(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21
16 – ‘பலீன் சடுகுடு’
சில நாளைக்குப் பிறகு கமலாம்பாளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நெடுநாளாய்ப் புத்திரபாக்கியமற்ற முத்து ஸ்வாமி அய்யருக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்ததில் உண்டான சந்தோஷத்துக்கு எல்லையில்லை. திடீரென்று கண் பெற்ற பிறவிக் குருடனுக்குக்கூட அவ்வளவு சந்தோஷ மிராது. கல்யாண காலத்திலேயே கமலாம்பாள் கர்ப்பவதி யாக இருந்தாள் என்று நமக்குத் தெரியுமே. ஆனால், அவ ளுக்குப் பெண் குழந்தைகள் பிறப்பதும் இறப்பதும் சகஜமா யிருந்தனவேயன்றி இதுவரையில் ஒரு ஆண் குழந்தையாவது பிறந்துகூட அவள் அறியாள். கன்னிகாதான பலன் கைமேல் சித்தித்ததென்று முத்துஸ்வாமி அய்யர் ஆனந்தித்துக் குழந்தை பிறந்த மறுநாளே சம்பந்தி ராமசாமி சாஸ்திரி களுக்கு இஷ்டமித்திர சஹ பரிவார பந்து ஜனங்களுடன் வந்து இருந்து புத்திரோற்சவத்தைச் சிறப்பிக்கும்படியாகக் கடிதம் விடுத்தார். அந்தக் கடிதத்தைக் கண்டவுடன் மாப்பிள்ளை ஸ்ரீநிவாசன், ராமசாமி சாஸ்திரிகள், கிருஷ்ண அய்யர் முதலிய எல்லோரும் சிறுகுளம் வந்து சேர்ந்தார்கள். புண்ணியாக வசனம் கிரமித்த பிறகு ஸ்ரீநிவாசனைச் சில நாள் இருந்து வரும்படி சொல்லிவிட்டு மற்றவர்கள் மதுரைக்குப் போய்விட்டார்கள்.
ஸ்ரீநிவாசன் வரப்போகிறான் என்ற செய்தி கேட்டது முதலே பொன்னம்மாள் மருமகன் வைத்தியநாதன் பொறாமையால் பொங்கிக்கொண்டிருந்தான். ‘அந்தப் பயல் வரட்டும், உண்டு இல்லை யென்று பண்ணிப் போடுறேன்’ என்று அவன் தனக்குள் பலமுறை பிரதிக்ஞை பண்ணிக் கொண்டான். தனக்கு இருந்த துவேஷத்தைத் திருப்தி செய்து கொள்ளுவதற்குச் சீக்கிரத்தில் அவனுக்கு ஒரு நல்ல சமயம் கிடைத்தது. ஒருநாள் சாயங்காலம் குங்கும நதி என்றும் ஸ்வர்ணபூரணி யென்றும் பெயர் பெற்ற அவ்வூர் ஆற்றங்கரையில் விஸ்தாரமாய்க் கிடந்த வெண்மணலில் நாற்பது ஐம்பது பையன்களாகப் ‘பலீன் சடுகுடு’ ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். இங்கிலீஷ் படிப்பு வர வர, நம்முடைய விளையாட்டுக்களைக்கூட நாம் மறந்துவிட்டோம். சூரியன் பட்டுப்போல் ஒளிவீசி மறைய இளவரசுபோல் காத்துக்கொண்டிருக்கும் சந்திரன் அரசாட்சித் துவக்கிக் காதல் மயமாய் உலகத்தைக் களிப்பிக்க, நட்சத்திரங்கள் பளீர் பளீர் என்று வெடித்து ஆகாயத்தில் நர்த்தனம் செய்யும் அரம்பை மாதர்களைப்போல் ஆனந்தமாய் விளங்க வெப்பந்தணிந்து, வானம் பசந்து குளிர்ச்சி மிகுந்து தென்றல் வீச, பகவத் பக்தியால் பூரித்த யோகிகள் மனம்போல சாந்தஸ்வரூபமாய் விளங்கும் அந்திப் பொழுதில் வீசுகின்ற தென்றலைப்போலவும், பாடுகின்ற பக்ஷிகளைப் போலவும், தங்களுடைய கவலைகளை மறந்து, பஞ்சு மெத்தைகளைப் போன்ற மணற்படுக்கைகளின் மீது உல்லாசமாய் ஓடி விளையாடுவதை விட்டு இக்காலத்திய சிறுவர்கள் பலர் பாம்பின் வாயிலகப்பட்ட தவளைகளைப்போல் புஸ்தகங் களுடன் கட்டியழுது பொழுது போக்குகிறார்கள்.
இதுநிற்க, சிறுகுளத்து ஆற்றங்கரையில் அன்று அநேக சிறுவர் கூடி ‘பலீன் சடுகுடு’ ஆடிக்கொண்டிருந்தார்கள். வைத்தியநாதன் தன்னுடைய மூர்க்கத்தனத்தினால் அவர் களுக்குத் தலைவனான். அவன் சேர்ந்திருக்கும் விளையாட்டில் ஸ்ரீநிவாசனுக்குச் சேர சற்றும் மனமில்லை. ஆயினும் அவனு டைய நல்ல சிநேகிதர்களில் சிலர் அதில் சேர்ந்தமையாலும், அவனையும் சேரும்படி அவர்கள் கட்டாயம் செய்தமையாலும் அவன் அதில் சேர்ந்தான். மேலும் அவனுக்கு அன்று சாயந் திரம் விளையாட்டில் விசேஷ திருப்தியிருந்தது. அன்று பகல் முழுவதும் அவன் நன்றாய் படித்திருந்தான். படிப்பைவிட்டு, வெளியே வந்தபொழுது ‘மதர்த்துத் திரியும் மான் கன்றைப் போல்’ அங்குமிங்கும் உல்லாசமாய் ஓடி விளையாட அவனுக்கு ஆசையாயிருந்தது.
அன்று அஸ்தமனம் வெகு அழகாயிருந்தது. கூட்டம் கூட்டமாய் மணிகளைச் சப்தம் செய்துகொண்டு மாடுகள் மலையிலிருந்திறங்குவதும், காக்கைகள் கா-கா என்று ஆனந்தக் களிப்புடன் ஆரவாரித்துக்கொண்டு வரிசைக் கிரம மாய் ஆகாயத்தில் பவனி செல்வதும், ஹம் என்று அடங்கிய சப்தத்துடன் வண்டுகள் சுருதி பாடுவதும், கிளிகள் ஆற்றங் கரையிலுள்ள அரசமரங்களில் கொஞ்சிக் குலாவுவதும், நதியில் ஜலம் கலக்குபவரற்று மிருதுவாய் வீணாகானம்போல் ஓடுவதும்,அடங்கிய அஸ்தமனத் தென்றலில் மூங்கில் மரங்கள் ‘மயில் போலாடி நயன மொளிப்பதும்’ கண்ட ஸ்ரீநிவாசனுக்குத் தன்னையறியாமல் ஆனந்தம் பெருகிற்று. அவன் நிமிர்ந்து பார்த்தான். அப்பொழுது ஆகாயத்தில் ஓர் அழகான ரோஜா வர்ணம் படர்ந்திருந்தது. சற்று நேரத்திற் கெல்லாம் அந்த வர்ணம் மாறி மிருதுவான நீல நிறம் பரவி மத்தியில் சிற்சில தீவுகளைப்போல மேகங்கள் தங்கியிருந்தன. ஒரே ஒரு நட்சத்திரம் மாத்திரம் உதயமாயிருந்தது. அது சிறிது தூரம் சஞ்சரித்துப் பிறகு மேகத்தில் மறைந்து மறுபடி வெளிப்பட்டு வழி நடந்த தோற்றம் அரணியத்தில் மரங்கள் மத்தியில் மறைந்தும் பிறகு வெளிப்பட்டும் அர்ச்சுனனைத் தேடியலைந்த ஊர்வசியைப்போல இருந்தது. இவ்வித இந்திர ஜால வேடிக்கைகள் நிறைந்த அஸ்தமன மஹோற்சவமானது வெகு அழகாயிருக்க அதைக் கண்ட ஸ்ரீநிவாசனுக்கு நதியாய் ஓடவும் இலைகளாக ஆடவும் பட்சியாய் பறக்கவும், நட்சத்திர மாய் உலாவவும் ஆசையாயிருந்தது. மணலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும், ஆனந்த நர்த்தனம் செய்யும் சந்தியா தேவியினுடைய மோகவலையிலகப்பட்டு சங்கீதத் தால் மயக்கமுற்றுப் படம் விரித்து ஆடும் பாம்புகளைப்போல் ஆடுபவர்களாக அவனுக்குத் தோன்றினார்கள். படமெடுத் தாலும் பாம்பு பாம்பே என்பதை மறந்து இங்குக் கூடிய சிறுவர்கள், மானிடக் குரோதங்களை ஒழித்து உயரப் பறக்கும் விஞ்சையர் குழாமென அவன் மதித்து, அவர்களுடன் தானும் விளையாட இணங்கினான்.
விளையாட்டு நடந்தது. ஒவ்வொருவரும் ‘பலீன் சடு குடு என்ற பீஜாட்சரத்தை ஜபித்துக்கொண்டு பகைவர்மீது படையெடுத்து முறைப்படி சென்றார்கள். ஸ்ரீநிவாசனுடைய முறையும் வந்தது. அவன் ‘பல், பல், பலீன் சடு குடு’ என்று பாடிக்கொண்டு போகும்போது மூச்சுவிட்டான் என்று பொய்யாவது சொல்லி அவன் மேலே கொக்கைபோலக் குறி வைத்திருந்த வைத்தியநாதன் அவனைப் பிடித்துக் கட்டிக் கீழே தள்ளி மணலில் தேய்த்து அடித்துக் கிள்ளிக் காயப் படுத்தினான். யார் வந்து விலக்கியும் அந்த முரட்டுப் பயலைத் தடுக்க முடியவில்லை. ஸ்ரீநிவாசன் பாவம் கதறுகிறான். அவனை அந்த மூர்க்கனிடத்திலிருந்து தப்புவித்து வீடுகொண்டுபோய்ச் சேர்ப்பது வெகு கஷ்டமாய் விட்டது. அவனுடைய சரீரம் மிக மிருதுவானதால் எங்கே பார்த்தாலும் கீறலும் காயமு மாக ஆய்விட்டது. நடந்த சங்கதியை அவன் வீட்டில் யாரிடத்திலும் சொல்லவில்லை. ஆனால் முத்துஸ்வாமி அய்யர் இவ்வளவும் நடந்துகொண்டிருந்தபோது ஆற்றங்கரையில் சந்தியாவந்தனம் பண்ணிக்கொண்டிருந்தார். அங்கிருந்த பையன்கள் அவரிடத்துப் போய் சகல சமாசாரத்தையும் விஸ்தாரமாகச் சொல்லிவிட்டார்கள். அதற்குள் தன் எதிரி யைப் பங்கம் செய்துவிட்ட கர்வ வெறியுடன் வைத்தியநாதன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். வரும்போது லட்சுமி கோயிலுக்கு நெய் விளக்குப் போட்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். அதைப் பார்த்த அந்த முரடன் அவள் மேல் ஒரே மோதாய் மோதிக்கொண்டு போனான். அவள் உடனே அழுதுகொண்டு அகத்துக்கு வந்து அம்மாளிடம் சொன்னாள். சொல்லிக்கொண்டிருக்கும்போதே முத்துஸ்வாமி அய்யர் வீட்டுக்கு வந்துவிட்டார். வந்தவுடன் ஸ்ரீநிவாசனை விளக்கு வெளிச்சத்திற்குக் கூப்பிட்டு அவனுடம்பைப் பார்க்க எங்கே பார்த்தாலும் காயமும் கீறலுமாயிருந்தது. அவருக்கு மனம் சகிக்கவில்லை. லட்சுமியினிடத்தில் அந்த வைத்திய நாதன் பயல் செய்த அக்கிரம்மும் காதுக்கு வந்தது. உடனே கோபாவேசத்துடன் தம்பியை அழைத்து வரும்படி ஆள் அனுப்பி வெளியே வந்தார். அப்பொழுது சுப்பிரமணிய அய்யரும் வைத்தியநாதனும் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். முத்துஸ்வாமி அய்யர் கூப்பிடவே சுப்பிரமணிய அய்யர் வந்தார்.
முத்துஸ்வாமி அய்யர் (அவரைப் பார்த்து) ‘என்னடா சுத்த அக்கிரமக்காரப் பயல்களை யெல்லாம் வீட்டில் வை வத்துக் கொண்டு – இது உனக்கு நன்றாயிருக்கிறதா?” என்றார். அவர் பின்னே வந்த வைத்தியநாதன் குகையிலிருந்து பாயும் சிங்கம்போல் பாய்ந்துகொண்டு எதிரே வந்து “என்ன அக்கிரமத்தை காணும் வந்து உம்ம நடுவீட்டிலே பண்ணிப் போட்டார்கள், அக்கிரமக்காரப் பயலாம், பேசுகிற கிரமத் தில் பேசும். இல்லையா பல்லுகில்லெல்லாம் போய்விடும், ராமேசுவரத்தைப் பார்க்க, உஷார்!” என்றதும் முத்துஸ்வாமி அய்யர் “ஏண்டா பயலே என்னடா சொன்னாய்?” என்றார். வைத்தியநாதன் “அதிகமாகப் பேசினால் பல்லுடைந்து போகும்; ஆள் எந்தவூர்ப் பேர்வழி என்று பார்த்துக்கிட்டீம்’ என், முத்துஸ்வாமி அய்யருக்குக் கோபம் காற்றுசேர்ந்த நெருப்புப்போல் எரிகிறது. அவர் தம்பியைப் பார்த்து ”உனக்குச்சரியாயிருக்கிறதா?” என்று கேட்டார்.சுப்பிரமணிய அய்யர் வைத்தியநாதனுக்குப் பரிந்துகொண்டு, “அவன் மேல் குற்றம் ஒன்றுமில்லாதபோது கோபித்துக்கொண்டால், யார்தான் பொறுப்பார்’ எனவே, முத்துஸ்வாமி அய்யர் “ஒரு குற்றமுமில்லையா, நல்லது நீ என்ன செய்வாய், என் புத்தியைச் செருப்பாலடிக்கவேணும்” என்று பின் வாங்கினார். அவர் தணிவதைக் கண்டு வைத்தியநாதன் சந்தேகத்துக்காக வைத்திருந்த சொற்ப மரியாதையையும் விட்டுவிட்டு ஏகவசனப் பிரயோகத்திலாரம்பித்துச் சரமாரியாய் ஹிந்துஸ் தானி துலுக்கு வார்த்தைகளுடன் இங்குச் சொல்லத்தகாத வசவுகளை வாரி வீச, அவன் இரைச்சலைக் கேட்டு ஜனங்கள் ஏகமாக வந்து கூடிவிட்டார்கள். கூடிய ஜனங்கள் தாங்கள் தெய்வமாய்ப் பாராட்டிவந்த முத்துஸ்வாமியய்யரை நோக்கி இவ்வளவு அக்கிரமமாய் பேசிய வைத்தியநாதன் பயலை காலையும் கையையும் கட்டி மிதிமிதியென்று மிதிக்கத் துவங்கி னார்கள். பெருந்தன்மையே பிறவிக்குணமாகவுடைய முத்து ஸ்வாமியய்யர் “அவன் மேல் என்ன தப்பிதம் பாவம்!என்னு டைய வேளைப்பிக்கு. அவனை யடிக்காதேயுங்கள்! விட்டு விடுங்கள், விட்டுவிடுங்கள்” என்று மன்றாடி அவனை விடுவித் தார். விடுவித்துவிட்டுத் தன் வீட்டை நோக்கி வெகு விசனத் துடன் சென்றார்.
அதன் பிறகாவது வைத்தியநாதன் என்ற துஷ்டப் பயலுக்கு விவரம் வந்ததா? இல்லை, அவன் முன்னிலும் பதின் மடங்கு பிதற்றினான். பொன்னம்மாள் கலகம் நடந்த இடத் திற்குச் சமீபத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பார்க்க வந்த பெண்டுகள் கூட்டத்தில் முத்துஸ்வாமியய்யரைக் குறித்து அலட்சியமாக அவதூறு செய்தாள். அவள் அவ்விடம் ஆஜரா யிருந்ததை அறிந்த சுப்பிரமணியய்யர் அவ்வளவு கலகத்துக்கும் வைத்தியநாதன் பக்கமாகவே இருந்து பேசினார். முத்துஸ்வாமி அய்யருக்கோ தன் ஆயிசு நாளில் அதுவரையில் ஒரு நாளும் நடவாதபடி அன்று நடந்ததைப்பற்றியும் ஒருவராவது தன்னிடத்தில் பேசத்துணியா த பேச்சை அந்த வைத்தியநாதன் பேசினதைப் பற்றியும், தன் தம்பியும் சகோதர விசுவாசத்தை மறந்து, அந்த துஷ்டப்பயல் பக்கமா யிருந்ததைப் பற்றியும் நினைக்க நினைக்க ஆறாத துக்கமும், கோபமும் மனவருத்தமும் மேலிட்டது. மேலிட்டும் அதை அடக்கிக்கொண்டு நாய்வேஷம் போட்டால் குலைக்க வேணும். இவ்வுலகில் வாழ வரம் வாங்கி வந்த பிறகு, முடிய வில்லை யென்றால் யார் விடுவார், அந்த உணர்ச்சி முன்னமே இருந்திருக்க வேண்டும்” என்று தன்னையே நொந்துகொண்டு அவ்வளவு அக்கிரமத்துக்கும் இடங்கொடுத்து நடந்த தன் தம்பியுடன் அன்றுமுதல் அவர் நெருங்குவதையும் நிறுத்தி விட்டார்.
17 – மண்குதிரையை நம்பி ஆற்றிலிறங்கிய கதை
மறுநாள் காலமே பேயாண்டித் தேவனுடைய விசாரணைக் காக முத்துஸ்வாமியய்யருக்கும் சுப்பிரமணியய்யருக்கும் ‘சம்மன்’ வந்தது. அன்றிரவு அஸ்தமித்து ஜாமத்துக்கப்பால் சுப்பிரமணியய்யரும் வைத்தியநாதனும் படுக்கைக்குப்போக இருந்த தருணத்தில் அவர்கள் கிரஹத்திற்குள் கன்னங்கரே லென்று கறுத்துப் பெருத்த உருவமும், கறுத்து வளைந்து காதளவோடிய மீசையும், கருப்பண்ணசாமியினுடைய கண்கள்போல் பயங்கரமான பெரிய கண்களும், கையில் இருப்புலக்கை போன்ற ஓர் பெரிய வளைதடியும் கொண்டு திடீரென்று ஒரு மனிதன் வந்தான். சுப்பிரமணிய அய்யருக்குத் தூக்க மயக்கம். அவர் “நாராயணா!” என்று தன் மனைவி காதில் படும்படி கொட்டாவி விட்டு வாயை மூடுகிற சமயத்தில் மேற்சொல்லிய உருவம் அவர் கண்ணுக்குத் தென்பட்டது. உடனே அவர் திடுக்கிட்டு ஐயையோ பேயாண்டி!’ என்று உளறிக் கொட்டிக் கொண்டு எழுந் திருக்க, அங்கு வந்த மனிதன் அவர் பயத்தைக் கண்டு நகைத்துக்கொண்டு “சாமி சும்மா இருங்க, நான்தான் அடியேன் சுப்பாத்தேவன்” என்றான். சுப்பாத்தேவன் என்பவன் பேயாண்டித் தேவனுடைய சிற்றப்பன், சூரத்தேவ னுடைய மகன். அவன் உருவத்திலும் நிறத்திலும் பேயாண்டித் தேவனைப் போலவே கிட்டத்தட்ட இருப்பான். சுப்பிரமணியய்யர் தூக்க மயக்கத்தில் அவனைப் பேயாண்டி என்று எண்ணி. அலறிவிட்டுப் பிறகு சுப்பாத்தேவன்தான் என்று தெளிந்து “சுப்பாத்தேவா, வா வா” என்று உபசரித்தார். அத்தருவாயில் அவன் தடியும் கையுமாய் வீட்டுக்குள் வந்த தில் அந்தப் பிராமணர் நடுநடுங்கிப்போய்விட்டார். அவரைப் பயப்படச் செய்யவேண்டுமென்றேதான் அவனும் அப்படி வந்தான்.
வந்தவுடன் அவர் அருகில் அவர் சொல்லாமலே உட்கார்ந்து மீசையை இரு கையாலும் முறுக்கிக்கொண்டு வளை தடியை ஓசைபடக் கீழே போட்டு “சாமியெல்லாம் இப்போ சருக்காரு சாமியாப் போயிருச்சு. இன்னமே இந்தக் கள்ளப் பயல்களுக்கும் நமக்கும் தீர்ந்து போயிருச்சு என்றுதானே சாமி இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டுத் திரிகிறீக? செய்கிற தெல்லாம் செய்யங்க சாமி, எங்களுக்காச்சு உங்களுக்காச்சு ஒருகை பார்ப்போம்’ என, சுப்பிரமணியய்யர் நடுநடுங்கி “என்ன சுப்பாத்தேவா,எப்படியோ ஆரம்பித்து எப்படியோ போய்முடிந்தது. நிசமாகச் சொல்லுகிறேன் கேளு, சுப்பாத் தேவா, உன்னிடம் சொல்வதற்கு என்ன! உங்களப்பனும் நம் முடைய ஐயாவும் இருந்த நேசத்துக்கு என்னமோ அப்பா நாம் நம்ம தலைமுறை மட்டுமாவது கொண்டு செலுத்திவிட்டோமா னால் கீழ்க்கடைகள் என்னமும் பண்ணிக்கிறது. நான் என்ன எல்லாமோ எண்ணிக் கொண்டிருந்தேன். நம்முடைய எண்ணப்படி என்னதான் நடக்கிறது!” என, சுப்பாத்தேவன் “ஏன் நீங்க எண்ணினதற்கு இப்போதுதான் என்ன குந்தகம் வந்திடிச்சி, எல்லாம் நீங்களாப் பண்ணிக்கிட்ட காரியந் தானே, என்னமோ சாமி ஒங்க சருக்காரதிகாரத்திலே பேயாண்டித்தேவனை வேண்ணாப் பிடிச்சு வைச்சுபிட்டீர்கள். எங்கள் குலம் கூட்டம் முழுக்க வைச்சுபிட முடியுமா?இல்லை’ அந்தச் சிங்கக் குட்டிதான் ஒங்க கையிலே என்னென்னிக்கு மிருந்துகிட்டேயிருக்கும் என்று நீங்க சொப்பனத்திலும் தினைக்கிறீர்களா? இன்னைக்கு அவனை அடைச்சுப்பிட்டால் நாளை அவன் தப்பிச்சு ஓடியாந்திர்ரான். பேயாண்டியை உங்க வீட்டுக் கிள்ளுக்கீரையின்னா நினைச்சுக்கிட்டீங்கள். இந்திரன் சந்திரன் குபேரனெல்லாம் அவன்கிட்ட நடுங்க ணுமே,கண்ணிலே விரல்விட்டாட்டி விடமாட்டானா? இருக் கட்டும் நாளை வந்திர்ரான், வந்தப்புரம் சுப்பிரமணியய்யர் எங்கே, முத்துச்சாமியய்யரெங்கே பார்ப்போமே, நீங்களும் இருக்கணும், நானும் இருக்கணும் அவ்வளவுதான், அந்தக் கருப்பனை வேண்டிக்கிர்ரது.”
சுப்பிர: “சுப்பாத்தேவா சுப்பாத்தேவா, கோபித்துப் பேசாதே. சாதாரணமாக சுபாவத்தில் பேசு அப்பன். நமக் குள்ளே பேசுகிறது கோபிக்கப்படுமா. நாங்களாக முதலிலே வம்புக்கு போனோமா, நீயாச் சொல்லு. திடீரென்று நானாக வலியச் சண்டைக்கு இழுத்திருந்தேன் என்றால் நீ சொல்லுகிற தெல்லாம் சரிதான்.”
சுப்பா : “ஆமாசாமி நான் ஒத்துக்கிட்டேன். திருடரது எங்க ஜாதித் தொழில்தானே. ஓங்க ஐயமாருக்கு வேதமோ தரது எப்படியோ அப்படி எங்களுக்குத் திருடரதுதான் ஜாதித்தொழில். அதுக்காக எங்களைச் சருக்காருக்குக் காட்டிக் கொடுத்துவிடதா?”
சுப்பிர: ”இல்லையப்பன் முன்னைப் பின்னை ஏதாவது விரோதமுண்டா? திடீரென்று அந்த கோமள நாய்க்கனூ ரான் சொன்னானென்று வந்து கொள்ளையிடலாமா! நீதான் சொல்லேன், நாங்கள் பெரிதோ, அவன் பெரிதோ, இவ்வளவு யோசனைகூட இல்லாமல்-“
சுப்பா : ஆம் சாமி, மாடு போயிருச்சானா என்ன, நகை போயிருச்சானா என்ன! ‘பேயாண்டி கொண்டுட்டு வாடா இன்னா கொணாந்துட்டுப்போரான். குடிமயக்கத்திலே அந்த சமீன்தாருக்குச் சத்தியம் குடுத்தாக்க — அந்தப் பரதப்பயல் கள்ளைக் குடுத்துச் சத்தியம் வாங்கிட்டான் – அதுப்படி செய் யணுமல்ல! அந்தக் கல்லாப்பட்டிக் கணக்குக் கழுதை அன்னிக்கு ராவு காணாட்டி பேயாண்டி வந்தான் இண்டு எந்தப் பயலுக்குத் தெரியும்? தெரிஞ்சாக்க என்ன, விளையாட்டுத்தானே. விசாரியாமல் சர்க்காருக்குக் காட்டி விட்டீடரதா?”
சுப்பிர: “அப்படியில்லை அப்பன்; பேயாண்டித் தேவனைப் பிடித்துக் கொடுப்பதில் எங்களுக்கேதாவது லாபமுண்டா? எல்லாம் அந்த சப் மாஜிஸ்திரேட்டு வைத்தியநாதய்யர் ஏற்பாடு.
இப்படி நடந்த சம்பாஷணையைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த வைத்தியநாதன் “நம்மய்யர் அதற்கெல்லாம் போகவில்லை. அவர்கள் அண்ணன்தான் அதில் எல்லாம் முஷ்கரம்,பிடித்ததும் அவர்தான், சிறைச்சாலையிலடைத்ததும் அவர்தான், வக்கீல் வம்பு அமர்த்தினதுகூட அவர் கைப்பணந் தான் எல்லாம். இவரை ஒரு வார்த்தை மரியாதைக்குக்கூட கேட்கவில்லை” என்றான். சுப்பாத் தேவன் “சரி அந்த ஐயருக்கு என்னமோ பிடிச்சுகிட்டு ஆட்டிரது. அவ்வளவுக்கவ்வளவு அவருக்குப் பின்னாலே இருக்குது. அவர்என்னமோ பேயாண்டி, சுப்பாத்தேவன் இண்டா கையிலாகாத முண்டங் கள் இண்டு இருக்கிராரு. எங்கப்பன் கருப்பனாணை தொலைச்சு விட்டோம் அவரை. இன்னி தொட்டுப் பெரிய அய்யர் இண்ட மரியாதை யெல்லாம் பறந்து போச்சு. அவர் போனாரு, இப்போ ஒரு வார்த்தை சொல்றேன். கேட்டா ஒங்களுக்கும் சேமம், நமக்கும் சேமம். இல்லாட்டி நமக்காச்சு ஒங்களுக்கு ஆச்சு,பார்த்துக்கிரும்’ என, சுப்பிரமணிய அய்யர் நடுக்கத் துடன் சுப்பாத்தேவா என்ன நான் இவ்வளவு தூரம் சொல்லி யும் உனக்கு என் மேலே நம்பிக்கை ஏற்படவில்லையே; என்ன அப்பன், நம்ம பெரியவர்கள் இருந்த நேசம் என்ன, நாம் இருக் கிற நேசம் என்ன; சொல்லுகிற சங்கதியைச் சும்மா சொல்லேன்; உன் பேச்சை நான் தட்டியா விடுவேன்.சும்மா சொல்லப்பன்.’
சுப்பா: “சொல்றேன் சேளுங்க சாமி; விசாரணை நாளை நாயித்துக் கெட்டா நாளுக்கடுத்த திங்கள் கிழமை வரதாம். வக்கீல் அய்யுரு சொல்றாரு. ஒங்க சாச்சிதான் அதிலே முக்கியமாம். நீங்கள் சாச்சி சொல்லாமல் போனால் கேசு ஒன்னுமில்லியாம். நீங்கள் ஒன்றும் களவு போகலை யன்டு சொல்லிப்பிடுங்கோ. உங்கள் நகை மாடு கீடு எல்லாத்தையும் அப்படியப்படியே குடுத்துடுகிறோம்.’
சுப்பிர: “அதற்கென்ன அப்படியே செய்கிறேனே. நீ சொல்லி நான் கேட்காமலிருப்பானேன். சுப்பாத் தேவா ஒன்றும் யோசிக்காதே போ, அப்படியே செய்துவிடலாம்.”
எதார்த்தத்தில் அப்படிச் செய்வதாக அவருக்கு அந்தச் சமயத்தில் யோசனை கிடையாது. எப்படியாவது ராத்திரி வேளையில் அவனுடன் சண்டை போடாமல் தப்புவித்தால் க்ஷேமம் என்று அவர் நினைத்து அப்படிச் சொல்லிவிட்டார். உடனே சுப்பாத் தேவன் “சாமி அப்படிச் செய்தேளோ அடியேன் ஒங்களுக்கு அடிமை. கள்ளப்பயல் பொய் சொல்ல மாட்டான். ஓங்க சாமான் எல்லாம் ஒருமணி சிந்தாமல் ஒங்கவிடம் சேர்க்க நானாச்சுது.”
சுப்பிர: “சுப்பாத் தேவா, அது சரிதான், ஆனால் மாடு கொண்டுபோனதைக் கல்லாப்பட்டிக் குப்பா பிள்ளை அவர்க ளெல்லாம் மறித்திருக்கிறார்களே, அவர்கள் சாட்சி சொல் லு கிறபோது என்ன செய்கிறது ?’
சுப்பா: ‘அதுக்கு ஓசனை பண்ணாதேங்கோ சாமி! ஏதோ ரெண்டு உருப்படி மாடு களவு போச்சுது என்னு வேண்ணாச் சொல்லி வையுங்கோ; நகை போனதை எவன் கண்டுகிட்டிருந் தான். அப்படித்தான் வக்கீலய்யரும் சொன்னாரு.
சுப்பிர: “அதிருக்கட்டும், அத்தனை பெரிய வைக்கோற் படப்பை அப்படித்தானா கொளுத்தி விடுகிறது.”
சுப்பா : “என்ன சாமி, படப்பைக் கொளுத்தினது பேயாண்டித் தேவனா, அந்த ஜமீன்தார்ப் பயல் ஆட்களோ? பேயாண்டித் தேவன் தீக் கொளுத்துவான் இண்டு நினைக்கிறீங்க !”
சுப்பிர: “அப்படியா, ஆ, அடா பாவிப்பயல்களர் ! இருக்கட்டும் சொல்லுகிறேன். நாமெல்லாம் சேர்ந்து அந்த ஜமீன்தார்ப் பயலைப் பொங்கலிட்டு விடவேண்டும்.”
சுப்பா : “நான் சொன்னபடி நீங்கள் சாச்சி சொல்லுங்க, அப்படியே செஞ்சுடுவோம்.”
சுப்பிர: “ஆம் அப்பன், நீ சொல்லுகிறதும் ஒரு நல்ல யோசனைதான் அப்பன். அப்படியே செய்து போடுவோம் போ, நீ ஒன்றுக்கும் யோசிக்காதே, சுவாமி ஒருவர் இருக் கிறார் — ஏன் அப்பன் நீ சாப்பிட்டையோ, கொஞ்சம் நம்ம வீட்டிலே சாப்பிடேன். அடியே யாரடீயங்கே!”
சுப்பா : “இல்லே சாமி நான் சாப்பிட்டுக்கிட்டேன். சாப்பிட்டுத்தான் வந்தேன். இல்லாட்டி இந்நேரம் என்ன”
சுப்பிர: ”இல்லை யப்பன், கொஞ்சம் ஒரு பிடி சாப்பிடு. குழம்பு கிழம்பு இருக்குது. கொஞ்சம் சாப்பிட்டுப்போ. யாரடீ இலையைப் போடவில்லை இன்னும்!”
வைத்தியநாதனும் சுப்பாத்தேவனை உபசரிப்பதில் கூடச் சேர்ந்துகொண்டான். இவர்கள் வ்வளவு தூரம் அவனை உபசரித்த காரணம் அவனை எப்படி யாவது சாப்பிடும்படி செய்து விட்டால் அப்புறம் ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில்லை’ என்ற அவர்களுடைய ஜாதி சத்தியத்தின்படி அவனால் பிறகு ஒரு கேடும் தங்கள் வீட்டுக்கு வராதென்ற எண்ணமே. கடைசியாய்ச் சுப்பாத் தேவனும் சம்மதித்து அங்கேயே கொஞ்சம் சாப்பிட்டான். சுப்பிரமணியய்யர் ஆசார உபசாரம் செய்தார். ஒரு யதி பிட்சைகூட அவ்வளவு சம்பிரமமாக ஆசார உபசாரத்துடன் நடக்காது. பட்சணங்களும் பண்டங்களும் தாராளமாகச் சுப்பாத்தேவன்கூட “போதும், போதும்” என்னும்படி பரிமாறி விருந்திட்டார்கள்.சட்டிப்பானைகளிலுள்ள ஊர்காய் பதார்த்தங்களெல்லாம் சுப்பாத் தேவருடைய வயிற்றுக்கு வந்து விட்டது. சூத்திரனுக்குப் போட்டால் சேஷம் என்ற விதியெல்லாம் அந்த அவசரத்தில் விலக்கி வைக்கப்பட்டது. கடைசியாய்ப் பால்விட்டு சாதம் போட்டார்கள். சுப்பாத் தேவன் பால்சாதம் சாப்பிடும்போது சுப்பிரமணியய்யரும் பொன்னம்மாளும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண் டிருந்தார்கள். ஏனெனில் அவன் அந்தச் சாதத்தில் கொஞ்சம் மண்ணைக் கிள்ளிப் போட்டுக் கொண்டு விட்டானானால் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது என்ற சத்தியம் அவனைக் கட்டுப்படுத்தாது. அவன் அந்த வீட்டுக்குத் தாராளமாய்க் கெடுதல் செய்யலாம். இது கள்ளர் சாதிக்கு ஏற்பட்ட மனுஸ்மிருதிகளில் ஒன்று. சுப்பாத்தேவனார் பிட்சை செய்துபோன பிற்பாடு விளக் கணைத்துவிட்டுப் பொன்னம்மாள் முதலிய எல்லாரும் படுத்து உறங்கினார்கள்.
மறுநாட் காலையில் வைத்தியநாதன், பொன்னம்மாள், சுப்பிரமணியய்யர் இம்மூவருக்குமிடையே சம்பாஷணை நடந் தது. அந்த மந்திராலோசனை சபையில் கடைசியாய்த் தீர்மானிக்கப்பட்டது என்னவென்றால், சுப்பிரமணியய்யர் சுப்பாத்தேவன் சொன்னபடியே நகைகள் ஒன்றும் திருட்டுப் போகவில்லை யென்றும், மாட்டில் இரண்டு உருப்படிதான் களவு போயிற்று என்றும், வைக்கோற் படப்பைக் கொளுத்தி யுது பேயாண்டித் தேவனல்லவென்றும் சாட்சி சொல்லிவிட வேண்டியது என்பதே. சுப்பிரமணியய்யர் அப்படிச் செய்வது தன் தமையனைக் காட்டிக் கொடுப்பது போலாகுமே என்று நெடுநேரம் அந்தத் தீர்மானத்துக் கிணங்க மனமற்றவரா யிருந்தார்.ஆனால் ‘மத்தளத்துக்கிரு பக்கமும் இடி’ என்றபடி வைத்தியநாதனும் பொன்னம்மாளும் தங்களுடைய பிடிவா தத்தினாலும் முரட்டுத்தனத்தினாலும் அவரை இரண்டு பக்க மும் மோத, அய்யர் அவர்கள் சொன்னபடி கேட்பதாக ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று, வைத்தியநாதனுக்கு இந்த விதத்தில் முத்துஸ்வாமி அய்யருக்குப் பெரிய தீங்கு பண்ணி விடலாமென்று வெகு சந்தோஷம்.
பேயாண்டித் தேவனுடைய விசாரணை நடந்தது.சுப்பிர மணியய்யர் சுப்பாத் தேவனுக்குத் தந்த உறுதியைக் கொஞ்ச மும் வழுவாது நிறைவேற்றி விட்டார். நகை போனதற்கு யாதொரு ருசுவும் ஏற்படவில்லை. மாடுகளில் இரண்டு உருப் படிதான் திருடப்பட்டதென்று ருசுவாயிற்று. வைக்கோற் போரைப் பேயாண்டித் தேவன்தான் கொளுத்தினான் என்ப தற்கு யாதொரு முகாந்தரமும் கற்பிக்கப்படவில்லை. கோர்ட் டார் அவனைக் கொடுமையாய்த் தண்டிக்க வேண்டுமென்று நிரம்ப ஆவலுள்ளவர்களாயிருந்தும் ருசுக் குறைவினால் அப்படிச் செய்யக்கூடவில்லை. சுப்பிரமணியய்யருடைய வாக்கு மூலம் முத்துஸ்வாமி அய்யருக்கு இடி விழுந்தாற்போல இருந்தது. இவர் இப்படிச் சாட்சி சொல்லுவார் என்று அவர் கன விலும் நினைக்கவில்லை. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங் கின கதையாய் இருக்கிறதே என்று விசனப்பட்டுக்கொண்டு தன் தம்பிமீது அடங்காக் கோபத்துடன் கோர்ட்டை விட்டு அவர் வெளியே வரும்போது, பேயாண்டித் தேவனை அவனுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருஷம் தண்டனைக்கு உட்படுத்தும், பொருட்டு காவற்காரர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது அந்தத் தேவன் முத்துஸ்வாமி அய்யரைக் கண்டு பயங்கரமான பார்வையுடன் மீசையை முறுக்கிக் கொண்டு தோள் தட்டிக் கர்ச்சித்துக் கம்பீரமாய் “ஏ! பாப்பான், இரண்டு வருஷம் எனக்கு இரண்டு நாள்; இனி யுன்னைவிடேன் வா” என்று சொல்லி அலட்சியமாய்ச் சிறைச்சாலைக்குச் சென்றான். முத்துஸ்வாமி அய்யர் அவனைக் கப்பலேற்றிக் கடலுக்கப்பால் அனுப்பிவிடலாமென்று ஆசை வைத்திருந்தார். அப்படி அவனைப் பூராவாக ஒழித்து விட லாமென்ற தைரியமில்லாவிடில் அவனுக்கு விரோதமான ஒரு பிரயத்தனமும் அவர் செய்யத் துணிந்திருக்க மாட்டார்.
இப்பொழுது வியாபாரம் பாதிக் கிணறு தாண்டினாற் போல ஆய்விட்டது என்று விசனப்பட்டுக்கொண்டு பேயாண்டித் தேவனால் தனக்குச் சீக்கிரம் ஏதாவது தீங்கு வருவது நிச்சயம் என்ற பயம் மனதைக் கலக்க, தன் தம்பியின் நடத்தை அருவருப்பை யுண்டாக்க, கொஞ்சமும் தன் சித்தம் தன்னிடமில்லாமல் திரும்பி ஊருக்கு வந்து சேர்ந்தார். வீட்டுக்கு வந்தவுடன் கமலாம்பாள் மலர்ந்த முகத்துடன் அவரை உபசரித்தும், அவர் அவளுடன் முகங்கொடுத்துப் பேசாமல் “இதென்ன உலகம், சீ? இதில் உயிர் வாழ்வதைக் காட்டிலும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு பிராணனை விட்டு விடலாம்” என்று இவ்விதம் சலித்துக் கொண்டிருந்தார்.
இப்படியிருக்கும்போதே கமலாம்பாள் இடுப்பில் இருந்த குழந்தை இவருடைய விசனத்தையும் கோபத்தை யும் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் இவரைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்ததுமன்றி இவரிடம் வர அதிக ஆவல் கொண்டு தன் தாயார் இடுப்பில் தரிக்காமல் கையை, காலைக் காட்டிக் கூத்தெல்லாம் பண்ணியது. அதைக் கண்ட முத்துஸ்வாமியய்யர் தன்னை யறியாமலே சிரித்துக்கொண்டு உலகத்தில் குழந்தைகள்தான் கொஞ்சம் யோக்கியர்கள். இன்னும் வயது வந்தால் நீ என்ன என்ன அக்கிரமங்கள் பண்ணப் போகிறாயோ’ என்று தன் மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டு அதை வாங்குவதற்காகத் தன் கைகளை நீட்டினார். நீட்டினதுதான் தாமதம், அந்தக் குழந்தை ஒரே குதியாய்க் குதித்து அவர் தோள்மேலே தவழத் தொடங்கியது. அவர் “மற்றவர்கள் என்னை வெறுத்துத் தள்ளினாலும் நீயாவது என்னை லட்சியம் செய்கிறாயே. உனக்கு இந்த ஜனனம் என்னத்துக்கு, என்ன பாவம் பண்ணியிருக்கிறாயோ என்று சொலலிக்கொண்டே அதை மார்போடணைத்து முத்தமிட்டுக் கொஞ்சிக் குலாவி அதன் சந்தோஷத்தில் தன் விசனத்தை மறந்து அதனுடன் விளை யாட, அந்தச் சிறு குழந்தை அவருடைய முகத்தைத் தடவி மூக்கைப் பரிசோதனை செய்து கண்களைத் துடைத்துக் காதில் ஜொலிக்கும் வைரக் கடுக்கனை ஆட்டியாட்டிப் பார்த்துக் கைகளை (ரா ரா ராமைய்யா என்று) தாமரைப் பூப்போல் மலர்த்திக் காட்டிப் பாலகோபால லீலைகள் எல்லாம் செய்ய, முத்துஸ்வாமி அய்யரும் கமலாம்பாளும் வினோத காலட்சேபம் செய்தார்கள்.
இந்தக் குழந்தைக்கு நடராஜன் எனப் பெயர். அதை அவர்கள் ராஜா, நடராஜா எனச் செல்வப் பெயரிட் டழைத்தார்கள். அது அவர்களுக்கு ஓர் விசேஷ பாக்கியமா யிருந்தது. சாக்ஷாத் கோபால கிருஷ்ணனே ஆயர்பாடியில் விளையாடினது போல அவர்களுடன் விளையாட வந்தது போலிருந்தது. இவ்விதம் வளர்பிறைச் சந்திரனைப்போல் சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த அக்குழந்தை நாளுக்கு நாள் அழகிலும் புத்தியிலும் வளர்ந்தது. நடராஜன் கொஞ்சம்கூட வேற்றுமுகம் என்பதில்லாமல் யாரிடத்திலும் பிரியமாய் விளையாடியதால் ஊருக்கெல்லாம் செல்லக் குழந்தையாய் விளங்கினான். அவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது தெருவில் அவசரமாய்ப் போகிறவர் கள்கூட நின்று பார்த்து விட்டுப் போவார்கள். நான் நீ என்று பொன்னம்மாளைத் தவிர மற்றப் பெண்டுகளெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அந்தக் குழந்தையை அவர் களுடைய கிரஹத்துக்கு எடுத்துப்போய்ச் சிற்றுண்டி கொடுத்துச் செல்லம் பாராட்டினார்கள். இப்படி ஊரார் பெருமை பாராட்ட கமலாம்பாளுக்கு எங்கே திருஷ்டி தோஷம் வந்து விடுமோ என்று குழந்தையை வெளியில்விட பயம் அதிகரித்தது. முத்துஸ்வாமி அய்யருக்கு நிரம்ப சந்தோஷமாயிருக்கும் சமயங்களில் இவ்வளவு அருமையான பாக்கியம் நமக்கு நிலைக்க வேண்டுமே என்ற பயம் வந்து விசனத்தை யுண்டுபண்ணும். இவ்விதம் காலம் கழிவது தெரியாமல் இரண்டு வருஷம் சென்றது.
இப்படியிருக்க ஒருநாள் திடீரென்று செல்வக் குழந்தை நடராஜனைக் காணவில்லை. அன்று ஆருத்திரா தரிசனம். முத்துஸ்வாமி அய்யர் காலமே ஸ்நானம் செய்து பட்டு வஸ்திரம் தரித்து சுவாமி தரிசனம் செய்யக் கோயிலுக்குச் சென்றார். கமலாம்பாள் லட்சுமிக்கும் நடராஜனுக்கும் ஸ்நானம் செய்துவைத்து, சர்வாபரணங்களையுமணிந்து. சிங்காரித்திருந்தாள். முத்துஸ்வாமியய்யர் கோயிலிலிருந்து புஷ்பமும், பிரசாதமும் கையுமாய் வந்தவுடன் குழந்தை எங்கே யென்று கேட்டார். கமலாம்பாள் குழந்தை வாசலில் குட்டிகளோடு விளையாடிக்கொண்டிருக்கும்’ என்று சொல்லி வீட்டுக் காரியத்தின்மேல் கவனமாயிருந்தாள். முத்துஸ்வாமியயர் வாசலில் வந்து பார்த்தார்; குழந்தை யைக் காணோம். ‘ராஜா, ராஜா’ என்று அழைத்துப் பார்த்தார். லட்சுமியை விட்டுத் தேடச் சொன்னார். தானும் அண்டை யசல்களில் போய்ப் பார்த்தார், நடராஜன் எங்கும் தென்படவில்லை.
முதல் பாகம் முற்றிற்று.
இரண்டாம் பாகம்
18 – நரபலி
அதற்குள்ளாகச் சுவாமி எழுந்தருளுவதற்குக் காலம் சமீபித்துவிட்டபடியால் “சரி இங்கேதான் யாராவது எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள், வேறு எங்கே போகப் போகிறான், நான் கோயிலுக்குப் போகிறேன். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு எடுத்துவை என்று கமலாம் பாளுக்கு உத்தரவு கொடுத்துவிட்டு முத்துஸ்வாமியய்யர் போய்விட்டார். அன்று ஆருத்திரா தரிசனமானபடியால் தெருவெல்லாம் சித்திரக் கோலங்களால் நிரம்பியிருந்தது. வீடுகளெல்லாம் மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு ஸ்திரீயும் தான்தான் ரதி என்று பாவனை பண்ணிக்கொண்டு உல்லாச நடை நடந்தாள், புருஷர்களெல்லாம் ஸ்நானஞ்செய்து பட்டுடுத்தி விபூதி யணிந்து மன்மதாகாரமாயிருந்தார்கள். ஆய்விட்டது, சுவாமி எழுந்தருளுகின்ற சமயம். மேளக்கார முத்துக் கருப்பன் பம் பம் என்று கோஷம் செய்து தன்னிரு கன்னங் களும் வீங்கத் தனது அபசுரக் களஞ்சியத்தை வெகு தாராளமாய்த் தெரு நிறைய வீசத் துவக்கினான். தவுல் காரச் சின்னண்ணன் அங்கு இருப்பவர்களுடைய காதையும் மத்தளத்தின் தோலையும் ஒரேயடியாகச் சல்லடைக் கண் மயமாய்த் தொளைக்க ஆரம்பித்தான்.தாளக்காரச் செம்பகன் இவர்களிரண்டுபேரையும் லட்சியம் செய்யாது, இருக் கிறவர்கள் தேவையானால் ஈவு வைத்துக்கொள்ளட்டும் என்று உத்தேசம் செய்து பத்து நிமிஷம் இடைவிடாமல் கதறக் கதற அடிக்கிறதும், மறுபடியும் பத்து நிமிஷம் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்கிறதுமாய்க் காலம் கடத்தினான். இவர்கள் போதாதென்று தாசி பூரண சந்திரோதயமும் கூடப் புறப்பட்டுவிட்டாள். அவள் அழகு வெகு அற்புதம்; கறுப்பாயிருந்தாலும் சந்திரன் சந்திரன் தானே. மேலும் அவள் நடக்கிறதே நாட்டியமாக இருக்கும். பட்டிக்காட்டு சுவாமிக்குரிய இவ்விதப் பரிவாரங்களுடன் ஏகாம்பரநாதர் உலாவுக்கு எழுந்தருளினார். செவ்வந்திப்பூ மாலைகளால் சிங்காரிக்கப்பட்ட விமானத்தின்மீது இரண்டு பக்கமும் இரண்டுபேர் சாமரை வீச, நாதசுரக் கோஷ்டி முன்னே செல்ல, பாகவத கோஷ்டி பின்னே வர, மான் மழுவேந்திய கையும், கங்கை தங்கிய சடையும், மதிவதிந்த மெளலியும், கடுவமர் கண்டமும் உமையவர் உருவமும், நெற்றியி றறிகழ்ந்த வொற்றை நாட்டமும், எடுத்த பாத மும், தடுத்த செங்கையும், புள்ளியாடையும் ஒள்ளிதின் விளங்க எளியார்க் கெளியனாயுள்ள சாக்ஷாத் கைலாச பதியே பிரத்தியக்ஷமாய் வந்து. பாவத்தை வென்று மோக்ஷத்தைப் பெற்ற ஆத்மாவின் உண்மை நிலையை யுணர்த்தும் உருவக நர்த்தனத்தைப் புரிந்தாற்போற்றோன்ற அக்காட்சியைக் கண்ட அவ்வூரார் அனைவரும் ஆனந்த வாரியில் மூழ்கி,மெய்மறந்து, புளகாங்கித்து, ஆடிப்பாடி ஓடியுலாவி ‘சம்போ, சங்கரா, தயாநிதே’ என்று போற்றித் துதித்து, ஆனந்தத் தாண்டவம் செய்தார்கள். பாண்டவர் வனவாச காலத்து பகவான் கிருஷ்ணன் உண்ண, தூர்வாசாதி முனிவர்களெல்லாம் பசியாறியதுபோல், சிவபெருமானது ஆனந்தத்தையே தங்களது சொந்தமாய்ப் பாராட்டிக் களித்த பக்தர் கணத்தின் நிர்மலமான குதூகலத்தை முத்துஸ்வாமியய்யரும், கமலாம்பாளும் மெய் மறந்து அனுபவித்தார்கள். ஆயினும் தங்களருகில் அந்தச் சமயத்தில் குழந்தையைக் காணாததில் அவர்களுக்கு உண் டான வருத்தத்துக்களவில்லை. தங்களகத்து நடராஜனுக்குக் கோயில் நடராஜனைக் காட்டி அவனது சிறிய அழகிய நிஷ் களங்கமான கண்களின் மூலமாக அந்த திவ்விய காட்சியைக் கண்டுகளிக்கப் பாக்கியம் இல்லாமற் போனதைப்பற்றி அவர் களுக்கு நிரம்ப வருத்தம். முத்துஸ்வாமியய்யர் சுவாமியைப் பார்க்கிறார், கமலாம்பாள் இடுப்பைப் பார்க்கிறார்; லட்சுமியைப் பார்க்கிறார். கமலாம்பாள் கண்களில் நீர் ததும்புகிறது. முத்துஸ்வாமியய்யர் ஏறிட்டுப் பார்த்தார். அவருக்கும் துக்கம் வர, வெளியில் ததும்பி வந்த கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டார். லட்சுமி சுவாமியைப் பார்க்க நிமிர்ந்தவுடன் அவளை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசனுடைய கண்கள் அவளுடைய கண்களைச் சந்திகக, இருவரும் பின்வாங்கி விட்டார்கள். உடனே லட்சுமி அம்மாளைப் பார்த்து அம்பியைக் காணோமே யம்மா’ என்று சொல்லி நிமிரவே, கமலாம் பாளுக்கு அடக்க முடியாமல் கண்ணீர் பெருகிற்று. லட்சுமியும் தாரை தாரையாய் நீர் பெருக்கினாள்.
சுவாமி கோயிலுக்குப் போனவுடனே குழந்தையைப் பற்றி எங்கும் விசாரிக்கத் தலைப்பட்டார்கள். வீட்டுக்கு வீடு ஆள்விட்டுத் தேடினார்கள். சிறுகுளத்தில் மந்தைக்குச் சமீபத்தில் ஓரமாக வீடுகள் உண்டு. அந்த வீடுகளுக்கெல்லாம் கடைசியாயுள்ள வீடு முத்துஸ்வாமியய்யருடைய தங்கை சீதாலட்சுமி அம்மாள் வீடு. அந்த வீட்டுக்குக் குழந்தை நடராஜனை யாரோ எடுத்துச் சென்றதாகச் சமாசாரம் வெளியாயிற்று. அதைப் பற்றிப் பின்னும் விசாரணை செய்ததில், நடராஜனைக் காலை 7 – மணிக்குமுன் அநேகர் ‘நான் பார்த்தேன், நான் பார்த்தேன்’ என்று வந்தார்கள். அதுவு மன்றி மேற்சொல்லிய வீட்டுத் திண்ணையில் சில குட்டிகள் சேர்ந்து புளியம்விரை யாடிக்கொண்டிருந்ததாகவும் அவ் விடத்தில் ஒரு குட்டி நடராஜனை எடுத்துப் போயிருந்ததாக வும் தெரியவந்தது. முத்துஸ்வாமிபய்யர் முதலானவர்கள் இவ்விதம் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே சுப்பராய அய்யர் என்ற ஒருவர் ‘ஐயோ என் பெண் மீனாட்சியையும் காணோமே என்று அலறிக்கொண்டு வந்தார். சீதாலட்சுமி அம்மாள் வீட்டுத் திண்ணையில் விளையாடிக்கொண்டிருந்த பெண்களுடன் மீனாட்சியும் இருந்ததாகத் தெரிந்தது. நடராஜனையும் அவளையும் காணாததால், அவனை அவள் தான் எடுத்துக்கொண்டு போயிருக்க வேண்டுமென்று அங்குள்ளவர் கள் ஊகித்தார்கள். ஆனால் அவள் எங்கே எடுத்துக்கொண்டு போயிருக்கக் கூடுமென்று தெரியவில்லை. அவ்வூர் முழுவதும் குடித்தெருவு, கடைத்தெருவு, அக்கிரஹாரம் ஒன்று பாக்கி விடாமல் எங்கும் தேடிப் பார்த்தார்கள்: எங்கும் காணாமை வால் நாலா பக்கமும் ஆள்விட்டு ஊருக்கு வெளியே பார்த்து வரும்படி அனுப்பினார்கள். ஊருக்கு மேற்கே போனவர்கள் இரண்டு மைல் போனவுடன் ஒரு சிறு பெண் அழுத ஓசை கேட்டது. உடனே அவர்கள் அந்தச் சப்தம் வந்த இடத்தை நோக்கிச் செல்லுகையில் ஒரு புதரின் மத்தி யில் கால் கைகளில் எல்லாம் முட்காயம் பட்டு ‘ஐயையோ அம்மா, அப்பா’ என்றழுது கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையைக் கண்டார்கள். அவள்தான் மீனாட்சி. அவர் களைக் கண்டவுடன் அவள் ஓடிவந்து அவர்களைக் கட்டிக் கொண்டு அழுதாள். கேட்ட கேள்விக்கொன்றும் பதில் சொல்லக் கூடாமல் விம்மி, விம்மி யழுத அவளை அவர்கள் எடுத்துக்கொண்டு சமாதானம் பண்ணி தெளியச் செய்து ஊருக்குக் கொண்டுவந்தார்கள். அவள் சோர்ந்து அவர்கள் கையிலேயே நித்திரை போய்விட்டாள். வீட்டுக்கு வந்த வுடன் அவளுக்குக் குளுமோர் காய்ச்சிக் கொடுக்க அதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அவள் அப்படியே நித்திரை போய்விட்டாள். அவள் எப்பொழுது எழுந்திருக்கப் போகிறாள் என்று முத்துஸ்வாமியய்யர் முதலிய எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். பகல் இரண்டு மணிக்கு அவள் சோர்வு தெளிந்து எழுந்திருந்தவுடன் குழந்தை நடராஜனை நீ கண்டாயா அம்மா” என்று அவளைக் கேட்க, அவள் சீதாலட்சுமி அம்மாளுடைய கிரஹத்தில் நடராஜனை எடுத்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும், யாரோ ஒரு சூத்திரச்சி அவனை இங்கே வா வென்று ஆசைகாட்டி யழைத்ததாகவும், நெடுநேரம் மதிமயங்கி அவள் கூடவே போக ஒரு காட்டுக்குப் பின்னால் யாரோ பயங்கரமான கோர ரூபத்துடன் சில சூத்திரச்சிகள் அவளிடம் வந்து நடராஜனைப் பிடுங்கிக் குதிரையின்மேல் வைத்துக்கொண்டு ஓடியே போய்விட்டதாகவும், தன்னைக் கூட்டிப்போன சூத்திரச்சியும் அவர்களுடனே ஓடிவிட்டதாகவும் தேம்பித் தேம்பி யழுதுகொண்டு சொன்னாள். பிறகு அவள் வழி தெரியாமல் தவித்து நெஞ்சும் மாரும் படபட என்று அடிக்க, பயந்து அலறிக்கொண்டு கொஞ்ச தூரம் ஓடுவதும், பிறகு பயம் மிஞ்சிக் கண்ணை மூடிக்கொண்டு அழுதுகொண்டு நிற்பதுமாகக் கடைசியில் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சமாசாரம் வரை சொல்லி முடிக்க, அதைக் கேட்டவர்கள் எல்லாரும் அவளை ‘இந்தமட்டிலேயாவது வந்து சேர்ந்தாயே அம்மா’ என்று தட்டிக்கொடுத்துத் தேற்றினார்கள். பிறகு திருடர்கள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு எந்தத் திசை நோக்கிப்போனார்கள் என்று விசாரித்துக்கொண்டு எல்லாரு மாகக் குழந்தைப் பறிநடந்த இடத்தை நோக்கிப் புறப்பட் டார்கள். சப் மாஜிஸ்திரேட்டு வைத்தியநாதய்யரும் அவர் களுடன் கூடச் சென்றார். எல்லோருமாக அந்த இடத்திற்குப் போய் பார்க்கும்பொழுது அங்கே இரண்டு மூன்று குதிரை கள் காலடியும், நாலு வித்தியாசமான மனிதர்களுடைய காலடியும் தென்பட்டன. வைத்தியநாதய்யர் அந்த மனிதர் களுடைய காலடிகளைச் செவ்வையாய் அளக்கச் செய்து குறித்துக்கொண்டார். பிறகு அந்த அடிகளைத் தொடர்ந்து செல்ல அவை ஒரு காட்டுக் காளி கோயிலில் கொண்டு விட்டன. அந்த பத்ரகாளியம்மன் கோயில் இரண்டு மலை களுக்கு மத்தியில் இருந்தது. அந்த அம்மன் சந்நிதியில் பத்துப் பதினைந்து மரங்கள் நெருங்கி வளர்ந்திருந்தன. அவற்றின் மத்தியில் குதிரைக் குளம்பு அடையாளங்கள் போயிருந்தமையால் எல்லாரும் அங்கே போனார்கள். போகவே ஒரு கோரமான தோற்றம் அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டது. அதென்னவெனில், மூன்று கற்கள் வைத்து ஒரு அடுப்பும், அதனருகில் ஒரு குழந்தையின் எலும்புகளும் காணப்பட்டன. தரையில் ரத்தம் சிந்தியிருந்தது. அதைக் கண்டவுடன் முத்துஸ்வாமியய்யர் ‘ஐயையோ, நடராஜன், கொலை,பாவி’ யென்று கூக்குரலிட்டார். அங்கே கிடந்த எலும்புகள் குழந்தை நடராஜனுடைய எலும்புகளாயிருக் கலாமென்று அவர்களுக்குப் பட்டது. அந்த அடுப்பிள் சமீபத்தில் நெருப்பு மூட்டப்பட்டிருந்ததாகவும் நினைக்க இட மிருந்தது. உடனே அந்தக் குரூரமான துர்க்காதேவிக்கு நர பலி கொடுக்கக் குழந்தையைக் கொன்றிருப்பதாக எல்லாரும் ஊகித்தார்கள். குழந்தையை எடுத்துப் போனவர்கள் கள்ளர்களாயிருந்திருக்கும் பட்சத்தில் மீனாட்சி கழுத்திலிருந்த நகைகளை அவர்கள் அபகரித்திருப்பார்கள். ஒரு வேளை பேயாண்டித் தேவன் சிறைச்சாலையிலிருந்து வெளிப் பட்டு குழந்தையைத் திருடிக்கொண்டு போயிருக்கலா மென்றாலோ அவன் குழந்தையைக் கொன்று பலியிட்டிருக்க மாட்டான். நரபலி கொடுப்பது அவர்களுக்குள் வழக்க மில்லை. வேறு யார் இந்தக் கொடூரமான அக்கிரமத்தைச் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. முத்துஸ்வாமி அய்யர் மூர்ச்சைபோட்டு விழுந்துவிட்டார். அவரைத் தூக்கி வண்டியில்போட்டுக்கொண்டு எல்லாருமாய் சொல்லக்கூடாத வருத்தத்துடன் ஊருக்குத் திரும்பினார்கள். கமலாம்பாள் முதலானவர்கள் சமைத்ததை மூடி வைத்துவிட்டுக் குழந்தை யைத் தேடிப்போனவர்களுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு வெகு துக்ககரமாய் உட்கார்ந்திருந்தார்கள். பத்திரகாளி கோயிலில் நடந்த விபரீத விர்த்தாந்தத்தைக் கேட்ட காலத்தில் அவர்கள் அடைந்த துயரத்தை என்னென்று சொல்லுவது. கமலாம்பாள் அலறியடித்துக் கொண்டு மூர்ச்சித்து விழுந்தாள். லட்சுமி கோவென்று கதறியழுதாள். முத்துஸ்வாமியய்யர் புலம்புவதும், அழுவது மாய் இருந்தார். வைத்தியநாதய்யரும் அவர்களுடன் சிறிது நேரம் துக்கித்துப் பிறகு,”அங்கே கிடக்கும் எலும்புகள் உங் களுடைய குழந்தையினுடையதாயிருக்கவேண்டு மென்பது என்ன! உங்களுக்கு அவ்வளவு கொடிய விரோதி யாரிருக் கிறார்கள்? அப்படியே விரோதிகள் இருந்தாலும் நரபலி யிடத்தக்கவர்கள் இங்கு யாரிருக்கிறார்கள்?” என்று பலவித மாக ஆட்சேபணைகள் செய்து அவர்களைத் தேற்றினார். “பலி யிடப்பட்ட குழந்தை வேறாயிருந்தால் நடராஜனைத் திருடிப் போனவர்களுடைய குதிரைகள் அந்தக் காளியம்மன் கோயி லுக்குப் போயிருக்கக் காரணமென்ன?’ என்று முத்துஸ்வாமி யய்யர் கேட்க, வைத்தியநாதய்யர் ஒருவேளை அந்தத் திருடர்கள் நம்முடைய குழந்தை கொல்லப்பட்டதாக நாம் எண்ணும்படி வேறு எந்தக் குழந்தையினுடைய எலும்புகளை யாவது அங்கே கொண்டுவந்து போட்டுப் போயிருக்கலாம் என்றார். முத்துஸ்வாமியய்யர், ‘ஏது எனக்குத் தோன்ற வில்லை” என்று சொல்லவே, வைத்தியநாதய்யர், “ஆரூடக்காரனை வரவழைத்துக் கேட்டோம்” என்று சொல்லி அவ்வூர் வள்ளுவனுக்குச் சொல்லி அனுப்பினார். அவன் உடுக்கை டுத்துக்கொண்டு விரைவில் ஓடிவந்து தூப நைவேத் தியங்கள் எல்லாம் செய்து உடுக்கையடித்து அவ்வூரிலிருக்கும் ஒரு மந்திரவாதிதான் நரபலிசெய்தது என்று முடித்தான். உடனே அந்த மந்திரவாதிக்கு ஆள்விட்டார்கள். அவன் அவ் வூரைவிட்டு அன்று காலமேதான் போய்விட்டான் என்று சங்கதி தெரியவந்தது. உடனே அவன் தான் அந்தக் கொலைக்குக் கர்த்தாவென்று அங்குள்ளவர்கள் அனுமானித் தார்கள். உண்மையில் அங்கிருந்த வள்ளுவனுக்கும் அந்த மந்திரவாதிக்கும் விரோதம். அந்த மந்திரவாதியினுடைய தொழிலைக் கெடுப்பதற்கு இதுதான் நல்ல சமயமென்று அந்த வள்ளுவன் அவன் மேலே குற்றத்தைப் போட்டான்.
– தொடரும்…
– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.
– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.