(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.
அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-33 | அத்தியாயம் 34-36
31 – பிள்ளையவர்களின் கல்வித்திறமையும் புத்தி நுட்பமும்
இங்கே முத்துஸ்வாமியய்யர் இப்படி ஆனந்தித்துக் கொண்டிருக்கக் கமலாம்பாள், லட்சுமி,அம்மையப்ப பிள்ளை முதலியவர்கள் சிதம்பரம் விட்டுப் புறப்பட்டுப் பட்டணம் வந்து ஸ்ரீநிவாசன் முன்னேயிருந்த ஜாகையிலேயே தங்கினார் கள். கமலாம்பாள் ‘தெய்வமே உன் திருவுள்ளம் இப்படியா! நான் துன்பப்படுவது போதாதென்று என் பெண்ணையுமா இப்படிச் சீரழிக்கிறாய்’ என்று ஓயாமல் கவலைப்பட்டாள். லட்சுமி, “தகப்பனையும் புருஷனையும் பறிகொடுத்து உயிர் வைத்துக்கொண்டிருக்கிற கள்ளச்சி நானல்லவோ” என்று ஏங்கினாள். அம்மையப்ப பிள்ளை ஊரெங்கும் அலைந்து பார்த்துக்கொண்டிருந்தார். இப்படியிருக்கும்போது அடுத்த வீட்டுப் பாட்டியம்மாள் கமலாம்பாளிடம் வந்து அவளுடைய நிலைமையைக் கண்டு பரிதபித்து, ‘அம்மா திருவொற்றியூர் என்று இதற்குச் சமீபத்தில் மகா க்ஷேத்திரம் ஒன்று இருக்கிறது. அங்கேதான் பட்டணத்தார் சமாதி யடைந்தார். அவருடைய கோவிலில் ஒரு பெரியவர் வந்திருக்கிறார். அவருக்கு ஐந்நூறு வயதாய்விட்டதாம்; அன்ன ஆகாரம் கிடையாதாம். நடந்தது, நடக்கப்போகிறது, நடக்கிறது எல்லாவற்றையும் கொஞ்சங்கூடத் தவறாமல் சொல்லக் கூடியவராம். ஒரு மனிதனைப் பார்த்தால் அவனைப் பார்த்த வுடனேயே அவன் இன்ன காரியமாய் வந்திருக்கிறான் என்று சொல்லி அது பலிக்கும் பலிக்காது என்றும் சொல்லி விடுகிறாராம். வெகு லட்சணமாயிருக்கிறாராம். தொண்டு கிழவராம். நிரம்ப சாந்தமுள்ளவராம். அவர் பெயர் என்னவோ ஒரு ‘ஆனந்த சுவாமிகள்’ என்று வரும் ஆமாம் சரிதான். சச்சிதானந்த சுவாமிகள். அவரைப்போய்க் கண்டால் உன் துக்கம் இந்த க்ஷணத்திலேயே நிவர்த்தி யாகிறது அம்மா. ஆனால், அவர் இப்போது அங்கேதான் இருக்கிறாரோ என்னவோ. முதலிலே யாரையாவது போய்ப் பார்த்துக்கொண்டு வரச்சொன்னால் அப்புறம் நீங்கள் எல்லோரும் போகலாம்” என்று சொல்ல, கமலாம்பாள். “அம்மா பெரிய உபகாரம் செய்தீர்கள். இந்த உதவி யார் செய்வார்கள். இந்தக் காலத்தில் ஏதோ எங்கள் நிலைமையைக் கண்டு இரக்கப்பட்டு இவ்வளவு நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் என்ன உபகாரம் செய்யப்போகிறேன்” என்று உபசாரம் சொல்லிவிட்டு, அம்மையப்ப பிள்ளை வந்தவுடன் அவருக்குத் தெரிவிக்க, “அவர் இதோ நான் போய்ப்பார்த்து வருகிறேன்” என்று புறப்பட்டார்.
பிள்ளையவர்கள் திருவொற்றியூரை யடைந்து பட்டணத் தார் கோயிலுக்கு வழி விசாரித்துக்கொண்டிருந்தார். ஆய்விட்டது, கால்மணி சென்றால் கமலாம்பாளுடைய கவலை ஒழியும். அம்மையப்ப பிள்ளை தீவிரமாக வந்துகொண்டிருக் கிறார். அவ்வாறு வரும் வழியில் பண்டாரம் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவர் அவனைப் பட்டணத்தார் கோயிலுக்கு வழி கேட்க, அவன் அவர் மடியிலிருந்த பணப் பையைப் பார்த்து அவரைப் ‘புதுக்கோழி’ விசாரிக்க ஆவல் கொண்டு எழுந்திருந்து அவரைச் சேவித்து “சுவாமி அடியேன் இட்டுப்போகிறேன், வாருங்கள். இந்த நாய் இன்றைக்கு நல்ல பூஜை பண்ணிற்று. தங்களைப்போல பெரியவர்கள் சேவை எனக்குக் கிடைத்தது.சுவாமி ஏதோ தங்களிடம் வசிய சக்தி இருக்கிறது. ‘ஊசியைக் காந்தம் இழுக்கிறது’ போல் என்னை இழுக்கிறது” என்று ஸ்தோத்திரம் செய்தான். வாஸ்தவத்திலேயே அவரிடத்தில் வெள்ளிக் காந்தம் மடியில் பைக்குள் இருந்தது. (பணமில்லாமல் பிள்ளையவர்கள் வெளியேறுகிறதில்லை.) பிள்ளையவர்களுக்கு அந்த ஞாபகம். கிடையாது. ‘யதார்த்தத்திலேயே ஏதோ தன்னிடத்தில் அற்புதமான வசீகரசக்தி ஒன்று இருக்கிற தாக அவர் எண்ணிக்கொண்டு சந்தோஷித்தார். இதுதான் சமயம் என்று கண்ட அந்தப் பண்டாரம் “சுவாமி, தங்கள் ஊர் பேரை யறிய இந்த நாய் ஆசைப்பட்டது” என்று கை கட்டி வாய்பொத்தி விநயமாய்க்கேட்க,அம்மையப்பபிள்ளையவர்கள் அம்மை தவழ்ந்த தன் இருள் முகத்தில் புன்சிரிப்பு உலவி நிலவு வீச, தான் ஆடுசாபட்டியில் அவதரித்த புண்ணிய சரித்திரத்தை நன்கு உணர்த்தி தற்காலத்தில் அண்டர் புகழும் அஷ்டாவதானம் ஆடுசாபட்டி அம்மையப்பக் கவிராயராய் விளங்குவதைச் சூட்சுமமாகச் சூசிப்பித்தார். அதைக் கேட்ட ஆஷாடபூதிப் பண்டாரம் கைகட்டி (வந்த சிரிப்பை யடக்க) வாய்பொத்தி நின்று, கீழே விழுந்து நமஸ்கரித்து “சுவாமி, இந்த நாய் இனி தங்களுக்கு அடிமை. இந்த நாயும் தமிழில். கொஞ்சம் எழுதப் படிக்கச் செய்யும். கொஞ்சம் கொஞ்சம் படிக்கும். தங்களைப்போல வித்வான் களைக் கண்டுவிட்டால் இந்த நாய்க்குத் தலைகால் தெரிகிறதில்லை’ யென்று சொல்லி அவர் மடியில் பையில் பத்திரம செய்யப்பட்ட லட்சுமி தேவியை அந்தரங்க பக்தி யுடன் தியானித்து மறுபடியும் தெண்டனிட, வித்வான் அம்மையப்ப பிள்ளை அந்த நமஸ்காரங்களனைத்தையும் தனக்கே அர்ப்பிதம் செய்து கொண்டு பெருந்தன்மையான மந்தகாஸத்துடன் அவனைக் கைகொடுத்து எழுப்பினார். அப்படி எழுந்திருக்கும்போதே ஞானக் கண் படைத்த அப்பண்டாரத்துக்குப் பைக்குள் இவ்வளவு பணம் இருக்கலாம். என்று மதிப்புப் போடச் சௌகரியமாயிருந்தது. பிள்ளையவர் கள் அந்த ஏழைப் பண்டாரத்துக்கு அபயஸ்தம் அளித்து, அவனுடைய கல்வித்திறமையைப் பரீட்சை செய்ய ஆவல் கொண்டு, “நீர் ஏதாவது பாடல்கள் பார்த்ததுண்டா என்று கம்பீரமாய்க் கேட்க, அவன் “முருகையா வேலாயுதம் சுவாமி, அவன்தான் எனக்குத் தெய்வம. அவன் ஒரு ஆண்டி, நான் ஒரு ஆண்டி; அவன் மலைமேலே ஆண்டி. நான் கீழே ஆண்டி. அவனைப் பற்றித்தான் இந்த நாய் ஏதோ இரண்டு ஒன்று உளறியிருக்கிறது; வேறென்னத்தை அறியப்போகுது” எனறு வணக்கமாய்ச் சொல்ல, கவிராயர் “எங்கே அதைக் கேட்போம் சொல்” என்று ஆக்ஞாபிக்க, அவருடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு,
ஆறுமுகமாறு முகமாறு முகமாறுமுக
மாறுமுக மாறுமுக மாறுமுக மாறுமுகம்
ஏறுமயி லேறுமயி லேறுமயி லேறுமயில்
ஏறுமயி லேறுமயி லேறுமயி லேறுமயில்
என்று பாடி முடிக்கக் கவிராயர் பாடு சங்கடத்தில்.வந்து விட்டது. அந்தப் பாட்டுக்கு அர்த்தம் கேட்டுவிட்டால் என்ன பண்ணுகிறது என்று அவருக்குப் பயம். ஆனாலும் அர்த்தம் அவன் கேட்கிறவரையில் இடங்கொடுக்கப் படாதென்று தீர்மானித்து “பாட்டு நன்றாயிருக்கிறது, எமகம் நன்றாயிருக்கிறது, சொற் பொலிவு, பொருட் பொலிவு நிரம்பி யிருக்கிறது” என்று உபசாரம் சொல்ல, அவன் “இந்த நாய் குளிகைகூடப் பாடும். குளிகை. பின் குளிகை முன் குளிகை, அடி முடக்கு, நுனி முடக்கு, நொண்டிச்சிந்து, சப்பாணிச்சிந்து, சிவகாமிப்பண், காமாட்சிப்பண், ஓட்டக் கிடாரம், வட்டக்கிடாரம், சங்காக்கிடாரம்,சக்கரைக்கிடாரம், திருக்குறிஞ்சி, முல்லைக் குறிஞ்சி இப்படிச் சில்லரையாகப் பாடும்” என்று சண்டப்பிரசண்டமாய்ச் சொல்ல, கவிராயர் “இதென்ன நாம் கனவிலும் கேளாத சங்கதிகளாயிருக்கிறதே; கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது’ என்று பயந்து, தான் நிரம்ப புத்திசாலியான தினால் தந்திரமாய்த் தப்பிக்க வழி யோசித்துத் தன் கவிக்கடையை அவிழ்த்துவிட்டார். அர்த்தமோ அர்த்தமில்லையோ அது அவருக்கு லட்சியமே யில்லை. இலக்கண விதியைக் கவனித்தே கட்டிவருகிறதில்லை. எமகம் திருப்புக்குக் குறைந்த பாட்டு அவர் அபிப்பிராயத்தில் பாட்டேயில்லை.
“மலரிடைவைகும் மதியிலர்காள்
டுடுடுடுடுடுடுடு
மலரிடைவைகும் மதியிலர்காள்
டுடுடுடுடுடுடு”
என்று டுகர வர்க்கத்திலும்,
“சேர்சிசூசா சீசுகச் சைசூ சோசாசு”
என்று சகர வர்க்கத்திலும் பாட்டுகளை வாரிவீசத் துவக்கினார். அவர் இவ்வித வித்யா வெறியிலிருக்கும்போது
*இப்பாட்டுகளின் பொருள் நான் எங்கு விசாரித்தும் கிடைக்கவில்லை. யாரேனும் தயவுகூர்ந்து சொல்வரேல் வந்தன முள்ளவனாயிருப்பேன்.
இதுதான் சமயம் என்று கண்ட அந்தப் பண்டாரம் பேசிக் கொண்டே அவரை வழியைவிட்டு இழுத்துக்கொண்டு போனான், அம்மையப்ப பிள்ளைக்கு இருந்த ஆவேசத்தில் எங்கே போகிறோம், வருகிறோம் என்கிற நினைவு கூட இல்லை. அவர் வெறும் சித்திரக் கவிகளுடன் நிறுத்தாமல் உத்பிரேட்சை முதலிய அலங்காரக் கவிகளிலேயும் புகுந்து விட்டார்.ஒரு ஸ்திரீ விரகதாபத்திலிருந்தாளாம். அப்பொழுது நாழிகையாய்விட்டதால் சூரியன் தன் வழக்கப்படி கிரமமாக அஸ்தமித்தான். அப்படிச் சொல்வ தற்குப் பதிலாக நமது வித்வான் ‘சூரியனாகிய காற்றாடி யானது அந்த ஸ்திரீயினுடைய பெருமூச்சாகிய சண்ட மாருதத்தால் அடிபட்டுக் கீழே விழுந்தது விழுந்து மேலெல் லாம் காயம்பட்டு இரத்தம் வந்ததால் ஆகாயமெல்லாம் செவ்வானமாய்விட்டது’ என்று திவ்யமான சிருங்கார ரசத் தோடு கூடிய பாட்டுகள் அநேகம் பாடினார். இன்னும் வசந்தகாலத்தை வர்ணிக்கும்போது வசந்த காலம் கார் காலத்தையொத்தது என்று பாடினார். ஏனென்றால் கார் காலத்தில் மேகங்கள் நிறைந்திருக்கும். வசந்த காலத்திலும் ஸ்திரீகளுடைய கூந்தல்களாகிய மேகங்களுண்டு. மேலும் கார்காலத்தில் மழை பெய்யும். அதுபோல வசந்த காலத்திலும் ஸ்திரீகள் நாயகர்களுடன் கோபித்துக்கொண்டு அழுகிறார்கள். கார்காலத்தில் பெருங் காற்று அடிக்கும். அது போலவே வசந்த காலத்திலும் ஸ்திரீகள் பிரிவாற்றாமை யாற் பெருமூச்சு விடுகிறார்கள். கார்காலத்தில் மயில்கள படும். அதுபோல வசந்த காலத்திலும் ஸ்திரீகளாகிய மயில்கள் ஆடுகின்றன.- என்றிப்படி அபூர்வமான உபமானங்கள் அநேகம் எடுத்துச் சொன்னார். இங்கே இவர் இப்படிப் பிரசங்கம் செய்துகொண்டு போகும் போதே பட்டணத் தாருடைய சமாதியில் சுவாமிகள் முத்துஸ்வாமிபய்யரை அழைத்து “இனி நமக்கு இங்கே அலுவல் இல்லை” என்று சொல்லி அவருடன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு விட்டார். இவ்விடத்தில் அம்மையப்ப பிள்ளையவர்கள் அந்த ஏழைப் பண்டாரத்துக்கு வித்வத் லட்சணத்தையும், சிததிரக் கவிகளின் ஒழுங்கையும் உவமானங்களின் சாதுர்யத்தையும், இவைகளெல்லாம் தன்னிடத்தில் ஒருங்கே அமைந்திருக்கும் உண்மையும்,மூன் ஒரு காலத்தில் பட்டி வீரன் பட்டிக் கவண்டயன் கோட்டைக் கவிராயருடன் கைகலந்து யுத்தம் செய்து காக்கைதான் அன்னப்பட்சியென்று சாதித்ததையும், இன்னும் அனேக விஷயங்களையும் பற்றிப் பிரசங்கம் பண்ணிக்கொண்டே அவனுடன் போனார். அவனும் இவரை நிரம்ப ஆதரவு பண்ணித் தனிமையான ஓரிடத்துக்கு அழைத்துச்சென்று சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு அவர் மடியில் கைபோட எத்தனித்தான். பிள்ளை பவர்கள் தான் செய்த பிரசங்கத்தினால் உருகி தன்னை அன்புடன் ஆலிங்கனம் செய்கிறான் என்று எண்ணி மன மகிழ்ந்து முன்னிலும் அதிக உற்சாகத்துடன் நாய்க்கும் திருடனுக்கும், ஜலத்துக்கும் நெருப்புக்கும்,கொக்குக்கும் கழுதைககும் சிலேடைகளை எடுத்து விசித்திரமான விருத்தங்களினால் விளக்கத்துவக்கினார். பண்டாரம் அவர் மடியில் அன்புடன் கைபோட்டு அங்கிருந்து பணப்பையை மெதுவாய் உருவினான். பணப்பையை உருவிள வுடன் பிள்ளையவர்களுக்குப் பிரக்ஞை வந்துவிட்டது. “அடேடே என்னடாப் பயலே பண்ணுகின்றனை!” என்று அவர் அதட்ட, அந்தப் பண்டாரம் ‘ஒன்றும விசேடமில்லை சுவாமி; தாங்கள் இனனும் சொல்லவேணும், நிரம்ப நன்றாயிருக்கிறது; நாய்க்கும் திருடனுக்கும் சிலேடை வெகு நன்றாயிருக்கிறது. இவ்வளவு அருமையா யறிந்து யார் சொல்லப் போகிறார்கள். நாய் தன்பாட்டில் குலைக்கிறது, திருடனும் தன் பாட்டில் திருடுகிறான், நன்றாயிருக்கிறது உபமானம். ஐயோ தெய்வீகப் புலமை! தங்களுக்கு சரஸ்வதி நாவில் நர்த்தனம் செய்கிறாள்” என் று சொல்லித் தன் மடியில் அந்தப் பையைச் சமர்ப்பிக்கும் போது வித்வான் அம்மையப்ப பிள்ளையவர்கள் முற்றிலும் விழித்துக்கொண்டு ‘ஏனடா பயலே ! வஞ்சகக் கள்வோய்! எனது தனத்தை வெளவுகின்றனையா?” என் று கூவ, அவன் “இனிமேலெடுக்கவில்லை, சலாம், போய்வருகிறேன்” என்று சொல்லி ஓட்டமெடுத்தான். அம்மையப்ப பிள்ளை கூடத் துரத்தினார். கொஞ்சதூரம் போனவுடன் அவன் திடீரென்று திரும்பி அவர் முகத்தில் பளீரென்று ஒரு பலமான அறை அறைந்து கீழேவிழத் தள்ளிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடியே போய் விட்டான். அம்மையப்ப பிள்ளை எழுந்திருக்க மாட்டாமல் எழுந்து ‘ஐயோ தெய்வமே,இன்றைக்கு யார் முகத்தில் விழித்தோமோ, நம்மை இந்தப் போக்கிரிப்பயல் பாட்டுக் கேட்கிற பாவனையாய் மோசம் செய்து போய் விட்டான். அடடா, இப்படியுந்தான் உலகத்தில் உண்டா. செவிடன் காதில் சங்கூதின கதையாய் இவனிடத்தில் போய் நம்முடைய அருமையான பாட்டுக்களைப் பாடினோமே’ என்று நிரம்பத் துக்கித்தார். பாவம் அவருக்குப் பணம்போனது கூட உறுத்தவில்லை. அனுபவிக்கத் தெரியாத மூடனிடத்தில் தம்முடைய பாட்டைப் பாடிக் கொண்டிருந்தோமே என்பதில் நிரம்ப வருத்தம். ‘இனிமேல் அந்தப் பயல் வரட்டும், சொல்லுகிறேன் பார்’ என்று சொல்லி அவர் பல்லைக் கடித்துக் கொண்டார். இனிமேல் இவரிடம் வர அவனுக்கு என்ன பயித்தியமா பிடித்திருக்கிறது! அவன் ஓடியே போய்விட்டான். இவரும் தன் மேலிருந்த புழுதி யைத்த் துடைத்துவிட்டு தன் காலில் பட்ட காயத்தைப் பார்த்துக் கண்ணீர்விட்டு, கடைசியாக ‘நாம் விழுந்ததும் மோசமானதும் நல்லவேளையாய் நம்மைத் தவிர ஒரு வருக்கும் தெரியாதே’ என்று தன்னைச் சமாதானம் பண்ணிக்கொண ‘ஏதோ வேளைப் பிசகு என்று வேதாந்தம் பேசி மறுபடி திருவொற்றியூரைத் தேடிச் சென்றார். கடைசியாய்க் கண்டு பிடித்து பட்டணத்துப் பிள்ளையின் சமாதியைப் போய்ப் பார்க்க, அங்கே ஒருவருமில்லை. சுற்றுமுற்றும் பார்த்தார், எவரையும் காணோம். தனியேயிருந்த லிங்கத்தை மட்டும் தரிசனம் செய்துவிட்டு பட்டபாடு போதும் என்று வெயிலில் அலைந்து, உழன்று, வியர்த்து, வெறுங்கையாய் வீடுவந்து சேர்த்தார். இவர் ஏதோ நல்ல சமாசாரங்கள் கொண்டு வரப்போகிறார் என்று காத்திருந்த கமலாம்பாள் முதலிய வர்களும் வெறும் ஆளாய் வந்து சேர்ந்ததைப் பற்றி விசனித் தார்கள். அன்று மறுநாளே அங்கே காலதாமதம் செய்வதில் பயனில்லை யென்று கணடு அவ்விடம் விட்டு வடக்கே போக அவர்கள் எல்லோருமாகப் புறப்பட்டார்கள்.
32 – ஆசை நோய்க்கு மருந்துமுண்டோ?
இங்கே இப்படியிருக்க, புதுச்சேரியில் ஒரு காராக்கிரஹத்தின் மெத்தையில் ஒரு யௌவன புருஷன் அங்கவஸ்திரத்தால் தனது முழந்தாளைச் சேர்த்துக்கட்டிக் கொண்டு தனியே உட்கார்ந்திருந்தான். நேரம் நடுநிசி. நிலவு வீசி யடித்தது. ஊர் முழுவதும் நிசப்தமாயிருந்தது. உலக மாந்தர் உண்ணுந் தொழிலை மறந்து உறங்குந் தொழிலிலிருந்தனர். பட்சிக ளெல்லாம் ஆடிப்பாடித் தமது கூட்டிலமர்ந்திருந்தன. மரங்கள்கூட அசைவற்று வாயடக்கி மௌனமாயிருந்தன. இப்படிப் பூலோகம் முழுவதும் நித்திராதேவியின் மோக வலையிலடங்கிச் சிறிதும் செயலற்று உறங்கிக் கொண்டிருக்க ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பேசாது ஒளிர்ந்தன. மேகங்கள் அரவமற்றுத் தனிவழி நடந்தன. எங்கும் பயங்கரமான நிசப்தம் குடிகொண்டிருந்தது. பேய்கூடத் தனிவழி செல்ல அஞ்சும் இந்நடுராத்திரி வேளையில் ஸ்ரீநிவாசன் மாத்திரம் சோர்ந்த முகத்துடன் சந்திரனைப் பார்த்துக் கொண்டு பெரு மூடு வவிச்சுதும், தன்னையறியாமல் ததும்பி வரும் கண்ணீர்த் துளிகளை விரலால் சுண்டி யெறிவதுமாயிருந்தான். “எம் தூதர்கள் போல் நம்மை வஞ்சித்த போக்கிரிகள் இன்ன காரணத்திற்காக நம்மைச் சிறையிலிட்டிருக்கிறார்களென்று கூடத் தெரியவில்லையே’ என்று ஏங்கினான். ‘நாம் எங்கேயோ ஒரு இடத்திலும், அவள் எங்கேயோ ஒரு இடத்திலுமாக இருக்க நேரிட்டதே! ஐயோ அவள் நினைந்து நினைந்து உருகி உயிரை மாய்த்துக் கொள்ளுவாளே’ என்று கவலைப்பட்டான். ஐயோ அவளை எலும்பும் தோலுமாகவாவது நான் காண் பேனோ தெய்வமே. முன்னே நாலுநாள் அவளைவிட்டுப் பிரிந்து நான் காஞ்சிபுரம் போய் வருவதற்குள் அவள் உடம்பு அரையுடம்பாயிருந்ததே. ஐயோ ப்பொழுது என்ன செய்கிறாளோ என்று பெருமூச்செறிந்தான். ‘ஏது அவள் உயிரை வைத்துக் கொண்டிருப்பாள் என்று தோன்றவில்லை. எனக்காவது அவளை விட்டுப் பிரிந்த ஒரு துன்பம். அவளுக்குத் தகப்பனார்,தம்பி,போதாக் குறைக்கு நான், எங்கள் மூன்று பேரையும் விட்டுப் பிரிந்த. துன்பம். அத்துன்பத்துடன் அவள் உயிர் தரிக்கவா!’ என்று கண்ணீர் பெருக்கினான். ‘நான் இவ்விதமாகப் போனேன், வந்தேன், இவ்விடத்திலிருக்கிறேன்’ என்று கூட அவளுக்குச் சொல்வாரில்லையே. அவள்தான் எங்கே யிருக்கிறாளோ. சிதம்பரத்துக்கே போனாளோ. அல்லது மறுபடி சிறுகுளத். துக்கே போனாளோ, தகப்பனாரைத்தான் கண்டாளோ, அதுவுமில்லையோ. எந்தக் காடோ, செடியோ, யார் கையிலோ எங்கே தவிக்கிறாளோ’ என்று உருகினான். ‘இதே தருணத்தில், இதே நிலவில், அவளும் என்னை நினைத்து ஏங்கிக் கொண்டி ருந்தாலுமிருக்கலாம். அப்படியிருந்துமென்ன; இந்தச் சந்திரன் நமக்காகச் சாட்சி சொல்லப் போகிறதா? அன்னத்தைத் தூதுவிட்டதும், மேகத்தைத் தூதுவிட்டதும் கைக்கெட்டாத கதையாயிருக்கிறதே!’ என்று கண்ணீர் விட்டான். ஐயோ நாங்கள் சேர்ந்திருந்த காலத்தில் இந்த மாதிரி நிலவைக் கண்டுவிட்டால் என்ன பாடு பட மாட்டாள். அன்றைக்குச் சமுத்திரக்கரையிலே சந்திரன் “கலந்தவர்க் கினியதோர் கள்ளாய்” இருக்கிறது என்று பாடினாளே; இப்பொழுது பிரிந்தவர்க்கு உயிர்சுடு விஷமுமாய் என்று அடுத்த வரியைப் பாடி யழுகிறாளோ !” என்று தானுமழுதான். ‘இந்த மேகங்கள் ஒன்றோடொன்று பேத மில்லாமல் கலப்பதுபோல் நம்மிருவர் மனமும் கலந்து விட்டது என்று களித்தாளே; அதற்குத்தான் தண்டனையா இது, தெய்வமே!’ என்று தவித்தான். இந்த ஆகாசம் போல் கடவுள் கிருபை அளவற்றிருக்க நமக்கு என்ன குறை! என்று கர்வித்தவளுக்கு இது வேண்டியதுதான்’ என்று தலை யசைத்தான். ‘நாமிருவரும் சந்திரனும் ரோகினியும் போல ஒருநாளும் பிரியவே மாட்டோம். சாகிறபோதுகூட இரண்டு பேரும் சேர்ந்து ஒரேநாளிலே தான் சாவோம். செத்த பிறகு துருவன், அருந்ததி, ரோகினி இவர்கள் இருக்கிறது போல நாமிருவரும் ஜோடியாக அடுத்தடுத்து இரண்டு நட்சத்திர மாகச் சுக்கிரனைப் போல ஆகாயததில் ‘பளீர்’ என்று மின்னிக் கொண்டு வேடிக்கையாக இருப்போம் என்று பிதற்றினையேடி பயித்தியக்காரி, இவ்வளவு கர்வம் ஆகுமா என்று கடவுள் கண்டிக்கிறார் பார்த்தாயா! கண்டிக்கட்டும், கண்டிக்கிற தெல்லாம் கண்டிக்கட்டும்’- என்று பெருமூச்சு விட்டான்.
பிறகு உட்கார இருப்புக்கொள்ளாமல் எழுந்து ‘இந்த நிலாவையும், தென்றலையும் போலிருக்கிறது நம்முடைய அன்பு என்று உபமானங்கள் கொண்டுவந்தாயேடி, ஐயோ நாம் அனுபவித்ததும், விளையாடினதும், ஆனந்தப்பட்டதும் எல்லாம் கனவாகப் போய்விட்டதே’ என்று சொல்லி அங்கு மிங்கும் உலாவினான். பிறகு தன்னைப் ‘பாரா’க் காக்கும் காவலாளரின் குரல் காதில்பட, ‘போக்கிரி கவர்ண்மெண்டு, இதுவும் ஒரு கவர்ண்மெண்டா காமாட்டி சர்க்கார், அயோக்கியப் பையல்கள்; அந்நியாய ராஜ்ஜியம், தொலையக் காலம் வந்துவிட்டது இந்தக் கவர்ண்மெண்டுக்குச் சொல்லுகிறேன் வழி. கேள்வி முறை கிடையாதா? விசாரணை, இழவு, எட்டு ஒன்றுமா கிடையாது! நான் எழுதின விண்ணப்பத்துக்குக் கூடவா பதில் கிடையாது. அடா, இன்ன குற்றத்திறகாக நீ சிறைச்சாலையில் வைக்கப் பட்டிருக்கிறாய் என்று சொல்லித் தொலைக்கவேண்டாமோ! இப்பெ பாழுது ஒன்றும் பேசப்படாது. இவர்கள் கையைவிட்டு வெளியேறினவுடனே சொல்லுகிறேன் வழி சுப்பராயனுக்கு எழுதின கடிதம் நாளைபோய்ச் சேரும். அவன் நாளையே பதில் எழுதினால் இரண்டு மூன்று நாளிலேயாவது வந்து விடாதா. ஒருவேளை அவனே வந்தாலும் வரலாம். ஐயோ. என் மாமியார் ஒரு மகாலட்சுமி. அவளுக்கு வந்த கஷ்டங் களைப்பார். என் மாயனார், அவர் பெருந்தன்மையும், புத்தி விசாலமும், அவர்கள் ஒருவரோடொருவரிருந்த அன்பும், ஐயோ ! அவர்களுக்குக்கூட இப்படி வருமா! அப்பப்பா! இந்த உலகம் வெகு கெட்ட உலகமப்பா!’ என்று வெறுத் தான். பிறகு சந்திரனும் ரோகிணியும் மற்ற எண்ணிறந்த நட்சத்திரக் கூட்டங்களால் சூழப்பட்டு ஆகாயத்தில் சிங்காரமாய் கம்பீரமான அழகுடன் மெதுவாய்ப் பவனி செல்வதைச் சிறிதுநேரம் உற்றுப்பார்த்து ‘ஐயோ லட்சுமி, உன்னை விட்டும் நான் பிரிந்திருப்பேனோ ; அமெரிக்கா தேசத்தவர்களுக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று சொன்னாயே எப்படி அந்தக் கடிதம்!*- ‘மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ அமெரிக்கா தேசத்து மகாஜனங்கள் அவர்களுக்கு அனேக ஆசீர்வாதம். க்ஷேமம் க்ஷேமத்துக்கு எழுதக் கோருகிறோம். எங்கள் தேசத்து சக்கரவர்த்தியாகிய சந்திர மகாராஜாவும், பட்டமகிக்ஷியாகிய ரோஹிணி மகாராணியும் உங்களுடைய தேசத்துக்குப் பவனி வந்திருக்கிறார்கள். இவ்விடத்தில் நாங்கள் ஏழைக் குடிகள் அவர்களுடைய தரிசனமில்லாமல் தவிக்கிறதினாலே, அவர்கள் இவ்விடம் விஜயம் செய்யும்படி நாங்கள் வேண்டுகிறதாய் எங்கள் விண்ணப்பத்தை அவர்களுக்குத் தெரிவிக்கக் கோருகிறோம்.
இப்படிக்கு (இத்தேசத்துப் பிரஜைகளுக்காக).
ஸ்ரீநிவாசனும், லட்சுமியும்.–
என்று இப்படி யெல்லாம் விளையாடினாயே, என்று சொல்லி அவளுடைய அழகையும், அவளுடைய குரலையும், அவளுடைய பாட்டையும், படிப்பையும், புத்தி விஸ்தாரத்தையும், அவளுடன் தான் விளையாடின விளையாட்டுகளையும் நினைத்து நினைத்து,வாயும், நெஞ்சும், உலரமயங்கி, தன்னையும் தனக்குப் பலமுறை உருவெளியாகத் தோன்றிய தன் மனைவி யையும், உயர விளங்கும் சந்திரனையும், தன்னைக் காக்கும் காப்பாளரையும் முறை முறையே நோக்கி, இரவு முழுவதும் வாடும் சந்திரனுடன் தானும் வாடிச் சோர்ந்திருந்தான்.
பொழுது விடிந்து சிறிது நேரத்துக்கெல்லாம் இரண்டு காவலாளிகள் உருவின கத்தியும் கையுமாய் ஸ்ரீநிவாசனைக் கச்சேரிக்கு விசாரணைக்காக இட்டுச் சென்றார்கள். குற்றம் பெரிய குற்றமானதினாலும், விசாரணை பெரிய விசாரணை யானதாலும், ஐந்து நியாயாதிபதிகள் உட்கார்ந்து விசாரணை செய்தார்கள். இவ்வேடிக்கையைப் பார்க்க ஊர் முழுவதும் கச்சேரியில் வந்து கூடியிருந்தது. கைதி கூட்டிலடைபட்டு
*சந்திரன் அமெரிக்கா இங்கே மறைந்திருக்கும்போது தேசத்தில் பிரகாசிக்கிறதென்பது யாவருக்கும் தெரியும்.
நிற்கிறான். இரண்டு பக்கத்திலும் இரண்டு போர் வீரர்கள் உருவின கத்தியும் கையுமாய்க் காவல் நிற்கிறார்கள்.சர்க்கார் தரப்பு வக்கீலாகிய பெரிய துரையவர்கள் கால் வரையில் தொங்கவிட்ட சட்டையுடன் கம்பீரமாய் எழுந்து, மூக்கில் கண்ணாடி தரித்து, குற்றப் பத்திரிகை படிக்கத் துவக்கினார். அதன் விவரம் யாதெனில்: ‘புதுச்சேரி ராஜ்ஜியத்தின் முதல் மந்திரி திவான் சங்கரய்யர் என்று ஒருவர் இருந்தார். அவர் சர்க்கார் திரவியங்கள் சிலவற்றை அபகரித்துப் பட்டணத்தில் தன் பிள்ளைக்கு அனுப்பிவிட்டார். குற்றம் வெளிப்பட இருந்த தருணத்தில் குடும்ப சகிதமாய் ராஜ்யத்தை விட்டுப் புறப்பட்டு விட்டார். ஸ்ரீநிவாசன் ரூபத்திலும், நிறத்தி லும் சங்கர அய்யருடைய மகனைப்போல இருந்தான். ஆதலால் அவனைச் சங்கரய்யருடைய மகனெனவே சிறை செய்து விசாரணையிட்டார்கள். ஸ்ரீநிவாசன் கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுக் குற்றமறியாத மன தானதால் கொஞ்சமும் கலங்காமல் சிங்கக்குட்டிபோல் நின்று கம்பீரமாய்க் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தான்.
வக்கீல் துரை:-உன் பெயரென்ன? ஸ்ரீநிவாசன்:-ஸ்ரீநிவாசன் வக்கீல்:- உண்மையான பெயர்? ஸ்ரீநிவாசன்:- ஸ்ரீநிவாசன்.
வக்கீல்:- ஒளியாமல் சொல்லு! ஸ்ரீநிவாசன்–ஸ்ரீநிவாசன்.
வக்கீல் – வெங்கட்டராமன் என்று உனக்கு ஒரு பெயருண்டா?
ஸ்ரீநிவாசன்:- அப்படி எனக்கு இதுவரையில் ஒருவரும் பெயரிடவில்லை.
வக்கீல்:-உன் தகப்பனார் பெயர்?
ஸ்ரீநிவாசன்:– நாராயண அய்யர்.
வக்கீல்:–அவர் உத்தியோகம்?
ஸ்ரீநிவாசன்:– தாசில்.
வக்கீல்:- நீ திவான் சங்கரய்யர் மகனல்லவா?
ஸ்ரீநிவாசன்:- அவ்வளவு பெரிய பாக்கியத்தை நான் அடையவில்லை.
வக்கீல்:- நீ அவர் மகனைப்போலவே இருக்கிறோயே! ஸ்ரீநிவாசன்:- அதுவும் என் குற்றமா!
வக்கீல்:- நீ நல்ல பால்யம்; நிரம்ப லட்சணமா யிருக்கிறாய்-
ஸ்ரீநிவாசன்:- அது என் குற்றமல்லவே!
வக்கீல்:- நான் சொல்லுவதைக் கேள்; அவ்வளவு வயதையும் லட்சணத்தையும் வீண்போக்காதே!
ஸ்ரீநிவாசன்:- வீண்போக்கவில்லை. எனக்குத் தக்கபடி கல்யாணம் ஆயிருக்கிறது.
வக்கீல்:- நான் சொல்வதைக் கேள் ! நீ சங்கரய்யர் மகன்போலவே யிருக்கிறாய், குற்றத்தை ஒப்புக்கொண்டுவிடு.
ஸ்ரீநிவாசன்:- சங்கரய்யர் மகனைப்போல் இருக்கிற குற்றத்தை நான் வேணுமென்று செய்யவில்லை.
வக்கீல்:- நீ உண்மையை ஒப்புக்கொண்டுவிடு!
ஸ்ரீநிவாசன்:- தங்களுடைய ஆத்திரத்திற்காகப் பொய் சொல்ல எனக்குச் சம்மதமில்லை.
வக்கீல் துரையவர்களுடைய கேள்விகளுக்குத் திருப்தி யான உத்தரம் அவருக்குக் கிடைக்காததால் சாட்சிகளை யழைத்து இந்த மனிதன் சங்கரய்யர் மகன்தானா அல்லலா என்று விசாரித்தார்கள். ஸ்ரீநிவாசனைச் சிறைபிடித்து வந்தவர்கள் ஆமென்றும் மற்றவர்கள் அல்லவென்றும், பின்னும் சிலர் சந்தேகமாயிருக்கிறது என்றும், சரீரப் பரீட்சையின்மேல் அபிப்பிராயம் கொடுத்தார்கள். பிறகு ஸ்ரீநிவாசன் தன் தரப்பு சாட்சிகளாகத் தன்னுடைய டையரி’ புஸ்தகம், தன் கையிலிருந்த சில கடிதங்கள் இவைகளை ஆஜர்செய்தான்.நியாயாதிபதிகள் அவைகளைப் பரிசோதனை செய்துகொண்டு ஸ்ரீநிவாசன் குற்றவாளி யல்லவென்று தீர்ப்புச்செய்தார்கள். ஸ்ரீநிவாசன் ‘தன் தாயார். தகப்பனாருக்குத்தான் பிறந்தவன் என்ற செய்தியைக் கோர்ட்டு முன்பாக ருசுப்படுத்தினவன் நான் ஒருவன்தான் உலகத்தில். அதைத் தாங்கள் ஒப்புக்கொண்டதற்காக வந்தனமளிக்கிறேன்’ என்று சொல்ல, கோர்ட்டார் அவனுடைய மனோ தைரியத்தையும் பெருந்தன்மையையும் மெச்சி இதுவரையில் சிறையில் வைத்ததற்காகவும், மான நஷ்டத்திற்காகவும் இதர நஷ்டத்திற்காகவும் பதினாயிரம் ரூபாய் சர்க்காரிலிருந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
33 – கமலாம்பாள் கண்ட அதிசயக் கனவு
அம்மையப்ப பிள்ளை முதலானவர்கள் திருவொற்றியூரை விட்டுக் காசியை நோக்கியே புறப்பட்டுவிட்டார்கள். கமலாம்பாள் தான் முன்னிருந்த நிலைமையையும் தன் கணவர் நிரபராதியான தன்னைவிட்டுப் பிரிந்ததையும் நினைத்துப் பின் வருமாறு துக்கிக்கிறாள். ‘இவ்வுலகில் கடவுள் ஒருவரை நம்ப லாமேயன்றி மனிதரில் யாரையும் நம்பக்கூடாது. எவ்வளவு உத்தமமான மனிதனானாலென்ன! அவனும் கடவுளுடைய ஆக்ஞைக்கு உட்பட்டவன் தானே. கடவுளுடைய கிருபை இருந் தால் நமக்கு ஒரு குறைவும் வராது.ஏதோ நாம் செய்த பாவம் அனுபவிக்கிறோம். பகவானுடைய சங்கல்பம் அப்படியிருக்கு மானால் அதற்கு நாம் செய்யத்தக்கது என்ன? புருஷனைத் தியானித்து வருந்துவதைக் காட்டிலும் கடவுளைத் தியானித்தாலாவது பயனுண்டு. மற்ற ஸ்திரீகள் அனுபவியாதபடி நாம் சுகம் அனுபவித்தோமே, அது போதாதா? ஆசைக்கு அளவில்லை யென்பது சரியாகத்தான் இருக்கிறது. மேலும் இந்தத் துன்பமே கடவுளைப்பற்றி நினைக்கச் செய்வதினால் நமக்கு ஒரு பெரிய அனுகூலமாக இருக்கிறது. ‘வெங்காரம் வெய்தெனினும் நோய் தீர்க்கும், சிங்கி குளிர்ந்தும் கொல்லும் என்றதுபோல மனிதன் அனுபவிக்கிற சுகமெல்லாம் அவனுக்கே ஹித சத்துருவாயும், துக்கமெல்லாம் உண்மையான நன்மையாகவும் இருக்கிறது. வாழ்வு வந்துவிட்டால் மனிதனுக்கு உள்ள கண், எல்லாம் அடைத்துப் போகிறது. நான், நான் என்று ‘சர்வம் அஹம்மயம் ஜகத்’ என்றபடி உலகமெல்லாம் நானாகவே நிறைந் திருக்க, பெரியோர், சிறியோர் கடவுள் ஒருவருமே இல்லாமற் போய்விடுகிறது. துன்பம் வந்தாலோ எவ்வளவு கேவலமான மனிதனானாலும் கடவுளைப்பற்றி ஒரு க்ஷணமாவது நினைக் கிறான். ‘மரணகாலத்தில் என்னைத் தியானித்தவனுக்குக்கூட நான் மோக்ஷம் கொடுக்கிறேன்’ என்று வாக்களித்திருக்கும் எளியார்க் கெளியானாகிய பகவான் துன்பம் வந்தகாலத்து நினைப்பவர்களுக்கு ஈடுபடமாட்டானா! ‘பகவானே, உன் இஷ்டப்படி நடத்து; நான் ஒன்றும் முணுமுணுப்ப தில்லை. உன்னையற்றி இவ்வுலகில் ஒரு துணையும் காணேன். இன்பமானாலும், துன்பமானாலும் கொடுக்கிறவன் நீ என்பதை நினைத்தால் எனக்கு ஆனந்தமாயிருக்கிறது’ என்றிவ்வாறு தன் மனதில் எண்ணி யெண்ணிக் கணவனைப் பற்றிக் கவலைப்படுவதைவிட்டுப் பர்த்தாமீது வைத்திருந்த பக்தியையும், அன்பையும் உருக்கத்தையும் மெள்ள மெள்ளப் பகவான்மீது கமலாம்பாள் வைக்கத் தொடங்கினாள். ராம், ராம், ராம் என்று ராமநாம் ஸ்மரணை செய்யத் தொடங்கினாள். ‘சாக்ஷாத் ஸ்ரீராமனே சீதையை விட்டுப் பிரிந்து வருந்தினானே.அவன் காட்டின மாயையிலகப்பட்டுப் புழுவினுங் கேடான நான் புருஷனைவிட்டுப் பிரிந்து வருந்துகிறதும் ஓர் அதிசயமா’ எனச் சிரிப்பாள் ஒரு சமயம். ‘புருஷனேன், பெண்டேன், பிள்ளையேன், குட்டியேன் ! நீ ஒருவன் இருக்க உன்னிலும் பெரியவராய் ஒருவரை மதிக்கவும் கூடுமோ? நீ நிறைந்த உலகத்தில் எதுவும் இல்லையென்று குறைபடுவதும் எங்கள் பாவமன்றோ! என்று எண்ணுவாள் ஒரு சமயம். ‘நீ இருப்பது மெய்; நான் இருப்பது பொய். உன் இச்சை வெல்லுமோ, என் இச்சை வெல்லுமோ? உன் திருவுளப்படியே நடத்து; உன்னிடத்தில் இன்னதுதான் கேட்பதென்றுகூட நான் அறியேன்; எனக்கு எது நன்மையென்று உன் திருவுளத்திற்குத் தோன்றுகிறதோ. அது எனக்குச் சித்திக்கட்டும்’ என்று கோருவாள் ஒரு சமயம். ‘ஐயோ என் கணவரைத்தான் இன்னும் ஒரு தடவை நான் காணவும் கூடுமோ! உன் கிருபை அப்படிக்கில்லையோ என்றேங்குவாள் ஒரு சமயம். இப்படிப் பலவாறு சிந்தித்தழியு நாட்களுள் ஒரு நாள் இரவில் கடைச்சாம சமயத்தில் திடீரென்று கமலாம்பாளுக்கு ஓர் வெகு விசித்திரமான கனவொன்று நேர்ந்தது. மலைகளும், நதிகளும், யானைகளும், புலிகளும், ரிஷிகளும், முனிவர்களும் நிறைந்த ஒரு பெருங் காடொன்று அவள் கண்ணுக்குத் தென்பட்டது. அக்காட்டில் பளீர் என்றும் மின்னும் மின்னற்கொடி போன்ற தேஜோ ரூபத்துடன் பார்க்கப் பதினாயிரம் கண்ணும் போதாத திவ்ய சௌந்தரியத்துடன் கூடிப் புன்னகை தவழ்ந்த உதடும், மலரென மலர்ந்த மூகமும், வண்டெனக் கரிய குழலும், பிறையென வளர்ந்த நுதலும், வில்லெனக் கோடிய புருவமும் நஞ்சிடையமிழ்தங் கூட்டி, ‘கஞ்சத்தினளவிற்றேனும் கடலினும் பெரியதாய், ‘சேயரி சிதறித் தீயவஞ்சமும் களவுமின்றி மழையென மதர்த்த’ கண்களும் கொண்டு ‘அன்னமும் அரம்பையரும் ஆரமழ்து நாண’-
“கற்றைவிரி பொற்சடைமயிர்த்துறுகலாபம்
சுற்றுமணி புக்கவிழை மிக்கிடை துவன்றி
விற்றவிழ வாணிமிர மெய்யணிகள் மின்னச்
சிற்றிடை துடங்கவொளிர் சீரடி பெயர்த்து”
ஒரு பெண்ணரசி அயலே வர, அவளுடன் கைகோர்த்து
“நாணுலாவு மேருவோடு நாணுலாவு பாணியும்
தூணுலாவு தோளும்வாளி யூடுலாவு தூணியும்”
கொண்டு மையோ மரகதமோ மறைகடலோ மழை முகிலோ அய்யோ “இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்,’ என்ற கற்பனை கடிந்த வடிவத்துடன் ஒரு மகாபுருஷன் தன்னெதிரே. வந்ததாகவும், வரும்போதே, ராமனும் சீதையும் வருகிறார்கள்; ராமனும் சீதையும் நான் காண வருகிறார்கள்’ என்று அவளுக்கு ஒரு எண்ணம் உண்டானதாகவும், அவர்கள் வந்தவுடனே கீழே விழுந்து தெண்டனிட்டு அவரிருவருடைய பாதத்தையும் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டதாயும், அந்த மகா புருஷர் “பயப் படாதே! இவளைத் தேடி நானலைந்தது உனக்குத் தெரியுமே” என்று சொல்லித் தேற்றித் திடீரென்று மறைந்ததரயும் கமலாம்பாள் கண்டாள் ஒரு கனவு. கண்டு திடுக்கிட்டு விழித்து “கடவுளே உன் மகிமையே இது, கனவிலாயினும் கண்டேனே” என்று களித்துச் சந்தோஷத்தால் கண்ணீர் பெருகி விம்மியழுதாள். அவள் கண்டது கனவேயன்றி நனவல்ல. ஆயினும் அவளுடைய பெண்புத்திக்கு அது போதுமானதா யிருந்தது. அந்தக் கனவை மறுபடி மறுபடி ஞாபகத்துக்குக் கொண்டுவந்து அமிர்தபானம் பண்ணினாற் போல் அவள் ஆனந்தித்தாள். மறுபடியும் வருமோ அந்தக் கனவு என்று முயற்சித்தாள். வராததைக் கண்டு கண்ணீர் பெருக்கினாள். ராமா, ராமா, ராமா என்று ராம் நாம் ஸ்மரணையை முன்னிலும் பதின்மடங்கு அதிகமாகச் செய் தாள். கணவனை யிழந்த கவலையினும் கனவினை யிழந்த கவலை யதிகமாயிற்று. ‘கடவுளே உன் மகிமையே மகிமை! நானும் ஒரு பொருட்டென உன் திருவுளம் நினைத்ததே’ என மகிழ்ந் தாள். ‘பயப்படாதே’ என்றா சொன்னாய்; நீ யிருக்க எனக் கென்ன பயம்’ என்று நகைத்தாள். ‘வந்தவர்கள் இன்னும் வெளி சிறிது நேரம் இருந்தனர்களா’ என ஏங்கினாள். வந்தவரோ.போய் மறைந்தார் விலக்கவொருவர் தமைக் காணேன்’ என விம்மினாள். ‘ராமன் சீதையைக் கண்டது போல் நானும் என் கணவனைக் காண்பேன், என் புருஷ நாயகத்தைக் காண்பேன்’ எனக் களித்தாள். கமலாம்பாளாவது இப்படியழுவதும், சிரிப்பதுமாக இருந்தாள். லட்சுமியோ முற்றிலும் அழுதவண்ணமாகவே இருந்தாள். ஏதாவது சில சமயம் சிரித்தால் தான் முன்னிருந்த நிலைமை யையும், இப்பொழுது இருக்கும் நிலைமையையும் குறித்து இரங்கும் இரத்தச் சிரிப்பாகவே இருக்குமன்றிச் சந்தோஷச் சிரிப்புக் கிடையாது. புருஷனைக் கண்டது போலவும், காணாமல் தேடுவது போலவும், கனவுகள் கண்டு துயிலற்று வருந்தியது மன்றி, நேரில் சில சமயங்களில் உருவெளித்தோற்றமாகக் கண்டு விரைந்தோடி ஆலிங்கனஞ் செய்யப்போய் வெறு வெளியைக் கண்டு வெட்கித்தாள். மலர்ந்த செந்தாமரை போன்ற முகம் சதா வாடியே யிருந்தது. சரீரம் மாசுபடிந்து அங்கமெல்லாம் துரும்பாய் மெலிந்தது. கூந்தல் சடையாய்த் திரண்டது. கண் உருகிய செம்பாய் உருகியது. பவள வாய் ஒளி மழுங்கி உரையிழந்தது. கைகால் செயலற்றுச் சோர்ந்து கிடந்தன. கை வளைகள் நழுவி முழங்கைமட்டும் ஓடின. கழுத்தில் மாங்கல்யம் ஒன்றன்றி மற்ற நகை யாவும். டையாது. தாம்பூல புஷ்பம் சந்தனாதிகள் வாடையும். உதவாது.லட்சுமி,
”உண்டென வுறையிற் கேட்டா ருயிருறு பாவமெல்லாங்
கண்டினித் தெளிகவென்று காட்டுவாள் போலவாகி”
தன் மனோவேதனையைச் சகிக்கமாட்டாது தீயிடையிட்ட பூங்கொடி போலச் சோம்பினாள்.
– தொடரும்…
– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் இரண்டாவதாக இடம்பெற்ற நாவல்.
– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.