(1910ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முதற் ஐந்து தமிழ் நாவல்கள் – க.நா.சு.
என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல், முதற் பதிப்பு: செப்டம்பர் 1957.
நாவல் கலை தமிழுக்குப் புதிது. அதற்கு ஒரு மரபை ஏற்படுத்தித் தர முயன்றவர்கள் என்று இந்த ஐந்து ஆசிரியர்களையும் தமிழர்கள் போற்ற வேண்டும் , இலக்கியத்திலே எந்த முயற்சிக்குமே மரபு என்பதுதான் ஆணி வேர், மரபு என்று ஒன்று ஏற்படாத காலத்தில் எழுதுபவர்கள் பலவித கஷ்டங்களுக் குள்ளாகிறார்கள் . அந்தக் கஷ்டங்களைச் சமாளிப்பதற்கு முன்னோடிகளுக்குச் சாமர்த்தியம் மிகவும் வேண்டும். இன்று தமிழ்க் கலையுலகிலே நாவல் என்கிற விருக்ஷம் பரந்து விரிந்து ஒங்க வளருகிறது என்றால் அதற்கு வழி செய்து தந்தவர்கள் வேதநாயகம் பிள்ளையும், ராஜமையரும் , மாதவையாவும் , நடேச சரஸ்திரியும், பொன்னுசாமிப் பிள்ளையும்தான். அவர்களுடைய முதல் நாவல் (சில சமயம் ஒரே நாவல்) பற்றி அறிந்து கொள்ள என் சிறு நூல் தமிழர்களுக்குப் பயன்படும் என்று எண்ணுகிறேன். ஒரு நூறு பேர்வழிகளாவது என் சிறு நூலால் தூண்டப்பட்டு அந்த முதல் நாவல்களைத் தேடிப் பிடித்துப் படிப்பார்களானால் அதுவே என் முயற்சிக்குப் பயன் என்று திருப்தியடைந்து விடுவேன்.
– க.நா.சு, 05-04-1957.
முகவுரை
“முத்தமிழு நான்மறையு மானான் கண்டாய்” என்று சைவ சமயாசாரியர்களி லொருவராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய அருந்தமிழ் வேதவாக்கியப்படி சிவசொரூபமா யிருக்கத்தக்க இயலிசை நாடகமென்னும் முத்தமிழ்த் துறைகளை முழுதுணர்ந்த உத்தமப் புலவர்கட்கு யான் சொல்லுவதொன்றுண்டு.
உலகத்தில் மானிடர் நன்மை தீமை இன்னவையென்றும் அவற்றால் விளையும் இன்ப துன்பங்கள் இன்னவையென்றும் தெரிந்துகொள்வதற்குத் தமிழில் உத்தரவேதமாகிய திருக்குற ளென்னும் முப்பா னூல் முதலாக அளவிறந்த நூல்க ளிருக்கினும், அவை யாவும் செய்யுள் நடையிலிருக்கின்றமையாலும், பன்னிரண்டு மந்திரிக் கதைகள் பஞ்சதந்திரக் கதைகள் முதலிய வசன நூல்கள் நீதி புகட்டத்தக்கவையா யிருந்தும், அஃறிணைப்பொருள்கள் ஒன்றோடொன்று உரையாடல் முதலிய அசம்பாவிதமான கற்பனா விஷயங்கள் அவற்றில் பொதிந்து கிடக்கின்றமையாலும், நாடகச சாயலாக ஆங்கிலேய பாஷையில் நவநவமான கதைகளை யியற்றி யாவர்க்கும் மகிழ்ச்சியை விளைவித்து நற்புத்தி புகட்டும் ரெனால்ட்ஸ் முதலிய அபிநவகதாக் கிரந்தகர்த்தர்களுடைய கோட்பாட்டை யனு சரித்து, கமலாக்ஷிசரித்திரம் என்னும் இதனை எழுதி வெளிப்படு த்தலானேன். இஃது பண்டிதபாமர ரஞ்சிதமா யிருத்தல் வேண்டு மென்றும், இல்லறத்துக் குரிய காரியங்களைச் செய்து முடித்தபின் அன்றாடம் வேலையற்றிருக்குங் காலத்து இதனை நமமாதரும் பொழு துபோக்காக எளிதில் வாசித்துக் களிப்படைதல் வேண்டுமென றும் யான் உத்தேசித்தவ னாதலின், அனாவசியமாகப் பாஷைநடை யைக் கடினமாக்காமல் கூடியவரையில் முழுவதுமே சம்பா ரூபமாகக் கருத்தை வெளியிட்டிருக்கின்றேன். ஆங்காங்கு அவ்வவர்களுடைய நற்குணங்களினாலும் துர்க்குணங்களினாலும் இகத்திலேயே உண்டாகக்கூடிய சுகதுக்கங்களை வாசிப்போர் கண்டறிந்து,
“ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்.”
என்னும் தெய்வப்புலவரது கட்டளைக் கிலக்காக அனைவரும் நல்லொழுக்க முடையவராகி,
“பரவை வெண்டிரை வடகடற் படுநுகத் துளையுட்
டிரைசெய் தென்கட லிட்டதோர் நோன்கழி சிவணி
யரச வத்துளை யகவயிற் செறிந்தென வரிதாற்
பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே.”
(ஜீவகசிந்தாமணி)
என்றபடி, அரிதாகக் கிடைத்த மானிடப்பிறவியா லடையவேண்டிய அறம் பொருளின்பம் வீடென்னும் புருஷார்த்தங்களை இதை வாசிப்போர் அடைவரெனச் சிவபெருமான் திருவருளைச் சிந்தித்து, இந்நூலைத் தமிழ்ச்செல்வர்களாகிய இருபாலார்க்கும் வினயத்துடன் அர்ப்பணஞ்செய்கிறேன். இந்நூலில் வழுக்க ளிருத்தல்கூடும்.
“நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கு முண்டு.”
ஆதலின், அறிஞர் குற்றங்களை நீக்கிக் குணத்தையே கொள்வாராக.
இந்நூலின் தன்மை இஃதென அனைவர்க்கும் உபயபாஷைகளிலும் சூசியை வாயிலாக எடுத்துக்காட்டிய எனது ஆப்தர், உபயபாஷாவிற்பனராகவும், சென்னைக் கவர்ன்மென்ட் தமிழ் ட்ரான்ஸ்லேட்டர் முனிஷியாராகவும், சென்னைச் சர்வகலாசங்கத்துத் தமிழ்ப் பரீக்ஷகராகவும் விளங்கும் ஸ்ரீமான்-தண்டலம்-பால சுந்தரமுதலியாரவர்களுக்கும், சிறப்புப்பாயிரம தந்த எனது நண்பர் அருமபுலமை வாய்ந்த ஸ்ரீமான் – முத்துகிருஷ்ணபிள்ளையவர்களுக்கும், இந்நூலைப்பற்றி அபிப்பிராயம தநத வித்துவசம்பன்னர் ஸ்ரீமான்- அனவரதவிநாயகம்பிள்ளை, M.A. &.L.T. அவர்களுக்கும் மன மொழி மெய்களினால் வந்தன மளிக்கின்றேன்.
-தி.ம.பொ.
இரண்டாம்பதிப்பின் முகவுரை
கமலாக்ஷி முதற் பதிப்பில் அச்சிட்டிருந்த பிரதிகளெல்லாம் செலவாய்விட்டன. ஆயிரம் பிரதிகளே முதற்பதிப்பில் அச்சிட் டிருந்தமையால், அவைகளை விரும்பிய அநேகர்க்குப் பிரதிகள் அனுப்பித் திருப்திசெய்ய முடியவில்லை. புத்தகம் எழுதும் பிரயாசையைவிட அதனை அச்சிடுவதில் உள்ள பிரயாசையின் மிகுதியாலும், எனக்குள்ள உத்தியோகத் தொந்தரவினாலும், இரண்டாம் பதிப்பு அச்சிட எண்ணமில்லாம லிருந்தேன்.இருந்தும், அடிக் கடி என்னைத் தூண்டியும் எனக்கெழுதியும் வந்த சிநேகிதர்களுடைய விருப்பத்தைப் பூர்த்திசெய்வதான கடப்பாடு உண்டாயிற்று. அதுவும் ஒரு நன்மையையே தந்த தெனலாம். முதற் பதிப்பை அச்சிடுங் காலத்திலேயே, கதை நிகழ்ச்சிக் கேற்ற சில படங்களை அத்துடன் சேர்க்கவேண்டு மென்று நான் எண்ணி யிருந்த துண்டு. அது செய்யக் கொஞ்சகாலம் நீடிக்குமென்று தெரிந்ததாலும், எழுதியதை விரைவில் உலகிற்குப் பயன் படுத்த வேண்டுமென்னும் விருப்பந துரிதப்படுத்தியதாலும், அப்பொழுது அவ்வாறு செய்ய முடிந்திலது. இவ்விரண்டாம் பதிப்பு அந்தக் கருத்துக்கு அநுகூலத்தை விளைத்தது ஒரு விசேஷமே. ஆதலின், கமலாக்ஷி இரண்டாம் பதிப்பாகிய இதில் சமயோசிதமான அனேக படங்களைப் பெருந்தொகைச் செலவில் தயாரித்துச் சேர்த்திருக் கிறேன். முதற் பதிப்பில் கண்டிருக்குங் கதையின் விவரங்களும், சொற்சுவை பொருட்சுவைகளும, விவேகிகள் பலராலும் நன்கு மதிக்கப்பெற் றிருப்பதால், வேறு நூதன விஷயங்களைக் கூட்ட வாவது புதுப்பிக்கவாவது செய்யவில்லை. இவ்விரண்டாம் பதிப்பை அச்சிடுவதில் எனக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து உதவி புரிந்த என் ஆப்த நண்பர் சென்னை பேபர் கறென்ஸி ஆபீஸ் பொக் கிஷதாரர் ஸ்ரீமான் ராய்சாயிப் T.T.கந்தசாமி முதலியாரவர் களுக்கு என் நன்றியறிதலும் வந்தனமும் உரியவை.
இரங்கூன்,
1910 ஜூன்மீ 15௨.
தி.ம.பொ
கடவுள்துணை
கமலாக்ஷி சரித்திரம்
முதல்பாகம்
விநாயகர் துதி
வெண்பா
சீர்பூத்த நீடுலகிற் செல்வி கமலாக்ஷி
போபூத்த நற்சரிதம் பேசிடவே – எர்பூத்த
அம்பிகையா என்ற வருளைங் கரநால்வாய்த்
தும்பிமுகன் பாதந் துணை.
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
1-ம் அத்தியாயம்
திருவருளை முன்னிட்டு நாம் எழுதும் இக்கதை பத்தொன்பதாம் நூற் றாண்டைப் பற்றியது. இங்கிலீஷ் 1830 – ம் வருடத்திற்குத் தமிழ் விரோதி வருஷம் தைமீ 10உ இரவு பத்துமணிக்கு ஆகாயவாணி வைரங்கள் பதித்த நீலவஸ்திரத்தை உடுத்திருப்பதுபோல், நீல நிறத்தைச் சொண்ட ஆகாயத்தில் நக்ஷத்திரங்கள் பிரகாசித்து வழிப் போக்கர்களுக்கு வழிகாட்டவும், அவர்களுக்கு ஆயாஸம் தோன்றாமல் இருக்க வாயுபசவான் சிறுகாற்றுவீசி உதவிபுரியவும், வனப்பெண் பல வித புட்பங்களிலுள்ள நறுமணத்தைக் கொடுத்து உதவ எண்ணங் கொண்டிருக்கவும், அதைக்கெடுக்க எண்ணங்கொண்டதுபோல் மயி லாபுரி என்கிற நசரத்தை அடுத்த சாட்டிலுள்ள பெரிய பல விருக்ஷங்கள் ஆகாயத்தை மறைத்து நடித்திரங்களுடைய பிரகாசத்தைத் தடுத்துத் தங்களை அடுத்திருக்கும் இருளுக்கு உதவி புரிய எண்ணங் கொண்டிருப்பதுபோல் அடர்ந்திருந்தன. இவ்விருண்ட காட்டில் இருவர் அதிவேகமாக நடந்து நெடுந்தூரம்போனபின் இருவரில் ஒருவர் தம்மோடு வருகிறவளைப்பார்த்து, “பெண்ணே! இனிமேல் நாம் துரிதமாகப் போகவேண்டிய அவசியமில்லை, மெதுவாகப் போகலாம்; உன்னால் வேகமாக நடந்துவர முடியவில்லை யல்லவா?” என்று நகைத்தான்.
பெண் – தங்களுடைய இஷ்டம்போலவே செய்யலாம், அத்தான்.
வாலிபன்.- (சிரித்துக் கொண்டே) ஆ! ஆ! என்ன ! அத்தானா! அத்தான் என்ற வாய்க்கு முத்தம் கொடுக்காமல் போகலாமா? முத்தம் கொடுப் பாய் என் கண்ணே! நான் உன்னை இரண்டொரு தடவையில் பார்த் திருந்தும் உன்னோடு வார்த்தையாடினதேயில்லை. (என்று முத்தம் கொடுத்தான்.)
பெண் – யான் தங்களை இரண்டொரு தடவையில் பார்த்திருப்பதாக எனக்கும் ஞாபகமிருக்கிறது.
வாலிபன்.- அங்கிலேயரைப்போல் புருடர் பெண்களோடு வார்த்தையாடி மனச்சம்மதங் கேட்டுக்கொள்வது நமக்குள் வழக்கமில்லை யாதலால்,நம் இருவர் மனதின் சம்மதம் அறியாமலே யாவும் முடிவுபெற்றிருக்கின்றன. ஆயினும், இப்பொழுது நேரிட்ட விபத்தால் நாம் இருவரும் பேசிக்கொ ள்ள நேர்ந்ததைக் குறித்துச் சந்தோஷப்படுகிறேன். ஆனதால், என் விஷயத்தில் நீ கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைச் சொல்லவேண்டும்.
பெண் – தாங்க ளிவ்விதங் கேட்பது நியாயந்தானா? (என்று நசைத்தாள்.)
வாலிபன்.- ஏன் நியாயமில்லை? உன்னோடு வார்த்தையாடிய சில நேரத்திற்குள் உன்னை உண்மையாக இச்சிக்கிறேனென்று கடவுளுக்குமுன் சொல் லத்துணிவேன். உன்னுடைய மனதும் அதுபோ லிருந்தாலல்லவா என் மனம் சந்தோஷம் அடையும்?
பெண்.- என் கருத்தை நான் சொல்லாமலே தாங்கள் அறிந்துகொள்ளக் கூடாதா? ஒருவர் ஒரு பெண்ணுக்கு ஒராபரணத்தைக் கொடுத்து அதை அணியும்படிச்செய்தால், ஆபரணம் கொடுத்தவரைப் பெண்விவாகம் செய்துகொள்ளவேண்டியது கடமையாகிறது. பெற்றோர்களும் பொருளையும் ஆபரணத்தையும் கவனிக்கிறார்கள். வழக்கத்திலும் பிள்ளைவீட்டார் விவாகத்துக்குப் பெண்தேடிப் பெண்வீட்டாரை அடுத்துப் பெண் கொடுக்கிறீர்களாவென்று கேட்பதும், பெண்வீட்டார் பிள்ளைவீட்டாரை என்ன ஆபரணம் போடுகிறீர்களென்றும்,பெண் வீட்டார் தனவந்தரா யிருந்தால் நீங்கள் என்ன ஆபரணம் போடுவீர்கள்? என்ன சீதனத்தோடு விவாகம் செய்து கொடுப்பீர்களென்றும் கேட்பதும் தங்களுக்குத் தெரியாததல்லவே. பெரும்பாலும் ஆபரணத்திற்கும் பூஸ்திதிக்கும் ஆசைப்பட்டு மாப்பிள்ளை கிழவனானாலும் இரண்டாவது மூன்றாவது நான்காவது அல்லது எத்தனையாவது தாரமானாலும் பெண்களைக்கொடுத்து விடுகிறார்கள். பெண்கள் கருத்தைக் கேட்டா விவாகம் முடிக்கிறார்கள்? இல்லை. இது விஷயத்தை நன்றாயோசிக்கின் ஆபரணம் போட்டவர்களுக்கே பெண்கள் சொந்தமாகிறார்கள்.
வாலிபன்.- என் கண்மணி! நீ சொல்வதன் கருத்து இன்னதென்று எனக்கு விளங்கவில்லை. ஆபரணங்களொன்றும் அனுப்பாமற்போன காரணத்தை யெடுத்துக்காட்டி என்மேல் குற்றஞ் சுமத்தவா இவ்விதம் சொல்லத் துணிந்தாய்? நான் ஒரு நகையும் போடக்கூடாது. எல்லாம் தானே போட எண்ணங்கொண்டிருப்பதாக உன் தந்தை சொல்லி யனுப்பியதால் நான் ஆபரணம் ஒன்றும் அனுப்பவில்லை. அது விஷயத்தில் நீ கவலைகொள்ளவேண்டாம்; உனக்கு வேண்டிய ஆபரணத்தைக் கொடுக்கத் தடையில்லை.
பெண்.- தாங்கள் தங்களை மறந்து பேசுகிறீர்கள்.
வாலிபன்.- என் இன்பமே! இன்னும் என்னை அவமானத்தி லமிழ்த்தாமல் என் விஷயத்தில் கொண்டிருக்கும் கருத்தைச் சொல்லவேண்டும்.
பெண் – தங்களை அவமானப்படுத்த நான் எண்ணம் கொள்ளவில்லை. உலகத்தில் பெண்களுக்கென்று போடும் ஆபரணம் ஆயிரம் பதினாயிரம் பெறக்கூடியதாயிருக்கலாம். தாங்கள் எனக்களித்த ஆபரணத்தின் விலை மதிக்கத்தக்கதா?
வாலிபன் – ஏதோ ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறாய், நானென்ன ஆபரணத்தைக் கொடுத்தேன்?
பெண்.- உலகத்தில் பெண்களிச்சிப்பது ஆடையாபரணமேயானாலும், அவர்களுக்குச் சிறந்ததும் அழியா ஆபரணமுமானது கற்பு. அக்கற்பைக்காப்பாற்றிய உமக்கு என்ன கைம்மாறிருக்கிறது! உடல்பொருளாவி என்னும் மூன்றையும் தங்களுக்குத் தத்தஞ் செய்கிறேன். தாங்க ளென் மேல் கிருபை கூர்ந்து அவற்றை ஒப்புக்கொள்ளவேண்டும்.
வாலிபன்.- ஆ! சற்று பேசாதிரு. இஃதென்ன சிறு குழந்தையின் அழுகுரல் சமீபத்தில் கேட்கிறது! பெண்மணி! சற்று இவ்விடத்திலிரு. நான் பார்த்து வருகிறேன்.
என்று தன்னுடன் வந்த பெண் மறுமொழி சொல்லுமுன் காட்டுக்குள் ஓடினான். அங்கு நிகழ்ந்ததாவது .- அக்காட்டுக்குள் குழிவெட்டிக்கொண்டிருந்த காத்தன் என்பவனுக்கும் ஒரு சிறு குழந்தைக்குக்காவலாயிருந்த சாத்தன் என்பவனுக்கும் நிகழ்ந்த சம்பாஷணை:-
சாத்தன்.- அடே காத்தா! இந்தக்கீச்சான் தூங்குகிறதே, இதை இப்படியே புதைத்துவிட்டாலென்ன?
காத்தன். – உயிரோடு புதைத்தால் அது பேயாக வந்து தொந்தரை செய்யு மென்பார்களடா சாத்தா!
சாத்தன்.- பேயாகவந்து தொந்தரை செய்வதைப் பின் பார்த்துக்கொள்ளலாம். வேலையை முடித்துவிட்டு நமக்குக் கிடைக்கப்போகும் வெகுமதியைப் பெற்றுச் செல்வதே உத்தமம் ; விரைவில் குழிவெட்டு.
காத்தன். – ஆம், இன்னும் சற்று நேரத்தில் வெட்டிவிடுகிறேன். கீச்சானை முடித்துவிட்டு வந்தால் நமக்கு ஆளுக்சாயிரம் ரூபாய் கொடுப்பேனேன்று சொன்னாரே! அவர் பெயரென்ன? அவர் பெயர் எனக்கு ஞாபகத்தில் நிற்கிறதில்லை. அவர் சொன்ன பிரசாரம் பணம் கொடுப்பாரா?
சாத்தன்.- அடே மடையா! உனக்கு இதுவரையில் ஆயிரந்தரம் அவர் பெயரை நினைக்க வேண்டாமென்று சொல்லியிருக்கிறேன். ஏன் அவர் பெயரை அடிக்கடி ஞாபகத்துக்குக் கொண்டுவருகிறாய்? அவர் சொன்ன சொல் பிசகார். நமக்கு ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் இப்பொழுது கொடுத்தலே யன்றிச் சில மாதங்களுக்குமுன் அவரால் கிடைத்த வெகுமதியையும் மறந்துவிட்டாயா? அவர்மேல் உனக்குச் சந்தேகம் வருவதற்குக் காரணம் எனக்குத் தெரியவில்லை.
காத்தன் – அப்பொழுது கொடுத்தார்; இப்பொழுது கொடுக்கிறாரோ இல்லையோ! என்னமோ பார்த்துக்கொள்ளலாம். பேச்சின் பிரகாரம் கொடுக்காமல் ஏமாற்றப் பார்த்தால் அவரையும் குழியில் வீழ்த்தவேண்டியதே!
சாத்தன் தன்னிடத்திலிருந்த விளக்கைச் சமீபத்தில் கொண்டு போய் குழந்தையைப் பார்த்தான். அக்குழந்தை தூச்சத்தில் புன்சிரிப்பைக் காட்டியது. ஆ! ஆ! சிரிக்கிறாயோ. சிரிப்பு கூடவா வருகிறது? இன்னும் சற்று நேரத்தில் விடாது சிரிப்பாயென்று, விளக்கை அருகில் வைத்தான். அப்பொழுது வண்டொன்று விளக்கின்மேல் மோதிக் குழந்தைமேல் விழுந்து கடித்துவிட்டது. குழந்தை விழித்து வீர்வீரென்று அலறி யழுதுகொண்டிருந்தது. சாத்தன் குழந்தையை ஓயப் படுத்தச்செய்த முயற்சி யெல்லாம் பயன்படாமற் போயிற்று.
காத்தன் – அடே! சாத்தா! என்னடா, முளையானை அழவிட்டு விட்டாய்?
சாத்தன் – அடே! நானென்ன செய்வேன்? அது காட்டெலியை ஒட்டிவிடப் பெருஞ்சத்தம் போடுகிறது. இதோ ஒரே தடவையில் ஓயப்படுத்தி விடுகிறேன் பார்,
என்று குழந்தையை நிலத்தில் வைத்துத் தன்னிடத்திலிருந்த வாளை உறையிலிருந்து உருவி வெட்ட வோச்சினான். அவ்வாறு ஒச்சிய வெட்டு விழுமுன் குழந்தை அழுகுரலைக் கேட்டுச்சென்ற வாலிபன் தன்வாளால் சாத்தன் கையிலிருந்த வாள் விடுபடத் தட்டி விட்டுச் சாத்தனையும் தலையில் கூரில்லாத பக்கந் திருப்பி வெட்ட அவ்வடியால் சாத்தன் மரண மூர்ச்சையோடு நிலத்தில் வீழ்ந்தான். அருகிலிருந்த காத்தன் சாத்தனை அடித்த வீரனை முன்பின் பார்க்காமல் ஓடிவந்து தன் வாளால் வெட்டினான். வாலிபன் அவன் வாளையும் தட்டிவிட்டு அவன் தலையிலும் வாளின் பின்புறத்தினால் ஓங்கியடிக்க, அவனும் நிலத்தில் சாயவே, அழுது கொண்டிருக்கும் குழந்தையைத் தூக்கி மார்போடணைத்து அழுகையைமாற்றி அவ்விடத்தை விட்டு நீங்கினான். வனத்தில் தனித்துநின்ற பெண் தன்னோடு வந்த வாலிபன் தன்னைத் தனித்திருக்க விட்டுச் சென்றானே யென்று மிக்க பயத்தோ டிருக்கையில், வாலிபன் வருகிற சந்தடியறிந்து எதிர்கொண்டு சென்றாள்.
வாலிபன்.- என்கண்மணி! நான் சிறிதுநேரம் தாமதித்திருப்பேனாகில் இச்சிசுவின் உயிர் நீங்கியிருக்கும். அவ்விடம் இருந்த இரண்டு பாதகரில் ஒருவன் இச்சிசுவைக் கொலை செய்யப்போகும் சமயத்தில் தெய்வச் செயலால் நான் தோன்றச் சிசுவின் உயிர் தப்பியது. அப்பாவிக ளிருவரையும் காயப்படுத்தாமல் மரண மூர்ச்சையில் விட்டு வந்தேன்.
பெண்.– குழந்தையை என்னிடத்தில் கொடுங்கள் (என்று குழந்தையை வாங்கி முத்தமிட்டு) ஐயோ! இவ்விருட்டில் பார்க்கும்பொழுதே குழந்தை அதிக சுந்தரமாக இருக்கிறதே! இதைக் கொல்லத் துணிந்தவர்களுடைய மனம் எப்படிப்பட்டதோ? இச்சிசுவைக் கொல்லத் துணிந்த பாவிகள் யார் என்று கண்டுகொண்டீர்களா?
வாலிபன். – பெண்மணி! நான் அவர்களை இன்னாரென்று சொல்லச் சக்தியற்றிருக்கிறேன். அவ்விடமிருந்த விளக்கின் ஒளியால் அவர்கள் எமதூதர்போல் கறுத்த மேனியும் இளம்பிராயமுமுள்ள பாதக ரென்று காணப்பட்டது. நாம் இனி இங்கு நின்றுகொண்டிருப்பதில் பிரயோசனமில்லை வருக. (என்றழைத்துச் சென்றான்.)
பெண் – ஐயோ இஃதென்ன! நமக்கு பின்னால் அனேகர் ஒடிவருவது போல் சந்தடி கேட்கிறதே அவர்களிடத்திலிருந்து எவ்வாறுதப்பி உய்யப் போகிறோம்! நாம் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் ஓடிவிட்டாலும் அல்லது ஒளித்திருந்தாலும் உத்தமம்.
வாலிபன்.- நாம் பயந்து ஓடவேண்டிய அவசியமில்லை. உன்னைக் கொண்டு போன திருடரே வேறு பலங்கொண்டு என்னோடு எதிர்க்க வருவது போல் காணப்படுகிறது. நீ ஒன்றுக்கும் பயப்படவேண்டாம்; எத்தனை பேர் வந்தாலும் வரலாம். என் கைவாளுடைய பலம் இருக்கும் வரையில் உன்னருகில் ஒருவரையும் நெருங்க விடமாட்டேன்.
இவர்கள் இவ்விதம் பேசிக்கொண்டு போகும்பொழுது ஐந்து வீரர்கள் இவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அப்பெண் மிக்க பயங் கொண்டிருப்பதைக் கண்டு, வாலிபன் நீ அஞ்சவேண்டாம்; நமக்கு ஜெயம் சித்திக்க எல்லாம் நமக்கு அனுகூலமாக இருக்கிறது; இடமும் மரங்கள் இல்லாமல் வெளியா யிருக்கிறது; நக்ஷத்திரங்களுடைய பிரகாசத்தால் வந்தவர்களை எமலோகம் குடிபுகுத்திவிடுகிறேன் பாரென்று வாளை உருவிக்கொண்டு வந்தவர்களோடு எதிர்த்தான்.
வந்தவர்களி லொருவர் அப்பா! என்னருமை மருமகனே! நாங்கள் உன் தைரியத்தையும் வல்லமையையும் அறிந்து கொண்டோம். நாங்கள் வரும் வழியிலே வண்டி குடைகவிழ்ந்த சமயத்தில் உதவி செய்ய வந்தவர்போல வந்து என் மகளைக் கொண்டுபோன திருடர்களை உன் வாளால் வென்று என்மகளை மீட்டுவந்த உன் வல்லமையை மீண்டும் காட்டவேண்டியதில்லை. நீ செய்த உபகாரத்துக்குப் பிரதிபல னென்ன செய்யப்போகிறேன் என்றார். மற்றொருவர் மைத்துனரே! உமக்கு என் தங்கையைக் கொடுப்பது சம்மதமில்லா திருந்தது; இன்று உம்முடைய தைரியத்தையும் வல்லமையையும் கண்டபின் என் தங்கைக்குத் தகுந்த நாயகன் நீரே யன்றி உம்மைவிட வேறு யாரிருக்கிறார்கள் என்றார். மற்றொருவர் இப்பெண்மணிக்கு இப்புருடன் நாயகனாகக் கிடைத்ததால் இவளே பாக்கியவதி என்றார். இவ்விதம் இவ்விருவர்களையும் பலவிதம் புகழ்ந்து வார்த்தை யாடிக்கொண்டே தங்க ளிருப்பிடமுற்றுக் குறித்த முகூர்த்தத்தில் இவ் விருவருக்கும் விவாகச்சடங்கை நிறைவேற்றினார்கள்.
2-ம் அத்தியாயம்
முன் அத்தியாயத்தில் குறிப்பித்த சம்பவம் நேரிட்டு இருபது வருடங்களாயின. இங்கிலீஷ் 1550-ம் வருடத்திற்குத் தமிழ் சௌமிய வருடம் தைமாதம் முதல் வாரத்தில் மயிலாபுரியிலே வழக்கமாகக் கூடுஞ் சந்தை கூடி ஜனங்களதிகரிப்பால் பேரிரைச்சல் உண்டாகியது. இந்த ஜனக் கூட்டத்தின் வேடிக்கையைப் பார்க்கவந்த இரண்டு வாலிபர்கள் தூரத்தில் நின்று சந்தைக்குவந்த பெண்பிள்ளைகளைப் பார்ப்பதும், ஏளனம் செய்வதும் பரியாசமாகத் தாங்களிருவரும் பேசிக்கொள்வதுமாகக் காலங்கழித்துக் கொண்டிருக்கும்பொழுது, எலுமிச்சம் பழம்போன்ற நிறமும், பரந்த முகமும், பெரிய நேத்திரங்களும், சறுத்தடர்ந்து வளைந்த புருவமும், அகலமான நெற்றியும், நீண்ட நாசியும், சிறுத்த வாயும், சிவந்து சிறுத்த உதடும், கிஞ்சித்துக் கதுப்புள்ள கன்னமும், மிகவும் நீண்டிராத தாடையும், வெண்மையான முத்தை நிகர்த்த பல்வரிசையும், பருத்த தனங்களும், சிறுத்த இடையும், நீண்ட கூந்தலும், மிகவும் பருத்திராத தேகமும், பதினேழு அல்லது பதினெட்டு வயது இருக்குமென்று மதிக்கத்தகுந்த ஒரு பெண் தோன்றிக் கடைகளில் தனக்கு வேண்டிய சில சாமான்களை வாங்கிக்கொண்டிருந்தாள். மேற் சொன்ன வாலிபரி லொருவன் மற்றவனைப் பார்த்து இப்பெண்ணைப் போல் சுந்தரமுள்ளவளை நானெங்குங் கண்டதில்லை யென்றான். மற்றவன் இவளைக்கூடிச் சுகத்தை அனுபவிப்பவனே பாக்கியவான் என்றான். அத்தருணத்தில் கடையில் சாமான் வாங்கிக்கொண்டிருந்த பெண் தோளின்மேல் சந்தைக்கு வந்த மற்றொருபெண் கையை வைத்து, கமலாக்ஷி என்றாள். அவள் திரும்பிப் பார்த்து ஆ ! வனசாக்ஷி நீயுமா இன்று சந்தைக்குத் தனித்து வந்தாய் என்றாள்.
வனசாக்ஷி.- ஆம் கமலாக்ஷி! என் தாயார் சந்தைக்குவந்து வேண்டியதை வாங்கி வந்தார்கள். கற்பூரம் வீட்டி லில்லாமற்போனதை நான்சொல்ல மறந்து அதை வாங்கிப்போகவந்தேன். நீ ஏன் இன்று தனித்துச் சந்தைக்கு வந்தனை?
கமலாக்ஷி.- என் தாயாருக்கின்று தேக அசௌக்கியமாயிருந்ததால் அவர்கள் என்னோடு வருகிறேன் என்றதையும் தடுத்து வந்தேன்.
வனசாக்ஷி – இன்னும் சாமான்களதிகம் வாங்கவேண்டியதிருக்கிறதா?
கமலாக்ஷி.- எல்லாம் வாங்கிவிட்டேன். வருக. வீட்டுக்குப் போகலாம்,
என்று மிக்க நேசமாய் வார்த்தையாடிக்கொண் டிருவரும் சந்தையைவிட்டு நீங்கினார்கள். சந்தை கூடிய இடத்துக்கு அரைமைல் தூரத்தில் ஓர் மரத்தடியிலே வாலிபத்தில் சுந்தரராக இருந்திருப்பாரென்று சொல்லத் தகுந்த ஒரு விருத்தாப்பியர் மிகவும் மெலிவுற்றும் இளைப்படைந்தும் விழுந்திருந்தார். அவரைக்கண்ட கமலாக்ஷியும் வனசாக்ஷியும் பரிதாப முற்று விருத்தாப்பியர் அருகில்சென்று பார்த்து, ஐயா! தங்களுக்கு என்னமாயிருக்கிறது என்று மெல்லெனத்தட்டிக் கமலாக்ஷி கேட்டாள். கண்களை மூடிக்கொண்டிருந்த பெரியவர் விழித்துப்பார்த்து தண்ணீரென்றார். உடனே கமலாக்ஷி கூலியாள் தலையிலிருந்த கூடையை இறக்கி ஒரு தேங்காயையுடைத்துத் தண்ணீரை விருத்தாப்பியருக்குக் கொடுத்தவுடன் முகமெல்லாம் வெயர்த்தது. கமலாக்ஷி தன் முந்தானையால் முகம் கை காலெல்லாம் துடைத்து விசிறிக்கொண்டே ஓர் வண்டி கொண்டு வரும்படி கூலியாளை அனுப்பினாள். கமலாக்ஷியின் எண்ணம் அனு கூலப்படக் காலியாகப்போகும் வண்டியொன்று சமீபத்தில் கிடைத்தது. மூவரும் விருத்தாப்பியரை வண்டியிலேற்றி வண்டியை மெல்லநடத்திக் கொண்டு வீட்டை நெருங்கினவுடன் கமலாக்ஷி வண்டியைவிட்டு முன்பாக ஒடி வீட்டுக்குள் நுழைந்து தன் தாயை கட்டிப் பிடித்துக்கொண்டு, அம்மா! என்னைக் கோபிக்காமல் எனக்கோர்வரம் கொடுக்கவேண்டும் என்றாள். கமலாக்ஷியைப்போல் சுந்தரமும் ஏறக்குறைய நாற்பது வயதுமுடைய தாய் செழுங்கமலம், மகளின் கன்னத்தில் முத்தமிட்டு உன்னை ஏன் கோபிக்கவேண்டும்? என்னவரங் கேட்க வந்தாய்? சொல்வாய் என் கண்மணி என்றாள்.
கமலாக்ஷி – அம்மா! சந்தையிலிருந்து திரும்பிவரும்பொழுது சாலை மரத்தடியில் ஒரு விருத்தாப்பியர் விழுந்து கிடப்பதைக்கண்டு நானும் வனசாக்ஷியும் அவரை வண்டியி லேற்றிக்கொண்டு வந்தோம். அவரை யழைத்து நமது வீட்டில் வைத்து இளைப்பாற்றி யனுப்ப இஷ்டங்கொண்டு தங்களுடைய உத்தரவைக் கேட்க ஓடிவந்தேன். தங்களுக்குச் சம்மத மில்லரமற்போனால் வனசாக்ஷி தன்னுடைய வீட்டுக்கு அவரை அழைத்துக்கொண்டு போகிறதாகச் சொல்லுகிறாள்.
மகள் சொல்லிய வார்த்தையைக்கேட்ட செழுங்கமலம் விடை கொடாமல் வெளியில் ஒடிவந்து வண்டியை நிறுத்தினாள். தன் தாயாரின் குணத்தை நன்றாயறிந்த கமலாக்ஷி விருத்தாப்பியரைப் படுக்கவைச்சுக் கட்டிலில் பஞ்சணை போட்டுச் சித்தஞ்செய்து தன் தாயாரிடஞ் சென்றாள். விருத்தாப்பியரைத் தன் வீட்டில் விட்டுப்போகும்படி வனசாக்ஷியைச் செழுங்கமலம் வேண்டியபடியால், அவளும் அதற்கு உடன்பட்டனள். விருத்தரை வீட்டிற் நெடுத்துக்கொண்டுபோய்க் கமலாக்ஷி அமைத்து வைத்திருந்த படுக்கையில் கிடத்தி வனசாக்ஷியும் செழுங்கமலமும் விசிறிக்கொண்டிருந்தார்கள். கமலாக்ஷி கூலியாளுக்கும், வண்டிச்சாரனுக்கும் கொடுக்கவேண்டியதைக் கொடுத்தனுப்பிவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்து விரைவில் கஞ்சி காய்ச்சிக் கொண்டுவந்து தன் தாயாரிடத்தில் கொடுத்தாள். செழுங்கமலம் பெரியவரைத்தூக்கி உட்காரவைத்துக் கஞ்சி குடிக்கும்படி வேண்டினாள். பெரியவர் கொஞ்சம் கஞ்சி குடித்தவுடன் இளைப்பினால் தலையணைமேல் சாய்ந்து அயர்ந்து நித்திரைபோனார். செழுங்கமலம் தன் மகளைப்பார்த்து, அம்மா! நீ விரைவாய்ச்சென்று வைத்தியரை யழைத்துவா என்றனுப்பினாள்.
கமலாக்ஷியும் விரைவி லழைத்துவருவதாக வாக்களித்துச் சென்று சில நிமிஷத்தில் திரும்பிவந்தாள்.
செழுங்கமலம் – வைத்தியரை யழைத்துவரச் சொன்னேனே, ஏனம்மா வந்துவிட்டாய்?
கமலாக்ஷி – நம்முடைய நற்காலம் வைத்தியர் அழையாமலே நம்முடைய வீட்டை நாடிவருகிறார். இதோ அவரும் வந்துவிட்டார்.
செழுங்கமலம்.- அண்ணா! இந்தப் பெரியவரைப் பாருங்கள். வியர்வை அதிகப்படுகிறதைப் பார்க்க எனக்குப் பயமாக இருக்கிறது.
வைத்தியர். – (கையைப்பிடித்துப் பார்த்துக்கொண்டு) இப்பெரியவர் யார் அம்மா?
செழுங்கமலம்.- தங்களுடைய மருமகளும் வனசாக்ஷியும் சந்தைக்குப் போயிருந்தார்கள். இப்பெரியவர் மரத்தடியில் இளைப்புற்றிருந்ததைக் கண்டு வண்டியிலேற்றிக் கொண்டு வந்தார்கள்.
வைத்தியர்.- இந்தக்கிழவிக ளிருவருமா சந்தைக்குத் தனித்துச்சென்றார்கள்?
செழுங்கமலம்.- நான் என்ன செய்வேன் அண்ணா! எனக்கு நேற்றையதின மெல்லாம் அஜீர்ணத்தால் பேதியாய்க் கொண்டிருந்தது. நேற்று மாலை தாங்கள் கொடுத்த மருந்தினால் சௌக்கியப்பட்டது. இன்று காலை எனக்கு அதிக பலஹீனமாக இருந்ததாலும் வீட்டில் பண்டம் எதுவும் இல்லாததாலும் இன்று தப்பினால் எட்டுநாள் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதாலும் கமலாக்ஷியைத் தனித்து அனுப்பினேன்.
வைத்தியர் – அறியாப் பெண்களைச் சந்தைக்கு அனுப்புவது நன்றல்ல. இப் பெரியவருக்குச் சுரமிருப்பதோடுமிக்க பலஹீனமும் மிகுந்திருக்கிறது. நான் தரும் மாத்திரைகளை வைத்துக்கொண்டு மூன்று மணிக் கொரு தரம் கொடுத்து வந்தால் விரைவில் தேகம் சௌக்கியமாய்விடும். கஞ்சி மட்டும் அடிக்கடி கொடுத்துக்கொண்டு வரவேண்டும். இப்பொழுது விளக்குவைக்கப் போகுஞ் சமயமானபடியால், விளக்கேற்றிய பின் முதலில் மாத்திரையைக் கொடுத்து அரைமணி நேரத்துக்குப்பின் கஞ்சி கொடுப்பாயாக. அதுமுதல் அடிக்கடி கஞ்சி கொடுத்துக்கொண்டே இருப்பாயாக.
கமலாக்ஷி – தாதா ! அம்மாள் நேற்றெல்லாம் அசௌக்கியமா யிருந்தார்களாதலால், அவர்களுக்கு ஒரு தொந்தரையுங் கொடுக்காமல் நானே விழித்துக்கொண்டிருந்து தாங்கள் சொல்லிய வண்ணம் செய்கிறேன்.
வனசாக்ஷி – உன்னோடு நானு மிருந்தால் உனக்கு உதவியாயிருக்கும்; நான் என் தாயாரிடத்தில் சொல்லிவருகிறேன்.
கமலாக்ஷி.- நீ என்னோடிருப்பது எனக்கதிக சந்தோஷத்தைக் கொடுக்கு மென்றாலும், உன் தாயாரைத் தனியேவிட்டு இரவில் துணையின்றி வருவது உசிதமல்ல.
செழுங்கமலம்.- ஆம் வனசாக்ஷி. நானும் கமலாக்ஷியும் இருப்பதால் நீயும் வந்திருப்பது அனாவசியம். உங்களைப் போன்ற பெண்கள் இரவில் தனித்து வருவதும் போவதும் நன்றல்ல.
வைத்தியர்.- ஆம், வனசாக்ஷி, நான் உங்கள் வீட்டுக்கருகாமையில் போக வேண்டிய வேலையிருப்பதால் உன்னை உங்கள் வீட்டில் விட்டுப்போகிறேன் வருக.
என்று வைத்தியர் வனசாக்ஷியை அழைத்தார். வனசாக்ஷி கமலாக்ஷியிடத்தும் அவள் தாயாரிடத்தும் உத்தரவு பெற்றுப்போயினள். கமலாக்ஷியும் அவள் தாயும் விருத்தாப்பியர் சமீபத்தி லுட்கார்ந்து விசிறிக்கொண்டிருந்தார்கள். பிறகு செழுங்கமலம் தன் மகளை வைத்துவிட்டுத் தான் கஞ்சி சித்தஞ் செய்துகொண்டு வருவதாகப் போயினள். கமலாக்ஷி சுரம் இருக்கிறதாவென்று சட்டையை நீக்கி மார்பைத் தொட்டுப்பார்த்தாள். பெரியவர் விழித்துக் கமலாக்ஷியைப்பார்த்து அம்மா! நீ யார்? நான் யாருடைய வீட்டிலிருக்கிறேன்? என்று கேட்டார்.
கமலாக்ஷி – தாதா! தாங்கள் எங்கள் வீட்டில் தானிருக்கிறீர். என் தாயாரும் நானுமே இவ்வீட்டிலிருக்கிறோம். தங்களுக்கு வேண்டியதைச் செய்யத் தடையில்லை. விடியுமுன் தாங்கள் சௌக்கியப்பட வைத்தியர் மாத்திரைகள் கொடுத்துப் போயிருக்கிறார்.
பெரியவர்.- அனாதரவாயிருக்கும் என்னை வைத்தியரைக் கொண்டாதரித்தீர்கள்! இந்த உபகாரத்துக்கு நான் யாது கைம்மாறு செய்யப்போகிறேன்? நீ யாரென்று கேட்டேன். அதற்கொன்றும் பதில் சொல்ல வில்லை. உன் பெயரையும், உன் தாயார் பெயரையும் சொல்லுவாய், அம்மணி! உங்களை ஆசிர்வதிக்கும்படி கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன்.
கமலாக்ஷி.- தாதா! நான் கேசவ முதலியார் புத்திரி! என்பெயர் கமலாக்ஷி; என் தாயார் செழுங்கமலம்.
பெரியவர்.- சிறிதுநேரம் கமலாக்ஷியைப் பார்த்துப் பின் தலையணைமேல் சாய்ந்து நித்திரை போயினார்.
செழுங்கமலமும் கஞ்சிகொண்டு வந்தவுடன், பெரியவர் கண்ணைத் திறந்து தங்கள் பெயர்களைக் கேட்டு வார்த்தை யாடினாரென்று சொல்லிக் கமலாக்ஷி சந்தோஷப்பட்டாள்.
செழுங்கமலம்.- பெரியவர் பலஹீனமாக இருப்பதால், அவரை வார்த்தை யாடவிடக்கூடாது. அவர் ஏதாகிலு மொன்றை நினைத்துத் துக்கப்படு வாராயின் அது அவருக்குக் கெடுதியாய் முடியும்.
கமலாக்ஷக்ஷி – நான் அவரைப் பேசும்படி கட்டாயப்படுத்தவில்லை. அவர்தாமாகக் கண்விழித்துப் பார்த்து வார்த்தையாடினார்.
இனி அவர் வார்த்தையாடா திருக்கும்படிச் செய்யவேண்டுமென்று பெரியவரை எழுப்பி வைத்தியர் சொல்லிய வண்ணம் மருந்தும் கஞ்சியும் அடிக்கடி அவ்விருவரும் கொடுத்துக்கொண்டு வந்தார்கள்.
3-ம் அத்தியாயம்
மயிலாபுரிக் கடைவீதிகளில் தைப்பூசத்துத் திருவிழாவைக் கருதி வெளியூரிலிருந்து சவுளிக் கடைகளும் சன்னார் கடைகளும் புத்தகக்கடை களும் வந்து நிறைந்து அவ்வூரைச் சிறப்பாக்கின. கடைகளில் வந்து சாமான் வாங்குகிறவர்களும், வேடிக்கைபார்க்கவருகிறவர்களும் அதிகமாக இருந்தார்கள். அக்கடைவீதியில் நிறைந்திருந்தவர்களில் சந்தன நிறமும், பரந்தமுகமும், அகலமான நெற்றியும், பெருத்த கண்களும், மயிரடர்ந்த புருவமும்,நீண்ட நாசியும், முத்துக்கள் போன்ற ஒழுங்கான பல்வரிசையும், புன்சிரிப்பைச்சதாகொண்டிருக்கும் வாயும், அரும்புகட்டி வரும் மீசையும், பருத்த தோளும், விசாலமாகிய மார்பும், நீண்ட கைகளும், ஏறக்குறைய ஐந்தரை அடி உயரமும், இருபது அல்லது ஒன்றிரண்டதிகமுள்ள வயதும் கொண்டு மன்மதனிவன் என்று வியக்கத்தக்க ஒரு வாலிபன் கடைவீதியாக வரும்பொழுது ஒரு சுந்தரபுருடன் அடிமேல் அடிவைத்துச் சந்தடி செய்யாமல் பின்வந்து, வாலிபன் இருகண்களையும் தன்கைகளால் மூடினான். அவ்வாறு மூடப் பட்டவன் சோமசுந்தரம் என்றான். உடனே கையை எடுத்து நானென்று உனக்கு எப்படித்தெரிந்தது விஜயரங்க மென்று கேட்டான்.
விஜயரங்கம்.- உன்னைவிட என் கண்களை மூடத்தகுந்தசிநேகிதர் ஒருவரும் இல்லை; ஆனதால் நீ என்றே மதித்தேன்.
சோமசுந்தரம்.- நீ ஏது இன்று கடைத்தெருவுக்கு வந்தது?
விஜயரங்கம்.- சில புத்தகங்கள் வாங்கவேண்டு மென்றே வந்தேன்.
சோமசுந்தரம்.- என்ன என்ன புத்தகங்கள் வாங்கவேண்டும்?
விஜயரங்கம்.- கம்பரிராமாயணம், வில்லிபுத்தூராழ்வார் பாரதம், திருக்குறள் முதலியவைகளே.
சோமசுந்தரம் – இப்புத்தகங்க ளெல்லாம் உன்னிடத்தில் இருந்ததை நான் பார்த்திருக்கிறேனே!
விஜயரங்கம்.- ஆம்! என் தகப்பனார் இரவலாக வாங்கிக் கொடுத்திருந்தார். அவைகளைத் திரும்பக்கொடுத்துவிட எண்ணங்கொண்டு தைப்பூசத்துக்காக வந்திருக்குங் கடைகளில் எனக்கு வேண்டியவைகளை வாங்கிக்கொள்ளும்படி உத்தர வளித்தார்.
சோமசுந்தரம்.- அந்தச் சவுளிக்கடையைப் பார்த்தாயா? சேலம் மதுரை சரிகை வேஷ்டிகளில் அதிகவிலையுயர்ந்தவைகள் வந்திருக்கின்றனவே அவைகளில் ஏதாகிலும் வாங்கக்கூடாதா?
விஜயரங்கம்.- எனக்குச் சரிகை வேஷ்டிகள்மேல் பிரியமே கிடையாது. என் தகப்பனார் எனக்கு இனாமாகக் கொடுத்திருக்கும் ஆயிரம் ரூபாய் இன்னும் அப்படியே இருந்தும் அதில் எவ்வளவையும் சரிகைத் துணிகளில் செலவிடப் பிரியமில்லை.
சோமசுந்தரம்.- உன்னுடைய தந்தையிடம் பதினாயிரம் ரூபாய் கடன் வாங்கி மதுரைக்குப்போன கண்ணப்ப முதலியார் அனேகவருடம் பேசாமலிருந்துவிடவே, அந்த ரூபாய் பதினாயிரமும் போனதென்றே மதித்து முதலில் பாதியை விட்டு மற்றைப் பாதியையாகிலும் வாங்கிவரும்படி உன்னை அனுப்ப, நீ மதுரைக்குப் போனபொழுது, கண்ணப்ப முதலியார் உனக்கு வேண்டிய மரியாதை செய்து வட்டியும் முதலும் சேர்ந்த தொகையைக் கொடுக்க, நீ வட்டி வேண்டுவதில்லையென்று தடுத்தும், வட்டிகொடுக்காமற் போனால் கடன் வாங்கி வட்டியில்லாமல் முதல் மட்டும் கொடுத்தான் என்று தன்னை ஒத்த வியாபாரிகள் சொல்லிக் கேவலமாக நினைப்பார்க ளென்பதாகக் கட்டாயப்படுத்த, அதைத் தடுக்கமுடியாமல் நீ வட்டியும் முதலும் வாங்கிவந்ததற்கு உன் தகப்பனார் மகிழ்ந்து வட்டியாக வந்த ரூபாயில் ஆயிரம் ரூபாயை உன் சொந்தச் செலவுக்காகக் கொடுத்தாரென்றாயே, அந்த ஆயிரந்தானே?
விஜயரங்கம் – ஆம்! என் தந்தை கொடுத்த ஆயிரம் ரூபாயைச் செட்டி வீட்டில் வைத்திருப்பதை யறிந்து, ஒருவருடத்திற்குப்பின் என் கணக்கில் மற்றோர் ஐயாயிரமும் கொடுத்து அதின் வரும்படியை நான் கேட்கும் பொழுதெல்லாம் தரும்படி செட்டிக்கு உத்தரவு கொடுத்திருந்தாலும் அந்த வட்டிப்பணத்தைச் செலவிட வழியொன்றும் எனக்குத் தெரிவதில்லை. என் தாயாரும் என் சட்டைப்பையில் இருபது ரூபாயை வைத்து நாள்தோறும் சட்டையை மாற்றும் பொழுது அந்த ரூபாயில் குறைந்திருக்கிறதா வென்று பார்த்து வருகிறார்கள். ரூபாய் எனக்கு எதற்கு என்று கேட்டால், கோபித்து, ஏழைகளுக்குக் கொடுக்க இஷ்டமிருந்தால் யாரிடத்தில் போய்க் கேட்பாய் என்று சொல்லி, என்றைக்காகிலும் அதில் ஒன்று அரைகுறைந்திருந்தால் அதைச் சரியாக்கி இருபது ரூபாய் எப்பொழுதும் என்னிடத்திலிருக்கும்படிச் செய்கிறார்கள். இப்பொழுதும் என்னிடத்தில் இருபது ரூபாய் இருக்கிறது பார் என்று எடுத்துக் காட்டினான்.
சோமசுந்தரம்.- உன் தாய்தந்தையர் உன் விஷயத்தில் காட்டும் பேரன்புக்கு அளவில்லை. இப்படி யல்லவா பெற்றவர்கள் பிள்ளையை நடத்த வேண்டும்; உனக்கு எவ்விஷயத்திலும் வியசனங்கொள்ள ஏது இல்லை யல்லவா?
விஐ புரங்கம்.- எனக் செவ்விஷயத்திலும் மனச்சலிப் பில்லையாயினும், ஓர் சகோதரனாவது சகோதரியாவது இல்லாமற் போனதே எனக்கு நீங்கா வியசனம்.
சோமசுந்தரம் – அது விஷயத்தைக்குறித்து நீ வியசனப்படுவது நியாயமல்ல. அவரவர்கள் வினைக்கீடாகப் புத்திரப்பேறும் இன்ப துன்பங்களும் உலகத்தில் அனுபவிக்க வேண்டியதிருக்க, அதை மறந்து வீணில் துக்கப்படுவதில் பிரயோசனமில்லை.
விஜயரங்கம்.- ஆம்! ஆம்! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாதென்பதுபோல, நாம் என்ன வாசித்திருந்தபோதிலும், அனுபவத்தில் அவைகளை உபயோகத்துக்குக் கொண்டுவரப் பிரயத்தனப்படுகிறதில்லை. பிரயத்தனப் பட்டாலும் நம்மைப் போன்றவர்களுக்கு வாசித்தவைகள் பிரயோசனப் படாமல் அறியார்போல நாம் துக்கப்படவேண்டியதா யிருக்கிறது.
சோமசுந்தாம்.- ஆம்! அது உண்மையே. ஆயினும், அனுபவத்தில் கொண்டு வருவது கஷ்டமாயிருந்தாலும் நாம் முயற்சிக்க வேண்டும். உனக்கிது பரியந்தம் விவாகம் நடத்திவைக்காமல் இருப்பதற்குக் காரணம் தெரியவில்லை. உன் தகப்பனார் பொருளில் குறைந்தவரா? மயிலாபுரியிலுள்ள தனவந்தர்களில் முதல் ஜெகநாத முதலியார் என்றும், இரண்டாவது உனது தந்தையென்றும் சொல்லுகிறார்களே!
விஜயரங்கம்.- விவாகத்தில் எனக்கு விருப்பம் வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம். என் தந்தைதாய் என்னுடைய நன்மையை விரும்பி யாவுஞ்செய்து வருகிறவர்கள். அவர்கள் இஷ்டம்போல் யாவுஞ் செய்ய விடுவதே உத்தமம். எனக்கின்னும் விவாகஞ் செய்யாமலிருப்பதும் என் நன்மையைக் கோரியே இருக்கலாம். நீ ஜெகநாத முதலியாரைத் தன வந்தரில் முதல் என்றாயே, அது உண்மைதானா? அவர் பெருங்கடன்காரர் என்று அனேகரால் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சோமசுந்தரம்.- அது ஒரு பெரிய கதை. அதை இப்பொழுது பேசச் சாவகாசமில்லை. மற்றோர் சமயத்தில் ஜெகநாத முதலியாரைக் குறித்துப் பேசலாம். இப்பொழுது நீ விரும்பிய கடைக்குச் சமீபத்தில் வந்து விட்டோம். நமக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம்.
என்று இருவரும் கடைக்குள் நுழைந்தார்கள். சவுளிக்கடைகளுக் கெதிரில் சற்றேறக்குறைய இருபத்தைந்து வயதுள்ள இரண்டு வாலிபரில் ஒருவன் மற்றொருவனைப் பார்த்து இந்தச் சவுளிக்கடைகளிலுள்ள விலை யுயர்ந்த வஸ்திரங்களை யெல்லாம் கொடியில் விரித்துப்போட்டிருக்கிறதைப் பார்த்தாயா! இரத்தினம்?
இரத்தினம்.- ஆம் பார்த்தேன் மாணிக்கம்! அதோ நமக்கெதிரில் காணப்படும் காசிச்சேலையில் பச்சை நிறமுள்ளதை நாம் சந்தையிற் பார்த்த பெண்மணி உடுத்திக்கொண்டிருப்பாளானால் எவ்விதம் இருக்கும்!
மாணிக்கம்.- அவளுடைய சுந்தரத்தை அதிகப்படுத்தவா காசிச்சேலை வேண்டும் என்கிறாய்? ஒருக்காலுமில்லை. காசிச்சேலை வாங்கி அவள் கட்டுவாளானால் சேலைக்கு மதிப்பேயன்றி அவளுக்கு ஒன்றுமில்லை.
இரத்தினம். – சேலைக்கென்ன மதிப்பு?
மாணிக்கம்.- அவலக்ஷணமுள்ள பெண்களிடுப்பில் ஏறாமல், அச்சுந்தரமான பெண் இடுப்பில் ஏறியதே! அப்பெண்மணி யாரென்று விசாரித்து வருவதாகச் சொன்னது முடிந்ததா?
இரத்தினம்.- நாம் இவ்விடத்தில் நின்று அப்பெண்மணியைக் குறித்துப்பேசு வது நன்றல்ல. அதோ அந்த மரத்தடியில் போய்ப்பேசிக்கொண்டிருக்க லாம். அங்கு ஒருவரும் வரமாட்டார்கள்.வருக (என்று அழைத்துச்செ ன்று) அப்பெண்மணி தாயின் பெயர் செழுங்கமலம். அம்மாதின் பெயர் கமலாக்ஷி.
மாணிக்கம்.- இவைகளை எப்படிக் கண்டுபிடித்தாய்? அசாத்தியமான காரியங்களைச் சுலபமாகச் செய்துவிடுகிறாய்!
இரத்தினம்.- நான் வனசாக்ஷியை விவாகஞ் செய்துகொள்ள எண்ணங் கொண்டிருப்பதை அனேக நாள்களுக்கு முன் உன்னிடம் சொல்லி யிருந்தேன். அதை என் தாயாரிடத்தில் சொல்லிப் பெண்ணைப் பார்த்துப் பேசி வரும்படி சொன்னதன்பின் என் தாயார் அடிக்கடி வனசாக்ஷியையும் அவள் தாயையுங் கண்டு வருவதுண்டு. வனசாக்ஷியால் அவளோடு சந்தையிலிருந்து வந்தவளை இலகுவில் இன்னவளென்று அறிந்துகொள்ள நேரிட்டது.
மாணிக்கம்.- நாம் இன்று எல்லாக் காரியத்தையும் முடிவுபடுத்திக்கொண்டு போகவேண்டியதா யிருக்கிறது. பொழுதும் போய்விட்டது. இம்மரத்தடியிலிருக்கும் திண்ணையில் இரு (என்று இருவரும் உட்கார்ந்தார்கள்.)
இரத்தினம். – ஆம். இன்று அது விஷயத்தைப் பேசி முடித்துப்போகவேண்டியதவசியமே. என்னசெய்யலாமென்று யோசிக்கிறாய்?
மாணிக்கம்.- என் புத்திக்கு ஒன்றும் புலப்படவில்லை. எல்லா விஷயத்திலும் உன்னையே எதிர்பார்த்து இருக்கிறேன். உனக்கிது விஷயத்திலுள்ள அனுபோகம் எனக்கில்லை. முன்னொரு பெண்ணை உன் வலையிற் சிக்க வைத்ததைச் சொல்லுகிறேன் என்றாய். அதைச் சொல்லியபின் இது விஷயத்தைக் குறித்து நீ யோசித்திருப்பதைச் சொல்லவேண்டுகிறேன்.
இரத்தினம் – ஆ! ஆ! அதை இன்னும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருக்கிறாயா? உன்னுடைய இஷ்டம்போலவே செய்வேன். மூன்று வருடங்களுக்குமுன் அக்கிராரத்துக் கருகாமையிலுள்ள வேளாளர் தெருவில் சுந்தரமான ஒரு பெண் தன் வீட்டுத்தெருவாயிற்படியில் ஒருநாள் நின்றிருக்கக்கண்டேன். அவள் என்னைக் கண்டவுடன் வீட்டுக்குள் சென்றாள். நான் அவளை மறுபடியும் பார்க்கவேண்டு மென்ற எண்ணத்துடன் அடிக்கடி அவ்வீதி வழியே போனாலும் தொடக்கத்தில் போகுமபொழுதெல்லாம் அவள் என் கண்ணுக்கு அகப்படாமல் ஒவ்வொருநாளில் அகப்பட்டுப் புன்னகையோடு வீட்டுக்குள் ஓடிப்போய்விடுவாள். சிலநாள்கள் பொறுத்து நாள்தோறும் என் வருகையை எதிர்பார்த்திருப்பது போல், வாயிற்படியில் நின்றிருப்பாள். நான் அவளைக்கண்டு நகைத்தால் அவளும் நகைப்பாள். ஒவ்வொருநாளில் நான் அவளைக் கண்டு நகைத்தால் அருவருப்போடு என்னைப் பார்த்துப்போய், மறுநாள் என்னைக் கண்டால் புன்சிரிப்போடு நின்று பார்ப்பாள். இவ்விதம் சில மாதம் கழிந்தபின், ஒரு நாள் அவ்வழியாக நான் தனித்து வரும்போது என்னோடு பள்ளியில் வாசித்த ஒருவன் என்னைக் கண்டு வார்த்தை யாடிக்கொண்டே அப்பெண்மணி வசிக்கும் வீட்டுக்குள் நுழையும் பொழுது என்னையும் அழைத்தான். நான் எனக்குத் தாகமாக இருக்கிறதென்றும்; வீட்டுக்குத் துரிதமாய்ப் போக விரும்புகிறேன் என்றும் சொல்ல, அவன் அதற்கென்ன நம்முடைய வீட்டில் தாகத்துக்குச் சாப் பிடலாம் என்று கையைப்பிடித்து அழைத்துக்கொண்டுபோய்த் தாகத்துக்குக் கொண்டுவந்து கொடுக்கும்படி உத்தரவு செய்தான். உடனே ஓர் தாகத்துச்செம்பு நிறைய நிறக்கப் பால்விட்ட காப்பி வந்தது.
மாணிக்கம். – நீ காதல்கொண்ட மாதின் வீடு என்று உனக்குத் தெரிந்திருந்தும் உன்னை அழைத்தபொழுதுபோக மனங்கொள்ளாத காரணம் யாது?
இரத்தினம்.- நான் அப்பெண்மணியை இச்சைசொண்டு அடிச்சடி அவர்களிருக்கும் வீட்டுவழியாகச் சென்று அப்பெண்மணியைக் கண்டு நகைத்து வந்தது, என்னை அழைத்துச்சென்ற நண்பனுக்குத் தெரிந்து என்னை அவமானப்படுத்த எண்ணங்கொண்டு அழைக்கிறானென்று முதலில் பயங்கொண்டு போக மனங்கொள்ளாமல் இருந்தேன். ஆயினும் நொடிக்குள் என் மனம் தைரியப்பட்டு அவனோடு சென்றேன். அவன் தாகத்துக்குக் கொண்டுவரும்படி கட்டளை யிட்டதும், யார்கொண்டு வந்தார்களென்று நினைக்கிறாய்?
மாணிக்கம் – நான் யாரென்று சொல்லுவேன். அப்பெண்மணியே கொண்டு வந்திருப்பாள்.
இரத்தினம். – உண்மையைச் சொன்னாய். அம்மாதரசே புன்சிரிப்போடு கொண்டுவந்து கொடுத்தாள். அவள் கொடுத்த காப்பியைச் சாப்பிட்டுச் செம்பைக் கொடுக்கும்பொழுது அவள் விரல்களில் ஒன்றைச் சுரண்டினேன். அவள் புன்னகையோடு சென்றாள். நானதுமுதல் என் சிநேகிதனைக் காணப்போவதுபோல் அடிக்கடி அவள் இருந்த வீட்டுக்குச் சென்று வந்தேன். ஒருநாள் மாலை என் சினேகன் இருக்கும் அறைக்குள் நான் நுழைந்து பார்த்தபொழுது என் சினேகனைக் காணாமல் அவன் வருவான் என்று மேஜையின்மேல் வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிஷங்களுக்குப் பின் அம்மாதரசு அவ்வறைக்குள் பிரவேசித்து என்னைப் பார்த்து நகைத்தாள். நானும் நகைத்துக்கொண்டே ஏன் நகைக்கிறாய் என்றேன். என் தமயனும் தாயாரும் வெளியூருக்குப் போயிருக்கும் சமயத்தில், என் தமயனைத் தேடிக்கொண்டு வந்தீர் என்று நகைத்தேன் என்றாள். உன்னைத் தனியாக இவ்வீட்டில் விட்டா வெளியூருக்குப் போயிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அவள் எங்களைத் தனியாகவிட்டுப் போகவில்லை. அடுத்த வீட்டுப் பெரியம்மாள் எங்களுக்குத் துணையாக இருக்கிறார்கள் என் சொன்னாள். நெடுநாளாகச் சமயம் பார்த்திருந்தது இன்று கைகூடியது என்று அப்பெண்மணியின் கையைப்பிடித்து முத்தமிட்டும், அவள் கன்னத்தில் முத்தமிட்டும் அவளைக் கட்டியணைத்துப் பிடித்துக்கொண்டு முகமெல்லாம் முத்தமிட்டேன். அவள் யாராகிலும் வந்துவிடுவார்கள், விட்டுவிட வேண்டும் என்று வேண்டினாள். நான் அவளைப் பிடித்த பிடியை விட்டு உனக்குத் துணையாக விருக்கும் பெரியம்மாள் எங்கே என்றேன். அதற்கவள் அவர்கள் சமையலறையிலிருக்கிறார்கள் என்றும், நான் அவ்வறையில் எட்டுமணி பரியந்தம் இருந்தால் அவர்கள் படுக்கைக்குப் போனவுடன் தான் வருவதாக உறுதிமொழிகூறியும், நான் இருந்த அறையைப் பூட்டித்திறவுகோலைக் கொண்டுபோயினாள். நான் அதிக சந்தோஷமாகக் கொஞ்சநேரப் பொழுதையும் போக்க அவ்விடத்தி லிருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். என் மனம் அப்பெண்மணியின் மேலிருந்ததால் நான் வாசித்தது இன்னதென்று எனக்குத் தெரியாமல் போனது. சிலநேரத்தில் அவ்வரை இருண்டதால் நான் இருட்டில் உட்கார்ந்து எட்டுமணி எப்பொழுது அடிக்கு மென்று ஒவ்வொரு விநாடியையும் எண்ணிக்கொண்டிருந்த எனக்கு வேறெண்ணம் தோன்றி என்ன காரியம் செய்துவிட்டோம்! அந்நியர் வீட்டி னறைக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோமே! என்ன கெடுதிவருமோ! யாராகிலும் நம்மைக் கண்டுபிடித்துக் கொண்டால் என்ன செய்கிறது! இவ்விடம் இருப்பது தகுதியல்லவே, ஓடிப்போவதே உத்தமம் என்று பலவித யோசனையிலிருக்கும்பொழுது கதவு மெதுவாகத் திறக்கப்பட்டு அப்பெண்மணி தின்பண்டங்களோடு வந்து, என்னை அதிகநேரம் காக்கவைத்ததற்காகத் துக்கப்பட்டுக்கொண்டே கதவைச்சாற்றி உள்தாளிட்டு விளக்கேற்றி வைத்து என்னருகில் வந்து, நான் என்ன செய்வேன்? அவர்கள் படுக்கைக்குப் போகுமளவும் பார்த்திருந்து வந்தேன் என்றும், நீங்கள் பசியோடு இன்னும் இருக்க வேண்டாமென்றும், தான்கொண்டுவந்த பதார்த்தங்களைச் சாப்பிட ஒன்று ஒன்றாக வாயிற் கொடுத்துச் சுண்டக்காய்ச்சிக் கற்கண்டு போட்டுக் கொண்டுவந்த பாலையுங் கொடுத்து நான் வஞ்சனை யில்லாமலும் வேண்டாமென்று சொல்லாமலும் உண்டபின் அன்றிரவெல்லாம் தன்னோடு சந்தோஷமாக இருக்கச் செய்து விடிய ஓர் ஜாமத்துக்கு முன் என்னை யெழுப்பித் தன் தமயனும் தாயும் வர ஒரு வாரஞ்செல்லும், ஆதலால் தாங்கள் இரவில் எட்டு மணிக்குமேல் வருவீரானால் என்னை இந்த அறையில் பார்க்கலாமென்று என்னைக் கட்டியணைத்து முத்தங்கொடுத்து அனுப்பினாள். அவள் சொல்லிய நேரப்படி ஒவ்வொரு நாளும் அவளுடைய வீட்டுக்குச் சென்று அவளோடு சுகித்திருந்தேன். பின் அவளுடைய தாயும் தயனும் வந்த பின் அவ்வீட்டுக்கு அடிக்கடி போனாலும் அவளோடு தனித்திருக்கச் சாத்தியப்படவில்லை. மூன்று மாதமானபின் அவ்விடம் போயிருந்த பொழுது அப்பெண்மணி என்னை கண்டு தான் கருப்பமாயிருக்கிறபடியினால் தன்னை அழைத்துக்கொண்டு போக வேண்டினாள். நான் தக்க ஏற்பாடு செய்துவந்து அழைத்துப் போகிறேன் என்று வந்தவன் அப்பக்கம் போகப் பயந்திருந்தேன்.
மாணிக்கம் – உன் மேல் ஆசைகொண்டிருந்தவளைப் பார்க்காமலிருக்க மனம் பொருந்தியது அதிசயம். கருப்பமாயிருததாயென்கிறாயே! குழந்தை பிறந்ததா? அவள் இறந்தாளா? உயிரோடிருக்கிறாளா என்றாவது விசாரிக்காமலோ இருந்தாய்?
இரத்தினம் – அக்குடும்பம் இவ்வூரைவிட்டு அபபொழுதே போய்விட்டதால் அவளைக்குறித்தொன்றும் அறிய ஏதுவில்லாமற்போயிற்று.
மாணிக்கம் – உன்னுடைய நற்காலத்தைக் குறித்துச் சந்தோஷப்பட வேண்டியதே! நாம் கமலாக்ஷியைக்குறித்து என்ன செய்கிறது? (என்று சொன்னவுடன் திரும்பிப்பார்த்தான்.)
இரத்தினம்.- ஏன் திரும்பிப் பார்க்கிறாய்?
மாணிக்கம். – யாரோவருகிற அரவம் கேட்டது. (என்று சற்றுநேரம் மொளனமாகவிருந்தான்.)
பின்பு இருவரும் சிலநேரம் வார்த்தையாடிக்கொண்டிருந்து நீங்கினார்கள்.
– தொடரும்…
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதற் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.
– கமலாக்ஷி சரித்திரம் (நாவல்), இரண்டாம் பதிப்பு: 1910, தாம்ஸன் அண்ட் கம்பெனி, மினர்வா அச்சுக்கூடத்தில் பதிப்பித்தது, சென்னை.