(1910ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21
16ம் அத்தியாயம்
கமலாக்ஷி விழித்துப்பார்த்துத் தான் ஓர் அறையில் கட்டிலின்மேல் படுத்திருப்பதைக் கண்டு, பாதையில் விழுந்த நம்மை இங்கு யார் கொண்டு வந்தது? என்று எழுந்து உட்கார்ந்தாள். அருகிலிருந்த இருவர் வந்து கமலாக்ஷியைப் பிடித்துக்கொண்டு, அம்மா! என்ன வேண்டும்? கஞ்சி குடிக்கிறாயா? என்று கேட்டார்கள்.
கமலாக்ஷி- அம்மா! நான் எங்கிருக்கிறேன்? நான் கனகாம்புஜத்தின் வீட்டுக்குப் போகவேண்டுமென்று துரிதமாக நடந்து கிழிந்தசேலை காலில் மாட்டிக்கொண்டு விழுந்தவள் இங்கு படுத்திருக்கிறேன். நெடுநேரம் தூங்கிவிட்டேன் போல் காணப்படுகிறது. மணி பத்துக்கதிகமாய் விட்டதா?
கமலாக்ஷி யருகிலிருந்த இரு பெண்பிள்ளைகளிள் மூத்தவள் கமலாக்ஷியின் தலை மயிரை யொதிக்கித் தேகத்தைத் தடவிக்கொடுத்து, அம்மா! இன்னும் மணி பத்தாகவில்லை என்றாள்.
கமலாக்ஷி – பத்தாகவில்லையே! என்னுடைய நல்ல அதிர்ஷ்டமே என்னை விரைவில் எழுப்பி விட்டது. அம்மா! நான் கனகாம்புஜத்தின் வீட் டுக்கு அவசரமாய்ப் போகவேண்டும். அவள் வீடங்கே? அவள் வீட் டைக்காட்டும்படி செய்தால் உங்களுக்குப் பெரும் புண்ணியமாகும். (என்று எழுந்தாள்.)
மூத்தவள்.- அம்மா! எழுந்து நிற்கவேண்டாம். விழுந்து விடுவாய். உட்கார்ந்து கொஞ்சம் கஞ்சிகுடி. அம்மா! மரகதம்! கஞ்சிகொண்டுவா!
கமலாக்ஷி – அம்மா! காலையில் எனக்குப்பசி யதிகமாக இருந்து ஒரு புண்ணியவானால் ஒரு ரூபாய் பெற்று அதை மாற்றி ஒரு பைசாவுக்குத் தோசையும் ஒரு காசுக்கு மோரும் வாங்கிச்சாப்பிட்டேன். அதனால் எனக்குப் பசியில்லாமலிருக்கிறது. கனகாம்புஜத்தின் வீடு அதிக தூரமோ?
மூத்தவள்.- மகளே! இன்னும் உனக்குப் பசியுண்டாக வில்லையா! எட்டு நாள் பட்டினியிருந்துமா உனக்குப் பசியுண்டாகவில்லை?
கமலாக்ஷி.- அம்மா என்ன சொன்னீர்கள்? நான் எட்டு நாள் பட்டினியிருந்தது உங்களுக்கு எப்படித்தெரியும். நான் ஒருவரோடும் சொல்ல வில்லையே!
மரகதம்.- தாயாரம்மா! இதென்ன அநியாயம்? எட்டுநாள் பட்டினியா யிருந்தவளை நாமும் எட்டு பட்டினியாய்ப் போட்டு வைத்திருந்தோமே! ஐயோ! இதற்கென்ன செய்கிறது! அம்மா! இன்னும் தடை செய்யாமல் இந்தக் கஞ்சியைக் குடிக்கவேண்டும். எங்களுக்கிது தெரிந்திருந்தால் சங்கிலாவது வைத்து வார்த்திருப்போமே!
என்று இருவரும் கமலாக்ஷியைக் கட்டாயப்படுத்திக் கஞ்சிகொடுத்தார்கள்.
தாயாரம்மாள் – எட்டுநாள் பட்டினியிருந்தது நமக்குத் தெரியாமற்போனதே! (என்று துக்கப்பட்டாள்.)
கமலாக்ஷி – அம்மா! நான் எத்தனை நாள் அசௌக்கியமாயிருந்தேன்? என்னை முன் பின் அறியாதவர்களாயிருந்தும் என்னைக் காப்பாற்றினீர்களே! உங்களுக்கென்ன செய்யப்போகிறேன்! (என்று கண்ணீர் உதிர்த்தாள்.)
தாயாரம்மாள் – அம்மா! நீ வீட்டுக்கெதிரில் விழுந்து தலையில் காயம்பட்டு இரத்தம்வடிய மூர்ச்சையாய் விழுந்திருப்பதைக் கண்டு உன்னைக்கொண்டுவந்து இவ்விடம் சேர்த்து எட்டுநாளாகிறது. நீ கஞ்சி குடித்ததால் உனக்குக் களையாக இருக்கும். சற்றுநேரம்படுத்து உறங்கினால் உத்தமம். சுரமும் நின்றுவிட்டது. இனி ஒன்றுக்கும் பயமில்லை என்று வைத்தியரும் சொல்லிப்போனார். படுத்துக்கொள்ளம்மா (என்று வேண்டினாள்.)
கமலாக்ஷி.- அம்மா! எனக்கு முற்றிலும் சொக்கியமாகி விட்டது போல் காணப்படுகிறது. நான் கனகாம்புஜத்தின் வீட்டுக்குப் போகவேண்டியது அவசியமாயிருத்தது. அது தப்பிப்போய்விட்டதே! விஜயரங்கத் தண்ணனை என்ன செய்தார்களோ! நான் என்ன செய்வேன் தெய்வமே! (என்றழுதாள்.)
மரகதம்.- அம்மா! நீ ஏன் அழுகிறாய்? கனகாம்புஜத்தையும் விஜயரங்கத் தண்ணனையும் நீ மறக்கவில்லை. தூக்கத்திலும் உனக்கு ஜன்னி பிறந்திருந்த பொழுதும் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்ததால், உன்னை அவர்கள் அறிவார்களென்று அவர்களை அழைத்துவரப்போன என் தமையன் கனகாம்புஜம் தன் புருஷனோடு ஸ்தல தெரிசனைக்குப் போனதாகவும் விஜயரங்கத்தண்ணன் தன் ஊருக்குப் போய்விட்ட தாகவும் கேள்விப்பட்டு வந்தார். (என்று சிரித்தாள்.)
கமலாக்ஷி – ஏனம்மா சிரிக்கிறாய்? அவர்கள் ஊரைவிட்டுப்போனது எனக்குத் துக்ககரமாயிருக்கிறதே. (என்று வருத்தப்பட்டாள்.)
தாயாரம்மாள்.- அம்மா கமலாக்ஷி! உன்பெயர் இன்னதென்று நீ எங்களுக்குச்சொல்லுமுன் உன்பெயரையும் விஜயரங்கத்தண்ணன் சமாசாரத்தோடு மற்ற சமாசாரங்களையும் நாங்கள் அறிந்துகொண்டிருப்பதைக் குறித்து நீ ஆச்சரியப்படவேண்டாம். எல்லாம் உன் வாய்ச்சொல்லால் அறிந்ததேயன்றி வேறுவகையால் அறியவில்லை; நீ விஜயரங்கத்தை அண்ணன் முறையாக அழைத்துக்கொண்டிருந்தாலும் விஜயரங்கம் உன் விஷயத்தில் வேறுவித எண்ணங்கொண்டிருப்பதையும், அந்த எண்ணம் உனக்கு அருவருப்பைக் கொடாமலிருக்கிற தென்பதையும் அறிந்ததால் நீ விஜயரங்கத்தை அண்ணன் என்று சொன்னதைக்கேட்ட மரகதம் நகைத்தாள்.
கமலாக்ஷி. (புன்சிரிப்போடு) அம்மா! என்னென்ன உளறினேன். வெளியார் யாராகிலும் கேட்டிருந்தார்களா?
மரகதம் – அம்மா! நீ சொன்னதையெல்லாம் நாங்கள் இருவர் தவிர வேறொருவரும் கேட்கவில்லை. நீ அதுவிஷயத்தில் கவலையற்றிருக்கலாம்.
தாயாரம்மாள் – அம்மா கமலாக்ஷி! எட்டுநாள் சுரத்தால் வாதைப்பட்டு உணர்ச்சியொன்றுமில்லாமலிருந்து இன்று எழுந்து உட்கார்ந்து நெடு நேரம் பேசிக்கொண்டிருப்பது யுக்தமல்ல. ஒருவேளை கெடுதியாக முடிந்தாலும் முடியும். உனக்கு முற்றிலும் சௌக்கியமானபின் நீ சொன்னவைகளையெல்லாம் சொல்லுகிறோம். படுத்து நித்திரைசெய். (என்று கட்டாயப்படுத்தினாள்.)
கமலாக்ஷியும் தான் எட்டு நாள் நோயாயிருந்து எழுந்தவுடன் நெடுநேரம் வார்த்தையாடினால் பொல்லாங்கு விளையுமென்பதற்குச் சந்தேகமில்லை, படுத்துறங்குவதே உத்தமமென்று படுத்துறங்கிக் காலையில் முற்றிலும் சௌக்கியப்பட்டவள் போல் எழுந்தாள். தாயாரம்மாளும் மரகதமும் கமலாக்ஷியை அழைத்துப் போய்க் காலைக்கடனை முடிப்பித்து ஆகாரம் கொடுத்துப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு வாலிபன் அவ்விடம் வந்து கமலாக்ஷியைப்பார்த்துச் சரீரசௌக்கியம் எப்படியிருக்கிறது அம்மா என்று கேட்டான். கமலாக்ஷி ஆச்சரியத்தோடு அந்த வாலிபனைப்பார்த்து, ஐயாவே! அன்று நான் பசியால் வருந்திச் சில வாலிபரால் அவமானம் அடையுந்தருணத்தில் உதவிசெய்து என்னைக் காப்பாற்றிய புண்ணியவானே! இப்புண்ணியவதிகளுடைய பேருதவியால் எனக்குச் சௌக்கியமாக இருக்கிறது. நான் இவ்விடத்திலிருப்பதைத் தாங்கள் எவ்விதம் அறிந்தீர்கள்?
மரகதம்.- அம்மா ! இவரே என் தமையன் சொக்கலிங்கமுதலியார். தாயாரம்மாள் எனக்குச் சிறியதாயாராக வேண்டும். நீயும் என் தமக்கையாக வேண்டும். (என்று நகைத்தாள்.)
சொக்கலிங்கமுதலியார்.- அம்மா! அன்று உன்னைக் கண்டபொழுது நான் செய்த கொடுமையை நினைக்க நினைக்க என் உடல் துடிக்கிறது. நீ பசியால் வருந்தி வீடில்லாமல் அலைந்து பாதையில் விழுந்து மூர்ச்சையா நெடுநாள் சுரத்தில் கஷ்டப்பட நேரிட்டதற்கு நானே காரணமாக இருந்தேன். (என்று தன் கண்களைத் துடைத்தான்.)
கமலாக்ஷி – அண்ணா! இதென்ன தாங்கள் இவ்விதம் சொல்லுகிறீர்கள்! என் வினைப்பயனால் நான் அனுபவிக்கவேண்டியதை அனுபவித்துக் கொண்டிருக்க அது தங்களால் நேர்ந்ததென்று சொல்வது நியாயமா?
சொக்கலிங்கமுதலியார்.- அம்மா கமலாக்ஷி! நான் உன்னைக் கண்டபொழுது வீட்டுக் கழைத்துக்கொண்டு வந்திருந்தாலும் உன்னிடத்தில் கொடுத்த ஒரு ரூபாயைவிடப் பத்து இருபது கொடுத்திருந்தாலும் நீ இவ்வளவு சங்கடப்பட நியாயமில்லையே! நான் கொடுத்தது ஒரு ரூபாயே யானதால் அதை மாற்றி நான்கு தம்படிகளைச் செலவுசெய்து மற்றவைகளைப்பத்திரமாக வைத்திருந்தாய். ரூபாய் அதிகமாகக் கொடுத்திருந்தால் வயிறு நிரம்ப எங்காகிலும் சாதம் சாப்பிட்டிருக்கமாட்டாயா? வீடில்லாமல் தெருத்தெருவாய்த் திரிந்து பாதையில் விழுந்து தலையில் அடிபட்டு அதனால் சுரம்வராதிருக்கும் அல்லவா? அல்லாமலும் உன் மனம் வருந்தும்படியாகவும் பேசினேன். (என்று துக்கப்பட்டான்.)
கமலாக்ஷி – அண்ணா! என் விஷயத்தில் பேருதவியைச்செய்து இவ்விதம் சொல்லுவது அழகல்ல. நான் நான்கு தம்படி செலவுசெய்தது தங்க ளுக்கெப்படித் தெரிந்தது?
மரகதம் – அக்காள்! தங்கள் முன்தானையில் ஒரு முடிச்சிருக்கக்கண்டு அவி ழ்த்து அதில் ஒரு காகிதமும் நான்கு தம்படிகள் குறைய ஒரு ரூபாயும் எடுத்து என் தமையனிடம் கொடுத்தேன். (என்று சொல்லித் தன் தமையனைப் பார்த்து) அண்ணா! இந்த அக்காள் மனவருத்தம் அடைய என்ன சொன்னீர்கள்?
சொக்கலிங்கழதலியார் – (மரகதத்தைப்பார்த்து) ஏதோ மதியீனமாக ஒன்றைச் சொன்னேன். அதை மீண்டும் சொல்லப்பிரியமில்லை. அம்மா கமலாக்ஷி! நீ யாரென்றறியவே உன்னிடத்திலிருந்தெடுத்த கடிதத்தை வாசித்தேன்.
தாயாரம்மாள் – அந்தக் கடிதத்தால் உன்பெயர் கமலாக்ஷி என்று அறிந்தோம்.
கமலாக்ஷி – அண்ணா! அந்தக்கடிதத்தை வாசித்ததில் தோஷமில்லை. அக் கடிதத்தின் சமாசாரத்தைத் தாங்கள் விரும்பும்பொழுது விளங்கச் சொல்லத்தடையில்லை.
சொக்கலிங்கழதலியார். – அதை எனக்கறிய இஷ்டமில்லை. உனக்கு முற்றிலும் சௌக்கியமானபின் அது விஷயத்தைக்குறித்துப் பேசலாம். அம்மா மரகதம்! நம்மை யழைத்துப்போக அப்பா ஆளனுப்பியிருக்கிறார்கள். எப்பொழுது போகலாம்?
மரகதம்.- அண்ணா! இந்த அக்காளை இந்த ஸ்திதியில் எப்படி அழைத்து கொண்டு போகிறது? வண்டியில் போனால் தேகம் அலண்டு மீண்டும் சுரம்வந்தால் என்ன செய்கிறது? அதை முக்கியமாகக் கவனிக்க வேண்டியதில்லையா?
கமலாக்ஷி.- அண்ணா எனக்குத் தேகம் முற்றிலும் சௌக்கியமாய் விட்டது. நான் இன்னும் உங்களுக்குப் பாரமாக இருப்பது நியாயமல்ல; உத்தரவு கொடுத்தால் நான் போய் வருகிறேன். நீங்கள் யாவரும் என் விஷயத்திற் செய்த உபகாரத்தை எக்காலத்திலும் மறவேன்.
சொக்கலிங்க முதலியார்.- அம்மா ! அன்று நான் கொடுமையாகப் பேசினேனென்று எங்களை விட்டுப்போக யோசித்தாய்! உன்னை அனுப்பிவிட நாங்கள் எண்ணங்கொள்ளவில்லை. எங்கள் பாட்டனாருக்குத் திவசமானதால் கிராமத்தில் இருக்கும் எங்கள் தாய் தந்தை வரும்படி கட்டாயப் படுத்துகிறார்கள். ஆனதால் போகவேண்டியது அவசியமாக இருக்கிறது. என் தங்கையும் தாயாரம்மாளும் போனபின் நீ தனித்து இவ்விடத்தில் இருப்பதும் கூடாதானதால் நீயும் என் தங்கையோடு போக வேண்டும். நீ எங்களைவிட்டுப் போகிறேனென்று சொல்லுவது எங்களைத் துன்பத்தில் அழுத்தும். உன்னை நான் தங்கை யென்று எண்ணியதால் நீ உன் அண்ணன் சொல்லைத் தட்டி நடக்கவும் கூடாது. என்னுடைய சொல்லைக்கேட்டு நடந்தால் உண்மையான தங்கை என்றே எண்ணுவேன். நாளை காலையில் பிரயாணப்பட்டுச் சென்றால் பத்து மணிக்குள் கிராமத்திற்குப் போய்விடலாம்.
மரகதம்.- அண்ணா! காலையிற் பிரயாணப்பட்டுப்போனால் பத்துமணி பரியந்தம் என்ன செய்யப் போகிறோம்? அதற்கு முன்னம் போய்விடலாமே!
சொக்கலிங்க முதலியார்.- அம்மா! நீ சொல்வது உண்மையே! தங்கை கமலாக்ஷி வருவதால் வண்டி தாமதமாகப் போகவேண்டும். தேகத்தை அதிரவிடக்கூடாது. ஆனதால் பத்துமணி செல்லும் என்றேன். நான் கடைகளில் சில வாங்கவேண்டியிருப்பதால் அவைகளை வாங்கி வருகிறேன். (என்று கமலாக்ஷியின் கருத்தைக் கேட்காமல் நீங்கினார்.)
தாயாரம்மாள் – அம்மா கமலாக்ஷி! தம்பி சொக்கலிங்கம் சொன்னதைக் கேட்டிருந்தாயே. உன் சம்மதம் எப்படி?
கமலாக்ஷி.- என் உயிரைக் காப்பாற்றினவர்கள் சொல்வதைத் தடுத்து நடப்பது நியாயமா? நீங்கள் சொல்வதுபோல் நடக்கச் சித்தமாயிருக்கிறேன்.
அடுத்த நாள் சொக்கலிங்கம் சொன்னவிதம் பத்து மணிக்கு வண்டி யொன்று ஓர் சிறிய கிராமத்துக்குள் போகும் பொழுது ஒரு குழந்தை பாதையில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருப்பதை வண்டிக்காரன் கண்டு வண்டியை நிறுத்திக் குழந்தையை எழுந்து போகும் படி சொன்னான். அதற்குள் வீட்டிற்குள்ளிருந்து ஒரு பெண்பிள்ளை யோடி வந்து குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு, இராஜாமணி! வண்டிச் சக்கரத்தில் அகப்பட்டுச் சாகவா வண்டிகள் போகும் பாதையில் உட்கார்ந்து விளையாடி யிருந்தாய்! நான் எல்லாச் சுகத்தையும் விட்டு எனக்காதாரமாக உன்னை வைத்திருக்கிறேன். நீயும் இறந்தால் அதன் பின் உலகத்தில் நான் இருந்தென்ன பலன் என்று குழந்தையோடு வீட்டுக்குள் சென்றாள். வண்டிக்குள்ளிருந்த கமலாக்ஷி மரகதத்தைப் பார்த்து, அம்மா ! அந்த வீட்டுக்குள் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு போனவள் யார்? அதிக சுந்தரமாக இருக்கிறாள். குழந்தையும் அவளைப்போல் சுந்தரமாக இருக்கிறதே என்றாள்.
மரகதம்.- குழந்தையை எடுத்துக்கொண்டு போனவள் என் அத்தைமகள். அவளை உரித்துக்கொண்டு வந்திருக்கும் குழந்தை அவளுடையதே!
கமலாக்ஷி – நாம் வண்டிக்குள்ளிருப்பதைப் பார்க்காததால் நம்மோடு வார்த்தையாடாமல் போய்விட்டாள். நாமும் கூப்பிட்டு வார்த்தையாடாமல் வந்து விட்டோமே?
மரகதம்.- நாம் கூப்பிட்டு வார்த்தையாடிக்கொண்டிருந்தால் காலதாமதமாகும். உன்னைக் காலையிலிருந்து இது பரியந்தம் பட்டினியாக வைத்திருப்பதே தப்பிதம். இன்னும் இவ்விடத்தில் பேசிக்கொண்டிருப்பது தகுதியல்ல.
கமலாக்ஷி – அம்மா மரகதம்! எனக்குப் பசியில்லை. எனக்காக நீங்கள் துரிதப்பட்டுப் போகவேண்டாம். வண்டியை நிறுத்தச் சொல்லுங்கள்.
தாயாரம்மாள் – நீங்கள் இருவரும் பேசி முடிவுக்கு வருமுன் வண்டி அதிக தூரம் வந்துவிட்டது. அதோ நம்முடைய வீடும் தெரிகிறது.
சில நிமிஷத்தில் வண்டி வீட்டுக்கருகிற்போய் நின்றது. உடனே மூவ ரும் இறங்கி வீட்டுக்குள் சென்றார்கள். வீட்டுக்குள்ளிருந்த மரகதத்தின் தாய் கமலாக்ஷியைப்பார்த்து, அம்மா கமலாக்ஷி! உனக்குத் தேகம் சௌக்கியமாய் விட்டதா? நீ அசௌக்கியமாயிருக்கிறதாகச் சொல்லி யனுப்பியதைக் கேட்டுத் துக்கப்பட்டிருந்தோம் என்று அதிக அன்போடு பேசினாள். பெரியவர் ஒருவர் வந்து இந்தப் பெண்தானா கமலாக்ஷி! நெடுநாள் தேக அசௌக்கியமாயிருந்ததால் அதிக இளைப் பைக் காட்டுகிறது. அம்மா! கமலாக்ஷி! நீ நாட்டுப்புறத்தில் இருந் தால் விரைவில் தேகம் புஷ்டியடையும். எப்பொழுதும் எங்களோடு இருக்கிறாயா? என்று கேட்டார்.
கமலாக்ஷி – அப்பா! தங்களுடைய இஷ்டம்போலவும் அம்மாளுடைய இஷ்டம் போலவும் செய்கிறேன். (மரகதத்தின் தாயைப்பார்த்து) அம்மா எனக்கு முற்றிலும் சௌக்கியமாய்விட்டது.
மரகதம் – அம்மா! எங்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்?
மரகதத்தின் தாய் – மகளே! உங்களுக்கு வேண்டியதெல்லாம் செய்து வைத்திருக்கிறேன். ஆமைவடை மோர் குழம்பும் இருக்கிறது. (என்று சிறித்தாள்.)
மரகதம்.- அம்மா! எனக்கு மோர் குழம்பு என்றால் தலை நடுக்கமென்றா அதைச் சொன்னீர்கள்! அக்காளுக்கு அது பிரியமாய் இருக்கக்கூடுமே!
தாயாரம்மாள் – கமலாக்ஷிக்கு இப்பொழுது மோர் குழம்பு கொடுக்கலாமா? போன சுரம் திரும்பினால் என்ன செய்கிறது!
கமலாக்ஷி – அம்மா ! இனி சுரம் எனக்கு வராது. எனக்கு சுரம் வந்த கார ணத்தை அவகாசமாய்ச் சொல்லுகிறேன். மோர் குழம்பை இன்று சேர்த்தே பார்க்கவேண்டும். (என்று யாவரும் சமையலறைக்குள் நுழந்தார்கள்.)
மரகதத்தின் தாய் – மரகதம்! அண்ணன் எப்பொழுது வருகிறதாகச் சொன்னான்?
மரகதம்.-நாளை காலையில் வருவதாகச் சொன்னார்.
என்று மரகதம் சொல்லி யாவருக்கும் வட்டித்துப் போஜனமுண்டு திவசத்துக்கு வேண்டியதைச் செய்து கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் சொக்கலிங்கம் வந்து தன் பாட்டனுடைய திவசத்துக்காக வந்திருந்தவர்களை உபசாரம் செய்து சாப்பிடவைத்துத் தாம்பூலம் உதவி அவர்கள் யாவருக்கும் விடைகொடுத்து அனுப்பியபின், தானும் அன்று மாலையே கிராமத்தை விட்டு நீங்கினான். திவசத்துக்கு வந்த பெண் பிள்ளைகள் கமலாக்ஷியைக்கண்டு வார்த்தையாடியும் மர கதத்தினிடம் கமலாக்ஷியைக்குறித்து விசாரித்தும் போனார்கள். தாயாரம்மாள் அக்கிராமத்தாரோடு நெருங்கி வார்த்தையாடாமல் தனித்திருப்பதைக்கண்ட கமலாக்ஷி அருகில் சென்று, அம்மா! தாங் கள் ஏன் தனித்த இடந்தேடி இருக்கிறீர்கள்? என்றாள்.
தாயாரம்மாள்.– நான் இக்கிராமத்துக்கு அடிக்கடி வருகிறதில்லை. ஆனதால் என்னை அறிந்தவர்கள் சிலரே. அறியாதவர்களிடம் பேச எனக்குச் சம்மதமில்லாமையால் தனித்திருந்தேன்.
கமலாக்ஷி.- அம்மா! நாம் நேற்று வரும் வழியில் கண்ட குழந்தையின் தாயை மரகதம் அத்தைமகள் என்றாளே! அவள் இங்கு வரவில்லை போல் காண்கிறது. அவள் வந்திருந்ததைத் தாங்கள் பார்த்தீர்களா?
தாயாரம்மாள் – அம்புஜத்தையா ! அவள் ஏன் இங்கு வரப்போகிறாள்? கமலாக்ஷி.-ஓர் விசேடமான காலத்தில் சொந்த பந்துக்களை வரவழைக்காமல் அன்னியரை மட்டும் வரவழைக்கலாமா?
தாயாரம்மாள் – விசேடத்திற்குச் சொந்த பந்துக்களை வரவழைக்க வேண் டியது அவசியமே! அம்புஜம் மரகதத்துக்கு அத்தைமகளாயினும் அவள் விஷயம் உனக்குத் தெரியாமலிருப்பதால் அவள் இன்று வராமற்பேர் னது உனக்குப் புதுமையாகத் தோன்றுகிறது. நாம் இங்கிருந்து பேசு வது நன்றல்ல.வா.(என்று வீட்டுக்குப் பின்புறத்திலுள்ள தோட்டத் துக்குள் அழைத்துச்சென்று) அம்புஜத்தின் விஷயத்தைக் குறித்து நீ அறியவேண்டியது அவசியமா?
கமலாக்ஷி – அவசியம் இல்லை. மரகதம் அத்தை மகள் என்று சொன்னதால் அவள் வராமலிருந்ததைக்கேட்க நேரிட்டதேயன்றி வேறல்ல. எனக் கொருவருடைய இரகசியத்தை அறிந்துகொள்ளவேண்டுமென்கிற விருப்பமில்லை.
அப்போது, என்ன இரகசியத்தை அறியக்கூடாதென்றாய்? என்று சிரித்துக்கொண்டு மரகதம் எதிரில் வந்து நின்றாள்.
கமலாக்ஷி – அம்மா மரகதம்! இன்று உன் அத்தைமகள் இங்கு வராமற் போனதைக் குறித்து நம்முடைய சிறிய தாயாரைக் கேட்டேன். அவர்கள் அதை அறிய வேண்டியது அவசியமோ? என்றார்கள். நான் அவசியம் இல்லை என்றேன்.
மரகதம்.- அம்மா! நேற்றுவண்டிக்கு எதிர்ப்பட்டகுழந்தையைத் தூக்கிக்கொண்டு போன அம்புஜம் என் தந்தையின் சகோதரிமகள். அவளுக்கு நாலைந்து வயதாயிருக்கும்பொழுது என் தாயும் தந்தையும் அழைத்துவந்து எங்களோடு சேர்த்து அவளையும் வளர்த்து வந்தார்கள். நானும் என் சகோதரனும் அம்புஜமும் கூடிவிளையாடவும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடவும் வாசிக்கவும் இருந்ததால் ஒருவர்மேல் ஒருவருக்கு அன்பு அதிகரித்திருந்தது. சற்றுநேரம் ஒருவர் மற்றவரை அறியாமல் எங்காகிலும் சென்றிருந்தால் காணாதவரைத் தேடித்திரிவது வழக்கமாக இருந்தது.
எங்களைப்போன்ற சிறுவர்கள் எங்களோடு வந்து விளையாடும் பொழுது பொம்மைக்கு கலியாணம் செய்வதுபோல என் தமையனையும் அம்புஜத்தையும் உட்காரவைத்துக் கலியாணம் செய்வார்கள். அம்புஜம் உண்மையான மணப்பெண்போல உட்கார்ந்திருப்பாள். சிறுவர்கள் கலியாண வாழ்த்து, ஏசல்கள்பாடி பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பாலும் பழமுங் கொடுத்து மகிழ்வார்கள். நாங்கள் விளையாடுவதை எங்கள் தாய்தந்தை கண்டால் வேடிக்கை பார்த்து நின்று சிரித்துக்கொண்டு போய்விடுவார்கள். யாராகிலும் என் தமையனைக்கூப்பிட்டு நீயாரை விவாகஞ்செய்து கொள்ளப்போகிறாய் என்றால், அம்புஜத்தைக் கட்டிக்கொள்ளப் போகிறேன் என்பார். அம்புஜம் உன்னைக் கட்டிக்கொள்ளமாட்டேன் என்கிறாளே என்று விளையாட்டுக்குச் சொன்னால் என் தமையன் அம்புஜத்திடம் ஒடி “அம்புஜம்! என்னைக் கட்டிக்கொள்ள மாட்டேன் என்று சொன்னது உண்மையா?” என்று கேட்பார். அம்புஜம் “அத்தான்! நான் அவ்விதம் சொல்லவில்லை. உங்களையே கட்டிக்கொள்ளுவேன்.” என்று கட்டிப் பிடித்துக்கொள்ளுவாள். எங்களுக்கு இவ்வித விளையாட்டோடு வயதேறியது. அம்புஜம் பக்குவமடையுங்காலச் சமீபத்தில் எங்களுடைய அத்தைவந்து தன்மகளை அழைத்துப்போகிறே னென்று எங்கள் தாய்தந்தைக்குத் தெரிவிக்கவே, அவர்கள் சம்மதப்பட்டிருப்பதை என் சகோதரன் அறிந்து அம்புஜத்தின் தாயிடம் சென்று, அத்தை! நான் அம்புஜத்தைக் கட்டிக்கொள்ளப் போகிறேன்; அம்புஜத்துக்கும் என்னை விவாகம் செய்துகொள்ள இஷ்டமிருக்கிறது; உங்களுடைய இஷ்டம் என்ன என்று கேட்டார். அதற்கு எங்கள் அத்தை, அப்பா! நீ மஹாராஜனாக அம்புஜத்தைக் கட்டிக்கொள்ளென்று சிரித்துத் தன் தமையனிடமும் தன் தமையன் பெண்சாதியினிடமும் என் தமையன் சொல்லியதைச் சொல்லிச் சந்தோஷத்தோடிருந்து அம்புஜத்தை அழைத்துச் சென்றார்கள். அம்புஜம் எங்களை விட்டுப்போக இஷ்டமில்லாமல் துக்கத்தோடு சென்றாள். அம்புஜம் தன் தாயார் வீடுசென்ற சில நாளையில் புஷ்பவதியானாள். அவள் ருதுவான இலக்கினத்தின் பலனை எண்ணி ஒருவரிடத்திற்குப் பின் விவாகம் செய்யலாமென்று எண்ணி யிருந்தார்கள். ஒருவருடம் முடிவாகும் சமயத்தில் சிலர் என் தந்தையிடம் வந்து வீட்டில் பெண்ணைவைத்துப் பிள்ளைக்கு விவாகம் செய்தால் பார்ப்பவர்கள் கேவலமாய்ப் பேச இடமுண்டு என்றார்கள். அதைக் கேட்டு, ஆம் அது உண்மையே! என் மகளுக்கும் மகனுக்கும் விவாகம் ஒன்றாய் முடித்து விடலாமென்று எங்கள் அத்தையைப் போய்ப் பெண் கேட்டபோது அவள் வீட்டில் அம்புஜத்தின் அக்காளை வைத்து இளைய பெண்ணுக்கு விவாகம் செய்யலாமா! உங்களுக்கிஷ்டமாயிருந்தால் பெரிய பெண்ணை விவாகம் செய்துகொள்ளுங்கள் என்றாள். என் தமையன் அம்புஜத்தை விவாகம் செய்து கொள்ள எண்ணங்கொண்டிருந்ததையறிந்த என் தாய்தந்தை உன் பெரியமகளுக்கு விவாகமான பின் உன் மகளுக்கும் மகனுக்கும், என் மகனுக்கும் மகளுக்கும் முறையே விவாகம் செய்யலாம். உன் பெரிய பெண்ணை நான் கொள்ள நினைத்தாலும் விவாகம் முடிக்க நியாயமில்லை.எவ்விதம் என்னில் நான் வீட்டில் பெண்ணை வைத்துக்கொண்டு உன் பெரியபெண்ணை என் மகனுக்கு எப்படி செய்யலாம்? முன் பெண்ணுக்கு விவாகம் முடிந்தபின் பிள்ளைக்கு விவாகம் செய்யவேண்டும். ஆகையால் நீ உன் இரு பெண்ணுக்கும் விவாகமானபின் உன் மகனுக்கு விவாகம் செய்ய வேண்டும். ஒருவருக்கு அவ்வழக்கம் உண்டு மற்றவருக்கு இல்லை என்று சொல்லக்கூடாது. ஆகவே, உன் பெரிய மகளை விவாகம்செய்து கொடுத்தவுடன் மற்றவர்களுக்கு ஒரே முகூர்த்தத்தில் விவாகம் முடிக்க லாமென்று தீர்மானப் படுத்திவந்த ஆறுமாதத்தில் அம்புஜத்துக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறதென்று கேள்விப்பட்டோம். என்தாய் அதை முற்றிலும் நம்பாமல், அம்புஜத்தின் கல்வி யென்ன! அதற்கேற்ற அவளுடைய குணம் என்ன? அம்புஜமாவது பிள்ளைபெறுகிறதாவது! என்று தான் நேரில் பார்த்து வராமல் ஒருவர் சொல்லையும் நம்பேன் என்று சென்றவர்கள் திரும்பிவந்து, தன்நாத்தனார் தன் பிள்ளைகளோடு வெளியூருக்குப்போயிருக்கிறாளென்று கேள்விப்பட்டு வந்தேனென்பதாகச் சொன்னார்கள். நானும் என் தாயும் தந்தையும் அம்புஜத்தின் விஷயத் தில் கேள்விப்பட்டது உண்மையாக இராதென்றே எண்ணியிருந்தோம். என் தமையனும் அம்புஜத்தைக் கேவலமாக அவசரப்பட்டு ஒன்றும் சொல்லக்கூடாதென்றும் நாம் நேரில் பார்த்தபின் அவள்மேல் குற்றஞ் சுமத்தவேண்டுமென்றும் சொல்லிக்கொண்டிருந்தார். சில மாதங்களுக் குப்பின் நானும் என் என் தாயாரும் இந்தக் கிராமத்துக்கு வரும்பொழுது நேற்று நாம் கண்டவிடத்தில் அம்புஜம் குழந்தையோடு நிற்பதைப் பார்த்து நாங்கள் கொண்ட ஆச்சரியத்திற்கு அளவில்லை. அம்புஜம் ஒரு பிள்ளையை பெற்றுக்கொண்டிருந்தாலும் யாவருங்காண நின்றதே எங்களுக்கு அதிக வெறுப்பைக் கொடுத்தது. அம்புஜத்துக்கு இருந்த கல்வி அவளுக்கு நன்மையைத் தருவதைவிட்டுத் தீமைக்கு உதவி புரிந்ததுமன்றி அவளுக்குத் தைரியமும் கொடுத்து நிற்கச் செய்ததென்று என்தமையன் சொல்லி, அதுமுதல் பெண்கள்மேல் வெறுப்பு கொண்டு, தனக்குக் கலியாணம் வேண்டியதில்லையென்று சொல்லிவிட் டதேயன்றி, இந்தக் கிராமத்துக்கு அவர் அடிக்கடி வராமலும், வந்தாலும் இரவு தங்காமலும் போய்விடுகிறார். அம்புஜத்தோடு நாங்கள் ஒரு வரும் வார்த்தையாடுகிறதில்லை. இந்தத் துர்நடத்தையால் கெட்ட அம்புஜத்தை நாங்கள் திவசத்துக்கு வரவழைக்காமல் விட்டது தப்பிதமா?
கமலாக்ஷி.- அம்மா மரகதம்! நேற்று நாம் வரும்பொழுது அம்புஜத்தையும் அவள் குழந்தையையும் பார்த்ததுமுதல் அவள்மேல் எனக்கு ஞாபகம் இருந்ததால் அவள் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு ஒரு பெரிய கதையைச் சொல்லிமுடித்தாய். நம்முடைய தமையன் விவாகம் வேண்டாமென்றாலும், உனக்கு விவாகம் இன்னும் முடியவில்லையே! எப்பொழுது முடிக்க யோசித்திருக்கிறார்கள்?
மரகதம்.- அக்காள்! நீ அந்தரங்கத்தில் எப்படி விஜயரங்கத்தண்ணனை இச் சித்திருக்கிறாயோ, அதுபோலநான் என் அத்தைமகனை இச்சித்திருக்கிறேன். அவர்தம் தங்கையின் நடத்தையால் எங்களைப்பார்க்க வெட்கிப் போய்விட்டதால் நான் வேறொருவரை விவாகம் செய்துகொள்ள இஷ்டப்படாமல் எனக்கும் விவாகம் வேண்டியதில்லை யென்று சொல்லிவிட் டேன்.
கமலாக்ஷி.- நான் விஜயரங்கத்தண்ணனை இச்சித்திருப்பது உனக்கு எப்படித்தெரியும்?
மரகதம்.- தாயாரம்மா! அக்காள் கேட்பதற்குப்பதில் தாங்களே சொல்ல வேண்டும்.
தாயாரம்மாள் சிறித்து, அம்மா கமலாக்ஷி! நீ வியாதியாயிருந்தபொழுது வாய் பிதற்றியதில் அனேகம் சொன்னாய் என்றும், அதைச் சாவகாசத்தில் சொல்லுகிறேன் என்றும் கூறியிருந்த பிரகாரம் இப்பொழுது ப்ரஸ்தாபிக்கிறேன். மரகதம் யாவும் அறிந்தவளாதலால் அவள் வீட் டுக்குள் சென்று வீட்டு வேலையைப் பார்க்கவேண்டும். (என்று மரகதத்தை வீட்டுக்குள் அனுப்பிக் கமலாக்ஷியை மரநிழலில் உட்கார வைத்து) உனக்கென்ன சொல்ல வேண்டும்? (என்றாள்.)
கமலாக்ஷி – நான் வியாதியாக இருந்தபொழுது என்ன சொன்னேன்? அதில் ஒன்றிரண்டு அறியவேண்டுமென்பதே என் கருத்து.
தாயாரம்மாள் – விஜயரங்கம் உன்னை அந்தரங்கத்தில் இச்சித்திருந்ததும், அவன் தன்னைப் பெற்றோரென்று எண்ணியிருந்தவர்கள் தன்னை வளர்த்தவர்களாக முடிந்ததும், தன்னை எக்குலத்தானென்று அறியாமல் அவர்கள் வளர்த்து வருவதனாலே தங்களுடைய பந்துக்களால் அவமதிப்புண்டாகித் துக்கத்தோடிருப்பதை அறிந்து அவர்களைவிட்டு விஜயரங்கம் நீங்கினானென்றும், பெற்றோரையறியாத விஜயரங்கம் எக்குலத்தானானாலும் அவனை விவாகம் செய்துகொள்ள உனக்கு இஷ்டம் உண்டென்றும் உன் கருத்தைக் காட்டினாய்.
கமலாக்ஷி.- அம்மா ! நான் இவ்விதம் சொல்லும்பொழுது சொக்கலிங்கத் தண்ணன் இருந்தாரா?
தாயாரம்மாள் – அம்மா! நானும் மரகதமும் கேட்டிருந்தோம். வேறொரு வருக்கும் ஒன்றும் தெரியாதென்று அன்று மரகதம் சொன்னதை மறந்து விட்டாயா?
கமலாக்ஷி – மறக்கவில்லை. நான் விஜயரங்கத்தண்ணனைக் கண்டது முதல் அவர் கருத்தையறியும்வரையில் அவரைச் சகோதரனாகவே எண்ணியிருந்தேன். தற்செயலாய் நான் படுத்திருந்த வைக்கோல் போருக் கெதிரில் நின்று அவர் கருத்தை வெளியிட்டதைக் கேட்டவுடன் எனக் கில்லாமலிருந்த உணர்ச்சியொன்று உண்டானதுபோல் காணப்பட்டது. அது அவரை நினைக்கும்பொழுதெல்லாம் தோன்றுகிறது; அது இன்னதென்று எனக்குத் தெரியவில்லை.
தாயாரம்மாள்.- உனக்குண்டாகிய உணர்ச்சி இன்னதென்று சொல்ல முடியவில்லையென்பது அதிசயமாக இருக்கிறது.
கமலாக்ஷி – அதிசயம் ஒன்றுமில்லை.நமக்கனேகம் தெரிந்ததாக நம்முடைய மனம் கண்டுகொண்டாலும் அதைப் பிறரறியச் சொல்லுவதற்குச் சக்தியில்லாமற் போகிறது. எவ்விதமெனில் – ஒருவர் நம்மைச் சர்க்கரையின் உருசி எவ்விதமென்றால் இனிப்பு என்று சொல்லிவிடலாம். இனிப்பு எப்படி யிருக்கிறதென்றால் என்ன சொல்லுகிறது! அது ஓர் விதமாக இருக்கிறதென்றாவது வேறொரு பொருளைக் காட்டி அதுபோல வென் றாவது சொல்லவேண்டும். அதுபோலவே எனக்கிருக்கிறது. அது இவ்விதமென்று உவமித்துக் காட்டமுடியாததால் சொல்ல முடியவில்லை. விஜயரங்கத்தண்ணனுக்கு எல்லா நற்குணங்களும் நற்செய்கைகள் யாவும் நிறைந்திருப்பதால் பார்க்கிறவர்கள் அவர் விஷயத்தில் நல்ல அபிப்பிராயம் கொள்ளுவார்களேயன்றிக் குற்றஞ் சொல்லார்கள். ஆயினும் அவர் விவாகஞ்செய்துகொள்ள எண்ணங்கொண்டிருந்து அடிக்கடி எங்கள் வீட்டுக்குவந்தவர் ஒருநாளாகிலும் என்னோடு சிரித்து வார்த்தை யாடாமல் சகோதர பாவனையாகவே இருந்தார். இவ்விதமான குணமுள்ளவரை என்னவென்று சொல்லலாம்! இவரைப் பெற்றவளே பெரும் பாக்கியவதி ! தங்களுக்கு அவர் பிள்ளையாக இருப்பாராயின் உங்களுக்கு வேறு ஆஸ்தியும் வேண்டுமா? அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமானது. நாள் எட்டானாலும் பசியெடுக்காது. அவர் என்னை விவாகஞ் செய்ய எண்ணங்கொண்டிருப்பது முடியாத காரியம். இவ்வித எண்ணங்கொண்டதால் அவரும் நானும் இறக்குமள வும் விவாகம இல்லாமல் இருக்க வேண்டியதே!
தாயாரம்மாள்.- அம்மா! எனக்கு அவ்விதமான குணமுள்ள பிள்ளை கிடைக்கப் போகிறதா ! நான் பிள்ளையற்ற பெரும்பாவி யானேனென்று சில நேரம் துக்கத்தோடிருந்து, அம்மா! கமலாக்ஷி! நீ விஜயரங்கத்தைக்குறித்து அதிக மேன்மையாகப் பேசினாய். அவன் உன்னை விவாகஞ்செய்ய எண்ணங் கொண்டதால் விஜயரங்கமும் நீயும் விவாக மில்லாமலிருக்க வேண்டுமென்றாயே! அது இன்னகாரணமென்று தெரியவில்லை.
கமலாக்ஷி – அம்மா! விஜயரங்கத்தண்ணன் ஒரு காலத்தில் என் சற்பைக் காப்பாற்றினார். அவர் என்னை விவாகஞ் செய்துகொள்ளாத விஷயத் தில் வேறொரு பெண்ணை விவாகஞ் செய்துகொள்ளுகிறதில்லை யென் கிற எண்ணத்தோடு இருப்பதால் அவரை அவ்விதமாகவே இருக்கவிட்டு நான் வெறொரு நாயகனோடு வாழ்தல் அழகாகுமா?அவர் குலம் இன்ன தென்று அறியாததால் என் தாயார் என்னை அவருக்குக் கொடுக்கச் சம் மதியார்கள். ஆனதால் நானும் விவாகத்தை வெறுத்தால் அவர் எனக் குச் செய்த உபகாரத்துக்குப் பிரதி செய்ததுபோலும். அன்றியும், அந்த உபகாரத்தை நான் மறக்கவில்லையென்றும் தெளிவாய் விளங்கும்.
தாயாரம்மாள்.- அம்மா கமலாக்ஷி! நீ வியாதியாயிருந்து நீயே பேசிக் கொண்டிருந்தபொழுது, இரத்தினம் என்பவன் உன்னைத் தூக்கிக் கொண்டுபோக எத்தனித்த தருணத்தில் விஜயரங்கம் காப்பாற்றி னானென்றும், ஜெகநாதமுதலியார் உன்னைக்கொண்டு போகும்படி செய்தகாலத்தில் என்னென்னவோ நடந்தனவென்றும் சொல்லி வந்த திலே ஒன்றும் அறிந்துகொள்ள முடியவில்லை. காத்தனும் சாத்தனும் பிள்ளையைக் கொண்டுபோய் வெட்டவில்லையென்றாய். யாருடைய பிள்ளையை வெட்டவில்லையென்றும் அறிந்துகொள்ள முடியலில்லை. ஜெகநாத முதலியார் உன்னை உன் தாயார் வீட்டிலிருந்து நீக்கினார் என்றாய். இவைகளை மரகதம் அறிய இஷ்டங்கொண்டு உன்னைக் கேட்கும்படி சொன்னாள். உனக்கு அவைகளைச்சொல்ல இஷ்ட முண்டா?
கமலாக்ஷி – மரகதம் அறிய இஷ்டங்கொண்டிருந்தால் அவள் என்னை ஏன் கேட்கக்கூடாது? மரகதத்தை அனுப்பிவிட்டு நாம் தனித்துப் பேசிக் கொண்டிருப்பது நியாயமல்லவே!
தாயாரம்மாள் — மரகதத்துக்கெதிரில் ஏதாகிலும் சொல்லக் கூச்சப்படுவா யென்றும், நான் உன் தாயைப்போலிருப்பதால் என்னிடம் சொல்ல வெட்கப்படாயென்றும் என்னைக் கேட்கும்படி சொன்னாள்.
கமலாக்ஷி – ஒரே வயது பெண்கள் கூடிப்பேசும்பொழுது கூச்சம் விட்டுப் பேசுதலும், வயது சென்றவர்கள் முன் பேசும்பொழுது கூச்சத்தோடு பேசுவதும் சசஜமாயிருகசத் தாங்கள் மாற்றிச்சொன்னீர்கள். நாம் மூவருமாக இருந்து வார்த்தையாடுவதே மேன்மை. நானே மரகதத்தை அழைத்து வருகிறேன். (என்று ஓடி மரகதத்தை அழைத்து வந்தாள்.)
தாயாரம்மாள் – மரகதம்! உன்னை விட்டுப்பேசச் சம்மதமில்லை என்று கமலாக்ஷி உன்னை அழைத்துவந்தாள்.
கமலாக்ஷி – அம்மா மரகதம் ! நீ என்னிடத்தில் அறியவேண்டியதை நேரில் கேட்காமல் அம்மாளைவிட்டு ஏன் கேட்கச்சொன்னாய்? உன்னிடத்தில் சொல்ல இஷ்டங்கொள்ளாமல் வேறு யாரிடத்தில் சொல்லப் போகிறேன் ! நீ அறியவேண்டியவைகளைக் கேட்டால் சொல்லத் தடை யொன்றுமில்லை.
மரகதம் – அக்காள்! காத்தனும் சாத்தனும் கொலைசெய்யக் கொண்டுபோன பிள்ளையைக் கொலைசெய்ய வில்லை யென்றாயே! அது யாருடைய பிள்ளை யென்று அறியவே கேட்கச்சொன்னேன். (என்று சிரித்தாள்.)
கமலாக்ஷி.- அம்மா மரகதம்! நீ அறிய இஷ்டங்கொண்டது அதுவல்ல; விஜயரங்கத்தண்ணனைக்குறித்தே அறிய விரும்பினாய். ஆயினும் என் விஷயத்தில் நிகழ்ந்த யாவும் சொல்லுகிறேன்.
என்று நடராஜ முதலியார் தங்களுடைய வீட்டுக்கு வந்ததும், அவருக்காக வைத்தியர் வீட்டுக்குப் போனதும், வழியில் இரத்தினத்தால் அவ மானமடைய நேரிடுந் தருணத்தில் விஜயரங்கம் உதவிசெய்ததும், அதுமுதல் விஜயரங்கம் வீட்டுக்கு அடிக்கடி போனதும், இரத்தினத் தின் பேராசையிலிருந்து வனசாக்ஷி மீட்க விஜயரங்கம் துணையின்று இரத்தினத்தை அவமானப்படுத்தியதும், விஜயரங்கம் தங்கள் வீட் டுக்கு வராமல் நின்றதும், அவர் வராமையை நடராஜ முதலியார் விசாரித்துவந்து விஜயரங்கம் ஊரைவிட்டுப் போய்விட்டதாகக் கேள் விப்பட்டு வந்து சொல்லியதும், விஜயரங்கம் எழுதியதுபோல் கடிதம் கிடைத்ததும், தான் வெளிப்பட்டதும், தான் மூர்ச்சையாயிருப்பதாகக் காத்தனும் சாத்தனும் பேசிக்கொண்டிருந்து நிறுத்தியதும், சுந்தரத் தையும் சமாதியையுங் கண்டதும், பின் ஜெகநாத முதலியாரைக் கண்டதும், சுந்தரத்தின் உதவியால் வெளிப்பட்டதும், திருடர் கையில் யாவும் ஒப்படைத்ததும், வழியில் அனுபவித்ததும், சொக்க லிங்க முதலியாரால் ஒரு ரூபாய் பெற்றதும், வைக்கோற்போரில் படுத்துறங்கியதும், தற்செயலாய் விஜயரங்கத்தின் கருத்தை அறிந் ததும், பாதையில் கல் தடுத்து விழுந்ததுமாகிய இவை யாவும் சொல்லிமுடித்து, அம்மா! நீ இன்னும் அறியவேண்டியது எதுவாகிலும் இருக்கிறதா? என்றாள்.
மரகதம் – அக்காள்! நீ அடிக்கடி கனகாம்புஜத்தின் வீட்டுக்குப்போகவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாயே, அது விஷயம் ஒன்றும் சொல்லவில்லையே!
கமலாக்ஷி.- அம்மா மரகதம் ! அது ஒரு இரகசியமான சங்கதி. அதை நான் சொல்வது நியாயமல்ல. என்னுடைய சங்கதி எதுவானாலும் சொல்லத் தடைசெய்யேன். வேறொருவரைப்பற்றிய விஷயத்தை நாம் பேசுவது அழகல்ல. அதைக்குறித்தும் சொல்லாமலிருக்கிறதைக் குறித்து மன் னிக்க வேண்டுகிறேன்.
தாயாரம்மாள்.- அம்மா கமலாக்ஷி! நீ வாய் பிதற்றியபொழுது அனேக சங்கதிகளைச் சொன்னாலும், இப்பொழுது நீ சொல்லக்கூடாதென்று கூறுகிற சங்கதி அப்பொழுது வரவில்லையே! இது அதிசயமாக இருக்கிறது. ஏன் மரகதம்! நீ என்ன நினைக்கிறாய்?
மரகதம்.- ஆம்! அக்காள்! நீ உன்னை மறந்திருந்த காலத்திலும் அது வெளி வராமற்போனது ஆச்சரியமே! காத்தனும் சாத்தனும் கொலை செய்யக் கொண்டுபோன குழந்தை யாரென்றும், கொலை செய்யத் தூண்டியவன் யாரென்றும் விளங்கச் சொல்லவில்லையா?
கமலாக்ஷி – அவர்கள் அது விஷயத்திற் பேசிக்கொண்டிருப்பதை முடிவு படுத்தவே, என் நாசியில் ஈ யொன்று நுழைய, அதனால் கொலை செய்யத் தூண்டினவன் இன்னானென்று அறியமுடியாமற்போய்விட்டது. அவர்கள் சொல்லிய வருஷக் கணக்கையும் பின் விஜயரங்கத்தண்ணன் சொல்லியதையும் கவனித்துப்பார்த்தால் அந்தக் குழந்தை விஜயரங்கத் தண்ணனாகவே இருக்கவேண்டுமென்று எண்ண இடம் தருகிறது. அத்தருணத்தில் தாயாரம்மாள் மூர்ச்சையாகி நிலத்தில் சாய்ந்தாள். அறுகிலிருந்த இருவரும் உபசரித்துத் தண்ணீர் கொடுத்து மூர்ச்சையைத் தெளியவைத்தார்கள். தாயாரம்மாள் மூர்ச்சை தெளிந்து எனக்கு வழக்கமாக வரும் மயக்கம் நல்ல சமயத்தில் வந்ததென்று எழுந்து வீட்டுக்குள் சென்று படுத்திருந் தெழுந்தாள். விளக்கேற்றும் சமயத்தில் வீட்டுக்கு வெளியில் ஒரு பெண்பிள்ளை வந்து நின்று தாயாரம் மாளைக் கூப்பிட்டாள். அதைக் கேட்ட கமலாக்ஷி தாயாரம்மாளை யார் தேடுகிறதென்று வெளியில் வந்தாள்.
வந்த பெண்பிள்ளை – தாயாரம்மாளை நானே தேடுகிறேன். அந்த அம்மாளிடத்தில் ஒரு சமாசாரம் சொல்லவேண்டும்.
தன்னை ஒரு பெண்பிள்ளை தேடி வந்திருக்கிறாளென்றறிந்த தாயாரம்மாள் வெளியில் வந்து நான்தான் தாயாரம்மாள்; என்னிடத்தில் என்ன சொல்லவேண்டும்? என்றாள். வந்த பெண்பிள்ளை தாயாரம்மாள் அருகிற் சென்று இரகசியமாக சிலவற்றைச் சொன்னாள். தாயாரம் மாள் எப்பொழுது? என்றாள். வந்தவள் காலைமுதல் என்றாள். தாயா ரம்மாள் நான் உன்னோடு வரத்தடையில்லையென்று வந்தவளிடம் சொல்லிக் கமலாக்ஷியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டுச் சென்றாள்.
17ம் அத்தியாயம்
தாயாரம்மாளும் கமலாக்ஷியும் ஒரு பெண்பிள்ளையோடு சென்று ஒரு வீட் டுக்கெதிரிற்போய் நின்றார்கள். கமலாக்ஷி அவ்வீட்டைப் பார்த்து, அம்மா! இது அம்புஜத்தின் வீடல்லவா என்று கேட்டாள்.
தாயாரம்மாள் – ஆம் கமலாக்ஷி! அம்புஜத்துக்குக் காலையிலிருந்து பேதியாகிறதால் நம்மை அழைத்துப்போகிறாள். பேதியாகிற விடத்தில் போக உனக்குப் பயமிருந்தால் நீ இங்கே நிற்கலாம். நான் போய் அம்புஜத்தைப் பார்த்து வருகிறேன்.
கமலாக்ஷி.- எனக்கு அது விஷயத்தில் பயமில்லை. எங்கு பதுங்கியிருந்தாலும் ஆயுள் முடிந்தால் யமன் கண்டு பிடித்துக்கொண்டு போய்விடுவான். மரகதத்துக்கு ஓர் வார்த்தை சொல்லியிருந்தால் அவளும் வந்திருப்பாளே ! சொல்லாமல் வந்துவிட்டோமே!
தாயாரம்மாள் – எல்லாம் அறிந்த பின்னும் நாம் அதை நினைக்கலாமா? மரகதத்துக்கு வர இஷ்டமிருந்தாலும் அவள் தாய் தந்தையார் உத்தரவு கேட்டே வரவேண்டும். அவர்கள் தடைசெய்தால் அவர்களுக்குச் சமாதானம் சொல்லி அழைத்து வரவேண்டும். நாம் தீவிரமாக வரவேண்டியதாயிருந்தால் மரகதத்தைக் குறித்துப் பின் யோசித்துக் கொள்ளலாமென்று உன்னை அழைத்து வந்தேன் வா. (என்று வீட்டுக்குள் சென்றாள்.)
வீட்டுக்குள் பாயில் படுத்திருந்த அம்புஜம் வந்தீர்களா!உட்காருங்கள் என்றாள்.
தாயாரம்மாள் – அம்மா அம்புஜம்! எத்தனை தடவை பேதியானது? இப்பொழுது எப்படியிருக்கிறது?
அம்புஜம்.- அம்மா! பேதி பத்துதடவைக்கு அதிகமாய்விட்டது. வாந்தியும் ஐந்தாறு தடவை ஆயிற்று. ஒருமணிநேரமாக ஒன்றும் இல்லை. ஆயினும் வாந்தி வருகிறது போலிருக்கிறது. உங்களிடத்தில் ஒரு உபகாரத்தைப் பெற்றுக்கொள்ளவே உங்களை வரவழைத்தேன். மரகதம் வந்திருந்தால் உத்தமமாக இருக்கும். என் மாமன் மாமி அனுப்பமாட்டார்கள். என் செய்வேன்! என்னுடைய காலம் இவ்விதமாக முடிந்தது. நான் இறந்தபின் இக்குழந்தையை என் தமக்கை வருமளவும் காப்பாற்றக் கேட்டுக் கொள்ளவும், ஒருவேளை என் தமக்கையும் காப்பாற்றாமல் கை விடுவாளானால் நீங்களே காப்பாற்றவேண்டுமென்று உங்களைக்கேட்டுக் கொள்ளவும் வரவழைத்தேன். நீங்கள் என் வேண்டுகோளுக்கு இரங்கினால் நான் சந்தோஷத்தோடு இறப்பேன். (என்று சொல்லிக் களைத்துச் சிலநேரம் மூர்ச்சையா யிருந்தாள்.)
கமலாக்ஷி தங்களை அழைத்துவந்த பெண்பிள்ளையினிடம் சில மருந்து தினுசுகளைச் சொல்லி அதைக் கஷாயம் போட்டு உடனே கொடுக்கும்படி சொல்லி அம்புஜம் மூர்ச்சை தெளிந்ததைக் கண்டு, அம்மா அம்புஜம்! நீ கேட்டுக்கொண்டதைச் செய்யத் தாயாரம்மாளால் முடியுமென்று நான் நினைக்கவில்லை. காரணம் உனக்குத் தெரிந்திருக்கிறது. நீ கேட்டுக்கொண்டது தாயாரம்மாளால் முடியாமற்போனாலும் நான் உன்னுடைய குழந்தையைக் கைக்கொண்டு காப்பாற்றுகிறேன். அந்தக் குழந்தையைக் குறித்து நீ கவலைப்படவேண்டாமென்று வாக்களித்தாள்.
அம்புஜம்.- அம்மா கமலாக்ஷி! நீ என்னை அறியாதவளாயிருந்தாலும் நீ செழுங்கமலத்தம்மாள் மகள் என்று எனக்குத் தெரியும். நீ வனசாக்ஷி வீட்டுக்குப் போகும்பொழுது அனேக முறை பார்த்திருக்கிறேன். உன் சொல்லை நம்பினேன். இனி நான் கவலையில்லாமல் இறக்கலாம். ஆயினும் நான் இந்த வயதில் இவ்விதமாக இறப்பேனென்று நினைக்க வில்லை.
தன்னை அறிவேனென்று தன்னுடைய தாயார் பெயரையும் தன் சினேகியின் பெயரையும் சொன்னவுடன் கமலாக்ஷி ஆச்சரியப்பட்டு, அம்மா அம்புஜம்! நீ என்னை எப்படி அறிவாய்? உன்னைப் பார்த்திருப்பதாக என் ஞாபகத்திற்கு வரவில்லையே.
அம்புஜம்.- அம்மா கமலாக்ஷி! அது விஷயத்தைக் குறித்துப் பேசக்சக்தியில்லை. ஆயினும், ஆசைக்கோர் அளவில்லை யாகையால் வேறொரு உபகாரம் உங்களிடத்தில் பெற்றுக்கொள்ள ஆசை தூண்டுகிறது. சொல்லச் சொன்னால் சொல்லுகிறேன்.
தாயாரம்மாள் – அம்புஜம்! எங்களால் முடிகிறதாயிருந்தால் செய்யத்தடை யில்லை. உன்மனதில் இருப்பதைச் சொல்லலாம்.
அம்புஜம்.- அம்மா! நான் சொல்வதைக்கேட்டு என்னை நிந்திக்கவேண்டாம். என்னுடைய தீவினையால் நான் அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவித்தேன். ஆயினும் என்னுடைய ஆன்மா என்னைவிட்டு நீங்கும்போது ஒரு பற்றுமில்லாமல் நீங்கவேண்டுமென்பதே என் கருத்தாதலால், எனக்கு இவ்வுலகத்திலுண்டாகிய ஆசையெல்லாம் நீங்கினாலும் ஒரு ஆசை மட்டும் என்னைவிட்டு நீங்காமலிருக்கிறது. அந்த ஆசையை நீக்கிக் கொண்டு இறக்கவேண்டுமென்கிற எண்ணம் இருப்பதால், அது நீங்க நீங்கள் உதவி செய்யவேண்டும்.
கமலாக்ஷி.- அம்மா அம்புஜம்! உன் மனதில் இருப்பதை வெளியிட்டால் எங்களால் இயன்றதைச் செய்து உன் இஷ்டத்தை நிறைவேற்றுகிறோம்.
அம்புஜம்.- அம்மா கமலாக்ஷி! நான் சிறுபொழுது விளையாட்டில் என் அத்தானோடு சொல்லிக்கொண்டிருந்தது அனேகம். அவைகளில் ஒன்றை இன்று பூர்த்தியாக்கினேனென்று மெய்ப்பித்துவிட்டால் நான் பற்றற்றவளாவேன். நீங்களிருவரும் ஏதாகிலும் ஒரு உபாயஞ்செய்து என் ஆன்மா நீங்குமுன் கடைசியாக நான் என் அத்தானைப் பார்க்கும்படி அவரை அழைத்து வரவேண்டும். இந்த ஆசையைப் பூர்த்திசெய்யப் பிரார்த்திக்கிறேன்.
கமலாக்ஷி அம்புஜத்தின் வேண்டுகோள் அசாத்தியமானதாக இருக்கிறதே! என்று சில நேரம் யோசித்திருந்து, அம்மா அம்புஜம்! நான் உன் அத்தானை அழைத்துவருகிறேன், என்று தாயாரம்மாளோடு எழுந்தாள்.
அம்புஜம்.- அம்மா கமலாக்ஷி! நீ என் விஷயத்தில் பெரும் பிரயாசை எடுத்துக் கொள்ளப் போகிறாய். அது பிரயோசனமடைந்து வரும்பொழுது நான் இறந்திருக்கக்கண்டால் என் கைப்பெட்டியிலிருக்கும் கடிதத்தை யெடுத்து என் அத்தானிடம் கொடுக்கவேண்டும்.
தாயாரம்மாளும் கமலாக்ஷியும் வீட்டுக்கு வந்த பின் மரகதத்தை அழைத்து அம்புஜம் இருக்கும் ஸ்திதியையும் அவள் விருப்பத்தையும் சொல்லி இத்தருணத்தில் அவள் எண்ணத்தை நிறைவேற்றவேண்டியது அவசியமானதால், நமது தமையனை வரவழைக்க வேண்டும். உன் கருத்து என்ன என்று கேட்டார்கள்.
வினைவழியைத் தள்ளி நடக்க ஒருவராலும் முடியாது. அவள் இறக்கப் போகும்பொழுது விரும்பியதைச் செய்யாமற் போவது பெரும்பாதகமாய் முடியும். நான் என் தாயாரிடத்தில் சொல்லி என் தமையனை வரவழைக்கச்செய்கிறேனென்று மரகதம் ஓடினாள். தாயாரம்மாளும் கமலாக்ஷியும் பின்சென்று மரகதத்தின் தாய் உடன்படாமல் இருப்பதைக்கண்ட கமலாக்ஷி அவள் மனங்கரைய அனேக நீதிகளைச் சொன் னாள். மரகதத்தின் தாய் கமலாக்ஷி பேசுந்திறமையைக்கண்டு தன் புருடனிடம் அழைத்துச்சென்று கமலாக்ஷி சொல்வதைக் கேளுங்க ளென்றாள். பெரியவர் கமலாக்ஷியைப் பார்த்து அம்மா கமலாக்ஷி! என்ன சொல்லப்போகிறாய்? என்றார்.
கமலாக்ஷி – அப்பா! உலகில் ஒருவர் நோயாயிருந்தால் அவருக்கு வைத்தியரால் மருந்து கொடுத்து சொஸ்தப் படுத்துகிறோம். மருந்துக்குத் தக்கவிதமாக வைத்தியரும் பத்தியம் ஏற்படுத்துகிறார். வைத்தியர் சொல்லிய பத்தியத்தை விட்டு நாம் வேறொன்றைக் கொடுக்கலாமா?
பெரியவர்.- அம்மா கமலாக்ஷி! நீ எதற்காக இந்தக்கேள்வி கேட்கிறாயோ தெரியவில்லை. நீ கேட்பதற்குப் பதில் சொல்லியே பார்க்கவேண்டும். நோயாளியின் நன்மையைக் கருதி வைத்தியர் சொன்னதால் அவ்வண் ணமே பத்தியங்கொடுக்கவேண்டும்.
கமலாக்ஷி.- நோயாளி சொஸ்தமடையானென்று வைத்தியர் உண்மையாகக் கண்டபின் நோயாளிக்கு இஷ்டமானதைக் கொடுங்களென்றால் அப்பொழுது என்ன செய்கிறது?
பெரியவர்.- நோயாளி பிழைக்கமாட்டானென்று கண்டபின் அவனைப் பத்தியத்தில் வைப்பதில் பிரயோசனமில்லை. அவன் இஷ்டப்பட்டதைக் கொடுக்கவேண்டியதே!
கமலாக்ஷி – அப்பா! தங்களை இன்னும் ஒன்று கேட்கவேண்டும். அனேகரைத் துன்பத்திலழுத்திய கொலைபாதக னொருவனைக் கொலை செய்ய உத்தரவானபின் அவன் இறக்க இரண்டொரு நாளுக்குமுன் தனக்குன்ன வஸ்துவின்மேல் விருப்பமிருக்கிறதென்றாவது தனக்குரிய மனிதரைப் பார்க்கவேண்டு மென்றாவது கேட்டால் துரைத்தனத்தார். என்ன செய்கிறார்கள்?
பெரியவர்.- அனேகரைக்கொன்ற கொலைபாதகனானாலும் அவன் இறக்கப் போகிறபடியால் இஷ்டப்பட்டதைப் பூர்த்திசெய்தே அவனைக் கொல்லுகிறார்கள்.
கமலாக்ஷி – அப்பா! கடைசியாக ஒன்று கேட்டபின் என் கருத்தைச்சொல்லுவேன். நாம் இறக்குங் காலத்தில்-அதாவது – ஆன்மா உடலைவிட்டு நீங்கும்பொழுது நினைத்த உருவைக் கடவுள் கொடுக்கிறாரென்கிறார்களே! அது உண்மையா?
பெரியவர்.- அம்மா கமலாக்ஷி! நீ முன் கேட்டவைகளுக்குப் பதில் சொல்லியதுபோல் இதற்குச் சொல்லமுடியாது. ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் வினைக்கீடாக ஜன்மம் கிடைக்குமேயன்றி வினைக்குமாறாக ஜன்மம் வராது.
கமலாக்ஷி – வினைக்குமாறாக ஜன்மம் வராதென்பது உண்மையே! வினைக்கீடாக எண்ணம் உதிக்குமல்லவா?
பெரியவர்.- ஆம்! வினைக்கீடாகவே எண்ணம் உதிக்கும்.
கமலாக்ஷி – உதித்த எண்ணத்திற்கேற்க உடல் கடவுள் கொடுப்பாரல்லவா?
பெரியவர் – வினைக்கீடாயுதித்த எண்ணத்தைப்போல் உடல் கிடைக்கிற தென்றே யாவரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள்.
கமலாக்ஷி – அப்பா! தாங்கள் அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்து முடியாமல் நேராகப்பதில் சொல்லிவிட்டீர்கள். ஆன்மா உடலைவிட்டு நீங்கும் பொழுது நினைத்த உருளவர் கடவுள் கொடுக்கிறாரா? என்ற வினாவுக்கு நினைத்த உருவே கிடைக்குமென்றே விடைகொடுக்கவேண்டும். எவ் விதமெனில் – எவருக்கும் வினைக்கு மாறாக எண்ணம் உதிக்காததால் உதித்த எண்ணம்போல் உடல் கிடைக்குமென்றே சொல்லத் தடை யொன்றுமில்லை.
பெரியவர்.– அம்மா கமலாக்ஷி! நீ சொல்வது நியாயமே!
கமலாக்ஷி – அப்பா! தாங்கள் ஒப்புக்கொண்டபின் என் கருத்தைச் சொல்ல வேண்டியதே! வைத்தியர் முடிவில் இஷ்டப்பட்டதைக் கொடுக்கிறார். துரைத்தனத்தாரும் இறக்கிறவர்களுடைய இஷ்டத்தைப் பூர்த்தி செய்கிறார்கள். ஆன்மா உடலிலிருந்து நீங்கு முன்னம் கொண்ட எண்ணத்தைக் கடவுள் பூர்த்தி செய்கிறார். ஒருவர் இறக்குந் தருணத்தில் ஒன்றை விரும்பினால் நாம் என்ன செய்கிறது?
பெரியவர்.- அவர்களுடைய வேண்டுகோள் பிறருக்கு ஒரு கெடுதியையும் தராதாயின் அவர்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியதே முறைமை.
கமலாக்ஷி – அப்பா! எங்களுடைய குடும்பத்துக்கு அவமானத்தை விளை வித்ததோடு, எனக்கும் பல முறைகளில் கெடுதி செய்துவந்த என் பெரிய தந்தையின் மகள் இறக்க இருக்கிறதாகவும், என்னைப் பார்க்க ஆவல் கொண்டிருப்பதாகவும் நான் இக்கிராமத்திலிருப்பதையறிந்து சொல்லி – யனுப்பினாள். நான் தங்களுடைய உத்தரவை எதிர்பார்த்திருக்கிறேன்.
பெரியவர்.- அம்மா கமலாக்ஷி! அவள் வாழ்நாளெல்லாம் தொந்தரை கொடுத்திருந்தாலும் சாகுந்தருணத்தில் உன்னைப் பார்க்க வேண்டுமென்றால் நீ போய்ப் பார்ப்பதே மேன்மை. “நீர் கிழிய வெய்தவடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம்.” என்று பிரமாணமிருக்கிறது. யோசித்துப்பார்.
கமலாக்ஷி – அப்பா! தாங்கள் சொல்வதுபோல் செய்யத் தடையில்லை. ஆயினும் நான் தனித்து எப்படிப் போகிறதென்றே யோசிக்கிறேன்.
பெரியவர்.- தாயாரம்மாளையும் மரகதத்தையும் அழைத்துப் போகலாம்.
கமலாக்ஷி – அண்ணனை அழைத்துக்கொண்டு போவது உத்தமமென்று நினைக்கிறேன்.
பெரியவர் – சொக்கலிங்கம் இங்கிருந்தால் அழைத்துக்கொண்டு போகலாம். அவன் இல்லையே!
கமலாக்ஷி – அண்ணன் இருந்தால் அவரை எங்களோடு அனுப்பத் தங்களுக்கு ஆட்சேபனை உண்டோ?
பெரியவர் – ஆட்சேபனை ஏன் உண்டாகும்? உன் பெரிய தந்தையின் மகள் எங்கிருக்கிறாள்?
கமலாக்ஷி – அவள் இக்கிராமத்தில் நெடுநாளாக இருக்கிறதாகக் கேள்வி.
பெரியவர்.- இக்கிராமத்தில் நான் அறியாதவர்கள் இல்லை. அவள் பெயர் என்ன?
கமலாக்ஷி – அப்பா! அவள் பெயரைச் சொன்னால் தாங்கள் கோபிப்பீர்கள்.
பெரியவர் – சாகப்போகிறவள்மேல் கோபம் ஏன் வரும்?
கமலாக்ஷி – அப்பா! அவள்பெயர் அம்புஜம்.
பெரியவர்.- என்ன சொன்னாய் அம்புஜமா? எந்த அம்புஜம்?
கமலாக்ஷி.- தங்களுடைய சகோதரியின் மகள்.
பெரியவர்.- அம்புஜத்தைப் பார்க்கவா என் மகனை அழைத்துக்கொண்டு போக யோசித்தாய்! அந்த எண்ணத்தை விட்டுவிடு. அவளால் என் குடும்பம் எக்கதியானதென்று நீ யறிந்திருந்தால் இவ்விதம் சொல்லத் துணியமாட்டாய். அவள் கொடிய துன்மார்க்கி!
கமலாக்ஷி – அப்பா! அம்புஜம் மரிக்குந்தருணத்திலிருக்கிறாள். இது பரி யந்தம் இறந்தாளோ உயிரோடிருக்கிறாளோ தெரியவில்லை. அவள் இற க்குமுன் அண்ணனைக் கடைசியாகப்பார்த்து உயிரைவிட்டால் தனக்கு உலகபற்று இல்லாமற்போகுமென்று நினைக்கிறாள். தாங்கள் முன் சொன்ன விஷயங்களை யோசித்து அண்ணனை அனுப்பவேண்டும். “நீர் கிழியவெய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம்.” என்ற வாக்கைத் தாங்களும் மறக்காமல் இருக்கவேண்டும்.(என்று சிறித்தாள்.)
பெரியவர் சிரித்துக்கொண்டு அம்மா கமலாக்ஷி ! நீ அறியாதவளாயிருந்தும் என்னை ஏமாற்றிவிட்டாய்! அம்புஜத்தின் விஷயத்தில் என் மனதைத் திருப்ப அனேகம் சொன்னாய். அவள் விஷயத்தில் எனக்கு மனமில்லையாயினும் உன் மனம் சந்தோஷமடைய நான் ஒப்புக் கொள்ளவேண்டியதாயிருக்கிறது. சொக்கலிங்கம் கிராமத்தைவிட்டுப் போய்விட்டானே அதற்கென்ன செய்யலாம்?
கமலாக்ஷி – அப்பா! அண்ணனை விரைவில் அழைத்துவரத் தாங்கள் உத்தரவு செய்யவேண்டும்.
பெரியவர்.- அம்மா! நான் மறுத்தொன்றும் சொல்லாமலிருக்க, என்னை எப்பக்கத்திலும் கட்டுப்படுத்திவிட்டாய். (என்று வண்டிக்காரனைக் கூப்பிட்டுச் சொக்கலிங்கத்தை ஊரிலிருந்து அழைத்துவரும்படி உத்தரவளித்தார்.)
வண்டிக்காரன்.- ஐயா இன்னும் ஊருக்குப்போகவில்லை. அவருடைய சினேகர் வீட்டிலிருக்கிறார். என்னைப் பத்து மணிக்கு வண்டிகொண்டுவரும்படி உத்தரவு செய்திருக்கிறார். நான் வினாடியில் அழைத்துவருகிறேன்.
பெரியவர் – அம்மா கமலாக்ஷி! உன் எண்ணம் எப்பக்கத்திலும் பூர்த்தியாகிறது. நீங்கள் சென்று சித்தமாக இருங்கள். (என்று அனுப்பிவிட்டுத் தன் பெண்சாதியைப் பார்த்து) அம்மணி! கமலாக்ஷியின் சாமர்த்தியத்தைப் பார்த்தாயா? என் மனதைத் திருப்பிவிட்டாள். அம்புஜத்துக்கு என்ன செய்கிறது உனக்குத் தெரியுமா?
அம்மணி கேள்விப்பட்டதைச் சொல்லிக்கொண்டிருந்தாள். தாயாரம்மாளும் மரகதமும் கமலாக்ஷியைப் பார்த்துப் பெரியவர் மனதைத் திருப்ப அதிக பிரயாசை எடுத்துக்கொண்டாய் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது, சொக்கலிங்கம் வீட்டுக்குள் வந்து தன் தங்கையைப்பார்த்து, அம்மா மரகதம்! அப்பாவும் அம்மாளும் என்னை ஏன் அழைத்தார்கள்? என்றான்.
மரகதம் – அண்ணா! தாங்கள் அம்மாளால் அறிந்துகொள்வதே உத்தமம்.
தன் தாயாரிடம் சென்ற சொக்கலிங்கம் சிலநிமிஷத்தில் திரும்பிவந்து, அம்மா கமலாக்ஷி! என்னை அழைத்துவரச்சொன்னது எதற்கென்று மரகதத்தை கேட்டால் அவர்கள் தாயாரைப்போய்க் கேட்கச் சொன்னதும், தாயாரைப் போய்க் கேட்டால் தங்கை கமலாக்ஷியைக் கேள் என்கிறதும் வேடிக்கையாக இருக்கிறது. நீ யாரைப் போய்க் கேட்கச் சொல்லப்போகிறாய்? (என்று நகைத்தான்.)
கமலாக்ஷி – அண்ணா! நான் ஒருவரிடத்தும் தங்களை அனுப்பவில்லை. நானே சொல்லுகிறேன். தங்களை வரவழைத்த காரணத்தைச் சொல்லுமுன் நான் இரண்டொரு கேள்விகள் கேட்டு அதற்குப் பதில் கிடைத்த பின் சொல்ல வேண்டுமேயொழிய அதற்குமுன் சொல்லமுடியாது. (என்று சிரித்தாள்.)
சொக்கலிங்கம்.- அம்மா கமலாக்ஷி! என்னை என்ன கேட்கப்போகிறாய்? அம்மாள் என்னை வரவழைத்தது எதற்காக? கெட்டசமாசாரம் சொல்லவா? அல்லது நல்ல சமாசாரம் சொல்லவா ? அதை முதலில் சொல்ல வேண்டும்.
கமலாக்ஷி – அண்ணா! அது நல்லதென்றும் கெட்டதென்றும் சொல்லமுடியாது. நான் தங்களால் அறியவேண்டியதை அறிந்தபின் சொல்லுகிறேன். ஆனதால் நான் கேட்பதற்குப்பதில் சொல்லவேண்டும். அதா வது – நான் தங்களை அறிந்தவளாயிருந்து தங்கள் விஷயத்தில் ஒரு கெடுதியைச் செய்தால் தாங்கள் என்னை எவ்விதம் நடத்துவீர்கள்?
சொக்கலிங்கம். – அந்தக் கேள்வி என்னத்திற்கு அம்மாள் என்னை ஏன் வர வழைத்தார்கள்? அதைத் தெரிவித்துப்பின் நீ கேட்க இஷ்டங்கொண்டதைக் கேட்கலாம்.
கமலாக்ஷி – அண்ணா! நான் கேட்பவைகளுக்குப் பதில் கிடைக்குமுன்னம் அதைச் சொல்ல முடியாமலிருக்கிறதைக் குறித்து வியசனப்படுகிறேன். தங்கள் விருப்பத்தின்பிரகாரம் நடக்காமல் தடைசெய்வதைக் குறித்து என்னை மன்னித்து நான் கேட்டதற்குப் பதில் சொல்லவேண்டும்.
சொக்கலிங்கம். – அம்மா! உன் கருத்து அவ்விதமிருந்தால் நான் பதில் சொல்ல வேண்டியது அவசியம். ஒருவரை யொருவர் அறிந்து சினேகமா யிருப்பவர்கள் கெடுதியைச் செய்வார்களானால் அவர்களுடைய சினேகத்தை விட்டு அவர்களை அன்னியரைப் போல் பார்க்கவேண்டியதே முறைமை.
கமலாக்ஷி – அண்ணா! நான் என்னைக் குறித்துக் கேட்ட கேள்விக்குத் தாங்கள் அதைப் பொதுவாக்கிப் பதிலுரைத்தீர்; நான் தங்கள் விஷயத்தில் ஒரு காலத்தில் கெடுதியைச் செய்து மற்றொரு காலத்தில் தங்களை அடுத்து, அண்ணா! நான் அறியாமற் செய்ததை மன்னிக்க வேண்டு மென்று கேட்டுக்கொண்டால் என்ன செய்வீர்கள்?
சொக்கலிங்கம். – அம்மா கமலாக்ஷி! கெடுதலை செய்தவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று பெரியோர்கள் சொல்லியிருக்க, நன்மையைச் செய்யாமற் போனாலும் மன்னிக்கவேண்டியது கடமை என்பதற்குச் சந்தேகமில்லை.
கமலாக்ஷி – அண்ணா! தாங்கள் பொதுவகையாகச் சொல்லாமல் தங்களுடைய கருத்தை மட்டும் சொல்ல வேண்டும்.
சொக்கலிங்கம்.- அம்மா கமலாக்ஷி! என்னுடைய கருத்தும் அதுவே எனக்குக் கெடுதியை ஒருவர் செய்து பின் என்னை அடுத்து, செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டுமென்று கேட்டால் தடை சொல்லாமல் மன்னிப்பேன்.
கமலாக்ஷி – அண்ணா! தாங்கள் நன்றாய் யோசித்துச் சொல்லவேண்டும்; நான் தங்கள் விஷயத்தில் செய்வது சகிக்க முடியாத கொடுமையாக இருந்தாலோ?
சொக்கலிங்கம் – என் உயிருக்கே நீ உலை வைத்திருந்து, நான் இந்த எண்ணங்கொண்டிருந்தேன். அது என்மேல் குற்றம். அந்தக் குற்றத்தை மன்னிக்க வேண்டுமென்று கேட்டால் உன்னை மன்னித்து விடுவேன். (என்று நகைத்தான்.)
கமலாக்ஷி – அண்ணா! உயிருக்குத் தீங்கைத்தேடுவது பெரிய குற்றமல்ல. அதை விட்டுத் தங்களுடைய ஆயுள் காலமெல்லாம் துன்பமடைய ஒன்றைச்செய்து அதனால் துன்பத்தை அனுபவித்திருக்கும் தங்களை அடுத்துச் செய்த குற்றத்தை மன்னிக்கவேண்டுமென்று கேட்டால் அப்பொழுது மன்னிக்க மனம் வருமா?
சொக்கலிங்கம்.-நான் ஒருவரைக் குறித்தும் பேசவில்லை. என் வரைக் கும் பேசுகிறேன். நான் செய்தது குற்றம், அதை மன்னிக்கவேண்டு மென்று கேட்டால் தடை சொல்லாமல் மன்னிப்பேன். என்னை அழைத்துவரச் சொன்னது எதற்காக? அதை இப்பொழுதாகிலும் சொல்லக்கூடாதா?
கமலாக்ஷி – அதைச் சொல்லவே இந்தக் கேள்விகளெல்லாம் வருகின்றன. தங்களுடைய ஆயுள் காலமெல்லாம் நான் தங்களைத் துன்பப்படவிட்டு நான் சாகுஞ்சமயத்தில் என் குற்றத்தை மன்னிக்கவேண்டும். என்றாலோ?
சொக்கலிங்கம் – அம்மா கமலாக்ஷி ! அதை வெவ்வேறு விதமாகத் திருப்பிக் கேட்க வேண்டிய அவசியமில்லை. எனக்குக் கெடுதியைச் செய்தவர்கள் சாகும் தருணத்தில் ஒருவரை விட்டு மன்னிப்பு கேட்டுவரும்படி அனுப்பினால் நான் நேரில் சென்று அவர்கள் மனம் ஸந்தோஷமடையச் செய்து வருவேன். வேறென்ன கேட்கப்போகிறாய்?
கமல் க்ஷி – வேறொன்றும் இல்லை. தாங்கள் சொல்லியது உண்மைதானா?
சொக்கலிங்கம். – அது விஷயத்தில் சந்தேகம் கொள்ளவேண்டிய காரணமென்ன?
கமலாக்ஷி – காரணம் ஒன்றும் இல்லை. தாங்கள் சொல்லிய வண்ணம் செய்வீரா என்ற சந்தேகம் ஒன்று மத்தியில் உண்டானதேயன்றி வேறொன்றுமில்லை.
சொக்கலிங்கம் – சந்தேகம் கொள்ளாமல் என்னை அழைத்த காரணத்தைச் சொல்ல இன்னும் காலம்போக்கவேண்டாம். நீ எதற்காக இவைகளை யெல்லாங் கேட்டாயோ தெரியவில்லை.
கமலாக்ஷி – அண்ணா! தாங்கள் இவ்வளவு சொல்லியபின் வாக்குத் தவறமாட்டீர். நான் முக்கியமாக அம்புஜத்தைக் குறித்துப் பேசவே இவைகளை யெல்லாம் கேட்டேன்.
சொக்கலிங்கம். – யாரைக்குறித்துப் பேச? அம்புஜத்தைக் குறித்துப்பேச வா! அவள் பேச்சு இங்கு எதற்கு வருகிறது? அவள் பேச்சு ஏதாகிலும் இருந்தால் அதை என் காதில் போடவேண்டாம்.(என்று வெளியிற் போக எத்தனித்தான்.)
கமலாக்ஷி – அண்ணா! தாங்கள் இதுவரையில் சொன்னவைகளெல்லாம் சர்க்கரை இனிப்பென்று ஏட்டில் எழுதிவைத்துக்கொண்டது போலா யினவேயன்றி, உண்மையாகக் காணப்படாமற் போனதைக் குறித்து வியசனப்படுகிறேன்.
சொக்கலிங்கம்.- அம்மா கமலாக்ஷி! அம்புஜம் என் விஷயத்தில் செய்ததை அறிந்தால் என்னை நிந்திக்கமாட்டாய்.
கமலாக்ஷி- அம்புஜம் தங்கள் விஷயத்தில் செய்தகுற்றம் தங்கள் மனதில் வேரூன்றியிருப்பதால், அதையொட்டிப்பேசி இல்லாததை உண்டென்று ஸ்தாபிக்கவேண்டிய அவசியமில்லை; அதை வெட்டிப்பேசிய தங்களுக்கு நியாயத்தைக்காட்டவேண்டும். அம்புஜம் தங்கள் விஷயத்தில் செய்த குற்றம் என்ன? அவள் தங்களை விவாகஞ்செய்து கொள்ளுகிறேனென்று சொல்லி அவ்வாக்கினின்நும் தவறினாளே! அதுதானே குற்றம்! நாம் சிறுவர்களாயிருந்தபொழுது அனேகம் செய்தோம். அனேகம் சொன்னோம். அவைகளை வயதேறியபின் கண்டு முன்செய்த வைகளும் சொன்னவைகளும் தப்பிதமென்று தள்ளி விடுகிறோம். சிறு பொழுது சொன்னதை நிலைநிறுத்தவேண்டுமென்பது வியாயமா?சிறு பொழுதில் ஒருவரை விவாகஞ் செய்துகொள்ளுகிறேனென்று பெரிய வளானபின் தனக்குச் சம்மதமில்லாமற்போனாலும் இருபக்கத்துத் தாய் தந்தையாரால் தடைபட்டாலும் சிறுபொழுதில் கொண்ட எண்ணம் நிறைவேற நியாயமில்லை. ஆனதால், அம்புஜம் வாக்குத்தவறியதில் குற்றமுள்ளவளென்று காணப்படவில்லை.
சொக்கலிங்கம்.- அம்புஜம் என்னை விவாகம் செய்துகொள்ளாதது குற்றமாயிராமற்போனாலும், தன்னுடைய துர் நடத்தைக்கு அடையாளமாக ஒரு பிள்ளையைப் பெற்று வைத்திருக்கிறாளே! அது ஒன்று போதாதா! வேறொரு குற்றமும் செய்யவேண்டுமா? அவளுடைய நடத்தையை அறிந்த அவள் தாயாரும் இறந்தாள். அவள் தமையனும் தேசாந்தரம் போனான். இதை அல்லவென்று எப்படி வெட்டிப் பேசப் போகிறாயோ பார்க்கவேண்டும்.
கமலாகக்ஷி – அண்ணா! தாங்கள் அறியாததை நான் என்னசொல்லப்போகிறேன் ! அம்புஜம் குழந்தையைப் பெற்றுவைத்திருப்பது அவளை மேன்மையாக்குகிறதேயன்றித் தாழ்வையுண்டாக்கவில்லையென்று எனக்குக் காணப்படுகிறது. எவ்விதமெனில் – விபசாரத்திலே கைதேறியவளுக்குக் கருப்பம் உண்டானால் அவள் உலகத்தை வஞ்சிக்கக் கருவை அழிப்பதையும்,பெற்றபிள்ளையை யெறிந்துவிடுவதையும் கண்டும் கேட்டுமிருக்கிறோம் அவ்விதகொடுமை ஒன்றும்செய்யாமல் குழந்தையை அன்போடு வளர்ப்பதை யோசித்தால், தான் மதிமோசத்தால் கற்பழிந்தவளென்று விளங்குகின்றது. உலகத்தை வஞ்சிக்க எண்ணங் கொள்ளாமல் தங்கள் வினையை நொந்திருப்பவர்கள் எல்லாப் பாவச்செய்கைகளுக்கும் பயப் படுவார்களாதலால், அவர்களைக் கண்டு பரிதாபப்படாமல் கோபங்கொள்வது நியாயமல்லவே! தாங்கள் அவள் மேலிருக்கும் கோபத்தைவிட்டு யோசித்தால் உண்மைவிளங்கும். தாங்கள் சற்றுநேரத்திற்கு முன் சொல்லிய வாக்குதத்தத்தினின்றும் தவறி மற்றவர்கள் வாக்கு தவறினார்களேன்று குற்றஞ் சாட்டுதல் நியாயமா? (என்று நகைத்தாள். அவ்விடத்தில் நின்று கேட்டிருந்த தாயாரம்மாளும் மரகதமும் நகைத்தார்கள்.)
சொக்கலிங்கமும் நகைத்து, அம்மா கமலாக்ஷி! நீ பேசுந் திறமையை நான் நேரில் புகழ்வதிற் பிரயோசனமில்லை. அம்புஜத்தின் விஷயத்தில் என்ன சொல்லப்போகிறாய்? நான் என்ன செய்யவேண்டும்?
கமலாக்ஷி – அண்ணா அம்புஜம் இது பரியந்தம் உயிரோடிருக்கிறாளோ அல்லது இறந்தாளோ தெரியவில்லை. அவளுக்கு வாந்திபேதி கண்டு முடிவுக்கு வந்திருக்கிறாள். நானும் தாயாரம்மாளும் பார்த்துவந்தோம். தங்களுடைய உத்தரவில்லாமல் அவள் வீட்டுக்குப்போன குற்றத்தை மன்னித்து அவள் வீட்டுக்குத் தாங்கள் வரவேண்டும். அவள் கடைசியாகத் தங்களைப்பார்த்துவிட்டு இறக்கவேண்டு மென்கிறாள். இந்த உபகாரம் எங்களுக்காகவாவது செய்யவேண்டும்.
சொக்கலிங்கம்.- அம்மா ! நான் எதற்காக அங்கு வரவேண்டும்?
கமலாக்ஷி – அம்புஜம் செய்த குற்றத்தை மன்னிக்கும்படித் தங்களை நேரில் கேட்டுக்கொள்ள எண்ணங் கொண்டிருக்கிறாளென்று நினைக்கிறேன்.
சொக்கலிங்கம்.- என் விஷயத்தில் செய்த குற்றத்தை நான் மன்னித்ததாக நீங்களே சென்று சொல்லிவிடுங்கள். அவள் இருக்கும் வீட்டுக்குப்போக என் மனம் எழவில்லை.
கமலாக்ஷி.- அண்ணா! “செய்வினை திருந்தச்செய்” என்ற வாக்குப் பிரகாரம் தாங்கள் நேரிற்கண்டு சொன்னால் அவள் சந்தோஷத்தோடு இறப்பாள். முன் தாங்கள் சொல்லிய வாக்குக்கு விரோதம் சொல்லாமல் எங்களோடு வரவேண்டும். விரைவில் போகாமற்போனால் அம்புஜத்தை உயிரோடு பார்க்க முடியாது.
சொக்கலிங்கம்.–எல்லாருடைய இஷ்டமும் அவ்விதமிருப்பதால் நான் இன்னும் தடை செய்துகொண்டிருப்பதிற் பிரயோசனமில்லை. போகலாம் வாருங்கள். (என்று எழுந்து நடந்தான்.)
மரசதம் தமையனுக்கு அஞ்சிப் பின் நின்றாள். கமலாக்ஷி அதிக மகிழ்வாய்த் தாயாரம்மாளோடு பின் தொடர்ந்து சென்றாள். சொக்கலிங்கம் அம்புஜத்தின் வீட்டருகிற்சென்று உள்ளுக்குப் போகாமல் வெளியில் நின்றிருப்பதைக் கமலாக்ஷி கண்டு, அண்ணா! சற்று இங்கிருங்கள்! பார்த்து வருகிறேனென்று ஓடி அம்புஜத்தைப்பார்த்து, அம்மா எப்படியிருக்கிறது? உன் அத்தானை அழைத்து வருகிறதாவென்று கேட்டாள். அம்புஜம் பேசச் சக்தியற்றுப் படுத்திருந்தவள் எழுந்து உட் கார்ந்து, அத்தான் வந்தாரா! என்று சந்தோஷப்பட்டு அத்தான்! விரைவில் வாருங்கள் என்று சக்தி யெல்லாம் சேர்த்து உரத்துக் கூப்பிட்டழைத்தாள். சொக்கலிங்கம் தன் மனதுக்கு விரோதமாகக் கமலா க்ஷியின் பலவந்தத்தினால் வந்தோமென்று அம்புஜத்தின் அருகிற் போய் நின்றான். அம்புஜம் சொக்கலிங்கத்தின் கால்களைப் பிடித் க்கொண்டு அத்தான்! அத்தான்! தங்களுக்கு வழி தெரிந்ததா? நான் இறக்கும் சமயத்திலா என்னைப்பார்க்க வந்தீர்கள்! ஐயோ ! ஒரு நாள் முன் வரக்கூடாதா! நான் பாவி. எதையுங்கொடுத்து வைக்க வில்லை. அத்தான்! தாங்கள் முதலில் என்னை எவ்வளவு இச்சித்திருந்தீரோ அவ்வளவுக் கதிக வெறுப்பை என் முடிவில் உண்டாக்கிக் கொண்டேனல்லவா? நான் என்ன செய்வேன்? என் வினைப் பயனை நானே அனுபவிக்க வேண்டியதால் ஒருவரை நோவதிற் பிரயோசன மில்லையென்று அழுது மூர்ச்சையானாள். சொக்கலிங்கம் அம்புஜத்தின்மேல் அதிக வெறுப்பைக் கொண்டிருந்தாலும் அவள் நிலை தவறிய பின்னும் தன் விஷயத்தில் கொண்டிருந்த அன்பு குறையாமலிருப்பதைக் கண்டு அவளைப் படுக்கவைத்துத் தன் கண்களில் நீர்வடியத் துக்கப்பட்டுக் கொண்டிருந்தான். சில நிமிஷங்களுக்குப் பின் அம்புஜம் விழித்துப்பார்த்து, அத்தான்! தங்களைப் பார்க்காமல் இறந்து விடுவேனென்ற பயம் எனக்கதிகமாயிருந்தது, நான் தங்க ளைப் பார்த்துவிட்டதால் என் கலி தீர்ந்துவிட்டது. இனி இறப்புக்கு அஞ்சேன். அத்தான் ! தங்களிடத்தில் சில சமாசாரங்கள் சொல்ல வேண்டுமென்று தங்களை அழைத்து வரும்படி கமலாக்ஷி யம்மாளைக் கேட்டுக்கொண்டேன். அவைகளைச் சொல்ல எனக்குச் சக்தியில்லா மலிருக்கிறது. அம்மா கமலாக்ஷி!நான் அத்தானிடம் என் மனதி லிருப்பதைச் சொல்லுமுன் இறந்து விடுவேனானால், முன் உன்னிடத்தில் சொல்லிய கடிதத்தை எடுத்து என் அத்தானிடத்திற் கொடுத்து விடவேண்டும். அத்தான்! தாங்கள் அக்கடிதத்தைச் சாவகாசத்தில் வாசித்துப் பார்க்கவும். அக்கடிதத்தில் என் குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அத்தொந்தரவைத் தங்களுக்குக் கொடுக்காமல் கமலாக்ஷி யம்மாள் ஒப்புக்கொண்டாள். ஒருவேளை கடவுளுக்குப் பிரியமிருந்து நான் இறக்குமுன் சிறிதுசக்தி கொடுப்பாராயின். நானே சொல்லுவேன். நான் முன்னதாக இரண்டு வரங்களைத் தங்களிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும். நான் இறக்குந் தருணத்தில் தடை செய்யாமல் அவைகளைக் கொடுக்கவேண்டும்.(என்று வேண்டினாள்.)
சொக்கலிங்கம். – அம்புஜம் ! நீ என் விஷயத்தில் செய்த குற்றம் பெரியதாயினும் இத்தருணத்தில் நீ விரும்பியதைக் கொடுக்கத் தடைசெய்யேன்.
அம்புஜம்.- அத்தான்! இப்பாதகியின்மேல் மனமிரங்கியதற்காக அநேக ரமஸ்காரம் செய்கிறேன். நான் கேட்ட வரங்கள் இரண்டிலே நான் தங்கள் விஷயத்தில் செய்த குற்றத்தை மன்னிப்பதொன்றும், நான் இற க்கும் வரையில் என்னை விட்டு நீங்காமல் இருப்பதொன்றுமே!
சொக்கலிங்கம்.- அம்புஜம்! இங்கு வருமுன் கமலாக்ஷியம்மாள் கேட்டுக் கொண்டபடி உன் குற்றங்களை மன்னித்துவிட்டேன். மற்றதும் உன்னிஷ்டம்போல் செய்வேன்.
அம்புஜம்.- அம்மா கமலாக்ஷி! என் முடிவு காலத்தில் என்னைக் கேட்காமல் எனக்கு வேண்டியவைகளைச் செய்து முடித்தாய். என் பிள்ளையையும் காப்பாற்றுகிறேனென்று வாக்களித்தாய். இந்த உபகாரங்களுக்குக் கைம்மாறாக என்ன செய்யப்போகிறேன்! என் உயிருள்ள பரியந்தம் இந்த உபகாரங்களை மறவேனென்று சொல்ல என்மனம் கூசுகிறது.
கமலாக்ஷி – ஏன் மனம் கூசுகிறதென்கிறாய்?
அம்புஜம்.- நான் இன்னும் எவ்வளவுநேரம் உயிரோடிருக்கப் போகிறே னென்று நினைத்தே மனம் கூசுகிறது.
கமலாக்ஷி – அம்மா அம்புஜம்! யாவரும் ஒரு நாளைக்கு இறக்கவேண்டிய வர்களே! நான் சொல்லிப் போடச்சொன்ன கஷாயம் இது. இதைக் குடித்துவிடு.(என்று வீட்டிலிருந்து பெண்பிள்ளை கொண்டுவந்ததை வாங்கிக் கொடுத்தாள்.)
அம்புஜம்.- அம்மா கமலாக்ஷி! அதைக் குடித்தவுடன் வாந்தி எடுக்கவேண்டும். வாந்தியெடுக்க என்னால் முடியவில்லை. நீ சொல்வதையும் தடுக்கப் பிரியமில்லை. (என்று எழுந்து உட்சார்ந்து வாங்கிக் குடித்தாள்.)
கமலாக்ஷி – வாந்தி நிற்கவே இதைக்கொடுத்தது. (என்று நெஞ்சைத் தடவிக் கொண்டிருந்து சில நிமிஷங்களுக்குப் பின் ஆகாரம் கொடுத்துப் படுக்கவைத்தாள்.)
அம்புஜம் சற்றுநேரம் படுத்திருந்தெழுந்து உட்கார்ந்து, அத்தான்! நான் தங்கள் விஷயத்தில் குற்றம் செய்யாதிருந்தால் இவ்விதமான மரணம் எனக்கு வராதல்லவா?
கொக்கலிங்கம். – அம்புஜம்! முடிந்து போனதைக் குறித்து யோசிப்பதாற் பிரயோசனமில்லை. இன்னும் சற்றுநேரம் படுத்திருந்தால் நன்மையாக இருக்குமென்று நினைக்கிறேன்.
அம்புஜம்.- அத்தான்! எனக்குப் படுத்திருக்க இஷ்டமில்லை. தாங்கள் என்னருகில் உட்கார்ந்து கையைக் கொடுங்கள். (என்று சையைப்பிடித்துக் கண்களில் ஒத்திக்கொண்டு) இந்த கரம் என்னை விட்டு நீங்க என்ன பாவம் செய்தேன்! என் மேல் குற்றமில்லாமலிருந்தால் நீங்குமா? நான் மரணமடைய இருக்கும்பொழுது யாவரும் வருவார்களே! தெய்வமே! நான் ஏன் பெண்ணாகப்பிறந்தேன்! இந்தத் துன்பங்களை அனுபவிக்கவா? (என்று அழுதாள்.)
கமலாக்ஷி.- அம்மா. அம்புஜம் ! நீ துக்கப்படுவதிற் பிரயோசனமில்லை. அண்ணன் சொல்லிய வண்ணம் சற்றுநேரம் படுத்துக்கொள்.
அம்புஜம்.- எனக்குப் படுக்க இஷ்டமில்லை. நான்சொல்வதை நீங்கள் மூவ ரும் கேட்டு இரகசியத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். நான் தேடிக் கொண்ட அவமானத்தைச் சொல்லாமல் இறந்தால் எனக்கு ஆறுதலை உண்டாகாது. அத்தான்! தங்களுடைய கை என் மடியிலிருக்கட்டும். (என்று கையைப் பிடித்து மடியில் வைத்துக்கொண்டு, கமலாக்ஷியைப் பார்த்து) அம்மா! நான் பிறந்து ஐந்து வயதானபின் என் மாமன் வீட்டில் வளர்ந்து என்தாயார் வீட்டில் பருவமடைந்தேன். நான் பருவமடைந்தபின் என் தமக்கைக்கு விவாகம் ஆகாததால் எனக்கு விவாக மாகாமல் இரண்டு வருடங்கள் தடைபட்டிருந்தது. நான் தாய், தமையன், தமக்கையுடன் இருந்த ஊரில் ஒரு வாலிபன் எங்கள் வீட்டு வழியாக நாள்தோறும் போகும்போது என்னைப்பார்த்து நகைத்து வந்தான். சிலநாள்களுக்குப்பின் அவனை என் தமையன் வீட்டுக்கு அழைத்து வந்து தாகத்துக்குக் கொடுக்கும்படி சொன்னார். அதுமுதல் அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவது வழக்கமாகி என் தாயார் தமையன் இல்லாத காலத்தில் வந்திருந்து அன்றிரவை எங்கள் வீட்டில் போக்கிச் சென்றான். அப்பாதகனால் பிள்ளையொன்று என் கையிலிருக்கச் சம்மதித்திருந்த பெரும்பாதகியாகிய என்னை மன்னிக்கத்தகுமா? (என்று அழுதாள்.)
கமலாக்ஷி – அம்மா அம்புஜம்! ஊழ்வழி மனஞ்செலுமாகையால் வியசனப் படுவதிற் பலன் ஒன்றும் இல்லை.
அம்புஜம்.- அத்தான்! தாங்கள் என்னை மன்னித்தேன் என்றாலும் அது மனப்பூர்த்தியாக வந்திருக்குமென்று நான் நம்பவில்லை.
சொக்கலிங்கம். – அம்புஜம்! அடுத்தடுத்து அதைக்கேட்பது யாவருக்கும் துன்பத்தைத் தருகின்றது. அவைகளையெல்லாம் நிறுத்து. நீ சற்று நேரம் படுத்துறங்கினால் உத்தமமாயிருக்கும்.
அம்புஜம்.- என் பிரியமான அத்தான்! தங்களுக்குள்ள கோபத்தை யடக்கி வெளிக்குக் காட்டாமல் பேசுவதை நன்றாயறிந்தேன். தாங்களும் மற்ற வர்களும் என் விஷயத்தில் எண்ணியதுபோல் நான் குற்றம் செய்தவள் ல்ல. இந்தக் குழந்தையும் என்னுடையதல்ல. இந்த இரகசியத்தைத் தங்களிடம் சொல்லாமலிருந்த குற்றத்தை மன்னிக்கவே தங்களைக் கேட்டுக்கொண்டேன். என் தலையணையின் கீழிருக்கும் சாவியை யெடுத்துப் பெட்டியைத் திறந்து தங்கள் மேல்விலாசத்துக்குள்ள கடிதத்தை வாசித்துப்பாருங்கள். (என்று படுக்கையிற் சாய்ந்து கண்களை மூடினாள்.)
சொக்கலிங்கம் விரைவாய் எழுந்து கடிதத்தைக் கைக்கொண்டு வாசித்து
ஆ! என் கண்மணி! இத்தனை நாள் உண்மையை அறிந்துகொள்ளாமல் உன் விஷயத்தில் கொடுமையாயிருந்த பாவியாகிய என்னைப் பார்க்கக்கூடாதென்றா கண்களை மூடிக்கொண்டாய்? என்று அம்புஜத்தின்மேல் சாய்ந்து மூர்ச்சையானான்.
அந்தச்சமயத்தில் சொக்கலிங்கம் சொல்லியதைக் கேட்டுக்கொண்டே வெளியிலிருந்து வந்த ஒரு பெண்பிள்ளை தூரத்திலிருந்தே அம்புஜத்தின் அருகிலிருப்பவர்களைப் பார்த்துப் பயந்து, என்னைக் காட்டிக்கொடுத்து அவமானத்தில் அழுத்தவா எண்ணங்கொண்டிருந்தாய்? அடி அம்புஜம்! உன்னை யமலோகம் குடிபுகுத்தி விடுகிறேனென்று சொல்லிக்கொண்டே ஒடிவந்தவள் வாயற்படி தடைப்பட்டு விழுந்தாள். அவள் சொல்வதைக்கேட்டுப் பின்தொடர்ந்து வந்த இருவரில் ஒருவன் ஒடிவந்து தூக்கி வாயிலும் நாசியிலும் இரத்தம் வருவதைப் பார்த்துத் தன்னோடு வந்தவரை யழைத்து, ஐயா!கனகாம்புஜம் மோசஞ்செய்து விட்டுப் போய்விட்டாள் போல் காணப்படுகிறதே! கைநாடியைப் பாருங்கள் என்று அவளைத் தன்னோடு வந்தவரிடம் விட்டுக் கனகாம்புஜம் சொல்லிக்கொண்டுவந்த தன்கருத் தென்ன வென்று வீட்டுக்குள் நுழைந்தான். அங்கு சொக்கலிங்கம் அம்புஜத்தின் அருகில் கையிலோர் காகிதத்தோடு விழுந்திருப்பதைக் கண்டு இக்காகிதம் அவள் சொல்லியதற்குக் காரணமாக இருக்குமோவென்று அக்கடிதத்தைப் பிடுங்கி வாசித்தான். அதில் அடியிற் கண்டவிதம் இருந்தது-
என் உயிருக்குயிரான அத்தான் அவர்களுக்கு,
அனேக நமஸ்காரம்.
நான் எழுதிய சில புன்மொழிகளை வாசிக்கப் பிரார்த்திக்கின்றேன். நான் சிறுபொழுது முதல் தங்களை வதுவைசெய்து கொள்ளுகிறே னென உறுதியாகச் சொல்லியபின் நிலைதப்பினேனென்று கண்டதால் இனிப் பெண்பிள்ளைகளை நம்பக்கூடாதென்றும் வேறொரு பெண்ணை விவாகஞ் செய்து கொள்ள எண்ணமில்லை யென்றும் சொல்லுவதாகக் கேள்விப்பட்டேன். இவ்வித எண்ணம் தாங்கள் கொண்டிருப்பது நியாய மல்ல. நிலைதவறிய ஒரு பெண்ணை அத்தாக்ஷியாகக்கொண்டு உலகிலுள்ள சற்புத்திரிகளையெல்லாம் தூஷிப்பது தருமமா? தாங்கள் உலகத்திலுள்ள பெண்களையெல்லாம் வெறுக்கக் காரணமாக இருந்த பெரும்பாவியாகிய நான் உயிரோடிருக்குமளவும் தங்களுக்குப் பெண்கள்மேல் வெறுப்பு இருக்குமென்பதை யோசித்து என் உயிரை விட்டு விட எண்ணங்கொண்டேன். நான் இறந்தபின் தங்களுக்கு இக்கடிதம் கிடைத்தால் எனக்காகத் துக்கப்படாமல் தங்களுடைய எண்ணத்தைமாற்றி ஒரு பெண்ணை விவாகஞ்செய்து உலக இன்பத்தை அனுபவிக்கத் தங்களை நமஸ்கரித்துக்கேட்டுக் கொள்ளுகிறேன். தாங்கள் பெண்கள் விஷயத்திற்கொண்ட அபிப்பிராயம் மாறாமல் விவாகஞ் செய்து கொள்ள மாட்டீர்களென்று கண்டதால் உண்மையைச் சொல்லத் துணிந்தேன். தாங்கள் பெண்கள் மேல் அவ்வித எண்ணங் கொள்ளாமல் வேறொரு பெண்ணை விவாகம் செய்திருந்தால் என்னுடைய இரகசியத்தை வெளியிட்டிரேன். என் மேல் கொண்டிருந்த அபிப்பிராயம் தவறெனத் தாங்கள் கண்டபின் தங்களைத் தாங்கள் வெறுத்துக்கொண்டு எனக்காகத் துக்கப்படாமல் நான் விட்டுப்போன குழந்தையை ஆதரிக்கக் கேட்டுக்கொள்ளுகிறேன். நான் தங்களை வதுவைசெய்து கொள்ளுகிறேனென்று உறுதியாகச் சொல்லி என் தாய் வீடுபோனபின் நான் புத்தி யறிந்து என் தமக்கையோடிருக்கும் பொழுது, ஒரு வாலிபன் அடிக்கடி எங்கள் வீட்டு வழியாகப்போவ தும் என் தமக்கையைப் பார்த்து நகைப்பதுமாக இருக்க என் தமக்கையும் அவனுடைய எண்ணம் விருத்தியடையச் செய்துவந்தனள். சில சமயத்தில் நான் தெருவாயிற்படியில் நிற்பதைக்கண்டால் நான் வேறு என் தமக்கை வேறென்று கண்டுகொள்ளாமல் அவன் நகைப்பான். நான் அவனுடைய எண்ணத்திற்கு இடங்கொடுக்காமல் அருவருப்பை க்காட்டுவதைக்கண்டு அஞ்சிப்போவான். ஒருநாள் என்தமையன் அவனை வீட்டுக்குள் அழைத்துவந்து தன் அறையில்விட்டு எங்களிடம் வந்து, ஒருவன் வந்திருக்கிறான், அவன் என்னோடு பள்ளியில் வாசித் தவன், அவன் பெயர் இரத்தினம், அவனுக்குத் தாகத்துக்குக் கொடுத் தனுப்புங்கள் என்று சொல்லிப்போனார். அவன் வீட்டுக்குள் வரும் பொழுது பார்த்திருந்த என் தமக்கை நிறக்கப்பால்விட்டு ஒரு செம்பு காப்பிதானே கொண்டுபோய்க்கொடுத்தாள். பால்விட்டிருந்த காப்பியில் பால்விடும் பொழுதே எனக்குச் சந்தேகந் தோன்றி என் தமக்கையிடம் ஏதாகிலு சொல்லவேண்டுமென்று எண்ணியும் அவள் கோபிப்பாளென்று பயந்து பேசாமலிருந்தேன். இரத்தினம் தாகத்துக்குச் சாப்பிட்டுப் போனது முதல் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான். என் தமையனும் தாயாரும் அத்தான் சாபாபதி முதலியார் வீட்டுக்குப் போயிருந்த பொழுது இரத்தினம் வந்து அன்றிரவை நான் அறியாமல் என் தமக்கையோடு கழித்துச் சென்று அவர்கள் திரும்பி வருமளவும் அடுத்தடுத்து இரவில் வந்து போனான். இரண்டு மூன்று மாதமானபின் என் தமக்கை கருப்பமாயிருந்ததையும் நடந்த விருத்தாந்தத்தையும் என்னிடம் சொல்லி யழுதாள். நான் பரிதாபப்பட்டு ஒருவித உதவியும் செய்ய வழியில் லாமலிருந்தேன். பின்னிரண்டொரு மாதத்தில் என் தாயாருக்கு உண்மை வெளிப்பட்டுப் போனதால் ஏதோ மருந்துகள் வாங்கிக் கொடுத்தும் பிரயோசனப்படாமல் என்னையும் என் தமக்கையையும் அல்லூர் என்ற கிராமத்துக்கு அழைத்துப்போவதாக என் தமையன் தருமலிங்க முதலியாரிடம் சொன்னதில் அவர் காரணத்தை யறிந்து துக்கத்தோடு எங்களை விட்டுச்சென்றார். என் தாயார் மகன் தன் னைவிட்டுப் போன துக்கத்தோடு அல்லூரில் எங்களை அழைத்துப் போய் வைத்திருந்தார்கள். சில மாதத்தில் என் தமைக்கைக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. என் தமக்கைக்கு நேரிட்ட கதியை யோசித்துத் துக்கத்திலிருந்த நானும் சுரத்திற் படுத்தேன். நாளுக்கு நாள் சுரம் அதிகப்பட்டு எனக்கு ஜன்னி பிறந்து மூன்று மாதம் சங்கடப்பட்டுக் கொண்டிருந்ததை வைத்தியர்கள் கண்டு இனி பிழைக்கமாட்டேன், நான் இஷ்டப்பட்டுக் கேட்டதைக் கொடுங்க ளென்று வைத்தியர்கள் கைவிட்டபின் மூத்தமகள் கற்பழிந்தாள், இளையவள் சாகப்போகிறாள்; சாகப்போகிறவள் தலையில் பழியேற்றி விட்டால் மூத்தமகளைக் காப்பாற்றிவிடலாமென்று, நான் வியபசாரத்தால் குழந்தையைப் பெற்றேனென்று பெயருண்டாக்கி எனக்குத் துணையாக ஒரு கிழவியை வரவழைத்து வைத்துவிட்டு மூத்த மகளோடு சென்று அவளுக்கு விவாகத்தை முடித்து வைத்து என்னை வந்து பார்த்தார்கள். என் தாயார் என்னைச் சுரத்தோடு கைவிட்டுப் போன பின் நாங்களிருந்த மைலாபுரியிலிருந்து வந்த வைத்தியர் ஒருவர் என்னைப் பார்த்துத் துக்கப்பட்டு எனக்கு ஔஷதங் கொடுத்துச் சொஸ்தப்படுத்திப் போயிருப்பதை யறிந்து, குற்றம் செய்தவளை மேன்மை யாக்கிக் குற்றமற்றவளை அபராதியாக்கித் துன்பத்தில் அழுத்திவிட்டேனே என்று துக்கத்தோடு சில நாளையில் இறந்தார்கள். என் தாயார் கதியை என் தமக்கைக்குத் தெரிவித்தவுடன் அவள் தன் புருஷனோடு வந்து வேறிடத்திலிருந்து நடத்த வேண்டிய கிரியைகளை நடத்தித் தன் புருஷனை அறியாமல் என்னிடம் வந்து, என்னுடைய குற்றத்தை நீ ஒப்புக்கொண்டு அவமானத்தோடு இருக்க நேர்ந்ததே யென்று அழுது, நீ இங்கிருப்பது நியாயமல்ல, நீ எனக்கருகாமையில் இருப்பதே நல்லது, அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்கிறே னென்று தன் பிள்ளையை யெடுத்து முத்தங்கொடுத்துப் போனாள். இரண்டு மாதத்துக்குப் பின் ஒருவன் என் தமக்கையிடமிருந்து கடிதத்தோடு வந்தான். அக்கடிதத்தை வாசித்து என்னோடிருந்த பெண்பிள்ளையை அழைத்துக்கொண்டு குழந்தையோடு இந்தக் கிராமத்தில் வந்திருக்கிறேன். நான் குற்றமற்றவளாயிருந்தும் அவமானத்திற் குள்ளாகித் துக்கத்தோடிருப்பது போதாதென்று தங்களையும் துக்கத்திலிருக்கவிடுவது நியாயமல்ல. நான் இறப்பதே உத் தமமென்று இக்கடிதத்தை எழுதித் தங்களுக்கனுப்பி நான் இறக்கத் துணிந்தேன். ஆனதால் இனிப் பெண்கள்மேல் குற்றம்சொல்லாமல் விவாகம் செய்துகொண்டிருக்கவேண்டும். என் தமக்கை தன் குழந்தையைக் காப்பாற்றமாட்டாளென்றே நினைக்கிறேன். ஆனதால் தங்களுக்கு என்மேல் அன்பிருந்தால் இந்தக் கடிதத்தையும் இதனுள் அடக்கஞ் செய்திருக்கும் கடிதத்தையும் வாசித்தபின் கிழித்தெறிவதோடு குழந்தையையும் காப்பாற்ற வேண்டுகிறேன். இந்த இரகசியம் வெளியானால் அது என் தமக்கைக்குக் கெடுதியாக முடியும். நான் இது விஷயத்தில் கொடுத்த சிரமையை மன்னிக்கவேண்டும்.
தென்னூர்
ஆடிமீ8௨.
இப்படிக்கு,
தங்களைக் கனவிலும் மறவாதிருந்த
அம்புஜம்.
இதனோடு இருக்கும் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறதென்று அதையும் வாசித்தார். அதில் அடியிற் கண்டவிதம் இருந்தது:-
பிரிய தங்கையே! என் நாயகனை நான் வசப்படுத்தி எங்களுக்கருகில் உள்ள தென்னூரில் உன்னைக்கொண்டு வந்து வைத்துக்கொள்ள உத் தரவு பெற்றுக்கொண்டேன். நீ காலதாமதஞ் செய்யாமல் இக்கடிதம் சொண்டு வருபவனோடு கிழவியைவிடாமல் பிரயாணப்பட்டு வர வேண்டும்.
அம்மா அம்புஜம்! நான் பெற்றபிள்ளையை நீ பெற்றதாக ஒப்புக்கொண்டு எல்லாச் சுகத்தையும் விட்டு நீ இருப்பதைப் பார்க்க என்மனம் சகிக்க வில்லை. ஆதலால் நீ என்னருகிலிருந்தால் அடிக்கடி உன்னைவந்து பார்த்துக்கொண்டிருக்கலாமென்னும் ஆசையால் உன்னை வரும்படி எழுதினேன். தடைசொல்லவேண்டாம். இப்படிக்கு
உன்பிரிய சகோதரி,
கனகாம்புஜம்.
தன் பெண்சாதியின் கையெழுத்தை நன்றாயறிந்த சபாபதிமுதலியார் கடி தங்களைச் சொக்கலிங்கத்திடம் போட்டு, அடி படுபாவி! உன் நடத்தை இவ்விதமானதா! என்று கனகாம்புஜமிருக்கும் இடத்திற்குச் சென்று வைத்தியரே! இத்துன்மார்க்கிக்கு எப்படியிருக்கிறதென்றார்.
வைத்தியர்.- அப்பா சபாபதி! எனக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை; விளக்கொன்று கொண்டுவரச்சொல்.
கமலாக்ஷி தான் கேட்டுவழக்கப்பட்ட குரல் எனக்கண்டு விளக்கோடு வெளியில் வந்து, தாதா! நீங்களா வென்றாள். வைத்தியரும் பார்த்து, ஆ! கமலாக்ஷி! நீயா இங்கிருக்கிறாய்? நீ இங்கிருப்பாயென்று நான் நினைக்க வில்லையே! நாம் சாவகாசத்தில் பேசலாமென்று சொல்லிக்கொண்டே கனகாம்புஜத்தின் முகத்தைப் பார்த்து வாயிலும் மூக்கிலும் இரத்தம் அதிகமாய் வருவதைக்கண்டு குலையில் வாயிற்படி அடிப்பட்டு விட்டதால் இறந்தாள். இனி பார்த்துக் கொண்டிருப்பதிற் பிரயோசனமில்லை. எடுத்து வளர்த்து விடுங்கள் என்று சொன்னார்.
சபாபதி முதலியார். – இவள் இறந்ததைக் குறித்து எனக்குத் துக்கமில்லை. அம்புஜம் இறந்துவிட்டாள் போல் காணப்படுகிறது. சொக்கலிங்கத்தின் கதி இன்னதென்று தெரியவில்லை. அவர்களைப் பாருங்கள்.(என்று அனுப்பிக் கனகாம்புஜத்தை வேறொரு அறையில் வளர்த்திவிட உத்தரவு செய்தார்.)
வைத்தியர் வீட்டுக்குள் சென்று அம்புஜத்தையும் சொக்கலிங்கத்தையும் பார்த்து இவர்களுக்காகப் பயப்படவேண்டியதில்லையென்று தன் பையை அவிழ்த்து ஓர் சிமிழை எடுத்துத் திறந்து சொக்கலிங்கம் நாசியிற் காட்டியவுடன் தும்மலோடு கண்களை விழித்து, ஆ! அம்புஜம்! உன்னை இறக்கவிட்டு நான் உயிரோடிருக்க முடியுமா வென்று முகத்தில் அறைந்துகொண்டு அழுதான்.
வைத்தீயர்.- அப்பா சொக்கலிங்கம்! அம்புஜம் உயிரோடிருக்கிறாள். அவளுக்கு என்ன செய்தீர்கள்? (என்று கமலாக்ஷியைக் கேட்டார்.)
கமலா – தாதா! அம்புஜத்துக்கு வாந்திபேதி கண்டிருந்தது. தாங்கள் வழக்கமாகப்பேதி கண்டவர்களுக்குக் கொடுக்கும் கியாழம் போட்டுக் கொடுத்தோம். அது முதல் வாந்தியுமில்லை பேதியுமில்லை யாயினும், நன்றாய்ப் பேசிக்கொண்டிருந்தவள் பேச்சு மூச்சு இல்லாமலிருக்கிறாள்.
வைத்தீயர் – (சிரித்து) அம்மா! கமலாக்ஷி! நீ கொடுத்த கியாழத்துக்கு வாந்திபேதி சஞ்சீவி யென்றுபெயர். அதை வாந்திபேதி கண்டவர்களுக்குக் கொடுத்து உடலில் தங்கினால் அவர்கள் பிழைத்துக்கொள்ளத் தடையில்லை. அம்புஜம் நெடுநேரம் பேசியிருந்தாள்போல் காணப் படுகிறது. அதனால் களைத்து நித்திரை செய்கிறாள். அவள் விழித்தவுடன் ஏதாகிலும் கஞ்சி முதலிய ஆகாரம் கொடுங்கள். (என்று சொல்லியபின் சொக்கலிங்கத்தைப் பார்த்து ) அப்பா! வெளிக்கூடத்தி லிருப்பதைப் பார்த்தாயா வாவென்றழைத்தார். சொக்கலிங்கம் சடி தங்களைக் கமலாக்ஷியிடம் கொடுத்து, அம்மா ! இவைகளை நீயும் தாயா ரம்மாளும் வாசித்துப்பாருங்கள். (என்று வைத்தியரோடு சென்றார்.)
கமலாக்ஷி வாங்கிய கடிதங்களை வாசிக்க இது சமயமல்லவென்று பத்திர மாக வைத்துக்கொண்டு அம்புஜத்துக்கு வேண்டியதைச் செய்து கொண்டிருந்தாள்.
வைத்தியர் சொக்கலிங்கத்துக்குக் கனகாம்புஜத்தின் முடிவைக் காட்டினார்;
சபாபதி முதலியாரும் சொக்கலிங்கத்தைப் பார்த்து, தம்பி! இப்பாதகி உன்னை நெடுநாள் துன்பத்திலழுத்தியிருந்தாள். அவள் குற்றத்துக் கேற்ற தண்டனை கிடைத்ததென்றார்.
சொக்கலிங்கம் – அண்ணா ! தங்களுடைய மனைவி என்னைத் துன்பத்திலழுத்தவேண்டிய காரணம் ஒன்றுமில்லையே!
சபாபதிமுதலியார். – அப்பா! நீ மூர்ச்சையாயிருந்தபொழுது உன் கையிலிரு ந்த கடிதத்தைப் பிரித்து வாசித்து யாவும் அறிந்தேன். விரைவில் சில ரை வரவழைத்தால் இப்பொழுதே பிரேதத்தை எடுத்து அடக்கஞ்செ ய்து விடலாம். இத்துன்மார்க்கியை வைத்துப்பார்க்க எனக் கிஷ்ட மில்லை.
சொக்கலிங்கம். – அண்ணா ! அதிக கொடுமையைச் செய்தவர்களாயிருந்தும் இறந்தால் அவர்கள் செய்த குற்றத்தை ஞாபகத்தில் வைத்திருக்கக் கூடாது. மணி பத்தாய்விட்டதால் காலையிலெடுத்து அடக்கம் செய்யலாம்.
என்று வீட்டிலிருந்தவர்கள் உதவியால் பிரேதத்தைப்படுக்கவைத்து அலங்கரித்துத் தொழிலாளிகளை அழைத்து மறுநாள் காலையில் வேண்டியவைகளைத் தருவித்துச் சபாபதி முதலியாரிடம் தான் வீட்டுக்குப் போய் வருவதாக விடைபெற்றுச் சென்றான். அம்புஜம் விழித்துக் கஞ்சி குடித்துத் தனக்குச் சௌக்கியமாக இருக்கிறதாகக் காணப்படுகிறதென்று சொல்லும்பொழுது மரகதமும் அவள் தாய் தந்தையும் வந்து அம்புஜத்தைத் தழுவிக்கொண்டு, அம்புஜம்! நீ இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கலாமா வென்று அழுதார்கள்.
அம்புஜம்.- ஐயோ! நான் என்ன செய்துவிட்டேன்! என் இரகசியம் யாவருக்கும் தெரிந்துவிட்டதாகக் காணப்படுகிறதே! ஐயோ! என் தமக்கையின் கதி என்னாகும்! என் சமாசாரம் இரகசியத்தில் இருக்கவேண்டு மென்று கேட்டுக்கொண்டிருந்தும் இரகசியத்தை அத்தான் வெளியில் விட்டுவிட்டாரே! என் தமக்கை என்னால் அவமானம் அடைந்தபின் நான் உயிரோடிருக்க முடியுமா? (என்று அழுதாள்.)
அம்மணியம்மாள் – அம்புஜம்! உன் தமைக்கையின் இரகசியம் வெளியிற் போகாது. அவள் அவமானத்தைத் தாங்கித் திரியமாட்டாளென்று நாங்கள் பிரமாணத்தோடு சொல்லுகிறோம். அவளுக்கோர் கெடுதியும் எங்களால் நேரிடுமென்று நீ கனவிலும் நினைக்கவேண்டாம். நீ முன் சுரமாக இருந்தபொழுது உன்னைக் காப்பாற்றிய வைத்தியர் தெய்வச்செயலாய் இங்கு வந்து உன்னைப்பார்த்து உனக்குக் கமலாக்ஷியம்மாள் கொடுத்த கியாழமே உன்னைச் செளக்கியப்படுத்திவிட்டதென்று சொல்லியிருக்கிறார். ஆனதால் நீ இந்த வீட்டிலிருக்கக்கூடாது. உன் சொந்தவீட்டுக்கே வந்து விடவேண்டும். (என்று தழுவிமுத்தங்கொடுத்து மெதுவாக அழைத்துப்போய், சபாபதி முதலியாரை மறைத்தும் பிரேதத்தைக் காட்டுடாமலும் வண்டியிலேற்றி வீட்டுக்குக் கொண்டுபோய்க் கட்டிலிற் படுக்கவைத்து உபசரித்தாள்.)
பெரியவர் கமலாக்ஷியைப்பார்த்து, அம்மா கமலாக்ஷி ! இன்று நீ செய்த காரியத்தைக்குறித்துச் சாவகாசத்தில் உன்னிடம் பேச இருக்கிறேன் என்று நகைத்து சபாபதிமுதலியார் இருக்கும் இடம் சென்றார்.
மறுநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு வைத்தியரும் பெரியவரும் சொக்க லிங்கமும் அவன் தாயாரும் அம்புஜம் இருக்கும் அறைக்குள் சென்ற வுடன் அம்மணியம்மாள் கமலாக்ஷியைக் கட்டியணைத்துக் கொண்டாள். சொக்கலிங்கமும் பெரியவரும் ஆளுக்கோர் கையைப்பிடித்துக் கொள்ள, பெரியவர் கமலாக்ஷியைப் பார்த்து, அம்மா கமலாக்ஷி! நீ இலக்ஷமியைப்போல் எங்கள் வீட்டில் வந்து காலை வைத்து எங்கள் குடும்பம் ஓங்க என் கடினமானமனதைத் திருப்பியதோடு என் மகன் கோபத்தை மாற்ற வேண்டியவைகளைச் சொல்லி அம்புஜத்திடம் அழைத்துச்சென்று உண்மை வெளிவரும்படியும் செய்தாய். நீ செய்த உபகாரத்துக்கு நாங்கள் பதில் என்ன செய்யப்போகிறோம் என்றார். கட்டியணைத்திருந்த அம்மணியம்மாள் கமலாக்ஷியின் முகமெல்லாம் கடித்து முத்தங்கொடுத்து, மகளே! நீ செய்த வேலைக்கு உன்னைக் கடித்துக் கடித்து முத்தங்கொடுக்க ஆசையாயிருக்கிறது. இது வரைக்கும் நீ எனக்கு ஒப்பாரிக்கு மகளாக இருந்து இப்பொழுது உரிய மகளாய்க் காணப்பட்டதால் உன் உடல் வருந்துமே என்று பயப்படுகிறே னென்பதாக அடிக்கடி முத்தங்கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒரு கையைப் பிடித்திருந்த சொக்கலிங்கம் – அம்மா கமலாக்ஷி! அன்று பெண் பிள்ளைகளை நம்பக்கூடாதென்று சொல்லியதை மாற்ற, அம்புஜத்தின் விஷயத்தை அறிவிக்காமலே உன் வேண்டுகோளுக்கிரங்கும்படி செய்து அம்புஜத்தின் விஷயத்தைச் சொல்ல, நான் பாவி! என் சொல்லினின்றும் மாறியதைக்கண்டு கோபமுற்று, அம்புஜம் செய்தது குற்றமேயானாலும் வெட்டிப் பேசுகிறேனென்று உன் சாமர்த்தியத்தினால் அவள் மேல் குற்றமில்லாததைக் காட்டினாய் ; நீ செய்ததற்குப் பதில் செய்ய முடியாதாதலால் உன்னைப் போல் படமெழுதி வைத்து அது என் குலதெய்வமென்று வணங்கிக் கொண்டிருப்பே னென்றான். அம்புஜம் எழுந்து கமலாக்ஷியைப் பார்த்து, மச்சி! என்னை முன் பின் அறியாமல் என் விஷயத்தில் பரிதாபப்பட்டு முடியாதவைகளை முடித்துவைத்தாய்; பிள்ளையைக் காப்பாற்றுகிறேனென்ற வாக்குங்கொடுத்தாய்; நான் என் ஆயுள்காலமெல்லாம் உனக்கு அடிமையாயிருந்தாலும் நீ செய்த உபகாரத்துக்குச் சரியாகாதே யென்றாள். கமலாக்ஷி அவர்களைப் பார்த்து நான் அறியாதவள், ஒன்றும் தெரியாதவள், நீங்கள் உலகில் செய்துவரும் புண்ணிய வசத்தால் உங்களுக்கு எல்லா நன்மையும் உண்டாகவேண்டியது கடமை என்றறிந்தும், அநாதரவாகப் பசியால் வருந்துங்காலத்தில் பணம் கொடுத்துத் தெருவில் விழுந்திருந்தவளைக் கொண்டு வந்து ஆதரித்து இப்பொழுது என்னை யாவரும் புகழ்வது நியாயமல்ல. நீங்கள் என் விஷயத்தில் செய்த உபகாரத்துக்குப் பதில் செய்யவும் முடியுமா? என்று கண்களில் ஜலம் வடிய நின்றாள்.
வைத்தியர் – கமலாக்ஷி செய்கிற வேலைகளெல்லாம் எல்லாருக்கும் கோபத்தைக் கொடுக்கத் தக்கவைகளே. அவள் தாய் வீட்டிலிருக்கும் பொழுதும் வழியில் விழுந்து கிடந்த ஒரு கிழவனை வீட்டுக்குக் கொண்டு வந்து அவரைக் கொல்ல என்னைத் துணை தேடினாள். வனசாக்ஷி என்பவளுடைய தாயிடம் இருக்கும் பொருள்மேல் அருவருப்பு கொண்டு வனசாக்ஷியை விவாகம் செய்துகொள்ள வந்தவனை ஒட்டிவிட்டாள். (என்று சிரித்தார்.)
கமலாக்ஷியும் சிரித்து மரகதத்தை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.
பெரியவர்.- அம்புஜம்! உனக்கு எப்படியிருக்கிறது? இராத்திரி நன்றாய் தூங்கினாயா?
அம்புஜம் – மாமா! இராத்திரி தூங்கி விழிக்கும்போதெல்லாம் மச்சிகள் இருவரும் கஞ்சி கொடுத்துத் தூங்கச்சொல்லிக் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மாமி படுத்துக்கொண்டார்களா வென்று கேட்ட பொழுது இல்லையென்றும், அவர்களும் தாயாரம்மாளும் சாவு வீட்டுக்குப் போயிருந்ததாகவும் சொன்னார்கள். மாமி! தாங்கள் யார் வீட்டுக்குப் போயிருந்தீர்கள்? யார் இறந்துபோனது?
அம்மணியம்மாள்.- நாங்கள் யவரும் சாவு வீட்டுக்குப் போயிருந்து இப்பொழுதுதான் வந்தோம். இறந்தவள் உனக்குத் தெரியாதாதலால் அவள் பெயரைச் சொல்வதிற் பிரயோசனமில்லை. (என்று யாவரயும் சாப்பிட்டு வரும்படி அனுப்பி அம்புஜத்தோடு உட்கார்ந்திருந்தாள்.)
அரைமணி நேரத்திற்குப் பின் கூடத்தில் பெரியவரும் வைத்தியரும் சொக்கலிங்கமும் வார்த்தையாடிக் கொண்டிருக்கும்பொழுது பெரிய வர் வைத்தியரைப் பார்த்து வைத்தியரே! சபாபதியை இரண்டொரு நாளாவது நிறுத்தாமல் அனுப்பிவிட்டது நியாயமாகக் காணப்படவில்லை யென்றார்.
வைத்தியர்.- ஐயா! புண்ணியகோடி முதலியாரே! கனகாம்புஜம் தன் தங்கை விஷயத்தில் பெருங்கொடுமையைச் செய்திருந்ததாலும் அம்புஜம் மரண ஸ்திதியிலிருப்பதாலும் தான் இக்கிராமத்திலிருந்தால் அம்புஜத் தைப் பார்க்காமலிருக்க மனந்தாளாதென்றும், அம்புஜத்தை வந்து பார்த்தால் அவள் தமக்கையின் இரகசியம் வெளிவந்துவிட்டதென்ற பயத்தால் அம்புஜத்துக்குக் கெடுதியாக முடியுமென்றும், கருமங் கழித்தபின் வந்து பார்ப்பதே உத்தமமெனப் போய்விட்டார்.
சொக்கலிங்கம்.- நான் கேட்டதற்கும் அப்படியே சொன்னார். அதோ கமலாக்ஷியம்மாளும் மரகதமும் வருகிறார்கள். கமலாக்ஷியம்மாளை நீங்கள் நன்றாய் அறிவீர் போலிருக்கிறது. தங்களுக்குத் தெரியாதென்றே நினைத்திருந்தேன்.
வைத்தியர் – கமலாக்ஷியை மட்டுமல்ல; அவள் குடும்பத்தை முற்றிலும் நன்றாய் அறிவேன். கமலாக்ஷியை இவ்விடத்திற் கண்டது ஆச்சரியமாக இருந்தது.
கமலாக்ஷி.- தாதா! என் பெயரைத்தாங்கள் சொன்னதாக என்காதில் விழுந்தது. என்னைக்குறித்து என்ன சொல்லுகிறீர்கள்?
வைத்தியர்.- அசியாயமாக அம்புஜத்தைக்கொல்லக் கியாழத்தைக் கொடுத்தனையே என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
கமலாக்ஷி – ஆம் தாதா! தாங்கள் வாந்திபேதி கண்டவர்களுக்கெல்லாம் வாந்திபேதி சஞ்சீவி என்கிற கியாழத்தைக் கொடுத்துக் கொல்வதைப் பார்த்திருந்ததால் நானும் கொடுத்தேன். (என்று சிரித்தாள், யாவரும் சிரித்தார்கள்.)
வைத்தியர்.- அம்மா கமலாக்ஷி! நாம் இருவரும் தனித்து வார்த்தையாட வேண்டும்.
கமலாக்ஷி – தாதா! அநாதரவாய் வந்தவளைக் காப்பாற்றியவர்கள் முன்னிலை யில் வார்த்தையாடாமல் தனித்தா வார்த்தையாட வேண்டும்? அப்பா, அண்ணன், தங்கை முதலியவர்கள் அறியாத இரகசியம் என்ன இருக்கப் போகிறது ! தாங்கள் ஒன்றையும் மறைக்காமல் பேசலாம்.
வைத்தியர்.- உன் தாயாரும் பெரியவரும் வீட்டிலில்லாத காலம் பார்த்து வீட்டைவிட்டு வந்தது யாது காரணம்?
கமலாக்ஷி. – தாதா! நான் வீட்டைவிட்டு வந்தகாரணம் அண்ணனிடத்தி லிருக்கும் கடிதத்தால் விளங்கும். அந்தக் கடிதம் இங்கிருக்கிறதோ இல்லையோ?
சொக்கலிங்கம். – அது என் விபூதிப்பையில் எப்பொழுது மிருக்கிறது. (என்று எடுத்துக் கொடுத்தான்.)
வைத்தியர்.- எனக்குப் பார்வை மட்டானதால் நீயே அதை வாசி. (என்று சொக்கலிங்கத்திடம் கொடுத்தார்.)
சொக்கலிங்கம் முற்றிலும் வாசித்தபின் கமலாக்ஷி வைத்தியரைப் பார்த்து, தாதா! இந்தக் கடிதத்தை ஜெகநாதமுதலியார் விஜயரங்கத்தண்ணன் எழுதியதுபோல் எழுதியனுப்பிக், கடிதங்கொண்டுவந்த சிறுவனைப் பதிலுக்காக எதிர்ப்பார்க்காமல் ஒடிவிடச் சொல்லியிருந்த சூதை நான் அறியாமல் சிறுவன் வெளியிலிருப்பானென்று போனவள் பிடிப்பட் டேனென்றும், தனக்குப் பின் நடந்த விருத்தாந்தத்தில் விஜயரங்கம் தன்னை விவாகஞ்செய்ய எண்ணங்கொண்டிருந்ததையும் கனகாம்பு ஜம் விஜயரங்கத்தோடு பேசியதையும் மறைத்து மற்றவைகளை யெல்லாம் சொன்னாள். கமலாக்ஷி பட்ட கஷ்டத்தைக்கேட்ட நால்வரும் கண் கலங்கினார்கள். சொக்கலிங்கம் ஜெகநாதமுதலியாரை இலேசில் விடக்கூடாதென்றதைக் கேட்ட கமலாக்ஷி, அண்ணா!சுந்தரமும் மனோரஞ்சிதமும் அவருடைய அதிகாரத்துக்கு உள்ளடங்கி இருப்பதால் அவர்கள் வெளியாகுமளவும் அது விஷயத்தைக் குறித்து ஒன்றும் செய்யக்கூடாதென்றபின் வைத்தியரைப் பார்த்து, தாதா! என் தாயாரும் பெரியவரும் எப்படியிருக்கிறார்கள்? முத்துக்குமார முதலி யாரும் அவர் பெண்சாதியும் எப்படி இருக்கிறார்கள்? விஜயரங்கத் தண்ணனுடைய தாயாரும் தந்தையும் எப்படி இருக்கிறார்கள்? பாட்டி எப்படி இருக்கிறார்கள்? என்று கேட்டாள்.
வைத்தியர்.- நீ வீட்டைவிட்டு வந்ததுமுதல் உன் தாயார் அழுதுகொண்டி ருக்கிறாள். நடராஜ முதலியாரும் பூங்காவனமும் வனசாக்ஷியும் தேறு தல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நானும் நீ மஹா கெட்ட பெண், உனக்கோர் கெடுதியும் வராதென்று சொல்லிக்கொண்டிருந்து உன்னை யும் விஜயரங்கத்தையும் கண்டுபிடித்துக்கொண்டு வருகிறேனென்று வந்தேன். (என்று நகைத்தார்) முத்துக்குமார முதலியாரும் அவர் மனைவியும் அதிக கஷ்டங்களை அனுபவித்திருந்தார்கள்; அவர்கள் இறந்ததைக் கண்டவர்களெல்லாம் – இந்தப்பாவிகள் மருமகள் விஷயத்திற்செய்த கொடுமைகளுக்கேற்ற நரகவாதனையை இவ்வுலகத்திலேயே அனுபவித் தார்கள், இனி மருமகளைக் கொடுமையாய் நடத்த யாவரும் பயங்கொள்ளுவார்களென்று பேசிக்கொள்ளுகிறார்கள்.
கமலாக்ஷி – முத்துக்குமார முதலியாருக்கும் அவர் பெண்சாதிக்கும் வந்த நோய் கெடுதி செய்யுமென்று நான் நினைக்கவில்லை,
வைத்தியர் – ஐயோ! அவர்களுக்கு வந்த நோயைப்போல் ஒருவருக்கும் வந்ததை நான் கண்டதில்லை. பேச்சியாயி நாக்கில் வந்த பிளவில் புழுக் களுண்டாகி அவள் மருமகளைப் பேசியதைக் காட்டுதல் போல் துர்க்கந் தத்தோடு சொரிந்து கொண்டிருந்தன. முத்துக்குமாரமுதலியார் மருமகளை உதைத்துக்கொண்டிருந்த காலில் ஒரு புண் உண்டாகி உள்ளுக்குள் வினை வைத்துக் கால் சதையெல்லாம் தின்றுகொண்டுபோய் எலும்பைக் காண விட்டது. அதனால் அவர்களிருவரும் துன்பப்பட்டே இறந்தார்கள். தீயவை உடனுக்குடனே தீய பயத்தலை அவர்களிடத்துப் பிரத்தியக்ஷப் பிரமாணமாகக் காணலாம். கலியாணசுந்தர முதலி யாரும் அவர் பெண்சாதியும் தங்கள் மகன் போய் விட்டதைக்குறித்துக் கொண்டிருந்த வியசனம் சிறிது குறைந்திருக்கிறது. நியாயாதிபதி அரங்கராவ் அவர்கள் கலியாணசுந்தர முதலியாருக்கும் விஸ்வநாத செட்டியாருக்கும் ஒருவேலை கொடுத்திருப்பதால் அது விஷயத்தில் அவர்கள் சவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள்.
கமலாக்ஷி – என்னவேலை கொடுத்திருக்கிறார்?
வைத்தியர்.- மதுரையிலிருந்து ஒரு தனவந்தன் நம்மூரில் குடியேறப் போகிறதால் பெரிய மெத்தை வீடொன்றை விலைக்குவாங்கி அவ்வீட்டை அலங்கரிக்கும்படி கேட்டுக்கொண்டதனாலே கலியாணசுந்தர முதலியாருடைய கவனம் அதன் மேலிருக்கிறது. நானும் அவருக்குத் தைரியம் சொல்லி விஜயரங்கத்தைக் கொண்டுவருகிறேனென்று வந்திருக்கி றேன்.
கமலாக்ஷி – இரத்தினம் என்பவன் சமாசாரம் ஏதாகிலும் தங்களுக்குத் தெரியுமா? எனக்கு விஜயரங்கத்தண்ணன் எழுதியதுபோல் எழுதிய கடிதத்தில் ஏதாகிலும் உண்மை இருக்குமா?
வைத்தியர்.- நான் அவன் விஷயத்தைச்சொல்ல மறந்தேன். வனசாக்ஷி இனி தனக்குக் கிடைக்க மாட்டாளென்றறிந்த பின் சில மாதங்கள் வெளி இருந்தவனுக்கு வந்த அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! அவன் சிறிய தகப்பனார் ஒருவர் காலம் சென்றதாகவும், அவருக்கு வேறொரு வருமில்லாததால் தம்முடைய ஆஸ்தியையெல்லாம் இரத்தினத்துக்கு வைத்து இறந்தாரென்றும் அதனால் அவன் பெருமகிழ்ச்சி யோடிருக்கிறான்.
கமலாக்ஷி – கிடைத்த சொத்துக்கள் அதிகமோ?
வைத்தியர் – சற்றேறக்குறைய ஐம்பதினாயிரம் என்று கேள்வி.
கமலாக்ஷி – இனியாகிலும் கிரமமாயிருந்தால் நன்மையை யடைவான்.
சொக்கலிங்கம் – வைத்தியரே! அம்புஜத்துக்கு அவளுடைய தமக்கையின் சமாசாரத்தைச் சொல்லவேண்டியது தானே?
வைத்தியர்.- இன்னும் பொறுத்தே சொல்லவேண்டும். அம்புஜம் மனம் திடுக்கிடத் தற்காலம் ஒன்றும் சொல்லக்கூடாது.
சொக்கலிங்கம் – தாங்கள் விஜயரங்கத்தைத் தேடிக்கொண்டு விஜயரங்கத்தைத் தேடிக் கொண்டு வந்தீர்களென்று சொன்னீர்களே! விஜயரங்கத்தின் சமாசாரமொன்றும் அறிய வில்லையா!
வைத்தியர்.- நான் அவனைத் தேடிவரும் வழியில் சபாபதிமுதலியாரைக் கண்டு விசாரித்ததில், விஜயரங்கம் அவர் வீட்டிலிருந்து கனகாம்புஜத்தை அடைய முயற்சி செய்ததால் அவனை வீட்டிலிருந்து துரத்திவிட்டதாகச் சொன்னார். விஜயரங்கத்தின் குணம் மேன்மையானதென்று நான் விரிவாகச் சொல்லியதற்குத் தான் நேரில் பார்த்ததை மாற்ற ஒருவராலும் முடியாதென்றென்னை அழைத்து வந்தார். நேற்றிரவு இக் கிராமத்துக்கு வரும்பொழுது மணி பத்துக்குச் சமீபமானதைக் கண்டு இரவை இவ்விடத்தில் கழிக்க எண்ணங்கொண்டு கனகாம்புஜத்தின் வேண்டுகோளால் அம்புஜமிருக்கும் வீட்டிற்கு வந்தோம். நாங்கள் அவளோடு பின் சென்று அவள் சொன்னதெல்லாம் நாங்கள் கேட்டுக்கொண்டே சமீபத்தில் போனபோது அவள் வாயிற்படி தடுத்து விழுந்த நேரத்தில் ஒரு உதவியும் செய்ய முடியாமற் போயிற்று. காலை நாலு மணிக்கு எழுந்து ஊருக்குப் போகலாமென்று சொல்லிய கனகாம்புஜம் அப்பொழுதே இவ்வுலகத்தைவிட்டுப் போய்விட்டாள்.
புண்ணியகோடிமுதலியார் – வைத்தியரே! கனகாம்புஜம் என்ன சொல்லிக் கொண்டு போனாள்.
வைத்தியர்.- சொக்கலிங்கத்தை அம்புஜத்தருகில் பார்த்தவுடன், தன் தங்கை தன்னை மோசஞ் செய்துவிட்டாளென்றும் அவளைக் கொன்றுவிடுவே னென்றும் சொல்லிக்கொண்டே ஓடினாள்.
சொக்கலிங்கம்.- தானொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது. கன காம்புஜத்தின் சமாசாரத்தை அண்ணன் தங்களிடம் ஏதாகிலும் சொன்னாரா?
வைத்தியர்.- அந்த இரகசியம் அறிந்ததால் அவரைத் தடைசெய்து நிறுத்தாமல் அனுப்பிவிட்டேன்.
கமலாக்ஷி – இறந்தவளைப்பற்றிய இரகசியத்தை மறைத்து வைத்து இருப்பவர்களுக்கு அதனால் துன்பத்தைக் கொடுத்திருப்பது அழகல்ல. ஆனதால், அண்ணன் சபாபதிமுதலியார் விஜயரங்கத்தண்ணன் மேல் கொண்டிருக்கும் கெட்ட அபிப்பிராயம் நீங்க நான் அறிந்த கனகாம்புஜத்தின் இரகசியத்தைச் சொல்ல வேண்டியது அவசியமாக இருக்கிறது.
என்று கமலாக்ஷிதான் வைக்கோற்போரில் படுத்திருந்ததையும், விஜயரங்கம் கனகாம்புஜத்துக்குப் பயந்து அங்கு வந்ததையும், கனகாம்புஜம் விஜயரங்கத்திடம் கெட்ட எண்ணத்தோடு வார்த்தையாட அவ்வெண்ணத்திற்கு உடன்படாமல் “என் எண்ணத்தை மாற்றேன், நான் சாப்பிடும் சாதம் என்னுடம்பில் ஒட்டவும் நான் கவலையற்றிருக்கவும் மனமிரங்க வேண்டும்.” என்று கனகாம்புஜத்தைக் கேட்டுக் கொண்டிருந்த சம்பாஷணை முடிவில் என் சமீபத்திலே அண்ணன் சபாபதிமுதலியார் வந்து நின்று சில வசனங்களைமட்டும் கேட்டு விஜயரங்கத்தண்ணனை அடித்துத் தள்ளிக்கொண்டு போனதையும், தான்நேரில் சென்று சபாபதிமுதலியாருக்கு உண்மையைச்சொல்ல எண்ணங்கொண்டு போனபோது கல் தடுக்கி விழுந்ததையும் விளங்கச் சொன்னாள். கமலாக்ஷி சொன்னதைக் கேட்டிருந்த யாவரும் அதுபரியந்தம் அவ்விஷ யம் சொல்லாமலிருந்த கமலாக்ஷியின் நற்குணத்தைக்கண்டு சந்தோ ஷப்பட்டார்கள்.
18ம் அத்தியாயம்
சபாபதிமுதலியார் – தம்முடைய மனைவி கனகாம்புஜத்தின் துர்நடத்தையை அறிந்ததோடு, வைத்தியரால் வைக்கோற்போர்க்கருகில் நடந்ததைக்கேட்டும் ஆச்சரியப்பட்டு, விஜயரங்கத்துக்கும் கனகாம்புஜத்துக்கும் நடந்தசம்பாஷணையை நாமொருவருக்கும்சொல்லாமலிருக்க அவ் விடம் மற்றெவரேனுமிருந்து கேட்டிருந்தாலன்றி அவ்விஷயம் வெ ளிவர நியாயமில்லையே ! நாம் ஆத்திரப்பட்டு விஜயரங்கத்தின் மேல் குற்றமேற்றி அவனைக் கேவலமாகப் பேசியதோடு அடித்துத் துரத்தியும் விட்டோம்; தன் மேல் குற்றமில்லாதிருந்த விஜயரங்கம் உண்மையை யறியாமல் நாம் அவனுக்குச் செய்ததைக் குறித்து நம்மை என்னவென்று மதித்திருப்பான்! எஜமானுடைய மனைவியின் துர்நடத்தைக்கு இடங்கொடுக்காமல் தடைப்படுத்திய உத்தமன் மேல் குற்றஞ் சுமத்திய பாதகனாகிய என்னை உலகம் என்ன சொல்லும்!கனகாம்புஜத்தின் துர்நடத்தை யொன்றே நம்மை அவமானத்தி லமிழ்த்தப் போதுமான தாயிருக்க, நம்முடைய புத்தியீனத்தால் குற்றமற்றவன்மேல் குற்றஞ் சுமத்திய குற்றத்தையும் சேர்த்துக்கொண்டோமே! நாம் சில நாள் வெளிப்பட்டு நம்மை அறிந்தோர்களுக்கு மறைந்திருந்தாலன்றி நாம் அவமானத்தால் இறக்கவேண்டி வருமென்று, கனகாம்புஜத்துக்குச் செய்யவேண்டிய கிரியைகளை யெல்லாம் குறைவற நடத்தியபின் சில மாதங்கள் யாத்திரை செய்துவருவதாகத் தம்முடைய இனத்தாரிடம் சொல்லி, இரண்டு வாரங்களாகப் பல இடங்களிலிருந்து, ஒருநாள் மாலை வண்டி மெதுவாகப் பின்வர முன் நடந்துபோகும் பொழுது வழிப்போக்கர் இருவர் வார்த்தைய டிக்கொண்டு போவதைக் கேட்டு க்கொண்டே அவர்களைத் தொடர்ந்து சென்றார்.
முதல் வழிப்போக்கன் – அண்ணா! நாம் இவ்வளவு தூரம் வந்தும் பிரயோ சனமில்லாமற் போய்விடும்போல் காணப்படுகிறதே! பொழுதுபோகும் நேரமாய் விட்டதால் நாம் இனிமேல் சென்று அவரைப் பார்த்துவர முடியுமா?
இரண்டாவது வழிப்போக்கன்.- அவர் இருக்கும் இடத்திற்கருகில் வந்து விட்டோம். இன்னும் கால்மைல் தூரமிருக்குமென்று நான் நினைக்க வில்லை. நாம் அவரைக்கண்டு இரண்டொரு வார்த்தையாடித் திரும்ப வேண்டியவர்களேயன்றி நெடுநேரம் அவ்விடத்திலிருக்கப் போகிறதில்லை பொழுதிருக்கும் பொழுதே திரும்பிவிடலாம். நாம் இவ்வ ளவு தூரம் வந்தும் அவரைப் பார்க்காமற்போவது உசிதமல்ல.
முதல் வழிப்போக்கன் – அவருடைய வல்லமையைப்பற்றி கேள்விப்பட்டது உண்மையாயிருக்குமாயின் நாம் நேரத்தையும் தூரத்தையும் கவ னிக்க வேண்டியதில்லை.
இரண்டாவது வழிப்போக்கன்.- நான் சொன்னது யாவும் உண்மையாகக் காணப்படும். அவரோடிருப்பவர்கள் முன்பின்னறியாத ஓரன்னியனை எனக்கெதிரில் பெயர் சொல்லி யழைத்து, அவனுக்கு நேரிட்டதும் நேரிடப்போகிறதையும் அவன் எண்ணிவந்த காரியத்தையும் சொல்லி யாவரும் ஆச்சரியப்படும்படி செய்தார்கள்.
முதல் வழிப்போக்கன்.- பெரியவர் சங்கதிகள் சொல்லியபின் பணம் ஏதாகிலும் எதிர்ப்பார்க்கிறாரா?
இரண்டாவது வழிப்போக்கன்.- பணம் கொடுக்கப்போனால் தமக்குப் பணம் வேண்டுவதில்லையென்றும் தமக்கு வேண்டுமானால் செய்துகொள்ளத் தெரியுமென்றும் சொல்லுகிறார்.
முதல் வழிப்போக்கன் – அவருக்கு இரசவாதமும் தெரியுமோ? இரண்டாவது வழிப்போக்கன்.- அவர் அஷ்டமாசித்தியிலும் கைதேர்ந்தவ ராகக் காணப்படுகிறார். அவரைக் காணப்போகிறவர்களுக்கு விபூதி யொன்று கொடுத்தே எல்லாச்சித்தியும் உண்டாகும்படி செய்கிறார். சபாபதிமுதலியார் – வழிப்போக்கரிருவர் ஒரு பெரியவரைக் குறித்துப் பேசுகிறார்கள், தாமும் அவரைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை கொண்டு வழிப்போக்கரைப் பார்த்து, நீங்கள் இருவரும் பேசிக் கொண்டு போவதைக் கேட்டு வந்தவனாதலால் அந்தப் புண்ணிய புருடனைப் பார்க்க எனக்கும் ஆசையுண்டாகிறது,என்னையும் அழைத் துப்போக உங்களுக்கு ஆட்சேபனை யுண்டோவென்று கேட்டார்.
இரண்டாவது வழிப்போக்கன் – ஐயா! ஆட்சேபனைக்குப்பதிலாக எங்க ளுக்குச் சந்தோஷமே! தங்களை அழைத்துப்போவ தெங்களுக்குச் சுயப் பிரயோசனமேயன்றி உங்களுக்கோர் நன்மையை நாங்கள் செய்கிறதா கக் காணப்படவில்லை.
சபாபதி முதலியார் – உங்களுக்கென்ன சுயப்பிரயோசனமாகும்?
இரண்டாவது வழிப்போக்கன்.- எங்களுக்குத் தாங்கள் துணையாக வருவதே! தங்களை அழைத்துப்போவதில் எங்களுக்குப் பாரமில்லை. சந்நி யாசியைப் பார்க்கத் தங்களுக்கெண்ணமிருப்பதைக் கெடுப்பா ரொருவரும் இல்லை. தாங்கள் சந்தோஷமாக வரலாம்.
சபாபதி முதலியார் – நாம் மூவரும் வண்டியிலேறிப்போனால் விரைவில் போகலாம். (என்று தமக்குப் பின்னால் வந்த வண்டியை நிறுத்த சொன்னார்.)
இரண்டாவது வழிப்போக்கன்.-ஐயா! நாம் இன்னும் கூப்பிடுதூரம் போனவுடன் சாலையைவிட்டுக் காலடிப் பாதையில் போக வேண்டியதால் வண்டி நமக்குப் பிரயோசனத்தைத் தராது.
சபாபதி முதலியார் – அவ்விதமாயின் வண்டியைப்பாதையில் விட்டு நாம் மீண்டு வருமளவும் காத்திருக்கும்படி செய்யவேண்டும்.
இரண்டாவது வழிப்போக்கன்.- இஷ்டம்போல் செய்யலாம். அல்லது வண்டியிலுள்ள பணத்தைக் கைக்கொண்டு வண்டியை மெதுவாகப் போகவிட்டு நாம் சென்றாலும் சந்நியாசியைக்கண்டபின் குறுக்குப் பாதையாகச் சென்று வண்டியைப் பிடித்துக்கொள்ளலாம்.
முதல் வழிப்போக்கன் – குறுக்குப்பாதையும் இருக்கிறதா?
இரண்டாவாது வழிப்போக்கன்.-ஆம் உண்டு ! நாம் இந்த இடத்திற்குத் திரும்பிவர வேண்டிய அவசியமில்லை பெரியவர் இருக்கும் இடத்தி லிருந்து மேற்காகக் கால்மைல் தூரம் சென்றால் சாலையில் போய்ச்சேர லாம். (வண்டி மெதுவாகப் போவதே உத்தமமென்று வண்டியைப் போகவிட்டுச் சபாபதி முதலியார் இவரோடு சென்றார்.)
முதல் வழிப்போக்கன்.- ஐயா! வண்டியில் பணம் இருக்கக்கூடும்; ஆத லால் வண்டிக்காரனை எச்சரிக்கையாகப் போகச் சொல்லுங்கள். திருடர்கள் இப்பக்கத்தில் அதிகமாயிருப்பதாகக் கேள்வி.
இரண்டாவது வழிப்போக்கன்.- பணத்தை வண்டியில் யார் வைக்கப்போகி றார்கள்! ஏதாகிலுமிருந்தால் மடியில் வைத்திருக்க வேண்டியதல்லவா கடமை!
சபாபதி முதலியார் சிரித்துக்கொண்டு வண்டியில் ஒன்றுமில்லையென்று இருவரோடு குறுக்குவழியாகக் காட்டுக்குள் சென்று சந்நியாசியின் வல்லமையை இருவரும் பேசிக்கொண்டு போகத் தமக்கு ஏதோ நல்ல காலத்தால் பெரியவர் தரிசனை கிடைக்கப் போகிறதென்று நெடுந் தூரம் போயும் சந்நியாசியின் இருப்பிடத்தைக் காணாமல், இன்னும் அதிகதூரம் போகவேண்டுமோவென்று தமக்குத் துணையாக இருக்கும் இருவரையும் கேட்டதற்கு, இரண்டாவது வழிப்போக்கன் சமீபித்து விட்டோம், இந்த முடக்குத்திரும்பினால் அவர் இருக்குமிடம் நமக் கெதிரில் காணப்படுமென்று இருவர் முன் நடக்க, சபாபதி முதலி யார் பின் செல்லும்பொழுது, மறைந்திருந்த சிலர் ஓடிவந்து சபா பதிமுதலியாரை நிமிரவிடாமற்பிடித்துக் கைகளைக்கட்டியதால், அவ ருக்குத் துணையாயிருந்தவர்களைக் கூவி உதவிசெய்யவேண்டுமென்று வேண்டினார். அவர்கள் ஓடிவந்து கைகளைக் கட்டுவோருக்கு உதவி செய்து, ஐயா! பெரியவரைப் பார்க்கப் போகிறவர்கள் கைகளைக் கட்டிக்கொண்டே போகவேண்டுமென்று நகைத்துக் காட்டுக்குள் ளிருந்த பெரியகோயிலுக்குள் அழைத்துப் போனார்கள். சபா பதிமுதலியார் – நம்மை மோசஞ்செய்து கொண்டுவந்து விட்டார்கள், இதற்கென்ன செய்யப்போகிறோமென்ற கவலையோடு பின்செல்ல, அவரை ஒரு விசாலமாகிய மண்டபத்தில் வேடிக்கையாக வார்த்தை யாடிக் கொண்டிருந்த சிலர் முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அவ்விடம் இருந்தவர்களில் ஒருவன் சபாபதி முதலியாரைக் கீழும் மேலும் பார்த்து, நீர் யார்? உம்முடைய பெயரென்னவென்று கேட் டான். சபாபதிமுதலியார் கோபத்தோடு, கேட்டவனைப் பார்த்து, என்னைக் கட்டிக்கொண்டு வரச்சொன்னவன் யார்? எதற்காக என்னை இங்கு கொண்டுவந்தீர்கள்? விரைவிலென்னை விட்டுவிடாமற்போனால் இவ்விடத்திலிருப்பவர்கள் யாவருக்கும் கெடுதி நேரிடும், என்னைக் கட்டிக்கொண்டு வரச்சொன்னதோடு நான் யாரென்றும் என்பெயர் யாதென்றும் கேட்கச்சொல்ல உங்களுக்கு அதிகாரம் கொடுத்தவன் யார்? என்று வினாவினார்.
தலைவன்.- சிங்கத்தை நரி மிரட்டிய தென்கிறார்களே! அவ்விதமாக நீர் இவ் விடம் வந்தவுடன் எங்களைப் பயமுறுத்தத் துணிந்தீர். பனங்காட்டு நரி சலசலப்புக் கஞ்சாதென்பது உமக்கு ஞாபகத்திலிருக்கவேண்டும்.நீர் கோபமாகப் பேசுவதில் பிரயோசனமில்லை.உம்மைக் கட்டிக்கொண்டு வரச் சொன்னவன் நானே. உம்மை வினவும்படி எனக்கதிகாரம் கொடு துக் கொண்டதும் நானே. நீர் என் அதிகாரத்துக்கடங்கியிருப்பதால் உமக்கு உண்டாகும் கோபத்தை ஒரு பக்கம் வைத்து, நான் கேட்பவை களுக்குத் தக்கபடி பதில் சொல்லவேண்டும். பதில் சொல்லாமலெனக்குக் கோபத்தை உண்டாக்கினால் நீர் துன்பமடையும்படி செய்து உம் மைக் கொன்றுவிட உத்தரவளிப்பேன். ஆனதால்,நன்றா யோசித்துப் பதில் சொல்லும், நீர் யார்? உமது பெயரென்ன?
சபாபதி முதலியார்.- நான் பாதையிற்போக, எனக்கிவ்விடத்தில் ஒரு சந் நியாசி வந்திருக்கிறாரென்றும், அவர் அநேக அற்புதங்களைச் செய்கிறா ரென்றும் எனக்காசையை உண்டாக்கி இவ்விடம் கொண்டுவரச்செய்து, எனக்கு நானே எல்லா அதிகாரங்களையுங் கொடுத்து அவைகளை நானே ஏற்றுக் கொண்டேனென்ற இறுமாப்போடு பேசும் உன்னை இலக்ஷியம் செய்து, நீ கேட்பவைகளுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனதால் உன்னுடைய துஷ்டகாரியத்தைச் செய்யலாம். நானென் உயிருக்குப் பயந்து உன்னைக் கெஞ்சுவேனென்று நினைக்கவேண்டாம். தலைவன் – (தன்னருகிலிருந்தவர்களைப் பார்த்து) இவன் மெத்த அகங்காரி யாக இருக்கிறான். இவனைப் பரிசோதித்து இவனிடத்தி லிருப்பதை எடுத்துக்கொண்டு இவனுக்குப் புத்தி வருமளவும் ஓர் அறையில் விலங் கிட்டு மூடி விடுங்கள்.
தலைவனுடைய உத்தரவு பிரகாரம் சபாபதிமுதலியாரைப் பரிசோதித்து, அரைப்பை யொன்றில் பொன் நாணயங்களும் வெள்ளி நாணயங் களும் அதிகமாயிருப்பதைக்கண்டு, நம்முடைய கஷ்டத்துக்கேற்ற கூலியே கிடைத்ததென்று மகிழ்வோடு தலைவனிடங் கொடுத்துச் சபாபதி முதலியாரை அழைத்துக் கொண்டுபோய் ஓர் அறையில் விட்டு அவ்வறையின் சுவரில் பதித்திருந்த வளையத்தோடிருக்கும் சங்கலியைக் காலில் மாட்டிக்கதவைமூடிப் பூட்டிக் கொண்டுபோய்த் தலைவனிடம் தெரிவித்தார்கள்.
தலைவன் – நம்மிடத்திலகப்பட்டவன் பெரிய தனவந்தனென்பதற்குச் சந் தேகமில்லை ; அவனைப் பயப்படுத்திச் சிலநாள் வைத்திருந்தால் பெரிய தொகை கிடைக்கும். நம்மைக் கண்டபொழுது கோபமாய்ப் பேசினா னென்று அவனைக் கொன்றுவிட்டால் பலனொன்றுமில்லை. அவனை எந்த இடத்தில் வைத்திருக்கிறீர்கள்?
முதல்மனிதன் – ஐயா! அவனை மூன்றாவதறையில் அடைத்திருக்கிறோம். முதலிலும் இரண்டிலும் இருப்பவர்கள் யாரென்று தங்களுக்குத் தெரிந் ததே!
தலைவன்.- மூன்றாவதறையில் இருப்பவனால் நமக்குப் பணம் அதிகம் கிடை க்கும். ஆதலால், அவனுக்கும் சாப்பாடு முதலானவைகளைக் குறைவறக் கொடுத்துக்கொண்டிருங்கள். நம்மிடத்தில் சாதம் வாங்கிச் சாப்பிடப்பிரிய மில்லாதிருந்தால் பழவர்க்கங்கள் இளநீர் முதலானவைகளைக் கொடுங்கள்.
என்று உத்தரவளித்துத் தன் ஆடம்பரத்திலிருந்தான். இரவு எட்டுமணிக்கு முதல் அறையின் கதவு திறக்கப்பட்டு அரையிற் கட்டிய பட்டா கத்தி யோடு சென்ற ஒருவன் உள் நுழைந்து அவ்வறையிலிருந்த விளக் கைக் கொளுத்திப் படுத்திருந்த ஒரு பெரியவரை யெழுப்பி,ஐயா! விரைவில் சாப்பிட்டு என்னை அனுப்பிவிடுங்கள்,நான் இன்னும் இரு வருக்குச் சாப்பாடு கொண்டுபோக வேண்டுமென்று சாதம் வட்டித் தான். படுத்திருந்த பெரியவர் எழுந்து, தம்பி வெள்ளையப்பா! எனக்காக நீ காக்கவேண்டாம். நான் விரைவில் சாப்பிடுகிறே னென்று சாப்பிட்டுக்கொண்டே நீ இன்னும் இருவருக்குச் சாப்பாடு கொண்டுபோக வேண்டுமென்றாயே! இருவரேது? ஒருவர் தானே! என்று கேட்டார்.
வெள்ளையப்பன்.- இன்று ஒரு புதிய விருந்தாளி வந்திருக்கிறார். (என்று நகைத்தான்.)
பெரியவர்.– என்னைப்போல் அவர்கள் நெடுநாள் இங்கிருந்தால் உனக்கதிக தொந்தரவே ! என்னுடைய ஆயுளும் முடிவாகாமல் இருக்கிறது.(என்று பெருமூச்சுவிட்டுச் சாப்பிட்டுக் கைகழுவி வெள்ளையப்பனைப் போகும் படி உத்தரவளித்தார்.)
வெள்ளையப்பன் இரண்டாவது அறையின் கதவைத்திறந்து விளக்கேற்றி அதில் இருப்பவனைப் பார்த்து, ஐயா! ஏதாகிலும் சாப்பிடுகிறீரா? வேண்டாமா? என்று கேட்டான். அவ்வறையிலிருந்த வாலிபன். எனக்குச் சாப்பாடுவேண்டாம். நீ கொண்டுவந்திருக்கும் பழங்களில் சிலவற்றையும் இளநீரும் கொடு என்றான்.
வெள்ளையப்பன்.-பழவர்க்கங்களில் சிலவற்றை எடுத்துக்கொள்ளும். இள நீர் உமக்காகக்கொண்டுவராமல் இன்று வந்திருப்பவருக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.நாளை உமக்கு வேண்டியதைக் கொண்டுவருகிறேன். வாலிபன்.- எனக்காகக் கொண்டுவந்தாயென்றே நினைத்துக் கேட்டேன். (என்று சில பழங்களைச் சாப்பிட்டு ஜலங்குடித்துப் போகும்படி உத்தர வளித்தான்.)
வெள்ளையப்பன் நீங்கியபின் அவ்வறையிலிருந்த வாலிபன் இந்தப்பாவிகள் அநேகரைக் கொண்டுவந்து சிறைப்படுத்திப் பணம் சம்பாதிக்கிறார். களே ! இவர்களுடைய துற்செய்கையை நீக்க வழியொன்றும் அகப் படவில்லையே என்ற துக்கத்தோடிருந்தான்.
வெள்ளையப்பன் மூன்றாவது அறையின் கதவைத்திறந்து, ஐயா! தங்களுக்குச் சாப்பிடப் பிரியமிருந்தால் சாப்பிடலாம். அல்லது பழவர்க்கம் வேண்டுமென்றாலும் கொண்டுவந்திருக்கிறேன். தங்களுக்கு பிரியம் எதுவென்று கேட்டான்.
சபாபதி முதலியார் – அடா பாவிகளா! குற்றஞ் செய்தவனைப்போல் என் காலில் விலங்குபோட்டு வைத்திருப்பதென்ன நியாயம்? இவ்விதமான கொடுந்தொழிலைச் செய்து கொண்டிருக்கிறவர்கள் எத்தனை நாளைக்குத் தப்பித்துக்கொண்டிருப்பார்கள்?
வெள்ளையப்பன்.- ஐயா ! நீரென்னிடத்தில் இவைகளைச்சொல்வதைவிட்டு எங்கள் எஜமானிடத்தில் சொல்லுவீராகில் அதற்குச் சரியான பதில் கிடைக்கும். எங்களுக்குக் கோபம் உண்டாகும்படி செய்வது உமக்குக் கெடுதியாக முடியுமே யன்றி நன்மையைத்தராது. நீர் இவ்விடத்தை விட்டு விரைவில் நீங்கவேண்டுமானால் எங்கள் எஜமான் கேட்பதைக் கொடுத்தால் உம்மைவிட்டுவிடுவார். அது விஷயத்தைக்குறித்து யோசி யாமல், எங்கள் செய்கைகளைக் கண்டிக்கவேண்டிய அவசியம் உமக்கு ஏன்? அது விஷயத்தை நிறுத்தி உமக்கேதாகிலும் வேண்டுமா? வேண் டாமா? அதைச்சொல்லும்.
அவன் சொல்லியவைகள் முற்றிலும் நியாயமாகவே இருப்பதைச் சபாபதி முதலியார் நினைத்து இத்துன்மார்க்கர் கையில் நாம் அகப்பட்டுக் கொண்டோம், இவர்களிடத்திலிருந்து தப்பும் வழியைவிட்டு இவர் களுக்குக்கோபம் உண்டாகும்படி பேசினால் இவன் சொல்வதுபோல் நமக்குக்கெடுதி உண்டாகுமேயல்லது நன்மை உண்டாகாதென்று தனக்குள் போசித்து, வெள்ளையப்பன் கொண்டுவந்த இளநீரைக்குடி த்து, அப்பா! நீ என் விஷயத்தில் ஏதாகிலும் செய்யமுடியுமா வென்று வெள்ளையப்பனைக் கேட்டார்.
வெள்ளையப்பன்.- ஐயா! உமக்கென்ன செய்யவேண்டும்?
சபாபதி முதலியார்.- நான் இவ்விடத்திலிருந்து நீங்கும்படி உதவி செய்தால் உனக்கு வேண்டியதைக் கொடுக்கத் தடையில்லை.
வெள்ளையப்பன்.–ஐயா! உமக்கு உதவிசெய்து வெளியாக்கிவிட்டால் என்ன கொடுப்பீர்?
சபாபதி முதலியார் – உனக்கென்ன வேண்டும்?
வெள்ளையப்பன்.-ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதாக இருந்தால் அது விஷயத்தைக்குறித்து யோசிக்கலாம்.
சபாபதி முதலியார் – ஆயிரம் ரூபாய் பெரிய தொகையா யிருந்தாலும் கொடுக்கத்தடையில்லை. இந்தப்பாவிகள் தண்டனையடைய ஒரு வழி யை உண்டாக்கினால் உனக்காயிரமல்ல ஐயாயிரம் கேட்டாலும் கொடுத் து உன்னைத் தனவந்தனாக்கிவிடுவேன்.
வெள்ளையப்பன் தன் பெரிய உடல் குலுங்க நகைத்து, ஐயா! எனக்கு இலஞ்சம் கொடுத்து என்னை வசியப்படுத்த எண்ணங்கொண்டது முடியாத காரியமென்று கதவை மூடிக்கொண்டு போனான்.
இரண்டாவது அறையிலிருந்த வாலிபன் புதிதாகச் சிறைப்பட்டவர் வெள்ளையப்பனோடு பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுப் பழக்கப்பட்ட குரலாக இருக்கிறது, இவர் யாரென்று யோசித்துக்கொண்டு இன்னாரென்று கண்டுகொள்ளாமலிருந்தான்.
மறுநாள் காலையில் சபாபதிமுதலியார் அறைக்குள் தலைவன் வெள்ளையப்ப னுடன் சென்று, ஐயா! உம்மை வெளியாக்கினால் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும், எங்களைத் தண்டிக்க வழிகாட்டினால் ஐயாயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். எங்களைத் தண்டிக்க வழி தேடுகிறதைப் பின்பார்த்துக் கொள்ளலாம். நீர் இவ் விழிருந்து விடுதலையாக ரூபாய் ஐயாயிரம் வேண்டும். அந்தத் தொ கையைக் கொடுத்தால் உம்மை விட்டுவிடத் தடையில்லை. நீர் என் னிடத்திலிருப்பவருக்கு நயவஞ்சகஞ்சொல்லி அவர்களை ஏமாற்றி விடலாமென்று எண்ணியது முடியாத காரியமென்றான்.
சபாபதி முதலியார் – நான் இவ்விடத்திலிருந்து உனக்கு ஐயாயிரம் ரூபாய் எவ்விதம் கொடுக்கமுடியும்? என்னுடைய அரைப்பையில் ஏறக்குறைய ஐந்நூறு ரூபாயிருந்தது. அதை எடுத்துக்கொண்டது போதாதா?இல்லாதவனிடத்தில் ஐயாயிரம் கேட்பது அடுக்காது.
தலைவன் – உம்மைப்போல் தனவந்தன் என் கையிலகப்பட்டால் நான் ஐந் நூறுமட்டும் பெற்று விட்டுவிடுவது நான் கைக்கொண்டிருக்கும் தொழி லுக்கு விரோதமாகும். நீர் காலதாமதம் செய்யாமல் என்னுடைய மனிதனிடம் ஐயாயிரம் ரூபாய் கொடுக்கும்படி ஓர் கடிதம் என் முன்னிலை யிலெழுதி யனுப்பினால் பணம் வந்தவுடன் உம்மை விட்டுவிடத் தடை யில்லை. நீர் எழுதுங் கடிதத்தில் நீர் இருக்குமிடத்தைக் குறிக்காமலும் பணம் வேண்டியதற்குக் காரணம் காட்டாமலும் எழுதவேண்டும். பணம் வாங்கப்போகிறவர்களுக்கு ஏதாகிலும் ஆபத்து நேரிட்டால் நீர் இவ்வி டத்தில் உயிரிழக்கவேண்டிவரும். அவ்விதம் ஒன்றும் நேரிடாமலிருக்க நீர் எழுதுங் கடிதத்தை நான் வாசித்துப்பார்த்து அனுப்புவேன். இவ் விதம்செய்ய உமக்கிஷ்டமா?
சபாபதி முதலியார் – நான் கடிதம் எழுதிப் பணம் வரவழைத்துக் கொடுத்தபின் என்னை விடாமலிருந்தால் யார் என்ன செய்யக்கூடும்?
தலைவன்.- சோலையப்பன் சொன்ன சொல் தவறானென்று நமபலாம்.
சபாபதி முதலியார். – உன்னுடைய வார்த்தையில் நம்பிக்கை உண்டாக எனக்கு உடதேசிட்டதை வீட்டு, என் வார்த்தையை நம்பி என்னோடு ஒருவனை அனுப்பினால் நீ கேட்ட ஐயாயிரத்தைக் கொடுத்தனுப்புகிறேன். நான் காரணம் ஒன்றும் காட்டாமல் பெருந்தொகையைக் கொடுக்கும் படி எழுதினால் பணம் கொடுக்கச் சந்தேகப்படுவார்கள்.
சோலையப்பன் – முதலை நீரிலிருக்கும்பொழுது அதற்கு ஒரு யானையின் பலம் இருக்கிறது. அதைக் கரையில் கொண்டுவந்து விட்டால் பூனைக்கு இருக்கிறபலமுமில்லாமற் போகிறது. அதுபோல் உமக்கு இடபேதத் தால் வலிகுன்றியிருக்கிறது. நீர் என் கைப்பிடியிலிருந்து நீங்கினால் உம் மைக் கட்டாயப்படுத்திப் பணம் வாங்கமுடியாது.ஆனதால்,உம்மை வெளியில் விட்டு ஏமாந்துபோவேன் என்ற உறுதிப்பாடு உமக்கிருக்கு மாகில் அந்த எண்ணத்தை விட்டுவிடும். நீர் நன்றாய் யோசித்துப்பார்க்க எட்டுநாள் தவணை கொடுக்கிறேன். நீர் அதற்குள் யாவையும் நன்றாய் யோசித்து வெள்ளையப்பனிடம் சொல்லியனுப்பலாம். (என்று நீங் கினான்.)
வெள்ளையப்பன் சிலரோடு சபாபதிமுதலியாருடைய கைகளைக்கட்டி வெளியில் அழைத்துப்போய்க் காலைக்கடனை முடித்துக்கொள்ளச்செய் ய்து அறையில் விட்டுப் பழவர்க்கங்கள் கொடுத்துச் சென்றான்.
சிலநாள்களுக்குப்பின் நடு அறையிலிருந்த வாலிபனிடம் வெள்ளையப்பன் வந்து, ஐயா! நீர் இன்னும் எத்தனை நாளைக்குப் பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கப்போகிறீர்! எஜமான் கேட்ட ஆயிரம் ரூபாயை வரவழைத்துக்கொடுத்துப் போகாமல் பஞ்சவேடங் கொண்டிருக்கிறீர். உம்மைப் பார்ப்போர் யாவரும் நீர் பெரிய தனவந்தன் மகனென்று சொல்லுவார்களேயென்று நகைத்தான்.
வாலிபன்.- நீ நினைக்கிறவிதம் நான் ஒருதனவந்தன் மகனாயிருந்தால் ஆயி ரம் ரூபாய் வரவழைத்துக் கொடுக்கலாம். நான் எழையாயிருப்பதால் ஆயிரம் ரூபாய் வரவழைத்துக் கொடுக்கச் சக்தியில்லாமல் இவ்விடத்தில் ஒரு மாதத்துக் கதிகமாயிருக்கிறேன். இதனால் நான் ஓர் ஏழையென்று நீங்கள் கண்டுகொள்ளாமலிருப்பதற்கு நான் என்ன செய்வேன்!
வாலிபன் சொல்லியவைகளைக் கேட்ட வெள்ளையப்பன் பதில் ஒன்றும் சொல்லாமல் நீங்கினான்.
சபாபதி முதலியார் சிறையிலடைப்பட்ட ஒரு வாரத்துக்குப் பின் வெள்ளையப்பன் இரவில் பத்துமணிக்கு மேல் வாலிபனிருக்கும் அறைக்குள் சென்று வழக்கப் பிரகாரம் விளக்கேற்றி வைத்து, ஐயா! எதுவாகிலும் வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்டான்.
வாலிபன் – ஏதப்பா இன்று அதிக நேரம் பொறுத்து வந்தாய்? எனக்குத் தாகம் அதிகமாக இருக்கிறது, ஜலங்கொடு.
வெள்ளையப்பன்.- இன்று மதுரைவீரன் பூசை போட்டோம். ஆனதால் நேரமாய் விட்டது. (என்று ஜலம் கொடுத்தான்.)
வெள்ளையப்பன்மேல் சாராயநாற்றம் வருவதைக்கண்ட வாலிபன் செம்பை வாங்கி ஜலம் குடித்துச் செம்பைக் கொடுத்துவிடாமல் தன்னருகில் வைத்துக்கொண்டதை வெள்ளையப்பன் கண்டு செம்பையெடுக்க நெருங்கியபொழுது, வெள்ளையப்பனுடைய பெரிய உருவத்தைக் கண்டு அஞ்சாமலும் இச்சமயத்தைக் கைவிடக்கூடாதென்றும் அவன் காலைத் தன் ஒரு காலால் மடக்கி மார்பில் கையை வைத்துத் தள்ளி னான். மதயானை போன்ற வெள்ளையப்பன் சாராயம் குடித்திருந்த மயக்கத்தாலும் அசதியில் தள்ளுண்டதாலும் அடியற்ற பனைபோல் திடீரென்ற சத்தம் உண்டாக விழவே, அது கல்பாவிய இடமானதால் லை கல்லில் தாக்குண்டு மூர்ச்சையாய்விட்டான். வாலிபன் இனி காலம் போக்கக்கூடாதென்று வெள்ளையப்பனிடம் இருந்த வாளையும் சாவிக்கொத்தையும் எடுத்துக்கொண்டு தன் காலிலிருந்த விலங்கின் பூட்டை வாளால் தட்டி உடைத்தெறிந்து,தான் இருந்த அறையைப் பூட்டி, நம்மைப்போல் இருவர் இங்கிருப்பதால் அவர்களையும் அழைத் துக்கொண்டு போய்விட வேண்டுமென்று முதலறையைத் திறந்து, ஐயா ! தூங்குகிறீர்களோ, என்றான்.
பெரியவர்.- நான் தூங்கவில்லை. நீ யார்? அடுத்த அறையில் திடீரென்ற சத்தம் கேட்டதே! அது என்ன?
வாலிபன்.- நான் அடுத்த அறையிலிருந்தவன். வெள்ளையப்பனைக் கீழே தள்ளி அவனை மூர்ச்சையாக்கித் தங்களை விடுவித்து அழைத்துப்போக வந்தேன். நாம் இன்னும் தாமதம் செய்துகொண்டிராமல் போய்விட வேண்டும். தங்களுடைய காலிலிருக்கும் பூட்டைக்காட்டுங்கள். (என்று அவ்வறையிலிருந்த விளக்கொளியால் பூட்டை உடைத்தெரிந்தான்.)
பெரியவர்.- அப்பா ! நீ என்னை அறியாதவனாக இருந்தும் எனக்காகப் பரி தாபப்பட்டு விடுவிக்க வந்தாய்; ஐயோ! உன்னுடைய எண்ணம் பூர்த் தியானால் அதிக சந்தோஷமடைவேன். திருடர் கூட்டம் அதிகமானதால் நாம் அவர்களைத் தப்பித்துக்கொண்டுபோவது கடினமாயினும், நீ மட்டாவது தப்பித்துக்கொண்டு போனால் போதுமானது. (என்று வாலிபனோடு வெளியில் வந்தார்.)
வாலிபன் மூன்றாவதறையின் சதவைத்திறந்து, ஐயா! என்று கூப்பிட்டான்.
சபாபதி முதலியார் – யாரடா விளக்கில்லாமல் வந்தவன்? அதென்ன அடுத்த அறையில் பெரிய சத்தம்கேட்டது?
வாலிபன்.- ஐயா! நமக்கு உணவு கொண்டுவருபவனே விழுந்தான். தங் களை விடுவித்து அழைத்துப்போக வந்தேன். தங்கள் கால்விலங்கின் பூட்டெங்கே? (என்று தடவிப்பார்த்து உடைக்கும்பொழுது தன்கைவி ரலில் அடிவிழுந்ததையும் கவனிக்காமல் உடைத்தெரிந்தான்.)
சாபாபதி முதலியார். – நம்மைச் சிறைப்படுத்திவைத்திருக்கும் துன்மார்க்கர் நம்மைக்கொல்ல யோசித்திருப்பதால் நாம் அவர்கள் ஆக்கினையா லிறக்கா மல், அவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்களோடு போர்புரிந்து சில ரைக்கொன்றபின்னாவது இறப்பது விசேடமே! (என்று வெளியில் வந்து தம்மை விடுவித்தவன் குரல் வழக்கப்பட்டதாகக் கண்டும் இருட் டால் அவன் இன்னானென்று அறிந்து கொள்ளாமல் பின் சென்றார்.)
என் கையில் வாளிருப்பதால் என்னை முன் விட்டு நீங்கள் இருவரும் எனக்குப் பின் வரவேண்டும்! நாம் போவதைக்கண்டு யாராகிலும் எதிர்ப்பட்டுத் தடை செய்தால் நான் பார்த்துக் கொள்கிறே னென்று இருவரையும் பின் வரும்படி செய்து வாலிபன் முன்சென்று கோபுரவாயிற்படி யருகில் வந்தான். அவ்விடத்தில் விளக்கு மங்கி யெரிய ஒருவன் உட்கார்ந்து உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு வாலிபன் சந்தடி செய்யாமல் இருவரையும் முன்போகவிட்டு அவர்க ளுக்குப்பின் செல்லும் பொழுது, உறங்கியவன் போகிறவர்கள் சந் தடியால் விழித்துப் பார்த்து, ஒ ! ஓ! மோசஞ்செய்து ஓடுகிறார்க ளென்று உள்ளிருக்கிறவர்க ளறியச் சத்தம் போட்டுத் தன்னிடத்தி லிருந்த வாளை எடுத்துக் கொண்டு ஓடி வழிவிடாமல் தடையாக நின்றான். அதைக்கண்டவாலிபன் இவன் இருந்தால் நம்முடைய எண் ணம் முடிவுபெறாதென்று அவனை எதிர்த்து ஒரு வெட்டால் அவன் பிடித்திருந்த வாளோடு கை விழும்படி வெட்டினான். சபாபதி முதலியார் அந்த வாளை எடுத்துக்கொண்டு இனி இங்கிருப்பது நமக்குக் கெடுதியாகுமென்று மூவரும் துரிதமாகச் சென்றார்கள்.
வாலிபன் இருள் நமக்கு வழி காட்டாமலிருப்பதால் பெரியவர் நம்மோடு நடந்து வரமாட்டார். நாம் மெதுவாகவே போகலாம். நம்மைச் சிறைப்படுத்தி வைத்திருந்து துஷ்டர்களை வதைக்காமற்போவது பிரியமில்லை யென்று நெடுந்தூரம் போகுமுன்னம் அனேகர் வெளிச் சத்தோடு வருவதைப்பார்த்து, என்னுடைய எண்ணங் கை கூடிய தென்று சிரித்தான்.
கோபுரவாயிற்படியில் காத்திருந்தவன் போட்டசத்தத்தாலும் வெள்ளையப் பன் மூர்ச்சை தெளிந்தெழுந்து போட்ட சத்தத்தாலும் திருடர்கள் யாவரும் தங்கள் தங்கள் வாள் கைக்கொண்டு தலைவனோடு சேர்ந்து தீவட்டிகளுடன் வருவதைக்கண்ட வாலிபன் தன்னோடிருப்பவர் சபாபதி முதலியாரென்று வெளிச்சத்தாலறிந்து, அண்ணா! நீங்கள் பெரியவருக்குத் துணையாக இருங்களென்று கூறி அவர் பதில் சொல்லு முன் திருடர்களை இருவர்களருகில் வரவிடாமல் பாதி வழியில் வாலிபன் ஓடி எதிர்த்தான்.
தலைவன் அடா துன்மார்க்கா! உன்னால் இருவர் வெளிப்படவும் என் மனி தன் ஒருவன் கையற்றுவிழவும் நேரிட்டதல்லவா! உன்னுடைய ஆ யுள் இன்றோடு முடிவுபெற்றதென்று தன் வீரர்களைப்பார்த்து, இந்தத் துஷ்டனைத் துண்டு துண்டாய் வெட்டி எறியுங்களென்று உத்தரவு செய்தான்.
திருடர்கள் யாவரும் வாலிபனைச்சுற்றி வளைத்துக்கொண்டு வாலிபனை நெ ருங்கி வெட்டச் சமயம்பார்த்திருந்தார்கள். வாலிபன் கிஞ்சித்தும் அதைரியப்படாமல் தன்னருகில் ஒருவரையும் நெருங்கவொட்டாம லிருந்தான். திருடரில் ஒருவன் துணிந்து நெருங்கி வாலிபனை வெட்டவர, வாலிபன் அவ்வெட்டைத்தட்டி அவன் தலை நிலத்தில் விழ வெட்டி எறிந்தான். மற்ற இருவருக்கு அதிக கோபம் உண்டாகி நெருங்கி நெடுநேரம் உயிரோடிருக்காமல் வாலிபன் வாளால் வெட் டுண்டிறந்தார்கள். வாலிபன் தன்னைத் துண்டு துண்டாய் வெட்டி எறியவேண்டுமென்று எதிர்த்த மற்ற மூவருடைய தலைகளும் பூமி யில் உருளச்செய்தான். அத்தருணத்தில் அதிக கோபத்தோடு வெள் ளையப்பன் ஓடிவந்து யாவரையும் விலகும்படி செய்து, அட துன் மார்க்கா! என்னை அசதியில் பிடித்துத் தள்ளி மூர்ச்சையாகும்படி செய்த உன்னை என் வாளால் வெட்டி எறிகிறேன் பாரென்று ஒரு மதயானைபோல் எதிர்த்தான். திருடர்கள் கொண்டுவந்த தீவட்டிகள் சில தவறி கீழே விழுந்து புல்பூண்டுகளைக் கொளுத்திப் பெரிய வெளிச்சத்தை உண்டுபடுத்தி விட்டதால், சபாபதி முதலியாரும் பெரி யவரும் வாலிபனுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்து, பெரியவர் சபாபதி முதலியாரைப்பார்த்து, ஐயா! நீர் என்னோடு இருப்பதை விட்டு வாலிபனுக்குத் துணையாகப்போனால் உத்தமமாக இருக்குமே யென்றார். ஐயா! நான் உம்மைவிட்டுப்போனால் ஒருவரிருவர் இப் பக்கம் திரும்பினால் என்ன செய்கிறதென்று சபாபதிமுதலியார் ஒன் றும் செய்யாமலிருக்கிறதே நல்லதென்று பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தார்.
வாலிபன் தன்னோடு எதிர்த்த வெள்ளையப்பனோடு நெடுநேரம் போர்புரியா மலும் முன்போல் அவனை மூர்ச்சையாய் நிலத்தில் விழச்செய்யாம லும் தலையொரு பக்கமும் முண்டம் ஒரு பக்கமுமாக விழும்படி செய்ததேயன்றித் திருடர்களைப்போல் தன் வல்லமையைப் புகழ்ந்து பேசிக்கொண்டிராமல் தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் எமலோகங் குடிபுகுத்திக்கொண்டிருந்தான்.
தலைவன்.- அடா பாதகா! நீ அனேகரைக் கொன்றுவிட்டாய்! நான் அனேக இடத்தில் போர்செய்திருக்கிறேன். உன்னைப்போல் போர் செய்த வர்களை நான் கண்டதுமில்லை; உன்னைப்போல் வல்லமையைக் கொண்டவனொருவன் உலகிலிருப்பனென்ற நினைவுகொண்டது மில்லை. உன்னுடைய சாமர்த்தியத்தைக்கண்டு மெச்சி உனக்கு வெகு மதி அளிக்கவேண்டியது கிரமமாயினும் அதற்குப் பதிலாக உன்னை வெட்டி எறிகிறேன் பார். (என்று தன் வல்லமையையெல்லாம் சேர் த்து வாலிபன் தலையில் ஓங்கி வெட்டினான்.)
அப்பொழுது வாலிபன் தன்மேல்விழுந்த வெட்டைச் சிரமமில்லாமல் வளால் தாங்கினான். அவ்வெட்டால் வாலிபன் வாள் இரண்டு துண் டாய்ப்போகவே அதை அறிந்து இலகுவாய் வேறிடத்திற் பாய்ந்து அவ்விடத்தில் இறந்து விழுந்துகிடக்கிறவ னருகிற்கிடந்த வாளொ ன்றை எடுக்குமுன், தன்கையில் ஆயுதமில்லாததைக் கண்டு ஒடிவந்த சிலரை நிலத்தில் சாய்த்துத் தலைவனிருக்குமிடம் ஒடி அவன் சிரம் அற்றுவிழ வெட்டி யெறிந்து, திரும்பிச் சபாபதிமுதலியாரோடு சிலர் போர்புரிந்து அவரைவெற்றி கொள்ளும் சமயமாக இருப்பதைப் பார்த்து அவ்விடத்திற்கோடிச் சபாபதிமுதலியாரோடெதிர்த்தவர்கள் நிலத்தில் விழும்படி செய்தான். தப்பிய இருவர் இந்த இராக்ஷத் னோடு போர்புரிய யாரால் முடியும் ! என்று ஓடினார்கள். சபாபதி முதலியார் வாலிபனைக் கட்டித் தழுவிக்கொண்டு, தம்பி விஜயரங்கம்! உன் வல்லமையை மெச்சத்தகுந்தவர்கள் இங்கு யாரிருக்கிறார்கள்! நீ ஒருவனாய் நின்று வந்தவர்களை யெல்லாம் வென்று ஜெயங்கொண் டாயே! ஐயோ! நான் அவர்களைக் கண்டவுடன், வருகிறவர்கள் ஏறக் குறைய முப்பது பேரிருக்கிறார்களே! இவர்களை இருவர் எதிர்த்து வெல்ல முடியுமா? நாம் இறப்பது நிச்சயமென்று எண்ணியிருந் தேன். அவர்கள் இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டதோடு என் உயிரை வாங்க வந்தவரையும் நிலத்திற் சாயவிட்டு என் உயி ரைக் காப்பாற்றினாயே யென்று ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார். அருகிலிருந்த பெரியவர் விஜயரங்கத்தைப் பிடித்து, அப்பா!நான் நெடுநாள் சிறையிலிருந்தும் இனி இறப்பதே உத்தமமென்றிருந்த வனுக்கு உயிர்ப்பிட்சை கொடுக்க உன் உயிரைத் திரணமாக மதித்து வருகிறவர்களுக்கு முதற்பலியாக ஓடி எதிர்த்து ஜெயங்கொண்ட வீரா! உன் வல்லமைக்கும் நீ செய்த உபகாரத்துக்கும் பதில் என்ன செய்யப்போகிறேன் ! உன்னை மகனாகக்கொள்ள நியாயமில்லாமற் போனாலும் எனக்கோர் மகளிருந்தால் மருமகனாகவாவது கொள்ளு வேனே ! என்று கன்னத்தில் முத்தமிட்டார்.நான் செய்த அற்பமான தொழிலை இவ்வளவு சிலாக்கியமாகப் பேசுவது நியாய மல்ல. நாம் இன்னும் இவ்விடம் நின்றிருந்தால், ஓடிப்போனவர்கள் அசகாயப்பட்டவர்களுக்கு உதவிசெய்யவரமாட்டார்கள். நாம் இவ் விடம் விட்டுப்போவதே உத்தமமென்று விஜயரங்கம் இருவரையும் அழைத்துப்போகும்பொழுது தன்னோடுவரும் பெரியவரைப்பார்த்து, ஐயா! தாங்கள் அனேக நாளாக இங்கிருந்தீர்களோ? என்று கேட்டான்.
பெரியவர்.- ஆம் தம்பி ! நான் இவர்கள் கையிலகப்பட்டு அனேக வருஷங்களாய்விட்டன.
சபாபதிமுதலியார் – தம்பி விஜயரங்கம்! நீ இவர்கள் கையில் எவ்விதம் அகப்பட்டுக்கொண்டாய்?
விஜயரங்கம்.- அண்ணா! நான் வேங்கடாசலமுதலியாரால் வெறுக்கப்பட் டபின் சாப்பாடில்லாமல் நான்குதினம் பட்டினியோடு தங்களைக்கண்ட போது, தாங்கள் எனக்கிரங்கி ஆதரித்துவந்த நன்மையை நினையாமல் வாலிபச் சேட்டையால் தங்கள் விஷயத்தில் அபாராதம் செய்ய, அதை அறிந்த தாங்கள் எனக்கோர் கெடுதியும் செய்யாமல் என்னை வீட்டை விட்டுத் துரத்தியபின், சில நாள் அங்குமிங்கும் திரிந்து இம்மார்க்கம் வரும்பொழுது, இவ்விடத்தில் ஒரு சந்நியாசி வந்திருந்து அனேக அற் புதங்களைச் செய்வதோடு தம்மைப்பார்க்க வருபவர்கள் எண்ணிவந்ததை முடித்து அவர்களுடைய இரசியங்களையெல்லாம் சொல்லுவாரென்று கேள்விப்பட்டதால் நான் அறியப் பிரியங்கொண்டிருக்கு மொன்றை அவராலறிய நல்லசமயம் கிடைத்ததென்று இருவரோடு செல்ல, நெடுந் தூரம் போனபின், என்னை அசதியில் பிடித்துக் கைகளைக்கட்டி அவர் கள் அறையில் விட்டுப்பூட்டி, ஆயிரம் ரூபாய் வரவழைத்துக் கொடுத்தால் விட்டுவிடுகிறோமென்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். என்னை நாள் தோறும் காலைக்கடனை முடித்துக்கொள்ள அழைத்துப்போகும் பொழு தெல்லாம் நாம் தப்பித்தோட ஒரு சமயம் வாய்க்காதாவென்று பிரார்த்தித் திருந்தேன். ஆயினும், எனக்குச் சமயம் கிடைக்க இடங்கொடுக்காமல் சாக்கிரதையாக அவர்கள் இருந்தார்கள். பெரியவர் வெள்ளையப்பனோடு பேசியதைக் கேட்டிருந்ததுபோல் தாங்கள் அவனோடு பேசியதைக்கேட் டிருந்தும் தங்களை இன்னாரென்று அறிந்துகொள்ளாமலிருந்தேன்.
சபாபதிமுதலியார் — அப்பா விஜயரங்கம்! நான் இன்னானென்று அறியாம விருந்தும் என்னையும் பெரியவரையும் காப்பாற்ற எண்ணங்கொண்டவன் என்னிடத்திலிருந்தபொழுது அவ்விதம் நடந்ததற்குக் காரணம் யாது? உன்னைப்பரீட்சித்துப் பார்க்கப் பார்க்க நீ உயர்வாகிறாயே! உன்னைப் போலும் புண்ணியவான்கள் யாரிருக்கிறார்கள்! ஐயோ! துன்மார்க் கியாகிய என்மனைவி உன்னை வலுவந்தம் செய்துகொண்டிருக்க அவள் கண்ணுக் ககப்படாமல் நான் வருமளவும் நீவைக்கோற்போரில் மறை ந்திருப்பதை அவள் கண்டுபிடித்து உன்னை வசியப்படுத்தச்சொல்லிய வைகளையெல்லாம் தடுத்து அவளுக்கு நற்புத்திசொல்லிக்கொண்டிரு க்கும் முடிவில் நான்வந்து, நீ வெளிப்படையாகப்பேசாமல் மறைத் துப்பேசியதைக் கேட்டுத் தப்பாக உன்மேல் குற்றஞ்சுமத்திக் கோ பங்கொண்டு அடித்தபொழுது, இப்பொழுது காட்டிய உன் வல்ல மையை அப்பொழுதுகாட்டாமல், தனக்கென்ன நேரிடினும் நன்மை செய்தோர்க்குத் துன்பம் உண்டாக்கக்கூடாதென நினைத்து, உண்மை யைச் சொன்னால் என்மனைவிக்கு அவமானம் உண்டாகுமென்று சொல்லாமல் நீங்கியபின்னும், நான் இன்னானென்று அறியாமல் என் னைக் காப்பற்றினாய். நீ இப்பொழுது என்னுடைய ஆதரவில் இல் லாததால் இப்பொழுதாகிலும் உண்மையைச் சொல்லுகிறாயா பார்க்க லாமென்று கேட்டால், எல்லாப் பழிபாவத்தையும் ஏற்று என்வசைச் சொல்லையும் அங்கீகரித்து மேற்கொண்டு எனக்குந்துணையாக முதற் காணும் ஊர்பரியந்தம் வருகிறேன் என்றாய். நான் உன்னை எவ்வி தம் புகழ்வேன்! எனக்கொன்றும் தெரியவில்லை ! என்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, தம்பி அந்தப் படுபாவி கனகாம்புஜம் இறந்து ஒரு மாதமாகிறது. அவள் உனக்குச் செய்ததைவிட அதிகமாகத் தன் தங்கைக்குச் செய்திருந்தாள். அவள் சமாசாரத்தை அதிகமாகப்பேச எனக்கிஷ்டமில்லை. நீ இனி எப்பொழுதும் என்னை விட்டுப்பிரியாம லிருக்கவேண்டும். தம்பி! நீ வைக்கோற்போரில் நின்று பேசிக் கொண்டிருந்த பொழுது வேறொருவர் நீங்கள் பேசுவதை முதலி லிருந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவர் இன்னாரென்று நீ சொல்ல முடியுமா?
விஜயரங்கம்.- அண்ணா! நான் எவ்விதம் சொல்ல முடியும்!
பெ.யவர்.- அப்பா விஜயரங்கம்! நீ வேங்கடாசல முதலியாரால் வெறுக் கப்பட்டேனென்றாய். எந்த வேங்கடாசல முதலியாரால் வெறுக்கப் பட்டாய்? அவர் வெறுக்கும்படி என்ன செய்தாய்?
சபாபதிமுதலியார் – ஐயா! கொஞ்சம் பொறுங்கள்! இன்னும் ஒரு வார் த்தை என் தம்பிக்குச் சொல்லவேண்டும். தம்பி! நீ ஒருபொழுதும் மறவாத பெண்ணே அவ்விடம் இருந்து கேட்டிருந்தாள்.
விஜயரங்கம்.– அண்ணா ! அந்நேரத்தில் அவ்விடமிருந்த பெண் யாரென்று கண்டுகொள்ள முடியவில்லை.
சபாபதிமுதலியார் – அங்கிருந்து நீ சொல்லியவைகளையெல்லாம் கேட்டி ருந்தவள் அருணாசலமுதலியார் தங்கை செழுங்கமலத்தின் மகள் கம லாக்ஷியம்மாளென்று அறிந்துகொள்.
விஜயரங்கம் கமலாக்ஷியின் பெயரைக் கேட்டவுடன் திகைத்து நின்றான்.
பெரியவர் நடக்காமல் மரம்போல் அசைவற்று நின்றார்.
– தொடரும்…
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.
– கமலாக்ஷி சரித்திரம் (நாவல்), இரண்டாம் பதிப்பு: 1910, தாம்ஸன் அண்ட் கம்பெனி, மினர்வா அச்சுக்கூடத்தில் பதிப்பித்தது, சென்னை.