கருணையின் வேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 256 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 

“ஒரே உற்சாகத்திலே பாடிவிட்டேன். எனக்கே சந்தோஷம் தாங்க முடியவில்லை. யாரிடமாவது படித்துக் காட்டா விட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்போல் இருந்தது. இருப்புக் கொள்ளவில்லை. பாகவதத்தில் எவ்வளவோ கட்டங்கள் அழகாகப் பாடி இருக்கிறேன். இனியும் பல அருமையான சந்தர்ப்பங்கள் வருகின்றன. ஆனாலும் இந்தக் கஜேந்திர மோட்சத்தில் எள் மனம் ஒன்றிப்போய் விட்டது. வாக் தேவியின் பிரசாதம் தங்கு தடையின்றிக் கிடைத்தது. இதோ படிக்கிறேன், கேளுங்கள்” என்று போத்தன்னா சுவடிக் கட்டை அவிழ்த்துத் தம் மைத்துனருக்கு முன் அமர்ந்தார். 

“என்ன, அப்படிப் பிரமாதமாகப் பாடிவிட்டாய்?” வியாஸபகவான் மழைபோலப் பொழிந்து தள்ளி இருக்கிறார். அதை வைத்துக் கொண்டு வாக்கியத்துக்கு வாக்கியம். வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்து வைப்பது தானா பிரமாதம்? தெலுங்கு பாஷை எப்படி இழுத்தாலும் வளைகிறது. அதுவும் சமஸ்கிருதத்தில் இருக்கிறதைத் தெலுங்கில் கொண்டு வருவது பெரிய காரியமோ?” என்று புன்னகை பூத்தபடியே கூறினார் ஸ்ரீநாதர். 

இருவரும் தெலுங்கில் பெயர் பெற்ற கவிஞர்கள். பாகவதத்தை இயற்றித் தெலுங்கு மொழியை வளம் படுத்தியவர் போத்தன்னா என்னும் புலவர் பெருமான். அவருடைய மனைவியின் சகோதரர் ஸ்ரீநாதர். கவிஞர் களாகிய இருவரும் மைத்துனக் கேண்மையினாலே ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதும் கிண்டல் பண்ணுவதும் உண்டு ; அதனால் அவர்கள் நட்பும் பழக்கமும் பின்னும் ருசியுடயவை ஆயின. 

“உங்கள் பரிகாசம் இருக்கட்டும். இதை உங்களுக்குச் சொல்லிக் காட்டி விட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பதாக வந்திருக்கிறேன். என்னுடைய கவிதா ரசத்தை அறிந்து அனுபவிப்பதற்கு உங்களைவிடத் தகுதியானவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்?” என்றார் போத்தன்னா. 

“ஸ்தோத்திரம் இருக்கட்டும். உன்னுடைய காவியத்தை ஆரம்பி, பார்க்கலாம்.” 

கவிஞர் ஆரம்பித்தார். கஜேந்திர மோட்சத்தை முதலில் இருந்து தொடங்கி வாசித்து வந்தார். அப்படி வாசிக்கும் போது அவருடைய கை அசைப்புகளும் உடம்புக் குலுக்கும் நிறுத்தி நிறுத்திச் செய்யும் வியாக்கியானமும் அவருடைய உள்ளத்தே பொங்கிய உத்சாகத்துக்கு அடையாளங்களாக இருந்தன. ஸ்ரீநாதர் அப்பொழுது அப்பொழுது ‘சபாஷ் போட்டுக் கொண்டிருந்தார். சில இடங்களில், “அவ்வளவு ரசமாக இல்லை என்று கூசாமல் சொல்லி விடுவார்; “இங்கே பிராசம் இன்னும் போட்டிருக்கலாம்” என்று குறிப்பிடுவார். 

