(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24
19 – புத்திர சோகம்
அந்த மந்திரவாதி ஊரைவிட்டுத் திடீரென்று போய்விட்ட படியால் அவ்வூரிலுள்ளவர்க ளெல்லோருக்கும் அவன்மேல் சந்தேகம் பலமாக ஏற்பட்டது. அவனைக் கண்டுபிடிப்பதற் காகச் சர்க்காரில் பலவிதமான பிரயத்தனம் செய்தும் ஒன்றும் பலிக்கவில்லை. முத்துஸ்வாமியய்யருடைய நிலைமையோ மிகவும் பரிதபிக்கத்தக்கதாயிருந்தது. ‘கண்ணிலான் பெற் றிழந்தானென,’ அதாவது பிறவிக் குருடனொருவன் கண்கள் பெற்று, நூதனமாகக் கிடைத்த அந்தப் பாக்கியத்தின் மூலமாக உலகத்தின் காட்சிகளை ஆவலுடன் கண்டு களித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென்று அந்தக் கண்கள் பார்வையை இழந்து விடுமானால் அவனுக்கு என்ன வருத்தம் உண்டாகுமோ அந்த வருத்தத்தை முத்துஸ்வாமியய்யர் முற்றும் அடைந்தார். குழந்தையே பிறவாமலிருந்தால் ஒரே துன்பமாகப் போய்விடும். குழந்தையைப் பெற்றுப் பிரியம் வைத்து வளர்க்கும் சந்தோஷத்தை அவர் அதிகமா யறிந்து இருக்கமாட்டார். நீடித்து நிற்கும் துக்கம் மனிதனுக்கு சகஜமாய்விடும். கையில்லாமல் பிறந்தவனுடைய துன்பத் தைக் காட்டிலும் கை பெற்று இழந்தவனுடைய துன்பம் அதிகமல்லவா? கடவுள் புத்திரபாக்கியத்தைக் காட்டி ஒளித்ததினாலல்லவோ பட்டணத்துப் பிள்ளையும் உலகத்தை வெறுத்து ஞானியானார். முத்துஸ்வாமியய்யர் முன்னமேயே உலக இன்பத்தில் அதிருப்தியும், மனிதர் நடத்தையில் அரு வருப்புமுள்ளவர் என்பது நமக்குத் தெரியும். இப்பொழுது குழந்தை போன பிறகு எல்லா விஷயத்திலும் அவருக்கு அருவருப்பு பலமாக ஏற்பட்டது. ‘என்ன பாழுலகம்! என்ன பாவம் பண்ணினேனோ இந்த ஜன்மம் நமக்குக் கிடைத்தது’ என்று அவர் அடிக்கடி சொல்லிக் கொள்ளுவார். சிற்சில சமயங்களில் ‘சுவாமியேது, பூதமேது, உலகமே ஒருவரை யொருவர் அடித்துத் தின்கிற வியாபாரந்தான்’ என்பார். வேண்டேன் இம்மாயப் புன்பிறவி வேண்டேனே’ என்ற வாக்கியத்தைப் பலமுறை தன் மனதுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொள்வார். யாராவது சிரித்து விளை யாடிக்கொண்டிருப்பது அவர் கண்ணுக்கு எதிர்ப்பட்டால் தன் பார்வையை விலக்கிக் கொண்டு ‘இதென்ன வேண்டியிருக் கிறது! ஐயோ, மூடன், மூடன்’ என்று, தன்னுள் சொல்லிக் கொள்வார். குழந்தையை நினைத்து விசனப்பட்டுக்கொண்டே நாலைந்து நாள் அன்னபானாதிகள் கூடச் செவ்வையாகச் செய்து கொள்ளாமல் வீட்டுக்குள்ளேயே முக்காடிட்டு துக்கித் துக் கொண்டிருப்பார். ஊராரெல்லாரும் வந்து அவருக்குத் தைரியம் சொல்லுவார்கள். சொல்லியும் அவர் துக்கம் ஆறாது. கமலாம்பாள் தன்னைத் தேற்றிக்கொண்டு அவரைத் தேற்ற உத்தேசித்துச் சில சமயங்களில் வேதாந்தம் பேசுவாள். சில சமயங்களில் பாடுவாள். சில சமயங்களில் சரஸ ஸல்லா பங்கள் செய்வாள். சில சமயங்களில் ‘குழந்தை அகப்பட் டாலும் அகப்படலாம்’ என்பாள். இப்படி அவரைத் தேற்றி அவர் விசனமாறித் தெளிந்திருக்கும் சமயத்தில் அவளுக்கு அடக்க முடியாதபடி துக்கம் மேலிட்டுக் கண்ணீர் கரகர வென்று பெருகும். அப்பொழுது அவரும் கூட அழுது கொண்டு ‘அழாதேடி’ என்று அவளைத் தேற்றுவார். எதைப் பார்த்தாலும் அவர்களுக்கு நடராஜன் ஞாபகம் வந்துவிடும். கொட்டாங்கச்சிகள், கயிறுகள், கொம்புகள் எல்லாம் அவர் களுக்கு அவன் ஞாபகத்தைக் கொடுத்து வருத்தும். அந்த விதமான துன்பத்தை ஒழிக்க நினைத்து அவர்கள் அவனுடைய பட்டு வஸ்திரங்கள், நகைகள், தொட்டில், பொம்மைகள் எல்லாவற்றையும் பிறருக்குத் தானம் செய்துவிட்டார்கள். அப்படி யெல்லாம் செய்தும் திடீரென்று எவ்விதமாகவோ குழந்தை ஞாபகம் அவர்களுக்கு வந்துவிடும். முத்துஸ்வாமி யய்யர் பூஜை பண்ணிக்கொண்டே யிருப்பார். உலக வாழ்க்கை எப்படியாவது ஒழிந்துபோக வேண்டுமென்ற வைராக்கிய சித்தத்துடன் அவர் சுவாமியைத் தியானம் பண்ணி பரமபக்தியுடன் மணியோசை செய்து தீபாராதனை நடத்திக் கொண்டிருப்பார். திடீரென்று குழந்தை ஞாபகம் வந்துவிடும். உடனே அவர் ‘ஐயோ, நடராஜா!’ என்று கதறிக்கொண்டு தீபத்தைக் கை நழுவ விட்டு விட்டு ‘ஹோ!’ என்று வாய் விட்டழுவார். வீதியில் போய்க்கொண்டிருக்கும் போதே யார் குழந்தையாவது எதிரில் தென்பட்டால் துக்கம் பெருக சரசரவென்று வீட்டுக்குள் வந்து ஒரு முறை கண்களைத் துடைத்துக் கொண்டு பிறகு வெளியே போவார். சில சமயங் களில் தெருவிலேயே நின்று அழுவார். எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து கொண்டிருப்பார். பாதி ஸ்நானம் ஆய்க் கொண்டிருக்கும்போதே அப்படியே ‘ஐயோ’ என்று கதறி யழுவார். கமலாம்பாளும் அப்படியே சமையல் செய்து கொண்டிருக்கும் போதும், ஸ்நானம் செய்து கொண்டிருக்கும் போதும் அழத் துவக்கி விடுவாள். துக்கம் என்பது அவள் விஷயத்தில் ஆராதித்து அழைக்கப்பட வேண்டிய அன்னி யனாக இல்லை. அவர்களுடைய குடும்பத்தில் ஐக்கியப்பட்டு இராப்பகல் பேதமில்லாமல் நினைத்தபோது வரப்போக அதிகார முடையதாய், காலியாயிருந்த குழந்தை நடராஜ கமலாம் னுடைய இடத்தை நிரப்பிக் கொண்டிருந்தது. பாள் தன் கணவரைத் தேற்றித் தூங்கச் செய்து, அவர் நன்றாய் நித்திரை செய்யும் நடுநிசியில் எழுந்து உட்கார்ந்து கொண்டு நடராஜனைக் குறித்துக் கண்ணீர் பெருக்குவாள். சில சமயங்களில் முத்துஸ்வாமி அய்யரும் விழித்துக்கொண்டு விடுவார். விழித்துக்கொண்டு விட்டால் விடிய விடிய அழுகைதான். ஆனால், அவளும் அவள் கணவரும் தங்க ளுடைய துக்கத்தை மறந்துவிட அநேக விதமான பிரயத் தனம் செய்தார்கள். உல்லாசமாகப் பேசுவது, சிரித்து விளை யாடுவது ‘என்னமோ இருக்கிறவரைக்கும் சுகமாக இருந்து விட்டுப் போகவேணும்; ஆய்விட்டது பாதி ஆயுசு, இனி மேல் ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ, இன்றைக்கோ நாளைக்கோ’ என்று சொல்லிக் கொள்வது, பாடுவது முதலிய உபாயங்கள் எல்லாவற்றையும் அவர்கள் பிரயோகித்தார் கள். ஒரு நாள் ராத்திரி நிலவு சுகமாயிருந்தது. அன்றைக்குக் கமலாம்பாளும் அவள் கணவரும் மாடியின்மீது உட்கார்ந்துகொண்டு வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந் தார்கள். பேசிக்கொண்டிருக்கும்போதே கமலாம்பாள், ‘இந்தச் சந்திரனைப் பாருங்கள், இவனுக்குத்தான் என்ன கொழுப்பு! ரிஷபம்போல் ஆகாயம் முழுவதும் நம்முடைய ராஜ்யந்தான் என்று உல்லாசமாக நமக்கு நிகரில்லை என்று திரிகிறான்” என்றாள்.
முத்துஸ்வாமியய்யர்:-“ஆமாம், அவனுக்கு என்ன? அவனெல்லாம் தேவலோகவாசி. பூமியில் ஊரும் புழுவாகிய நம்மைப்போலவா? ஒருவனை யொருவன் அடித்துத் தின்று கொண்டு நாம் இருக்கிறோமே அதுபோல இவனும் இருக்க வேணுமா?”
கமலாம்பாள்:-“அப்படியில்லை, அதற்குக் காரணம் உங்களுக்குத் தெரியாமற் போனால் நான் சொல்லித் தருகி றேன். கேளுங்கள், சொல்லிவிடுவேன், பார்த்துக் கொள்ளுங்கள். சொல்லியே விடட்டுமா?”
முத்.அ:- “சே ! அப்படிச் செய்யாதே அம்மா, பயமா யிருக்கிறது. அப்படி எல்லாம் பண்ணிவிடாதே.”
கம்:- “இதோ சொல்லப் போகிறேன். பத்திரம்! இதோ சொல்லியே விடப்போகிறேன். என்ன தெரியுமா! ரோஹிணி, அவன் சம்ஸாரம் அவன் கிட்டவே எப்பொழுதும் இருக்கிறாளல்லவோ, அவன் கொழுப்புக்குக் கேட்க வேண்டுமா? தெரிந்ததா? இப்பொழுதாவது தெரிந்ததா? அவர்கள் இரண்டு பேரும் யாரைப்போல் இருக்கிறார்கள் சொல்லுங்கள். அதாவது தெரிகிறதோ பார்ப்போம்.”
முத்.-“ஆமடி ஆமாம்! உன்னையும் என்னையும் போல, மத்தியான மெல்லாம் அழுதது மறந்துபோய் விட்டது! கிடக்கிறது ஏதாவது பாடு பார்ப்போம்.”
கம – “பாடட்டுமா. என் பாட்டைக் கேட்டு காற்று, சந்திரன் எல்லாம் மயங்கிப் பிரமித்துப் போகும்படி பண்ணி விடுகிறேன் பாருங்கள். ‘பனியால் நனைந்து வெயிலா லுலர்ந்து’- சீ! என்ன பாட்டு வருகிறது இந்தச் சமயத்திலே.”
கமலாம்பாள் பாட ஆரம்பித்தவுடன் அவள் மனதில் பதிந்து கிடந்த ‘பனியால் நனைந்து’ என்ற அரிச்சந்திர புராணப் பாட்டு அவள் ஞாபகத்திற்கு வந்தது. இது பாம்பு கடித்து இறந்த குழந்தை லோகி தாட்சனைக் குறித்துச் சந்திர மதி புலம்பியழுவதைச் சொல்லும் பாடல். தன்னை யறியாமல் அந்தப் பாடல் அவள் நாவில் எழ, அவள் அதை விட்டு, ‘போபோவேசெலியா’ என்று வேறு பாட்டைத் துவக்கி னாள். முத்துஸ்வாமியய்யர் “இது வேண்டாம்; ‘பனியால் நனைந்து’ என்ற பாட்டைத்தான் பாடவேண்டும்” என்று கட்டாயம் பண்ண, கமலாம்பாள் அதைப் பாடினாள். ‘தனியே கிடந்து விட நோய் செறிந்து தரைமீதுருண்ட துரையே, இனியாரை நம்பி உயிர் வாழ்வம் இறையோனும் யானும் அவனே’ என்று பாடும்போது அவளுக்குத்துக்கம் நெஞ் சடைத்தது. அவள் ‘ஐயோ என் குழந்தை?’ என்று அலறி விட்டாள். “நடராஜா, நடராஜா, ராஜா என்று உன்னை செல்வப் பெயரிட்டழைத்தேனே ! ஐயோ ! இனிமேல் ராஜா வென்று யாரைக் கூப்பிடப் போகிறேன். அம்மா என்று என்னை ஆறுமாசம் நன்றாகக் கூப்பிடவில்லையே! உன்னைப் பெற்ற வயிறு நெருப்பாயெரிகிறதே. ஐயையோ இந்த நெருப்பு என்றைக்கு அணையப்போகிறது. ராஜா,நடராஜா அப்பா கூப்பிடுகிறாரடா, ஏனென்று கேட்க மாட்டாயே நடராஜா, நடராஜா இதற்குத்தானா உன்னைப் பெற்றெடுத் துப் பெயரிட்டது. உனக்குப் பால் கொடுக்கிறேனேடா, வாடா என்னப்பனே!அப்பா தங்கமே, முத்தே, மணியே உன்னைப் புத்திகெட்டுத் தெருவில் விட்டேனே. இப்படி யெல்லாம் வருமென்று நான் அறியேனே. உன்னைச் சிங்கா ரித்து உன்னழகைப் பார்த்து மகிழ்ந்தேனே. என் பாக்கியத் துக்கு எசோதையது கூடக் காணாதென்று இறுமாந்தேனே! சந்திரமதி செத்துப்போன குழந்தையையாவது மார்போ டணைத்துக்கொண்டு அழுதாளே, எனக்கு அதுகூடக் கிடைக்க வில்லையே! கை வேறு, கால்வேறு எங்கே புதைத்துக் கிடக் கிறாயோ? சிந்திப்போன உன் எலும்பையாவது உன்னைப் பெற்ற வயிறோடு வைத்து அணைத்துக்கொள்வேனே. நீ போன இடத்துக்கு என்னையும் கூட்டிப் போயிருக்கப்படாதா ஐயையோ?-” என்று இத்தனை நாழிகை அடக்கிவைத்த துக்க மெல்லாம் கலகம் செய்து கிளம்ப வாய்விட்டுப் பிரலாபித்து அழுதுவிட்டாள். அழுதுவிட்டு, முகத்தில் துணிபோட்டு விம்மி விம்மி அழுதுகொண்டிருந்த முத்துஸ்வாமியய்யரைப் பார்த்து, “என் புத்தி மோசம், அத்தனை சிங்காரம் சிங்காரித் துத் தெருவில்விட்டுவிட்டு அடுப்புக்காரியம் பெரிதென்று இருந் தேனே, என் பெற்ற வயிறு கொதிக்கிறதே” என்று சொல்ல, அவர், “வெளியே போய்வந்தேனே, நானாவது தேடிப்பிடித் தேனா! எந்தக் காளிக்குப் பலியோ எந்தக் குழியிலே கிடந்து அவன் எலும்பு அழுகுகிறதோ. ஆண் சிங்கமென்று இறுமாந் தேனே. அத்தனை அழகும் குழியிலேயா போய்விட்டது’ என்று அவர் அழுதார். இப்படி இருவரும் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு ‘ஓ’ வென்று இரவு முழுவதும் அழுது தீர்த் தார்கள். இவ்வாறு அன்று இரவு சந்தோஷமாகத் தொடங்கி விசனகரமாக முடிந்தது.
20 – அதிரகசியமான சில சங்கதிகள்
இவ்விதம் மூன்று வருஷகாலம் சென்றது. சூரிய சந்திர நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் தங்களுடைய நித்திய கர்மானுஷ்டானங்களை வழுவாமல் நடத்திவந்தன. கமலாம்-யாளும் முத்துஸ்வாமியய்யரும் விசனப்படுகிறார்களென்று அவைகளுக்கு யாதொரு கவலையும் இருப்பதாகக் காணவில்லை. நம்மை வென்ற கமலாம்பாள் மனங்கலங்கி உடல் வாடு கிறாளே யென்று மான், மயில், குயிலினங்கள் விசனப்படவு மில்லை. முத்துஸ்வாமியய்யர் புத்திரசோகத்தால் வருந்து கிறாரே யென்று சற்றும் கவலையில்லாமல் தூர்த்தத் தன்மை யை யுடைய காற்று மரங்களுடன் தாராளமாய் ஸல்லாபம் செய்வதும், அவைகளுடைய புஷ்பவர்க்கங்களை யனுபவித்தும், அவர்களுடன் மிருதுவாய் முத்தமிட்டுக் கொஞ்சிக் குலாவி அவற்றின் நலங்களைக் கொள்ளைகொள்வதும், ஒரு சமயம் ஊடிய கணவரைப்போல ஒரு வார்த்தையும் பேசாது ஒதுங்கி மௌனமாய் நிற்பதும், மற்றொரு சமயம் அவை களுடன் சேர்த்து ‘ஹோ’ வென்று வெறிக் கூப்பாடிட்டு ஊர்ப்புறங்களை யெல்லாம் சீரழித்துச் சிந்தைகுலையச் செய் வதுமாகிய ஊடலாடலின்பங்களைக் கூசாமல் எப்பொழுதும் போல அனுபவித்துக்கொண்டிருந்தது. முத்துஸ்வாமியய்ய ருடைய இஷ்டமித்திர பந்துக்கள் மாத்திரம் அவருடைய துக்கத்தைத் தங்களுடைய துக்கம் என்று பாராட்டி அவகாச மான வேளையில் வேறு யாதொரு காரியமும் செய்வதற்கு இல்லாவிட்டால் அவருடைய குழந்தை காணாமற்போன கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மற்றப்படி உருண்டு கொண்டேயிருக்கிற இவ்வுலகம் ஒருக்கணமும் இடை விடாது உருண்டுகொண்டேயிருந்தது. அம்பட்டன் மாரி யப்பன் க்ஷவரம் செய்வதும், வண்ணான் நாகன் வேட்டி துவைப்பதும், குசவன் குட்டையன் பானைசட்டி பண்ணு வதும், வேம்பப்பத்தன் வெள்ளி, பொன்களைத் (பிறரிடத்தி லிருந்து) தட்டுவதும். சூத்திரன் மூக்கன் மாடு மேய்ப்பதும், கணக்கு முத்துப்பிள்ளை கள்ளக் கும்பிடு போடுவதும், சேஷன் செட்டி கற்கண்டு விற்பதும், வைதீக ராமண்ணா பிராமணார்த் தம் சாப்பிடுவதும், வக்கீல் சேஷய்யன் கோர்ட்டுக்கு முன்னேயே கொள்ளையடிப்பதும், பிறப்போர் இறப்பதும், இறப்போர் பிறப்பதுமாக நாட்கள் வாரமாய், வாரங்கள் மாதமாய், மாதங்கள் வருஷமாய்க் கொஞ்சமும் கவலை யற்று ஸ்தூலித்துக்கொண்டு வந்தன.
இப்படிப் புனர்ஜன்மங்கூட இல்லாமல் இறந்துபோய்க் கொண்டிருந்த நாட்களுள் ஒருநாள் சந்தையிற் கூட்டமாகிய சென்னைமாபுரியில் (சென்னப் பட்டணத்தில்) தம்புசெட்டித் தெருவில் 321 நெ.வீட்டில் மாடிமீது இரண்டு வாலிபர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரியவன் மற்ற வனைப் பார்த்து “தபால்காரன் வருகிற சமயமாய் விட்டது. இன்றைக்கு வருமா காகிதம்” என்றான்.”அவன் என்ன இழவு இன்னும் வரவில்லை. நேற்று இத்தருவாய்க்கு முன்னேயே வந்துவிட்டானே. நானும் அரைமணியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்று சொல்லிக்கொண்டு மற்றவன் அறையைவிட்டுத் தெருவுக்கு நேராக மாடியில் வந்து நின்று தபால்காரன் வருகிற வழியைப் பார்த்தான். தபால்காரனைக் காணோம், பிறகு உள்ளே வந்து கடிகாரத்தைப் பார்த்தான். “இதென்ன சரியான மணியா, நேற்று நீ சாவி கொடுத்தாயா? மணி 9-ஆய்விட்டது, இன்னும் வரவில்லை” என்று சொல்லிக் கொண்டு மறுபடி வெளியே போனான், மறுபடி உள்ளே வந்து ‘இன்றைக்குக் காகிதம் இல்லைதான் போலிருக்கிறது. அதென்ன அப்படி எழுதாமலிருக்கமாட்டாளே. நடுவிலே. எங்கேயாவது தாமதப்பட்டுப் போய்விட்டதோ?’ என்றான். அதற்குள் உள்ளேயிருந்த அவனுடைய சிநேகிதன் ‘ஏதோ தெரியவில்லை, போகலாம் வா. சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்துக் கொள்வோம். இல்லாவிட்டால் சாப்பிட்டுவிட்டுத் தபாலாபீசில் போயாவது விசாரிப்போம். காகிதம் இருந் திருந்தால் வந்திருக்கும். இத்தனை நாழிகையாயிற்று, இன்றைக்கு இல்லை போலிருக்கிறது” என்றான். அதற்கவன் “என்னவோ ஸ்திரீகளை மாத்திரம் நம்பப்படாது. ஏதாவது உடம்பு கிடம்பு சௌக்கியமில்லையோ என்ன இழவோ இருக்கிறாளோ போய்விட்டாளோ அதைத்தான் யார் கண்டார்கள்” என்று சொல்லிவிட்டு ஒரு பக்கமாகத் திரும்பிக் கொண்டு தன் கண்ணினின்று ததும்பிய நீரைத் துடைத்து, தன் மனதுக்குள் ‘அடா போடா பைத்தியக்காரா, அவளே உன்னை லட்சியம் செய்யவில்லையாம், உனக்கு என்னடா இப்பொழுது. ஆனாலும் பிறந்தகத்துக்குப் போன பொண்டு களை நம்பக்கூடாது. கிடக்கிறாளடா விட்டுத்தள்ளு கழுதையை” என்று சொல்லிக்கொண்டு, தன் சிநேகிதனைப் பார்த்து, “ஏன் சாப்பிடப் போகலாம் வா” என்று உரக்கச் சொன்னான். பிறகு அவனும் அவனுடைய சிநேகிதனுமாகச் சாப்பாட்டுக்குப் போனார்கள். அன்றைக்கு அவனுக்குச் சாப்பாடு சாப்பாடாகவே இல்லை. காகிதம் வராததற்குக் காரணங்களைப் பற்றித் தன் மனதுக்குள்ளேயே ஆலோசனை பண்ணிக்கொண்டிருந்த அவனுக்கு மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தது ஒன்றும் கேட்கவில்லை. இன்ன சாதம் சாப்பிடுகிறோம் என்ற நினைவுமில்லை. ஒரு க்ஷணம் புன்சிரிப்பும் மறுக்ஷணம் கண்ணீர்த் துளியும் ஒரே க்ஷணத்தில் இரண்டும் உண்டாக அவன் முகம் ஐப்பசி மாதத்திய ஆகாயத்தின் முகம்போல மாறுபட்டுக்கொண்டிருந்தது. இவ்விதமாகச் சாப்பிட்டு, அவனும் சினேகிதனுமாகத் திரும்பி வருகையில் தபால்காரன் எதிரே வந்து அவன் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். ‘ஏன் இத்தனை நாழிகை” என்று தபால்காரனைக் கேட்டான். அவன் ” இன்றைக்கு மெயிலே இப்போதுதான் வந்தது” என்று சொன்ன மறுமொழிகூட காதில்படாமல் கடிதத்தை அவன் ஆவலுடன் உடை த்துப் பார்த்தான். அதில் அடியில் வருகிறபடி எழுதியிருந்தது:-
“என் அன்பை அதிகரிக்கின்ற என் பிராண நாயகராகிய சீமா அய்யரவர்களுக்கு அநேக நமஸ்காரம், க்ஷேமம், க்ஷேமத்துக்கு எழுதவும்.
“என் கடிதத்தைக் கண்டவுடனேயே பதில் எழுதுவதற்கு ஐயரவர்களுக்குச் சாவகாசப்படவில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள! பலஜோலிக்காரர். என் ஞாபகம் எங்கே யிருக்கப் போகிறது! மேலும் உத்தரவு கொடுக்க வேண்டிய வர்கள் உத்தரவு கொடுத்துத்தானே நீங்கள் பதில் எழுத் லாம். இருக்கட்டும், இருக்கட்டும்; நான் நேரில் வந்து உங்களுக்குத் தக்க வழி சொல்லுகிறேன். ராத்திரிக்கு ராத்திரியே வந்து ஓசைப்படாமல் என் மனதைத் திருடிக் கொண்டு போகிறது. அப்புறம் ‘கூகூ’ என்றாலும் போட்ட காகிதத்துக்குக்கூட பதில் கிடையாது. தைரியமிருந்தால் நேரே வரவேணும். இல்லாவிடில் சும்மாயிருக்கவேணும்.
“என் துரையே! நான் என்ன வேடிக்கையாக எழுத வேண்டுமென்றாலும் எழுத முடியவில்லையே. தங்களை விட்டுப் பிரிந்து அனலிலிட்ட மெழுகுபோல உருகி, சோனை மழை பெய்யுமே-ஒருதரம் காற்று வீசுகிறது உடனே பலபல வென்று மழை பெய்கிறது – அதுபோலப் பெருமூச்சும் கண்ணீரு மாய் வழியில் படுத்துக்கொண்டிருக்கும் மலைப்பாம்பைப் போல் ஓடாத இந்தப் பொழுதை ஓட்டித் தவித்துக்கொண் டிருக்கிற எனக்கு என்ன வேடிக்கை வேண்டியிருக்கிறது. போன ஜன்மத்தில் எந்த நேசமான தம்பதிகளைப் பிரித் தோமோ அந்தப் பாவம் நாம்தான் பிரியும்படி நேர்ந்தது. கடிதமாகிலும் என் விசனத்தை மாற்றிவிடுமென்றால் அதுவும் சரியானபடி வருகிறதில்லை. போகட்டும், இப்பொழுதாவது தயவுபண்ணி எழுதினீர்களே. கொஞ்சம் தாமதப்பட்டால் உடம்பு என்னமோ என்று சந்தேகமாயிருக்கிறது. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணச் சொல்லுகிறது. அப்படி விசனப் பட்டுக்கொண்டிருக்கும்போது தங்கள் கடிதம் வந்தது. தங்கள் தங்கக் கையினால் எழுதின அந்தக் கடிதத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தேன். அதைத் திருப்பித் திருப்பி வாசிக்கும்போது தங்களுடன் நேரிலே பேசினாற்போல நினைத்துக்கொண்டேன். அதைக் கட்டி முத்தமிட்டது தங்களைக் கட்டியணைத்து முத்தமிட்டதுபோல இருந்தது. கணையாழியைக் கண்ட சீதையைப்போல எனக்குச் சந்தோ ஷத்திலே கண்கள்கூடத் தெரியவில்லை. தங்கள் கடித மென்றால் அவ்வளவு சந்தோஷ முண்டாகும்போது நேரிலே காணப் போகிறோமென்றால் எவ்வளவு சந்தோஷமாய் இராது. நான் அவ்விடத்திற்கு அடுத்த வெள்ளிக்கிழமை அப்பா அம்மாளுடன் தங்களையே நேரில் காண கட்டாயமாய் வரப்போகிறேன். குழந்தை நடராஜனைக் குறித்து ராப்பக லாய்க் கதறுவதே எங்களுக்கு மணியமாயிருக்கிறது. அதுவும் அப்பாவும் அம்மாளும் அழுதழுது துரும்பாய் மெலிந்து விட்டார்கள். அவர்கள் வீணான இந்த ஞாபகத்தை ஒழிக்க எண்ணியே பட்டணம் வருகிறார்கள். என்னையும் விட்டுப் பிரிந்து அவர்கள் எவ்விதம் உயிர் வாழ்வார்கள். அடுத்த வாரம் கட்டாயம் வந்துவிடுவேன். சகுந்தலையை துஷ்யந்தன் பார்த்து ‘நீ யார்’ என்று கேட்டானே அந்த மாதிரி என்னையும் கேட்பீர்களோ. கேட்டால் என்ன பதில் சொல்லு கிறேன் என்று வேணுமானால் பாருங்களேன். பார்ப்போமே; பயணம் நிச்சயம். என்னால் தாங்கள் எவ்வளவு துன்பம் அடைந்தீர்கள். நான் பட்ட பாடெல்லாம் நீங்களும் பட்டி ருப்பீர்களே. என் துரையே, தாங்கள் என்பேரில் வைத் திருக்கிற அன்பை நினைத்தால் எனக்கு வருகிற சந்தோஷம் இவ்வளவு அவ்வளவு இல்லை. இப்பொழுது தங்களை அவ்விடம் காண சமீபித்துவிட்டபடியால் இன்னும் மேல் மேலும் பொங்குகிறது. நந்தன் சிதம்பரம் போக வேணும் என்று எவ்வளவு விசாரத்துடன் இருந்து அதைக் காணவும் எவ்வளவு சந்தோஷமடைந்தான் – அதுபோல நான் தங்களைக் காண வருகிற சந்தோஷத்தை அவ்விடம் வந்து தங்களிடம் ஒரு வார்த்தைக்கு ஒரு முத்தமாகத் தேனும் சர்க்கரையும் கலந் தாற்போல் கலந்து சொல்லி மகிழ்வேன். ஒருநாளும் நம்முடைய அன்பு தவறக்கூடாது. தங்களைக் காண், தங்கள் அன்பை ஒரு பூஷணமாகப் போட்டுக்கொண்டு தங்கள் கவலையை நீக்கி இருவரும் களிப்படைய அவ்விடம் வருகிறேன். நான் நளவெண்பா முழுவதும் பாடம் பண்ணிவிட் டேன். நான் எழுதிய கடிதத்தில் பிசகு அதிகமாயிருக்கும். தாங்கள் அதைக் கிழியாமல் வைத்திருந்தால் அவ்விடம் வந்து தங்களிடம் பிழையைத் திருத்திக்கொள்வேன். என் உடம்பு செளக்கியமா யிருக்கிறது. தங்கள் அன்பே எனக்குப் பூரிப்பைக் கொடுத்திருக்கிறது. நான் அவ்விடம் வருகிறபடி யால் கடிதத்தை நிறுத்தி நேரில் காண்போம். அதுவரையில் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாயிருக்கிறது. தங்க ளிடம் பக்ஷியாகப் பறந்து உடனே வந்துவிட வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது.
பிரியநாயகர் பாதத்தில்
தங்கள் இன்னுயிர்த் தோழியாகிய
லட்சுமி நமஸ்காரம்.”
இந்தக் கடிதம் இன்னாரால் எழுதப்பட்டதென்றும் இன் னாருக்கு எழுதப்பட்டிருக்கிறதென்றும் நாம் சொல்லாமலே இதைப் படிப்போர் அறிந்திருப்பார்கள். ஸ்ரீநிவாசன் இந்தக் கடிதத்தை ஆவலுடன் உடைத்து வாசித்தான். பிறகு மூடினான், மறுபடி வாசித்தான். தன் சிநேகிதன் சுப்பராய னுக்கு வாசித்துக் காட்டினான். மறுபடியும் தானாக வாசித்துக் கொண்டான். கண்களில் ஒற்றிக்கொண்டு முத்தமிட்டான். சந்தோஷத்தில் அவனுக்கு வாய் குழறிற்று. அவன் சிநேகிதன் சுப்பராயனும் அதிக சந்தோஷமடைந்து “உன் பெண்டாட்டி லட்சுமி யில்லை, சரஸ்வதியப்பா” என்றான். ஸ்ரீநிவாசனுக்குச் சாந்தி முகூர்த்தமான சமாசாரத்தை நாம் முன்னமே சொல்ல அவகாசப்படவில்லை. அவனும் லட்சுமியும் நளனும் தமயந்தியும் போல வெகு அந்நியோந்நியமாய் இருந்தார் கள் காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே. இன்பம்’ என்று சொல்லப்பட்ட இன்பத்தை அவர்களைப் போல் இவ்வுலசத்தில் அடைந்தவர்கள் கிடையாது.’இகத்துள சுகத்திற்கு அளவு கோலாய் பரத்துள சுகத்தை வரித்த சித்திர மாய்’ என்று வாணிக்கப்பட்டிருக்கிற உண்மையான அன்பின் மதுரமான அதிரகசியங்களை அவர்களைப்போல் அறிந்து அனுபவித்தவர்கள் இல்லை.
சாந்தி முகூர்த்தமாகு முன்னேயே அவர்களிருவரும் ஒருவருமறியாமல் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்ரீநிவாசன் சிறுகுளத்துக்கு வந்திருந்த நாட்களுள் ஒருநாள் கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் பண்ணிவிட்டுத் தன் மாமனாரகத்து வாசற்றிண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந் தான். அவனுக்குச் சில நாளாகத் தன் பெண்டாட்டியுடன் பேச வேண்டுமென்று ஆசை. ஆனால் சமயங் கிடைக்கவில்லை. சமயம் கிடைத்தால் தைரியம் உண்டாகிறதில்லை. அன்றைக்கு லட்சுமியைப் பற்றியே தியானம் செய்துகொண்டு மேலே சொல்லியபடி அவன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது ஒரு பிச்சைக்காரன் பிச்சைக்கு வந்தான். ஸ்ரீநிவாசன் ‘அவள் வந்தாலும் வருவாள் பிச்சை போட என்று ஆவலுடன் பார்த்தான். லட்சுமியும் அப்படியே சாதம் எடுத்துக்கொண்டு வந்தாள். இதுதான் சமயம் பேசுவதற்கு என்று ஸ்ரீநிவாசன் யோசனை செய்துகொண்டிருக்கும்போதே நெடுநாளாய்த் தன் அகமுடையானோடு பேச வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்த லட்சுமி ‘அவராகப் பேசுகிற வழியா யில்லை. இனி வெட்கப்பட்டு முடியாது, இதுதான் சமயம் என்று எண்ணி ஆசை தூண்ட, வெட்கம் கண்டிக்க, மிகுந்த பயத்துடன் அரை வார்த்தையாகச் ‘சாப்பிட வாருங்களேன்’ என்று வெகு இனிமையாகச் சொல்லி மெதுவாய்ச் சென்றாள். அதைக் கேட்டவுடன் ஸ்ரீநிவாசன் ஆனந்தத்தால் பரவசனாய் விட்டான். பதில் சொல்லக்கூட அவனுக்குச் சுய ஞாபக மில்லை. அவன் உள்ளம் வசந்தருதுவைப்போலக் குளிர்ந்து பூரித்தது மெதுவாய்ச் சொல்லப்பட்ட தன் பெண்டாட்டி யின் வார்த்தைகள் அவன் காதில் வீணாகானம் செய்து கொண்டு நின்றது. அதைத் திருப்பித் திருப்பித் தனக் குள்ளேயே சொல்லிக்கொண்டு அதிருசியான ஒரு பதார்த்தத்தை உண்ட டவன்போல் அந்த வார்த்தைகளை ஒவ்வொன்றாய் மெதுவாய் மென்று அனுபவித்து, கோயிலுக் குப் போய்விட்டு வந்த பலன் உடனே பலித்தது என்று மகிழ்ந்தான். இதுதான் அவர்கள் முதல் முதல் பேசின சமயம். பிறகு அவர்கள் அடிக்கடி ஒளிந்து ஒளிந்து பேசிக்கொண்ட ரகசியங்களை யெல்லாம் பலரறிய இங்கே சொல்வானேன்?
நமக்குள் தற்காலத்தில் சில சிறுவர்கள் ஸ்திரீகள் இருபது. வயதுக்கு மேற்பட்டு மணம் செய்தால்தான் புருஷனுடன் சுகிதது வாழக்கூடும் என்று நினைக்கிறார்கள். ஸ்ரீநிவாசன் லட்சுமி இவர்களுடைய நேசத்தை நன்றாய் அறிந்த எனக்கு அப்படித் தோன்றவில்லை.
ஸ்ரீநிவாசன் பி.ஏ. பரீட்சையில் எல்லாருக்கும் முதலாகத் தேறினான். அதன் பிறகு சட்டப் பரீட்சைக்குப் படிக்கும் போது அவனுக்குச் சாந்தி முகூர்த்தம் நடந்தது. குழந்தை. நடராஜனை யிழந்த முத்துஸ்வாமியய்யர், லட்சுமி ஸ்ரீநிவாசன் இவர்களுடைய சந்தோஷத்தில் தன் துக்கத்தை ஒருவாறாக மறந்திருந்தார். அதனால் லட்சுமியைப் புக்காத்துக்கு அனுப்பும்போது அவர் அழுத அழுகைக்கு அளவில்லை.’என் வீடு இனிமேல் பாழ். அடுப்பங்கரையில் எருக்கு முளைக்கட்டும், இனிமேல் எனக்கு என்ன’ என்றும், ‘ஐயோ இதற்காகத்தானே பெண்ணைப் பெற்றுக் கெட்டுப் போகாதே என்று சொல்லு கிறார்க ளென்றும் அவர் விசனப்படும்போது, ஸ்ரீநிவாசன் தகப்பனார் லட்சுமியைக் கொஞ்சநாள் வைத்திருந்து பிறகு அனுப்பி விடுவதாகச் சொல்லி ஆற்றினார். ஸ்ரீநிவாசன் பட்டணத்துக்குப் போனபிறகு கமலாம்பாளும் முத்துஸ்வாமி யய்யரும் ஒரு தக்க ஜாகையமர்த்திக்கொண்டு தங்கள் பெண் மாப்பிள்ளையோடு இருக்க உத்தேசித்தார்கள். லட்சுமியி னுடைய கடிதம் வந்த சில நாளைக்கெல்லாம் அப்படியே எல்லாருமாகப் பட்டணம் வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் கண்ட ஸ்ரீநிவாசன் தாயைக் கண்ட கன்று போலவும். துணையைக்கண்ட சக்ரவாகப் பக்ஷிபோலவும் ஆனந்தித்தான். வசதியான ஒரு கிரஹத்தில் அவர்கள் எல்லோரும் வெகு சந்தோஷமாய் வாழ்ந்தார்கள்.
21 – கடற்கரை விளையாட்டு
ஸ்ரீநிவாசனும் லட்சுமியும் அடிக்கடி சமுத்திரக் கரைக்குப் போவதுண்டு. குழந்தைகள் தாய் மடிமீதேறி ‘மண்டி’ போட்டு நின்று பாய்ந்து விளையாடுவதுபோல், அலைகளாகிய குச-லவன் இவர்களைப் போன்ற குழந்தைக் கூட்டங்கள், தாயாகிய கடலின் மடிமீது ஏறி நின்று ஓடியாடிப் பாய்ந்து கரையின் மீது தவழ்ந்து மணலை வாரி ஜலத்திலும் ஜலத்தை வாரி மணலிலும் போட்டுக் கருமணல் மத்தியில் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் எப்படியோ அப்படிச் சிறிய அளவற்ற பொன்மணல்கள் பிரகாசிக்கப் பற்பல விசித்திரக் கோலங்களை இயற்றி அழித்துப் பின்னும் இயற்றி நுரைத் தொகையையும் முத்தையும் சிந்தி நத்தைகளையும், சங்குகளை யும், கட்டைகளையும், உருட்டிப் புரட்டிப் பரப்பிப் புதைத்து ஒரு கணமும் ஓய்வொழிவில்லாத இவ்வித பால்ய லீலைகளைச் செய்துகொண்டிருக்கின்ற கடற்கரைக்கு ஒருநாள் அந்திப் பொழுதில் ஸ்ரீநிவாசனும் லட்சுமியுமாக வந்தார்கள். அன்று அஸ்தமன அழகை என்னென்று சொல்வது! பகல் முழுவதும் காணக் கண் கூசும் காந்தியுடன் ஆகாயம் பூமியாகிய இவ்விரு உலகங்களையும் தனது ஆஞ்ஞைக் குள்ளடக்கித் தனியரசு புரிந்த காம்பீரச் செல்வனாகிய சூரியன் விருத்தாப்பிய தசையடைந்து, அஜ,ரகு, திலீபாதி யரசர்களைப் பார்த்துத் தானும் ராஜ்யத்தைவிட்டுத் தவஞ். செய்யக் கருதினான்போல், சாந்தஸ்வரூபமாய் மாறிச் செந்தாமரை போல் மலர்ந்த தனது இனியமுகத்தை யாவரும் காணக்காட்டி அர்க்கியாதிகளால் தன்னை வாழ்த்தும் தனது பிரஜைகளிடமிருந்து விடைபெற்று (செவ்வானமாகிய) செஞ்சடை புனைந்து தனியே செல்ல, ‘இதுவும் உனது திருவிளையாடலே’ என்று பிரமிப்படைந்த பக்த கணங்கள் ஆறு, குளம், வீடுகள்தோறும் கைகூப்பி நின்று ‘ஆரே உன் அதிரேகமாயை யறிவார்’ என்று கடவுளைப் போற்ற; கடற் கரையிலோ, இன்று நம்முத்தியோகம் இத்துடன் ஒழிந்தது என்று தங்களுடைய மீன் நிறைந்த வலைகளுடன் கட்டை மரங்களையும், படகுகளையும் கரையில் சேர்த்துச் செம்படவர் கள் திரைகடலோடித் தாங்கள் தேடிய திரவியத்தை, கூடை யும் கையுமாய்த் தங்களை வழிபார்த்து, வந்தவுடன் கைகொட்டி நின்ற தம் பெண்டுகள் பிள்ளைகளுடன் பங்கு பகிர்ந்து நின்றனர் ஒருசார்.
மானினம் வருவபோன்று மயிலினந் திரிவபோன்றும்
மீனின் மிளிர்வபோன்று மின்னின மிடைவபோன்றும்
பொம்மெனப் புகுந்த ஆங்கிலேய மாதர்கள் தோகை போன்ற உடையும், அன்னம்போன்ற நடையும், கிள்ளை போன்ற மொழியுங்கொண்டு தங்களுடைய (அல்லது பிறருடைய)நாயகர்களோடு கைகோர்த்து, உரையாடி நகையாடினர் ஒரு சார். பள்ளிக்கூடத்துப் படிக்கும் பாலர் சிலர் கங்கைக்குப்போன கடாவின் கதையாய்க் கடற் கரையிலும் புஸ்தகங்களுடன் கட்டியழுதனர் ஒருசார். வாலிபக்கணவர் சிலர் தம் சிறு மனைவிமாரோடு கடல் காணத் துணிந்து கரையை அணுக அங்கு யாரேனும் எதிர்ப்பட்டால் தம்நோக்கு அகற்றித் தலை நாணி ஏதோ குற்றம் செய்தவர்போல நெஞ்சும் மார்பும் பதைபதைக்க மணற் புறத்துப் பதுங்கினர் ஒருசார். நாடுகள்தோறும் ஓடியலையும் லாடஜனங்கள் கடலைத் தொழுது கைகூப்பினர் ஒருசார். அடக்குவாரற்று ஆடியோடும் அலைகளையும் களிமயக்குற்றுக் கன்றுபோல் துள்ளிக் கடற்கரையில் நித்தியவசந்தம் செய்து வீசாநின்ற வாலிபக் காற்றையும் கண்டு தாமும் உற்சாகச் செறிவுற்றுத் தனியிடமடைந்து தம்மோசையைக் கடலோசை விழுங்குமென்று துணிவேறிப் பாடத்தெரியாதாரும் பாடினர் ஒருசார். ஏராளமாய் நிறைந்திருந்த மணற்பரப்பின்மீது சிலர் மல்யுத்தம் செய்து நின்றனர். சிலர் அங்கு வீசும் தென்றலைப்போல் ஓடியுலாவி ஓயாது அடிக்கும் அலைகளைப் போல் குதித்து விளையாடினர். சிலர் தனியே உட்கார்ந்து தங்களது குடும்ப ரகசியங்களை அலைகளுடன் சொல்லி யாற்றினர். இவ்விதம் ‘வெறி வெய் விதாலு’ (பயித்தியம் பலவிதம்) என்ற தெலுங்குப் பழமொழிக்கிணங்க பற்பல விசித்திரங்கள் நிறைந்த கடற்கரையில் ஸ்ரீநிவாசனும் லட்சுமி யும் ஓர் ஓரப்புறத்தில் ஒரு படகின் மறைவில்) நட்சத் திரங்களிழைத்த ஆகாயமாகிய முத்துப் பந்தலின்கீழ் சமுத்திர ராஜன் பாதகாணிக்கை கொடுத்துப் பாதபூஜை செய்ய, வாயுபகவான் சாமரை வீச, அனேக ஆயிரம் அலைகள் கூடி அனவரதம் முயற்சித்து இயற்றிய வெண்மணல் விமானத்தின் மீது தமக்கு நிகர் தாமேயென எழுந்தருளினார் கள். அவர்கள் உட்கார்ந்தவுடன் லட்சுமி பாடத்தொடங் கினாள். அஞ்சொற்கள் அமுதினின்று மள்ளிக் கொண்ட அவள், குயில், குழல், யாழ் இவற்றைப் பருத்த குரலுடன் பாட, ஸ்ரீநிவாசனுக்குப் பூலோகத்திலிருப்பதாக ஞாபகமே இல்லை.”விவரந்தெரியாத அலைகள் மட்டும் சிறிது நேரமாவது சப்தம் செய்யாது இருந்தால், கடலும் காற்றும் அப்படியே பிரமித்து மயங்கி யடிமையாய்ப் போயிருக்கும்” என்றான் ஸ்ரீநிவாசன்.
லட்சுமி: “ஆமாம், சமுத்திரம் இரையாமலிரு என்றால் இரையாமலிருக்குமாக்கும், நிரம்ப சரி” என்று அவனைத் தட்டிக்கொடுத்துக் கேலி பண்ணினாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் சந்திரனும் வந்தது. கரகர வென்று அமிர்த கவசம்போல் எழுந்து, ‘வெண்டாமரையின் மலர் பூத்த தொத்த தவ்வாழிவெண் திங்கள்’ என்றபடி தாமரைப் புஷ்பம்போல் விளங்கும் சந்திரனுடைய மெல்லிய ஒளி கடலில் பரவிற்று.
ஸ்ரீநிவாசன்: “சந்திரன் வந்துவிட்டானாம், சமுத்திரம் முகமலர்ந்து சந்தோஷத்தால் புன்சிரிப்புச் செய்கிறது,ஆஹா பேஷ்!”
லட்சுமி: “ஏன் அதற்கு அவ்வளவு சந்தோஷம் சொல்லுங்கள்?”
ஸ்ரீநி: “சந்திரன் விருந்தோ இல்லையோ அதுதான்.”
ல: “அப்படியில்லை, ‘கலந்தவர்க்கு இனியதோர் கள்ளு மாய்’ என்று சொல்லியிருக்கிறதல்லவோ. ஸ்திரீ புருஷர்கள் அன்பாய் இருந்தால் அவர்களுக்குச் சந்திரன் அமிர்தபானம் போலே -”
ஸ்ரீநி: ” யார் புருஷன்? யார் பெண்டாட்டி?”
ல: “சொல்லட்டுமா, இருங்கள் சொல்கிறேன். இந்தச் சமுத்திரந்தான் போய் பெண்டாட்டி; இளந்தென்றல் இருக் கிறதல்லவோ -”
ஸ்ரீநி: “ஆமாம், இருக்கிறது, அதற்கென்ன பண்ண வேண்டுமென்கிறாய். அது அப்படித்தான் இருக்கும்! நீ என்ன சொல்லுகிறது!”
ல்: ”போங்கள். நீங்கள் கேலி பண்ணுகிறீர்கள், நான் பேசவில்லை, போங்கள்.”
ஸ்ரீநி: “இல்லையடியம்மா சொல்லு; சே, கோபித்துக் கொள்ளாதே.”
ல: (ஸ்ரீநிவாசனுக்கு ஒரு முத்தம் கொடுத்து) “இளந் தென்றல்தான் சீமாவாம்; ஸ்ரீநிவாசனாம்) சமுத்திரந்தான் போய் லட்சுமியாம்; அலைகள்தான் குழந்தையாம்.’
ஸ்ரீநி: “அப்படியானால் காற்றிற்கு எத்தனை பெண் டாட்டி. அதோ அந்த மரங்கள் எல்லாம் காற்றிலாடுகின் றனவே, அவைகளும் அதற்குப் பெண்டாட்டிதானோ?”
ல: “புருஷர்கள் எப்பொழுதும் பொல்லாதவர்கள் தானே. அவர்களை நம்பப்படாதல்லவா. அதோ பாருங்கள், காற்று அந்த மரத்தைப் போய் முத்தமிடுகிறது. அந்த மரம் ‘நன்றா யிருக்கிறது! எல்லாரும் இருக்கிறபோதுதான் முத்தமிடுகிற தாக்கும்?’ என்று கொஞ்சம் கசுகசுவென்று சலித்துக்கொள்வ தாகப் பாசாங்கு பண்ணுகிறது.”
ஸ்ரீநி: ”ஆமாம் ஸ்திரீகளுக்கு எப்பொழுதும் பாசாங்கு. பண்ணுகிறதுதானே தொழில். மாமாலக்காரிகள், சேலை கட்டிய மாதரை நம்பினால்’-
என்று சொல்லி முடிக்குமுன் குபீரென்று ஒரு அலை சிதறி ஸ்ரீநிவாசன்மேல் ஜலத்தை வாரித் தூவிற்று.உடனே லட்சுமி தன் வஸ்திரத்தால் அவன் முகத்தைத் துடைத்து விட்டு, “இனிமேல் ஸ்திரீகளை வையாதேயுங்கள். வேணும், நன்றாய் வேணும்; பெண்டுகளைப் பழிக்கலாச்சா! திக்கற்ற வர்க்குத் தெய்வமே துணை” என்றாள்.
ஸ்ரீநி: “போக்கிரி சமுத்திரம். அதிகப்பிரசங்கி சமுத் திரம். புருஷனுக்கு அடங்காத பெண்டாட்டிபோல சதா கரையிலே மோதிக்கொண்டிருக்கிறது.”
ல: “ஆனாலும் இந்தச் சமுத்திரத்துக்கு நிரம்பக் கொழுப் புத்தான். உங்களைப்போலச் சாதுவாக இருக்கப்படாதா.’
ஸ்ரீநி : “அகஸ்தியர் ஒருதடவை முழுவதையும் ஆசமனீயம் பண்ணித் தீர்த்துவிட்டார். ராமர் ஒரு தடவை வயிற்றெரிச்சல் தீர அவமானம் பண்ணிவிட்டார். அப்படி யிருக்கிறதிலேயே இந்தப் பாடாயிருக்கிறது.”
ல் : “ஏன் அதற்கு முன்னாலேயே தேவர்களும் ராட்சதர் களுமாக இதனிடம் இருக்கிறதை யெல்லாம் கடைந்து எடுத்துவிடவில்லையோ! சந்திரன், லட்சுமி எல்லாவற்றையும் பறிகொடுத்த இந்தத் தரித்திரக்கடலுக்கு இத்தனை கர்வம் வேண்டி யிருக்கிறதா? நீங்கள் வந்திருக்கிறீர்களென்று கொஞ்சமாவது மதிப்பிருக்கிறதா பாருங்கள்.”
ஸ்ரீநி : “ஓஹோ! சரிதான், சமுத்திரத்தைச் சொல்லக் குற்றமென்ன, அதனுடைய லட்சுமி நீ வந்துவிட்டா யல்லவோ, அந்த சந்தோஷமா அதற்கு? அப்படிச் சொல்லு. இந்த அமர்க்களத்தில் என்னை எங்கே அது லட்சியம் பண்ணப் போகிறது. மேலும் எத்தனையோ பேர்கள் அதில் ஸ்நானம் பண்ணுகிறார்கள். அவர்களுடைய பாவமெல்லாம் அதற்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அந்தப் பாவத்தையெல்லாம் போக்குகிறதற்கு பதிவிரதா ஸ்திரீகளுடைய பாததூளிதான் மருந்து. பதிவிரதா சிரோமணி நீ வந்திருக்கிறாய். அது தான் அதற்கு இன்றைக்கு இவ்வளவு ஆஹ்லாதம்!”
ல்: “அதற்கு ஒரு அலையாவது என்கிட்ட வந்ததா ! என் மேலே ஒரு பொட்டு ஜலம் காட்டுங்கள். நீங்கள் சொல்லுகிறபடியில்லை. பிரகலாதனை இரணியன் சமுத்திரத் திலே தள்ளினபோது சமுத்திரம் அவனைத் தாங்கினதே, எதற்காக? அவன் மகா புண்ணியசாலி, அவனை யண்டினால் பாவமெல்லாம் போய்விடும் என்று. அதுபோல தாங்கள் ஐயர்வாள் இப்பொழுது விஜயம் பண்ணியிருக்கிறீர்கள். ஏகபத்தினி விரதர், போஜ ராஜாவுக்கு இரண்டாவதாகத் தங்களைத்தான் சொல்ல வேண்டும். அதுதான் தங்களைத் தொடுவதற்குச் சமுத்திரம் இவ்வளவு ஆத்திரப்படுகிறது. தொட்டாய் விட்டது. இப்பொழுது அலைகளெல்லாம் தேன்குடித்த நரி படுகிறபாடு’ படுகிறது.”
இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பெரிய அலையானது படையெடுத்து யுத்தத்துக்கு வரும் அரசனைப்போலக் கோஷித்துக்கொண்டு இவர்களைத் துரத்தி வர இவர்கள் ஓடினார்கள். பிறகு அவர்கள் கைகோர்த்துக் கொண்டு திரும்பி ஜெல்லிக்கட்டில், ‘நின்று குத்திக்காளை யுடன் விளையாடுவதுபோல அலைகளுடன் துரத்தும்போது ஓடி, ஓடும்போது துரத்தி, விளையாடினார்கள். பிறகு சிறு கட்டை ஒன்று அகப்பட, அதை ஜலத்திலெறிந்து ‘எனக்கு வேண்டாம் பூசினிக்காய், எனக்கு வேண்டாம் பூசினிக்காய்’ என்ற கதையாய் அலைகள் அதை மேட்டில் போட, இவர்கள் அதை மறுபடி ஜலத்தில் போட்டு ஒருவரோடொருவர் போட்டி போட்டு விளையாடினார்கள். இப்படி ஓடிக் களைத்து வீட்டுக்குத் திரும்பவிருக்கும் சமயத்தில் கடலோசை அவர் களுடைய காதில் தீர்க்கமாக நுழைந்தது. இதற்குமுன் தங்களுடைய சொந்த ஆரவாரக் கொதிப்பினால் கடலின் ஆரவாரத்தை அவர்கள் முழுதும் கவனித்து அறியவில்லை. இப்பொழுது அவர்கள் ஆடிப்பாடி அமர்ந்திருந்ததனால் இடை விடாமல் இம்மூட உலகத்துக்கு ஏதோ ஒரு அரிய பெரிய தத்துவார்த்த ரகசியத்தை உபதேசித்துக்கொண்டிருக்கிறாற் போன்ற கடலின் ஓசையைக் கிரஹித்து அதன் அர்த்தத்தை யும் அவர்கள் அறியலாயிற்று.
லட்சுமி “இருங்கள்,இருங்கள், இந்தச் சமுத்திர ஓசை யைக் காது கொடுத்துக் கேட்போம்” என்று சொல்லி தன் முழு மனதையும் செலுத்திக் கவனித்தாள். ஸ்ரீநிவாசன் அப்படியே செய்தான். கடலோசை விடபுருஷர்களின் விளையாட்டரவ மல்ல; வாலிப ஸ்திரீகளின் வம்புக் கூப்பாடல்ல; இனிய வீணையாதிகளின் கானம் அல்ல; வெற்றித் தம்பட்டத்தின் ஓசையுமல்ல. அந்தக் குரலில் களியாட்டத் தொனி கிடை யாது; சோக ரசம் உண்டு. ஆனால், புத்திரனை இழந்த பிதாவின் சோகம், புருஷனை இழந்த மனைவியின் சோகம் முதலிய சோகங்களுக்கும் அதன் சோகத்துக்கும் சம்பந்த மில்லை. புலையன் வயிற்றிற் பிறந்து “தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத என்று பறையறைந்த புண்ணிய புருஷருடைய இரக்கங் கலந்த சுயஞாபகமற்ற சோகத்துக்கும் ‘சுகமற்ற இப்பாழுலகத்தில் பந்துக்களையும் கொன்று சுகமனுபவிக்கக் கருதுவார்களா’ என்று சோகித்த அர்ச்சுனனுடைய சோகத் துக்கும் காம்பீரிய தன்மை கடலோசையின் சோகத்துக்கும் நிரம்ப நெருக்கமான சம்பந்தமுண்டு. ஆனால் அவர்களுடைய பறையோசையையும் குரலோசையையும் போன்று சிறுத் திராமல் அழிவற்று, ஆகாயமட்டுமளாவி அநேக ஆயிரம் சிரசுகளையுடையதாய் எள்ளருந்திசைகளோடி பரமாத்வை மூர்த்தீகரித்து நின்றாற்போல் நிற்கும் ஹிமோத்பர்வதமானது திடீரென்று ஒருநாள் தனது மெளனப் பிரசங்கத்தை நிறுத்தி வாய்திறந்து பேசினால் எப்படியோ அப்படிப் பெரிய, கம்பீர மான, பொருள் நிறைந்த, வேத ரகசிய தத்வார்த்தத்திற்குத் தக்கதோர் குரலுடனே கடலானது நம்முடன் இடையறாது வசனிக்கிறது. ஸ்ரீநிவாசனும் லட்சுமியும் காது கொடுத்துக் கவனிக்கவே, அவர்களுடைய இயற்கைக் குணத்தினாலும், அவர்கள் அப்பொழுது அடைந்திருந்த சமனத் தன்மையினா லும் அக்கடலோசையின் ரகசியார்த்தம் அவர்கள் இருவருக் கும் ஏக காலத்தில் தொனித்தது. தொனிக்கவே அவர்கள் “கடவுளின் மகிமையே மகிமை, ஆஹா!” என்று வாய்விட்டுச் சொல்லமாட்டாமல் சொல்லி ஆனந்தித்தார்கள். அப்பொழுது லட்சுமி “என்ன கம்பீரம், என்ன விஸ்தீரணம்/ அதில் எத்தனை கோடி ஜீவ ஜந்துக்களிருக்கின்றன? அதுவே தனியாக ஒரு உலகம் போலிருக்கிறது. அது ராத்திரிகூட தூங்காதோ?” என, ஸ்ரீநிவாசன், “சுவாமிக்குத் தூக்கம் உண்டோ! இதுவும் அவரைப் போலவே (மாயையாகிய காற்றினால் அலைகளை) சிருஷ்டிப்பதும் அழிப்பதுமாயிருக் கிறது. நாம் கடைசியில் ஈசுவரனைப் போய்ச் சேருவதுபோல அலைகளும் சமுத்திரத்தில் கலக்கிறது” என்று அத்வைதம் பேசிய பிறகு அவன் “இன்னொரு ஆச்சரியம் பார். இந்த அலைகள் பிறப்பதும், குதிப்பதும், சிரிப்பதும், ஓடுவதும், ஒன்றையொன்று அடிப்பதும், முட்டுவதும்,மோதுவதும், இறப்பதுமே தொழிலாயிருக்கின்றன. இவைகளுடைய வீணாரவாரத்தினால் விளையும் கடைசி யோசையோ இவை களுடைய சிரிப்பு விளையாட்டுக்கு முற்றும் விரோதமாய் கெட்டுப் “ஐயோ ஏன் இப்படி வீணாகக் கூப்பாடிட்டுக் கெட்டுப் போகிறீர்கள்!’ என்று சொல்லுவதுபோல் சோகத் தொனியை உடைத்தாயிருக்கிறது. இப்படித்தான் உலக வாழ்க்கையும்!” என்றான்.
லட்சுமி: ‘இப்படித்தான் மனிதனும் பிறந்து, சிரித்து, அழுது, சண்டை போட்டு ஆடிப்பாடிக் கடைசியில் அமரு கிறது. இங்கே ஒரு ஆள் இருந்தானே என்னடா மிச்சம் என்றால், ஒரு பிடி சாம்பல். அதையும் காற்று ஒருமூச்சில் வாரிக் கொண்டு போய்விடுகிறது. ‘ஏனடா இந்த விருதாச்சண்டை, இதில் உனக்கென்ன மிச்சம் மிஞ்சுவது, அவர் ஒருவர்தான்; போய் அவரைத் தேடு’ என்றும்,
‘நீரில் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் – நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று’
என்றும் இந்தச் சமுத்திரம் நமக்குச் சொல்லுகிறாற் போலிருக் கிறது” என்று சொல்ல இருவரும் சிறிதுநேரம் மௌனமா யிருந்தனர்.
ஸ்ரீநிவாசன், “ஏது பெரிய வேதாந்தியாகப் போய்விட் டாயே” என்று அவளைத் தட்டிக்கொடுக்க, தன்னைத் தட்டிக்கொடுத்த கைக்கு அவள் ஒரு முத்தம் கொடுத்தாள். இப்படி விளையாடிக்கொண்டு இவர்கள் வீடு வந்து சேர்ந் தார்கள்.
இவர்கள் போய்ச் சேர்ந்த பின்னடியிலேயே தபால் காரன் முத்துஸ்வாமியய்யர் பெயருக்கு ஒரு அவசரத் தந்தி கொண்டுவந்தான். முத்துஸ்வாமியய்யர் எங்கேயோ வெளியே போயிருந்தார். தந்தியோ ‘அவசரத் தந்தி’; சிறு குளத்திலிருந்து வந்திருக்கிறது. கமலாம்பாள் என்னமோ ஏதோ நீங்கள் உடைத்துப் பாருங்களேன்’ என்று மாப்பிள்ளை யைப் பார்த்துச் சொன்னாள். அதை உடைத்துப் பார்க்கிற வரைக்கும் ஒருவருக்கும் சமாதானம் இல்லை. ஸ்ரீநிவாசன் அது எப்பேர்ப்பட்ட தந்தியோ, நாம் உடைக்கலாமோ உடைக்கக்கூடாதோ என்று நெடுநேரம் ஆலோசனை செய்தான். அகத்துக்கு உள்ளே தந்தி வந்துவிடுகிறது என்றால் அப்புறம் என்ன பண்ணுகிறது. ஸ்ரீநிவாசனே கடைசியாய் அதை உடைக்க எத்தனித்தான்.
– தொடரும்…
– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.