கமலாக்ஷி சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2024
பார்வையிட்டோர்: 1,184 
 
 

(1910ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

19-ம் அத்தியாயம்

கண்ணபுரி என்னும் ஊரிலே ஒரு பெரிய மெத்தை வீட்டுக்கெதிரில் தண்ணீர் தெளித்துப் பலவிதபுஷ்பத்தொட்டிகளை அழகாகவைத்து விளக்குகள் போட்டிருக்கும் ஒருவீட்டுக்குள் அனேகர் போவதைக்கண்ட இரு வாலிபர்களும் ஒரு விருத்தரும் அவ்வீட்டுக்குள் சென்று, அனேகத்தூண்டா விளக்குகள் மாட்டி இரத்தினக் கம்பளம் விரித்திருக்கும் கூடத்தில் ஒருபுறமாக மூவரும் உட்காரப்போனபோது, வீட்டுக்குள்ளிருந்தவர் அங்கு ஏன் போகிறீர், இங்கு வந்து உட்காரலாம் வாரும் சபாபதி முதலியார் என்று மூவரையும் அழைத்துவந்து கூடத்துமத்தியில் உட்காரவைத்தார். 

சபாபதிமுதலியார் – தம்பி விஜயரங்கம்! இன்று நடக்கப்போகும் பிரசங்கம் மிகுமேன்மையாக இருக்குமென்று கேள்வி. தாங்களும் பிரசங்கம் கேட்டு நெடுநாளாயிற்றல்லவா? (என்று பெரியவரைப்பார்த்துக் கேட்டார்).

பெரியவர்.- ஆம்! நான் சத்காலக்ஷேபம் கேட்டு ஏறக்குறைய பதினாறு வருடங்களாயின. 

விஜயரங்கம்.- (சபாபதிமுதலியாரைப்பார்த்து) அண்ணா! எது விஷயத்தைப்பற்றிப் பிரசங்கமாகப் போகிறது? அதுதெரியவில்லை.

இதோ பிரசங்கியாரும் வந்துவிட்டார் என்று சபாபதிமுதலியார் சொல்லிய வுடன் ஒருவாலிபர் தமக்கென் றேற்படுத்திய ஆசனத்தில் உட்கார்ந்து கடவுளைத்துதித்துச் சபைவணக்கம் சொல்லித் தாயுமானசுவாமி பாடலில் முதற்செய்யுளை ஆதாரமாகக்கொண்டு சபையிலுள்ளவர்கள் யாவரும் பிரமிக்க நெடுநேரம் பிரசங்கஞ்செய்து முடித்தார்.

விஜயரங்கம்.- (சபாபதிமுதலியாரைப்பார்த்து) அண்ணா! இந்தச்செய்யுள் இவ்வளவு பொருளை யடக்கிக்கொண்டிருக்கிறதென்று நான் நினைக்க வில்லை. பிரசங்கியார் வாலிபராயிருந்தாலும் சாஸ்திரங்களை யெல் லாம் நன்குணர்ந்தவராகக் காணப்படுகிறதால் நமக்குற்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும். நாமவரோடு தனித்து வார்த்தை யாடமுடியுமா? அது முடியும்படி செய்துவருகிறேனென்று சபாபதிமுதலியார் எழுந்து போய்ச் சிலநிமிஷத்தில் திரும்பிவந்து, நாளை காலையில் வந்தால் சம்பாஷிக்கத் தடையில்லையென அறிந்துவந்தேன், ஆனதால் நாம் காலை யில் வரலாமென்று எழுந்து போய் மறுநாள் காலை எட்டுமணிக்குப் பிரசங்கியாருக்கு வந்தனம் செய்து அவரருகில் இருவரும் உட்கார்ந்தார்கள். வீட்டுக்கு எஜமான் பிரசங்கியாரை யடுத்து, ஐயா! இவர்கள் தங்களுக்குள்ள சந்தேகத்தைக் கேட்டுக்கொள்ளத் தங்களிடம் வந் திருக்கிறார்களென்றான். 

பிரசங்கியார். – சந்தோஷம்! என்ன சந்தேகம் கொண்டிருக்கிறீர்கள்? உங்க ளுக்குற்ற சந்தேகத்தைக்கேட்டால் அதற்குச் சமாதானம் அடியேனுக் குத் தெரிந்தவரையில் சொல்லுகிறேன். தெரியாதிருந்தால் அடியே னுக்குத் தெரியாதென்று சொல்லிவிடுகிறேன் ; அதில் தோஷம் ஒன்று மில்லை யானதால் தாங்கள் கேட்க யோசித்திருப்பதைக் கேட்கலாம்.

சபாபதி முதலியார் – தம்பி விஜயரங்கம்! ஏன் மௌனமாயிருக்கிறாய்?

விஜயரங்கம். – ஐயா! எனக்குற்ற சந்தேகத்தை நிவர்த்தித்துக்கொள்ள யோசித்ததேயன்றி வேறொன்றையுங் கருதியல்ல. ஆனதால் என்னை மன்னிக்கவேண்டும். உலகிலுள்ள சமயிகள் யாவரும் கடவுள் உண் டென்று ஒப்புக்கொண்டிருக்க நிரீச்சுவரவாதிகள்மட்டும் கடவுள் இல்லை என்கிறார்களே! அவர்களுக்குக் கடவுள் உண்டென்று ஆதாரத்தோடு மெய்ப்பிக்க இடமிருக்கிறதா? 

பிரசங்கியார்.- நீர் கேட்பதற்குச் சிவஞானபோதம் முதற்சூத்திரம் கொண்ட கருத்தைச் சொல்லுகிறேன். மட்பாண்டங்களைக் கண்டபொழுது அவை களை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கவேண்டுமென்று தீர்மானிப்பது போல், உயர்திணையும் அஃறிணையுமாய்ச் சொல்லும் பிரபஞ்சமெல்லாம் தோன்று முறையிலே தோன்றி, நிற்கு முறையிலே நின்று, ஒடுங்கு முறையிலே ஒடுங்கி,வருகிறதை நாம் காண்கிறதனாலே, இவைகளைத் தோன்றவைத்தும், தோன்றியதை நிற்கவைத்தும், நின்றதை யொடுங்க வைத்தும் காரியப்படுத்த ஒருவன் வேண்டுமாதலால், முன் சொன்ன முத்தொழிலையுஞ் செய்பவனையே நாம் கடவுளென்று சொல்லுகிறோம். நாம் பிரத்தியட்சமாய்க் காணாததை அநுமானத்தாலறிய வேண்டிய தானால் அதை ஐந்து விதத்தில் பரிக்ஷித்துப்பார்த்து ஒப்புக்கொள்ளுகிறோம். ஐந்து விதம் எவையெனில்:- பிரதிஞ்ஞை, ஹேது, திருட்டாந்தம், உபநயம், நிகமனம், என்பவைகளே. இப்பிரபஞ்சத்துக்குக் கர்த்தா உண்டென்பது பிரதிஞ்ஞை. பிரபஞ்சம் உயர்திணையும் அஃ றிணையுமாய் அவயவப்பட்டிருத்தலால் அவ்விதம் சொல்லுகிறோமென் பது ஹேது. குயவனால் குடம் சட்டிப்பானைகள் உண்டாவதுபோல் என்று சொல்லுவது திருஷ்டாந்தம். குயவன் இல்லாமல் பாண்டங்கள் உண்டாகாததுபோல் உயர்திணை அஃறிணைப்பொருளாய் நிறைந்த பிரபஞ்சம் ஒரு கர்த்தா இல்லாமல் உண்டாகாதாதலால் ஒரு கர்த்தா உண் டென்று தீர்மானித்தல் உபநயம். குயவனைக் கர்த்தாவுக்குத் திருஷ்டாந் தமாகக் காட்டியது ஒத்திருந்து பிரதிஞ்ஞையை உறுதிப்படுத்தியது நிக மனம். ஆனதால் கடவுள் உண்டென்பதற்கு ஆதாரம் காணப்படுகிற தல்லவா? 

விஜயரங்கம்.- வாயுவால் நீரில் குமிழி தோன்றுவதுபோல் பூதங்கள் சேர்க் கையால் யாவும் உண்டாகின்றன, எல்லாம் சுபாவமேயன்றி வேறல்ல வென்றும், வெற்றிலையும் பாக்கும் சுண்ணமும் கலந்த விடத்தில் சிவப்பு தோன்றுவதுபோல் பூதங்களின் கூட்டுறவால் உடலுண்டாகி அறிவு உதிக்கின்றது, அவ்வறிவோடு உலகில் ஒரு பெண்ணை வதுவை செய்து அவளோடு இன்பத்தை அனுபவிப்பதே முத்தியென்றும், ஒன்று சேர்ந்த பூதங்கள் பிரிந்தகாலத்தில் தேகத்தின் பௌதிகப்பொருள்கள் அவ்வவற் றிற்குரிய பூதங்களோடு கலந்துவிடுகின்றனவென்றும், இதை யறியா மல் புண்ணியம் பாவம் உண்டெனவும் அவைகளினால் பிறவிகள் கிடைக் கின்றன வெனவும் சொல்லுவது தவறென்றும், நாமில்லாததை உண் டென்பதாக வீண் கவலைகொண்டு திரிகிறோமென்றும் கூறுகிறார்களே!

பிரசங்கியார் – நீர் கேட்டவைகளுக்குத் தக்க சமாதானம் அருணந்தி சிவா சாரியார் திருவாய் மலர்ந்தருளிய சிவஞான சித்தியார் பரபக்ஷத்தில் உலோகாயதத்தைப் பற்றிச் சொல்லியிருப்பதால் அதைக்கண்டு தெளிய லாம். இப்பொழுது கேட்டவைகளுக்குச் சமாதானம் சொல்லவேண்டி யது கடமையேயாயினும், அடியேனுடைய வினாவுக்கு முதலில் விடை யளிக்க வேண்டும். உம்முடைய விடையை அறிந்த பின் நீர் கேட்ட வைகளைக் குறித்து யோசிக்கலாம். ஆனதால், உள்ளது தோன்றுமா? இல்லாதது தோன்றுமா? 

விஜயரங்கம்.-“உள்ளது” என்றாலது எக்காலத்திலும் உள்ளதென்றும், இல்லாதது” என்றால் அது எக்காலத்திலுமில்லாததென்றும் பொருள் படுவதால் அவ்விரண்டிற்கும் தோற்றம் சொல்லுவ தெவ்விதம்?

பிரசங்கியார்.-உண்மையைச் சொன்னீர். அவ்விரண்டிற்கும் தோற்ற மில்லை. வாயுவால் நீரில் குமிழிதோன்றி நீரோடு நீராகப் போகுமே யல்லது வேறொன்றாகத் திரியாது. பூதங்களின் சேர்க்கையால் யாவும் உண்டாகுமானதால் யாவும் சுபாவம் என்றீர். பூதக்கூட்டத்தாலறிவு உண்டாகுமாயின் யானை பெருத்திருப்பதால் அதற்கு அறிவு பெரிதாக வும், எறும்பு சிறித்திருப்பதால் அதற்கு அறிவு சிறிதாகவு மிருக்கவேண்டுமே! சிறிய உடலைக்கொண்ட மானிடருக்கு அறிவு பெரியதாக இருக்கவேண்டிய காரணமில்லையே! வெற்றிலையும் பாக்கும் சுண்ணமும் கலந்த விடத்தில் சிவப்பு தோன்றுவது போலென்றீர். தோன்றிய சிவப்பு நீங்காமலிருப்பது போல் உடலுக்கறிவு மரணத்திலும் நீங்காம லிருக்கவேண்டும். 

விஜயரங்கம்.– தாங்கள் சொல்லிக்கொண்டு வரும்பொழுது மத்தியில் தடை யாகிறதைக் குறித்து மன்னிக்கவேண்டும். மரணத்தில் வாயு நீங்கிய தால் உடலுக்கு அறிவு இல்லாமற் போகிறது. 

பிரசங்கியார். – உறக்கத்தில் வாயு நீங்காமலிருக்க அப்பொழுது அறிவில்லா மற் போகிறதே? அதற்கென்ன சொல்லுகிறது? நிலம்,நீர்,காற்று,தீ என்கிற ஜடபதார்த்தத்தில் சித்தாகிய பதார்த்தம் தோன்றாது. விஜயரங்கம்.- சிலம்பியிலிருந்து நூல் தோன்றவில்லையா?

பிரசங்கியார். – இந்த உவமானத்தைக் கவனியாமல் சிலர் உபயோகிக்கிறார் கள். சிலம்பியிலிருந்து நூல் தோன்றுவதென்றால், ஜடத்திலிருந்து ஜடம்தோன்றியதே யன்றி ஜடத்திலிருந்து சித்தாகிய பதார்த்தம் தோன்றவில்லை. அல்லது சித்தாகிய சிலம்பியின் ஆன்மாவிலிருந்து ஜடம் தோன்றவில்லை. ஜடமாகிய பூதத்திற்கு அறிவில்லாததால் அது ஒன்று சேர்ந்த காலத்தும் “இல்லாதது தோன்றாது.” என்ற முறைப் படி, இல்லாத அறிவு உண்டாக நியாயமில்லையே! புண்ணிய பாவம் உண்டென்றும், அதனால் பிறவிகள் கிடைக்கின்றன வென்பதாகச் சொல்லுவது தவறென்றும் கூறினீர். பூதக்கூட்டத்தாலுண்டாகும் உடல் ஒரே விதமாயிராமல் ஆண், பெண், அலி என்னும் பேதமும், மானிடயோனி ஒன்பது நூறாயிரமும், அமரர்யோனி பதினொறு நூறா யிரமும், நாற்காலுடையவைகள் பத்து நூறாயிரமும்,பறவைகள் பத்து நூறாயிரமும், நீர்வாழ்வன பத்துநூறாயிரமும், ஊர்வன பதினைந்து நூறா யிரமும், தாபரங்கள் பத்தொன்பது நூறாயிரமும் ஆக எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதத்தோடும் பிறந்து ஒருவன் அரசனாகவும் மற்ற வன் ஏழையாகவும், ஒருவன் சுகத்தை அனுபவிக்கவும், வேறொருவன் துக்கத்தை அனுபவிக்கவும் வேண்டிய காரணமென்ன? இதனால் அவ ரவர்கள் செய்த கன்மத்துக்கீடாக உடல் கிடைத்துச் சுகதுக்கங்களை அனுபவிக்கிறார்களென்று காணப்படவில்லையா? வெற்றிலையும் பாக்கும் சுண்ணமும் தாமாய் ஒன்று கூடாவாகையால், அவைகளைச் சேர்த்து வைக்க ஒருவன். வேண்டியதுபோல், ஐந்து பூதங்களையுங் கூட்டுவிக்க வும், கூட்டுவித்ததைப் பிரிக்கவும், பிரித்ததை ஒடுக்கவும், ஒடுங்கியதைத் தோற்றுவிக்கவும் ஒரு கர்த்தா வேண்டும். இன்னும் இதை விவரிக்கிற் பெருகும். 

விஜயரங்கம். – ஐயா! நம் கர்த்தாவுக்கு வடிவம் உருவமானால் நம்மைப் போல் அவரையும் ஒருவர் உண்டாக்க வேண்டுமென்றும், அருவமானால் அருவம் உருவமாகவும் உருவம் அருவமாகவும் ஆவது கூடாதென்றும், அருவுருவம் என்னில் ஜலத்திற்குக் குளிர்ச்சிமட்டும் இருப்பதன்றிச் சூடில்லாததுபோல் ஒரு பொருளுக்கு இரண்டுவித குணங்களும் ஏக காலத்தி லிராவென்றும் சொல்லுகிறார்களே! 

பிரரங்கியார்.- நீர் கேட்டவைகளுக்கு 

‘அருவமோரூபாரூபமானதோவன்றிநின்ற 
வுருவமோவுரைக்குங்கர்த்தாவடிவெனக்குணர்த்திங்சென்னி
லருவமும்ரூபாரூபமானதுமன்றி நின்ற 
வுருவமுமூன்றுஞ்சொன்னவொருவனுக்குள்ளாவாமே.” என்றும்,

“பந்தமும் வீடுமாயபதபதார்த்தங்களல்லா 
னந்தமுமாதியில்லானளப்பிலனாதலாலே 
யெந்தைதானின்னனென்று மின்னதாமின்னதாகி 
வந்திடானென்றுஞ்சொல்லவழக்கொடுமாற்றமின்றே.” 

என்றும் சிவஞான சித்தியாரி லிருப்பதைக் கண்டு தெளிவீராக. எந்தை அருளினால் சகளமான திருமேனி பூண்டாரென்றபொழுது, சகள் மான திருமேனியேயன்றி நிட்களத்திருமேனியும் உண்டென்றும், நிட்களமும் சகளமும் ஏற்பட்டதால் அவர் திருமேனி சகள நிட்களம் என்றும் விளங்குகின்றது. அஃதென்போலென்னில் – சகளம் மரமா னதுபோலவும் நிட்களம் நிழல் போலவும், சகளநிட்களம் பூவும் பூவின் மணமும் போலவுமென்று மறைஞானதேசிகர் விளக்கிக்காட் டியிருப்பதால், எங்கும் பரிபூரணமாய் நிறைந்துள்ள நம் கர்த்தாவுக்கு வடிவமானது உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்றுமே யென்று சொல்லத் தடையில்லை. 

விஜயரங்கம்.- எங்கும் பரிபூரணராய் நிறைந்துள்ள கர்த்தாவுக்கு ஓரால் யங்கட்டி அதில் ஒர் விக்கிரகத்தை வைத்து வணங்கவேண்டுமோ? நாம் இருந்த இடத்திலிருந்து வழிபடக்கூடாதா? 

பிரசங்கியார் – ஆற்றில் அல்லது குளத்திலுள்ள ஜலத்தைக் கையாற்றள் ளிய பொழுது விலகிய ஜலம் ஒன்றுகூடிக் காணப்படுவது போல், எங் கும் நிறைந்துள்ள வாயுவை விசிறியினால் விலக்கப் பின் அது ஜலம் போல் ஒன்றுசேர நாமதையறியாமல் விசிறி காற்றை உண்டுபடுத்திய தென்று ஆனந்திக்கின்றோம். விசிறியானது இருக்கிற காற்றை உண ரச்செய்வது போலவே, ஆலயம் விசிறியைப்போல் நின்று, எங்கும் நிறைந்துள்ள நம் கர்த்தாவை விக்கிரகரூபமாக எடுத்துக்காட்ட நாம் பார்த்து வழிபட்டு ஆனந்திக்கின்றோம். உண்மையை அறிந்து பார்க் கில் விசிறியும் நூதனமாகக் காற்றைக் கொண்டுவரவில்லை. ஆலயமும் இல்லாததைக்கொண்டு வரவில்லை. மறந்தோர்க்கும் அறியார்க்கும் எந்தை ஒருவர் உண்டென்று ஆலயம் நினைப்பூட்டுகின்றது.

விஜயரங்கம்.- விக்கிரக ஆராதனை கூடாதென்று அனேகர் சொல்லுகிறார்களே! 

பிரசங்கியார்.- அவ்விதம் சொல்லுகிறவர்களைக் கண்டிக்கவேண்டியதே நம் கடமை. இறைவர் தம்மன்பர் நிமித்தம் பல அவதாரத்தில் கொண்ட திருக்கோலத்தைப்போல் உருவேற்படுத்தி வேதாகமவிதிப்படி வழிபடுகி ன்றோமென்று புறச்சமயிகளுக்குச் சொல்வதிற் பிரயோசனமில்லை. ஆன தால் வேறுவித சமாதானமே அவர்களுக்குச் சொல்லவேண்டும். நாம் விக்கிரகத்தைக் கண்ணால் பார்க்கிறோமா? அல்லது மனதால் பார்க்கி றோமா ? என்று முதலில் அறியவேண்டியது. ஞானேந்திரியங்களிலொ ன்றாகிய நேத்திரத்துடன் தன்மாத்திரையும் மனமும் சேராத பொழுது நேத்திரத்தின் தொழில் முற்றிலும் நிறைவேறாது. மனம் நேத்திரத் தோடு சேராமல் விஷயத்தில் சம்பந்தப்பட்டிருந்தபொழுது நாம் ஒன்றை வாசித்தாலும் பார்த்தாலும் ஒன்றும் தெரியாமலிருப்பதை நீர் கவனித் திருக்கக்கூடும். ஆனதால் மனமே காரணமாய் நின்று ஒருருவை அறி கின்றது. நாம் பார்த்திராத ஒரூரின் அலங்காரத்தை ஒருவர் சொல்லும் பொழுதும், நாம் பார்த்திராதாரு புருடனையாவது ஒரு பெண்ணையாவது ஒருவர் வருணித்துக் கூறும்பொழுதும் நம்மனதில் உருவு தோன்றுவது போல், அவரவர்கள் வழிபடுந் தெய்வத்தை விக்கிரக ரூபமாகப் பார்த் திராதவர்களுக்கும் அத்தெய்வத்தின் குணானுபவத்தை யறிந்தபொழுது உருவம் ஏற்படுகின்றது. ஈசுவரனை விக்கிரக ரூபமாகக்கொண்டு வழி படுகிறவர்களும் அங்ஙனம் வழிபடாதவர்களும் தங்கள் மனதை விஷ யத்திற் செலுத்தாமல் தாங்கள் வழிபடுந்தெய்வத்தைத் தியானிக்கும் பொழுது தாங்கள் கொண்ட அல்லது கண்ட உருவத்தை மனம் பற்று கிறதால், விக்கிரகத்தை ஆலயத்தில் பிரதிஷ்டைசெய்து வணங்குகிற வர்களுக்கும் அங்ஙனம் வணங்காமலிருக்கிறோமென்பவர்களுக்கும் பேத மில்லாமலிருப்பதனாலே, விக்கிரகாராதனை செய்யக்கூடாதென்று சொல்லுகிறவர்களும் விக்கிரகத்தை வணங்குகிறவர்களாகிறார்களென்று நன்றாய் விளங்கவில்லையா? விக்கிரகம் எங்கள் மனதின்கண் தோன்று கிறதில்லையென்று சிலர் சொல்லுவார்களாயின் தியானத்தி லவர்கள் மனம் பற்ற ஆதாரமில்லாமற் போகிறதால், அவர்கள் வழிபடுந் தெய்வத் தை மனம் பற்றவில்லையென்று துணிந்துசொல்லத் தடையில்லையே! 

“சிவன் கோயிலுள்ளிருக்கும் திருமேனிதன்னைச் சிவனெனவே கண் டவர்க்குச் சிவனுறைவனாங்கே.” என்று பிரமாணமிருப்பதாலும்,விக்கிர கத்தை வணங்கிப் பேறுபெற்றவர்கள் அனேகரென்றறிந்திருக்கிறதாலும், நாம் ஏனைய மதஸ்தரைப்போல் விக்கிரகத்தை ஆலயத்தில் வைக்காமல் வேதாகம விதிப்படி மந்திர இயந்திரஸ்தாபனையோடு எந்தை பல சமயத் திற் கொண்ட திருமேனியைப்போல் உருவை ஏற்படுத்திப் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறதாலும் நம்மவர்களுக்குச் சிறப்பே! 

விஜயரங்கம்.- ஐயா! விக்கிரகாராதனை செய்வது கூடாதென்கிறவர்களே விக்கிரகாராதனை செய்கிறார்களென்று மெய்ப்பித்தாலும், மந்திரத்தில் மாங்காய் விழாததுபோல் மந்திரத்தை உச்சரிப்பதாலும் இயந்திரஸ்தா பனை செய்வதாலும், அதாவது உச்சரிப்பாலும் ஒன்றை எழுதிவைப்பதா லும் என்ன பிரயோசனம் உண்டாகும்? ஒன்றுமில்லையே!

பிரசங்கியார்.- மந்திர உச்சரிப்பின் பிரயோசனத்தையும் இயந்திரத்தின் வல் லமையையும் நம்மவர்கள் அறிந்திருப்பதால் தெரிந்தோர்க்கு அவைகளைக் குறித்துச் சொல்லவேண்டிய அவசியமில்லை. புறச்சமயிகளுக்கே அவை களின் வல்லமையைச் சொல்லவேண்டும். உச்சரிப்பால் ஒன்றும் பிர யோசனமில்லை யென்றீர். முன் சொன்னவிதம் ஞானேந்திரியத்தோடு மனம் சேராதவழி ஞானேந்திரியம் காரியப்படாது; மனம் சேர்ந்த வழி ஆன்மா யாவுமறியுமாதலால் ஒருவன் தடிகொண்டு தேகத்தில் புடைத் தால், அடிபட்டது தேகமானாலும் துக்கப்பட்டது ஆன்மா. பார்க்கக் கூடாததை நேத்திரம் பார்த்தாலும் துக்கப்பட்டது ஆன்மா. துர்க்கந் தத்தை நாசி யறிந்தாலும் துக்கப்பட்டது ஆன்மா. கெட்ட உருசியை அறிந்தது நாவேயானாலும் துக்கப்பட்டது ஆன்மா. ஞானேந்திரியங் களில் நான்கும் அறிந்தது வெவ்வேறு படித்தாயிருந்ததாலும் அதனால் ஆன்மா அடைந்த துக்கம் வெவ்வேறு விதமாக இருக்குமா?

விஜயரங்கம்.- ஆன்மாவுக்குப் பலவகையால் அடைந்த துக்கமெல்லாம் ஒரேவிதமாகவே இருக்கவேண்டும். 

பிரசங்கியார்.- செவி கேட்கத்தகாதவைகளைக் கேட்டு அதனால் ஆன்மாதுக்க மடைந்தால் அந்த துக்கம் வேறாக இருக்குமா? 

விஜயரங்கம்.- வேறாக இராது. எல்லாம் ஒரேவிதமான துக்கமாகவே இருக்குமென்று நினைக்கிறேன். 

பிரசங்கியார் – அது விஷயத்திலின்னும் சந்தேகங்கொள்ளக் காரணமில்லை. தேகத்தில் அடிபட்டு வருந்திய காலத்திலும் கண்களில் நீர் வருகின்றது. சகிக்கக்கூடாததைப்பார்த்த காலத்திலும் கண்களில் நீர் வருகின்றது. நா கெட்ட உருசியை அறிந்த காலத்தினும் கண்களில் நீர் வருகின்றது. கேட்கக்கூடாததைக் கேட்ட காலத்திலும் கண்களில் நீர் வருகின்றது. ஆனதால்,ஞானேந்திரியங்களின் வாயிலாக ஆன்மா கொண்ட துக்க மெல்லாம் ஒரேவித மென்றும், சொல்லாலடித்ததும் கல்லாலடித்ததும் ஒரே பிரயோசனத்தைக் கொடுத்ததென்றும் தெளிவாய் விளங்குகின் றது. ஞானேந்திரியங்களில் செவியைச் சிலாகித்து முன்னோர்கள் பேசி யிருப்பதை நாம் நம்பாமற்போனாலும், சப்த சுரங்களை ஆதாரமாகக்கொ ண்டு அவைகளைப் பின்னிப் பேதப்படுத்தி நீட்டியும் குறைத்தும் உச்ச ரிப்பதற்கு இராகங்களெனப் பெயர்வைத்துப் பாடுவதைக்கேட்ட சிறு குழவியும் பரவசமாகிறதானால் மனங் கரையாதார் யாரிருக்கிறார்கள்? கல்லுங் கரைந்ததென்ற கதையும் கேட்டிருக்கிறோம். உச்சரிப்பே எதற் கும் துணைக்காரணமாக இருக்கிறதை யறிந்தபின் அதனால் பிரயோசன மில்லையென்று கூறுதல் குற்றமாகும். மந்திரத்தில் மாங்காய் விழாதென்றீர். ஒளவையார் ஒரு பனைமரத்துண்டைப்பார்த்து

“திங்கட்குடையுடை சேரனும் சோழனும்பாண்டியனும் 
மங்கைக்கருகிடவந்து நின்றார் மணப்பந்தரிலே
சங்கொக்க வெண்குருத்தீன்றுபச்சோலைசலசலத்து 
நுங்குக்கண்முற்றியடிக்கண்கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தரவேண்டும் பனந்துண்டமே.” 

என்ற பாடலைச் சொன்னபொழுது பட்டுப்போன பனைமரம் தழைத்து மூன்று பழத்தைக் கொடுத்ததென்றதைக் கேட்டதில்லையா? பாண் டவர்கள் ஆரணியத்திலிருந்தபொழுது துரோபதை வேண்டுகோளால் விஜயன் நெல்லிக்கனியைத் தன் அம்பால் விழச்செய்யப், பின் மித்திர மகாரிஷிக்கு அது ஆகாரமாயுள்ளதெனவறிந்து பயந்தபொழுது, ஸ்ரீ கிருஷ்ண பகவான் ‘உற்றது பகர்ந்தால் அற்றது பொறுந்தும்.” என்றபின் பாண்டவரைவரும் துரோபதையும் தங்கள் தங்கள் மனதிலுள்ளதைச் சொல்லுதலும் கனி முன்னிருந்த கிளையில் ஒட் டிக்கொண்டதென்றதைக் கேட்டதில்லையா? நீர் மந்திரத்தில் பழம் விழாதென்றதற்குப் பழம் அந்தப்படி விழுந்ததற்கும், விழுந்தது மீண்டும் ஒட்டிக்கொண்டதற்கும் பிரமாணம் காட்டினேன். ஆனதால் “அவனருளாலே, அவன்றாள் வணங்கி” என்றபடி மந்திரமே திரு மேனியாகக்கொண்ட எந்தையை முறையோடு மந்திரத்தை உச்சரித்து வழிபடுகிறோம். 

விஜயரங்கம்.- ஐயா! மந்திர உச்சரிப்பால் பலனிருக்கிறதென்று கண் டாலும் சில அட்சரங்களை ஒரியந்திரத்திலெழுதிப் புதைத்து விட்டால் அவை என்ன பலனைக்கொடுக்கும்? அதிற் பிரயோசனமில்லையென்று தெளிவாய்க்காண்கிறதே! 

பிரசங்கியார். – உச்சரிப்பை வரிவடிவாக்கி இயந்திரத்திலெழுதிவைத்தாலும் உச்சரிப்பைப்போல் தேவதா சொரூபம் கிய அட்சரங்களும் பிரயோச னத்தைக் கொடுக்காமற்போகா. உச்சரிப்புக்குப் பதிலாகத்தோன்றிய அட்சரங்களை முறையோடு இயந்திரத்திலடைத்துப் புதைத்தவிடத்தி லுட்கார்ந்து முக்காலத்தை யறிந்து சொல்வதையும், பேய்பிடித்தவள் உட்கார்ந்து தலைவிரிகோலத்தோடு ஆடுவதையும் பார்த்ததில்லையா?

விஜயரங்கம்.- பார்த்திருந்தாலும் அதுவிஷயத்தி லெனக்கு நம்பிக்கை உண்டாகவில்லை. 

பிரசங்கியார் – உமக்கதில் நம்பிக்கை யுண்டாகச்செய்வது கடினமல்ல. ஒரு வீட்டை யலங்கரித்து அனேகரை வரவழைத்து அவர்கள் வந்து வீட்டி லுள்ள அறைகளில் எல்லாம் பிரவேசிக்கப் போகும்பொழுது ஒருவன் ஒரறைக்கு வெளியில் நின்று “இந்த அறைக்குள் ஒருவரும் பிரவேசிக் கக்கூடாது.” என்று சொல்லிக்கொண்டிருந்தால் தடைபடுத்தும் அறைக் குள் எவராவது போவார்களா? 

விஜயரங்கம்.- போகக்கூடாதென்று சொல்லிக்கொண்டிருக்குமிடத்திற்குப் போகமாட்டார்கள். 

பிரசங்கியார். – ஒருவன் நின்று சொல்லிக்கொண்டிராமல் “இந்த அறைக் குள் ஒருவரும் பிரவேசிக்கக்கூடாது.” என்று ஒரு கடுதாசியில் எழுதி ஒட்டியிருந்தால் அப்பொழுது என்ன செய்வார்கள்? 

விஜயரங்கம்.- அப்பொழுதும் போகாமலிருப்பார்கள். 

பிரசங்கியார். – உச்சரிப்பும், வரிவடிவமும் ஒரே காரியத்தைச் செய்ததைப் பார்த்தீரா ! இனி வரிவடிவத்தைக் குறித்துச் சந்தேகங்கொள்ள நியாய மில்லையல்லவா? 

விஜயரங்கம்.-ஐயா! வரிவடிவத்தைப் பார்க்க நேரிட்டதால் அது பிரயோ சனத்தைத் தந்ததாயினும், அதைப் புதைத்துவைத்தாலும் பிரயோசனத் தைக் கொடுக்குமென்று எண்ண இடமில்லையென்பதாகத் துணிந்து சொல்லுவேன். 

பிரசங்கியார். – நாம் வசிக்கும் பூமி தட்சணத்துருவத்திலிருந்து உத்தரத்துருவத் தின் குறுக்களவு 7912 மைல் என்று பூகோள சாஸ்திரம் சொல்லுகிற து. இந்த 7912மைலும் (பூமி உருண்டைவடிவமானதால்) மண்ணால் மூடப்பட்டிருந்தும் தட்சணத்துருவத்தில் (கம்பஸ்) என்னும் திசையறி கருவியை வைத்தால் அதிலுள்ள முள்ளை உத்தரத் துருவத்திலுள்ள கா ந்தமலை தன்பக்கமிழுக்கிறது. வியாழக்கிரகம் 398,000,000 மைல்தூர த்திலிருந்தும், சனிக்கிரகம்_778,000,000 மைல் தூரத்திலிருந்தும், சூரியன் 92,050,000-மைல் தூரத்திலிருந்தும், சந்திரன் 240,000- மைல் தூ ரத்திலிருந்தும் இந்த பூமி மேல்கீழான காலத்திலும் பலன் கொடுக்கின் றன. ஒரு எலுமிச்சம்பழத்தைத் துளைத்துப் பாதரசத்தைவிட்டுத்துளையை மூடி வெயிலில் வைத்தால் எலுமிச்ச பழத்துக் குள்ளிருக்கும் பாதரசம் சூரிய வெப்பத்தால் காரியப்பட்டுக்குதிக்கின்றது. ஒரு சுணங்கனை வள ர்த்துவந்தவனைக் கொலைசெய்து சுணங்கனறியாமல் சொண்டுபோய்ப் தைத்துவிட்டால் அச்சுணங்கன் எஜமான் பிரேதமிருக்கு மிடத்தைக் கண்டுபிடிக்கவில்லையா? இயந்திர வல்லமையைக்கொண்டு அனேக ஆல் யங்கள் அவ்விடம் போகிறவர்களுடைய மனதுக்கு ஆனந்தத்தைக்கொ டுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனதால், யாவருடைய பார்வையையும் மறைத்துப் புதைத்துவைத்திருக்கும் இயந்திரம் பலன் கொடுப்பது அதிசயமல்ல. 

விஜயரங்கம்.- ஐயா! வாந்திபேதியைத் தொத்துவியாதியெனக் கண்டும் அது காளியம்மையென்றும் காளியம்மைக்குப் பிரீதி செய்தால் அது போய்விடுமென்றும் காளியம்மைக்குக் காப்புக்கட்டிக் கரகமெடுத்து திருவிழா கொண்டாடுவது அறியாமையென்பதாகப் புறச்சமயிகள் நம் மைக் கேவலமாகப்பேசுகிறார்களே! அவர்கள் சொல்வது நியாயமாகக் காணப்படுகிறதல்லவா? 

பிரசங்கியார் – காரணமறிந்தால் நாம் அறியாமையால் செய்கிறோமென்றும் அவர்கள் அறியாமையால் சொல்லுகிறார்களென்றும் விளங்கும். வாந்தி பேதி தொத்துவியாதியென்பது நம்மவர்களறியாததல்ல. தொத்துவியாதி யென அறிந்தே அவர்கள் அது உண்டான காலத்தில் கிராம தேவதைக் குக் காப்பு கட்டுகிறார்கள். கிராமதேவதைக்குக் காப்புகட்டுவார்களானால் அக்கிராமத்தி லுள்ளவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போகக் கூடா தென்னும் நிபந்தனை ஏற்பட்டிருப்பதால் காப்புத்தடையிலுள்ளவர்கள் வேறோரிடத்திற்குப் போகத் தடையாகிறது. அதனால் வாந்திபேதி யைப் பரவவிடாமல் ஓரிடத்தில் நிறுத்த இடமுண்டாகின்றது. வாந்தி பேதியை ஓரிடத்தில் நிறுத்திக் கொண்டபின், வாந்திபேதி அசுசியா லுண்டாகிற காரணத்தால், அந்த அசுசியை நீக்கவேண்டு மென்னும் எண்ணத்தோடு எங்கும் சரகம் வரப்போகிறதென்று பறையறைவிக்கி றார்கள். காளியம்மையின் கரகம் வரப்போகிறதெனவறிந்த யாவரும் தங்கள் தங்கள் வீட்டை மெழுகிச் சுத்தப்படுத்திக் சரகம் வந்தபொழுது கற்பூரத் தீபங்காட்டி வீட்டுக்குள் கொண்டுபோய் வைத்து வீட்டைப் புனிதப்படுத்துகிறார்கள். சரகத்தோடு வந்தவர்களைத் தொத்துநோய் தொடர்ந்து வராமலும் தொடர்ந்து போகாமலு மிருக்க அவர்கள் கால் கள் நனைய மஞ்சள் நீரைக் குடத்தாலூற்றியும் சற்பூர வாசனை யூட்டியும் குடிகள் அனுப்புகிறார்கள். கிராம முற்றிலுமுள்ள அசுசி நீங்கிப் புனிதப்படுவதால் வாந்திபேதி தலைகாட்டாமல் நீங்குகின்றது. காளி யம்மையைக்காட்டி யாவரையும் பயமுறுத்தி வீடுகளைச் சுத்தப்படுத்தச் செய்வது பெரியோர்களுடைய யுக்தியின் பலனேயாம். ஆகவே, அறி யாமையைக் கொண்டவர்கள் நாமா? அந்தப்படி சொல்லுகிறவர்களா? இதுபோலவே வைசூரியையும் தொத்துவியாதியெனவறிந்து மாரியம் மையினால் வந்ததென்று பயமுறுத்தி யாவரையும் வீட்டுக்குள் வரவொட் டாமல் தடைப்படுத்துகிறார்கள். வைசூரி பெரும்பாலும் சிறுவர்களுக் குச் சூடதிகரிப்பால் வருகின்றது. தங்கள் தங்கள் வீட்டிலுள்ள சிறுவர் களுக்கு வைசூரி கண்டால் அத்தெருவிலுள்ள சிறுவர்களை யெல்லாம் பாதுகாக்க அவர்களுக்கு முழுவதும் குளிர்ச்சியைக்கொடுக்கும் தின்பண் டங்களைத்தருகிறார்கள்.தங்கள் வீட்டிலிருக்கும் வைசூரி நீங்கினாலும், பின்னும் வந்தாலும் வருமென்ற பயத்தால் மற்றச் சிறுவர்களை யெல் லாம் பாதுகாக்கிறார்கள். மாரியம்மை அவர்கள் வீட்டில் வந்திருக்கிறா ளென்றால் சிறுவர்கள் அவ்விடம் போகப் பயப்படுவார்கள். ஆனதால், காரணத்தை யறியாமல் குற்றஞ்சொல்வது சிறப்படையாது.

விஜயரங்கம். – ஐயா! தாங்கள் சொல்லிய விஷயம் நிரம்பவும் திருப்திகர மாயிருக்கிறது. கடவுள் ஒருவராயிருக்க அவரை விட்டுப் பல தெய்வங் களை வணங்குதல் குற்றமல்லவா? 

பிரசங்கியார் – ஆன்மாக்களுடைய பக்குவத்திற்சேற்க ஏற்படுத்திய சோபன ப்படி பல தெய்வங்களை அவை வழிபடுவதில் குற்றமொன்றுமில்லையென் றும், அவரவர்கள் கொண்ட எண்ணத்திற்கேற்கக் கடவுள் நின்று அங் கங்கு அருள் புரிவாரென்றும் சாத்திரங்கள் சொல்லுகின் றன. ஆசா யத்திலிருந்து விழுந்த ஜலம் சமுத்திரத்தைச் சேருவதுபோல எந்தத் தெய்வத்தை வைத்து வணங்கினாலும் எல்லாம் கேசவனைப் பற்றும்.” என்று விஷ்ணு சஹஸ்ர நாமத்திலிருக்கிறது.” எவர்கள் எவ்விதமாகப் பாவித்து வணங்கினாலும் அவர்களை அவ்விதமாகவே நான் அனுக்கிர கிக்கிறேன்.மனிதர்கள் என்னுடைய மார்க்கத்தை அனுசரிக்கிறார்கள்.” என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் அருச்சுனனுக்குரைத்த பகவத்கீதையி லிருக்கின்றது.”யாதொரு தெய்வங் கொண்டீர், அத்தெய்வமாகி யாங் கே மாதொரு பாகனார் தாம் வருவர்.” என்று சிவஞான சித்தியார் முறை யிடுகின்றது. ஆனதால், பொன்னினாற் செய்தபணி பலவகையாகக் காணப்பட்டாலும் பொன்னொன்றே யானதுபோல், ஆன்மாக்கள் கொண்ட உருவங்களிலெல்லாம் எந்தை நின்று அவரவர்களுக்கு அனுக் கிரகிக்கிறாரென்பதற்குச் சந்தேசமில்லை.

விஜயரங்கம்.- சைவர்கள் சிவன் பெரியவனென்றும், வைஷ்ணவர்கள் விஷ்ணு பெரியவனென்றும் வாதிட்டு வம்புக்கு நிற்கிறார்களே! 

பிராங்கியார் – சாத்திரப் பயிற்சியா லுண்மையறிந்தவர்கள் அவ்விதம் வாதிடத்துணியார்கள்.

நாராயணோபநிஷத்தில் – * நாராயணன் நித்தியன், பிரம்மா நாராயணன், சிவன் நாராயணன், இந்திரன்,காலம், திக்கு, எல்லாம் நாராயணன்* என்றும், கைவல்லியோப நிஷத்தில் ** பரிசுத்தராயும், துக்கமற்றவராயும், சிந்திக்கக்கூடாத வராயும், மங்கள சுவரூபராயும், மிகவும் சாந்தராயும்,மோக்ஷ சுவரூப ராயும், மாயைக்கு உற்பத்தி காரணராயும், ஆதிமத்தியாந்த ரகித ராயும், ஒருவராயும்,எங்கும் வியாபகாராயும், ஞானானந்தசுவரூப ராயும்,ரூபமற்றவராயும், ஆச்சரியகரராயும், பிரபுவாயும், முக்கண் ணுடையவராயும், நீலகண்டராயும், சாந்த முடையவராயும், உமை யுடன் கூடியிருக்கிறவராயு முள்ள *** பரமாத்துமாவே பிரம்மா, அவரே சிவன் *** அவரே விஷ்ணு என் றும், ஸ்கந்தோப நிஷயத்தில் – * விஷ்ணு ரூபமாயிருக்கிற சிவன் பொருட்டும், சிவ ரூபமாயிருக்கிற விஷ்ணுவின் பொருட்டும் நமஸ்காரம். சிவனுடைய இருதயமே விஷ்ணு; விஷ்ணுவினுடைய இருதயமே சிவன். * சிவகேசவர்களுக்குள்ளே பேதம் கிடையாது என்றும், 

திருமங்கை யாழ்வார்.- 

பாருருவில்நீரெரிகால் விசும்புமாகிப் 
பல்வேறு சமயமுமாய்ப்பரந்து நின்ற 
ஏருருவில் மூவருமே யெனபின்ற விமையவர்தம் 
திருவுருவேறெண்ணும்போது 
ஒருருவம்பொன்னுருவமொன்று செந்தீ 
ஒன்றுமாகடலுருவமொத்து நின்ற 
மூவுருவுங்கண்டபோதொன்றுஞ்சோதி 
முகிலுருவமெம்மடிகளுருவந்தானே. 

என்றும், 

பொய்கை யாழ்வார்:
அரனாரணனாமம் ஆன்விடைபுள்ளூர் தி 
உரைநூல் மறையுறையுங்கோயில் – வரைநீர் 
கருமமழிப்பளிப்புக் கையதுவேல்நேமி 
உருவமெரிகார்மேனியொன்று 

என்றும், 

நம்மாழ்வார்.- 
யானுந்தானா யொழிந்தானை யாதுமெவர்க்கும் முன்னோனை 
தானுஞ்சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனிமுதலை 
தேனும்பாலும் கன்னலுமமுதுமாகித் தித்தித்தென் 
ஊனிலுயிரிலுணர் வினினின்ற வொன்றை யுணர்ந்தேனே, என்றும், 

திருஞான சம்பந்த சுவாமிகள்.- 
ஒருருவாயினை மானாங்காரத் 
தீரியல்பாயொருவிண்முதல் பூதல 
மொன்றியவிருசுடரும்பர்கள் பிறவும் 
படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை 

என்றும், 

திருநாவுக்கரசு சுவாமிகள்.- 
ஒருவனாயுல சேத்தநின்ற நாளோ 
வோருருவே மூவுருவு மானநாளோ 

என்றும், 

சுந்தரமூர்த்தி சுவாமிகள்.- 
வாழ்வர் கண்டீர் நம்முளைவர் வஞ்சமனத்தீரே 
யாவராலு மிகழப்பட்டிங் சல்லலில் வீழாதே
மூவராயு மிருவராயும் முதல்வனே *** 

என்றும், 

மாணிக்கவாசக சுவாமிகள்.- 
முந்திய முதனடு விறுதியுமானாய் ** 

என்றும், 

தாயுமான சுவாமிகள்.- 
குன்றாத மூவுருவா யருவாய் ஞானக்கொழுந்தாகி 
யறுசமயக் கூத்துமாடி 

என்றும். 

சிவஞான சித்தியார்.- 
தேவரி லொருவரென்பர் திருவுருச் சிவனைத்தேவர் 
மூவராய் நின்ற தோரார்

என்றும், 

சொல்லியிருப்பதைக் கண்டவர் எந்தை கொண்ட மூன்றுருவில் ஒன்றை உயர்வென்றும் ஒன்றைத் தாழ்வென்றும் கூறுவது, தாந்தாம் வணங் கும் கடவுளை இழிவுபடுத்திப் பேசுவதேயாகும். தாம் வணங்கும் கடவுளைப் புகழ்ந்து துதித்தால் அவர் அருள் செய்வாரென்று நினைப் பவர்கள் இகழ்ந்து பேசினால் அருள் செய்யாரென்று எண்ணாதது யாது காரணமோ? சைவர் விஷ்ணு ரூபத்தைத் தரிசிக்குங் காலத்தில் எமது சிவபெருமானே இத்திருக்கோலத்தோடிருக்கிறாரென்றும், வைஷ்ணவர் சிவனைத் தரிசிக்குங் காலத்தில் எமது பாண்டரங்கனே இத்திருக்கோலத்தோடிருக்கிறாரென்றும் முன்னோர்கள் எண்ணிய படி எண்ணுவார்களேயானால், வாதும் வம்பும் இல்லாமற்போகும். அவர்களும் மேன்மையை அடைவார்கள். 

விஜயரங்கம். – ஒரு பதிவிரதை தன் நாயகனைத் தவிர வேறொரு நாயகனைப் பார்க்கச் சம்மதியாததுபோல் தாங்கள் வேறொரு தெய்வத்தைப் பார்க்க மாட்டோமென்று சிலர் இருந்தால் அதுதானா அவர்கள்மேல் தோஷம்? வீணாக அவர்கள்மேல் தோஷம் கற்பிக்கலாமா? 

பிரசங்கியார்.- வேறொரு நாயகனைப் பார்க்கக்கூடாதென்றெண்ணுகிறவள் வேறொரு நாயகனை இழந்துபேசவேண்டிய அவசியமில்லையே! தன் நாயகனே வேறொரு உருவத்தோடிருக்கிறானென்றறிந்தபின்னும், அவனை இகழ்ந்தால் அது பழிப்பாகு மல்லது சிறப்பாகாது. 

விஜயரங்கம் – அறுவகைச் சமயத்தோர்க்கும் ஆதாரம் வேதமாயிருந்தும் ஒரு சமயி உண்டென்பதை மற்றொரு சமயி அல்லவென்று மறுச்ச, ஒன்றை யொன்று தழுவாம லிருப்பதன் காரணம் என்ன? 

பிரசங்கியார்.-ஐயா! ஒன்றையொன்று தழுவாமலில்லை.

சிவஞான சித்தியாரில்.- ஓது சமயங்கள் பொருளுணரு நூல்க ளொன்றோடொன் றொவ்வாமலுள் பலவு மிவற்றுள், யாது சமயம பொருணூலியாதிங் கென்னிலிதுவாகு மது வல்லவெனும் பிணக்கதின்றி, நீதியினாலிவையெல்லா மோரிடத்தே காண நிற்பதி யாதொரு சமயமதுசமயம் பொருணூலாதலினா லிவையெல்லா மரு மறையாகமத்தே யடங்கியிடு மவையிரண்டு மரனடிக் கீழடங்கும். 

என்றிருப்பதால், எல்லாச் சமயங்களையும் தழுவும் ஒரு சமயமும் இருக்கிறதென்று காணப்படுகிறதல்லவா? சமயங்கள் வெவ்வேறு விதமாகச் சொல்வதன் சாரணம் யாதெனில் – ஒரு மலைமேலேறிப் பார்க்கப் போன சிலருள் ஒருவன் மலையடி வாரத்தில் சென்று திரும்பியும், ஒருவன் காற்பங்கு தூரம் சென்று திரும்பியும், ஒருவன் அரைப்பங்கு தூரம் சென்று திரும்பியும், ஒருவன் அதைவிடச் சிறிது தூரம் சென்று திரும்பியும் இவ்விதம் தங்கள் தங்கள் சக்திக்கேற்க மலையேறிப்பார்த்து வந்தவர்களும்,மலையுச்சி பரியந்தம் சென்று வந்தவனும், தாந்தாம் பார்த்துவந்ததைச் சொல்லுமிடத்து, அடிவாரத்தில் நின்று வந்தவன் தன் பார்வைக்கு அகப்பட்டதை மாத்திரம் ஒப்புக்கொள்ளுவானே யன்றி மற்றவர்கள் சொல்லுவதை ஒப்புக்கொள்ளான். காற்பங்குதூரம் சென்றுவந்தவன் தான் பார்த்துவந்ததை ஒப்புக்கொள்வதோடு அடி வாரத்தில் நின்றுவந்தவன் சொல்லியதையும் ஒப்புக்கொள்வான். அரைப்பங்கு தூரம் சென்றுவந்தவன் தான் பார்த்து வந்ததோடு தன் கீழ்நின்ற இருவர் சொல்லையும் நம்புவான். அதுபோல், ஒவ்வொரு வரும் தாம் தாம் பார்த்துவந்ததையும் தமக்குக் கீழ் நின்றோர் சொல்லு வதையும் ஒப்புக்கொள்ளுவார்கள். மலையுச்சி பரியந்தம் சென்று வந்தவனே தான் பார்த்ததையேயன்றி மற்றவர்கள் சொல்வதையு மெல்லாம் ஒப்புக்கொள்ளுவான். அதுபோல், சமயங்களும் ஒன்றை யொன்று தழுவியும் தள்ளியுமிருக்கின்றன. அனேக வகுப்புகளைக் கொண்ட ஒரு பள்ளிக்கூடத்திற்கு உபாத்தியாயர் ஒருவராயிருந்தாலும் தம்மிடத்தில் வாசிக்கும் பிள்ளைகளுடைய சக்திக்கேற்க அவர் பாடஞ்சொல்லு முறைபோல், ஆன்மாக்கள் பக்குவத்திற்கேற்க வே தங்களைத் தழுவிப் பல சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அன்றியும், சமயம் என்னும் பதம் காலபென்று பொருள்படுகின்றது. பௌத்த சமயம் என்பது, ஒருவன் பௌத்தனாயிருந்து கடவுளை யாராதிக்குங் காலமென்றும்,வைணவ சமயமென்பது ஒருவன் வைணவனாயிருந்து கடவுளை யாராதிக்குங் காலமென்றும், சைவமென்பது, ஒருவன் சைவ னாயிருந்து கடவுளை யாராதிக்குங் காலமென்றும் பொருள்படும். ஆக வே, சகல மதங்களும் ஒரு மனுஷியனே பிறவிகள் தோறும் தன் பரி பக்குவத்திற் சேற்க ஜகதீசனை வழிபடுவதற்காக உண்டான வெவ் வேறு சாலங்களென்றேற்படுகின்றன. ஆசையால், உலகத்திலுள்ள எல்லா மதங்களிடத்தும் சகோதர வாஞ்சைகொண்டு, நாம் ஒரு காலத் துத் தழுவிய அல்லது இனித் தழுவப்போகும் மதங்களே பிறமதங்க ளென்று கருதுவதுதான் யாவரிடத்தும் ஆன்மநேய வொருமைப்பாடு உண்டாவதற்கேற்ற சாதனமாகும். “மதங்கடொரு நின்ற குருவே!’ என்றும், “சமயகோடிகளெல்லாம் தந்தெய்வமென்தெய்வமென்றெங் குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது” என்றும், ‘சமயக்கட வுள் வேறுவேறின்றி யானொருவனே அங்கங்கிருந்தன்பர்க்கு முத்தி தரு வித்தென்று யாவர்க்கு மறிவித்த வதனமணியே.” என்றும், “பல பல மதமு மீற்றிலொரு வழிப்படலும் போலும்.” என்றும், “கல்லி டைப்பிறந்து போந்து கடலிடைக்கலந்த நீத்தம்… துறைதொறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெருஞ்சமயஞ் சொல்லும் பொருளும் போற் பரந்ததென்றே” என்றும் ஆன்றோர் கூறிய வசனங்களே இக்கோட் பாட்டுக்குச் சான்றாகும். 

விஜயரங்கம்.- ஐயா! எனக்குற்ற சந்தேகங்கள் நீங்கத் தாங்கள் சுருதியுக்தி யனுபவ வாயிலாகச் சமாதானம் சொல்லியதைக்குறித்து நான் நேரில் தங்களைப்புகழ்வது முகஸ்துதியாயிருக்குமென்று அஞ்சுகிறேன்.

பிரசங்கியார்.- ஐயா, நீர் கேட்டவைகளுக்கு சோ-சிவ – அருணகிரி வள்ள லின் அனுக்கிரகத்தாலறிந்ததைச் சொன்னதேயன்றி என்னுடைய வல் லமையால் நான் நூதனமாக ஒன்றும் சொல்லவில்லை. 

விஜயரங்கமும் சபாபதிமுதலியாரும் பெரியவரும் பிரசங்கியாரிடம் விடைபெற்றுத் தங்களிருப்பிடமுற்றார்கள். 

20-ம் அத்தியாயம்

ஒரு கிராமத்துக் கருகில் பாதையிலுள்ள சிறிய பாலத்தின் சுவரின்மேல் தலையைப் பிடித்துக்கொண்டிருந்த சோமசுந்தரம் நெடுநேரம் மெளனமாக விருந்து பின் பெருமூச்சுவிட்டு, ஆ! கடவுளே! எனக்கெல்லாத் துன்பமும் ஒன்றாகவா வரவேண்டும்! என் தாய்தந்தையர் மருமகளை வதை செய்ததனால் அதிக துன்பமடைந்து இறந்தார்களென்று பலர் சொல்லவும் தங்கை சோரம்போகவும், மனைவி வழிப்போக்சனுடன் செல்லவும் நான் உயிரோடிருப்பதிற் பலலென்ன? தங்கை சோரம் போனாளென்றதை என்னுடைய மைத்துனன் வெளிக்கு வராமல் செய்துகொண்டான். ஆயினும்,நானோ என்னுடைய மனைவியால் நேரிட்ட அவமானத்தை நீக்கிக்கொள்ள வகையில்லாம லிருக்கிறேன். இந்தச் சமயத்தில் என்னுடைய நண்பன் விஜயரங்கமிருந்தால் நான் இவ்வளவு துக்கத்தோடிருக்கப் பார்த்துக்கொண்டிரான்! அவனை இன் னும் எங்கு தேடிப்பார்க்கிறது! நான் பார்க்காத இடமில்லையே! என்று துக்கத்தோடு உட்கார்ந்திருந்தபொழுது சரிகை தலைகுட்டை கட்டிக்கொண்டு, பெரிய சொக்காயோடு ஒருவன் அம்மார்க்கம் போவ தைக்கண்டு, ஆ! ஆ! இவன் என்னுடைய மனைவியைக்கொண்டுபோன கள்வனாகக் காணப்படுகிறானே யென்று ஓடி அவனருகிற்சென்று தான் நினைத்தது உண்மையாகக்கண்டு, அடா துன்மார்க்கா! நீ முன்னம் உன்னை அலங்கரித்துக்கொண்டு வந்து ஒரு பெண்பிள்ளையைக்கொ ண்டுபோனது போதாதென்று இப்பொழுது அலங்கரித்துக்கொண்டு திரிகிறாயே! இன்னும் யார் குடியைக்கெடுக்க யோசித்திருக்கிறாய்? உன்னைக் கடவுள் இன்னும் தண்டிக்காமல் வைத்திருப்பது ஆச்சரிய மாக இருக்கிறது ! என்கையில் முன் நீ அகப்பட்டும் உன்னைக் கொல் லாமல் விட்டேன். இன்றோடு உனக்கு ஆயுள் முடிந்ததால் என் கையில் அகப்பட்டாய். இனி ஒருவருக்கும் உன்னால் தீங்கு உண் டாகாதிருக்க உன்னை முடித்து விடவேண்டியதே! நில், போகற்க என்று தடுத்தான். 

அன்னியன்.-ஐயா ! உமக்கென்மேல் அதிக கோபம் இருக்கிறதாகக் காணப்படுகிறது; காரணம் யதோ தெரியவில்லை! 

சோமசுந்தரம்.- அடா துன்மார்க்கா! நீ இரவில் என் மனைவியைக் கொண்டு போனதாலும் அது நெடுநாளாய்விட்டதாலும் நான் உன்னைக் கண்டுகொ ள்ள முடியாதென்று நினைத்து என்னெதிரில் வந்து, நான் உன்னைக்க ண்டு கொண்டதால் வேறுவகை யில்லால் என்னை ஏமாற்றி ஓடிவிடக்கா ரணங் கேட்கிறாய். நீ அதிக தூரத்தில் வரும்பொழுதே உன்னைக்கண்டு கொண்டேன். உன்னை இந்த இலக்ஷணத்தோடு வைத்து வார்த்தையா டாமல் உன் அழகிய பற்கள் உதிர உன்வாயில் அடித்து உன்னழகைக் கெடுத்துப் பின் வார்த்தையாடவேண்டும்.(என்று கையை மேலே தூக்கினான்.) 

அன்னியன்.- ஐயா! என் பற்கள் உதிர அடிக்குமளவும், நான் உம்மைப்பார்த்து என் கைகளைச் சும்மா வைத்துக்கொண்டிருப்பேனா? என் பற்கள் நிலத்தில் சொட்டுண்டுபோகுமுன், உமக்கு அச்சதியானால் என்செய் வீர்? போம்! போம்! பெண்சாதியை வைத்தாளச்சக்தியில்லாத உமக்கு இவ்வளவு கோபமிருப்பது அதிசயமாக இருக்கிறது! (என்று நகைத்தான்.) 

அன்னியன்சொன்னதைக்கேட்ட சோமசுந்தரம் தூக்கிய கையைத் தொங்க விட்டுத் திகைத்து நின்று பெருமூச்செறிந்து, அடாடாதகா! என்ன சொன்னாய்? என்னுடைய பெண்சாதியை மோசம் செய்துகொண்டு போனதுமல்லாமல் பெண்சாதியைவைத்தாள வகையில்லாமற்போ னேனென்று சொல்லவும் உனக்கு என்ன தைரியம் இருந்தது? அவ ரவர்கள் பெண்சாதிகளை யெல்லாம் நீ சொண்டுபோகலாமென்றும் உனக்குப் பெண்சாதியை வைத்தாளுந்திறமை அதிசமிருக்கிறதென் றும் காட்டும் ஆணவம் அழிய இன்று நீ மாளப்போகிறதால், சாகப் போகிறவருக்கு சமுத்திரம் முழங்காலாழமென்பதுபோல் எண்ணி என்னை இழிவாகப் பேசத்துணிந்தாய் போலும்! 

அன்னியன்.- நான் ஒருவருடைய வீட்டுக்குப்போய் வஞ்சித்து ஒரு பெண் ணைக் கொண்டுபோகவில்லை. ஆதரவற்றவளாகத் தனித்துப் போக விட்டவளை அழைத்துக்கொண்டு போனது தப்பிதமா? நாயகனால் வைத்தாளத் திறமையில்லாமல் விட்டு விடப்பட்டவளைக் கொண்டுபோய் வைத்தாள்பவன் திறமையுள்ளவனென்றே சொல்லவேண்டும்! வேண்டாமென்று விட்டுவிடப்பட்டவளைக் கொண்டுபோய் ஆதரிப்பதால் உமக்கு சோபம் வரவேண்டிய நியாயமில்லையே! 