கஜேந்திரன் மடுவில் இறங்கியதும், முதலை அவனைப் பற்றிக் கொண்டதும், யானையரசன். “ஆதிமூலமே!'” என்று கதறியதும் விரிவாக வருணிக்கப் பெற்றிருந்தன. அடிக்கடி கவிஞர், “கவனித்தீர்களா? கவனித்தீர்களா?” என் று மைத்துனரைக் கேட்டுக் கொண்டே வந்தார். “இனி மேல் கொஞ்சம் நன்றாகக் கவனியுங்கள்’’ என்று கூறி விட்டுப் போத்தன்னா வாசித்தார். 

“ஆதிமூலமே!”என்று அலறிய யானையின் முழக்கம் ஸ்ரீவைகுந்தத்தில் திருமகளோடு அளவளாவிக் கொண்டு இருந்த திருமாலின் காதில் விழுகிறது; அவர் திடுக்கிட்டு விளையாட்டை நிறுத்தி உடனே யானையைக் காப்பாற்றப் புறப்பட்டு விடுகிறார். 

இந்தக் கட்டத்தில் கவிஞர் தாம் எழுதிய கவிதையை வாசிக்கலானார்: 

“திருமகளிடத்தும் சொல்லவில்லை; சங்கு சக்கரங்கள் இரண்டையும் திருக்கரங்களில் கொள்ள வில்லை; ஏவலர் யாரையும் அழைக்க வில்லை; பக்ஷி ராஜனையும் கூட்டிக் கொள்ளவில்லை. இருகாதடியிலும் தவழ்ந்து படிந்து கிடந்த மயிர்ச் சுருளையும் ஒதுக்க வில்லை. இன்ப மயமான பேச்சினிடையே திருமகளின் மேலாக்கு, தன் மேல் கிடந்ததையும் கவனிக்கவில்லை. யானையின் உயிரைக் காப்பதில் ஒரே நோக்கம் உடையவனாகி ஓடி வந்தான். 

பாட்டு இன்னும் முடியவில்லை ; “‘அடே பர்வி ! என்ன காரியமடா பண்ணி விட்டாய்?” என்று அடித் தொண்டையிலிருந்து எழுந்த தொனியில், ஆவேசம் வந்தவரைப்போலக் கத்தினார் ஸ்ரீநாதர். எந்தச் செய்யுளைக் கேட்டால் ஸ்ரீநாதர் ஆனந்தத்தினால் குதித்துக் கூத்தாடுவாரென்று போத்தன்னா நினைத்தாரோ அந்தச் செய்யுளைக் கேட்டு அவர் கர்ஜித்த கர்ஜனை கவிஞரைக் கலங்க வைத்து விட்டது. 

“அடே, என்னடா பாட்டுப் பாடுகிறாய்? சம்பிரதாய விரோதமாகச் செய்திருக்கிறாயே! வியாஸ பகவான் இப்படியா சொல்லி யிருக்கிறார்?” 

“இல்லை; தீனசரண்யனான எம்பெருமான் பக்தர்களைக் காப்பாற்றும் விஷயத்தில் எவ்வளவு வேகமாக இருக்கிறானென்பதைக் காட்ட நான் கற்பனை செய்து இவ்வாறு அமைத்தேன்.”  

“என்ன கற்பனை இது! மகா பாவமல்லவா? ஸ்வாமி திருக்கரத்தில் சங்கு சக்கரம் இல்லாமல் வரலாமா? கருடா ரூடராக வந்து சேவை சாதிப்பதுதானே சம்பிரதாயம்? லக்ஷ்மீதேவியின் முன்றானைத் தலைப்பைக்கூட எடுக்காமல் அப்படியே ஓடி வந்ததாகச் சொல்லியிருக்கிறாயே; அது பெரிய அபசாரமல்லவா ? உன்னுடைய சிருங்கார ரசத்தைக் காட்ட இதுவா சமயம்? அந்த மாதிரி நடக்குமா?” என்று சரமாரியாகக் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார் ஸ்ரீநாதர். 

கவிதையின் ரசத்தை வினாவிடையால் அனுபவித்துவிட முடியுமா ? போத்தன்னா மனம் ஒன்றி அமைத்த காட்சியிலே ஸ்ரீநாதர் ஈடுபடவில்லை. அவர் எம்பெருமானின் திருக்கோலத்திலே உள்ள குறைவைத்தான் கண்டார். 

”இதை உடனே மாற்றிவிடு; இல்லா விட்டால் லோகாபவாதம் சம்பவிக்கும்.’ 

“அப்படியே செய்கிறேன். ஆனாலும் இதை முழுவதும் ஒரு முறை கேட்டு விடுங்கள்.”

முழுவதும் படித்துக் காட்டி விட்டுப் போத்தன்னா தம் வீட்டுக்குப் போனார். வரும்போது அவருக்கு இருந்த உற்சாகமெல்லாம் மறைந்து விட்டது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனார். ‘பகவானே, இவருக்கு உன் கருணைத் திறத்தைக் காட்டிலும் உன் படாடோபந்தானே பெரிதாகத் தோன்றுகிறது? இதை மாற்றிவிட வேண்டுமென்றல்லவா சொல்கிறார்? எனக்கு இதில்தான் ரசம் இருக்கிறதாகப் படுகிறது. மாற்ற மனசு வரவில்லையே! நான் மாற்ற மாட்டேன். அபவாதம் வந்தாலும் வரட்டும். பகவானது கருணை என்னை காப்பாற்றும்’ என்று சிந்தித்துக் கொண்டே அவர் இரவு முழுதும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தார். அவர் பாகவதத் தேர் மேல் நகராமல் நின்றது 

2 

அன்று சனிக் கிழமை. காலை எட்டு நாழிகை இருக்கும். ஸ்ரீ நாதர் தம்முடைய வீட்டில் அப்பியங்கன ஸ்நானம் செய்ய எண்ணித் தைலம் தேய்த்துக் கொண்டு இருந்தார். கௌபீனதாரியாக மணையின் மேல் உட்கார்ந்து எண்ணெயைத் தேய்த்துக் கொண்டார். தலைக்குத் தேய்த்துப் பிறகு உடம்பெல்லாம் தேய்த்துக் கொண்டார். சிறிது நேரம் ஊறலாமென்று உட்கார்ந்து இருந்தார். 

தடதடவென்று ஏதோ சத்தம் கேட்டது. போத்தன்னா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, ”ஐயையோ! உங்கள் குழந்தை வாசல் கிணற்றில் விழுந்து விட்டான்” என்று கத்திக் கொண்டு உள்ளே ஓடிவந்தார். “அட படுபாவி! எங்கேடா. எங்கேடா?” என்று கதறியபடியே ஸ்ரீநாதர் போத்தன்னாவைத் தொடர்ந்தார். அவர் முன்னே ஓடினார். ஓடினவர் வீதிக்கு நடுவிலே இருந்த ஒரு கிணற் றுக்கு அருகே போய் நின்று உள்ளே சுட்டிக் காட்டினார். ஸ்ரீநாதர் பதைக்க பதைக்க வந்து, மார்பு படபடக்கக் கால் தடுமாற உடம்பெல்லாம் நடுங்க உள்ளே எட்டிப் பார்த்தார். “ஒன்றும் தெரியவில்லையேடா!” என்று புலம்பினார். 

போத்தன்னாவின் முகத்தில் திடீரென்று ஒரு மாறுதல் உண்டாயிற்று. அதில் ஒரு அமைதியும் புன்சிரிப்பும் தோன்றின; “கொஞ்சம் உங்களையே பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார். 

‘‘அட பாவி! என்னடா விளையாடுகிறார்? குழந்தை எங்கே?”

ஸ்ரீநாதர் கௌபீனதாரியாக உடம்பில் எண்ணெய் வழிய, அதன் மேலே வேர்வை வழிய, நடு வீதியில் நின்று கொண்டிருந்தார். போத்தன்னா அவரை ஏற இறங்கப் பார்த்துச் சி.ரித்து விட்டு, “உங்கள் பிள்ளை பத்திரமாக இருக்கிறான். வாருங்கள் வீட்டுக்கு. யாராவது கண்டால் சிரிக்கப் போகிறார்கள்!” என்று சொல்லியபடியே ஸ்ரீநாதரையும் அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குப் போனார். ஒன்றும் விளங்காத கலக்கத்தோடு ஸ்ரீநாதர் பின் தொடர்ந்து தம் வீடு சென்றார். 

“என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் குழந்தை சௌக்கியமாக இருக்கிறான். பகவானது கருணை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக இந்தப் பொய் சொன்னேன். நான் இந்த விஷயத்தைச் சொன்னவுடன் நீங்கள் நிஜமா பொய்யா என்று கூடக் கேட்கவில்லை. கௌபீனதாரியாக இருக்கிறோமே என்றும் எண்ணவில்லை. வீதியில் இருப்பவர்கள் சிரிப்பார்களே என்று யோசிக்கவும் இல்லை. குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு எல்லாவற்றையும் உதறி விட்டு ஓடி வந்தீர்களே. உங்களுக்குள்ள வாத்சல்யத் திற்குப் பரம கருணாநிதியாகிய பகவானுடைய கருணை’ எந்த விதத்தில் குறைந்து போயிற்று? கஜேந்திரன் முதலை வாயில் அகப்பட்டான் என்றவுடன் அந்தப் பெருமானுக்கு இருந்த வேகத்தில் கருட வாகனத்தில் ஏறாமல் வந்தான் என்பது தவறா? சங்கு சக்கரத்தைத் தரிக்கவில்லை என்றால் அபசாரமா? அவைகள் எல்லாம் இல்லாமல் உடனே ஓடி வந்தான் என்றால், அப்படிச் சொல்வது தீனர்களை ரட்சிப்பதில் அவனுக்கு இருக்கும் தீவிரத்தைக் காட்டவில்லையா? நான் அப்படிச் சொல்லி யிருப்பது தவறு என்றீர்களே. இப்பொழுது யோசித்துப் பாருங்கள்: உங்கள் பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக விழுந்தடித்துக் கொண்டு ஓடினீர்களே. சாதாரணமான நிலையில் ‘ஸ்ரீநாதர் வஸ்திரம் தரிக்காமல் குண்டலங்கள் அணியாமல் கௌபீனதாரியாக ஓடினார்’ என்று சொன்னால் பொருத்தமாக இராதுதான். ஆனால் தம் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக அவர் அப்படி ஓடினாரென்றால் அது தானே இயற்கையாகப் படும்?… என்ன பேசவில்லை. 

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டு வந்தார். ஸ்ரீநாதர் அவர் மனக்கண்முன் கஜேந்திரனது பரிதாபமான காட்சி தோன்றியது. காதில் ஆதிமூலமே என்ற ஓசை கேட்டது பகவான் ஓட்டமும் நடையுமாகத் தன் மேலிருந்த திருமகளின் மேலாக்கு நுனி வேகத்திலே கொடிபோல பறக்க, வரும் கோலம் தென்பட்டது. “போத்தன்னா, நீதான் கவி; உனக்கு வாஸ்தவத்திலே வாக்தேவியின் அருள் இருக்கிறது. நான் குறை கூறியது தப்பு. இப்போதுதான் அந்த வேகத்தை நான் உணர முடிகிறது. வியாஸபகவான் இங்கே இருந்தால் உன்னை மிகவும் பாராட்டுவார். நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டும்” என்று வாழ்த்திக் கொண்டே அந்தக் கவிஞரைத் தழுவப் போனார். 

“மறுபடியும் உங்களை மறந்து விட்டீர்களே ; உங்கள் உடம்பிலுள்ள எண்ணெயை என்மேலே பூசிவிடுவீர்கள் போல் இருக்கிறதே!” என்று நகர்ந்து கொண்டார் போத்தன்னா.

– 1932-42, கலைமகள்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *