிட்டு சும்மா இருந்திரக் கூடாதே என்று ஒண்ணாக உட்கார்ந்துகொண்டு யோசித்தார்கள். முதன் முதலாக வந்தது குலசேகரப்பாண்டிப் பயல். ஆகையால் அவனுடைய பிழைப்பைத்தான் முதலில் கெடுத்தாக வேண்டுமென்று ஒட்டுமொத்தமாகத் தீர்மானித்தார்கள். ஒருத்தருக்கும் தெரியாமல் ரெண்டே ரெண்டுபேர் மட்டும் கிளம்பி செந்தூர் போனார்கள்.

செந்தூர் என்ன டவுனா தேடித் தேடி அலையறதுக்கு ! முக ஜாடையைப் பார்த்துக்கொண்டே அகஸ்மாத்தாக வந்து களைப்புக்கு உட்கார்ந்த மாதிரி காட்டிக்கொண்டு குலசேகரப்பாண்டி வீட்டுப் படியேறி நிழலுக்கு நின்றார்கள்.

திண்ணையில்தான் உட்கார்ந்திருந்தான் கு.பாண்டியின் அண்ணன்.

“அண்ணாச்சி ரொம்பத் தாகமா இருக்கு. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாங்களேன்…”

தண்ணீர் வந்தது. குடித்தார்கள்.

“திண்ணையிலேதேன் சற்று நேரம் நிழலுக்கு உட்கார்ந்திருங்களேன்.”

“ஆஹா.”

சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டார்கள்.

“அண்ணாச்சிகளுக்கு கோயில்பட்டியா?”

“பாத்தா அப்படியா தெரியுது? நாங்க பாளையங்கோட்டையிலிருந்து வர்றோம்.”

“என்ன சோலியா வந்தீங்க?”

“கருப்பட்டி கொள்முதல் பண்ணிட்டுப் போயிடலாம்னு வந்திருக்கோம்.”

“எங்கப் பனங்காட்டு சம்சாரிங்கதேன் உங்ககிட்ட வந்து சரக்குப் போட்டுப்பிட்டு வந்திடறாகளே. நீங்க என்னத்துக்கு கொள்முதல்னு வெட்டிச்செலவு செஞ்சிகிட்டு இங்கன வாரீக?”

“அதெல்லாம் முந்தி. இப்பக் கிடையாது.”

“அப்படியா சொல்றீக?”

“இப்ப எங்கே கொண்டாறான் உங்க ஊர்க்காரன்? அவனவன் தெற்கு வடக்கு பஜாரில் கடையைப் பிடிச்சி சொந்தமால்ல வியாபாரத்தை ஆரம்பிச்சிட்டான்? சம்சாரியே கடையைப் போட்டுட்டான்னா சனங்க யார்கிட்ட வாங்குவாங்க சொல்லுங்க? சொந்தமா தயார்பண்ணி விக்கிறவன் கிட்டேதான் ஓடிப்போய் வாங்குவாங்க. வெலை அவங்கிட்டதான குறைச்சலா இருக்கும்…”

“நீங்க சொல்றது வாஸ்தவம்.”

“எங்களால அவன் விக்கிற விலைக்கு விற்க முடியுமா? நீங்களே சொல்லுங்க.”

“விக்க முடியாதுதேன்.”

“நாங்க போட்டிருக்கிற முதலுக்கு வட்டிக் கணக்கு பார்த்தாலே எக்கச்சக்கமாகுதே… அதுக்கு மேல கடை எஸ்டாபிளிஷ்மென்ட் செலவு வேற இருக்கு. இன்னும் அந்தச் செலவு இந்தச் செலவுன்னு எத்தனை செலவுன்னு நெனைக்கீக? இத்தனை செலவுக்கும் மேல நீங்க ஒரு மார்ஜின் வச்சி வித்து அதுல லாபம் பாக்கணும். நாலு துட்டு சம்பாதிக்கிறதுக்குள்ளே தாலி அந்து போகும் அண்ணாச்சி. ஒங்க ஊர்க்காரனுங்களுக்கென்ன கடை வாசல்லேயே கட்டின வேட்டி சட்டையோட படுத்து உறங்கிப்பிட்டு ஒத்த ஆளாவே நின்னு கை நிறைய சம்பாரிச்சுக்கிறான்… எங்களாலே அப்படியெல்லாம் செய்ய முடியலையே, கொஞ்சம் கெளரவமும் பார்க்க வேண்டியிருக்கே.”

“நீங்கதேன் ஒரேயடியா சொல்றீக. பாளையங்கோட்டைக்கு வந்து எல்லா செந்தூர்க்காரனும் சம்பாரிச்சுப்பிட்டான்னு.”

“ஒங்களுக்குத் தெரியல அதான் இப்படிச் சொல்றீக.”

“நல்லா சொன்னீக எங்களுக்கு எப்படித் தெரியாம போயிரும்? எங்களுக்கே அங்கன ஒரு கடை கெடக்கு. அப்படி ஒண்ணும் பெரிசா எதுவும் நாங்க சம்பாரிச்சுப்பிடலையே?”

“இன்னொருக்க சொல்லுங்க… இன்னொருக்க சொல்லுங்க. பாளையங்கோட்டையிலேயே உங்களுக்கும் கடையிருக்கா? நெசமாவா?” ஒண்ணும் தெரியாத சின்னப் பாப்பா மாதிரி முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு கேட்டார்கள்.

“என் தம்பி குலசேகரப்பாண்டிதான் தெற்கு பஜாரில் கடை வெச்சிருக்கான்.”

“பாண்டி உங்க தம்பியா?”

“பொறவு..?”

“கூடப்பிறந்த தம்பியா?”

“ஆமா… கூடப்பிறந்த தம்பியேதான்…”

“பாருங்கண்ணாச்சி நம்ம பாண்டியோட கூடப் பிறந்தவங்க வீட்டுத் திண்ணையிலேயே உக்காந்து நாம பேசிட்டிருக்கோம். அதான் கடவுள் செயல்ங்கிறது.”

“தெற்கு பஜாரில் கடைபோட்டு பிரமாதமா நாங்க ஒண்ணும் சம்பாரிச்சுப்பிடலையே நீங்க நெனைக்கிற மாதிரி.”

“யாராவது குடுமி வெச்சவங்கிட்டப் போயி சொல்லுங்க இதை.”

“ஒங்ககிட்ட யாரு சொல்லுவா?”

“நாங்கதான் கிட்டத்திலேயே இருந்து பாக்கிறோமே பாண்டி என்ன போடு போடறான்னு… என்னமோ சொல்றீகளே?”

“………….”

“நீங்க அண்ணன் தம்பி எல்லோரும் ஒண்ணாத்தேன் இருக்கீயளா?”

“ஆமா ஒண்ணாத்தேன் இருக்கோம்.”

“அந்த தெற்கு பஜார் கடை?”

“எல்லாத்துக்கும்தேன். நாங்க இங்கன இருந்து சரக்கு அனுப்புவோம். பாண்டி அங்கன இருந்து வியாபாரம் செய்யறான்.”

“கணக்கு வழக்கெல்லாம்?”

“அவந்தேன் எல்லாம்.”

“கொட்டான் கருப்பட்டி என்ன விலைக்கு விக்கிறதா கணக்கு எழுதறான் பாண்டி?” அண்ணன் சொன்னான்.

“நெனச்சோம். பாண்டி சொல்ற கணக்கை வச்சித்தேன் நீங்க சம்பாரிக்கவே இல்லைன்னு சொல்றீகன்னு ஒடனேயே பட்டிச்சி எங்க மனசிலே. ஆனா நீங்க சொல்ற மாதிரியெல்லாம் இல்லாமே பாண்டிக்கு நல்ல சம்பாத்தியமாச்சே.”

“கொஞ்சம் வெளங்கிற மாதிரி சொன்னீங்கன்னா தேவலை.”

“அதை எங்க வாயால சொல்லன்னுமாண்ணுதான் யோசனையா இருக்கு.”

“இதுல என்ன யோசனைன்னுதான் தெரியல.”

“நாங்க சொல்றதை வச்சி நாளைக்கு நீங்க அண்ணன் தம்பிகளுக்குள்ள அடிதடி விவகாரம் வந்திச்சின்னா எங்களுக்குத்தான் கெட்ட பேரு. .அதுக்குத்தேன் பாக்கிறோம். ஒங்க சண்டைக்குள்ள எங்களை இழுத்துரக் கூடாது பாருங்க…”

“பரவாயில்லீங்க அண்ணாச்சி. நீங்க பெரியவங்க நீங்க சொன்னாத்தானே எங்களுக்குத் தெரியும்?”

“நாங்கதேன் கெடுத்தோம்னு நாளக்கி நியூஸ் வந்திரக்கூடாது.”

“வரவே வராது… நான் கியாரண்டி உங்களுக்கு…”

“சரி… இவ்வளவு தூரம் கேக்குறீங்கன்னு சொல்றோம். பாண்டி ஒங்களுக்கு காட்டுற கணக்குப் பூராவும் பொய்யி. நம்பவே நம்பாதீக அதை. பாளையில் ஒரு கொட்டான் கருப்பட்டி வில்லை என்ன விலை விக்குது தெரியுமா?”

“……………….”

பாளைக்காரர் பச்சைப் பொய்யாக ஒரு விலை சொன்னார்.

அவ்வளவுதான். பாண்டியின் அண்ணனுக்கு ரெண்டு கண்களும் கண்டங் கத்திரிக்காயை எடுத்துத் தேய்த்து விட்டாற்போல் செக்கச் செவேல்னு செவந்து போய்விட்டன.

“அட துரோகி” என்று பல்லைக் கடித்தான். “ஒன்னை என்ன பண்றேன் பார்ரா அயோக்கியப் பயலே” என்று கோபத்தில் கத்தினான். கொளுத்திப் போட்டுவிட்ட திருப்தியில் பாளையக்காரர்கள் அங்கிருந்து அகன்றார்கள்.

அண்ணன் தம்பிகளுக்குள் விவகாரம் வந்துவிட்டால் எப்படி இருக்கும் என்பது எல்லோருக்கும் ரொம்பத் தெரிந்த சமாச்சாரம்தான். அந்த விவகாரம் இந்தப் பனங்காட்டு சகோதரர்களுக்குள்ளும் நடந்தது. ஒவ்வொருத்தன் கையிலும் நொங்கு வெட்டற அரிவாள்தான் மின்னியது. அப்படின்னா பாத்துக்கொள்ள வேண்டியதுதான்.

கடைசியில் பாளை வியாபாரிகள் நினைத்தது நடந்தது. பாண்டியும் அவனது அண்ணன் தம்பிகளும் அடிதடி விவகாரம் முற்றி பாகம் பிரித்துக்கொண்டு விட்டார்கள். தன் பங்குக்கு பனை மரங்களையெல்லாம் ஸ்ரீவைகுண்டம் செட்டியார் ஒருவருக்கு விற்றுத் தலை முழுகிவிட்டு கையில் வைத்திருந்த கொஞ்சம் பணத்துடன் பாளையங்கோட்டைக்கே வந்துவிட்டான் பாண்டி. இனி அவர்கள் முகத்தில் முழிப்பானா அவன்? சொல்வார் பேச்சைக்கேட்டு பேயாட்டம் போட்ட அவர்களெல்லாம் சகோதரர்களா? திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டான். பாளை வியாபாரிகள் செய்ததும் அநியாயம். அக்கிரமம்.

பிழைப்பையும், குடும்ப ஒற்றுமையையும் நாசம் பண்ணிய அவர்களின் கண் முன்னாலேயே இதே பாளையங்கோட்டையில் தான் ஏதாவது வியாபாரம் செய்யணும். நெறைய துட்டு சம்பாரிக்கணும். பெரிய காரை வீடெல்லாம் கட்டணும்.

கோதாவில் இறங்குகிற பயில்வான் மாதிரிதான் பனங்காட்டு குலசேகரப்பாண்டி பாளையங்கோட்டையில் ஒத்த ஆளாய் இறங்கிவிட்டான். இந்த செந்தூரப் பயல் என்ன செய்யறான்னுதான் பார்க்கலாமே என்று மற்ற வியாபாரிகளும் பாண்டியின் போக்குவரத்தையே ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *