கருணையின் கண்களை மூடி..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 12,238 
 
 

காலையில் எழுந்தவுடன் வீட்டு வாசலுக்குக் கொஞ்சம் தள்ளி இருந்த பிள்ளையார் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜன்னலைத் திறந்து பார்த்த குமார் கேட்டுக்கு வெளியில் இருந்து வீசப்பட்ட தினசரி வாசல் படியில் சரியாக வந்து விழுவதைப் பார்த்து,

“இந்தப் பசங்களை கிரிக்கெட் டீமில் போட்டால் நிறைய விக்கெட் விழும் போலத் தோணுது” என்று முணுமுணுத்தவாறே ப்ரஷ்ஷையும் பேஸ்ட்டையும் எடுத்துக் கொண்டு “மாலூ.. பேப்பர் வந்திடுச்சு. எடுத்துட்டு வரியா?” என்றபடி வாஷ்பேஸினுக்குள் கவிழ்ந்து கொண்டான்.

பத்து நிமிடம் கழித்து காப்பியை உறிஞ்சியபடியே பேப்பரை விரித்துக் கொண்டு செய்திகளை மேய ஆரம்பித்தவன் நான்காம் பக்கத்தில் கீழே தெரிந்த ஒரு சின்ன புகைப்படத்தைப் பார்த்ததும்,

“எவ்வளவு அழகான குழந்தை !” என்று நினைத்துக் கொண்டே அதற்கு அடியில் இருந்த செய்தியைப் படித்தான்.

“என்ன விஷயம் ? ரொம்ப மும்முரமா பேப்பரில் மூழ்கி போயிட்டீங்க போல இருக்கு?” என்றபடி மாலதி தன் கையில் இருந்த கீரைக் கட்டை கீழே வைத்து விட்டு உட்கார்ந்து கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து இலையைக் கிள்ள ஆரம்பித்தாள்.

“ஒண்ணும் இல்லை மாலூ.. இந்த போட்டோ பாரேன்” என்று அவளிடம் நீட்டினான்.

“ஆமாம்.. சின்னக் குழந்தை ! அழகா இருக்கே” என்றவளின் குரலில் இருந்த ஏக்கம் குமாரின் ஆர்வத்தைக் கொஞ்சம் கட்டுப் படுத்தியது.

“ஆனால் இந்தக் குழந்தைக்கு பெரிய வியாதியாம். ரொம்ப ஏழைக்குடும்பமாம்.. ஆபரேஷன் செய்ய வசதி இல்லை என்பதால் பண உதவி கேட்டு விளம்பரம் கொடுத்து இருக்காங்க”

மாலதி நிமிர்ந்து பார்த்தாள். மீண்டும் அவள் பார்வை கீழே பிரிந்து கிடந்த பேப்பரில் இருந்த குழந்தையின் படத்தின் மீது நிலைத்தது.

“என்ன யோசிக்கிறீங்க?” என்றாள்.

குமார் பதில் பேசவில்லை. மெதுவாக பேப்பரை எடுத்துக் கொண்டு மேஜை அருகில் போய் உட்கார்ந்து கொண்டு அதிலிருந்த போன் நம்பரையும் விலாசத்தையும் குறித்துக் கொண்டான். “நம் வீட்டு போன் இன்னும் ரிப்பேர் ஆகவில்லை. வெளியில் இருந்துதான் செய்யணும். அதற்கு முன்னால் கணக்கில் எத்தனை பணம் இருக்கிறது என்று பாருங்க.”என்ற மாலதிக்கு “பாங்க்கில் மூவாயிரம் இருக்கு. அதில் ரெண்டாயிரத்துக்கு செக் கொடுக்கலாம். சம்பளம் வந்துதான் நம்ம மத்த செலவுகளை செய்ய முடியும். என்ன செய்வது? நமக்கு முடிந்தது அவ்வளவுதான் மாலு..” என்றான்.

பிறகு பேப்பரில் இருந்த அந்த பகுதியை வெட்டி எடுத்துக் கொண்டு தன் செக் புத்தகத்தை எடுத்து பூர்த்தி செய்தான். இரண்டையும் தன் கைப்பைக்குள் வைத்தான்.

“ஆபீஸ் போகும்போது நேரே போய் கொடுத்து விட்டுப் போகிறேன்” என்றான்.

“சரிங்க” என்று மாலதி எழுந்து போக வாசலில் காலிங் பெல் அடித்தது. பேப்பரில் இருந்த குழந்தையின் முகம் மனதை இறுக்க, குமார் வாசலுக்குப் போனான்.

கதவைத் திறந்தவன் முகமெல்லாம் மலர “அடடே ! வா ! கோபால்.. வாம்மா.. வெல்கம். வெல்கம்..” என்றவாறு திரும்பி “மாலதீ.. இங்கே வந்து யார் வந்திருக்காங்க என்று பார்” என்று குரல் கொடுத்தான். உள்ளேயிருந்து வந்த மாலதி “வாங்கண்ணா.. வாங்க அண்ணி. இத்தனை நாள் கழித்து இப்போதுதாவது வர முடிந்ததே.. அண்ணா வேலையில் லீவு கிடைப்பதே சிரமம். அதில் இவ்வளவு தூரம் வந்தது எங்களுக்கெல்லாம் எத்தனை சந்தோஷம் தெரியுமா?” என்றபடி அண்ணியை உள்ளே கூட்டிக் கொண்டு போனாள்.

“திடீரென்றுதான் லீவு கிடைத்தது. உன் போன் வேலை செய்யலையா? நேற்று பல முறை செய்து பார்த்தேன். கடைசியில் நேராக வந்து பார்த்து விட்டு ஒரு வேளை நீங்கள் இல்லாவிட்டால் ராஜா வீட்டுக்கு வருவதாக அவனிடம் போனில் சொன்னேன். ஆனால் அவன் நீ ஊரில்தான் இருப்பதாக சொன்னதால் இங்கேயே வந்து விட்டோம். நாளைக்கே கிளம்ப வேண்டும்” என்ற கோபாலிடம் “என்ன இது? வராதவங்க வந்திருக்கீங்க.. உடனே போவதாவது? என்றான் குமார்.

“இல்ல குமார். லீவு கம்மி. அதுக்குள்ளார எல்லாரயும் பாத்துடணும் என்று ஆசை” என்று சொன்ன கோபாலை “சரி சரி.. முதல்ல போய் குளிச்சிட்டு பலகாரம் சாப்பிடலாம்” என்று குமார் நகர்த்தினான்.

குமார் ஆபீசுக்கு லீவு சொல்லி விட்டு தங்கி விட்டான். மதியம் விருந்து சாப்பாடு முடித்த களைப்பில் கோபாலும் அவன் மனைவியும் அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்தபோது குமாரும் மாலதியும் பின்னால் தோட்டத்தில் வேப்ப மர நிழலில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

“என்னங்க ! அண்ணனும் அண்ணியும் நாளைக்கே கிளம்புறாங்க..”

“ஆமாம். கோபால் சொன்னான். காலையிலேலே கிளம்பணுமாம்”

“முதல் முறையாக நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. நம்ம கல்யாணத்துக்கு அண்ணன் தனியா நகை எல்லாம் கிப்டா கொடுத்தாரு. அண்ணனுக்கு ஏதும் செய்யாட்டியும் பரவாயில்ல..இப்போ அண்ணிக்கு ஒரு புடவை கூட எடுத்துக் கொடுக்காட்டி நல்லா இருக்காதுங்க”

“பணம்…?” குமாரின் முகத்தில் குழப்பம் பரவியது.

“நகை வாங்க முடியாது. வெள்ளி சாமான் இல்லாட்டியும் நல்லதாக பட்டுப் புடவையாவது வாங்கிக் கொடுக்கணும். ரெண்டாயிரம், மூவாயிரம் ஆகும். என்னங்க செய்யலாம்?” என்றாள்.

குமார் கொஞ்ச நேரம் தலையைக் கவிழ்ந்து கொண்டு தரையையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் மெதுவாக எழுந்து உள்ளே போய் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வந்தான். மெதுவாகத் திறந்து செக்கை எடுத்தவன் கண்களை இறுக்க ஒரு முறை மூடித் திறந்து விட்டு சுக்கு நூறாக கிழித்தான்.

“என்னங்க! வருத்தமா? ரெண்டு மாசத்தில் நம்ம கல்யாண நாள் வருது இல்ல. அப்போ ஏதாச்சும் அனாதை இல்லத்துக்கு போய் எல்லா குழந்தைகளுக்கும் சாப்பாடு போடலாம்.” மாலு குமாரைப் பார்த்தபடி எழுந்து போனாள்.

தென்னை மரத்தின் மேலே இருந்து விழுந்த அணில் குஞ்சு ஒன்று வழி தெரியாமல் இங்கும் அங்கும் ஓட, மேலிருந்து வீச் வீச்சென்று கத்தியபடி அம்மா அணில் இறங்கி வர, எங்கிருந்தோ வந்த காகம் ஒன்று ஒரே பாய்ச்சலாக வந்து அணில் குஞ்சைத் தூக்கிக் கொண்டு போனது.

குமார் வெய்யிலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..

“என்னங்க.. அண்ணன் எழுந்துட்டாரு.. உள்ளே வாங்க. டீ குடிச்சிட்டு கடைக்குப் போகலாம்” என்று மாலதி குரல் கொடுத்தாள்,

பையிலிருந்து எடுத்த பேப்பர் கட்டிங்கை கசக்கித் தூக்கி போட்டுவிட்டு குமார் வீட்டுக்கு உள்ளே போவதைப் பார்த்துக் கொண்டு அம்மா அணில் விடாமல் கத்திக் கொண்டே இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *