(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.
அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30
25 – இங்கற்றவர்க்கு அங்குண்டு விஸ்வரூப தரிசனம்
முத்துஸ்வாமியய்யர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாதொரு காரணமும் புலப்படவில்லை. திடீரென்று அவ்வேளையில் நிஷ்காரணமாக இவ்விதம் சப்தம் கேட்கவே அவருக்கு வெகு பயம் உண்டாய் விட்டது. கழுத்துச் சுருக்கை நழுவ விட்டுவிட்டார். கை கால்கள் நடுங்கின, நெஞ்சும் மார்பும் பதைபதைத்தன, உடல் முழுவதும் மயிர்க்கூச் செறிந்தது. தன்னறிவில்லாமலே கையைத் தட்டி வெளியே ஓடிவிட எத்தனித்தார். அதற்குள் மறுபடியும் ‘முத்துஸ்வாமி பயப்படாதேயடா பயித்தியக்காரா. இப்படித்தான் பயப் படுவார்களா!’ என்று வெகு குளிர்ச்சியான ஓர் சப்தம் கேட்டதுமன்றி அம்மண்டபம் முழுதும் திடீரென்று ஹேம தூமத்துடன் கூடிய பிரகாசம் ஒன்று தோன்றிற்று. அந்தப் பிரகாசத்தின் மத்தியில் ஓர் உயர்ந்த சிலா விமானத்தின்மீது யாரோ திவ்விய மங்கள ஸ்வரூபத்தையுடைய மகா புருஷர் ஒருவர் தனது இடது திருக்கரத்தால் செவ்வானம்போல் சிவந்து அழகிய மனோகரமான சடாபாரத்தையுடைய தனது உத்தமாங்கத்தை ஏந்தித் தாங்கிக்கொண்டு மற்றோர் கரத்தை முழந்தாள் மட்டும் தீர்க்கமாக நீட்டி க்ஷுராப்தியில் ஆதியந்தமில்லாத ஜகந்நிவாசராகிய சாக்ஷாத் பகவான் லட்சுமி சமேதராய் அனந்த சயனத்தின்மீது அரிதுயிலில் அமர்ந்ததுபோல வெகு கம்பீரமாய் அமர்ந்திருந்தார்.
ப்ரஸாதஸமுகே தஸ்மின் சநத்ரேச விசதப்ரபே
ததாசக்ஷஷ்மதாம் ப்ரீதீராஸீ த்ஸமரஸாதவயோ:
என்றபடி அன்புமயமாய் விளங்கிய அவருடைய முகமானது குளிர்ந்த மிருதுவான காந்தியையுடைய இளஞ் சந்திரனைப் போல யாவருக்கும் பிரீதியையுண்டுபண்ணத்தக்க அற்புத மான ஓர் வசீகர சக்தியைப் பெற்றிருந்ததுமின்றி பரிசுத்த மான ஜலத்திற் பிறந்து பூச்சி புழுக்களால் ஹிம்சிக்கப்படாது வேதாந்த உபமானங்களுக்கிடமாகும்படி குளிர்ந்து, பரந்து, பசந்து, பற்றற்று, மயங்காது அனுபவிக்கும் இலைகளின் மத்தியில் உத்தம வாழ்க்கையின் லட்சண பூர்த்தியாய், கம்பீரமான புருஷச் சாயையுடன் மேல்நோக்கி மலர்ந்து மந்தமாய் ஆடும் அழகிய தாமரைப் புஷ்பத்தைப்போல நிர்விசாரமும் சற்சம்சர்க்கமும், பரிசுத்தமும், கௌரவமும் மிருதுத்துவமும், அழகும், உயர்குடிப் பிறப்பும், உற்சாகமும் ஒருமித்து, உறவாடி, நகையாட மலர்ந்து விளங்கி நின்றது. அவருடைய உயர்ந்த மண்டையும், விசாலமான நெற்றியும், அவருடைய நெருங்கிய புருவங்களும் சற்றுத் தாழ்ந்த கபோலமும் ஞானத்தையும் அதனாலுண்டாகும் சாந்தத்தை யும் காட்டின. அவருடைய சிவந்து இடைவிடாது புன்னகை தவழ மலர்ந்த அதரப்பிரதேசம் ததும்பிப் பெருகும் அவருடைய ஆனந்தத்தை யுணர்த்திற்று. அவருடைய கண்களோ வடவிருட்சத்தின் நிழலைப்போல் தம்மையணுகி வந்தவர் அனைவருக்கும் அற்புதமான குளிர்ச்சியை உதவி அலையெறிந்து ஒழுகும் கருணா சமுத்திரங்களாயிருந்தன.
முத்துஸ்வாமி அய்யருக்குத் திடீரென்று தோன்றிய இத்தோற்றத்தைக் கண்டதால் உண்டான பயமெல்லாம் இந்த மகா புருஷருடைய முகத்தாமரையைத் தரிசித்தவுடன்
புஷ்பங்களுள் ராஜா தாமரை. ரோஜாவும் அல்லியும் ராணிகள். ரோஜாவின் பளபளப்பு தாமரைக்கில்லை. தாமரையின் கம்பீரம் ரோஜாவுக்கில்லை. தாமரையின் அழகு புருஷனுடைய அழகு. ரோஜாவின் அழகு ஸ்திரீயின் அழகு. தாமரை பூஜா யோக்கியம்; ரோஜா பூஷண யோக் கியம்.யானை,கருடன். தாமரை ஒரு வர்க்கம். தாமரையின் குணம் கல்யாண குணம். ரோஜாவின் குணம் நாயகி நாயக ரது ஸரஸ ஸல்லாப குணம். தாமரை பரிசுத்தத்துக்கும், ரோஜா அழகுக்கும் விசேஷம். தாமரையின் வாசனை புருஷ னுடைய வாசாலகம், ரோஜாவின் வாசனை ஸ்திரீயின் வாசா லகம். ரோஜாவும் அல்லியும் முறையே உத்தானுபாத ருடைய மலைவிமார் சுனீதி சுருசியைப்போல்.
