கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,716 
 
 

சரியான காரணம் என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் வெளியேறிவிடு என்று மனசு சொல்வதற்குக் கட்டுப்பட வேண்டும் போலிருந்தது. இன்று நேற்றல்ல மூன்று வருடங்களாய் “வீட்டைவிட்டு, குடும்பத்தை விட்டுப்போ” என்று மனதின் குரல் என்னை நச்சரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் வீட்டைத் துறப்பதற்கான ஒரு காரணம்கூட என்னிடம் இல்லை. ஒரு குறையும் இல்லை.

இதோ என்னை அணைத்தபடி தூங்குகிறாளே சுமதி, நான் காதலித்துக் கைப்பிடித்தவள், இவளைவிட அன்பும் கருணையும் ஏன் அழகும் இணைந்த இன்னொருத்தியைப் பார்ப்பது கடினம். எட்டு வயதில் துறுதுறுவென பையன் ஒருவன், ஐந்து வயதில் தேவதை போன்ற பெண், இரண்டு லட்சம் சம்பளம் தரும் வேலை, அடையாறில் டபுள் பெட்டூம் பிளாட் ஒன்று, ஒரு ஹோண்டா சிட்டி, பேங்கில் 30, 40 லட்சம் பணம் என 36 வயது மனிதனுக்குக் கிடைக்க வேண்டிய அதிகபட்ச சந்தோஷமும் வசதியும் எனக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் ஒரு வெற்றிடம். புத்தனுக்கும் இப்படித்தான் தோன்றியதோ!

கடிகாரத்தின் பொம்மைக் குருவி கதவு திறந்து கூவத் தொடங்கியது. இரவு 12 மணி. சுமதி புரண்டு படுத்தாள், அருகே குழந்தைகள் அசந்து உறங்கிக்கொண்டிருந்தன. 12ஆவது மணி அடித்து முடித்தபோது, இப்போதே வெளியேறுவதென்று முடிவுசெய்தேன். சுமதியின் கையை மெல்ல எடுத்து மெத்தையில் வைத்தேன். என் பர்ஸை மட்டும் எடுத்துக்கொண்டேன். ஒரு காகிதத் துண்டில் “போகிறேன். தயவுசெய்து என்னைத் தேட வேண்டாம்” என எழுதி பிரிட்ஜில் ஒட்டினேன். சத்தமின்றிக் கதவு திறந்து வெளியே வந்தேன். தூரத்தில் நாய்கள் சண்டையிட்ட சத்தம் கேட்டது. கதவை மெதுவாகச் சாத்திவிட்டுப் படியிறங்கி ரோட்டிற்கு வந்துவிட்டேன். குழந்தைகளின் முகத்தைப் பார்க்கத் தோன்றியது. ஆனால் என் கால்கள் நடக்கத் தொடங்கியிருந்தன. சென்ட்ரலை அடைந்தேன்.

அப்போதுதான் கிளம்பத் தொடங்கிய ரயிலில் ஏறிக்கொண்டேன். ரயில் வேகமெடுக்க எல்லாம் பின்னோக்கி ஓடத் தொடங்கின.

வயல்கள், நதிகள், மலைகள், நகரங்கள் கடந்து ஓடிக்கொண்டேயிருந்தது ரயில். ஒரு பகலும் இரவும் கடந்தன. மறுநாள் அதிகாலை ஒரு ஸ்டேஷனில் இறங்கிக்கொண்டேன். கயா என்று எழுதிய மஞ்சள் பலகையைப் பார்த்ததும் இது பீகார் எனப் புரிந்துகொண்டேன். எனக்குச் சிறிது ஹிந்தி தெரியும். பர்ஸைத் திறந்தேன். அதில் ஆயிரம் ரூபாயும் ஏடிஎம் கார்டும் இருந்தன.

அருகிலிருந்த ஹோட்டலுக்குச் சென்று ரொட்டி தின்றேன். ருசியாக இருந்தது. கால்போன போக்கில் நடந்தேன். நதியில் குளித்தேன். பசித்தால் ரொட்டி, தூக்கம் வந்தால் கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்வேன். கண்ட இடத்தில் சாப்பிடுவதற்கும் படுப்பதற்கும் ஆரம்பத்தில் இருந்த பயமும் தயக்கமும் மறைந்தன. வெயிலும் குளிரும் பழகிப்போயின.

ஓரிரவு உதம்பூர் என்ற சிறு நகரத்தின் பிளாட்பாரத்தில் உறங்கிக்கொண்டிருந்தேன். சுளீரெனக் காலில் ஒரு வலி. விழித்துப் பார்த்தால் லத்தியுடன் போலீஸ்காரர்கள் என்னைச் சுற்றியிருந்தனர். அவர்களது கொச்சை ஹிந்தி எனக்குப் புரியவில்லை. எனக்குத் தெரிந்த ஹிந்தியில் நான் பேசத் தொடங்குவதற்குள் படீர் படீரென லத்திகள் வந்து என்மீது இறங்க நான் சுருண்டு விழுந்தேன். ஜீப்பில் ஏற்றிக் காவல் நிலையத்திற்குக் கொண்டுபோனார்கள். அங்கு என்னுடன் நாலைந்து பேர் கைதாகியிருந்தனர். அதில் சோம்தேவ் என்பவன் என்னைப் பற்றி விசாரித்தான். அவனுக்குச் சிறிது தெலுங்கு, தமிழ் தெரிந்திருந்தது. “மாதக் கடைசியில் கேஸ் கிடைக்கவில்லையென்றால் ரோட்டில் இருக்கும் அப்பாவிகளை இப்படித்தான் அள்ளிக்கொண்டு வருவார்கள்” என்றான். சோம்தேவ் சாமி யாரைப் போல இருந்தான். என் வயது இருக்கும். கருகருவென்ற கூந்தல், ஒட்டிய கன்னம், குழிக்குள் இடுங்கிய கண்கள், கறைபடிந்த பற்கள், ஒல்லியான உறுதியான தேகம். இந்தியாவின் அத்தனை மொழியும் கலந்த ஒரு பாஷை. அவனுக்குப் பூர்விகம், ஒரிசாவில் ஒரு கிராமம் என்று சொன்னான்.

மறுநாள் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். பிறகு விடுவித்தார்கள். அருகிலிருந்த ஒரு கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, சோம்தேவும் அங்கு வந்தான். என்னைப் பற்றி அறிந்தபின் அவன் மிகவும் ஆச்சரியப்பட்டான். அவன் ஒரு அனாதை, நாகா சாமியார் ஒருவரால் எடுத்து வளர்க்கப்பட்டவன். அவர் இறந்த பின்பு நாடு முழுவதும் அலைந்து யாசித்து வாழ்ந்திருக்கிறான். மூன்றுமுறை கன்னியா குமரிவரை சென்றிருப்பதாகக் கூறினான். தற்போது ஒரு வருடமாய் பாகல்பூர் என்னும் சிற்றூரில் தங்கியிருப்பதாய்ச் சொன்னான். தன்னுடன் வந்து தங்கலாம் என அவன் அழைத்தபோது எந்த மறுப்புமின்றி அவனுடன் சென்றேன்.

நதியோரமாய் இருவரும் நடக்கத் தொடங்கினோம். அது ஒரு வற்றிய நதி, வெயிலில் மணல் தகிக்க ஆங்காங்கே சிறிது தண்ணீர் தேங்கிக் கிடந்தது. சூரியன் மறையும்போது பாகல்பூரை அடைந்தோம். இருபது, முப்பது வீடுகள் கொண்ட கிராமம் அது.

அந்த ஊரிலிருந்து ஒன்பது கி.மீ தள்ளி நதிக்கரையில் ஒரு பாழடைந்த மண்டபம். அதுதான் சோம்தேவின் வசிப்பிடம். சிறிது தூரத்தில் புகை தெரிந்தது. என்னவென்று கேட்டேன். அங்கு சுடுகாடு இருக்கிறது எனச் சிரித்தான். அதன் எதிரே சிறு குடிசை ஒன்று இருந்தது, அதுதான் அவனது வசிப்பிடம். அந்த இடத்திற்குக் கதவு, ஜன்னல் கிடையாது. ஒற்றைச் செங்கல் சுவரில் மூன்று பக்கமும் அடைக்கப்பட்டு ஒரு பக்கம் திறந்திருந்தது. மேலே ஓடு வேயப்பட்டிருந்தது. எதற்காகக் கட்டப்பட்டது, எதற்காகக் கைவிடப்பட்டது எனத் தெரிந்துகொள்ள முடியாத கட்டடம்.

நீண்ட தூரம் நடந்த களைப்பில் இருவரும் அமர்ந்தோம். இருமல் சத்தம் கேட்டது. வயதான உருவம் ஒன்று சுவரோரமாய்ப் படுத்திருந்தது.

“இவர்தான் ஹர்ஸ்வர்தன் பாவா, தொண்ணூறு வயசாகுது. ஒரே பையன், ஆர்மில சேர்ந்து சீனாவோட சண்டைபோட்டபோது இறந்துவிட்டான். சொத்துபத்து எல்லாம் தர்மத்துக்கு எழுதிவைச்சுட்டு ரிஷிகேஸ்ல போயிப் பிச்சையெடுத்து வாழ ஆரம்பிச்சாரு. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கரும்புச் சக்க மாதிரி கயா ரயில்வே ஸ்டேஷன்ல கிடந்தாரு. நான் இங்கத் தூக்கிட்டு வந்துட்டேன். ஒரே ஒரு வேளைதான் சாப்பிடுவாரு. நடக்க முடியாது, பேச முடியாது, சைகைதான். ஒவ்வொரு நாள் காலைலயும் கண்ணு முழிச்ச உடன் உருண்டுவந்து சூரியனைப் பார்த்துக் கும்பிடுவாரு. அதுக்கு இன்னொரு நாள் இந்த உடம்புல உயிர் இருக்குறதுக்கு நன்றின்னு அர்த்தம்” சோம்தேவ் சொல்லி முடித்தான்.

ஹர்ஸ்வர்தன் பாவா படுத்தபடியேதான் இருந்தார். எப்போதாவது எழுந்து உட்கார்ந்துகொள்வார். பஞ்சுபோன்று வெளுத்து, அடர்ந்த தலைமுடியும் தாடியும். உடல் முழுவதும் சுருங்கிய சருமம். முகத்தில் மட்டும் எதையோ கண்டுகொண்ட தெளிவு. கவனித்துப் பார்த்தால் கண்களில் சிறு புன்னகை மறைந்திருக்கும். பாவா என் தலையை வருடி ஆசீர்வதித்தார். இரவு சோம்தேவ் ரசம்சாதம் போன்று ஒன்றைச் சமைத்தான். அவன், நான், பாவா மூவரும் சாப்பிட்டு முடித்தோம். லாந்தர் விளக்கைச் சுவரில் மாட்டிவிட்டுப் படுக்கை விரித்தோம். கொலுசுச் சத்தம் கேட்டது. அது சிறுவயது பேய்க் கதைகளை நினைவுபடுத்தியது. குழந்தையின் அழுகுரல் வேறு சேர்ந்துகொண்டது. இருளிலிருந்து ஒரு உருவம் லாந்தர் வெளிச்சத்திற்கு வந்தது. இடுப்பில் குழந்தையுடன் பெண்ணொருத்தி. வெற்றிலை போட்டுச் சிவந்த உதடுகள், காதுகளில் ஜிமிக்கி, முகம் வசீகரமாய் இல்லை. ஆனால் அவள் கண்களில் ஒரு ஈர்ப்பு இருந்தது. மாராப்பு விலகியதைப் பற்றிக் கவலைப்படாமல், “சோம்தேவ் எங்கே” எனக் கேட்டாள். அதற்குள் அவனே வந்துவிட, குழந்தையை அவனிடம் கொடுத்துவிட்டு எதிரே இருந்த சிறு குடிசைக்குள் செல்ல அவளுக்குப் பின்னே இளைஞன் ஒருவனும் செல்லக் கதவு அடைபட்டது.

சோம்தேவிடம் அவள் யாரென்று கேட்டேன். “அவள் பெயர் பாமினி, பீகார் நேபாள் எல்லையில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவள். ஜாதிக் கலவரத்தில் அப்பா அம்மாவைச் சிறு வயதிலேயே இழந்துவிட்டாள். 12 வயதில் சொந்தக்காரர்களால் கல்கத்தா சோனா காச்சியில் விற்கப்பட்டாள். 20 வயதில் அங்கிருந்து தப்பி ஓடிவந்துவிட்டாள். பிறகு ஊர் ஊராய் அலைந்து, நாலு வருடத்திற்கு முன் இங்கு வந்தாள். அந்தக் குடிசை தான் அவள் வீடு. அஜாக்கிரதையால் உருவான இந்தப் பெண் சிசுவைக் கலைக்க அவள் விரும்பவில்லை. பெற்றுக்கொண்டாள். வயிற்றைக் கழுவ உடம்பை வாடகைக்கு விடும் பாமினி, இரவு நேரத்தில் யாராவது தொழிலுக்கு வந்துவிட்டால் குழந்தையை என்னிடமோ பாவாவிடமோ விட்டுவிட்டுப் போவாள்” சோம்தேவ் பெருமூச்சுடன் சொல்லி முடித்தபோது, அந்தக் குழந்தை தவழ்ந்து தவழ்ந்து பாவாவின் மார்பின் மீதேறி விளையாடிக்கொண்டிருந்தது.

மறுநாள் அதிகாலை எழுந்து காலாற நடந்தேன். அந்த இடமே ஏகாந்தமாய் இருந்தது. மனித நடமாட்டமே இல்லாத இடம். ஒற்றையடிப் பாதைதான் அருகிலிருக்கும் பாகல்பூருக்கான ஒரே வழி. காலையில் மாடு மேய்ப்பவர்கள் மாடுகளைப் பத்திக்கொண்டு வந்தார்கள். எப்போதாவது பிணங்கள் அரிதாக வரும். வேறு இயக்கமில்லை. இரவில் பாமினியின் வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஒரு நாளைக்கு ஒருவர்தான். சனிக்கிழமையன்று விரதமென்பதால் விடுமுறை. இதில் அவள் உறுதியாக இருந்தாள்.

நானும் சோமனும் பாகல்பூர் சந்தைக்குப் போனோம். ஏடிஎம்மில் பணம் எடுத்தோம். நான் இரண்டு வேட்டிகளும் குர்தாவும் வாங்கிக்கொண்டேன். ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, கோதுமை மாவு ஆகியவை வாங்கிக்கொண்டோம். பாவாவுக்கு மிகவும் பிடித்தமான, மாதக்கணக்கில் தேனில் ஊறிய பெரிய நெல்லிக்காய்கள் ஒரு பாட்டில் வாங்கிக்கொண்டோம். அந்த ஊரே எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எண்ணெய் காணாத தலைகள், கறையேறிய பற்கள், நீண்ட ரெட்டைக் குழல் துப்பாக்கிகள் சகஜமாய்க் காணக்கிடைத்தன. வன்முறை மட்டுமே முழுத்தொழிலாய்க்கொண்ட பல குழுக்கள் ஊர் ஊருக்கு இருந்தன. படிப்பறிவற்ற அவர்களது தினசரி வாழ்வில் உயிர்கள் மலிவானவை. தான் தின்ற வடைக்குக் காசு கேட்டான் என்பதற்காக ரவுடிக்கும்பல் தலைவன் ஒருவன் கடைக்காரனைச் சுட்டுக் கொன்றதை சோம்தேவ் சொன்னதும் புத்தன் ஞானம்பெற்ற இந்த மண்ணில் இன்று வறுமையும் அறியாமையும் வன்முறையும் பரவிக் கிடப்பதை நினைக்க வினோதமாய் இருந்தது. ஆங்காங்கு இருக்கும் டிரான்ஸ்பார்மர்களில் கனமான கம்பிகள் போடப்பட்டுத் திருட்டுத்தனமாய் வீடுகளுக்கு மின்சாரம் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

மாலை ஆறுமணிவாக்கில் பாகல்பூரைவிட்டு எங்கள் இருப்பிடத்திற்கு நடக்கத் தொடங்கினோம். சூரியன் விழுந்துவிட்டது. இன்னும் அரை மணிநேர நடை பாக்கி இருக்கும் சமயத்தில், இளைப்பாறுவதற்காய்ப் பாதையோரக் கிணற்றடியில் அமர்ந்தோம். முகம் கழுவிக்கொண்டிருந்த சோமன் திடீரெனக் கத்தினான். இருளில் அவனைக் கூர்ந்து கவனித்தால், அவனது கழுத்தில் கத்திவைத்து இரண்டு உருவங்கள் மடக்கிப் பிடித்திருந்தன. என் முதுகுப் பக்கமும் சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்டது. மெல்லத் திரும்பினேன். தடித்த உருவம் கொண்ட அவன் நிதானமாய்ச் சொன்னான். “கையில் இருக்கும் பணம், பொருளைக் கொடுத்துவிட்டு, காயமின்றிச் செல்லுங்கள்”.

நான் இரு மூட்டை மளிகைப் பொருட்களையும் அவர்கள் முன்வைத்தேன். இன்னொருவன் சோம்தேவைத் தடவிப் பார்த்தான். பணம் இல்லை, என்னிடம் அவன் வருவதற்கு முன் இடுப்பில் முடிந்த நூறு ரூபாய்க் கட்டை எடுத்துக் கொடுத்துவிட்டேன். அப்படியும் என்னைப் பரிசோதித்தான் பர்ஸ் கிடைத்ததும் எடுத்துக்கொண்டான். அவர்கள் இரு மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு “இது எங்கள் பரிசு” எனச் சிரித்தபடி நகர்ந்தனர். பர்ஸுடன் ஏடிஎம் கார்டும் போய்விட்டது. சோமன் சிறிது திமிறியதில் அவன் கழுத்தில் சிறிது ரத்தக்காயம். நானும் சோமனும் மூட்டைகளைச் சுமந்து மண்டபம் வந்து சேர்ந்தோம். அங்கு வளர்ந்து பழகிய பூனை வாலை ஆட்டி, ஆட்டித் தன் குட்டிகளுக்கு விளையாட்டு காட்டியது. பூனைக் குட்டிகள் இரண்டும் தாயின் வாலை எலியைப் போல் பாவித்துப் பாய்ந்து பாய்ந்து பிடிக்க முயன்றன. பாமினியின் குடிசைக்கு வெளியே ஒரு புல்லட் நின்றிருந்தது. அருகே ஒருவன் கையில் நீண்ட துப்பாக்கியுடன் குத்தவைத்துப் பல் குத்திக்கொண்டிருந்தான்.

மண்டபத்தில் பாவாவின் அருகே பழைய கம்பளியின் மேல் பாமினியின் மகள் லஷ்மி தூங்கிக்கொண்டிருந்தாள்.

இவ்வளவு தூரம் வந்துவிட்ட பின்பும் இன்னும் தீராத ஏதோவொரு ஏக்கம் எனக்குள் இருக்கிறதென உணர்ந்தேன். என் தேவைகள் யாவும் குறைந்துவிட்டன. எதையுமே மனசு சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் இடைப்பட்ட சமநிலை உணர்வில் பார்க்கக் கற்றுக்கொண்டது. ஆனாலும் எதையோ தேடுகிறேன். அன்று நடுநிசியில் தாய்ப் பூனையைக் காணாது இரு குட்டிகளும் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருந்தன. மனதை என்னவோ செய்தது. சிறிது நேரத்தில் தாய்ப் பூனை வந்ததும் அமைதியாகி, அதன் மடியில் பால் குடித்து அவை உறங்கிப்போயின.

சோம்தேவ் இரவு படுப்பதற்கு முன்பு பெருங்குரலெடுத்துப் பாடுவான். பெரும்பாலும் தத்துவப் பாடல்கள். அவன் பாடும் ஒரிய மொழிப் பாடல்கள் சிலவற்றுக்கு எனக்கு அர்த்தம் புரியாது. ஆனாலும் அவை காதில் விழுந்து உடல் சிலிர்க்க வைக்கும். பாடி முடித்ததும் அவன் முகத்தில் புன்னகையும் சிறிது கண்ணீரும் பூத்திருக்கும். இப்படியே சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் நானும் அவனும் பத்ரிநாத்வரை யாத்திரை செல்ல முடிவெடுத்தோம், கிளம்பினோம். பாமினியிடம் பாவாவைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டுப் பயணத்தைத் தொடங்கினோம்.

நான் இதுவரை அறியாத ஊர்களில் உள்ள அழகான கோயில் ஸ்தலங்களுக்கு அழைத்துச் சென்றான். வழியில் இருக்கும் எந்தவொரு மலைக்கோயிலையும் விடமாட்டான். அவனுக்கு எந்தச் சாமியும் வேண்டாதது கிடையாது. காடு, மலை, பள்ளத்தாக்கென அலைந்தபடி இருந்தோம். ஆங்காங்கே இரண்டு, மூன்று நாட்கள் தங்குவோம். பிறகு பயணம் தொடர்வோம். இரண்டு மாதங்கள் கழித்துப் பத்ரிநாத்தை அடைந்தபோது உடம்பையும் மனசையும் காற்றைப் போல் எடையற்றதாய், சுதந்திரம் கொண்டதாய் உணர்ந்தேன். பத்ரிநாத் ஆலயத்தில் வழிபட்டுவிட்டு, பேருந்தில் தில்லி வந்தோம். அங்கிருந்து ரயிலில் கயா வந்து பாகல்பூரை அடைகையில் மாலை ஆறுமணியாகி இருந்தது. ஒன்பது கிலோ மீட்டர் நடந்தால் நதிக்கரை மண்டபத்தை அடையலாம். மண்டபத்தை நெருங்கிய போது எங்களைக் கடந்து ஒரு புல்லட் பாமினியின் குடிசையருகே நின்றது. “இன்று சனிக்கிழமை. பாமினி உயிரே போனாலும் தொழில் செய்ய மாட்டாளே?” என்ற சோம்தேவ் பாமினியின் குடிசையை நோக்கிச் சென்றான். நான் பயணக் களைப்பில் பாவாவிடம் சென்று அமர்ந்தேன். அவர் சைகையில் ‘பயணம் நன்றாய் இருந்ததா’ எனக் கேட்டார். நான், “என் வாழ்க்கையின் மிகச்சிறந்த பயணம் இதுதான்” என்றேன். அப்போது பாமினியின் கூப்பாடு கேட்டது. நானும் அவள் குடிசை நோக்கி லாந்தர் விளக்குடன் சென்றேன். பாமினி புல்லட்டில் வந்தவனைக் குடிசையை விட்டு வெளியே தள்ளினாள். உள்ளே லஷ்மி அழும் சத்தம் கேட்டது.

புல்லட்டில் வந்தவன் ரதீஷ். பாகல்பூர் பஞ்சாயத்துத் தலைவரின் மகன். அவன் அடிக்கடி பாமினியிடம் வருபவன்தான். அவனுடன் எப்போதும் வரும் இன்னொருவன் வழக்கம்போல் துப்பாக்கியுடன் வெளியே அமர்ந்திருந்தான். நானும் சோம்தேவும் ரதீஷைச் சமாதானப்படுத்தினோம்.

“இன்று சனிக்கிழமை. அவள் இன்று சுத்தபத்தமாய் விரதமிருப்பாள். நாளை வா” என சோம்தேவ் பாமினி சொன்னதையே நிதானமாய் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான். ரதீஷ் முழுபோதை யில் இருந்தான். தன் கூட்டாளியிடம் கஞ்சாசிகரெட்டை வாங்கி இழுத்தான். நூறு ரூபாய்க் கட்டை பாமினிமீது வீசினான். “எவ்வளவு பணம் வேணும்னாலும் வாங்கிக்க இப்பவே நீ எனக்கு வேணும். நீ நாளைக்கு விரதமிரு” எனக் கத்தினான். பாமினி ரூபாய்க் கட்டைத் திரும்பவும் அவனிடமே எறிந்துவிட்டுக் குடிசைக்குள் சென்று தட்டியை அடைத்துக் கொண்டாள்.

ரதீஷ் ஆவேசம் வந்தவனாய்க் குடிசையை நோக்கிப் பாய, சோம்தேவ் அவனைத் தடுத்தான். சோம்தேவின் கழுத்தைப் பிடித்து இறுக்கித் தள்ளிவிட்டான். நான் ரதீஷின் கைகளைப் பிடித்துப் பிரச்சினை வேண்டாமெனச் சொன்னேன்.

ரதீஷ் தனது கூட்டாளியிடம் துப்பாக்கியைப் பறித்து, என்னை வழிவிடுமாறு சொல்ல நான் அசையாமல் நின்றேன். துப்பாக்கியின் பின்பக்கத்தால் என் முகத்தில் ஓங்கி அடித்ததும் நினைவிழந்து விழுந்தேன். சிறிது நேரம் கடந்து அரை மயக்கத்தில் முகத்தில் ஈரத்தை உணர்ந்ததும் தடவிப்பார்த்தேன். நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. லாந்தர் விளக்கு அணைத்து அருகே கிடந்தது. சமாளித்து எழுந்தேன். சோம்தேவ் ஒரு பெரிய கல்லை எடுத்து ரதீஷைத் தாக்கினான். கீழே விழுந்த ரதீஷ் மீண்டும் எழுந்து துப்பாக்கியால் என்னைத் தாக்கியதைப் போலவே சோம்தேவின் முகத்தில் அடித்தான். தரையில் விழுந்த சோம்தேவ் எழுவதற்குள் துப்பாக்கி வெடித்தது.

சோம்தேவின் அலறலில் என் உடம்பு அதிர்ந்தது. புல்லட் சத்தம் கேட்டது. ரதீஷும் அவனது கூட்டாளியும் தூரத்தில் போவது தெரிந்தது. பாமினி கதவு திறந்து கலக்கத்துடன் வெளியே வந்தாள். நான் இருட்டில் சோம்தேவின் முனகல் கேட்ட திசையில் தவழ்ந்து அவனைக் கண்டுபிடித்தேன். சோம்தேவைத் தூக்கித் தோளில் போட்டு மண்டபத்தில் கிடத்தினேன். பாமினி ஒரு கையில் லஷ்மியுடனும் மறுகையில் லாந்தர் விளக்குடனும் வந்தாள். வெளிச்சத்தில் சோம்தேவின் இரத்தம் பரவிய சட்டையைக் களைந்து பார்த்ததில் அவனது வலது மார்பில் குண்டு துளைத்து, ரத்தம் ஊற்றைப் போல் நிற்காமல் பெருகியது. பாமினி மாரிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கதறினாள். பாவா உதடுகளில் விரல்வைத்து அமைதியாயிருக்கச் சொன்னார். சோம்தேவ் பேச்சிழந்து மயங்கிக் கிடந்தான். மூச்சு இருந்தது. பாவா தனது வேட்டிகளில் ஒன்றைக் கிழித்து சோம்தேவின் மார்பில் கட்டினார். ரத்தம் சிறிது கட்டுப்பட்டிருந்தது. நான் பாமினி குடிசைக்குக் கதவாய் இருந்த மூங்கில் தட்டியைக் கழற்றிக் கொண்டு வந்தேன். அதில் இரு நீண்ட சவுக்குக் கம்புகளைக் கட்டி சோம்தேவை அதில் கிடத்தினேன். பாவா சோம்தேவின் நெற்றியில் கைவைத்துப் பிரார்த்தித்தார். அவனது நெற்றியை முத்தமிட்டார். அவர் கண்கலங்கி முதன் முறையாக அப்போதுதான் பார்த்தேன். பிறகு தலையசைத்தார். பாமினி குழந்தையை அவரிடம் தந்துவிட்டுச் சேலையை ஏற்றிச் செருகி மூங்கில் தட்டியைப் பின்பக்கம் பிடித்தாள். நான் முன்பக்கம் தூக்க, அவள் பின்பக்கம் தூக்க விறுவிறுவென நடக்கத் தொடங்கினோம்.

அதிவேகமாய் நடந்தால் ஒரு மணிநேரத்தில் பாகல்பூரை அடைந்துவிடலாம். அங்கு இருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டால் சோம்தேவைக் காப்பாற்றிவிடலாம். ஒரு பெரிய மண்மேட்டைக் கடந்து முடித்ததும் எனக்கும் பாமினிக்கும் வியர்வை ஆறாய் ஓடியது. மூச்சு வாங்கியது. பாமினி மிகவும் களைத்துப்போனாள். “சிறிது உட்கார்ந்துகொள்கிறாயா?” என்றேன். தலையசைத்து மறுத்தாள். அவள் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. “எல்லாம் என்னால்தான்” எனத் தன்னையே திட்டிக்கொண்டு வந்தாள். வேகம் கூட்டி நடந்தோம். தூரத்தில் ஓநாய்களின் ஊளைச் சத்தம் கேட்டது.

இன்னும் சிறிது தூரத்தில் மெயின் ரோடு வந்துவிடும். அப்போது சோம்தேவின் முனகல் சத்தம் கேட்டது. மூங்கில் தட்டியைக் கீழே இறக்கி, லாந்தர் வெளிச்சத்தில் அவன் முகத்தைப் பார்த்தேன். விழித்திருந்தான். அவன் கண்கள் பயமற்று இருந்தன. எனக்கு அது வியப்பாக இருந்தது. “உனக்கு ஒன்றும் ஆகாது. இன்னும் பத்து நிமிஷந்தான். ஆஸ்பத்திரியை அடைந்துவிடலாம்” என்றேன். அவன் தீர்க்கமாய் இல்லையெனத் தலையசைத்தான். நீண்ட மூச்சை உள்வாங்கிவிட்டுத் தன் முடிவு தன் கண்களுக்குத் தெரிந்துவிட்டதாய் நிறுத்தி நிறுத்திச் சொன்னான். பாமினி கதறத் தொடங்கிவிட்டாள். அவள் நெற்றியை வருடினான். “என் முடிவு ஏற்கனவே எழுதப்பட்ட விதி, அதற்கு நீ காரணமல்ல. கவலைப்படாதே” என்றான்.

“நம்பிக்கையை விட்டுவிடாதே. இன்னும் சிறிது நேரம்தான். உன்னைக் காப்பாற்றிவிடலாம்” என நான் தட்டியைத் தூக்க முயல அவன் என்னை அருகே அழைத்தான். என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். புன்னகை பரவ என் கண்களைப் பார்த்தான். மூச்சு வாங்கக் கஷ்டப்பட்டான். ஏதோ சொல்ல முயன்றான். நான் குனிந்து காது குடுத்தேன். “கரகு பெரி ஜா” எனச் சொன்னான். பாமினியிடம் “என்ன சொல்கிறான்” எனக் கேட்டேன். தனக்கும் ஒரியா தெரியாது என்றாள். சிறிது நேரத்தில் அவன் உயிர் அடங்கியது. பாமினி அவனது மார்பில் விழுந்து அழுதாள். நான் என் கைகளை அவனது கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு அப்படியே தரையில் அமர்ந்துகொண்டேன்.

போலீஸ் விசாரணையில் நானும் பாமினியும் சாட்சி சொல்லியும் பஞ்சாயத்துத் தலைவர் மகனைக் கைதுகூடச் செய்யவில்லை. ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அதை அத்துடன் விட்டுவிடுமாறும் இல்லையெனில் பிராத்தல் கேஸில் எங்களைக் கைதுசெய்ய வேண்டியிருக்குமெனவும் எச்சரித்து அனுப்பினான். இரண்டு நாட்களில் சோம்தேவின் உடலைத் தந்தார்கள்.

மண்டபத்தின் அருகிலிருக்கும் சுடுகாட்டில் சோம்தேவின் உடலுக்கு நான் கொள்ளிவைத்தேன். இரண்டு நாட்கள் யாரும் எதுவும் பேசவில்லை. சாப்பிடவில்லை. மூன்றாம் நாள் பாமினி இரு பைகளையும் குழந்தையையும் மண்டபத்தில் விட்டுவிட்டுத் தனது குடிசைக்குத் தீவைத்தாள். வெண்புகை பரவ கொளுந்துவிட்டு எரிந்தது அது. இனி இந்தத் தொழில் செய்யப்போவதில்லை என்றும் அலகாபாத் சென்று வீட்டு வேலைகள் செய்து வாழப் போவதாகவும் அவள் சொன்னாள்.

பாவாவின் கால்தொட்டு வணங்கினாள். என்னை அழுத கண்களுடன் அணைத்தாள். “சோம்தேவும் நீயும் என் சகோதரர்கள். உங்களைப் போன்ற கண்ணியமான ஆண்களைப் பார்த்ததில்லை” என்றாள். நான் அவளைப் பாகல்பூர்வரை சென்று ரயிலேற்றிவிட்டு மண்டபத்திற்குத் திரும்பினேன். பாவா வானத்தை வெறித்தபடி இருந்தார். என்னை அருகே அழைத்தார். ஒரு கரித்துண்டை எடுத்துத் தரையில் எழுதத் தொடங்கினர். “என்னை வாரணாசியில் விட்டுவிடு. சோமனுக்காகத்தான் இங்கு இருந்தேன். இப்போது என் கடைசிச் சுவாசம் கங்கைக் கரையில், வாரணாசி மண்ணில் போக வேண்டுமென்பதே என் ஒரே விருப்பம். அங்கு இறப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது” என ஹிந்தியில் எழுதியிருந்தார். எனக்குத் திடீரென சோம்தேவ் சாகும் தருவாயில் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. “கரகு பெரி ஜா” என்றால் என்ன அர்த்தம் எனப் பாவாவிடம் கேட்டேன். என்னை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தார். பாவா மீண்டும் கரித்துண்டை எடுத்தார். “வீட்டிற்குத் திரும்பிப் போய்விடு” என எழுதினார். “சோம்தேவ் என்னை என் வீட்டிற்கே திரும்பப் போகச் சொன்னானா?” எனக் கேட்டேன். பாவா தலையசைத்து ஆமோதித்தார்.

அன்றே பாகல்பூர் சென்று ஒரு மாட்டுவண்டியை அழைத்துவந்தேன். பாவாவை வண்டியில் ஏற்றினேன். எங்கள் இருவரது மூட்டைகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். மண்டபம் புள்ளியாய் மறையும்வரை திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

வாரணாசியை அடைந்து கங்கையில் குளித்துத் தெளிந்தோம். பிறகு காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றோம். பாவா எழுதிக்காட்டிய ஒரு மடத்தில் அவரை விட்டுவிட்டு ஆசி வாங்கிவிட்டு நடந்தேன். அவரை அப்படியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை. அவரிடம் சென்று என்னுடன் வந்துவிடுமாறும், தந்தையைப் போல அவரைப் பார்த்துக்கொள்வேனென்றும் சொன்னேன். அவர் சில நொடிகள் கண்ணிமைக்காமல் என்னைப் பார்த்தார். “காட்டு மரங்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை” என மண்ணில் எழுதிக்காட்டினார்.

நான் ஒரு காகிதத்தில் என் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதிக் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றேன். ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று சென்னை செல்லும் ரயிலில் ஏறினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *