(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
4 – சபைச் சிறப்பு
சுப்பு அப்படி அதிக கெட்டவள் அல்ல. நல்ல ஈகைக் குணமுள்ளவள். மற்ற நாட்டுப் பெண்கள் தங்கள் மாமியா ருடன் சண்டை செய்வதைக் காட்டிலும் இவள் தன் மாமியா ருடன் அதிகமாகச் சண்டை செய்வதில்லை. சுக்கிரவாரம், வருஷப் பிறப்பு முதலிய நாட்களில் தன் மாமியார் என்ன சொன்னாலும் அவளுடன் சண்டை செய்யமாட்டாள். ஆனால் மறுநாள் வட்டியும் முதலுமாக யுத்தம் நடக்கும். சில ஸ்திரீகளைப்போல் குடும்ப யுத்தங்களில் அவள் இருபது வருஷத்திய குற்றக் கணக்கை யெடுத்துக் கூறுவதில்லை. பதினைந்து வருஷத்திற்கு முன் ஒரு தினத்தைச் சொல்லி அன்று உனக்கும் உன் மாமியாருக்கும் என்ன நடந்தது என்றால் அவள் திட்டமாய்ச் சொல்ல முடியாது. ஆனால் பதினைந்து வருஷத்திற்கு இப்பால் இருந்தால் சகல சங்கதி களுக்கும் அவள் மனதில் பதிவு ஏற்பட்டிருக்கும். ஆகையால் பதினாலு வருஷத்திற்கு முன் அவள் மாமியார் அவளை ‘ஸாகஸி’ என்று வைத அன்றைக்கு நடந்த சரித்திரத்தைச் சொல்லச் சொன்னால், அன்றைக்கு இன்ன கறி, இன்ன கூட்டு, மோர் புளித்ததா புளிக்கவில்லையா, இன்ன துவையல், யார் சமையல், அதில் இன்ன குற்றம் என்பதை நிர்ணயமாய், அப்பீலுக்கிடமில்லாமல், சொல்லக்கூடிய திறமை அவளுக் குண்டு. இங்கிலீஷ் படிப்பவர்களுக்குச் சுப்பம்மாளுடைய ஞாபக சக்தியில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் எம்.ஏ., எம்.எல்., பரீட்சைகளில் நிச்சயமாய்த் தேறி விடலாம். சுப்பம்மாளுக்கு யார் வீட்டிலாவது கலகம் நடந்தால் போதும், தனக்குச் சாப்பாடுகூட வேண்டாம்!
பகல் பன்னிரண்டு மணிக்கு, அவள் வீட்டில் ஒரு ‘காங்- கிரஸ்’ மஹாசபை கூடும். அது சாயந்திரம் 6 மணிக்கு ஓய்ந்து மறுபடி இரவு 8 மணிக்குக் கூடும். அதற்கு விடுமுறை நாளே கிடையாது. அம்மகாசபைக்குச் சுப்பம்மாள் தான் கனம் பொருந்திய அக்கிராசனாதிபதி அவர்கள். அவளுக்கு அந்தக் கௌரவ பட்டத்தைப் பகிரங்கமாகக் கொடுக்கா விட்டாலும் அப்பட்டத்திற்குரிய அதிகாரத்தை அவள் அனுபவிப்பதுமன்றி அதற்குரிய மரியாதையையும் எல்லாரும் முணுமுணுக்காமல் அவளுக்கே செலுத்தி வந்தார்கள். அந்த மகாசபைக்கு ஏதாவது சமாசாரப் பத்திரிகை உண்டோ என்று சிலர் ஆவலுடன் வினவலாம். ஆனால், அச்சிலடங்காத அனேக சங்கதிகளும், அச்சில் போடக்கூடாத அநேக ரகசியங் களுமே அந்தச் சபையில் முக்கியமாய் நடந்தேறி வந்தபடியால் அதற்குச் சமாசாரப் பத்திரிகை ஒன்றும் கிடையாது. அதற்குப் பதிலாகச் ‘சமாசார ஸ்திரீகள்’ என்று சொல்லத்தக்க சிலர் உண்டு. அவர்களுடைய வேலை என்னவென்றால், பொழுது விடிந்தது முதல் அஸ்தமிக்கிற வரையில் ஊரைச் சுற்றிக் குறைந்தது மூன்று தடவை சந்து பொந்துகள் பாக்கி விடா மல் காற்றைப்போல் நுழைந்து கிராமப் பிரதட்சணம் செய்து, யாராவது புதிதாக அந்த ஊருக்கு வந்தாலும் சரி, யாரகத்திலாவது இரைச்சல் கேட்டாலும் சரி, யார் ரகசியம் பேசினாலும் சரி, யாராவது சிரித்தாலும் சரி, அழுதாலும் சரி, எங்கே என்ன நடக்கிறது என்று ஜாக்கிரதையாய்க் கவனித்து, தேனீக்கள் பற்பல இடங்களிலும் திரிந்து தேன் திரட்டி எல்லாம் ஒருமித்து உண்பதுபோல் தங்களுடைய சமாசாரச் சரக்கு மூட்டைகளை அந்த வம்பர் மஹாசபையில் அச்சபையின் அபிப்ராயத்துக்கு. அவிழ்த்து ஆஜர் செய்ய வேண்டியதே! இந்த உத்தியோகஸ்தர்களுடைய சாமர்த்தியம் அதியற்புதமாயிருக்கும்.
முன்னொரு காலத்தில் ஸ்பானியா முதலிய கிறிஸ்தவ தேசங்களில் மதசம்பந்தமான ஓர் ஸ்தாபனம் இருந்தது. அதன் உத்தியோகஸ்தர்களுடைய தொழில் சாமானியமாக உத்தியோகச் சின்னங்கள் ஒன்றுமில்லாமல் ஒரு மனித னிடத்து சகஜமாய்ப் பேசுவதுபோல் பேசி, சர்க்கார் மதத் துக்கு அணுவளவேனும் விரோதமாக அவன் பேசினாலும் சரி, நினைப்பதாகக் காணப்பட்டாலும் சரி, அவனைக் கச்சேரிக்கு இழுத்து விடுவதே. தந்திர சக்தியில் அந்தப் பிரபலமான உத்தியோகஸ்தர்கள்கூட இந்த வம்பர் மஹாசபையின் சமாசார ஸ்திரீகளுடைய பாததூளியின் விலைபெற மாட்டார்கள். ராஜ்யமாளும் மந்திரிகூட, இவர்களிடத்து இரண் டொரு மாதம் சிட்சை பெற்றுக்கொண்டால் நலமாயிருக் கும். அவர்கள் அறியாத பழமொழி இனி ஔவையாருக்கும் தெரியாது. எவ்வித தந்திரமுள்ள மீனானாலும் தூண்டில், வலை இவைகளால் அவைகளை எப்படிப் பிடிக்கிறார்களோ, அப்படி ஸ்திரீயோ, புருஷனோ, யாவராயினும் சரி, அவர்கள் எவ்வளவு தந்திரிகளானாலும் சரி, அவர்களிடத்திலுள்ள சங்கதி எவ்வளவு ரகசியமானாலும் சரி, அதை இந்த உத்தியோகஸ்தர்கள் கிரஹிப்பது திண்ணம்.
இவ்வாறு கிரஹிக்கிற சக்திமட்டுந்தான் அவர்களுக்குண் டென்று நினைக்கவேண்டாம். கற்பனாசக்தி குறைந்த நமது தமிழ் வித்வான்கள்போல ஒருவர் சொன்னதையே சொல் வதில் அவர்களுக்குச் சற்றேனும் திருப்தியில்லை. பொய்யை நிஜமாக்குவதிலும் நிஜத்தைப் பொய்யாக்குவதிலும், நரி யைப் பரியாகவும் (பரி – குதிரை) பரியை நரியாகவும் மாற்றிய பரமசிவனைக் காட்டிலும் சமர்த்தர். கன்னாபின்னா என்னாமல் கல்லும் புல்லும் உருகப் பேசுவர். ராமாயணத்தை ஒன்றுக் குப் பத்தாய்ச் சொன்ன கம்பரிலும் கற்பனா சக்தியில் சிரேஷ் டர் இவ்வம்பர். வியாச ரிஷி செய்த புராணம் பதினெட்டே. இவர்களோ வீடுதோறும் ஒரு ஸ்தல புராணம் சிருஷ்டிப்பர். அன்பு, புத்தி, சித்தம் இவற்றை மாறுபடச் செய்வதில் நடுவேனிற் கனவு’ என்ற நாடகத்தின் ‘பக்’ என்ற குட்டிப் பேயினும் சிறந்தவர்கள். இச்சமர்த்தர்கள் தங்களைத் தாங்களே உத்தியோகஸ்தராக நியமித்துக் கொள்ளுவார்கள். இவர்கள்தாம் அம்மஹாசபையின் மகா அங்கத்தினர்.
5 – கலக நெருப்பு
இவ்வம்பர் மகாசபையின் அக்கிராசனாதிபதியாகிய சுப்பம் மாளைக் கமலாம்பாள் வீட்டிற்கு நெருப்பு வாங்க வந்த விடத்தில் இவ்வளவு காலம் கௌரவக் குறைவாக நிறுத்தி வைத்த குற்றத்தை இதைப் படிப்பவர்கள் தயவுசெய்து மன்னிக்கவும். எங்கே சுப்பம்மாளைச் சாதாரண சுப்பம்மாள் ஆக நினைத்துவிடுகிறார்களோ என்று பயந்து அவளுடைய அந்தஸ்தையும் அதிகாரத்தையும் விஸ்தரித்து எழுதலானேன். சுப்பம்மாள் திண்ணையில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணய்யர், ராமஸ்வாமி சாஸ்திரிகள் இவர்களைக் கண்டு நாணினவள் போல் ஓரமாக ஒதுங்கி மேற்புடவையை இழுத்துப் போர்த் திக்கொண்டு வெகு மரியாதையாய் தலைகுனிந்து உள்ளே சென்று, கமலாம்பாளை நோக்கி ஏதோ ரகசியம் சொல்பவள் போல் மெதுவாக “உங்கள் மாமாவும் அவர் சம்பந்தி யுமோ?’ என, கமலாம்பாள் ‘வாருங்கள்’ என்று சொல்லி, “அவர்கள்தான், இன்றுதான் வந்தார்கள்” என்றாள்.
சுப்பம்மாள் உள்ளே போகும்பொழுது தலைகுனிந்து சென்றாளே, அவள் எவ்விதம் திண்ணையில் உட்கார்ந்திருந்த வர்களைப் பார்த்திருக்கக்கூடும் என்று சிலர் சந்தேகிக்கலாம். ‘மங்கையர் கண் பெருவிரலைப் பார்க்கும்போதே கடைக்கண் உலகெலாம் சுற்றும்’ என்பது பழமொழி. அப்படியே சுப்பு வும் ஆந்தையின் விழியை யுடையவளானாலும் ‘காதங்கள் கோடி கடை சென்று காணும்’ கருடனிலும் அதிதீட்சண்ய மான கடைக்கண் பார்வையை யுடையவள். இவ்வளவு விசேஷ சக்தி உள்ளது பற்றியல்லவோ அவள் வம்பர் மகா சபைக்கு அக்கிராசனாதிபதியானாள். அவளைப் பற்றியும் அவளுடைய சபையைப்பற்றியும் பின்னால் நாம் பலமுறை சொல்லவேண்டி வரும். சுப்பு நமக்கு முக்கிய தோழி. எப்படி கூனி, சூர்ப்பனகை முதலிய உத்தம ஸ்திரீகள் இல்லா விடில் ராமாயணம் நடந்திருக்க மாட்டாதோ, அப்படியே நாம் எழுதி வருகிற அற்புத சரித்திரமும் சுப்பம்மாள் இல்லா விட்டால் நடந்திருக்கமாட்டாது. ஆகையால் தேவர்கள், ரிஷிகள் முதலிய சாதுக்கள் எல்லாரும் கூனி, சூர்ப்பனகை இவர்களுக்கு வந்தனமுள்ளவர்களாயிருப்பதுபோல் நாமும் சுப்பம்மாளிடத்தில் அதிக விசுவாசமாயிருப்போமாக!
கமலாம்பாள் ‘வாரும்” என்றவுடன், சுப்பு அவளை நோக்கி, “மதுரையிலேதானே கல்யாணம், நல்ல வேளை அம்மா! மனதிற்கு இப்பொழுதுதான் சமாதானப்பட்டது’ என, கமலாம்பாள், “ஏதோ தெய்வ சங்கல்பம் போலிருக் கிறது. நாம் செய்கிறோம் நாம் போகிறோம் என்று நினைப்பதேயல்லாமல் யதார்த்தத்தில் நாம் செய்கிறது ஒன்றுமில்லை” என்றாள்.
சுப்பு, “அவ்வளவுதானே, அப்படித்தான் போகவேண் டும். அதைவிட்டு வீண் வார்த்தை செலவழிப்பதில் கலகத் தைத் தவிர வேறு லாபமுண்டோ?’ என, கமலாம்பாள் “நாம் யாரையாவது தவறிப்போய் ஏதாவது சொல்லிவிட் டோமோ” என்று சந்தேகித்து, ‘வார்த்தையா? என்ன வார்த்தை? எப்பொழுது சொன்னேன்?” என்றாள். சுப்பு, “நீயா! நன்னாயிருக்கு தங்கக்குடம் இன்னால் உனக்கே தகும்’ என்று சொல்லி முடிப்பதற்கு முன் கமலாம்பாள் ‘இவள் யாரோ சொன்ன வார்த்தையை நம்மிடம் சொல்ல வருகிறாள், இதற்கு இடம் கொடுக்கக்கூடாது’ என்று எண்ணி சீக்கிரம் உள்ளே சென்று சுப்பம்மாளுக்கு நெருப்புக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, “பலர் பலவிதம் சொல்லு வார்கள்,ஊர்வாயை மூட நம்மாலாகுமோ? ஈரப்புடவை யுடன் நிற்கிறீர்களே!” என்றாள்.
சுப்பம்மாளுடைய தொழிலும் திறமையும் அவளுக்கு நன்றாய்த் தெரியும். ஆகையால் அவளைச் சீக்கிரம் வெளியே அனுப்பிவிட்டால்தான் க்ஷேமம் என்று எண்ணி ஜாடையாய், “ஈரப்புடவையுடன் இருக்கிறீர்களே” என்றாள்.சுப்பு அந்தக் குறிப்பை அறிந்தாலும் பொன்னம்மாளுக்கும் அவளுக்கும் கலகம் மூட்டுவது அதிக அவசியமாயிருந்தபடியால் அவள் வெளியே பிடித்துத் தள்ளச் சொன்னாலும் போவதில்லை என்று தீர்மானம் செய்துகொண்டு அருகில் இருந்த ஒரு முட்டையை எடுத்து நெருப்பை மூட்டிக்கொண்டு உட் கார்ந்துவிட்டாள். சுப்பம்மாளுக்கும் அவள் சபையாருக்கும் கமலாம்பாளிடத்தில் அதிக வெறுப்பு உண்டு. ஏனெனில், அவள் வம்பர் மகாசபையைப்பற்றிக் கொஞ்சமும் கவனிப் பதேயில்லை. அதில் அரை நாழிகையாயினும் சேர்வதில்லை. அதைச் சற்றும் லக்ஷியம் செய்யாதவள்போல் அவள் நடந்து வந்தாள். மேலும் கணித சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற வித்வான்களுக்குக் கடினமான கணக்குகளைச் செய்வதில் விசேஷ திருப்தி. காம விஷயத்தில் அழுந்தி, கற்பழிப்பதில் கௌரதாப்பட்டம் பெற்ற விட புருஷர்களுக்கு அனுபவிப் பதற்குத் தயாராய்க் கைவசத்திலுள்ள சொந்த ஸ்திரீகளைக் காட்டிலும் குட்டிச்சுவரேறி குடுமி அறுபட்டு வருத்தத்துடன் அடையும் அன்னிய ஸ்திரீகளை அனுபவிப்பதில் அதிக திருப்தி. அதுபோல் சகல வித்தையிலும் கைதேர்ந்த நாரதருக்கும் மேல் என்று பிரசித்தி அடைந்த சுப்பம்மாளுக்குச் சுலபத்தில் சண்டை செய்யும் சாமானிய ஜனங்களுக்குள் சண்டை மூட்டு வதைக் காட்டுவதிலும் சண்டை என்பதையே அறியாத சாது வாகிய கமலாம்பாளைக் கலகத்தில் இழுத்துவிடுவதில் அதிக திருப்தி. எப்பொழுது தனக்கு சமயம் கிடைக்குமென்று அதிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவள் சாதாரண நெருப்பை மூட்டுவதோடுகூட கலக நெருப்பையும் அடியில் வருமாறு மூட்டத் தொடங்கினாள்:-
சுப்பு: “நான் ஆத்தங்கரையில் (சுப்புவுக்கு ரகரம் வாயில் நுழையாது; அதற்குப் பதில் அவள் யகரம்தான் சொல்லுவாள் என்று முன்னமேயே சொன்னோம். அந்தப் பரிபாஷையில் கொஞ்சம் பேசிப் பார்ப்போம்.) பொடவே தோச்சிக்கின்டியிந்தேன். அங்கே குலுக்கி மினுக்கிக்கிண்டு தஞ்சாவூயா வந்தாள். ஒன் ஒய்ப்படி. என் வாயிலே சனி இயுந்தது. வெயுன்னே இயுக்காமல் அவளைப் பாய்த்து உங்க மச்சுனனாத்துத் திண்ணையிலே யாய் உக்காந்தியுக்கியா இன்னு ஒன்னைக் கேக்கல்யோ அதுபோலே கேட்டேன். அதுக்கு அவள், அது யாயுக்குத் தெரியும், எவயுக்குத் தெரியும், கெணத்துத் தப்பளைக்கு நாட்டு வளப்பமேன். ஊய் (ஊர்) எழவெல்லாம் நமக்கு என்னத்துக்கு?’ அப்பிடி இன்னாள், நான் “என்னடி-”
கமலாம்பாள்:’அவள் கிடக்கிறாள் பயித்தியக்காரி; யார் சொல்லுகிறாள். அவள்தானே. இதை ஒரு வார்த்தையாக நீங்கள் சொல்லவேண்டுமா?”
சுப்பு: “ஆமா இந்த சாம்பியாஜ்யத்தைச் சொல்யத்துக் குத்தான் வாசல் விட்டு வாசல் வந்தேன். சொல்யேன் முழுக்கக் கேளு ! அப்புயம் நீயே சொல்லுவே. அவளா பயித்தியக்காயி? பல்லுக்குப் பாம்பிலே விஷம் (பாம்புக்குப் பல்லில் விஷம் என்பதற்குப் பதிலாக) அவளுக்கு ஒடம்பெல் லாம் விஷம்; ஒனக்கும் முத்ச்சாமிக்கும் வெளுத்ததெல்லாம் பாலு: பாகமாயபோது அவள் நகையை தியுடினது, கோட்டுக்கு (கச்சேரிக்கு) இயுத்துவிடத் தெயுஞ்சது. சியுபாடு வித்து வட்டிக்குப் போட்டுகிண்டு இயக்கியது எல்லாம் மயந்து போச்சோ ! என்னமோ அவன் சொன்னாப்ளே இயுக்கு தஞ்சாவூயா, அவதான் பயித்தியக்காயி!”
கமலாம்பாள்! “அவன் புத்திசாலியாயிருப்பது நல்லது தானே, அதனால் நமக்கென்ன தோஷம். போனதெல்லாம் போகட்டும்; இப்பொழுது நாங்கள் இருவரும் இருப்பது போல் அவ்வளவு நேசமாய் உலகத்தில் யார் இருக்கிறார்கள்?”
சுப்பு: “ஆ! என்னமோ சொன்னாப்ளேயியுக்கு யாஜா (ராஜா) பொண்ணே கல்யாணம் பண்ணிக்கிண்ட சம்பந்த மாயிக்கு நீ நல்லவதான் ; ஒன்னே சும்மா இயுக்கவிட்டாத் தானே என்ன கய்வம்! என்ன செயுக்கு!தலே (தலை) கழுத்திலே நிக்கமாட்டேன்கியது. என்னமோ படிச்சி இயுக்கி யாளாம் படிப்பு. அதிசயப் படிப்பு என்ன கேலி, எங்களை-”
கமலாம்பாள்: “என்ன அப்படிச் சொல்கிறீர்கள், நீர் சொல்வது புதிதாயிருக்கிறது எனக்கு. அப்படி எல்லாம் இருக்கமாட்டாளே.’
சுப்பு: “நீ எண்ணிக்கிண்டுய்க்கே. அவபேச்ய பேச்சைக் கேட்டா புழுத்த நாய் குயுக்கே போகாது. நீ ஆயியம் பொன் குடுத்தாலும் உம்பொண் வேண்டாமாம். எத்தனை வக்கணை ! பட்டிக்காட்டுக் குட்டியாம். அழகு இல்லையாம். மூக்கும் முழி யும் கயுப்பணசாமி போலே இயுக்காம். கொயந்தைகள் கண்டா யாத்தியி வேளெலே பயந்து கிண்டூடுமாம்.
(இதெல்லாம் சுப்பம்மாளுடைய சொந்தக் கற்பனைகள்) நம் பெல்லாம் பட்டிக்காட்டுக் கழுதைகளாம். முத்ச்சாமிக்கு. ஏதுடா தம்பியே என்ய விசுவாசம் கடையாதாம். அவன் ஆயோ நாம் யாயோ இன்னு இயுக்கியானாம். இம்புட்டா? ஒனக்கு ஓயு நல்ல பெய்ய (பெரிய) கொடை கொடுத்தி யுக்கியா. அந்த வசவைக் காதிலே கேக்கப் பிடிக்காது. சொன்ன பாவத்திலே அந்த முண்டெ போயாள். கள்ளனுக் குத் தோணும் திருட்டுப் புத்தி. சுப்பியமணியன் புத்தியை செயுப்பாலடிக்கணும். வேண்டாம் வேண்டாம் இங்கய போதே வடக்கே போய் கல்யாணம் பண்ணிக்கிண்டு வந்தானே !”
கமலாம்பாள்: “என்ன இப்படி வைகிறீர்களே ! என்ன சொன்னாள் என்னை?”
சுப்பு: எனக்கு வயத்தை எயியது (எரிகிறது) முத்ச் சாமி கேட்டான்னா பியியை (பிரியை) கட்டி அவளை இழுத்துப் பிடுவன். அவள் புள்ளை (பிள்ளை) இயுக்கேயில்லையோ, அதை செல்லங் குடுத்துக் குடுத்து கம்மண்டாட்டி வளத்த கழிசையை யாக்கி விட்டெயாம். தாய்க்கும் பிள்ளைக்கும் ஆக விடாமல் அடிக்கியயாம். (இதுவும் சுப்பம்மாள் கற்பனை.) நன்னாயிக்கா வசவு? அப்படி சொன்ன முண்டையை நாக்கை அயுத்தா என்ன? கழுவிலே போட்டுட்டால் என்ன! நீ கல்யா ணம் பண்ண ஆயம்பிக்கியது. ஒன் கடுகத்தனை கொயந்தை கயுப்பணசாமி; உன் கல்யாணம் எழவு, நீ ஒளசாயிக் (அவிசாரி) கம்பண்டாட்டி. என்னமாயிக்கு வாயத்தை? அந்த முண்டை தலையிலே நெயுப்பை வைச்சுக் கொளுத்த.”
கமலாம்பாள் “மன்னி! அப்படிச் சொன்னாளா? என்னையா? நேரில் சொல்லுவீர்களா?”
சுப்பு: “ஒன் புத்திக்கு அவள் அவ்வளவா சொல்லு வாள். (கோபித்து) இன்னும் சொல்லுவள். நான் சொல்யது. தான் பொய்; கூட நாகு இயுந்தா, அவளைக் கேள்.எனக்கு என்ன பயமா? எதிய (எதிர) வைச்சிக்கிண்டு சொல்யேன் (சொல்லுகிறேன்). சத்தியம் வேண்ணாலும் பண்ணயேன்.”
கமலாம்பாள்: “உங்களை நம்பலாமா? இப்படியுந்தான் சொல்லுவாளா ஒருத்தி? சிவ சிவ!”
சுப்பு: மயுமானுக்குப் பொண்ணைக் குடுக்கல்யாம் கொண்டே.ஜாதகம் பொயுந்தாட்டா அதுக்கு யாய் என்ன பண்ணுவா? நடு ஆத்தங்கயையிலே ‘பப்ளிக்’ ஆக குடி யானச்சிகள் கூட இப்படி வசுக்கொள்ள மாட்டாளே. முத்ச் சாமி கிட்ட சொல்லி கண்டிக்கச் சொல்லு. இல்லியோ நெடுக இப்படித்தான் பாத்துக்கோ !” என்று சொல்லிவிட்டு கமலாம்பாள் யாதும் பதில் சொல்லு முன்னமே திடீரென்று வீட்டிற்குப் புறப்பட்டு விட்டாள் சுப்பு.
சுப்பம்மாளுடைய பிரசங்கத்தை நான் அப்படியப்படியே சொல்லவில்லை. அவளுடைய ராகமும், குரலும் பேசுகிற கம்பீரமும் எனக்கு வரவே வராது. மேலும் இடையிடையே முத்துமாலையில் வயிரக்கற்கள் பதித்தாற்போலே அனேக பழமொழிகள் அவள் பிரயோகித்தாள். அவைகளைச் சற்று நாணமுள்ள புருஷர்கள் உச்சரிக்கக் கூடப் பயப்படுவார்கள். அவற்றை இங்கே உள்ளபடி எழுதினால் ‘அசுண நன்மாச் செவி பறையெடுத்த போதிலும் என்றபடி கானத்தில் பிரியமுள்ள அசுணம் என்ற பட்சிக்குத் தம்பட்ட ஓசை எப்படியோ அப்படி இலக்கண இலக்கிய ஆராய்ச்சியுள்ள ஸ்திரீ புருஷர்களுக்கு அப்பழமொழிகளும் பிரசாரங்களும் அருவருப்பை யுண்டாக்குமாதலால், இங்கே அவற்றை எழுதாது விட்டேன்.
6 – அந்தப்புர ரகசியங்களும் நிச்சயதார்த்தமும்
சுப்பு போன பிற்பாடு கமலாம்பாள் ‘ஒரு பாவத்தையுமறி யாத நம்மை இவள் ஏன் இந்தப் பாடுபடுத்துகிறாள், ஜாதகம் பொருந்தாவிட்டால் அதுவும் நம்முடைய குற்றமா? அட்டா! இதென்ன வசவு!’ என்று பலமுறை நினைத்து வருத்தப்பட்டாள்.இவ்வாறு உலகத்தில் இவ்வளவு கெட்டவர் களாக மனிதர் இருக்க வேண்டுமா என்று வருத்தப்பட்டுக் கொண்டே கலியாண நிமித்தமாக வந்த கிருஷ்ணய்யர், ராம சுவாமி சாஸ்திரிகள் ஆகிய இருவருக்கும் தக்கபடி உபசார முறைகளில் யாதொரு குறைவுமில்லாமல் பாயசம், வடை, போளி, அப்பளம் முதலிய சம்பிரமங்களுடன் விருந்து செய்தாள். போஜனமானவுடன் ஒரு தூக்கம் தூங்கி எழுந்த பிறகு கடைக்குப்போய் சாமான்கள் வாங்கிக்கொண்டு அன்று சாயந்திரமே நிச்சயதார்த்தம் செய்துவிடுவோம் என்று சொல்லிக்கொண்டு கிழவர்கள் இருவரும் திண்ணைக்கு ஒருவ ராய் நித்திரை செய்யத் தொடங்கினார்கள். முத்துஸ்வாமி அய்யரோ உள்ளே கூடத்தில் கமலாம்பாள் சாப்பிடும் இடத் திற்கு எதிரே ஜமக்காளம் விரித்து ஒரு தூணில் திண்டு போட்டு சாய்ந்துகொண்டு தனது அன்புள்ள மனைவியை நோக்கி உல்லாசமாய் “எங்கள் மாமா தானே வந்திருக்கிறார். உங்கள் மாமா வந்திருக்கிறாரோ? என்ன செய்வாய்” என்று சொல்ல, அம்மாதர் சிரோமணியும் “கண் சிமிட்டைப் பார் எங்கள் மாமா அவர்கள் ஊரிலிருக்கிறாரே? உங்கள் மாமா அவர்கள் ஊரில் இல்லையே, என்ன செய்வீர்கள்,” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுந்தரம் ஓசைப்படாமல் பின்னே தவழ்ந்துகொண்டு வந்து முத்துஸ்வாமி அய்யரை ஒரு மாட்டுத் தும்பால் கழுத்தில் கட்டித் தூணில் இழுத்து மாட்டி விட்டான். முத்துஸ்வாமி அய்யர், அடடா விட்டு விட்டா, நான் போகிறேன் விட்டுவிட்டா” என, சிறுவன் “இல்லையப்பா” என்றான். முத்துஸ்வாமி அய்யர், “நான் இருக்கிறது என்கிறேன், நீ இல்லை என்கிறாயா? இதோ பாரடா தும்பு இருக்கிறதேயடா, அவிழ்த்து விட்டா” என், கமலாம்பாள், ‘அப்படித்தான், அப்படித்தான், வேணும் நன்றாய் கட்டு,’ (தலையை அசைத்துக் கொண்டு)அகப்பட்டுக் கொண்டாரே விட்டலபட்டர் அகப்பட்டுக் கொண்டாரே” என்று பல்லவி பாடத் தொடங்கினாள். அதற்குள் சுந்தரம் கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டு “பை, பை, டுராரி, டுர்ர்ரி நின்று குத்திக் காளை, டுர்ர்ரி” என்றான்.
மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்களில் ‘ஜெல்லிக் கட்டு என்று ஒரு வேடிக்கை உண்டு. அது என்னவெனில், இருநூறு முன்னூறு மாடுகளை ஒரு தொழுவில் அடையப்போட்டு அவற்றை ஒவ்வொன்றாய் கழுத்தில் ஒரு உருமால் கட்டி வெளியில் விட்டுப் பிடிக்கிறதுதான். அது பட்டிக்காட்டு மனிதர்களுக்கு ஒரு பெரிய திருவிழாவாகையால் ஆயிரக் கணக்கான ஜனங்கள் வந்து கூடுவார்கள். ஜெல்லிக்கட்டு என்று சொல்லி விட்டால் போதும், அவர்களுக்கு உண்டாகும் உற்சாகத்திற்கு எதுவும் ஈடு இல்லை. என்ன வேலையிருந்தா லும் அதையெல்லாம் போட்டுவிட்டு சந்தனப் பூச்சென்ன, மருக்கொழுந்து மாலைகளென்ன, சிவப்பு உருமால்களென்ன கோடி வேஷ்டிகளென்ன, இவ்வித சம்பிரமங்களுடன் விரல் களில் எல்லாம் வெள்ளி மோதிரங்களைக் கணக்கில்லாமல் அணிந்துகொண்டு, கையில் சோட்டாத் தடிகளுடன் திரள் திரளாகப் புறப்பட்டு வந்து, மரக்கொம்புகள், வண்டிக் கூடுகள், வீட்டுக் கூரைகள், மதிற்புறங்கள், ரஸ்தாப் பாதை கள் எங்கும் ஏராளமாய் நிரம்பி விடுவார்கள். புருஷர்களுக் குத்தான் இந்த உற்சவம் என்று நினைக்கவேண்டாம். ஸ்திரீகளும், கூர்மையான மூக்குள்ள மனிதர்களைக் கூப்பிடு தூரத் திற்கப்பால் துரத்தத்தக்க மஞ்சளெண்ணெய், வேப்பெண் ணெய் முதலிய ‘வாசனை’த் தைலங்களைத் தடவிக்கொண்டு, செவந்திமாலை, புதுப்புடவை, பாசிமணி, பட்டோலை முதலிய சர்வாபரண பூஷிதராய் புருஷருடன் வேற்றுமை தெரியாது வந்து நெருங்கி விடுவார்கள். பளபளவென்று சீவித் தைலந் தடவிய கொம்புகளுடன் உடல் நிறைய, புஷ்பமாலைகளை ஏராளமாய் அணிந்து, கழுத்தில் உருமாலும் கம்பீரமான நடையும் பயங்கரமான பார்வையும் கொண்டு கண்டோர் ரிஷபராஜர்கள் என்று சொல்லும்படியான உயர்ந்த ஜாதி மாடுகள் தொழுவுக்குள் நெருங்குவதும் அங்கு நின்று உருமால் கொண்டு ஓட்டோட்டமாய் ஓடுவதும், மனிதர்கள் அவற்றின்மேல் உயிரை வெறுத்துப் பாய்ந்து அவற்றைப் பிடிப்பதும், பிடித்து உருமாலைக் கழட்டிக்கொண்டு ஹாய் என்று முடுக்குவதும், மனிதர்களை அவைகள் தூக்கிப்போட்டு விட்டு அலட்சியமாய் ஓடுவதும் நாகரிகமற்ற அந்த மனிதர்களுக்குக் கண்கொள்ளாத காட்சியாயிருக்கும். அம்மாடுகளில் எல்லாம் கூட்டத்தைக் கண்டு வெருண்டு ஓடாமல் நின்று யாயும் மாட்டிற்கு ‘நின்று குத்திக்காளை’ என்று சொல்லுவது வழக்கம். விசேஷ சந்தோஷத்தை யுண்டுபண்ணக்கூடிய நின்று குத்தி பாயும் மாடு ஒன்று வந்துவிட்டால், மூலைக் கொருவராய் அதை ‘டுரி, டுராரி’ என்று கூவிக் கோபமூட்டி வேடிக்கை செய்வார்கள்.
அதுபோலவே முத்துஸ்வாமி அய்யர் கழுத்தில் தும்பைக் கட்டி கமலாம்பாள் ‘பேஷ், பேஷ்’ என்று சிரிக்க, சுந்தரம் அவரை ‘டுர்ர்ரி’ பழக்கினான். அவர் என்ன செய் கிறான் பார்ப்போம் என்று தலைகுனிந்து புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டு சும்மா இருக்க, சிறுவன் “முட்டு அப்பா, முட்டு. நீ தான் மாடாம், முட்டுவாயாம்’ என்று முற்றும் திருந்தாத மழலைச் சொல்லால் சொன்னான். பின்னும் அவர் சும்மா இருந்தார். அவர் மனைவி “அந்த மாடு அப்படித்தான் இருக்கும், இந்தக் குச்சி எடுத்துக் குத்து’ என்று சொல்லவே சுந்தரம் தும்பை இழுத்துப் பிடித்துக்கொண்டு குச்சியை எடுத்து ‘பை பை’ என்று ஓட்டத் தொடங்கினான். அய்யர் “இதேதடா இந்தப் பயல்!” என்று சொல்லிக்கொண்டு சுந்தரத்தைப் பார்த்து “நான் மாடில்லையாம், அம்மாள் தான் மாடாம், இந்தத் தும்பை அவள் கழுத்தில் கட்டு. நீயும் நானும் ஓட்டுவோம்” என்று சொல்ல, சுந்தரம் “ஆமாம் அப்பா” என்று சொல்லி அவர் தும்பை அவிழ்த்து சாப் பிட்டுக் கொண்டிருந்த கமலாம்பாள் கழுத்தில் கட்டி அவளை ஓட்ட ஆரம்பித்தான். கமலாம்பாள் “நான் *பொம்மனாட்டி; நான்தான் மாடா! அப்பாதான் மாடு. (அவரைப் பார்த் துக் கொண்டு) கொழுத்த உருமால் கட்டிக்காளை, அவரை ஓட்டு” என்றாள். சுந்தரம் மாட்டு விளையாட்டை மறந்து, “இதோ பாரு, என் கம்பு பேஷான கம்பு” என்று அவளை அடித்து, “நீ அழு அம்மா, அழு’ என்றான். அவள் “ஆமாடா அப்பா அழுகிறேன்” என்று சொல்லவே பின்னும் அவளை அடித்தான்.
(பெண்-பெண்டாட்டி என்பதே ‘பொம்மனாட்டி’ என்று மருவி வழங்கப்படுகிறது.)
சுந்தரத்தினிடத்திலிருந்த சாமான்களைப் பார்த்தால் வெகு வினோதமாயிருக்கும். ஒரு ஓட்டைக் கொட்டாங்கச்சி, ஒரு கயிறு, ஒரு மாக்கல், ஒரு பென்சில், ஒரு வெள்ளிக்கல், ஒரு உடைந்த பம்பரம், இரண்டு கோலியுருண்டை, ஒரு துணிப் பந்து இதுபோன்ற பல வஸ்துகள் அவனிடத்தில் இருந்தன. அவனுக்கு இவைகளே ஐசுவரியமாக விளங்கின. உத்தியோ கஸ்தர்கள் அடிச்சட்டை, மேல்சட்டை, கைக்குட்டை, கால் நிஜார், ஜோடு, குடை, தலைப்பாகை,கடிகாரம் முதலிய வேஷங்களுடன் கச்சேரிக்குப் போவதுபோல், சுந்தரமும் மாட்டுத் தும்பு, பட்டுக் கயிறு, விசிறிக் கட்டை முதலிய கௌரவச் சின்னங்களுடன் விளையாட்டுக்குப் போவான். முத்துஸ்வாமி அய்யரையும் அவர் மனைவியையும் கண்டு விட்டால் அவனுக்கு வெகு உற்சாகம் வந்துவிடும். அவர்கள் அவனுக்கு முக்கியமான விளையாட்டுத் தோழர்கள். அவனுடன் ‘கண் பொத்துதல்’, ‘மாது மாது’, ‘கிட்டி அடித்தல்’ முதலிய விளையாட்டுக்களை விளையாடும்போது வெகு வேடிக்கையாயிருக்கும்.
அவன் கமலாம்பாளை அடித்தவுடன் கமலாம்பாள் அழுத்தாக பாவனை செய்யவே, அவன் அதிக திருப்தி அடைந்தவனாய் முத்துஸ்வாமி அய்யரிடம் வந்து “துட்டு கொடுப்பா” என்று அவர் முதுகின் மேல் ஏறிக் குடுமியைப் பிய்க்க எத்தனிக்கும்போது கமலாம்பாள் சாப்பிட்டு எழுந் திருந்து கையலம்பிவிட்டுத் தன் பர்த்தாவின் அருகில் உட்கார்ந்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் திடீ ரென்று ஒரு பெருமூச்சு விட்டாள். அவள் மலர்ந்த முகம் மாறியதைக் கண்ட அய்யர், “ஏன் என்ன சங்கதி?” என்று கேட்க, அவள், “ஒன்றுமில்லை” என்றாள். அவர் மறுபடியும் அழுத்திக் கேட்க அவள் தன் மன வருத்தத்தை அவருக்கும் சொல்லி அவரையும் சஞ்சலப்படுத்துவானேன் என்ற எண்ணத்துடன் மறுபடியும் “ஒன்றுமில்லை” என்றாள். அவர் அவளை ‘சொல்லத்தான் வேண்டும். என்று கட்டாயம் செய்தார். அவள் “என்னை யறியாமல் எனக்கு வருத்தம் வருகிறது. இன்று பொழுது நன்றாய் விடிந்தது. நான் சுந்தரத்தை அவன் அம்மாளிடம் போக வேண்டாமென்று போதிக்கிறேனாம். அவனை நான் கைம்பெண் வளர்த்த கழிசறை ஆக்கிவிட்டேனாம். நான் தட்டுவாணிக் கைம் பெண்டாட்டியாம், எனக்குக் கிடைத்த மரியாதை” என்றாள். அவர் சுந்தரத்தைப் பார்த்து ‘இரு’ என்று சொல்லிவிட்டு, ‘அப்படிச் சொன்னது யார்?’ என்று கேட்க, அவள் “யார் சொல்லுவார்கள்? சொல்ல சுதந்தரமுள்ளவர்கள்தான்” என்றாள்.
அய்யர் உடனே முகம் சிவந்து, ”ஆரம்பித்து விட்டாயா ஸ்தலபுராணம் (பல்லைக் கடித்துக்கொண்டு) தெரியுமே உன் சங்கதி. கலகமே பிரதானம்” என்று கோபித்தார். “என்னைச் சொல்லாவிட்டால் உங்களுக்குப் பொழுது போகாது” என்றாள் கமலாம்பாள்.
அதற்கு முத்துஸ்வாமி அய்யர், “பெண்களுக்கே கலகம் தான் தொழில். சுத்த நாய்கள் அப்பா? அதிலும் நீ -” என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் சிரித்துக்கொண்டு, “புருஷர்கள் தான் நல்லவர்கள்-பரம சாதுக்கள்!” என்றாள். அய்யர் அதிகரித்த கோபத்துடன், “ஆமாம், ஆமாம் புருஷர் கள் இப்படித்தான் கோளும் புரளியும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அப்பா! இந்தப் பொம்மனாட்டிகளுடன் சகவாசம் செய்வதைக் காட்டிலும் கழுதை கட்டி மேய்க்க லாம். சீ! ஓயாமல் இதே தொழிலா! நமக்கு நன்றாய் வந்து வாய்த்ததடா சனியன். எது சமயம் என்று பார்த்திருந்து கலகத்தை உண்டுபண்ணுகிறது. கொஞ்சமாவது அறிவிருக் கிறதா பார், கலகக்கழுதை’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு பலவாறு வையத் தொடங்கினார்.
கமலாம்பாள் : (சகிக்கமாட்டாமல் சற்று பதட்டத் துடன்) “எடுத்ததற்கெல்லாம் கோபம் என்றால் அப்புறம் என்ன செய்கிறது?”
அய்யர்: “வாயை மூடு சனியனே. பண்ணுவதை எல்லாம் பண்ணிவிட்டு, எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்கிறேனாம். என்னைப் பைத்தியம் பிடித்தவன் என்று எண்ணினாயோ? அப்படித்தான் ஞாபகம் போலிருக்கிறது! கழுதை, நாசமாப்போகிற சனியன்.”
கமலாம்பாள்: “நான் நாசமாய்ப் போய்விடுகிறேன், அப்புறமாவது நீங்கள் சுகமாயிருங்கள்” என்றவுடன் முன்கோபிஷ்டராகிய முத்துஸ்வாமி அய்யர், “ஆ! இதுதான் தெரியும். போய்விட்டால் குடிகெட்டுப் போகும், பயமுறுத்து கிறாயோ? தொலை சனியனே” என்று ஒரு இடி இடித்து அப்புறம் தள்ளினார். தள்ளவே, பாவம் கமலாம்பாள் கரகர என்று கண்ணீர் விட்டழத் தொடங்கினாள்.
முத்துஸ்வாமி அய்யர் தன் மனைவிமேல் அதிக வாஞ்சை யுள்ளவராயிருந்தும் அவளிடத்தில் ஒரு அற்ப குற்றத்தையும் சகிக்க மாட்டார். உலகத்திலுள்ள ஸ்திரீகள் எல்லோரிலும் அவள் குணம் சிறந்தவளாயிருக்க வேண்டுமென்பதே அவருடைய முக்கிய ஆசை. அவ்வித ஆசைக்கு விரோதமாக அவளிடத்தில் மற்ற ஸ்திரீகளிடத்திலுள்ள குறைவுபோல் ஏதாயினும் ஒரு சிறிய குறையாவது இருக்கிறதாக அவருக்குத் தென்பட்டால், உடனே வெகு கோபம் வந்துவிடும். பெண் களே கெட்டவர்கள் என்பது அவர் அருமையாகப் பாராட்டி வந்த அபிப்பிராயங்களில் ஒன்று. ஆதலால் தன் மனைவி மற்ற ஸ்திரீகள்போல அற்பத்தனமுள்ளவளாகவாவது ‘கோள் சொல்லி’ என்றாவது அவருக்கு ஜாடையாய்த் தென் பட்டுவிட்டால் போதும். அன்றைக்கு அனர்த்தம்தான். அவர் முன் கோபத்தை அவர் மனைவி தவிர, வேறொருவரும் அறியார். சில புருஷர்கள் மற்றவர்களிடத்தில் பழகும் போது சர்வசாந்தமுள்ளவர்களாயிருந்தும், தங்கள் மனைவி யிடத்து தங்களுடைய கோபத்தைக் காட்டுவதை நாம் அனு பவத்தில் கண்டறியலாம். முத்துஸ்வாமி அய்யர் அடிக்கடி தன் மனைவியைக் கோபித்துக் கொண்டாலும் அனேக சமயங் களில் அவள் அந்தக் கோபத்தை மாற்றிவிடுவாள். ஆனால் சிற்சில சமயங்களில் அவளும் மனவருத்தத்தைப் பாராட்டி விட்டால், அவருடைய கோபம் அதிகரித்து, “ஐயோ நாம் வகை மோசமாய்க் கலியாணம் செய்துகொண்டு விட்டோமே!” என்று அவருக்குத் தோன்றும். இது அவருடைய ண விசேஷங்களுள் ஒன்று! ஆனால், அவர் கோபம் சீக்கிரம் அடங்கிப் போய்விடும். சற்று நேரத்திற்கெல்லாம் அவர் மனைவி தன் வருத்தத்தை மறந்து அவரிடம் வலியச் சென்று, அவரைக் குளிர்ந்த வார்த்தைகளால் சந்தோஷிப்பிக்கும் பொழுது, “என் தங்கமே, உனக்கு சமானம் நீதான், இந்த உலகத்தில் என்னைப்போல் பாக்கியம் செய்தவர்கள் யார்!” என்று அவர் அவளிடம் கொஞ்சிக்கொண்டு பேசுவார்.
இவ்விதமாக, இந்த உலகத்தில் நன்மை தீமை எப்படிச் சமமாகக் கலந்திருக்கிறதோ அப்படியே நமது அய்யருக்கு இன்பமும் துன்பமும் கலந்திருந்தது. கமலாம்பாள் தன் ஓர்ப்படி வைத வசவை இவருடன் சொல்ல வாயெடுக்கும் போதே அவள் ஏதேங்கலகம் செய்ய எத்தனிப்பதாக இவர் புத்தியில் பட்டு, இவருக்குக் கோபம் உண்டாயிற்று. அப் பொழுது அந்த அம்மாள் சமயமறிந்து சந்தோஷ வார்த்தை களால் இவர் கோபத்தை மாற்றாததால், அது இன்னும் அதிகரித்தது. அவள் அழத்தொடங்கவே அய்யர் பல்லைக் கடித்துக்கொண்டு, “ஸாகஸம் கூடவா! செய்வதெல்லாம் செய்துவிட்டு அழவும் ஆரம்பிக்கிறாய். பெரிய தெப்பக் குளங்கள் மடை டதிறந்து போய்விட்டன. அழு! மூதேவிக் கழுதை!” என்று மறுபடியும் கையாலடித்து அப்புறம் தள்ள அவள் முன்னிலும் அதிகமாக அழுதாள். அது பார்த்து சுந்தரமும் பயத்தால் பதறிக் கயிற்றைக் கைநழுவவிட்டு தன் பெரிய தாயாரைக் கட்டிக்கொண்டு, தலை குனிந்து கடைக்கண்களால் தனது பெரியப்பாவின் கோபத்தாற் சிவந்த முகத்தைப் பார்த்து அழத் துவங்கினான். இவ்வாறு சிறிது நேரம் செல்லவே முத்துஸ்வாமி அய்யருடைய மனம் சற்றுக் கோபம் நீங்கி இளக ஆரம்பித்தது. அவர் தன் மனைவியை அணுகி, “ஏனடி அழுகிறாய்?” என்று இரண்டு தடவை அதட்டிக் கேட்டுவிட்டு, அவளைத் தன்மேல் சேர்த் தணைத்துக்கொண்டு, “உன்னை யார் இப்பொழுது என்ன சொல்லிவிட்டார்கள். ஏன் அழுகிறாய்? நிஷ்காரணமாய் அழுகிறாயே, இதுதான் எனக்குக் கோபம் வருகிறது. அழாதேயடி. இன்றைக்கு இவ்வளவு போதும் நிறுத்து!” என்று அரை வெறுப்புடன், இவ்வளவு தான் நமக்குப் பிராப்தி’ என்று தன் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, “வேண்டாமடி கமலா, போதுமடி” என்று அவள் கண்களைத் தன் வஸ்த்ரங்களால் துடைத்தார். அவள் அழுகை ஸாகஸமென்றே அவர் எண்ணம்; ஆயினும் அவள் அழுதது அவருக்கு ஹிம்சையாயிருந்தபடியால் அவளை அவர் ஆற்றலானார். அந்த அம்மாள், “என்ன பிழைப்பு இது! இருந்தால் நன்றாயிருக்கவேண்டும். உங்கள் பிரியம் தவறிவிட்டால் அப்புறம் எனக்கு என்ன இருக்கிறது? என் மன வருத்தத்தை உங்களிடம் சொல்லாமல் யாரிடம் சொல்லி நான் ஆற்றிக்கொள்வேன். எனக்கு உங்களை விட்டால் கதி என்ன? தாயார் தகப்பனார் எல்லோரையும் விட்டு நீங்களே பிதாவுக்குப் பிதா, மாதாவுக்கு மாதா, பர்த்தாவுக்கு பர்த்தா என்று அந்தரங்கமாய் பக்தி பாராட்டி, என் வருத்தத்தைச் சொல்ல வரும்போது, நீங்கள் கோபித்துக் கொள்வது எரிகிற புண்ணில் நெருப்பை வைத்தது போலிருக்கிறது. ‘வருத்தப்படாதே’ என்று ஆற்றவேண்டியிருக்க நீங்களே இப்படி உதறி எறிந்தால் அப்புறம் நான் என்ன செய்வேன்? அவள் அப்படி வைதாள் என்றுதானே சொன்னேன். இதில் குற்றமென்ன? அது பொய் நிஜமென்று கூட விசாரிக்காமல் என்னைத் தண்டிக்க ஆரம்பித்தீர்களே!” என்று விம்மி அழ, முத்துஸ்வாமி அய்யர் மனம் உருகி, “கமலா! நான் பண்ணியது தப்பிதமடி, அதை மறந்துவிடு,” என்று சொல்லி அவளை இறுகத் தழுவிக் கொண்டு செல்லமான சில வசவுகளை வைதும் வேடிக்கை யான பேச்சுகளைச் சொல்லியும் அவள் விசனம் மாறாததுகண்டு தானும் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார். அவர் அழு வதைப் பார்த்து சுந்தரம் முன்னிலும் அதிகமாய் அழ, அவள் தன் அழுகையை நிறுத்திவிட்டு, அவருடைய அழுகையை நிறுத்த முயற்சித்தாள். அவர் தேறி செல்லமாய், “என் கமலா! உன்னோடு டூ-விட்டேன், என்னோடு பேச வேண்டாம்” என்று சொல்ல, அவர் மனைவி, “ஏன் என்ன கோபம்?” என்று கேட்கவும், அய்யர் குதூகலத்துடன் கை கால்களை அசைத்துக்கொண்டு, “”உன்னை யார் என்ன சொன்னார்களென்பதை நீதான் சொல்லமாட்டேனென் கிறாயே, போ, போ!” என்று மிருதுவான குரலுடன் சொன்னார். அதற்குள் அவள் அழுதுகொண்டிருந்த சுந்தரத்தை மார்போடணைத்து, “வேண்டாம் போ எவ்வளவு. பிரியம், என் கட்டி மாம்பழம்” என்று சொல்லிக்கொண்டு கண்களைத் துடைத்து, “உன் அம்மாள் உன்னை இங்கே வரக் கூடாதென்று சொல்லுகிறாளே, அவள் அப்படிச் சொல்ல லாமா!” என்றாள். உடனே சுந்தரம், “இதோ பார்! நான் அவளைப் போய் அடித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று குபீரென்று கிளம்பினான்.
சுந்தரம் அவன் வயதுக்கு அதிக புத்திசாலி. அவனை வெட்டினாலும் கமலாம்பாளை விட்டுப் பிரிய மாட்டான். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்குமேல் தன் தாயாரிடம் அவள் பக்ஷணம் வைத்து வருந்தியழைத்தாலும் அவன் போக மாட்டான். கமலாம்பாளைத் தன் தாயார் வைதாள் என்று கேட்டவுடனே அவன் திடீரென்று வெளியிலே கம்பும் கையு மாக ஓடினான். அவனை, “இங்கே வா, இங்கே வா” என்று கமலாம்பாள் வாசல் வரையில் பின்தொடர்ந்தாள். அவன் ஓடியே போய்விட்டான். ஏதாவது கலகம் அவனால் நேரிட்டாலும் நேரிடும் என்ற பயம் கமலாம்பாளுக்கிருந்தா லும் பொல்லாதவளாகிய பொன்னம்மாள் முகத்தில் அவளுக்கு விழிக்க இஷ்டமில்லாததால், வாசலுக்கு அப்புறம் அவள் அவனைப் பின்தொடரவில்லை.
சுந்தரம் தன் வீட்டுக்குள்ளே போனவுடன் ரவிக்கை தைத்துக்கொண்டிருந்த தன் தாயாரை, “அம்மாளை ஏனடி கைம்பெண்டாட்டி என்று வைதாய் நீ?” என்று ஓங்கி கையில் வைத்திருந்த கம்பால் அடித்தான். அவள் அடியின் வலியினால் மூர்க்கத்தன்மையடைந்து, “காலாந்தகா! உனக்கு அந்தச் சிறுக்கிதான் அம்மாள். நீ வீட்டை விட்டு வெளியேறு, காலை முறித்துப் போடுகிறேன்,” என்று சொல்லிக்கொண்டு ரவிக்கையைக் கீழே போட்டுவிட்டு அவனைப் பிடித்து, அவன் கம்பை முறித்தெறிந்து ஒரு கயிறை எடுத்துத் தூணில் கட்டி, தயிர் கடையும் மத்தால் கால் வீங்கும்படி அடித்தாள். சுந்தரம் போட்ட கூக்குரலைக் கேட்டு உள்ளே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த சுப்பிரமணிய அய்யர் திடுக்கிட்டு எழுந்து, “என்னடி கொலைபாதகி” என்று வர, அந்த ராக்ஷஸி, “இன்றிரவு அவர்கள் வீட்டு நித்தியஸ்ராத்தத்துக்கு (நிச்சயதார்த்தம் என்பதற்குப் பதிலாக போனீர்களோ பாருங்கள்!” என்று ஒரு பெரிய அதட்டாய்ப் போட பிராமணர், பாவம் கை கால் நடுங்கி, வாய் குழறி தூரத்தில் நின்றுகொண்டு, “குழந்தையை ஏனடி அப்படி கட்டினாய்?” என்று கேட்டார். “போங்கள் உங்கள் பாட்டைப் பார்த்துக் கொண்டு. கைம்பெண்டாட்டி என்று சொன்னேனாம் நான், பொய்யும் புளுகும், குழந்தை கொள்ளிக்கட்டை கையில் தடியைக் கொடுத்து வைது அடித்துவிட்டு வரச் சொல்லி யிருக்கிறாளே சாமர்த்தியச் சிறுக்கி! அவளல்லவோ பொம்ம னாட்டி! இது ஜடம் என்னை அடக்க வந்துவிட்டது. தூங்கு போ, ராத்திரி நிச்சயஸ்ராத்தத்துக்கு உங்கள் அப்பனாணை போகக்கூடாது!” என்று மரியாதையாகப் புருஷனைப் பார்த்துச் சொன்னாள்.
அப்போது ஒரு ஸ்திரீ உள்ளே வந்தாள். அவள் பெயர் நாகு. வம்பர் மஹாசபை அக்ராசனாதிபதியான சுப்பம்மாள், தான் காலையில் கமலாம்பாள் வீட்டில் மூட்டிய கலக நெருப்பு எவ்விதம் எரிகிறது என்று பார்த்துவரும்படி தன் உத்தியோகஸ்தர்களுள் ஒருத்தியாகிய நாகுவைப் பொன்னம் மாளிடம் ஒற்றாய் (வேவு பார்க்க) அனுப்பினாள். இவள் பிரசங்கத்தை நாம் காலையில் ஆற்றங்கரையில் கேட்டோ மல்லவா? பொன்னம்மாள் முத்துஸ்வாமி அய்யரை, ‘புருஷக் கைம்பெண்’ என்று இகழ்ச்சியாய் வைதாள் என்றும், கமலாம் பாளைத் ‘தட்டுவாணிக் கைம் பெண்டாட்டி’ என்று வைய வில்லை என்றும், ஆனால் சுப்பு பின் சொன்னவிதம் கமலாம் யாளிடம் சொல்லியிருக்கிறாள் என்றும் நாகுக்கு நன்றாய்த் தெரியும். அவள் உள்ளே வந்தவுடன் ‘அடி பாவி’ என்று, கதறிக்கொண்டு, கூச்சலிட்டழுது கொண்டிருந்த குழந்தை யின் கட்டை அவிழ்த்துவிட்டாள். பொன்னம்மாள் அவனை, “போடா உள்ளே” என்று வாசலில் போகாதவண்ணம் தடுத்துக்கொண்டு, “நாகு! என்னைக் கைம்பெண்டாட்டி என்று வைது அடித்துவிட்டு வா என்று இந்தக் கொள்ளிக் கட்டையைக் கம்பும் கையுமாய் அனுப்பியிருக்கிறாளே ஒரு பொம்மனாட்டி, நான் வைதேனாம், என்னை வந்து இந்த சின்ன எமன் கேட்கிறது!” என்றாள். நாகு ரகசியம் சொல்லுபவள் போல அவளுடைய காதில் மெதுவாய், “நீ அவளுடன் இன்றைக்கா பழகுகிறாய், எனக்கு அவள் சமாசாரம் வெகு நாளாகத் தெரியுமே!” என்றாள். இவ்விதம் இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இதற்குள் பாவம் சுப்பிரமணிய அய்யர், ராத்திரி நடக்கும் நிச்சயதார்த்தத்திற்குப் போகாமல் எவ்விதம் தப்புகிறது. போனால் இந்த ராக்ஷஸியினுடைய விரோதம்; போகாவிட்டாலோ தமையனுடைய விரோதம். அவர் என்ன தான் செய்வார்? அவர் நித்திரை இந்த விசாரத்தில் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்து போய்விட்டது. ஒரு வேளை “இவள் கிடக்கிறாள்; தமையன் பிதாவுக்குச் சமானம். அவர் என்மேல் வைத்திருக்கிற பிரியத்திற்கு நான் போகாம லிருக்கலாமா?” என்றும், அடுத்த நிமிஷத்தில் “இவள் நம்மை மறந்து விடுவாளே, அப்புறம் வீட்டுப்பக்கம் நமக்கு வேலை யில்லை’ என்றும் யோசிப்பார். இப்படி அஸ்தமிக்க மூன்று நாழிகை மட்டும் யோசனை செய்துவிட்டு ‘ஓஹோ நிச்சய தார்த்த காலம் சமீபித்து விட்டதே! தெய்வமே என்ன செய்வேன்! ஒரு உபாயமும் தோன்றவில்லையே! பொன்னம் மாளைக் கேட்போமென்றால், ‘ஜடம்,பயங்கொள்ளி’ என்று வைது திட்டுவாளே ராக்ஷஸி, இருக்கட்டும்” என்று தனக்குள் இவ்வாறு யோசனை செய்தபிறகு தம் மனைவியிடம் போய், “நான் அண்ணாவகத்துக்குப் போகாமலிருக்கக்கூடாது; போகத்தான் போவேன் உனக்கென்ன வெறுமனே” என்றார். அதைத்தானே இன்று பார்க்க வேணும்; நானும் இங்கேயே இருக்கிறேன். எப்படித்தான் போகிறீர்கள் பார்ப்போம்!” என்று அந்தப் பிடாரி கண்டிப்பாய் பதில் சொன்னாள். அப்பொழுது அய்யர், “நீயும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு எங்கேயாகிலும் போய்விடு; நானும் அண்ணா வீட்டுக்குப் போகவில்லை, என்னை உள்ளே விட்டுக் கதவைப் பூட்டிவிட்டுப் போய்விடு!” என்றார். அதற்குப் பொன்னம்மாள், “நான் இங்கேயே தானிருப்பேன். நீரும் (மரியாதையாக) வீட்டை விட்டு வெளியேறினீரோ, காலை முறித்துவிட்டேன். பத்திரம்” என்று கூறவும் சுப்பிரமணிய அய்யர், “என்னடி, போடி. விளையாடாதேடி, அப்புறம் வீண் பொல்லாப்பு வரும். நீ கதவைச் சாத்திக்கொண்டு போடி” என்றார். அம்மாள், “என்ன, ‘ஞஞ்ஞமிஞ்ஞ சும்மா இங்கேதானே கிட” என்றதும் அய்யர் பல்லையிளித்துக் கொண்டு அவளைக் கெஞ்சாத- வண்ணம் கெஞ்சி, வெளியே கதவைப் பூட்டிப் போகச் சொன்னார். அவள் அப்பொழுதும் போயிருக்கமாட்டாள். ஆனால் சில விசேஷ சமாசாரங்கள் வம்பர் மகாசபையில் தெரியப்படுத்தவேண்டிய தவசியமா யிருந்தது. ஆதலால் அவள் கதவைப் பூட்டிக்கொண்டு அப்படியே சபைக்குச் சென்றாள். அய்யர் கோட்டான்போல் விழித்துக்கொண்டு உள்ளே தனியாக உட்கார்ந்திருந்தார்.
இது நிற்க, பெரிய வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த கிழவர்கள் இருவரும் எழுந்திருந்து முத்துஸ்வாமி அய்யருடன் நிச்சயதார்த்தத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். சிறுகுளத்திலுள்ள எல்லா ஜனங்களும் முத்துஸ்வாமி அய்யர் வீட்டுக் கூடத்தில் வந்து கூடினார்கள். ஆனால், சுப்பிரமணிய அய்யரை மாத்திரம் காணோம். முத்துஸ்வாமி அய்யர், “யாரடா *சுப்புளி! சுப்பிரமணியனைப் பார்த்துக்கொண்டு வா, முட்டாள், சமயத்துக்கு எங்கேயோ போய்விடுகிறான்” என்றார்.
(சுப்பு பிள்ளை என்பது சுப்புளி என மருவி விட்டது. அவன் பெயர் வேம்பு.)
வம்பர் மஹா சபைக்குப் போயிருந்த பொன்னம்மாள் அன்று நடந்த புராணம் முழுவதையும் சவிஸ்தாரமாய் அரங் கேற்றிய பிற்பாடு சபையைவிட்டு வீட்டுக்கு வந்து தானும் தன் மைத்துனர் வீட்டிற்குப் போகாததற்கு உபாயம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் கதவைத் திறந்து சுப்பிர மணிய அய்யரைக் கையைப்பிடித்துச் சரசர என்று இழுத்து ஒரு பாயின்மீது படுக்கச்செய்து, நாலைந்து துப்பட்டிகளை அவர் மேலே போர்த்தி, அவரிடம், “யாராவது கூப்பிட வருவார் கள், அப்பொழுது உமக்கு ‘ஒரு தலைவலி’ என்று நான் சமா தானம் சொல்லியனுப்பிவிடுகிறேன். நாமிருவரும் போக வேண்டாம்” என்றாள். சுப்பிரமணிய அய்யர் நமக்கு தெய்வம்தான் பொன்னம்மாளாய் வந்திருக்கிறது என்று மகிழ்ந்து, “ததாஸ்து” என்றார்.
சுப்புளி வருகிற காலடி அரவம் கேட்கவே, சுப்பிரமணிய அய்யர் பலமாய் அலட்டத் தொடங்கினார். அவர் மனைவி, அய்யர் தலையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு, ‘பொறுத் துக் கொள்ளுங்கள், என்ன செய்வோம், படுவதெல்லாம் நாம் தானே படவேண்டும்” என்று சமாதானம் சொல்லிக் கொண் டிருந்தாள். சுப்புளி என்ற அதிசய நாமத்தையுடைய தூதன் உள்ளே வந்தபொழுது அய்யர் கோலத்தைக் கண்டு வருத்த முற்று என்ன உடம்பு?’ என்று சமிக்ஞை செய்து கேட்டான். அய்யர் ஏதாவது தாறுமாறாய் உளறி விடுவார் என்று பயந்து பொன்னம்மாள் விரைவாய், “இத்தனை நாழிகை வெளியிலே போய்விட்டு இப்பொழுதுதான் வந்தார். வந்ததுதான் தாம் தம். திடீரென்று கீழே அலறிக்கொண்டு விழுந்தார். நான் துவையலரைத்துக் கொண்டிருந்தேன், ஓடி வந்து என்ன வென்றேன். அப்பா! தலைவலி என்று சொன்ன வார்த்தை தான். ஒரு நாழிகையாய் ஓயாமல் இந்த அலட்டல்தான், ஏன் என்று கேட்பாரைக் காணோம்! நான் தனியாயிருந்து போராடு கிறேன். நிச்சயதார்த்தம் என்ன கல்யாண முகூர்த்தமா? இன்றைக்கில்லாவிட்டால் நாளை வெள்ளிக்கிழமை ஆகாதா? அதுகூட நாம் யார் சொல்வதற்கு! ஆனால் தம்பி வர வேண்டுமென்பது அவசியமா? நடக்கட்டும். நான்கூட வருவதற்கில்லையே என்று எனக்கிருக்கிற வருத்தம் எனக்குத் தெரியும். சம்பந்திகள் தான் கூப்பிட வரவில்லை. அண்ணா வாவது நினைத்துக்கொண்டாரே. வேம்பு நீ நல்ல பிள்ளையப்பா. அவர்கள் சொல்லாமல்கூட நீ கூப்பிட வருவாய்; உனக்கு சமானமா?” என்று சொன்னாள். சுப்புளிக்கு ‘தீச்சன் தலையில் புளியம் சாத்துக்கூடையை வைத்த’ கதையாய் நம்மையல்லவோ இவ்வளவு புகழ்கிறாள் என்ற சந்தோஷம் உண்டாய் திக்கிக்கொண்டு, ‘உஉ உண் மை- மை- மைச்சனர் எ-எ-எங்கேயீன்னார், நானா ஆஞ கூ கூ கூப்ட வந்தேன்” என்று சவுக்கத்தில் பல்லவி சங்கதிகளுடன் மறு மொழி சொன்னான். இந்தத் திக்குவாய்ப் பாண்டியன் மறு மொழி சொல்லிவிட்டு வீட்டிற்குப் போவதற்குள் அங்கே நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. வருகிற சித்திரை மீ 18உ திங்கட்கிழமை என்று கலியாண முகூர்த்தம் பார்த்தாகி விட் டது. ஆனால் முத்துஸ்வாமி அய்யருக்கு மட்டும் ஒரு விசாரம். அதென்னவெனில் நம்முடைய தம்பி நிச்சயதார்த்தத்துக்கு ஒரு தலைவலியைச் சம்பாதித்துக் கொண்டான். கலியாணத் துக்கு என்ன சாக்கு சம்பாதிப்பானோ? ஒரு வேளை ஜுரம் ஏதாவது வந்துவிடுமோ என்பதே!
– தொடரும்…
– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.