சூரியனைக் கண்ட இருள்போலப் பறந்துபோய்விட்டது. சாட்சாத் பரமசிவனே பூர்வம் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வலியத் தடுத்தாட்கொண்டது போலத்தன்னையும் தடுத்தாட் கொள்ள இவ்வித இனிய ஸ்வரூபத்துடன் எழுந்தருளினார் போல் அவருக்குத் தோன்ற, அவர் ஆனந்த பரவசராய்ச் சிரமேற் கரங்கூப்பி சுவாமி நான் செய்தது அபவாதம், மன்னிக்கவேணும் சுவாமி, அடியேனுக்கு ஒன்றும் தெரிய வில்லை. சித்தம் பிரமித்து மயங்குகிறது, நான் பண்ணினது அபராதம், க்ஷமிக்க வேணும்’ என்று வாய்குழறச் சொல்லிச் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தார். சுவாமிகள் முத்துஸ்வாமியய்யரைத் தன்னருகே வரச்சொல்லி பலமாய் ஆசீர்வதித்துத் தனது வலது திருக்கரத்தால் அவரைத் தடவிக்கொடுத்து, குளிர்ந்த பார்வை சாதித்துப் பிறகு ‘பயித்தியக்காரன், குழந்தை, ஒன்றும் தெரியவில்லை; அவசரப்படுவார்களா அப்பா, பொறுத்துக்கொள். அதைக் காட்டிலும் மேலானதாய் நாம் இந்த உலகத்தில் செய்யக் கூடியது ஒன்றும் இல்லையப்பா; உண்டு என்று சொல்வதற்கும் நமக்கு அதிகாரமில்லையடா; சாயந்திரம் சந்தியாவந்தனம் பண்ணினாயோ அப்பா முத்துஸ்வாமி!’ என்று வெகு மிருது வாய்க் கேட்க, முத்துஸ்வாமியய்யர் அதிக வெட்கமடைந்து தலையைக் கீழே தொங்கவிட்டு மௌனமாய் நிற்க, சுவாமி கள் ‘கோயிலில் பொற்றாமரையிருக்கிறது; அங்கே போய் சந்தியாவந்தனம் பண்ணி ஜெபம் பண்ணி விட்டு வா ; தைரியமாயிரு. பயப்படாதே!’ என்று சொன்னார். முத்து ஸ்வாமியய்யரும் அப்படியே எழுந்து மறுபடியும் நமஸ்கரித்து, ‘திரும்பி வருவதற்குள் சுவாமிகள் எங்கே மறைந்து விடுகிறாரோ, நாம் இன்னும் அவரைச் செவ்வையாய் அறிய வில்லையே’ என்ற சந்தேகத்தை மனதில் வைத்து சுவாமி களுடைய திவ்யமங்கள ஸ்வரூபத்தில் ஈடுபட்டவராய் அப் பரிசுத்தக் காட்சியினின்றும் கண்களைப் பறிக்கமாட்டாமல் மயங்கி நிற்க, சுவாமிகள் ஒன்றும் யோசிக்காதே, போ. போய் விட்டுச் சீக்கிரம் வா ! வேறு எங்கேயும் தங்காதே!’ என்று கட்டளையிட, முத்துஸ்வாமியய்யர் திரும்பித் திரும்பிப் பார்த் துக் கொண்டு பொற்றாமரைக் குளத்தை அடைந்து ஜலத்தைப் பார்த்தார். அது வெகு தெளிவாயிருந்தது.அதில் நட்சத் திரங்கள் தெரிந்தது. ‘தெளிவான மனதுக்கு சுவாமியும் இப்படித்தான் தெரியுமோ என்று சொல்லி நிமிர, உலக விசாரங்கள் ஒன்றுமில்லாமல் நம்மைப் பார்த்தும் பரிதபிக் காது நமது அஞ்ஞானத்தைக் கண்டு புன்சிரிப்புச் செய்யும் மேதாவிகளாகிய நட்சத்திரங்களைக் கண்டார். கண்டு ‘அடா, இழவே உங்கள் மௌனந்தான் என்ன மெளனம் ! மனிதன் இங்கே கிடந்து சாகவும் மாட்டாமல், பிழைக்கவும் மாட்டா மல் திண்டாடுகிறான், என்ன நிர்விசாரம் உங்களுக்கு !’ என்று சொல்லி ‘சாகவுங்கூட நமக்குச் சரிப்படவில்லையே, உயிரை விட்டு ஓடிப்போய்விடுகிறேன் என்றால் அதற்குமா தடை! நமக்கு இன்னும் என்ன அனர்த்தங்கள் பாக்கி யிருக்கிறதோ! என்னவோ! இன்னும் பார்ப்போம். இந்த மகா புருஷர், அவர் யார், நாம் யார்? எப்படிக் கொண்டுவந்து சேர்த்திருக் கிறது. சுவாமி இல்லை யென்று சொல்லவும் கூடுமா! நாம் பாவம் பண்ணிக் கஷ்டப்பட்டால் அதற்குக் கடவுளா பாத்தியம். புகல் முழுவதும் என்ன அக்கிரமமான வார்த்தைகளைச் சொல்லி அபசாரப்பட்டேன். சுவாமி நீ இல்லை என்று சொல்ல நானா அருகன்? உன் கோயிலில் இடி விழ என்று வைததும் நான்தான்! உன் மாயை தெரிய வில்லை என்று வாழ்த்துவதும் நான்தான். எனக்கு ஒன்றும் தெரியவில்லை.உன் செய்கை விசித்திரமாயிருக்கிறது. சுவாமி. நீதான் காப்பாற்றவேணும்’ என்று பிரார்த்தனை செய்து கடவுளைப் பல மூர்த்தங்களாலும் தன் மனதில் ஆவாஹனம் செய்துகொண்டு சந்தியாவந்தனத்தைப் பக்தி வைராக்கியத் துடன் அட்சரமட்சரமாய் உச்சரித்து அர்க்கியாதிகளுடன் நியமப்படி முடித்து, ‘ஐயோ உன் ஸ்வரூபந்தான் என்ன ஸ்வரூபம்! உன் மகிமைதான் என்ன மகிமை! இந்த மேகங் கள், இந்த நட்சத்திரங்கள், மரங்கள்; மனிதர்கள், எல்லோருக்கும் நீதான் அதிபதி. எல்லாமுன்னடிமையே எல்லா முன்னுடைமையே யெங்கணும் வியாபி நீ’ என்று சிந்தித்து ‘யாரே உன் மகிமையை அறிந்து பூஜிப்பார். எங்கும் நிறைந்திருக்கிற உன்னை நான் எப்படி அர்ச்சிப்பேன்!
‘பண்ணேனுனக்கான பூசையொருவடிவிலே
பாவித்திறைஞ்சவாங்கே
பார்க்கின்ற மலரூடுநீயே யிருத்தியப்
பனிமல ரெடுக்க மனமு
நண்ணேனலாமலிரு கைதான்குவிக்கவெனி
னாளுமென்னுளநிற்றி நீ
நான் கும்பிடும் போதரைக் கும்பிடாதலா
னான் பூசைசெய்ய முறையோ!
விண்ணே விணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்ககேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தே யவித்தின் முளையே
கண்ணே கருத்தே யெனெண்ணே யெழுத்தே
கதிக்கான மோனவடிவே
கருதிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே!’
என்று வாய்விட்டுப் பாடியுருகி, காயத்திரி ஜெபத்துக்கு ஆரம்பிக்க, அத்தருணத்தில் கணார், கணார், கணார் என்று கோயில் அர்த்தசாம மணியடித்தது. நிசப்தமான ராத்திரி சமயத்தில் கட டலோசை போன்ற கம்பீரமான அந்த மணி முழக்கம் காதில் பட்டவுடன் முத்துஸ்வாமியய்யர் மயிர்க்கூச் செறிந்து புளகாங்கித்து ‘ஐயோ உன் மகிமைதான் என்ன மகிமை’ என்று சொல்லமாட்டாமல் சொல்லி ஆனந்தித்து உன் பாதம் எனக்கில்லையோ; நான் எப்போது உன் கருணைக்கு உரித்தாவனோ; என் மனக் கவலையை ஒழிப்பது உனக்கருமையோ’ என்று உலக ஞாபகமழிந்து உருகி மெய்ம் மறந்து, நைந்து, ஏங்கி, இரங்கி, கடுகைத் துளைத்துக் கடலை யடைத்தது போல சர்வோத்கிருஷ்டமான சகல வேதாந்த தத்துவங்களையும் ஒருமித்து உருட்டித் திரட்டிச் சாரசங்கிரஹ மாகச் செய்யப்பட்ட ‘ஓம்’ என்ற மூலப்பிரணவ மந்திரத்தை உச்சாரணம் செய்யும்பொழுது, இவருடைய பிராந்தியோ அல்லது குரு தரிசன விசேஷமோ அறியேன் – திடீரென்று பூமி முதல் ஆகாயம் மட்டும் நிலவினும் இனிதாய், வெயிலினும் காந்தியாய், தென்றலே உருவுகொண்டு வந்தாற் போல ஜில், ஜில், ஜில் என்று குளிர்ந்து மந்தமாய் அசைந்து ஆடும் ஒரு திவ்ய தேஜஸானது இடைவெளியற்று எங்கும் பரந்ததுபோல் அருக்குத் தோன்றிற்று. அவ்வாறு தோன்றிய அந்தத் தேஜோ மகிமையில்,
ஆறெலாங் கங்கையாய வாழிதாம்
கூறுபாற் கடலையே யொத்த குன்றெலாம்
ஈறிலான் கைலையே யியைந்த.
எந்தச் சிறு நதியும் கங்கா நதியினுடைய கௌரவத்தை யடைந்து பகவான் நாம் பஜனையைச் செய்துகொண்டு சென்றது. சமுத்திரமோ தனது சோகத் தொனியை மறந்து சாக்ஷாத் பகவானுடைய சயன ஸ்தானமாகிய க்ஷுராப்தியைப் போல விளங்கி, அந்தப் பகவானுடைய குணங்களை விஸ்தரிக்கக் கம்பீரமான தனது குரல்கூடக் காணாது ‘அன்பெனும் நறவமாந்தி,’ ‘முங்கையான் பேசலுற்றான்’ என்றபடி கட் குடித்த ஊமை பேசத் தொடங்கினாற் போலக் கைகளையெல்லாம் நீட்டிச் சொல்லமாட்டாமற் சொல்லி ஆனந்தித்தது.மலைகளெல்லாம் சாக்ஷாத் கைலாச பர்வதத் தைப்போலக் காம்பீரியத்தை யடைந்து கடவுளினுடைய ஆலயங்கள்போல நின்றன. மரங்களெல்லாம் நூதனமான பசிய இலைகளை ஆடையாக உடுத்துத் தேன் தெளித்துத் தாது தூவி வசந்தமாடின. புஷ்பங்களோ பகவத்தாராதன் மஹோற்சவத்தைப் பரிமளிக்க, அரம்பையர் விசும்பினாடு மாடலினாடின. பட்சிகளெல்லாம் உலகையிகழ்ந்து உயரப் பறந்து விஞ்சையர் குழாமென விசும்பிடை நின்று கடவுளையே
*அன்று பகல் முழுவதும் கடவுளை நிந்தித்துக்கொண் டிருந்த அவருக்கு அவ்வளவு பக்தி எவ்விதம் உண்டாகும் என்று சிலர் சங்கிக்கலாம். ஆனால் சுபாவத்தில் அவர் வெகு பக்திமான் என்று முன்னமேயே பலமுறை சொல்லப்பட்டிருக் கிறது. அன்று வந்த நாஸ்திக வெறுப்பு மத்தியில் வந்ததோர் ஜ்வரம் போல. ராமர்கூட சீதையைப் பிரிந்த காலத்து அறத்தினாலினி யாவதென, தர்மத்தினால் இனி யென்ன் பிரயோசனம் என்று பலமுறை புலம்பவில்லையா?
நோக்கிக் கானம் செய்தன. காற்று கந்தப்பொடிகளைத் தூவிக் கானத்தால் உலகை நிரப்பி எங்கும் பரவி எல்லோரையும் திருப்தி செய்து பகவதாராதன மங்கள காரியாதிபனாய் விளங் கிற்று. மிருகங்கள் தத்தம் வைஷம்யங்களை மறந்து வாலை யுயர்த்தி நாலு காலாலும் துள்ளித் துள்ளி ஓடின. கேவலம் மனிதனும்கூட தரையையே மோந்து, தரையையே பார்க்கும் பன்றிப் பார்வையைவிட்டு மேனோக்கி மதிமயங்கி,
அன்பெனுமாறு கரையதுபுரள
நன்புலனொன்றி நாதவென்றரற்றி
உறைதடுமாறி உரோமஞ்சிலிர்ப்ப
கரமலர்மொட்டுத் திருதயமலர
கண்களிகூர நுண்டுளியரும்ப,
இட டரைக்களையு மெந்தாய்
போற்றி ஈசாபோற்றி யிறைவாபோற்றி
அரசேபோற்றி அமுதேபோற்றி
முத்தாபோற்றி முதல்வாபோற்றி
அருமையிலெளிய அழகே போற்றி
கருமுகிலாகிய கண்ணேபோற்றி
என்று போற்றிப் போற்றித் துதித்துக் கொண்டாடினான்.
பூலோகத்துப் பூஜாரீதியிப்படியிருக்க ஆகாயத்திலோ ஆதித்தர், வசுக்கள், மருத்துவர், திக்குப்பாலகர் முதலிய தேவர்களும் அகஸ்தியர், ததிசி, பிருகு, மார்க்கண்டர், வசிஷ்டர், பாரத்துவாசர் முதலிய முனிவர்களும், யட்சகர், கந்தருவர், இயக்கர், வித்தியாதரர், கின்னரர், கிம்புருடர் முதலிய கணங்களும் மின்னற்கொடி போலவும், இந்திர தனுசைப் போலவும், பளீர் பளீர் என்று மின்னிக்கொண்டு கூட்டம் கூட்டமாக நிற்க, தும்புருநாரதாதிகள் சுரபத், வீணை, தம்பூரு முதலிய வாத்தியங்களைக் கொண்டு ஓம் ஓம் என்ற ஓங்கார சுருதியையே சுருதியாகக்கொண்டு தேவகானம் செய்ய, சூரிய, சந்திர, நட்சத்திரங்களாகிய அகிலாண்ட கோடிகளும் தத்தம் பெரிய ரூபங்களுடன் ஒழுங்காய் ஒன்றை யொன்று அனுசரித்துக் கண்ணெட்டிய தூரமட்டும் வச்சிரம் வைடூரியம், மரகதம், மாணிக்கம், பச்சை, கோமேதகம், நீலம், பவளம் முதலிய பற்பல வருணங்களாய்ப் பிரகாசித்துப் பகவானை நோக்கி அமிர்தமயமான கானத்தைச் செய்து ஓர் பயங்கரமான அழகுடன் வெகு கம்பீரமாய் உருள, இவை யெல்லாவற்றிற்கும் மேல் சகல லோகத்துக்கும் காரணனாய், சகல லோகத்துக்கும் நாயகனாய், சர்வலோக சரண்யனாய், நித்தியனாய், நிர்மலனாய், பெருமையினும் பெருமையாய், இனிமையினுமினிமையாய், அநேக கோடி சூரியர்கள் ஏக காலத்து உதித்தாற்போல பார்க்கப் பதினாயிரங் கண்களும் போதாத அபரிமிதமான ஜோதி ஒன்று தோன்றுவதை முத்துஸ்வாமியய்யர் கண்டார். தனது கண்களால் கண்டு ாதாதிகேசம்வரை மயிர்க்கூச்செறிந்து, புளகாங்கித்து, ஆ! என்று திறந்த வாயும், இமையாது விழித்த கண்ணுமாய் ஆனந்த சாகரத்தில் மூழ்கி, மதிமயங்கி, மெய்ம்மறந்து, பரவசமாய்ப் பிரமித்தும் ஸ்தமித்தும் நிற்க, காட்டி யொளிக்கும் மின்னல்போல் ஒரு கணத்துள் மறைந்தது அக்கரையில்லாக் காட்சி. மறைந்தும் நெடுநேரமாக முத்து ஸ்வாமியய்யருக்கு உணர்ச்சி வரவில்லை. உணர்ச்சி வந்த வுடன் ‘கண்டேன் கண்டேன் காணாததைக் கண்டேன்” என்று மகிழ்ந்து,
மண்ணாதிபூதமெல்லாம் வைத்திருந்த நின்னிறைவை
கண்ணாரக்கண்டு களித்தேன் பராபரமே
மண்ணுமறிகடலு மற்றுளவு மெல்லாமுன்
கண்ணிலிருக்கவுநான் கண்டேன் பராபரமே.
‘ஆதியநாதியுமாகி எனக் கானந்தமா யறிவாய் நின்றிலங்குஞ் சோதி மெளனியாய்த் தோன்றி-அவன்-சொல் லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி-சங்கர சங்கர சம்பு – சிவ- சங்கர சங்கர சம்பு.’
என்று ஆனந்தக் களிப்புற்று வாயில் வந்தபடி யெல்லாம் பாடி மண்டபத்தை யடைந்து சுவாமிகளைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து அவரது திருவடித் தாமரைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு,
தங்காமல் வந்தொருவன் தற்சொருபங் காட்டி யெனை
கொள்ளைப் பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம்
கள்ளப் புலனறுக்கக் காரணமாய் வந்தாண்டி
என்று அவரைப் பாடி ஸ்துதி செய்து எழுந்து தான் கண்ட தைச் சொல்லி தேவரீர் யாரோ அறியேன். தங்களுடைய தரிசன விசேஷத்தினாலே தேவர், முனிவர் காணாததைக் கண்டேன், கண்டேன்! என்னுடைய இந்த ஏழைக் கண்களால் கண்டேன். “வேத வேதியர் விரிஞ்சன் முதலோர் தெரிகிலா” ஆதிதேவனை நான் அறிந்தேன். தங்களைத் தரிசித்த பலனைக் கண்டேன். என்னைத் துர்மரணத்திலிருந்து ரட்சித்த தாங்கள்தான் அக்ஞானத்திலிருந்து ரட்சிக்க வேண்டும்,சரணம், சரணம், சரணம்’ என்று மறுபடி அவர் பாதத்தில் நமஷ்கரிக்க, அவர் அவரை எழுப்பி அருகே உட்காரவைத்து ‘இதென்ன மயக்கம், சற்றுமுன் நீதானே “சுவாமியேது, பூதமேது” என்று சொன்னாய்’ என, முத்து ஸ்வாமியய்யர் ‘நான் பண்ணிய பெரிய அபசாரத்தை மண்ணிக்க வேணும். நான் பண்ணினது பாவம்; தெரியாமல் செய்துவிட்டேன். நான் என்ன தவறுதல் செய்தாலும் கடவுள் கிருபை எனக்கு இல்லாமற் போகவில்லை. தங்களைத் தரிசித்த எனக்குப் பெண்டாட்டி,பிள்ளை,தம்பி எல்லாரையும் பறிகொடுத்தென்ன நஷ்டம். என்னுடைய பிறவிப் பாசத்தை ஒழிக்கவேண்டு மென்றே கடவுள் எனக்கு. விசேஷமாக அனுக்கிரஹம் செய்திருக்கிறார். உலகத்தில் விரக்தியை உண்டுபண்ணினது மல்லாமல் தங்களையும் எனக்குக் குருமூர்த்தியாய் அனுப்பியிருக்கிறார். தாங்கள் தான் காப்பாற்றவேணும்’ என்று சொல்லிப் பிரார்த்திக்க, சுவாமிகள் ‘பயப்படாதே, நல்ல நல்ல பூஜையைப் பண்ணி யிருக்கிறாய், பகவான் உன்னிடத்தில் விசேஷ கிருபை வைப்பார். நீ இன்னும் பகவான் விஷயத்தில் கொஞ்சம் பக்தியோடுகூட மட்டும் இருப்பாயா உனக்கு இன்று கிடைத்த ஆனந்த சேவை எக்காலத்தும் கிடைக்கும். நீ இப்பொழுது பகிரங்க பூதமாய்ப் பார்த்த காட்சியை உனக்குள்ளேயே இடைவிடாது நீ தரிசித்து அனுபவிக்கலாம். உன்னை அழைத்துப்போகவே என்னைக் கடவுள் இங்கு அனுப்பியது போலிருக்கிறது. நமக்கு இனிமேல் இங்கே காரியம் இல்லை, போவோம் வா’ என்று ஆக்ஞாபித்து எழுந்து மண்டபத்தை விட்டு வெளியேறி முன்னே செல்ல, முத்து ஸ்வாமியய்யர் ‘இதுவும் ஓர் ஆச்சரியந்தான், நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் என்று முடிக்கிறது. நமக்கு இனி எங்கே போனாலென்ன, — கமலாம்பாள், ஐயோ இப்படியா மோசம் செய்தாய்? சிறுகுளம் நாம் பிறந்ததும், வளர்ந்ததும் – போகட்டும் என்னைப்போல பாக்கியசாலிகள் உலகத்தில் டையாது. அடிமுண்டை, நானோ ஆசிரமம் வாங்கிக் கொள்ளப்போகிறேன் என்று தெரியுமே. அதற்குள்ளேயா அவசரம் – சீ ! இந்த இழவு ஞாபகங்கள் இப்பொழுது ஏன் வருகிறது. ஐயோ, நான் இன்று கண்ட காட்சி அடாடா! என்ன அற்புதம்! என்ன அற்புதம்! ஐயோ அதல்லவோ க்கம். பேரின்பம் என்று நன்றாய்ப் பெயரிட்டார்கள். அந்தப் பாக்கியத்தை நாம் நித்தியமாய் அனுபவிப்போமானால்.
அந்தமுடனாகி யளவாமல் என்னறிவில்
சுந்திரவான்சோதி துலங்குமோ பைங்கிளியே!
கண்ணுள் மணிபோல் இன்பம் காட்டி யெனைப்பிரிந்த
திண்ணியவரும் இன்னும் வந்து சேர்வரோ பைங்கிளியே.’
என்று குதூகலத்துடன் மனதுக்குள் பாடிக்கொண்டு பின் செல்ல, இராப்பொழுதென்ற பயம் சற்றுமில்லாமல் இருவரும் காட்டு மார்க்கமாய்ப் பிரயாணம் செய்தார்கள்.
26 – அழுதலன்றி மற்றயலொன்றுஞ் செய்குவதறியாள்
இங்கே முத்துஸ்வாமியய்யர் நிலைமை நிலைமை இப்படியிருக்க சிறுகுளத்திலோ, கமலாம்பாள் ‘அவர் எப்பொழுது வருவாரோ, எப்பொழுது என் கலி தீருமோ’ என்று ஏங்கி அவர் வரவை எதிர்பார்த்திருந்தாள். ஆருத்திரா தரிசனத்துக்குச் சிதம்பரத்திலிருந்து விட்டுப் பிறகு வருவதாக எழுதி யிருந்ததால் ஆருத்திரா தரிசனம் எப்பொழுது கழியப் போகிறது, நான் எப்பொழுது அவர் முகத்தைக் கண்டு களிப்பேன் என்று இருந்தது அவளுக்கு. ஒரு நாள் போகிறது. ஒரு யுகமா யிருந்தது. உடல் சோர்ந்து, ஒரு காரியமும் ஓடாமல், கொட்டாவி விட்டு நாட்களைக் கழித்தாள். தன் பர்த்தாவின் கடிதத்தில் பணம் திருப்பப்பட்டது என்று எழுதப்படாததினால் ‘பணம் போனதுதான். அது போனால் போகிறது, அவராவது க்ஷேமமாய் வந்து சேரவேண்டும். என்று கவலைப்பட்டாள். ‘தன் கணவர் வந்த பிறகு தரித் திரத்தின் கொடுமையை அவர் உணராதபடி நாம் பார்த்துக் கொள்ளவேண்டும். அவர் இதுவரை அனுபவித்துவந்த. சுகங்களுக்கு யாதொரு விஷயத்திலும் குறைவு வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அதற்கு வேண்டிய ஆலோசனைகளெல்லாம் செய்துகொண்டிருந்தாள். ‘வீடு இன்ன விலைக்குப் போகும், கொலுசு, காப்பு, ஓலை இன்ன இன்ன விலைக்குப்போகும், முருகு இன்ன விலைக்குப் போகும். காரையும் அட்டிகையும் என்ன குறைந்தாலும் இந்த விலைக்குப் போகும்’ என்று தன் மனத்துக்குள்ளேயே விலைக ளெல்லாம் திட்டம் செய்துவிட்டாள். அந்த ஊரிலேயே ஒரு சிறு வீட்டை வாங்கி விடுவதாய்த் தனக்குள் தீர்மானம் செய்துகொண்டு ஆற்றங்கரைக்குப் போகும்போது வரும் போதெல்லாம் ‘இதுதான் நம்முடைய அகம்’ என்று அதை அன்புடன் கூர்ந்து நோக்கி ‘ஏன், இந்த வீடு போதாமல் என்ன, கொல்லையிலே கீரைப்பாத்தி போடலாம், கறிகாய் விலைக்கு வாங்குகிறது என்றால் நமக்குக் கட்டி வருமா? சுவரிருக்கிறது சாணம் தட்டலாம். வீடு கூட்டக் கூட வேண்டாம், நாமே பெருக்கி மெழுகிக் கொள்ளலாம்’ என்று இப்படி யெல்லாம் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தாள். ‘பர்த்தா வந்தவுடன் அவரை இறுகக் கட்டிக கன்னம் வீங்க முத்தமிட்டு என் நகைகளை அவர் கையில் கழற்றிக் கொடுத்து விடப் போகிறேன்’ என்றும், சுண்ணாம்பு செங்கல்லால் கட்டிய வீடு போனால் போகிறது, என் அன்பாகிய பெரிய மாளிகையிலே அவரை நான் இறுத்திக் கொள்ளுவேன்’ என்றும் தன் மனதுக்குள்ளேயே பெருமை பாராட்டிக் கொண்டு மற்றவர்களிடத்தில் இதொன்றும் சொல்லாமல் ‘ஸ்திரீ புருஷர்கள் அன்பாய் இருந்தால் அதற்குச் சமானம் உலகத்தில் என்ன இருக்கிறது’ என்று சொல்லிக் காலம் கழித்தாள். தாங்கள் அனுபவித்த சுகங்களை நினைத்து நினைத்துச் சந்தோஷப் பட்டு அதை யெல்லாம் மறுபடி எப் பாழுது அனுபவிக்கப் போகிறோம் என்று துக்கப்பட்டாள். வீட்டிலுள்ள சாமான்களை யெல்லாம் எங்கேயோ பயணம் போகக் கட்டிவைத்தாற்போல் ஒழுங்காய் கட்டிவைத்துக் கொண்டாள். ஆருத்திரா தரிசனத்தன்று ‘சுவாமி, என் பர்த்தாவை என்னிடம் க்ஷேமமாய்க் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்’ என்று கண்ணும் கண்ணீருமாய் ஆழ்ந்த பக்தி யுடன் வேண்டிக் கொண்டாள். அன்று பகலெல்லாம் ‘காக்கை ஓயாமல் கத்துகிறது. அடுப்பு சீறுகிறது, அவர் நாளை வந்துவிடுவார்’ என்று எல்லாரிடத்திலும் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த சந்தோஷத்தில் அவளுக்குப் போன பணம் திரும்பி வந்ததுபோல உடம்பு பூரித்தது. தன் குழந்தை லட்சுமி நல்ல இடத்தில் சேர்ப்பிக்கப்பட்டதைக் குறித்துத் திருப்தியடைந்தாள். திருவாதிரை கழிந்த மூன்றாவது நாள் தன் பர்த்தா வருவாரென்று நம்பி அவருக்கும் சேர்த்து பொழுதுக்கு முன்னேயே வெகு நேர்த்தியாய்ச் சமையல் செய்து வைத்துவிட்டு அவர் வரும் வழியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். வாசலில் வண்டிச் சத்தம் கேட்டால் இதோ வந்துவிட்டார் என்று மயிக் கூச்செறிந்து ஓட்ட மாய் ஓடி வாசலில் போய்ப் பார்ப்பதும், வராததைக் கண்டு மனம் வருந்தி, நடை தளர்ந்து. உயிர் சோர்ந்து, உடல் ஒடுங்கி வெறுப்புடன் கதவைச் சாத்தி மெதுவாய் உள்ளே ருவதுமாய், வாசலுக்கும் உள்ளுக்குமாக ஊசலாடிக் கொண்டிருந்தாள். திடீரென்று அவர் வந்து கதவைத் தட்டுகிறாற்போலச் சத்தம் கேட்கும். வாசலில் அவருடைய வார்த்தைக் குரல் கேட்கிறாற்போல இருக்கும். ஓடோடி வந்து பார்த்துப்போவாள். அவள் உத்தேசப்படி முத்து ஸ்வாமியய்யர் வருவதானால் பத்து மணிக்கே வந்துவிட வேண்டும். மணி 11 ஆகிறது, காணோம்; 12 அடித்தது, 1 மணி, 2 மணி, 3 மணியாயிற்று; அப்பொழுதும் காணோம். நாழிகை யேற ஏற, பாம்பு கடித்த விஷம் ஏறுவதுபோல் கமலாம்பாளுக்கு மனத்துயரம் அதிகரித்தது. ‘வராமலிருக்க மாட்டாரே, வரும் வழியில் என்ன ஆபத்து நேரிட்டதோ, ஒரு சங்கதியும் சொல்வாரில்லையே! பட்ட துன்பங்க ளெல்லாம் போதாதென்று இன்னும் என்ன நேரிட்டதோ! நம்முடைய அதிர்ஷ்டத்துக்கு எல்லாம் வருமே’ என்று கண்ணீர் பெருக்கினாள். ‘ஐயையோ தெய்வமே, உனக்கு இது தர்மமா’ என்று தெய்வத்தை நொந்தாள். சமைத்துவைத்த சோறு அப்படியே கிடக்க, ஒரு திவலை தண்ணீர்கூடக் குடியாமல் தரையில் படுத்துத் தனக்கு நேரிட்ட துன்பங்களை யெல்லாம் நினைத்து நினைத்து, யார் ஆற்றியும் ஆறாது விம்மி விம்மி யழுதாள். அழுது, அழுது கண் சிவந்தது, தலைவலித்தது, முகம் வாடிக் கருகியது. ‘அழுது கொண்டே பிராணனை விட்டு விடுகிறேன்’ என்று புலம்பினாள். ‘ஐயையோ’ என்று கதறித் தீயிலிட்ட புழுப்போலத் துடித்தாள். இப்படி ஒருநாள், இரண்டு நாள், மூன்று நாள், ஒருவாரமாயிற்று. அவர் வரவே யில்லை. ‘இனிமேல் அவர் வருவதேது. இவ்வளவுதான் நான் கொடுத்துவைத்தது-ஐயோ இப்படியா தீரவேண்டும். எங்களுறவு இப்படித் தீர்ந்து போய்விடு மென்று நான் சொப்பனத்திலும் நினைக்கவில்லையே. “நீ எங்கேயாவது போ, உனக்கும் எனக்கும் தீர்ந்தது” என்று சொல்லி உதறித் தள்ளினீர்களே அப்படியே செய்துவிட்டீர்களே, ஐயையோ உங்களை விட்டு நான் எவ்விதம் பிரிந்திருப்பேன். உயிரை விடவும் மனம் துணியவில்லையே. நீங்கள் இருக்கிற இடமாவது எனக்குத் தெரிந்தால், அது எமலோகமானாலும் சாவித்திரியைப்போல நான் துரத்திக்கொண்டு போவேனே. அனாதையாய் இப்படி விட்டுப் போய்விட்டீர்களே. உங்களுக்கு இது தர்மமா! ஐயோ சிதம்பரத்துக்குத் தான் வந்தாரோ வரவில்லையோ. இத்தனை ஆபத்துகளுக்கு அப்புறம் உயிரையும் வை வத்துக்கொண்டிருக்க வேண்டுமா என்று பிராணனையே விட்டுவிட்டீர்களோ? ஒன்றும் தெரியவில்லையே. என்ன செய்வேன். ஐயோ நடராஜா, நீ போனது முதல் நான் படும் துன்பம் இவ்வளவு அவ்வளவில்லை. ஒரு செய்தியும் சொல் வாரில்லையே. நான் என்ன செய்வேன் தெய்வமே! பூமியில் பெண்ணாய்ப் பிறந்து என்னைப்போல் அனுபவிப்பவர்கள் கிடையாது’- என்று புலம்பி யழுது, கீரைத்தண்டு போலத் துவண்டு, தண்ணாய் உருகி, மூர்ச்சையாய்க் கிடந்தாள். அப்படிக் கிடந்து தூங்கிய தூக்கத்தின் மத்தியில் முத்து ஸ்வாமியய்யர் காவி தரித்த ஒரு சந்நியாசி ரூபமாக வந்தது போலவும், வந்து ‘அடி பாவி, இந்தா இந்த மஞ்சளைப் பிடி. நான் ஆசிரமம் வாங்கிக் கொண்டாய் விட்டாது. இனிமேல் இவ்வளவுதான் உனக்கும் நமக்கும்’ என்று சொல்லி வெகு இரக்கமான பார்வையுடன் பார்த்துப் பிறகு மறைந்தது போலவும் அவளுக்குத் தோன்ற, அவள் உடனே கதறி விழிந்தெழுந்து விளக்கேற்றி ‘ஐயையோ சந்நியாசியாகவே போய்விட்டீர்களா? நீர் ஆண்டியானால் நான் ஆண்டிச்சி; உமக்கு ஊழியஞ் செய்து நாய்ப்போலப் பின்தொடர்ந்து வரமாட்டேனா! என்னை அனாதையாய் விட்டுப்போவதும் தர்மமா’ என்று புலம்ப, பக்கத்திலிருந்தவர்கள் ‘என்னடி கமலாம்பாள், ஏனடி அம்மா, என்ன கனாக் கண்டாய்? ஏன் புலம்புகிறாய்? பயப்படாதே. அழாமல் சொல்லு, என்று கேட்க, அவள் தான் கண்ட கனவைச் சொல்லி இன்னும் அதிகமாக அழ, “பயித்தியக்காரி, இப்படித்தான் அழுவார்களா? அதிசயமாயிருக்கிறது! கனாக்கண்டால் அதற் கென்ன இப்பொழுது! அன்றைக்கு அப்படித்தான் சேஷி அவள் அகமுடையான் செத்துப்போய் விட்டதாகக் கனாக் கண்டாள். மறுநாளே அவன் பூதம்போலே எதிரே வந்து நிற்கவில்லையோ; அதற்குக்கூட அவள் அழவில்லையே; அடி பயித்தியக்காரி! நாளை வந்துவிடுவான் பார் உன் அகமுடையான்; நான் சொன்னேன் என்று பாரேன்” என்று ஆற்றினார்கள். கமலாம்பாள் விம்மி, விம்மி யழுதுகொண்டு வாயால் பானம் பண்ணப்பட்ட கண்ணீருடன் “அவர் இனிமேல் இங்கே வருவார் என்று எனக்குத் தோன்ற வில்லை” என்று உடல் நடுங்கிச் சொல்ல, அவர்கள் ஏதோ தங்களுக்குத் தெரிந்த சமாதானங்களைச் சொல்லித் தேற்றினார்கள்.
27 – தன்வினை தன்னைச் சுடும்
மறுநாள் பொழுது விடிந்தது. விடிந்து இரண்டு நாழிகைக் கெல்லாம் மூடப்படாத மொட்டைத் தலையும், வாழை மட்டை, கரண்டிக்காம்பு, நாலித்துணி முடிப்பு, கம்பளிக் கயிறு, எருமுட்டை முதலிய அலங்கார சாமான்கள் பிடித்த கையும், சுண்ணாம்பு பூசிய கன்னமும், மஞ்சள் கீறிய நெற்றியு மாய், ஒரு கைம் பெண் நடு வீதியிலிருந்து ஓடி ஒற்றை வாடை யிலிருந்த சப் – மாஜிஸ்ரேட்டு வைத்தியநாதய்யர் வீட்டுக்குப் போய், “வைத்தியநாதா, வைத்தியநாதா, அடே பைத்திய நாதா!” என்று கூவ, உள்ளே இருந்த வைத்தியநாதய்யர் திடுக்கிட்டு ‘இப்படி யார் நம்மைக் கூப்பிடக்கூடும்’ என்று வாசலில் வந்து பார்க்க, சுப்பிரமணியய்யர் சம்சாரம் பொன் னம்மாள் மேற்சொல்லிய வேஷத்துடன் நின்றுகொண் டிருந்தாள். அவள், “அடே வைத்தியநாதா, என் மைத்துனன் இன்னமே இங்கே வரமாட்டார். நான் யார் தெரியுமா? சுப்பிரமணியய்யர் என்று இருந்தாரோ அல்லவோ அவர் பெண்டாட்டி, அவர் போய்விட்டார். நீ ஆயிரம் ரூபாய் கொடு. தீட்சிதருக்குக் கொடுக்கவேண்டும். எனக்கு மருந்து’ வைக்கத் தெரியுமே. சுப்பம்மாள்கூடப் போயிருந்தாளடா சிதம்பரத்துக்கு. என் மைத்துனர் இங்கே வரமாட்டார் இனி மேல்” என்று சொல்லி திடும் திடும் என்று குதித்து, பிறகு “சுப்பிரமணியய்யர் நல்லவர், செத்துப்போய்விட்டார். நான் கொல்லவில்லை அவரை. நான் கொல்லவில்லை. கண்ணும் விழியும் பார், நீ அடி அவரை, குத்து கரண்டியைக் கொண்டு. கம்பளிக் கயிற்றைக் கொண்டு கட்டி இதோ இந்த வாழை மட்டையைக் கொண்டு அடித்து இந்தத் துணியைச் சுற்று கழுத்திலே, தலையைச் சரை, பார்க்கிறாயா, என்ன பார்வை. ஐயோ என்னழகு துரையே, என்னைக் கெடுத்த ராஜாவே நான் கெட்டேனே, கொள்ளைக் குடுமியிருக்கிறது எனக்கு, நான் நிரம்ப அழகு. எங்கள் அம்மாள் பொல்லாதவள், ராட்சஸி, அவள் வந்துவிடுவாள் உள்ளே போகலாம் வா’ என்று பிதற்றி “நான் உனக்கு ஒரு சங்கதி சொல்லுகிறேன், ஒருவரிடமும் சொல்லாதே” என்று கேட்க, வைத்தியநாதய்யர் ‘ஓஹோ இவளுக்குச் சித்தம ஸ்வாதீனமில்லை. அடடா இப்படியாபோக வேணும்.கொஞ்ச நாளைக்கு முன்னேயே ஏதோ ஒரு மாதிரி யாய் இருப்பதாகச் சொல்லிக்கொண்டார்களே, பயித்தியமே பிடித்துவிட்டதா’ என்று பரிதபித்தார்.
சுப்பிரமணியய்யர் சாகும் சமயத்தில் நடந்த விருத்தாந் தத்தை விஸ்தாரமாகச் சொன்னோம், அவர் நடுராத்திரியில் போன்னம்மாள் கையைப் பிடித்துக்கொண்டு பல்லைக் கடித்து கண்கள் தீப்பறக்க ‘சண்டாளி, ராட்சஸி’ என்று திட்டி அடிக்க வந்தது அவளுடைய ஞாபகத்தைவிட்டு மறையவே யில்லை. அப்பொழுது அவள் நிரம்ப பயந்து போய்விட்டாள். தன் புருஷன் மரணத்துக்குத் தான் காரணமானதால தன்னைப் பிரமஹத்தி சுற்றும என்ற பயமும், அன்று இராத்திரி அவர் விழித்த கோர விழி உண்டுபண்ணின பயமும் அவளுடைய சித்தத்தை நிலைகுலையச் செய்தது. எப்பொழுதும் அதே ஞாபகமாயிருந்ததால் அது அவள் மனதில் ஆழமாய்ப் பதிந்துகொண்டு அவளுக்கு உள்ள இயற்கை அறிவைத் துரத்தி யது. பிறகு, கமலாம்பாளுக்கு விரோதமாய் சங்கரியம்மாளும் சுப்பம்மாளும் சேர்ந்து செய்த துராலோசனைகளும், முத்துஸ்வாமியய்யரை ஊருக்கு வராதபடி செய்த செய்கை யும் அவளுக்குப் பாக்கியிருந்த சித்த ஸ்வாதீனத்தையும் ஒழித்துவிட்டது. ‘தன் வினை தன்னைச் சுடும்’ என்ற சொல் அவளுக்கு நன்றாய்ப் பலித்தது. பொன்னம்மாளுடைய நடத்தை துர்நடத்தையானாலும் அவள் அதற்குத் தக்க. வலிய சித்தமுள்ளவளல்ல. அவளுடைய மனது தன்னுடைய செய்கைகளைத் தனக்கே ஒன்றுக்குப் பத்தாய்க் காட்டக் கூடிய பூதக்கண்ணாடி போன்றது. சில கண்ணாடி விளக்குகள் தீபத்தின் ஒளியை அதிக பிரகாசமாய்க் காட்டக்கூடியதா யிருந்தும் காந்தி மிதமிஞ்சிப் போய்விட்டால் உஷ்ணம் தாங்காது உடைந்து போவதுபோல், அவளுடைய மனதும் சுல பத் தில் உடைந்து போகக்கூடியபடி வலிமையற்றது. அவளுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிற சங்கதியைச் சங்கரியம்மாள் எவ்வளவு மறைத்து வைத்தும் ஊருக்கெல்லாம் தெரிந்து போய்விட்டது. அவள் வீட்டில் தக்க காவலில் வைக்கப்பட் டாள். நூதன விதந்து ஆனதால் புருஷன் இறந்துபோய் ஒரு வருஷமாகும் வரை வெளியே போகக்கூடாதென்ற ஜாதி நிபந் தனையை மீறி அவள் பலமுறை வெளியேற உத்தேசித்ததாலும், வீட்டுக்கு வந்தவர் போனவர்களிடமெல்லாம் பிதற்ற ஆரம் பித்ததாலும், அவளைச் சங்கரியம்மாள் ஒரு தனி உள்ளில் போட்டு அடைத்து நிர்ப்பந்தப்படுத்தினாள். யாராவது பொன்னம்மாள் எங்கே என்று விசாரித்தால் ‘படுத்துத் தூங்குகிறாள். பத்துத் தேய்க்கிறாள்’ அல்லது ‘அவளுக்கு வெளியிலேயே வரப் பிடிக்கவில்லை. உள்ளேயே முக்காடிட்டு அழுதுகொண்டிருக்கிறாள்’ என்று இவ்வித சமாதானங்களைச் சொல்லி மறைத்துவிடுவாள். இவ்விதக் காவலிருந்தும் அன்று ஏதோ தற்செயலாய் கதவு பூட்டப்படாதிருந்ததால் பொன்னம்மாள் அதுதான் சமயம் என்று சந்தடி செய்யாமல் வெளியேறி அந்தத் தெருவில்கூட நில்லாமல் ஒற்றை வீதிக்கு வந்துவிட்டாள். அது காலை சமயமானதால் ஊரிலுள்ள புருஷர்களெல்லாம் ஆற்றங்கரைக்குப் போயிருந்தார்கள். ஸ்திரீகளெல்லாம் வீட்டுக்குள் வேலையாயிருந்தார்கள். பொன்னம்மாளைத் தடுக்க ஒருவருமில்லை. அவள் நேரே வைத்தியநாதய்யர் வீட்டுக்கு வந்து மேலே சொல்லியபடி பிதற்றினாள். வைத்தியநாதய்யருக்கு நடுநாளாய்க் குழந்தை நடராஜனைப் பற்றி அவள் மேலே சந்தேகமுண்டு. மேலும் தன் புருஷனை மருந்துகொடுத்து அவள் கொன்று விட்டாள் என்ற வதந்தி அவருடைய காதுக்கும் எட்டி யிருந்தது. ஆகையால் தன்னுடைய முக்கிய சிநேகிதரான முத்துஸ்வாமியய்யருடைய குடும்ப சரித்திரத்தை அறிய அதுதான் சமயமென்றெண்ணி, அவர் உள்ளே ஒருவரையும் விடவேண்டாமென்று கண்டிப்பான உத்தரவு கொடுத்துச் சேவகர்களை வாசலிலே நிறுத்திவிட்டுப் பொன்னம்மாளைத் தொடர்ந்து உள்ளே செல்ல, அவள் ‘பாலிலே கலந்தால் தெரியாது. குடம் குடமாக வாயில் எடுத்துவிட்டான் கட்டை யிலே போவான், கரியாய்ப் போவான். பிசாசு விழிக்கி றாப்போல் விழியைப்பார். குத்து கண்ணை, இதோ இந்த வாழ மட்டையைக் கொண்டு அடி. எங்கள் மைத்துனன் இன்னமே வரமாட்டார், மொட்டைமுண்டை’- என்று மறுபடியும் சரமாரியாக ஆரம்பிக்க, வைத்தியநாதய்யர் “ஏன் முத்து ஸ்வாமியய்யர் வரமாட்டார் என்கிறாய்? என்ன விசேஷம்? உனக்கென்னமாய்த் தெரியும்?” என, ‘போடா எனக்கா? கூடிப் பேசிப்பேசிக் குடியைக் கெடுத்தார்கள்; அதிலே நான் கிடையாது. இல்லை, நிஜமாக நான் கிடையாது தீட்சிதருக்கு 500 ரூபா. சுப்புவுக்கு 500 ரூபா கொடுக்க வேணும். ஆமாம் எனக்குத் தெரியாது, நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஐயையோ கண்ணைப்பார், குத்து. ஏது தெரியவில்லையோ, ஐயோ என் அழகு துரையே, என்னைக் கெடுத்த ராஜாவே, செத்துப்போய்விட்டாயே, நான் கொல்லவில்லை, கொல்லவில்லை’ என்று இப்படிப் பிதற்றிக்கொண்டு போக இந்தப் பிதற்றுதலிலிருந்து வைத்திய நாதய்யர் சமயோசிதமான கேள்விகளைக் கேட்டு அவளுடைய மனதைத் தன் வழி திருப்பி, வேண்டிய சங்கதிகளைக் கிரகித்துக்கொண்டு விட்டார். சங்கரியம்மாள், ஈசுவர தீட்சிதர், சுப்பம்மாள் ஆகிய மூன்று பேரும் கூடிப் பேசிக் கமலாம்பாளைப்பற்றி முத்துஸ்வாமியய்யாரிடத்தில் அபவாதம் பேசி அவர் ஊருக்கு வராதபடி செய்துவிட்டார்களென்று அவருக்குத் தெரிந்தது. இதற்குள்ளாகச் சங்கரியம்மாளும் சுப்புவும் பொன்னம்மாளைக் காணாமல் தெருவெல்லாம் வீட்டுக்கு வீடு கூக்குரலிட்டுத் தேடிக்கொண்டு கடைசியாய் வைத்தியநாதய்யருடைய வீட்டுக்கு வந்தார்கள். உடனே வைத்தியநாதய்யர் அவர்களை அப்படியே நிற்கும்படி கட்டளை யிட்டு அவர்களை வெளியில் விடாதபடி போலீஸ்காரருக்கு உத்தரவு கொடுத்து ஊரிலுள்ள முக்கியமான பெரிய மனிதர் களுக்குச் சொல்லியனுப்பி அவர்களிடம் தான் பொன்னம் மாளிடமிருந்து கிரகித்த விர்த்தாந்தத்தைச் சொல்லி அவளு டைய பிதற்றுதலைக் கொண்டு அதை ருசுப்படுத்த, ஊரார் அனைவரும் சங்கரியையும், சுப்புவையும் வாயில் வந்தபடி யெல்லாம் திட்டி அவமானம் செய்தார்கள். வைத்திய நாதய்யர் ஈசுவர தீட்சிதரையும் வரவழைத்து இம்மூன்று பேரையும் சிறைச்சாலையில் வைக்கும்படி கட்டளையிட்டு விட்டார். இவர்கள் ஒவ்வொருவரும் ‘உன்னாலே வந்தது இவ்வளவும்,உன் பெண்ணுக்காக என்னைக் கெடுத்தாயே என்றும், ‘உன்னாலே வந்தது இவ்வளவும், நீதானேயடி யோசனை சொன்னாய்’ என்றும், சிறைச் சாலைக்குள், ஒருவரை ஒருவர் வைது, திட்டி, மடிப்பிடித்துக் கை கலந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஈசுவர தீட்சிதர் லஞ்சம் கொடுத்துத் தான் தப்பிப் போய்விடலாமென்று நம்பி மெளனமாய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
இது நிற்க, வைத்தியநாதய்யர் கிரஹத்தில் நடந்த விருத்தாந்தம் கமலாம்பாளுக்கு எட்டியபொழுது கமலாம் பாள் “ஐயோ என்ன பாவம் பண்ணினேனோ, நன்றாய் அனுபவிக்கின்றேன். அவர்களைச் சொல்லக் குற்றமென்ன என் பாவம் அவர்களை அப்படிக் கொடுமை செய்யத் தூண்டிற்று. அவர்கள் என்ன செய்வார்கள். இந்த அபகீர்த்தியை நம்பி எங்கே அவர் தேசாந்திரமே போனாரோ’ அல்லது பிராணனைத்தான் விட்டுவிட்டாரோ. ஐ யோ இப்படியும் வருமா! தெய்வமே அவரை நான் எப்பொழுது காண்பேன்? என் கற்பை அவருக்கு எப்படி ருசுப்படுத்துவேன்” என்று அழ, சுற்றியிருந்தவர்கள் அவளைத் தேற்றினார்கள், வைத்தியநாதய்யர் இந்தப் பெரிய குடும்பங்கள் இப்படிச் சீர்குலைந்ததைக் கண்டு பரிதபித்து முத்துஸ்வாமியய்யருடைய பெரிய தகப்பனார் பிள்ளையாகிய மஞ்சக்குப்பம் டிப்டி கலெக்டர் நாராயணசாமி அய்யருக்கு ஒரு தந்தி கொடுத்து அவர் வரும் வரையில் தானே அவர்களுடைய கிரஹ கிருத்தியங்களைக் கவனித்துக்கொண்டு வந்தார்.
இங்கு இவ்வாறாக. ஒருநாள் ராத்திரி சென்னைமாபுரியில் சமுத்திரத்தினுடைய காற்றானது அலைகளின் ஆவேசத்தைத் தானும் அடைந்து குழவிப் பருவத்திற்குரியதோர் குதூஹலத்துடன் பலகணிகள் வழியே உள்ளே புகுந்து ஆராய்ந்து ஆராய்ந்து, சீறிச்சிதறி, ஓடியுலாவி, விளையாடப் பெற்ற ஓர் மெத்தையறையுள் மெத்தை விரித்து அதன்மீது ஸ்ரீநிவாசனும், லட்சுமியும் பாற்கடற் பள்ளியினமர்ந்தது போல அமர்ந்து ‘காமனுமிரதியும் கலந்த காட்சியாமென உள்ளும் புறமும் ஒருமித்து, உரையாடி நகையாடிக் கொண்டிருந்தனர். சிறுதுநேரம் இவ்விதம் உல்லாசமாய்க் களித்துப் பிறகு தாங்கள் வழக்கமாய்ப் படிக்கும் ராமாயணத்தைக் கையில் எடுத்தார்கள். எடுத்து அதைத் திறக்க இறந்துபோன இந்திரஜித்தைக் குறித்து ராவணன் பிரலாபிக்கும் கட்டம் வந்தது. அதை இருவருமாய் வாசிக்கத் தொடங்கினார்கள். ராவணேசுவரனுடைய கம்பீரத்தையும், அவனுடைய தீ நிகர் சீற்றத்தைக் கண்டு அருகேயிருந்த வானவர், மாதவர் அனைவரும் ஓடி ‘யெங்கணும் சிந்தி யொளித்த ஓட்டத்தையும்,பெருகுகாதலு மன்பும் பிறங்கிட, இருப்பதென்னும் எரி புரை கண்களும் உருகு செம்பென வோடிய தூற்று நீர்’ என்றபடி அவன் தாரை தாரையாய் இருபது கண்களாலும் அழுத கண்ணீரையும் வர்ணித்திருக்கிற அட்சரலட்சம் பெறும்படியான பாடல்களை மனமுருகிப் பாடிப் பின்னர்,
கட்ட மானிடன் கொல்ல என் கரதலன்
பட்டு ஒழிந்தனனே எனும் பன்முறை
விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால்
எழும் இருக்கும் இரைக்கும் இரக்கும்உற்
றழும் அரற்றும் அயர்க்கும் வியர்க்கும்போய்
விழும் விழிக்கும் முகிட்கும் தன்மேனியை
உழும் நிலத்தை உருளும் புரளுமால்.
ஐயனே யெனுமோர் தலையானினஞ்
செய்வனே யரசெனு மங்கோர்சிரம்
கையனே யுனைக்காட்டிக் கொடுத்தநா
னுய்வனே யென்றுரைக்கு மங்கோர்சிரம்.
என்று இவ்விதம் பலவாறாகப் பத்து வாயாலும் பிரலாபித்து படாத பாடெல்லாம் பட்டு ‘விடம்பிறந்த கடலென வெதும்பி’ அயற்றி, அயர்த்து, விழுந்து, உருண்டு, புரண்டு வாய்விட்டு ஓ! வென்று அலறியழுத ராவணனுடைய நிலைமை யைப் பற்றிப் படிக்கும்போது லட்சுமி, ராவணன் ராட்சதன் ஆனாலும் “அன்றவர்க்கடுத்த துன்னி மழைக்கண்ணீர் அருவி சோர்வாள்” என்றபடி ராமன் கரதூஷணர்களோடு செய்த யுத்தத்தில் கோடிக்கணக்காய் மாண்ட ராட்சதர்களைக் குறித்து அழுத சீதையைப்போல அவனுக்கிரங்கியழ, குழந்தை நடராஜனைக் குறித்துத் தன் தகப்பனார் அழுத அழுகை திடீரென்று ஞாபகத்திற்கு வந்துவிட்டது. வரவும் “இப்படித்தான் எங்கள் அப்பாவும் அழுதார்: ‘ஐயோ நடராஜா!” என்று அலறி, அவன் எதிரே வந்து தவழ்ந்து விளையாடுகிறாற்போல இருக்கிறதே, ஐயோ, அவனைப் பார்க்க வேணும் என்று ஆசையாயிருக்கிறதே; எப்படிப் பார்ப்பேன்! இரண்டு வயதுக்கு உள்ளாக வாய்விட்டு மழலைச்சொல் சொல்ல ஆரம்பித்துவிட்டதே, போகிற குழந்தையல்லவோ! இருக்கிற குழந்தையானால் அப்படி வராது. அது கையைக் காலை ஆட்டுகிறதையும், ஐயோ அதன் பெரிய அழகிய கண் களையும் நான் எப்பொழுது காண்பேன்; ஒரு நிமிஷத்திலே போன இடம் தெரியாமல் போய்விட்டானே!” என்று அழ, ஸ்ரீநிவாசனுக்கும் அழுகை வந்துவிட்டது. இரண்டுபேரு மாகச் சேர்ந்து விம்மி, விம்மியழுது பிறகு அயர்ந்து நித்திரை போனார்கள். இரண்டுமணி சுமாருக்கு அவர்களுடைய வீட்டுக் கதவை யாரோ வந்து பலமாய்த் தட்டினான். தட்டவே ஸ்ரீநிவாசன் திடுக்கிட்டு விழித்து வெளியே வர, வந்த மனிதன் அவன் கையில் ஒரு அவசரத் தந்தியைக் கொடுத்தான்.ஸ்ரீநிவாசன் அதைக் கையில் வாங்கி, நெஞ்சும் மார்பும் படீர் படீர் என்று அடிக்க, விளக்கேற்றி அதை உடைத்துப் பார்த்தான். அதில், ‘முத்துஸ்வாமி யய்யரைக் காணோம், உடனே லட்சுமி சஹிதம் புறப்பட்டு வரவும்’ என்று எழுதியிருந்தது.
– தொடரும்…
– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.
– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.