சோமசுந்தரம்.-அடா! நான் வேண்டாமென்றதாலோ, அல்லது ஆளுந்தி றமை இல்லாததாலோ ஆதரவற்றவள்போல் போனாள். அவள் உன் னைக்கண்டு வார்த்தையாடியபின் உன்னோடுவரச் சம்மத மில்லாமலிருந்த போது அவளை அழைத்துக்கொண்டுபோய்க் கற்பைக்கெடுத்தது தப்பித மென்று உனக்குக் காணப்படவில்லையா? 

அன்னியன்.- கற்பைக் கெடுக்க எண்ணங்கொண்டு வலுவந்தம் செய்யவில்லையே! 

சோமசுந்தரம்.- அடா ! நீ உன்னை மறந்து பேசுகிறாய்! நீ அவளைக்கண்டு இச்சித்து வார்த்தையாடியபொழுது அவள் சொல்லிய நீதிகளைக் கேட்டு விட்டுவிடாமல், அவள் மயங்கி உன்வலையில் சிக்க ஏதோ ஓர் மந்தி ரத்தை அவள் காதில் ஓதி வசியப்படுத்தினாயே! இதைவிடக் கெட்டதும் உலகில் உண்டா? 

அன்னியன்.- அவள் காதில் ஓதிய மந்திரத்தை உம்முடையகாதில் ஓதினால் நீரும் வசிய மாவீரென்பதற்குச் சந்தேகமில்லை. வீணில் நீரும் என்னிடத்தில் வசியப்பட்டு நான்சொல்வதைச் செய்துகொண்டிராமல் தப்பித்தோம் தப்பித்தோம் என்று ஓடிப்பிழைத்துப்போம். (என்று நகைத்தான்.)

சோமசுந்தரம்.- அடா பாதகா! என்ன சொன்னாய்? என்னையுமா வசியப் படுத்திவிடுவாய்! சபாஷ்! நன்றாயிருக்கிறது! என்னை வசியப்படுத்து முன் உன்னை முடித்துவிடுகிறேன் பார். (என்று நெருங்கினான்.)

அன்னியன்.- என்னோடு போர்புரிய உமக்கிஷ்டமிருந்தால் நான் உம்மு டைய மனைவியைக் கொண்டுபோனது குற்றமென்று நீர் நிரூபித்தபின் உம்முடைய இஷ்டம்போல் செய்யலாம். குற்றத்தை அறியுமுன் என் னோடு போர்புரிந்து நீர் மரணமடைந்தால் நான் வீண்பாவத்திற்கு உள் ளாகவேண்டும். அவ்விதம் முடிய இடங்கொடுக்கவேண்டாம்.

சோமசுந்தரம்.- அடா ! நீ கொடிய துன்மார்க்கன் ! என்மனைவியைக் கொண்டுபோனது போதாதென்று என்னை அவமானப்படுத்திப் பேசுகி றாய்! ஒருவனுடைய மனைவியைக் கொண்டுபோனது குற்றமென்று இன்னும் உனக்குத் தெரியவில்லையா? 

அன்னியன்.- மாமன்மாமி கையால் மாளப் பார்த்தும் நாத்தியால் கல்லடிபட் டும் வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டுத் தனிவழியாகப் போனவளைக் கொண்டுபோய் வைத்துக்கொண்டிருப்பது குற்றமா? அவள் இறந்தால் உத்தமமென்று எண்ணியிருந்த உம்மிடம் விட்டிருப்பது குற்றமா? 

சோமசுந்தரம் – என்மனைவியை என்னிஷ்டம்போல் நடத்த எனக்கெல் லாச் சுதந்தரமுமிருக்கிறது. அது விஷயத்தை நீ கேட்கவேண்டிய அவசியமில்லை. 

அன்னியன்.- பெண்சாதியின்மேல் புருடனுக்கு எல்லா அதிகாரமுமிருக்கிற தென்று அவளைப் புருடன் கொன்றால் துரைத்தனத்தார் சும்மாவிட்டு விடுவார்களா? 

சோமசுந்தரம்.- துரைத்தனத்தாரைப்போல் நீ எல்லா அதிகாரத்தையும் பெற்றா இந்தக் கேள்விகளைக் கேட்கிறாய்? 

அன்னியன்.- இது விஷயத்தைச் சாதாரணமாய் யாவரும் கேட்கத்தகுந்ததே யாயினும் நான் கேட்பது நியாயமென்றே நினைக்கிறேன். 

சோமசுந்தரம்.- மனோன்மணிக்கு நீ இரண்டாவது நாயகனாக ஏற்பட்டதால் நீ கேட்பது நியாயமென்று நினைத்தாய்போலும்! 

அன்னியன்.-ஆம் ! அதற்குச் சந்தேகமில்லை. 

சோமசுந்தரம்.- அடா துன்மார்க்கா! உன்னோடு வார்த்தையாடிக்கொண்டி ருப்பதில் பிரயோசனம் இல்லை. என் மனைவியைக்கொண்டுபோய் என்னை அவமானத்தில் அழுத்திய பழியை முதல் வாங்கவேண்டும். (என்று நெருங்கினான்.) 

அன்னியன் – உமது மனைவி வேறொருவருக்குப் பிறந்தவள். அவளைக்கொ ண்டு போனவிஷயத்தில் உமக்குமானம் உண்டாகிப் பழிவாங்கவந்தீர். உம்மோடுபிறந்த தங்கை நிலைதவறினாளே! அதனால் உமக்கு அவமானம் வரவில்லையா? அவள் கற்பைக் குலைத்தவனிடம் பழிவாங்கிவிட்டீரா?

சோமசுந்தரம்.- இதென்ன அநியாயமாக இருக்கிறது ! இந்தத் துன்மார்க்க னுக்கு எல்லா இரகசியமும் தெரிந்திருக்கிறதே ! அடா சண்டாளா! இந்த சமாசாரங்களையெல்லாம் எவ்விதம் அறிந்தாய்? என்னுடைய இரகசியங்களை அறிந்துகொண்டால் அது சமயத்தில் உன் உயிரைக்காப் பாற்றும் என்றோ நினைத்தாய்? அந்த எண்ணம் கைகூடாது. என்னுடன் எதிர்த்து நின்று போர்புரிய இஷ்டமிருந்தால் வா. (என்று கையைப் பற்றி இழுக்க எத்தனித்தான்.) 

அன்னியன்.- நீர் அவசரப்படவேண்டாம். மனைவி போனபின் உயிரைத் துரும்பாக மதித்துவிட்டீர்போல் காணப்படுகிறது. ஒருசொல்லால் உம் முடைய கைகால்கள் ஆடவொட்டாமல் செய்துவிடுவேனென்பதை இன்னும் அறியாமலிருக்கிறீர். உமக்கென்னோடு போர்புரிய இஷ்டமுண்டானது உண்மையாவென்று நன்றாய் யோசித்துத் துணிவீராக. வீணில் அவமானம் அடைவீர்.

சோமசுந்தரம்.- அடா பாவி ! நீ வீண்வார்த்தையாடிக் காலதாமதம் செய்கி றாய். நீ என்னோடு போர்புரியப் பயங்கொண்டிருப்பது நன்றாய்த்தெரி கிறது. உன்னை உயிரோடுவிட்டால் அனேக குடும்பங்களைக் கெடுத்து விடுவாய். உன்னைக்கொன்று பழிவாங்குகிறேன் பார். (என்று தூரத்தில் நின்ற அன்னியன் சொக்காயைப்பற்றி இழுத்தான்.)

அன்னியன்.- ஐயா! நான் எவ்வளவு சொல்லியுங் கேளாமல் நெருங்கிவிட் டீர். நீர் ஒரு சுத்தவீரனாயிருப்பது மெய்யானால் நானிருக்கும் ஆடை யோடு போர்புரிய எதிர்பார்க்கமாட்டீர். நான் ஜல்லடம்போட்டுக் கச் சைகட்டி வந்தபின் போர்புரிதல் உத்தமம். உண்மையாக என்னோடு நின்று உம்முடைய வல்லமையைக்காட்ட இஷ்டமிருந்தால் என்னோடு சமீபத்திலிருக்கும் என் சினேகன் வீட்டுக்குவந்தால் உம்மோடு சமர்செ ய்யத் தடையில்லை. 

சோமசுந்தரம்.- அடா துன்மார்க்கா! நானும் உன்னோடு யுத்தம்செய்ய நேரி டுமென்று அறிந்திருந்தால் யுத்தகோலமாய் வந்திருப்பேன். நான் அவ் விதம் வராமற்போனாலும் தோஷமில்லை. நீ உன்னிஷ்டப்படி யுத்தகோலங் கொண்டுவரலாம். உன் சினேகனுடைய வீட்டுக்கு வரத் தடையில்லை. ஆயினும் அந்த துன்மார்க்கியைப் பார்க்கும்படியான இட த்திற்கு அழைத்துப் போகவேண்டாம். அவளைப்பார்க்க எனக்கிஷ்ட மில்லை. 

அன்னியன்.- மாமி மாமன் நாத்தி இவர்களால் சதா துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்த மனோன்மணியைப் பார்த்துத்துக்கப்பட்டிருந்த நீர் அவள் ஒருவரிடத்தும் துன்பப்படாமல் சந்தோஷத்தை அனுபவித்துக்கொ ண்டு கர்ப்பத்தோடிருப்பதைப் பார்த்து நீரும் சந்தோஷமடையாமல் அவளைப் பார்க்க இஷ்டமில்லையென்று சொல்லுவது நியாயமா?

சோமசுந்தரம்.-அடா சண்டாளா! அப்பாதகி கற்பழிந்ததோடு கர்ப்பமாக வும் இருக்கிறாளென்று எனக்குத் தெரிவித்து மேலும்மேலும் எனக்குக் கோபத்தை மூட்டுகிறாய். குறும்பாகப்பேசும் உன் கர்வத்தை அடக்கிச் சித்திரவதை செய்து உன்னைக் கொல்லவேண்டும். எங்குபோக உனக் கிஷ்டம் வா. (என்று முன் நடந்தான்.)

அன்னியன்.- ஐயா! சாவுக்குத் துணிந்து என்னோடு வரப் பிரியங்கொண் டீர். வாரும் போகலாம். (என்று அழைத்துச் சமீபத்திலிருந்த வீட்டு க்குள் நுழைந்து உமக்கென்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.)

சோமசுந்தரம். – அடா பாதகா ! இன்னும் காலதாமதம் செய்து கொண்டிரா மல் நீ இறக்க வேண்டியதற்குத் துரிதப்படு. ஒரு விநாடியில் உன்னைக் கொன்று ஜெயமடையப் போகிறேன்.

அன்னியன்.- நீர் ஜெயமடையப்போகிறதும் நான் ஜெயமடையப்போகிறதும் பின் அறியவேண்டியதேயன்றி அது விஷயத்தில் அதிக நம்பிக்கை கொள்வது உசிதமல்ல. நீர் இறக்குமுன் உம்முடைய மனைவியைப் பார்க்க இஷ்டமிருந்தால் வரவழைக்கிறேன். 

சோமசுந்தரம். – உன் ஏளனத்திற்கு இன்னும் இடங்கொடுத்துக் கொண்டிருக்க மாட்டேன். மறுவார்த்தையாடாமல் விரைவில் சித்தமாகுக. அன்னியன்.- நான் உம்மை ஏளனம் செய்கிறதாக எனக்குக் காணப்பட வில்லை. உம்முடைய இஷ்டம்போல் செய்வேன். நீரும் நானும் போர்புரிந்தால் யார் ஜெயங்கொள்ளுவாரென்று நினைக்கிறீர்? சோமசுந்தரம்.- நானே ஜெயங்கொண்டு உன் கர்வத்தை அடக்கப்போகிறேன். அது விஷயத்தில் உனக்குச் சந்தேகம் வேண்டாம்.

அன்னியன்.-ஐயா ! நான் உம்மோடொத்த பலசாலியல்லவென்று எண் ணியதால் நீரே ஜெயங்கொள்ளுவீரென்று சொல்லத் துணிந்தீர். தன் னோடொத்த பலசாலியல்லவென்று மதித்த ஒருவனோடு போர்புரிய எண்ணங்கொள்வது சுத்த வீரர்களுக்கு அழகாகுமா? 

சோமசுந்தரம். – அடா ! தன்னோடொத்த பலசாலியாயிராத ஒருவன் உலகில் கெடுதியைச் செய்துகொண்டிருக்கக் கண்டால் அவனைக்கொல்ல வேண்டியதே கடமை. அற்ப ஜெந்துவாகிய தேள் பாம்பு முதலியவை ஒருவருக்குக் கெடுதி செய்யாமலிருந்தாலும் அவைகள் கெடுதிசெ ய்யுமென்ற எண்ணங்கொண்டு கொன்று விடுகிறார்கள்.எனக்குக் கெடு தியைச் செய்த நீ என்னோடொத்த பலசாலியல்லவென்று நான் எண்ணி னாலும் உன்னைக் கொல்லவேண்டியதே முறைமை.

அன்னியன்.–ஐயா! நீர் என்னை இன்னாரென்றறியாமல் உம்முடைய பலத் தால் என்னை வென்றுவிடலாமென்று தீர்மானப்படுத்திவிட்டீர். தன்னை யறியாதாரிடத்தில் தன்னுடையவல்லமையைச்சொல்லலாமென்று விதி யிருப்பதால் என்னுடைய வல்லமையைச் சொல்லுகிறேன். நன்றாய்க் கவனித்துக்கேளும். நான் சிறுபொழுதில் சிலம்பத்திற் பழகி பட்டா, கோப்டா, தடி,செடி,மாடி முதலியவைகளில் கைதேறியும், குஸ்தியில் அனேகரை வென்றும் தோடாக்கள் பெற்றிருக்கிறேன். என்னோடெ திர்த்துச் சண்டை செய்ய ஒருவரும் துணியார்கள். நான் ஜல்லடம் போட்டுக் கக்சைகட்டி நிற்பேனாகில் யாவரும் பயப்படுவார்களென்றால் நீர் எம்மாத்திரம் ! வீணில் அவமானப்பட்டுப் போகா முன்னம் ஓடிப்போ கிறது உமக்கழகு. மறந்து செத்தேன், உயிரே! வாவென்றால் உயிர் வருமா? அவமானம் அடைந்தபின் அதை நீக்கிக்கொள்ளமுடியாது. ஆனதால் நான் சொல்லும் புத்தியைக் கேட்டால் உமக்கு அனுகூலமா யிருக்குமென்று நம்புகிறேன். (என்று நகைத்தான்.) 

சோமசுந்தரம். – அடா காதகா! உனக்குச் சிரிப்பும் ஒரு கேடா? நீ என் விஷயத்தில் செய்த குற்றத்திற்காக நான் உன்னைக்கொல்ல வந்திருக் கிறதால் என்னைப் பயங்காட்டி ஒட்டிவிடப் பார்க்கிறாய். நீ விரைவில் சித்தமாகாமற்போனால் உன்னை உன் உடுப்போடுவைத்தே கொல்லுவேன். 

அன்னியன்.-ஐயா ! உம்முடைய மனைவியை ஒருவனுக்குக் கொடுத்துவிட் டால் வந்த அவமானம் போதாதென்று என்னோடு போர்புரிந்தும் அவ மானம் அடையவேண்டுமென்று பிரமன் உமது தலையிலெழுதியிருந் தால் அது விட்டுப்போக நியாயமில்லை.உமது மனைவி கர்ப்பமாய் இருக்கிறாளென்று கேள்விப்பட்டதே உமக்கு அதிக வியசனத்தை உண்டுபடுத்திவிட்டது. கர்ப்பம் இல்லாமற்போனால் என்னைச் சமாதா னப்படுத்தி மனோன்மணியை அழைத்துக்கொண்டுபோய் விடுவீர். அது தப்பியதால் உமக்கு இத்தனைநாள் இல்லாதிருந்த வல்லமை இன்று முளைத்தது. (என்று சொல்லிக்கொண்டே சொக்காவின் நாடாவை அவிழ்த்துக்கொண்டிருந்தான்.) 

அன்னியன் சொல்பவைகளையெல்லாம் கேட்டுச் சகிக்க முடியாமலிருந்த சோமசுந்தரம் கடுங்கோபங்கொண்டு, அடாதோஷி! இன்னமும் உன் னைப் பேசவிட்டுக் கேட்டிருப்பது தகாதென்று முகத்திற் குத்தினான். அன்னியன் அக்குத்து முகத்திற்படாமல் தலையைத் தாழ்த்தியதில் குத் து தலைகுட்டையிற்பட்டு தலைகுட்டையும் மீசையும் கீழே விழுந்தன. அன்னியன் சொக்காயை அவிழ்த்தெறிந்தான். சோமசுந்தரம் திகை த்து நிற்பதைக் கண்ட அன்னியன் எங்கு ஓட வழிபார்க்கிறீர்? வாரும், ஒரு கை பார்க்கலாமென்றான். சோமசுந்தரம் நகைத்து, சிந் தாமணி ! இதென்ன வேஷம்? உன்னைக் கண்டுகொள்ள முடியாமற் போனதே! என் பிரிய மனோன்மணி எங்கே? 

அத்தருணத்தில் எதிரிலிருந்த அறையின் கதவு திறக்கப்பட்டு மனோன் மணி ஓடிவந்து சோமசுந்தரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, அத் தான் ! என்மேல் இவ்வளவு கோபங்கொள்ளலாமா வென்று ஆனந் தக் கண்ணீர் சொரிந்தாள்.சோமசுந்தரம் மனோன்மணியைத் தழுவி முகத்தோடு முகம் வைத்து, என் நவமணி! உன் நடத்தையைக் குற் றமாக எண்ணிக் கோபித்ததற்கு என்னை மன்னிக்க வண்டுமென்று வேண்டினான். தன் நாயகனைவிட்டு அன்னியனோடு சென்றவர்க ளைச் சேர்த்துக்கொள்ளக்கூடாதென்று சிரித்துக்கொண்டே ஒரு பெண் அறையிலிருந்துவருவதையும் அவளோடு இருவர் பின்தொடர் வதையும் சோமசுந்தரம் கண்டு மனோன்மணியை விட்டு, அம்மா கம லாக்ஷி! நீ எப்படி இங்கு வந்தாய்? உன்னோடிருக்கிறவர்கள் யா ரென்று கேட்டான். 

கமலாக்ஷி – அண்ணா!நானும் என் தங்கை மரகதமும் என் சிறிய தாயார் தாயாரம்மாளும் என் தமையன் சொக்கலிங்கமுதலியாரும் ஊருக்கு வண் டியிலேறிப் போனவர்கள் இவ்விடம் வரும்பொழுது வண்டிச் சக்கரத் தின் கட்டு விழுந்து விட்டதால் சொக்கலிங்கத்தண்ணன் எங்களை இவ் விடம் விட்டுச் சக்கரத்துக்குக் கட்டுப்போட்டு வருவதாகப் போயிருந் தார். நான் நின்றிருந்ததைப் பார்த்த மனோன்மணி எங்களை அழைத்து வார்த்தையாடிக் கொண்டிருக்கும்பொழுது தாங்களும் இந்தத் தலைப்பா கட்டியும் தூரத்தில் வருவதைப் பார்த்துப் பெரிய வேடிக்கை யொன்று நடக்கப்போகிறது, நாம் ஒளிந்திருந்து பார்க்கலாமென்று மனோன்மணி எங்களை அறைக்குள் விட்டுச் சந்தோஷத்தில் பூரித்திருந்தாள். நீங்க ளிருவரும் பேசும்பொழுது எனக்குப் பயமாயிருந்தது. ஏதாகிலும் கெடுதி நேரிடுமோ? என்றதற்கு ஒரு கெடுதியும் நேரிடாது, தன்னாயக னோடு வருகிற தலைப்பாகட்டி ஆண்பிள்ளையல்ல, தன் தமக்கை சிந்தா மணியே, ஆண்பிள்ளை வேஷத்தோடிருக்கிறாளென்று மனோன்மணி சொல்லியிருந்தாள். ஆனதால், இந்தத் தலைப்பாகட்டியை விடக்கூடாது. தலைப்பாகையையும் விழுந்துபோன கள்ள மீசையையும் எடுத்து வைத் துக் கொள்ளச் சொல்லுங்கள். (என்று நகைத்தாள்.) 

சிந்தாமணி.- மனோன்மணி! நான் அத்தானோடு சண்டை போடப்போகி றேன். என் ஜல்லடம் கச்சை முதலியவைகளை விரைவில் கொண்டுவா. அத்தான்! குஸ்திக்கு நிற்கலாமா? பட்டாவோடு நிற்கலாமா? என்னசெய் யலாம்? விரைவில் சொல்லுங்கள். தங்களை ஓடவிடமாட்டேன். என்னை ஜெயங்கொள்ள முடியுமென்ற தீரத்தைப் பார்க்கவேண்டும். (என்று நகைத்தாள்.) 

சோமசுந்தரம்.- தன்னோடொத்த பலசாலியல்லவென்று கண்டபின்னும் உன்னோடு போர்புரிதல் அழகாகாது.ஆனதால், அதை நிறுத்தி நீ இவ் வேஷத்தோடு வெளிப்பட்டதற்குக் காரணம் யாது? என்னிடத்தில் உண்மையைச் சொல்லாமலிருந்ததன் கருத்தென்ன? இந்த மீசையை எங்கு சம்பாதித்தாய்? இவைகளைச் சொல்லவேண்டும். (என்று கேட்டு நகைத்தான்.) 

சிந்தாமணி.- நான் உடுப்பைக் கழற்றி ஜல்லடம்போட்டுக் கச்சைகட்டி வந் தால் யாவரும் பயப்படுவார்களென்றேன். நான் உடுப்பு கழற்றியவுடனே என்னைப்பார்த்துப் பயந்து சமாதானமாய்ப்போனீர்கள். தாங்கள் எப் பொழுது தலைக்குட்டை தட்டப்போகிறீரென்றே பார்த்திருந்தேன். சோமசுந்தரம்.- தலைக்குட்டை விழுந்தால் அதனோடு கட்டியிருந்த மீசை யும் விழும். அத்தருணத்தில் சொக்காயை எடுத்தெறிந்து ஏககாலத் தில் என்னைப் பிரமிக்கச் செய்யலாமென்று இந்த யோசனை செய்திருந் தாய் ? நான் கேட்டதற்குப்பதில் ஒன்றும் சொல்லவில்லையே! அது விஷயத்தில் ஏதாகிலும் இரகசியம் உண்டா? 

சிந்தாமணி.–இரகசியம் ஒன்றுமில்லை. என்னுடைய நாயகன் எப்பொழுதும் தேவடியாள் வீடேகதியென்றும், தன் பெயரிலிருந்த நிலத்தையெல்லாம் அடைமானம்வைத்துத் தேவடியாளுக்குத் துலைத்துவிட்டபின் என்னி டத்திலிருக்கும் நகைகளைக் கேட்டும் நான் கொடுக்காமற்போனதால் என்னை அடிக்கடி அடித்துத் தொந்தரை செய்து அகப்பட்ட ஒன்றிரண் டைக் கொண்டுபோவதுமாக இருந்தார். நான் அவர் இஷ்டம்போல் என் னிடத்திலிருக்கும் நகைகளைக்கொடுக்காமலிருந்ததால் என்னைக் கொன்று யாவையும் கைக்கொள்ள எண்ணங்கொண்டிருந்ததை யறிந் தேன். என் தமையன் சிவப்பிரகாசமுதலியார் இருந்தால் அவருடைய ஆதரவிலிருக்கலாம். அவர் இல்லாமற் போய்விட்டதால் இனி அவ்விடத்திலிருப்பது எனக்குக் கெடுதியாக முடியுமென்று என்னிடமிருந்த ஆபரணங்களைக் கைக்கொண்டு என் சொந்தவீட்டை அன்னியரிடத்தில் ஒப்பித்து மனோன்மணியோடு போயிருக்கலாமென்று வரும்பொழுது, மனோன்மணியை மாமனாரும் மாமியாரும் அதிக தொந்தரை செய்து வந்தார்களென்று சிலரால் கேள்விப்பட்டு, துன்பமடைந்து கொண்டிரு ப்பவளுக்குப் பாரமாகப்போகக்கூடாதென்று நினைத்துத் தங்கள் தங்கை இருக்கும் ஊருக்கும் போகலாமென்பதாக உத்தேசித்துப்போகும்பொ ழுது மார்க்கத்தில் நான் தனித்துச்செல்வதைக் கண்ட சில துன்மார்க்கர் என்னை அடுத்துக் குறும்பாக வார்த்தையாட அவர்களைக் கண்டித்துத் துரத்தியபின், பகல் வேஷக்காரன் ஒருவனை மார்க்கத்தில் கண்டு அவ னிடம் மீசையையும் தலைக்குட்டையையும் விலைக்கு வாங்கி ஆண்பிள்ளை வேஷம் போட்டுத் தங்கள் தங்கை இருக்கும் வீட்டுக்கருகில் வரும் பொழுது, காளியாயி அம்மாள் வீட்டுக்கு வெளியில் நிற்பதைக்கண்டு பார்த்துக்கொண்டே போனேன். அம்மார்க்கம்போன வாலிபனொருவன் என்னைப்பார்த்து,ஐயா! நீரும் காளியாயி வலையிலகப்பட்டுக் கொண் டீரா? என்று கேலியாகப் பேசிக் காளியாயியின் நடத்தையை யெல் லாம் தெரிவித்தான். நான் அவளோடு போயிருக்க மனம் கொள்ளாமல் வேறொரு இடத்தில் வசித்திருந்தேன். சில மாதங்களுக்குப்பின் காளி யாயி அம்மாள் என் பார்வையி லகப்படாததைக் கண்டு விசாரித்ததில் அவள் தன் தாய் வீட்டுக்குப் போய் அங்கு மனோன்மணியை வதைத்துக் கொண்டிருக்கிறாளென்று கேள்விப்பட்டு மனோன்மணியைப் பார்த்து வருவதே உத்தமமென்று வரும்பொழுது, புதுவூர் சாலையில் மனோன் மணி தனித்துப் போவதைக்கண்டு ஆச்சரியமடைந்து அவள் தனித்துப் போகுங்காரணம் அறிய நெருங்கி வார்த்தையாடிய சாலத்திலே அவள் என்னை ஒரு அன்னியனாகமதித்து வார்த்தையாடினாள். நான் யாரென் றும் நான் எதற்காகப்போகிறேனென்றும் என்கருத்தை அவள்காதில் இரகசியமாகச் சொல்லியபின் நடந்தது யாவும் தாங்கள் அறிந்ததே. தங்களுக்கென் இரகசியத்தைத் தெரிவித்தால் எங்களைக் கட்டாயப்படு த்தி வீட்டுக்கு அழைத்துப்போவீர்: நான் இருந்த கோலத்தோடு தங்க ளோடுவராமல் பின்கின்றால் மனோன்மணியின் துக்கத்தை ஆற்ற வழி யில்லையேயென்று எனைத்து, தாங்கள்கொண்ட எண்ணத்தோடு போக விட்டால் மனோன்மணி துன்பமில்லாமல் என்னோடு சிலநாள் இருக்கக் கூடு மென்றெண்ணி மனோன்மணிக்குத் தைரியம் சொல்லி அழைத்து வந்தேன். 

சோமசுந்தரம்.- மனோன்மணி! என் தாய் தந்தை தங்கை செய்த கொடுமை களையெல்லாம் அநேகநாள் சகித்திருந்து நான் வீட்டிலிராத சாலத் தில் நீ வீட்டைவிட்டுவரலாமா? 

மனோன்மணி.-ஐயோ! வீட்டைவிட்டுப்போகமாட்டேனென்று இருந்த என்னைப் புறக்கடைவாயில்வழியாக வெளியில் தள்ளிக்கொண்டுபோய் விட். டுக் கற்களை மச்சி கையில் எடுத்துக்கொண்டு, வந்தால் அடிப்பேன் பார் என்று நின்றார்கள். நான் அதற்கும் அஞ்சாமல் வருவதைக்கண்டு பெரியகல்லால் அடித்தார்கள். அந்த அடியைப்பட்டு, இனி வீட்டுக்குள் நுழைய வொட்டார்கள், எங்குபோகிறதென்று அழுதுகொண்டு போகும் பொழுது அக்காளைக்கண்டு இங்குவந்திருக்கிறேன். 

சோமசுந்தரம் – என் தங்கையை மான் தூஷிப்பது சியாயமல்ல. மனோன் மணி போனபின் என்னிடம் வந்து பரிதாபப்பட்டுப்பேசினாள். என் தாய்தந்தை சமாசாரங்கள் ஏதாகிலும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மனோன்மணி – ஒன்றும் கேள்விப்படவில்லை. நான் வீட்டைவிட்டு வந்தபின் யாவரும் எனக்காகத் துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களென்று தானே தாங்கள் சொல்லப்போகிறீர்கள். 

சோமசுந்தரம்.- உன் விஷயத்தில் செய்தகொடுமைகளையெல்லாம் நினைத்து நீண்டகாலம் துக்கப்படாமல் மூவரும் இறந்தார்கள். 

மனோன்மணி.- என்ன சொன்னீர்கள்! ஐயோ! நான் இனி என்ன செய் வேன்! தெய்வமே! நான் இந்த வயதில் மாமியார் மாமனார் நாத்தனார் இவர்களைக் கொடுத்துவிட்டு நான் உயிரோடு இருக்கலாமா! ஐயோ! தெய்வமே ! அவர்கள் முடிவுகாலத்தில் நானிருந்து பணிவிடைசெய்யக் கொடுத்துவைக்காத பாவியானேன் ! ஐயோ மச்சி! நான் வீட்டைவிட்டு வந்தவுடன் எனக்காப் பரிதாபப்பட்டுப்பேசியதாகச் சொன்னார்களே! என்மேல் உள்ளுக்குள் அன்புகொண்டிருந்ததை அறியாமற்போனே னே! (என்று முகத்திலறைந்துகொண்டு கண்களில் நீர் தாரைதாரையாக வடியக் கதறினாள். விழுந்து கடகடவென்று புரண்டாள்.) 

சிந்தாமணி கமலாக்ஷி தாயாரம்மாள் மரகதம் இவர்களெல்லாம் மனோன்மணியைத்தூக்கி அவள்கொண்ட துக்கம் நீங்கப் பலவற்றைச் சொல் லியும் மனோன்மணி கண்களிலிருந்து நீர் தாரைதாரையாக வடிந்து கொண்டிருக்கச் சோமசுந்தரம் தன்மனைவி உண்மையாகத் துக்கப்படு வதைக்கண்டு அதிசயமடைந்து இவ்விதமும் பெண்கள் இருப்பார் களா? அவர்கள் நாளெல்லாம் பெருங்கொடுமையைச் செய்துகொண் டிருந்தும் அவைகளைச் சிறுதுமெண்ணாமல் வருந்துகிறாளே! என்று தன் மனைவியைப்பார்த்து, மனோன்மணி ! அவர்கள் உன்விஷயத்தில் செய்த கொடுமைகளை எண்ணிப்பாராமல் அவர்களுக்காகத் துக்கப்படு கின்றனையே! அது என்னகாரணம்? கொடுமையைச் செய்தவர்கள் இறந்தால் சந்தோஷமடைகிறது உலகவழக்கமாக இருக்கக் கொடு மை செய்தவர்களுக்காகத் துக்கப்படுவது ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறதென்றான். 

மனோன்மணி.- எல்லாம் அறிந்த தாங்களும் இவ்விதம் சொல்லலாமா? அற்ப ஜெந்துக்களைக் கண்ட சிறுவர்கள் அவைகளை அடித்தால் அவைகளுக்கு வாதனையாயிருக்கு மென்பதை வினையாமல் விளையாட்டாக அடித்துச் சந் தோஷப்படுவதுபோலவும், பிள்ளைகள்மேல் அதிக அன்புள்ளவர்கள் பிள் ளைகளை அடித்தும் கடித்தும் கிள்ளியும் அதனால் வாதனைப்பட்டு அழு கிற குழந்தைகளின் வருத்தத்தைக் கவனியாமல் ஆனந்தமடைவது போலவும், என் மாமன்,மாமி,மச்சி என் விஷயத்தில் செய்தார்களே யன்றி வேறு எண்ணங்கொண்டு செய்ய யாதொரு காரணமும் இல் லையே! (என்றழுதாள்.) 

மனோன்மணியின் நற்குணத்தைக் கண்ட யாவரும் சந்தோஷப்பட்டு அவ ளுடைய துக்கத்தை மாற்ற வேறு விஷயங்களைப் பேசிக்கொண்டிரு க்கும்பொழுது சொக்கலிங்கம் வீட்டுக்குள் வந்து, அம்மா கமலாக்ஷி ! வண்டி சித்தமாயிருக்கிறது. பிரயாணப்படவில்லையா? என்றான்.

கமலாக்ஷி – அண்ணா! இந்த அண்ணன் எங்களூரிலிருந்து வந்திருக்கிறார். அவர் சில தினத்தில் ஊருக்குப்போக நேரிடுமென்று நினைக்கிறேன். தாங்கள் உத்தரவு கொடுத்தால் இவர்களோடு சென்று என் தாயாரைப் பார்த்து வருகிறேன். 

சோமசுந்தரம்.- ஆம் ஐயா! நான் நாளையே என் ஊருக்குப்போக யோசித் திருக்கிறேன். தங்களுக்குச் சம்மதம் இருந்தால் கமலாக்ஷியம்மாளை அழைத்துப்போகத் தடையில்லை. பெண்கள் துணையும் இருக்கிறது.

சொக்கலிங்கம். – ஐயா!கமலாக்ஷியம்மாளை நான் அழைத்துப்போய் விட்டு வராமல் அனுப்பி விடுவது நியாயமல்ல. நான் இன்னும் சில தினத் தில் அழைத்து வருகிறேன். தங்களுடைய பெயர் தெரிந்திருந்தால் தங்களையும் பார்த்துவர அனுகூலமாயிருக்கும். 

சோமசுந்தரம்.- என் பெயர் சோமசுந்தரம். 

சொக்கலிங்கம்.- அம்மா கமலாக்ஷி ! வைத்தியர் சொல்லிக்கொண்டிருந்த சோமசுந்தர முதலியாரா? 

கமலாக்ஷி – ஆம் அண்ணா! இந்த அம்மாள் அவருடைய மனைவி. அந்த அம்மாள் கொழுந்தியாள். 

சொக்கலிங்கம்.-ஐயா! தங்கள் ஊரிலிருந்து வந்த வைத்தியரால் தங்களைக் குறித்து அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் மயிலாபுரி க்கு வந்தவுடன் தங்களை வந்து பார்க்கிறேன். 

சோமசுந்தரம்.- தங்களை அவ்விடத்தில் பார்க்க அதிக சந்தோஷமாக இருக் கும். கமலாக்ஷியம்மாள் தங்கள் வீட்டுக்கு எப்பொழுது வந்தார்கள்?

சொக்கலிங்கம். – ஏறக்குறைய ஒரு மாதம் இருக்கலாம். 

சோமசுந்தரம். கமலாக்ஷியம்மாள் இவ்விடம் வந்திருக்கிற சமாசாரம் எனக்குத் தெரியாது. அம்மா கமலாக்ஷி ! நீ உன் தாயாரை விட்டுத் தனி யாய் வந்த காரணம் யாது? உன் தாயாரையும் பெரியவரையும் ஒரு விநாடியும் விட்டுப் பிரிந்திருக்கமாட்டாயே? 

கமலாக்ஷி.- ஆம் அண்ணா! அந்த சமாசாரத்தைத் தள்ளுக்குச் சொல்ல வேண்டியது அவசியமாதலால் நாம் தனித்துப் பேசவேண்டும். என்று சோமசுந்தரத்தையும் சொக்கலிங்கத்தையும் வேறிடத்திற்கு அழை த்துப்போய்த் தனக்கு நேரிட்டதும், காத்தனும் சாத்தனும் வண்டியிற் பேசியதும், விஜயரங்கம் தன் தாய் தந்தையை விட்டு நீங்க நேரிட்ட காரணத்தைத் தான் கேட்டிருந்ததும் சொல்லி, அண்ணா! தங்களால் ஒரு பெரிய காரியம் முடியவேண்டியதாயிருக்கிறது என்றாள். சோமசுந்தரம்.- அம்மா! என்னாலாக வேண்டியதைச் சொன்னால் செய்ய யாதொரு தடையுமில்லை. 

கமலாக்ஷி.- தங்கள் காத்தனையும் சாத்தனையும் கண்டுபிடித்து அவர்க ளைக் கைவசப்படுத்தி அவர்களால் நாம் அறியவேண்டியதை அறிந்து கொள்ள வேண்டியதே. 

சோமசுந்தரம்.- அம்மா ! அந்த இரகசியம் வெளிக்குக் கொண்டுவர என் னுடைய ஆஸ்தியெல்லாம் செலவாகிறதாயிருந்தாலும் நான் பின் வாங்க மாட்டேன். விஜயரங்கத்தின் சமாசாரம் எதாகிலும் கேள்விப்பட்டால் எனக்குத் தெரிவிக்கவேண்டும். 

கமலாக்ஷி – அதுபோலவே செய்வேன். தாங்கள் ஊருக்குப்போனவுடன் எனக்கு நடந்தவைகள் யாவும் என் தாயாரிடத்தும் பெரியவரிடத்தும் பிரஸ்தாபித்து நான் உயிரோடிருப்பது இன்னும் சிலநாள் வெளிவராம லிருக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்லவேண்டும். 

21-ம் அத்தியாயம்

மயிலாபுரிக்கு மூன்று மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்துக்குப் போகிற வண்டியொன்று நிறுத்தப்பட்டு, இரத்தினமும் மாணிக்கமும் வண்டியிலிருந்திறங்கியவுடன், நாம் வண்டியிற்போவதைவிட்டு இறங் கிப்போக வேண்டிய காரணமென்ன வென்று மாணிக்கம் இரத்தினத் தைக் கேட்டான். 

இரத்தினம் – நான் மதனரஞ்சனியைக் குறித்துப் பேசும்பொழுது யாதொரு தடையும் உண்டாகா திருக்க வேண்டுமென்றும், வண்டியில் உட்கார்ந்து க்கொண்டு போவது நம்முடைய சம்பாஷணைக்கு இடையூறா யிரு க்கிறதென்றுங் கண்டு இறங்கி நடந்து வார்த்தையாடிக்கொண்டு போவ து உத்தமமென்பதாக நினைத்தேன். நான் எவ்விடத்தில் விட்டேன்?

மாணிக்கம் – நமக்கெதிரில் காணப்படும் கிராமத்தில் சில தினங்களுக்கு முன் நீ தனியாகத் தெருவழியே போகும்பொழுது ஒரு வீட்டின் வாயி ற்படியில் நின்றிருந்த மதனரஞ்சனி அத்தெருவழியாகச் செல்லுகிறவர் களைக்கண்டு நாணங்கொள்ளாமலிருந்து உன்னைக்கண்டவுடன் வெட்கப் பட்டுக் கதவின் பக்கத்தில் மறைந்து உன்னைப்பார்த்துக் கொண்டிருந்த தாகவும், நீ சிலதூரம் சென்று அவளை மீண்டும் பார்க்க ஆசைகொண்டு திரும்பி வந்ததாகவும் அப்பொழுது அவள் தன் தாயாரோடு நின்றிருந்து உன்னைக்கண்டு தன் தாய்க்குப் பின் மறைந்து என்றாளென்பதாகவும் சொன்னாய். 

இரத்தினம் – மாணிக்கம் ! நான் சொல்வதை நீ அதிக கவனமாகக் கேட்டு வருகிறாய்! தன் தாய்க்கு பின் மறைந்து என்ற மதனரஞ்சனி என்னை எட்டி எட்டிப் பார்ப்பதைக்கண்டு அவளோடு பேச ஆசைகொண்டு அவள் தாயைப் பார்த்து, “அம்மா! இராமசாமிமுதலியார் வீடு எங்கே? உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கவள் தம்பு! இவ் விடத்திலிருப்பவர்வளை அதிகமாய் நானறியேன். நான் மற்றவர்களர் லறிந்து சொல்லுகிறேன். அது பரியந்தம் நீர் தெருவில் நின்றிருக்க. வேண்டிய அவசியமில்லை. வீட்டுக்குள் வரலாம்.” என்றழைத்துக் கூடத்திலிருந்த நாற்காலியில் உட்காரச்செய்து அடுத்தவீட்டுப் பெண் பிள்ளையை அழைத்து, இராமசாமி முதலியார் வீட்டை விசாரித்துவர அனுப்பியபின் என்னிடம் வந்து, “தம்பி தாங்கள் எந்த ஊர்? தங்கள் பெயரென்ன? என்ன உத்தியோகம் ?” என்று கேட்டாள். நான் என் பெயரையும் என்னிருப்பிடத்தையும் சொல்லி, எனக்கு உத்தி யோகம் ஒன்றும் இல்லை, உத்தியோகஞ்செய்து ஜீவிக்கும்படி கடவுள் என்னை வைக்கவில்லை, எனக்கதிகமான பொருள் உண்டென்று சொல்லி “நீங்கள் எந்த ஊர்?” என்று கேட்டேன். அவள் ஒன்றும் மறைக்கா மல் தான் திரிசிரபுரத்தில் ஒரு பெரிய குடும்பத்தைக் சேர்ந்தவ ளென்றும், தன் மாமனார் பெயரைச் சொல்லக்கூடாதென்று தன் மக ளால் சரவணமுதலியாரென்று நான் அறியச்செய்து, தன் மாமனாருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்களென்றும், மாமனார் காலஞ்சென்றபின் தகப்பனுடைய ஆஸ்தியையும் கடனையும் பிரித்ததில் ஒவ்வொருவருக் கும் இரண்டு இலக்ஷத்தைம்பதினாயிரம் பெறுமான நிலமும் நகைகளும் நாற்பதினாயிரம் ரூபாய் கடனும் கிடைத்தனவென்றும், சகோதரர்கள் வெவ்வேறு குடும்பமானபின் தன் புருடன் கடனில் இருபதினாயிரம் தீர்த்துத் தன்மகனோடு காலஞ்சென்றா ரென்றும் சொல்லும்பொழுது அவள் கண் கலங்கினாள். எனக்குப் பரிதாபமாக இருந்தது. தன் புருடன் போனபின் மைத்துனருடைய ஆதரவிலிருந்ததால் அவர்கள் தன் புருடன் ஆஸ்தியால் வரும் பலன்களைத் தாங்களே அனுபவித்துக் கொண்டும் கடனுக்காக ஒன்றும் கொடாமலும் தன்மகளை விவாகம் செய்துகொடுக்க எண்ணங்கொள்ளாமலுமிருப்பதை அறிந்து, ஆண்பி ள்ளை திக்கில்லாததால் தனக்கிக்கதி நேரிட்டதென்று தன்னுடைய மகளை யழைத்துப்போய்த் தக்க இடத்தில் விவாகஞ்செய்து கொடுத்து மருமகனுடைய உதவியைக்கொண்டால் மைத்துனர்களுடைய எண்ணம் ஒன்றும் அதன்பின் ஓங்காதென நினைத்து இவ்விடம் வந்திருக்கிறே னென்றும் அவள் சொன்னாள். அச்சமயத்தில் இராமசாமி முதலியார் வீட்டை விசாரிக்கச் சென்றவள் வந்து அவருடைய வீடு அடுத்த தெரு வின் கோடியிலிருப்பதாகச் சொன்னாள். ராமசாமி முதலியீார் வீடு இன்ன இடத்திலிருக்கிறதென்று அறிந்தபின், அவ்விடமிருந்தால் அவர் கள் சந்தேகங் கொள்ளுவார்களென்று நீங்கினேன். 

மாணிக்கம்.- இரமசாமி முதலியார் வீடு எவ்விடத்திலிருக்கிறதென்று உனக்குத் தெரியாதா? 

இரத்தினம்.- இராமசாமி முதலியார் வீடு மட்டுமல்ல. அக்கிராமத்திலிருக் கிறவர்களுடைய வீடுகளெல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியும். நான் மதனரஞ்சனியைச் சமீபத்தில் போய்ப் பார்க்கவும், அவர்கள் இவ்வூருக் குப் புதிதாயிருந்ததால் அவள் தாயாரோடு வார்த்தையாடி அவர்கள் யாரென்றும் எங்கிருந்து வந்திருந்தார்களென்றும் அறியவே இராமசாமி முதலியார் வீட்டைக் கேட்டு வார்த்தையாட எண்ணங்கொண்டேன்.

மாணிக்கம் – மதனரஞ்சனியின் தாயாரோடு வார்த்தையாடிய சிறிது நேரத் தில் அவள் சொல்வதைக்கேட்டு மதனரஞ்சனியை விவாகஞ்செய்யவா துணிந்தாய்? 

இரத்தினம்.-இல்லை! இல்லை! நான் மதனரஞ்சனியின் தாயோடு வார்த் தையாடி இராமசாமி முதலியார் வீட்டுக்குப் போகும் மார்க்கத்தில் வார்த் தையாடிக் கொண்டிருந்த இருவர்களிலொருவன் “மதனரஞ்சனியின் குடும்பத்தை நன்றாய் அறிவேன், அவர்கள் பெரும்பணக்காரர், அவர்க ளுக்கு இருக்கும் நிலமெல்லாம் முப்போகம் விளையத் தகுந்தது, மதன ரஞ்சனியும் அதிக சுந்தரமுள்ளவள், அவளுக்குப் புருடனாக வரப்போகி றவன் புண்ணியவான்.” என்று மற்றவனிடம் சொல்லிக்கொண்டிருந் த்து என் காதில் விழுந்தது. 

மாணிக்கம்.- அவர்கள் யாரென்று உனக்குத் தெரியுமா? 

இரத்தினம்.- என் பார்வையில் நின்றவன் எனக்கு அன்னியனாகக் காணப் பட்டான். மற்றவன் வேறு பக்கம் திரும்பியிருந்ததால் அவன் யாரென்று கண்டுகொள்ள முடியாமற்போனது. அவர்கள் பேசியிருந்ததைக் கேட்ட பின் நமக்கு நற்காலம் வரும்போல் காணப்படுகிறதென்று இராமசாமி முதலியார் வீட்டுக்குச்சென்றேன். 

மாணிக்கம் – உனக்கு நற்காலம் வந்திருக்கிறதென்று இன்னும் தெரியவில் லையா? உன்னை முற்றிலும் வெறுத்திருந்த உன் சிறிய தந்தை ஐம்பதினா யிரம் பெறுமான பூஸ்திதியை உனக்கு வைத்துப்போன பின்னும் சந் தேகங்கொள்ளுவது அதிசயம்! வனசாக்ஷியை உனக்குக் கொடுக்காமற் போனது அவர்களுக்கு இப்பொழுது பெருந் துக்கமாயிருக்குமென்பதை நீ நினைக்கவில்லையா? 

இரத்தினம் – நடந்துபோனதை ஞாபகத்தில் வைக்கவேண்டாம். வனசாக்ஷி யை விவாகஞ்செய்துகொள்ளென்று, என் சிறிய தந்தையின் ஆஸ்தி என்னைச் சேர்ந்தவுடன் சொல்லியிருப்பார்களானாலும் ஒருவேளை ஒப் புக்கொண்டேயிருப்பேன். என் கண்ணில் மதனரஞ்சனி அகப்பட்ட பின் என் எண்ணத்தைமாற்ற ஒருவராலும் முடியாது. அல்லாமலும், மதனரஞ்சனியைக் கொள்ளுவதால் தொகையும் அதிகம் கிடைக்கும்.

மாணிக்கம்.- ஒரு இலக்ஷத்திற்கும் இரண்டரை இலக்ஷத்திற்கும் வித்தியாசமெனக்குத் தெரியாமற் போகவில்லை. இலக்ஷணத்தைக் கருதினாலோ? இரத்தினம் -இலக்ஷணம் வந்து பெட்டியை நிரப்பாது. இரண்டரை இல க்ஷமே வந்து பெட்டியை நிரப்பும். மதனரஞ்சனியும் இலக்ஷணத்தில் குறைந்தவளென்றா நினைக்கிறாய்? இருவரும் இலக்ஷணத்தில் சமமாக இருப்பார்களென்றே வினைக்கிறேன். 

மாணிக்கம்.- நீ சொல்லிக்கொண்டு வந்ததை மத்தியில் நிறுத்திவிட்டேன். அதை முடித்துவிடு. 

இரத்தினம்.- அன்னியரிருவர் வார்த்தையாடிக் கொண்டிருந்ததைக் கேட்டு இராமசாமி முதலியார் வீட்டுக்குப் போய் அவர் வீட்டிலிருக்கிறாரா வென்று விசாரித்ததில், அவர் வெளியில் போயிருக்கிறார், வருகிற நேர மாயிற்று என்று அங்கிருந்தவர்கள் சொன்னதன் மேல், வீட்டுக்குள் செ ன்று உட்கார்ந்திருந்தேன்.சில நேரத்திற்குப்பின் இராமசாமி முதலி யார் வீட்டுக்கு வெளியினின்று, மதனரஞ்சனி சுந்தரமுள்ளவள், பெரும் பணக்காரன் மகள், முப்பதினாயிரம் பெரிய தொகையாயிருந்தாலும் இல க்ஷக்கணக்காய்ப் பெறும்படியான நிலத்தைக் கவனிக்க வேண்டியதில்லை யா? நிலப்பத்திரங்களை ஈடுவைத்துக் கடன் வாங்குவது கடினமல்லவெ ன்று ஒருவனோடு பேசிக்கொண்டிருந்து வீட்டுக்குள் வந்து என்னைப் பார்த்து நான் போன வேலையைக் குறித்துப் பேசியிருந்தபின், ஒருவரு க்கு நிலத்தின்மேல் முப்பதினாயிரம் ரூபாய் கடன் வேண்டுமென்றும், எனக்கு இஷ்டமிருந்தால் நான் செட்டிகள் வீட்டில் வைத்திருக்கும் தொகையைக் கொடுக்கலாம், நல்ல வட்டி கிடைக்குமென்றும் சொன் னார். நான் நிலத்தை வைத்துக்கொண்டிருப்பது கஷ்டமாக இருந்த தென்று விற்றுப்பணமாக்கி யிருக்க, அதை நிலத்தின்மேல் கடன் கொடுப் பது உசிதமல்லவே என்றதற்கு, அவர் இரண்டு மூன்று இலக்ஷம் பெறக் கூடிய நிலத்தின்மேல் கடன் கொடுத்தால் நிலக்காரர் தவணையில் மீட் டுக் கொள்ளாத விஷயத்தில் நிலத்தை ஏலத்தில் விற்றால் வரப்போகும் இலாபத்தைக் கவனித்தீரா? செட்டிகள் வீட்டிலிருக்கும் பணத்திற்கு அவர்கள் என்ன கொடுக்கப் போகிறார்கள்? இவர்கள் கொடுக்கும் வட் டியைப்போல் கிடைக்காது. இவ்வூரில் வந்திருக்கும் ஒரு பெண் பிள் ளைக்குத் தான் சொன்ன தொகை வேண்டும், செட்டிகள் அறிந்தால் முன் பின் யோசியாமல் கொடுப்பார்களென்றார். நான் யோசித்துப் பார்க்கலாம் என்று சொல்லி வந்த இரண்டு தினத்திற்குப்பின் செட்டிகள் வீட் டுக்குப் போன பொழுது, செட்டிகள் அந்த தொகையைக் கொடுக்க இரு ந்ததையறிந்து இனிக் காலதாமதஞ் செய்யக்கூடாது, யாவையும் நேரில் பேசி அறியலாமென நினைத்து உன்னை அழைத்துப் போகிறேன் வா. (என்று மதனரஞ்சனி வீட்டுக்கருகில் வண்டியை நிறுத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.) 

இருவர் தன் வீட்டுக்குள் வருவதைக் கண்ட மதனரஞ்சனியின் தாய் உபசரித்து உட்காரவைத்தாள். 

இரத்தினம்.- அம்மா! தாங்கள் இவ்வூருக்கு வந்த காரியம் முடிவுபெற்றதா? மதனரஞ்சனியின் தாய் – தம்பி! நான் இரண்டு காரியங்களை உத்தேசித்து இவ்வூருக்கு வந்தேன். அவைகளில் ஒன்று முடிந்தது. மற்றொன்று முடியவில்லை. 

இரத்தினம்.-இரண்டில் எது முடிந்தது? எது முடிவாகவில்லை? 

மதனரஞ்சனியின் தாய்.- நான் சில தினங்களுக்கு முன் உம்மிடத்தில் சொல்லியது இன்னும் முடிவுபெறவில்லை. எனக்குத் திரிசிரபுரத்திலி ருக்கும் கடனை முதலில் தீர்த்துவிட்டால், என் மைத்துனர்களுடைய சல்லியம் விட்டுப்போகு மென்று எண்ணியது முடிவு பெற்றது. நாளை பணம் கைக்குவரும். நாளையதினம் பொறுத்து மதனரஞ்சனியைச் சில நாள் இவ்வூரிலிருக்கவிட்டு நான் ஊருக்குப்போய்ச் சில தினத்தில் திரும்பிவந்து மருமகனைத் தேடவேண்டும். (என்று நகைத்தாள். 

இரத்தினம்.– தங்கள் மகளுக்கு விவாகத்தை முடித்து மருமகனைக் கையோடு அழைத்துப் போனால் தங்களுடைய மைத்துனர்களோடு பேசி யாவை யும் முடித்துக்கொள்ள உதவியாக இராதா? 

மதனரஞ்சனியின் தாய்.- மைத்துனர்களை நீக்கிவைத்து என் மகளுக்கு விவாகத்தை முடித்தால் பெண்பிள்ளை தன் பெரியதனமாகவே யாவை யும் முடித்து விட்டாளென்ற பழிப்புக்கு இடம் உண்டாகும். அதற்கு இடங்கொடுக்கக்கூடாது. என் புருடனுக்கிருக்கும் கடனைக் கொடுக்கும் வரையிலே நான் மைத்துனர்களின் வார்த்தைக்கு அடங்கி நடக்கவேண் டும். அக்கடன் தீர்ந்தால் யாவரும் என் சொல்லுக்கடங்கி நடப்பார்கள். அப்பொழுது என் இஷ்டம்போல் யாவும் செய்யலாம். 

இரத்தினம்.- தங்கள் நாயகன் கொடுக்கவேண்டியதைத் தீர்க்கவேண்டியது தங்களுடைய கடமையாயிருக்கத் தங்களுடைய மைத்துனர்களது சம் பந்தம் அதில் வரவேண்டிய காரணமில்லையே! அக்கடனைத் தீர்த்தபின் தங்களுடைய மகளுக்கு விவாகம் செய்யவேண்டு மென்பதன் கருத்தென்ன? 

மதனரஞ்சனியின் தாய் – தம்பி ! என் நாயகனுடைய கடனை நானே கொடு க்கவேண்டியதானாலும், அவர் காலஞ்சென்றபின் எல்லா வரும்படியை யும் என் மைத்துனர்கள் தங்கள் வசப்படுத்தி வரவு செலவை அவர்களே பார்த்துவந்ததால், கடனுக்கும் அவர்களே பொறுப்பென்று வெளிக்குக் காணப்படுகிறபடியினாலே நான் ஏதாகிலும் ஒன்றைச் சொன்னால் கட னுக்கு முதலில் வழிபண்ணிப் பின் நீ சொல்லவேண்டியதைச் சொல்ல லாம் என்கிறார்கள். அவர்கள் கருத்தென்னவென்று ஆராய்ந்து பார்த் தால் தங்கள் தங்கள் மனைவி வழியில் சேர்ந்தோர்களுக்கு என் மகளைக் கொடுக்க வேண்டுமென்றும், அது விஷயத்தில் ஒற்றுமைப் படாமலும் இருக்கிறார்களென்றும் தெரியவருகிறது. நாமாகிலும் அவர்கள் எண் ணங் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்க்கலாமென்று நினைத்தால் ஒவ் வொருவரும் கல்வியற்ற கசடர்களாயிருக்கிறார்கள். கடவுள் எனக்குக் கொடுத்ததில் நின்றது ஒருபெண். அவளை என்மனம் இஷ்டம் கொண்ட இடத்தில் கொடுக்காமல் வேறிடத்தில் கொடுக்க விருப்பமில்லை. அவர் கள் சொல்லுமிடத்தில் கொடுக்க நான் சம்மதப்படாததால் அடிக்கடி கடன்பேச்சுவருகிறது. இவைகளை யெல்லாம் பார்த்தபின் என் நிலப்பத் திரங்களையும் வீட்டுப் பத்திரங்களையும் எடுத்துக்கொண்டு வந்தேன். பத் திரங்களைப் பார்த்தவர்களெல்லாம் கடன் கொடுக்கச் சம்மதிக்கிறார்கள். ஆனாலும், வட்டி அதிகமாகக் கேட்பதே எனக்கு வியாகூலத்தைத் தரு கின்றது. வட்டியைக் குறித்து யோசித்துக் காலம் போச்குவதில் பிரயோசனமில்லையென்று ஒப்பி நாளையதினம் பணம்கொண்டு வரும்படி ஒருவரிடம் சொல்லியனுப்பி யிருக்கிறேன். 

இரத்தினம்.- என்ன வட்டிக்கு ஒப்புக்கொண்டீர்கள்? 

மதனரஞ்சனியின் தாய் – நூற்றுக்கு ஒன்றேகாலாக ஒப்புக்கொள்ள நேரிட்டது. 

இரத்தினம்.- இதென்ன அநியாயம்! நூற்றுக்காவது ஒன்றேகாலாவது கொடுக்கிறதாவது! வேண்டாம்! வேண்டாம்! நான் சிலதினங்ளுக்கு முன் தங்களைக் கண்டபொழுது பணத்தின் விஷயம் ஒன்றும் என்னிடத் தில் ஏன் சொல்லவில்லை? 

மதனரஞ்சனியின் தாய் – நான் தங்களை முன்னறியேன்! பின்னறியேன்! அல்லாமலும், தங்களைக் கண்டவுடன் வேறு எண்ணங்கொண்டிருந்த தால் தங்களிடத்தில் சொல்ல மனம் துணியவில்லை. நான்கொண்ட எண் ணத்துக்கும் அது விரோதமாகக் காணப்பட்டது. 

இரத்தினம்.- என் விஷயத்தில் என்ன எண்ணங்கொண்டிருந்தீர்கள்?

மதனரஞ்சனியின் தாய்.- தாங்கள் யோக்கியராகவும் நல்ல குணமுள்ளவராக வும் தாங்கள் பேசிய பேச்சாலறிந்து தாங்கள் எங்கள் குலமாக இருந்தால் மதனரஞ்சனியைத் தங்களுக்குக் கொடுக்க எண்ணங் கொண்டிருந்தேன்.

இரத்தினம் – தங்களுடைய கருத்தைச் சிறிதும் ஏன் தெரிவிக்காதிருந்தீர்கள்? 

மதனரஞ்சனியின் தாய். – பசுவின் தோலைப் போர்த்துக்கொண்டு திரியும் புலியும் உண்டென்று பயந்து மற்றவர்களால் விசாரித்தறிந்தபின் பேச வேண்டும் என்றிருந்தேன். 

இரத்தினம். – என்னைக்குறித்து விசாரித்தீர்களா? 

மதனரஞ்சனியின் தாய் – விசாறித்தரியாமல் என் எண்ணத்தைத் தெரிவிக்க நியாயமில்லையே! தாங்கள் சில மாதங்களுக்கு முன் தாசிகள் வலையிற் சிக்கித் தங்களுடைய ஆஸ்தியைத் துலைத்துவிட்டதாகவும், அதனால் வனசாக்ஷியைக் கொடுக்கத் தடையாயிற்றென்பதாகவும் பின் தங்களுக் குச் சிறிய தந்தையால் ஆஸ்தி கிடைத்ததென்பதாகவும் கேள்விப்பட்டுச் சந்தோஷமடைந்தேன். 

இரத்தினம்.- எனக்கிருக்கும் ஆஸ்தியைப் பார்த்துப் பெண் கொடுக்க எண் ணங் கொள்ளாதவர்கள் என்னுடைய நடத்தை கெட்டதாக இருந்தும் சம்மதித்த காரணம் தெரியவில்லை. 

மதனரஞ்சனியின் தாய்.- தங்களுக்குக் கிடைத்த நிலத்தை விற்றுப்பணமாக் கிச் செட்டிகள் வீட்டில் வட்டிக்கு வைத்திருப்பதை அறிந்து அதனால் ஆசைகொண்டு பெண் கொடுக்க நினைக்கவில்லை. எனக்குக் கடவுள் கொடுத்திருப்பது அதிகம். பின் எதற்காக இஷ்டங் கொண்டேனென்றால் முன் தாங்கள் பணத்தைச் செலவழித்துத் துன்பப்பட்டதனாலே சூடுகண்ட பூனை அடுப்பிடை நாடாதாகையால் தாங்கள் இனிப் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கப் புத்தி கற்பித்துக் கொண்டிருப் பீர்களென்று சந்தோஷம் அடைந்திருந்தேன். 

இரத்தினம்.- நான் தங்கள் புத்திரியின்மேல் கொண்டிருந்த எண்ணப்பிரகா ரம் தங்களுக்கு மிருந்தது தெய்வசங்கற்பமே! ஆனதால் தாங்களினிமேல் என் சொல்லைக்கேட்டு நடக்கவேண்டும். தாங்கள் ஒன்றேகால் வட் டிக்குப் பணம் கடன் வாங்கவேண்டியதில்லை. நான் செட்டி வீட்டில் வைத்திருக்கும் தொகையை வாங்கித் தருகிறேன். தாங்கள் சென்று கடனைத் தீர்த்துவிடுங்கள். 

மதனரஞ்சனியின் தாய் – தம்பி! தாங்கள் இந்த விஷயத்தை விட்டு வேறே தைச் சொன்னாலும் செய்யத் தடையில்லை. கொண்டார் கொடுத்தா ரிடத்தில் கடன் வாங்குவது மிகவும் கேவலம். அல்லாமலும், பெண் ணைக் கொடுக்குமுன் பணம் வாங்கினால் உலகம் அதிக கேவலமாகப் பேசும். வட்டி அதிகமானாலும் தோஷமில்லை. என் நிலப்பத்திரங் களை வைத்துக்கொண்டு கடன் கொடுக்க ஒருவரும் பின் வாங்கமாட் டார்கள். அந்தப் பத்திரங்களைக் காட்டுகிறேன் பாருங்கள். (என்று வீட்டுக்குள் சென்று பெட்டியைத்திறந்து ஒரு பெரிய காகித உறையை க்கொண்டு வந்து கொடுத்தாள்.) 

இரத்தினம் தான் கேள்விப்பட்டது உண்மையாவென்று உறையிலிருந்த பத்திரங்களை யெடுத்துப் பார்த்து உள்ளுக்குள் பூரித்து அனேக வரு டங்களுக்கு முன் ஏற்பட்ட பத்திரங்களாக இருப்பதைக் கண்டு, அம்மா! இப்பத்திரங்களை ஈடாக வைத்து ஒன்றேகால் ரூபாய் வட்டி கொடுப்பது கூடாது; என்னிடத்திலிருக்கும் தொகைக்கு அரை ரூபாய் வட்டியும் கிடைக்கவில்லை. ஆனதால், தாங்கள் என்னுடைய பணத்தை அந்த அரை ரூபாய் வட்டிக்காகவாவது பெற்றுக்கொள்ளக் கூடாதாவென்று வருந்திக்கேட்டான். 

மதனரஞ்சனியின் தாய் – தம்பி! நான் யாவும் செட்டிகளிடத்தில் தீர்மானம் செய்து விட்டேன். நாளையதினம் காலையில் நான் கேட்ட முப்பதினாயிரத்தையுங் கொண்டுவருவார்களே நான் என்ன செய்கிறது! 

இரத்தினம் – பணம் கொண்டு வந்தால் வேண்டாமென்று சொல்லிவிடலாம். தாங்கள் சொல்லப் பின்வாங்கினால் நான் சொல்லிவிடுகிறேன். 

மதனரஞ்சனியின் தாய் – தம்பி! தாங்கள் இவ்வளவு வற்புறுத்தும் பொழுது நான் இன்னும் தடைசொல்வது நியாயமல்ல. ஆயினும், தாங்கள் இங் தப் பத்திரங்களை ஈடாக வைத்துக் கொள்வதோடு முக்கால் ரூபாய் வட்டிக்கு ஒப்புக்கொள்ளவும் வேண்டும். இந்த ஏற்பாடு தங்களுக்கு இஷ்ட மாயிருந்தால் நான் தங்களிடத்தில் கடன் வாங்கிக் கொள்ளுகிறேன்.

இரத்தினம். — தங்களுடைய இஷ்டம் அவ்விதமானால் அதுபோலவே செய்ய லாம். நான் நாளை மாலைக்குள் பணத்தோடு வருகிறேன். தாங்கள் வேறு பத்திர முதலானதும் எழுதவேண்டிய வேலை வைத்துக்கொள்ள வேண்டாம். இந்தப் பத்திரங்கள் ஈடாக இருப்பது போதுமானது.

மதனரஞ்சனியின் தாய் – தம்பி! மனிதருடைய காயம் நிச்சயமில்லை. ஈடு காட்டிப் பத்திரம் எழுதாமலே இந்தப் பத்திரங்கள் தங்களிடத்தில் இரு ப்பதனால் பிரயோசனமில்லை. தாங்கள் சரியான முத்திரைத்தாள் வாங்கி வரவேண்டும். என் இஷ்டத்துக்கு விரோதம் சொல்லவேண்டாம்.

என்று இரத்தினத்துக்கும் மாணிக்கத்துக்கும் சாப்பாடு முதலானதும் செய்து உபசரித்து அனுப்பினாள். இரத்தினமும் மாணிக்கமும் வீட்டை விட்டு நீங்கித் தங்கள் ஊருக்குப் போகும்பொழுது மாணிக் கம் இரத்தினத்தைப்பார்த்து, உனக்கு நல்லகாலம் வந்துவிட்டதென் பதற்குச் சந்தேகமில்லை. மதனரஞ்சனியின் தாய் கிஞ்சித்தும் கள்ளக் கருத்தில்லாமல் சொல்வதைப்பார்க்க எனக்கதிக சந்தோஷமாக இருக்கிறது. நிலப்பத்திரங்களை நீ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நானும் பார்த்துக்கொண்டு நிலக்கிரயங்களை கூட்டிக்கொண் டிருந்தேன். தொகை இரண்டு இலக்ஷத்திற்கதிகமாக இருந்தது.

இரத்தினம்.-ஆம்! அவைகள் அனேக வருடங்களுக்குமுன் ஏற்பட்டதாகக் காணப்படுகிறதால் தற்காலத்து விலை இன்னும் அதிகமாகவே இருக்க வேண்டும். பத்திரங்களைப் பார்த்தவுடன் இவைகள் நம்முடைய கையை விட்டுப் போகவிடக்கூடாதென்று யோசித்து நான் பணங்கொடுக்கச் சம்மதித்தேன். 

மாணிக்கம் – உன் கருத்தைக் கண்டுகொண்டேன். தொகை எவ்விதம் கொடுக்க யோசித்திருக்கிறாய்? 

இரத்தினம் – நான் சில்லரையாகத் தாசிகளுக்குக் கொடுக்கவேண்டிய கட னைத்தீர்த்து முப்பதினாயிரம் செட்டிகளிடத்தில் வைத்திருக்கிறேன். எனக்கு இன்னும் ஐயாயிரம்வேண்டும். அதைச் சம்பாதிக்கிறது கஷ்டமாக இருக்கிறது. 

மாணிக்கம்.- ஐயாயிரம் எதற்கு? அவர்களுக்கு வேண்டியது முப்பதினாயிரந்தானே. 

இரத்தினம் – அவர்களுக்கு வேண்டியது முப்பதினாயிரமே! நிலம் நம்மை விட்டுப் போகாமலிருக்க முப்பதினாயிரம் கொடுத்துக் கைவசப்படுத்திக் கொள்ளுகிறோம். மதனரஞ்சனி என்னைவிட்டுப் போகாமலிருக்க அவளுக்கோர் ஐயாயிரம் ரூபாய்க்காவது நகைகளை வாங்கிப் போட்டுவிட் டால் அவளை வேறொருவருக்குக் கொடுக்க யோசிக்கமாட்டார்கள். நகைகள் வாங்கவே ஐயாயிரம் வேண்டுமென்று நினைக்கிறேன்.

மாணிக்கம்.- உன்னுடைய உதவியால் அடைமானத்திலிருந்து திருப்பிய என்னுடைய நிலப்பத்திரங்களைவைத்து ஐயாயிரம் கடன்வாங்க முடி யுமா? என்னுடைய நிலமெல்லாம் இரண்டாயிரத்துக்கு அதிகம் பெற மாட்டா. அந்தப் பத்திரங்களைக் கொடுக்கிறேன், உன்னிஷ்டம்போல அவைகளை உபயோகித்துக் கொள்ளலாம். 

இரத்தினம்.–மாணிக்கம்! நீ எப்பொழுது என் விருப்பத்தின் பிரகாரம் நடக்கிறாய். உன்னைக் கைசோரவிடேன். உன்னுடைய நிலப்பத்திரங்க ளோடு என்னுடைய வீட்டுப்பத்திரத்யும் ஈடாகவைத்து உனக்கு நிலம் வாங்கப் பணம் வேண்டுமென்றுசொல்லி, நானும் உனக்குச்சகாய மாகக் கையொப்பம் வைக்கச் சம்மதப்பட்டிருக்கிறேனென்று நீ கடன் கேட்டால் செட்டிகள் கொடுக்கத் தடைசொல்லார்கள். இரண்டொரு மாதத்தில் மீட்டுக்கொள்ளலாம். 

அது நல்லயோசனையென்று மாணிக்கமும் இரத்தினமும் வீடுசேர்ந்து தாங்கள் நினைத்தவிதம் யாவும் முடித்து அடுத்தநாள் சாலையில் இரத்தின மும் மாணிக்கமும் மதனரஞ்சனியின் தாயை அவள்வீட்டில் கண்டு, ரூபாய் வந்துவிட்டது, தங்களுக்கதிக தொந்தரவுகொடுக்காமல் எல்லாம் மோராக்களாகவே கொண்டுவந்தேனென்று இரத்தினம் இரண்டுபைக் ளைக் கொண்டுவந்து எதிரில் வைத்தான். 

மதனரஞ்சனியின் தாய் – தம்பி ? பத்திரத்தை எழுதிமுடிக்காமால் பணத்தை நான் பெற்றுக்கொள்ளுவது நியாயமல்ல! ஆயினும், பணத்தை வெளி யில் வைத்திருப்பது நன்மையல்ல. (என்று கூடத்தின் மூலையிலே மேஜையின் மேலிருந்த பெட்டியில் மோராக்களை வைத்து அதிலிருந்த பத்திரங்களை உறையோடு கொண்டுவந்து இரத்தினத்திடம் கொடுத்து) இதிலிருக்கிற பத்திரங்களை ஈடாகக்காட்டிப் பத்திரத்தை எழுதுங்க ளென்றாள். 

இரத்தினம் – தங்களை மாமியென்றழைக்கப் பிரியப்படுகிறேன். தட்டு ஒன்று கொண்டுவர உத்தரவுசெய்யுங்கள் மாமி! 

மதனரஞ்சனியின் தாய் – தம்பி ! தாங்கள் என்னை மாமி என்றவுடன் என் தேகம் பூரித்து விட்டது. தட்டு எதற்கு? என்று சொல்லிக் கொண் டே ஒரு வெள்ளித்தாம்பாளத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள். ரத்தினம் தாம்பாளத்தை வாங்கி அருகில் வைத்துக்கொண்டவுடன் மாணிக்கம் தன்னிடத்திலிருந்த பெட்டியைத் திறந்துவைரக்கம்மல், மோராமாலை, பொன் கெட்டிக்காப்பு, கல்லிழைத்த வங்கி, ஒட்டியா ணம், வைரமோதிரம், வெள்ளிச்சுருள்கொலுசு,தண்டை, பாதசரம், வைகளையெல்லாம் எடுத்து வைத்தான். 

மதனரஞ்சனியின் தாய் – தம்பி இவைகள் எதற்கு? 

இரத்தினம் – மாமி! என்னுடைய எண்ணத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். இந்த நகைகளைத் தங்கள் புத்திரிக்காகக் கொண்டுவந்தேன். இவை களை யெடுத்துக் கொடுத்து அணிந்துகொள்ளச் செய்ய வேண்டும். மதனரஞ்சனியின் தாய் – தம்பி! தங்கள் கருத்தை நன்றாய் அறிந்து கொண் டேன். நான் மதனரஞ்சனியை வேறு யாருக்காவது கொடுத்து விடு வேனென்று எண்ணங்கொண்டதால் நகைகளைப் போட்டுச் சுவாதீனப் படுத்திக்கொள்ள யோசித்தீர்கள். தாங்கள் மதனரஞ்சனி விஷயத்தில் ஐயப்படவேண்டாம். நான் சொன்ன சொல் தவறேன். மதனரஞ்ச னிக்கு இரண்டு ஜதை நகைகளிருக்கின்றன. நான் அவளை விவாகஞ் செய்து கொடுக்கும்பொழுது எல்லா நகைகளையும் போட்டுக் கன்னிகா தானமாகச் கொடுக்கவேண்டுமென்கிற விருப்பமிருப்பதால், தாங்கள் கொண்டுவந்த நகைகளை ஒப்புக்கொள்ளுவது என் எண்ணத்திற்கு விரோதமாகிறது. 

இரத்தினம் – மாமி! தங்களுடைய புத்திரியைக் கன்னிகாதானமாகக் கொடு க்க யோசித்தால் கையில் மடியில் இல்லாதவன் ஒப்புக்கொள்ளுவானே யன்றி என்னைப்போன்ற பிறவிச்செல்வந்தன் ஒப்புக்கொள்ளுவானா? (என்று நகைத்தான்.) 

மதனரஞ்சனியின் தாய் – தம்பி ! தங்களுக்கிஷ்டம் வேறு விதம் இருப்பதால் அதற்குக் கெடுதி வராமலும் என் எண்ணம் முடிவு பெறவும் செய்து கொள்ள அனேக வழிகளிருப்பதனாலே தங்களுடைய இஷ்டம்போல் இந்த நகைகளை என் மகளுக்குக் சொடுத்துவீடுகிறேன். (என்று தாம் பாளத்தை எடுத்துக்கொண்டு போய்த் தன் மகளிடம் கொடுத்து அணி ந்துகொள்ளச்சொல்லிவந்தாள்.) 

இரத்தினம் வாங்கிவந்த முத்திரைக்கடுதாசியில் எழுதவேண்டியதை எழுதி மதனரஞ்சனியின் தாயிடம் வாசித்துக் காட்டியதில் அவள் சந் தோஷப்பட்டுக் கையொப்பம் வைத்ததோடு தன் மகளையும் சாக்ஷிக் கையொப்பம் வைக்கச்செய்து பத்திரத்தை இரத்தினத்திடம் கொடுத்தாள். 

இரத்தினம் – மாமி ! இந்தப் பத்திரங்களையெல்லாம் நான் கைப்பற்றியது தங் களுடைய இஷ்டத்தாலன்றி என்னுடைய வேண்டுகோளல்லவென்று எல்லாப் பத்திரங்களையும் உறையிற் போட்டு வைத்துக்கொண்டான் 

மதனரஞ்சனியின் தாய் – தம்பி ! பணத்தால் எல்லாச் சந்தோஷமும் எல்லா வியசனமும் உண்டாகிறதால் நாம் அது விஷயத்தில் எச்சரிக்கையாக க இருக்கவேண்டும். நான் தங்களைக் கேட்டுக்கொள்வதை மட்டும் செய்ய வேண்டும். நான் நிலசாஸனங்களை ஈடுவைத்துக் கடன் வாங்கியது நான் திரும்பி வருமளவும் இரகசியமாக இருக்கவேண்டும். இப்பத்திரங் களை ஒருவருக்கும் காட்டவேண்டாம். நான் வந்தபின் உலகமுற்றி லும் அறிந்தாலும் தோஷமில்லை. என் மைத்துனர்களுக்கு இந்த சமா சாரம் எட்டவிடாமலிருக்க வேண்டுமென்பதே என்கருத்து.

இரத்தினம் – மாமி! தங்களுடைய கருத்து அதுவானால் இந்த உறையில் எல்லாப் பத்திரங்களும் இப்பொழுது எழுதிய பத்திரமும் இருப்பதால், இதை முத்திரை வைத்துக் கொடுக்கும்பக்ஷத்திலே தாங்கள் வந்தபின் அந்த முத்திரையோடு இருப்பதைக் காட்டித் தங்களுடைய எண்ணம் பூர்த்தியானதைமெய்ப்பிப்பேன். 

மதனரஞ்சனியின் தாய் நகைத்து அது நல்லயோசனைதானென்று சென்று கூடத்து மூலையில் போட்டிருந்த மேஜையின் மேலிருந்த பெட்டியைத் திறந்து அரக்கையும் முத்திரையையும் எடுத்துவந்து விளக்கொன்று கொண்டுவரத் தன் மகளுக்கு உத்தரவளித்தாள். மதனரஞ்சனி விளக் கொன்றுகொண்டுவந்து, எங்குவைக்கச் சொல்லுகிறீர்கள்? காற்று அதிகமாக இருக்கிறதே ! என்றாள். இரத்தினம் விளக்கு இங்கு நிற் காது, மேஜைக்கருகில் கொண்டுபோவது உத்தமம் என்றான். மத னரஞ்சனியின் தாய் உறையை வாங்கிக்கொண்டு மேஜையின்மேலிரு ந்த பெட்டியை மூடி அதன்மேல் உறையைவைத்து அரக்கையுருக்கி சில இடங்களில் முத்திரைவைத்துப் போதாதாவென்று தன்மகளைக் கேட்டாள். 

மதனரஞ்சனி.-உறைவாயில் முத்திரைவைக்காமல் எங்கெங்கோ முத்திரை வைத்துவிட்டீர்களே! 

மதனரஞ்சனியின் தாய் – ஆம் அம்மா! மருமகப்பிள்ளை என்னைப்பார்த்து ஏளனம் செய்யாமலிருக்கச் செய்துவிட்டாய்! அரக்கு போதவில்லையே! உன்னிடத்தில் அரக்கு இருக்கிறதா? 

மதனரஞ்சனி – பெட்டியில் அனேகதுண்டுகள் இருந்தனவே! 

மதனரஞ்சனியின் தாய் உறையைக் கையிலெடுத்துக்கொண்டு பெட்டியைத் திறந்து அரக்கையெடுத்தாள். கையிலிருந்த உறை பெட்டியில் தவறி விழ, அதை எடுத்துப் பெட்டியை மூடி முத்திரைவைத்து இரத்தி னத்திடம் கொடுத்து இருவரையும் சாப்பிடச்செய்து உபசரித்தாள்.

இரத்தினம் – மாமி! எங்களுக்கு உத்தரவுகொடுக்கவேண்டும். தாங்கள் எப்பொழுது ஊருக்குப்போக உத்தேசம்! 

மதனரஞ்சனியின் தாய் – தம்பி!நான் நாளையதினம் பிரயாணமாக யோசி த்திருக்கிறேன். தங்களிடத்தில் தனித்துப்பேசவேண்டும் (என்று ஒரு மூலையில் அழைத்துப்போய்) தம்பி! நான் மதனரஞ்சனியை ஒரு கிழவி யோடு விட்டுப்போகிறேன். நான் வருமளவும் தாங்கள் இரவில் இங் குவந்து படுத்துக்கொள்ளவேண்டும். பகலில் வந்தால் பெயர்கெட்டுப் போகுமென்று நினைக்கிறேன். தங்களை மதனரஞ்சனிக்குத் துணையாக வந்து படுத்துக்கொள்ளுங்களென்று கேட்டுக்கொள்வதே தங்களுக்கு என் விஷயத்தில் நம்பிக்கையுண்டாகுமென்றும், வேறொரு ஆண்பிள்ளை துணை தேடுவதைவிட என் மகளை விவாகஞ் செய்துகொள்ளப்போகிற வரைத் துணை வைத்துப்போவதே உத்தமமென்றும் தங்களிடத்தில் சொன்னேன். 

இரத்தினம் – மாமி! தாங்கள் என்விஷத்தில் வைத்திருக்கும் அன்பு அதிக மென்று நன்றாய் விளங்குகிறது. என்னுடைய நன்றியறிதலை எவ்வி தம் காட்டப்போகிறேன்! 

மதனரஞ்சனியின் தாய் – எங்கள் விஷயத்தில் தாங்கள் செய்தது அளவுக்கு மிஞ்சியது வேறொன்றும் எங்களுக்குச் செய்யவேண்டி அவசியமில்லை.

இரத்தினம். – தாங்கள் எத்தனை நாளையில் திரும்பி விடுவீர்கள்?

மதனரஞ்சனியின் தாய்.-இரண்டு வாரத்தில் வந்துவிடலாமென்ற அபிப்பிராயத்தோடுபோகிறேன். எவ்விதமாகிறதோ தெரியவில்லை. 

என்று இருவருக்கும் விடைகொடுத்து அனுப்பினாள். 

இரத்தினம் உறையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து, மாணிக்கம்! நீ என்ன வாய்திறக்காமலிருந்தாய்? 

மாணிக்கம் – நான் மனதில் நினைப்பதை நீ சொல்லிவந்ததால் எனக்குப்பேச இடங்கொடுக்கவில்லை. 

இரத்தினம்.- என்னிடத்திலிருந்ததையும் உன்னிடத்தில் இருந்ததையுங்கொ டுத்து இந்தப் பத்திரங்கள் வாங்கிவந்தது உனக்குத் திருப்தியா? இல்லையா? 

மாணிக்கம் – எனக்கெல்லா விஷயத்திலும் திருப்தியே? உனக்கு நற்காலம் வந்தால் எனக்குச் சந்தோஷமே! 

இரத்தினம்.- என் சிறியதகப்பனார் எனக்கு வைத்துப்போன ஆஸ்தியில் அதிகம் கொடுக்காமற்போனாலும், மதனரஞ்சனியால் கிடைக்கப்போகிற ஆஸ்தியில் உன் ஆயுள்காலமெல்லாம் சௌக்கியத்தோடிருக்க உனக்கு வேண்டியதைக்கொடுப்பேன். 

மாணிக்கம்.- உன்னிஷ்டம்போல் செய்யலாம். பத்திரங்களை எங்குகொண்டு வைக்கப்போகிறாய்? 

இரத்தினம் – வீட்டிலே இருப்புப் பெட்டியில் கொண்டுபோய் வைக்க வேண்டும். இவ்வுறைக்குள் நம்மிருவருடைய உயிருமிருக்கிறதல்லவா? (என்று நகைத்தான்.) 

மாணிக்கம்.- உன் மாமியார் உன்னைத்தனித்து அழைத்துப்போய் பேசினார்களே அது நான் அறியக்கூடாத இரகசியமா? 

இரத்தினம் – நீ அறியக்கூடாத இரகசியம் ஒன்றுமில்லை. என் மாமியார் திரும்பி வருமளவும், என்னைத் தன்மகளுக்கு இரவில் துணையாகப் படு த்துக்கொள்ளச் சொன்னார்கள். 

மாணிக்கம்.- உன் மாமியார் உன்னை எல்லா விஷயத்திலும் நம்பியிருக்கிறா ர்கள். நீ மதனரஞ்சனியோடு வார்த்தையாடவும் கூடுமென்று நினைக்கி றேன். (என்று நகைத்தான்) 

இரத்தினமும் மாணிக்கமும் தங்கள் தங்கள் வீடு சேர்ந்தபின், இரத்தினம் அன்றிரவை அதிக கஷ்டத்தோடு கழித்து மறுநாள் தனித்துச் சென்று இரவு எட்டுமணிக்கு மதனரஞ்சனியின் வீட்டுக் சதவை மெதுவாகத் தட்டினான். உடனே கதவு திறக்கப்பட்டது. இரத்தி னம் வீட்டுக்குள் சென்று, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து அருகில் நின்ற கிழவியைப்பார்த்து, அம்மா! எனக்குப் படுக்கை எங்கு போட்டிருக்கிறாய்? என்று கேட்டான். 

கிழவி – தம்பி ! இந்த அறையில் போட்டிருக்கிறேன். (என்று ஒரு அறையைக்காட்டினாள்.) 

இரத்தினம் எழுந்து அவ்வறைக்குள் சென்று அங்கு இருந்த கட்டிலின் மேல் போய் உட்கார்ந்திருந்தான். உடனே கிழவி வேறொரு அறை க்குள் சென்று திரும்பி இரத்தினத்திடம் வந்து, தம்பி! நான் சிறிது நேரம் என் வீட்டுக்குப் போய்வரவேண்டும். கதவை மூடிக்கொள் நான் அங்கு உத்தரவு வாங்கிக்கொண்டேனென்று வெளியிற் சென் றாள். நம்மை மதனரஞ்சனியோடு தனித்திருக்கவிட்டுக் கிழவி போனதன் காரணமென்ன? மதனரஞ்சனி வேண்டுமென்றே அவளை அனுப்பியிருக்க வேண்டும், நம்மை முதல்நாள் கண்டபொழுது நெடுநேரம் வாயிற்படியில் நின்று நம்மைப்பார்த்திருந்தாள்.அத னால் நம்மேல் அதிக ஆசை கொண்டிருக்கிறாளென்று அன்று கண்டு கொண்டோம். இப்பொழுதும் தன் தாயாரில்லாததால் நம்மோடு குலாவி விளையாட இடையூறாயிருந்த கிழவியை அனுப்பிவிட்டாள். கிழவியால் நம்வரவை அறிந்தும் இன்னும் வெளிவராமலிருக்க வேண் டிய காரணமென்ன? புதுப்பெண் ஆனதால் தன்னை விவாகஞ் செய்து கொள்ளப்போகும் புருடனோடு வார்த்தையாட வெட்கப்பட்டிருக்கிறாள் போல் காணப்படுகிறது. நாம் சென்று அவளோடு வார் த்தையாடுவது உத்தமமென்று எழுந்துபோய் வெளிக்கதவை மூடித் தாள் போட்டு மதனரஞ்சனியின் அறைக்குள் போக யோசித்தவன் போகாமல் கட்டிலின்மேல் மீண்டும் வந்து உட்கார்ந்து, நாம் ஆத்திர த்தோடு ஒரு காரியமும் செய்யக்கூடாது. ஒரு வேளை மதனரஞ் சனிக்கு அவ்வித எண்ணமில்லாமல் கிணற்றுநீரை வெள்ளங்கொ ண்டு போகாதென்று பொறுத்திருக்க நினைத்துக் கிழவியை வேறு காரணத்தால் அவளுடைய வீட்டுக்கனுப்பி யிருந்தால் என்ன செய்கி றது? அவ்வித எண்ணத்தோடு இருப்பவள் படுத்திருக்கும் அறைக் குள் போனால் அவள் கோபித்துத் தன் தாய் வந்தவுடன் நடந்தது இவ்விதமென்றால், நம்மை அவள் தாய் கேவலமாகநினைப்பாளல்லவா? என்று பலவற்றை யோசித்துப்பின் நாம் காலதாமதம் செய்துகொ ண்டிருந்தால் தன் வீட்டுக்குப் போன கிழவி வந்துவிடும்பட்சத்திலே பின் மதனரஞ்சனியைக்கண்டு வார்த்தையாட முடியாமற் போய் விடுமே ! நாம் மதனரஞ்சனியின் க்ஷேமத்தை விசாரிப்பதுபோல் போய்ப் பார்க்கலாமென்று எழுந்து மதனரஞ்சனி சயனித்திருக்கும் அறைக்குள் சென்று ஆள்அரவங் காட்டினான். ஒன்றும் பதில் கிடை க்காமலிருப்பதைக்கண்டு கட்டிலை மூடியிருந்த கொசுத்தாங்கியை எடுக்காமல், மதனரஞ்சனி ! என்று கூப்பிட்டான். 

அதற்கு ஊம் என்ற பதில் கிடைத்தவுடன், என்ன! இதற்குள்ளாக வா தூங்கிவிட்டாயென்று கொசுத்தாங்கியைத் தூக்கிப்பார்த்தான். கட்டிலில் சேலையால் நிறைய மூடிக்கொண்டு படுத்திருப்பதைவிளக்கு வெளிச்சத்தாற் கண்டு, என்கண்மணி! என்னைப்பார்க்க வெட்கப்பட் டா முகத்தை மூடிக்கொண்டிருக்கிறாய்? நீ கிழவியை அனுப்பிவிட்ட காரணத்தை அறிந்தேன்.நீ என்மேல் அதிக ஆசைகொண்டிருக் கிறா யென்று கண்டுகொண்டேன். என்மேல் உனக்கு அதிக ஆசை இல்லாமற்போனால் என்னைக்கண்ட முதல்நாள் வாயிற்படியில் நின்று நெடுநேரம் பார்த்துக்கொண்டிருப்பாயா? நானும் உன்மேல் ஆசை கொண்டு இராமசாமிமுதலியார் வீட்டைத்தெரிந்திருந்தும் தெரியாத வன்போல் மாமியைக் கேட்கவந்தேன். நாம் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் ஆசைகொண்டிருப்பதால் இன்னும் வெட்கத்தோடிருக்க வேண்டிய காரணமில்லை. எழுந்து என்னோடுவார்த்தையாடுவாய். என் இன்பரசமே! உன்னைக் கூடி அனுபவிக்க இன்னும் எத்தனை நாள் செல்லுமோ என்ற ஏக்கங்கொண்டிருந்தேன்! கிழவிவருமுன் உன் சுந்தரமான முகத்தைக்காட்டி என்னோடு வார்த்தையாடி என் னைச்சந்தோஷப்படுத்துவாயென்று மெதுவாகச் சரீரத்தைத்தடவிக் கொடுத்து, இதென்ன? நான் உன்மேல் கைவைத்தவுடன் மற்றப் பக்கம் திரும்பிப்படுத்துக்கொண்டாய்! மாமி உன்னைவிட்டுப்போன தால் துக்கத்தோடிருக்கிறாயா! மாமிச்சாகத் துச்சப்படவேண்டாம். இரண்டு வாரத்தில் வந்துவிடுகிறேன் என்றவர்கள் அதற்கு முன் னாகவே வந்துவிடுவார்கள்.நீ எழுந்து என்னோடு பேசினால் உன் துக்கமெல்லாம் நீங்கிவிடும். நீ சாப்பிட்டாயா? என்ன சறிவகை கள் செய்தாய்? நான்சேட்பதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இரு க்கிறாயே! நான் வாங்கிச்சொடுத்த பாதசரம் உன் காலுக்குச்சரியாக இருக்கிறதா? காலைக்காட்டு பார்க்கலாம் என்று குனிந்து காலைத் தடவினான். மூடியிருந்த காலால் அவன் மார்பில் உதைவிழ, அதை ப்பெற்றுக்கொண்டு, பெண்மணி! என்னை உதைக்கவா இஷ்டங் கொண்டாய்? என்று கட்டியணைத்துப் பிடித்து, பெண்ணே ! உன் தேகம் கருங்கல்போலிருக்கிறதென்றவுடன், இரத்தினத்தின் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. இரத்தினம் திடுக்கிட்டு, மத னரஞ்சனி ! உன் கையா என் கன்னத்தில் பட்டது? என்று சொல்லி முடியுமுன் மேற்போர்வையை எடுத்தெறிந்து எழுந்துநின்று இரத்தி னத்தின் முகத்தில் குத்தி, அடா துன்மார்க்கா! மதனரஞ்சனியையா தேடிவந்தாய்? என்று கன்னத்திலும் அறைந்து, நான்தான் மதனரஞ் சனி; என்னைப்பார் – என்று நிற்கிறவனை இரத்தினம் பார்த்து, தரும லிங்கமா என்னை அடித்தது? என்றான். ஆம்! தருமலிங்கமே உன்னி டத்தில் பழி வாங்க இங்கு வந்திருக்கிறேனென்று எட்டி உதைத் தான். அவ்வுதையால் இரத்தினம் கீழே விழுந்தெழுந்து, தருமலிங் கம்! என்னை ஏன் அடிக்கிறாய்? உனக்கென்ன கெடுதியைச் செய் தேன்? என்று கேட்டான். 

தருமலிங்கம்.- நீ செய்த கெடுதி உனக்குத் தெரியாமலா இருக்கிறது? என் தங்கை கனகாம்புஜத்தைக் கற்பழித்ததும், அதனால் என் தாயார் இறக் கும்படி செய்ததுமன்றி என்னையும் துக்கத்திலழுத்திய துன்மார்க்கா! உன்னை உயிரோடு விடுவது நியாயமல்லாமற்போனாலும் நீ அடைந்த தண்டனையே போதுமானதென்று உன்னைவிட்டுவிட்டேன். (என்ப தாகப் பிடர்பிடித்துத்தள்ளி வீட்டுக்கு வெளியில் விட்டு முதுகில் உதை த்துப் போவென்றான்.) 

இரத்தினம் அடிபட்டுத் துன்பத்தோடு, நாம் காண்பது கனவா ! நனவா! நாம் மதனரஞ்சனி இருக்கிற வீடென்று வேறொரு வீட்டுக்குள் போ னோமோ? நாம் அவள் வீட்டை நன்றாயறிந்திருக்கிறோமே! அவள் வீட்டுக்குப் போயிருந்தபொழுது பார்த்த சாமான்களெல்லாம் இருக்கின் றனவே! மதனரஞ்சனி தன் தாயைவிட்டுப் பிரிந்திருக்கச் சம்மதங் கொள்ளாததால் அவளை அவள் தாய் அழைத்துப் போயிருக்கவேண்டும். சாவகாச மில்லாததாலும் நாம் இருக்குமிடம் தெரியாததாலும் நமக்குத் தெரிவிக்காமல், தருமலிங்கம் அவர்களை அறிந்தவனாதலால் நமக்குச் சங் சதிதெரிவிக்கும்படி அவனிடத்தில் சொல்லியிருக்கவேண்டும்; மைக் கண்டவுடன் தன் தங்கையின் ஞாபகம் வந்து நம்மை யடித்துத் துரத்திய கோபத்தால் அவர்கள் சொல்லிட்போனதை நம்மிடத்தில் சொல்லாமலிருந்தான்போல் காணப்படுகிறதென்று நினைத்து இரவில் தனித்துச் சொல்லுகிறவன், ஒருவேளை மதனரஞ்சனியின் தாய் ஏமாற் றிப்போயிருப்பாளோவென்று எண்ணி, நாம் என்ன அவர்களைக் சேவல மாக நினைக்கிறோம், நாம் கொடுத்த பணத்துக்கதிகமாக நிலப்பத்திரங் களை நம்மிடத்தில் வைத்துக்கொண்டும் அவர்கள்மேல் வீண் குற்றம் சாட்டுகிறோமென்று தன் வீடு சேர்ந்து இருப்புப்பெட்டியைத் திறந்து உறையை எடுத்துப்பார்த்து வைத்து மூடிச் சாவியைப் பத்திரமாக வைத்துக்கொண்டு படுத்து நெடுநேரம் நித்திரை கொள்ளாமல், தருமலிங்கத்தால் பட்ட அடியினாலே தேகமெல்லாம் நோகப் பின் அயர்ந்து நித்திரைபோனான். மறுநாள் காலையில் மாணிக்கம் வந்து, இரவில் நடந் ததை எண்ணி உட்கார்ந்திருக்கிறவனைப் பார்த்து, இரத்தினம்! இராத் திரி பொம்பியம்மாள் காவலுக்கு மதுரைவீரன் போனதுபோல் போய் வந்தாயா? என்று நகைத்தான். இரத்தினம்.–மாணிக்கம் ! இராத்திரி போயிருந்தேனாயினும் மதனரஞ்சனி யையும் அவள் தாய் அழைத்துப்போயிருந்ததால் நான் பெருங்கஷ்டப் பட்டுவந்தேன். 

மாணிக்கம்.- என்ன சொன்னாய்! மதனரஞ்சனியை அழைத்துக்கொண்டு போய் விட்டாளா? உன்னிடம் ஒன்றும் சொல்லாமலா ! மதனரஞ்சனி யை அவள் தாய் அழைத்துக்கொண்டு போனாளென்று யார் உனக்குச் சொன்னது? 

இரத்தினம் தான் மதனரஞ்சனி வீட்டுக்குப் போனதையும் அவ்விடத்தில் நடந்த யாவற்றையும் சொன்னவுடன் மாணிக்கம் இரத்தினத்தைப் பார்த்து, எனக்கு முற்றிலும் சந்தேகமாக இருக்கிறது; உன்னிடத்தி லிருக்கும் உறையை எடு பார்க்கலாம் என்றான். 

இரத்தினம் – மாணிக்கம் ! நீ ஒரு பைத்தியக்காரன் ! இரண்டு இலக்ஷத்திற்கு த்தில் அதிகம் பெறக்கூடிய பத்திரங்களை உள்ளடக்கிய உறை என்னிட பத்திரமாக இருக்கிறது. அது விஷயத்தில் நமக்குப் பயமில்லை. உனக் கிஷ்டமானால் பார். (என்று உறையைக் கொண்டுவந்து கொடுத்தான்.)

மாணிக்கம்.- இரத்தினம் ! இந்த உறையைப் பிரித்துப்பார்த்தாலென்ன? எனக்கேதோ சந்தேகம் உண்டாயிருக்கிறது. 

இரத்தினம்.- என்ன சந்தேகம்? உறையின் முத்திரையை உடைக்கவேண் டாமென்று என் மாமி சொல்லியிருக்க, அவ்வார்த்தையைத் தட்டி நாம் உடைக்கலாமா? அவர்கள் வந்தபின் என்ன சொல்லுவார்கள்! 

மாணிக்கம்.- இரத்தினம்! நம்முடைய அதிர்ஷ்டமும் துன்பமும் இதில் அடங்கியிருப்பதால் இதைப் பிரித்துப்பார்க்காமலிருக்க என் மனம் சம் திக்கவில்லை.உன் மாமி வந்தால் அவர்களுக்குச் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.(என்று உறையைப் பிரித்தான்.) 

இரத்தினம்.- ஐயையோ! நான் என்ன செய்யப்போகிறேன். (என்று நிலத் தில் சாய்ந்தவனெழுந்து) மாணிக்கம ! உன்னையும் கெடுத்தேனே! நானும் கெட்டேனே ! எல்லாம் எழுதாத காகிதங்களாக இருக்கின்றனவே! பத்திரங்களொன்றுமில்லையே! இது என்ன மாயம்?(என்றழுதான்.)

மாணிக்கம் உறையிலிருந்த வெறுங்காகிதங்களையெல்லாம் பார்க்கும்பொ ழுது எழுதியிருந்த காகிதம் ஒன்றிருக்கக்கண்டு அதை எடுத்து வாசித் தான். அதில் அடியில் வருமாறு எழுதியிருந்தது:-

அடா துன்மார்க்கா! 

நீ உலகிலுள்ள கற்புடைய பெண்களை வஞ்சிக்கவும், வஞ்சித்தும் திரியும் பாதகன். உன்னிடத்தில் பொருளிருந்தால் இன்னும் அனேக கெடுதி யைச் செய்வாய் என்றெண்ணி உன் மனம் மைசூரிலிருந்த தாசிகளி டத்தில் செல்ல ஓர் அன்னியனிடத்தில் என் முகத்தை உனக்குக் காட் டாமல் அவர்களைக்குறித்து மேன்மையாகப்பேசியும், நீ சென்ற இரா மசாமி முதலியாரிடம் கடன் கேட்டும் உன்னை ஏமாற்றி உன்னிடம் இருந்ததையும் உன் சினேகன் மாணிக்கத்தினிடம் இருந்ததையும் எல் லாம் கொடுக்கும்படி செய்தேன். இரவலாக வாங்கிவந்த பத்திரங்கள் சொந்தக்காரரைப் போய்ச் சேர்ந்தன.நீ கனகாம்புஜத்தின் விஷயத் தில் செய்ததே உன்னை இந்த முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது. நீ உலகிலிருக்க வேண்டிய நாளை எவ்விதம் கழிக்கப்போகிறாய்! இர ந்துண்டே காலம் கழிக்கவேண்டும். 

மாணிக்கம்.- அடா பாவி ! உன்னால் எனக்கிருந்த பொருளும் போனதே. அந்தத் தேவடியாள் முத்திரை வைக்கும்பொழுது உறை பெட்டியில் தவறி விழுந்தது போல் போட்டு வேறொன்றை எடுத்து முத்திரை வை துக்கொடுத்து விட்டாளே! இனிமேல் என்ன செய்கிறது! இந்தக்கடி தம் எழுதினவன் யாரென்று பார்க்கலாம் என்றாலும், அது இடதுகை யால் எழுதியதுபோல் காணப்படுகிறதே! (என்று கடிதத்தை இரத்தி னத்திடம் போட்டுத் தலையில் கையை வைத்துக்கொண்டிருந்தான்.)

இரத்தினம் கடிதத்தை வாங்கி வாசித்துத் திகைத்துக்கொண்டிருந்தான்.

– தொடரும்…

– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.

– கமலாக்ஷி சரித்திரம் (நாவல்), இரண்டாம் பதிப்பு: 1910, தாம்ஸன் அண்ட் கம்பெனி, மினர்வா அச்சுக்கூடத்தில் பதிப்பித்தது, சென்னை.

தி.ம.பொன்னுச்சாமிப்பிள்ளை தமிழில் எழுதிய தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். சைவசித்தாந்தக் கருத்துக்களை நாவலில் புகுத்தி எழுதியவர். கமலாக்ஷி என்னும் அவருடைய முதல் நாவல் 1903-ல் வெளிவந்தது. தி.ம.பொன்னுச்சாமிப்பிள்ளை திரிசிரபுரம் தன் சொந்த ஊர் என்று குறிப்பிடுகிறார்.இரங்கூனில் பிரிட்டிஷ் அரசுக்காக பணிபுரிந்திருக்கிறார். இவர் நாவலில் வரும் சாற்றுகவியில் இருந்து இவர் ரங்கூனில் சுஜனரஞ்சனி சபா, சுகிர்த நாடக சபா போன்ற அமைப்புக்களை உருவாக்கி நாடகங்கள் அரங்கேற்றியிருக்கிறர் என்று தெரிகிறது. தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளையின் நாவல்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *