கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 17,758 
 
 

அகாலத்தில் வந்து யாரோ வெளிநடைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. தோட்டத்து வீட்டின் ஆசாரத்துத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுக் கண்விழித்தேன். தோக்குருவிகள் ஊடுருவி முகட்டுவளையோரம் சடசடத்தபடி குறுக்கும் நெடுக்குமாகப் பறந்துகொண்டிருந்தன. மேல்விட்டத்தில் ஊர்ந்த பல்லி கணிக் கணிரென சகுனித்தது. அதற்குள் கதவு மீண்டும் தட்டப்பட்டது.

நான் உள்ளுக்குள் பயந்துபோனேன். அவசரமாக எழுந்து காவி வேட்டியை இறுக்கிக் கட்டினேன். நடையை நோக்கிச் சென்றேன். ஒற்றை மாடவிளக்கு ஒளியில், சுவரில் அசைந்த என் நிழல் கூடவே வந்தது.

தாழ் விலக்கிப் பார்த்தபோது வாசற்படியில் கலவரத் துடன் அப்புச்சி நின்றிருந்தார். கையில் தீப்பந்தம்.

‘‘பெருமாள் போயரைப் பூச்சி தொட்டிருச்சு…’’

கருட வித்தை1

நான் பதில் பேசாமல் அப்புச்சி பின்னால் நடந்தேன். வழி அத்துவானமாகி வெறிச்சோடிக்கிடந்தது. காலடியில் தவளைகள் அரற்றியபடி தாவிக் குதித் தோடின. அப்புச்சி நேராக நூறு படிக் கிணற்றுக்குக் கூட்டிப்போனார். நீரலையடிக்கும் கீழ் படியில் பெருமாள் போயர் கிடத்தப்பட்டிருந்தார். வாயில் வெண்நுரை தள்ளியிருந்தது. நீலம் பாரித்த உடம்பில் எவ்வித அசைவும் இல்லை. நாகசர்ப்பம் வீரியமாகத் தீண்டியிருக்கிறது என்பதை, பார்த்ததும் கண்டு கொண்டேன்.

‘‘கேக்க மாட்டன்னு பிணையல் பாம்போட வெளையாண்டான். நாகப்பூச்சி எட்டடி இருக்கும். கனஜீவன்… கெண்டைக்கால் சதையில போட்டிருச்சு.’’

அப்புச்சி தீப்பந்தத்தைத் தாழ்த்தி, கடிவாயைத் தொட்டுக் காண்பித்தார். பல் பதிந்த தடம் ரத்தம் கன்றித் தெரிந்தது. நான் அதே படியில் கிழக்கு பார்த்து அமர்ந்து கண்களை மூடினேன். சர்ப்ப விஷப்பாடத்தின் மந்திரத்தை உச்சரித்தேன். புறச்சூழலை மறந்தேன். மேல்படிக்கட்டில் இருந்து கம்பரிசி நாகம் சீறியபடி கீழிறங்கி வந்தது. அதே எட்டடி நீளம். நான் அசரீரியான தொனியில் கத்தினேன்.

‘‘வா நாகராஜனே… வந்துட்டியா..? நீ செஞ்ச பாவத்தை நீதான் தீர்க்கணும்.’’

கம்பரிசி நாகம் பெருமாள் போயரின் அருகில் சென்று படம் விரித்து நின்றது.

‘‘போ… கடிவாயில் பல் பதிச்சு நஞ்சு எடு…’’

கம்பரிசி நாகத்தின் படம் சட்டெனச் சுருங்கிற்று. வந்த வழியாக படியில் மேலே செல்ல யத்தனித்தது. நான் அதட்டினேன்.

‘‘என்னடா… பின்வாங்கறே? என்னை மீறிப்போனா என்ன நடக்கும்னு தெரியும்ல..?’’

கம்பரிசி நாகம் நிற்கவில்லை. நான் கோபம் அடைந்தேன். கருட வித்தைக்கான மந்திர உச்சாடனத்தைத் தொடங்கினேன். கம்பரிசி நாகம் படிகளைக் கடந்து மேலே போய்க்கொண்டே இருந்தது. என் மந்திர உச்சரிப்பு வெறியாவேசம் கொண்டது. எனக்கு இறக்கைகள் முளைத்தன. கருடனாகிவிட்டேன். அந்தரத்தில் பறந்தேன். கம்பரிசி நாகத்தைக் குறிவைத்தேன். கம்பரிசி நாகம் மிரண்டு வேகமெடுத்து ஊர்ந்தது. நான் கீழிறங்கி கூர்நகத்தால் நாகத்தின் நடுவயிற்றைக் குத்திக் கிழித்தேன். மீண்டும் அந்தரத்தில் ஏறி வட்டம் அடித்து நாகத்தின் தலையைக் குறிபார்த்து கீழ் இறங்கினேன். கம்பரிசி நாகம் தலையைச் சிதைத்து மாண்டது. அடுத்து நான் நேராக பெருமாள் போயரிடம் பறந்தேன். திடீரென என் இறக்கைகள் செயல் இழந்தன. கிணற்றங்கரையில் நின்று ஒரு ஜடாதாரி கடகடவெனச் சிரித்தார்.

‘‘உன்னால பெருமாள் போயரைக் காப்பாற்ற முடியாது. உன் கருட வித்தை பலிக்க நான் விட மாட்டேன்.’’

தீப்பந்தத்தை வீசிவிட்டு படிக்கட்டின் மேல் ஏறி ஓடத் தொடங்கினார் அப்புச்சி. ஜடாதாரி மறுபடியும் சிரித்தார்.

‘‘கருட வித்தை என்பது, பாம்பின் விஷம் நீக்கும் ஒரு தேவமந்திரம். தன்னையே கருடனாகப் பாவித்து விஷம் நீக்கும் ஒரு மாயவித்தை. அதன் காலம் இன்றோடு முடிந்துவிட்டது.’’

நான் படிக்கட்டுகளை நோக்கி தலை கீழாக விழ ஆரம்பித்தேன். கனவு கலைந்து சுயநினைவுக்கு மீண்டேன். இன்னும் கை கால்கள் நடுங்கின. உடம்பு வியர்த்துக் கொட்டியிருந்தது. கண்ட கனவின் பயம் நெஞ்சம் எங்கும் உறைந்து நின்றது. கனவின் தாத்பர்யமும் புரிந்துகொள்ள முடியாததாகவே இருந்தது. நெடுநேரமாக நூறு படிக் கிணற்றின் படிக்கட்டில் விழித்தபடி உட்கார்ந்திருந்த நான் எப்படிக் கண்ணயர்ந்தேன் என்பதும் புதிராகவே இருந்தது. உடனே என் மனம் பெருமாள் போயருடனான முதல் சந்திப்பு நேர்ந்த தருணத்தை நினைக்கத் தொடங்கியது.

ரௌத்திரி வருஷம். ஆடி அமாவாசை. திங்கட்கிழமை. சூரிய கிரகண நாள். பொழுது உதிப்பதற்கு முன்னர் இருந்தே ஊர் சனங்கள் கதவு, ஜன்னல்களை எல்லாம் சாத்திக்கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டனர். காலையிலேயே நிசப்தம் ஊரைச் சூழ்ந்துகொண்டது. நான் நிறைமாதக் கர்ப்பிணி சித்தியோடு உள்வீட்டில் உட்கார்ந்திருந்தேன். அப்பா ஆசாரத்துக் கட்டிலில் படுத்தபடி வானொலியில் சூரியகிரகணம் பற்றிய செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். பித்தளை அண்டா குடிநீரில் அருகம்புல்லைப் போட்டுவிட்டு வந்த அம்மா `கிரகணம் முடியும் வரை யாரும் எதுவும் சாப்பிடக் கூடாது’ எனக் கட்டளையிட்டுவிட்டுப் போனாள்.

கருட வித்தை2

எனக்கு ஏற்கெனவே பசித்தது. மூத்திரம் முட்டியது. வீதிக்குப் போக அனுமதி இல்லை. `கெரகணம் விலக மதியம் ஆகும்’ என்றார் அப்பா. அந்தச் சமயத்தில் அப்பாரய்யன் தடி ஊன்றியபடி வாசலில் வந்து நின்று சத்தமிட்டார்.

‘‘அடேய்… உங்க சித்தப்பங்காரன் சொன்ன பேச்சு கேட்காம மோட்டாரப் போட்டு எள்ளுக்காட்டுக்குத் தண்ணி பாய்ச்சப் போயிட்டான். உங்கொப்பன வந்து `வேண்டாம்’னு சொல்லச் சொல்லு…’’

ஆனால், அப்பா உடனே தோட்டம் செல்லவில்லை. சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு அப்பாரய்யன் தடி ஊன்றியபடி சென்றுவிட்டார். விஷயம் புரிந்ததும் சித்தி அழ ஆரம்பித்துவிட்டாள். தொடர்ந்து வீதி பேச்சரவற்றே கிடந்தது. மதியம் வாக்கில் அப்பாரய்யன் திரும்பவும் வாசலில் வந்து நின்று குரல்கொடுத்தார்.

‘‘முழுக் கெரகணம் புடுச்சிடுச்சு… அவென் கேட்கலை, ஆராச்சும் வந்து சண்டைபிடிச்சு உடுங்க…’’

நான் ஆசாரத்துக்கு ஓடிவந்து சத்தமாகக் கேட்டேன்.

‘‘கெரகணம் எப்படி அப்பாரு இருக்கு?’’

‘‘பொழுது மஞ்சளாயிருச்சு. நெழலு கட்டின மாதிரி இருக்கு. காக்கா குருவிகூட கத்தலை. நாய், பூனைகூட நடமாடலை.’’

அதன் பின்பு நெடிய மௌனம் கவிழ்ந்தது. அப்பாரய்யன் போய்விட்டார். வீதியில் பேச்சு சத்தம் கேட்டது. சித்தி என்னிடம் தோட்டம் போய் சித்தப்பாவைப் பார்த்துவரும்படி கூறினாள். அம்மா வெளிநடைக் கதவைத் திறந்ததும் நான் புறப்பட்டேன். ஊர் சனங்கள் வீதியில் நின்று மேலே அண்ணாந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். மேற்கே சரியும் சூரியன் எப்போதும்போலவே இருந்தது.

நான் தோட்டம் சென்று தண்ணீர் ஓடிய வாய்க்காலைப் பிடித்துக்கொண்டு எள்ளுக்காடு வரை போனேன். இடுப்பு உயரம் வளர்ந்த எள்ளுச் செடிகள் பூவும் பிஞ்சுமாக மேகாற்றுக்கு அசைந்தன. நான், தண்ணீர் பாய்ந்திருந்த பாத்தி பாத்தியாகச் சென்று சித்தப்பாவைத் தேடினேன். நீண்ட நேரத்துக்குப் பின்னர் ஓர் இடத்தில் ஆள் அனத்துவது போல் கேட்டது. கிட்டத்தில் போய்ப் பார்த்தேன். சித்தப்பா மட்ட மல்லாக்க விழுந்துகிடந்தார்.

‘‘பூச்சி தொட்டிருச்சுடா… கட்டுவிரியன். ஊருக்கு ஓடி அப்பாவை பாம்புப் பாடம் போடுற அய்யனைக் கூட்டிட்டு வரச் சொல்லு…’’

சித்தப்பாவை இந்த நிலைமையில் பார்க்க எனக்குப் பயம் சூழ்ந்தது. நான் ஊரைப் பார்த்து ஓடினேன். இடையிலேயே அப்பா பால்போசியோடு மிதிவண்டியில் எதிரில் வந்தார். விஷயத்தைச் சொன்னதும் அப்பாவும் பதற்றமானார். மிதிவண்டியை என்னிடம் கொடுத்தார்.

நான் நல்லிமடம் போய் பாம்புப் பாடத்து அய்யனைக் கூட்டிவரும்போது எள்ளுக்காடு எங்கும் ஊர் சனங்கள் கூடிவிட்டனர். சித்தியும் அம்மாவும் பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தனர். பாம்புப் பாடத்து அய்யன் சித்தப்பாவின் நாடியைப் பார்த்துவிட்டு வேப்பங்குழாய் ஒடித்து வந்து பாம்புப் பாடத்தைப் போட்டார். பின்பு, மௌனமாக நகர்ந்து நின்றார்.

“ `விதி முடிஞ்சாத்தான் விரியன் கடிக்கும்’னு சொல்வாங்க. அதுவும் அமாவாசை சூரிய கெரகணத்தன்னிக்குக் கடிச்சிருக்கு. வெஷமும் வெரசலா தலைக்கு ஏறுது. பொழைக்க வாய்ப்பில்லை. இனி ஆகிற காரியத்தைப் பாருங்க.’’

அதற்கு மேல் பாம்புப் பாடத்து அய்யன் அங்கு நிற்கவில்லை. வரப்பேறி ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினார். எல்லோரும் செய்வதறியாமல் திகைத்து நின்றோம். அந்த நேரத்தில்தான் மேற்கே கோவில்பாளையத்தில் இருந்து அப்புச்சி வந்துசேர்ந்தார்.

“வண்டியைப் பூட்டுங்க மாப்ள… இச்சுப் பட்டி பெருமாள் போயரைப் போயி கூட்டிவந்தோம்னா, பொழைக்க வெச்சிருவாரு.’’

அப்பா விரைசலாகக் கட்டுத்தரைக்கு ஓடி எருதுகளை அவிழ்த்து சவ்வாரி வண்டியைப் பூட்டினார். அப்புச்சி எருதுகளின் தலைக் கயிற்றைப் பிடித்துக்கொண்டதும் நான் பின்னால் ஏறிக்கொண்டேன். நாலுகால் பாய்ச்சலில் எருதுகள் வேகமெடுத்தன.

பெருமாள் போயரின் வீடு இச்சுப் பட்டியின் தென்புறமாக ஒதுங்கியிருந்தது. பனையோலைக் கூரையிட்ட வீடு, சுற்றிலும் ஓடைக்கல் கட்டுமதில். அப்போதுதான் கிணற்றுவெட்டுக்குப் போய்விட்டு வந்து எறப்புத் திண்ணையில் உட்கார்ந்திருந்த பெருமாள் போயர், சவ்வாரி வண்டியைக் கண்டதும் எழுந்து வீதிக்கு வந்தார். முப்பத்தைந்து வயது இருக்கும். நிமிர்ந்த முதுகு. கடைவாயில் புகையிலை அதக்கல். கனத்த மீசைக்குள்ளே காவி முன்பற்கள் தெரியும் சிரிப்பு. அந்தச் சமயத்தில் வெள்ளாடு மேய்த்து ஓட்டிவந்த பெருமாள் போயரின் வீட்டுக்காரி எல்லம்மா எங்களைப் புரியாமல் பார்த்தாள். பெருமாள் போயர் வண்டியில் ஏறி அமர்ந்தபடியே வீட்டுக்காரியிடம் சொன்னார்…

“இவுங்க சின்ன மாப்பிள்ளையைக் கட்டுவிரியன் கடிச்சிருச்சி. நான் போயிட்டு வர்றேன்.’’

நான் அதிர்ந்துபோனேன். நாங்கள் யாரும் எதுவும் சொல்லாமலேயே பெருமாள் போயருக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்? விசித்திரமாகவே இருந்தது. எள்ளுக்காட்டில் சித்தப்பாவின் நிலை மிக மோசமாகவே இருந்தது. அப்பா வாயில் துண்டை வைத்தபடி குசுகுசுவென அப்புச்சியிடம் பேசினார்.

“போயிருச்சு…’’

பெருமாள் போயர், அப்பாவின் பேச்சைக் காதில் வாங்காமல் சித்தப்பாவிடம் போனார். சித்தப்பாவுக்கு விழிகள் மேலேறிக்கிடந்தன. கூட்டம் தூரப்போய் நின்று அமைதியானது. அப்பாவும் சித்தியும்கூட அழுகையை நிறுத்தினர். பெருமாள் போயர் சம்மணமிட்டு கிழக்கு பார்த்து அமர்ந்தார். வாய்க்குள் ஏதோ மந்திரம்போல முனகினார். சற்று நேரத்தில் ஆகாயத்தில் கருடன் தீவிரமாகக் கத்துவது கேட்டது. கூட்டத்தோடு சேர்ந்து நானும் மேலே பார்த்தேன். கருடன் கீழே பார்த்தபடி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அப்போது பெருமாள் போயர் ஒரு சிலைபோல இருந்தார்.

யாரும் எதிர்பாராத கணத்தில் கருடன் கீழே இறங்கி சித்தப்பாவை இரையை வேட்டையாடுவதுபோல அடிக்கத் தொடங்கியது. பின் சிறிது நேரம் மேலே பறப்பதும், கீழே இறங்கி சித்தப்பா மீது மோதுவதுமாக இருந்தது. பின் ஆகாயத்தின் உயரத்துக்குப் பறந்து திடீரென மறைந்துபோயிற்று. பெருமாள் போயர் எழுந்து கூட்டத்தோடு நின்ற அப்புச்சியிடம் வந்தார். அப்பாவும் கூட்டத்தினரும் நம்பிக்கையின்றி சித்தப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தனர். பெருமாள் போயர் சிரித்தபடி சொன்னார்…

“நான் ஒரு விடுகதை போடறேன். அதை விடுவியுங்க. அதுக்குள்ள அந்த அப்புனு எழுந்து உக்காந்திருவாரு.’’

யாரும் பதில் பேசாமல் பயந்தபடியே இருந்தனர்.

“அக்கா புருஷன் அகலக் குடைக்காரன்…

தங்கச்சி புருஷன் தங்கக் குடைக்காரன்…

எம் புருஷன் மட்டும் இளிச்சவாயன்…

அது என்ன?’’

கூட்டம் விடுகதையில் கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்து சித்தப்பாவையே கவனித்துக் கொண்டிருந்தது. வெயில் தாழ்ந்து வந்தது. சித்தப்பா கை கால்களை அசைத்தார். கூட்டம் சித்தப்பாவை நோக்கி ஓடியது. சித்தப்பா எழுந்து அமர்ந்து கண்களைத் திறந்து பார்த்தார். அன்று இருளில் சவ்வாரி வண்டியில் பெருமாள் போயரை வீட்டுக்குக் கொண்டுபோய் விடும்போது நான் கேட்டேன்…

“அந்த விடுகதைக்கு என்ன விடை?’’

வண்டியில் இருந்து இறங்கும்போது சொன்னார்…

“எள்ளுச் செடி…’’

இந்திரா காந்தியைச் சுட்டுக்கொன்ற மறு வருஷம். சித்திரை மாசம். எங்கள் தோட்டத்துக் கிணற்றில் ஜலத்தின் எல்லா ஊற்றுக்கண்களும் அடைபட்டுவிட்டன. அப்பாவும் சித்தப்பாவும் கிணற்றை மேலும் சில அடி ஆழப்படுத்த முடிவுசெய்தனர். அப்புச்சி கிணற்றுவெட்டுக்கு பெருமாள் போயரைத்தான் குத்தகைக்குப் பேசிவிட்டிருந்தார்.

அக்னி கழுவு ஆரம்பிப்பதற்கு முன் தினம்.விடியக்காலை கருக்கலில் கடப்பாரை, கொத்தளம், கருமருந்து ஆகியவற்றுடன் பெருமாள் போயரும், எல்லம்மாவும் கிணற்றுமேடு வந்து சேர்ந்தனர். வந்ததும் கிணற்றுக்குள் இறங்கி அடிப்பாறையில் உருக்கு உளியை எல்லம்மா பிடித்துக்கொள்ள பெருமாள் போயர் சம்மட்டியால் அடித்துத் துளை யிட்டார். சம்மட்டி ஓசை சுவரில் எதிரொலித்தபடியே இருந்தது. அந்தி சாயும்போது பத்துக்கு மேற்பட்ட குழியில் கருமருந்தை நிரப்பித் திரியைப் பொருத்தினார்.

அதே நேரம் எல்லம்மா கிணற்று மேடேறி ஆறேழு முறை சத்தமிட்டாள்.

‘‘ வேட்டு… வேட்டு… வேட்டு…’’

வெள்ளாமைக் காட்டில் வேலையாக இருப்பவர்கள் தூரப் போய் நின்றுகொண்டதும் எல்லம்மா ஆண்களைப்போல சீழ்க்கையடித்தார். சீழ்க்கை ஒலி கிணற்றுக்குள் இருக்கும் பெருமாள் போயர் திரியைக் கொளுத்துவதற்கான சமிஞ்கை. பெருமாள் போயர் முதலில் கொளுத்தும் திரியின் நீளம் அதிகமானதாகவும் கடைசியாகக் கொளுத்தும் திரியின் நீளம் குறைவான தாகவும் இருக்கும்படி பொருத்தியிருந்தார். எல்லா திரிகளுக்கும் நெருப்பைப் பற்றவைத்துவிட்டு திரிகள் ஒவ்வொன்றும் சடசடவெனப் புகைய ஆரம்பித்த பின், கயிற்றைப் பிடித்து மேலே ஏறினார். கிணற்றுமேடு வந்ததும் தொளைவாரியைப் பிடித்துக்கொண்டு மறுபடியும் ஒருமுறை கிணற்றை எட்டிப்பார்த்தார். திரி நெருப்பு கருமருந்தை அடைந்திருக்கிறதா எனப் பார்த்துவிட்டு எட்ட நிற்பவர்களை நோக்கி ஓடிவந்தார். வேட்டு சத்தம் எழுந்ததும் அதன் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிக்கொண்டார். வேட்டுச் சத்தத்தை வைத்தே வெடிக்காத குழி எத்தனை என்பதைத் தெரிந்துகொள்ளும் உத்தி இது.

மறுதினம் பொழுது கிளம்பும் முன்னே சித்தப்பா கிணற்று தொலைவாரியில் கவலை பூட்டினார். வடத்தில் இருந்து நீர் இறைக்கும் சால்பறிக்குப் பதிலாகக் குடைசீத்தை சிமிரால் பின்னப்பட்ட கல் சுமக்கும் கொறக்கூடையை மாட்டி கிணற்றுக்குள் விட்டார். ஏற்கெனவே கவலை ஓட்டி பழகிய எருதுகள் பின்னோக்கியும் சாதுவாகவே வந்தன. நான் கிணற்றுக்குள் இறங்க முடியாமல் தவித்தபோது சித்தப்பா என்னை தூக்கி இந்தக் கொறக்கூடையில் உட்காரவைத்து கிணற்றுக்குள் இறங்கச் செய்தார். கீழே செல்லும்போது அடிவயிறு கலங்கி, மூச்சு முட்டியது. கூடையில் கல் ஏற்றிவிடும் பெருமாள் போயரும் எல்லம்மாவும் எனக்கு நிறைய விடுகதை களையும் ராஜா-ராணி கதைகளையும் சொன்னார்கள். நான் பசி மறந்து நாள் எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தேன். அப்பா வந்து தொளைக்காலைப் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டாலும் மேலே ஏற மனசு கேட்காது.

ஒருமுறை வேட்டுக்குப் பெயர்ந்த பெரும் பெரும் கற்களைக் கூடையில் தூக்கிவைக்கும் போது எல்லம்மாவுக்குக் கை வழுக்கி கல் நழுவிவிட்டது. நல்லவேளையாக யாருக்கும் எதுவும் காயம் ஏற்படவில்லை. பெருமாள் போயர் கோபத்தில் திட்டினார்.
‘‘மண்ணு ஒட்டச்சியைக் கல் சுமக்கச் சொன்னா இப்படித்தான்.”

‘‘கல் ஒட்டன் நீ… சரியாப் புடிக்க வேண்டியதுதானே?”

நான் கேட்டேன்… ‘‘அது என்ன… மண்ணு ஒட்டச்சி. கல்லு ஒட்டன்..?”

பெருமாள் போயர் சிரித்தார்.

‘‘அது நான் இந்த முண்டையைக் கலியாணம் முடிச்சக் கதையச் சொன்னாத் தான் உங்களுக்கு வெவரமாப் புரியும் அப்புனு…”

அந்த வெக்கை மிகுந்த பகலில் பெருமாள் போயர் கூறக் கூற காட்சிகள் என் கண் முன்னால் நடப்பதுபோலவே விரிந்தன.

பரிதாபி வருஷத்தின் பஞ்ச காலம் அது. எங்கும் குடியானவர்களே கூலி வேலைக்குப் போகும் சூழ்நிலை. கிணற்றுவெட்டுக்காக அப்புச்சி சவ்வாரி வண்டியில் பெருமாள் போயரை தாராபுரம் கடந்து, கிழக்கே தன் சகலை ஊரான கோனேரிப்பட்டிக்குக் கூட்டிப்போனார். மச்சு வீட்டின் வெளித்திண்ணையில் உட்கார்ந்து பனை விசிறியால் விசிறிக்கொண்டிருந்த அந்த ஊர் கொத்துக்காரப் பண்ணாடி, பெருமாள் போயரைக் கண்டதும் நம்பிக்கை இல்லாமல் கேட்டார்…

‘‘பையன் ரொம்ப எளசா இருக்கானே?”

‘‘அப்படிச் சொல்லாதீங்க. கிணற்று வெட்டுல கில்லாடி.”

‘‘என்னமோ… உங்களை நம்பித்தான் இந்தப் பெரிய பொறுப்பைக் குடுக்கிறேன் இவனுக்கு.”

உடனே கொத்துக்காரப் பண்ணாடி, பெருமாள் போயரை அரப்பு மரங்கள் சூழ்ந்த வழித்தடத்தில் ஊரின் வடக்காகக் கூட்டிப்போய் பழைமையான கிணற்றைக் காட்டினார். பெருமாள் போயர் கிணற்றை எட்டிப் பார்த்ததும் பிரமித்துப்போய்விட்டார். எழுபத்தைந்து அகலப்படிகள் கொண்ட ஆழமான சதுரக் கிணறு. பட்டுவரிக்கற்கள் அடுக்கிக் கட்டிய நாலு திசை பாம்பேறி.

‘‘போயனே என்னப்பா… மலைச்சுப் போயிட்டே. இது சாதாரண சேந்து கெணறு இல்லை. அறுநூறு வருஷத்துக்கு முந்தி கிருஷ்ணதேவராயர் காலத்துல மாதவ நாயக்கர்னு ஒருத்தர்… ஊர் சனங்கள் குடிநீர் பஞ்சம் தீர்க்க வெட்டிக் கொடுத்த கெணறு. இத்தனை வருஷத்துல இந்தக் கிணத்துல தண்ணி வற்றி ஆரும் பார்த்தது இல்ல. இந்த வருஷம்தான் சுத்தமா தண்ணி வத்திப்போச்சு…”

‘‘கல்லுளிச் சித்தன் போன வழி. காடு மேடெல்லாம் தவிடுபொடி. சாமீ… நீங்க அச்சாரத்தைப் பேசுங்க. எண்ணிக்கிட்டு பதினஞ்சே நாள்ல ஜலத்தைக் காட்டுறேன்.”

கொத்துக்காரப் பண்ணாடி சுற்றுவெளி ஊர்களில் இருந்து கல்லு ஒட்டர்களையும் மண்ணு ஒட்டர்களையும் பெருமாள் போயரின் கீழே வேலை செய்ய ஏற்பாடு செய்தார். வந்திருந்த ஆட்களைப் பார்த்து பெருமாள் போயர் கேட்டார்.

‘‘என்னோடு வேட்டுக்குத் திரியைக் கொளுத்திட்டு படியில் மேலே ஏறி ஓடி வர மூணு பேரு வேணும். உங்கள்ல திறமையானவங்களா வாங்க…”

கல்லு ஒட்டர்கள் கூட்டத்தில் இருந்து இரு இளைஞர்கள் முன்னே வந்தனர்.

‘‘இன்னொருத்தர் ஆரு..?”

‘‘கூட்டம் அமைதி காத்தது. அப்போது மண்ணு ஒட்டர்கள் கூட்டத்தில் இருந்து பதினாறு வயது பருவப் பெண் எல்லம்மா முன்னே வந்தாள். பீர்க்கம் பூவின் நிறம். கூந்தலை உச்சந்தலையில் கொண்டையிட்டு, நெகமம் சுங்கிடிச் சேலையைப் பின் கொசுவம்வைத்துக் கட்டியிருந்த பாங்கு, பெருமாள் போயரை அசத்திவிட்டது. அப்போதே கல்யாணம் செய்தால் எல்லம்மாவைத்தான் என முடிவுசெய்தார்.

கிணற்றுவெட்டு தினமும் இரண்டு அடி ஆழம் போயிற்று. வெங்கிக்கல் பாறை. வேட்டு எந்திரிப்பது கடினமாக, பெருமாள் போயர் எல்லம்மாவின் வீடு இருந்த எலுகாம்வலசுக்குப் போனார். கம்பந்தட்டு இற்று உதிரும் கூரை வீடு. எல்லம்மா, வாசல் கல் அடுப்பில் கோழிக்கறி வறுத்துக்கொண்டிருந்தாள். அவளின் அப்பக்காரன் முக்காலியில் உட்கார்ந்து சாராய பாட்டில் வைத்துக் குடித்துக்கொண்டிருந்தார். பெருமாள் போயர் தயங்கியபடி கேட்டார்.

‘‘எல்லம்மாவ… நான் கலியாணம் மூச்சுக்கலாம்னு இருக்கிறேன்…”

‘‘நீ… கல்லு ஒட்டன். நான் மண்ணு ஒட்டன். மண்ணு ஒட்டனை கல்லு ஒட்டன் மதிக்க மாட்டான். மதிக்காத கூட்டத்துக்கு நான் என் பொண்ணைக் குடுக்கச் சொல்றியா?”

பெருமாள் போயர் சமாதானப்படுத்த முயன்றார்.

எல்லம்மாவின் அப்பக்காரனுக்குப் போதையில் சட்டெனக் கோபம் ஏறியது. செருப்பைக் கழற்றி வீசினார். பின் மர உலக்கையைத் தூக்கிக்கொண்டு அடிக்க ஓடினார். எல்லம்மா எதுவும் பேசாமல் பார்த்தபடியே இருந்தாள். பெருமாள் போயர் அவமானத்துடன் திரும்பிவிட்டார். அதன் பின்னான நாட்களிலும் எல்லம்மா, பெருமாள் போயரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அன்று பதினான்கு நாள் கிணற்றுவெட்டு முடிந்திருந்தது. ஜலம் பொத்தப்பாடில்லை. சுவரில் ஈரப்பதமோ, நவட்டையோ இல்லை. கிணற்று மேட்டில் வெட்டிய கற்கள் மட்டும் குன்றுபோல குவிந்துவிட்டன. கொத்துக்காரப் பண்ணாடி பெருமாள் போயரை தனியே அழைத்துப் பேசினார்.

‘‘நாளையோட கிணத்துவெட்டை முடிச்சுக்கப்பா. இனி கூலி குடுக்க எங்ககிட்ட தவசம் கெடையாது. தண்ணி ஆகுமுங்கிற நம்பிக்கையும் இல்ல.”

அந்தி மங்கி இருள் பரவியது. கிணற்று வெட்டை கைவிட்டுக் கலைந்த ஆட்களை பெருமாள் போயர் கூப்பிட்டுப் பேசினார்.

‘‘நாளைக்கு ஒரு நாள்தான் நமக்கு கிணறுவெட்டு இருக்கு… தண்ணி பொக்காம கிணத்துவெட்டை முடிச்சா நம்ம ஒட்டச்சாதிக்கே கேவலம். அதனால இன்னிக்கு ராத்திரியும் நிக்காம கெணறு வெட்டுவோம்.”

ஏழாம் பிறை வெளிச்சத்தில் கிணறுவெட்டு தொடர்ந்தது. அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. எல்லம்மாவை நாகம் தீண்டிவிட்டது. கற்பாறைகளுக்கு இடையே மண்டலம் போட்டுப் படுத்திருந்த நாகத்தைக் கண்டதும் ஆட்கள் முகத்தில் அச்சம் தொற்றியது. எல்லம்மாவை மேலே தூக்கி வந்து கிணற்றுமேட்டில் கிடத்தினர். அதற்குள் விழிகள் மேலே செருகி, மயங்கிச் சரிந்திருந்தாள். எல்லம்மா பிழைக்க மாட்டாள் என்றே ஆட்கள் முடிவுசெய்துவிட்டனர். ஆனால், எல்லம்மாவின் அப்பக்காரன் மட்டும் வீம்பாகப் பேசினார்.

‘‘நான் ஒரு சாதிக்குப் பொறந்த ஒட்டன். எங்கிட்ட இருக்கு பாம்புப் பாடம். பசங்களைப் போயி கறி வறுக்கச் சொல்லுங்க. இப்ப நான் பாடம் போட்டத்தையும் எம் பொண்ணு எழுந்து கறி கடிப்பா…”

எல்லம்மாவின் அப்பக்காரன் சுருக்குப்பையில் இருந்து வேப்பம்பழம் போன்ற பழுப்பு நிறக் கல் ஒன்றை எடுத்தார். எல்லம்மாவின் பாம்பு கடிவாயில் அந்தக் கல்லை வைத்தார். கட்டு எதுவும் போடாமலேயே கல் ஒட்டிக்கொண்டது. அதன் பின்பு வேர் ஒன்றை எடுத்து நீரில் நனைத்து எல்லம்மாவின் தலையில் இருந்து பாதம் வரை தேய்த்துவிட்டார். பெருமாள் போயருக்கும் இந்தப் பாடம் தெரிந்தே இருந்தது. வேப்பஞ்சாற்றில் ஊறிய சீந்தில் கொடி உருண்டையும் வேரும்தான் இது. ஆனால், எல்லம்மாவின் அப்பக்காரன் அதை ஒழுங்காகச் செய்யவில்லை. அப்போதும் போதை போட்டிருந்தார்.

நேரம் போயிற்று. எல்லம்மாவுக்கு விஷம் இறங்கவில்லை. உடம்பு சில்லிட்டுப்போனது. அதுவரை வீம்பாக ஜம்பம் பேசிக் கொண்டிருந்த எல்லம்மாவின் அப்பக்காரன் பீதியுடன் எழுந்து அழ ஆரம்பித்தார். பெருமாள் போயர் அப்பக்காரன் முன்பு போய் நின்றார்.

‘‘என்னால உங்க பொண்ணைக் காப்பாத்த முடியும்.’’

‘‘செத்துப்போனவளக் காப்பாத்துற வித்தை எந்தப் பாம்புப் பாடத்திலேயும் இல்ல.’’

பெருமாள் போயர் சிரித்தார்.

‘‘காப்பாத்தினா எனக்கே கலியாணம் மூய்ச்சுக் குடுப்பீங்களா?’’

அப்போது கொத்துக்காரப் பண்ணாடி முந்திக்கொண்டு சொன்னார்…

‘‘அவன் என்ன சொல்றது… நீ மொதல்ல புள்ளையைக் காப்பாத்து. நானே முன்னால நின்னு கல்யாணத்தை மூய்ச்சுவெக்கிறேன்.’’

பெருமாள் போயர் கருட வித்தை மூலம் எல்லம்மாவைக் காப்பாற்றினார். நாகத்தை அடிக்க கிணற்றுக்குள் இறங்கிய ஆட்கள் கடப்பாறையால் கற்பாறையை நெம்பினர். ஜலம் ஊற்றெடுத்தது. மறுநாள் அதிகாலையில் கொத்துக்காரப் பண்ணாடி சொன்னதுபோல், பெருமாள் போயருக்கும் எல்லம்மாவுக்கும் கல்யாணத்தை நடத்திவைத்தார்.

காலத்தின் போக்கு திசை மாறிற்று. மழை வரத்து குறைந்துகொண்டே வந்தது. தோட்டங்கள் செழுமையிழந்து போயின. கிணறுகளின் பங்களிப்பை ஆழ்துளைக் கிணறுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. நிலத்தடி நீர்மட்டம் ஐந்நூறு அடிக்கும் கீழே போய்விட்டது.

கிணறுவெட்டும் அரிதாகிப் போனது. பெருமாள் போயரும் எல்லம்மாவும் வெள்ளாடு மேய்த்து ஜீவனம் பண்ணிவந்தனர். அப்புச்சிக்கும் வயோதிகம் அதிகமாகவே அவர் தோட்டம் என் வசமானது.

கார்த்திகை மாதத்தின் கடைசி வாரம். வங்கக் கடல் புயல். தோட்டத்து வீட்டு வெளிவாசல் திண்ணையில் நான் உட்கார்ந்து கனத்துப் பெய்யும் மழையையே பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்தோ பெருமாள் போயரும் வந்து சேர்ந்தார். அவருடன் வந்த வெள்ளாடுகள் திண்ணையோரம் ஒண்டின. அப்புச்சியுடனான நினைவுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்த பெருமாள் போயர் திடீரென கண்களை மூடி ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்தார். அடுத்த கணம் வாசலுக்கு ஓடி கிழக்குப் பார்த்து அமர்ந்தார். மழையில் நனைகிற பிரக்ஞை இல்லை. முகம் கடுமையாக மாறிற்று. நாவில் மந்திரங்கள் ஒலித்தன. எனக்கு புரிந்துபோனது. மௌனமாகப் பார்த்தபடியிருந்தேன். திடீரென எழுந்து என்னை அருகில் கூப்பிட்டார்.

‘‘அப்புனு வண்டிய எடுங்க… எங்க ஊர் வரைக்கும் ஒரு சோலி. நேரா கள்ளந்தோட்டத்துக் காரரைப் போயி இப்ப எப்படி இருக்குறார்னு பார்த்துட்டு வாங்க.’’

வாடைக் குளிர்காற்று ஈர மணத்துடன் வீசிற்று. தடம் வழி எங்கும் செந்நீர் பெருக்கு. இச்சுப்பட்டியில் கள்ளந்தோட்டம் போனபோது கடவு படலடியி லேயே கள்ளந்தோட்டக்காரர் நின்றிருந்தார்.

“தம்பி, என்னை பெருமாள் போயர்கிட்டே கூட்டிட்டுப்போறீங்களா..? வரப்புல புல்லறுக்கும் போது பூச்சி தொட்டிருச்சு. மயங்கி விழுந்துட்டேன். செத்துப்போயிட்டேன்னு நெனைச்சேன். ஆனா, இப்ப எப்படியோ தெய்வாதீனமா எந்திரிச்சிட்டேன்.”

மறுநாள் நான் இந்த மர்மம் கலந்த விசித்திரத்தைப் பற்றி பெருமாள் போயரிடம் கேட்டேன்.

“கள்ளந்தோட்டத்துக்காரரைப் பாம்பு கடிச்சிருக்குனு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“கருட வித்தை கத்தவனுக்கு தானா அறிகுறி தெரியும்…”

“இந்தக் கருட வித்தையைக் கத்தவங்க இந்தப் பக்கத்துல வேற ஆராச்சும் இருக்காங்களா?”

“ஆருமே இல்ல…”

“அப்ப நான் கத்துக்கட்டுமா..?”

பெருமாள் போயர் யோசித்தார்.

கருட வித்தை3

“இது வெறும் வேடிக்கை காட்டுற வித்தை இல்லை. உயிரைக் காக்கிற விஷ வைத்தியம். சனங்களுக்கு ஒண்ணுன்னா நேரங்காலம் பாக்காம ஓடணும். உங்களால முடியுமா..?”

“முடியும்.”

“அப்ப வர்ற அமாவாசைக்கே கத்துக்குடுக்கறேன்.”

அன்றிரவு நான் கருட வித்தை கற்றுக் கொள்ளப்போவதை வீட்டில் எல்லோரிடமும் பெருமிதமாகச் சொன்னேன். யாரும் நல்ல பதில் சொல்லவில்லை. முதலில் அப்பாதான் எதிர்த்தார்.

“பாம்புப் பாடம் போடறவங்க குடும்பம் விருத்தியாகாதுனு சொல்வாங்க. உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?”

நடுநிசியின்போது கூன்போட்ட அப்புச்சி வந்து உறக்கத்தில் எழுப்பினார். நடுங்கித் தள்ளாடிக்கொண்டே பொக்கைவாயில் அறிவுரை கூறினார்…

“உன்னால இந்த வித்தையைக் காலத்துக்கும் கொண்டுசெலுத்த முடியாதுப்பா. பாம்போட வெளையாடற வெளையாட்டு வேண்டாம்பா…”

ஆனால், நான் கருட வித்தை கற்றுக் கொள்வதில் உறுதியாக இருந்தேன்.

நாகம் சீறும் ஓசை கேட்டு நான் நினைவு கலைந்தேன். எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். என் கண்களுக்கு முன்னால் நாகம் தென்படவில்லை. கிணற்றாமைகள் மட்டும் பின்னங்கால்களை உதறி நீந்தி, கிணற்று நீரைச் சலனப்படுத்திக்கொண்டிருந்தன.

பெருமாள் போயர், சொன்ன வாக்கு தவறாதவர். எப்படியும் இங்கு வந்து எனக்கு கருட வித்தை கற்றுக்கொடுப்பார் என்கிற நம்பிக்கை இன்னும் எனக்கு இருந்தது. அந்த நேரம் என் முன்னால் ஆளுயர நாகம் எழுந்து நின்றது. அதன் விரிந்த படம் அக்னிபோல ஒளிர்ந்தது. நான் அச்சமடைந்து படிக்கட்டுகளில் மேலேறி ஓடத் தொடங்கினேன். கிணற்று மேடு வந்து நின்று திரும்பிப் பார்த்தேன். நாகம் இப்போதும் முன்புபோலவே என் முன்னால் எழுந்து நின்று ஒளிரும் தன் படத்தை விரித்தது. இது நிஜமா… பிரமையா என புரிந்துகொள்ள முடியாத குழப்பத்துடன் மறுபடியும் ஓடத் தொடங்கினேன். நாகத்தின் சீற்றம் என் செவிகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.

நான் நேராக இச்சுப்பட்டி போய் சேர்ந்தேன். கீழ்வானம் சிவப்பேறியிருந்தது. என் பதற்றமும் தணியாமலே இருந்தது. நிராசை சூழும் மனதுடன் பெருமாள் போயரைத் தேடினேன். கொட்டத்தில் வெள்ளாட்டு புழுக்கை அள்ளிக்கொண்டிருந்த எல்லம்மா சடைவுடன் சொன்னாள்…

“அந்த மனுஷன் இப்படித்தான்… அமாவாசை அமாவாசைக்கு தேசாந்திரம் போயிரும். எங்கீன்னு தேடறது?”

மறுதினம் கோழி கூப்பிடவே பெருமாள் போயர் வீட்டுக்குப் போனேன். பெருமாள் போயர் வீடு திரும்பவில்லை என்ற பதிலே கிடைத்தது. மூன்று தினங்கள் போயிருந்தன.

விடியக்காலையில் எல்லம்மா எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்று கூப்பிட்டாள்.

“அப்புனு அந்த மனுஷனை இன்னும் காணோம். கோனேரிப்பட்டி நூறு படிக் கிணத்துக்குத்தான் போயிருக்கும். ஒரு எட்டுப் போயி பாத்துட்டு வர்றீங்களா?”

“அங்க வரலையே…”

“உங்களுக்கு எப்படித் தெரியும்?”

நான் வேறு வழியில்லாமல் நடந்ததை எல்லாம் கூறினேன். உடனே எல்லம்மா பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

“அய்யோ… அப்புனு நாம மோசம் போயிட்டோம். இந்தக் கருட வித்தைய ஆருக்கும் கத்துக்குடுக்க மாட்டேன்னு சத்தியம் செய்து குடுத்துத்தான் அந்த மனுஷன் குருவகுலவையே வாங்கியிருக்கு… ராமக்கட்டி போட்ட ஒரு சாமியார்கிட்ட. அப்படி மீறி கத்துக்குடுத்தா உன்னோட உசிர எடுக்க நாகப்பாம்பு ரூபத்துல நான் வருவேன்னு அந்த சாமியார் சொன்னதா எங்ககிட்ட சொல்லியிருக்காரு…”

எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது. நானும் சித்தப்பாவும் எல்லம்மாவைக் கூட்டிக்கொண்டு காரில் கோனேரிப்பட்டி நூறு படிக் கிணறு நோக்கிப் போனோம். பெருமாள் போயரின் உடம்பு உப்பிப்போய் நீரில் மிதந்துகொண்டிருந்தது. எல்லம்மா அழாமல் வெறித்த கண்களுடன் ஆற்றாமையில் எங்களிடம் சொன்னாள்.

“கருட வித்தை எல்லாம் கத்துக்கிட்ட மனுஷன் பாழாப்போன நீச்சல் கத்துக்காமவிட்டிருச்சு.கிணறே கதி்னு கெடந்தவருக்கு கிணத்துலயா சாவு வரணும்…” .

கொத்துக்காரப் பண்ணாடி ஆட்களுடன் வந்து பொருமாள் போயரின் உடம்பைத் தூக்கி படிக்கட்டில் கிடத்தினார். நான் மட்டும் கிட்டத்தில் போய்ப் பார்த்தேன். என் கனவில் நாகம் தீண்டிய அதே கெண்டைக்கால் சதையில் பாம்பின் பல் பதிந்த தடம் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன்!

– டிசம்பர் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *