கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விவேக சிந்தாமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 1,291 
 
 

(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.

க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

22 – துர்மரணமும் சகோதர சோகமும்

வந்த தந்தியை உடைத்துப் பார்க்கும்வரை அவரவர் பிராணன் அவரவரிடத்திலில்லை. அதை உடைத்துக் கொண்டிருக்கும்போதே முத்துஸ்வாமி அய்யர் வந்து விட்டார். அந்தத் தந்தியில் தம்பி சுப்பிரமணியய்யர் அபாயமாய் அசௌக்கியம், உடனே வரவும்’ என்று எழுதி யிருந்தது. அந்த சமாசாரம் இடி விழுந்தால் எப்படியோ அப்படியிருந்தது. முத்துஸ்வாமி அய்யர் ‘ஐயையோ இருக் கிறது அவன் ஒருத்தன், அவனும் போய்விட வேணுமா என்றழுதார். அவருக்குச் சுப்பிரமணியய்யர் ஒரே தம்பி. ஒருவர்மேலொருவர் நெடுநாள் நிரம்ப அன்பாக இருந் தார்கள். கடைசி காலத்தில் கலகக்காரி பொன்னம்மாள் மித்திரபேதம் செய்தாலும் சிறுகுளத்தை விட்டுப் பட்டணத் துக்காக ரயிலேறும்போதே அதெல்லாம் முத்துஸ்வாமி அய்யருக்கு மறந்துபோய்விட்டது. ‘அவன் என்ன செய்வான் பாவம்! அந்த ராட்சஸி கையிலகப்பட்டுப் பாம்பின் வாய்ப் பட்ட தவளைபோல் தவிக்கிறான். அவனைக் கோபிக்கிறதில் பயனென்ன’ என்பது அவர் எண்ணம். தந்திவந்த அன்று சாயந்திரம்தான் முத்துஸ்வாமி அய்யர் தன் தம்பிக்காக ஒரு அழகிய விலையுயர்ந்த பனாரிஸ் பட்டும், சாரதா பட மொன்றும், இன்னும் சில சில்லரை சாமான்களும் வாங்கி வந்திருந்தார். தந்தி சமாசாரம் காதில் பட்டவுடன் அவர் அவைகளை வீசி யெறிந்துவிட்டு ‘ஐயோ என்னை இப்படி யெல்லாம் சோதிக்கவேண்டுமா தெய்வமே’ என்று அதிக மாய்த் துக்கித்தார். கமலாம்பாள் முதலானவர்கள் அவரை உடம்பு சௌக்கியமில்லை யென்றுதானே சொல்லியிருக் கிறது. அச்சானியம் போல அழாதேயுங்கள். சுவாமி நம்மை இவ்வளவு சோதனை பண்ணினது போதாதா! ஒன்றும் வராது, துக்கப்படாதேயுங்கள்” என்று தேற்றத் தேற்ற அவருக்குத் துக்கம் அதிகரித்தது. பிறகு அவராக ஓய்ந்து மனதாறக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு ‘இதென்ன துக்கம்? அச்சானியம் போல’ என்று தன்னையே சமாதானம் பண்ணிக் கொண்டார். இது நிற்க. 

சிறுகுளத்தில் ஒருநாள் பாதிராத்திரிக்கு மேலாய் விட்டது. ஊரெல்லாம் விளக்குகளை யணைத்துவிட்டு எல்லோரும் தூங்குகிறார்கள். அமாவாசை இருட்டு. ஊரெங் கும் பயங்கரமான நிசப்தம் குடிகொண்டிருக்கிறது. ஆகாயத்தில் மேகங்கள் இடையிடையே அடர்ந்து குகைகள் நெருங்கிய கணவாய்களைப் போல பயங்கரமாயும் விகார மாயும் இருந்தன. மரங்களெல்லாம் இருண்டு மௌனமா யிருந்தன.சுப்பிரமணியய்யருடைய கிரஹத்தில் மாத்திரம் கூடத்தில் ஒரு விளக்கு எரிகிறது. அதற்கருகில் சுப்பிரமணி யய்யர் படுத்துக்கொண்டிருக்கிறார், அவருக்குத் தலை கழுத்தில் தரிக்கவில்லை; படுக்கையில் உடல் தரிக்கவில்லை; பேச முடிய வில்லை. தலை ஓயாது புரளுவதும், கண்கள் மருண்டுவிழிப்பதும் வாய் முக்குவதும் பிதற்றுவதுமாய் அவர் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார். அருகில் பொன்னம்மாள் மட்டும் உட்கார்ந்திருக்கிறாள். மற்றவர்களெல்லாம் அயர்ந்து நித்திரை செய்கிறார்கள். அவர் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த பொன்னம்மாளைக் கையைப் பிடித்துக் கொண்டு, அதிச சிரமத்துடன் ‘பாவி, அடிபாவி, குடியைக் கெடுத்துவிட்டாயே, ராட்சஸி ! மோசம் பண்ணிவிட்டாயே ராட்சஸி ! சண்டாளி ! தோசி ! கொன்று போட்டாயே! இதற்காகவா நான் உன்னைக் கட்டினேள்! எத்தனை மருந்து உருண்டையாய் விழுந்தது. மேலெல்லாம் செக்கில் வைத்துத் திரிப்பது போல் வலிக்கிறதே பாவி! சுந்தரத்துக்குக் கல்யாண பண்ண வேணும், குட்டிகளுக்குச் சாந்தியாகவேணும்; ‘ஐயோ’ பிராணன் போகிறதே, பேசமுடிய வில்லையே” என்று அழுதுகொண்டு சொல்லிச் சற்று மௌனமாயிருந்து பிறகு பொன்னம்மாளுடைய இரண்டு கைகளையும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு திடீரென்று எழுந்திருந்து பிணம் விரைத் தாற்போல் விரைத்து உட்கார்ந்தார். கண்களில் விழிபிதுங்கி நின்றன; தலைமயிர் அவிழ்ந்து அலங்கோலமாய்க் கிடந்தது. பல்லை நறநற வென்று கடிக்கிறார், முகத்தைக் கோரமாய் வலிக்கிறார். பொன்னம்மாளைக் கொன்று போடுவார் போலப் பார்க்கிறார். பொழுதோ நடுநிசி. அவளோ தனியாயிருக்கிறாள். சுப்பிரமணியய்யர் இவ்விதம் திடீரென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு ‘துரோகி, கொலைக்காரி, சண்டாளி’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு உரக்கக் கதறித் தன் கையால் அவள் முகத் தில் வெகு பலமாய் இடித்தார். அவர் முகம் அந்தச் சமயத்தில் வெகு கோரமாயும், பயங்கரமாயுமிருந்தது. பொன்னம் மாளுக்குத் தேகம் முழுவதும் வெட வெட என்று நடுங்கு கிறது. ஏதோ சொல்ல வாயெடுத்த சுப்பிரமணியய்யர் சொல்லமாட்டாமல் முகத்தை வலித்துக்கொண்டு படீரென்று கீழே விழுந்தார். பொன்னம்மாளோ பயத்தினால் சித்தம் ஸ்வா தீனமில்லாது கூக்குரலிட்டாள். தான் முன்னே மருந்து கொடுத்ததுதான் இவ்வளவுக்கும் காரணம் என்று தெரிந்தது. புருஷன் இனிப் பிழைக்கமாட்டா ரென்று அவள் நன்றாய் அறிந்தாள். விதவை முட்டாக்கு தன் தலையில் வந்து விட்டதாக அவளுக்குத் தோன்றியது. சுப்பிரமணியய்யர் எழுந்து உட்கார்ந்து அவள் முகத்திலிடித்தது அவள் மனதில் சாகும்வரை மறவாதபடி நிரம்ப ஆழமாய்ப் பதிந்தது. தான் தன் புருஷனை வசிபம் செய்ய வேண்டுமென்று கொடுத்த மருந்து தனக்கு வினையாய் வந்ததைக் குறித்து வருந்துகிறாள். ஐயோ பாவம்! எத்தனை ஸ்திரீகள் தங்கள் புருஷரை வசியம் செய்ய வேண்டுமென்ற துராசையுடனே மருந்தைக் கொ டுத்துக் கொன்றிருக்கிறார்கள். எத்தனை புருஷர்கள் இந்த விஷமருந்தினால் பயித்தியம் பிடித்தலைந்திருக்கிறார்கள். கிணறுவெட்டப் பூதம் புற பட்டாற்போல் தாங்கள் ஒன்று நினைத்து மருந்தைக் கொடுக்கிறது. அது ஒன்றைக் கொண்டு வந்து விடுகிறது. பின்வரும் கேட்டை நினையாமல் புருஷனை மயக்க வேண்டுமென்று எத்தனிக்கும் துஷ்டப் பெண்களின் கதி பொன்னம்மாள் கதி போலத்தான் ஆகுமென்பதற்குத் தடையேயில்லை. கீழே விழுந்த சுப்பிரமணியய்யர் அப்படியே அயர்ந்து மூர்ச்சை போனார். பொன்னம்மாள் தனியே அழுது என்று கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். இன்ன பண்ணுவது தெரியவில்லை. சித்தப்பிரமை கொண்டு மயங்குகிறாள். சுப்பிரமணியய்யர் எழுந்து உட்கார்ந்து முகத்தில் இடித்தது அவள் ஞாபகத்தைவிட்டுப் போகாமல் அவள் நித்திரை செய் வதையும் தடுத்தது. விடிய நாலு நாழிகைக்கு சுப்பிரமணி யய்யர் விழித்துக்கொண்டு பொன்னம்மாளைப் பார்த்து, ”உன்னை நான் ஸ்திரீயென்று நினைத்திருந்தேன்! நீ எனக்கு எமனாக முடிந்தாயடி! எமனாக முடிந்தாய், நீ எனக்குக் கொடுத்த சுகத்துக்கு இப்பொழுது வட்டியும் முதலுமாய் என் உயிரையே பறித்துக்கொண்டுவிட்டாய்.(பல்லைக் கடித்துக் கொண்டு) அந்தப் பாவத்தில் நீ போ.இந்த ஜன்மத்தோடு நம்மிருவருக்கும் தீர்ந்தது. என்னண்ணாவுக்கும் எனக்கும் ஆகவிடாமல் அடித்தாயே. ஐயோ அவனைப் பார்க்கவேணுமே, அண்ணாவைப் பார்க்க வேணுமே, என்னண்ணாவைப் பார்க்க வேணுமே! அவனுக்குத் தந்தியாவது கொடுத்து வரவழைக்க வேணுமே” என்று சொன்னார். இதற்குள் அவருடைய பந்துக் கள் சிலர் அவரைப் பார்க்க வந்தார்கள், அவருடைய தேகஸ்திதியைப்பற்றி விசாரித்துவிட்டு அவர்கள் உடனே பட்டணத்துக்கு ஒரு தந்தி கொடுத்தார்கள். 

சுப்பிரமணியய்யர் ‘அண்ணா எப்பொழுது வருவார்?’ என்று ஒரு மணிக்கு ஒருதடவை கேட்டுக்கொண்டிருந்தார். மறுநாள் அவருக்குத் தேகத்தில் உபாதி அதிகமாயிற்று. வயிற்று வலியும் கை, கால் குடைச்சலும் அவரைச் சஹிக்க முடியாதபடி துன்பப்படுத்தின. அவர் படுக்கை முழுவதும் புரண்டு உருண்டு வருத்தப்படுகிறார். ஊர் முழுவதும் வந்து கூடியிருக்கிறது. சிலர் கால் பிடிக்கிறார்கள்; சிலர் மருந்து தயார் செய்கிறார்கள்; சிலர் விசிறி போட்டு விசுறுகிறார்கள்: சிலர் அழுகிறார்கள்; சிலர் தேற்றுகிறார்கள்; சிலர் பொன்னம் மாளைத் துக்கம் விசாரிக்கிறார்கள். கிராமங்களில் இவ்வித சமயங்களில் ஜனங்கள் எல்லாம் ஒருவரோடொருவர் போட்டிப்போட்டு உதவி செய்வதை யாரும் பார்த்திருக்கலாம். ஒரே வீட்டில் குடியிருக்கும் இரண்டு குடும்பங்களுள் ஒரு குடும்பத்தில் யாராவது இறந்துபோனால், இங்கேயிருந்து அழக் கூடாது என்று மற்றொரு குடும்பத்தாரும் வீட்டுக்காரனும் சேர்ந்து சொல்லுகிற நாகரிகமான பட்டணவாசத்திய வழக்கம் பட்டிக்காட்டு ஜனங்களுக்குத் தெரியாது.சுப்பிரமணியய்யருக்கு வரவர உபத்திரவம் அதிகம் ஆகிறது. ‘அண்ணா வந்துவிட்டாரா’ என்று நிமிஷத்துக்கு நிமிஷம் கேட்கிறார். முத்துஸ்வாமியய்யர் வருவதற்காக ரயிலிலிருந்து ஊர் வரை யில் தபால் மாடுகள் தயாராய் வைக்கப்பட்டிருந்தன. இனி மேல் பிழைக்கிறது துர்லபம் என்று எல்லோருக்கும் தெளிவா யிற்று. முத்துஸ்வாமியய்யர் வந்து சேர வேண்டுமே என்று எல்லாரும் வழி பார்க்கிறார்கள். சுப்பிரமணியய்யருக்குப் பேசக்கூடத் திராணியில்லை. நிரம்ப வருத்தப்படுகிறார். அண்ணா வந்தாரோ என்று கேட்கத் தலையெடுக்கிறார். சுற்றி யிருப்பவர்கள் என்ன சொல்லுவார்கள், வருகிற சமயமாய் விட்டது, சீக்கிரம் வந்துவிடுவார், ராந்தல் சுளுந்து எல்லாம் அனுப்பியிருக்கிறது, இதோ வந்துவிடுவார்’ என்று தைரியப் படுத்துகிறார்கள். நிமிர்த்திய தலையை அவர் கீழே போட்டுக் கொண்டு அழுகிறார், மறுபடி நிமிர்த்துகிறார்,மறுபடி கீழே போடுகிறார். இவ்விதம் இருக்கிறபோதே முத்துஸ்வாமி யய்யர் வந்துவிட்டார் என்ற சமாசாரம் பரவியது. ஊருக்கு நாலு மைலுக்கப்பால் அவர் வரும்போதே அவர் வருகிற செய்தி இங்கே வந்துவிட்டது. முத்துஸ்வாமியய்யர் “அடித்து முடுக்கு ; சீக்கிரம் விடு, ஓட்டத்தில்தானே விடு” என்றிப்படி வண்டிக்காரனுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் தாக்கீது கொடுத் துக்கொண்டு வந்தார். ஊருக்கு ஒரு மைலுக்குள் வந்தவுடன் வண்டியைவிட்டு இறங்கி தபால் மாடுகளைக் காட்டிலும் வேக மாய் ஓடி வந்தார். ‘இதோ வந்துவிட்டார், அதோ வந்து விட்டார்’ என்று ஊரெங்கும் செய்தி பரவியது. சந்தைப் பேட்டைக்கு வந்துவிட்டார். இரண்டு நிமிஷம் ஆயிற்று. சந்தைக்கு வந்துவிட்டார். இன்னும் ஒரே நிமிஷம்; வீட்டுக் குள் வந்தார். வந்ததுதான் தாமதம்! சுப்பிரமணியய்யரிடம் அலறிக்கொண்டு போய் ‘அப்பா சுப்பிரமணியம்’ என்று அவரைக் கையாலெடுத்துக் கட்டிக்கொண்டார். அதுவரை யில் பேசமாட்டாமல் இருந்த அவர், அண்ணாவைச் சேர்த்துக் கட்டிக்கொண்டு “அண்ணா வந்தாயா! அண்ணா, நான் செத்துப் போகப்போகிறேன். உனக்கு நான் ரொம்பப் பொல்லாதவ னாகப் போனேன். எல்லாவற்றையும் மறந்துவிட வேணும்; மன்னித்துவிட வேணும்; குழந்தைகளைப் பார்த்துக்கொள். இனிமேல் என் பளுவு விட்டது. ஐயோ உன் முகத்தைப் பார்ப்போம் அண்ணா (அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கோண்டு), ஐயோ அந்தப் பாவி முண்டை சொல்லைக் கேட்டு உன்னோடே பகைத்துக்கொண்டேனே, அதெல்லாம் மறந்துவிடு அண்ணா. நாம் முன்னே இருந்ததை நினைத்துக்கொள் அண்ணா.. அண்ணா, உன்னைவிட்டு நான் போகிறேனே, ‘ஐயையோ!” என்று அவரைக் கட்டிக்கொண்டு ‘கோ’ என்று அழுகிறார். முத்துஸ்வாமி அய்யர் அதைவிட அழுகிறார். சுற்றியிருந்த வர்கள் எல்லாரும் அழுகிறார்கள். ஒருவருக்காவது சஹிக்கக் கூடவில்லை. மறுபடியும் சுப்பிரமணியய்யர் முத்துஸ்வாமி யய்யரைப் பார்த்து “ஐயோ அண்ணா,எனக்கு அப்பா, அம்மா, அண்ணா எல்லாம் நீதானே, உன்னைவிட்டுப் போகிறேனே. என்னமாகப் போவேன் அண்ணா; சஹிக்கமாட்டாயே அண்ணா. ஒரு தம்பி, நானும் போய்விட்டால் அம்பி அம்பி என்று அலறுவாயே அண்ணா அழாதே அண்ணா’ சொல்லி ‘கோ’ என்று அழுகிறார். முத்துஸ்வாமியய்யர் “ஐயையோ என் சுப்பிரமணியமே, உன்னை நான் இப்படியா பார்க்கவேணும். இதற்காகவா வந்தேன்! அப்பா தெய்வமே, உனக்கிது தர்மமா! ஐயோ!” என்று வாய்விட்டுக் கதறுகிறார். இப்படி ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு அழ, கமலாம். பாள், லட்சுமி, ஸ்ரீநிவாசன் இன்னும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் மூலைக் கொருவராய் நின்று அழுகிறார்கள். பொன் னம் மாள் மாத்திரம் அழவில்லை. அவளுக்குச் சித்தஸ்வாதீன மில்லைபோல் காணப்பட்டாள்; எங்கேபோ வெட்டவெளி யைப் பார்க்கிறாள்; ‘என்ன விழி விழிக்கிறதடி, கண்ணைப் பார் பயமாயிருக்கிறது. அடிக்க வருகிறதடி’ என்றிப்படித் தனக் குள்ளே சொல்லிக்கொள்ளுகிறாள். யாராவது போய் ‘பொன் னம்மாள்,பாவி, இப்படி வந்து விட்டதேயடி’ என்றால், சற்று நேரம் அவர்கள் சொல்வது அவள் காதில் படுகிறதில்லை. பிறகு “என்ன சொன்னாய், என்னவோ யாரார் என்ன பூஜை பண்ணினார்களோ அதுதானே கிடைக்கும்” என்று சொல்லி யழுவாள். அவள் ஏதோ ஒரு மாதிரியாக இருப்பதாக மட்டும் எல்லாருக்கும் பட்டது. ஆனால் அது இன்னதென்று ஒருவரும் அறியவில்லை. சுப்பிரமணியய்யர் அழுதுகொண்டே பிராணனை விட்டார். முத்துஸ்வாமியய்யர் மூர்ச்சை போட்டு விழுந்தார். ஊரெல்லாம் ஒரே மொத்தமாய் அழ முத்துஸ்வாமியய்யர் மூர்ச்சை தெளிந்து எழுந்தபிறகு செய்ய வேண்டிய காரியங்களெல்லாம் விதிப்படி நடத்தப்பட்டன. 

23 – திரவிய நஷ்டமும் பிரிவும்

இவ்விதம் முடிந்தது சுப்பிரமணியய்யருடைய சரித்திரம். அவர் ஏன் இவ்விதம் இறந்திருக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். சரித்திரத்தை நாம் நடந்தபடி எழுத வேண்டுமேயல்லாது மாற்றுவதற்கு நமக்கு என்ன அதிகார மிருக்கிறது? நம்முடைய திருப்திக்காக இவ்வுலகம் சிருஷ்டிக் கப்பட்டிருப்பதுபோல் காணவில்லை. உலகம் நமது ஆக்ஞைக்குள் அடங்குமாயின், வாலிபர்கள் இறப்பசேன், விதவைகள் பெருப்பதேன்? வீடுகளெங்கும் வியாதிகள் புகுந்து ‘பூவுதிரப் பிஞ்சுதிரக் காயுதிரக் கனியுதிர’ என்றபடி ஈவு இரக்கமில்லாது எங்கும் நிறைந்த பொருளாய் எமன் உலாவுவதேன்? பச்சைப் பாம்புகள் இலைகளோடிலைகளாய்க் கிடந்து வேற்றுமைப்படாது வாழும் ஓர் அடர்ந்த விருட்சம் போல பாப புண்ணியங்கள் பேதாபேதமின்றிப் பின்னிக் கிடக்குமிப் பாழுலகின் இன்பாதிகளை அற் மெனக் கருதாது அவற்றில் ஆசைவைத்து ஓர் நாசகாலியின் பாட்டைக் கேட்டுப் பன்றியாய் மாறிய மானிடர்கள்போல் உணர்ச்சி, உணவு,உற்பத்தியாதிகளில் அவ்வுருவே அடைந்த அறிவீனர் களாகிய நாம் நமக்குளதோர் அரைக்கணத்துள் பண்ணும் பாபங்கள் எத்தனை? எண்ணும் எண்ணங்கள் எத்தனை? சொல்லும் துர் சொற்கள்தான் எத்தனை? இவ்விதம் செய்யத் தகாதன யாவும் செய்து கூட்டிய குற்றவியலை அனுபவிக்கப் புகுந்ததோர் சிறைச்சாலையாகிய இவ்வுலகின்கண்ணும் சிற்சில சமயங்களில் யதார்த்தமான அன்பானது தன்னி னத்தை விட்டு வழிதப்பி வந்த மான் பேட்டைப் போல வந்துவிடுகிறது. அவ்வாறு வந்தவிடத்து அது மனிதனா லாவது, விதியினாலாவது வேட்டையாடப்படாது போவது இல்லை. 

சுப்பிரமணியய்யருக்கும் முத்து ஸ்வாமியய்யருக்கும் இருந்த சகோதர வாஞ்சையானது நெடுநாள் யாதொரு குறைவுமின்றி நீடித்திருக்கக் கடவுளுக்குச் சம்மதமில்லாமற் போயிற்று. முன்பேயே விரக்தியடைந்திருந்த முத்துஸ்வாமி யய்யருக்கு மனிதருடைய கொடுமையைக் காட்டிலும் மனிதர்கள் நல்லவர்கள்தான் என்று அவர் சிற்சில சமயங் களில் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வார். ஆயினும் இவ்வித துன்பங்கள் ஒருமித்து வருவது அவருக்கு இவ்வுலக இன்பதில் ஆசையை ஒருமிக்க வேண்டுமென்று கடவுள் அனுக்கிரஹம் போலவும் சிற்சில சமயங்களில் தோன்றும். நமக்குப் பிள்ளையேது, குட்டியேது, தம்பியேது, மனைவியேது; ஏதோ கடலில் காற்றினால் துரத்தப்பட்ட இரண்டு நாணல்கள் சிலகாலம் ஒன்றையொன்று சேர்ந்திருந்தால் எப்படியோ அப்படித்தான் உலகத்தில் பந்துக்களும் மித்திரர் களும். எல்லாம் இந்திர ஜாலம், மாயை, அக்ஞானம் என்று அவர் தன்னையே அடிக்கடி கண்டித்துக்கொள்ளுவார். “அன்னை யெத்தனை யெத்தனை அன்னையோ, அப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ, பெண்டி ரெத்தனை யெத்தனை பெண்டிரோ, பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ. என்று அவர் தன் மனதுக்குள்ளேயே அடிக்கடி பாடிக்கொள் வார். ஆனால் உலக வியவகாரங்கள் அவரை முற்றும் விட்ட பாடில்லை. சுப்பிரமணியய்யர் சாகும் காலத்தில் தன் குழந்தைகளைத் தமையனிடம் ஒப்புவித்துப் போனாரல்லவா? முத்துஸ்வாமியய்யர் தன் தம்பியின் இச்சைக்கு ஏற்ப சுந்தரம், சுந்தரம் என்று முன்னிலும் பதின்மடங்கு வாஞ்சையுடன் சுந்தரத்தைப் படிப்பு முதலிய விஷயங்களைப் பற்றி அடிக்கடி விசாரிக்கிறது; தம்பி கிரஹத்துக்கு வேண்டிய மற்ற காரியங்களை மேற்பார்க்கிறது; என்றிப்படிச் சிறிது காலம் செய்து வந்தார். 

பொன்னம்மாளுக்கு ஒரு தாயார் உண்டு. அவள் பொன்னம்மாளைக் காட்டிலும் குணவதி. அவளுக்குச் சங்கரி என்று பெயர். அவள் தொட்ட காரியம் ஒன்றும் துலங்காது பின்னால் இப்படித்தானிருக்கும் என்று அறிந்துதான் அந்த அம்மாளுக்குச் ‘சம்கரிப்பவள்’ சங்கரி எனப்பெயர் வைத்தார் களோ என்னவோ நாம் அறியோம். அவள் தன் மாப்பிள்ளை இறந்துபோன செய்தி கேட்டவுடனே பெண்ணுக்குத் துணை யாக வந்து சேர்ந்தாள். வந்து சில நாளைக்கெல்லாம் சுப்பிரமணியய்யருடைய ஏராளமான சொத்துக்கு அவள் தன்னையே ‘திவான் ரீஜண்டாக’ நியமித்துக்கொண்டு சகல காரியங்களையும் நடத்தத் தலைப்பட்டாள். அவளுடைய சுற்றத்தாருக்கு அன்று முதல் யாதொரு குறைவுமில்லை. ஒருவர் குடும்ப சஹிதமாய் மூன்றுமாதம், நான்கு மாதம் என்று இப்படி சிறுகுளத்தில் வந்து கூடாரமடித்துக்கொண் டிருந்தார்கள். முத்துஸ்வாமி அய்யருக்கு இந்தச் சொத்து இப்படி விரயமாகிறது சஹிக்கவில்லை. பிள்ளையில்லாத சொத்தா என்று கண்டிக்க எத்தனித்தார். தேவி சங்கரி எதிர்த்து யுத்தத்துக்குத் தலைப்பட்டாள். இப்படி யந்தத் தாடகை யுத்தத்தைத் தொடுக்கவே அவர் கொஞ்சம் பின் வாங்கினார். அதுகண்டு அந்த ராட்சஸி பின்னும் துணிவுற்று அவரால் சுப்பிரமணியய்யர் வீட்டு விஷயமாகக் கொடுக்கப் பட்ட ஒவ்வொரு உத்தரவையும் அப்பீலில் மாற்றிவிட்டாள். முத்துஸ்வாமியய்யர் சுந்தரத்தினிடம் அதிக அன்பு வைத் திருந்தார் என்று நமக்குத் தெரியுமே. அது மத்தியில் மங்கி யிருந்தபோதிலும் இப்பொழுது முன்னிலும் பதின்மடங்காய் அதிகரித்தது. அதைக் கண்ட சங்கரி சுந்தரத்தைத் தன் பெரிய தகப்பனாரிடம் போகவே கூடாதென்று கண்டித்து, தண்டித்து நிறுத்திவிட்டாள். முத்துஸ்வாமியய்யருக்கு இங்கே யிருந்து இந்த அற்பத்தனத்தையும், ராட்சஸத்தனத்தையும், கொடுமையையும் பார்த்துக்கொண்டு கஷ்டப்படுவதைக் காட்டிலும் உயிரை விட்டுவிடலாம், அல்லது இமயகிரிச் சாரலில் சென்று காஷாயந் தரித்து வாழலாம் என்று தோன் றிற்று. அவருக்கு உண்டான விரக்தி வைராக்கியத்தில் கமலாம்பாள் இடத்தில்கூட அசூயை உண்டாயிற்று. அவள் தன் புருஷ சிச்ருஷையில் குழந்தை போன துக்கத்தைக்கூட மறந்து இருந்தாள். இப்பொழுது அவள் என்ன உபசரித்தும் அவர் அவளை உதாசீனமாய் உதறியெறிந்தார். அவளுக்குத் தன் பர்த்தாவின் அன்புதான் ஆதாரமாயிருந்தது. அதற்கும் இப்பொழுது குறைவு நேரிட்டது. முத்துஸ்வாமியய்யர் சந்நியாசத்தில் விசேஷ சபலம் வைக்கத் தொடங்கினார். ஆனால் கமலாம்பாளைத் தனியே விட்டுப்போக அவருக்குச் சம்மதப்படாததால் அந்த நல்ல காரியத்துக்கு அவள்தான் தடையாயிருக்கிறதாக அவருக்குப் புத்தியில் பட்டது. அது முதல் அவர் அவளை ஒரு நாளும் இல்லாதபடி கொடுமையாய் நடத்த ஆரம்பித்தார். இவர் நடத்தையிப்படி மாறுபடு வதைக் கண்ட கமலாம்பாள் அதைத் திருத்தத் தன்னாலான மட்டும் முயன்றும் கூடாமல் தனக்குள்ளேயே துக்கித்து உருகினாள். அவள் அப்படி அவரை விட்டு ஒதுங்கித் தனக் குள்ளேயே வருந்திக் கொண்டிருந்ததைக் கவனித்த முத்து ஸ்வாமியய்யர் அன்பாவது மண்ணாவது இந்த உலகத்திலேயா! பார்! நம்மிடத்தில் அடிக்கடி ஓடி ஓடி வந்து கொண்டிருந்த கழுதை இப்பொழுது ஏன் என்றுகூட விசாரிக்கிறதில்லை. அப்படித்தான் இருக்கட்டும். நமக்கு நல்லதுதான். நாம் சந்நியாசம் வாங்கிக் கொண்டு புறப்பட்டு விடலாம்’ என்று தன் மனதுக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். 

இப்படியிருக்கையில் ஒருநாள் பம்பாயிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் பட்டணம் போயிருந்தபொழுது ஓர் பெரிய வியாபாரத்தில் இறங்கினார். அது ஆதியில் அதிக லாபம் காட்டினபடியால் தன் நிலங்களையெல்லாம் விற்று அந்த வியாபாரத்திலேயே தன் சொத்து முழுவதையும் போட்டிருந்தார். அந்த வியாபாரத்துக்கு மூலஸ்தானம் பம்பாய். அன்று வந்த கடிதத்தில் அந்த வியாபாரம் க்ஷுணித்துப் போய்விட்டதென்றும், அவர் நம்பியிருந்த வியாபாரச் சங்கத்திற்கு அபாயம் வரும்போலிருந்ததென்றும், அவர் உடனே புறப்பட்டு வரவேண்டுமென்றும் கண்டிருந்தது. அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன் அவர் ‘வருவ தெல்லாம் வரட்டும், நாம் பண்ணுகிற அக்கிரமத்துக்கு அவ்வளவும் வேண்டியதுதான். அவ்வளவு பணமும் போச்சா! நல்லது, நல்லது; போகிறதெல்லாம் போகட்டும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு கமலாம்பாளைப் பார்த்து, “அடியே இனிமேல் எங்கேயாவது அவலிடித்தாவது, தட்டு வாணித்தனம் பண்ணியாவது பிழைத்துக்கொள்.நான் போகிறேன்” என, கமலாம்பாள் திடுக்கிட்டு திக்பிரை மை கொண்டு நிற்க, “உனக்கும் நமக்கும் விட்டது” என்று கடிதத்தை வீசியெறிந்து வேஷ்டி முதலியவற்றை யெடுத்து ஜாக்கிரதையாகக் கட்டத் துவக்கினார். கமலாம்பாள் அந்தக் கடிதத்தை யெடுத்துப் பார்த்துவிட்டு அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள். அவர் அவளை உதறியெறிந்து விட்டு “பணம் போய்விட்டதென்று அழுகிறாயல்லவா? அழு! இனிமேல் உனக்கும் எனக்கும் என்ன? நான் ஏழை! நீ எங்கே வேணுமோ போகலாம். நெய்க்குடத் தெறும்புகள். பணமிருந்தால் பெண்டாட்டி பிள்ளை யெல்லாம் உண்டு. ‘இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்’ என, அவள் அவர் காலைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு கண்களில் பிரளயமாய் நீர் பெருக, “ஐயோ நான் என்ன தப்பிதம் செய்தேன். உங்களை விட்டால் எனக்கு என்ன கதியிருக்கிறது! எனக்குப் பிதாவும் நீங்கள், பர்த்தாவும் நீங்கள்; அண்ணன் தம்பி எல்லாம் நீங்கள்; எனக்குத் தெய்வமும் நீங்கள். ஐயோ நான் என்ன தப்பிதம் செய்தேன்; என்னை என்ன தண்டனை பண்ண உங்களுக்குச் சுதந்திரம் இல்லை! கத்தியெடுத்து என் கழுத்தை யறுங்க களேன்; அப்பொழுதும் உங்கள் கையாலிறப்பதே மோட்சம் என்று நான் பிராணனைச் சந்தோஷமாய் விட மாட்டேனோ. நீங்கள் ஒருநாளும் என்மேல் இப்படி யிருந்ததில்லையே! குழந்தை போனது போனதாக எனக்குத் தோன்றவில்லையே. உங்கள் முகமலர்ச்சியிலே நான் அதையும் மறந்து இருக் கிறேன்.என்னை நீங்களும் உதறியெறிந்துவிட்டால் அப்புறம் நான் என்ன செய்வேன்? சொத்து அவ்வளவும் போனாலும் போகிறது. நமக்கு என்ன, பிள்ளையா, குட்டியா; சொத்து என்னத்துக்கு. நான் குடம் சுமந்து, அவல் இடித்து சம்பா தித்துப் போடுகிறேன். உங்களுடைய தற்கால சௌக்கியத்துக்கு எப்பொழுதும் குறைவு வராமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். எனக்கு என்னத்துக்குக் காசும் பணமும்? உங்கள் அன்பு ஒன்று போதாதா? அதைவிட எனக்கு என்ன சொத்து பெரிது! ஐயோ! என்னை இப்படி உதறியெறிவது உங்களுக்குத் தருமமா? நான் ஏழை, பஞ்சை, அநாதை; உங்களை அண்டினேன்; காப்பாற்ற வேணும்” என்று அவர் காலைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு தன் கண்ணீரால் ஸ்நானம் செய்விக்க, அவர் “இதென்ன கால்கட்டா யிருக் கிறது சனியன்” என்று சொல்லி அவளைக் கையால் தூக்கி “என்னடி செய்யவேணுமென்கிறாய்?” என்று அதட்ட, அந்த உத்தமி அவர் மார்பில் தானே சாய்ந்துகொண்டு தாரை தாரையாய் அழ, அவரும் உருகி அவளைக் கட்டிக்கொண்டு தானும் அழ ஆரம்பித்தார். பிறகு இருவரும் ஒருவரை யொருவர் தேற்றிக்கொண்டார்கள். வாடியிருந்த கமலாம். பாள் உடம்பு அன்று சந்தோஷத்தால் பூரித்தது. அழுகை யெல்லாம் ஓய்ந்த பிறகு கமலாம்பாள், ”சொத்து போனால் சனியன் தொலைந்தது! நீங்கள் இங்கேதானே இருங்கள், நான் உழைத்துப் போடுகிறேன்; இல்லாவிட்டால் இரண்டு பேருமாய்ச் சேர்ந்து எங்கேயாவது போய்ப் பிழைக்க வழி தேடுவோம்” என, முத்துஸ்வாமியய்யர், “சொத்து போன தாக இல்லை, நான் போய் போட்ட முதலையாவது பற்றிக் கொண்டு வருகிறேன். நமக்குப் பணம் வேண்டாமென்றாலும் லட்சக்கணக்காகப் பணம் பறிகொடுக்க மனது வரவில்லையே. நான் போய் எது சாத்தியமோ அதைச் செய்து வருகிறேன். அதுவரையில் நீ இங்கேதானே பல்லைக் கடித்துக்கொண்டிரு; நான் போய் கூடிய சீக்கிரத்தில் ஓடிவந்து விடுகிறேன்” என்றார். கமலாம்பாள் அவரை விட்டுப் பிரிந்திருக்க மாட்டேனென்று மன்றாடியும் அவளைக் கூட்டிப்போவது அசௌகரியமாக இருந்தபடியால், அவள் ஊரிலேயே இருக்க வேண்டியிருந்தது. முத்துஸ்வாமியய்யர்மட்டும் பம்பாய்க்குப் புறப்பட்டார். அடிக்கடி கடிதம் எழுதுவதாக உறுதி சொல்லிச் சென்றார். பம்பாயிலிருந்து வந்த சமாசாரம் ஒரு வருக்கும் தெரியக்கூடாதென்று கண்டிப்பாய் உத்தரவும் செய்துவிட்டுப் போனார். 

24 – தாடகை, சூர்ப்பநகை, ஆஷாட பூதி, திரிவிதம் துஷ்டலட்சணம்

அவர் போய்ச் சில நாளைக்குப் பிறகு வம்பர் மகாஜன சபை அக்கிராசனாதிபதியாகிய மகாகனம் பொருந்திய சுப்பம் மாளும், பொன்னம்மாளும், பொன்னம்மாள் தாயார் சங்கரி அம்மாளுமாகச் சுப்பிரமணியய்யரஹத்துக் கூடத்தில் ஏதோ ரஹசியம் பேசிக்கொண்டிருந்தார்கள். 

சுப்பம்மாள் : “யாயா சொல்யேனே அவயா அப்டீனு சொன்னாய்.’ 

சங்கரி: “சொல்லுகிறதைத் திருத்தமாய்ச் சொல்லு. நீ பேசுகிறது எனக்குப் புரியவில்லையம்மா; ஏது இப்படிச் சொல்லுகிறாள் என்று கோபித்துக் கொள்ளாதேயம்மா.” 

சுப்பம்மாள்: “கோபம் என்ன; தியுத்தமாயித்தான் சொல்யேன்; யாயா அவயா சொல்யா என்யா’ என்றிப்படி முன்னிலும் அதிக திருத்தமாய் ஆரம்பித்தாள். பிறகு சங்கரி இவளுடைய பாஷையின் சூக்ஷ்மத்தைக் கிரஹித்துக்கொண் டாள். அரிச்சுவடியில் யகரம் இவளுக்குப் பெண்வயிற்றுப் பேத்தி என்றும், ரகரத்துக்கும் இவளுக்கும் சக்களத்திச் சண்டையென்றும் அவள் அறிந்துகொண்டாள். சுப்பம்மாள் இப்படி ‘யரயோர பேத’ என்ற சூத்திர விதிப்படி இலக்கண மாய்ச் சொல்லி முடித்தது என்னவென்றால், பொன்னம்மாள் மருந்து வைத்துத் தன் புருஷனைக் கொன்று விட்டாளென்று கமலாம்பாள் தன்னிடம் சொன்னாளாம். பொன்னம்மா ளுடைய மருந்துதான் சுப்பிரமணியய்யருடைய மரணத் துக்குக் காரணம் என்று ஊரில் எல்லாருக்கும் சந்தேகமுண்டு. ஆனால் கமலாம்பாள் அதைப்பற்றி ஒரு வார்த்தையாவது பேசவேயில்லை. சங்கரியம்மாள் 

கண்டபடி பணத்தைக் வாரியிறைத்துக் கொண்டிருப்பதைக் கண்ட சுப்பு தனக்கும் அதில் ஏதாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையடைந்து கமலாம்பாள்மேல் சாக்குப்போட்டு சங்கரியம்மாளிடம் மேலே சொன்னபடி சொல்ல, சங்கரியம்மாள் “அந்த முண்டை அப்படிச் சொல்லலாகிவிட்டதா, நாக்கை இழுத்து வைத்து அறுத்துவிட்டால்தான் என்ன? என் பெண்மட்டும் தாலியறுக்க வேணும். அவள் மட்டும் வாழ வேண்டுமோ; சொல்லுகிறேன் வழி அந்தச் சிறுக்கிக்கு” என்று கோபித்துக்கொண்டு, சுப்பம்மாளுக்கு ஒரு பெரும் பூசனிக்காயைத் தூக்கிக் கையில் கொடுத்து மறுநாளும் வரும்படி உத்தரவிட்டு அனுப்பினாள். 

சில நாளைக்குப் பிறகு முத்துஸ்வாமியய்யர் ஆருத்திரா தரிசனத்துக்காகச் சிதம்பரத்தில் இறங்கிவிட்டுச் சீக்கிரம் ஊருக்கு வருவதாகக் கமலாம்பாளுக்கு எழுதினார். அவள் தன் பர்த்தா வருகிற சந்தோஷத்தை வீடுகூட்டி முதல் வந்தவர்கள் போனவர்கள் எல்லாருக்கும் சொல்லிச்சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தாள். இந்தக் கடிதம் வந்த அன்று பொன்னம்மாளுடைய கிரஹத்தில் சங்கரியம்மாள், சுப்பம் மாள், ஈச்வர தீட்சதர் என்ற ஒரு தீட்சதர் மூன்று பேராகக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அதிக தாழ்ந்த குரலுடன் பேசிக்கொண்டிருந்ததால் என்ன பேசிக் கொண் டிருந்தார்களென்று எனக்குச் செவ்வையாய்த் தெரியாது. ஆனால் கமலாம்பாள் என்ற பெயர் மட்டும் அடிக்கடி கேட்டது. எல்லாம் முடிந்த பிறகு சங்கரியம்மாளுடைய செலவில் ஈச்வர தீட்சதரும் சுப்புவும் சிதம்பரத்திற்குப் போவதாய்த் தீர்மானம் செய்தார்கள். “வந்த பிராமணனை அப்படியே திரும்பிப் போகப் பண்ணிப்போட நானாய் விட்டது” என்றார் தீட்சதர். “இனிமேல் அவள் வாய்வதை (வாழ்வதை) பாய்த்துப்பிடயேன்” (கமலாம்பாள் வாழ் வதைப் பார்த்துவிடுகிறேன்) என்று சபதம் கூறினாள் சுப்பம்மாள். 

முத்துஸ்வாமியய்யர் போன காரியம் முற்றும் பிரதிகூல மாய் முடிந்தது. இவர் சேர்ந்திருந்த வியாபாரச் சங்கத்தில் முக்கிய உத்தியோகஸ்தர்களாயிருந்த இரண்டு பிராமணர்கள் பணம் முழுவதையும் தஸ்கரம் செய்துகொண்டு எங்கேயோ போய்விட்டார்கள். போன இடம் தெரியவில்லை. பாவம் முத்துஸ்வாமியய்யருடைய சகல சொத்தும் திடீரென்று ஒருவ னுக்குப் பேதி வந்திறந்தால் எப்படியோ அப்படி ஒரேயடி யாய்ப் போய்விட்டது. நெடுநாள் சேகரித்த பெருந்திரவியம் திடீரென்று போய்விடுமானால் அவருக்கு என்ன வருத்த மிராது? ஆனால் அவர் தன் விசனத்தை விரக்தியினால் கண்டித் துக் கொண்டு காஷாயம் வாங்கிக்கொண்டு அநியாயம் நிறைந்த இவ்வுலகத்தை விட்டுத் தொலைந்துவிடுகிறதென்று தீர்மா மானம் செய்தார். தன்னைச் சந்நியாசியாகும்படி கடவுள் தனக்குத் துன்பங்களை யுண்டாக்கித் தூண்டுவதுபோல அவருக்குத் தோன்றிற்று. ஊருக்கு வந்து கமலாம்பாளுக்கு ஏதாவது ஒருவழி செய்துவிட்டு ஆச்ரமம் பெற்றுக் கொள்ளு கிறதாய்த் தீர்மானம் செய்துகொண்டு வரும் வழியில் ஆருத்திரா தரிசனம் நேரிட்டபடியால், சிதம்பரத்தில் இறங்கி ருத்திரர் லோகநாசனப் பிரளயஸ்மசானத்தில் தாண்டவம் செய்வதைப் பார்த்துத் தானும் தனது துக்கங்களை நசித்து அவற்றின் மேல் ஆனந்தத் தாண்டவம் செய்யவேண்டி விரக்கி வைராக்கியத்தைப் பலப்படுத்திக்கொண்டு போகலாமென்று தில்லை க்ஷேத்திரத்துக்கு வந்து சேர்ந்தார். அபரிமிதமான கூட்டத்தின் மத்தியில் பகவான் உலாவி வருவதை அவர் கண்டு பிராந்தராய் நின்று மதிமயங்கிக் குழந்தை நடராஜனைப் பற்றி யுண்டான ஞாபகத்தைச் சந்தோஷமாய்க் கண்டித்துப் பகவானுடைய தாண்டவ ஸ்வரூபத்தில் அமர்ந்து பிரம்மா னந்தத்தில் மூழ்கி ‘என் குழந்தையைத் தமது பாதாரவிந்தத் தில் சேர்த்துக்கொண்டதுபோல என்னையும் சேர்த்துக் கொண்டு அனுக்ரஹிக்க வேண்டு’மென்று அந்தரங்க பக்தி யுடன் ஈசுவரனைத் தியானிக்கும்போது, “யார் முத்து ஸ்வாமியா; எப்பொழுது வந்தாய், வா வா. இப்பொழுதுதான் வந்தாயோ?” என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த் தார். சிறுகுளம் ஈச்வர தீட்சதர் நின்றுகொண்டிருந்தார். அவரை வந்தீரா என்று விசாரித்துவிட்டு, பகவத் தியானத்தில் மறுபடி அவர் பிரவேசிக்க, ஈச்வர தீட்சதர் அந்த மட்டுடன் அவரைவிடச் சம்மதமில்லாமல் “முத்துஸ்வாமி, க்ஷேமந்தானே; உடம்பு ஏது இளைத்திருக்கிறாற்போல் இருக்கிறது, எங்கே பம்பாய்க்கா போயிருந்தாய்?” என்று இப்படிப் பேச்சுக் கொடுத்துக்கொண்டே கூட்டத்தினின்று அவரைப் பிரித்துத் தனியே ஓரிடத்துக்குக் கூட்டிப்போய் மற்றும் க்ஷேமலாபங்களை அன்புடன் விசாரிப்பவர்போல விசாரித்துப் பிறகு வெகு உறவாக நெருங்கி தாழ்ந்த குரலுடன் “அநியாய மாய் அசந்தர்ப்பமாய் போய்விட்டது, போனதைக் குறித்து ஒன்றும் விசனப்பட வேண்டாம். உனக்கே இதற்குள் சமாசாரம் தெரிந்திருக்கவேணுமே’ என, முத்துஸ்வாமி யய்யர் “என்ன விசேஷம்! எனக்கு ஒன்றும் தெரியாதே’ என்றார். தீட்சதர் “அப்படி ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை. உனக்குத் தெரிந்திருக்கு மென்றல்லவா எண்ணினேன். இல்லா விட்டால் நான் பிரஸ்தாபமே பண்ணியிருக்க மாட்டேனே” என, முத்துஸ்வாமியய்யர் “என்ன சமாசாரம், வெறுமனே சொல்லுங்கள்” என்று பலவந்தம் பண்ண, தீட்சதர் சுவாமி தரிசனம் பண்ணுவோம், அந்த இழவுப்பேச்சு இப்பொழுது என்னத்துக்கு; பம்பாயிலெல்லாம் வெகுபேர் தனிகர்களிருக் கிறார்களாமே” என்றார். 

முத்: அது கிடக்கட்டும், நீங்கள் சொன்னது என்ன சொல்லுங்கள். 

தீட்: அது ஒன்றுமில்லை என்கிறேன். காசிக்கும் பம்பாய்க்கும் 30,40-மைலிருக்குமா? நிரம்ப சமீபமென்று சொல்லுகிறார்களே. 

முத்: நான் என்ன கேட்கிறேன், நீங்கள் என்ன சொல்லு கிறீர்கள்? ‘தில்லைக்கு வழி யெது என்றால் சிவப்புக்காளை முப்பது பணம்’ என்று பதில் சொன்ன கதையாயிருக்கிறதே! அதைத் தயவுபண்ணி என்ன என்று சொல்லுங்கள். 

தீட் : நல்ல சங்கதியாயிருந்தால் அப்பொழுதே சொல்லி யிருக்கமாட்டனோ? என்னவோ கழுதை பெண்டுகளுடைய சுவாபமிப்படித்தான்- சொல்லுகிறார் கீதையிலே- 

முத்: அது கிடக்கட்டும். பெண்டுகளா! யார்? என்ன சமாசாரம்? 

தீட்: தன்னாலே நாளைக்கு ஊருக்குப் போகிறாய், தெரிகிறது. அதற்கென்ன இப்பொழுது அவசரம்; ஒன்றும் இல்லை. விசனப்படாதே; பகவான் ஒருத்தர் இருக்கிறார். அவர் சூத்திரதாரி, நாம் சூத்திரப் பாவைகள். அவர் ஆட்டி வைக்கிறார், நாம் ஆடுகிறோம். புருஷ சூக்தத்திலே சொன்னார்- 

முத்: அது இருக்கட்டும், சங்கதியைச் சொல்லுங்கள். அது என்ன கெட்ட சங்கதியாயிருந்தாலும் சரி, சொல்லி விடுங்கள். நடந்தது நடந்துபோய்விட்டது. இனிமேல் நீங்கள் சொல்லுவதில் என்ன குற்றம்? வெறுமனே சொல் லுங்கள். 

தீட்: ஸ்திரீகளே மாயாரூபிணிகள். அவர்களை ஒன்றும் நம்பக்கூடவில்லை. கலிபுருஷன் லோகத்திலே வந்து நர்த்தனம் பண்ணுகிறான்,பேதி வைசூரி வந்து நர்த்தனம் பண்ணுகிறாற் போல. அதிலே வர்ஜா வர்ஜம் இல்லை, பிதா இல்லை,பர்த்தா இல்லை, சகோதரன் இல்லை, பந்து இல்லை, போய்விட்டது காலம். இந்தக் காலத்துக்குச் சிதம்பரம் நல்ல திவ்யமான க்ஷேத்திரம். அதுவும் இன்றைக்கு உண்டேயல்லவா… 

முத்: உங்களுக்கு இது நன்றாயிருக்கிறதா? முப்பது தடவை கேட்டாய்விட்டது. சுற்றிச் சுழட்டுகிறீர்களே யொழிய, காரியத்தைச் சொல்லமாட்டேன் என்கிறீர்களே. சீக்கிரம் சொல்லுங்கள். 

தீட்: நான் சொல்லத்தான் வேணுமா? தொந்தரவு பண்ணுகிறாயே, அப்படியொன்றும் அதிசயம் இல்லை. லோகத் திலே நடக்காதது இல்லை. இருந்தாலும் இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா என்றாற்போல கமலாம்பாள்கூட இப்படிப் பண்ணுவாளா என்பதுதான் ஆச்சரியம். ஏதோ காலவிசேஷம், பூர்வஜன்ம கர்மவாசனை. விட்டுத்தள்ளு கழுதையை; போனாற் போகிறது. 

முத்: யார்? என் சம்சாரமா! என்ன சங்கதி,என்ன அது! (பதறி) செவ்வையாகச் சொல்லுங்கள்! 

தீட் என்னத்தைச் சொல்லுகிறது, என்னவோ யாரோடேயோ என்னமோவாம். கண்டுவிட்டார்கள். ஊரில் கூக்குரலாய் விட்டதாம்; என்னவோ உனக்குத் தெரிந்திருக்கு. மென்றல்லவோ இந்தப் பிரஸ்தாபத்தை யெடுத்தேன். கிடக்கிறது கழுதை! இதற்காக ஒன்றும் விசனப்படாதே. பகவான்கூடச் சொல்லுகிறார், இந்திரியஸ்யேந்திரஸ்ய சர்வ கர்மாணி- 

முத்: நிஜமாகத்தானா? யார், என் அகமுடையாளா. எப்பொழுது, எங்கே, என்றைக்கு, யார்? நீங்கள் சொல்லு கிறது நிஜந்தானா? 

தீட்: பொய்யாக விருக்கவேண்டு மென்பதுதான் என் பிரார்த்தனையப்பா. ஊர் வதந்தியை நான் சொன்னேன். என்னவோ கையுங்களவுமாகக் கண்டுபிடித்து விட்டதாக எங்கேயும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நமக்கு என்ன வேண்டியிருக்கிறது! ‘ரூபம் மகத்தே’- 

முத்: எந்தப் பயலோடே இவ்வளவும்? ஆ! 

தீட்: அதெல்லாம் என்னத்துக்கு விசாரிக்கிறாய்? விட்டுத் தள்ளு கழுதையை! அதைச் சொன்ன நாக்குக்குக்கூட தோஷம் சொல்லுகிறார் ஸ்மிருதிக்காரர். போனாற் போகி றது. பிள்ளையைப் பறித்துக் கொண்டு போய்விடலாம், பெண்டாட்டியைப் பறித்துக்கொண்டு போய்விடலாம், பகவானைப் பறித்துக்கொண்டு போக முடியுமா? எங்கும் நிறைந்தவராய் எல்லோருக்கும் சமமாய்-என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தேவி சுப்பம்மாள் அவர்களிடம் வந்து சேர்ந்தாள். 

தீட்சதரும் அவளும் கூடிப் பேசிக்கொண்டபடி அவர் பேசி முடித்தவுடன் அதுவரையில் மறைந்து நின்று கவனித்துக்கொண்டிருந்த அவளும் வந்து சேர்ந்தாள். வந்தவுடன் ‘முத்துஸ்வாமி, என்னப்பா, குழந்தை போச்சு,தம்பி போனான். இவ்வளவு போயாதா? (போதாதா ) அந்தப் பாவி முண்டையுமா அப்படிப் பண்ணவேணும். என்னவோ உன் தலைலெயுத்து. நீ ஓயு பிள்ளை பியந்து இப்படியெல்லாம் அவதிப்பட வேண்டுமென்று வயம் வாங்கிவந்தாய்” என்று விஸ்தாரமாய்ப் பிரலாபிக்கத் தாட டங்கினாள். முத்துஸ்வாமி யய்யருக்குக் கொஞ்சம் அறைகுறையாயிருந்த அவநம்பிக்கை இப்பொழுது ஒழிந்துபோய்விட்டது. ‘அப்படியா பண்ணி அடி சண்டாளி, பாவி, என்ன மோசம்! எந்தப் போக் கிரிப் பயலோடே இவ்வளவு அக்கிரமம் பண்ணினது அந்த முண்டை?” என்று கேட்டார். தீட்சதர் “அந்த வயிற்றெரிச்சலை கேட்கிறாய் போ. அந்தக் காவாலிப் பயல் நாரா யணசாமி இருக்கிறானோ அல்லவோ, போக்கிலிக் கூத்தாடிப் பயல், அவனோடேதான். சிவசிவா, எத்தனை நாளைப் பழக்கமோ அவர்களிரண்டு பேருக்கும், என்ன இழவோ. அன்றைக்கு என்னவோ போதாத வேளை, கண்டுபிடித்துவிட் டார்கள்.ஊரெங்கும கூக்குரலாய் விட்டது, பாபம், பாபம்’ என, சுப்பம்மாள் ‘அவனோடே இத்தனைநாள்,ஊயை (ஊரை) விட்டு ஓடிப்போயியுப்பள்.நான் வயபோதே, “தெயிந்ததோ தெயிந்துபோச்சு, எங்கேயாவது யென்டு பேயுமா ஓடிப்போய் விடவேணு” மெயு சொல்லிக்கொண்டியுந்தாள். இந்தப் பியாமணய் எனக்கு முன்னேயே வந்துவிட்டாய் () அவய் வந்து பத்து நாளாச்சு” என்று சொல்லி முடிக்க, தீட்சதர் “ஏன் பத்து நாளாகப் போவானேன்? நாயிறோடே நாயிறு எட்டு, ஒன்பது,பத்து இன்றைக்குச் சரியாகப் பன்னிரண்டு நாளாய்விட்டது.-முந்தின நாள் சாயந்திரம்தான் அவர் உண்மையாய் வந்தது- நாழிகையாய்விட்டது சுவாமியோடு கூடப் போகவேணும். நீ வருகிறாயோ’ என, முத்துஸ்வாமி யய்யர் “இல்லை, நீங்கள் போய்விட்டு வாருங்கள்’ என, அவரை விட்டுவிட்டு தீட்சதரும் சுப்பம்மாளுமாகப் போனார்கள். 

அப்பொழுது முத்துஸ்வாமியய்யருடைய நிலைமை யின்னபடி யென்று சொல்லிமுடியாது. ‘ஐயோ பகவானே, 

நீயேன் என்னை இப்படிச் சோதிக்கிறாய். பகவான் என்று நீ ஒருவன் இருக்கிறாயோ அதுவும் இல்லையோ, குழந்தையை யிழந்தேன், சகோதரனை யிழந்தேன், சொத்தனைத்தையு மிழந்தேன், அவ்வளவும் போதாதென்று என் பேரையும் என் பெண்டாட்டியையுமா இழக்கவேணும்! ஐயோ ராட்சஸி, எனக்கு எமனாக வந்தாயா ! நீ பேசாமல் கொஞ்சநாளாயிருந்த போதே எனக்குச் சந்தேகமுண்டு. ஸாஹஸி! என் காலைப்பிடித் துக் கட்டியழுதையா, நீலி, சண்டாளி, முகரையைப் பாரு, முகரையைக் குத்து. அந்த ஸாஹஸக் கண்ணிலே அழகென்ன வேண்டியிருக்கிறது அழகு! கன்னத்திலறைந்து வரிசையாக இருக்கிறதே அந்தப் பல்லை உடை; சிவசிவ! நான் இவளுடன் வாழ்ந்திருக்கவேண்டுமா! நான் அங்கிருந்தால் ஒரு கொலை நடந்திருக்கும்; உன்னைக் கொல்வானேன், நான் செத்துப் போகிறேன்; உனக்கு ஊரெல்லாம் புருஷன்; சுகமாய் தீர்க்க சுமங்கலியாய் சாசுவதமாய் வாழ்; நீ ஏன் சாகிறாய்?- ஐயோ உனக்கும் எனக்கும் இப்படியா முடியவேணும்! நீலி, சண்டாளி, பாதகி, ராட்சஸி. ஒருவேளை சுப்பு சொன்னது பொய்யாயிருக்குமோ? தீட்சதர் பொய் சொல்லமாட்டாரே; ஒருவேளை இரண்டுபேரும் கலந்து பேசிக்கொண்டு செய்திருப் பார்களென்றால் அதில் அவர்களுக்கு என்ன லாபம்? எனக்கு அவர்கள் விரோதிகளுமில்லையே, அவர்கள் பொய் சொல்ல வாவது! நம்முடைய அதிர்ஷ்டத்துக்கு எதுவும் அசாத்திய மில்லை!’- என்று இப்படி அவர் யோசனை செய்துகொண்டு போ போகும்பொழுது, சிறுகுளத்து மனிதர் நாராயண அய்யர் என்ற ஒருவர் முத்துஸ்வாமியய்யரைக் கண்டவுடன் துக்ககர மான குரலுடன் யோகக்ஷேமங்களை விசாரிக்கத் தொடங் கினார். முத்துஸ்வாமியய்யருக்கு இருந்த சந்தேகம் மீதியில்லா மல் நிவர்த்தியாயிற்று. ‘இந்த உலகத்தில் சுவாமியாவது, பூதமாவது: நல்லவனுக்குக் காலமில்லை. கொலை, வியபசாரம், திருட்டு இதுதான் இந்த உலகத்துக்குத் தகுந்த தொழில். ஒரு பாவத்தையு மறியாத எனக்கு இப்படி ஆபத்து மேல் ஆபத்தாய் வரவேண்டுமா! கடவுளுக்குக் கண்ணவிந்தர் போய்விட்டது! அடா தெய்வமே!– சுவாமியோ இல்லை யென்று நீர்ந்தது. இனிமேல் என்ன? இருந்தாலென்ன, போனாலென்ன! இருட்டினவுடன் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு பிராணனை விட்டுவிடுகிறேன். இருக்கிறது ஒரு குட்டி, அந்தக் கழுதையையும் இன்னொரு பயலுக்குத் தொலைத்தாய்விட்டது. தாயைப்போல் பெண். ஸ்ரீநிவாஸா ஜாக்கிரதை! என்னைப் போல மோசம் போகாதே. நன்றாய்ப் பொழுது விடிந்தது இன்றைக்கு; போகட்டும், என் ஆயுசுக்குக் கடைசி நாளாக வாவது இருக்கிறதேயல்லவோ ; நல்ல நாள்தான். சந்நியாச மும் ஆச்சு, கழுதையுமாச்சு. மொட்டையடித்துக்கொண்டு ஊரிலே பிச்சை யெடுத்துக்கொண்டு அப்படியாவது யாரைக் காப்பாற்ற வேண்டும்? கோவிலென்ன குளம் என்ன? எல்லா வற்றையும் நெருப்பை வைத்துக் கொளுத்து கழுதையை; கண்கள் நிறைந்த ஆகாயமே, உனக்குமா கண் தெரியவில்லை. உனது இடியோசைகள் எங்கேஒளிந்துவிட்டன.இந்த வீணிழவு களை ஒரு இடியில் தகர்த்தெரியமாட்டாயா!” என்று தனக் குள்ளேயே சொல்லிக்கொண்டு வழி நடந்தார். அன்று பகல் முழுவதும் அவர் சாப்பிடவேயில்லை. ‘இந்த வெட்கம் கெட்ட கட்டைக்குச் சோறு வேறேயா! அந்தத் தட்டுவாணி முண்டை யைத் தொட்ட கட்டையை எங்கே போட்டுக் கொளுத்தி னாலும் பாவம் போகாதே. இந்தக் கட்டைக்குச் சோறு வேண்டுமா” என்று சொல்லிக்கொண்டு பகல் முழுவதும் ஒரு தோப்பில் விழுந்து கிடந்தார். ‘பசி,நன்றாய்ப் பசி,வேணும் அந்தக் கட்டைக்குத் தண்ணீர்கூடக் கொடுக்கமாட்டேன் என்று வைராக்கியமாய் நீர்கூடக் குடியாதிருந்தார். அந்தத் தோப்பில் குளிர்ந்த காற்று அடித்தது. ‘சீ! கழுதை! இந்தக் காற்று யாருக்கு வேண்டியிருக்கிறது. இந்த உலகத்துப் போக் கிரிப் புழுக்களுக்குக் குளிர்ந்த காற்று வேறே வேண்டுமா? என்று அவ்விடம்விட்டுக் காற்றடிக்காத உஷ்ணமான ஒரு டம் போய் உட்கார்ந்தார்.க அங்கே சில கிளிகள் ஒன்றோ டொன்று கொஞ்சி விளையாட வந்தன. இவர் சீ தரித்திரப் பிணங்களா, ஊரெல்லாம் வியபசாரமாய்க் கிடக்கிறது, உங்களுக்கு விளையாட்டென்ன வந்தது, இங்கே விளையாட்டு! என்று ஒரு கல்லை யெடுத்து எறிய அவைகள் பறந்து போய் விட்டன. ‘மனிதனுக்கு இந்த உலகந்தான் சரி, எல்லாப் பயல்களும் வியபசாரம் பண்ணுங்களடா ; கல்யாணமென்ன வந்தது, கல்லெடுப்பு என்ன வந்தது; எல்லா முண்டைகளும். தட்டுவாணித்தனம் பண்ணட்டும். திருடு, குத்து,கொல்லு, அதுவும் ஒரு வேடிக்கைதான். இந்த உலகத்துக்கு அதுதான் சரி’ என்றிப்படித் தனக்குள் பிதற்றிப் பகற்பொழுதைப் போக்கினார். கமலாம்பாளுடைய ஒவ்வொரு செய்கையையும் ஞாபகத்துக்குக் கொண்டுவந்து ‘சிரிப்பைப் பார் சிரிப்பை, முகம் ரோஜாப் பூப்போலே இருக்கிறதாம், அப்படி ஞாபகம். நாராயணசாமியை முத்தமிடுவதற்கு என்னை முத்தமிட்டுப் பழகிப் பார்த்துக்கொள்ளுகிறாயோ? சீ நாயே, மேலே கையைப் போடாதே, வெட்கம் கெட்ட படவா, அழுகிறாயா அழு; ஒரு புருஷன் கைக் கீழே இருக்கவேண்டி யிரு+கிறதே என்று அழுகிறாயோ அழு!’ என்றிப்படி ஒவ்வொன்றையும் அவளுக்கு விரோதமாக வியாக்கியானம் பண்ணி மனதில் தோன்றியபடி யெல்லாம் அவளை வைத்தார். பிறகு அஸ்த மித்தவுடன் எழுந்திருந்து ‘பாடும் பட்சிகளே, வீசும் காற்றே, மலரும் புஷ்பங்களே, துளிர்க்கும் மரங்களே, நீங்கள்தான் இந்த உலகத்துக்கு நல்லவர்கள், உங்களை யெத்தனை புழுக்கள் ஹிம்சை செய்கின்றன, (ஒரு வாடிப்போன புஷ்பத்தை எடுத்து) இந்தப் பூ யாரை என்ன பண்ணிற்று? இது போன போக்கைப் பார். இப்படியே நீங்கள் எல்லாம் சீக்கிரம் தொலைய வேண்டியதுதான், நானும் தொலையப்போகிறேன். உங்களுக்கு நிரமப வந்தனம். சீக்கிரம் இந்தப் பாழுலகத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று மரத்துக்கு மரம் புத்திமதி சொல்லிவிட்டு அதைவிட்டுப் புறப்பட்டு ஊர்மத்தியில் வர ‘கொலைக்காரக் கூட்டம், தட்டுவாணிக் கூட்டம்’ என்று மேளவாத்யம் கேட்டால் காதைப்பொத்திக் கொண்டும், ஸ்திரீகள் எதிரே வந்தால் கண்ணை மூடிக் கொண்டும், நரகலோக மத்தியில் போவது போல் விரைவாய்ச் சென்று உங்களுக்கும் நமக்கும் இன்றுடன் விட்டது: நாளை நீங்கள் எங்கேயோ நானெங்கேயோ, உங்களை விட்டுப் பிரிவதில் ஒரு பொட்டு கண்ணீர்கூட நான் விடமாட்டேன். சிதம் பரமாம் சிதம்பரம்; வெட்டவெளி யென்றர்த்தம். ஒன்று மில்லை, சுவாமியுமில்லை, அதுதான் சிதம்பரம். இந்தப் பாழுலகைவிட்டுப் போகிறேன். நம்முடைய பாக்கியந்தான் என்ன பாக்கியம்! அப்புறம் தட்டுவாணியாய்ப் போகப் பெண்டாட்டியு மில்லை. பறிகொடுக்கப் பிள்ளையு மில்லை. நம்முடைய பாக்கியமே பாக்கியம்! என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு கோவிலுக்கருகிலுள்ள ஓர் பாழ்மண்டபத்தை யடைந்தார். அங்கே பாம்புக ளிருக்கும் என்று ஜனங்கள் அதன் அருகில் வருவதில்லை. இருட்டினவுடன் அந்த மண்டபத்துள் அவர் சென்று படுத்துக்கொண்டு ‘மரியாதையாக என்னைப் பாம்பு கடித்தால் கடிக்கட்டும். இல்லையா,கயிறு இருக்கிறது கழுத்திருக்கிறது பார்ததுக் கொள்ளுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு படுத்துக் கொண்டார். ‘சீக்கிரம் நன்றாய் இருட்டமாட்டேன் என்கிறதே! இந்தப் பாழ் வெளிச்சம் யாருக்கு வேண்டியிருக் கிறது’ என்று சொல்லிப் படுத்திருந்து சிறிதுநேரத்துக்குப் பிறகு வேண்டிய இருட்டு வந்துவிட்டபடியால் எழுந்திருந்து’ சுவரில் ஆணியறைந்து ஓர் கயிற்றை அதில் கட்டித் தன் கழுத்திலும் சுருக்கிட்டுக்கொண்டு ‘தரித்திர உலகமே, நான் போய்வருகிறேன். அடிகுட்டி கல்யாணி உன்னம்மாள் முத்துஸ்வாமியை ஜாக்கிரதை பண்ணினதுபோல் நீயும் ஸ்ரீநிவாசனை ஜாக்கிரதை பண்ணிவிடு. முத்துஸ்வாமி யென்ற பெயர் இன்றோடு முடிந்தது’ என்று சொல்லிவிட்டு ஊசல் ஆட ஆரம்பித்தார். அப்பொழுது திடீரென்று ‘முத்துஸ்வாமி, முத்துஸ்வாமி, முத்துஸ்வாமி!’ என்று மூன்று தரம் ஒரு சப்தம் கேட்டது. ‘எங்கிருந்து வந்தது? அவ்வேளையில் தன்னையறிந். தவராக யாரிருக்கக்கூடும்?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தார். ஒன்றும் தென்படவில்லை, ‘சப்தமுமில்லை, ஒன்றுமில்லை; நம்முடைய மனது நம்மையே மோசம் செய்கிறது’ என்று சொல்லி மறுபடியும் கழுத்துச்சுருக்கை இறுக்க எத்தனித்தார். மறுபடியும் ‘முத்துஸ்வாமி, முத்துஸ்வாமி, பயித்தியக்காரா’ என்று மூன்று வார்த்தைகள் தெளிவாய்ச் சந்தேகத்துக்குச் சற்றும் இடமில்லாமல் கேட்டன.

– தொடரும்…

– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.

– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.

– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *