கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: விவேக சிந்தாமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 3, 2024
பார்வையிட்டோர்: 2,887 
 
 

(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.


முதல் ஐந்து தமிழ் நாவல்கள் – க.நா.சு.

என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்முதற் பதிப்பு: செப்டம்பர் 1957.

நாவல் கலை தமிழுக்குப் புதிது. அதற்கு ஒரு மரபை ஏற்படுத்தித் தர முயன்றவர்கள் என்று இந்த ஐந்து ஆசிரியர்களையும் தமிழர்கள் போற்ற வேண்டும் , இலக்கியத்திலே எந்த முயற்சிக்குமே மரபு என்பதுதான் ஆணி வேர், மரபு என்று ஒன்று ஏற்படாத காலத்தில் எழுதுபவர்கள் பலவித கஷ்டங்களுக் குள்ளாகிறார்கள் . அந்தக் கஷ்டங்களைச் சமாளிப்பதற்கு முன்னோடிகளுக்குச் சாமர்த்தியம் மிகவும் வேண்டும். இன்று தமிழ்க் கலையுலகிலே நாவல் என்கிற விருக்ஷம் பரந்து விரிந்து ஒங்க வளருகிறது என்றால் அதற்கு வழி செய்து தந்தவர்கள் வேதநாயகம் பிள்ளையும், ராஜமையரும் , மாதவையாவும் , நடேச சரஸ்திரியும், பொன்னுசாமிப் பிள்ளையும்தான். அவர்களுடைய முதல் நாவல் (சில சமயம் ஒரே நாவல்) பற்றி அறிந்து கொள்ள என் சிறு நூல் தமிழர்களுக்குப் பயன்படும் என்று எண்ணுகிறேன். ஒரு நூறு பேர்வழிகளாவது என் சிறு நூலால் தூண்டப்பட்டு அந்த முதல் நாவல்களைத் தேடிப் பிடித்துப் படிப்பார்களானால் அதுவே என் முயற்சிக்குப் பயன் என்று திருப்தியடைந்து விடுவேன். – க.நா.சு., 05-04-1957.


அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

1 – ஸ்திரீ புருஷ சம்வாதம்

மதுரை ஜில்லாவில் சிறுகுளம் என்ற ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்தின் நடுத்தெருவின் மத்தியில் ‘பெரிய வீடு’ என்று பெயருள்ள ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் கூடத்திற்கு அடுத்த ஓர் அறையில் .கீழே ஒரு கோரைப் பாய் விரித்து, அதன்மேல் ஒரு திண்டு போட்டுச் சாய்ந்து கொண்டு ஒருவர் படுத்திருந்தார். அவர் நித்திரை தெளிந்து எழுந்திருந்தவுடன், “ஆ,சம்போ சங்கரா” என்று இரண்டு தடவை உரக்கக் கொட்டாவி விட்டுவிட்டு, காலைச் சொரிந்துகொண்டு, “அடியே, அடியே” என்று கூவினார். அப்பொழுது கூடத்தில் ரவிக்கை தைத்துக்கொண்டிருந்த அவர் மனைவி, இவர் குரல் காதில் கேட்டவுடன் இரண்டு முறை இருமிவிட்டு மெளனமாய் இருந்தாள். 

அதற்குள் படுத்திருந்த பிராமணர், “அடியே, உன்னைத் தானடி, அடியே” என்று மறுபடியும் அழைத்தார். 

அதற்கு அவர் மனைவி கோபித்தவள்போல பாவனை செய்துகொண்டு, “இங்கே அடியையும் காணோம், நுனியையும் காணோம்; அடியாம், அடிக்க வேண்டியதுதான். காசு கொடுத்துச் சந்தையில் வாங்கினால்போலத்தான். இனிமேல் அப்படிச் சொல்லுங்கள், வழி சொல்லுகிறேன்!” என்று பரிகாசமாய்ச் சொன்னாள். 

அவர், “சூ, சூ, எவ்வளவடா” என்று சொல்லிவிட்டு, “துரை மகளானாலும் பாரி உரியவனுக்கவள் ஊழியக்காரி” என்று சங்கீதம் பாடத் தொடங்கினார். 

மனைவி: “உங்களைப்போல அவன் ஒரு புருஷன்தானே. வேதநாயகம் பிள்ளையாம்.கரியாவான். இனி வெள்ளைக் காரச்சிகளைப்போல் ஆரம்பிக்க வேண்டியதுதான்; அடியாவ தென்ன அடி! எங்களப்பா இரண்டு கரை வைத்தாண்டார்; எங்கள் பாட்டனார் மூன்று கரை வைத்தாண்டார்; சந்தையில் கொண்டுவந்து தள்ளி விட்டாப்போல் ‘அடி’ என்று கூப்பிடுவது என்ன? 

அவர்: “மூன்று கரையாகப் போவானேன், அக்கரை, இக்கரை, குளக்கரை, மயானக்கரை ஒன்று, ஆக நாலு இருக்கிறதே!” 

மனைவி: “எங்களுக்கு அதுதான் உண்டு; நீங்களெல்லாம் ஸரபோஜி மஹாராஜா பிள்ளைகள்! உங்களுக்கும் எங்களுக்குமா, உங்களுக்கு நாங்கள் அடிமைதான்!” 

அவர்: ”அடியேன் செய்த பிழையை தேவரீர் பொறுத் தருளவேண்டும். ‘சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோராகிற் பொறுப்பது கடனே.’ ஓய் ஸ்ரீமதி ராஜ ராஜேஸ்வரி கமலாம்பாள்! தயவுசெய்து கொஞ்சம் தீர்த்தம் சாதிக்க வேண்டும்!” 

மனைவி: “எங்களாத்தில் தீர்த்தம் கொடுக்கிற வழக்கமில்லை.” 

அவர்: “கொடுத்தால்தான் உனக்குப் பிள்ளைக் குழந்தை பிறக்கும் பார்!” (அப்பொழுது கமலாம்பாள் ஆறு மாத கர்ப்பிணி.) 

மனைவி: ”ஆ! இருக்கிற பெண்ணைக் காப்பாற்றினால் போதாதா, பிள்ளைக் குழந்தை இல்லையென்று இப்பொழுது யார் உங்களிடம் சொன்னார்கள்?” 

அவர்: “சொல்லாவிட்டாலும் மனதிற்குள்ளாவது இருக்குமல்லவா? இப்பொழுது தீர்த்தம் கொண்டு வந்தால், இதற்கு மூன்றாவது மாதத்தில் ஆண் பிள்ளை பிறக்கும்.” 

மனைவி: “மூன்று மாதம் போவானேன்? இப்பொழுதே செல்லப்பிள்ளை நீங்கள் இருக்கிறீர்களே’ என்று சொல்லி விட்டு உள்ளே போய் ஒரு தட்டில், தேங்குழல், எள்ளுருண்டை முதலிய பக்ஷணங்களை எடுத்துக்கொண்டு, கையில் பனிபோல் ஜிலு ஜிலென்று குளிர்ந்த தீர்த்தமும் கொண்டு வந்து தன் கணவர் படுக்கை அருகில் வைத்துவிட்டு, “அப்பா”, என்று அவர்மேல் சாய்ந்து கொண்டாள். உடனே அவர் அவளை இறுகத் தழுவிக்கொண்டு பக்ஷணங்களைக் கணக்குப் பார்க்கப் புகுந்தார். 

பாதி சாப்பிட்டான பிறகு, தன் மனைவி பராக்குப் பார்த்திருந்த சமயங்கண்டு அவள் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, “ஏனடி, நிரம்பப் பெரிய மனுஷியாய் விட்டாயோ? அடியே என்றால் ஸரபோஜி மஹாராஜா பிள்ளை என்று பரிகாசம் பண்ணுகிறாயா?” என்று கன்னத்தில் மெதுவாய் அடித்தார். அவள் சிரித்துக்கொண்டு, “இல்லை, இனிமேல் இல்லை” என்று சொல்லிவிட்டு, “மரியாதையாய்க் கையை விட்டுவிடுகிறீர்களா! இல்லாவிடில் கூச்சலிடட்டுமா?” என்றாள். அவர், “கூச்சலிடு, யார் வருகிறார்கள் பார்ப்போம்!” என்றதும் அவள் ‘ஐயோ’, என்று மெதுவாகச் செல்லக் கூச்சலாய் இட, அவர், மறுபடியும் கன்னத்தில் மெல்ல அடித்துவிட்டு, கையை விட்டுவிட்டார். பின் இரண்டு பேருமாய் அதிக சுறுசுறுப்புடன் பக்ஷணங்களைத் தின்றனர். 

மனைவி: “இப்படி பக்ஷணம் தின்றுகொண்டிருந்தால் நம்முடைய குட்டி கல்யாணிக்கு எப்பொழுது கல்யாணம் செய்கிறது?” 

அவர்: “‘யாரே அழகுக்கு அழகு செய்வார்?’ அவளே கல்யாணி ஆகிவிட்டதே. இனி அவளுக்குக் கல்யாணம் எதற்கு?”

மனைவி: “உலகம் புத்தியற்ற உலகம்; ஆயிரம், ஐந்நூறு என்று செலவழித்துக் கல்யாணங்களைச் செய்துகொண்டு வருகிறார்கள். சுருக்கமாகக் ‘கல்யாணி’ என்று பெயரை வைத்துவிட்டு இருந்துவிடலாமே! நமக்குத் தெரிந்த இந்தப் பரம ரகசியம் ஒருவருக்கும் தெரியவில்லை பாருங்கள்!” 

அவர்: “கல்யாணி எங்கே கண்ணிலேயே காணோம்,” என “அவள் அடுத்தகத்துக்குப் போயிருந்தாள்,” என்று சொல்லிவிட்டு அந்தம்மாள், “கல்யாணி” என்றழைத்தாள். அந்தக் குழந்தை, “எங்களண்ணா அழைக்கிறார்கள்” என்று தன் தோழிகளிடத்தில் விடை பெற்றுக்கொண்டு புஸ்தகமும். கையுமாய் வந்து நின்றாள். 

“ஒரு காரியம், ‘புஸ்தகம் ஹஸ்த பூஷணம்’ என்றபடி நமது கல்யாணி, அண்ணாவைக் காணும்போதெல்லாம் கையில் புஸ்தகமில்லாமல் இருக்கிறதில்லை” என்றார் அவர். அதற்கு அச்சிறுமி, “இல்லை, அண்ணா! படித்துக்கொண்டு தானிருந்தேன், மீனாட்சியை வேண்டுமானால் கேளுங்கள் அண்ணா” என்றாள். அதற்கு அவர் அவளைப் பரிசோதனை செய்யும்பொருட்டு, “ஓராங்கல்படி’ என்று ஆடிக்கொண் டிருந்தாயே, எனக்குக் கேட்கவில்லையா?” என, “இல்லை. அண்ணா, நிச்சயமாக வாசித்துக் கொண்டுதான் இருந்தேன்” என்றாள். அவர், ‘புஸ்தகத்தை அப்படியே கொடு’ என்று வாங்கி, அது தான் நல்ல பாட்டுகளாய்த் தெரிந்தெடுத்து, உரையுடன் சேர்த்துச் செய்த கம்பராமாயணச் செய்யுள் திரட்டாயிருக்கக் கண்டு, “கடைசியில் எந்த இடத்தில் நிறுத்தினாய்?” என்று கேட்க கல்யாணி, சூர்ப்பனகை ராவணனிடத்தில் போய் முறையிட்டுப் போர் மூட்டுகிற இடம்” என்று சொன்னாள். 

அவர் (தன் மனைவியைப் பார்த்து), “ஸ்திரீகள் தான் உலகத்தில் கலகத்திற்கெல்லாம் காரணம். சீதை யில்லா விட்டால் ராமாயணம் ஏது ?” 

மனைவி: “ஆமாம். ஸ்திரீகள் பேரில் ஆசை வைத்துப் புருஷர்கள் கெட்டலைந்தால் அதற்கு ஸ்திரீகள் தான் காரணம்; ராவணன் கெட்டது சீதையினாலேயா, அல்லது தன் கொழுப்பினாலேயா?” 

அவர் : “அது போகட்டும்; இன்னொரு விசேஷம் பார். ராமாயணப் போருக்கு முதல்முதல் காரணமாய் இருந்ததும் பெண், அதை நடுவில் நின்று மூட்டிவிட்டதும் பெண்-சூர்ப் பனகை. இல்லையா? இதிலேதான் வால்மீகியின் சாமர்த்திய மும் முக்கியமாய் விளங்குகிறது. ‘நாரதர் கலகப்பிரியர் என்று சொல்வது வழக்கம்; ஆனால் நாரதர்கூட இவ்வளவு பெரிய யுத்தம் உண்டு பண்ணினதில்லை. இவ்வளவு ஜாலமும் மோசமும் அவர் கனவிலும் கண்டறியார். அவர் யாரிடத்தில் போய் சண்டை மூட்டினாலும் சூர்ப்பனகை ராவணனுக்கு உண்டுபண்ணின அவ்வளவு கேடு அவர் செய்ததே யில்லை. பத்து நாரதர் சேர்ந்தால் ஒரு சூர்ப்பனகை ஆகாது!” 

மனைவி: “அப்படியே இருக்கட்டும். உலகத்தில் புருஷர் கள் எல்லாம் ராவணனையும் கும்பகர்ணனையும் போலிருந்தால், ஸ்திரீகள் எல்லாம் சூர்ப்பனகையாக இருக்கட்டுமே!”

அவர் மேல் சமாதானம் ஒன்றும் சொல்லத் தோன்றாத தினால் குழந்தை கல்யாணியைப் பார்த்து, “உனக்கு ராமனைப் போல் புருஷன் வேண்டுமா? லட்சுமணனைப் போல் வேண்டுமா?’ என்றார். கல்யாணி வெட்கத்துடன் தலை குனிந்து மெளனமாயிருந்தாள். அப்பொழுது அவர், “ராமன் கருப்பு, லட்சுமணன் சிவப்பு: ராமன் அப்பாவி, அவனுக்கு அழத்தான் தெரியும்; லட்சுமணன் நல்ல தீரன். பார், ‘ராமனைக் காட்டுக்குப்:போ’ என்றதற்குமுன் மரவுரியும் கையு மாய்ப் புறப்பட்டுவிட்டான். லட்சுமணனோ தைரியமாய் எல் லாரையும் கொன்று விடுகிறேன் என்று வில்லைத் தூக்கினான். ராமனுக்கு லட்சுமணன் எவ்வளவோ திறம். எல்லாவற்றை யும் யோசித்து சீக்கிரம் பதில் சொல். நான் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று பரிகாசம் செய்தார். 

கல்யாணி, “என்ன அண்ணா! இதற்குத்தான் கூப்பிட்டீர் களாக்கும்! மீனாட்சி கூப்பிடுகிறாள், நான் போகிறேன்” என்று புறப்பட, உடனே அவர், “இந்தாடி குட்டி, நீ ராமனையும் கலியாணம் செய்து கொள்ள வேண்டாம், லட்சுமணனையும் கலியாணம் செய்து கொள்ள வேண்டாம்; அவர்கள் இருவருக் கும் கலியாணம் ஆகிவிட்டது. அதற்காக நீ ஏன்-” என்று சொல்லி முடிப்பதற்கு முன், ‘முத்துஸாமி, முத்துஸாமி” என்று வாசல் கதவை யாரோ தட்ட, முத்துஸ்வாமி அய்யர், “ராமண்ணா வாத்தியார் வந்திருக்கிறார், நீங்கள் உள்ளே போங்கள்” என்று சொல்லிவிட்டு, கதவைத் திறந்தார். 

2 – வாத்தியாரும் ஜோஸியரும்

முத்துஸ்வாமி அய்யர் கதவைத் திறந்தவுடன் ராமண்ணா வாத்தியார் உள்ளே வந்தார். அவரைப் பார்த்தால் ஐம்பது வயதுக்குமேல் மதிக்கமாட்டார்கள். ஆனால் அவருக்கு சதாபிஷேகமாய் வருஷம் ஐந்து ஆகிவிட்டது; அதாவது இப்பொழுது வயது 85. இன்னும் சிறுகுளத்தில் இவரைவிட்டு வேறொருவரைப் பிராமணார்த்தத்திற்குச் சொல்வதில்லை. அந்த ஊரில் ஒரு மாதத்திற்குக் குறைந்தது இருபது சிரார்த்தத்துக்கு மோசமில்லை. அதில் பதினெட்டுக் குக் குறையாமல் வாத்தியாருக்குக் கிடைக்கும். கலத்தில் பரிமாறும்பொழுது “போதும்” என்று சொல்லுகிற துர்வழக்கம் அவரிடத்தில் கிடையாது. “எவ்வளவு போட்டா லும் சாப்பிட வேண்டியது நம்முடைய கடமை” என்று அவர் சொல்லுவார். அந்த ஊர் ஜனங்களுக்கும் அவர் பிராமணார்த்தம் சாப்பிட்டால்தான் திருப்தி, ‘இந்தப் பிராமணர் இவ்வளவு சாப்பிடுகிறாரே, இதில் பாதியாவது நம்முடைய பிதுர்க்களுக்குக் கிடைக்காதா’ என்று அவர்களுக்கு எண்ணம். எதார்த்தத்தை அவர்கள் அறிந்ததில்லை. இவர் மத்தியானம் சாப்பிடுவது போதாமல், ராத்திரிப் பட்டினி யாகையால், இருபது முப்பது வடையை மட்டும் தின்று விட்டு சுத்தப் பட்டினியாகவே யிருந்து விடுவார். உளுந்து வடைதான் அவருடைய தேகக்கட்டு விட்டுப் போகாமல் அவரைக் காப்பாற்றி வருகிறது. ஒரு நாள் ஜுரம் என்று கீழே படுத்துக்கொள்ள வேண்டுமே, கிடையாது! வயதினால் கொஞ்சம் கூனினவர் போல் இருந்தாலும், அவர் நடை கொஞ்சங்கூட தளர்ச்சி யடையவே யில்லை. ஆற்றங்கரையில் தினந்தோறும் அவர்தான் ஓடுகால் தள்ளுகிறது வழக்கம். 

வாத்தியார் உள்ளே வந்தவுடன் நமது முத்துஸ்வாமி அய்யர், “மாமா வாருங்கள், வாருங்கள்! குட்டி. பலகை கொண்டுவா!” கல்யாணி பலகை கொண்டுவர, “உட்காருங்கள்! நானே அங்கே வரலா மென்றிருந்தேன்.. அடே! யாரடா, வீரா!” என்று கூவினார். உடனே வேலைக்கார னாகிய வீரன், “ஸ்வாமி” என்று வர, அவர், “அடே போய் குழந்தை சுந்தரத்தைக் கூட்டிவா!” என்று சொல்லி விட்டு, வாத்தியாரைப் பார்த்து, “ஜோஸ்யரவர்களைக் கூட்டிக்கொண்டு வரச் சொல்லுகிறேன், ராகுவேளை போய் விட்டதல்லவா, இன்று என்ன, வெள்ளிக்கிழமையோ?” 

வாத்தியார்: “ஆம் ஆம், ராகுவேளை போய் எந்தக் காலம் ஆகிவிட்டதே!” 

முத்து: ”ஆம், ஆம், செவ்வாய்க்கிழமை ஞாபகமாய்ச் சொன்னேன்.” அப்பொழுது பையன் சுந்தரம் ஒரு பந்தை உ உருட்டிக்கொண்டு, “ஏன் அப்பா, கூப்பிட்டாயாமே?” என்று கேட்டுக்கொண்டு வந்தான். 

முத்து: “பந்து எதற்கடா? அட்டா! தாத்தாமேல் படப்போகிறது! அதைக் கையில் எடு எடு!’ 

பையன்: “புதுப்பந்து அப்பா, பெரிய களச்சிக்காய் உள்ளே வைத்திருக்கிறேன்!” 

“அது இருக்கட்டும், என்ன விளையாட்டுப் புத்தி; நீ போய் சங்கர ஜோஸியரை, அப்பாவும் தாத்தாவும்…” என்று மேல் சொல்வதற்குள், “எந்தத் தாத்தா?” என்று பையன் கேட்க, “ஆமடா இந்தத் தாத்தா தானடா, உங்களைக் கையோடு கூட்டிவரச் சொன்னார்கள். ஏதோ அவசர காரியமாம்’ என்று சொல்லிக் கூட்டிக்கொண்டு வா!” என்றார். 

பையன்: “என்ன காரியம் சொல்லு!” 

முத்து: “சொல்லுகிறேன் போ!” 

பையன்: “சொன்னால் தான்…” 

முத்து “அக்காளுக்குக் கலியாணம்.” 

பையன் : “அக்காளுக்குக் கலியாணமாம், உங்களைக் சொல்லிக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்கள் என்று கூட்டி வருகிறேன்.” 

முத்து “இது ஏதடா இவன்! நீ ஒன்றும் சொல்ல வேண்டாமடா, கையோடு கூட்டிக்கொண்டு ஓடிவாடா?” 

பையன்: “அவர் என்னோடு ஓடமுடியுமா, நான் அவருக்கு முந்தி ஓட்டம் பிடித்து விடுவேனே!” 

முத்து: “நீ ஓட வேண்டாம்; போய் மெள்ளக் கூட்டிக் கொண்டுவா” என்று சொல்ல, சுந்தரம் குதித்துக்கொண்டு வெளியே ஓடினான். 

சற்று நேரத்திற்கெல்லாம் சிவந்த நிறமுள்ள ஒரு மனிதர் உள்ளே வந்தார். அவர் கழுத்தில் ருத்திராட்சமும்,கையில் திருப்பதி காப்பும், விரலில் பொன் மோதிரமும் அணிந்து கொண்டு, நெற்றியில் விபூதி சந்தனாட்சதை தரித்துக் கொண்டு, கையில் ஒரு ஏடுடன் வந்தார். இவர் வந்தவுடன் அய்யர், “வாருங்கள்” என்று ஆசனம் கொடுக்க, வாத்தி யார், “சங்கரா, வா” என்று சொல்லி, “இதோ இந்த ஜாதகங்களைப் பார்.” என்று கையில் கொடுத்தார். 

ஜோஸியர் உட்கார்ந்துகொண்டு, ”குட்டிக்காக ஒரு கட்டு ஜாதகம் இருக்கிறதே! நூற்றுக்கும் குறையாதுபோல் இருக்கிறதே” என்றார். 

முத்து: “இருக்கும்.” 

ஜோஸியர்: “உங்களுடைய குணத்திற்கும் புத்திக்கும் ஐசுவரியத்திற்கும் வாய்திறந்து சொன்னால் போதாதா. லட்சம் ஜாதகம் வருமே! குழந்தைக்குத்தான் என்ன! எல்லோரும் பெண், அவளும் பெண்ணா! அவள் புத்திக்கும் சாந்தத்துக்கும் அழகுக்கும் படிப்புக்கும் -” என்று இப்படி ஸ்துதி பண்ணினார். 

முத்து சகிக்க மாட்டாதவராய், “குட்டிக்கு பத்து வயது ஆகிறது, இந்த வருஷத்திலாவது மேலைக்காவது கலியாணத்தை நடத்தி விடவேண்டும்.” 

ஜோஸியர்: “இதுதான் சரியான வயது. இதற்கு முன் என்ன கலியாணம்! அதெல்லாம் எனக்கே மனதுக்கு சமா தானப்படுகிறதில்லை” என்று சொல்லிக்கொண்டே, “ஆஹா இது பேஷ் ஜாதகம், பஞ்சமத்தில் சூரியன், ஜனனம் சனி தசை, அஷ்டாமாதிபதி குரு; சுக்கிரதசையில் நல்ல யோக மிருக்கிறது.” 

முத்துஸ்வாமி அய்யர்: “பொருந்தின ஜாதகத்தை யெல்லாம் ஒரு பக்கமாக வையுங்கள்; அப்புறம் அதிலே பொறுக்கிக் கொள்வோம்.” 

வாத்தியாரும், “இதற்கு இரண்டு பாவமிருக்கிறது. இதுவும் பாவஜாதகந்தான்” என்று ஒன்றொன்றாய்த் தள்ளி வைத்துக்கொண்டிருந்தார். 


இங்கே இப்படியிருக்க, மதுரையில் வெள்ளியம்பலத் தருவில் ஒரு பெரிய காரை மச்சுவீட்டுத் திண்ணையில் இரண்டு கிழவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 

அவர்களுள் ஒருவர், “முத்துஸ்வாமி பெண் ஜாதகமும் பயல் ஜாதகமும் பொருந்துகிறது. அதுதான் என் மனதுக்குப் பிடித்ததாயிருக்கிறது. நீங்கள் இன்னும் யோசனை செய்து கொண்டு சொல்லுங்கள்” என்றார். 

மற்றவர்: “யோசனை என்ன? மனத்துக்கும் பிடித்து, ஜாதகமும் பொருந்தினால், அதைத்தான் பண்ணிவிடுவோம். முத்துஸ்வாமியும் மனிதர்கள் பேரில் அபிமானம், விதரணை இதெல்லாமுடையவன். அவன் சம்சாரம் அதைவிட; நான் போய்விட்டேனானால் ‘மாமா, மாமா என்று செய்யும் ஆசார உபசாரம் சொல்லி முடியாது. ஊர்யோக க்ஷேமம் விசாரிக்கிறதும், எதிராளி நோக்கத்தைக் கண்டு நடக்கிறதும் அவளிடத்தில் நிரம்ப நன்றாயிருக்கும்; இரைந்த சொல் கிடையாது. சொத்தோ அளவில்லாமல் கிடக்கிறது. பெண் வெறுமனே தங்கத்திலே வார்த்தாற்போல் இருக்கும். மின்னல் கொடிதான். அவள் அழகு பயலுக்குக்கூட வராது!” 

மற்றவர்: ‘போகட்டும் அதுதான் எனக்கும் மனதிற்குப் பிடித்ததாய் இருக்கிறது, இராத்திரி புஷ்பம் வேணு மானால் வைத்துப் பார்ப்போம்.” 

அதற்குக் கிருஷ்ணய்யர், ‘புஷ்பம் வைத்துப் பார்ப்போம், சகுனத்தையும் பார்ப்போம். ஜாதகத்தையும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்ப்போம். மனதில் சந்தேகமென்னத் திற்கு? நமக்கு என்ன, பெண் கிடையாதா? நாம் செய்வதை யெல்லாம் செய்துவிட்டால் அப்புறம் உள்ளபடி யிருக்கிறது. இராத்திரி கோயிலுக்கு நானும் வருகிறேன்,மீனாட்சி சம்மதத்தையும் கேட்போமே, இதிலென்ன ?” என்றார். ராமசுவாமி சாஸ்திரிகளும், ‘ஆஹா சரி, அப்படியே செய்வோம்” என்றார். கிருஷ்ணய்யர், “நான் சித்திரை வீதி வரையிலே போய்விட்டு அப்புறம் வருகிறேன்” என்று விடை பெற்றுக் கீழே இறங்கிச் சென்றார். 

3 – வம்பர் மஹா சபை

அன்று பகலில் கிருஷ்ணய்யரும் அவர் சம்பந்தியாகிய ராம சுவாமி சாஸ்திரிகளும் பேசிக்கொண்டபடியே, இராத்திரி மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குச் சென்று புஷ்பம் வைத்துப் பார்க்க, வெள்ளைப் புஷ்பம் அகப்பட்டதுந் தவிர, அம்மன் சந்நிதியில் மூலக்கிரகத்தருகில் ஏற்றிவைத்திருந்த திருவிளக்கிலிருந்தும் பொறிகள் கல கலவென்று புஷ்பங்கள் போல் உதிர்ந்தன. இதைக் கண்ட இருவரும் அடங்காத ஆனந்தத் துடன் வீட்டுக்கு வந்து, எப்பொழுது விடியுமென்று இரவெல் லாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்து, விடிந்தவுடன் காலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, சிறுகுளம் முத்து ஸ்வாமி அய்யருக்குக் கடிதம் எழுதுவதற்காக உட்கார்ந்தனர். 

அப்பொழுது தபால்காரன் கிருஷ்ணய்யருடைய மேல் விலாசத்திற்கு ஒரு கடிதம் கொண்டுவந்தான். அது ‘சிறு குளம்’ என்று மேல் முத்திரை யிடப்பட்டிருந்ததால், அதை ஆவலுடன் உடைத்து வாசித்துப் பார்க்க, அதில் அடியில் வருமாறு வரையப்பட்டிருந்தது:-

சிறுகுளம்,
பங்குனி மீ 19உ 

ஸ்ரீமத் ம-ஈ-ஈ-ஸ்ரீ மாமா அவர்களுடைய திவ்விய ஸ்ரீ பாதபத்மங்களிலே பாலன் முத்துசாமி சாஷ்டாங்க பூர்வமாக நமஸ்கரித்து விஞ்ஞாபனம். இவ்விடத்தில் அனைவரும் க்ஷேமம். அவ்விடத்திய க்ஷேமாதிசயங்களுக்கு அடிக்கடி எழுதும்படி ஆஞ்ஞாபிக்கக் கோருகிறேன். 

தங்களுடைய ஆசீர்வாத அனுக்கிரகம் ஸம்பூர்ணமா யுள்ள எனக்கு என்ன குறை? ‘ஜலமிருக்கப் பயிர் வாடுவ தேன்?” சி.ஸ்ரீநிவாசனுடைய ஜாதகமும் சௌ. லட்சுமி (கல்யாணியின் மறுபெயர்) ஜாதகமும் எல்லாவிதப் பொருத் தங்களிலும் பொருந்துகின்றன. ஸ்ரீநிவாசனும் லட்சுமியும். கலந்து வாழ மனுஷ்ய யத்தனமும் வேண்டுமோ? இனிமேல் நடக்க வேண்டிய காரியமனைத்தும் தங்களதே. ‘காற் றில்லாமல் மரத்திலைகள் ஆடுவதுமுண்டோ?’ 

தங்களுடைய சம்பந்தி ம -ஈ-ஈ-ஸ்ரீ மாமா ராமசுவாமி சாஸ்திரிகளவர்களுடைய அபிப்ராயத்தை அறிந்ததன் பேரில் அவர்களுக்கே நேரே எழுதுகிறேன். அம்மான் சேய் ஆயிசு முழுவதும் அம்மான் சேயாகவே யிருக்க வேண்டி யதைப்பற்றி விசனப்படாமல் நான் தேற்றினேன் என்று சொல்லவும். 

வேணும்
அனேக நமஸ்காரம்
முத்துஸ்வாமி. 

இக்கடிதத்தைப் படித்தவுடன் கிருஷ்ணய்யர், ‘முத்து ஸ்வாமி நிரம்பப் படித்தவன், காசிதம் எழுதுகிற மாதிரி யைப் பாருங்கள்! சுருக்கமாக உபமான உபமேயங்களோடு, தான் ஒன்றும் மேலே போட்டுக்கொள்ளக்கூடாதாம்” என, சாஸ்திரிகளும் சந்தோஷத்தால் முகமலர்ந்து, “நன்றாயிருக் கிறது” என்றார். பிறகு சிறிதுநேரம் பேசிவிட்டு, இருவருமாய் சிறுகுளத்திற்கு அன்று பகலிலேயே போய் முகூர்த்தம் வைத்துக்கொண்டு வருவதாய்த் தீர்மானம் செய்தார்கள். 


மறுநாள் காலையில் சிறுகுளம் என்ற கிராமத்தில் ஆற் றங்கரையில் சில ஸ்திரீகள் புடவை தோய்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருத்தி, “ஆமாம், எல்லாம் ‘காரியமாகிறவரையில் கழுதையுங் காலைப்பிடி’தான்.இப்பொழுது எட்டாவது பிள்ளை பெற்றவளுக்கு ஆசார உபசார மாய்க் கிடக்கிறது! இதற்கு முன்னே நடந்த தெல்லாம் நேற்றுக் குழந்தைக்குக்கூடத் தெரியும். தலைச்சன் பிள்ளைப் பெற்றிருந்தேன். வேளா வேளைக்கு மருந்து கிடையாது. சாப் பாடு கிடையாது. தாயாரும் பெண்ணுமாகக் கூடிக்கூடிக் குடியைக் கெடுக்கிற பேச்சுப் பேசிக்கொண்டிருந்தது தெரி யாதா? அப்பொழுது ஒருநாள் விளாச்சேரியிலிருந்து பலாப் பழம் வந்தது. அன்றைக்கு மாதப் பிறப்பு: சேப்பங்கிழங்கு போட்டு மோர்க்குழம்பு, தேங்காய் கோசுமல்லி,பலாக்காய்க் கறி, கத்தரிக்காய் போட்டு பொரித்த கூட்டு. சக்கரவள்ளிக் கிழங்குக் கறி. புருஷர்கூட ஊரிலில்லை. மானாமதுரைக்குப் போயிருந்தார் மருமகனகத்துக்கு. அப்பொழுது எல்லாவற் றையும் பண்ணி எடுத்துக்கொண்டு பலாப்பழத்திலேகூட எனக்கு ஒரு சுளை கிடையாது. “பசுவன்” போல் கொட்டிக் கொண்டு என் காதிலே படவேண்டுமாம், “அடவாகக் கறி காய்கூடக் கிடையாது” என்று சொல்லிக்கொண்டு, பருப்புத் துவையலும் சாதமுமாக, நல்ல நாள் திங்கள் நாள்கூடப் பாராமல் போட்டாளே! அதெல்லாம் மறந்து போவேன் என்று நினைக்கிறாயோ? அதுவும் ஒரு பக்கத்தில் இருக்கும்!” என்று சொல்லிக்கொண்டு நிமிர, அப்பொழுது பொன்னம் மாள் என்ற ஒரு ஸ்திரீ குடமும் கையுமாக எதிர்ப்பட்டாள். 

இந்தப் பரதேவதைக்கு ‘ர’ கரம் வாயில் நுழையாது; அதற்குப் பதிலாக ‘ய’கரந்தான் வரும். முதலிலேயே அந்தப் பரிபாஷையைத் துவக்கினால் உலகம் பயந்து போகும் என்று அதற்கு உதாரணம் பின் அத்தியாயங்களில் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

அவள் முத்துஸ்வாமி அய்யருடைய தம்பி சுப்பிரமணிய அய்யருடைய மனைவி. தஞ்சாவூர்ப் பெண். இந்தப் பூமண் டலத்திற்குள் அவளுக்கு ஒருவரும் நிகரில்லை. யாரையும் லட்சியமில்லாமல் எடுத்தெறிந்து பேசுவாள். பாவம்!சுப்பிர மணிய அய்யரைப் பம்பரமாய் ஆட்டி வைப்பாள். 

இந்தப் பதிவிரதா சிரோமணியிடம் அவர் யதார்த்தத் தில் அதிக பயந்தவராயிருந்தாலும், வெளிக்குத்தான் மனைவி சொல் கேட்பதில்லை யென்று அடிக்கடி பெருமை பேசிக்கொள் வார். ஆனாலும் அந்த அம்மாள் படுத்துகிற பாட்டிற்கு அவர் சாகமாட்டாமல் அவஸ்தைப்படுகிறார் என்ற சங்கதி சிறுகுள் முழுவதும் தெரியும். அவருக்கு ரோஷம் பிறக்க அவரை வைய வேண்டுமானால், ‘பெண்டாட்டி ஆத்தாள் பெரிய ஆத்தாள்’ என்று சொல்லிவிட்டால் போதும், அவர் முகம் சிவந்து கண்களில் இரத்தம் சுரந்துவிடும். 

பொன்னம்மாள் வெகு அலங்காரப் பிரியை. அவள் நடக்கும்போது உலகம் முழுவதும் தன்னழகையே இமை கொட்டாமல் சித்திரம்போல் பார்த்து பிரமித்து நிற்பதாக அவள் ஞாபகம்; போய்க்கொண்டிருக்கும்போதே நாம் அன்னநடை நடக்கிறோம் என்று சில சமயங்களில் திடீரென்று அவளுக்கு எண்ணம் உண்டாகிவிடும். உடனே அவளுக்குக் கர்வமும் லஜ்ஜையும் ஏககாலத்தில் உண்டாகி, கால் தீப் பொறியின் மேல் மிதித்தாற்போல் கீழே பாவாமல், விகார நடையுடன் அவள் ஏதாவது சாக்கு வைத்து, நின்று நின்றா வது அல்லது விரைந்தாவது வீட்டுக்குப் போவதைப் பலர் பார்த்திருக்கிறார்கள். 

இந்தப் பரதேவதை தண்ணீரில் இறங்கியவுடனே மேலே சொன்னபடி அங்கே பிரசங்கம் செய்துகொண்டிருந்த ஸ்திரீ அவளைப் பார்த்து, “பொன்னம்மாள்! ஏது இத்தனை நாழிகை? கல்யாண அமர்க்களமோ? அதாரடி உன் மைத்துனனகத்துத் திண்ணையில் ஜோடியாக இரண்டு கிழவர்கள் உட்கார்ந்திருக் கிறார்களே! அவர்கள் யார்?” என்று கேட்டாள். 

பொன்னம்மாள் வெகு சலிப்புடன், “யாரோ! ‘கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?’ உலகத்தில் அவரவர்கள் பாட்டை அவரவர் கவனித்தால் போதாதா?” என்று வெகு இலக்கணமாய் மறுமொழி சொன்னாள். 

பொன்னம்மாள் யதார்த்தத்தில் கமலாம்பாள் படித்த தில் பாதிகூடப் படித்திராவிட்டாலும், தன்னிடத்திலுள்ள சொற்ப சரக்குகளை வைத்துக்கொண்டு எல்லாம் படித்து விட்டதாகப் பாவனை செய்வாள். கமலாம்பாள் அதிக அழ காகப் பேசுகிறாள் என்பதைப் பற்றி அவளுக்கு அடங்காப் பொறாமை. ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானுமதுவாகப் பாவித்துத் தானுந் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போல’ கமலாம்பாளைப் பார்த்துத் தானும் நிரம்ப இலக்கணமாகப் பேச ஆரம்பிப்பாள். பிராமணர்கள் தாங்கள் பேசும் பாஷையில் சமஸ்கிருத பதங்களை இடை இடையே, மரத்தில் இலை மத்தியில் புஷ்பங்கள் சேர்ந்தாற் போல், சேர்த்துப் பேசுவதைக் கண்ட ஓர் ஆட் டிடையன், தானும் அவர்களைப்போல் பேச எண்ணி, வீட்டுக்குப் போய், தாயாரை அழைத்து, “அம்மா, ஆஷ்டுக் குட்டி வந்து வேஷ்டியைத் தின்கிறது! ஓஷ்டு ஓஷ்டு” என்று சொன்னதாக ஒரு கதையுண்டு. அதுபோல் பொன்னம்மாள் பேசுகிற இலக்கணத் தமிழ் சிற்சில சமயங்களில் அதிக இலக் கணமாய்விடும். ஆனாலும் கற்றறிவில்லாத அவ்வூர்ப் பெண்டிர்க்குக் கமலாம்பாளைக் காட்டிலும் அவள் அதிகமாகப் படித்திருப்பதாக எண்ணம். 

அவள் மறுமொழியைக் கேட்ட சுப்பு என்ற ஸ்திரீ, “உனக்குத் தெரியாதா? சொல்லாமல் போனால் வைத்துக் கொள்ளேன். அடே இழவே, தன்னால் அகத்துக்குப் போனால் தெரிகிறது!” என்று கோபத்துடன் சொன்னாள். 

பொன்னம்மாள், “என்னங்காணும், அவர்கள் கல்யாணத் துக்காகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள், நீர் என்ன இழவு என்கிறீரே!” 

சுப்பு, “நான் இழவு என்றா சொன்னேன்? நன்றாயிருக் கிறது, அம்மா! கலகம் பண்ணி விடுவாய் போலிருக்கிறது!” 

பொன்னம்மாள், “என்ன தங்களுக்கு இவ்வளவு கோபம்? நான் பொழுதுபோக்காக பரிகாசமாகச் சொன்னேன். அவர் கள் வீட்டில் கலியாணம் என்று உமக்கு ஜோஷ்யம் (ஜோதிஷம்) தெரியுமா? அவர்கள் ஏதோ மதுரைப் பட்டண மாம். மைத்துனர் பெண்ணை நிச்சியஸ்ரார்தம் பண்ண வந்திருக்கிறார்களாம்.” 

சுப்புவுக்கு அவர்கள் இன்னார் என்று தெரியும். இருந்தாலும் பொன்னம்மாளைத் தூண்டினால் கமலாம்பாளுக்கும் அவளுக்கும் கலகம் உண்டுபண்ணி வேடிக்கை பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டு மறுபடியும் அவள், “ஓஹோ! உங்கள் புக்ககத்து மாமா வரப்போகிறார் என்றார்களே, அவர் வந்திருக்கிறாரோ? நான் செவ்வையாய்ப் பார்க்கவில்லை. நான் என்ன! அவர்கள் வீட்டிற்கெல்லாம் போகிறேனா வருகிறேனா?” என, பொன்னம்மாள், “அவர்கள்தான் போலிருக்கிறது” என்று நீட்டிச் சொல்லி மெதுவாய் சூள் கொட்டிவிட்டு மௌனமாயிருந்தாள். 

சுப்பு, இதுதான் சமயம் என்று கண்டு, “என்ன! போலிருக்கிறது என்கிறாய், உன் புக்ககத்து மாமா உன் அகத்துக்கு வரவில்லையோ? உனக்கென்ன அவரைத் தெரியாதா? நிரம்ப நல்ல பிராமணன்.” 

பொன்னம்மாள்: “எங்களகத்துக்கு வரவேண்டும் என்று எந்த சாஸ்திரம் முறையிடுகிறது? உலகத்தில் நல்லவர்களுக் கென்ன பஞ்சமா! அதுவும் இப்பொழுது வரமாட்டார். மனிதர்களுக்குள்ள நல்ல புத்தி இல்லாவிட்டாலும் அவர் களுக்குள்ள அச்சம் சுலபத்தில் போகிறேன் என்கிறதா?” 

(நிச்சியதார்த்தம் என்பது சரியான வார்த்தை. பொன்னம்மாள் சம்ஸ்கிருதம் பேசுகிற பெருமையில் வார்த்தை களின் வித்தியாசம் தெரியாமல் ஒன்றை ஒன்றாக மாற்றி யிருக்கலாம். அல்லது விஷமமாக ‘ஸ்ரார்தம்’ என்று அமங் கலமாய்ச் சொல்லியிருக்கலாம்.)

சுப்பு: “அதென்ன? அப்படி என்ன வந்துவிட்டது! ஓஹோ! அவர்தானோ லட்சுமியை மதுரையிலே கொடுக்கக் காரணம்? என்னடி! இப்படித்தான் செய்யலாமோ? நீயும் உன் ஓர்ப்படியாளும் இருக்கிற நேசத்திற்கு சிவனே என்று உன் தம்பி பிள்ளைக்குக் கொடுத்துவிடலாம். அவர்களுக் கென்ன, ஸ்திதியில்லையா, மதியில்லையா?” 

பொன்னம்மாள்: ”அவர்களுக்கேது ஸ்திதியும் மதியும். இவர்கள் வீட்டு வாசலிலேதான் இராப்பகலாகச் சோற்றுக் குக் காத்திருக்கிறார்கள். அவர்கள் வீடுகளிலெல்லாம் இவர் கள் ஏற்றிவைத்த விளக்குத்தான் பிரகாசம் என்று வடக்கே யெல்லாம் பிரஸ்தாபம். நான் ஒருத்தி இங்கே வந்து அகப் பட்டுக் கொண்டது போதாதா? இந்தப் பட்டிக்காட்டில் சம்பந்தம் செய்யாவிட்டால் ஊர்களில் அவர்களுக்கும் பெண்கள் கிடையாது, பாவம்! குழந்தை பெண்ணும் அழகில் ஊர்வசி!” 

இதுவரையில் நடந்த சம்பாஷணையை எல்லாம் காது கொடுத்துக் கவனித்துக் கேட்டிருந்த நாகு என்ற ஒரு ஸ்திரீ: ‘பணமாம் பணம். இந்த ஊருக்குத்தான் அதிசயம். ‘ஆலை யில்லாவூரில் இலுப்பைப்பூ சர்க்கரை.’ பொன்னம்மாள் மருமகனுக்குக் கொடுத்தால் என்ன! அடடா, இல்லை, வைத்துக் கொள்ளட்டுமே. (பொன்னம்மாளைப் பார்த்து) நீ தான் எழுதிவிடேன், இவ்விடத்து சம்பந்தம் வேண்டா மென்று உன் உடன்பிறந்தானுக்கு” என்றாள். 

அதற்குப் பொன்னம்மாள், சூ, இத்தனை நாள் தாமதமா? அன்றைக்கே டெலகராப் அடித்து விட்டேனே! 

சுப்பு: (தன் மனதுக்குள் ‘எத்தனை செருக்கு! தலை கழுத்திலே நிற்கவில்லை’ என்று சொல்லிக்கொண்டு) “முத்துஸ்வாமி உங்கள் பேரில் வைத்திருக்கிற அபிமானத் துக்கு, ஜாதகம் பொருத்தமில்லையாம். இல்லாவிடில் உன் மருமகனுக்கே பெண்ணைக் கொடுப்பான்.”

நாகு: “ஆமாம், ஜாதகம் ஒரு சாக்கு. சகுனத்தைப் பார்த்து எத்தனை இடங்களில் நடக்கவில்லை? என்னமோ ‘வைத்தியன் பெண்டாட்டி சாகிறதில்லை, வாத்தியார் பெண் அறுக்கிறதில்லை’ என்ற சம்பந்தமாய் இருக்கிறது. மனம் கொண்டது மாங்கல்யம். மனப்பொருத்தம் இருந்தால் எல்லாப் பொருத்தமும் இருக்கும். நேற்று மீனாட்சிசுந்தரம் பெண்ணை சங்கரம் பிள்ளைக்குக் கொடுக்க என்ன ஜாதகத்தைப் பார்த்தார்கள்? ஓஹோ என்று கல்யாணம் நடக்கவில்லையா? அவர்களுக்கு என்ன குறைவு! நொண்டிக் கழுதைக்குச் சறுக்கினது சாக்கு!”

பொன்னம்மாள்: “வெள்ளைக்காரர்களுக்குள் ஜாதகந்தான் பார்க்கிறார்களோ?”

சுப்புவும் நாகுவும் : “ஆ! அவர்களும் ஜாதகம் பார்க் கத்தான் பார்ப்பார்கள்.”

பொன்னம்மாள் : (இவர்களுடைய மூடத்தனத்தைக் கண்டு சிரித்துக்கொண்டு) “அவர்கள் ஜோஷ்யத்தையே நம்புவதில்லை.” 

நாகு: “ஸோஸ்யம் அவர்களுக்குத் தெரியாதா?” 

பொன்னம்மாள்: “ஸோஸியமா!” என்று இடி இடி என்று சிரித்துவிட்டு “ஜோஷ்யம் (ஜோஸ்யம் அல்லது ஜோதிஷம் என்பது சரியான பதம்) என்று சொல்லுவார்கள். நீங்கள் பேசுவது சூத்திரப் பேச்சாயிருக்கிறதே!” 

நாகு கொஞ்சம் வருத்தத்துடன், “நாங்கள் படியாதவர்கள். எதோடு கூட்டு!” என்றாள். 

உடனே சுப்பு பொன்னம்மாளைப் பார்த்து, “அது கிடக்கட்டும். இப்போது தான் என்ன, ஒரு சகுனத்தைப் பார்த்து உன் மருமகனுக்கே கட்டிவிடலாமே!” 

பொன்னம்மாள் : “ஊரிலுள்ள தெய்வங்களுக்கெல்லாம் நமஸ்காரம். இனி ஸர்வதேவ வேண்டாம். ஆயிரம் பொன் கொடுத்துப் பெண்ணைக் கட்டினாலும் வேண்டாம்; அப்படி மானம் கெட்டவர்களல்ல நாங்கள்.” 

சுப்பு: “உன் அகமுடையானிடம் சொல்லி ஏற்பாடு செய்தால் செய்யலாம்.” 

பொன்னம்மாள் : “ஆ, எவ்வளவடா என்றாளாம். நான் சொல்லி இவர்கள் கேட்கிறதும் தம்பி சொல்லத்தான் அண்ணா கேட்கிறதும், என்னமோ சொன்னாப்போலிருக்கிறது. இவர்கள் யாரோ, அவர்கள் யாரோ!” 

நாகு: “அதென்ன அப்படி சொல்லுகிறாய், முத்துஸ் வாமி அப்படி நினைப்பவனல்ல. உன் பிள்ளை சுந்தரத்தைக் கண்ணுக்குக் கண்ணாய் வளர்க்கிறானே, காற்றடிக்க சகிக்கிற தில்லையே !” 

பொன்னம்மாள் : “அதற்கென்ன! பிள்ளை வேண்டியிருக்கிறது. சுவாமி கண் விழித்துப் பார்க்கவில்லையே, அதற்கு யாரிடம் முட்டிக் கொள்வது. என் பிள்ளையைக்கூட செல்லம் கொடுத்து, தாய்க்குப் பிள்ளையாகாமல், ‘கைம்பெண் வளர்த்த கழிசறை’ எனக் குட்டிச் சுவரிலும் கேடுகெட்ட வனாகச் செய்தாயிற்று!” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு அரை வார்த்தையாய் ‘புருஷக் கைம்பெண்’ (கைம்பெண்- விதவை) என்றாள். எனவே சுப்புவுக்கு வந்த சந்தோஷத்திற்கு அளவு இல்லை. ‘இப்படிப்பட்ட வார்த்தைக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்தேன்’ என்று எண்ணிக்கொண்டு துணி மூட்டைகளைக் கட்டிச் சுருட்டிக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள். 

வீட்டில் குடத்தை இறக்கினதுதான் தாமதம். ஈரப் புடவையுடனே ஒரு எருமுட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு கமலாம்பாள் வீட்டை நோக்கி அடுப்பு நெருப்புக்காகப் புறப்பட்டாள். யதார்த்தத்தில் தன் வீட்டிலேயே நெருப்பு இருந்தது. ஆனால் பொன்னம்மாள் சொன்ன வார்த்தைகளைக் கமலாம்பாளிடம் ஒன்றுக்குப் பத்தாய்ச் சொல்லவேண்டியது அதிக அவசியமாயிருந்தது. 

– தொடரும்…

– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.

– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.

– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *