(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
13 – இருட்டு ராஜா
ஓடிவந்த மனிதர்கள் வந்த வேகத்தால் மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க இரண்டு நிமிஷம் வரையில் ஒன்றும் பேசக்கூட வில்லை. அவர்கள் வாய்திறந்து வந்த காரியத்தைச் சொல்லும் வரையில் அங்கிருந்தவர்களுடைய பிராணன் அவர்களிடத் திலில்லை. கடைசியாய் சுப்பிரமணியய்யர் வீட்டில் திருடின வன் பேயாண்டித் தேவனே என்றும், அவன் போகும் வழியில் சிறுகுளத்திற்கு ஆறு மைலுக்கப்பாலுள்ள கல்லாபட்டிக் கணக்கன் குப்பாபிள்ளை அவர் மாட்டை அடையாளங் கண்டு ஆட்களைத் திரட்டிக்கொண்டு பேயாண்டித்தேவனை வழி மறித்துக்கொண்டிருக்கிறாரென்றும், முத்துஸ்வாமி அய்யரைப் போலீஸ்காரர்களுடன் குப்பாபிள்ளை கூட்டிவரச் சொன்னா ரென்றும் அநேக உளறல், குளறல், கேள்வி, உத்தரம், ஆட்சேபனை, சமாதானங்களுக்குப் பிறகு வெளியாயிற்று. உடனே சிலர் “பேயாண்டித் தேவன்தான், நான்தான் சொன் னேனே. வேறு யார் இவ்வளவு தைரியமாகச் செய்வார்கள்” என்றார்கள். சிலர் ‘பேஷ் பேயாண்டித்தேவன் அகப்பட்டா னடாப்பா” என்றார்கள்.
‘பேயாண்டித்தேவன்’ என்பவன் வெகு பிரபலமான திருடன். அந்தப் பிரதேசத்துக் கள்ளர்கள் எல்லாருக்கும் அவன்தான் அதிபதி. அவன் தன் கொம்பு வாத்தியத்தை ஊதினானானால் அரை நிமிஷத்தில் ஆயிரக்கணக்காக அவனுக்குப் படை சேரும். அவன் வயதில் சிறியவன். ஆனாலும், அவனுடைய அசையாத சிந்தையும், அழியாத உள்ளமும், புத்தி விசாலமும் பெருந்தன்மையும், பராக்கிரம மும், வாக்கு வல்லபமும், அவனது அளவற்ற ஊக்கமும் உற்சாகமும், கம்பீரமான தோற்றமும், காருண்யமான குணமும் அவனைக் காட்டிலும் எத்தனையோ வயதில் பெரிய திருடர்களைக்கூட அவனுக்கு நாய்போல அடிமைபடச் செய்ததுமன்றி அவனிடத்தில் அவர்களுக்கு அச்சமும் அன்பும் ஏககாலத்தில் ஜனிக்கச் செய்தன. அவர்களுக்கு இவன் இட்டது சட்டம்; இவன் சொன்னது வேதவாக்கியம்.
பேயாண்டித் தேவனுடைய விஸ்தாரமான பட்டப் பெயர் ‘ராஜகம்பீர வீரமார்த்தாண்ட சங்கிலி வீரப்ப பேயாண்டித் தேவரவர்கள்’. கன்னங்கறேலென்று கறுத்துப் பெருத்த அவனுடைய உருவமும், கல்லைத் திரட்டிச் செய்தாற்போன்று, இருப்புச் சல்லடந் தரித்த அவனுடைய துடையும், யானைத் தும்பிக்கைபோல் தடித்த அவன் கைகளும், பர்வதம்போல், பருத்து வளர்ந்து, பரந்த அவனுடைய மார்பும். ஆட்டுக்கடாவின் கொம்புபோல் வளைந்து, திரண்டு கடையிற் கூரிய அவனுடைய மீசையும் திடசித்தத்தைத் தெளியத் தெரி விக்கும் அவனது உள்ளடக்கிய உக அவனுடைய கூரிய மூக்கும், குறுகிய முகவாய்க் கட்டையும், கண்டோரைக் கலக் கும் கம்பீரமான தோற்றமும் ‘இவன்தான் வீரப்பிரதாபன், இவன்தான் வீரப்பிரதாபன்’ என்று இடைவிடாத மௌனப் பிரசங்கம் செய்து விளக்கின. அவனுடைய புருவங்களிரண்டும் வீரலட்சுமிக்காக அமைக்கப்பட்டிருக்கும் வில்வளைவு மண்ட பங்கள் போல் விளங்கின. அவனுடைய கண்களோ அவன் அதிக திருப்தியுடன் அடிக்கடி அற்புதமாய் சுழற்றுந்தோறும் அவனுடனிருந்தவர்களுடைய உயிரையும் உணர்வையும் ஊடுருவிச் சென்றன. ஆனால், அவன் சந்தோஷமாயிருக்கும் சமயத்தில் புன்சிரிப்புத் தவழ்ந்த அவன் உதடுகளும், சாந்த சுவரூபமாய் ஜொலிக்கும் அவன் கண்களும் அவன் முகத் திற்கு ஓர் அற்புதமான வசீகர சக்தியைக் கொடுத்தன. அவன் கிரமமாகக் கல்யாணம் செய்து கொண்ட மனைவிமார் பதின்மூன்றுபேர். அக்கிரமமாக அனுபவித்த ஸ்திரீகள் அனந்தம். சிங்கக்குட்டி போன்ற இச்சிற்றரசன் பேரைக் கேட்டால் அந்தப் பிரதேசத்தில் அழுத பிள்ளையும் வாய்மூடும்.
சுப்பிரமணியய்யர் வீட்டில் அவன் திருடக் காரண மென்னவென்றால் சில நாளைக்குமுன் சிறுகுளத்தில் பிரமாத மான ஜெல்லிக்கட்டு ஒன்று நடந்தது. அதில் வந்தது சுமார் ஆயிரம் மாடு இருக்கும். அது சுப்பிரமணியய்யருடைய கெடுக்கட்டு. உருமால், புஷ்பம், கருப்பணஸ்வாமி பூஜை முதலிய சகல செலவும் அவருடையதே. சுப்பிரமணியய்யர் வீட்டில் பொன்னம்மாளிடத்தில் பயங்கொள்ளியாயிருந் தாலும் வெளியில் உற்சாகப் பிரியர். அவர் புதிதாக 400ரூபாய் போட்டு ஒரு ஜோடி உருமால் கட்டி மாடு வாங்கியிருந்தார், அது வரையில் அந்தப் பிரதேசங்களில் பிரசித்தமாயிருந்தது பக்கத்திலுள்ள கோமளநாயக்கனூர் ஜமீன்தாருடைய ‘கண்ணாடி மயிலை’ என்ற காளை. அதையும் சுப்பிரமணியய்ய ருடைய புது மாட்டையும் போட்டியில் விட்டுப் பார்க்க வேண்டுமென்று அந்தக் கெடுக்கட்டு அவரால் ஏற்பாடு. செய்யப்பட்டது. டம்,டம், டம் டம் என்று அடிக்கிற பறைக்கொட்டுகளோடும், பூம் பூம்,பூம் என்று முழங்குகிற கொம்பு வாத்தியங்களோடும் அரசமரத்தடியில் திருக் கோயில் கொண்டெழுந்தருளிய கருப்பணக் கடவுளுக்குப் பழம் நைவேத்தியமான பிறகு அக்கோயிலிலிருந்து கொட்டு முழக்கத்துடன் முக்கியமான ஒரு முப்பது கூளிக்காளைகள், இருபக்கமும் வீசப்பட்ட கயிறுகளைச் சொந்தக்காரர்கள் தூரத்திலிருந்து பயபக்தியுடன் பிடித்துவர, நந்தியாவட்டை, காட்டரளி, செம்பரத்தை முதலிய பூமாலைகளை ஏராளமா யணிந்துகொண்டு சதங்கை மாலைகள், அரக்கு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ‘கலீர் கலீர்’ என்று தொழுவுக்குள் பிரவேச மாயின. சிறிது நேரத்துக்கெல்லாம் மாடுகள் அந்தஸ்துக்குத் தக்கபடி உருவி விடப்பட்டன. கடைசியாய் ‘வருகிறதடோய் ஜமீன்தார் மாடு வருகிறதடோய்’ என்ற பிரமாதமான கட்டியத்துடன் கொம்புகளும் பேரிகைகளும் கொந்தளித்து முழங்கக் காதில் கடுக்கனும் கழுத்தில் அரைஞாணும் அணிந்து பூமாலைகளும் சதங்கை மாலைகளும் ஏராளமாய்த் தாங்கி திமிளை டம்பமாய் அசைத்துக்கொண்டு ஓர் கம்பீரமான ரிஷபம் புறப்பட்டது. தொழுவினின்று புறப் பட்டுச் சிறிது தூரம் போவதற்கு முன்னேயே உயிரை வெறுத்த ராட்சஸப் பயல்கள் சிலர் சுப்பிரமணியய்யரால் முன்னமே தூண்டப்பட்டு அதன்மேல் திடீரென்று பாய்ந் தார்கள். பாயவே மனிதன் கை மேலே பட்டறியாத அந்தக் காளை வெகு ரோஷத்துடன் குபீரென்று கிளம்பிப் பள பளவென்று மின்னும்படி சீவி வைத்த தன் கூர்மையான கொம்புகளை இருபுறமும் வீசி நாலைந்து பேரைக் குத்திப் போட்டுவிட்டது. போட்டும் மற்றவர்கள் அதன் திமிளை விடாது பிடித்துக்கொண்டு முள்வேலிகள் மேலும் சுவர்களின் மேலும் அலட்சியமாய்த் தாவுகின்ற அந்த மாட்டுடன் தாங்களும் தாவி அதன் கழுத்தில் கைபோட்டுவிட்டார்கள். உடனே கூட்டம் ஏகமாய் வந்துவிட்டது. மாடு கீழே படுத்துப் போய்விட்டது. ஜமீன்தாருடைய ஆட்களெல்லாம் சண்டை போட்டும் அடங்காமல் சுப்பிரமணிய அய்யருடைய ஆட்கள் விடமாட்டோமென்று அந்த மாட்டினுடைய கடுக்கன் அரைஞாண், உருமால் முதலிய எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு அதை முடுக்கிவிட்டார்கள். இதுவரையில் ஒரு நாளும் பிடிபடாத அந்த மாட்டைச் சுப்பிரமணியய்யருடைய ஆட்கள் பிடித்ததைப்பற்றி வெகு கோபத்துடன் ஜமீன்தார் தன் அருகில் ஒரே பாயில் உட்கார்ந்திருந்த அய்யரைப் பார்க்க, அவர் “கோபித்தென்ன செய்வது? என் மாடு வரப் போகிறது, அதை உன்னாட்கள் பிடிக்கட்டும், வேடிக்கை தானே” என்று சொன்னார். உடனே முன்னிலும் அதிகமான கட்டிய முழக்கங்களுடன் சுப்பிரமணியய்யருடைய இரண்டு. மாடுகளும் ஏக காலத்தில் புறப்பட்டன. ஆனால், அவை களுக்கு மனிதர் கூட்டம் லட்சியமே யில்லை. நிரம்ப ஜனங்கள் கூடியிருந்த இடத்தில் அவை வந்து அலட்சியமாய் நின்றன. சிலர் கிட்ட நெருங்க அவர்களைக் குபீரென்று கொம்பால் வாரி ஆகாயத்தில் எறிந்து விட்டன. ஜனங்களும் அவற்றைப்பிடிக்கப் யல முயற்சிகள் செய்தார்கள். அதிலும் ஜமீன்தாருடைய ஆட்களெல்லாம் துணிந்து பின்னிருந்து அந்த மாடுகளிடம் போவது, ‘டுர்ரீ” என்று கூப்பிடுவது முதலிய பல தந்திரங் களைப் பண்ணித் தலைகீழாக விழுந்து பார்த்தார்கள். கடைசி யாய் கண் போனவன், கால் போனவன், கை போனவன் என்ற அழுகைதான் மிஞ்சிற்று. அதுமுதல் அந்த மாடு களிடத்தில் ஜனங்கள் கிட்ட நெருங்குகிறதில்லை. ‘டுர்ரீ’ என்று ஒரு தடவை யாராவது கூப்பிட்டால் அவை திரும்பிப் பார்க்கும். பார்த்தவுடன் எல்லாரும் கதிகலங்கிப் புலியைக் கண்ட ஆடுகள்போல் ஒருவர் மேலொருவராய் விழுந்தோடு வார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் ‘டுர்ரீ’ என்ற சப்தமும் அடங்கிப் போய்விட்டது. அந்த இரண்டு மாடுகளும் கம்பீரமாய் இருபுறமும் கடாட்சித்துக்கொண்டு மெதுவாய் வீடு நோக்கிச் சென்றன. ஜெல்லிக்கட்டு முடிந்தது.
சுப்பிரமணியய்யருக்கு உண்டான சந்தோஷத்திற்கு அளவில்லை. வீட்டுக்குப் போனபின் பொன்னம்மாளுடன் தன் பெருமையைச் சொல்லிவிட்டுப் பருத்திக்கொட்டையும் தவிடும் தானே யெடுத்து அந்த மாடுகளுக்கு வைத்து உபசாரம் செய்யப் போய்விட்டார். வீட்டுக்குப் போன ஜமீன்தாரோ வெகு கோபத்துடன் தோற்றுப்போன தன் மாட்டை வரவழைத்துப் பறையரை விட்டுத் தன்னெதிரேயே உயிரோடு தோல் உரிக்க உத்தரவு கொடுத்துவிட்டுப் பேயாண்டித் தேவனை இரகசியமாய் வரவழைத்து அவனுடன் பேச்சுக் கொடுத்து கள்ளைக் குடம் குடமாய்க் குடிக்கச் செய்து அந்த மயக்கத்தில் சுப்பிரமணிய அய்யர் வீட்டில் கொள்ளையிடும்படி சத்தியம் வாங்கிவிட்டார். பேயாண்டி மயக்கம் தெளிந்த பிறகு, தான் செய்த சத்தியத்தைக் குறித்து வருத்தப் பட்டான். முத்துஸ்வாமி அய்யர் ஒருவரிடத்தில் அவனுக்கு உண்மையான பயமும் விசுவாசமும் இருந்தாலும் சத்தியம் கொடுத்தாகிவிட்டபடியால் திருடிவிட வேண்டியது அவசிய மாயிற்று. ஆனால், மேஜை நாற்காலி கொண்டு வந்து போட்டுக்கொண்டு பகிரங்கமாகத் திருடுகிற தன் வழக்கத் துக்கு விரோதமாய் முத்துஸ்வாமி அய்யரை உத்தேசித்து திருட்டுத்தனமாய் சாதாரணத் திருடர்போல் அன்று திருட வந்தான். வந்த சமயத்தில் சுப்பிரமணிய அய்யரும் அவர் மனைவியும் ராத்திரி நெடுநேரம் தூக்கம் விழித்ததால் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். பொன்னம்மாள் புருஷனுக்கு மருந்திட்டதில் முதல்முதல் கைகண்ட பலன் அவளுக்கு 3000 ரூபாய் நகை பலித்தது.
திருடினது பேயாண்டித் தேவன்தான் என்று கேட்ட முத்துஸ்வாமி அய்யருக்கு அச்சமும் கோபமும் உண்டா யிற்று. அவர் ‘நம்மைவிடக் கோமள நாயக்கனூர்ப் பயல் அவனுக்குப் பெரிதாய்ப் போய்விட்டானா, இருக்கட்டும் என்று சொல்லி சப் மாஜிஸ்திரேட்டு வைத்தியநாதய்யருக்கு ஆள் அனுப்பினார். பேயாண்டித் தேவனைப் பிடிக்க நெடு நாளாய் போலீஸ்காரர்கள் தலைகீழாக நின்று பிரயத்தனம் பண்ணியும் பலிக்கவில்லை. வைத்தியநாதய்யர் வேலைத் திறமைக்காகப் பிரசித்தி பெற்றவர். பேயாண்டித் தேவனைப் பிடித்துக் கொடுப்பதற்காகவே அவரைச் சர்க்காரில் முக்கிய மாய் அந்தப் பக்கத்துக்கு அனுப்பினார்கள். அவர் வந்து இரண்டு வருஷமாகியும் அவன் அவர் கையில் அகப்பட வில்லை.
அவர் பேயாண்டித் தேவனைப் பிடித்துவிட்டார்கள் என்றவுடனே 30 கான்ஸ்டேபிள்களையும் கூட்டிக் கொண்டு குதிரை போட்டுக்கொண்டு ஓடிவந்தார். அவர் வருவதற்குள் முத்துஸ்வாமி அய்யர், வேலைக்காரன் வீரனைக் கூப்பிட்டு, வண்டிக்காரனை வண்டிபோடச் செய்யச் சொன்னார். வீரன், வண்டிக்காரன் மூக்கன் படுத்திருந்த இடத்துக்குப்போய் “மூக்கண்ணே, மூக்கண்ணே!” என்று சப்தம் போட்டான். பிறகு ‘மூக்கா, மூக்கா’ என்று சப்தம் போட்டான். பிறகு “அட மூக்கா, அடடே மூக்கா!” என்று கூப்பிட்டுப் பார்த்தான். ஒன்றுக்கும் பதிலைக் அசைத்து எழுப்பிப் பார்த்தான், அடித்து எழுப்பிப் பார்த் காணோம். தான், உணர்ச்சி வரவில்லை. ‘செத்துக் கித்துப் போயிட்டானா மூச்சு துருத்தி ஊதினாப்போல ஊதுது, குறட்டு தயிர் கடையரதே என்று சொல்லிக்கொண்டு மேலேறித் துவைத் தான். இவனுக்குத்தான் கால் வலித்ததே யொழிய அவ்விடத்திய யோக நிஷ்டைக்கு யாதொரு சலனமுமில்லை. “இதேதடா கும்பகர்ணனாயிருக்கு” என்று சொல்லிக்கொண்டு அவன் காதில் போய் காத தூரங் கேட்கும்படி கத்திப் பார்த் தான். வீரனுடைய பிரம்மப் பிரயத்தனத்தைக் காட்டிலும் மூக்கனுடைய நித்திரை வைராக்கியம் பலமாயிருந்தது. கடைசியாய் அவனைத் தூக்கி நிறுத்திக்கொண்டு சுவரில் நாலைந்து தடவை பலமாய் மோதினான். நல்ல வேளையாய் எந்த சுவாமி புண்ணியத்திலோ கொஞ்சம் பிரக்ஞை வந்தது. “என்னடா பாதித் தூக்கத்திலே” என்று சொல்லிக்கொண்டு தலையைச் சொரிந்துகொண்டு சுவரில் சாய்ந்தவண்ணமே மூக்கன் மறுபடி தூங்கத் துவங்கினான். உடனே வீரன் பளீர் என்று பேயறைந்தாற்போல் அறைந்து, “ஊரெல்லாம் கொள்ளை போகுது, உனக்கு இன்னம் ஒறக்கம் போகல்லை” என்று சொல்லி, அவனை வெளியிலிழுத்து வந்தான். இதற்குள் வைத்தியநாதய்யர் வந்து ஒரு நாழிகையாய்விட்டது. பிறகு மூக்கன் வண்டி தேடி,மாடு தேடி பயணத்துக்குத் தயார் செய்ய, ஐந்தாறு வண்டிகளும், ஐம்பது, அறுபது ஜனங்களும், தீவட்டிகள், சுழுந்துகள் சஹிதமாய்க் கல்லா பட்டி மார்க்கமாய் புறப்பட்டார்கள். அங்கே வந்தவுடன் ‘பேயாண்டித் தேவன் ஐந்தாறு பேரைக் காயப்படுத்திவிட்டுக் காததூரம் போய்விட்டான்’ என்று கேள்விப்பட்டு எல்லாரும் திகைத்து நின்றார்கள்.
அப்பொழுது சொக்கன் என்ற ஒரு குடியானவன் அவர் களிடம் வந்து ‘நீங்கள் யோசிக்க வேண்டாம். பேயாண்டியை நான் பிடித்துக்கொடுக்கிறேன்” என்றான். அவனே ஜாதியில் கள்ளன் ஆனதால் அவர்கள் அவனிடத்தில் நம்பிக்கை யுடன்,”அப்படிச் செய்வாயானால் உனக்கு நல்ல வெகுமதி தருகிறோம்” என்றார்கள். சிறுகுளத்தில் அன்று இரவு முழுவதும் ஒருவருக்கும் தூக்கம் கிடையாது. ஜனங்கள் எல்லாரும் தீ பிடித்த திருஷ்டாந்தங்களையும் பேயாண்டித் பேசிக்கொண் தேவனுடைய பிரதாபங்களையும் பற்றிப் டிருந்தார்கள். பாவம் சுப்பிரமணிய அய்யரோ, முத்துஸ்வாமி அய்யர் அகத்திலேதானே இருக்கும்படி சொல்லி விட்டமையால் அங்கேயே இருந்துகொண்டு தனக்கு நேரிட்ட கஷ்டத்தைக் குறித்து வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு நகை போனதிலும் பணம் போனதிலும் கூட அவ்வளவு விசனமில்லை. பிரியமாய் வாங்கின உருமால் கட்டிக் காளை போனது அவருடைய பிராணனில் ஒரு பாகம் போய்விட்டது போலிருந்தது. மகாமேரு போலிருந்த அவர் வைக்கோற் போரோ அவருடைய நீர்ப் பெருக்கும் கண்கள் முன்னமேயே கரியாய்ப் போய்க்கொண்டிருந்தது.
14 – கள்ளனுக்குள்ளே குள்ளன்
இரண்டு மாதத்துக்குப் பிறகு ஒரு கணவாய்க்கு அருகி லிருந்த ஓர் பெரிய ஆலமரத்தின்கீழ் பேயாண்டித் தேவன் பத்துபேருடன் உட்கார்ந்திருந்தான். அப்படி உட்கார்ந் திருக்கும்போது பகலில் சுமார் பன்னிரண்டு மணிக்கு ஒரு மனிதனும் ஒரு கிழவியும் அவர்களை நோக்கி வெகு வேகமாய் ஓடிவந்தார்கள். வந்தவர்கள், அந்தக் கிழவி பஞ்சுப் பொதி போல் தளர்ந்து கிடந்த தன் கிழட்டுச் சதையைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிற வேடிக்கையைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்த பேயாண்டித் தேவனுடைய காலிலே விழுந்து, “எங்கப்பங் கப்பா மகாராசா! நீதான் காப்பாற்றவேணும், நீதான் எங் குலதெய்வம்” என்று கதறினார்கள். பேயாண்டித் தேவன் “நீங்கள் யார், என்ன சமாசாரம்” என்று கேட்க. அந்தக் கிழவி “சாமி நான் ஏழைப்பட்டவள், ஆயிரங்காலந் தவசு கிடந்து கோவிலுக்குப் போயி கொளத்துக்குப் போயி மரத்தைச் சுத்தி மாட்டைச் சுத்தி வரங்கிடந்து தவசு பண்ணிப் பட்டினி கடந்து பண்ணாத பூசையெல்லாம் பண்ணி அப்புறம், துரோபதைக்குச் சாம்பிராணி கொளுத்திக் கருப்ப னுக்கு மாடு வெட்டி, ஆடு வெட்டி, கோழி வெட்டி அப்புறம் தருமம் குடுத்து, தானம் குடுத்து, பிராமணாளுக்கு அரிசி குடுத்து, அப்புறம் பஞ்சாங்கக்காரனுக்குத் தவசம் குடுத்து’ என்று வார்த்தை வார்த்தையாக இழுத்து இழுத்துச்சொல்லிக் கொண்டிருக்க, பேயாண்டித்தேவன் “ஆமாம் அப்புறம் சாப்பிட்டு, அப்புறம் தூங்கி, அப்புறம் கை கழுவி, ஏ ஏ,ஏ’ என்று பரிகாசம் பண்ணிச் சிரிக்க, எல்லோரும் இடி இடி என்று சிரித்தார்கள். பேயாண்டித் தேவன் “யார் என்று கேட்டால் இன்னார் என்று சொல்ல ஒரு மாதம் ஆகும் போலிருக்கிறதே” என, அந்தக் கிழவியுடன் கூடவந்த மனிதன் ”சாமி, அவள் அப்படித்தான் பேசிக்கிட்டே கிடப்பாள், அவதான் என்னாத்தா, நான்தான் அவமகன், வந்து அவதான் எங்கப்பனுக்கு மூத்த பெஞ்சாதி” என, அவள் “இல்லை இன்னொரு சக்காளத்தி யிருந்துக்கிட்டிருந்தா, அவதான் மூத்தது, நானு ரெண்டாவது; அவர்களுக்கும் அவளுக்குஞ் சேரவில்லை, எந்நேரமும் சண்டையுஞ் சல்லியமும் சச்சரவுந் தான். அப்புறம் அவர்கள்” என்று சொல்லிக்கொண்டிருக்க “நீ யிரடி சும்மா” என்று அவளை யிடித்துத் தள்ளிப்போட்டு “இவள் வந்து எந்நேரமும் இப்படித்தான். சாமி மகாராசாவே என் பேர் சொக்கன்’ என்பதற்குள், அவள் “ஒரே மகன், பத்துமாதஞ் சுமந்து பெத்தேன். அவனும் இடிச்சித் தள்ள ரான்’ என்று குய்யோ முறையோவென அழ ஆரம்பித்தாள்.
பேயாண்டித் தேவன் இவர்கள் ஒன்று மறியாத ஏழைகள் என்று நினைத்து எழுந்திருந்து அவர்களைச் சமாதானம் பண்ணிச் சமாசாரத்தைச் சாவகாசமாய் விசாரிக்க, சொக்கன் என்பவன் தான் ஜாதியில் தெற்குச் சீமைக் கள்ளன் என்றும், அவன் திருடினதற்காகச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டதாகவும். அதிலிருந்து தப்புவித்தோடி வந்து விட்டதாகவும் போலீஸ் காரருக்குப் பயந்து பேயாண்டித் தேவனுடைய பிரதாபத் தைக் கேள்விப்பட்டு அவனிடம் ஓடி வந்ததாகவும் சொல்லி, அவன் காலில் விழுந்து கண்ணீராறாகப் பெருக்க, பேயாண்டித் தேவன் அவனைத் தட்டிக் கொடுத்து “நீ பயப்படவேண்டாம், உன்னைக் காப்பாற்ற நானாய் விட்டது. உனக்காக என்னு யிரையும் கொடுப்பேன்” என்று கையடித்துக் கொடுத்துப் பிறகு “நான் போகிற இடமெல்லாம் உன்னைக் கூட்டிப் போகிறேன். நாளை ராத்திரி மல்லாபுரத்தில் கொள்ளை யடிக்கப் போகிறதாக இப்பொழுதுதான் பேசி முடித்தோம் உன்னையும் கூட்டிப் போகிறேன். பயப்படாதே, கொள்ளைப் பணம் கிடைக்கும். அங்கே கொள்ளையடித்துவிட்டுத் தோணி மலைக் குகைக்கு வந்து கள்ளு கிள்ளு சாப்பிட்டு படுபோடு போட்டு விடுவோம் வா” என்று சொல்லி “உன் பெயர் என்ன அப்பன்’ என்று கேட்க, அவன் “சொக்கன்’ என்றான்.
முத்துஸ்வாமி அய்யரிடத்திலும் வைத்தியநாதய்ய ரிடத்திலும் பேயாண்டித் தேவனைப் பிடித்துக்கொடுத்து விடுவதாகப் பேசிவந்த சொக்கன் இவனே. அவன் வழியில் போகிற ஒரு கிழவியைத் தன் தாயாரென்று கூட்டிவந்து இல்லாத வேஷமெல்லாம்போட அதை யறியாத பேயாண்டித் தேவன் “சொக்கண்ணே இங்கே வா அண்ணே, உட்காரப்பேன் பயப்படாதே. கள்ளப்பிள்ளை அழலாமா, பாட்டி உட்காரு பாட்டி. போலீஸ் நாய்கள் வரட்டும், வப்பில்கட்டி யடிக்கி றேன்’ என்று சொல்லிச் சொக்கனுடைய கண்ணீரைத் தன் துணியால் துடைத்தான். மோசக்காரச் சொக்கன் அன்று சாயந்திரமே அந்தக் கிழவி மூலமாக மல்லாபுரம் கொள்ளை யையும் தோணி மலைக்குகையிருப்பிடத்தையும் பற்றிச் சிறுகுளத்துக்குச் சொல்லி யனுப்பிவிட்டான்.
மறுநாள் மல்லாபுரம் கொள்ளை வெகு மும்முரமாக நடந்தது. ராத்திரி இரண்டு மணிக்குப் பேயாண்டித்தேவனும் சொக்கனும் இன்னும் 5பேர்களுமாய் தோணிமலைக் குகைக்கு வந்துசேர்ந்தார்கள். அந்த மலை ஓர் சரளைக் கற்காட்டு மத்தியிலிருந்தது. அது சுற்றுமுற்றும் மனித வாசனையே கிடைக்கப்பெறாது. கொல்லுக் கொலைக்கஞ்சாத சூனியக் காரனுடைய மனது போல வெந்து கிடந்தது. அதில் ‘தாயைப்போல பிள்ளை’ என்றபடி சப்பாத்துக் கள்ளியும் காட்டுக் கள்ளியும் ஏகமாகச் செறிந்து அடக்குவாரில்லாத ராட்சதப் பூண்டுபோல் வளர்ந்துகிடந்தன. அந்தச் சப்பாத்துக்கள்ளி மாளிகைகளில் சர சர வென்று சந்தடி செய்து சஞ்சரித்துக் கொண்டிருந்த பாம்புகள் வளைந்து ஓட, நரிகள் பாட, பேய்கள் ஆட, கோட்டான்கள் மிருதங்கம் வாசிக்க, ஆந்தைகள் ஆசீர்வதிக்க, ஓநாய்கள் உபதேசம் பண்ண, புலி கரடிகள் செப்படி வித்தைகள் செய்ய தங்களுடைய கல்யாணம், சாந்தி முகூர்த்தாதிகளை மங்களகரமாய் நடத்தி வந்தன. முட்களும் முட்கள்போலத் தைக்கும் கற்களுமே அந்தச் செழிப்பான பூமியின் முக்கிய செல்வமா யிருந்தன. பாட்டைக் கள்ளிகள் குட்டிப் பேய்கள்போல் நின்ற இந்த ஸ்மசான மத்தியில் வளப்பம் என்ற பெயரு மில்லாது வறண்டு உபயோகமற்ற குட்டிச் செடிகள் நிறைந்து, கொள்ளிக்கட்டை நிறமாகவும், செத்து வெளுத்த பிணத்தின் நிறமாகவும் இருந்த பெரிய பெரிய ஜடா முனிகள் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டு நின்றாற்போல் ஐந்தாறு குன்றுகள் ஒன்றுக் கருகில் ஒன்றாய் நின்றன.
அவ்விருட்டில் அவைகள் எல்லாவற்றிற்கும் மத்தியில் நின்றது தோணிமலை. அது வஞ்சகர்களுடைய நெஞ்சம்போல அளவிறந்த குகைகள் நிரம்பிய குன்று. அவற்றுள் ஒரு பெரிய குகை பேயாண்டித் தேவருடைய இரவு மாளிகை. அது அவன் தொழில்போல இருண்டிருந்தது. அதன் வாசலைச்சுற்றிக் கஞ்சாச் செடிகள் போடப்பட்டிருந்ததால் தூரத்துப் பார்வைக்கு அது புலப்படுவது வருத்தம். அதில் கற்கள்வைத்து அடுப்புகள் கட்டப்பட்டிருந்தது மன்றி மனித நீளத்துக்குச் சரியாக அனேக படுக்கைகள் வெட்டப்பட்டிருந்தன. அதில் ஒரு மூலையில் பிள்ளையார் விக்கிரகமும் மற்றொரு மூலையில் வெட்டரிவாளும் கையுமாய் ஒரு கருப்பண்ணசாமி விக்கிரக மும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மத்தியில் ஒரு பொந்தில் குடங்குடமாய் கள் வைச்கப்பட்டிருந்தது. பேயாண்டித்தேவன் வரும்போது சந்திரன் உதயமாகிற சமயம். அவனும் அவன் தோழர்களும் வரும்போது சங்கலிக் கருப்பன் வருவதுபோல் வளைதடிகளைச் சப்தம் செய்து நரிகளை யும் ஓனாய்களையும் வெருட்டிக் கொண்டு பாம்புகளைத் தடியால் எடுத்து அலட்சியமாய் வீசி யெறிந்துகொண்டு வந்தார்கள். அவர்கள் குகையில் வந்தவுடன் சுவரில் குழிவெட்டி எண்ணெய் வார்த்திருந்த தீபத்தை ஏற்றித் தாங்களடித்து வந்த கொள்ளையைக் கணபதிக்கும் கருப்பண்ணனுக்கும் சூடம் கொளுத்தி நைவேத்தியம் செய்துவிட்டுப் பிறகு கள்ளெடுத்துக் குடித்துவிட்டுப் பாட ஆரம்பித்தார்கள்:-
எதுகுல காம்போதி ராகம்-ஏகதாளம்
பேயாண்டித்தேவன் (கால்மேல் கால்போட்டு):-
வீரன் இருளன் காட்டேரி
வெறியன் நொண்டி சாமுண்டி
தொந்திக் கணபதி பெத்தண்ணன்
தொட்டியச்சின்னான் பாவாடை நம்மதெய்வ நாமிருக்க
ஊரிருக்க மாடிருக்க
உண்ணச்சம்பாச் சோறிருக்க
(எல்லாரும் ) தில்லா லேலே லேலோ தன்னானே
கையில் கன்னக் கோலிருக்க
காத்துராயன் துணையிருக்க
குடிக்கக்குடம் கள்ளிருக்க, குடிக்கக்குடம் கள்ளிருக்க
(எல்லாரும் தோள் கொட்டி)
நமக்கு முண்டோகுறை! நமக்கு முண்டோ குறை?
இரவுதான் நமக்குப் பகல்
நச்சத்திரம் நம்ம தீவட்டி
பேய்பிசாசும் வாய்மூடும்
பேயாண்டித்தேவன் பேர் சொன்னாலே
(மீசையை முறுக்கிக் கொண்டு எல்லாரும்)
தில்லாலே லேலேலோ தன்னானே
பெண்டுவிட்டுப் பிள்ளைவிட்டு
நாடுவிட்டுப் பாடுபட்டு
வாய்க்கால்வெட்டி வரப்பு வெட்டி
பலபேராச் சேர்த்த சொத்து
(எல்லாரும் ) நமக்காகத்தான் நமக்காகத்தான்
பெண்டுபிள்ளைக்குத் தாலிப்பிச்சை
நாம் கொடுத்தால் தானே யுண்டு!
இந்தப் பூமிக்கு நாமே ராஜா
கன்னக் கோலே நம்ப செங்கோல்!
(எல்லாரும் ) நமக்கு முண்டோ நிகர்! நமக்கு முண்டோ நிகர்
இப்படி இவர்கள் பாடி ‘நமக்குமுண்டோ நிகர்’ என்று தோள் தட்டி ஆர்ப்பரிக்கும்போது திடீரென்று பிசாசுகள் வந்தாற்போல் ‘ஹே’ என்று ஒரே மொத்தமாய்க் கத்திக் கொண்டு நூறுபேர் துப்பாக்கியும் கையுமாய் ஆகாயத்தி லிருந்து குதித்தாற்போலக் குதித்தார்கள். அவர்களைக் கண்ட வுடன் பேயாண்டித் தேவன் கூட நடுங்கிப் போய்விட்டான். வந்தவர்கள் ஒரு ஆளுக்கு மூன்று நாலு பேராய் குடிமயக்கத்தி லிருந்த பேயாண்டித் தேவனுடைய தோழர்களைக் கட்டி விலங்கிட்டு விட்டார்கள். பேயாண்டித் தேவனுக்கு மட்டும் கள்ளின் வெறியிருந்ததே யொழிய மயக்க முண்டாகவில்லை. மந்தமாய் பிரகாசித்த நிலவில் ஏறிட்டுப் பார்த்தான். முத்துஸ்வாமி அய்யருடைய உருவம் தெரிந்தது.உடனே அவன் அவரிடம் வந்து “ஐயர்வாளே வாருங்கோ! அப்படியா சர்க்கார் மனுஷனாப் போய்விட்டாற்போலிருக்கிறதே” என்று சொல்லி அவர் மார்புமீது ஒரு குத்து வைக்க, அவர் பாவம் சுருண்டு கீழே விழுந்துவிட்டார். உடனே பேயாண்டித் தேவன் வைத்தியநாதய்யர் குடுமியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு இன்னும் பத்துப் பேருடைய தலைமயிரை மற்றொரு கையால் சேர்த்துப் பிடித்துக்கொண்டு தேங்காய்களை முட்டுக்கு விடுவதுபோல ஒன்றோடொன்றை முட்டுக்கு விடவே, வைத்தியநாதய்யர் குடுமி அவன் கையோடு வந்து விட்டது. மற்ற பத்துப்பேருக்கும் பலமான காயம். அதற்குள் ஐம்பது அறுபது பேராக அவன்மேல் ஹோ என்று கதறிக் கொண்டு பாய்ந்து விழ அவனும் இருப்புலக்கைகள் போன்ற தன் கைகளை நாலாபக்கமும் வீசி ‘ஹே ஹோ’ என்று கர்ச்சனை செய்துகொண்டு சிலரை முகங்களை யுடைத்தும், சிலரைப் பற்களைத் தட்டியும், சிலரை மண்டைகளை நெரித்தும் தன்னாலான மட்டும் நெடு நேரம் கொடூர யுத்தம் செய்தான். ஆயினும் அவன் நூறுபேருக்கு ஒருவன் ஆதலால் என்ன செய்தும் கடைசியாய் அவர்கள் அவனைக் கட்டிப்பிடித்துக் கை கால்களில் பலமான இரும்பு விலங்குகளை மாட்டிப் பூட்டி விட்டார்கள்.
உடனே அவன் “என் கையிலும் விலங்கா!” என்று ஆக்ரோஷத்துடன் பற்களை நறநறவென்று கடித்துக் கண்களில் தீப்பொறி பறக்கக் கைகளைப் பலமாகத் திருகினான். திருகவே இரும்பு விலங்குகள் சில்லுச் சில்லாய் தெறித்து, போன இடம் தெரியாமல் போய்விட்டன. உடனே அவன் கைகளை வீசிக் கொண்டு தோள்களைத் தட்டி அட்டகாசம் செய்துகொண்டு, “வாங்களடா பயல்களா,பத்து இருபது பேராக வாருங்க ளடா, ஒரு கை பார்ப்போம்” என்று ஆர்ப்பரித்தான். அந்தப் போலீஸ்காரர்களுக்கு பத்து இருபது பேராக அவனிடத்துப் போகப் பைத்தியமா? வேட்டை நாய்கள் புலிமேல் பாய்வதுபோல் மறுபடியும் எல்லாரும் ஒரே மொத்தமாக அவன்மேல் பாய, அவன் “போங்கடா வெறும் முண்டைகளா, இத்தனை பேராகச் சேர்ந்து ஒருத்தனைப் பிடிக்க வந்து விட்டீர்களே. வெட்கம் கெட்ட முண்டைகளா. இப்பொழுது என்ன செய்ய வேணுமடா, முண்டைகளா?” என, அவர்கள் “கச்சேரிக்கு வா” என்றார்கள். அவன் “எனக்குக் காலில் விலங்கு போட்டிருக்கிறது. என்னால் நடக்க முடியாது. வேண்டுமானால் என்னைத் தூக்கிக் கொண்டு போங்கடா பயல்களா” என்று கீழே உட்கார்ந்து கொண்டு விட்டான். முப்பது நாற்பது பேராகச் சேர்ந்து அவனைத் தூக்கிப் பார்த்தார்கள், முடியவில்லை. பிறகு ஐம்பது அறுபது பேர் சேர்ந்து சிரமப்பட்டு அவனைத் தூக்க, அவன் “என்னடா பயல்களா நான் என்ன செத்த பிணமா படுத்த படி தூக்குகிறீர்களே” என்று தன்னைத் தூக்கினவர்களைக் கண்களிலும் தலைகளிலும் அடித்து வெருட்டினான். பிறகு வைத்தியநாதய்யர் தாங்கள் கொண்டுவந்திருந்த வண்டிகளில் ஒன்றை சக்கரத்தைக் கழற்றி வரச்சொல்லி அதற்குள் பேயாண்டித் தேவனை எழுந்தருளச் செய்து அதைச் சுமக்கும்படி சுற்றியிருந்தவர்களுக்குக் கட்டளை யிட்டார்.பேயாண்டித் தேவனும் இவர்கள் சர்க்காரையும் பார்ப்போம் என்று அந்த வண்டிக்கூட்டில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு வெற்றிலை பாக்கை வாயில் போட்டுத் தின்றுகொண்டும், உருவின கத்தியும் கையுமாய் வந்த போலீஸ் வீரர்மேல் வழி நெடுகத் துப்பிக்கொண்டும், தாளம்போட்டுப் பாடிக்கொண்டும், “தூக்குங்களடா பயல் களா, தூக்குங்கள்” என்று சொல்லிக்கொண்டும் பல்லக்கு சவாரி செய்துகொண்டு போனான்.
15 – பேயாண்டித்தேவர் உலா
இவ்வித கோலாகலத்துடன் பேயாண்டித் தேவனைப் பிடித்து வரும்பொழுது எந்த ஊர்ச் சிறைச் சாலையில் அவனைப் பத்திரப்படுத்துகிறது என்பதைப்பற்றி ஒரு ஆலோசனை நடந்தது. சப் மாஜிஸ்திரேட் வைத்தியநாதய்யர் சிறுகுளத் திலேயே அவனை அடைத்து விடலாமென்று அபிப்பிராயம் சொன்னார். முத்துஸ்வாமி அய்யர் ‘அது அபாயத்துக்கு இடமாகும். அவனைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ராட்சதர்கள். அவர்கள் அவ்வளவு சமீபத்திலிருக்கும்போது பேயாண்டியை வைத்துக் காப்பாற்றுவது அசாத்தியம்” என்று எடுத்துக் காட்டியதின்மேல் மதுரைக்கே அவனை அனுப்புவது என்று தீர்மானமாயிற்று.
ஆனால் போகும்பொழுது சிறுகுளம் மார்க்கமாகப் போக வேண்டியிருந்தது. அவ்வூருக்கு ஒரு மைலுக்கப்பால் பேயாண்டித்தேவன் வருகிறான் என்ற அரவம் உண்டான உடனேயே ஆண் பெண் அடங்கலும் அவனை எதிர்கொள்ளக் கிளம்பிவிட்டது. சுப்பு எப்பொழுதுமே அழுத்தந் திருத்த மாகப் பேசுகிறவளாய் விட்டதே. இப்பொழுது அவசரத் தில் கேட்க வேண்டுமா? “யேம்பூ பேயாயியேவனைப் பியிச்சுக் கிண்டுவயா யா, யா, யா,” என்றிப்படி ‘பேயாண்டித் தேவனைப் பிடித்துக்கொண்டு வருகிறார்கள் வா வா வா என்பதை யெல்லாம் யகர வர்க்கத்திலேதானே பேசித் தீர்த்துவிட்டாள். ஸ்திரீகளுக்கு மாப்பிள்ளை, பெண், பெண் வயிற்றுப்பேரன், பேத்தி என்றால் என்ன பிரியம் இருக்குமோ அவ்வளவு பிரியம் சுப்புவுக்கு ‘ய’ என்ற சப்தத்தின்மேல். அரிச்சுவடியில் வேறு எந்த அட்சரமும் அவளுக்கு லட்சிய மில்லை. சுப்பு இப்படிப் பிரசங்கம் செய்யும்போது வேம்பு புடவை உடுத்திக் கொண்டிருந்தவள் உடனே “நிச்சயம் மாவா! பேயாண்டித் தேவனையா!! பிடிச்சுட்டாளா!!! இதோ நானும் வந்துவிட்டேனடீம்மா” என, சுப்பு “நீ யா (வா) நான் போயேன்” என்று ஓட ஆரம்பித்தாள். அதற்குள் வேம்பு “அடயெழவே நானும் வந்து விட்டேண் டிம்மா. இதோ ஆச்சரிம்மா (ஆய்விட்டதடி யம்மா) ஒரு சித்து சித்துக்கிறதுக்கு எத்தனை நாழி செல்லும் என்று சொல்லி அவசரத்தில் ரவிக்கைகூடப் போட்டுக்கொள்ளச் சரிப்படாமல் மேலாடையிருக்க வேண்டிய பக்கம் ‘கொசா மும்,கொசாம்’ இருக்க வேண்டிய பக்கத்தில் மேலாடையும் சுற்றிக்கொண்டு புடவையை உடுத்தினதும் உடுத்தாதுமாய் அலங்கோலத்துடன் வெளியே புறப்பட்டுவிட்டாள்.
அடுத்தகத்து நாகு தன் புருஷனுக்குப் பழையது போட்டுக் கொண்டிருந்தாள். சுப்புவும் வேம்புவும் போய் ஒரு குரல் கூப்பிட்டார்கள். கூப்பிட்டதுதான் தாமதம். நாகு தன் அகமுடையானைப் பார்த்து “மோரு கச்சட்டி யிலிருக்கு; குழம்பு அடுப்பிலிருக்கு; எடுத்து வாத்துக்கட்டும், நான் போறேன்,” என்று சொல்லி சாதக் கற்சட்டியை மூடாமல் அப்படித்தானே வைத்துவிட்டு பத்துக் கையைக் கூட அலம்பாமல் அப்படியே புறப்பட்டு விட்டாள். அவள் புருஷன் “அடியே போட்டுவிட்டுப் போடீ, அப்புறம் பார்த்துக்கொள்” என்று அதட்ட, அவள் “இதுக்கு வர்ர கோபத்தைப் பார்! நன்னாருக்கு!” என்று மரியாதையாய்ச் சொல்லிவிட்டு (அகமுடையானுக்குப் பயப்பட அதுதானா சமயம்!) ஒரே ஒட்டமாய் ஓடிவிட்டாள். அவள் புருஷனுக்கு வந்த கோபத்துக்கு அளவு சங்கையில்லை. “மொட்டைமுண்டை, வரட்டும் சொல்லுகிறேன், காலை முறித்துப் போடுகிறேன், சாதத்தை எறிந்துவிட்டுப் போய்விடுகிறேன் பார்” என்று கோபித்துக்கொண்டான். சாதத்தை எறிந்துவிட்டால் யாருக்கு நஷ்டம் என்பது படவில்லை. அப்படி எறியவும் மனது வரவில்லை. “வரட்டும் சொல்லுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே, தெய்வமே என்று ஒரு தரம் வைகிறது, ஒருபிடி சாப்பிடுகிறது, மறுபடி வைகிறது, மறுபடி சாப்பிடுகிறது. இப்படியாகச் சாப்பிட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தான். இவ்விதமாக ஒவ்வொரு வீட்டிலும் போட்டது போட்டபடியே சுப்பு, சேஷி, வேம்பு, நாகு, அம்மாப்பொண்ணு, அலமேலு, நாணி, சாச்சி, சிட்டம்மா, எச்சி, பாப்பு, (நம்முடைய ஸ்திரீகள் பெயர்கள்தான் எவ்வளவு அழகாயிருக்கின்றன!) முதலிய எல்லாப் பெண்டு களும் பட்டாளம் பட்டாளமாகப் புறப்பட்டு விட்டார்கள். பாப்பா பட்டியகத்து வெட்டரிவாள் என்று பட்டப் பெயர் பெற்ற குப்பிப் பாட்டியோ எல்லோருக்கும் முன்னமே முதல் பாலத்துக்கே போய்க் காத்துக்கொண்டிருந்தாள்.
பேயாண்டித்தேவனும் வந்து சேர்ந்தான். அவன் வருகை யென்ன திருடனைக் கச்சேரிக்குப் பிடித்துக்கொண்டு போவது போலவா இருந்தது! சட்டை தொப்பி தரித்த போலீஸ் உத்தியோகஸ்தர்கள் பல்லக்கு சுமக்க, உருவின கத்தியும் கையுமாய் சிப்பாய்கள் முன்னே செல்ல, முத்துஸ்வாமியய்யர் முதலிய மகா ஜனங்கள் பின்னே வர, ஸ்திரீகள், “கட்டேலே போவான் மூஞ்சியைப் பாரடி, கரியாப் போவான், மீசையும் அவனும்” என்று வழிநெடுகப் பல்லாண்டு பாட, இவ்வளவு கோலாகலத்துடன் ராஜ கம்பீர வீரமார்த்தாண்ட சங்கிலி வீரப்ப பேயாண்டித்தேவர் அவர்கள் (வண்டிக்கூடாகிய) பல்லக்கின்மேல் கம்பீரமாய் உட்கார்ந்து கஞ்சா, புகையிலை முதலிய வாசனைத் திரவிய சஹிதம் தாம்பூலந் தரித்துக் கொண்டும், பவளவர்ணமான தனது திவ்ய மங்கள எச்சிலை கத்தி பிடித்த யுத்த வீரர்கள்மேல் தாராளமாய் சமர்ப் பித்துக் கொண்டும், ஆடிப்பாடித் தாளம்போட்டு அட்ட காசம் செய்துகொண்டும் அலங்காரமாய்ப் பவனிவர, அந்த மகா புருஷனுடைய திவ்ய சேவையை அடையும்பொருட்டு ஆயிரக் கணக்கான ஜனங்கள் மதுரையில் மீனாட்சியம்ம னுடைய முளைக்கொட்டு உற்சவத்தில் பத்தாவது திருநாள் அன்று அம்மன் கனக தண்டிகையில் எழுந்தருளி வரும் காட்சியைக் காண ஒருவர்மேல் ஒருவர் விழுவதுபோல் விழுந்து தரிசனம் செய்து கிருதார்த்தர்களானார்கள்.
இவர்கள் எல்லாரிலும் விசேஷ பாக்கியத்தைப் பெற்றவள் குப்பிப்பாட்டி என்ற மொட்டச்சி. அவள் பேயாண்டித் தேவனைக் காணவேண்டிய ஆசாவேசத்தில் முட்டாக்கு பின்னே விழ மேலாக்கு முன்னே விழ ஸ்திரீ புருஷன் என்ற பேதத்தை மறந்து, பிராமணன் சூத்திரன் என்ற பேதத்தைத் துறந்து கூட்டத்திற்கு நடுவே பாய்ந்து பேயாண்டித் தேவனுக்குச் சமீபத்தில் போகவே, அவளுடைய அற்புத பக்தியைக் கண்டு ஆச்சரியமடைந்த அத்தேவன் சேகரித்து வைத்திருந்த தனது திருவாயின் அமிர்தத்தை அவள்மேல் அன்புடன் புரோட்சிக்க, வெள்ளிமயமான அவளுடைய சிராரோமங்கள் அனைத்தும் அரைக்கணத்தில் ரத்னமயமாகப் பிரகாசித்த அற்புதத்தைக் கண்ட ஆங்குள்ளோர் அனைவரும் அடக்க வொண்ணாது ஆர்ப்பரித்து நகைத்தனர். அதாவது (சாதா ரணத் தமிழில்) திருட்டுப் பேயாண்டி குப்பிப் பாட்டியின் மொட்டைத் தலையில் காவியேறிய தனது எச்சிலை உமிழ, அத்தலையிலுள்ள வெள்ளை மயிர்கள் எல்லாம் சாயமேறிச் சிவந்த நிறமாயின. இந்த வேடிக்கையைக் கண்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். உடனே குப்பிப்பாட்டி தன்னதிர்ஷ்டத்தைக் கண்டு சந்தோஷிப்பதை விட்டு, “கட்டாலே போவே, நீ நாசமாப் போயிட, கரியாப்போக” என்றிவ்வாறு கர்ச்சிக்கத் தலைப்பட்டாள். இவ்விதத் திருக் கூத்துக்களுடன் பேயாண்டியை மதுரைக்கு உபசரித்து அழைத்துச் சென்று திரிபுரத்துள் ஒருபுரம் போன்ற கற்கோட்டை யொன்றில், காட்டில் திரியும் சிங்கத்தைக் கூட்டிலடைத்தாற்போல, அடைத்து அல்லும் பகலும் காலோயாது, கண் மூடாது, வாய் திறவாது, காவல் காக்கும்- படி தக்க காவல்காரர்களை ஏற்படுத்தினார்கள்.
முத்துஸ்வாமி அய்யர் தானென்றும் தம்பியென்றும் பேதம் பாராமல் தன் கைப்பணத்தையே செலவழித்து தன் பெயராலேயே ‘பிரியாது’ கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை நடத்தி விட்டு ஊருக்குத் திரும்பினார். நல்ல காரியம் ஒன்றை முடித்ததில் அவருக்கு உற்சாகம் கொஞ்சமதிகமாயிருந்தது, வீட்டு வாசலுக்கு வந்தவுடன் கலீர் கலீர் என்று சப்தம் செய்யும் சதங்கையணிந்த பாரசாரிக் காளைகள் கட்டிய தனது பெட்டி வண்டியினின்றும் கீழே யிறங்கினார். தலையில் வெகு அழகான ஓர் சரிகை யங்க வஸ்திரத்தை ‘குசால்’ கட்டுக் கட்டிக்கொண்டு கையில் வெள்ளிப் பூண் பிடித்த தடியேந்தி, காலில் ஜோடு மாட்டிக்கொண்டு தங்க அரைஞாணில் வெள்ளிச்சங்கிலி குலுங்க, வயிரக்கடுக்கன்களும், மரகத மோதிரங்களும் பளீர் பளீர் என்று டால் வீச, தனது கிரஹத்துள் பிரவேசிக்க அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்த சிலர் குபீரெனவெழுந்து அவரை வெகு வணக்கமாய் வந்தனம் செய்தார்கள். இப்படி அவர் வரும்பொழுது பொன்னம்மாள் தன்னகத்து வாசலில் நின்றுகொண்டிருந் தாள். அவர் வந்த வருகையையும், அவருக்கு நடந்த மரியாதையையும் பார்த்து அவளுக்கு உண்டான பொறாமைக்கு அளவில்லை. ‘சூள்’ கொட்டிக்கொண்டு இத்தனை வேண்டியிருக்கிறதா அது எத்தனை நாள் வாழ்வோ, எப்படியோ, ஓஹோ என்று இருந்தவர்கள் எல்லாம் எப்படியோ போய்விட்டார்கள்” என்று முணுமுணுத்துக் கொண்டு சகிக்க மாட்டாது உள்ளே சென்றாள். அப்போது சுப்பிரமணியய்யர் கூடத்தில் உட்கார்ந்திருந்தார். இவள் முணுமுணுப்பதைப் பார்த்து “என்னடியம்மா எனக்குச் சொல்லப்படாதா” என்று அவர் செல்வமாய்க் கேட்க, அவள் “ஆமாம், என்னமோ சொன்னா சொரக்காய்க்கு உப்பில் லேன்னு; அவர் வந்திருக்கிறார், அய்யர்வாள், ஒங்கண்ணாவாள், முத்தண்ணாவாள், பொன்னண்ணாவாள், ஆனையோட, குதிரையோட என்னமோ அற்பங்கள் தலைகீழே விழுகிறதுகள். ஜோடன்ன, குடையென்ன, தடி என்ன ஒன்றும் பார்க்கப்பிடல்லை. நடக்கட்டும், அதிசயமா கள்ளனைப் பிடிச்சுட்டாரில்லையோ” என்றாள். அவளுக்குப் பொறாமை மும்முரத்தில் நகைபோன வருத்தம்கூடப் போய் விட்டது.
மேலும் அன்று காலமே ஆற்றங்கரையில் கூடிய வம்பர் மகாசபையில் பொன்னம்மாளின் பொறாமையை அதிகரிக்கத் தக்க சில தீர்மானங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆற்றங்கரை யில் கூட அந்த சபை கூடுமோ என்று சிலருக்குச் சந்தேக முண்டாகலாம். நெருப்பும் வைக்கோலும் சேர்ந்தால் தீப் பற்றுவதற்கு யாரைக் கேட்க வேண்டும். அந்த நெருப்பு சந்தர்ப்பமும் முகூர்த்தமும் பார்த்தா பற்றுகிறது. (இவை களுக்கெல்லாம் ததைவலக்கினம் தான் விதி.) அதுபோல் சுப்பு கூட்டாளி இரண்டுபேர் எங்கே சேர்ந்தாலும் சரி அது வம்பர் எப்பொழுது சேர்ந்தாலும் சரி மகாசபைதான். மேலும் அந்த சபையின் மீட்டிங்குக்கு ஆற்றங்கரையைப் போல் வசதியான இடம் வேறு கிடையாது. (அதனால்தான் இக்காலத்தும்கூட பெண்டுகள் நதிக்குப் போனால் அவ்வளவு சீக்கிரம் வந்து விடுகிறார்கள்!)
ஆற்றங்கரையில் புடவை தோய்த்துக்கொண்டே சுப்பம். மாள் முத்துஸ்வாமி அய்யர் பேயாண்டித் தேவனைப் பிடித்த விருத்தாந்தத்தைச் சவிஸ்தாரமாய் அரங்கேற்றியபிறகு, “நீ, ஆயிய(ர)ந்தாஞ் சொல்லேம்மா, என்னன்னாலும் எங்க முத்து ஸ்வாமிக்குச் சமானம் வயாது. எங்கேதான் போகட்டுமே, அடி! டில்லிக்குத்தான் போகட்டுமே ஜெய்ச்சுக்குண்டு வந்துடுவன். போன காயியம் இல்லென்னு வய்ய (வருகிற) வய(ழ)க்கம் கிடையாது.சுப்பிரமணியனும் கெட்டிக்காயன் தான். என்னன்னாலும் அவனுக்கு அவ்வளவு சாமய்(ர்)த்தியம் வயாது” என்று தனது அபிப்பிராயத்தை வெகு தயவாய் வெளியிட்டருளினள். வேம்பு, “சுப்பிரமணியன் யார் வழிக்குப் போறான், எவர் வழிக்குப் போறான்; அப்பாவி, அவனுண்டு பொன்னம்மா உண்டு, தெய்வமேன்னு இருக் கான்’ என்று நீட்டிச் சொன்னாள். பொன்னம்மா இவ்வள வுக்கும் அங்கேயே இருக்கிறாள். அவளுடைய பொறாமையைத் தூண்ட வேண்டுமென்றுதான் இந்த சம்பாஷணையே அக்கிராசனாதிபதி அவர்களால்? ஆரம்பிக்கப்பட்டது. வேம்பு பேசி முடித்தவுடன், பொன்னம்மாள் கம்பீரமாய் விழித்துப் பார்த்துக்கொண்டு “தலையிருக்க வாலாடணுமா, ஒரு ஊருக்கு இரண்டு பைத்தியக்காரன் வேணுமான்னு வெறுன்னே இருந்தாக்கா சுப்பிரமணியனுக்கு ஒன்றும் தெரியாது. அப்பாவி, எல்லாம் அவர் அண்ணாத்தான் சாதிக்கிறா’ என்னு இப்படியெல்லாம் சொல்லச் சொல்லியிருக்கா! அப்படித் தான் இருக்கட்டுமே. அதிலென்ன எளப்பம், என்ன இருந்தா லும் அவாள் ஆணும் பெண்ணும் கெட்டிக்காரர்தான். நாங்கள் ஆமடையான் பெண்டாட்டியும் பைத்தியக்காரர் தானம்மா! கெட்டிக்காரரில்லாட்டா அம்பதினாயிரத்தோட லட்சம் சேருமா!” என்று வெகு வெறுப்பாய்ச் சொல்லிவிட்டு, வீட்டுக்குப் போக நேரமாய் விட்டபடியால் கட்டிச் சுருட்டிக் கொண்டு கால் நிமிஷமும் தங்காமல் புறப்பட்டு விட்டாள். ஊரார் முத்துஸ்வாமியய்யரைக் கொண்டாடக் கொண்டாட அவளுக்குப் பொறாமை யதிகரித்தது.
மேலே சொல்லியபடி அவள் சுப்பிரமணிய அய்யருக்குப் பதில் சொல்லவே அவர் “வந்துவிட்டானா? இங்கேயே யிரு. நான் போய் என்ன சமாசாரம் என்று கேட்டு வருகிறேன்’ என்று புறப்பட, அவள் “எல்லாம் போய்த்தானிருக்கு. வர வில்லை வரவில்லையென்று ரொம்ப தாபந்தப்பட்றா!விழுந்தடிச் சுக்குண்டு இப்பவே ஓடவேண்டாம், சாயங்காலம், வேண்ணா போயிக்கலாம்” என்று சொல்லி அவரருகிலிருந்து சல்லா பங்கள் செய்து போகாமல் நிறுத்திவிட்டாள்.
இதற்குள்ளாக முத்துஸ்வாமியய்யரிடம் ஊரார் அனேகர் போய் பேயாண்டித் தேவனுடைய நடத்தை, அவனைச் சிறைப்படுத்தியது முதலிய விஷயங்களைப்பற்றி விசாரிக்க அவரும் சவிஸ்தாரமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தார். சாயங் காலம் பொன்னம்மாளுடைய அனுமதியின்மேல் சுப்பிரமணி யய்யர் சாவகாசமாய் வந்தார். முத்துஸ்வாமி அய்யர் சுபா வத்தில் கர்வ இஷ்டர். ஊரார் வந்து விசாரிக்கிறபோது தன் தம்பி தன்னை முன்னமேயே வந்து விசாரிக்கவில்லை என்பதைப்பற்றி அவருக்கு அந்தரங்கத்தில் கோபம். ஆகையால் சுப்பிரமணியய்யர் போனபொழுது அவர் அவரை ஒன்றும் கவனிக்கவில்லை. முகங்கொடுத்துப் பேசவில்லை. இவராவது சிறிது மலிந்தாரா? அவருக்கு இவர் தம்பி யல்லவோ! சிறிது நேரம் இருந்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சட்டென்று அவர் வெளியே போய் விட்டார். அதைக் கவனித்த முத்துஸ்வாமியய்யருக்கு ‘இவனுக்காக நாம் இவ்வளவு பாடுபடுகிறது! நம்மை இவன் இவ்வளவு அலட்சியம் பண்ணுகிறதா! இதுவரையில் இப்படிக் காணோமே. சரிதான், இதுவும் விசேஷந்தான்’ என்று மனதில் கோபம் உண்டாயிற்று. சுப்பிரமணியய்யர் வீட்டுக்கு வந்த வுடன் பொன்னம்மாளுடன் நடந்த சங்கதியைச் சொல்ல அவள், ”உங்களுக்கு வேணும் நன்னாவேணும்” என்று சொல்லி முகத்திலிடித்தாள். இந்த அற்பசங்கதி சகோதரர் களுக்குள் பரஸ்பர அருவருப்புக்குச் சிறிது இடங் கொடுத்தது.
சில நாளைக்குப் பிறகு சுப்பிரமணியய்யருடைய கிரகத் துக்கு ஒரு பையன் வந்தான். அவனுடைய நறுக்குமீசையும், குடுமியும், சாந்துப்பொட்டும், கிறுக்குச்சடாவும், அவனுடைய ஷோக் நடையும் அவன் போக்கிரி யென்று கட்டியம் கூறின. அவன் குணம் அவனுடைய நடை உடை பாவனைகளில் எழுதிக் கிடந்தது. பின்னும் ஏதாவது சந்தேகமிருக்குமாயின் ஐந்து நிமிஷம் அவனுடன் பேசினால் எல்லாம் நீங்கிப்போகும். துலுக்கு பாஷைதான் அவன் வாயில் விசேஷ சஞ்சாரம். அவனுக்குத்தான் லட்சுமியைக் கொடுக்கவேண்டுமென்று பொன்னம்மாளுடைய அருமையான கோரிக்கை. அவன் அவளுக்குச் சொந்தத் தமையன் (பொன்னன்ணா) பிள்ளை அவனுக்கு வயது 19 அல்லது 20 இருக்கலாம். நாலைந்து வருஷ. மாக ‘மெட்ரிக்குலேஷன்’ பரீட்சைக்குத் தவறாமல் போய்க் கொண்டிருந்தான். இன்னும் பத்துப் பதினைந்து வருஷத் துக்குள் பரீட்சை தேறிவிடும் என்ற பயம் அதிகமாகக் கிடையாது. பணம் மட்டும் தயவுசெய்து யாராவது சோம்பலில்லாமல் கொடுத்து வரவேணும். மகாராஜர் சுப்பிரமணிய அய்யரவர்கள் தான் தற்காலத்துக்கு அந்த நல்ல தர்மத்தை நடத்தி வருகிறார்கள். ‘எங்கள் வைத்தி ரொம்ப அழகு, அவனோடே ஒருத்தர் பேசி முடியாது. துலுக்குக்கூடத் தெரியுமடி’ என்று பொன்னம்மாள் பலமுறை அவனுடைய பிரசம்ஸையை வம்பர் மகாசபைக்குத் தெரியப் படுத்தியிருக்கிறாள். பணத்துக்காவது, அழகுக்காவது யாரை யாவது விசேஷிக்க வேண்டியிருந்தால் அவள் முறையே தன் பிறந்தகத்தையும், வைத்தியநாதனையும் சொல்லாம லிருக்க மாட்டாள். அவன் பெயர் வைத்தியநாதன்.
அவன் வந்த அன்று மத்தியானம் லட்சுமி சிற்றம்மை யகத்திற்கு ஏதோ காரியமாகப் போனாள். அவளைக் கண்ட வுடன் பொன்னம்மாள் வைத்தியநாதனைப் பார்த்து, “இவள் தாண்டாப்பா ஒன் பெண்டாட்டி; மதுரையான் அடிச்சுக் குண்டு போயிட்டான்” என்றாள். அதற்கவன் “இவள் இப்பொழுதும் என் பெண்டாட்டிதான். எனக்காகப் பேசினவள் என் பெண்டாட்டி தான். மதுரைப் பயல் கிடக் கிறான், நான்-” என்றான். லட்சுமிக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. போன காரியத்தைப் பார்த்துக்கொண்டு திரும்ப எத்தனித்தாள். பொன்னம்மாள், “என்னடி அவன் அவ்வளவு அருமையாக உன்னை விசாரிக்கிறான், நீ அவனை எப்போ வந்தேன்னு கூட விசாரிக்கப்படாதா? வெறுன்னை கேளு, வாய்முத்து உதிர்ந்துபோகாது. போனா நானிருக்கேன் பொறுக்கித் தர” என், அவள் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து வெட்கி நின்றாள். உடனே பொன்னம்மாள் அடி அதிசயமே,சீமைச்சரக்கே என்ன ஓவியம் பண்ணுகி ராளடி இந்தக் குட்டிதான். எங்களையெல்லாம் லட்சியம் பண்ணி நீ பேசுவாயா,” என்று சொல்ல, போக்கிரி வைத்தியநாதன், “பெண்டாட்டியல்லவோ, நீ யிருக்கிற போது பேசுவாளா? நீ அந்தப் பக்கம்போ, பேசுவள்,” கலியாணியைப் பார்த்து “ஏனடி அப்படித்தானே! என் தங்கமே, லேடி, யங் லேடி, மைடியர் மைடியர் சொல்லிக்கொண்டு அவளை நோக்கிக் காமவேசத்துடன் எழுந்து துரத்திச் சென்றான். லட்சுமியோ உடம்பு நடுங்கி பயந்து தன்னகத்துக்கு அலறிக்கொண்டு ஓடிவந்தாள். அப் பொழுதுதான் அவள் தகப்பனார் தூங்கி யெழுந்த சமயம் ஓடி வருவதைக் கண்டு அவர் என்னடி யென்று கேட்க, “அவள் ஒன்றுமில்லை யப்பா” என்றாள். மறுபடியும் அவர் “தேம்பி அழுகிறாயே சமாசாரம் என்னடி” என்று அழுத்திக் கேட்க, அவள் சங்கதி நடந்ததைச் சொன்னாள். அதற்குள் கமலாம் பாளும் அங்கே வந்தாள். உடனே அவளைப் பார்த்து முத்துஸ்வாமியய்யர் “உனக்கு ஏதாவது புத்தி யிருக்கிறதா? அவளை நீ ஏன் அவர்கள் வீட்டுக்குப் போகச் சொன்னாய்?” என்று கேட்க, அதற்குக் கமலாம்பாள் “அற்ப காரியம் தானே. இதற்காக நான் போவானேன்,போய்விட்டு ஒரு எட்டில் வந்துவிடுவாள் என்று போகச் சொன்னேன், என் மேல் தப்பிதந்தான், நான் சொல்லியிருக்கப்படாது” என்றாள். முத்துஸ்வாமியய்யர் பெண்ணைப் பார்த்து “அவள் வீட்டுக்குப் போகிறபோது என்னைக் கேட்டுக் கொண்டா போனாய்.போ அந்தப் பக்கம், என்னெதிரே அழாதே போ!” என்று அதட்டிச் சொன்னார். லட்சுமி பாவம் அழுதுகொண்டு உள்ளே போய்விட்டாள். அப்பொழுது இரண்டாங் கட்டில் பொன்னு என்ற ஒரு கைம்பெண் தோசைக்கரைத்துக் கொண்டிருந்தாள். அவள் இந்தச் சங்கதியை யெல்லாம் பொன்னம்மாளிடம் போய் ஒன்றுக்குப் பத்தாய் மூட்டி விட்டாள்.
அன்று சாயந்திரம் சுப்பிரமணியய்யரும் வைத்திய நாதனும் ஆற்றங்கரைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அப்பொழுது முத்துஸ்வாமியய்யர் எதிரே வந்தார். வந்தவர் வைத்தியநாதனை எப்பொழுது வந்தாய் என்று கேட்கவில்லை. அவனைக் கண்டவுடன் அவன் அயோக்கியன் என்று அவருக்குப் பட்டதுமன்றி மத்தியானம் நடந்த சங்கதியும் ஞாபகத்தில் வந்தது. அவர் இவனுடன் என்ன பேச்சென்று போய் விட்டார். உடனே வைத்தியநாதன் “என்ன” வெகு அசட்டை யாய்ப் போகிறாரே’ என, சுப்பிரமணியய்யர் அவர்கள் எல்லாம் பெரியவாள். நம்மை லட்சியம் செய்வாரா” என்றார். வைத்தியநாதன் “அவ்வளவு பெரியவாளா, அவர் கையும் நம்பகையும் ஒரு மூச்சுப் பார்ப்போமா, பார்த்துக் கொண் டிருக்கிறீர்களா? அத்திரிமாகு’ என்று மீசையை முறுக்கி வீரியம் பேசி, ஊருக்குப் போவதற்குள் ஏதாவது திருவிளையாடல் பண்ணிவிட்டுத்தான் போகவேண்டு மென்று தனக்குள் தீர்மானம் செய்துகொண்டான்.
– தொடரும்…
– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.
– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.