(1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-33
28 – அனர்த்த பரம்பரை
நாலு நாளைக்குப்பிறகு சிதம்பரத்துக்குப் போகும் ரயிலில் ஓர் வசதியான அறையில் கமலாம்பாள், ஸ்ரீநிவாசன், லட்சுமி, சுந்தரம் நாலு பேருமாக உட்கார்ந்திருந்தார்கள். சுந்தரத்துக்கு இப்பொழுது வயது 12 இருக்கலாம். நல்ல புத்திசாலி. வீட்டில் நடந்த சங்கதியெல்லாம் தெரிந்ததன் பேரில் ‘அப்பாவை நான் பார்க்கவேணும்’ என்று அதிக ஆவல் கொண்டு ஸ்ரீநிவாசன் புறப்படும்போது கூடப் புறப்பட்டுவிட்டான். கமலாம்பாளுக்கு ஒரு வேளை அவனையும் லட்சுமியையும் ஸ்ரீநிவாசனையும் உத்தேசித்தாவது தன் கணவர் உலகவிரக்தியை விட்டுக் கிரஹஸ்த மார்க்கத்திற்குத் திரும்பமாட்டாரா என்ற எண்ணம். அப்படிப் போகும் போதே ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஸ்ரீநிவாசன் கீழேயிறங்கி ஒருவேளை முத்துஸ்வாமியய்யர் தென்படலாமோ என்ற எண்ணத்துடன் தேடிக்கொண்டு வந்தான். சீர்காழி ஸ்டேஷனிலிறங்கி மழை பெய்துகொண்டிருந்ததால் குடை யும் கையுமாய் அவ்வித ஆராய்ச்சி செய்யும்பொழுது விலை யுயர்ந்த சரிகைத் தொப்பியும், பளபள என்று மின்னும் கருப்புப் பட்டுச் சட்டையும் மூன்றுகை அகலமுள்ள சரிகை அங்கவஸ்திரமும், தந்தத்தினால் செய்யப்பட்ட கோமுகத் துடன் தங்கப்பூண் பிடிக்கப்பட்ட கைப் பிரம்பும், பட்டுக் குஞ்சரம் கட்டிய குடையும், காலில் திவ்வியமான ஜப்பான் சடாவும், மார்பில் தங்கக் கடியாரச் சங்கிலியும் அணிந்த ஒரு அலங்கார புருஷன் அவனிடம் வந்து ‘குட் மார்னிங்’ என்று சலாம் செய்து வயிர மோதிரங்களணிந்த தன் கையால் அவன் கையைக் குலுக்கி “என்ன சௌக்கியமா? நெடுநாளாய் விட்டதே பார்த்து” என்று யோக க்ஷேமங்களை விசாரித்தான். ஸ்ரீநிவாசனுக்கு அந்த மனிதனை முன் பார்த்த ஞாபகமே கிடையாது. ஆனால் அவனை ‘நீ யார்’ என்று கேட்பது அலௌகிகமென நினைத்து, தெரிந்ததுபோல் பாவனை பண்ணித் தானும் அவனுடைய யோக க்ஷேமாதிசயங்களை ஜாக்கிரதையாய் விசாரித்தான். அந்த மனிதன் அவன் கையுடன் கைகோர்த்து உல்லாசமாய் உலவுவதுபோல் அவனைப் பேசிக்கொண்டே நடத்திக் கொண்டு போக, ஸ்ரீநிவாசன் “ரயிலுக்கு நாழிகையாய் விட்டது போக வேணுமே’ என, அந்த மனிதன் “இல்லை, இன்றைக்கு இன்னும் அரைமணிக்கு இங்கே ரயில் நிற்கவேண்டி யிருக்கிறது. வடக்கேயிருந்து வரும் ரயில் வந்துதான் இது புறப்படவேண்டி யிருக்கிறது. அடே யாரடா ‘ப்யூன்’ சாமான்களை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்” என்று சேவகனுக்குத் தாக்கீது கொடுத்துவிட்டு, “நாம் மழையில் இங்கு நிற்பானேன், இங்கு ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டு வரையில் போய் வருவோம். நமக்காக அங்கே டிபன் தயாராயிருக்கிறது, போய் சீக்கிரம் வந்துவிடலாம்; நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம்; இன்னும் அரைமணி செல்லும் ரயில் போவதற்கு; நெடுநாளாய்விட்டது ‘சார்’, தங்களைப் பார்த்து, கடைசியாய் நான் மட்ராசை விட்டு ஊருக்கு வருவதற்கு முந்தின நாள் பார்த்தது” என்று சொல்லி அவனை இட்டுப்போக, ரயில் புறப்பட்டுவிட்டது. ஸ்ரீநிவாசன் “ஐயையோ ரயில் புறப்பட்டுவிட்டதே’ என, அவன் “என்ன பயம் பயப்படுகிறீர்கள் ஐயா! இத்தனை வருஷம் மட்ராசிலிருந்து விட்டு வண்டி ‘லைன்’ மாற்றுகிறதற் காசுப் போகிறது தெரியாதா! அதோ அந்த வண்டி வருகிறதே தெரியவில்லையா, மணி யடித்தது தங்களுக்குக் கேட்கவில்லையோ?” என்று சொல்லி ஏமாற்றி ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டிற்குப் பின்புறமாகக் கூட்டிப்போக, உருவின கத்தியும் கையுமாய் நின்ற குதிரைப் படைஞர் நால்வர் திடீரென்று ஸ்ரீநிவாசனைத் தூக்கித் தயாராயிருந்த ஓர் குதிரையில் வைத்துக் கை கால்களில் விலங்கிட்டுத் தங்கள் வாகனங்களைத் தட்டி விட்டார்கள். அவனைக் கூட்டி வந்த மனிதனும் ஓர் குதிரையின்மீது ஏறி அவர்களுடன் கூடவே சென்றான். ஸ்ரீநிவாசனுக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. ஆனால் குதிரை போகிற வேகத்தில் அவன் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. தனியே விட்டு வந்த மனைவி, மாமியார், மைத்துனனுக்காக விசாரப்படுகிறான். ஐயோ அவர்கள் என்ன செய்வார்களோ என்று ஏங்குகிறான். இந்த ராக்ஷதப் பயல் களைக் கொன்றுவிடுகிறேன் என்று சபதம் கூறுகிறான். தன்னை வஞ்சித்து வந்த மனிதனை வாயில் வந்தபடியெல்லாம் உரக்கத் திட்டுகிறான். அதைத் தவிர அவன் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.
இது நிற்க, ரயிலில் உள்ளவர்கள் அவன் வராமல் ரயில் போவதைக் கண்டு அலறி வண்டியைவிட்டுக் கீழே வர எத்தனிப்பதைக் கண்டு ரயில் வேலைக்காரன் கதவைப் பலமாய் சாத்தி ‘இறங்கக்கூடாது, வண்டி போகிறபொழுது இறங்கக் கூடாது’ என்று அதட்ட அவர்கள் உள்ளே உட்கார்ந்து அச்சத் துடன் அழ ஆரம்பித்தார்கள். கூடவிருந்த மனிதர்களுள் ஒருவர், “அம்மா பயப்படாதேயுங்கள். அடுத்த ஸ்டேஷனுக் குப்போய் இறங்கிக்கொண்டு தந்தி கொடுத்தால் மறு ரயிலில் அவர் வந்துவிடுவார். ராத்திரி எட்டுக்குள் நீங்கள் இவரைப் பார்க்கலாம். தைரியமாய் இருங்கள். இன்னும் சிறிது தூரம்தான் இருக்கிறது. விசாரப்படவேண்டாம்.நாங்கள் எல்லாரும் இருக்கிறோம்” என்று தைரியம் சொல்லிக்கொண்டு வரும்போதே திடீரென்று ஒரு பாலம் படார் என்ற சப்தத் துடன் உடைந்தது. உடையவே வண்டிகள் சரசரவென்று கீழே அமோகமாகப் போகிற பிரவாகத்தில் ஒன்றின்மேல் ஒன்றாய் விழுந்தன. ‘ஹோ’வென்று ஜனங்கள் அலறுகிறார்கள். இஞ்சின் வண்டி மணலுடன் புதைந்துவிட்டது. மற்ற வண்டி களுள்ளும் ஜலம் குதித்து புகுந்து ஜனங்களை வெளியி லிழுத்தது.நதியில் மேல் வள்ளம் வேறு வண்டலிட்டு வருகிறது. அப்படியப்படியே ஜனங்கள் ஜலத்தால் அரித்துக்கொண்டு போகப்படுகிறார்கள். குஞ்சு குழந்தைகள், மூட்டை முடிச்சுகள் எல்லாம் பிரவாகத்தில் பிரயாணம் புறப்பட்டு விட்டன. நீந்தத் தெரிந்த சிலர் கை கால்களை வீசி நீந்து கிறார்கள். கரையோரம் தள்ளப்பட்ட சிலர் தத்தளித்துக் கரையை நோக்கிச் செல்ல முயலுகிறார்கள். நடு ஜலத்தில் அகப்பட்டவர்கள் அரோஹர வென்று முழுகுவதும், மிதப் பதும், அடித்துக்கொண்டு போகப்படுவதுமாயிருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் இவ்வளவும் போதாதென்று காற்றும் மழையும் வெகு உக்கிரமாய் வீசுகிறது. கரையோரத்திலுள்ள மரங்கள் சடசட வென்று முறிந்து ஜலத்தில் விழுகின்றன. அவைகளைப் பற்றிக்கொண்டு சிலர் கரைக்கு ஏறுகிறார்கள். சிலர் அவைகளால் மோதப்பட்டு ‘ஐயோ’ வென்று அபயக் குரலுடன் முழுகுகிறார்கள். பயங்கரமாய் இடி இடிக்கிறது. ஆகாயம் இருண்டுவிட்டது. மின்னல் ‘பளீர் பளீர்’ என்று மின்னி இருட்டை அதிகப்படுத்துகிறது. கல்லுக்கல்லாய் மழை யடிக்கிறது. ஆகாயத்துக்கும் பூமிக்கும் அமோகமான கோர யுத்தம் போலிருந்தது. காற்று ‘ஹோ’ என்று யுத்த முழக்கம் முழங்கி ஆதிசேஷனைப் போலச் சீறிக் கரைக்குப் போகிறவர்களையும் ஜலத்திலிழுக்கிறது. இடி முழக்கத்தில் பூமி யதிருகிறது. மரங்கள் இப்படியுமுண்டா வென்று தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்குகின்றன. பகலோ இரவோ என்றுகூடத் தெரியவில்லை. சூரிய சந்திர நக்ஷத்திர மெல்லாம் இந்தப் பரிதாபத்தைப் பார்க்கமாட்டாமலோ ஏதோ, போன இடம் தெரியாமல் ஓடி யொளித்தன.ஏரி, குளங்களெல்லாம் உடைய, அவற்றின் ஜலத்தையுங் கூடக் கொள்ளை கொண்ட நதி, மலைப்பாம்புகள், குறவர் குடிசைகள் செத்த பிணங்கள், விழுந்த மரங்கள், மடிந்த மாடுகள் ‘கன்று கள் இவைகளை யெல்லாம் வாரியடித்துக்கொண்டு சில விடங் களில் ‘ஹோ’ வென்று கூப்பிட்டும், சில விடங்களில் ‘ஹம் என்று அடங்கியும் ‘தூக்கமே மிகுந்து உள் தெளிவின்றியே வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே’ என்றபடி சுய ஞாபக் மற்று அறிவை யிழந்து அங்கங்கள் துவண்டு வரும் கட்குடி யனைப் போலத் தள்ளாடியும்,விரைந்தோடியும்,கூவிப்பாடி யும், ஆடியசைந்தும், களியாட்டக் கோலாகலத்துடன் சஞ்சரித் துத் தான் அடித்த கொள்ளை போதாதென்று தனக்குமேல் போடப்பட்ட பாலத்தைப் பொறாமல் அதிற் பாய்ந்து அதை உடைத்துத் தகர்த்து நூற்றுக்கணக்கான ஜனங்களையும் தன் வசப்படுத்திக்கொண்டது. குழந்தை உருண்டு முழுகுவதைக் கண்ட ஒரு தாய் தானும் கூடவே முழுகினாள். ஸ்திரீ முழுகு வதைக்கண்ட புருஷன் அவளைப்பிடித்து இழுக்க எத்தனித்துத் தன் உயிரையும் அவளுடைய உயிரோடு உயர அனுப்பினான். மாமனாரகம் போய் வந்த மாப்பிள்ளைச் சிறுவர்கள் எத்தனையோ; நூதனமாய் புதுமணம் புரிந்த புருஷர் த்தனையோ; பெரியோரிருக்க அவர் கண்முன் தாமிறந்த சிறியோர் எத்தனையோ ; இன்று வருவார் நாளை வருவார் என்று ‘நாளெண்ணித் தேய்ந்த விரலுடன் காலமதைக் கழிக்கும் நாயகிகளிருக்க அங்கு ஒன்றும் உரையாதிறந்த நாயகரெத்தனையோ ஒரு தாய்க்கொரு மகனாயிருந்த பாலர்களெத்தனையோ ; கர்ப்பஞ்சுமந்த காதலிகள்தான் எத்தனையோ : இவ்வித பரிதாபங்கள் நிறைந்து ஜனங்கள் முழுகினோரும், முழுக இருப்போரும், மிதப்போரும், நீந்து வோருமாயிருந்த அத்தருணத்தில் கரையை நோக்கி நல்ல காற்று ஒன்று சமயசஞ்சீவியாய் வீச நீந்த முடியாத நிர்ப்- யலர்களில் அநேகர் கரையோரம் ஒதுக்கப்பட்டனர். ட்சுமியும் சுந்தரமும் கரையோரமாயுள்ள ஓர் மணற்றிட்டில் ஒதுக்கப்பட்டார்கள். கமலாம்பாள் அவர்களுக்கருகில் ஒரு ணற்புதரில் அரை உயிருடன் அலங்கோலமாய்க் கிடந்தாள். இப்படி இவர்கள் கிடக்கும்போது யாரோ ஒரு கிழவர் அந்த மழையில் கையில் குடையும் ராந்தலும் கொண்டு அங்கு விழுந்திருந்தவர்களைத் தட்டி யெழுப்பி மூர்ச்சை தெளிவித்து அருகிருந்த மடத்துக்கு அழைத்துப்போய்க்கொண்டிருந்தார். அவர் கமலாம்பாளும், லட்சுமியும், சுந்தரமும் இருந்த இடம் வந்து அவர்களைப் பார்த்துத் திடுக்கிட்டு அருகில் உட்கார்ந்து ஐயோ இதென்ன ஆபத்து. இவர்கள் எங்கே யிங்கு வந்தார்கள்! அடப்பாவமே, உயிர்தான் இருக்கிறதோ இல்லையோ!’ என்று கவலைப்பட்டுக் கைதட்டி சுவாசமறிந்து பார்த்து அவர்களை மெதுவாய்த் தூக்கி மண்ட யத்தில் சேர்த்து மூர்ச்சை தெளிவிக்கவேண்டிய பிரயத்தனங் களைச் செய்துகொண்டிருந்தார்.
29 – அம்மையப்ப பிள்ளையின் பூர்வகதை
மூர்ச்சையாய்க் கிடந்த லட்சுமி, கமலாம்பாள், சுந்தரம் ஆகிய மூவரும் ஆற்றங்கரையினருகிலிருந்த ஓர் மண்டபத் தில் சேர்க்கப்பட்டார்கள். அங்கே அவர்களை அறிவுக்குக் கொண்டுவருவதற்கு வேண்டிய பிரயத்தனங்கள் செய்யப் யட்டன. அவ்வுபாயங்களின் உதவியால் அவர்கள் மூவரும் தங்களுடைய சுயஞாபகத்தை யடைந்தார்கள். கமலாம்பாள் திடுக்கிட்டு விழித்துப் பார்க்க வித்வான் அம்மையப்ப பிள்ளை அவர்கள் அருகில் நின்றுகொண்டு இருந்தார். ஆடுசா யட்டியில் அவதரித்த அண்டர் புகழும் அஷ்டாவதானம் மகாவித்வான் அம்மையப்பபிள்ளை அவர்களை இதைப் படிப்பவர்கள் மறந்திருக்க மாட்டார்களென்று நம்புகிறேன். அவர் வயதாய்விட்டபடியால் மதுரைக் காலேஜில் பென்ஷன் பெற்றுக்கொண்டு அதைவிட்டு வெளியேறி புண்ணிய ஸ்தலங்களில் போய் சுவாமி தரிசனம் செய்யும்பொருட்டு வடக்கே யாத்திரை போய்க் கொண்டிருந்தார். எந்த ஸ்தலததுக்குப் போனாலும் அங்கேயே அதைப்பற்றிப் பாடாமல் விடுவதில்லை. சீர், தளை,மோனை, எதுகை முதலிய யாப்பிலக்கணத்தின் பிள்ளை குட்டி சம்சாரங்கள் சமயமறிந்து சண்டைசெய்யும். செய்தாலும் அந்த முரட்டுக்கிழவர் விடுவதில்லை. அவர் சித்திரக்கவிகள் எழுதுவதில் மகா சமர்த்தர். சீர்கணக்கு, அடிக்கணக்கு, மோனை, எதுகை, விதிகள் இவைகளை லட்சியம் செய்யாமலே பாடிவிடுவார். இரண்டு கால் மனிதன் பிறப்பது உலகத்தில் சகஜமாயிருக் கிறது. அப்படியில்லாமல் மூன்றுகால். நாலுகை, இரண்டு தலை இப்படி மனிதர்கள் இருந்தால் அவர்களை டிக்கட்டு வரி கொடுத்தல்லவோ ஜனங்கள் போய்ப் பார்க்கிறார்கள். அதுபோல நாலடி வெண்பாக்கள் உலகத்தில் சர்வசாமான்யம். அப்படியில்லாமல் 6- அடி வெண்பாக்கள், 7- அடி வெண்பாக் களாயிருந்தால் எவ்வளவு விசித்திரமாயிருக்கும். அவைகளை அம்மையப்ப பிள்ளையவர்களைத் தவிர வேறுயார்தான் பாடக் கூடும் இவ்வித விசித்திரக் கவிகளை ஸ்தலங்கள்தோறும் கூசாமல் வாரியிறைத்து பாடல் பெறாத ஆலயங்களைக்கூடப் பாடல் பெறச்செய்து யாத்திரை செய்துகொண்டிருந்தார். பாலம் உடைந்து ரயிலில் ஆபத்து நேரிட்ட அன்று அவர் அந்தப் பாலத்துக்கு அடுத்த ஓர் கிராமத்தில் இருந்து கொண்டிருந்தார். இவ்வித விபத்து நேரிட்டதென்று தெரிந்த உடனேயே புண்ணியம் சேகரிப்பதில் வெகு குறிப்பாயிருந்த அவர் ராந்தலும் குடையும் எடுத்துக்கொண்டு மற்றுஞ் சிலருடன் நதியில் அகப்பட்டுக் கொண்ட ஜனங்களை ரட்சிப்ப தற்காக ஓடிவந்தார். வந்தவர் கமலாம்பாள், லட்சுமி யிவர் களைக் கண்டு, அடடா, இவர்களெங்கே யிங்கு வந்தார்க ளென்று ஆச்சரியப்பட்டு அவர்களை மண்டபத்தில் சேர்த்துக் கொண்டிருந்தார்.
அம்மையப்ப பிள்ளை முத்துஸ்வாமியய்யரால் ஆதரிக்கப் பட்டவரென்று மாத்திரம் சொன்னோமேயல்லாது அவர் களிருவருக்கும் உள்ள உறவை நாம் முன்னே சொல்லவில்லை. மேல் நடக்கவேண்டிய விர்த்தாந்தங்களுக்கு அது தெரிய வேண்டிய தவசிமாயிருப்பதால் அதைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்வோம்.
முத்துஸ்வாமியய்யருடைய தகப்பனார் ரங்கசாமியய்யர் என்று ஒருவர் இருந்தார். அவர் மகா கோலாகல புருஷர். அனுபவிப்பதற்காகவே அவதரித்த ஆத்மா. சந்தனம், புஷ்பம், பாட்டு இவை இல்லாத நாள் கிடையாது. ஆடல், பாடலிலேயே அவருடைய ஆயுசு முழுவதும் சென்றது. இந்த நித்திய கல்யாண புருஷர் சாகும் சமயத்தில் தன் தாசியின் மடியில் தலைவைத்து அவளுடைய வீணாகானத்தைக் கேட்டுக்கொண்டே பரலோகம் சென்றார்.
அவர் ஒருநாள் தன் தாசி தெய்வயானை வீட்டில் உட்கார்ந்து அவளைப் பாடச்சொல்லிக் கேட்டுக் கொண்டிருந் தார். அவள் ஜாவளி, க்ஷேத்திரிய பதம் எல்லாம் பாடிவிட்டுத் தான் நூதனமாக மெட்டு அமைத்து வைத்திருந்த சில நைஷதப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அம்மையப்ப பிள்ளை சம்பாத்தியத்தின் நிமித்தமாக ஆடுசா பட்டியை விட்டு வெளியேறி சிறு குளத்துக்கு வந்திருந்தார். அவர் அப்பொழுதே கொஞ்சம் தமிழ் பார்த்திருந்தார். ரங்கசாமி அய்யரும் தெய்வயானையும் மேற்சொல்லிய அவசரத்திலிருந்தபோது அம்மையப்ப பிள்ளை தற்செயலாய் அந்த வீதி வழி சென்றார். அன்று ராத்திரி அவருக்குச் சோறு கிடையாததால் ஸ்தல உபவாசம். தமிழ்ப் பாடல்கள் அவருடைய காதில் படவே,
“செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றிற்கு மீயப் படும்”
என்ற குறளை மனதில் நினைத்துக்கொண்டு தெய்வயானை வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தார். சங்கீதத்தில் அவருக்கு நிரம்ப ஞானம்! டல்லவி பாடினால், மேலே பாட்டுத் தெரியாதோ, திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்லுகிறான். என்று நினைப்பார். ‘பாட்டில் இத்தனை சேஷ்டை எதற்கு. நேராக உள்ளபடி சொல்லிவிட்டால் நான் கேட்டுப் போகமாட்டேனோ’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு திண்ணையில் சிறிது நேரம் அமர்ந்திருந் தார். அது குளிர்காலம். காற்று அவருடைய தரித்திரத் தைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாது அவர்மேல் ஜில்லென்று அடித்தது. அவர் உடுத்தியிருந்த கந்தல்கள் அவரைக் காப்பாற்றப் போதாதனவாயிருந்தன. குளிருக்குப் பயந்து அவர் திண்ணையை விட்டிறங்கி அந்த வீட்டு ரேழிக்குள் சென்றார். பாட்டு மயக்கத்தில் அது அன்னிய ருடைய வீடென்பது அவருக்கு மறந்துபோய் விட்டது. அங்கே போனபிறகு யாராவது பார்க்கக்கூடுமென்று பயந்து அருகிலிருந்த ஒரு குடுவையிடுக்கில் நுழைந்து கொட்டுக்கொட்டென்று கண்ணை விழித்துக்கொண்டு பதுங்கி உட்கார்ந்திருந்தார். இப்படி இருக்கிறபோதே ரங்கசாமி யய்யர் திடீரென்று எழுந்து தற்செயலாய் வாசலை நோக்கி வர அம்மையப்ப பிள்ளை பதுங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு விட்டார். ஊரில் அப்பொழுது கள்ளர் பயம் அதிகம். தெற்குச் சீமையிலிருந்து சில கள்ளர்கள் நூதனமாக வந்திருப்பதாக அன்றுதான் பிரஸ்தாபம். ரங்கசாமியய்யர் அவரைக் கண்ட வுடன் ‘கள்ளன், கள்ளன்’ என்று கூக்குரலிட வீட்டு வேலைக்காரர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள், எதிர்த்த வீட்டுக் காரர்கள் எல்லாருமாகத் ‘திருடன், திருடன்’ என்று கத்திக் கொண்டு ஓடிவந்து அம்மையப்ப பிள்ளையைக் குடுவை விடுக்கிலிருந்து சரசரவென்று வெளியே இழுத்தார் கள். அவர் உருவம், நிறம், உடை எல்லாவற்றிலும் சாக்ஷாத் கள்ளனைப் போலவே இருந்தார். அப்படியிருந்த ஆடுசாபட்டித் திருமேனியை அவர்கள் எல்லாருமாகப் பிடித்துக்கட்டி வாயில் வந்தபடியெல்லாம் திட்டி அடிக்கத் தொடங்கினார்கள். ஒரு தமிழ் வித்வான் ஒருவர் தனிவழி போய்க்கொண்டிருந்தபோது திருடர்கள் வந்து மறிக்க அவர் ‘என்னிடத்தில் ஐந்து ரூபாய் பெறும்படியான ஒரு அரைஞாண் மாத்திரந்தானிருக்கிறது. யானோ பட்டணத்திற்குள் செல்பவன், அரைவேஷ்டியுடன் விட்டுவிடு வீரனே வேண்டுகிறேன்’ என்று வெகு இலக்கணமாய் மறுமொழி சொன்னதாக ஒரு கதையுண்டு. அதுபோல நடந்த உபசாரத்தைச் சகியாத் பிள்ளை அவர்களும் ‘இன்று நீவிர் *பிழைத்தீர், இங்ஙனம் பிழையீர். என் கொடுமை. நீவிர் பலர், நான் தனி’ என்று, ‘நீங்கள் ஒருநாளும் தப்பிதம் செய்யாதவர்கள், இன்று என்னை அடித்துத் தப்பிதம் செய்தது என் காலக் கொடுமை, நீங்கள் பலர், நான் ஒருவன்’ என்ற அர்த்தத்தில் இலக்கண சொல்ல, அவர்கள் ‘ஏனடா பயலே நாங்கள் பிழைத்தோமா? மாய்ச் இல்லாவிட்டால் கொன்று போடுவாயோ? இனிமேல் யிழைக்க மாட்டோமோ, என்னடா செய்வாய்? இவன் பக்காத் திருடன், தெற்குச் சீமைக் கள்ளன். என்ன தைரிய மாய் நீங்கள் பிழைக்கமாட்டீர்களென்று சொல்லுகிறான்” என்று பின்னும் பலமாய்ப் பிரகாரம் சாதிக்க, பிள்ளையவர்கள் “நான் புலவன்’ என்றார். ‘ஏனடா புலையனா! ப றையனா! பறைப்பயல் இங்கே வரலாயிற்றா! நீ பறைத்திருடனா, ஏனடா பறைப்பயலே?’ என, அம்மையப்பபிள்ளை ‘நான் நன் மரபில் உதித்தேன். அதை நீவிர் அறியீர்’ என்று கதற, அது அவர்கள் காதுக்கு ‘நான் நன்மறைவில் ஒளித்தேன்’ என்று பட்டது. படவே அவர்கள் ‘நீ மறைவில் ஒளித்திருந் தால் எங்களுக்குத் தெரியாதோ திருட்டுப் போக்கிரி’ என்று திட்டிப் பின்னும் பலமாய் மொத்த, பிள்ளையவர்கள் ‘நான் கள்ளனல்லேன். நும் இல்மாட்டு வௌவ வந்தேன் அல்லேன், விட்டுவிடுங்கள், இனித் தாங்காது இச்சரீரம், விடுமின் விடுமின்’ என்று பின்னும் இலக்கணமாய்க் கூவியழ, ரங்கசாமி அய்யர் ‘இது யார், இவன் தொழிலில் திருடனா யிருக்கிறான். பேச்சில் புலவனாயிருக்கிறான்’ என்று கூட்டத்தை விலக்கிக் குற்றுயிராயிருந்த அம்மையப்ப பிள்ளையிடம் வர,
*’பிழைத்தீர்’ என்ற வார்த்தையைப் பிழைசெய்தீர், தப்பிதம் செய்தீர்கள், என்னையடித்தது உங்களுக்குச் சரியல்ல என்ற அர்த்தத்தில் சொன்னார்.
*மரபு – குலம்
அவர் அவர் காலைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு “நான் ஆடுசாபட்டி வித்துவான் அம்மையப் பிள்ளை, பாடல் கேட்பான் வந்தேன், திருடுவான் வந்தேன் அல்லேன்” என்று சொல்ல, அவர் அவரைக் கூர்ந்து பார்த்து இவன் திருட வந்தவனல்லவென்று தோற்றததால் ஊகித்து “இப்பொழுது விட்டுவிடுங்கள். காலமே பார்த்துக்கொள்வோம்” என்று சொல்லி அவரைப் பத்திரமாய் ஒரு அறையில் போட்டுப் பூட்டி விடும்படி உத்தரவு செய்தார் அப்படியே அவர்களும் சம்மதித்து தெய்வயானை வீட்டிலேயே ஒரு அறையுள் அவரைப் பூட்டிவைத்தார்கள்.
காலையில் எழுந்து ரங்கசாமி அய்யர் அறையைத் திறந்து பார்க்க, பட்ட அடியில் நன்றாய்த் தூங்கி அப்பொழுதுதான் விழித்த அம்மையப்ப பிள்ளை அவர் காலைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு தன் விர்த்தாந்தத்தை உள்ளபடி சொல்லியழ, அவர் ‘இந்த மனிதன் ஒரு கற்றறி மூடன், ஒன்றும் தெரியாத அப்பாவி’ என்று அறிந்து ராத்திரி அவர் பட்ட அவஸ்தையைக் குறித்துத் துக்கித்து அன்று முதல் அவரைத் தன் சம்ரட்சணையிலேயே வைத்துக்கொண்டார். அவருடன் பழகப் பழக அவருடைய மாதிரி ரங்கசாமி அய்யருக்கு நரம்பப் பிடித்தது. அவருக்கு தெய்வயானை வயிற்றிற் பிறந்த பெண் ஒன்று இருந்தது. அதற்கு ஜானகி யென்று பெயர். அதை வேசித் தொழிலில்விட அவருக்குச் சம்மதமில்லை. யாராவது ஒரு ஏழைக்குக் கொடுத்து அவனை சம்ரட்சணை செய்யவேண்டுமென்று அவருக்கு நெடுநாளாய் எண்ணம் உண்டு. அம்மையப்ப பிள்ளையினுடைய குணம் அவருக்கு நிரம்பப் பிடித்திருந்ததால் அந்தப் பெண்ணை அவருக்கே கன்னிகாதானம் செய்து கொடுத்தார். அவர் இறந்துபோன பிறகு முத்துஸ்வாமியய்யரும் அந்த உறவைப் பாராட்டி வந்ததுமன்றி அவருக்குத் தக்க சீர்வரிசைகள் செய்து நிலம் முதலியன கொடுத்து மதுரைக் காலேஜில் தமிழ்ப் பண்டிதர் வேலையும் சம்பாதித்துத் தந்தார். அம்மையப்ப பிள்ளையும் ஜானகியம்மாளும் இல்லற தர்மத்தை வழுவாது பரிபாலித்து வந்தார்கள். கமலாம்பாள் ஜானகியம்மாளைத் தன் பர்த்தாவின் தங்கையெனவே பாவித்து வந்தாள். அவர்களிருவருக்கும நிரம்ப நேசம். இப்பொழுது அம்மையப்ப பிள்ளையும் ஜானகியம்மாளும் சேர்ந்துதான் யாத்திரை வந்திருந்தார்கள்.
கமலாம்பாள் கண் விழித்தவுடன் அம்மையப்ப பிள்ளை எழுந்து அவளை நமஸ்காரம் செய்தார்.லட்சுமியும் சுந்தரமும் ‘அத்திம்பேர்’ அம்மையப்ப பிள்ளையைக் கண்டு நிரம்ப சந்தோஷித்தவர்களாய் அத்தையைப்பற்றி யோகக்ஷேம விசாரணை செய்தார்கள். பிறகு எல்லோரையும் அம்மை யப்ப பிள்ளை தான் இறங்கியிருந்த ஜாகைக்கு அழைத்துப் போனார். ஜானகியம்மாள் இவர்களை நிரம்பசந்தோஷத்துடன் உபசரித்துச் சமையலுக்கு வேண்டிய சாமான்களையெலலாம். கொடுத்து யோகக்ஷேமங்களை யெல்லாம் விசாரித்தாள். முத்துஸ்வாமியய்யருடைய குடும்பம் நிலைகுலைந்து போயிருப்ப தைக் கேட்ட ஜானகி அம்மாளும் அவள் கணவரும் அழுது துக்கித்தனர். பிறகு அழுவதில் பயனில்லையென்று ஒருவரை யொருவர் தேற்றிக்கொண்டு சீர்காழியிலிருந்து சிதம்பரத் துக்கு மறு ரயில் வருமுன்னம் தாங்கள் வண்டிப்பாதையாய்ச் சிதம்பரம் போகவேண்டும் என்று தீர்மானித்து அப்படியே புறப்பட்டார்கள். இவர்கள் போனபிறகு இரண்டுநாளைக்கு சீர்காழிக்கப்பால் ரயில் கிடையாது. அப்புறம் ஏதோ யாலங்களைச் செப்பனிட்டு ரயிலை விட்டார்கள். ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அந்த ரயிலில் ஸ்ரீநிவாசனைக் காணோம். மறுபடி இரண்டு மூன்று ரயிலுக்கு வந்து வந்து ஸ்ரீநிவாசனை அம்மையப்ப பிள்ளை தேடினார். அவன் வரவில்லை. இதற்குள் சிதம்பரம் ஊர் முழுவதும் வீடு வீடாக நுழைந்து முத்து ஸ்வாமியய்யரைத் தேடினார்கள். அவரைப்பற்றி யாதொரு துப்பும் கிடைக்கவில்லை. மூன்று நாள் இப்படித் தேடியான பிறகு கடைசியாய் ஒரு தீட்சிதர் முத்துஸ்வாமியய்யருடைய லட்சணங்களைக் கேட்டவுடன் அந்தமாதிரி ஒருவர் தன் அகத்திலேயே தங்கியிருந்ததாகவும். அவர் சீக்கிரத்தில் சம்சார சகிதமாகக் காசிக்குப் போகப்போகிறதாய்ச் சொன்ன சொன்னதாகவும் தெரிவித்தார். அவர் ஆள் அடையாளங்கள், பேச்சு, நடை முதலிய யாவும் பொருந்தியிருந்தன.அவர் ஊரும் ஏதோ ஒரு ‘குளம்’ என்று சொன்ன தாகவும் சொன்னார். இந்தத் துப்பை வைத்துக்கொண்டு அவர் காசிக்குத்தான் போயிருக்க வேண்டுமென்று தீர்மானித் தார்கள். ஆனால் இவர்கள் வடக்கே போவதா தெற்கே போவதா என்று தீர்மானிக்கச் சுலபத்தில் கூடவில்லை. ஸ்ரீநிவாசனைக் காணோம் என்று லட்சுமி புழுவாய்த் துடிக் கிறாள். காற்று மூலமாவது அவனுடைய க்ஷேமசமாசாரம் தெரிந்தால் போதுமென்றாய் விட்டது. ஸ்ரீநிவாசனையே தேடுவதா அல்லது முத்துஸ்வாமி அய்யரைத் தேடுவதா என்று அவர்களுக்குள் ஸ்திரப்படவில்லை. கடைசியாக ஸ்ரீநிவாசன் அவர்களைத் தேடிக்கொண்டு சிதம்பரத்துக்குத் தான் வருவான் என்று ஊகித்து அப்படி வரும் பட்சத்தில் அவர்கள் காசிக்குப் போயிருக்கும் செய்தியை அவனுக்குத் தெரிவிக்க அவன் பேருக்கு அவ்வூர் தபாலாபீசில் ஒரு காகிதமும் முக்கியமான ஒவ்வொரு தீட்சதரிடத்தும் ஒரு காகிதமும் கொடுத்துவிட்டு நடராஜர் சந்நிதியில் போய் விழுந்து முறையிட்டுக் காசியை நோக்கிப் புறப்பட்டார்கள்.
30 – ‘கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த செழுந்தேனாகி’
இது நிற்க, முன்னே முத்துஸ்வாமியய்யரும் அவருக்குக் குருவாய் வந்துதவிய சச்சிதானந்த ஸ்வாமிகளும் நடுராத் திரியில் தனிவழி சென்றார்களே, அவர்களுடைய நிலைமையைப்
*மனிதனுடைய சின்மய ஸ்வரூபத்திலும் ஞானானந்த வல்லமையிலும் நம்பிக்கையற்றவர்க்கு இவ்வத்தியாயம் ருசிக்காது; கதையைமட்டும் கவனிப்பவருக்கு இது அத்தியா வசியமுமன்று.
பற்றிச் சிறிது விசாரிப்போம். முத்துஸ்வாமி அய்யர் சுவாமி களை நிழல் போலப் பின்பற்றிச் சென்றார். இவ்விருவரும் சிதம் பரத்தின் கடைசி எல்லையைத் தாண்டுந்தருணத்தில் சுவாமி கள் திடீரென்று பின் திரும்பி “அதோ அந்தக் கோபுரத்தைப் பார், அது தரையிற் கிளம்பி உயரச்சென்று உம்பருலகுடன் உறவாடி நிலையாய் நிற்பதுபோல் உன் உள்ளமும் மேல் நோக்கி மயங்காது நிற்கும்படி கடவுள் உனக்கு அருள் செய்வார். அப்படி அருள் செய்யும்படி பிரார்த்தனை செய்து அந்தக் கோபுரத்தைக் கடவுள் மூர்த்தமாகப் பாவித்துச்சேவை செய்” என்று ஆக்ஞாபிக்க, முத்துஸ்வாமி அய்யரும் ‘சுவாமி உன் மகிமை அளவிடப்படாதது, மனோவாக்குக்கு எட்டாமலும், தட்டாமலும் நின்ற பொருள் நீ ஒருவனே. உன் ஸ்வரூபமாய் இவ்வுலகை ஆதரித்தடக்கும் இவ்வா காயமும் அதில் நீ இட்டதைச் செய்து சஞ்சரிக்கும் நட்சத்திரக் கூட்டமாகிய அகிலாண்டகோடிகளும் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில் நான் ஒரு ஏழை,பஞ்சை, அனாதை, நாயினும் நாயேன், புழுவினும் புல்லன். இவ்வுலகங்களின் ஓட்டத்தினால் உதிரும் ஒரு துளிக்குக்கூட நான் ஈடல்லன். பெருங்கடலுள்ள ஒரு துளி உவர்நீர் அழகாலும் குணத்தாலும் என்னிலும் உயர்ந்தது. வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, காற்றில் உலரும் செயலற்ற சிறு மணலுக்கும் நான் ஈடல்ல. மலை, நதி, கடல், காற்று, மேகம், சூரிய சந்திர நட்சத்திராதிகள் முதலிய பெரிய குடும்பத்தை நிலை குலையாது, நெறி வழுவாது பாதுகாக்கும் லீலையையுடைய சந்நியாச சம்சாரியான உனக்கு நானும் ஒரு பொருட்டாகத் விடச் தோன்றியதையும், என்னையுங்கூட அனாதையாய் சம்மதியாது ஆதரிக்க நினைத்த உன் நினைப்பையும், கிருமிமுதல் கிரஹங்கள்வரை சலியாது சஞ்சரிக்கும் உனது சித்விலாசச் சிறப்பையும் நான் நினைக்கும்போது உன் கோபுரத்தைக் கண்டு தெண்டனிடுவதும் எனக்கு ஒரு சிரமமா?’ தீர்க்கமாய்த் தியானித்து, மயிர்க் கூச்செறிந்து, உடல் முழுவதும் தரையில் பட சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து எழுந்தார். எழுந்த வுடன் சுவாமிகள் முத்துஸ்வாமி என் தங்கமடா நீ’ என்று மனதார மெச்சித் தட்டிக்கொடுத்து, ‘தில்லை ஸ்தலமே ஸ்தலமப்பா. “தில்லை தில்லை யென்றாற் பிறவி இல்லை இல்லை” யென்று மறைமொழியும். “தொல்லைதொல்லை யென்ற கொடுவினை வல்லை வல்லை” யென்றகலும். சுவாமி உண்டு என்பதும் அங்கேதான், இல்லை என்பதும் அங்கே தான். கடவுள் ஆனந்தத்தாண்டவம் ஆடுவதும் அங்கே தான். அசைவற்ற வெளியாயிருப்பதும் அங்கேதான். அறியாதாரும் அறிவைப் பெறுவது அங்கேதான். அறிந்தவர் கள் அனுபவிப்பதும் அங்கேதான். அது தெரியாமலா “தேங்கு நீர்சூழ்வயல் தில்லைக்கூத்தனைப் பாங்கிலாத் தொண்டனேன் மறந்துய்வனோ” என்று சொன்னான் எங்கள் அப்பன்.’
“அரியானை யந்தணர்தஞ் சிந்தையானை
யருமறையினகத்தானை யணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்
*இதை குரு சிஷ்ய பாவத்தை அனுபவித்தவர் அன்றி மற்றோர் அறிதல் அரிது. சிஷ்யன் குருவைத் தேடிச் செல்வது போலவே குருவும் சிஷ்யனைத் தேடி அலைகிறார். ஒரு ஊரில் ஒரு அரசன் வேதாந்த விசாரணையில் ஆசைகொண்டு சிஷ்யனுக்குத் தக்க குரு வேண்டும் என்று முரசறைவித்தான். வள்ளுவன் முரசறைந்து வரும்போது ஊருக்கு வெளியில் ஓர் குப்பை மேட்டில் கூர்மாசனமிட்டு எழுந்தருளியிருந்த ரிஷி ஒருவர் அவ்வள்ளுவனை அழைத்து குருவுக்குத் தக்க சீஷன் வேண்டுமென்று முரசறையச் சொன்னார். அவன் அவ்வாறு அறைந்த பறையோசையைக் கேட்டு அரசன் திடுக் கிட்டு, உண்மை விசாரித்து, மனமகிழ்ந்து குருவை யடைந்து பிறவி கடந்தான் என்ற ஒரு கதைகூட உண்டு. தேடிப்பெற்ற சிஷ்யனிடத்து குருவுக்கு அந்தரங்கமுள்ள சின்மயமான பேரின்ப வாஞ்ஜை ஜனிக்கும். இருவரும் பிரம்மத்தை யறிந் தனுபவிக்கும்பொழுது குரு சீஷன், சிறியன் பெரியன் என்ற பேதாபேதமற்ற சமரசநிலையில் இருப்பது வேதாந்திகள் அறிந்த அதிசயம்.
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவாநாளே.”
சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை யிருநிலனும் விசும்பும் விண்ணு
மேழுலகுங் கடந்தப்பானின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.”
*உருவமும் இங்கேதான்; ஒளியும் இங்கேதான். சிருஷ்டியும் சம்ஹாரமும் இங்கேதான்.
“பசியா மருந்தளிக்கும் பரமரகசியத்தி
லசையாமலே யாடு மம்பல நாதனைக்
காணாத கண்ணென்ன கண்ணோ”
“ஊராரு மறியாம லொளிகண்டு பிசகாமல்
ஈராறு கண்கொண்டு எழும்பிய மண்டபம்
காணாத கண்ணென்ன கண்ணோ”
*என்று சொல்லி உபநிஷத்தின் உட்கருத்தை உள்ளடக்கி அமைத்த ஆலயத்தையும் அதற்குள் சிருஷ்டிக்கு முன்னும் பின்னும் ஒடுங்காத கடவுளின் ஆனந்த நிலைமையையும், ஆகாசரூபத்தையும், ஆனந்தத்தாண்டவத்தையும் ஒருமித்து உருவகம் செய்திருக்கும் சபாபதியையும் ரஹசிய வெளியையும் அவற்றிற்குப்பின்னுள்ள திருமூலர் மந்திரத்தையும் எண்ணி சுவாமிகள் ஞானானந்தப் புலம்பல் புலம்பிச் செல்ல, அவர் பின்னே முத்துஸ்வாமி அய்யரும் சூரியனுடைய பிரதி
*அடியில் விஸ்தரிக்கப்படும் மோனானந்த நிலை சொந்த மாய் அனுபவித்தாருக்கன்றி மற்றோருக்குத் தெளிவாய் கூறுவர். விளங்காதெனப் பெரியோர் ஆயினும் அதை வெறுங்கதை” யென்று ஒருவரும் நிராகரிக்கமாட்டார் களென்று நம்புகிறேன்.
பிம்பத்தைத் தன்னுள் பெற்று பனித்துளியானது மகிழ்ந்து விளங்குவது போல் மகிழ்ந்து சென்றார்.
இவ்வாறு இவர்கள் வழிநடந்து திருவொற்றியூரை அடைந்து அவ்விடத்திலுள்ள பட்டணத்தார் சமாதியை அடைந்து அங்கே தங்கி யிருந்தார்கள். அவ்வாறு தங்கியிருக் கும் பொழுது ஒருநாள் பிரபஞ்ச முழுவதும் தன்னுடைய குலாசார கர்மானுஷ்டானங்களை முடித்துக் கடவுளுக்கு வந்தனமளித்துத் தியானம் செய்யும் சாயங்கால சமயத்தில் ஞானதவபவ சுவரூபராகிய சச்சிதானந்த சுவாமிகள் மூலலிங்கத்தைத் தழுவிக்கொண்டு யோக நித்திரையிலிருந் தார். அப்பொழுது முத்துஸ்வாமியய்யரும் சுவாமிகளுடைய மற்ற சிஷ்யர்கள் சிலருமாகச் சமாதிக்கு வெளிப்புறத் திலுள்ள கிணற்றோரத்தில் உட்கார்ந்திருந்தார்கள். முத்துஸ்வாமியய்யர் ‘கடவுளொருவரே யானாலும் அவரை யறியவும், அனுபவிக்கவும் பல வழிகளிலிருக்கின்றன. அந்த வழிகளிலெல்லாம் உத்தமமான வழியை எது போதிக்கிறதோ அதுதான் உத்தமமான மதம்’ என்ற விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது ‘நம்முடைய பெரியவர்கள் கடவுள் மூர்த்தங்களை யெல்லாம் ஞான ஆனந்த மூர்த்தி களாக பாவனை பண்ணியிருக்கிறார்கள். நானறிந்த மட்டில் வேறெவர்களும் கடவுளை இப்படி யறியவில்லை. கடவுள் அழிவில்லாத ஆனந்தமூர்த்தி, கணப பதியோ ஆனந்தமதம் பொழிந்து அந்த ஆனந்த வெள்ளத்தில் கண்சிறுத்த யானை ஸ்வரூபம். சுப்பிரமணியரோ மயில் வாகனத்தின் மேலேறி ஆனந்தப் பிரேமை பாடுகிறார். மகாவிஷ்ணு பாற்கடலைத் தேடிப் பள்ளி கொண்டிருக்கிறார். நித்திரை வராவிடிலோ கருடன் மீதேறி ஆனந்தமாய் பவனி பண்ணுகிறார். நடராஜனைப்பற்றித்தான் கேட்கவே வேண்டியதில்லை. “சிற்சபையிலானந்த நர்த்தமிடு கருணாகரக் கடவுளே” என்று நன்றாய்ச் சொன்னார். மனிதனும் பிரம்மஸ்வரூம் மில்லாவிட்டால் அவனுக்கு அவ்வளவு ஆனந்த முண்டாகுமா? உலகந்தான் மனிதனுக்கு விரோதி. ஐயோ அது செய்கிற சந்தடியும், அதன் அற்ப சந்தோஷங்களும் அற்ப துக்கங்களும், மகா அற்பமான சண்டைகளும், சச்சரவுகளும் மனிதனைக் கழுதையாக்கி விடுகின்றன. ”இடும்பைகூர் என் வயிறே” என்று சொன்னபடி இந்த வயிறு மட்டும் ஒன்று இல்லாவிட்டால் மனிதனுக்குச் சமானமாக யாரைச் சொல்லுகிறது. அவன் அனுபவிக்கவே பிறந்தவன். சுவாமி அனுபவிக்கச் சக்தியும் கொடுத்து அவ்வனுபவம் சுலபத்தில் கிட்டாதபடி பலமான தடைகளையு மேற்படுத்தி யிருக்கிறார். நாம் ஒரு மாம்சத் துண்டை நாய்க்குக் காட்டித் தூர வீசியெறிந்து விளையாடுவதுபோல சுவாமியும் நம்மைச் சோதனை செய்து விளையாடுகிறார். “சரமெறிந்த பல்குனற்கு சரமீந்தான்.” அதாவது அர்ச்சுனனை வலியச் சண்டைக் கிழுத்து அவனோடு கைகலந்து சண்டை போட்டல்லவோ சுவாமி அவனுக்குப் பாசுபத அஸ்திரம் கொடுத்தார். அது போல நம்மைச் சோதனை செய்வதில் அவருக்கு வெகு திருப்தி. நாம் எல்லாம் அவருக்குக் குழந்தைகள். நம்மைத் துரத்தி ஓடியும், நாம் துரத்த ஓடியும், நம்முடன் கொஞ்சிக் குலாவியும், அடித்துக் கிள்ளியும், தாலாட்டியும், ஏமாற்றியும், மாற்றி மாற்றி அழப் பண்ணுவதும் சிரிக்கச் செய்வதுமே அவருக்குத் தொழிலாகிவிட்டது. நமக்கு விளையாடக் கொடுத்திருக்கிற சாமான்களைத்தான் பாருங்கள். மரங்கள், நதிகள், நட்சத்திரங்கள், மேகங்கள், ஆகாயம்.”நமக்கு என்ன குறைவு! இவைகளை நாம் அனுபவிக்காவிட்டால் அது நம்முடைய குற்றம்”- என்று உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று பெரிய விஷயங்களைப் பேச ஒரு ஆசையும் கட்டுக்கடங்காத ஒரு குதூகலமும் உண்டாயிற்று. அவர் ஆகாயம், காற்று, மேகம், கடவுள் இவற்றையெல்லாம் பற்றிப் பேசியும் அவருடைய உள்ளத்தின் ஆரவாரக் கொதிப்பு அடங்கவில்லை. இவ்விதம் சிறிது நேரம் அவருக்கு அசாத்தியமான பரபரப்பு இருந்தது. பிரமாதமான மனப்பசி ஒன்று உண்டாயிற்று. இப்படிச் சில நிமிஷங்கள் கழிந்த பிறகு அப் பரபரப்பு முற்று மடங்கி ஓர்வித ஆனந்தம் அவருக்கு ஜனித்தது. நிஷ்காரணமான குதூகலம் ஒன்று அவருள்ளத்தில் பிறக்க அவருக்குக் கண் மூடிவிட்டது. பேச்சு ஒழிந்து மௌனம் குடிகொண்டது. மனதில் தான் அனுபவிக்கும் எண்ணம் ஒன்று தவிர மற்ற நினைப்பனைத்தும் இறந்தது. வெளியில் பார்க்கப்படும் பொருள்களெல்லாம் கொஞ்சமும் மனதில் பதியவே இல்லை. அவர் ஏதோ வெளியில் கலந்து ஒன்றுபட்டாற்போல அவருடைய மனம் அகண்டாகாரமான விரிவை யடைந்தது. அவர் அனுபவித்த ஆனந்தத்திற்கு எதுவும் ஈடல்ல. அக்காலத்தில் மற்ற எவ்வித சந்தோஷமும் அவருக்குக் கேவலமாகத் தோன்றிற்று. அவருடைய உள்ளக் கொதிப்பு அலைவீசி யெழுந்தது. அவர் முகம் மலர்ந்தவண்ணமாகவே இருந்தது. கண் போயே போய்விட்டது. தானே பிரம்ம மயமானாற் போன்ற ஓர்வித அறிவு அவருக்கு உண்டாயிற்று. புலன்களனைத்தும் அடங்கியிருந்தன. பகவத் விஷயமாகத் தாழ்ந்த குரலில் அருகிலிருந்தவர்கள் பேச அவருக்கு அந்த ஆனந்தம் அதிகப்பட்டது. சொல்லவறியாத இவ்வித ஆனந்தத்தில் அவர் இருந்தபோது சுவாமிகள் உள்ளே யிருந்து வெளியே வந்தார். அவரைக் கண்டவுடன் முத்து ஸ்வாமியய்யருக்கு ஆனந்தம் பெருகிற்று. சுவாமிகள் அவர் அருகில் உட்கார்ந்து “இதுதான் இன்பம், உனக்குப் பரிபாக காலம் சமீபிக்கிறது” என்று சொல்லி உற்சாகப்படுத்த முத்துஸ்வாமியய்யருக்கு ஆனந்தம் கரைகடந்து பெருகிற்று. அவர் வாய்விட்டுச் சிரிக்கவும் தொடங்கிவிட்டார். இன்னவித மான சந்தோஷமென்று அவருக்கு வாய்திறந்து சொல்ல மட்டும் கூடவில்லை. மனதில் இன்னமிர்தம் ஊறிக்கொண்டே யிருந்தது. இவ்விதமாகப் பொழுது போவதே தெரியாமல் இராக்காலம் முழுவதும் கழிந்தது. அது மறுநாளும் தொடர்ச்சியாய் நடந்திருக்கும். ஆனால் காலையில் தம்பட்ட ஓசைகளும் சமீபத்தில் ஈனஜாதி ஸ்திரீகளுக்குள் உண்டான சச்சரவுகளின் சப்தமும் அதைக் கெடுத்துவிட்டன.
– தொடரும்…
– 1893 பெப்ரவரி முதல் 1895 ஜனவரி வரை விவேக சிந்தாமணியில் தொடராக வந்த இந்நாவல் அக்டோபர் 1896-ல் விவேக சிந்தாமணி பதிப்பகம் சார்பில் நாவலாக வெளியானது.
– கமலாம்பாள் சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 14-01-1972, திங்கள் பிரசுரம், சென்னை. முன்னர் வந்த பதிப்புகள்: 1896, 1904, 1910, 1915, 1930, 1944, 1957.