கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விவேக சிந்தாமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2024
பார்வையிட்டோர்: 1,379 
 
 

(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.

க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

10 – கல்யாண தடபுடல்

இது நிற்க, மணவறையிலிருந்த ஸ்ரீநிவாசன் தனக்குக் கல்யாணம் நடக்கிறதென்பதை நினைத்துத் தன் மனதுக்குள் பெருமைப்பட்டது இவ்வளவு அவ்வளவு அல்ல. தன்னருகில் லட்சணமான ஒரு பெண் தன் மனைவியாக உட்கார்ந்திருப்பதை நினைக்க அவனுக்கு உள்ளம் பூரித்தது. புதிதாகப் பட்டாபிஷேகமாகும் ராஜகுமாரனுக்குக்கூட அவ்வளவு சந்தோஷமும் கர்வமும் இருக்காது. அவன் தன் ஆசனத்தில் கொஞ்சம்கூட முதுகை வளைக்காமல் கம்பீரமாய் நிமிர்ந்தபடியே உட்கார்ந்தான். அங்கவஸ்திரத்தை இழுத்து இழுத்து அடிக்கடி சீர்திருத்திக் கொண்டான். தன் வலது கையால் முகவாய்க் கட்டையைப் பல முறை தடவினான். அடிக்கடி தொண்டையைத் திருத்திக் கொள்பவனைப்போல் கர்ச்சித்து இருமினான். சில வேளை தன் இரண்டு கைகளாலும் முழந்தாளைக் கட்டிக்கொண்டு யானை ஆடுவதுபோல் மெதுவாய் ஆடினான். சிலவேளை தன் விரல்களால் கீழே வெகு விரைவாய் இங்கிலீஷில் எழுதினான். ஒவ்வொரு வேளை தன் முகத்தைத் தன்னருகிலிருந்த சுப்பராயனை நோக்கி அழகாய்த் திருப்பிக் கொண்டு, சில வார்த்தைகளை இங்கிலீஷில் பேசினான். ஹோமம் செய்யும்போது புகையுடன் பழகாத தன் கண்களில் ஜலம் வர அதை அங்கவஸ்திரத்தால் துடைக்காமல் தன் விரலால் சுண்டி எறிந்துகொண்டு, சுப்பராயனை நோக்கி, தன் பெண்டாட்டி காதில்பட “ஆனந்தபாஷ்பம்” என்று சொல்லிக்கொண்டான். ஏதோ புதுமையைக் கண்டவன்போல அடிக்கடி புன்சிரிப்புச் சிரித்தான். நேற்று வரையில் வேஷ்டி கூடச் செவ்வையாய் உடுத்தத் தெரியாத பையன் இன்று பாராட்டிக் கொண்ட பெருமையைப் பாருங்கள்! ஒரு வேளை நாமும் நம்முடைய கல்யாணத்தில் இப்படித்தான் இருந்திருப்போம். மேலும் ஸ்ரீநிவாஸன் சிறுவன்தானே ! 

மகாகனம் பொருந்திய மகா-ஈ– ஸ்ரீ ஸ்ரீநிவாஸ அய்யர் அவர்கள் தமது ஆசனத்தில் இவ்வாறு வீற்றிருக்க, குழந்தை லட்சுமி உடல் ஒடுங்கி தலைகுனிந்து அவரிடமிருந்து ஒரு முழத்துக்கப்பால் தங்கத்தில் வார்த்த பிரதிமைபோல் அசை வற்று அமர்ந்திருந்தாள். அவள் அகமுடையானை அவள் இன்னும் செவ்வையாய்ப் பார்க்கவில்லை. அவள் சபைக்கு வரும்போது ஸ்ரீநிவாஸன் உட்கார்ந்தது ஏதோ ஒரு ஜோதி போல் அவளுக்குத் தோன்றியதைத் தவிர, அவனுடைய உருவத்தையும் முகத்தையும் அவள் இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. ஒருவருமறியாமல் கடைக்கண்ணால் அவனைக் கொஞ்சம் பார்த்துவிட இஷ்டந்தான். ஆனால் எல்லோரும் தன்னைக்கவனித்துக்கொண்டிருந்ததாக அவளுக்குத்தோன்றிய தால் அவள் அப்படிச் செய்ய மிகவும் கூசினாள். ஸ்ரீநிவாச னாவது இவளைப் பார்த்தானா! அதுவுமில்லை. அவனுக்கு ஸ்திரீகளைக் காட்டிலும் பத்துப் பங்கு அதிக நாணம். அவளைப் பார்க்க அவனுக்கு ஆசை பூரணமாயிருந்தது. ஆனால் நீக்க முடியாத கூச்சம் குறுக்கிட்டது. இவர்கள் நிலைமை இப்படி யிருக்க, தாடகை குப்பியின் கூக்குரல் கேட்டது. உடனே ராமண்ணா வாத்தியாரையும் மற்றும் சிலரையும் தவிர, எல்லோரும் வெளியே போய்விட்டார்கள். ராமண்ணா வாத்தியாரும் வாசல் வரையில் போய்க் கூக்குரலின் காரணத்தை யறிந்து, “இந்தப் படுபாவிக்குச் சாக்காலம் வரவில்லையே! இவளைக் கண்டம் கண்டமாக வெட்டிவிட்டால் தான் என்ன?” என்று முணுமுணுத்துக்கொண்டு திரும்பி விட்டார். குழந்தை லட்சுமியோ திடீரென்று உண்டான சப்தத்தைக் கேட்டு வேடர்களுடைய கொம்பு வாத்தியத்தைக் கேட்ட மான்போலத் திடுக்கிட்டு நடுங்கினாள். இதற்குள் ஸ்ரீநிவாசன் நடக்கும் சங்கதியை யறிந்துவர சுப்பராயனை அனுப்பிவிட்டு வாத்தியாரைப் பார்த்துக் கம்பீரமாய், ‘தாத்தா, அங்கே என்ன விசேஷம்?” என்று கேட்டுவிட்டு, ‘இந்த அற்ப விஷயந்தவிர வேறொன்றுமில்லையே!” என்று வெகு இலக்கணமாய் மறுமொழி சொன்னான். வாத்தியார் மறுமொழியைக் கேட்ட லட்சுமி மனந்தெளிந்து கூட்டம் நீங்கினதை ஒரு பெரிய பாரம் நீங்கினதுபோல் உணர்ந்து பெருமூச்செறிந்து தன் தலையைக் கோதுபவள்போல சற்று நிமிர்ந்தாள். ஸ்ரீநிவாசன் கூட்டம் திரும்புமுன் தன் மனைவியை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையுடன் தூணைப் பார்ப்பவன் போலவும் சுவரைப் பார்ப்பவன் போலவும், விட்டங்களைப் பார்ப்பவன் போலவும் கொஞ்சம் கொஞ்சமாய் லட்சுமியைப் பார்க்கத் துணிந்தான். 

இப்படி இவன் கள்ளத்தனமாகப் பார்க்கும்போது, தலையைக் கோதுவதுபோல் பாவனை பண்ணிக்கொண்டு இவனுடைய அழகை ஜாடையாய்க் கண்டு அடங்காத ஆனந்தத்துடன் மிருதுவாக மந்தஹாசம் செய்துகொண்டு தன் கண்களை இவனுடைய அழகான மேனியினின்றும் பறிக்க மாட்டாமல் லட்சுமி பார்த்துக் கொண்டிருக்கத் தற்செயலாய் இவ்விருவர் கண்களும் இமைப்பொழுது சந்தித்தன. 

அப்படிச் சந்தித்த உடனே லட்சுமி தலைகுனிந்து விட்டாள். அவள் முகம் வியர்த்தது, கைகால் பதறின, உடல் மயிர்க்கூச்செறிந்தது. காலையில் இளஞ் சூரியனைப் பார்த்த கண்களுக்கு எப்படிச் சற்று நேரத்திற்கு எங்கே பார்த்தாலும் சூரியனாகத் தோன்றுமோ அதுபோல லட்சுமியின் கண்களுக்கு கொஞ்சநேரத்திற்குத் தன் புருஷனுடைய செந்தாமரைபோல் மலர்ந்த முகமும் அழகிய கம்பீரமான பார்வையுமே எங்கும் தோன்றி விளங்கின. அவள் சந்தோஷத்தால் உடல் பூரித் தாள். ஸ்ரீநிவாசனுக்கு உண்டான ஆனந்தத்திற்கு அளவு இல்லை. அவனுடைய கண்கள் தேனுண்ட வண்டுகள் போலச் சந்தோஷத்தால் சலித்து அவனுடைய மனக் களிப்பை வெளிப்படுத்தின. லட்சுமியின் இனிமையான முகத்தில் புஷ்பித்த மெல்லிய மந்தஹாஸமும், ‘கஞ்சத்தி னளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்’ என்ற லட்சணத் திற்குப் பொருந்திய அவளுடைய விசாலமான கண்களும் இவன் உள்ளத்தை அடிமைப்படுத்தின. ‘என்ன அன்பு! என்ன அன்பு என்னைப் பார்த்து அவள் சிரித்த சிரிப்பு ஒன்று போதாதா?” என்று அவன் நினைக்குந்தோறும் அமிர்தம் உண்டவன்போல சந்தோஷ மடைந்தான். இவ்வாறு இருவரும் பரஸ்பர சரிசன ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் தங்கள் தங்கள் நிலைமை தெரியாது மயங்கியிருந்தார்கள். 

இதற்குள் குப்பிப்பட்டியின் திருக்கூத்து முடிந்து எல்லோரும் திரும்பிவிட்டார்கள். ஆதலால் பெண்ணும் மாப்பிள்ளையும் மறுபடி ஒருவரை யொருவர் பார்த்துச் சந்தோஷிக்க சமயம் வாய்க்கவில்லை. ஆனால் லட்சுமி தன் கழுத்தில் நூதன காந்தியுடன் விளங்கும் திருமங்கல்யத்தை அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதை ஜாடையாய்க் கண்ட ஸ்ரீநிவாசன் தன் மேலுள்ள அன்பை அவள் அவ்விதம் வெளியிட்டாளென்றும் அதைத் தொடும்போதெல்லாம் அதற்கு மெதுவாய் அவள் ஒரு முத்தம் கொடுத்தாள் என்றும் நினைத்துக் கொண்டான். அது உண்மையோ அல்லவோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது முதல் ஸ்ரீநிவாசன் தன்னுடைய இரட்டைப் பூணூலையும் பஞ்சகச்சத்தையும் அடிக்கடி கோதி விட்டுக் கொண்டான் என்பது வாஸ்தவம். அதுவுமின்றி ஆசீர்வாதம் முடிந்து எழுந்திருக்கும் தருணத்தில் முன் ஒருவரிடமிருந்து ஒருவர் ஒரு முழந்தூரந்தள்ளியிருந்த தம்பதிகள், இப்பொழுது எப்படியோ ஒருசாண் தூரத்திற்குள்ளாக வந்துவிட்டார்கள். கடைசியாக எழுந்திருந்தபோது ஸ்ரீநிவாசன் தன் அங்கவஸ்தி ரத்தைச் சரியாகத் தரித்துக்கொள்பவன்போல், வேண்டு மென்றே லட்சுமியின் மீது மெதுவாய் வீசியதை அவ்விருவரை யும் சலியாத கவனத்துடனும் அடங்காத சந்தோஷத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த சுப்பராயன் கண்டான். 

அன்று சாயந்திரம் வழக்கப்படி கூடிய வம்பர் மஹாசபை யில் சுப்பம்மாள், “என்ன புள்ளை (பிள்ளை) அணிப்புள்ளை தென்னம்புள்ளை, கொழந்தைகளியுந்தால் முத்துசாமியாத்து- மாப்புள்ளையைப்போல இயுக்க வேணும். இல்லாவிட்டா அதுக்கு பியக்கவே பிடாது” என்று (பாணினியில்கூட இல்லாத *”ரயயோரபேத” என்ற சூத்திரவிதிப்படி) வெகு கண்டிப்பாய் உத்தரவு செய்தருளினாள். உடனே நாகு, “ஏன்? பொண்ணுக்குத்தான் என்ன! பொண் இன்னாப்பிளே நன்னா யில்லையோ?’ என, வேம்பு, “என்னைக் கேட்டால் மாப்பிள்ளையைவிட பொண்ணு நன்னாயிருக்கு. அவள் சிரிக்கிறது ஒன்று போதாதா?” என்றாள். உடனே சுப்பு ஆவேசம் வந்தவள்போல் கைகளை வீசி, “இந்தா,அதெல்லாம் எனக்குத் தெரியாது.பொண்ணும் மாப்பிள்ளையும் நன்னாப் பொயுந்திக் கையாயியுக்கு. இதா அவாத்திலே பண்ணினாளே, பனமயம் போலே மாப்புள்ளையும் மயப்பாச்சி போல பொண்ணும்” என்றாள் கேலி செய்யும் பாவனையில். 

எதார்த்தத்திலேயே ஸ்ரீநிவாசனுக்கு லட்சுமி அழகில் குறைந்தவளில்லை. அவளுடைய அழகாயமைந்த அங்கங்கள் செவ்வையாய் சுருதி கூட்டிய வீணையின் தந்திகள் தனித்தனி தங்கள் நாதத்தைத் தொனிக்கிறது மன்றி, மற்ற தங்களுடைய நாதத்தையும் எப்படிச் சோபிக்கச் செய்கின்றனவோ அது போலத் தனித்தனி தத்தம் அழகால் விளங்கியதும் தவிர, மற்றுள்ள அங்கங்களின் அழகையும் எடுத்துக்காட்டின. தெய்வீகப் புலவர்களாகிய கம்பர் முதலியோருடைய கவிகளில் எப்படி உள்ள பதத்தை எடுத்து, வேறு எந்தப் பதம் போட்டாலும் ரசம் குறைந்து போமோ அதுபோல, லட்சுமியினுடைய அங்கங்களில் எதையும் சிறிது மாற்றி னாலும் அழகுக்குக் குறைவே தவிர, விருத்தி கிடையாது. ‘கழுத்து சிறிது நீண்டிருந்தால் நன்றாயிருக்கும்,’ ‘கால் சிறிது குறுகிக் கை சிறிது பெருத்திருந்தால்,’ என்றிப்படி, ‘ஆல், உம்’ என்ற விகுதிப் பிரயோகங்களுக்கு இடம் கிடையாதபடி அவளுடைய அங்கங்களின் அமைப்பு அவ்வளவு அழகா யிருக்கும். 

ஸ்ரீநிவாசனுடைய உருவத்தில் சரீர அமைப்பைக் காட்டி லும் மிருதுத்துவமும் பளபளப்புமே முக்கியமாக விளங்கின. சங்கீதத்தில் தியாகய்யர் கிருதிக்கும் இங்கிலீஷ் நோட்டுக்கும் என்ன வித்தியாசமோ, அந்த வித்தியாசந்தான் இவ்விரு வருடைய சரீரங்களுக்கும் இருந்தது. அவர்களுடைய முக லட்சணத்திலும் இவ்வித வித்தியாசங்களிருந்தன.ஸ்ரீநிவாசன் பேசும்போது அவன் கண்ணின் ஒளி, பார்ப்பவர்களுக்குப் பளீர் பளீர் என்று விட்டுவிட்டுப் பிரகாசிக்கும் மின்னல் ஞாபகத்தை உண்டுபண்ணும். லட்சுமி பேசும்போது அவளுடைய முகக் குறி அடிக்கடி அழகாக மாறுவது, தகதகவென்று பலவித மாய்ப் பிரகாசிக்கும் வைரக்கல்லை ஞாபகப்படுத்தும். அவள் பேசும்போது அவளுடைய கைகால் செய்யும் அபிநயத் தாலும் முகத்தில் உண்டாகும் வேறுபாட்டாலும் தூர நிற்பவர்கள் கூட அவள் கருத்தை அறியலாம். அவளுடைய உயர்ந்த உதடுகளும், விசாலமான கண்களும் எவ்வளவு துன்பம் வந்தாலும் பாராட்டாது சகிக்கக்கூடிய திட சித்தத் தையும் பொறுமையையும் காட்டி நின்றன. துள்ளித் துள்ளி விழும் மீன்கள் போலச் சுழலும் அவளுடைய கண்களும், அவளுடைய கன்னங்களில் உண்டாகும் சுழிகளும், அவ ளுடைய அழகான பல்வரிசையும் அவள் முகத்திற்கு ஒர் அபூர்வ மான வசீகர சக்தியை உண்டுபண்ணின. அவளுடைய கண்களின் தோற்றம் வெகு அரிதான குளிர்ச்சியையும் மிருதுத் தன்மையையும் உடையதானாலும், தேவையான காலத்து, கண்டோரைக் கலக்கத்தக்க, ‘உடலினுயிரையு முணர்வையு நடுவு போயுருவு மதர்விழி’ என்ற லட்சணத் திற்குப் பொருந்திய ஒரு கூர்மையான பார்வையும் அவை களுக்கு உண்டென்று நினைக்க இடமிருந்தது. ஸ்ரீநிவாச னுடைய முக அழகு வேறுவிதம். அவனது உயர்ந்த மண்டை யும், உருண்டை முகமும், விசாலமான நெற்றியும் அவனுக்கு ஓர்வித கம்பீரமான தோற்றத்தைக் கொடுத்தன. அவனது சற்று கீழ்நோக்கிய கண்களும், சிறிது முன்னேவந்து ஒன்றின் மேல் ஒன்றாய்ப் படிந்திருக்கும் அவன் உதடுகளும் சாந்தத் தையும், சிற்சில சமயங்களில் சோர்வையும் உணர்த்தின. ஆனால் அவனுடைய கூர்மையான மூக்கும், ஓயாது சுழலும் கண்களும் அவனுடைய முகத்தில் மந்தமான தோற்ற மென்பதே இல்லாமல் நீக்கி, அவனுடைய தீட்சண்யமான புத்தியையும் மனோகரமான சுறுசுறுப்பையும் ஹிருதய பூர்வ மான உற்சாகத்தையும் பிரகாசிக்கச் செய்தன. 

“ஓங்குமலைக்காட்டி னுள்ளிருந்து தூங்காமல் 
தூங்குசப்ர மஞ்சமிசைத் தூங்கு நவரசத்தே 
மொய்த்தமலைக் காட்டு முள்ளு உலையாமல் 
மெத்தையின்மே லேறிவிளையாடுந் தோகைமயில்”

என்றிப்படி எவ்விதம் வர்ணித்தாலும் போதாத அழகு பொருந்திய லட்சுமியும் அவளுக்காகவே சிருஷ்டி செய்யப் பட்டவன்போல் தோன்றிய ‘சித்திரத்தும் எழுதொணா வனப் பினனாகிய – சித்திரத்தில் கூட எழுதமுடியாத அழகையுடைய ஸ்ரீநிவாசனும் மணவறையில் உட்கார்ந்திருந்த கண்கொள் ளாக் காட்சியைக் கண்டு சந்தோஷிக்காதவர்கள் கிடையாது. 

இவர்கள் ‘நலங்கு இட்டதும், தேங்காய் உருட்டிப் பூச்செண்டு’ ஆடியதும் வெகு நேர்த்தியாயிருந்தன. 

ஸ்திரீகள் எல்லாரும் ஸ்ரீநிவாசனுடன் பேசுவதை ஒரு பெரிய ஆனந்தமாய் நினைத்தார்கள். சற்றேறக்குறைய அவன் வயதுள்ள பெண்கள் மனதில் கொஞ்சங்கூடக் களங்கம். இல்லாமல் அவனுடன் பரிகாசம் செய்து விளையாடினார்கள். விசாலாட்சி என்ற ஒரு பெண் அவனைப் பார்த்து, “மாப் பிள்ளைக்கு ஆனாலும் இவ்வளவு கர்வம் ஆகாது” என்று சொல்லிவிட்டு இடி இடி என்று சிரித்தாள். சுப்புலெட்சுமி என்ற பெண் ‘அப்படிச் சொல்லாதேயடி, என் அம்மங்காள் அகமுடையான் நிரம்ப சாது. அடித்தால்கூட அழத் தெரியாது!” என்றாள். பாகீரதி அவன் முதுகில் அப்பளம் உடைத்தாள். காவேரி அவனுடைய ஜடை சிங்காரத்தைப் பற்றியிழுத்தாள். காமாட்சி, “என் அத்தங்காள் அகமுடை யானுக்குப் பெண் வேஷம் போட்டால் நன்றாயிருக்கும்” என்றாள். இவ்விதமாக எல்லாப் பெண்களும் ஏதாவது உறவு கொண்டாடிக்கொண்டு அவனைப் பரிகாசம் செய்தார் கள். முதலில் சுப்பராயன் கூட இருக்கும்போது கொஞ்சம் கூச்சப்பட்டார்கள். வர வர அவனிருந்தாலும் சட்டை பண்ணுவதில்லை. 

மூன்றாம் நாள் கலியாணத்தன்று ஸ்ரீநிவாசன் ஒளபாசனம் பண்ணிக்கொண்டிருந்தபொழுது, கோதாவரி என்ற பெண் சந்தடி செய்யாமல் பின்பக்கம் வந்து, ஒரு சுருக்கிட்ட கயிற்றால் அவனுடைய தலைப்பின்னலுக்கும் லட்சுமி தலைப்பின்னலுக்கும் முடிச்சுப்போட்டு விட்டாள். ஒளபாசனமானவுடன் நடந்த சேஷ்டையை அறிந்த ஸ்ரீநிவாசன், முடிச்சை அவிழ்க்க எத்தனித்தான். அதற்குள் நாலைந்து பெண்கள் கூடி லட்சுமி கையைப் பற்றி, வீட்டின் உள்பக்கம் இழுக்க, ஸ்ரீநினிவாசன் முடிச்சை அவிழ்க்கக் கூடாததுமன்றி, அவனும் உள்ளே இழுக்கப்பட்டான். அவன் அதைத் தடுக்க என்ன முயன்றும் முடியவில்லை. அந்த விளையாட்டுப் பெண்கள் சுண்டிச் சுண்டி இழுக்கும்போது அவன் லட்சுமிமேல் மெதுவாய் பலமுறை சாய நேரிட்டது. இவ்விருவரும் இப்படி ஒருவர்மேல் ஒருவர் படும்போது எல்லாரும் ‘கொல்’ என்று சிரித்தார்கள். இதற்குள் ஏகக் கூட்டம் கூடிவிட்டது. வந்த பெண்டுகளாவது முடிச்சை அவிழ்த்தார்களா? அதுவும் இல்லை. எல்லாருமாய், “அப்படித் தான் இழு. இந்தா இந்த உள்ளே இழுத்து, இருவரையும் விட்டுக் கதவைச் சாத்திப்போடலாம். அகப்பட்டுக் கொண்டாரையா விட்டலபட்டர், அகப்பட்டுக்கொண்டார்!” என்றிப்படிக் கூவினார்கள். சில ஸ்திரீகள் ஸ்ரீநிவாசனைச் சுற்றி, “மாப்பிள்ளை, மாப்பிள்ளை, மண்ணாங்கட்டி தோப் பிலே…” என்று குதித்துப் பாடினார்கள். ஒருத்தி பின்புற மாக வந்து அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, மாப்பிள்ளை அழாதேயுங்கள், வேண்டாம், அழுவார்களா ?” என்றாள். இன்னொருத்தி, “விட்டு விடுங்கடி பாவம், அழுகிறான், குழந்தை, கோந்தை” என்றாள். மற்றொருத்தி, “சிரி ஒக்கச் சிரித் தார்க்கு வெட்கமில்லை. பொம்மனாட்டிகளை மீறிக்கொண்டு போக முடியவில்லை, சிரிப்பு வேறேயா!” என்றாள். இன்னொருத்தி, “மாப்பிள்ளை வேஷ்டியைப் பார் அத்தைப் பாட்டி புடவைபோல” என்றாள். இவர்கள் இப்படிப் பரிகாசம் செய்தது ஸ்ரீநிவாசனுக்குச் சகிக்க முடியவில்லை. ஆயினும் அத்தனை அழகான யௌவன பருவமான பெண்கள் இவ்வளவு உல்லாசமாய் அவனுடன் விளையாட அவனுக்குக் கோபம் வருமா? கோபித்துக் கொள்பவன் போல் பல முறை பாவனை பண்ணினான். அதற்கு அவர்கள், “கோபித்துக் கொள்ளத் தெரிந்தால கோபித்துக் கொள்ளவேணும், இல்லா விடில் சும்மாயிருக்க வேணும்” என்று சொல்லிச் சிரிக்க, அவனும் சிரித்துக்கொண்டு அவர்களுக்குச் சரியாக விளையாட ஆரம்பித்தான். 

நாலாபக்கமும் அந்தப் பெண்களைத் துரத்திக்கொண்டு நின்று குத்திக்காளை’ போலப் பாய்ந்தான்; அவர்களைத் திருப்பிக் கேலி பண்ணினான். ஒருத்தியைப் பார்த்து, இரு இரு உன் அகமுடையானிடம் சொல்லுகிறேன் இரு” என்றான். இன்னொருத்தியைப் பார்த்து, “அதோபார் அதோபார், உன்னகத்துக்காரர் வந்துவிட்டார்” என்றான். அவன் வெள்ளிப் பஞ்ச பாத்திரத்தைக் கையில் ஓங்கிக்கொண்டு மார்பில் யோக வேஷ்டி தரித்து இடுப்பில் அலங்காரமாய் பஞ்சகச்சம் உடுத்தி, குதித்துக்குதித்து ஓடியதும் அந்த அற்புத யௌவன பருவமுள்ள பெண்கள் பாதரசம் குலுங்கக் குலுங்க, கலீர் கலீர் என்று மெட்டிகள் சப்திக்க ‘விற்றவழ வாணிமிர மெய்யணிகள் மின்ன சிற்றிடை நுடங்க வொளிர் சீரடி பெயர்த்து ‘ அவனைச் சுற்றி ஓடி விளையாடியதும் ஒரு மின்னரசைப்பளீர் பளீர் என்று பாயும் பல மின்னல் சூழ்ந்தது போல வெகு அழகான நேத்திரோற்சவமாயிருந்தது. இவ் விதம் ஸ்ரீநிவாசன், குழந்தை கிருஷ்ணன் ஆயர்பாடியில் கோபிகா ஸ்திரீகளுடன் விளையாடியதுபோல விளையாடிக் கடைசியில், ‘அந்த உள்ளுக்குத் தானே போகவேணும் என்கிறீர்கள்; நானே போகிறேன். நீங்கள் விட்டு விடுங்கள்” என்று சொல்லி லட்சுமியைப் பார்த்து உரக்க, எனவே எல்லாரும், “அந்த உள்ளுக்குப் போகலாம் வா” “பெண்டாட்டியோடு பேசினான். வெட்கமில்லாமல் பெண் டாட்டியோடு பேசினான்” என்று விழுந்து விழுந்து சிரித் தார்கள். இதற்குள் தற்செயலாய் ராமண்ணா வாத்தியார் வந்தார். வந்தவுடன் ஸ்ரீநிவாசன் அவரைப் பார்த்து முடிச்சை அவிழ்க்கச் சொல்ல, அந்தப் பெண்கள், அவருக்கு முடிச்சவிழ்க்கத் தெரியாது. (‘முடிச்சவிழ்க்கி’ என்றால் திருடனென்றும் அர்த்தம்.) தாத்தா, அவிழ்த தீரா பார்த்துக் கொள்ளும்! தொந்தி பத்திரம் !” என்று சொல்லி அவரை மடக்கி விட்டார்கள். நெடுநாள் சிரமப்பட்டுச் சம்பாதித்த தொந்தியை இழக்க அவருக்கு இஷ்டமில்லை. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் முத்துஸ்வாமி அய்யரே வந்து விட்டார். அவர் வந்தவுடன் நடக்கும் சங்கதியைக் கிரகித்துக்கொண்டு ஸ்ரீநிவாசனுடைய குணத்தைக் கண்டு மகிழ்ந்து, அவனிடம் வந்து முடிச்சை அவிழ்க்கவே, அந்தப் பெண்களெல்லாம் அவிழ்க்காதேயுங்கள் மாமா, அவிழ்க்காதேயுங்கள் அப்பா” என்று சொல்ல, அவர் சிரித்துக்கொண்டே, “பொல்லாத குட்டிகள் அம்மா! பொங்கல் சாப்பிட வேண்டாமா, நாழிகையாகவில்லையா? பலமா போட்டிருக்கிறாள் முடிச்சை, யாரடி போட்டது!” என்று சொல்லிக் கொண்டே முடிச்சை அவிழ்த்து விட்டார். உடனே ஸ்ரீனி வாசன் தன் ஜாகைக்குப் புறப்பட்டான். அந்தப் பெண்கள் ”அறுத்து விட்டதும் கழுதை எடுத்து விட்டதாம் ஓட்டம்’ என்று சொல்லிக்கொண்டு அவனை வாசல்வரை துரத்திவிட்டு, உள்ளே சிரித்துக்கொண்டே ஓடினார்கள். 

அன்று மத்தியானம் சாப்பாடான பிறகு ஸ்ரீநிவாசன் சுப்பராயனுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது திடீ ரென்று ஒரு பெண் ஓடிவந்து, “இந்தா உன் பெண்டாட்டி காகிதம் கொடுத்தாள்” என்று சொல்லி, ஒரு கடிதத்தை அவன் மடியில் போட்டு விட்டு ஓடிவிட்டாள். அதை அவன் வெகு ஆவலுடன் எடுத்தான். அது முரட்டுக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. வரிகள் வெகு கோணலாயிருந்தது மின்றி எழுத்துக்கள் விகாரமாயும் பிழையாயுமிருந்தன. அதில் எழுதப்பட்டிருந்த விஷயம் இதுதான்: 

“நீ இன்னிக்கு வெடி காலம் அப்பத்தானா எம்மேலே இடிக்கரது? அப்போது இடிச்சது எனக்கு இன்னும் வலிக் கிறது. அழுகைகூட வருது. பொம்மண்டாட்டி குட்டிகளை துமுரிக்கிண்டு ஓடப்படாட்ட எந்தை இடிக்கச் சொல் லிருக்கோ. இந்நமே அப்படி இடிக்கப்படாது. எல்லா குட்டிகளுக்கும் எதெரக்க எந்நோடு பேசலாமா, சீ இது எந்ந லெட்சைக் கூத்து – கல்யாணி’. (லட்சுமியின் மறுபெயர்.) 

இந்தக் கடிதத்தை ஸ்ரீநிவாசன் பார்த்தவுடன் அவனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவன் கண்கள் கோபத் தால் சிவந்தன. உதடுகள் படபடவென்று துடித்தன. கைகள் பதறின. இப்படிச் சிறிது நேரம் மௌனமாயிருந்து பிறகு பெருமூச்சு விட்டு சுப்பராயனைப் பார்த்து, “இதைப் பார்த்தாயா?” என்று சொல்லி அவன் கையில் கடிதத்தை எறிந்தான். ஸ்ரீநிவாசன் படிக்கும்போதே கூடப்படித்த சுப்பராயன் மறுபடியும் அதைப் படித்துவிட்டு, “என்ன ஆச்சரியமா யிருக்கிறது, என்ன தைரியம்!” என்றான். ஸ்ரீநிவாசன், “தைரியம் மட்டுமா,”நீ” யாம் ‘நீ”, “நீங்கள்” என்றுகூட எழுதவில்லை. வயது போதாது. அவன் என்ன பண் ண்ணுவாள், ரொம்ப பலமாய் இடித்து விட்டேன்! அவளா யிருக்கக்கண்டு பொறுத்தாள்? (கடிதத்தை வாங்கிக் கொண்டு) அழுகை வருகிறதாம். அழு, உன்னைக் கல்யாணம் பண்ணியதற்காக உன்னைக் காட்டிலும் எனக்கு அதிகமாய் அழுகை வருகிறது” என்றான். 

சுப்பராயன்: “அவள்தான் எழுதியிருப்பாள் என்று நினைக்கிறாயா ?” 

ஸ்ரீநிவாசன்: “அவள் எழுதாமல் வேறே யார் எழுதப் போகிறார்கள், என்ன தைரியம்! நான் அவள் கையைப் பிடிக்குமுன் அவள் என் கையைப் பிடிக்கிறாள்.எவ்வளவு துணிவு என்கிறாய் ! யாரார் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறார்களோ அவ்வளவுதான் கிடைக்கும். ஆசைப் பட்டால் பிரயோசன மென்ன?” 

சுப்பராயன்: “சே! அவள் எழுதியிருக்கமாட்டாளடா! கம்பராமாயணம் முதல் வாசித்தவளுடைய எழுத்து இப்படியா இருக்கும், குட்டிகள் யாரோ இந்த சேஷ்டை பண்ணியிருக்கிறார்கள். நான் சொன்னேன் என்று பாரேன்.” 

ஸ்ரீநிவாசன்: “நல்லது, இருக்கட்டும். லச்சைக் கூத்தா, அப்படியா! என்னைப் பார்த்தால் பொருட்டாய்த் தோன்ற வில்லை.” 

சுப்பராயன் : “என்ன! நிச்சயமாய் அவள் இதை எழுத வில்லை யென்று நான்தான் சொல்லுகிறேனே, அவள் முகத் தைப் பார்த்தாலே தெரியவில்லையா? குட்டிகள் யாரோ எழுதியிருக்கிறார்கள். அப்புறம், தன்னைப் போலத் தெரியும். நீதான் அவளைக் கேளேன்” என, ஸ்ரீநிவாசன், ”இன்னும் அவளுடன் பேசிவிடவும் வேண்டுமா?” என்று கண்ணீர் விட ஆரம்பிக்கவே, சுப்பராயன் அவனைத் தேற்ற அவன் தேறியிருந்தான். மறுநாளும் அன்று போலவே எல்லாப் பெண்களும் அவனுடன் உல்லாசமாய் விளையாடினார்கள். அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவன் நெற்றியில் சுண்ணாம்பையும் விளக்கெண்ணெயையும் குழைத்து நாமம் போட்டுவிட்டு அவன் இலையில் உட்கார்ந்து பரிசேஷனம் செய்யும்வரை வாயை மூடிக்கொண்டிருந்து, பிறகு எல்லாரும் கொல்லென்று சிரித்துப் பரிகாசஞ்செய்து விளையாடினார்கள். ஆனால், ஒருவராவது நெடுநேரம் காகித சங்கதியைப்பற்றிச் சொல்லவே யில்லை. அது ஸ்ரீநிவாசனுக்கு ஒரு விதத்தில் வருத்தத்தை உண்டுபண்ணினாலும் அவர்களுக்கு அந்த அசந்தர்ப்பமான கடிதம் காட்டப்படவில்லையென்ற எண்ணம் அவனுக்குச் சிறிது ஆறுதலைக் கொடுத்தது. பிறகு அவர்களே எழுதினார்களென்ற சங்கதி வெளியாய் விட்டது. 

மறுநாள் ஸ்ரீநிவாசன் சாப்பிடும்போது, சிற்சிலர் தவிர ஏறக்குறைய எல்லாப் பெண்களும் ஒருமித்து நின்றாலும் அவனுடன் ஒருவராவது பேசவில்லை. அதில் ஏதோ விசேஷ மிருக்கிறது என்று கொஞ்சம் மனதில் பயமிருந்தாலும் விளையாட்டாய்க் கேட்பவன் போல், “ஏது, இன்றைக்கு என் அம்மங்காள் முதலிய எல்லோரும் பேசமடந்தையா யிருக்கிறது?” என, ஒருத்தி, “உன்னுடன் என்ன விளை யாட்டு, நாளைப் பொழுது விடிந்தால் நீ எங்கேயோ நாங்கள் எங்கேயோ?” என்றாள். மற்றொருத்தி, “நீதான் எங்களை எல்லாம் விட்டு விட்டு ஊருக்குப் போகிறாயே, உன்னுடன் என்ன பேச்சு வைத்திருக்கிறது?” என்றாள். மற்றொருத்தி பெருமூச்செறிந்து, “இந்த இரண்டு மூன்று நாளும் எவ்வளவோ சந்தோஷமாய் விளையாடிவிட்டு நாளை எப்படிப் பொழுது போகும் என்று இப்பொழுதே ஏக்கமாயிருக்கிறது, இவ்வளவுதான். எத்தனை நாள்தான் சந்தோஷமாயிருக்கிறது!” என்றாள். இப்படி எல்லாரும் தான் ஊருக்குப் போகிற விஷயத்தைக் குறித்து உண்மையான விசனத்தை வெளியிட, ஸ்ரீநிவாசனுக்குச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே தன்னையறியாமல் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அடக்க அடக்க அதிகமாய் விசனம் மேலிட்டது. அவன் கண்ணீர் விட்டதைப் பார்த்து அவனுடன் விளையாடின ஸ்திரீகள் எல்லோரும் விம்மி விம்மி அழ ஆரம்பித்தார்கள். அங்கிருந்த கிழவிகளில் சிலர், “நன்றாயிருக்கிறது, கல்யாணமு மிதுவுமா அழுகிறதைப் பாரடி, அடி பைத்தியக்காரக் குட்டிகளா” என்று கோபிக்க, அவர்கள் ஒருவர் ஒருவராய் முகத்தில் துணி போட்டவண்ணமாய் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார்கள். ஸ்ரீநிவாசனும் சாதத்தை அப்படியே வைத்துவிட்டு மூக்கைச் சிந்திப்போட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே சென்றான். 

கல்யாண விமரிசையைப்பற்றி விஸ்தரிப்பதனாவசியம். ஜனங்கள் காலை மாலை வெளியே போகும்போது வரும்போ தெல்லாம் “இவ்வளவு சிறப்பான கல்யாணம் கண்டது மில்லை கேட்டதுமில்லையப்பா, அடடா பேஷ், என்ன விமரிசை, என்ன விதரணை” என்று கொண்டாடியவண்ண மாய் இருந்தார்கள். அந்தப் பிரபஞ்ச முழுவதும் முத்து ஸ்வாமி அய்யருடைய கீர்த்திமயமாயிருந்தது. நாலைந்து டிப்டி கலெக்டர்கள், பத்துப் பதினைந்து தாசில்தார்கள், இருபது முப்பது சிரஸ்ததார்கள், நாற்பதைம்பது ஸப் மாஜிஸ்ட்ரேட்டுகள், நூறு நூற்றைம்பது கோர்ட்டு உத்தி யோகஸ்தர்கள், இருநூறு முந்நூறு குமாஸ்தாக்கள், ஐந்நூறு அறுநூறு வைதிகர்கள் என்றிவ்விதம் ஆயிரக்கணக்காய் நானாவித ஜனங்களும் கூடியிருந்தார்கள். முன்னமே சொல் லப்பட்ட பெரிய வைத்தி, ராகவய்யர் முதலிய வித்வான்கள் தவிர, தற்செயலாய் அந்தப் பிரதேசத்திற்கு வந்திருந்த தஞ்சாவூர் சமஸ்தான வைணீகர் (வீணை வாசிப்பவர்கள்)மகா வித்துவான் சலலகாலி (தென்றற்காற்று) கிருஷ்ணய்யரவர் களும் ராஜதானி முழுவதும் பிரக்யாதி பெற்ற ராமதாஸ் விகடகவியும் கல்யாணத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள் பெரிய வைத்தியும் ராகவய்யரும் போட்டிபோட்டுப் பாட, ராஜலட்சுமியாட, கிருஷ்ணய்யர் வீணை வாசிக்க, ராமதாஸ் விகடம் செய்ய, முத்துஸ்வாமி அய்யரகத்துக் கல்யாணப் பந்தல், தும்புரு நாரதர் பாட, ஊர்வசி திலோத்தமையாட ஆனந்தமயமாய் விளங்கும் தேவேந்திர சபைக்குச் சமானமா யிருந்தது. அங்கிருந்த ஜனங்களோ ‘உடம்பொடு துறக்க நாடுற்றவரையு மொத்தார்’ என்றபடி சரீரத்துடன் தேவ போகத்தை அடைந்தவர்களை யொத்தார்கள். தங்களுடைய கவலைகளையும் கஷ்டங்களையும் மறந்து,’ஆஹா! ஆமாம்,ஆமா மாம், அப்படித்தான், நிஜந்தான், அட்டா அப்பப்பா, பேஷ், பேஷ்,’ என்றிப்படிச் சொல்லித் தன்னை யறியாமல் சிரக்கம்பம் கரக்கம்பம் செய்வதே அங்கு வந்திருந்த சகலருக்கும் தொழிலாக இருந்தது. 

“பரித்த செல்வ மொழியப்படரு நாள் 
அருத்தி வேதியர்க் கான்குல மீந்தவர்
கருத்தி னாசைக் கரையின்மை கண்டிறை 
சிரித்த செய்கை நினைந்தழுஞ் செய்கையாள்” 

என்றபடி ஸ்ரீராமர் கொடுத்தும் திருப்தியடையாத வைதீ கர்கள்கூட இந்தக் கல்யாணத்தில், “உமக்கென்ன தட்சணை, உமக்கென்ன தட்சணை?” என்று ஒருவரைப் பார்த்து ஒருவர், பல்லை இளித்துக்கொண்டு ரகசியமாய்க் கேட்டு, “நல்ல தட்சணை, நல்ல மனசு, மகாராஜனாக இருக்கவேணும்” என்று ஆசீர்வதித்து சந்துஷ்டி யடைந்தார்கள் என்றால், கல்யாணத்தின் சிறப்பு எப்படி இருந்திருக்க வேண்டு. மென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 

பாடகர்கள் பிரம்மானந்தமாகப் பாட, விகடகவி மகா வுல்லாசமாக விகடம் செய்ய, திருவாரூர்த் தேவடியாள் வெகு மனோரஞ்சிதமாய் ஆட, பிராமணோத்தமர்கள் தங்களுடைய நீண்ட கழுத்தில் ஆறுமாதத்திற்குப் போதுமான ஜலத்தைச் சேகரித்து வைத்துக் கொள்ளும் ஒட்டகங்களைப் போல, ஒரு வருஷத்திற்குக் காணும்படியான போஜனத்தை சுதாவாக சப்திக்கும்படியான தங்களுடைய கடவாத்தியங்களாகிய தொந்திகளில் சேர்த்து வைத்துக்கொள்பவர்போல போஜ னம் செய்தார்கள். அவர்கள் போட்டிபோட்டு, வாயில்லாப் பிராணிகளாகிய வாழைப்பழம், வடை, போளி முதலிய பண்டங்களைப் பகாசுரன், பீமசேனன் இவர்களைப் போல். துவம்சம் செய்ததையும், அனுமார் யுத்தகளத்தில் ராட்சதர்களைக் கலக்கியதுபோல போஜன காலத்தில் கையில் அகப் பட்டதை யெல்லாம் கசக்கிச் சின்னாபின்னம் பண்ணி, போன இடம் தெரியாமல் செய்து அட்டகாசம் செய் பவர்கள் போல, ஏப்பம் விட்டுக் கர்ச்சித்ததையும், சாப்பிட்ட சிரமந் தீர, மணலில் கிடந்து புரளும் மதயானைகளைப்போலப் புரண்டதையும், முத்துஸ்வாமி அய்யர் இவர்களுடைய வயிறுகளாகிய ஓமகுண்டங்களைச் சலியாது சந்தோஷமாய் வளர்த்ததையும் இன்னும் அந்தப் பிரதேச முழுவதும் கதை கதையாகச் சொல்லுகிறார்கள். இவ்விதமாக எல்லாவித ஜனங்களையும் திருப்தி செய்த முத்துஸ்வாமி அய்யர், ராஜசூய யாகம் செய்து கிடைப்பதற்கரிய ‘சம்ராட்’ என்ற பட்டம் பெற்றுச் சிறப்புற்றிருந்த தருமபுத்திர மகா ராஜாவைப் போல் விளங்கினார். சந்திரனுடைய கிரணங்கள் நாலா பக்கமும் பரந்து ஏழை, பணக்காரன்,பாலன், விருத்தன், பிராமணன், சூத்திரன், ஸ்திரீ, புருஷன் முதலிய எல்லோருடைய உள்ளத்தையும் பட்சபாதமின்றிக் குளிரச் செய்வதுபோல முத்துஸ்வாமி அய்யருடைய தர்மமும் கீர்த்தியும் எங்கும் பரந்து எல்லோரையும் சந்தோஷிப் பித்தன. 

11 – பெண்டாட்டியாத்தாள் பெரியாத்தாள்

முத்துஸ்வாமி அய்யருடைய கிரகத்தில் நடந்த நிச்சயதார்த் தத்துக்குக்கூட அவர் தம்பி சுப்பிரமணிய அய்யர் போக வில்லை யென்று முன்னமேயே நாம் சொல்லியிருக்கிறோ மல்லவா? அவர் பாரிசத் தலைவலியுடன் படாத பாடு படுகிறார் என்று அவரைக் கூட்டிவரப்போன சுப்புளி என்பவன் மூலமாக அறிந்த முத்துஸ்வாமி அய்யர், நிச்சய தார்த்தம் முடிந்த மறுநிமிஷமே அவரைப் பார்த்துவர, அவர் வீட்டிற்குச் சென்றார். அவர் வருவதைக் கண்ட சுப்பிரமணிய அய்யர் முன்னிலும் பதின்மடங்கு அதிகமாய் அலத்திக் கொண்டு படுக்கையில் கிடந்து அங்கும் இங்கும் தலைவிரி கோலமாய்ப் புரளத் தொடங்கினார். அவர் அருமை மனைவியாகிய பொன்னம்மாளோ அவருடைய தலையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு, “ஐயையோ தெய்வமே, என்ன செய்வேன், என்ன செய்வேன்’ என்று தேம்பித் தேம்பிக் கண்ணீர் பெருக்கியவண்ணமாயிருந்து,மைத்துன ருக்கு நாணினவள் போல் உள்ளே சென்றாள். இவர்களுடைய கோலத்தைக் கண்ட முத்துஸ்வாமி அய்யருக்குத் தன்னை அறியாமலே கண்களில் ஜலம் வந்து விட்டது. அதை அவர் ஜாடையாய்த் துடைத்துக்கொண்டு, சுப்பிரமணியம், சுப்பிரமணியம், என்ன செய்கிறதடா அப்பா? தலைவலியானால் முன்னமேயே எனக்குச் சொல்லிவிட வேண்டாமா?” என்று சொல்லி அவருடைய தேகஸ்திதியை நுட்பமாய் விசாரித்துக்கொண்டு கையைப் பிடித்துப் பார்த்தார். கை நாடி வெகு சரியாக இருந்தது. அதில் யாதொரு வித்தி யாசமும் தெரியவில்லை. பிறகு தலையைப் பிடித்துப் பார்த் தார். அங்கும் ஓர்வித மாறுபாட்டையும் காணோம். இவ்வளவு கொடுமையான தலைவலிகூட கைநாடியில் காட்டப்படாததைக் கண்டு அவர் ஆச்சரியத்துடன் சிறிது தலை நிமிர்ந்தார். நிமிரவே, தான் செய்த தந்திரத்தைத் தன் மைத்துனர்கூடத் தாராளமாய் நம்பியதைக் கண்டு சிரிப்பு வர, அதை அடக்கும்படி தன்னால் ஆனமட்டும் சிரமப் பட்டுக் கொண்டிருந்த பொன்னம்மாளுடைய முகம் அவர் கண்களுக்குத் தற்செயலாய்த் தென்பட்டது. அதைக் கண்ட வுடன் தலைவலி பொய்யோ மெய்யோ என்று சந்தேகப் பட்டுக் கொண்டிருந்த அவருக்குப் பொறுக்க முடியாத கோபமும் வருத்தமும் பொங்கிற்று. அந்தக் கொடிய சாஹஸி செய்த மோசத்தையும் அவள் கையில் அநியாய மாய் அகப்பட்டுப் பம்பரம்போல் தவித்துத் தத்தளிக்கும் தன் தம்பியின் நிலைமையையும் தன் நுட்ப புத்தியினால் கண்ட அவருக்கு அப்புறம் அரைநிமிஷமாவது அங்கே யிருக்கச் சகிக்கவில்லை. உடனே அவர் “நான் போய் வைத்தியரை அனுப்புகிறே” னென்று சொல்லிவிட்டுக் குபீர் என்று எழுந் திருந்து வெளியே போய்விட்டார். மறுநாள் தன் தம்பியை வரவழைத்து உடம்பு ஸ்திதியைப் பற்றிச் சற்று விசாரித்து விட்டு, நிரம்ப வருத்தப்பட்டவர்போல சிறிது நேரம் மௌனமாயிருந்து பிறகு அவரைப் பார்த்து, ”பைத்தியக் காரா, போ, பைத்தியக்காரா! பெண்டுகளுக்குள் ஆயிர மிருந்தாலும் அதையெல்லாம் நாம் மேலே போட்டுக் கொள்ளலாமோ?” என் று ஜாடையாய்க் கண்டித்து விட்டு, கல்யாண விஷயங்களைக் குறித்து அவரைச் சில யோசனைகள் கேட்டு, பிறகு, ‘ஆயிரம், ஆயிரத்தைந்நூறு ரூபாய்க்கு ஜவுளி வாங்க வேண்டும். இப்பொழுது முதல் சாமான் களைத் தயார் செய்தால்தான் முகூர்த்தத்துக்குச் சரியாக வரும். நீதான் எல்லாவற்றையும் பொறுப்பாய்ப் பார்க்க வேண்டும்!” என்றார். அவரும் அவைகளை அப்படியே செய்வதாகத் தாராளமாய் ஏற்றுக்கொண்டார். அவர் தன் தமையனிடத்தில் நிரம்ப பயபக்தி விசுவாசமுள்ளவர். அவரைப் பிதாவுக்குச் சமானமாய்ப் பாவித்து வந்தார். அவரிடத்தில் எதிராக நின்றுகூடப் பேசமாட்டார். கல்யா ணத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் அவருடைய சகோதர வாஞ்சையையும், மரியாதையையும், விதரணை யையும் நிரம்பக் கொண்டாடும்படி கல்யாணக் காரிய முழுவதையும் அவரே பொறுப்புடன் ஏற்றுச் செய்தார். 

இவர் எவ்வளவுக் கெவ்வளவு கல்யாணத்தைப் பரிமளிக்கச் செய்தாரோ, அவ்வளவுக் கவ்வளவு அவர் மனைவி பொன்னம்மாள் அதைக் கெடுக்கப் பிரயத்தனப்பட்டாள். கல்யாணத்தைத் தடுத்துவிடக்கூட அவள் சில முயற்சிகள் செய்தாள். நல்ல வேளையாய் ஒன்றும் பலிக்கவில்லை. பிறகு அதைத் தடுக்காவிட்டாலும் கெடுத்தாவது விடுகிறதென்று தீர்மானம் செய்துகொண்டு, சமையலைப் பழித்தாள்,சீர் வரிசையைப் பழித்தாள், பெண்ணைப் பழித்தாள்,கடைசி யில் கமலாம்பாளைப் பற்றி அவளுடைய சம்பந்திகளிடத்தி லேயே அவதூறு பேசத் துணிந்தாள். நடந்த சங்கதி முழுவ தையும் தன் நுட்ப புத்தியாலறிந்த கமலாம்பாள், எல்லா வற்றையும் பொறுத்துக்கொண்டு போனதுமன்றி தங்களைப் போல் ஓர்ப்படிகள் உலகத்தில் கிடையாதென்று கண்டோர் சொல்லும்படி அவளுடன் சிரித்து விளையாடிப் பரிகாசம் செய்தாள். அவளுடைய சுபாவம் பெருந்தன்மையான சுபாவமானதால், முன்னே தன்னைப் பொன்னம்மாள் ஆற்றங்கரையில் வைத வசவுகளெல்லாம் அவளுக்கு ஞாபகங் கூட இல்லை. இவள் அன்பு பாராட்டப் பாராட்டப் பொன்னம்மாளுக்கு இவளிடத்தில் பொறாமை அதிகமாயிற்று. சுப்பிரமணிய அய்யர் ஓடி ஓடிக் காரியம் செய்வதைக் காணும் போதெல்லாம் அவளுக்கு உண்டான கோபத்திற்கும் எரிச்சலுக்கும் அளவு சங்கையில்லை. அவர் கலியாணத்திற்கு நாலு நாளைக்கு முன் வீட்டுக்குப் போனவர்தான். அப்புறம் அந்தப் பக்கமே திரும்பவில்லை. கல்யாணம் முடியும் வரைக்கும் அவருக்கு வீட்டுக்குப் போகவேண்டிய அவசியமு மில்லை. பொன்னம்மாளுடைய தயவும் தேவையில்லை. ஆதலால் அவள் தன்னை வீட்டுக்கு வரும்படி என்ன ஜாடை கள் செய்தபோதிலும் அவைகளை யெல்லாம் அவர் பாராதவர் போல் சும்மா இருந்து விட்டார். அவளும் சற்று அவசர மாய் வந்து போகும்படி சுமார் ஆயிரம் பேரிடம் சொல்லி யனுப்பினாள்.இவர் போகவே யில்லை. ஆனாலும் அவளிடத் தில் பயம் பயந்தான். ஒருதரம் அகப்பட்டு விட்டால் தப்பிக்கிறது அப்புறம் அந்த ஜன்மத்திற்கு இல்லையென்று அவருக்கு நன்றாய்த் தெரியும். எங்கே அவள் வந்துவிடப் போகிறாளோ என்று அவர் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே யிருப்பார். வருகிறாளென்று தெரிந்ததோ, உடனே ஏதோ ஒரு பெரிய காரியம் பார்ப்பவர்போல வெகு அவசரமாகப் போய்விடுவார். அவள் உள்ளே வந்து விட்டால் இவர் வெளியே போய் விடுவார். அவள் வெளியே வந்து விட்டால் இவர் உள்ளே போய் விடுவார். அவள் வருகிறாளென்று தெரிந்தால் இவர் தனியே யிருக்கிறதே யில்லை. (என்ன செய்துவிடுவாளோ என்று பயம். பாவம்!) “அடா ராமசாமி, சுப்பண்ணா!” என்று ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி யாரையாவது கூப்பிட்டுக்கொண்டு, கூட்டத்தின் மத்தியில் போய் ஒளிந்து விடுவார். இவர் இப்படி ஓடி ஒளிவதைக் கண்ட சில போக்கிரிப் பையன்கள் பொய்யாவது, “பொன்னம்மாள் வருகிறாள் என்று சொல்லி வைக்கிறது. இவர் புலி வருகிறது என்று கேட்டு ஓடிய ஆட்டிடையன் கதையாக விழுந்தெழுந்து ஓடுகிறது! இப்படி அவள் பெயருக்கே பயந்து ஓடி ஒளிந்ததால் அவள் அவரை என்ன தந்திரமாய் வெருட்டி வெருட்டி வேட்டை யாடியும் அவர் அகப்படுவதாயில்லை. அவள் அவரைப் பார்த்துப் பல்லைக் கடித்துக்கொண்டு, விரல்களை நெரித்துக் கொண்டு தன்னுடைய கண்கள் மூலமாக எவ்வளவு கோபத்தை வெளியிடக் கூடுமோ அவ்வளவையும் காட்டினாள். ஒன்றும் பலிக்கவில்லை. இவ்வளவு தைரியம் இவருக்கு உண்டானது அவளுக்கு வெகு ஆச்சரியமாயிருந்தது. அவரை எவ்விதம் தண்டனை பண்ணுவதென்றும் அவளுக்குத் தோன்றவில்லை. அவருடைய தைரியத்தையும் அலட்சி யத்தையும் நினைக்க நினைக்க அவளுக்கு ஆச்சரியமா யிருந்த தால், அவள் இராத்திரி முழுவதும் தூங்காமல் ஓயாத யோசனைகள் எல்லாம் செய்தாள். தன் கோபந் தீர அவரை வைது திட்டி அவருக்குப் புத்தி கற்பிக்க வேண்டுமென்று கூட ஒருநாள் தீர்மானம் செய்தாள். ஆனால், அப்படிச் செய்வது தனக்கே விரோதமாகும் என்று அவளுக்கு மறுநாள் பட்டது. ஆகையால் அவரை நயவஞ்சகமாய்த் தன்னிடம் வரவழைத்து ‘வசியமருந்து’ செய்து, அதைப் பாலில் கலந்து அவருக்குக் கொடுத்து விடுகிறது என்று கடைசியாய்த் தீர்மானம் செய்துகொண்டதுமன்றி, துஷ்டப் பெண்கள் கையில் ஒரு கூர்மையான வாளாயுதம் போல் விளங்குகின்ற அந்த வசிய மருந்து’ எனனும் விஷமருந்தை இங்கே சொல்லத் தகாத அநேக சரக்குகளைச் சேர்த்து மறுநாளே தயார் செய்துகொண்டு ‘எப்போ வருவாரோ எந்தன் சாமி’ என்று வெகு ஆவலுடன் தன் புருஷனுடைய வரவை எதிர்பார்த்திருந்தாள். 

12 – மருந்தும் மாயமும், திருட்டும் தீயும்

கல்யாணம் கழிந்தவுடன், சிறுகுளத்திலுள்ளோரெல்லோரும் மேளதாளத்துடன் இரண்டு மைல் தூரம் வந்து வழியனுப்ப, சம்பந்திகள் மதுரை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் போன மறுநாள் ராத்திரி சுப்பிரமணிய அய்யர் தமது பள்ளியறையில் கல்யாண சிரமந் தீர வெகு பிரம்மா னந்தமாய் நித்திரை செய்துகொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய உத்தம மனைவியாகிய பொன்னம்மாள் ‘மலையிலே விளைந்ததானாலும் உரலிலே தான் வந்து மசியவேண்டும். இத்தனைநாள் கல்யாணம் கொண்டாடினாலும் இப்பொழு தாவது வீட்டுக்குத்தானே வரவேண்டும். நம்முடைய கையில் அகப்பட்டு விட்டார். இதுதான் சமயம், ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்.’ இது விட்டால் இனிக் கிட்டாது. ஆகையால் நன்றாய் அலங்கரித்துக்கொண்டு அவரிடம் சென்று நம்முடைய அழகாலும் பேச்சாலும் அவரை மயக்கி மறக்கடித்து மருந்தைக் கொடுத்து விடுவோம் என்று யோசனை செய்துகொண்டு, ஜாஜ்வல்யமாய்ப் பிரகாசிக்கும் வைரம், பச்சை, கோமேதகம் முதலிய நவரத்னங்களாலிழைத்த தனது சர்வாபரணங்களையுமணிந்து, அழகிய ஜவ்வாதுப் பொட்டிட்டு, அலங்காரமான வெண் பட்டுடுத்தி, தாம்பூலம் தரித்த தன் பவள உதடுகளில் இனிய மந்தகாசம் தவழ, பாதசரங்கள் ‘கலீர் கலீர்’ என்று சப்திக்க, மெட்டிகள் ‘பராக் எச்சரிக்கை பராக் எச்சரிக்கை’ என்று கட்டியங் கூற, கமகமவென்று காததூரத்துக்கு வாசனை வீச, கையில் தாம்பூலத் தட்டு ஏந்தி பூங்கொடி போல் இடை யசைய அன்னம் போலடி பெயர்த்து, மதரதிபோற் கை வீசித் தன் கணவரிடம் வந்து, அவரை இனிய வார்த்தைகள் கூறி மெதுவாய்த் தட்டி யெழுப்ப, சாதாரணமாகவே அவளுடைய அழகில் மயங்கிக் கிடக்கும் அவளுடைய புருஷர் கண் விழித்துப் பார்த்து வாசனையோடு கூடிய பொன் புஷ்பம், போல் விளங்குகின்ற அவளைக் கண்டு நம்முடைய பாக்கியமே பாக்கியம் என்று ஆனந்த பரவசமானார். 

அவர் விழித்தெழுந்ததைக் கண்ட பொன்னம்மாளோ அவர் மேல் மெதுவாய் சாய்ந்து கொண்டு, கல்யாணமானது முதல் அன்று வரை அவர் அறியாத அவ்வளவு அன்புடன் அவருடன் கேளிவிலாசம் செய்து, கொஞ்சிக் குலாவி உரை யாடினாள். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று நினைத்துக் கொண்டவள் போல, “ஓஹோ! பாலை யெடுத்துக் கொண்டுவர மறந்து விட்டேன் !” என்று அவள் சொல்ல, சுப்பிரமணிய அய்யர், “இருக்கட்டும் போ, இதற் காக நீ மறுபடியும் போக வேண்டாம்! இன்றைக்கு ஒரு நாளைக்குப் பாலில்லாவிட்டால் என்ன இப்பொழுது?” என, அதற்கவள், “சே, நன்றாயிருக்கிறது. இது ஒரு சிரமமா எனக்கு? கல்யாணத்தில் தங்களுக்கு நிரம்ப சிரமம். (அவர் உடம்பைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு) ஏதுக்கே நிரம்ப உஷ்ணமா யிருக்கிறது. அப்பொழுதே அப்படி அலைகிறீர்களே, உடம்பு கெட்டுப்போமே என்று எனக்கு இருந்த விசாரம் எனக்குத் தெரியும். இப்படி உங்களுக்காகக் கவலைப்பட்டுக்கொண்டு வேளா வேளைக்குச் சோறில்லாமல் தண்ணில்லாமல் இராப் பகலாய்த் தூக்கமில்லாமல் நான் இங்கே கிடந்து தனியாய்த் தவித்துத் தத்தளிக்கிறது; நீங்கள் ‘எனக்குத்தான் இந்தப் பூலோகத்தில் அதிசயமாய் அண்ணா வாம் இருக்கிறது’ என்று அங்கேதானே சாப்பாடு, அங்கே தானே படுக்கை யெல்லாம் பண்ணிக்கொண்டு நமக்குச் சமானம் நாம்தான் என்று பொழுது போக்குகிறது. ஆயிரம் இருந்தாலும் உங்கள் முத்தண்ணா, நான் ஒன்றும் சொல்லப் படாது, பொன்னண்ணா ! ‘ஓடுகிறவனைக் கண்டால் துரத்து கிறவனுக்கெளிது’ என்றாற்போல் அவர் ஐயர்வாள், கால் மேல் கால் போட்டுக்கொண்டு, “அடே சுப்பிரமணியா! இந்தா அந்த வெற்றிலை பாக்குத் தட்டை எடுத்துக்கொண்டு வா !’ என்று அதிகாரம் பண்ணிச் சட்டமிடுகிறது. (அவர் முகத்தில் கையால் இடித்துக்கொண்டு) இது ஏமாளம், பரிசாரகப் பயல் போல அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி வேலை செய்கிறது.கூப்பிட்டாற்கூட தேகம் தெரிகிறதில்லை. நான் என்ன சாதிக்கப் போகிறேன், அண்ணாவாவது பணக்காரர்!” என்று சொல்லிவிட்டு அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு தன் முகத்தை அவர் முகத்துக்குச் சமீபத்தில் வைத்துக் கொண்டு வெகு நளினமான பார்வையுடன், ”அவர் சொத்து முழுவதும் உங்களுக்குத்தான் கொடுக்கப் போகிறாராமே! அவர் பெண்ணுக்குக்கூட இல்லையாம், எல்லாம் உங்களுக்குத் தானாம்!’ என்றாள். 

அந்த ராட்சஸியினுடைய வார்த்தை நமக்குக் கர்ண கடூரமாயிருந்தாலும் சுப்பிரமணிய அய்யருக்குத் தேவகானம் போலவும் அமிர்தபானம் போலவும் இருந்தது. அவளுடைய நெருப்பு மழை ஓய்ந்தவுடன் அவர் நிரம்பச் செல்லமாய், “அடி போடி பைத்தியக்காரி, நீ என்னத்தைக் கண்டாய், எங்களண்ணாவுக்குச் சமானம் இந்தப் பூலோகத்தில் கிடைக் குமா?’ என, பொன்னம்மாள், “ஐயோ போகட்டும். இப்படி யார் சொல்லப் போகிறார்கள், கிடக்கிறது, பாலைச் சாப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டு, ‘அண்ணா மயக்கமா இப்படி ஆட்டி வைக்கிறது. வா, வா, இன்றையோடு சரியாகப் போய்விட்டது. இனிமேல் இப்படிச் சொல்லுகிற தைப் பார்ப்போம்’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு மருந்து கலந்து தயாராய் வைத்திருந்த பாலை எடுத்து வந்து கீழே வைத்தால், அவர் நிறம் மாறியிருப்பதைக் கண்டு சந்தேகித்துவிடுவார் என்று பயந்து, தன் கையிலேயே வைத்துக் கொண்டு இடது கையால் அவரைக் கட்டியணைத்து மார்புமீது சாத்திக்கொண்டு, தானே அவருக்கு அந்தப் பாலைப் புகட்டி னாள். அவள் அதன்மேல் சந்தேகம் ஏற்பட்டுவிடும் என்று பயந்து இவ்வளவு சாகஸம் செய்ய, அதை யறியாத சுப்பிரமணிய அய்யர் அவளுடைய விசேஷ அன்புக்கு இதை ஓர் அடையாளமாக எண்ணி, ‘இவ்வுலகத்தில் என்னைப் போல் யார் பாக்கியவந்தர்களிருக்கிறார்கள்!” என்று தன்னையே புகழ்ந்துகொண்டு அவள் அழகின் மயக்கத்தால் பாலின் ருசியைக்கூடப் பாராமல் சாப்பிட்டுவிட்டார். சாப்பிட்டுச் சற்று நேரத்திற்கெல்லாம் (மருந்து மிதமிஞ்சிக் கலக்கப்பட்டிருந்ததால்) “பால் என்ன, என்னமோ போலிருக் கிறதே!” என்று சொல்லிக்கொண்டே வாந்தி பண்ண ஆரம் பித்துவிட்டார். பொன்னம்மாள் சீக்கிரம் போய்ப் பாத் திரத்தை அலம்பி வைத்துவிட்டு அவர் தலையைப் பிடித்துக் கொண்டாள். பாலைக் குடித்த பிராமணர் பாவம் இரண்டு நாழிகை வரையில் வாயோயாமல் வாந்தி பண்ணி நிரம்ப கஷ்டப்பட்டார். அவர் மனைவி, வாந்தி பண்ணினபோதிலும் அதிக மருந்து வெளியில் வந்துவிடவில்லையென்று கண்டு திருப்தியடைந்து, “பித்தம் அதிகரித்திருக்கிறது. பால்கூடச் சேரவில்லை. பிசாசலைகிறாற்போல் அலைந்தால் பித்தமதிகரிக் காமல் என்ன பண்ணும்? எனக்கு அப்பொழுதே தெரியுமே! அந்த இழவு கல்யாணம் நல்லதுக்கா வந்தது.கல்லெடுப்பு. சுவாமி! இம்மட்டோடாவது போகவேண்டுமே, நான் என்ன செய்வேன்!” என்று சொல்லிக்கொண்டே அழுவதாகப் பாவனை பண்ணினாள். சில ஸ்திரீகளுக்குப் பட்டணத்தில் குழாயைத் திருப்பினால் எப்படி ஜலம் வருகிறதோ, அதுபோல் கண்ணைக் கசக்கினாற் போதும், பிரவாகம் புறப்பட்டு விடுகிறது. அப்படி வரி கொடுக்காமல் வேண்டிய கண்ணீர் வரவழைத்துக்கொள்ளும்படி வரம் வாங்கிவந்த அதிர்ஷ்ட சாலிகள் எல்லாரிலும் பொன்னம்மாள் அதிக விசேஷமானவள் இப்படி அவள் அழத் துவக்கவும் சுப்பிரமணிய அய்யர் தன் வருத்தத்தைக்கூட மறந்து அவளை ஆற்றினார். இப்படியாக ஒருவரையொருவர் தேற்றிக்கொண்டே இருவரும் கண் ணயர்ந்தார்கள். ஆனால் தூங்குமுன், பித்தமதிகரித்திருக்கிற தென்றும்,பித்தமதிகரித்ததினால் பால் சேரவில்லை யென்றும் பால் சேராததினால் வைத்தியனைக் காலமே கூப்பிட வேண்டு மென்றும் அவர்களுக்குள் ஒரு தீர்மானம் செய்யப்பட்டது. அவர்கள் ஆடிப்பாடி யமர வெகு நேரமாய் விட்டபாடியால் இருவரும் அயர்ந்து நித்திரை போய்விட்டார்கள். 

இவர்கள் தூங்கி இரண்டு நாழிகைக்கெல்லாம் திடீரென்று, “ரணபாதகா, ரணபாதகா, கடன்காரா, ரணபாதகா!” என்று ஓர் சப்தம் உண்டாயிற்று. அப்பொழுது முத்து ஸ்வாமி அய்யரும் கமலாம்பாளும் தங்கள் வீட்டு மாடியில் நெடுநேரம் வரையில் மாப்பிள்ளை, சம்பந்தி, கல்யாணம் முதலிய விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு பிராமனுபூதிச் செல்வராகிய தாயுமான சுவாமி களுடைய திருவருட் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள் அப்பாடல்கள் அவர்களுக்கு ஓர் தெவிட்டாத திவ்ய தேஜோ. மயாநந்தத் திருப்பாற்கடலாயிருந்தது. அவற்றை அவர்கள் மெய்ஞ்ஞானக்களஞ்சியம்’ என்றும், ‘பேரின்ப நிமல ஊற்று’ என்றும் போற்றிப் புகழ்வது வழக்கம். அவர்கள் இன்ப மடைந்திருக்கும் காலத்தில் அமிர்தமயமான சந்திரிகையுடன் பரவசப்படுத்தும் கானரஸமும் சேர்ந்தால் எப்படியோ அப்படியும், துன்பம் வந்த காலத்தில், எரிகின்ற கோடைப் பருவத்திற்குத் தென்றல் எப்படியோ அப்படியும் உதவிய அப் பாடல்கள் அவ்விருவருக்கும் சிறந்த ஓர் உயிர்த் துணையாய் விளங்கின. சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் சிறிது தூரந்தான் என்று காட்டுபவள்போலக் கமலாம்பாள் தாயு மான சுவாமிகளுடைய ஆனந்தக் களிப்பை வீணைக்கிசைத்து வீணையின் நாதமும் தன் குரலும் ஒன்றோடொன்று அன்னியோன்னியமாய் வேற்றுமை தெரியாது தழுவிக் கிடக்கும்படி ஆதியனாதியுமாகி-எனக்-கானந்தமாய்யறிவாய் நின்றிலங்குஞ் சோதி மௌனியாய்த் தோன்றி – அவன் – சொல்லாத வார்த் தையைச் சொன்னாண்டி தோழி’ என்று பாடலின் கருத்துடன் கொஞ்சி வெகு இனிமையாயும் மிருதுவாயும் பாட, முத்துஸ்வாமி அய்யர் சிற்சில சமயங்களில் கூடப் பாடியும் மற்ற சமயங்களில் கேட்டுக்கொண்டு மிருந்தார். அங்கே பொன்னம்மாள் தன் புருஷனுக்கு விஷமிட்டுக் கொண்டிருந்தாள். இங்கே கமலாம்பாள் தானும் தன் புருஷனு மாய்ப் பேரின்பப் பாற்கடலில் ஆனந்தக் களிப்புடன் ஆடிப் பாடி விளையாடிக் கொண்டிருந்தாள். 

இப்படி இருக்குங் காலத்தில் திடீரென்று அந்த இருண்ட ராத்திரியில், “ரணபாதகா, ரணபாதகா,கடன்காரா, ரண பாதகா!” என்று மேலே சொல்லியபடி ஓர் கூக்குரல் கேட்கவே, இருவரும் திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்த்தார் கள். கமலாம்பாள் நடுங்கிப் போய்விட்டாள். முத்துஸ்வாமி அய்யர் அவளைத் தைரியப்படுத்திவிட்டுக் கீழே இறங்கிவர, சமீபத்தில் ஒருவர் வீட்டில் பலர் கூடிப் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்த சப்தம் கேட்டது. அது ‘எருமைத் தொண்டை குப்பா சாஸ்திரிகளுடைய கிரஹம். அவர் சம்சாரம் பயிஷ்டையாயிருந்ததால் கொட்டத்தில் மாடுகட்டி யிருந்த இடத்திற்குச் சமீபத்தில் படுத்துக்கொண்டிருந்தாள். அவள் அரையில் ஒரு கறுப்புத்துணி கட்டியிருந்தாள். அந்த வீட்டில் ஒரு நொணாமரமுண்டு. அந்த மரத்தில் ஒரு பிசாசு இருப்பதாக ஊர் முழுவதும் பிரசித்தம். அந்த அம்மாள் அந்த மரத்துக்கருகில் படுத்துக்கொண்டிருந்தபொழுது இரண்டு திருடர்கள் மாடு பிடிப்பதற்காக அந்த வீட்டுச் சுவரேறி உள்ளே குதித்து மாடு பிடித்து வெளியேறும் சமயத் தில், அந்த அம்மாள் விழித்துக்கொண்டுவிட்டாள். விழித்துக் கொண்டு திடீரென்று எழுந்திருந்து மார்பில் படீர் படீர் என்றறைந்துகொண்டு, “ரணபாதகா, ரணபாதகா!” என்று கூக்குரலிட, அந்தத் திருடர்கள் அந்த இருட்டு ராத்திரியில் அவளையும் அவளுடைய கறுப்புத் துணியையும் பார்த்து விட்டு, “ஐய்யய்யோ நொணாமரத்துப் பிசாசடா! நொணா மரத்துப் பிசாசடா!” என்று உளறி யடித்துக்கொண்டு பிடித்த மாட்டை விட்டுவிட்டுக் கீழே குதித்து விழுந்தடித்து உயிர் தப்பியது தம்பிரான் புண்ணியமென்று ஓடியே போய் விட்டார்கள். 

முத்துஸ்வாமி அய்யர் வந்தவுடன் குப்பா சாஸ்திரிகள் நடந்த சமாசாரத்தைச் சொல்ல, எல்லாரும் சிரித்தார்கள். இந்த வேடிக்கையைக் கமலாம்பாளிடம் சொல்ல எண்ணி முத்துஸ்வாமி அய்யர் வீட்டை நோக்கித் திரும்புகையில் அவர் தம்பி சுப்பிரமணிய அய்யர், “கள்ளன், மாடு, நகை, மாடு, நகைக் கள்ளன்’ என்று உளறிக்கொண்டு வேகமாய் எதிரே வந்தார். அவரைப் பார்த்து நடந்த சங்கதியைக் கேட்க, பொன்னம்மாளுடைய நகைகள், ரூபாயாக 500 ரூபாய், ஜோடி மாடு 5, புதிதாய் வாங்கிய ஜோடி உருமால் கட்டிக் காளைகள் எல்லாவற்றையும் கள்ளன் கொண்டுபோய் விட்டதாகச் சொன்னார். இவர் சொல்லி முடிக்குமுன் ‘தீ, தீ’ என்று ஓர் அரவம் கிளம்பிற்று. எல்லாரும் திடுக்கிட்டுத் திரும்ப சுப்பிரமணிய அய்யருடைய பாரி வைக்கோற்போர் ஒன்று நெருப்புப் பற்றி எரிவதைக் கண்டார்கள். அந்தப் போர் சுமார் நாலு யானை உயரமிருக்கும். பர்வதம் போன்ற அந்தப் போரில் நெருப்புப் பற்றி எரிந்தது திருவண்ணாமலைக் கார்த்திகை விளக்குப்போல் நெடுந்தூரம் ஒளி வீசிற்று. இருண்ட இரவுக்கு அந்த வெளிச்சம் பயங்கரமாயும் இருந்தது. அந்தச் சமயத்திற்கென்று ஓர் விபரீதக் காற்று ஊர்ப் பக்கமாய் வீசி யடித்தது. நெருப்புக்கங்குகள் (கங்கு – கற்றை) ஆகாயத்தில் அங்குமிங்கும் சஞ்சரிக்கத் தலைப்பட்டன. அவ்வூர் முழுவதும் அக்கினிப் பகவானுக்கு அவிர்ப்பாகமாய் விடும்போலிருந்தது. காற்றும் நெருப்பும் ஊரைச் சூறை கொள்ளச் சித்தமாயிருந்தன. பெரிய பெரிய நெருப்புக் கற்றைகள் பட்டாளம் பட்டாளமாய் வீடுகள் எங்கே எங்கே யென்று வெகு ஆவலுடன் விசாரித்துக்கொண்டு, காலதூதர்களைப் போலக் கிளம்பி, நட்சத்திரக் கூட்டங்கள் போல உதிர்ந்தன. ஊர் முழுவதும் ஆண் பெண் அடங்க அலறிக் கொண்டெழுந்தனர். கிழவிகளெல்லாம் “அடா பாவி, இப்படியுந்தான் உண்டா?” என்று கன்னங்களில் விரலை வைத்து ஆச்சரியப்பட்டார்கள். கிழவர்கள், “சண்டாளப் பறப்பயல்கள், ஊர் கெட்டுப் போய்விட்டது. அனர்த்தம் பிடித்திருக்கிறது” என்று அவலித்தார்கள். பாதித் தூக்கத்தில் எழுப்பப்பட்ட பையன்கள் ஒன்றுந்தோன்றாமல் பிரமித்து நின்றார்கள். ஸ்திரீகள், கங்குகள் அங்குமிங்கும் பறப் பதைக் கண்டு தாங்களும் அலறிக்கொண்டு அங்குமிங்கும் பறந்தார்கள். புருஷர்களில் சிலர் தலைவிரி கோலமாய் தண்ணீர் தூக்கினார்கள். சிலர் அதை வாங்கிச் சமீபத்திலுள்ள கூரை வீடுகளுக்கு அபிஷேகம் செய்தார்கள். சிலர் எதிர்த்து வரும் கங்குகளைத் தடிகளைக் கொண்டு யுத்தஞ்செய்து கொன்றார்கள். சிலர் தடபுடலாகக் கூரைகளைப் பிரித்தெறிந் தார்கள். இப்படி ஊர் முழுவதும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கையில் நல்ல வேளையாய்க் காற்றமர்ந்தது. கங்கு அடங்கிற்று. அக்கினி ஜ்வாலை குறைந்தது. வைக்கோற் போரின் மேற்பாகம் கருகிப்போய் விட்டதாதலால் கங்குகள் பறக்காது தடுக்க ஒரு முக்கிய சாதனமாயிற்று. சுப்பிர மணியய்யர் பணக்காரர்தான். ஆனாலும் ஒரு நாளிரவில் 5000 ரூபாய் திடீரென்று கைவிட்டுப்போனால் யார்தான் வருந்தார்கள். அவர் வீட்டிலேயே களவு நடந்து அவர் வைக் கோற்போரிலேயே நெருப்பும் வைக்கப்பட்டிருந்ததால் அவருக்கு விரோதிகள் யாரோ அந்தக் காரியத்தைச் செய் திருக்க வேண்டும் என்று சிலர் அனுமானித்தார்கள். மற்றும் சிலர் திருடர்கள் திருடின பிற்பாடு யாராவது துரத்தி வருவார்கள் என்று எண்ணி அதைத் தடுக்கும்படி நெருப்புக் கொளுத்தினதேயன்றி வேறொன்றுமில்லையென்று தீர்மான மாய்ச் சொன்னார்கள். சிலர் உடனே திருடர்களைத் துரத்தவேண்டும் என்றார்கள். சிலர் “அவர்கள் போய் இருப் பார்கள் ஐம்பது மைல்” என்றார்கள். சிலர் “பேயாண்டித் தேவன்தான் இந்தக் காரியம் செய்திருக்கவேண்டும்’ என்றார் கள். சிலர், “அவன் கூடத் துணியமாட்டான். தெற்குச் சீமைக் கள்ளன்கள்தான் இவ்வளவும் பண்ணியிருக்கிறது, இல்லாவிட்டால் கோமள நாயக்கனூர் ஜமீன்தார் ஆட்களா யிருக்கவேணும்” என்றார்கள். இப்படிப் பலர் பலவிதம் சொல்லிக்கொண்டிருக்க யாரோ ஆட்கள் ஓடி வருவதாகக் காலடி அரவம் கேட்டது. உடனே எல்லாரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கவே கூட்டம் இருந்தஇடத்தை நோக்கி இரண்டு பேர்கள் வெகு வேகமாய் ஓடிவருவதைக் கண்டார்கள்.

– தொடரும்…

– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.

– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.

– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *