(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.
அத்தியாயம் 31-33 | அத்தியாயம் 34-36
34 – பிரம்மானந்த சுகம் – ஓர் அதிசய சம்பவம்
இவர்கள் நிலைமை யிவ்வாறாக, சச்சிதானந்த சுவாமிகளும் முத்துஸ்வாமியரும் பின்னும் சில சிஷ்யர்களுமாக ஜீவன் முத்தி க்ஷேத்திரமாகிய காசிமாநகரை யடைந்து அங்கே ஹனுமந்த கட்டத்தினருகே ஒரு மடத்தில் தங்கி னார்கள். சச்சிதானந்த சுவாமிகள் காசியில் வெகு பிரபலம். அவ்விடத்தில் அவருடைய சேவைக்காகக் காத்திருப்பவர்கள் அனேகர். அவர், மத்தியில் காணப்படாது, மறுபடியும் வந்திருக்கிறார் என்ற செய்தி பரவினவுடனே திரள் திரளாய் ஜனங்கள் வந்து சேவித்தார்கள். அவ்வாறு சேவித்தவர்களில் சச்சிதானந்த சுவாமிகளுடைய வைபவத்தையும் முத்துஸ்வாமி பய்யருடைய ஆனந்த நிலைமையும் கண்டு புகழாதவர் களில்லை. குழந்தைகளெல்லாம் பிரம்மானந்த ஸ்வரூபராகிய சுவாமிகளிடத்தில் வெகு பிரியம். குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும்போதும், வரும்போதும் அவரிடம் வந்து அவர் அவர்களுக்காகச் சேகரித்து வைத்திருக்கும் தேங்காய் பழங் களை வாங்கி வழி நெடுகத் தின்றுகொண்டே போகும். மற்ற வேளை மடத்தில் வந்து கூச்சலிட்டு விளையாடும். அப்படி விளையாடியும் அந்த மகானுடைய நிஷ்டை கலையாது இருப் பதைக் கண்டு ஆச்சரியப்படும். இரண்டு வயது, மூன்று வயது, நாலு வயதுக் குழந்தைகளெல்லாம் அவர் தோள் மேலும், தலை மேலும், கால் மேலும், கை மேலும் ஊறிக்கொண்டே யிருக்கும். அவரை அந்தக் குழந்தைகள் ‘தாத்தா’ என்று அழைப்பது வழக்கம். முத்துஸ்வாமியய்யரும் அவர்களிடத்தில் சுவாமிகள் போலவே பட்சம் பாராட்ட, அவரும் அவர் களுக்கு ‘மாமா’ ஆய்விட்டார். குழந்தைகள் அவருடைய தோள் மேலுமேறிக் குதிக்கத் தொடங்கின சுவாமிகளுடைய உபதேச பலத்தினால் குழந்தைகளெல்லாம் அவருக்குப் பிரம்ம ஸ்வரூபமாய்த் தோன்றும். அவ்வாறு தோன்ற கடவுளுடன் பிரத்தியட்ச ஸரஸம் செய்வதுபோல் அவர் அவர்களுடன் விளையாடி வந்தார். அக்குழந்தைகள் எல்லாரிலும் துரைசாமி என்னும் ஒரு குழந்தைமேல் அளவிலா பிரியம் ஏற்பட்டது. அக்குழந்தை லட்சணமாயிருந்ததினால் மாத்திரமல்ல, அதனுடைய முகவிலாசத்திலும் செய்கையிலும் பிர்ம்மதேஜஸ் தீர்க்கமாய்ப் பிரதிபலித்ததால் அக்குழந்தையுடன் அவர் ஸாட்சாத் கோபாலனைக் குழந்தையாய்ப் பெற்ற வசுதேவர் போலக் களித்து விளையாடினார்.
இப்படியவர் நிஷ்டையிலும் வியவகாரத்திலும் தன்னை மறவாது சுகப்பட்டுக்கொண்டு இருக்கும் நாட்களுள் ஒரு நாள் திடீரென்று அவருடைய மடத்துக்குள் இரண்டு பிரா மணரும் ஒரு சூத்திரனுமாக மூன்று பேர் சேர்ந்துவந்து அவரைச் சேவித்தார்கள். அவர்களைக் கண்டு முத்துஸ்வாமி யய்யர் ஆச்சரியப்பட்டு நிற்க, அவர்கள் மூவரும் “சுவாமி, நாங்கள் செய்த அபராதத்தை மன்னித்தருள வேண்டும்” என்று வேண்டினார்கள். அவர்களுள் சூத்திரனாயிருந்தவன், “சுவாமி, நான் செய்த குற்றத்துக்கு இது ஒரு பரிகார மாகாது என்று சொல்லி, கூட வந்த பிராமணர்களிடம் வாங்கி பாங்கு நோட்டுகளாக ஒரு பெரிய திரவியக் குவியலை அவருடைய பாதத்தில் சமர்ப்பித்தான். அவ்வாறு சமர்ப்பித் தவன் நமது பழைய சினேகிதனாகிய பேயாண்டித்தேவனே. அவன் வடதேசங்களில் சென்று கொள்ளையிட்டுச் சில வருஷங் களுக்குப் பின்னர் தன்னுடைய எதிராளியான முத்துஸ்வாமி அய்யருடைய நிலைமையைக் கண்டு வருவோம் என்று சிறுகுளத்துக்கு வர, ஊர் முழுவதும் மதியை யிழந்த இரவு போலவும், கணவனை யிழந்த கைம்பெண்ணெனவும் ஒளி மழுங்கி, அருளிழந்து கிடக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு அதன் காரணத்தை விசாரிக்க, அவ்வூர் அரசர் போல விளங்கிய அய்யரவர்களுடைய குடும்பம் நிலைகுலைந்து, சின்னாபின்னப் பட்டுப்போனதைக் கேட்டு, அதற்குத் தான் காரணமானதை யும் நினைத்து, மிகவும் மனவருத்தமடைந்து, எவ்விதமும் தான் செய்த தீங்குக்குப் பரிகாரம் செய்து விடுவதென்ற பெருந் தன்மையான வைராக்கியத்துடன் முத்துஸ்வாமி அய்யரைத் தேடிப் புறப்பட்டான்.
ஊருக்கு ஊர் உளவு விசாரித்துக்கொண்டு செல்லுகை யில் ஒரு நாளிரவில் ஒரு வீட்டு வாசற்றிண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். நடுநிசிக்குமேல் அவ்வீட்டுள இருவர் ஒருவர்மேல் ஒருவர் கடுங்கோபத்துடன் கலகப் படுவது அவன் காதில் விழ, அவன் தூக்கத்தை உதறிவிட்டுக் கவனிப்பானாயினான். கவனிக்கவே அவ்விருவரும் பம்பாயில் முத்துஸ்வாமியுய்யருடைய பெருந்திரவியத்தைக் கூட்டுக் கொள்ளையடித்து ஊர் விட்டோடிய திருட்டுப் பிராமணர் களென்றும், அத்திரவியத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் அவ் விருவரும் தர்க்கிததுக் கொண்டிருப்பதாயும் அறிந்து, தந்திர மாய் அக்கணமே அவ்வீட்டுள் புகுந்து போலீஸ் உத்தியோ கஸ்தனைப் போல நடித்து அவர்களைக் கலக்க, அவர்கள் கலங்கி அவன் கையிலகப்பட்டார்கள். பிறகு பணத்தைச் சொந்தக்காரரிடம் சேர்த்துவிட்டால் அவர்களைச் சர்க்கார் தண்டனைக்குக் காட்டிக் கொடுப்பதில்லை என்று அவர்களுக்குச் சத்தியம் செய்துகொடுத்து அவர்களை யிட்டுக்கொண்டுபோய் பணம் புதைத்து வைக்கப்பட்டிருந்த இடம் சென்று அதைக் கைப்பற்றிக்கொண்டு மூவருமாகக் காசியை யடைந்து, முத்து ஸ்வாமியய்யர் தங்கியிருந்த மடத்துக்கே வந்து சேர்ந்தார்கள். திடீரென்று இழந்த திரவியமனைத்தும் குவியலாய்த் தன்னெதிரே வரப்பெற்றும் முத்துஸ்வாமியய்யர் நிர்விகற்ப மான மனோ லட்சணத்தை யடைந்த முக்தரானதினால் கடவுளு டைய அருளை வியந்து திரவிய முழுவதையும் தானம் செய்து விடும்படி பேயாண்டித் தேவனுக்கு அனுமதி கொடுத்தார். அதைக் கேட்டு உள்ளேயிருந்த சச்சிதானந்த சுவாமிகள் ‘அது உன் செல்வமல்ல, மற்றவர்களுக்காக நீ அதைப் பத்திரப் படுத்தும்படி கடவுள் உனக்கு அனுப்பியிருக்கிறார். அதை எடுத்து வை!” என்று ஆக்ஞாபிக்க, குரு ஆணையை மதித்து அவரும் அப்படியே செய்தார்.
சிறிது நேரத்துக்கெல்லாம் முத்துஸ்வாமி அய்யருடைய முக்கிய சினேகிதனாகிய குழந்தை துரைசாமியும், அவனுடைய தகப்பனார் ராமசேஷய்யரென்பவரும் அவ்விடம் வந்து அவரைச் சேவை செய்து உட்கார்ந்தனர். அருகிலிருந்த பேயாண்டித்தேவன் அவ்விருவரையும் சிறிது நேரம் கூர்ந்து பார்த்து பிறகு ராமசேஷய்யரை நோக்கி சுவாமி, அடியேன் வந்துவிட்டேன். குழந்தைக்கு உரியவர் எதிரவே இருக்கிறார். தங்களுக்கு அவ்வளவுதான் பிராப்தம்” என்று சொல்ல, ராம சேஷய்யர் திடுக்கிட்டு, தன்னுடன் பேசியது பேயாண்டித் தேவனென உணர்ந்து அவனுடைய க்ஷேமத்தையும் எதிர் பாராத வரவையும் விசாரித்து, கிலேசத்துடன் “யார் குழந்தைக்கு உரியவர்?’ என்று கேட்க, “குழந்தை யார் மடி யில் இருக்கிறதோ அவர்கள்தான்” என்று பேயாண்டி முத்து ஸ்வாமி அய்யரைக் காட்டி மறுமொழி சொன்னான். இவ்வுரை காதில் படுமுன்னமே ராமசேஷய்யருக்குக் கண்ணீர் பிரவாக மாகப் பெருகியது. அழுதுகொண்டே அவர் முத்துஸ்வாமி அய்யரைப் பார்த்து “சுவாமி தங்களுடைய குழந்தையாம். வளர்த்த வாஞ்சை என்னை விடவில்லை.குழந்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி வெளியே போக ஆரம்பிக்க, முத்துஸ்வாமியய்யர் கடவுளுடைய நாடகத்தை யும், மனிதரது அக்ஞானத்தையுங் கண்டு, வியந்து அவரைக் கைப்பற்றி யிழுத்து “முன்போலும் தங்கள் குழந்தையேதான்; என்னுடையதானாலென்ன தங்களதானால் என்ன” என்று உபசாரங்கள் சொல்லி அவரைத் தேற்றி துரைசாமியை ‘நடராஜா’ என்று அருமையாய் அழைத்து பெற்ற என்னைக் காட்டிலும் வளர்த்த அவர் பெரிய பிதா என்று நயந்து சொல்லி தன் மனத்துக்குள் ”சுவாமி! என்ன காரியத்துக்கோ இந்த உன் தந்திரம்’ என்று எண்ண. உள்ளேயிருந்த சச்சிதா னந்த சுவாமிகள் வெளியே வந்து குழந்தை நடராஜனையும் முத்துஸ்வாமி அய்யரையும் பார்த்து ‘கடவுள் செயலுக்கு ‘ததாஸ்து’ சொல்லுவதே நம்முடைய தொழில், நமக்காக வேண்டியதொன்றுமில்லை” என்று தன் சிஷ்யருக்கு எடுத்துக் கூறினார். பிறகு பேயாண்டித்தேவன் தான் சொக்குப்பொடிக் காரி ஒருத்தியை அனுப்பிக் குழந்தையைத் தந்திரமாய்க் கைப்பற்றிக் குதிரை மீது வைத்தோடியதையும், குழந்தை யில்லாமல் தவித்துக்கொண்டிருந்த ராமசேஷய்யருடைய வேண்டுகோளுக்கிசைந்து ஆயிரம் பொன்னுக்கு அவ்வருமைக் குழந்தையை விக்கிரயம் செய்ததையும், தற்செயலாய் அவர்களை இங்கு சந்தித்ததையும் சவிஸ்தாரமாய்ச் சொல்ல, எல்லோரும் கடவுளுடைய திருவருளைக் கொண்டாடினார்கள். பேயாண்டித்தேவன் ராமசேஷய்யரைநோக்கித் தங்களுடைய ஆயிரம் பொன்னையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன், யோசிக்க வேண்டாம்” என்று சொல்ல, அவர் “நானுள்ள வரையில் இந்தக் குழந்தையை விட்டுப் பிரியாதிருக்க வரம் வாங்கித் தருவாயாகில் ஆயிரம் பொன்னுக்கு ஆயிரம் லட்சம் பொன்னாகக் கொடுத்ததுபோல” என்று அழுது சொல்ல, முத்துஸ்வாமியய்யர் “பயப்படாதேயுங்கள், குழந்தை தங்களதே, தங்களதே” என்று தைரியம் சொன்னார்.
35 – ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!’
அம்மையப்ப பிள்ளை, கமலாம்பாள். லட்சுமி, சுந்தரம் முதலானவர்கள் பல ஊர்களில்லைந்து காசிக்கே கடைசி யாய் வந்து ஓர் வீட்டில் தங்கியிருந்தார்கள். சில நாள் தங்கியிருந்த பிறகு, ஒருநாள் கமலாம்பாள் அவ்வீட்டில் வீணை யொன்றிருந்ததைக் கண்டு, பகவானைப் பற்றிப் பாட வேண்டுமென்று ஆசையுண்டானதால், லட்சுமியைக் கொஞ்சம் தேற்றி, உபசாரம் சொல்லி, அந்த வீணையை யெடுத்துப் பாடும்படி வேண்ட, அவளும் அரைமனதுடன் இசைந்து, *வீணையைக் கையிலெடுத்து, சுருதிகூட்டிப் பாடத் தொடங்கினாள்.
அகமேவு மண்ணலுக்கென் னல்லலெல்லாஞ் சொல்லி
சுகமான நீபோய்ச் சுகம்கொடுவா பைங்கிளியே.
ஆருமறியாமலெனை யந்தரங்கமாக வந்து
சேரும்படியிறைக்குச் செப்பிவா பைங்கிளியே.
ஆறாத கண்ணீர்க்கென் னங்கபங்கமானதையும்
கூறாததென்னோ குதலைமொழிப் பைங்கிளியே.
என்று விடியுமிறைவாவோ வென்றென்று நின்ற
நிலையெல்லாம் நிகழ்த்தாயோ பைங்கிளியே.
எந்தமடலூடுமெழுதா வென்னிறை வடிவைச்
சிந்தைமடலாலெழுதிச் சேர்னோ பைங்கிளியே.
கண்ணின் மணிபோலின்பங் காட்டியெனைப் பிரிந்த
திண்ணியருமின்னம் வந்து சேர்வாரோ பைங்கிளியே.
என்றிப்படிப் பாடி வரும்பொழுதே கமலாம்பாள் கனவில் தோன்றிய ராமனைக் குறித்துக் கண்ணீர் பெருக்கினாள். பாட்டைக் கேட்டவர்கள் பைங்கிளிக் கண்ணியினினிமைக்கும்
*குறிப்பு :- வீணை பூரண வாத்தியம் என்பது பிரசித்தம். சுத்த சத்வமான அதனுடைய அழகிய நாதத்துக்கு எதுவும் ஈடில்லை. இவ்வாத்தியம் நமது ஸ்திரீகளுக்குள் அருமையாகி வருவது மிகவும் பரிதாபமான விஷயம்.
பாட்டின் திறமைக்கும் உருகியழுதார்கள். பாடிக்கொண் டிருந்த லட்சுமியோ தன் கணவனுக்குக் கண்ணிதோறும் கண்ணிதோறும் தூதுவிட்டுத் தூதுவிட்டுத் துக்கத்தால் பாட மாட்டாது முகமீது துணிபோட்டுக் கண்ணீரால் நனைந்திருந்த வீணையைக் கைவிட்டுக் கீழேவைத்துக் கோவென்று அலறி அழுதாள்.இப்படி இவர்கள் கரை தெரியாத துக்கக் கடலுள் மூழ்கியிருக்கும் காலத்தில் ஒருநாள், தாங்கள் தங்கியிருந்த ஜாகைக்குக் கொஞ்ச தூரத்துக்குள் திரிகால ஞானியாகிய சச்சிதானந்த சுவாமிகள் என்று ஒரு பெரியவர் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைத் தரிசக்கும்பொருட்டு அம்மையப்ப பிள்ளை, ஜானகியம்மாள், கமலாம்பாள் இம் மூவருமாகப் புறப்பட்டுச் சென்றார்கள். இவர்கள் போய்ச் சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களுடைய ஜாகையின் வாசற் றிண்ணையில் இரண்டு சிறுவர் வழிப்போக்காய் வந்து உட்கார்ந்தார்கள்.
அவர்களுள் பெரியவன்: “காசிக்கு வந்திருப்பது மெய்யானால் இவ்வளவு அலைந்துமா அகப்படமாட்டார்கள்? சிதம்பரத்தில் நமக்குக் கொடுக்கப்பட்ட கடிதங்கள் பொய் யென்றல்லவோ ஆய்விட்டது. கல்யாணத்தில் எப்பொழுது அவ்வளவு கெட்ட சகுனங்கள் நேரிட்டதோ அப்பொழுதே எனக்கு நம்பிக்கையில்லை. இனி ஊருக்குத் திரும்பவேண்டியது தான்.”
மற்றவன்: “ஊரிலென்ன வைத்திருக்கிறது எனக்கு, நீ மட்டும் போ. பாவம் எனக்காக நீயும் வீணலைச்சலலைகிறாய். நான் அவர்களுக்காகக் கயாவில் சிரார்த்தம் செய்துவிட்டு எனக்கும் சிரார்த்தம் செய்துகொண்டு விடுகிறேன், நீ சீக்கிரம் புறப்படு.”
முன் சொன்னவன்: “உன்னை விட்டு ஊரில் எனக்கு வெகு வாழ்வோ! இரண்டுபேரும் இவ்வூரிலேயே இறப்போம். காசியிலிறந்தாலும் கதியுண்டு.”
மற்றவன்: “ஏற்கெனவே உள்ள பழி ஒன்று போதா தென்று உன் தாய், தகப்பனார், பெண்டாட்டி யிவர்கள் பழியும் எனக்கு வேண்டுமா?”
முன் சொன்னவன்: “உன்னைவிட அவர்கள் இருவரும் எனக்குப் பெரிதில்லை; இங்கேயே இருவரும் இறப்போம் வா.’
மற்றவன்: “சுவாமி விசுவேசுவரா, உனக்கு இது சம்மதமா!” என்று உரக்கக் கூவி “சரி இங்கே உட்கார்ந் தால் எப்படி!” என்று சொல்ல இருவருமாய்க் கீழேயிறங்க ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது உள்ளேயிருந்த லட்சுமி தமிழ்ப் பேச்சா யிருக்கிறது, தன் நாயகன் குரல்போலுமிருக்கிறது என்று திடுக்கிட்டு, சுந்தரத்தை யழைத்து “வாசலில் யார் பார்” என்று சொல்ல, சுந்தரம் ஓடிவந்து வாசலில் பார்க்க, தனது அத்திம்பேர் ஸ்ரீநிவாசனாயிருக்கக் கண்டு, சந்தோஷத்துடன் ‘அத்திம்பேரே’ என்று கூவினன். அதைக் கேட்டு ஸ்ரீநிவாசனும், சுப்பராயனும் திடுக்கிட்டுத் திரும்பி சுந்தரத் கைக் கண்டு அவனைத் தட்டிக்கொடுத்து “இங்கேயா இருக்கி றீர்கள், அக்கா எங்கே?” என்று கேட்க, சுந்தரம் சந்தோஷப் பெருக்கால் பேசமாட்டாது உள்ளே கை காட்டினான். உட னே ஸ்ரீநிவாசன் விரைந்து உள்ளே செல்ல, லட்சுமி எதிர்கொண்டு ஓடிவந்து அவனை இறுகத் தழுவி மூர்ச்சித்தாள். ஸ்ரீநிவாசன் அவளை இறுக மார்புறத் தழுவி ஆனந்தத்தால் கண்ணீர் பெருக்கினான். சுப்பராயன் சுந்தரத்தைத் தழுவிக் கொண்டு விம்மினான். நெடுநேரம் சென்ற பிறகு, லட்சுமி மூர்ச்சை தெளிந்து, பிரக்ஞைவந்து, தன் நாயகரத்தினத்தை மறுபடியும் மறுபடியும் பார்த்துப்பார்த்து, இப்பொழுது மறு ஜனனமும், மறு கல்யாணமுமாதலால் தனது பரிமளமான அதரத்தின் முத்தங்களால் மறுபடியும் மணமாலையிட்டு, தன்னைத் தேடி நொந்துவந்த அவயவங்களுக்குக் கண்ணாலும், கையாலும், முகத்தாலும் ஒற்றி ஒற்றி வேது செய்தாள். “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ” என்றபடி ஒருவரை ஒருவர் தன்னிலும் அன்னியமாக முன்னிலையில் வைத்துப் பேசக்கூடாதபடி, முகத்தோடு முகமும், கண்ணோடு கண்ணும், கையோடு கையும்,உடலோடு உடலும்,மனத் தோடு மனமும் ஒன்றுபட்டு இருவரும் மாறிப் புளகாங்கித மடைந்து ஈருடலுக்கு ஒருயிராகிய ஸ்ரீநிவாசன் லட்சுமி இவர்களின் நிலைமையை என்னென்று சொல்வேன்!
இறந்தனர் பிறந்த பயனெய்தினர் கொலென்கோ!
மறந்தன ரறிந்துணர்வு வந்தனர் கொலென்கோ!
துறந்தவுயிர் வந்திடை தொடர்ந்தது கொலென்கோ!
அல்லது கண்களையிழந்து குருடாய் உழல்பவர் திடீரென்று காட்சி பெற்றார்கள் எனவோ, அல்லது பகவா னுடைய கிருபைக்காக நெடுநாள் கொடூர தபசு செய்பவர் திடீரென்று சாட்சாத்காரமாய் அக்கடவுளைக் கண்ணாரக் கண்டார்களெனவோ!
இவர்க ர்களுடைய நிலைமை யிவ்வாறாக, சச்சிதானந்த ஸ்வாமிகள் கமலாம்பாளைக் கண்டவுடனேயே அவளுடைய முகவிலாசத்தையும், கம்பீரத்தையும், சாந்தத்தையும் பார்த்து அவள் தன் சீஷருடைய பத்தினியென ஏதோ எண்ணம் எழ, விரைந்து வந்து, தனது இருகையையும் அவள் சிரமேல் வைத்து “தீர்க்க சுப மங்கலிபவா” என வாழ்த்தி “மகாலெட்சுமியென்றால் உன்னைத் தவிர வேறில்லை” என்று கொண்டாட,வணங்கி நின்ற கமலாம்பாள் சுவாமிகளை நிமிர்ந்து பார்த்தாள். அருகே நின்ற முத்துஸ்வாமியய்ய ருடைய முகம் தென்பட்டது. உடனே கமலாம்பாள் விரைந் தோடி அவர் பாதத்தில் வீழ்ந்து மூர்ச்சித்தாள். முத்து ஸ்வாமியய்யரோ “கடவுளே, உன் மாயை அகாதமா யிருக்கிறது. சிரிப்பதென்றும், அழுவதென்றும் எனக்குத் தெரியாது. நான் இரண்டும் செய்யாமல் உன் பிரபாத் தையே புகழ்வேன்’ என்று ப்ரம்மத்தில் லயித்துப் பரவச மானார். இவர்கள் இப்படி ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதே ஸ்ரீநிவாசன், லட்சுமி, சுந்தரம். சுப்பராயன் முதலியவர்களும் மடத்திற்கு வழியை விசாரித்துக்கொண்டு வந்து விட்டார்கள். வரவே ஏசு கல்யாணமாய்விட்டது. பலபேருடைய பலநாள் துயரம் பகவானுடைய கிருபையால் ஒரே இடத்தில் ஒரு நாழிகையில் நிவர்த்தியாக, சச்சிதானந்த மடம் சாக்ஷாத் சச்சிதானந்த மடமாகவே முடிந்தது. அலைந்ததும் திரிந்ததும், அழுததும் ஏங்கியதும், ஊரூராய் ஓடியதும், வீடு வீடாய்த் தேடியதும் எல்லாம் ஏதோ கனவு போல் மாற, யாவரும் அடங்காத குதூகலத்துடன் ஆனந்தத் தாண்டவ மாடினார்கள்.
36 – ‘பொறுமையுடையோர் சிறுமையடையார்
ஸ்ரீநிவாசன் – லட்சுமிக்கு வடக்கே ஹிமோத்பர்வதத்தைப் போய்ப் பார்த்து வரவேண்டுமென்ற ஆசை. உலகத்தி லுள்ள மலைகளெல்லாவற்றிற்கும் பெரியதாய், பயங்கரமான காம்பீரியத்துடன், சிருஷ்டியின் காட்சிகளில் ஒன்றாகி மகோன்னதமான வைபவத்தோடு விளங்கா நிற்கும் தேவர்கள் வசிக்கத்தக்க ஹிமாலயத்தைக் கண்குளிரக் கண்டுவர அவ்விருவருக்கும் அதிக ஆசை. ஆனால் சமயம் சரியாக இல்லை. ஆனாலும் அம்மலையிற் பிறந்து, பிறந்த இடத்திற்கியைந்த பெருமையுடன் இரு கரையையும் அலை வீசி, ஆர்த்திரைத்து மயிரடர்ந்த சிம்மம்போலவும், திமிள் பெருத்த ரிஷபம் போலவும், மலைக்குணம் நிரம்பிய மதயானை போலவும், கம்பீரமான கதியுடன் அரசன் பவனி சென்றாற் போல, ஊரூரும் சென்று கடலில் கலக்கும் கடவுள் நதியாகிய கங்கையைக் கண்டு அவர்கள், தங்களை ஒருவாறு திருப்தி செய்துகொண்டார்கள். மணல் வீடுகட்டி, அதினடு சோற்றை யுண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல அற்ப விஷயங்களில் ஆயுள்களைச் செலவிட்டு ‘ஊன கந்தனதாக உயிரை ஒடுக்கும் சிறியோராகிய நாம் நம்முடைய எல்லை யைக் கடந்து கடல், காற்று, மேகம்,சூரிய,சந்திர நட்சத் திராதிகள் முதலிய பெரிய வஸ்துகளுடன் மனங்கலந்து உறவாடுவதே இவ்வுலகில் ஒரு பெரும் பாக்கியம் அல்லவா! கமலாம்பாள் முதலிய எல்லோரும் ஒன்றுசேர்ந்து இரண்டு மூன்று நாளுக்கப்பால், கட்சி கட்சியாய்க் கங்காநதியின் வெண்மணலில் வெண்நிலவில், வெண் பொங்கல் முதலிய வைத்து விருந்தாடிப் பின், சிறுகுளம் நோக்கி எல்லாருமாகப் புறப்பட்டார்கள். உத்தரப்பிரதேசம் தாண்டி தக்ஷிணம் வந்தவுடனே தந்தி மூலமாய் யாவையும் அறிந்திருந்த சப்மாஜிஸ்திரேட்டு வைத்தியநாதய்யர், அவர்களுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். அவர்கள் வந்து சேருமட்டுமாவது உயிர் தரித்திருக்க வேண்டுமென்பதுதான் அந்தப்பிரபுவின் கோரிக்கை. ‘காதலொன்றீது மோர் கள்ளின் தோற்றமே’ என்றபடி ஆசைப்பெருக்கால் தன் நினைவுகூட இன்றிக் கண்டோர் யாவரிடத்தும் ‘முத்துஸ்வாமியய்யர் வருகிறார், முத்துஸ்வாமியய்யர் வருகிறார்’ என்று சொல்லி முற்காலத்தில் ராமனை எதிர்பார்த்த பரதன் போல வேதியரையும், தாதியரையும், தன்னையும், தொழுதுகொண் டிருந்த அவர் ஊருக்கு ஒரு மைலுக்கப்பாலேயே பூரண கும்பங்கள், மேள வாத்தியங்கள் சகிதம், அவர்கள் வருகிற செய்தி கேட்டுக் கார்த்திருந்தார்.
சிறுகுளம் முழுவதும் ஆண் பெண் அடங்க அவ்விடத்தில் கூடியிருந்தது. முத்துஸ்வாமியய்யரும் சச்சிதானந்த ஸ்வாமி களும் இரண்டு பல்லக்குகளில் எழுந்தருளினார்கள். மற்றவர் கள் குதிரை வண்டிகள் முதலிய வாகனங்களில் ஏறினார்கள். ஜம்,ஜம்,ஜம் என்று மங்கள வாத்தியங்கள் முழங்கின. அம்மையப்ப பிள்ளை மாத்திரம் ஒரு குதிரையில் ஏறினார். அக்குதிரை வாத்திய கோஷத்தைக கேட்டு வெருண்டோட பிள்ளையவர்கள் அதனுடன் கௌரதையாய் யுத்தஞ் செய்து பார்த்துக் கட்டாமல் ‘கூ கூ’ என்று கூக்குரலிடத் துவக்கினார். பிறகு அவருக்கும் அவர் வாகனத்துக்குமுள்ள வழக்கைத் தீர்த்து இருவருக்கும் பாகம் செய்துவிட்டார்கள். வைத்திய நாதய்யருக்குச் சந்தோஷத்தால் தலைகால் தெரியவில்லை. ஊர் முழுவதும் அல்லோல கல்லோலப்பட்டது. சுவாமிகள் பிரம்மஸ்வரூபமாய் எழுந்தருளியிருந்தார்கள். முத்துஸ்வாமி யய்யர் முதலியவர்கள் வைத்தியநாதய்யர் முதலிய சகலருக் கும் அன்பான முகமன் அளித்து ஊருக்குள் பிரவேசிக்க எத்தனித்தார்கள். ஊர் எல்லையை அவர்கள் மிதித்ததுதான் தாமதம்.
ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம்
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் யாரும்
‘பம்பம்’ என்று சங்கத்தொனியும், ததீம் ததீம் என்ற பேரிகை ஒலியும், ‘ஜம்ஜம்’ என்ற தாளங்களின் ஒலியும், ‘தாம்தாம்’ என்ற மத்தள ஒலியும், மேள வாத்தியத்தின் ஓசையும், பாண்டு வாத்தியத்தின் ஓசையும் வேதியர் கோஷமும், அந்தணர் ஆசியும் ஆனந்தமான உற்சவ கோலத்தை உண்டு பண்ணின. இவ்விதம் உற்சாகத்துடன் ஊரை வலம் வந்து யாவரும் தத்தம் விடுதிகளில் சேர்ந்தார்கள்.
ஜனநெருங்கிய காசியையும் கங்கையையும் மறந்து சிறுகுள மென்ற கிராமத்தில் சிலகாலம் நாமும் தங்குவோம். அவ்வூர் அக்கிரஹாரம், கோயில்,குளம்,நதி, தோப்புகள், மந்தை, மந்தையின் ஒற்றைமரம், கொல்லன் பட்டரை, குத்துக்கல், அரசந்தட்டு, மீன் பாதை முதலிய கிராமச் சின்னங்கள் யாவற்றையும் நாம் மனதுக்குக் கொண்டுவந்து நம் மனோபலத்தால் சிறுகுளத்தைச் சிருஷ்டி செய்து அதில் சற்று வசிப்போம்.
சுவாமிகள் முத்துஸ்வாமியய்யரை இல்லறத்துறவிலிருத்தி ஆசீர்வதித்துக் காசி சென்றார். பொன்னம்மாளுடைய நிலைமையை முத்துஸ்வாமியய்யர் கண்டு பரிதபித்து அவள் நிமித்தம் கடவுளை வேண்டுகிறார். அவளுக்குச் சித்தம் ஸ்வாதீனப்பட்டிருக்கிறது என்று வதந்தி. ஏதோ முன் இருந்ததற்கு இப்பொழுது ‘தெளிவு’ என்பதற்கு ஐயமில்லை. ‘பாப்பா பட்டியகத்து வெட்டரிவாள்’ என்ற குப்பிப்பாட்டி நெடுநாள் வியாதியால் வருந்தி இறந்தாள். சங்கரியம்மாள் கமலாம்பாளுடைய வாழ்வைக் கேட்டு மனம்பொறாது கிணற்றில் விழுந்து மரித்தாள். சுப்பம்மாள் கணவனை யிழந்து உபாதான மெடுத்து வயிறு வளர்க்கிறாள். அவளுக்குக் கண் ஒன்று அவிந்துபோய்விட்டது. ஈசுவர தீட்சிதர் குஷ்ட வியாதியால் வருந்துகிறார். முத்துஸ்வாமியய்யர் இவ்விரு வரும் தனக்குச் செய்த பெரிய உபகாரத்துக்காக அவர்களுக்கு மிகவும் வந்தனமுள்ளவராயிருக்கிறார். சுப்பம்மாளுடைய ஜீவனத்துக்காகக் கொஞ்சம் நிலம் விட்டிருக்கிறார். தீட்சிதருக் கும் அடிக்கடி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார். துஷ்டர் களை யிப்படி ஆதரவு செய்யலாமா என்றால் அவர் “நன்மைக்குப் பிரதி செய்யலாம். தீமைக்கு மட்டும் பிரதி செய்யக்கூடாது. மேலும் நமக்குத் துன்பம் கொடுப்பவர்கள் நமக்குப் பெரிய உபகாரிகள். ஏனெனில் துன்பத்தைப் போல் ஹிதமான சிநேகிதன் யாருமில்லை. எனக்கு அடுத்தடுத்து துன்பங்கள் நேரிட்டிரா விட்டால் நான் இப்பொழுது அனுப விக்கும் பிரம்மானந்தத்தை அடைந்திருக்கமாட்டேன் என்று மறுமொழி கூறுகிறார்.
எதார்த்தத்திலேயே இவ்வுலக இன்பங்களைப் போல் நமக்கு விரோதிகள் வேறு ஒன்றுமில்லை. நம்முடைய நிஜஸ்வரூபத்தை நம்மிடமிருந்து மறைத்து நாளைவரும் நெற் குவியலிலும் இன்றுள்ள பிடி விதை பெரிதென்று விழுங்கி வீணே நாள் கழிக்கும் ‘நீக்ரோ’ ஜாதியாரைப்போல நாம் நாளை அடையச்கூடிய ப்ரம்மானந்த சுகத்தை மறந்து இன்றுள்ள சிற்றின்பத்தில் முழுகி மயங்கும்படி நம்மைச் செய்கின்ற அற்பமாயும், அநித்தியமாயும், பயனற்றதாயும் தமோகுண சம்பந்தமாயும் துக்க கரமாயும் அசுரகுண ஸ்வரூப மாயும், நமக்கும் பிறருக்கும் ஜனனமரண சம்சாரமாகிய அனர்த்த பரம்பரைக்கு ஹேதுவாயும் உள்ள இவ்வகை இன்பங்கள் உயர்ந்தோரால் விரும்பற்பாலனவன்று. இங்கற்றவர்க்கு அங்குண்டு’ என்றபடி அனேகருக்கும் துன்பமே ஒரு பெரிய மோட்ச சாதனமாயிருக்கிறதாதலால், தனவானுடைய தனத்தையும், ரூபவானுடைய ரூபத்தையும் போகத்தில் உல்லாசமாய்க் களித்திருப்பவரது போகத் தையும் கண்டு நாம் பொறாமை கொள்ளாது, அவற்றிற்கு ஆளாகியிருப்போருக் கிரங்கி, துன்ப ரூபமாகக் கடவுளது அனுக்கிரகத்தைப் பெற்றோரைக் கண்டு கைகூப்புவதே இரகசியமான தத்துவ வழியாம். இது நிற்க.
ஸ்ரீநிவாசனும் லட்சுமியும் சௌக்கியமாகவே யிருக்கிறார் கள். அவர்களுடைய இன்பம் தாழ்ந்த சிற்றின்பமல்ல. உதாரணமாக : ஒருநாள் சிறுகுளத்திலிருக்கும்பொழுது சாயந்திரம் ஸ்ரீநிவாசன் ‘கொல்லைப்புறத்திலுள்ள தோப்புக் குள் சென்றான். அஸ்தமனமான சமயம் ஆனதால் சூரிய னுடைய மெல்லிய ஒளி பரவி எங்கும் பொன்னிறமாயிருந்தது. ஸ்ரீநிவாசன் அந்திப் பொழுதின் ஆனந்தமான சாந்தத்தைக் கண்டு களிப்புற்றான். அங்கு ஓர் அழகிய அரச மரத்தில் திவ்வியமான மல்லிகைக்கொடி ஒன்று அன்பாய்ச் சுற்றிக் கொண்டு அபரிமிதமான புஷ்பங்களை ஏந்தி நின்றது. அதைக் கண்டு, ‘பண்டிதன், கொடி, ஸ்திரீ ஆகிய மூவரும் ஆஸ்ரயமன்றித் தனித்து விளங்கார்கள் என்ற வாக்கியம் ஞாபகத்துக்கு வர, அவன் அவ்வரசமரத்தின் கம்பீரத்தையும், யௌவனத்தையும், சாந்தத்தையும், ஆதரவையும், அழகை யும், அப்பூங்கொடியின் இளக்கத்தையும், பசுமையை யும், மிருதுத் தன்மையும், புஷ்ப சம்பத்தையும், மனோக்கிய மான சௌந்தரியத்தையும், அவ்வரசமரத்தை நம்பி, நேசித்து, அன்பாய்த் தழுவி, அலங்காரமாய் நின்ற காட்சியையும் கண்டு பரவசப்பட்டு நின்றான். லட்சுமி அவனை அங்குமிங்கும் தேடிக் காணாது தோப்புப் பக்கம் வர, அவன் மயங்கி நிற்பதைக் கண்டு சந்தடி செய்யாது அணுகி அப்பூங்கொடி அரசமரத்தைத் தழுவி நின்றதுபோல் தானும் அன்பாய் அவனைத் தழுவி நின்றாள். தழுவவே ஸ்ரீநிவாசன் திடுக்கிட்டுத் திரும்பி அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்தான். லட்சுமி அரசமரத்தைக் குறிப்பாய்ப் பார்த்துத் தன் நாயகனையும் பார்த்துப் புன்முறுவலித்தாள். ஸ்ரீநிவாசன் பூங்கொடியை நோக்கித் தன் நாயகியையும் நோக்கிப் புன்னகை செய்தனன். அப்படி நிற்கும்பொழுதே படீலென்று பல மல்லிகை மொட்டுகள் கண்திறந்து மலர்ந் தன. மலர்ந்ததைக் கண்டு ஸ்ரீநிவாசன் ‘உன்னைக் கண்டதில் அக்கொடிக்கு என்ன ஆனந்தம் பார்” என்று பரிகாசம் செல்ல, செய்தான். அதைவிட்டு அப்பால் சிறிது தூரம் அவர்கள் ஒரு பிரம்மாண்டமான ஆலமரத்தைக் கண் டார்கள். அது வானுற ஓங்கி, வளம்பெற வளர்ந்து ஏராள மான விஸ்தாரமுடையதாய் அனேகமான கொடிகளைக் கீழே விட்டு அனேக ஸ்தம்பங்களும், மண்டபங்களும் நிறைந்த ஒரு பெரிய ஆலயம்போல் விளங்கி பரிசுத்தமான காற்று வீசி, அலங்கரித்த தேர்ச் சிகரம்போல சிகரமுடைத்தாய், அணி தேர்ப்புரவி ஆள் பெரும்படையொடு மன்னர்கள் தங்கத்தக்க தண்ணிழல் பரப்பி நின்றது. சூரியன் மலைவாயில் விழுகிற தருணமாதலால், அவனுடைய செங்கிரணங்கள் அந்த ஆல விருட்சத்திற் புகுந்து ரத்தின தீபங்கள் ஏற்றியதுபோல் ஏற்றி விளங்க, அம்மரத்தினுடைய கம்பீரத்தையும், கொடிகளின் வரிசையான அழகையும், சூரியனுடைய ஒளியையும், தரையில் வீழ்ந்த இள நிழலையும், அவ்வடாலயத்தின் மண்டபங்களையும் ஸ்தம்பங்களையும், சிகரத்தையும், தீபங்களையும் கண்டு ‘இது வன்றோ ஆலங்காட்டார் ஆனந்தக் கூத்தாடிய இடம்’ என்று தம் மனதுள் சொல்லி இருவரும் ஒருவரையொருவர் கேளாது ஏககாலத்தில் அம்மரத்தின்கீழ் தலைவணங்கிக் கைக்கூப்பினர். கைகூப்பி ‘உற்ற உடலும் சிந்தைவசமாதமால்’ ஒருவரை யொருவர் விரைந்து தழுவி இருவருமாய்ப் பேசாது பேசி மகிழ்ந்தார்கள்.
இவர்கள் நாள் இவ்வாறு கழிய குழந்தை நடராஜன் சுந்தரத்துடன் ஜோடி சேர்ந்துவிட்டான். அவ்விருவரும் ஆற்றங்கரை, தோப்பு, துறவு, கோயில், குளம் முதலிய இடங்களெங்கும் உல்லாசமாய் ஓடி விளையாடுகிறார்கள். விளையாடுவதுடன் சண்டைய யும் பிடித்துக்கொள்ளுகிறதுதான். சண்டை செய்துகொண்டாலும் மறு நிமிஷமே ராஜியாய் விடும். ஒருநாள் அவ்விருவரும் ஒரு கிட்டிக்கொம்புக்காகச் சண்டை போட்டுக்கொண்டு விட்டார்கள். சில நிமிஷங் களுக்குப் பிறகு நடராஜன் ஒரு விளாம்பழத்தை எடுத்துக் கொண்டு சுந்தரம் இருந்த இடம் வந்தான். வந்து “எங்கப்பா எனக்கு விளாம்பழம் தந்திருக்காளே, உனக்குத் தருவேனோ” என்றான். அதற்குச் சுந்தரம் “நான் எங்காத்திலே ஒரு மொக்கை விளாம்பழம் வச்சிருக்கேனே ; அதை உனக்குத் தருவேனோ, நீ தந்தா நான் தருவேன்!” என, நடராஜன் “நீதான் என்னை அடித்தாயே; இனிமேல் அடிக்கவில்லையென்று சொல்லு தரேன்” என்றான். சுந்தரம் “இனிமேல் அடிக்க வில்லை” என்று சொல்ல, நடராஜன் “கன்னத்தில் போட்டுக் கொள்” என்றான். சுந்தரம் அப்படியே செய்தான். ‘கன்னத் திலே போட்டுக்கொண்டால் போதுமோ, தோப்புக்கரணம் போடணும்; அப்பத்தான் குடுப்பேன்” என்று சொன்னான் பாவம் சுந்தரம், தோம்புக்கரணமும் போட, நடராஜன பழத்தைப் பகிர்ந்து ஒரு பாதியை அவனுக்குக் கொடுத்தான். உடனே இருவரும் வெகு நேசமாய்விட்டார்கள். இப்படி யவர்கள் விளையாடி வர ராமசேஷய்யருக்கு நடராஜனைவிட்டு அரை நாழிகைகூடப் பிரிய மனம் வராது. ஆகையால் அவர்கள் போகும் இடமெல்லாம் கூடவே தாமும் திரிந்து கொண்டேயிருக்கிறார். சிறுகுளத்திலே தகுதியான வீடு நிலம் முதலியன வாங்கி குழந்தை துரைசாமி (நடராஜன்) பெயருக்கு எழுதி வைத்துவிட்டார்.
அம்மையப்ப பிள்ளையவர்கள் சிறுகுளத்திலேயே தங்கி முத்துஸ்வாமியய்யருக்கு ஓர் சிஷ்யரானார். பொழுது போகா விட்டால் அவ்வூரார் அனைவரும் அவரைச் சூழ்ந்துகொள்ளு வார்கள். ஆடுசாபட்டியின் மகத்துவத்தை அவர் சொல்ல ஆரம்பித்துவிட்டால் ஆறு நாளானாலும் ஓயமாட்டார். தஸ்தாவேஜூகளிலேகூட ‘நில வலயத்திற்கு ஓர் திலகம் போன்ற ஆடுசாபட்டியில் அவதரித்த அண்டர் புகழும் அஷ்டாவதானம் மகாவித்வான் அம்மையப்பபிள்ளையவர்கள்’ என்றுதான் கையெழுத்து. ஆடுசாபட்டி என்பதற்கு ஆட்டுக்கு மோட்சம் கொடுத்த இடம் என்று பொருளாம். கஜேந்திராழ்வாருக்குப் போட்டியாக அஜேந்திராழ்வார் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு ஆடுசாபட்டியில் மோட்ச மாம். இப்படி ஸ்தல புராணங்களை விஸ்தாரமாகப் பேசிக் கொண்டு அம்மையப்ப பிள்ளையவர்கள் காலத்தைக் கடத்து கிறார்.
பேயாண்டித்தேவன் தன்னூர் சென்று அங்கு ராஜ்ய பரிபாலனம் செய்து வருகிறான். காலமே எழுந்ததும் முத்து ஸ்வாமி அய்யரிருக்கும் திசையை நோக்கி ஒருதரம் நமஸ் கரித்த பிறகுதான் மற்றக் காரியங்களில் பிரவேசிப்பான். அந்தத் திருமங்கையாழ்வாருக்கும் முத்துஸ்வாமியய்யர் ஏதோ அனுக்கிரஹித்திருப்பதால் அவரிடத்தில் அவனுக்கு தேவதா விசுவாசம். அவன் திருடுவதைக் கட்டோடு ஒழித்துவிட்டான்.
வைத்தியநாதய்யரவர்கள் வேலையை ராஜினாமா கொடுத்துவிட்டுச் சிறுகுளத்திலே வாசத்துக்கு ஏற்பாடு செய்துகொண்டு முத்துஸ்வாமியய்யரிடம் உபதேசம் பெற்று சிவராஜயோகப்பியாசம் செய்துவருகிறார். நல்ல அனுபவங்கள் சீக்கிரத்தில் சித்தியாகுமென்று நான் நினைக்கி றேன். முத்துஸ்வாமியய்யர் குடும்பங்களை அவர்தான் மேல் பார்த்து வருகிறார்.
கமலாம்பாள் சகலவித பாக்கியத்தையும் திரும்பப் பெற்றும் ராம நாம ஸ்மரணையை விட்டுவிடவில்லை. நாளுக்கு நாள் அவள் பக்தி பெருகிக்கொண்டே வந்தது. அந்த பக்தி விசேஷத்தால் அவளுக்கு உலகமெல்லாம் ராமஸ்வரூபமாய் தோன்றிற்று. “பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே” என்றபடி மேகம் சூரிய சந்திர நட்சத்தி’ ராதிகள் முதல் மரம், மட்டை, மனிதன் ஈறாகச் சகலமும் அவளுக்கு ஆனந்தமான ஸ்ரீராம மயமாகவே தோன்ற “எல்லா முன்னுடைமையே, எல்லாமுன் செயலே, எங்கணும் வியாபிநீ” என்று சதா அந்த இராமனையே வாழ்த்திய வண்ணமாய்த் தனக்கென்று ஒன்றுமில்லாது உண்ணு நீர் முதல் அந்நீரிலும் நின்றிலங்கும் அவனுக்கே அர்ப்பிதம் செய்து ‘உலகனைத்தும் உன் நாமப் பொருளதையே ஓதிடு மால்’ என்று உளமகிழ்ந்து, கதித்தெழும் இராகத்வேஷாதி கள் யாவற்றையும் கண்டித்து அடக்கிக் கொலைபுரிந்து,
“கரவன்றி யிராமர் கணக்கிலவாம்
பரவை மணலிற் பலரென்பர்களால்”
என்று பார்க்கும் பொருளனைத்திலும் ராமனையே பார்த்து உலகெங்கும் ஒருவன் என உணரும் உணர்ச்சியோடு களித்தாள். பாடுவதெல்லாம் ராமனுடைய பாட்டு, பேசுவ. தெல்லாம் ராமனுடைய பேச்சு, ஓதுவதெல்லாம் ராம னுடைய திருநாமம்.
”மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்திறுத்தாய்
(செம்பொன்சேர்)
கன்னி நன்மாமதின் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய வின்னமுதே யிராகவனே தாலேலோ.”
“கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ்ச்சனகன் றிருமருகா தாசரதி
கங்கையிலுந் தீர்த்தமவி கணபுரத்தென் கருமணியே
எங்கள்குலத் தின்னமுதே யிராகவனே தாலேலோ.”
என்றிப்படி ராகவனைப் பாடிக் கொஞ்சி ‘மன்னே மாமணியே என்று ஏத்தி, ‘அன்னே தேனே யமுதே” என்று அழுது, ‘ஐயே நினக்காளானேன் அல்லேனெனலாமோ’ என்று களித்து அவள் தன் காலத்தைக் கடத்தினாள் தன் கணவனைக் கண்டுவிட்டால் ஸ்ரீ ராமனையே பிரத்தியட்சமாய்க் கண்டது போல் நினைப்பு. அவருடன் பேசினால் ராமனுடன் பேசுவதாய் மதிப்பு. அவரருகு இருந்தால் ஸ்ரீ ராமனருகு இருப்பதாய்க் களிப்பு. அவர் நடையையும் அவர் சிரிப்பையும் காணுந்தோறும் ‘கடந்தரு மதங்கலும் கவிநல் யானைபோல் நடந்தது கிடந்தது என்னுள நண்ணியே” என்றும், முந்தியென்னுயிரை வலுண்டதே” யென்றும் ராமனைக் கண்ட சீதையைப் போல் தன்னுள் பாடி மகிழ்ந்து,
“தீராஎளியார் வலிசேவகனே
நாராயணனே தனிநாயகனே”
என்று துதித்து இவ்வாறு அவள் ராமத்தியானானந்த் வைபவத்தில் முழுகியிருக்கிறாள்.
கமலாம்பாளது பக்தியின் வைபவமே யிவ்வாறாயின், முத்துஸ்வாமியய்யருடைய ஞானத்தின் வைபவத்தைச் சொல்லவும் வேண்டுமோ!
யதாகாலஸ்திதோ நித்யம்வாயுஸ் ஸர்வத்ரகோமஹான்
ததாஸர்வானிபூதாநிமத்ஸ்தா நித்யுபதாய.
சர்வ வியாபகமாயும் நிறைந்துமிருக்கிற வாயுவானது எப்போதும் எப்படி ஆகாசத்தில் இருக்கிறதோ அப்படி சகல பூதங்களும் என்னிடத்திலிருக்கிறதாகத் தெரிந்துகொள் என்றும், ‘உலகம் யாவும் உயிர் பலவும் நானே; சிறிதும் வேறில்லை’ என்றும் வாக்குக் கொடுத்திருக்கும் பகவானுடைய மகாவாக்கியத்தை விசாரணைசெய்து உல்கெல்லாம் அலகைத்தேரெனத் தேர்ந்து,
யூதநீயலைபொரிகளுமலையலை புந்தி
ஏதநீயலையிவற்றினை மயங்கியானென்னும்
போதநீயலை யென்றிவையனைத்தும் போக்கிச்
சோதியாகியபிரஹயமே நீ
எனச் சொன்ன குருஉபதேச விசேஷத்தால் பஞ்சகோசத் திரைகளைப் பிளந்து பூரணமாய், ஏகமாய், அசலமாய், அசரீரியாய், அனாதியாய், ஆப்தமாய், நித்திய நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷயமாய் விளங்கா நின்ற சச்சிதானந்த ஸ்வரூபமாகிய ஆத்மாவைத் தரிசனம்செய்து, அகண்ட பிரமமாகாரன விஸ்வரூப விருத்தியிற் பிரவேசித்து திரிபுடி ரஹிதமான பிர்மமாந்தத்தில் மூழ்கி, ஆத்மக்கிரீடை புரிந்து சமாதி நிஷ்டையில் நிர்வஹித்து, சமாதியொழிந்த சமயங்களில் பகவானுடையமாயவிபூதியை வியந்து ஒளியிலே, இருளிலே, வெளியிலே, மண்ணிலே, தண்ணிலே, மலையிலே, கடலிலே, கரையிலே, மரத்தினிலையிலே, கனியிலே,காற்றிலே, கற்றார் கல்லாரிலே, கதியறியாக் கயவர் தம்மிலே, கடலன்ன ஜகமுழுதிலே
“நீயலால் பிறிது மற்றின்மை சென்று சென்றணுவாய்த்
தேய்ந்து தேய்ந்தென்றாந் திருப்பெருந்துறையுறை
சிவனேயொன்று நீயல்லையன்றி யொன்றில்லை”
இல்லையில்லையெனத் தெளிந்து, உலக வியவகாரங்களில் புகும் பொழுதும் கோத்தநிலை குலையாது, புதுமணம் புரிந்த நாரியர் போற்புக்கு ஆனந்தமாய்,
‘அச்சந்தவிர்த்தானென் றூ தூ துசங்கே
யம்பலவாணனென் றூ தூ துசங்கே
இச்சையளித்தானென் றூ தூ துசங்கே!
இன்பங்கொடுத்தானென் றூ தூ துசங்கே!
‘இறவாமையீந்தானென் றூ தூ துசங்கே
எண்ணம் பலித்ததென் றூ தூ துசங்கே
‘ஊனே மறிவதென் றூ தூ துசங்கே
‘உணர்வே பிரஹ்மமென் றூ தூ து சங்கே
‘நானே அவனாமென் றூ தூ துசங்கே
‘நானாவதில்லையென் றூ தூ துசங்கே
எனப் பாடிப் பாடி ஞானானந்த வைபவசாகரத்தில் மூழ்கி விருந்தார். முத்துஸ்வாமி அய்யர்.
இரவியுமதியும்வானும்வாயுவுமன முமம்பு
முரவியமண்ணுமற்றையுணர்பவன்றானுமாகி
பரவிடுங்கரணம்பன்னான் காயமன்றாயு நின்றே
உரைமன மிறந்துளோங்குமொளியது வாழிவாழி
கண்முதற்புலன் களந்தக் கரணங்கள் விளங்குமெத்தாற்
தண்மதியருக்கனங்கி தாரகைவிளங்கு மெத்தால்
விண்முதற் பூதமியாவும் விளங்கிடு மெத்தாலந்த
வுண்மையாஞ்சிவப்பிரகாச வொளியது வாழி வாழி
இரண்டாம் பாகம்
முற்றிற்று
பிற்கூற்று
இப்பொய்க்கதையை இதுகாறும் பொறுத்தருளிய நேசர்காள்! நும்பெரும் பொறுமைக்கு என் பெரும் வந்தனம்.
இக்கதை பெரும்பான்மையும் பலவித மனோசஞ்சலத்தின் மத்தியில் எழுதப்பட்ட காதலால் அழகு குன்றி ‘குன்றக் கூறன் மிகைபடக்கூறல்’ முதலிய யீரைங்குற்றங்களுக்கும் குடியாயுளது. மேலும் என்னறியாமையானும் பிறகாரணங் களாலும் சொற்பிழைகள் பலவடர்ந்து கற்றோர்க்கு விரசமாயுமுளது. ஆயினும் அவகாசம் முதலிய சில சாதனங்கள் ஏற்பட்டிருப்பின், அவை ஒருவாறு விலகியிருக்கலாம்.
இதுநிற்க, இச்சரித்திரமெழுதுவதில் எனக்குக் கதையே முக்கிய கருத்தன்று. மற்றென்னையோவெனில், ஆசையோடு உசாவும் அர்ச்சுனனுக்கு,
‘நாந்தோஸ்திம்மதிவ்யானாம் விபூதினாம்பரந்தப’
அதாவது,
இறந்தெவன் விபூதிக்கோ ரெல்லையின்மையின்
பிறந்தன முடிவு பெறப்பேசவொண்ணுமோ’
என்று பகவானாலேயே சொல்லிவிடப்பட்ட அவனது மாயாவிபூதியாம் பெருங்கடலுள் ஓர் அலையுள், நுரையுள், ஓர் துளியில், ஓர் அணுவை யானெடுத்து அதனுள் என் புல்லறிவிற் கெட்டிய மட்டும் புகுந்து பார்த்து,
‘சாணினுமுளனோர் தன்மையணு வினைச்ச தகூறிட்ட
கேரணினுமுளன் மாமேருக்குன்றினு முளனிந்நின்ற
தூணினுமுளன் முன்சொன்ன சொல்லினு முளனித்
தன்மை காணுதிவிரைவில்’
என்று காட்டத் தூண்பிளந்து தோன்றிய அவனே அங்கும் இருக்கக் கண்டு திசை திறந்தண்டங்கீறிச் சிரித்த செங்கட் சீயத்தைக் கண்டு கைகூப்பி, ஆடிப் பாடி யரற்றி, உலகெலாந் துள்ளித் துகைத்த இளஞ் சேயொப்ப, யாமும் ஆடிப்பாடி ஓட வேண்டுமென்பதே யன்றி வேறன்று.
பொன்னம்மாளது சூழ்வினையினும், சங்கரியது கொலைத் தொழிலினும், சுப்புவின கலகத்திறத்தினும், நடராஜனது விவரமறியா இளமையிலும், ராம சேஷய்யரது வாஞ்சா ரூப மான முதுமையிலும், லட்சுமி ஸ்ரீநிவாசனது மனோதர்ம விசேஷத்திலும், கமலாம்பாளது பக்தி வைபவத்திலும், முத்து ஸ்வாமியய்யரது ஆத்மானந்தத்திலும் எங்கும் சமமாய், சாட்சியாய், ஏகமாய், பூரணமாய், நித்தியமாய்,
நன்றாய்ஞான கனமாகி நானாவெல்லாம் பிறப்பிடமா
யொன்றாய் வேறோர் பொருளின்றி யொளியா யொன்றோடு
[வமிப்ப
தன்றா யகிலசராசரங்கட்கா தாரந்தானாயென்றும் பொன்றாததுவாய் விகாரப்பொருளாய்ப் புலனாய்ப் புணர்ப்
(பரிதாய்
“உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இவ்வுலகெங்கும் நாம். காண்போம்.
கமலாம்பாள் போல ‘புத்தி யாலறியொண்ணாய் புராணனைப் பத்தியாம் வலையிற் படுத்து
‘கன்றினுக்குச்சே தாகனிந்திரங்கல் போலெனக்
கென்றிரங்கு வாய்கருணை யெந்தாய்பராபரமே’
என்று அருட்டாகங்கொண்டு,
‘கன் குறுணிலாக்கனியகுத்தமாயவ
னின்றுநம்மானுள் வருமேலவன் வாயிற்
கொன்றையந்திங்குழல் கேளாமோதோழீ
என்றவன் புராண வைபவங்களில் மயங்கி,
‘கீளார் கோவணமும் திருநீரும்’
என்றவன் மூர்த்திலாவண்யத்தி லீடுபட்டு ‘ஊடுவது மூவப்பதும் நின்னோடே’ எனத் தன்னையும் ஜகத்தையும் மறந்து,
சொல்லாலேவாய் துடிப்ப தல்லானெஞ்சந்
துடித்திருகணீரருவி சொரியத்தேம்பி
கல்லாலேயிருந்த நெஞ்சங்கல்லான்முக்கட்
கனியேநெக்குருகிடவுங் காண்பேன்கொல்லோ’
எனத் தனையே நொந்து நொந்து நெஞ்சங் கரைந்துருகி,
மாசில் வீணையும் மாலைமதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனி லும்
மூசுவண்டறை பொய்கையும் போறதேன்
ஈதுனெந்தை யிணையடி நீழலே
என்று விசேஷிக்கப்பட்ட அவாங்மன கோசரமான அவ்வடி நிழலில் ஓய்வடைவோம். அல்லது முத்துஸ்வாமி அய்யரைப் போல ‘வேண்டேனியமாயப் புன பிறவி வேண்டேனே” என உலக விரக்திபெற்றுக் கிருமிமுதல் கிரகங்கள் வரை சலியாது சஞ்சரிக்கின்ற பகவானுடைய சித்விலாஸச் சிறப்பில் எந்தக் கேவலமான பிராணியும் அநாதியாய் விடப்படவில்லை யென அறிந்து அஞ்ஞானங்கழல சத்ருவைச் சேர்ந்து வழிபட்டு அஹம்ப்ரஹ்மாயா தி மகாவாக்கியங்களை விசாரணை செய்து அப்பியாச பலத்தினால் ஆத்மஸ்வரூபத்தைத் தீர்க்க மாகத் தரிசித்து’பாகற்காய்க்காகப் பங்கை விற்ற கதையைப் போல அற்பமான உலக இன்பங்களின் பொருட்டு விலையற்ற ஆத்ம லாபத்தை விலைப்படுத்தாது “மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே’ என்றபடி மனமிறக்கக்கற்று உலக வாஞ்சைகளை யொழித்துச் “சிந்தையிலெழுத்து மொங்கிச் ஜகமெலா நிறைந்து தேங்கி ” அந்தமில்லாததான ஆனந் தத்தில் மூழ்கித் திடமாகச் சிவானுபூதி பெற்றுச் சிவோஹ மென்றிருந்து காலத்தைத் தள்ளுவோம்.
எந்தத் தெய்வத்தைத் தொழுது இச்சிறு கிரந்தமானது இயற்றப்பட்டதோ, எந்தச் சுயம்பிரகாசமான திவ்ய தேஜா ரூபத்தின் பொருட்டு இக்கதையானது நிஷ்காமியமாக அர்ப்பிக்கப்படுகிறதோ, அந்தத் திவ்ய, மங்கள, குணாதீத பரிபூரண சச்சிதானந்த ஸ்வரூபத்தை நாமனைவரும் முயற் சித்து அடைவோமாக. அடைந்து, அவருடைய குழந்தை களான மன்குலபாக்கியமாம் பாலர்க்குதவிசெய்ய அடியார்க்கடியவனாயிருந் துழைப்போமாக. தாதஸ்து.
சுபம்.
கமலாம்பாள் சரித்திரம் – சில அபிப்பிராயங்கள்
ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளையையும் பாப்பா பட்டியகத்து வெட்டரிவாளையும் அறியாதார் யார்? அழுவதில் நிபுணனாக ஸ்ரீநிவாசனும் லட்சியவாதியான முத்துஸ்வாமி அய்யரும் தமிழ் நாட்டுக் கிராமங்களில் இன்னும் இருக்கின்றனர். அவர்களை நாம் எங்கேயோ பார்த்த ஞாபகம் வருகிறது. எங்கே? கமலாம்பாள் சரித்திரத்தில்தான். இதைவிட வேறு சிபார்சு வேண்டுமா? – தினமணி
‘புத்தகத்தைக் கையில் எடுத்தால் வாசித்து முடித்தபின்தான் கீழே வைக்க மனம் வரும்…….. கதா ரஸமும் கவிதா ரஸமும் நிரம்பியது. – சுதேசமித்திரன்
“பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் “பி.ஆர்.ராஜமய்யர் சரித்திரத்தை நீ படிக்க வேண்டும். இந்நாவல் தனிச் சிறப்பு வாய்ந்தது.” – ஸ்ரீ எஸ்.சத்தியமூர்த்தி (தன் அருமை மகளுக்கு எழுதிய கடிதம்)
‘நாள துவரையில் வெளியான நாவல்கள் எது தலைமை ஸ்தானம் வகிக்கிற தென்று கேட்டால் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்று கூசாமல் சொல்லி விடலாம்…….அழகான வர்ணனைகளும், கவிதா ரஸமும் கலந்து மணம் வீசுகிறது….வம்பர் மகாசபை என்ற சொற்றொடர் இந்த ஆசிரியர் சிருஷ்டித்தது…… கமலாம்பாள் சரித்திரத்தின் வழியேதான் தமிழ் நாவல் சுவடுவிட்டுக் கொண்டு போகிறது.’ – ஸ்ரீ ந. பிச்சமூர்த்தி (ரேடியோ பிரசங்கம்)
“கமலாம்பாள் சரித்திரத்தை வெகு ஸ்வாரஸ்ய மாகச் சொல்லுவாள் அம்மா. ‘பாப்பா பட்டி யகத்து வெட்டரிவாளைப்பற்றியும், ‘பேயாண்டித்தேவர் திருவுலா’ வைப் பற்றியும் பேசுவோம். இப்பேச்சு முடியும் பொழுது நம்ம ராஜம்மாதிரி இனி யார் எழுத முடியும் என்று அம்மா சொல்லுவாள்.” (‘என்கதை’ சுட்டுரையில்) – பி.எஸ்.ராமையா
‘It would be a pity if ‘Kamalambal’ is not prescribed For Intermediate or B.A., Degree Examinations. It would certainly be more acceptable to Students than ‘Midsummer Nights Dream.’ – Prof. P. Sundaram Pillai, M.A. F.M,V., F.R.H.S., M.R.A.S., Rao Bahadur. (Author of “Manonmani’)
‘The strength of the Novel lies in its philosophical depths and spiritual significance and in this respect it appears to be an unique production of its kind. The style is simple, chaste, vigourous, dignified and is exceedingly poetic without being ornate.’ -Prabudda Bharata (Journal started by Swami Vivekananda)
‘Kamalambal’ in one sense is not new. Almost all the words and thoughts are current coin among the people and it is the chief merit of the author that he has used such available materials with so much dexterity as to afford pleasure and to adorn a tale and point a moral.’ – Siddhanta Dipika
‘Kamalambal’ is an excellent story depicting Hindu Social life, manners and customs. The book is written in an easy and flowing style and will no doubt be much appreciated by the Tamil reading public.’ – Indian Social Reformer
‘Kamalambal’ is replete with choice quotations from standard Tamil authors appropriately worked into the text. – Madras Mail
– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.
– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.