கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விவேக சிந்தாமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 1,519 
 
 

(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

7 – தமிழ் வித்வான் அம்மையப்ப பிள்ளை அவர்கள்

இப்பொழுது சிறுகுளத்தைவிட்டு மதுரைக்குப் போய் வருவோம். மதுரையில் நமக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது; அதைப் பார்த்துக்கொண்டு சிறுகுளத்தில் நடக்கப் போகிற பெரிய கலியாணத்துக்கு மாப்பிள்ளை, சம்பந்தி முதலானவர்கள் வரும்போது அவர்களுடன் கூடவே வந்துவிடு வோம். நமக்கு மதுரைக்குப் போகவேண்டி பல்லக்கு, குதிரை வை ஒன்றும் தேவையில்லை. முற்காலத்து ரிஷிகளிடத்தில் ‘கமன குளிகை’ என்று ஒரு அருமையான வஸ்து இருந்ததாம். அதில் ஒன்று எடுத்து வாயில் போட்டுக்கொண்டால் எந்த இடத்துக்கு வேண்டுமோ அந்த இடத்துக்குக் கொண்டுபோய் விடுமாம். நமக்கு அம்மாதிரி குளிகைகளின் உதவிகூடத் தேவையில்லை. நினைப்பின் மாத்திரத்தில் இடம் விட்டு இடம் போக சாமர்த்தியமுண்டல்லவா? 

மதுரையில் ‘ஜில்லா ஸ்கூல்’ என்று பெயர் வழங்கிய கமர்ன்மெண்டு காலேஜ் என்ற பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத் தில் ஒரு மூலையில் சில பெஞ்சுகளும் அவற்றின் மத்தியில் ஒரு நாற்காலியும் மேஜையும் போடப்பட்டிருந்தன. அந்த மேஜையின்மேல் சில மைக்கூடுகள் இருந்தன. ‘டிங்டாங்’ என்று பத்தாவது மணி அடித்தவுடன் அவ்விடத்தில் சுமார் இருபது பையன்கள் வந்து கூடினார்கள். அவர்கள் வந்து ஐந்து நிமிஷத்திற்குள் அம்மைத் தழும்புகள் நிறைந்த முகத்தையும் நீண்ட கருத்த உருவத்தையுமுடைய ஒரு மனிதர் அங்கே வந்தார். அவர் அந்தப் பள்ளிக்கூடத் தமிழ்ப் பண்டிதர். அவர் பெயர் அம்மையப்ப பிள்ளை. அவருக்குச் சுமார் ஐம்பது வயதிருக்கலாம். அவர் பிறந்த ஊர் ‘ஆடுசாபட்டி’ என்று ஐந்தாறு வீடுகளும் ஒரு புளிய மரமும் உள்ள ஒரு பெரிய பட்டணம். அவர் அகாத சூரர். எமகம், திரிபு என்று இப்படிப் பாட ஆரம்பித்தாரானால் குரங்குகள் அத்திப்பழத்தை உதிர்ப்பதுபோல் சடசட வென்று உதிர்த்து விடுவார். யாராவது தமிழ் தெரிந்தவன் அவர் கையிலகப் பட்டு விட்டால், ராமபாணம் போட்டாற்போல மூச்சு விடு முன்னே முந்நூறு நானூறுக் கணக்காகப் பாட்டுகளை வீசி அவன் காதைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து விடுவார். 

ஒரு காலத்தில் தமிழ் தெரியாத ஒரு பைராகிக்கும் ஒரு சாஸ்திரியாருக்கும் சண்டை உண்டாகி விட்டது. பைராகி தன் வசவுகளில் ‘காரே, பூரே’ என்று அபரிமிதமாய் வைய, சாஸ்திரியார் முட்டாள், போக்கிரி என்றிப்படித் தனக்குத் தெரிந்த வசவுகளை யெல்லாம் வைது பார்த்தார். அவன் வாயொடுங்குகிற வழியாகவில்லை. அய்யர் பழைய வசவு சளுக்கு இவன் கட்டுப்பட மாட்டான் என்று நினைத்து புது மாதிரியாக, “அடா போடா. புஸ்தகமே, சிலேட்டே. பென்சிலே, கலப்பையே” என்று இப்படி வாயில் வந்த வார்த் தையை எல்லாம் வசவாக அடுக்கவே, அந்த பைராகி புது வசவுகள் அகப்படாமல் திண்டாடித் தத்தளித்துப் போனான். அதுபோல அம்மையப்ப பிள்ளையுடன் ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம்பித்தால் ஆயிரக் கணக்காகப் பாட்டுகளைச் சொல்லி எதிராளியின் வாயை அடக்கி விடுவார். அந்தப் பாட்டுகள் எடுத்த விஷயத்திற்குச் சம்பந்தமில்லாவிட்டால் என்ன? அதனால் என்ன குறைவு? பாட்டுகள் பாட்டுகள் தானே! அதுவும் அவர் பாட ஆரம் பித்தால் அவருக்குச் சரியாக மகா வைத்தியநாதய்யர்கூடப் பாட முடியாது. 

ஒரு நாள் மதுரை கட்டை செட்டி மண்டபத்தில் நமது புலவர் கம்பராமாயணத்தில் சீதா கல்யாணப் படலத்தை விவரித்துப் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது தற்செயலாய் தெரு வழியே போன ராம பக்தன் ஒருவன் ராமன் என்ற பேரைக் கேட்டு விட்டு, ராமகதை போலிருக்கிறது கேட்போம், என்று உள்ளே வந்தான். அப்பொழுது அம்மையப்ப பிள்ளை வாயினின்றும் எச்சில் காத வழிக்குத் தெறிக்க, கண்கள் சிவந்து வெகு உக்கிரகமான முகத்துடனும் கடூரமான குரலுடனும் அதிக உற்சாகமாய்ப் பிரசங்கம் செய்ய, வந்த ராமபக்தன் ராம-ராவண யுத்தம் போலிருக்கிறது. அதுதான் இவர் இவ்வளவு கோபாவேசமா யிருக்கிறார். நல்ல பக்தர் போலும்’ என்று இவரை மனதுக்குள் கொண்டாடிக் கொண்டிருக்கும்போதே புலவர், “ராமன் சீதையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டான். சீதையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டான் ராமன்” என்று கைகளை வீசிக்கொண்டு கர்ஜித்தார். அதைக் கேட்டு அந்த ராம பக்தன் திடுக்கிட்டு எழுந்து கண்களில் தீப்பொறி பறக்க, “ராமன் அப்படித்தான் சீதையைக் கல்யாணம் செய்து கொள்வான். அதற்கு நீர் என்ன ஓய் கோபிக்கிறது!’ என்று அதட்டிக்கொண்டு அவரை ஓங்கி அடிக்கச் செல்லவே, சுற்றியிருந்தவர்கள் அந்த ராம பக்தனைக் கைப்பிடித்திழுக்க, அவன், “விடுங்கள், சீதையை மணம் செய்ததற்கு இவ்வளவு கோபம் கோபிக்கிற சண்டாளனைக் கொல்லுகிறேன்!” என்று சொல்ல, ‘அது கோபமல்ல, உள்ள சாந்தமே அவ் வளவுதான் அவருக்கு” என்று சொல்லி அவனைச் சமாதானப் படுத்தினார்கள். பிள்ளை அவர்களோ நடுநடுங்கி பாதிக் கல்யாணத்தில் நிறுத்திவிட்டு, ‘ராமன்பாடு, சீதைபாடு, அவர் விஷயத்திற்கு நான் வரவில்லை, போதும்போதும்’ என்று அன்றுமுதல் பொது ஸ்தலங்களில் கதாபிரசங்கம் செய்வதை நிறுத்திவிட்டார். இவ்விதம் சங்கீத ஞானம், சாரீர சம்பத்து, தமிழ் வித்வத்துவம் இவைகளில் இவர் சிறந்தவரா யிருந்தது மன்றி நல்ல புத்திமானாயும் இருந்தார். 

ஒரு காலத்தில் அவருக்கும் அம்மாபட்டிக் கவண்டயன் கோட்டைக் கவிராயருக்கும் அன்ன நடை என்று நடைக்கு விசேஷமாகக் கூறும் அன்னப்பட்சி உலகத்தில் தற்காலத்தில் உண்டா? இருக்குமானால் அது எது? என்ற பெரிய விஷயத்தைப்பற்றி யுத்தம் நடந்தது. கவிராயர், ‘அன்னம் என்பது காக்கையா யிருக்கவேண்டும். ஏனெனில் காக்கை யொன்றே பட்சிகளுக்குள் நடையிற் சிறந்ததாயிருக்கிறது. ஆனதுபற்றிக் காக்கையே அன்னப்புள்ளாதல் வேண்டும்” என்று அதற்கு ஆதாரங்கள் காட்டிச்சாதித்தார். அம்மையப்ப பிள்ளை “அல்ல, அல்ல. அன்னம் என்றால் சாதம்; அன்னமும் வெள்ளை, சாதமும் வெள்ளை, சாதத்திற்கே அன்னமெனப் பெயருண்டு. மேலும் அன்னமும் பட்சி; சாதத்தையும் நாம் பட்சிக்கிறோம் (சாப்பிடுகிறோம்). ஆதலால் சாதத்தையே அன்னமென்று – தட்டுபவனைத் தட்டான் என்று சொல்லுவது போல் – உருவக நவிர்ச்சியலங்காரத்தில் சொல்லப்பட்டிருக் கிறது” என்று அதற்குப் பிரமாதமாய் ஆயிரம் பாட்டுகளை யெடுத்து ஆதாரம் காட்டிச் சண்டப்பிரசண்டமாய் ஆட்சே பித்தார். முதலில் இந்த யுத்தம் கடித மூலமாகவே நடந்தது. பிறகு இரண்டு வித்வான்களும் நேரில மதுரையிலேயே சந்தித்து பத்துநாள் இரவும் பகலும் அண்டை வீட்டுக் காரரைத் தூங்க விடாமல் யுத்தம் பண்ணினார்கள். கடைசியில் ஒருநாள் ராத்திரி அம்மையப்ப பிள்ளை கவண்டயன் கோட்டைக் கவிராயாரை, அன்னத்தைக் காக்கையென்று சொன்னதற்காகக் ‘காக்கை’யென்று பரிகாசம் செய்தார். அவர் இவரை அன்னத்தைச் சாதம் என்று சொன்னதற்காகச் சாப்பாட்டு ராமா’ என்று பரிகாசம் செய்யவே, இவர் அவரைக் ‘கவிராயர் குரங்குராயர்’ என்றார். (கவி என்றால் குரங்கு என்று அர்த்தம்.) அவர் இவருடைய அம்மைத் தழும்பு நிறைந்த முகத்தைச் சுட்டிக்காட்டி ‘அம்மையப்ப பிள்ளை என்றால் உமக்கே தகும்’ எனவே இருவருக்கும் கோப முண்டாகி அவரை அடிக்கச் சென்றார். கவிராயர் “உமக்கு நான் இளைத்தவனா!” என்று திருப்பி அடிக்க வந்தார். இதற்குள் காவல் காக்கும் போலீஸ்காரர்கள் இவர்களுடைய நிலைமையைக் கண்டு ‘தமிழ் வித்வான்கள் தர்க்கம், இதில் நாம் பிரவேசிக்கக் கூடாது’ என்று அறியாமல், அநியாயமாய் அவர்களைப் பிரித்து விட்டு விட்டார்கள். மறுநாள் காலைப் பொழுது விடியுமுன்னமேயே கவிராயர் ஒருவரும் அறியாமல் ஊர்போய்ச் சேர்ந்தார். அம்மையப்ப பிள்ளை அவர் ஓடிப் போய்விட்டாரென்று செவ்வையாய் விசாரித்துக்கொண்டு தான் அவரை வென்றுவிட்டதாகப் பெருமை பேசிக்கொண் டார். அம்மா பட்டியிலோ கவிராயர் அம்மையப்ப பிள்ளையை ஜெயித்துவிட்டதாகப் பிரஸ்தாபம். அன்னப் பட்சியைப் பற்றிய தர்க்கம் இவ்வாறு முற்றிற்று. 

இவ்வளவு பிரதாபத்தையுடைய அம்மையப்ப பிள்ளை யவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்தவுடன் சுற்றும் முற்றும் கம்பீரமாகப் பார்த்துவிட்டு தமது ஆசனத்திலெழுந்தருளி னார். அவரைச் சுற்றியிருந்த வகுப்பு ‘மெட்ரிக்குலேஷன்’ வகுப்பு.அப்பொழுது நளவெண்பாப் பாடம். அதில் சுயம்வர காண்டத்தில் கோதைமடவார் தங் கொங்கை மிசைத் திமிர்ந்த’ என்ற பாட்டைப் படித்துவிட்டு, தான் படித்ததை கேட்டு, எல்லோரும் மெச்சுகிறார்களா வென்று சுற்று. முற்றும் பார்த்தார். அந்த வகுப்பில் ராமசாமி என்ற ஒரு பையன் உண்டு. அவன் வெகு வேடிக்கையாகப் பேசுவதால் அவனைத் தெனாலிராமன்’ என்று பையன்கள் கூப்பிடுவது வழக்கம். அந்தத் தெனாலிராமன் வாத்தியார் குறிப்பை யறிந்து, “ஸ்வாமி, இன்னொருதரம் படிக்கவேணும், கேட்கக் கேட்க இன்பமாயிருக்கிறது. புத்தகமோ நளவெண்பா, படிப்பதோ இன்னாரென்று சொல்ல வேண்டாம்” என, உபாத்தியாயர் உள்ளங் குளிர்ந்தவராக, “படிக்கிறது யார்? ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளை என்று சொல்லேன்?” என்றார். பையன், “சுவாமி, தாங்கள் பேர் முழுவதும் நன்றாகச் சொல்லவேண்டும்” என்றதும் குரு, “என் பெயரா, சொல்லு கிறேன் கேள்! ‘கடல்சூழ்ந்த இந்நிலவலயத்திற்கு ஓர் திலகம் போன்ற ஆடுசாபட்டி மகாவித்வான் அம்மையப்ப பிள்ளை” என்றார். தெனாலிராமன் (மெதுவாக) “ஒரு வண்டி காணாது போல் இருக்கிறதே” என்று சொல்லிவிட்டு, “சுவாமி, முன் போல முழுவதும் சொல்லவில்லையே” என்றான். வாத்தியார் நாழிகையாகிறது, மேலே சொல்வோம்” என, பையன், “முழு வதும் சொன்னால்தான்” என்றான். உடனே வாத்தியார், “கடல்சூழ்ந்த இந்நிலவலயத்திற்கு ஓர் திலகம் போன்ற ஆடுசா பட்டியில் அவதரித்த அண்டர் புகழும் அஷ்டாவ தானம் அருந்தமிழ்ப் புலவர் மகாவித்வான் அம்மையப்ப பிள்ளை அவர்கள். இப்பொழுது சரிதானா?” என்றதும் எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். வாத்தியார் வாயில் கை பொத்திக்கொண்டு, “சிரிக்காதேயுங்கள், ஹெட்மாஸ்டர் வந்துவிடப் போகிறார்,” என்று சொல்லிவிட்டு, மறுபடி பாட்டைப் படித்து, “மாவிந்த நகரத்தில் ஸ்திரீகள் மார்பி லணிந்த சந்தனமானது அவர்கள் ஸ்நானம் செய்யும்பொழுது சேறாகித் தெருவெல்லாம் நிறைந்திருப்பதால் அந்நகரத்து வீதிகளில் செல்லும் யானைகள் அச்சேற்றில் வழுக்கி விழுகின்றன. அவ்வளவு சந்தனம், அவ்வளவு சேறு, பேஷான பாட்டு, ஆஹா!” என்று பிரசங்கித்துவிட்டு மறுபடியும் அந்தப் பாட்டைப் படிக்கப்போனார். அப்பொழுது தெனாலி ராமன் எழுந்து, “சுவாமிகளே, ஒரு சந்தேகம், அந்த ஊரில் யானைகளே அந்தப் பாடுபட்டடால், மனிதர்கள் நடப்ப தெப்படி?” என்றான். 

வாத்தியார்: ‘அந்த ஊரில் மனிதர்கள் நடப்பார் களோ! பல்லக்கு சவாரி செய்வார்கள். இந்தத் தரித்திரப் பட்டணங்களைப் போலவா?” 

தெனாலிராமன்: “சுவாமி, எல்லோரும் பல்லக்கேறினால் சுமக்கிறவர்கள் யார்? சுமக்கிறவர்கள் என்னமாய் நடப்பார்கள்?” 

வாத்தியார்: “பல்லக்கு என்றால் பல்லக்கா? சாரட்டு களில் சவாரி செய்வார்கள்.” 

தெனாலிராமன்: “அப்படியானால் குதிரைகள் வழுக்கி விழாதோ?” 

வாத்தியார்: “இப்படி யெல்லாம் கேட்டால் சரிப்படுமா? பாட்டில் மூன்று சங்கதிகள் சொல்லி யிருக்கிறார். புகழேந்தி யின் சாமர்த்தியமே சாமர்த்தியம், என்ன? அவ்வூரில் சந்தனம் ஏராளமாகப் பூசிக்கொள்கிறார்கள். அது தெரு வெல்லாம் சேறாகிறது. மூன்றாவது அந்த ஊரில் யானைகள் உண்டு.” 

இன்னொரு பையன் எழுந்து, ”சுவாமி, இன்னும் இரண்டு சங்கதிகள் விட்டுவிட்டீர். அந்த ஊரிலேகூட ஸ்திரீகள் உண்டு, இரண்டாவது அவர்கள்கூட ஸ்நானம் செய்வது உண்டு” என்றான். வாத்தியார், “கலிகாலத்துப் பிள்ளைகள்! மகா அ அதிகப்பிரசங்கி! பேச்சு மிஞ்சுகிறாற்போல இருக் கிறது” என்றபடி “அப்பா, நான்தான் அதிகப் பிரசங்கி, நீங்கள் எல்லாம் பெரியவர்கள்’ எனக் கோபித்துக் கொண்டு பின்னுள்ள பாட்டுகளை வாசித்து அதிவேகமாய் அர்த்தம் சொல்லிக்கொண்டு போகவே, பையன்கள் இவர் பிரசங்கத் தைச் சற்றும் கவனியாமல் சிலர் வம்பு பேசினார்கள். சிலர் அடுத்தமணிப் பாடத்தைப் படித்தார்கள், சிலர் தூங்கினார் கள். சிறிது நேரத்திற்கெல்லாம் வாத்தியாருக்கும் தூக்கம் வந்துவிட்டது. 

“நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைகின்ற தொப்பவே – நீடிய நல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக்கொடு போந்து
தங்கோவின் முன் வைத்தார் தாழ்ந்து”

என்ற பாட்டைப் படிக்கத் தொடங்கி, ‘நாடி மடவன்னத்தை நல்லமயிற்’ என வாசித்தார். ‘குழாம்’ என்ற வார்த்தை தூக்கத்தில் போய்விட்டது. வாத்தியார் தலை இரண்டு தடவை ஆடிற்று. பிறகு அவர் திடுக்கிட்டு தன் சிவந்த கண்களை விழித்துக்கொண்டு ‘ஓடி வளைக்கின்ற தொப்பவே நீடியநல்’ என்று வாசித்த பிறகு ஐந்து நிமிஷம் மௌனம். பிறகு சற்றுக் கண் விழித்துக்கொண்டு ஈனஸ்வரத்துடன், தூங்கவில்லை போலும், ஏதோ ஒன்றை யோசித்தவர் போலும் பாவனை பண்ணிக்கொண்டு, “அப்படியா! இப் பொழுது சரியாயிருக்கிறது” எனச் சொல்லிக்கொண்டே பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றி’ என்று படித்தார். அப்புறம் பேச்சு மூச்சைக் காணோம். 

இதை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சில பையன் கள் வாத்தியார் தூங்கிப் போய்விட்டார் என்ற செய்தியை மற்றவர்களுக்கும் பரவச்செய்யவே கிருஷ்ணஸ்வாமி என்ற ஒரு பையன்,”பேசாமல் இருங்கள், வேடிக்கையைப் பாருங் கள்’ என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் சீமைச் சுண்ணாம் பைப் பொடிபண்ணி சந்தடி செய்யாமல் தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு மேஜையிலுள்ள மை நிறைந்த ஒரு மைக் கூட்டிற்குள் போட்டு விட்டான். அந்த மை சற்று நேரத்திற் கெல்லாம் “டபீர்’ என வெடித்துப் பொங்கி அம்மையப்ப பிள்ளையின் கண், மூக்கு, முகம் சட்டைகளிலெல்லாம் பாயவே, அவர் பாவம் திடுக்கிட்டு விழித்து, “இது எந்தப் போக்கிரிப் பையன் பண்ணின வேலை” என்று எழுந்திருக்க, பையன்களெல்லாம் கொல்லென்று சிரித்தார்கள். தெனாலி ராமனோ வாத்தியார் நிலைமையைக் கண்டு பரிதவித்தவன் போலக் கிட்டச் சென்று, “அடடா, மூக்கு முகம் எல்லாம் மையாய் விட்டதே. அதாவது போகிறது! சட்டை யெல் லாம் மையாகிவிட்டதே ஸார், இது எந்தப் பயல் பண்ணின வேலை? முட்டாள்பயல்கள், இருக்கிற ஒரு சட்டையிலும் மையைக் கொட்டி விட்டால் அப்புறம் ஸார் நாளை என்ன பண்ணுவார் என்று அறியவேண்டாமா! நீங்கள் இருக்கிற போதே யார்தான் இப்படிச் செய்யக்கூடும்? நீங்கள் இன்றைக்குத் தூங்கக் கூடவில்லையே!” என்று சமாதானம் பண்ண, வாத்தியார், “எந்தப் பயல் செய்தது? மரியாதை யாய் உண்மையைச் சொல்லி விடட்டும், மன்னித்து விடு கிறேன். இல்லாவிடில் ஹெட்மாஸ்டரிடம் சொல்லிப் பேரை யடிக்கச் சொல்வேன்!” என்று பயமுறுத்தினார். முத்து ஸ்வாமி என்ற பையன், “நீங்கள் ஹெட்மாஸ்டரிடம் போய்ச் சொல்லுங்கள் சுவாமி, அதுதான் சரி. இல்லாவிடில் உண்மை வெளிப்படமாட்டாது!” என்றான். ராமையா என்ற பையன், “வாத்தியார் பள்ளிக்கூடத்தில் தூங்கினது உண்மையா?” என்றான். “நான் ஹெட்மாஸ்டரிடம் போகி றேன் பார்” என்று வாத்தியார் புறப்படவே, கிருஷ்ணஸ்வாமி, “நாங்கள் பார்த்தது போதாது, எல்லோரும் பார்க்கவேண்டு மல்லவோ இந்த வேஷத்தை! போங்கள், ஸார்” என்றான். லட்சுமணன், “அங்கே போனால் வாத்தியாருக்குத்தான் அபராதம் விழும், மை கொட்டினபோது நீர் எங்கே போயிருந்தீர்?” என்று கேட்டால், “தூங்கிப்போய்விட்டேன்” என்று சொல்லுவாரோ, சொன்னால் அபராதம் நிச்சயம்” என்றான். வாத்தியார் ஒன்றும் செய்யத் தோன்றாமல் திரும்பத் தன்னிடம் வந்து, “நாளை முதல் இப்படிச் செய்யுங்கள் சொல்லுகிறேன் வழி’ எனவும், சுப்புக்குட்டி என்ற பையன் “நாளையும் செய்தால் இன்றைக்குப் பண்ணினமாதிரி பண்ணி விடுவீர்களோ!” என்றான். 

ஒரு பிராமணன் ஒருவர் வீட்டுக்குப்போய், “எனக்குச் சாதம் போடுகிறீர்களா அல்லது நேற்று அங்கே பண்ணினது போல் பண்ணிவிடட்டுமா?” என்றாராம். வீட்டுக்காரன் மனைவி பயந்து, “அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிடாதே யும்; நாங்கள் இருக்கிறோம் தெய்வமே என்று, சாதம் போடுகிறேன் சாப்பிட்டுப் போம்” என்று உள்ளே அழைத்துப் போய் சாதம் போட்டாள். வெளியில் வந்த பிறகு ‘நேற்று என்ன பண்ணினீர் சொல்லும்’ என்று கேட்க, அந்தப் பிராம ணர் “சொல்லிவிடட்டுமா!” என அம்மாள் “சாப்பிட்டாய் விட்டதல்லவோ, சும்மா சொல்லுங்கள்” என்றாள். பிராமணர் ‘நான் சொல்லியே விடுவேன்’ என்று மறுபடியும் பயமுறுத்தி னார். அம்மாள் “சொல்லுங்கள்” என்று கேட்க, ‘நேற்றைக்கா இந்த இடது கை யிருக்கிறதல்லவோ அதை ஒரே யடியாய் தலைக்குயரம் வைத்துக்கொண்டு பட்டினியாகவே படுத்துக் கொண்டு விட்டேன்” என்றார்.- என்று ஒரு கதையுண்டு அதுபோல் வாத்தியார் கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தார். பலிக்கவில்லை. ராமசுப்பன் என்ற பையன், “இல்லை இல்லை. நாளை இப்படிப் பண்ணினால் அழுதுவிடுவார்” என்றான். தெனாலிராமன் “சூ சூ சும்மா இருடா, அவரை இப்பொழுதே அழவைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே, நாளை அழுகிறதாம்! நாளை முதல் பள்ளிக்கூடத்தில் தூங்கினால்தானே! அவன் கிடக்கிறான் ஸார், நீங்கள் நாளை முதல் தூங்காதேயுங்கள் ஸார்!” என்று சொல்லிக்கொண்டு அவர்மேல் படிந்திருக்கும் மையைத் துடைப்பவன்போல் அதை அவர் சட்டை முழுவதும் தேய்த்து அவர் முகத்திலும் கோரமாகத் தடவவே அவர், பாவம், அல்லா பண்டிகைக்குச் சிங்காரம் செய்து கொண்ட கோமாளிபோல் கண்டோர் நகைக்க நின்றார். 

8 – அழகுள்ள நல்ல பிள்ளை

இவர் பாடு இப்படியிருக்க, அந்த வகுப்புக்குச் சமீபத்திலுள்ள சரீரப்பயிற்சி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கொட்ட கையில் தங்கள் சொந்தப் பேச்சே பெரிதாகத் தாழ்ந்த குரலுடன் அம்மையப்ப பிள்ளையின் மாணாக்கரும் மெட்ரி- குலேஷன் வகுப்பினராகிய ஸ்ரீனிவாசன், சுப்பராயன் என்ற இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர் களுக்குள் ஸ்ரீநிவாஸன் என்ற பையனுக்குப் பதினாலு வயதிருக்கலாம். அவன்தான் சிறுகுளம் முத்துஸ்வாமி அய்யரிடம் நிச்சயதார்த்தம் பண்ணி வந்த ராமஸ்வாமி சாஸ்திரிகளுடைய பேரன். அவன் தகப்பனார் நாராயண அய்யர் கலெக்டர் ஆபீசு சிரஸ்ததார். அவனுடைய பூங்கொடிபோல் மெல்லிய சரீரமும், உருக்கியோட விட்ட தங்கம்போன்ற நிறமும், ரோஜாபுஷ்பம் மலர்ந்ததுபோன்ற முகமும், ஓயாது சலித்துக்கொண்டிருக்கும் கண்களும், நீண்டு கிளியின் மூக்குப்போல சிறிது வளைந்து முனையில் கூர்மையா யுள்ள மூக்கும், குதித்துக் குதித்து நடக்கும் நடையும், மழலைச் சொல் மாறாத வார்த்தையும், அவன் புத்தியும், உற்சாகமும், சாந்தமும், குணமும் அவனை அறிந்தவர் உள்ளத்தை அடிமைப்படுத்தும் தன்மையனவா யிருந்தன. அவனுடன் படிக்கும் கொட்டை முத்து ராமையா என்ற பையன் அவனை “லேடி’ (ஏ பெண்ணே) என்று கூப்பிடுவான். நொண்டி சுப்பையா அவனை ‘என் கண்மணியே’ என்பான். பெருந்தீனி வைத்தி அவனை ‘மாம்பழம்’ என்று கூப்பிடுவான். தமிழில் கொஞ்சம் தேர்ச்சியடைந்த முத்துஸ்வாமி என்பவன் அவனைக் காணும்போதெல்லாம் ‘அய்யோ இவன் வடி வென்பதோரழியா அழகுடையான்’ என்றும், 

“காவியுங் குவளையுங் கடி கொள்கா யாவுமொத் 
தோவியஞ் சுவைகெடப் பொலிவதோ குருவொடே
தேவருந் தொழுகழற் சிறுவன்முன் பிரிவதோர்
ஆவிவந் தென்னவந் தரசன்மா டணுகினான்”

என்றும் பாடத் தொடங்கிவிடுவான். தெனாலிராமன் அவனைக் காணுந்தோறும் ‘என் பொன்னம்மங்காள், என் தங்கமே’ என அழைப்பதுமன்றி வாத்தியார் வரச் சற்றுத் தாமதப்பட்டால் ஸ்ரீநிவாசனைப் பார்த்து ‘முங்கி முழுகுகிற பெண்ணே’ என்றிப்படித் தாளம் போட்டுக்கொண்டு கீர்த்தனை பாட ஆரம்பித்து விடுவான். இங்கிலீஷ் வாத்தியார் நித்தியானந்த பிள்ளைக்கு அந்தப் பள்ளிக்கூடத்திலேயே அவன் ஒருவனைத்தான் தெரியும். ‘ஹெட்மாஸ்டர்’ திருமலாச் சாரியார் பாடம் நடத்தும்போது அவன் ஒருவனைத்தான் பார்த்து நடத்துவார். கடு கடு என்று கடுவன் பூனைக்கு நிகராகக் கோபிப்பதையே தொழிலாக உடைய சம்ஸ்கிருத வாத்தியார் அப்பா சாஸ்திரிகள்கூட இவன் தமிழ் படிப்ப வனாயிருந்தாலும் இவனைக் கண்டு ஒரு நாளைக்கு ஒரு தடவை யாவது பேசாமல வீட்டுக்குப் போகமாட்டார். புருஷ லட்சணத்தில் தனக்கு மிஞ்சினவன் இல்லையென்று கர்வித்த சேஷாசலத்துக்கு மட்டும் இவனிடத்து பொறாமை யிருந் தாலும் சேஷு நடையே நடை, அவனுடன் யார் ஓடுவார்கள் என்றிப்படி அடிக்கடி ஸ்ரீநிவாசன் அவனைப் பார்த்துச் சொல்லுவதால் அவனும் இவன்மேல் வைத்த பொறாமையை இவனைக் கொண்டாடும் மற்றவர்கள் மேல் வெறுப்பாக மாற்றிக் கொள்வான். இப்படி எல்லோருக்கும் சினேகனா யிருந்த ஸ்ரீநிவாசனுக்கு முக்கிய சினேகிதன் சுப்பராயன் என்ற பையன். அவன் மதுரை தாசில் குப்புசாமி அய்யருடைய பிள்ளை. அவனுக்கு வயது இருபதிருக்கும். மூன்று வருஷ காலமாகத்தான் இருவருக்கும் பழக்கம். ஆனால், அவர்கள் ஒருவரை யொருவர் சந்தித்த முதல் நாளே நெடுநாட் பழகிய வர்கள் போல் சினேகிதர்களானார்கள். 

ஸ்ரீநிவாசன் படித்துக்கொண்டிருந்த வகுப்பில் புதிதாய் வந்து சேர்ந்த சுப்பராயன் அந்த வகுப்பில் அவன், கணக்கு ஒன்று தவிர, மற்ற பாடங்களில் எல்லாம் முதல் பையனா. யிருக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு அவன் சினேகத்தைச் சம்பா தித்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் பள்ளிக் கூடம் விட்டவுடன் அவனைத் தேடிக்கொண்டு புறப்பட்டான். அன்று 5 மணி அடித்தவுடனேயே ஸ்ரீநிவாசன் அகத்திற்குப் புறப்பட்டு விட்டான். அவன் சில பையன்களுக்கு மத்தியில் போய்க்கொண்டிருந்தபோது வேட்டை நாய் ஒன்று அவர்களை நோக்கி ஓடிவர, மற்ற பையன்கள் எல்லாம் மூலைக்கொருவ ராய் ஓடிவிட்டார்கள். ஸ்ரீநிவாசன் மாத்திரம் வேகமாய் ஓடக் கூடவில்லை. அந்தக் கொடிய நாய் அவனுக்கு வெகு சமீபத்தில் வந்து விட்டது. அவன் அலறுகிறான். அப்பொழுது திடீரென்று அந்த நாய் தலையில் ஒரு பெரிய சிலேட்டும் அதன் பிறகு ஒரு கல்லும் வந்து விழுந்தது. சீனு திரும்பிப் பார்த் தான். தன் பள்ளிக்கூடத்திற்குப் புதிதாய் வந்து சேர்ந்த சுப்பராயன்தான் தன்னைத் தப்புவித்தது என்று காணுமுன் சுப்பராயன் அவனைத் தூக்கித் தோள்மேல் வைத்துக்கொண் டான். அந்த நாயோ கழுத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒரே ஓட்டமாய் ‘உயிர் தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்று ஓடிவிட்டது. ஸ்ரீநிவாசன் கீழே இறங்கிக் கொண்டு சுப்பராயனுடைய கைகளால் தன் கண்ணைப் பொத்திக் கொண்டு கண்ணீர் பெருக்கினான். சுப்பராயன் அவனைப் “பயப்படாதே!” என்று தட்டிக் கொடுத்து, அவன் புஸ்தகங்களையும் தான் வாங்கிக்கொண்டு நாய்மேல் எறிந்த தால் உடைந்துபோன தன் சிலேட்டையும் எடுத்துக் கொண்டு, அவனையும் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய், கூழ் மோர் காய்ச்சிக் கொடுத்து அவனுடைய அகத்துக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டுவிட்டு அவன் தாயார்,பாட்டியார் முதலியவர்களுடைய ஆசீர்வாதங்களுட் னும் ஸ்ரீநிவாசன் வந்தனங்களுடனும் வீட்டிற்குச் சென்றான். அன்று முதல் அவ்விருவரும் அத்யந்த சினேகிதர்கள். 

அவர்களுக்குள் ஒருவர்க்கொருவர் சொல்லாத ரகசியமே கிடையாது. அவர்கள் சேர்ந்துதான் படிப்பு, சேர்ந்துதான் படுக்கை. சுப்பராயனகத்தில் மாடியில் ஒரு அறை இவர் களுடைய ஆதீனம். சில நாள் ஸ்ரீநிவாசன் தன் வீட்டிற்கு வராமலேகூட இருந்து விடுவான். அவனை ஒருவரும் பரிகாசம் கூடச் செய்யக்கூடாது; சுப்பராயன் சண்டைக்கு வந்து விடுவான். அவன் அழகுக்கு எங்கே திருஷ்டி வந்துவிடப் போகிறதோ என்ற பயத்தால் அவன் அழகைக் கண்டு யாராவது புகழ்வதைக் கண்டால் சுப்பராயன் “ஆ, வெகு அழகு! ஓடிந்து விழுகிறாற்போல் இருக்கிறான். ஆயிரக்கலநோய் சிவப்புத் தோல்தான் சமயநல்லூர் புளிப்பு மாம்பழம் போல்” என்று சொல்லுவான். கலியாணப் பிரஸ்தாபம் வந்தது முதல் அன்றன்று நடக்கிற சமாசாரத்தை ஸ்ரீநிவாசன் சுப்ப ராயனுக்குச் சொல்லிவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பான். அம்மையப்ப பிள்ளைக்கு அல்லா பண்டிகை வேஷம் போட்ட அன்று இவர்கள் இருவரும் தனிமையாய்ப் பேசிக் கொண்டனர். 

ஸ்ரீநிவாசன்: “இப்படித்தானே உட்காரலாம். இந்த ஒரு மணியும் விருதா காலட்சேபம். இவ்வளவு பெரிய பள்ளிக் கூடத்திற்கு ஒரு நல்ல தமிழ் வாத்தியார் அகப்படவில்லையா?” 

சுப்பராயன் : “ராமசாமி அவர்கள் பள்ளிக்கூடத்திலிருக் கிறாரே ராகவய்யர், அவர் நல்ல வித்வானாம்.” 

ஸ்ரீநிவாசன்: “ஆமாம், எல்லாம் ஒரு கணக்குத்தான். இவருக்காவது பாட்டுத் தெரியும்; அவருக்கு அதுகூடத் தெரி யாது; அது போகட்டும். இன்றைக் காலமே சங்கதி கேட்டியா? நான் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டுமென்று எட்டு மணிக்கே போனேனல்லவோ? அப்பொழுது அகத்திலே ஏதோ புதுக்குரல் கேட்டது, யார் என்று பார்த்தேன், நமது சங்கரனும் அவன் அம்மாளும் வந்தார்கள்.’ 

சுப்பராயன் : “சங்கரனா?” 

ஸ்ரீநிவாசன்:”ஆமடா! தெரியாதா, மேலைக்கோபுரத் திற்கடுத்தாற்போல இருக்கிறது அவன் அகம்.” 

சுப்பராயன் : “ஓஹோ! நம்முடைய ‘ஷோக்’ சங்கரனா, பலே! பாட்டுப் பாடுவானே அவன்தானே?” 

ஸ்ரீநிவாசன்: ‘ஷோக் சங்கரன்தான், அப்படிச் சொன்னால்தானே உனக்குத் தெரியும். அவனும் அவனம்மாளும் சிறுகுளத்துக்குப் போயிருந்தார்களாம்.” 

சுப்பராயன் : “உனது மாமனாரூருக்கோ?” 

ஸ்ரீநிவாசன்: “அதற்குள் மாமனார் ஆக்கிவிட்டாயா? கைக்கெட்டினது வாய்க்கெட்ட வேணுமே,பாக்கியையும் கேள்! அப்பொழுது அங்கே ஒரு அகத்தில் ‘தடிவியம்’ போட் டார்களாம். அங்கே ஒரு சிறு பெண் தம்பூர் வைத்துக் கொண்டு பாட்டுப் பாடினாளாம். கேள். கம்பராமாயணம் என்ன, தாயுமான சுவாமி பாடல் என்ன, தேவாரம், திருவாச கம், திருவாய்மொழி, கப்பற்பாட்டு, ஜாவளி இப்படி தினுசுக்கு ஐந்தாறு ஜமாய்த்து விட்டாளாம்; ஏகக் கூட்ட மாம். புருஷர்களும் பெண்களும் அதுவும் கம்பராமாணம் பாடுகிறபோது- கங்கைப் படலத்து முதற்பாட்டுகள் போல இருக்கிறது – குதிக்காதவர்கள் பாவம்; தாயுமானவர் பாடல் பாடுகிறபோது உருகி அழாதவர்கள் பாவமாம். சொல்லு கிறான் சொல்லுகிறான் அதிக அற்புதமாயிருக்கிறது. சொல்லு கிறதிலேயே அவனுக்கு ஆனந்தம் பொங்குகிறது. அந்தப் பெண்தான் என் அகமுடையாள்.” 

சுப்பராயன்; “ஆ அப்படியா! அவ்வளவு பாட்டா? உன் அகமுடையாளா! பத்து வயதுக் குட்டியல்லவோ?” 

ஸ்ரீநிவாசன்: “பத்து வயதுக் குட்டியானால்? இன்னும் கேள், தாயார், பிள்ளை இரண்டுபேரும் சொல்லுகிறார்கள், அப்படிச் சொல்லுகிறார்கள். குணத்தை ஊர்முழுவதும் கொண்டாடுகிறார்களாம், வீண்வம்பு, இரைந்த சொல் கிடையாதாம்!’ 

சுப்பராயன் : “நீதான் அதிர்ஷ்டசாலி அப்பா!” 

ஸ்ரீநிவாசன்: “முத்துஸ்வாமி அய்யர் என்பவர் கொழுத்த பணக்காரராம். அவர் மனைவி நிரம்பப் படித்த வளாம். மகாலட்சுமி என்றால் அவளுக்கே தகுமாம்! இந்தப் பெண்ணுக்கு அவளும் அவருமாய் வெகு அருமையாய்ப் பாட்டும் படிப்பும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களாம். கம்பராமாயணம் தலை கீழாகத் தெரியுமாம்!” 

சுப்பராயன்: ”கம்பராமாயணமா! அவள் சிறு பெண். எனக்கு எருமைக்கிடாபோல் இருபது வயதாய் விட்டது. நான் இன்னும் அதில் ஒருபாட்டுக்கூட அறியேன், நீ சொன்ன தைத் தவிர!” 

ஸ்ரீநிவாசன்: “பெண் மின்னல் கொடிபோல இருக்கிறா ளாம், அதிக லட்சணமாம். அவள் நடையும், பார்வையும், சாயலும் இப்பொழுதே வெகு அழகாயிருக்கிறதாம்!” 

சுப்பராயன் : “நிரம்ப சரியாகப் போய்விட்டது.” ஸ்ரீநிவாசன்: “அவளுக்குப் பந்துக்கள் சிலர் பெரிய பெரிய உத்தியோகங்களிலிருக்கிறார்களாம். முத்துஸ்வாமி அய்யருடைய பெரிய தகப்பனார் பிள்ளையோ என்னவோ மஞ்சக்குப்பத்தில் டிப்டி கலெக்டர் உத்தியோகம் பண்ணுகிறாராம்.” 

சுப்பராயன்: “மஞ்சக்குப்பமா! நாராயணசாமி அய்யரோ? அடடா அப்படிச் சொல்லு. சரிதான் உன் அகமுடையாளை நான் பார்த்திருக்கிறேன். என்னமாக என்று கேள். போன வருஷம் என் தகப்பனார், நாராயணசாமி அய்யருடைய வீட்டிலே அவர் பெண்ணுக்குக் கல்யாணம். அங்கே ஒரு சிறு பெண் தம்பூர் வைத்துப் பாடினாள்; எல்லாரை யும் ஆனந்த பரவசமாக்கி விட்டாள். அடடா பேஷ்! பேஷ்! அப்படியா, ஸ்ரீநிவாசா! உன்னைப்போல் பாக்கியசாலி கிடையாது! உனக்கேற்றவள் அந்தப் பெண்ணே ! அவளுக் கேற்றவன் நீயே” என்று சொல்லிக்கொண்டு, சந்தோஷத் தால் அவன் முதுகில் தட்டினான். 

அதற்குள் அம்மையப்ப பிள்ளையவர்களுடைய திருக் கூத்து நடந்து எல்லாரும் இடி இடி என்று சிரித்த இரைச்சல் கேட்டு இருவரும் ஓடிவர, அம்மையப்ப பிள்ளையவர்கள் செம் புள்ளி கரும்புள்ளி குத்திக்கொண்டு நின்றதைக் கண்டார்கள். உடனே ஸ்ரீநிவாசன் அவர் நிலைமையைக் கண்டு பரிதபித்து தன் சட்டையுள் ஒன்றைக் கழற்றி அவருக்குக் கொடுத்துத் தன் கைக்குட்டையால் அவர் முகத்தைத் துடைத்தான். வாத்தியார் இவன் செய்த உபகாரத்துக்காகக் கண்களில் நீர் ததும்ப இவனுக்கு வந்தனமளித்து, ‘நீ சீக்கிரம் நல்ல பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டு நெடுங் காலம் சுகமாக வாழ்ந்திருப்பாய்!” என்று மனப்பூர்வமாய் ஆசீர்வதித்தார். அருகிலிருந்த சுப்பராயன், “கலியாணத்திற்கு முகூர்த்தம் வைத்திருக்கிறது” என்று சொன்னான். வாத்தி யார் ஸ்ரீநிவாசன் கையைப் பிடித்துக்கொண்டு, எனக்கு நீ இந்தச் சங்கதியைச் சொல்ல வேண்டாமா? எங்கே, எப்பொழுது கலியாணம்?” என்றிப்படி விசாரித்ததில் ‘சிறு குளம் முத்துஸ்வாமி அய்யர்’ எனவும், அவருக்கு வந்த சந்தோஷத்திற்களவில்லை. “என் தாதா முத்துஸ்வாமி அய்யரா! அடடா, அவர் முதல் வள்ளல் அன்றோ! நான் அவருடைய அடிமையல்லலோ ! அந்த மகான் பெண்ணா? உனக்கா நிச்சயமாயிருக்கிறது? உனக்குக் கடவுள் கிருபை பூர்த்தியாக இருக்கிறது. எனக்கும் கடிதம் வரும். நானும் வருகிறேன் உன் திருக்கல்யாணத்திற்கு” என்றார். அம்மை- யப்பபிள்ளை மொத்தத்திற்கு வெகு நல்லவர். அவர் குணா குணங்கள் பின்னால் வெளிப்படும். அவர் இந்தச் சரித்திரத்தில் சம்பந்தப்பட்டவர். ஸ்ரீநிவாசனிடம் அவர் பேசிக்கொண்டி ருக்கும்போதே மணியடித்து விட்டது. ஸ்ரீநிவாசன் மறு வகுப்புக்குப் போய்விட்டான். 

மறுநாளிரவு ஸ்ரீநிவாசன் சுப்பராயனகத்துக்குப் போன பொழுது விசேஷ சங்கதி ஒன்று அவனுக்குச் சொல்ல ஆவல் கொண்டவனாயிருந்தான். ஆனால் சுப்பராயன், அவன் தகப்பனார் முதலானவர்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருந் தான். ஸ்ரீநிவாசன் அவன் வரவை எதிர்பார்த்துக்கொண்டு மாடியில் உலாத்தத் தொடங்கினான். 

கல்யாண ஞாபகம் தவிர, அவனுக்கு வேறு ஞாபகமே கிடையாது. உலாத்திக்கொண்டே மெதுவாகப் பாடி, சற்று நேரம் பாடிவிட்டுப் பிறரறியாமல் தனக்குள்ளேயே பேசிக் கொண்டான்: “என் மேலன்ன அவளுக்கு அவ்வளவு பிரியம்? அழகாயிருக்கிறேன் என்றா? அதற்கு என்னைப் பார்த்ததுகூட இல்லையே! நன்றாய் வாசிக்கிறேனென்றா? நமக்கென்னடா குறைவு, அப்பா உத்தியோகம் பண்ணுகிறார். இரண்டு தாத்தாவும் இருக்கிறார்கள். என் மேல் காற்றடிக்கச் சகிக்க மாட்டார்கள். இதைக்காட்டிலும் பாக்கியம் வேறென்ன இருக்கிறது! (கண்களில் நீர் ததும்ப) அவர்கள் அன்பே நமக்குப் பெருஞ்செல்வம். படிப்பு,அழகு,செல்வம் எல்லாம் இருக்கிறது; என்ன குறைவு! எல்லா வகுப்பிலும் நான்தானே முதல்! சரி வந்துவிட்டதா கர்வம், நமக்குச் சமானம் யார் இருக்கிறார்கள் என்று! கழுதைக்கானது போல் வயது 14 ஆகி விட்டது; இன்னும் மெட்ரிகுலேஷன் தேறவில்லை. அதற்குள் தலைகால் தெரியவில்லை” என்றிப்படித் தன்னையே புகழ்ந்து கொண்டும் கண்டித்துக்கொண்டும், சிறிது பேசிவிட்டுப் பிறகு, ”கல்யாணத்திற்குச் சமானமா? வேஷ்டியைப் பஞ்சகச்சம் வைத்துக் கட்டிக்கொண்டு, சந்தனம் பூசிக்கொண்டு, வெற்றிலை போட்டுக்கொண்டு ஜம் என்று,- சுவாமி! இந்தக் கல்யாணத்தை மட்டும் குறைவில்லாமல் நடத்திக் கொடுக்க வேண்டும்! மீனாட்சி! ஐந்து தேங்காய் வாங்கி உடைக்கிறேன்! இன்னும் பத்துநாளிருக்கிறது. பத்துநாளாவது. ஒன்பது நாள்தான். இன்றைப்போதுதான் கழிந்து போய் விட்டதே” என்று சொல்லிக்கொண்டே உல்லாசமாக, 

”நாற்குணமு நாற்படையா வைம்புலனு நல்லமைச்சா 
ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா-வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு.” 

என்று பாடிக்கொண்டு உலாத்திக் கொண்டிருந்தான். அப்பொழுது வசந்தகாலம். மிருதுவான தென்றல் வீசிற்று. இளம்பிறைச் சந்திரன் அழகான வெள்ளிக் கோடுபோல் உயரப் பிரகாசித்தது. அதினின்றும் ஜிலுஜிலென்று பொழியப் பட்ட அமிர்த ஊற்றுப் போன்ற நிலவு, ஸ்ரீநிவாசனுக்கு. அடங்காத ஆனந்தத்தை உண்டுபண்ணிற்று. ‘ஆஹா’ என்று. தலையசைத்தான். “என்ன சுகமாயிருக்கிறது” என்றான். அவன் நாவில் இன்னமிர்தம் ஊறிற்று. அவ்வளவு ஆனந்த மாய், “இனிது இனிது, ஏகாந்தம் இனிது” என்றபடி ஏகாந்தத்தின் இனிமையை அவன் அனுபவித்துக் கொண்டி ருக்கிறபோதே சுப்பராயன் வந்தான். அவன் வந்ததைக்கூட இவன் பார்க்கவில்லை. சுப்பராயன், ஏன்? விளக்கேற்ற வில்லையோ?” என ஸ்ரீநிவாசன், “ஏற்றலாம் வா,. சற்று இங்கே உட்காரு” என்று அவன் மடியில் தலைவைத்துக் கொண்டு மழலை திருந்தாத தன் மொழியில், ”இங்கே பார், இந்த இள நிலா எவ்வளவு சுகமாயிருக்கிறது. இந்தத் தென்றலும், இந்த மரங்களும், இந்தச் சோலை மலர்களும் ஆஹா, பேஷ்! என்ன ராத்திரி! இந்த வேளைக்கு ஓடிக் குதிக்கவேணும். கழுதைகளை இதோ தெருவிலோட்டிக் கொண்டோடுகிறார்களே இவர்கள்கூட இந்த நிலவாகிய அருமைச் செல்வத்தை அனுபவிக்கிறார்கள். ஆடிப்பாடி கூத்தாடவேணும்போல இருக்கிறது. ஆயிரம் மாம்பழம் தின்பதில்கூட இந்தச் சுகம் கிடையாது. பேஷ்! ஆஹா அதோ தெருவிலோடுகிற குழந்தைக்குக்கூட என்ன சந்தோஷம்! அம்மாள் கூப்பிடுகிறாள். வரமாட்டேன் என்று ஓடுகிறது; இந்த நிலவு போதும் அதற்கு; தாயார்கூட வேண்டாம் என்று சந்தோஷத்தால் தத்தளித்துச் சொன்னான். சுப்பராயன் ‘நிலவுக்குச் சமானமா?” என்றான். ஸ்ரீநிவாசன், “அதோ! பார், பட்சிகள் கத்துகிறது. இந்த வேளைக்குக் காக்கை கத்தினால்கூட பேஷாயிருக்கிறது; பைத்தியக்காரக் காக்கை களா! சண்டை மட்டும் செய்யாதேயுங்கள்! வேறு என்ன செய்தாலும் இந்த நிலவிற்கு இன்பமாயிருக்கும். அடடா, அந்தத் தெப்பக் குளத்தைப் பார், பாசி படர்ந்த அந்தப் பைத்தியக்காரத் தெப்பக்குளத்துக்குக்கூட என்ன மகிமை. வந்திருக்கிறது பார் ! சந்திர்ன் அதிலே தவழ்கிறது, கொஞ்சு கிறது, விளையாடுகிறது; இந்த ராத்திரிக்குக் குதிக்கவேண்டு மென்கிறேன். நீ ஆடு, நான் பாடுகிறேன்; இல்லாவிடில் நான் ஆடுகிறேன். நீ பாடு. ‘இரவின் ஜோதியே,’இந்துவின் ஒளியே. பாடு’ என்று இப்படி ஸ்ரீநிவாசன் ஆனந்தத் தாண்டவம் செய்தான். சுப்பராயன், “நிலவு நன்றாயிருக்கிறது” என்று சொல்லிவிட்டு, “உன் கல்யாணத்தின்போதும் நல்ல நிலா. கிராமப்பிரதக்ஷணத்தன்றும் விடிய விடிய நிலவாயிருக்கும்; நீ பல்லக்கின் மேல் உல்லாசமாய் ஏறிக்கொண்டு போகும்போது என் நினைவுகூட உனக்கிராது” என்று சொல்ல, ஸ்ரீநிவாசன், “உன் நினைவில்லாமலா? உன்னைவிட்டு எனக்குச் சந்தோஷமுமா? உன்னைவிட எனக்கு இவ்வுலகத்தில் மனமொத்த சினேகிதன் யார்?” என்று கண்ணில் நீர்ததும்ப மறுமொழி சொன்னான். அதற்குள் சுப்பராயன், “நான் பரிகாசமாய்ச் சொன்னேன்” என்று சொல்ல, ஸ்ரீநிவாசன், ‘இன்னொரு சங்கதி கேட்டாயா? சிறுகுளத்துக்கு நெல்லிக் குப்பத்துக் காமாக்ஷி அம்மாள் போயிருந்தாளாம். எனக்கு நிச்சயம் பண்ணியிருக்கிற பெண்ணை அவள் சிற்றம்மை தன் தமையன் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டுமென்று கட்டாயம் பண்ணினார்களாம். அந்தப் பெண் என்னைத் தவிர வேறொரு வரையும் கலியாணம் செய்துகொள்ளமாட்டேன் என்று சொல்லுகிறதாம்” என்றான். சுப்பராயன், “இப்பொழுது முதல் என்ன அறிவு! என்ன அன்பு!” என்று சொல்ல, ஸ்ரீநிவாசன் சந்தோஷத்துடன், “இந்தப் பெண் எனக்குக் கிடைக்குமானால் நான் அதிர்ஷ்டசாலிதான்” என்றான். 

ஸ்ரீநிவாசன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் சிறு குழந்தையானதினால் உலகத்தை அறியான். பெண்டாட்டி என்றால் ‘பாக்குக் கொடுத்த பாக்கியவதி, புஷ்பம் கொடுத்த புண்ணியவதி, சந்தனம் கொடுத்த சரஸ்வதி’ என்ற இவ்வித எண்ணந் தவிர, வேறொன்றும் அறிய அவனுக்கு வயது போதாது. ஆயினும், ‘காதலரிருவர் கருத்தொத்து ஆதரவு பட்டதே இன்பம்’ என்ற சில உண்மைகளை அவன் புஸ்தகங் கள் மூலமாய் அறிந்திருந்தான். பாக்கியிருந்த பத்து நாளும் அவனுக்குப் பத்து யுகமாகவே இருந்தன. பகல் வந்து விட்டால், ‘பொல்லாப் பகலே, போகாப் பொழுதே’ என்று நிந்தித்துக்கொண்டு எப்பொழுது இரவு வருமென்று எதிர் பார்ப்பான். இரவு வந்துவிட்டால், ‘செல்லா இரவே, சிறுகா இருளே’ என்று நிந்தித்துக்கொண்டு எப்பொழுது விடியுமென்று ஏக்கமுறுவான். எந்தப் பாடமானாலும் சரி, எந்தக் கணக்கானாலும் சரி, எல்லாம் கலியாணத்துக்குப்பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று போட்டு விட்டான். இவனுக்கும் சுப்பராயனுக்கும் ரிப்பன் பாக்கெட் பஞ்சாங் கத்தை வைத்துக்கொண்டு பொருத்தங்கள் பார்ப்பதும் (ஜோதிஷரிடம் கேட்க வெட்கம்) அதிர்ஷ்ட சக்கரங்களைச் சோதிப்பதுமே தொழிலாக இருந்தது. இப்படியாக நாட் களும் கழிய, முகூர்த்தத்திற்கு இரண்டு நாளைக்கு முன் சிறுகுளம் போவதற்காகச் சுமார் இருபத்தைந்து வண்டிகள் ஸ்ரீநிவாசன் வீட்டு வாசலில் வந்து நின்றன. 

9 – கல்லுளியும் குப்பிப் பாட்டியும்

முத்துஸ்வாமி அய்யர் பெரிய பணக்காரர் என்று நாம் முன்னமே பலமுறை சொல்லியிருக்கிறோம். பாகம் செய்து கொள்ளும் காலத்தில் அவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் ஆஸ்தியிருந்தது. சில பெரிய வியாபாரங்களில் அவர் இறங்கி அவைகளைச் செவ்வையாக நடத்தி வந்தபடியால், சில வருஷங் களுக்குள் அவர் லக்ஷத்து ஐம்பதினாயிரம் ரூபாய் ஆஸ்திக்கு அதிபதியானார். ஆகையால் அந்தப் பக்கத்தில் அவர் பெரிய பணக்காரரென்று பிரசித்தி பெற்றிருந்தார். அதுவும் தவிர நல்ல கொடையாளி என்றும், அநேக விஷயங்களில் அதிக தேர்ச்சி பெற்றவரென்றும், நல்ல புத்திமான் என்றும் அவர் பெயர் எங்கும் பிரபலமாயிருந்தது. அவர் கையால் சம்மானம் பெறாத தக்க வித்வான்கள் இந்த ராஜதானியிலேயே கிடை யாது. சிறுகுளத்தைச் சுற்றியுள்ள எல்லாக் கிராமங்களிலும் பொழுது விடிந்தது முதல் அரவம் ஒடுங்கும் வரை முத்துஸ் வாமி அய்யர் வீட்டுக் கலியாணப் பேச்சைத் தவிர, வேறு பேச்சுக் கிடையாது. 

மேலைப்பாளையம் என்ற கிராமத்தில் ராமஸ்வாமி அய்யர் என்ற ஒரு பிராமணர் சாப்பிட்டுவந்து வெற்றிலை போட்டுக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்தார். அப்பொழுது சாப் பிட்டு விட்டு வெற்றிலையைக் கையிலெடுத்துக் கொண்டு யார் வீட்டுத் திண்ணையில் பேச ஆளிருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு தன் மேல் வேஷ்டியைக் கீழே போட்டுக் கொள்வதற் காகச் சித்தமாய் கையில் எடுத்துக்கொண்டு அப்பய்ய தீட்சதர் என்பவர் வந்தார். ராமஸ்வாமி அய்யர் அவரைக் கண்டதும் “வாருங்கள்” என்றார். தீட்சதரும் கை வேஷ்டி யைக் கீழே போட்டுக்கொண்டு, “அப்பாடா,” என்று உட்கார்ந்தார். அய்யர், “இப்பொழுதுதான் சாப்பிட்டாச் சாக்கும்’ என, தீட்சதர், “இத்தருவாய் ஆயிற்று’ என்றார். பிறகு சற்று நேரம் மௌனம். பிறகு அய்யர், “தேதி 13ஆய் விட்டாற் போலிருக்கிறதே. சிறுகுளத்துக்கு எப்பொழுது பயணம்? நீங்கள் வருகிறீர்கள் அல்லவா?” என, தீட்சதர் வெற்றிலைபோட்டு மென்றுகொண்டே, ‘நான் வருகிறது. சந்தேகந்தான். சனியன் ஒரு சிரார்த்தம் வந்து குறுக்கிட்டுக் கொண்டு இழவு கொடுக்கிறது. இல்லாவிட்டால் இங்கே என்ன சாதிக்கிறோம். போய்விட்டு வருவதைவிடத்தான் என்ன?” என்றார். அதற்கு அய்யர், “அடடா நீங்கள் அவ்வளவுதான் கொடுத்து வைத்தது. மூவாயிரம் ரூபாய் பிரத்தியேகமாய் எடுத்துக் கட்டி வைத்து விட்டானாம். கலியாணத்துக்காக. கீவளூர் கந்தன் மேளமாம். அவனுக்கு 200 ரூபா பேசியிருக்கிறார்களாமே! பாட்டுக்கு ராகவய்யர். பெரிய வைத்தி பெரிய யுத்தம் நடக்கும். வேடிக்கை பார்க்க லாம். இது போக இன்னும் வந்து கோவிந்தசாமி ராவ் மிருதங்கத்துக்கு, அப்புறம் வந்து பிடிலுக்கு நடராஜன். இதெல்லாம் சாதாரணமாயிருக்கும். இவ்வளவும் போதாதென்று திருவாரூர் ராஜலட்சுமி சதிர்” என தீட்சதர் வெற்றிலையை விழுங்கிக்கொண்டு, “பேஷ் அவனுக்கென்ன மகாராஜன் லட்சப்பிரபு, ஒரே பெண், அதற்குக் கல்யாணம்” என்றார் அய்யர்.”நீங்கள் தான் வரமாட்டேன் என்கிறீர்களே’ என தீட்சதர், “உன்னைவிட எனக்குப் பத்துபங்கு ஆசை யிருக்கிறது. ஆசையிருந்து என்ன பண்ணுகிறது? இந்த இழவு சிரார்த்தம் ஒன்று வந்து கழுத்தறுக்கிறது. நல்ல நாள் என்றால் அன்றைக்குத்தான் பெண், பெண்டாட்டிகள் ‘தூரம்’ என்று கொல்லையில் உட்காருவார்கள். அதுபோல வந்திருக் கிறது நமக்குச் சனியன் பிடித்த இழவு, இரு பார்ப்போம். 18உ யா முகூர்த்தம்? 18, 19, 20, 21, 22-ந் தேதிவரைக்கும் கலியாணம். இங்கே 19-ந் தேதி சிரார்த்தச் சனியன். அதைத் தொலைத்துக் கொண்டு ஒரேயடியாய் 19-ந் தேதி ராத்திரியே புறப்பட்டால் 20-ந் தேதி காலமே அங்கே வந்துவிடலாம். பார்ப்போம். அப்படித்தான் செய்யவேணும்’ என, ராமஸ் வாமி அய்யர், “அதுதான் சரி, அப்படித்தான் செய்யுங்கள். நான் 16-ந் தேதியே புறப்படுகிறேன்” என்றார். 

இங்கே இப்படியிருக்க, தென்கரை என்ற மற்றோர் கிராமத்தில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் “குட்டைப் பெருச்சாளி’ என்ற பட்டப்பெயர் பெற்ற முத்துவும், ‘கல்லுளி’ என்றும் ‘கடப்பாரை முழுங்கி’ என்றும் பெயர் பெற்ற சுப்பய்யாவும் காலணா மேஜை வைத்து ‘அவுட்’ ஆடிக் கொண்டிருந்தார்கள்.சுப்பய்யா, “இன்னொரு ஆட்டம் போடடீ மகளே போடு” என, முத்து, “ஏதப்பா! அவன் சொன்னாற்போலிருக்கிறது. ஒரு ரூபாய் தோற்றாய்விட்டது. இன்னும் ஆடவா? இன்னும் ஒரு ரூபாயை அவன் சொன்னாற் போல பற்றப் பார்க்கிறாய்! அவன் சொன்னாற்போல உனக் கென்ன?’ என, கல்லுளி, “எவன் சொன்னாற்போல? எத்தனை அவன் சொன்னாற்போல! அந்த அவன் தான் இன்னான் என்று நிரம்ப நாளாய்த் தெரியவில்லை, அவன் போகட்டும். இன்னும் ஒரே ஆட்டம்.யோசிக்காதே, அந்த ஒரு ரூபாய்க்குச் சிறுகுளம் முத்துஸ்வாமி அய்யர் அகத்துக்கு கலியாணத்துக்குத் திருவாரூர் ராஜம் வருகிறாள். அவளைவிட்டு உனக்குச் சந்தனம் பூசிவிடச் சொல்கிறேன். பயப்படாதே, ஆடு” என்றான். 

இது நிற்க,வீரபாண்டியம் என்ற இன்னொரு கிராமத்தில் சில சிறு பிள்ளைகளாய்ச் சேர்ந்து தாயார். தகப்பனார்,வாத்தி யார் இவர்களுக்குத் தெரியாமல் சிறுகுளம் கலியாணத்துக்குப் போய் வருவதாகக் கூட்டுக் கள்ள யே சனை செய்து கொண்டு ஒருவரொருவராய் அந்த ஊர் காளியம்மன் கோயிலில் வந்து சேர்ந்தார்கள். “ஒங்காத்திலே கோவிச்சுக்குவா, ஒன்னாலே நடக்க முடியாது. நீ ஆத்துக்குப் போயிடு” என்று அவர்களால் புத்திமதி சொல்லியனுப்பப்பட்ட கர்மேசுவரன் என்ற ஒரு சிறு பையன் சரசரவென்று வாத்தியாராகிய நாகேசுவர “ஸாரிடம் போய் அவர்கள் திருட்டு யோசனையை வெளி யிடவே, சாப்பிடுவதற்காக இலையில் உட்காரப்போன நாகேசுவர ‘ஸார்’ சாப்பிடாமல் ஒற்றை வேஷ்டியுடன் காளியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டார். அவரைக் கண்டது தான் தாமதம், உடனே பையன்களெல்லாம் சிறுகுள் மார்க்கத்தில் ஓடத் துவங்கினார்கள். அதுகண்டு வாத்தியாரும் “ஏனடா பையன்களா! நிஜந்தானா ? ஓடுவீர்களா? மரியாதை யாய் வந்துவிடுங்கள். இல்லாவிட்டால் வெளுத்துவிடுவேன். வந்துவிடுங்கள். வந்துவிடுங்கள். வந்தால் அடிக்கவில்லை. ஏனடா ஓடுவீர்களா? நிஜந்தானா, நிஜந்தானா?” என்று கூவிக் கொண்டு அவர்கள் பின்னே ஓட, அவர்கள் ” ‘ஆமாம். நிஜந் தான். நிஜந்தான்” என்று சொல்லிக்கொண்டு, 

“நெடுமால் திருமருகா 
நித்த நித்தம் இந்த இழவா
வாத்தியார் சாகாரா
வயிற்றெரிச்சல் தீராதா?” 

என்று பாடிக்கொண்டும் ஓடினார்கள். இப்படி அரை மைல் தூரம் ஓடவே வாத்தியார் பசியால் களைத்து ஓடமாட்டாமல் ஓடி ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டார். பின்னே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு ஓடின பையன்கள் வாத்தியார் விழுந்ததைக் கணடு ‘ஹுய்’ ‘ஹுய்’ என்று சிரித்து ‘வேணும், வேணும்’ என்று சொல்லிக் கொண்டு ஓட்டமோட்டமாய் ஓடி ராத்திரி ஒரு சத்திரத்தில் தங்கி தங்கள் கால் கொப்பளங்களை ஆற்றிக் கொண்டு, மறுநாட் பகல் பத்து மணிக்குச் சிறுகுளம் போய்ச் சேர்ந்தார்கள். வாத்தியாரோ பாவம் நொண்டி நொண்டிக் கொண்டு பட்டினியாய் ஊர்வந்து தன் காலைப் பார்க்கும்போதெல்லாம். “அந்தப் பயல்கள் வரட்டும் சொல்லுகிறேன்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவர்களை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். 

சிறுகுளத்துக்கருகில் கடுகனூர், குள்ளப்புறம், விருதக்கப் பட்டி,சோரனூர் முதலிய சில பிரபலமான கிராமங்கள் உண்டு. அவற்றின் மகாஜனங்களுடைய உத்தியோகம் அபிசிரவணம் சொல்லல், பரிசாரகம் செய்தல், சவண்டி தின்னல், பொய்சாட்சி சொல்லல் முதலியனவாம். இவர்க ளுடைய கீர்த்திக்கு ஒரு அத்தாட்சியாக யாரையாவது இகழ்ச் சியாய் வையவேண்டுமானால், ‘என்னடா,சுத்த குள்ளப்புறத்து பிராமணனா யிருக்கிறாய்!’ என்று சொல்வது வழக்கம். முத்துஸ்வாமி அய்யர் பெண்ணின் கலியாணத்தைச் சிறப் பிக்க எண்ணி இந்தப் பிராமணோத்தமர்கள் தங்கள் தங்கள் வீடுகளில், “அடியேய், சிறுகுளத்து முத்துசுவாமியாத்திலே கலியாணமாம், வர பதினைந்து நாள் செல்லும். ஆத்தைப் பாத்துக்கடீ. என்னடி ஆட்டுமா?” என்று தங்கள் மனைவி மாருக்குத் தாக்கீது கொடுத்துவிட்டு ருத்திராட்சம், விபூதி டப்பி, ஸ்தாலிச்செம்பு, மடிசஞ்சி, பட்டுக்கயிறு ஆகிய இவ்வித உத்தியோக சின்னங்களுடன் சர்வாபரண பூஷிதர் களாய் சிறுகுளத்தை நோக்கிக் கலியாணத்திற்கு ஒரு வாரத். திற்கு முன்னமேயே தங்களுடைய இஷ்டமித்திர சகல பரிவார பந்துக்களுடன் முகூர்த்தத்தை நடத்திவைக்க. நூற்றுக் கணக்காகப் புறப்பட்டு விட்டார்கள். 

இவ்விதமாக, சிறுகுளத்தைச் சுற்றியுள்ள பிரதேச முழுவதும் முத்துஸ்வாமி அய்யர் வீட்டுக் கலியாணப் பேச்சே பேச்சாயிருந்ததுமன்றி, ஒவ்வொரு ஊரிலுமிருந்து சிறு பையன்கள் முதல் வயதுசென்ற பெரியவர்கள் வரை ஒருவரும் பாக்கியில்லாமல் நானாவித ஜனங்களும் வந்து கூடினார்கள். ஊர் முழுவதும் சில நாளைக்கு அல்லோல கல்லோலப் பட்டது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நாலா திக்குகளிலிருந்தும் வண்டிகளும் ஜனங்களும் மேலும் மேலும் வந்து நெருங்கவே, எங்கே பார்த்தாலும் வண்டிக்காடும் மனிதக் காடுமாக இருந்தது, வீட்டுக்கு வீடு நாற்பது ஐம்பது ஜனங்கள் கூடியிருந்தார்கள். இவ்விதமாக ‘காற்றெறி கடலின் களிப்பனோங்கினார்’ என்றபடி சிறுகுளம் சிறிய குளமாயிராமல் இராப்பகல் ஓய்வில்லாமல் ஆரவாரித்த பெரிய கடலாயிருந்தது. 

சம்பந்தி, அவர்களுடைய இஷ்டமித்திர பரிவார பந்து பட்டாளம் பாரி பட்டாளமாயிருந்தது. அவர்கள் அமர்த்தின வாடகை வண்டிகள் 25 போக ராமசுவாமி சாஸ்திரிகளுடைய குமாரர் சிரஸ்ததார் நாராயணய்யருடைய பெட்டி வண்டி ஒன்று, சாஸ்திரிகள் சம்பந்தி கிருஷ்ணய்யர் அகத்து வண்டி இரண்டு, தாசீல் குப்புசாமி அய்யருடைய (சுப்பராயனுடைய தகப்பனார்) பெட்டி வண்டி ஒன்று, டிப்டி கலெக்டர் ராம ராயர் குதிரை வண்டி ஒன்று, இவ்விதமாகக் கூடிய இம் முப்பது வண்டிகளும் விடிந்து பத்து நாழிகைக்குப் பயணம் புறப்பட ஆரம்பித்து, அஸ்தமிக்கப் பத்து நாழிகைக்கு ஊரைவிட்டு நகர்ந்ததையும், அவைகள் இராத்திரி இருட்டிப் போகும்போது கிருஷ்ணய்யர் ‘லாந்தரைக்’ கையில் பிடித்துக் கொண்டு யார் என்ன சொல்லியும் ‘உங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டுச் சேவகர்களுடன் வண்டிப் பாதையைப் பார்த்துக்கொண்டு போனதையும், நொடிகள் பார்த்து வண்டிக்காரர்களுக்கு அவர் எச்சரிக்கை கொடுத்ததையும் கள்ள ஊராகிய நகரி என்ற கிராமம் சமீபிக்கவே, ஓரிருண்ட தோப்பின் வழி போகும்போது வெளிச்சங்களை யெல்லாம் மறைத்துக்கொண்டு குழந்தைகள் வாயைப் பொத்திக் கொண்டு ‘பேசாதே, பேசாதே’ என்று மெதுவாய் எல்லோரும் பேசியதையும், மரத்துக்கு மரம் கள்ளனிருப்பதாகப் பயந்து வண்டிக்காரர்கள்கூட மாட்டை இரைந்து அதட்டாமல் வண்டியை வேகமாய் விட்டதையும், அவ்வூர் தாண்டிய உடனே ‘ஜோ’ என்று மழை பெய்ததுபோல் எல்லோரும் இரைந்து பேசியதையும், வனதேவதைகள் கோவில்தோறும் எல்லோரும் இறங்கி சேவித்துச் சென்றதையும், மறுநாள் ஒரு பெரிய சோலையில் தங்கிச் சாப்பாடு செய்ததையும், அங்கே ஆகாயமட்டு மளாவிய மரங்களைக் கண்டு ஸ்ரீநிவாசன் ஆச்சரியமடைந்து அவற்றின் அருகே ஓடும் நதியில் அவை களின் இருண்ட நிழல்களைக் கண்டு மயிர்க்கூச்செறிந்து ‘இவை களில் குரங்குகளைப்போல ஏறிப்பாய்ந்து ஓடி சஞ்சரிக்க வேணுமென்று ஆசையாக இருக்கிறது’ என்று சுப்பராயனிடம் சொன்னதையும், பிறகு எல்லோரும் புறப்பட்டு பொன்னிற மான மஞ்சள் வெயில் அழகாய் படிந்திருக்கும் தருணத்தில் சிறுகுளத்திற்கு வந்து சேர்ந்ததையும் பற்றி விஸ்தரிப்ப தனாவசியம். 

சம்பந்திகள் வந்து அவர்களுக்கேற்பட்ட ஜாகையில் இறங்கினவுடனே மாப்பிள்ளையை அழைப்பதற்காக இரட் டைக் குதிரை சாரட்டு வந்து நின்றது. அது ஒரு ஜமீன்தாரிட மிருந்து கலியாணத்திற்காக முத்துஸ்வாமி அய்யரால் வர வழைக்கப்பட்டது. அது சிறுகுளத்தில் அறியப்படாத ஓர் பெரிய அதிசயம். முதல் முதல் அவ்வூர் மந்தையில் வந்து சேர்ந்தவன்றைக்கு அவ்வூர் முழுவதும் அதைப் பார்ப் பதற்காக வந்து கூடிப்போய்விட்டது. அது வந்து நின்ற வுடன் ஸ்ரீநிவாசன் அதன்மேல் ஏறிக் கம்பீரமாய் உட்கார்ந்து கொண்டு எல்லா ஜனங்களும் தன்னையே பார்க்கிறார்கள் என்பதில் வெகு திருப்தி யடைந்தவனாய்ச் சென்று மாளிகை போன்ற தன் மாமனார் அகத்து வாசலில் இறங்கி, தக்கபடி உள்ளே யழைத்துக்கொண்டு போகப்பட்டான். கிரமப்படி வேதவேதியர், தேவகணங்கள் இவர்கள் முன்னிலையில் அக்கினி சாட்சியாகச் செய்யப்பட வேண்டிவைகள் எல்லாம் நடந்தன. ‘பம் பம்’ என்று கிருஷ்ணபகவான் பாஞ்ச ஜன்னியத்தைத் துவானம் பண்ணியதுபோல் மேளவாத்தியத் தில் தனக்கு உயர்வு ஒப்பில்லையென்று கீர்த்தி பெற்ற கீவளூர் கந்தன் செய்த மங்கள வாத்தியத்துடன் மாங்கலிய தாரண மும் ஆயிற்று. 

முகூர்த்தம் ஆனபிறகு ஆசீர்வாதத்திற்கு எத்தனமாய் எல்லோரும் வந்திருக்கும தருணத்தில் திடீரென்று, ‘ஐயோ ஐயோ ஐயோ! நீ நாசமாய்ப்போக, உன் கையை முறித்து அடுப்பிலே வைக்க; நீ கட்டையிலே போக, நீ கரியாகப்போக, உன் அப்பன், ஆத்தாள், மாமன், மச்சுனன்,பிள்ளை,பேரன், பேத்தி, அத்தான், அம்மாஞ்சி (அம்மான்சேய்) எல்லோரும் பூண்டோட நாசமாய்ப்போக! ஐயையோ! ஐயையோ!” என்றிப்படி ஓர் பெரிய கூக்குரல் உண்டாக, எல்லாரும் திடுக் கிட்டு வெளியே ஓடினார்கள். “அங்கே, போடீ அந்தப் பக்கம் ழுந்திருக்கிறாளா பார்! போட்டா, அலகில் கையைப் பிடித் திழடா சரசர வென்று. குத்தடா வெட்டடா, அடியடா, தள்ளடா, போகிறாகியா, மிதிக்கட்டுமாடி, அப்புறம் மிதித்தே விடுவேன். இன்னும் நாலுமொத்து மொத்திவிடுவேன்” என்றிப்படி ஒவ்வொருவரும் கூவிக்கொண்டு நின்ற ஒரு பெரிய கூட்டத்தின் நடுவில் கீழே ஊன்றி தரையை நோக்கிச் சாய்ந்த உடலும், நீட்டிய காலும், மேல்துணி நீங்கிய கிழட்டு மார்பும், முட்டாக்கு நீங்கிய மொட்டைத் தலையும் பொக்கை வாயுமாய் கையால் மார்பிலும் மண்டையிலும் மாறிமாறி யடித்துக் கொண்டு மண்ணைவாரித் தூற்றிக்கொண்டு சப்தலோகங்களும் கிடுகிடு என்று நடுங்கச் செய்யத்தக்க பெருங்குரலுடன், “ஐயோ” என்று கதறிக்கொண்டு தாடகை போன் கரிய பெரிய உருவத்தையுடைய ஒரு கிழவி உட்கார்ந். திருந்தாள். அவளுக்குச் சுமார் 80 வயது இருக்கலாம். அவ்வூர் வம்பர் மஹா சபையின் உத்தியோகஸ்தர்களில் அவள் ஒருத்தி. வம்பு, வழக்கு விசாரணையில் கணக்கன், நாட்டாண்மைக் காரன் கூட அவளுக்கு நிகரில்லை. 

ஒரு காலத்தில் மழையில்லாது சிறுகுள முழுவதும் பயிர் கள் எல்லாம் விளையாமல் சாவியாப்போக அவ்வூர் குடிகள் தீர்வையைத் தள்ளிக் கொடுக்க வேண்டுமென்று சர்க்காருக்கு விண்ணப்பம் செய்துகொண்டார்கள். சாவி பார்க்க அனுப்பப் பட்ட தாசில்தார் அவர்கள் விண்ணப்பத்துக்கு விரோத மாகத் தீர்வையை வசூல் செய்யும்படி உத்தரவு செய்துவிட் டார். யார் என்ன மன்றாடியும் அவர் கேட்கவில்லை. இப்படி யிருக்கையில் ஒரு நாள் அவர் மனைவி ஆற்றங்கரைக்கு வந்திருந்தபோது இந்தக் கிழவி அவளிடத்தில் போய் அவள் முகத்தைக் கடித்துவிடுபவள்போல் சமீபத்தில் சென்று கூர்ந்து பார்த்துக்கொண்டு, “நீ யாரம்மா, இந்த தாசிலாய் வந்திருக் கிறானே அவன் பெண்டாட்டியா? ஊர் வாயிலெல்லாம் விழுந் திருக்கிறீர்களே, குஞ்சுங் குழந்தையுமாக க்ஷேமமாயிருக்க வேணடும்!” என, அந்த அமமாள் பயந்து தன் புருஷனிடம் ஆற்றங்கரையில் நடந்த சங்கதியைச் சொல்லி, “நமக்கு ஏதோ சனியன பிடித்திருக்கிறது, அவள் வாயில் நச்சுப்பல் சசயமாயிருக்கிறது. இந்த ஊராருக்கு விரோதம் செய்ய வேண்டாம்” என்று வேண்ட, அவரும் பயந்துபோய் தீர்வை முழுவதையும் தள்ளுபடி செய்ததுமன்றி, அந்த ஊருக்கு ஒரு குளமும் வெட்டிக் கொடுத்துவிட்டுப் போனார். அந்த ஊருக்கு இவ்வளவு பெரிய உபகாரம் செய்த கிழவியின் பெயர் குப்பிப் பாட்டி; அவளுக்குப் ‘பாப்பாபட்டி யகத்து வெட்டரிவாள்’ என்று பட்டப்பெயர். ஏனெனில், சுமார் இருபது வருஷங் களுக்கு முன்னே தன் அயல் வீடாகிய பாப்பாபட்டி சங்கரய்யர் அகத்துக் கொல்லையில் போடப்பட்டிருந்த ஒரு விறகுக் கட்டையை அவள் இராத்திரியில் திருடிவிட்டு மறு நாட் காலையில் அந்த விறகை வெட்ட அரிவாளுக்கு அவர்கள் வீட்டிற்கே போனாள். அவள் திருட்டு வெளியாய்விட்டது. ஆதலால் அதுமுதல் அவளுக்குப் ‘பாப்பாபட்டி யகத்து வெட்டரிவாள்’ என்று பட்டப்பெயர் ஏற்பட்டது. 

அவள் தெருவழியே போகும்போதெல்லாம் அவ்வூர்ப் பிள்ளைகள் (சில சமயங்களில் பெரியவர்கள்கூட) அப்பெயர் வைத்துக் கூப்பிட, அவளுக்கு அசாத்தியமாகக் கோ முண்டாகி அவள் ஏகமாய்த் திட்டுவாள். அப்படிச் செய்யவே பையன்களுக்கு இன்னும் அதிக உற்சாகம். கடைசியாக அப்படிக் கூப்பிடப்படுவதிலும் கோபிப்பதிலும் அவளுக்கே உற்சாக முண்டாகிவிட்டது. பொழுது போகா விட்டால் அவள் வீதி வழிவந்து சும்மா இருப்பவனைப் பார்த்து நீ நல்லவன், ஒன்றும் சொல்லமாட்டாய்’ என்பாள். அவள் எதிரே ‘ஆமாம் பாட்டி’ என்று சொல்லிவிட்டு அவள் கொஞ்ச தூரம் போனவுடனே “பாப்பா பட்டி வெட்டரிவாள்” என்று உரக்கக் கூப்பிட்டுவிட்டு ஓடிப்போய்விடுவான். இவளோ, “ஏனடா கட்டையிலே போவாய்” என்று தன் னுடைய ராமபாணத்தைத் தொடுத்து விடுவாள். கேலிக்காரப் பிள்ளைகள் அவளைப் பார்த்து நான் என்றைக்காவது உன்னை “பாப்பா பட்டி யகத்து வெட்டரிவாள் என் று சொல்லி இருக்கிறேனா பாட்டி?” என்றும், “பாட்டி அவன் உன்னைச் சும்மா பாப்பாபட்டி யகத்து வெட்டரிவாள் என்று சொல் கிறான்” என்றும் சொல்லாததுபோல் சொல்வது வழக்கம். 

இப்பொழுது அவள் இருந்த நிலைமையை முத்துஸ்வாமி அய்யர் பார்த்த மாத்திரத்தில் அறிந்துகொண்டு அவளிடம் வரவே இருபுறமும் ஜனங்கள் விலகினார்கள். நடந்த சங்கதி என்ன வென்றால், அவள் வழக்கம்போல் கிராமப் பிரதட் சணம் செய்துகொண்டு வருபவள்போல் வரும்போது கலியாணத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவன் உள்ளூர்ப் பிள்ளைகளால் தூண்டப்பட்டு அவளைப் பெயரிட்டழைக்கவே, அவள் வழக்கம்போல வைய ஆரம்பித்தாள். அவன் “கலியாணப் பந்தலுக்கருகே வையாதே என, அவள் அதுதான் சமயமென்று, உன் கலியாணமும் கண்டது இன்னொன்றும் கண்டது, உன் கல்யாணத்தில் இழவுவிழ என்று வையவே, அங்கிருந்தவர்களில் ஒருவனுக்குக் கோபம் வந்து அவளைப் போவென்று பிடித்துத் தள்ளினான். அவள் கீழே விழுந்து மறுபடி அதிகமாய் வையவே கூட்டம் கூடி விட்டது. அவள் என்ன பண்ணியும் அவ்விடம் விட்டுப் போகாததால் ஒருவன் அவளை ஓங்கியறைந்தான். அதனால் அவள் பெரிய கூக்குரல் போட்டாள். அதைக் கேட்டுத்தான் உள்ளே இருந்தவர்கள் எல்லாரும் ஓடி வந்தார்கள். 

முத்துஸ்வாமி அய்யர் அவளிடம் சென்று, “இது என்ன பாட்டி இது?” என, அவள், “அப்பா முத்துஸ்வாமி, வந்தாயா மகாராஜனா யிருப்பாயப்பா! இந்தச் சனியன்களெல்லாம் என்னைப்போட்டு மொத்துகின்றன. (அழுகிறதாகப் பாவனை பண்ணிக்கொண்டு) இதோபார் இங்கே காயம், இங்கே காயம்’ என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டு அவள் மார்புப் பக்கம் கொண்டுபோக அவர் கையைப் பின்னிழுத்துக் கொண்டு, “அவர்கள் கிடக்கிறார்கள். நீ நல்லவள், புத்தி சாலி, எழுந்திரு, நல்ல சமயம் பார்த்துக்கொண்டாய்! அகத்துக்குப் போ; நீ என்ன பண்ணுவாய்! உன்னைச் சொல்லக் குற்றமில்லை” என்றார். அவள் ”எனக்குத் தொண்ணூறு வயதாய்விட்டது; எனக்கு அடிபடச் சீவனிருக்கிறதாப்பா, முத்துஸ்வாமி என் தங்கக் குழந்தை, நீ இல்லா விட்டால்” என்று சொல்லி முடிப்பதற்குமுன் அவர் “சரிதான் போ. எனக்கு நடந்த சங்கதியெல்லாம் தெரியும் போ: சரிதான் போ, அந்தப் பக்கம்’ என்று கோபித்துச் சொல்ல அவள் எழுந்திருந்து கொண்டு, “நீ என்னடாப்பா அதட்டுகிறாயே! நீ நல்லவனப்பா, உனக்குச் சமானமா, என் பிள்ளை சொல்லு வான்’ என, அவர் “நல்லவனாயிருக்கக் கண்டுதான் இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கிறது. நீயும் நல்லவள்தான். அப்புறம் பேசிக்கொள்வோம் போ” என அவள் தன் துணிகளைக் கட்டிச் சுருட்டிக்கொண்டு போய்விட்டாள். அவள் போகவே முத்துஸ்வாமி அய்யர் திரும்பினார். 

“இதென்ன இப்படி சகுனத்தடை நேரிட்டது” என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணய்யர், ராமசுவாமி சாஸ்திரிகள் ஆகிய இருவரையும் அவர் பார்த்து அவர் களுடைய யோசனையை அறிந்து சிரித்துக்கொண்டு, ஏன் மாமா உள்ளே போவோமே. இது ஒரு வேடிக்கை. இவள் மாதிரி இன்னும் இரண்டு மூன்று பைத்தியக்காரிகள் உண்டு இந்த ஊரிலே” என்றார். குப்பி செய்கை சகுனத்தடை யென்று முத்துஸ்வாமி அய்யருக்கும் பட்டது. ஆயினும் அவளும் பொன்னம்மாளும் முந்தின நாள் தனித்துப் பேசிக் கொண்டிருந்ததை அவர் பார்த்ததால், இவளை அந்தப் பொன்னம்மாளே தூண்டிவிட்டிருப்பாள் என்பது அவருடைய எண்ணம். ஆயினும் நல்ல வேளையாய் மாங்கலியதாரண சமயத்துக்கே வந்துவிடாமல் நம்மைக் காப்பாற்றினாள் என்று அவருக்குச் சந்தோஷம். அவர் அவளை பைத்தியக்காரி என்ற வுடன் கிருஷ்ணய்யர், “அவள் பைத்தியக்காரிபோல் தோன்ற வில்லையே” என, முத்துஸ்வாமி அய்யரும் சற்று மனங்கலங்கி, ‘அரைப்பைத்தியக்காரி, வந்த காரியம் வேறு. அப்புறம் சொல்கிறேன். தஞ்சாவூராளுடைய சேஷ்டை இது” என்றார். ராமசுவாமி சாஸ்திரிகள், ஆனாலும் இப்படிச் செய்வளா என, முத்துஸ்வாமி அய்யர் அவளா! அவள் எல்லாம் செய்வாள் மாமா! சரிதான் கழுதையை விட்டுத் தள்ளுங்கள். உள்ளபடி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மீனாட்சிதான் காப்பாற்றவேணும். அவள் மேலே பாரத்தைப் போடுவோம். உள்ளே வாருங்கள். (உரக்க) எல்லாரும் உள்ளே வேண்டும். தயவு பண்ணவேணும்” என்று சொல்லிக்கொண்டு எல்லாரையும் உள்ளே கூட்டிச்சென்றார்.

– தொடரும்…

– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.

– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *