(1910ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
க.நா.சு. அவர்கள் எழுதிய முதற் ஐந்து தமிழ் நாவல்கள் (செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
13-ம் அத்தியாயம்
நடராஜமுதலியாரும் செழுங்கமலமும் முத்துக்குமாரமுதலியார் வீட்டுக் குப் போனபின் கமலாக்ஷி தனித்து வீட்டிலிருந்து வாசித்துக்கொண் டிருக்கும்பொழுது சிறுவன் ஒருவன் வீட்டுக்குள் ஓடிவந்து கமலாக்ஷி யம்மாள் என்பவள் யாரென்றான். கமாலாக்ஷி ஏன் தம்பி கேட்கிறாய்? நான்தான் கமலாக்ஷி என்பவள் என்று சொன்னவுடன் கடிதம் ஒன்றைக் கையில் கொடுத்தான். கடிதத்தை வாங்கிப்பார்த்து, இதையார் கொடுத்தது என்று கேட்கச் சிறுவனைத் தேடிப்பார்த்து அவன் இல்லா ததைக்கண்டு, இதை யார் எழுதியிருப்பார்கள்? நமக்குக் கடிதம் எழுதத் தகுந்தவர்கள் ஒருவரும் இல்லையே! நம்மை அவமானப்படுத்த இக்கடி தத்தை யாராகிலும் எழுதி அனுப்பியிருக்கவேண்டும். இதைப் பிரித்து வாசிக்காமல் கிழித்தெரிவதே உத்தமம் என்று கிழிக்கப்போனவள் அதைக்கிழிக்காமல் ஒருவேளை நம்முடையமாமன் பத்திரத்தைக் கொண் டோடிய பிராமணனைக்குறித்து எழுதியிருக்கக்கூடும்; ஆனதால் வாசிக் காமல் கிழித்தெறிவது உத்தமமல்லவென்றும், மாமன் எழுதினால் நமது தாயாருக்கு எழுதியிருக்கவேண்டுமேயன்றி நமக்கு எழுத நியாயமில் லையே! இக்கடிதத்தை வைத்திருந்து தாயார் வந்தபின் வாசிப்பதே நலம் என்றும் எண்ணி, நாம் நினைத்ததுபோல் நம்முடைய மாமனிடத்தி லிருந்து வராமல் முதலில் நினைத்தவிதம் நம்மை அவமானப்படுத்த எவ ராவது எழுதியிருந்தால் நாம் துக்கப்படுவதோடு நம்முடைய தாயாரை யும் துக்கத்துக்கு உடன்படுத்த வேண்டிவருமே!நாமே முதலில் பிரித் துப் பார்த்து வேண்டியதைச் செய்வதே உத்தமம் என்று சிந்தித்துக் கொண்டே கடிதத்தைப் பிரித்தாள். அதில் அடியிற் கண்டவிதம் எழுதியிருந்தது:-
சிரஞ்சீவி சொௗபாக்கியவதி கமலாக்ஷி யம்மாளுக்குத் தெரிவிப்பது யாதெனில்:-
இரத்தினம் என்பவன் வேறு விதமாக வன்சாக்ஷியை மோசம் செய்ய எண்ணங்கொண்டு யாவும் சித்தஞ்செய்து விட்டான். அதைத் தடுத் துக்கொள்ள அவர்களால் முடியாது. அதை உனக்குத் தெரிவித்தால் இரத்தினத்தின் எண்ணத்தைக் கெடுத்துவிடலாமென்று நினைக்கிறேன். அது இன்னதென்று அறிந்தபின் நான் கடிதத்தில் எழுதா மல் விட்டது நியாயமென்று எண்ணுவாய். உங்களுடைய வீட்டில் வெளியார் ஒருவரும் இல்லாதிருந்தால் இக்கடிதம் கொண்டு வரும் சிறுவனிடம் சொல்லியனுப்பவும். உடனே அவ்விடம் வருகிறேன். வெளியார் முன்வர எனக்குப் பிரியமில்லை. இன்னும் சிலநாள் என் தாய்தந்தையர் பார்வையில் அகப்படாம் லிருக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. அதன் காரணத்தை நேரில் சொல்லுவேன். உன்னிடத்திலிருந்நு பதில் வருமளவும் புது ஊர்ப்பாதைக்கு எதிர்த்த தோப்பிலிருக்கிறேன். நாம் இரத்தி னத்தின் தீச்செய்கையைக் கவனியாதிருந்தால் இன்றிராத்திரி வன சாக்ஷி மோசம் போய்விடுவாள். அதன்பின் நாய்வாய் வைத்த சட் டியை நாய்க்கே வைத்துவிடும் வழக்கம்போல் செய்யவேண்டிவரும். உடனே பதில் சொல்லி யனுப்பவும்.
மயிலாபுரி
இப்படிக்கு
உன் பிரிய சகோதரன்,
விஜயரங்கம்.
கமலாக்ஷி இக்கடிதத்தை வாசித்து வீட்டைவிட்டு வெளிப்பட்டுச் சில தூரம் சென்று அங்கும் இங்கும் சிறுவனைத்தேடிக்கொண்டு, சிறுவன் காணப்படவில்லையே! நாம் யாரிடத்தில் பதில்சொல்லியனுப்புகிறது; காலதாமதமானால் காரியம் மிஞ்சிவிடும்போல் காணப்படுகிறது.நா மும் விஜயரங்கத்தண்ணன் நிற்கும் இடத்திற்குச்சமீபத்தில் வந்துவிட் டோம். நாமே சென்று அவரை யழைத்துப்போவதே உத்தமம். அவர் இருக்கும் இடத்திற்குப்போக நமக்குப் பயம் வரவேண்டிய காரணம் ஒன்றும் இல்லையே! என்று கடிதத்தில் குறிப்பிட்ட தோப்புக்குள் சென்றாள்.தோப்பில் ஒருவரும் இல்லாததைக்கண்ட கமலாக்ஷி நாற்பக்கமும் சுற்றிப்பார்த்து மாடுகள் பூட்டிய வண்டி யொன்று சமீ பத்தில் நின்றிருப்பதைக்கண்டு விஜயரங்கம் வண்டிக்குள்ளிருக்க வேண்டுமென்று வண்டிக்கருகில் வந்து அண்ணா என்றாள்.உட மறத்திற் பதுங்கியிருந்த இருவர் ஒடிவந்து கமலாக்ஷியைப் பிடித்து அவள் வாயை மூடி வண்டியில் தூக்கிப்போட்டு ஒருவன் துணையாக வண்டியிலேறித் தன் குத்துவாளை யுருவி கமலாக்ஷி நெஞ்சில் வைத்து வாயைத்திறந்தால் உன்னைப் பிரேதம் ஆக்கிவிடுவேன் என்று பயமுறித்தினான். மற்றவன் வண்டியின் இருபக்கத்தையும் திரையால் மூடி வண்டியிலேறி மாடுகளை வேகமாக நடத்தினான். கமலாக்ஷி திகைத்துப் பட்டப் பகலில் இவ்விதம் செய்கிறவர்களும் உண்டா? என்று யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது, வண்டி ஓட் டுகிறவன் அடே சாத்தா! குருவி எப்படியிருக்கிறது? என்று கேட்டான்.
சாத்தன் – அடே! காத்தா! என் கையில் அகப்பட்ட குருவியும் தப்பிப் போகுமா? மணி பன்னிரண்டாய் இருந்தாலும் பலர் நடமாடுகிற இட மாயிருந்தாலும் நம்முடைய காலம் நற்காலமாக இருந்தால் நமக்கு ஒரு அபாயமும் நேரிடாது.(என்று சொல்லியபின் கமலாக்ஷியைப்பார்த்து) வண்டி காட்டுக்குள் வந்துவிட்டது. இனி கத்தினாலும் அழுதாலும் பிரயோசனம் இல்லை.ஏதாகிலும் தொந்தரவு செய்தால் வாயில் துணியை அடைத்துக் கையும் காலையும் சட்டி உருட்டிவிடுவேன். (என்று குத்து வாளை உறையிற் போட்டுக்கொண்டான்.)
கமலாக்ஷி. அடா பேயே! என் உயிருச்சஞ்சி உங்களுக்குப் பயப்படுவேன் என்று எண்ணவேண்டாம். என்னை வண்டியில் போட்டுக்கொண்டு போகும்படி சொன்னவர் யார்? விஜயரங்கத்தண்ணன் எங்கே?
காத்தன்.- அடே காத்தா! இந்தப்பெண் என்னைப் பேய் என்றது உன் காதில் விழுந்ததா?
காத்தன். – நாம் இருவரும் அந்தப் பெண்ணைப்போல் சிவப்பாய் இல்லாமல் கறுப்பாய் இருப்பதால் நம்மைப் பேயென்று கூப்பிட்டாள். (என்று சிரித்தான்.)
சாத்தன்.- ஏ பெண்ணே! உன்னை மரியாதையாகக் கொண்டுபோக வேண்டு மென்கிற கட்டளை எங்களுக்கிருப்பதால் நீ யென்னைப் பேய் என்று சொன்னதற்குப் பொறுத்துக்கொண்டேன். எந்த விஷயத்தைக் குறித்து எங்களைக் கேட்டாலும் பதில் ஒன்றும் கிடைக்கமாட்டாது. ஆனதால் நீ யொன்றும் பேசாமலும் கேட்காமலும் இருப்பதே அழகு.
கமலாக்ஷி.- நீங்கள் ஒருவருடைய சொல்லுக்கடங்கி எல்லாவற்றிற்கும் துணிந்து பட்டப்பகலில் கொண்டுபோகிறவர்கள் பணத்துக்காசைப் பட்டன்றி வேறொன்றைக்கருதி இராது. நீங்கள் என்னைக்கொண்டு போய், குறித்த இடத்தில் சேர்த்துப் பரிசுபெறுவதைவிட இவ்விடத்திலேயே என் நகைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு என்னை விட்டு விடுங்கள். அது உங்களுக்குப் புண்ணியமாகும். நீங்கள் என் விஷயத்தில் செய்ததை எனையாமல் உங்களை எக்காலமும் புகழ்ந்து கொண்டிருப்பேன்.
சாத்தன் – உன்னிடத்தில் கைக்கூலி பெற்று உன்னை விடுவோம் என்கிற எண்ணம் உனக்கிருந்தால் அதை விட்டுவிடு. நாங்கள் ஒருவருக்கு ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்று ஒப்புக்கொண்டபின் அதை முடிக்காமல் அதற்கு விரோதமாகப் பணத்துக் காசைப்பட்டுச் செய்யமாட்டோம்.
கமலாக்ஷி சாத்தனோடு வார்த்தையாடிக் கொண்டிருக்கும்பொழுது அவனை எப்படி விட்டுத் தப்புவது என்று தனக்குள் யோசித்து, வண்டியிலிரு ந்து குதித்து ஒடுவதே உத்தமம்; மார்க்கத்தில் ஒருவரும் இல்லாமற் போவார்களா? வழிப்போக்கரால் உதவி பெறலாம் என்று எண்ணிச் சமயம்பார்த்துக் கொண்டிருந்து, அப்பா! நான் போட்டிருக்கும் நகைகள் முந்நூறு நானூறுக்குக் குறையாதே. இவைகளை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? நகையின்மேல் உங்களுக்கு விருப்பம் இல்லாமற்போனாலும் புண்ணியத்தைக் கருதியாவது செய்யக்கூடாதா? என்று சொல்லும்பொழுது, சாத்தனுக்குத் தும்மல் வந்து தலையை இரு கையாலும் பிடித்துக்கொண்டு குனிந்தான். கமலாக்ஷி இதைவிட நல்ல சமயங்கிடைக்காதென்று சாத்தனை வண்டியில் தள்ளி விட்டு வண்டியிலிருந்து குதித்து ஓடினாள். சாத்தன் உடனே குதித் துச் சற்றுநேரத்தில் ஓடிக் கமலாக்ஷியைப் பிடித்துக்கொண்டான். சாத்தனும் வண்டியை நிறுத்தி ஒடிச் சாத்தனுக்கு உதவிசெய்து கமலா க்ஷியைத் தூக்கிக்கொண்டு வரும்பொழுது “பாவிகள் என்னைக் கொல் லுகிறார்கள் ” என்று சதறினாள். அவள் கதறியது ஒரு பிரயோசனத் தையும் தராமற் போயிற்று. கமலாக்ஷியைத் தூக்கிக்கொண்டு வந்த சாத்தன் அதிக கோபத்தோடு கமலாக்ஷியை வண்டியில் விட்டெறிந் தான். வண்டியில் வைக்கோல்போட்டு அதன்மேல் சமுக்காளம் விரிக் கப்பட்டிருந்ததால் கமலாக்ஷிக்குத்தேகத்தில் அடிபடாவிட்டாலும் தலை குத்துக்காலில் பட்டதால் மூர்ச்சையாய் விழுந்ததுபோல் தோன்றி னாள், சாத்தனும் வண்டியிலேறிப்பார்த்து இவள் செய்ததற்குத் தக்க தண்டனைபெற்றாள், நமக்கு வேறொரு தொந்தரவும் கொடுக்காமல் மூர்ச்சையாயினாள் என்று, காத்தன் வண்டியோட்ட, சாத்தன் முன் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்து, அடே காத்தா! இவள் நம்மை ஏமாற்றப் பார்த்தாள் பார்த்தாயா! என்றான்.
காத்தன்.- நீ வண்டியில் விட்டெறிந்ததைப்பார்க்க எனக்குப் பயமாகவே இருந்தது. அவள் இறந்தால் நாம் நெடுநாள் சமயம் பார்த்ததும் அனேக தந்திரங்கள் செய்ததும் நல்ல காலத்தினால் இன்று செய்த யோசனை கைகூடியது பிரயோசன மில்லாமற் போய்விடும் என்றே எண்ணினேன்.
சாத்தன். – வண்டியில் வைக்கோல் போட்டிருப்பதால் அடி படாதென்றே விட்டெறிந்தேன். அடி படும் என்று நான் நினைக்கவில்லை. ஆயினும் பட்ட அடியால் மூர்ச்சையானாள். அது நமக்கனுகூலமே. மூர்ச்சை தெளிய நெடுநேரம் செல்லும். இவள் சொல்லியபடி நகைகளைப் பெற்றுக்கொண்டு துரத்திவிட்டால் நன்றாயிருக்காதல்லவா?
காத்தன் – அவ்விதம் செய்தால் நம்மை யார் நம்புவார்கள்? ஒருவரும் நம்பா மற்போனால் நமக்குப் பிழைப்பேது? பிழைப்பில்லாமற்போனால் நம்முடைய பெருஞ்செலவுக்கு என்ன செய்வோம் ! வாலிப முதல் சம்பாதித்ததை வீண்செலவு செய்யாமல் சேர்த்து வைத்திருந்தால் பெரும் பணக்காரராயிருக்கக் கூடுமே!
சாத்தன் – கப்பலேறிப்போய்ச் செய்து வந்த காரியத்திற்காகக் கிடைத்த பொருள் கொஞ்சமா? இரண்டாவது – குழந்தையை முடித்துவிடக் கிடைத்த தொகையும் கொஞ்சமல்ல. மற்ற விஷயங்களில் தேடியதும் சிறு தொகையல்லவே!(என்று பெருமூச்சு விட்டான்.)
காத்தன். – அடே சாத்தா ! அந்தக் குழந்தையைக் கொண்டுபோய் முடித்து விடப் போனோமே. அது எத்தனை வருடத்திற்கு முன்னால் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அதனால் நமக்கு நல்ல இலாபம் கிடைத்தது. நான் முதலில் அவரை நம்பவேயில்லை. அவர் பெய ரென்ன? அவர் பெயர் எனக்கு ஞாபகத்தில் நிற்கிறதில்லை.
சாத்தன்.- அவர் பெயரை நினைக்கவேண்டாம் என்று உனக்கு அனேக முறை சொல்லியிருக்கிறேன். எத்தனை வருடம் என்று எனக்கு நன் றாய் ஞாபகம் இருக்கிறது. கப்பலேறிப்போய்ச் செய்துவந்த வேலைக் குப்பின் அது நடந்தது. அது முடிந்து இருபது வருடத்திற் கதிகமாகி றது. கீச்சானை முடித்துவிட்டோம் என்றுவாங்கிய பணத்தை நாம் இருவ ரும் கலியாணம் செய்துகொண்டோம். ஒரு வருடத்திற்குப் பின் என் மகன் பிறந்தான். மறு வருடத்தில் உன் மகள் பிறந்தாள். அவர்கள் இரு வருக்கும் கலியாணம் முடிந்து ஐந்துவருடமாகிறது. அந்தக் கணக்கைப் பார்த்துக்கொள்.
காத்தன். – கீச்சான் இறந்துவிட்டான் என்றோ அவர் இன்னும் நினைத்திருக்கிறார்.
சாத்தன் – கீச்சானை உயிரோடு விட்டுவிட்டோம் என்று அவருக்குத் தெரிந்திருந்தால் நம்மைக் காணும்பொழுதெல்லாம் நாம் கேட்பதைக் கொடுத்துக்கொண்டு வருவாரா?
காத்தன். – கீச்சானுக்கு ஆயுள் கெட்டியானதால் தப்பித்துக்கொண்டது.
சாத்தன்.– அடர்ந்த காட்டில் நல்ல இருட்டிலே இரவு பத்து பதினொரு மணி நேரத்தில் கீச்சானைக் கொல்லப்போகும் சமயத்திலே ஒருவன் வந்து கைவாளைத் தட்டிவிட்டு நம்மை மூர்ச்சையாக்கிக் குழந்தையைக் கொண்டுபோனதென்றால், ஆயுள்கெட்டி என்று மட்டுமா சொல்கிறது! சாமி பலமும் இருந்ததென்றே சொல்லவேண்டும். குழந்தையைக் கொண்டுபோனவனை நான் பார்க்காமல் அடிபட்டதால் அவன் இன்னா னென்று எனக்குத் தெரியாது. நீ நன்றாய் அவனைப் பார்த்து எதிர்த் தவனாயிற்றே. அவன் இன்னானென்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டபொழுது பார்த்தால் சொல்லக்கூடும் என்றாய். அவனை எங்கா கிலும் பார்த்திருக்கிறாயா?
காத்தன்.- நான் இரண்டுமூன்று தடவையில் பார்த்திருக்கிறேன்.
சாத்தன்.- எப்பொழுது பார்த்திருக்கிறாய்?
காத்தன் – குழந்தையை விடுவித்துக் கொண்டுபோன இரண்டு வருடத்திற் குப்பின் பார்த்ததோடு, நெடுநாள் பார்க்காமலிருந்து, போன வருடத் தில் இரண்டு தடவையில் பார்த்தேன். அவன் எனக்குச் சமீபமாக வந்தும் என்னை இன்னானென்று கண்டுகொள்ளவில்லை. அவன் என்னைக் கண்டுகொள்ளாமற் போனது எனக்கதிக சந்தோஷமாக இருந்தது. நம்மிடத்திலிருந்து விடுபட்டுப்போன குழந்தையின் சங்கதி ஒன்றும் தெரியவில்லை. அது இறந்ததோ அல்லது உயிரோடிருக்கிதோ!
சாத்தன். – அது சாகப்போனது தப்பியதால் அது உயிரோடிருக்குமென்றே எண்ணுகிறேன்.
காத்தன் – அது உயிரோடு இருப்பதால் நம்முடைய எஜமானனுக்கு ஏதாகிலும் கெதி உண்டாகுமா?
சாத்தன்.- இவளுக்கு மூர்ச்சை தெளிகிறதுபோல் காணப்படுகிறது. அந்தப் பேச்சை நிறுத்து. நாம் பேசுவது இவள் காதில் விழுந்தால் மோசம் வரும்.
சாத்தனும் காத்தனும் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தியபின் கமலாக்ஷி கண்ணை விழித்துப்பார்த்து அருகில் சாத்தன் இருப்பதைக்கண்டெழுந்து உட்கார்ந்தாள்.
சாத்தன்.– என்னை ஏமாற்ற முயன்றது என்ன பிரயோசனத்தைத் தந்தது? இனி அவ்வித முயற்சி செய்வாயேயானால் இப்பொழுது கண்ணைத் திறந்து எழுந்து உட்கார்ந்ததுபோல் எப்பொழுதும் கண்ணைத் திறக்கா மலிருக்கச் செய்துவிடுவேன். உனக்கிஷ்டமானால் படுத்துக்கொள், நான் நடந்துவருகிறேன். வழிப்போக்கர் திருடர்களுக்குப் பயந்து இம் மார்க்கம் போவது அரிது. யாராகிலும் ஒருவரிருவர் வருவதைக்கண்டு கூக்குரலிட்டாலும் அவர்களைத் துணைசொள்ள முயன்றாலும் நான் முன் சொன்னவிதம் இந்தக் குத்துவாள் உன் உதிரத்தைக் குடித்துவிடும். (என்று சொல்லி இறங்கி நடந்து வந்தான்.)
கமலாக்ஷியைச் சாத்தன் வண்டியில் விட்டெறிந்தபொழுது தலையில் அடிபட் டதாயினும் அவள் தன்னை முற்றிலும் மறந்தியரமல் சாத்தனுக்கும் காத்தனுக்கும் நடந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு வந்து நாசியில் ஈ யொன்று நுழைய அதனால் அவர்கள் சம்பாஷணை நின்று விட்டதை யறிந்து கண்களைத் திறந்து எழுந்து, இக்காதகக் கொலைத் தொழிலில் கைதேறியவர்கள் கையி லகப்பட்டுக்கொண்டோம் என்று எண்ணாததை யெல்லாம் எண்ணித் துக்கப்பட்டுக்கொண்டு அவர்களைப் பார்க்கவாவது அவர்களோடு வார்த்தையாடவாவது மனதில்லாமல் உட்கார்ந்து காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் சூரியன் அஸ்தமித்தவுடன் வண்டியை ஓர் மரத்தடியில் நிறுத்திக் கமலாக்ஷியை இறங்கும்படி செய்து அதிசதூரம் போகவிடாமல் உலாவிவரச்செய்து பின் வண்டியிலேற்றிச் சில தின்பண்டங்களைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள். அவள் தனக்கு வேண்டியதில்லை என்று வண்டியிற் படுத்துக்கொண்டபின் அவர்கள் மாடுகளுக்கு வைக்கோல் போட்டும் சமீபத்திலிருந்த குட்டையில் ஜலஙகுடிக்கவைத்தும் இரவு பத்துமணி க்கு வண்டியில் மாடுகளைப்பூட்டி யோட்டி இரவெல்லாம் சென்று சாலையில் ஒரு சிறிய வீட்டுக் கெதிரில் வண்டியை நிறுத்தினார்கள். வீட்டுக்குள்ளிருந்த ஒரு பெண்பிள்ளை வண்டிவந்து நின்றதை யறிந்து வெளியில்வந்து, ஏன் அப்பா ! உங்கள் காரியத்தை முடித்து வந்தீர்கள் போல் காணப்படுகிறதே, என்ன சங்கதி? என்றாள்.
சாத்தன் – அம்மா சுந்தரம்! நாங்கள் எடுத்தகாரியங்கள் அனேகம் உனக்குத் தெரிந்திருக்கின்றன. எதில் நாங்கள் அபஜயப்பட்டு வந்தோம்? எங்க ளுடைய புள்ளி ஒருபோதும் தப்பாது; வண்டியிலிருக்கும் பெண்ணை அழைத்துக்கொண்டு போய் அவளுக்கு வேண்டியதைச் செய். அவள் நேற்று மத்தியானத்திலிருந்து வண்டியில் உட்சார்ந்தே இருக்கிறாள்.
சாத்தன் சொல்லியதைக்கேட்ட சுந்தரம் வண்டிக்கருகில் சென்று, அம்மா இறங்கு என்று கமலாக்ஷியை வண்டியிலிருந்து இறக்கி வீட்டுக்குள் அழைத்துச் சென்று கமலாக்ஷியின் களைதீர உபசாரஞ் செய்தாள். கமலாக்ஷி நெடுநேரம் உட்கார்ந்திருந்ததனாலே சற்று உலாவினால் தன் கைகால் வலி நீங்கும் என்றதைக் கேட்ட சுந்தரம் அம்மா ! உன் னிஷ்டப்படி நான் நடக்க வேண்டுமானால் என்னிஷ்டப்படி நீயும் நடக்கவேண்டுமே என்றாள்.
கமலாக்ஷி – உன் இஷ்டப்படி நான் என்ன செய்யவேண்டும்? சுந்தரம்.- நானும் உன்னோடுவர நீ சம்மதப்படவேண்டும். நீ தனித்து உலா விவர முடியாது. நீ என்னை ஏமாற்றிப்போய்விடலாம் என்ற எண்ணம் கொண்டிருக்கின் அதை ஒழித்துவிடு. காத்தனும் சாத்தனும் சமீபத்தி லிருக்கிறார்கள். நீ எங்குபோனாலும் கொண்டுவந்து விடுவார்கள். கமலாக்ஷி.- அம்மா ! என் சம்மதமில்லாமல் என்னைக்கொண்டுவந்து இவ்விதம் சொல்லுவது தருமமா?
சுந்தரம்.- அடியம்மா ! அந்தக் கேள்வி யெல்லாம் என்னைக்கேட்க வேண் டாம். உன்னைக்கொண்டு வந்தவர்களைப் போய்க்கேள். எனக்கொன் றும் தெரியாது. நீ உலாவவேண்டுமானால் போகலாம் வா. (என்று கம லாக்ஷியின் வஸ்திரத்தைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குப் பின்புறத்தி லுள்ள தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றாள்.)
கமலாக்ஷி.- ஐயோ அம்மா ! இது என்ன? சமாதி யொன்று வீட்டுக்கருகில் இருக்கிறதே!
சுந்தரம்.- அம்மா! சமாதி உன் கண்ணுக்குக் காணப்பட்டது நன்மையே!
சில வருடங்களுக்கு முன் உன்னைப்போலொருபெண் என்னிடத்திலிருந்து தப்பித்துக்கொண்டு ஒட முயன்றவள் அதில் தூங்குகிறாள். நீயும் அவளோடு படுத்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டாம்.
கமலாக்ஷி – ஏ! படுபாவிகளா! இவ்விதத்தொழிலில் கைதேறிய உங்களைக் கடவுள் தண்டிக்காமல் விடுவாரா? நீங்கள் மீளாநரகத்திற்கு ஆளாக வேண்டியவர்களே!
சுந்தரம் – எங்களைச் சபிக்கவா இவ்விடத்திற்கு வந்தாய்? நீ உலாவினது போதும்,வா.(என்று சையைப்பிடித்து இழுத்துக்கொண்டு வந்து வீட்டில் விட்டு) உன் கோபத்தை யடக்கிக்கொண்டு இருக்காமற் போனால் வீணில் துன்பப்படுவாய்.
கமலாக்ஷி – உன் பயமுறுத்துதலுக்கு அஞ்சினவளென்று நினைக்க வேண்டாம். உயிருக்கு மிஞ்சின ஆக்கினை என்ன இருக்கிறது? நான் எப்பொழுது உங்கள் கையிலகப்பட்டேனோ அப்பொழுதே என் உயிர் என்னுடைய தல்லவென்று எண்ணிவிட்டேன்.
சுந்தரம்.- உன் கதைகளையும் உன் எண்ணத்தையும் நிறுத்தி வைத்து நான் கேட்பதற்குப் பதில் சொல். ஏதாகிலும் சிறிது சாப்பிடுகிறாயா? வேண்டாமா?
கமலாக்ஷி.- எனக்கு ஒன்றும் வேண்டியதில்லை. (என்று கோபமாகச் சொன்னாள்.)
உனக்கு ஒன்றும் வேண்டியதில்லை என்றால் உன்னைப் புரிசாலம்பிடித்து ஊட்டுவோர் ஒருவருமில்லை என்று சுந்தரம் சொல்லும் பொழுது சாத்தன் வீட்டுக்குள் வந்து, அம்மா சுந்தரம்! இந்தப் பெண்ணுக்கு ஏதாகிலும் கொடுத்தீர்களா? என்றான்.
சுந்தரம்.- அப்பா! அவள் ஒன்றும் வேண்டியதில்லை என்கிறாள்.
சாத்தன் – சாப்பிடாமற் போனால் நாம் என்ன செய்யலாம்? மாடுகள் வந்து விட்டன. இனிக் காலதாமசம் செய்வது பிரயோனமில்லை. இந்தப்பெண்ணை அழைத்துவாருங்கள். (என்று வெளியில் வந்து வண்டி கட்ட உத்தரவு செய்தான்.)
காத்தன் உடனே வண்டியைக் கட்டினான். சுந்தரமும் கமலாக்ஷியை அழைத்து வந்து வண்டியிலேற்றித் தானும் வண்டியிலேறி உட்கார்ந்தாள். மாடுகள் வேகமாய் அன்று பகலெல்லாம் ஓடி இரவு எட்டு மணிக்கு ஒரு வீட்டருகிற் போய் நின்றது. உடனே சுந்தரம் இறங்கி கமலாக்ஷியை இறக்கி வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போனாள். வீட்டுக்குள் இருந்த ஓர் பெண் விளக்கோடு ஓடி வந்து இவர்களுக்கு வழி காட்டி மேல் மெத்தையில் ஓர் அறையில் சொண்டு போய் விட்டுக் கட்டிலிற் படுத்துக்கொள்ளச் சொல்லுங்கள் என்று ஒரு குத்து விளக்கு ஏற்றிவைத்துத் தின்பண்டங்கள் சிலவற்றைக் கொண்டுவருகிறேனென்று சென்று சில நிமிஷங்களுக்குப்பின் ஒர் தட்டில் பழ வர்க்கங்களும் பலவிதமிட்டாய்களும் ஒருசெம்பில் பாலும் ஒருசெம்பில் ஜலமும் கொண்டுவந்து வைத்துச் சாப்பிடச்சொல்லுங்கள் என்றாள். சுந்தரம் கமலாக்ஷியைய் பார்த்து, அம்மா ! நீ உன் சொந்த வீடு சேர்ந்தாய். நீ இவ்வீட்டுக்கு எஜமானி. உன்னிஷ்டம் போல் யாவும் செய்யலாம். நாங்கள் யாவரும் நீ சொல்வதைக் கேட்டு நடக்கச் சித்தமாயிருக்கிறோம். உனக்கு வேண்டியதைச் சொல்லலாம். இந்தத் தட்டிலிருக்கும் தின்பண்டங்கள் இஷ்டமில்லாதிருந்தால் வேறென்ன வேண்டு மென்றாலும் அதைக் கொண்டு வந்து கொடுக்கிறோம் என்றாள்.
கமலாக்ஷி – நான் இந்த வீட்டுக்கு எஜமானி யென்பதும் நான் சொல்வது போல் நீங்கள் நடப்பீர்க ளென்பதும் உண்மைதானா?
சுந்தரம்.- அது விஷயத்தில் உனக்குச் சந்தேகம் வேண்டாம். உண்மையைச் சொன்னதன்றி வேறொன்றையும் சொல்லவில்லை.
கமலாக்ஷி – அது உண்மையாக இருக்குமாகில் நான் சொல்வதைப் போல் செய்யுங்கள். கதவைத்திறந்து வழி விட்டு என்னைப் பின் தொடராதிருங்கள். நான் வெளியில் போகவேண்டும்.(என்று எழுந்து நின்றாள்.)
சுந்தரம்.- அது ஒன்று நீங்கலாக எது சொன்ன போதிலும் கேட்கச் சித்தமாக இருக்கிறோம்.
கமலாக்ஷி.- நான் இவ்வீட்டுக்கு எஜமானி என்பது போய்ச் சிறைப் பட்டவளென்று நன்றாய் விளங்குகிறதே. தெய்வமே! என்தலை விதி இவ்விதமாகவா இருந்தது! என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள். சுந்தரம் அவ்வீட்டிலிருந்த பெண்ணைப் பார்த்து, அம்மா மனோரஞ்சி தம்! நாம் இவ்வறைக்குள் இருப்பதால் நமது எஜமானிக்குத் துக்கம் அதிகப்படுகிறது. நாம் சற்று விலகி இருப்போமானால் உத்தமம்.
என்று இருவரும் வெளியில் வந்து அவ்வறையின் கதவை வெளியிற் பூட்டிக் கொண்டு நீங்கினார்கள். சாத்தன் மனோரஞ்சிதத்தினிடம் வந்து அம்மா, மனோரஞ்சிதம்! எங்களுக்கு இட்டவேலையை முடித்து விட்டோம். எஜமான் எப்பொழுது வருகிறதாகச் சொல்லியனுப்பினார்? நாங்கள் காலையிற் போகலாமல்லவா? என்றான்.
மனோரஞ்சிதம்.- இரண்டுநாள் பொறுத்து எஜமான் வருகிறதாகவும் அது பரியந்தம் உங்களை இங்கிருக்கும்படியாகவும் சொல்லி அனுப்பியிருக்கிறார். உங்களுக்குச் சாப்பாடு முதலானதும் தயாராக இருக்கிறது. வந்து சாப்பிடுங்கள். (என்று சுந்தரத்தோடு சமையலறைக்குள் சென்றாள்.)
கமலாக்ஷி தன்னை ஓர் அறையில் விட்டுப்பூட்டிச் சென்றபின், நாம் வீணில் துக்கம் மேற்கொண்டு அழுவதால் பிரயோசனமில்லை. புலி கூட்டில் அகப்பட்டுக் கொண்டதுபோல் இவர்களிடத்தில் அகப்பட்டுக்கொண்டோம். நாம் இவர்களிடத்திலிருந்து தப்பிக்கும் வழியொன்றுங் காண்ப்படவில்லை. வரும்விதியைத் தடுக்க யாவராலும் முடியாது என்று எழுந்து தான் அடைபட்டிருக்கும் அறையைக் கவனித்துப்பார்த்தாள். அறை பதினைந்தடி சதுரத்துக்குக் குறையாமலிருப்பதையும், இருப்புக் கம்பிகளால் மூடப்பெற்ற மூன்று ஜன்னல்கள் மூன்றடி உயரத்திலிரு ப்பதையுங் கண்டு ஒரு பலகணியைத் திறந்து பார்த்ததில் இருட்டில் ஒன்றும் காணப்படாததால் ஜன்னலை மூடிக்கொண்டு, அவ்வறையின் ஓர் பக்கத்தில் போட்டிருந்த பெரிய மேஜைமேல் விலை உயர்ந்த நாட்டுச் சேலைகளும் பச்சை காசிச் சேலை ஒன்றும் மத்தாப்பு இரவிக்கைகளும் பாவாடைகளும் தாவணிகளும் இருப்பதைப் பார்த்துத் தனக்குள் அடங்காக் கோபமாகி இத் துன்மாக்கர்களுடைய எண்ணந்தா னென்ன? விலை உயர்ந்த சேலைகளை என் பார்வையில் வைத்துவிட்டால் அவைகளைப் பார்த்தவுடன் ஆசைகொண்டு இவர்கள் எண்ணம் போல் நடப்பேன் என்றோ என் பார்வையில் யாவும் வைத்திருக்கிறார்கள்? இவர்களுடைய எண்ணம் என்ன முடிவுக்கு வருகிறதோ பார்க்கலாம் என்று திரும்பித் தின்பண்டங்களிருந்த தட்டைப்பார்த்து. நாம் பசியால் இருப்பது நன்றல்ல வென்று இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டபின் சுத்த ஜலம் குடித்துத் தன் முந்தானையைக் கீழே விரித்துப் படுத்துக்கொண்டு, தன்னுடைய தாயார் என்ன நினைப்பாளோ? பெரியவர் என்ன நினைப்பாரோ? வீட்டின் கதவுகளை மூடிக்கொண்டு வராமல் இப்படுபாவிகள் கையில் அகப்பட்டுக்கொண்டோமே! நம் மைக் கொண்டுவரும்படி சொல்லியவர் இன்னாரென்று தெரியவில்லையே என்று சிலநேரம் அழுது, பின் கடவுளை நம்பியவர்களுக்கு எக்கா லத்திலும் கெடுதிவராதென்று வாசித்திருக்கிறோம், அவரே நம்மைக் காப்பாற்றுவார் என்று கடவுளைத் தியானித்ததுக்கொண்டிருக்கும் பொழுது, கதவு திறக்கப்பட்டுச் சுந்தரமும் மனோரஞ்சிதமும் அறைக்குள் வந்து, அம்மா சாப்பிட்டாய் விட்டதா? என்றார்கள்.
கமலாக்ஷி.- ஆம் சாப்பிட்டாய்விட்டது. (என்று படுத்துக்கொண்டே பதில் சொன்னாள்.)
மனோரஞ்சிதம். – சுந்தரம்மா ! இதைப் பார்த்தீர்களா! நான் கொண்டுவந்து வைத்த தின்பண்டங்களைத் தொடாமல் இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டிருக்கிறார்கள். பாலும் அப்படியே இருக்கிறது. எஜமான் இதை யறிந்தால் நாம் கவனிக்காமல் பட்டினியாய்ப்போட்டோம் என்று நம்மைக் கோபிப்பாரே ! இந்தத் தொல்லைக்கு நாம் என்ன செய்கிறது?
கமலாக்ஷி – உங்கள் எஜமான் கோபித்துக்கொள்ளுகிற காலத்தில் உங்கள் மேல் தப்பிதம் இல்லை என்று நான் சொல்லிவிடுகிறேன். அது விஷயத்திற்காக நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்.
சுந்தரம்.- அம்மா! எங்கள் மேல் அன்புகொண்டு எங்களுக்கு ஓர் கெடுதியும் வராமலிருக்க எண்ணங்கொண்ட தங்களை இரண்டு நாள் பட்டினியாகப் போட்டிருப்பது நியாயமா? எங்கள் எஜமானியாகிய தாங்கள் ஏதாகிலும் சிறிது சாப்பிட்டால் எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும்.
கமலாக்ஷி – நான் உங்களுக்கு எஜமானி யென்று மறுபடியும் சொல்லுகிறீர்கள். அது உண்மையா என்று மற்றொருதரம் பரிக்ஷித்துப் பார்க்கிறேன். எஜமானி சொற்படி நீங்கள் நடப்பது உண்மையானால் நீங்கள் என்னைத் தொந்தரை செய்யாமல் தின்பண்டங்களை எடுத்துக்கொண்டு போய் விடுங்கள்.
மனோரஞ்சிதம் சுந்தரத்தைப் பார்த்து, ஏனம்மா ! நம்முடைய எஜமானியின் சாமர்த்தியத்தைக் கண்டுகொண்டீர்களா? நம்மை ஒரு சொல்லால் அடக்கிவிட்டார்கள். இனி எஜமானி மனதுக்கு விரோதமாக ஒன்றும் செய்யக்கூடாதென்று தின்பண்டங்களை எடுத்துப் போனாள்.
சுந்தரம் கமலாக்ஷி யருகில் உட்கார்ந்து, அம்மா! கட்டிலில் படுத்துக் கொள்ளாமல் தரையில் படுத்துக்கொள்ளலாமா? உன்னுடைய மிருதுவான தேகம் வருந்தாதா? என்றாள்.
கமலாக்ஷி – அம்மா! என் விஷயத்தில் நீங்கள் கொண்ட அன்பை மறக்க மாட்டேன். நான் உயிரோடு இருக்குமளவும் அந்தக் கட்டிலில் படுக்க மாட்டேன். என்னைத் தொந்தரை செய்யவேண்டாம். என் தேகம் எல்லாம் நோகிறது. என்னை வருத்தாமல் இருப்பது உங்களுக்குப் புண்ணியமாகும்.
சுந்தரம்.- அம்மா ! உன்னுடைய இஷ்டம்போல் யாவும்செய்யலாம்; நானும் இந்த அறையில் படுத்துக்கொள்ளலாமா? அது விஷயத்திலும் ஆக்ஷேபனை உண்டா?
கமலாக்ஷி.- நான் இரவெல்லாம் விழித்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற அபிப்பிராயம் உனக்கிருந்தால் இவ்வறையில் நீயும் படுத்துக்கொள் ளலாம்.
சுந்தரம்.- அம்மா! இதென்ன அநியாயம்! என்னை நம்பாமல் இவ்விதம் சொல்லுகிறாய். என்மேலுனக்கு நம்பிக்கை உண்டாக நான் எவ்விதம் நடந்துகொள்ளவேண்டும்?
கமலாக்ஷி.- என்னைத் தனியாகவிட்டு நித்திரை செய்யச்சொல்வதே!
உன்னிஷ்டப் பிரகாரம் தனியாகப் படுத்துக்கொள்ளென்று சுந்தரம் அறையை விட்டு நீங்கினாள்.கமலாக்ஷி எழுந்து உள் தாப்பாளிட்டுப் படுத்து நெடுநேரம் தன் தாயாரை நினைத்து அழுது பின் கடவுளைத் தியா னித்துக்கொண்டே நித்திரை போயினாள். விடிந்தபின் கதவுதட்டுகிற சப்தத்தால் எழுந்து கதவைத் திறந்தாள்.
மனோரஞ்சிதம்.- அம்மா ! காலைக்கடனை முடித்துக்கொள்ள வருகிறீர்களா? அல்லது இன்னும் படுத்திருக்கப் பிரியமா?
ஆம் முடித்துக்கொள்ள வேண்டும் என்று கமலாக்ஷி மனோரஞ்சிதத்தோடு சென்று காலைக்கடனை முடித்துக்கொண்டு, தனக்காக விட்டிருந்த அறைக்குள் சென்று சாளரத்தைத் திறந்து பார்த்தாள். கமலாக்ஷிக்கு இருந்த தைரியம் முற்றிலும் நீங்கப் பெரிய தோட்டத்துக்கு மத்தியி லிருக்கும் வீட்டில் தன்னைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதைக் கண் டாள். இனி இவ்வீட்டிலிருந்து உயிரோடு போகப்போகிறதில்லை. நமக்கு ஆயுள் முடிந்ததால் நாம் இவ்விடத்தில் வந்திருக்கிறோம். நாம் என்ன ஸ்திதியிலிருந்து இறந்தோம் என்று நமது தாயார் அறிய இடமில்லாமற் போனதல்லவா? நம்முடைய நிலையை அறியாத வனசாக்ஷி என்ன நினைப்பாள்! விஜயரங்கத்தண்ணன் வீடுவந்து சேர்ந்தபின் நாம் வீட்டைவிட்டுப் போய்விட்டோம் என்று கேள்விப் பட்டால் கேவலமாக நினைப்பாரே! பெரியவரும் நாம் புத்தியீனத்தால் ஒரு காரியத்தைச் செய்துவிட்டோம் என்றல்லவா நினைப்பார்! என்று அழுதாள். தெய்வமே! என் நடத்தையைப் பலர் கேவலமாக நினைக்க நான் இரகசியத்தில் மாளவா என் தலைவிதி இருந்தது! ஐயோ! நான் வெளிமனிதரால் உதவியடையலாம் என்றிருந்தேனே! ஒன்றும் இல்லாமற் போனதே ! என்று கண்களில் நீர்வடிய நிற்கும் பொழுது, மனோரஞ்சிதம் தின்பண்டங்களோடு அறைக்குள் வந்து, கொண்டு வந்ததை கமலாக்ஷிக்கு எதிரில் வைத்து, அம்மா ! இவைக ளில் ஏதாகிலும் இப்பொழுது சாப்பிடுங்கள். சாப்பாடு விரைவில் சித்தஞ் செய்கிறேன். சாப்பாடு சித்தமாகும் பரியந்தம் சும்மாவிருப் பது நன்றல்ல என்றாள். கமலாக்ஷி வாழைப்பழத்தில் இரண்டு சாப் பிட்டு ஜலங்குடித்து, எனக்குச் சாப்பாடு வேண்டியதில்லை ; அடிக் கடி வந்து என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம். இவைகளை என் எதிரில் வைக்கவேண்டாம். எடுத்துக்கொண்டு போய்விடு என்றாள்.
கமலாக்ஷியின் கருத்தை யறிந்தபின் மனோரஞ்சிதம் போகாமல் நின்று, எங்களுக்குத் தீங்கை யுண்டாக்கவே இவ்விதம் சொல்லுகிறீர் கள் என்றாள். கமலாக்ஷி கோபப்பார்வையோடு மனோரஞ்சிதத்தைப் பார்த்தவுடன் அவள் வேறொன்றும் சொல்லாமல் தின்பண்டங்களைக் கொண்டுபோய்விட்டாள். கமலாக்ஷிக்கெதிரில் சுந்தரமாவது மனோ ரஞ்சிதமாவது வந்தால் அவள் அதிக கோபங்கொள்வதைக் கண்டு அவர்கள் எதிரில் அடிக்கடி வராமல் இருந்தார்கள். மறுநாள் கமலாக்ஷி காலைக்கடனை முடித்துக்கொண்டு இரண்டு வாழைப்பழம் உண்டு தண் ணீர் குடித்து நின்றுகொண்டிருக்கும்பொழுது, சுந்தரம் வந்து அம் மா! இன்று எஜமான் வருவாரே! நீ குளித்துத் தலைவாரி நல்ல சேலை யொன்று கட்டிக்கொண்டிராமல் இவ்விதம் இருந்தால் எங் களைக் கோபிக்கமாட்டாரா? என்றாள்.
கமலாக்ஷி.- எஜமான் என்பது யார்? அவர் இன்னாரென்று சொல்லக் கூடாதா?
சுந்தரம் கமலாக்ஷியின் முகத்தைப்பார்த்து எஜமான் இன்னாரென்று அறியாமலா இதுபரியந்தம் இருக்கிறாய்? இதை யார் நம்புவார்கள்?
கமலாக்ஷி.- நான் சொல்வதை உண்மை என்று நீ நம்பினால் எனக்கு இலாபம் ஒன்றும் இல்லை. நம்பாமற் போனால் நஷ்டம் உண்டென்றுங் காணப் படவில்லை. என்னை மோசமாகக் கொண்டுவந்ததே யன்றி என் சம்மதத்தைப் பெறவில்லை.
சுந்தரம்.- நீ சம்மதத்தோடு வரவில்லை என்றதைக் கண்டுகொண்டேன். மோசஞ்செய்து உன்னை அழைத்துவராமல் எவ்விதம் வந்திருக்கக் கூடும்? நானதைக்குறித்துப்பேசி உனக்குத் துக்கத்தை யுண்டு பண்ண வரவில்லை. உன்னைக் கொண்டுவரச் சொன்னவர் இன்னாரென்று நீ அறியாமற்போனது ஆச்சரியமாக இருக்கிறது. நானே அவர் இன்னா ரென்று சொல்வதுங் கூடாது. (என்று சொல்லும்பொழுது கதவு தட்டு கிற சப்தங்கேட்டு) இதோ அவரும் வந்துவிட்டார். நேரில் கண்டு கொள். என்று சுந்தரம் சொல்லும் பொழுது அறைக்குள் ஒருவன் நுழைந்தான். அவனைக்கண்ட கமலாக்ஷி திகைத்து நின்றாள். சுந்தரம் வெளியிற் சென்றாள்.
வந்தவன்.- கமலாக்ஷி! உன்னைக் கொண்டுவரும்படி செய்தவன் நான் என்று நினைத்திருப்பாயா?
கமலாக்ஷி.- இந்த அற்பத்தொழிலைச் செய்யத் தகுந்தவரென்று உம்மை நான் நினைக்கவில்லை.
வந்தவன்.- உன்னைக்கண்டதும் உன்மேல் ஆசை கொண்டதும் உன்னை இவ் விடத்திற்குக் கொண்டுவரும்படி செய்ததும் உனக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை. உன் அழகைக் குறித்து நெடு காளைக்கு முன் கேள்வியுற்றிருந்தேன். நேரிற் பார்த்தபின் யாவும் விளங்கின. இரத்தினமும் அவன் சினேகனும் புது ஊரிலிருந்து வரும் பொழுது உன்னைக் கொண்டுபோக எத்தனித்ததும், விஜயரங்கத்தால் விடுபட்டதும், அது முதல் விஜயரங்கம் உங்கள் வீட்டுக்குப் பெரிய வரைப்பார்க்க வருவதுபோல் உன்னைப் பார்த்துப்போவதும், விஜயரங் கமும் நீயும் யோசித்து வனசாக்ஷியை இரத்தினத்துக்குக் கிட்ட விடாமற் செய்ததும், முடிவில் விஜயரங்கம் ஓடிப்போனதும் நான் அறியாதவையல்ல. அவமானம் அடைந்ததை எண்ணி உன்னை எவ்விதமாவது கைப்பற்ற வேண்டுமென்று நினைத்திருந்து இரத்தினத்தின் எண்ணத் தைக்கெடுத்து நான் கொண்டுவந்தது என்மேல் குற்றமா?
கமலாக்ஷி. – என்னை இவ்விடம் கொண்டுவரும்படி செய்தவன் இரத்தினம் என்றே எண்ணியிருந்தேன்.
வந்தவன்.- இரத்தினமா? அவனுக்கு இவ்விடத்தில் வீடேது. இந்த வீடு என்னுடையதென்று உனக்குத் தெரியாதா? உன்னை மண முடிக்க எண்ணியதால் இனி இந்த வீடு உனக்குச் சொந்தமாய்விட்டது.
கமலாக்ஷி – இந்தக் கெட்ட எண்ணம் உமக்கிருந்தால் உம்மை உலகம் என்ன சொல்லும்!
வந்தவன்.- என்மேல் குற்றம் சொல்ல ஒருவன் துணிவானா! ஜெகநாத முதலியார் என்றால் இவ்வூரே நடுங்கும். நான் ஒருவருக்குப் பயந்தவ னென்று நினைத்திருக்கிறாயா?
கமலாக்ஷி.- எங்களை முன் ஏமாற்றியது போதாதென்று பிராமணன்மேல் பழிபோட்டு எங்கள் வீட்டுக்கு வந்தீர். உமது பெண்ணைப்போலிருக்கும் என்னை மணமுடிக்க எண்ணங்கெ ங்கொண்டீர். இவையெல்லாம் உமக்கழகா?
ஜெகநாத முதலியார் — அழகோ அழகல்லவோ என்று என் விஷயத்தில் சொல்லுவோர் ஒருவரும் இல்லை. நான் குப்புசாமி ஐயரிடமாகப் பத்திரத்தை அனுப்பியது உண்மை. நீ என்னோடு வாழ்ப்போகிறவளாதலால் நான் சொல்வது பொய்யென்றும் மெய்யென்றும் பின்னாலறிவாய். என் தமையன் ஆஸ்தியெல்லாம் விரைவில் என்னைச் சேரப்போகிறது என்று உனக்குத் தெரிந்ததே. என்னைப்போன்ற தனவந்தனை நீ விவாகஞ் செய்து கொண்டால் உன்னைப் பழிப்பவர்களார்?
கமலாக்ஷி.- மாமா! தாங்கள் ஒன்றும் யோசியாமல் பேசுவது நன்றா? நம்மவர்களில் விவாகம் நடக்க வேண்டியிருந்தால் பெண்ணும் பிள்ளையுமாக வார்த்தையாடி முடிவு படுத்திக் கொள்ளுகிறதா? அல்லது தாய் தந்தையர் மூலமாக முடிவு படுத்திக் கொள்ளுகிறதா? நம்மவர்கள் வழக்கத்தைக் கைக்கொள்ளாமல் அங்கிலேயரைப்போல் பேசத்துணிந்தீரே! இஃ தென்ன காரணம்?
ஜெகநாத முதலியார்.- கமலாக்ஷி! நம்மவர்களுக்குண்டாகிய வழக்கத்தை நான் மறந்தவனல்ல. நான் உன் தாயாரைக்கண்டு என் கருத்தைத் தெரிவித்தால் அவள் அதற்கிணங்க நடப்பாளென்று நான் நினைக்கவில்லை. முதல் தாரம் இருக்கும்பொழுது இரண்டாந்தாரம் எதற்கு என்பாள். உன் தாயாருக்குச் சொந்தமாகிய நிலத்தை ஒற்றிவைக்கும்படி செய்து அதை மீட்டுக் கொடுக்காமற் போனதால் என்மேல் கோபமாக இருக்கி றாள். சிலவேளை ஒப்புக்கொண்டாலும் உங்கள் வீட்டில் வந்திருக்கும் கிழவனிடம் யோசனை கேட்பாள். அக்கிழவன் எனக்கனுகூலமாகச் சொல்வானென்று எனைக்கவில்லை. நாம் அன்னியராய் இருப்போமாகில் நம்முன்னோர்கள் வழக்கப் பிரகாரம் நடக்கவேண்டும். சொந்தத்தில் யாவும் நடப்பதால் அவ்வழக்கத்தைக் கருதாமல் விட்டு உன் கருத்தை யறிவதே முக்கியம் என்று எண்ணினேன்.
கமலாக்ஷி – மாமா! என்னைத்தாங்கள் விவாகஞ்செய்து கொள்ள இஷ்டம் கொண்டிருப்பது உண்மையாயின் என்னை என் தாயாரிடம் சேர்த்துப் பின் வேண்டியதைப் பேசவேண்டும். எனக்கு மோசமாகக் கடிதம் எழுதி ஆள்களை விட்டுக் கொண்டுவரும்படி செய்து என்னைச்சிறைப் படுத்தி என் கருத்தைச் சொல் என்று கேட்பது அழகல்லவே.
ஜெகநாத முதலியார் – கமலாக்ஷி! நான் செய்துவிட்ட விஷயத்தைப்பற்றிக் குற்றஞ்சுமத்திப் பேசுவது ஒரு பிரயோசனமுந் தராது. இனி அது விஷயத்தைக் குறித்துப்பேசவேண்டாம். நீ என் கையில் தனித்து அகப்பட்டிருக்க இந்தச் சமயத்தை நன்றாய் உபயோகிக்காமல் விட்டு விடுவேனென்று எண்ணவேண்டாம். நமக்கு விவாகமானபின் உன் தாயார் வீட்டுக்குப் போகத் தடைசொல்லேன். அதற்கு முன் உன்னை விட்டு விட்டு ஏமாந்து போவேன் என்று நினைக்கவேண்டாம். விரைவில் உன் சம்மதத்தைச் சொல்வது உத்தமம்.
கமலாக்ஷி.- என்னை என்ன சொல்லச் சொல்லுகிறீர்?
ஜெகநாத முதலியார் – என்னை விவாகம் செய்துகொள்ள இஷ்டமா?இல்லையா? என்றே சொல்லக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
கமலாக்ஷி -இல்லை என்றால் என்ன செய்யப் போகிறீர்?
ஜெகநாத முதலியார். – உன் கற்பைக் கெடுத்து வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளப் போகிறேன்.
கமலாக்ஷி – மாமா! தாங்கள் இவ்விதம் சொல்வது அடாது. தாங்கள் எனக்குத் தகப்பன்போலிருந்தும் இந்தக் கெட்ட நினைவு கொண்டிருப்பதை அறிந்தால் தங்களை யார் மதிப்பார்? தாங்கள் தனவந்தர் என்ற பெருமையும் இல்லாமற் போய்விடுமே! நானா தங்களுக்கு நற்புத்தி சொல்வது ? என்னை என் தாயார்வீட்டில் கொண்டுபோய் விடும்படி செய்துவிடும். உம்முடைய கருத்தை எவரிடமும் நான் சொல்லவில்லை.
ஜெகநாத முதலியார் – கமலாக்ஷி, என் கருத்தைப் பிறர் அறிந்தால் பயந்து விடுவேன் என்றா எண்ணினாய்? நான் கொண்ட கருத்தை மாற்றுவேன் என்று நினைக்கவேண்டாம். என்னை விவாகஞ் செய்துகொள்ள உடன் படுவாயாகில் உனக்கு நன்மையுண்டாகும். நானும் விவாசத்துக்கு வேண்டியதைச் சித்தப்படுத்தி விரைவில் விவாகம் முடியச்செய்வேன். தடை சொல்வாயேயானால் நான் முன்சொன்னவிதம் உன்னை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள நேரிடும்.
கமலாக்ஷி.- நீர் சொல்வதை யெல்லாம் சகித்து நெடுநேரம் கேட்டிருந்தேன். போதும். போதும். இனி அப்பேச்சை என்னிடம் பேசினால் அவமானம் அடைவீர். மரியாதையோடு போய்விடும்.
ஜெகநாத முதலியார் – என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? நானா அவமானம் அடைவேன்? அவமானத்தை யாரடையப் போகிறார்கள் பார்.
என்று கமலாக்ஷி கையைப்பிடித்தான். கமலாக்ஷி கையிலிருந்து திமிறி விடுவித்துக்கொண்டு அவ்வறையிலிருந்த மேஜைக்கொரு பக்கத்தில் ஜெகநாத முதலியாரைவிட்டு அவருக்கெதிரில் நின்றுகொண்டு, நீர் தூரத்திலிருந்து பேசாமல் சமீபத்தில் வந்தது உம்முடைய வல்லமையா அல்லது இறுமாப்பா? மீசை நரைத்த கிழவனான பின்னும் அறியாத பெண்ணைக் கொண்டுவரச்செய்து கொடுமையாகப் பேசுவது கூடாதென்ற புத்தி உமக்கில்லாமற் போனது அதிசயம்! என்றாள்.
ஜெகநாத முதலியார் – கமலாக்ஷி ! நீ என் கையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாய்! எனக்குக் கோபம் உண்டாகும்படி நடக்கவேண்டாம். (என்று, மேஜை யகலமாய் இருந்ததால் எட்டிப் பிடித்துக்கொள்ள முடியாமல் மேஜையைச் சுற்றிவந்தார்.)
கமலாக்ஷி – இனி நான் உமது கையில் அகப்படுவேன் என்று நினைக்க வேண்டாம். நீர் எத்தனைநாள் இந்த மேஜையைச்சுற்றி வந்தாலும் நானும் சுற்றிக் கொண்டே உமது கையிலகப்படாமல் இருப்பேன். (என்று மேஜையைச் சுற்றிக்கொண்டே இருந்தாள்.)
ஜெகநாத முதலியார் – வேண்டாம் கமலாக்ஷி! நீ எத்தனை நேரம் சுற்றி வந்தாலும் உன்னை விடமாட்டேன். எனக்குக் கோபம் வருமுன் என்னிஷ்டப் பிரகாரம் நடந்துகொள். வேண்டாம். வேண்டாம்.
கமலாக்ஷி – கோபம் வந்தால் என்ன செய்துவிடுவாய்? துன்மார்க்கா! காட்டிலுள்ள வீட்டில் ஒருத்தியைப் புதைத்து வைத்திருப்பதுபோல் இவ்விடத்தில் என்னைப் புதைத்து விடப்போகிறாய். வேறென்ன செய்ய முடியும்? படுபாவி!
கமலாக்ஷி குறிப்பிட்டுச் சொல்லியதைக் கேட்டுத் திகைத்துச் சில நேரம் நின்று பின் கமலாக்ஷியைப்பார்த்து, நீ இவ்விஷயத்தை நன்றாய் யோசித்துச் சொல்ல மூன்று நாள் தவணை கொடுத்திருக்கிறேன். அதற்குள் யாவையும் நன்றாய் யோசித்துப் பார்த்து உனக்கு வருங் கெடுதியைத் தடுக்க என்னை விவாகஞ் செய்துகொள்வதே உத்தமம் என்று நீ கண்டால் உடன்படு, அல்ல வென்றால் என் வைப்பாட்டியாக இருக்கவேண்டியது கட்டாயம் என்று திரும்பினான்.
கமலாக்ஷி – மூன்று நாள் அல்லது மூன்று வருடம் சென்றாலும் உன் இஷ்டத்திற்கு உடன்படுவேனென்று நினைக்கவேண்டாம். இது உண்மை யென்று நம்பு.
ஜெகநாத முதலியார் கமலாக்ஷி சொல்வதை நின்று கேட்காமல் சுந்தரம் இடத்திற்கோடி, சுந்தரம்! கமலாக்ஷிக்குத் தோட்டத்திலுள்ள சங்கதி எவ்விதம் தெரிந்ததென்றார். சுந்தரம் தோட்டத்திலுள்ள சங்கதி ஒன்றும் தெரியாதென்று, நடந்ததைச் சொன்னதன்மேல் சந்தேகம் நீங்கி கமலாக்ஷிக்கு அதிகம் தெரிந்திருக்கிறதென்றே பயந்தேன்; நீ இன்னும் மூன்று நாளையில் எனக் கிணங்கும்படி செய்யவேண்டும். உன்னை எல்லா விஷயத்திலும் நம்பியிருக்கிறேன். நான் நாலாம் நாள் காலையில் வருகிறேன் என்று போஜனமுண்டு அவ்வீட்டை விட்டு நீங்கினார்.
இரண்டாம் பாகம்
14-ம். அத்தியாயம்
ஜெகநாத முதலியார் கமலாக்ஷிக்குக் கொடுத்த தவணையில் இரண்டு நாள் கழிந்து மூன்றாம் நாள் பகலாகியும் கமலாக்ஷி ஒருமுடிவுக்கும் வராமல் பெருங்கவலையோடு,என்செய்கிறது! நாளை அத்துன்மார்க்கன் வந்து விடுவான் ; அவனைத் தப்பிக்கும் வழி யொன்றும் காணப்படவில்லை யே! நாம் இந்தப் பிராயத்தில் இறக்கவேண்டுமென்கிற விதி இருப்ப தாகக் காண்கிறது. அவ்விதம் விதி இருந்தால் அதைத் தடுக்க முடி யுமா ? ஐயோ! இக்காதகன் தன் முதிர்ந்த வயதில் கொண்ட பெண் சாதியைக் கூழுக்கழத் தாயார் வீட்டில் விட்டுத் தான் தேவடியாள் வீடே கதியென்று இருப்பது போதாதென்று நம்மையும் கற்பழிக்கக் கங்கணம் கட்டிக்கொண் டிருக்கிறான் ; இவன் இவ்விதஞ் செய்வா னென்று கனவிலும் நினைக்கவில்லையே ! இரத்தினமே இத்தீத்தொ ழிலைச் செய்ய முயன்றவனென்று எண்ணியிருந்தோம்; அவனை நல்ல வனாக்கி நடுவில் இவன் முளைத்தான் ; இவ்வறையை விட்டு வெளி யிற்போனால் அக்காதகிகள் இருவரும் பின்தொடருகிறார்கள்; என் சேய்வோம்! கடவுளே! அப்பாதகன் என்னைக் கற்பழிக்குமுன் நான் இறக்கத்துணை செய்யவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்தாள். அக்காதகனால் நாம் இறந்தோம் என்ற சமாசாரமும் நம்முடைய தாயாருக் கெட்டாமல் போய்விடுமே! என்று துக்கப்பட்டுக்கொண் டிருக்கும்பொழுது, சுந்தரம் அறைக்குள் வந்து, அம்மா! நீ ஒரு வார மாக இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாயே! ஒன்றிரண்டு அதிகமாய்ச் சாப்பிடென்றாலும் கோபிக்கிறாய்; நாளை முதலியார் வந்தால் நான் என்ன சொல்லுகிறது ? வீணில் என்னைக் கோபிப்பாரே! என்றாள்.
கமலாக்ஷி – அடி, கொடும்பாவிகளா! நீங்கள் கைக் கொண்டதொழில் மே லானதென்றா நினைக்கிறீர்கள்? இதைவிட ஈனமான தொழில் உல கத்தில் வேறொன்றிருக்கிறதா? எத்தனை உயிரை உங்களுக்கு இரை யாக்கிக் கொள்ளுகிறீர்கள்? நான் இண்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டு வந்தது பெருங்குற்றமாய் முடிந்ததைக்கண்டு துக்கப்பட்டுக்கொண்டிரு க்கும்பொழுது, அதிகமாகச் சாப்பிடவில்லை என்ற குற்றஞ் சுமத்துகிறாய்; நான் ஒன்றும் சாப்பிடாமல் இருந்திருப்பேனேயாகில் இது பரியந்தம் இறந்திருக்கக் கூடுமே! அது தப்பி விட்டதே என்றிருக்கும் என்னை ஈனத்தொழிலுக்காளாக்கப் புத்தி கற்பிக்கவந்தாய், போதும்!போதும்! உன்சொல் கேட்டு உன் சொற்படி நடக்கும் துன்மார்க்கிகளுக்கு உன் புத்தியைப் போதித்தால் பிரயோசனமாகும், என்னிடத்தில் அது பிர யோசனப்படாது. (என்று துக்கத்தோடும் அதிக கோபத்தோடும் சொன்னாள்.)
சுந்தரம் யாவும் கேட்டிருந்து பெருமூச்சுவிட்டு, அம்மா! இவ்வளவுதானா? இன்னும் ஏதாகிலும் சொல்லப்போகிறாயா? என்றாள்.
கமலாக்ஷி – நான் என்ன சொன்னபோதிலும் உங்களுடைய ஈனத்தொழில் உங்களைவிட்டு நீங்கப்போகிறதில்லை. செவிடன் காதில் சங்கு ஊதியது போல் அது பிரயோசனப்படாது. வீணில் என்னை வருத்தாமல் போவாயேயானால் அது உனக்குப் பெரும் புண்ணியமாகும்.
சுந்தரம்.- அம்மா ! நீ மனவெறுப்போடு பேசுவதைக் கேட்டுப்போவது சரியல்ல. நாளை முதலியார் வருவாரே! அதற்சென்ன செய்யப்போகிறாய்?
கமலாக்ஷி – முதலியார் நாளை வருவதைத் தடுக்க என்னால் முடியுமா வருகிறவர் சுகமாய் வரலாம். என்னை நன்றாய்ப் பார்க்கலாம். என்னோடு வார்த்தை யாடலாம். நான் பேசாமல் இருப்பதைக்கண்டு போகலாம். அதற்குத் தடையொன்று மில்லை.
சுந்தரம்.- முதலியாரைக் கண்டு வார்த்தையாடாமல் எவ்வளவு நேரம் இருக்கக்கூடும்?
கமலாக்ஷி.–இரண்டொரு நாளே!
சுந்தரம் – அதன்பின் வார்த்தையாடுவாயல்லவா?
கமலாக்ஷி- இரண்டொரு நாளானால் என்னருகில் வரத்துணியார்.
சுந்தரம்.- ஏன் வரத்துணியார்? வரத்துணியாதவரா இவ்வளவு தொந்தரை எடுத்துக்கொண்டிருக்கிறார்?
கமலாக்ஷி.- நாற்றம் எடுத்தபின் ஒருவரும் அருகில் நெருங்கார்.
சுந்தரம்.- என்ன நாற்றத்தை அறிந்தால் ஒருவரும் நெருங்கார் என்கிறாய்?
கமலாக்ஷி – பிணம் நாற்றங்கொண்டால் அதை எடுத்துப் புதைப்பதைவிட்டு வீட்டில் வைத்து அழகு பார்ப்பார்களா?
சுந்தரம்.- எந்தப்பிண நாற்றம்?
கமலாக்ஷி.- என் பிண நாற்றமே. நாளைக்காலையில் என்னைப் பிணமாகக் கண்டால் உங்கள் முதலியாராவது நீங்களாவது என்ன செய்யப்போகிறீர்கள்? அந்தக்காட்டில் உள்ள வீட்டில் ஓர் பிணத்தைப் புதைத்து வைத்திருப்பதுபோல் இந்தக்காட்டிலுள்ள வீட்டிலும் ஓர் பிணத்தைப் புதைக்க வேண்டியதே!
சுந்தரம்.- அம்மா ! உன்னைச்சாகவிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கவா நாங்கள் உனக்குத் துணையாக இருக்கிறோம்? உன் உயிரைப் போக்கிக் கொள்ள நாங்கள் வழியொன்றும் வைக்கவில்லையே யென்று நீ கவனிக்கவில்லையா?
கமலாக்ஷி – உயிரைப் போக்கிக்கொள்ள வழியும் வேண்டுமா? சற்றுநேரம் மூச்சை அடக்கிக்கொண்டிருந்தால் எல்லாம் அடங்கிவிடும் என்பதை அறியாயா?
சுந்தரம்.- அம்மா கமலாக்ஷி! உன்னுடைய கற்பு நிலையை நன்றா யறிந்தேன். நான் இவ்வீட்டில் இருக்கும் வரைக்கும் உனக்கோர் கெடுதியும் வராது. இனி என்னை நம்பி உனக்கு வேண்டியதைச் சொல். அதைச் செய்யத் தடை செய்யமாட்டேன்.
சுந்தரம் தன்னைப் பெயர்சொல்லி அழைத்ததோடு, ஒர் சினேகியைப்போல் பேசினாளே! இவள்கருத்து இன்னதென்று நன்றாய் அறியவேண்டு மென்று கமலாக்ஷி யோசித்து, அம்மா! எனக்கு நன்மையைச் செய்ய எண்ணங்கொண்டிருப்பது உண்மையானால் நான் விரைவில் மரணம் அடையக் கிஞ்சித்துப் பாஷாணம் வரவழைத்துக் கொடுத்தால் உண்மையாக எனக்கு உதவிசெய்ய வந்தவளென்று உன்னை எண்ணுவேன் என்றாள்.
சுந்தரம்.- அம்மா கமலாக்ஷி! நீ மரணமடையவா நான் உனக்கு உதவி செய்யவேண்டும்? நீ மரண மடையவேண்டிய வில்லங்கம் ஒன்றுமில்லை. இன்றிரவில் உன்னை வெளியில் அனுப்பிவிடுகிறேன். அதற்குச் சித்தமாயிரு. நான் மறுபடியும் வருகிறேன். (என்று நீங்கினாள்.)
சுந்தரம் செல்லியதைக் கேட்ட கமலாக்ஷி அவள் சொல்லியது யாவும் உண்மை தானா? நான் கனவு காண்கிறேனா ? என்புத்தி என்சுவாதீனத்தில் இல்லாததால் நான் பலவாறாக எண்ணுகிறேன். சுந்தரமாவது என்னை இந்தச்சிறையிலிருந்து விடுவிக்கப் போகிறதாவது என்னென்னவோ என் காதில்விழுந்தது. ஒன்றும் என் ஞாபகத்துக்கு வரவில்லையாயினும் அவள் இன்றிரவிலே வெளியில் அனுப்பிவிடுகி றேன் என்றது மட்டும் ஞாபசத்திலிருக்கிறதே என்று மாலை பரியந் தம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, சுந்தரம் வந்து அம்மா கமலாக்ஷி! சித்தமாக இருக்கிறாயா? என்று கேட்டாள்.
கமலாக்ஷி – உண்மையாகப் பேசுகிறாய் என்று எப்படி நம்புவேன்? எனக்காசைகாட்டி மோசம் செய்ய இந்தயோசனை செய்கிறாயேயன்றி வேறல்ல. உன்னை நம்பமாட்டேன்.
சுந்தரம் – என்னை நம்பாமற்போனால் போகட்டும். நான் காத்தனையும் சாத்தனையும் முதலியாரிடம் அனுப்பிவிட்டேன். தோட்டக்காரனையும் வைத்தியனை அழைத்துவரும்படி அனுப்பப்போகிறேன். தோட்டக்காரன் வருமுன் உன்னைப் புதைத்துவிடுவோம். நீ க்ஷேமமாகப் போய் விடலாமல்லவா?
கமலாக்ஷி – என்னைப் புதைத்தபின் நான் க்ஷேமமாகவா போகவேண்டும்? நான் முதலிலிருந்து உன் வார்த்தையை நம்பாமற்போனது நியாயமே! (என்று துக்கப்பட்டாள்.)
சுந்தரம்.- அம்மா கமலாக்ஷி! இன்னும் உன்னைச் சந்தேகத்தில் வைத்துக் கொண்டிருப்பது அழகல்ல. நீ தோட்டத்திலிருந்த அரளியின் வேரைத் தின்று மரணவேதனைப்படுகிறாய் என்று காத்தனையும் சாத்தனையும் முதலியாரிடம் சொல்லும்படி அனுப்பிவிட்டேன். தோட்டக்காரனிடமும் அது போலவே சொல்லி, வைத்தியன் யாராகிலும் அகப்பட்டால் அழைத்துவரும்படி அனுப்பப்போகிறேன். அவன் போனவுடன் நீ உனக்கிஷ்டமான இடத்திற்குப் போய்விடு. தோட்டக்காரன் வருமுன்னம் ஒரு குழிவெட்டி ஒரு கட்டையில் சேலையைச் சுற்றிப் புதைத்துவிடுகிறோம். இதுதான் நீ தப்பிக்கும்வழி. நீ கட்டிக்கொண்டிருக்கும் சேலையை அவிழ்த்துவைத்து வேறொரு சேலையைக் கட்டிக்கொள். (என்று ஓர் பழைய சேலையைக் கொண்டுவந்து கொடுத்தாள்.)
கமலாக்ஷி – அம்மா ! நீ சொல்லுவதுபோல் செய்தால் என் குலதெய்வம் என்றே உன்னை எண்ணுவேன். நான் உயிரோடிருக்கு மளவும் இந்த உபகாரத்தை மறவேன். மனோரஞ்சிதம் உன் கருத்துக்கு உடன்படுவாளா?
சுந்தரம்.- மனோரஞ்சிதமும் உன்மேல் பரிதாபங் கொண்டிருக்கிறாள். கற்பைக் கைவிடாதவர்கள் விஷயத்தில் யாவருக்கும் அன்பு உண்டாகும். அவர்கள் எல்லாம் பொல்லாங்கிலிருந்து நீங்கிச் சுசத்தையடைவார்கள். இது சத்தியம் என்று நம்பு. நான் உன்னிடத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கச் சாவகாசமில்லை. (என்று நீங்கினாள்.)
சுந்தரத்தின் நற்குணத்தை யறியாமல் அவளை அநியாயமாகத் தூஷித்தோம். நாம் கடவுளே கதியென்று நம்பியிருந்ததால் கடவுளே சுந்த ரத்தின் மனதைத் திருப்பினார்போல் காணப்படுகிறதென்று கமலாக்ஷி கடவுளைத் தியானித்துக்கொண்டிருந்தாள். மணி எட்டானவுடன் சுந்தரமும் மனோரஞ்சிதமும் சில தின்பண்டங்களோடு கமலாக்ஷியிடம் வந்து சாப்பிடும்படிக் கட்டாயப்படுத்தினார்கள். கமலாக்ஷி அம்மமார்களே! நீங்கள் எனக்குச் செய்யப்போகும் உதவி எல்லாச் சாப்பாட்டைவிட மிஞ்சினது என்று இண்டு வாழைப்பழத்தைச் சாப்பிட்டு எனக்கு வேறொன்றும் வேண்டியதில்லை என்றபின், சுந்தரம் கமலாக்ஷி கையைப்பிடித்துக் கனமாயிருக்கும் பையொன்றைக் கையிற்கொடுத்து நீ இதை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று வேண்டினள்.
கமலாக்ஷி.- அம்மா ! எனக்குப் பணம் எதற்கு? நான் வீடுபோய்ச் சேர்ந்தால் எனக்கு வேண்டியதிருக்கிறது. நீங்கள் என் விஷயத்தில் செய்தது போதாதென்று பணத்தையும் வாங்கிக்கொண்டு போகலாமா!
சுந்தரம்.- அம்மா கமலாக்ஷி! நீ உன் வீட்டுக்குடனேபோனால் இரகசியம் வெளிவரும். அதனால் நாங்கள் இருவரும் உயிரிழக்கவேண்டும். மாதமாவது மறைந்திருந்தால் நாங்கள் அதற்குள் வெளிப்பட்டு விடுவோம். நீ இறந்துவிட்டாய் என்று எங்களாலறிந்த உன் மாமன் உன்னைக்கண்டாலும் எங்களை ஒன்றும் செய்யமுடியாது. எங்கள் உயிரைக் காப்பாற்ற நீ ஒருமாதம் மறைந்திருக்க வேண்டியதால் இதை ஒப்புக்கொள்ளுவதவசியம் அல்லவா?
கமலாக்ஷி – அம்மா ! என் உயிரைக் காப்பாற்றிய உங்களை அந்தப் படுபாவி கையில் ஒப்படைப்பேனா? உங்கள் இஷ்டம்போல் ஒருமாதம் என் தாய் வீடு போகாமல் இருக்கிறேன். நீங்கள் எனக்குக் கொடுக்கும் பணத்தை ஒரு காலத்தில் பெற்றுக்கொள்ளுகிறோம் என்று வாக்களித்தால் நான் இந்தப் பையைப் பெற்றுக்கொள்ளுகிறேன்.
சுந்தரம்.- அம்மா ! உன்னிஷ்டம் போலவே செய்யலாம், வா.(என்று கமலாக்ஷியை அழைத்துவந்து வெளியில் விட்டு) அம்மா! இந்த இருட்டில் உன்னைத் தனியாய்ப் போகும்படி அனுப்புவது அடாதென்று இருவரும் கமலாக்ஷியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது, அம்மா! நீ வழி படுந் தெய்வமே உனக்குத் துணையாய் நிற்கும்; நீ மேற்காகக் கொஞ்ச தூரம் சென்றால் சாலையொன்று காணப்படும். சாலையைச் சேர்ந்தால் பின் உனக்கிஷ்டமான வழிபோகலாம், போய்வா. கமலாக்ஷி) (என்று விடைகொடுத்து அனுப்பினார்கள்.)
கமலாக்ஷி. – அம்ம மார்களே! எனக்கு இருதாயைப்போலிருந்து என் கற்பைக் காப்பாற்றி விட்டீர்கள். உங்களைக் கடவுள் கைவிடார். நான் போய் வருகிறேன்.
என்று இருவரிடமும விடைபெற்றுச் சுந்தரம் குறிப்பிட்ட வழியாகச் சென்று சாலையை அடைந்தாள். அச்சாலை மரங்களின் அடர்ச்சியால் இருண்டு பயத்தைக் கொடுக்கத்தக்கதா யிருந்ததால், கமலாக்ஷி தன் காலில் ஏதாவது தட்டுப்பட்டால் பயந்தும் கறுப்பாக ஏதாவது இருக்கக்கண்டால் அச்சப்பட்டும் இந்த இருட்டில் தான் தனித்துப்போவதை எண்ணித் துக்கப்பட்டும் நடக்கும்போது, தான் தன்னுடைய மாமன் கையிலிருந்து விடுபட்டது தெய்வச் செயலே! இந்தப் படுபாவி க்கு அவன் தமையன் ஆஸ்தியெல்லாம் சேரப் போகிறதென்கிறார்களே! ஐயோ ! அவ்விதம் முடிந்தால் அனேக கற்புடைய பெண்களுக்குக் கெடுதியாக முடியுமே! தன் தங்கையின்மகள் என்று கிஞ்சித்தும் எண்ணாமல் என்னைக் கற்பழிக்க முயன்றவன் அன்னியரை விட்டு விடுவானா ? இந்தத் துன்மார்க்கன் தன் தமையன் இறந்த காலத்தில் ஆறு மாதம் ஒருவர் கண்ணுக்கும் தட்டுப்படாமல் துக்கத்தில் இருந்ததாக என் தாய் சொல்லியது உண்மையாக இருக்குமா? இவ்வித கடினசித்த முள்ளவனுக்குத் துக்கமும் வருமா? அடா படுபாவி! என் தாய்க்குச் சொந்தமாகிய நிலத்தின் வரும்படியை உன் துர்ச்செய்கைக்கு உதவி யாக வைத்துக்கொண்டு உனக்கு நிலங்கொடுத்தவளது மகள் விஷயத்தி லும் தீமையைச்செய்ய அவ்வரும்படியையே உபயோகப்படுத்தினாய், உனக்கு நன்றியேது? நாணம் எது? விஜயரங்கத்தண்ணன் எழுதியது போல் கடிதம் எழுதத்துணிந்த நீ வேறென்ன செய்யமாட்டாய்? என் றும், தான் அந்த பாவிகையிலிருந்து விடுபட்டும் உடனே தாய்வீடு போகத் தடைப்பட்டதே என்செய்கிறது? எங்கு போகிறது? யாரிடத்தில் போயிருக்கிறது? என்றும் எண்ணிப் பசியாலும் களையாலும் நெடுந்தூரம் நடந்துவந்த இளைப்பாலும் தள்ளாடிச் சென்றுக் கல்லிடறி அம்மாடி! என்று விழுந்தாள். விழுந்தவள் எழுந்து கால் விரலில் அடிபட்டதென்று கண்டு விரலைத் தடவிப்பார்த்து நகம் பெயர்ந்து போனதால் நோகிறதென அறிந்து, சேலையில் கொஞ்சம் கிழித்து விரலைச் சுற்றிக் கட்டிக்கொண்டு என்செய்கிறது! படவேண்டி யதை யெல்லாம் பட்டனுபவிக்க வேண்டியதே; பசியால் காதடைக்க விரலில் கல்தடுக்க நடக்க முடியாமல் தடைபட்டாலும் நான் நடக்க வேண்டியது கட்டாயம், ஆயினும் சற்று உட்கார்ந்து போகலாம் என்று சிலநேரம் உட்கார்ந்தாள். அப்பொழுது கல்தட்டும் சத்தங் கேட்டு யாரோ வருகிறதுபோல் காணப்படுகிறதே என்று எழுந்து சாலையைவிட்டு ஒதுங்கி நடந்தாள். உடனே வெளிச்சம் உண்டாகி ஒருவன் தன்னோடிருக்கும் மற்றவனைப்பார்த்து, அடா கறுப்பா! யாரோ வருகிறதுபோல் இருக்கிறதென்று சக்கிமுக்கி போட்டுச் சுளுந்தை கொளுத்தச் சொன்னாயே! ஒருவரு மில்லையே! வீணில் ஏன் வெளிச்சத்தை யுண்டாக்கச் சொன்னாய்? என்றான். அதற்குக் கறுப்பன் நான் ஆள்வரும் சந்தடி கேட்காமல் சொல்லவில்லையடா வீரா. சுளுந்தை என்னிடங்கொடு. நீ குருட்டுப்பயல். உனக்குப் பகலில் பசு மாடுதெரியாது. இரவில் எருமை மாடா தெரியப்போகிறது என்று சுளுந்தை வாங்கித் தூக்கிப்பிடித்து, அதோ பார்த்தாயா? பாதையை விட்டு ஒருத்தி காட்டுக்குள் நுழைந்துபோகிறாள். என்று இருவரும் ஒடி கமலாக்ஷியை மறித்து, நீ யார்? எங்குபோகிறாய்? போகாதே, நில் என்றார்கள்.
கமலாக்ஷி.- ஐயா! நான் ஓர் பரதேசி ; எங்காகிலும் சென்று பிழைக்கலாம் என்று போகிறேன். என்னை ஏன் மறுக்கிறீர்கள்?
வீரன்.- எல்லா நகைகளும் போட்டுக்கொண்டு போகிறவளா பரதேசி? போட்டிருக்கும் நகைகளைக் கழற்றி எங்களிடம் கொடுத்துப்போகலாம். சீக்கிரமாகக் கழற்றிக்கொடு.
கறுப்பன்.-இவள் விழிக்கிறாளடா, ஏண்டி என்ன உதைவேண்டுமா? அல்லது காதை அறுக்கவேண்டுமா?
கமலாக்ஷி.- ஐயா! தடை செய்யவில்லை! இதோ பெற்றுக்கொள்ளுங்கள்.
(என்று தான் போட்டிருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தாள்.)
வீரன்.- அடே ! இவள் நம்மை ஏமாற்றப்பார்க்கிறாள். கையில் காலில் கழுத்தில் இருந்ததெல்லாம் கொடுத்தவள் மூக்குத்தியின் விலை அதிகமென்று அதைக்கொடுக்க இவளுக்கு மனம் வரவில்லை! ஏண்டி அதைக்கொடுக்க மனமில்லையா?
கமலாக்ஷி.- ஐயா! அதை மறந்துவிட்டதே யல்லாமல் கொடுக்க மனமில்லாமல் அல்ல. (என்று மூக்குத்தியையுங் கழற்றிக்கொடுத்தாள்.)
கறுப்பன்.- இவ்வளவு நகைகளைப் போட்டுக்கொண்டு வந்தவள் வழிச்செலவுக்கு ஒன்றுங்கொண்டு வராமலா வந்திருப்பாய்! மடியிலிருப்பதையும் கொடுத்து விட்டு நீ மகாராஜியாகப் போகலாம்.
வீரன்.- அடே கறுப்பா ! அகப்பட்ட நகைகளைப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்ததால் மடியிலிருப்பதை நினைக்காமல் மறந்தேன். நல்ல வேளையாய் ஞாபகப்படுத்தினாய்.
மடியிலிருக்கும் சுந்தரம் கொடுத்த பையையுங் கொடுத்துவிட்டால் என்ன செய்கிறதென்று கமலாக்ஷி யோசித்துக் கொண்டிருப்பதைக் கறுப்பன் கண்டு, ஏண்டி! என்ன யோசனை செய்து கொண்டிருக்கிறாய்? நாங்களே உன் சேலையை அவிழ்த்து எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்றான்.
அச்சொல்லைக் கேட்ட கமலாக்ஷி திடுக்குற்றுப் பயந்து ஐயா! இதோ பையைக் கொடுத்தேன்; பெற்றுக்கொண்டு எனக்கு ஏதாகிலும் செலவுக்குக் கொடுங்கள். என்கையில் இதைவிட வேறொரு காசும் இல்லை என்று பையைக் கொடுத்தாள். கறுப்பன் பையைவாங்கி அவிழ்த்து வீரா! எல்லாம் ரூபாயடா ! என்று எண்ணிப் பார்த்து ஐம்பது ரூபாய் இருக்கிறதடா என்றான்.
கமலாக்ஷி.- ஐயா ! என்னிடத்தில் ஒரு காசாகிலும் இல்லை. ஒன்றிரண்டு என்னிடம் கொடுத்தால் உங்களுக்குப் பெரும் புண்ணியமாகும்.
கறுப்பன்.- அடி பைத்தியக்காரி! யானை வாயிற்போன கரும்பு திரும்புமா? உன் சேலையை அவிழ்த்து உன்னைப் பரிசோதனை செய்யவேண்டியது கட்டாயமாக இருந்தும் உன் சொல்லை நம்பி விட்டுவிடுகிறோம். போய்ப் பிழைத்துக்கொள். வாடா வீரா ! இன்று நாம் நரிமுகத்தில் விழித்து வந்தோம்.(என்று இருவரும் சென்றார்கள்.)
தன்னிடம் இருந்தவைகளையெல்லாம் பறிகொடுத்த கமலாக்ஷி அவர்கள் போகும் வழியைப் பார்த்திருந்து, தெய்வமே! இனி என்ன செய் யப் போகிறேன்! என்று அழுதுகொண்டே சாலைவழி இரவெல்லாம் நடந்து காலை நாலுமணிக்கு அதிக தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டு தைரியம் கொண்டு, அவ்விடம் போனால் யாராகிலும் இருப்பார்கள், அவர்களுடைய உதவியைப்பெறலாம் என்று வெளிச்சம் இருக் கும் இடத்திற்குப் போகும்பொழுது, “பட்டகாலே படும் கெட்ட குடியே கெடும்” என்றபடி அடிப்பட்ட விரலில் அடிக்கடி அடிபட்டு விழுந்தும் பின் எழுந்து நடந்தும் நடக்க முடியாமல் உட்கார்ந்தும் வெளிச்சம் சமீபமாகிறதால் மெதுவாகப் போய்விடலாம் என்று அதிக கஷ்டப்பட்டு வெளிச்சத்திற்குச் சமீபமாக வந்து பார்த்து, ஆ! கடவுளே ! இதைப்பார்க்கவா அதிக கஷ்டத்தோடு இவ்விடம் வந்தேன். வீட்டுக்கருகாமையில் யாராகிலும் குளிர்காய்ந்து கொண்டிருப்பார்கள்! என்று வந்தால் இங்கு பிணம் வெந்து கொண்டிருக்கிறதே! என்று சுடுகாட்டைவிட்டு நெடுந்தூரம் சென்ற பின், சில வீடுகள் இருப்பதைக்கண்டு மகிழ்வுகொண்டு ஒரு வீட்டின் கதவைத்தட்டி, அம்மா என்று கூப்பிட்டாள். அவ்வீட்டில் பதில் ஒன்றுங் கிடைக்காததால் அவ்வீட்டை விட்டு மற்றொரு வீட்டின் கதவைத்தட்டிக் கூப்பிட்டாள். வீட்டுக்குள்ளிருந்து ஒருவர் யார் அங்கே? என்று கேட்டார். அதற்குக் கமலாக்ஷி ஐயா! நான் ஓர் ஏழை, சற்றுநேரம் உங்கள் வீட்டில் படுத்திருந்து போக இடந்தரவேண்டும், இது பெரும் புண்ணியமாகும் என்றாள். வீட்டுக்குள்ளிருந்தவன் ஏழையா! கீழையா! போபோ, இங்கு இடமும் இல்லை கிடமும் இல்லை என்றான். அவ் வீட்டை விட்டு மற்றோர் வீட்டின் கதைவைத்தட்ட அந்தச் சத்தத்தைக்கேட்டுச் சில நாய்கள் குலைத்து வருவதைக்கண்டு கமலாக்ஷி தன் கால்விரல் உபத்திரவத்தையும் பார்க்காமல் ஓடியும் நாய்கள் துரத்திக் கொண்டுபோய் மேல்விழுந்து சேலையைக்கிழித்ததோடு விடாமல் பின் தொடர்ந்து வருவதைக்கண்டு பயந்து ஓடி ஒரு கிராமத்தை யடைந்து ஒரு வீட்டின் தெருத்திண்ணையில் படுத்துக் கண்ணை மூடினாள். கண்ணை மூடிய சில நிமிஷங்களுக்குப்பின் அவ் வீட்டின் கதவு திறக்கப்பட்டு ஒரு கிழவி வெளியில் வந்து, ஆரடி அங்கு படுத்துக்கொண்டிருப்பவள்? சீ ! எழுந்துபோ! நன்றாய் மெழுகி வைத்திருக்கும் இடத்தைக் கெடுக்கவந்தாள்; இனி அந்த விடத்தையும் மெழுகவைத்தாள்; இந்தக் கழுதைகளுக்கு என்ன சொன்னபோதிலும் கேட்காமல் திண்ணையில் படுத்துக்கொள்ளுகிறார்கள். ஏண்டி போகிறாயா? அல்லது சாணச்சட்டியிலுள்ளதை உன்மேல் ஊற்றுகிறதா? என்றாள். கமலாக்ஷி உடனே எழுந்து அம்மா! நான் போய்விடுகிறேன், உங்களுக்கந்த வருத்தம் வேண்டியதில்லை என்று கடைத்தெரு வழியாக நடந்தாள். சூரியன் உதயமாகுந் தருணத்திலே கடைத்தெருவில் ஒரு பெண்பிள்ளை தோசை சுட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்குச்சென்று, அம்மா! ஒருதோசை கொடுக்கிறாயா என்றாள். அவள் எத்தனை காசுக்கு வேண்டும் என்று கேட்டாள்.
கமலாக்ஷி.- அம்மா! என்னிடத்தில் காசிருந்தால் நான் ஒன்றுக்கும் கவலை கொள்ளவேண்டியதில்லை. என்னிடம் இருந்ததை எல்லாம் திருடர் கையில் கொடுத்துவிட்டேன். எனக்கிரண்டொருதோசை கடனாகக் கொடுத்தால் ஒன்றுக்கு நாலாக அதன் விலையைத்தந்துவிடுகிறேன். நான் பட்டினியாக இருக்கிறேன்; கொடுத்தால் உனக்குப்பெரும் புண்ணிய மாகும்.
தோசைக்கார்.-நீ கெட்டிக்காரி! பொழுது எங்கே விடிந்தது? இங்கே கடன் வாங்க வந்தாய்! உன்னை முன்னறிவேனா பின்னறிவேனா! உனக்குக் கடன் கொடுத்துக் கணக்கெழுதிவைக்கவா ! போடி போடி பைத்தியக் காரி! நான் கடன் கொடுத்துக் கடன் கொடுத்து என் தலை மொட்டை யாய் விட்டது.
அவ்விடத்தில் நிற்பதில் பிரயோசனமில்லையென்று கமலாக்ஷி ஓர் பழக் கடைக்குப்போய் நின்று கடைக்காரனைப்பார்த்து, ஐயா ஒருதுட்டு க்கு வாழைப்பழம் கடனாகக்கொடுங்கள். என்கையில் காசு கிடைத்தவுடன் கொடுத்துவிடுகிறேன். நான் அதிக பசியாக இருக்கிறேன் என்றாள்.
கடைக்காரன்.- அம்மா ! வாருங்கள். உங்களுக்குக்கடன் கொடுக்காமல் பின் யாருக்குக் கடன் கொடுக்கப்போகிறேன்! எத்தனை ரூபாய்க்கு வேண்டும்? வண்டிகொண்டுவந்தீர்களா.(என்று பரிஹாசமாகப்பேசினான்.)
கடைக்காரர்கள் காசுவாங்காமல் ஒன்றும் கொடுக்கமாட்டார்கள். நாம் வீ ணில் அவர்களை அடுத்துக்கேட்பது நமக்கவமானமேயன்றி ஒன்றும் பிரயோசனமில்லை, என்று கமலாக்ஷிபோகும்போது, ஒரு பழக்கடைக்காரன் எலி கடித்தபழங்களை எடுத்து எறிவதைக்கண்டு அவை களை எடுத்துக்கொள்ளலாமா என்று எண்ணியவுடன் கண்களில் ஜலம் வடிய, நமக்கிந்த கதியா வந்தது! இத்தருணத்தில் நம்முடை தாய் பார்த்தால் உயிர்தரிப்பாளா? நமது பிராணசினேகி வனசாக்ஷி கண்டால் சகிப்பாளா? விஜயரங்கத்தண்ணண் கண்டால் மனம் பொறுப்பாரா? பெரியவர் பார்த்தாலும் சகியாரே ! என்று அழுது, நாம் இனிக்கடைத்தெருவில் இருப்பது பிரயோசனமில்லை, அக்கிர காரத்துக்குச் சென்றால் ஒரு கவளம் அன்னம் கிடைக்காதா என்று கடைத்தெருவைவிட்டுக் கஷ்டத்தோடு நடந்து ஒரு கால்வாயை அடுத்துக் காலைக்கடனை முடித்து அக்கிரகாரத்திற்சென்று ஒவ்வொரு வீட்டிலும் போய் நின்றாலும் அன்னங்கேட்க வெட்கப்பட்டு அந்த வீட்டில் கேட்கலாம், அடுத்தவீட்டில் கேட்கலாம், இந்த வீட்டில் கேட்கலாம், இதற்கடுத்த வீட்டில் கேட்கலாம் என்று திரிந்து ஒவ்வொரு வீடாய்ப் பார்த்துவருவதைக் கண்ட பிராமணன் ஒருவன் கமலாக்ஷியை அழைத்து, அம்மா! நீ யாரைத் தேடுகிறாய்? எங்காகிலும் சிரார்த்தம் உண்டா? யாரை அழைத்துப் போகப்பார்க்கிறாய்? நான் வருகிறேன், யார் வீட்டில் சிரார்த்தம்? என்றான்.
கமலாக்ஷி.- ஐயாவே! நான் ஒருவரையும் தேடவில்லை. எனக்குப்பசி அதிகமாயிருப்பதால் என்பசியைத் தணித்துக்கொள்ளலாம் என்று வந்தலைகிறேன். எனக்கு ஓர் கவளம் அன்னங்கொடுக்கும்படி உத்தரவளித்தால் புண்ணியமாகும். என்னுடைய பசியை இந்த வேளையில் தணியுங்கள். தங்களுக்கு அனேக நமஸ்காரம் செய்கிறேன். (என்று கெஞ்சிக் கும்பிட்டாள்.)
பிராமணன்.- காலையில் நமக்கேதாகிலும் கிடைக்குமா என்று நினைத்து உன்னைக்கூப்பிட்டுக் கேட்ட தோஷத்திற்காக என் மடியில் கைபோடப் பார்க்கிறாய். உனக்கு இலைபோட்டுப் பரிமாற ஒருவரும் இல்லை. போ போ. (என்று துரத்தினான்.)
கமலாக்ஷியை அழைத்து ஒரு பிராமணன் போசிக்கொண்டிருப்பதைத் தூரத்தி லிருந்து பார்த்திருந்த ஒரு பிராமணஸ்திரீ கமலாக்ஷி வரும் பரியந்தம் பொறுத்து அவளையழைத்து, அம்மா! என்ன வேண்டும்? யாரைத்தேடுகிறாய்? என்றாள்.
கமலாக்ஷி.- தாயே! எனக்குப் பசி காதடைக்கிறது. கண் பஞ்சடைகிறது. என்கையில் ஒரு காசுமில்லை. ஒரு கவளம் அன்னம் நீங்களாவது போட்டால் உங்கள் குடும்பத்துக்குப் புண்ணியமாகும். என்னால் நடக்கவும் சக்தியில்லை.
பிராமணஸ்திரீ – அடி! உன்னைப்பார்த்தால் மணலிற் பிடுங்கிய வள்ளிக் கிழங்குபோலிருக்க உனக்கென்னகேடு! எங்காகிலும் கூலிக்குக் குத்தக் கூடாதா? பிராமணர் வீட்டில் ஆளாக இருந்து பாத்திரங்கள் துலக்கக் கூடாதா? போபோ. எங்கள் வீட்டில் அன்னம் இல்லை.
கமலாக்ஷி.- அம்மா ! தங்கள் வீட்டில் ஆளாக இருந்து இட்டவேலையைச் செய்கிறேன்.என்பசியைத் தணியுங்கள்.
பிராமணஸ்திரீ -அடி! எனக்கு ஆளும் வேண்டாம் ; தோளும் வேண்டாம். வேண்டியவர்கள் வீட்டைத் தேடிப்போ. (என்று தன் வீட்டுக்குள் நுழைந்தாள்.)
அக்கிரகாரத்தில் பசியை நீக்கிக்கொள்ளலாம் என்று நம்பிவந்தபோது நம்மை க்கண்டு ஒருவரும் மனமிரங்க வில்லையே! ஆ ! தெய்வமே! நான் இனி என் செய்வேன்! எங்குபோய் நிற்டேன்? யாரை அடுத்துக் கேட்பேன் ! என்று தெருத்தெருவாய்த் திரிந்து கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த சிலவாலிபரில் ஒருவன் கமலா க்ஷியைச்சுட்டி, அடே! அதோ அங்கு போகிற பெண்பிள்ளையைப் பார்த்தீர்களா? என்ன சுந்தரமாக இருக்கிறாள்! என்றான்.
ஒருவன்.- பிச்சை எடுக்கப்போகிறவர்கள் எல்லாம் உனக்குச் சுந்தரமாகவே காணப்படுவார்கள்.
மற்றெருவன்.- ஏன்! அவளை அழைத்துவந்து தலைமுழுக்காட்டி நகைகள் போட்டு நல்ல வஸ்திரத்தைக் கொடுத்தால் சுந்தரமாக இருக்காளா?
வேறெருவன் – அடே! ஒரு மரப்பொம்மைக்கு இரண்டொரு நகைகள் போட்டு ஒரு துணியைக் கட்டினால் அதுவும் அழகாகவே யிருக்கும். அவள் கட்டியிருக்கும் கிழிந்த சேலையையும், கழுத்தில் காதில் ஒன்றும் இல்லாததையும், அலங்கோலமாக இருக்கும் தலைமயிரையும் பார்த்தால் அவள் ஒரு பிச்சைக்காரியாகவே காணப்படுகிறது. அவள் வாய்மொழியைக் கேட்டால் உண்மையை அறியலாம்.
என்று அவளருகிற் சென்று, ஏ குட்டி ! நீயாரைத் தேடுகிறாய்? என்கிறான். மற்றொரு வாலிபனும் நெருங்கி என்னையா தேடுகிறாய்? என்றான். இருவர்சென்று கேட்டதைக்கண்ட மற்ற வாலிபரும் ஒடி கமலாக்ஷியைச் சுற்றி நின்று, என்னோடு வருகிறாயா? என்று ஒருவன் கேட்பதும், வேறொருவன் இல்லை என்னோடு வர எண்ணங்கொண்டிருக்கிறாள் என்று ஏளனமாகப்பேசுவதுமாயிருந்த சமயத்தில் ஓர் அன்னியன் அவ்விடம் வந்து, என்னடா செய்கிறீர்கள்? வழியிற்போவோரைத் தொந்தரை செய்வதா உங்களுக்கு வேலை? நான் சேவகரைக் கூப்பிடவா? என்றான். சேவகர் என்று சொன்னவுடன் வாலிபர் பயந்து பலபக்கத்திலும் போய்விட்டதைக்கண்ட அன்னியன் கமலாக்ஷியருகிற் சென்று அம்மா! நீ யாரைத்தேடுகிறாய்? எங்குபோக வேண்டும்? என்றான்.
கமலாக்ஷி.- அண்ணா! நான் ஒருவரையும் தேடவில்லை. நான் இராத்திரி தனியாய் ஓரிடத்திலிருந்து வரும்பொழுது நான் போட்டிருந்த நகைகளையும் ஒரு புண்ணியவதி கொடுத்த ரூபாயையும் திருடர்கள் வசம் கொடுத்து என் பசியைத் தணித்துக்கொள்ளத் தெருத்தெருவாய் திரிந்தும் ஒரு கவளம் அன்னமும் கிடைக்கவில்லை. (என்று துக்கத்தோடு சொன்னாள்.)
கமலாக்ஷி சொல்லியதைக்கேட்ட அன்னியன் கண்களில் நீர் ததும்பச் சில நேரம் மௌனமாயிருந்து பின் கமலாக்ஷியைப் பார்த்து, பெண்கள் சொல்லை நம்புவது கூடாதாயினும், நீ பசியால் வருந்துகிறாயென்று கேட்டபின் ஒருதவியும் செய்யாமற்போவது நியாயமல்ல வென்று சொல்லி ஒரு ரூபாய் தன் மடியிலிருந்து எடுத்துக் கொடுத்து உன் பசியை யாற்றிக்கொள்ளென்று திரும்பினான்.
கமலாக்ஷி – அண்ணா! நான் இந்த இடத்திற்குவந்து அதிககஷ்டத்தை அனுபவித்தும் என்பசியைத் தணித்துக்கொள்ள வகையில்லாமலிருந்த தால், நான் பசியினால் இறப்பேன் என்றே நினைத்திருந்தேன். இத்தருணத்தில் என் உயிரைக் காப்பாற்றினீர். இதை எளிதில் மறக்காமல் என் ஆயுள் காலமெல்லாம் ஞாபகத்தில் வைத்திருப்பேன்.
கமலாக்ஷி சொல்லிக்கொண்டிருப்பதை அன்னியன் நின்று கேட்காமல் போனபின், கமலாக்ஷி தனக்குக் கிடைத்த ஒரு ரூபாயை ஒரு இலக்ஷமாக மதித்து, கடைக்குச் சென்று, காலணாகொடுத்துத் தோசைவாங்கிச் சாப்பிட்டு ஒரு சல்லிக்கு மோர்வாங்கிக் குடித்துத் திருப்தியடைந்து, இந்த ஒரு ரூபாயை நாம் ஒரு மாதம் வரைக்கும் வைத்திருக்க வேண்டியதால் அதிகமாகச் செலவு செய்யக்கூடாதென்று கடைத் தெருவை விட்டுப்போகும்பொழுது, ஓர் பெரிய விருக்ஷத்தின் சமீபத்தில் ஒர் வைக்கோற் போர் இருக்கவும் அதற்கருகில் வீடில்லாமல் இருப்பதையும் கண்டு சற்றுநேரம் அவ்விடம் போய் உட்கார்ந்திருக்கலாம் என்று வைக்கோற் போரிடம் சென்று வைக்கோற் போற் மரத்தின் நிழலி லிருந்ததால் சற்றுப் படுத்திருக்கலாம் என்று படுத்தாள். அதிகதூரம் நடந்து வந்ததாலும் எட்டுநாள் சாப்பிடாமலிருந்து பசி நீங்கச் சாப்பிட்ட களையாலும் கமலாக்ஷி படுத்து நன்றாய்த் தூங்கிக்கண் விழித்துப்பார்த்து, ஆ! இஃதென்ன இருட்டாய்விட்ட தே! காலையில்படுத்தவள் இரவு பரியந்தமா தூங்கினோம்! இவ்விருட்டில் சென்று படுக்க இடம் தேடுகிறதைவிட இந்த வைக்கோற்போர் மேலானதாக இருக்கிறது, ஊர் அரவமும் அடங்கிவிட்டது என்று நன்றாய்ப்போர்த்துக்கொண்டு படுத்து நித்திரையில்லாமல் விழித்துக்கொண்டிருக்கும் பொழுது, யாரோ ஒருவர் வருகிற சந்தடிகேட்டு அரவம் ஒன்றும் செய்யாமல் இருந்தாள்.கமலாக்ஷி படுத்திருந்த வைக்கோற்போருக்கு எதிராக ஒருவன் நின்று பெருமூச்சுவிட்டு, ஆ! கடவுளே ! என்னை ஏன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறீர்! நான் பெற்றோரை விட்டுவர மனமில்லாமலிருந்தும் என் பொருட்டு அவர்கள் தங்கள் இனத்தாரால் அவமானம் அடைந்து அதனால் துன்பப்படுகிறார்களென்று அறிந்த பின்னும், என்னுடைய நன்மையைக் கருதி அவர்களோடு இருப்பது அழகா? பெற்றபிள்ளையை விட மேலாக நடத்திவந்தவர்களை என் விருத்தாந்தம் என்ன என்று கேட் டிருந்தால் அவர்கள் சொல்லத் தடைசெய்யார்கள். நான் யாருக்குப் பிறந்தேனென்றும் அவர்களிடத்தில் எப்படி வந்தேனென்றும் அறி யாமலிருந்து காலம் கழித்து வந்த என்னை மிகவும் புத்திசாலி யென்று சொல்லிக்கொள்வது உலகில் கறுப்பாட்டை வெள்ளாடு என்று சொல்வது போலிருக்கிறது; நான் இன்ன ஜாதியான் என்ற றிந்துகொள்ளாமல் கமலாக்ஷியை விவாகஞ்செய்துக்கொள்ள எண் ணங்கொண்டு என் தாயாரை அனுப்பிப் பெண் கேட்கும்படிச் சொல்ல வேண்டுமென்று எண்ணி யிருந்தேனே ! என் போலும் பேதை இருப்பார்களா? ஆ!கமலாக்ஷி நான் என்தாய் தந்தை யையும் சினேகனையும் விட்டுப்பிரிந்தகாலத்தில் உன்னை நான் மறந்தவனல்லன். உன்னை விவாகஞ்செய்ய எண்ணியிருந்தது போல் முடிந்திருந்தால், நீ எந்நாளும் தாய் தந்தை இன்னா ரென்று அறியாத ஒருவனுக்குப் பெண்சாதியானோம் என்று துக்கங் கொண்டிருப்பாயே! அது தப்பியது தெய்வச்செயலே யன்றி வே றல்ல. ஐயோ ! நான் உங்கள் வீட்டுக்கு வருங்காலத்தில் என்னை அண்ணாவென்று அழைக்கும்பொழுது எனக்குள் சிரித்து அண்ணன் என்றிவள் தற்காலம் அழைக்கிறாளே!நம்முடைய தாயார் பெண் கேட்டு அவளுடைய தாயாரும் ஒப்பினால் அப்பொழுது என்ன என்று கூப்பிடுவாள் பார்க்கலாம் என்றிருந்தேனே! அந்த எண்ணம் எவ் விதம் போனது!!!நான் இன்னும் இரண்டொரு நாள்களுக்குப் பின் என் இரகசியத்தை அறிந்திருக்கக் கூடாதா? அப்படி முடிந்திருந் தால் கமலாக்ஷி என்னை அண்ணன் என்று அழைப்பதை விட்டு அத் தான் என்று அழைப்பதைக்கேட்டாவது சந்தோஷப்பட்டிருப்பேனே! ஆ கமலாக்ஷி ! உன்னை விவாகஞ்செய்துகொள்ள எண்ணங்கொண்டிருந்தாலும் நான் என் பிறப்பின் குற்றத்தை யறிந்தபின் உன்னை மோசஞ்செய்து விவாகமுடிக்க என்மனம் எழாது. உன்னைக்கண்டு ஆசை கொண்டு விவாகம் செய்துகொள்ளலாம் என்றிருந்த எண்ணம் தவறியதால் இனி வேறொரு பெண்ணை விவாகஞ் செய்துகொள் ளேன். உன்னைக்கண்டு அண்ணன் தங்கை என்ற முறையோடு வார்த் தையாடினால் அதுவே போதுமென்றிருக்கிறேன். நீ என்னை அண்ணாவென்று கூப்பிடும்பொழுது பெரியவர் என் அந்தரங்கக் கருத்தைறிய என்னைப்பார்த்து வந்தார். அவர் என் கருத்தைத் தெளிவாயறி யாமலிருக்கவே காட்டிவந்தேன். நான் செய்ததும் எண்ணியதும் பாழாயினவா! ஆ!கமலாக்ஷி! நீயாவது என் சினேகன் சோமசுந்தர மாவது என்னை வளர்த்து வந்தவர்களாவது நான் இன்ன இடத்தில் இருக்கிறேன் என்று அறிந்தால் என்னை அழைக்க வருவீர்களே; அப்பொழுது தடைசொல்லாமல் உங்களோடு போகவேண்டியவ னானதால் நான் இருக்கும் இடத்தைத் தெரிவிக்காமல் இருக்கிறேன். நான் என்ன கஷ்டப்பட்டாலும் சாப்பாட்டுக்கே அலைந்தாலும் என் னால் என் செவிலித்தாயும் தகப்பனும் அவமானமடைய இடங்கொடு த்து அவர்களோடு போயிரேன். இவன் தாய் தகப்பன் இன்னார் என்று சொல்ல வகையற்றவன். என்ன குலத்தானோ என்று பலர்பேச நான் அவ்வூரி லிருப்பதும் அழகல்ல. நான் எங்கு போனாலும் என் னுடைய ஊழ்வினை என்னை இன்னும் துன்பத்தில் அழுத்திக்கொண் டிருக்கிறது. என் எஜமானுடைய பெண்சாதி என் விஷயத்திற் செய்வது அடாத காரியமாக இருக்கிறது. இதைத்தடுத்துக்கொள்ள இந்த சுவர்ணபுரியை விட்டுப்போக வேண்டியவனாயிருக்கிறேன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருந்தவன் சற்றுநேரம் மௌனமாயிருந்தான். அத்தருணத்தில் வேறொருவர் அவ்விடம் வந்து தம்பி விஜயரங்கம்! உன்னை எங்கெங்கு தேடுகிறது? இங்கு ஏன் வந்தாய்? என்றதற்கு, அக்காள்! வீட்டில் அதிக ஒடுக்கமாயிருந்ததால் இவ்விடம் வந்தேன் என்றான்.
வந்தவள் – தம்பி! நாமிருவரும் தனித்திருக்கும்பொழுது என்னை அக்காள் என்று கூப்பிட்டால் எனக்குக்கோபம் வரும். என்னை என்பெயர் சொல்லிக் கனகாம்புஜம் என்று அழைப்பாயேயானால் நான் அதிக சந்தோஷமடைவேன்.
விஜயரங்கம்.- அக்காள் ! தாங்கள் சொல்வது தருமம் அல்ல. நான் வயிற்றுச்சொற்றுக்கு வேலைசெய்ய வந்தவனைத் தங்களுடைய நாயகன் அன்பாய் நடத்திவருகிறார். அவர் விஷயத்தில் அபசாரஞ் செய்வது அடாது என்று தங்களுக்கனேகமுறை சொல்லியிருந்தும் அதைக்கவனிக்காமல் பேசுகிறீர்கள். தங்களை அக்காளென்று அழைத்தபின் தங்களை என் னோடு பிறந்த சகோதரியைப்போல் எண்ணியிருக்கிறேன். அது விஷ யத்தில் சந்தேகங்கொள்ளாமல் தாங்கள் கொண்ட கருத்தை நீக்கிவிடுவதே உத்தமம்.
கனகாம்புஜம் – தம்பி ! உன் பழைய கதைகளை இன்னும் என்னிடத்தில் சொல்லவேண்டாம். அவைகளைக் கேட்டுக் கேட்டு என்காது செவிடாய் விட்டது. என் புருடன் எப்பொழுது வீட்டை விட்டுப்போவாரென்று வழி பார்த்திருந்தும் அது கைகூடிய காலத்தில் நீ தடைசெய்துகொண் டிருக்கிறாய். மணி பத்துக்கதிகமாகிறது. வீட்டுக்கு வா. (என்று கையைப் பிடித்திழுத்தாள்.)
விஜயரங்கம்.-(கையை விடுவித்துக்கொண்டு) அக்காள்! நான் தங்கள் வீட்டிலிருப்பது தங்களுக்குச் சம்மதமில்லாதிருக்குமாகில் வேறெங்கே யாகிலும் போய்விடுகிறேன்.
கனகாம்புஜம்.- கரும்பு தின்னக் கைக்கூலி கேட்கவா பார்க்கிறாய்? நீ என்னை விட்டுப்போகச் சுலபத்தில் முடியுமென்று நினைக்கிறாயா? அந்த எண்ணத்தைத் தற்காலம் விட்டு விட்டு என்னோடு கூடி எனக்குச் சுகத்தைக் கொடுத்தபின் உனக்கென்மேல் இஷ்ட மில்லாதிருந்து வே றொரு மாதைத் தேடவிருப்ப மிருந்தால் அப்பொழுது உன்னிஷ்டம் போல் செய்யலாம்; அதற்குமுன் நீபோய் விடுகிறேன் என்பது பிரயோ சனப்படமாட்டாது. நான் உன்னிடத்தில் கூச்சம் விட்டுப் பேசியதால் என்னைக் கட்டியணைத்து ஒருமுத்தங்கொடு. (என்று நெருங்கினாள்.)
விஜயரங்கம்.- அக்காள் ! என்னை நெருங்கி வரவேண்டாம். தாங்கள் சொல்வதும் செய்வதும் தெய்வத்துக்கடுக்காது. தங்களுடைய வீட்டை விட்டு இந்நேரத்தில் இவ்வளவு தூரம் வந்து பேசிக்கொண்டிருப்பதை யாரா கிலும் பார்த்தால் தங்களை என்னவென்று நினைப்பார்கள்! வீட்டுக்குப் போங்கள். இவ்விடத்திலிருந்து இம்மாதிரியான பேச்சைப் பேசுவது அழகல்ல.
கனகாம்புஜம்.- நான் வீட்டை விட்டு இவ்வளவு தூரம் வந்ததால் யாதொரு தோஷமும் இல்லை. இராக்காலத்திலே வைக்கோற்போரிடத்தில் யார் வரப்போகிறார்கள்? நான் இவ்விடத்தில் நின்று வார்த்தையாடும்படி நீயே கட்டாயப்படுத்துகிறாய். நான் உன்மேல் ஆசைகொண்டு சொல்வதை யெல்லாம் கேட்டு உள்ளுக்குள் சந்தோஷப்படுவது எனக்குத் தெரி யாமற்போனதென்று நினைக்கவேண்டாம். நீ பெருந்திருடன் என்று எனக்கு நன்றாய்த்தெரியும். உனக்கென்மேல் ஆசையில்லாமற்போனால் அன்று உன்னைக் கட்டியணைத்து முத்தங்கொடுத்தேனே! அப்பொழுது நீ என்ன செய்தாய்! அதை மறந்து விட்டேன் என்றா நினைக்கிறாய். உன் எண்ணத்தை நான் அறிந்து கொள்ளவில்லையா? நான் முத்தங் கொடுக்கும்வரையிலும் சும்மாவிருந்து முகத்தை எடுத்துக்கொண்டபின் என்னைத் திமிறிக்கொண்டு போவதுபோல் நடித்தாயே! ஆ! ஆ! உன் சூதை இது பரியந்தம் நான் அறியவில்லை என்றே நினைத்திருந்தாய்! நான் உன்னைவிடச் சூதறிந்தவளென்று இன்று கண்டு கொண்டாயா? (என்று சிரித்தாள்)
விஜயரங்கம்.– அக்காள்! தாங்கள் முற்றிலும் தங்களை மறந்தே பேசுகிறீர் கள். நான் வேறுபக்கம் திரும்பித் தாங்கள் வருவதைப் பார்க்காதிருந்த பொழுது அடிமேல் அடிவைத்துச் சந்தடி செய்யாமல் எனக்குப் பின் னால் வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டால் நான் எப்படி விடுவித்துக் கொள்ளுவேன்! உடனே திமிறினால் தாங்கள் கீழே விழுந்து அடிபட் டுத் தங்களுக்குக் கெடுதியுண்டாகுமேயெனப் பயந்திருந்ததை அறிந் தும் நான் உம்முடைய தீச்செய்கைக்கு உடன் பட்டதாக எண்ணி என் மேல் குற்றஞ்சுமத்துவது தங்களுக்கு நன்மையைத்தராது; நான் தங்க ளுக்கிந்த ஆசையைவிட்டு விட முன் வேண்டினது போல் இப்பொழு தும் வேண்டுகிறேன்.
அச்சமயத்தில் ஒருவன் கமலாக்ஷி படுத்திருக்கும் இடத்திற்குச் சமீபத்தில் வந்து கமலாக்ஷி அவ்விடம் இருப்பதைக் கவனிக்காமல் நின்றான்.
கனகாம்புஜம்.- இன்னும் என்ன சொல்லப்போகிறாய்?
விஜயரங்கம்.- என் மனதிலிருப்பது இன்னதென்று தாங்கள் கண்டுகொள் ளக்கூடும். அதை நான் விளங்கச் சொல்லவேண்டிய அவசியமில்லை. வீணில் இவ்விடத்தில் நின்று காலங்கழிக்கிறீர்கள்; தங்களை நினைத்து நினைத்து என்றும் துன்பத்திலிருப்பது அழகா? நான் சந்தோஷத்தோ டிருக்கும்படி செய்ய மனங்கொள்ள லாகாதா? என் கவலையை நீக்கி விட்டால் தங்களை எந்நாளும் புகழ்ந்துகொண்டிருப்பேன்; நான் உண் ணும் உணவு என் உடம்பில் ஒட்டாமலிருக்கிற காரணம் இதைவிட வேறென்ன இருக்கிறது!
கனகாம்புஜம்.- தம்பி! உன்னை இன்னானென்று அறியாமல் உன் சொல்லை நம்பி அழைத்துவந்து மேலாக நடத்தி வருபவரது மனைவியின் மனம் பதற நடக்கவேண்டாம். நான் சொல்வதைக்கேள். வீணில் துன்பப் படுவாய்.
விஜயரங்கம்.- தாங்கள் என்ன சொன்னபோதிலும் எனக்கென்ன துன்பம் நேரிட்டாலும் நான் கொண்ட கருத்தை மாற்றேன்.
அத்தருணத்தில் மறைவாய்னின்று கேட்டிருந்தவன் சென்று விஜயரங்கத் தின் முதுகில் குத்தி, அடா!பாதகா! என்ன சொன்னாய்? உனக் கென்ன துன்பம் நேரிட்டாலும் நீ கொண்டகருத்தை மாற்றமாட் டாயா? என்று மறுபடியும் ஓர் குத்து குத்தி உனக்கு வேண்டிய மரி யாதையை செய்து அனுப்புகிறேன் வாவென்று தள்ளிக்கொண்டு போகும் பொழுது, கனகாம்புஜத்தைப் பார்த்து, இந்தப்படுபாவி உன் மேல் தீராமோகங்கொண்டிருப்பதைக் கேட்டிருந்தேன். வெளிக்கு வந்த உன்னைப் பின்தொடர்ந்து வந்தான் என்று நன்றாய் விளங்குகிறது. நானிந்தத்துன்மார்க்கன் குணத்தை யறியாமல் வீட்டுக் கழைத்துவந்தது என்மேல் தப்பிதமே! என்னால் இப்பாதகனிடம் நீ அவமானமடைய நேர்ந்தது. என் தப்பிதத்தை மன்னிக்கவேண்டும், கனகாம்புஜம் ! வாவென்று தன் பெண்சாதியையும் அழைத்துச் சென்றான்.
கனகாம்புஜமும் விஜயரங்கமும் பேசியிருந்ததை முதலிலிருந்து முடிவுபரியந்தம் கேட்டிருந்த கமலாக்ஷி துடிதுடித்து ஆ! தெய்வமே! இதென்ன அநியாயம்! பழியொருபக்கம்! பாவம் ஒருபக்கமாகச் சேர்ந்தது! ஐயோ! விஜயரங்கத்தண்ணன் மறைத்துப் பேசியது அவர்மேல் சக் தேகத்தைக்கொடுத்துவிட்டதே ! விஜயரங்கத்தண்ணன்மேல் பழி யேற்ற மத்தியில் வந்து நின்று சில வார்த்தைகளைமட்டுங்கேட்டுத் தன் பெண்சாதியை மேன்மையாகமதித்து அழைத்துக்கொண்டு போனானே! குற்றமற்றவரைக் குத்திக்குத்திக் கொண்டுபோன கொடுமைக்கு என்ன செய்கிறது! நான் சென்று உண்மையைச் சொன்னால் என் வார்த்தையை நம்புவார்களா? ஐயோ கொடும்பாவி யாகிய என்னைவிவாகம் செய்துகொள்ள விருப்பம் கொண்டிருந்தவ ருடைய எண்ணத்தை யறிந்தவுடன் அவருக்கு இந்தத்துன்பம் வர வும் அதைப் பார்த்துச் சகித்திருக்கும் என்போல் பழிகாரி உலகத்தில் இருப்பாளா ! ஐயையோ! நான் என்னசெய்வேன்! என்று அழுது இருப்பாளா!ஐயையோ! அண்ணா! என் தீவினைப் பயனால் நான்படாதபாடு படுகிறேன். நீரும் என்போல் துன்பத்தை அனுபவிக்கவா இருந்தீர்! இந்தக் கண்காக்ஷி யைக் கண்டறியவா இவ்விடம் வந்தேன்! அத்துன்மார்க்கர்களாகிய ய இரத்தினமும் மாணிக்கமும் என்னைக் கொண்டுபோக எத்தனித்த பொழுது அவ்விருவருடைய வல்லமையும் அடக்கி என்னை விடுவித் தீரே ! அந்த வல்லமை இப்பொழுது இல்லாமலா போய்விட்டது! எஜமான் என்றும் உமக்கு ஆபத்தில் ஆதரித்தவரென்றும் எண்ணி விட்டுவிட்டீர் போல் காணப்படுகிறது! ஐயோ! என்காதில் விழும் படி அடிக்கடி குத்தினானே! வழியில் எத்தனை அடி அடித்தானோ! வீட்டுக்குக் கொண்டுபோனபின் என்ன செய்தானே! தன்னால் இச்சிக்கப்பட்டவன் அடிபடுகிறானேயென்று கனகாம்புஜம் சிறிதா வது நினைத்து ஓர் உதவியும் செய்யாமல் நின்றாளே ! இஃதென்ன அநியாயம் !குற்றமற்றவரைக் கொடுமையாக நடத்துவதை நான் பார்த்திருப்பது தகாது. என்னுடைய சொல்லை நம்பினாலும் நம்பா மற்போனாலும் நான் சென்று உண்மையைச் சொல்லவேண்டியது கடமை யென்றெழுந்து, அவர்கள் போனவழியை நிதானத்தாலறிந்து நடந்து ஒருவீட்டுக்கருகில் கல்தடுக்கி விழுந்து மூர்ச்சையானாள்.
15-ம் அத்தியாயம்
லக்ஷமிபுரம் என்கிற கிராமத்தில் ஒரு மச்சுவீட்டுக்குள் ஓர் அறை யில் ஒரு பெண்படுத்திருக்க அவளருகில் ஒரு புருடன் உட்கார்ந்து சில நேரம் அவள் தூங்குகிறதைப் பார்த்திருந்து மெதுவாக அவள் தேகத்தில் கையைவைத்துத் தடவிக்கொடுத்துக் காளியாயி! இன்னும தூக்கமா? மணி எட்டாகிறதே! எழுந்திருக்கவில்லையா? என்றான். காளியாயி கண்களை விழித்துப் பார்த்து மணி எட்டானால் என்ன! பத்தானால்தா னென்ன? என்று சேலையை இழுத்துப் போர்த்துக் கொண்டாள்.
புருடன்.- காளியாயி! உன்னுடைய தாய்தந்தை இறந்து எல்லாச் சடங்கு களும் முடிந்தும் நீ இவ்விடம் வந்தபின் தூங்கிக்கொண்டு வருவார் போ வாரோடு வார்த்தையாடாமல் இருப்பது அழகல்லவே! யாவரும் இறக்க வேண்டியவர்களே ! நீ அதிக துக்கப்படுவதிற் பலனென்ன? எழுந்து குளித்துத் தாகத்துக்குச் சாப்பிடு.
காளியாயி.-ஐயா! வருக. இத்தனை நாள் இல்லாத சிரத்தை இன்று எங்கிருந்து வந்தது? உங்களுடைய வார்த்தையைக் கேட்டா நான் எழுந் திருக்கவேண்டும்? குளிக்கவேண்டும்? தாகத்துக்குச் சாப்பிடவேண்டும்? ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று அறியீரா? போதும் உமது உபசரணை. நான் அக்காலத்தில் ஆள்மேல் ஆள் அனுப்பி என்னை அழைத்துப்போக வாருங்கள் என்றபொழுது எட்டிப்பார்க்க மனம் வராமல், இப்பொழுது எங்கிருந்து வந்தீர்கள்? என் தாய்தந்தை யைக் குறித்து வியசனப்படுவது கூடாதென்றா புத்தி சொல்லவந்தீர்! ஐயா! போதும் போதும்! உம்முடைய புத்தியைக் கொண்டுபோய் வே ண்டியவர்களுக்குக் கொடுக்கலாம். எனக்கு வேண்டாம். எனக்கிருக் கும் புத்தியை உம்மைப்போல் இருக்கும் ஆயிரம் பேருக்குக் கொடுக்க முடியும். நான் எழுந்து உட்கார்ந்து வருகிறவர்களோடெல்லாம் இழவு கொடுக்கவா இருக்கிறேன்? ஆத்தாள் செத்தாலென்ன அப்பன் செத்தா லென்ன? நான் ஏன் அவர்களுக்காக அழவேண்டும்? அவர்கள் ஆஸ்தி யை எடுத்துக்கொள்ளுகிறவர்கள் அழட்டும். தாங்களெழுந்து போக லாம். இப்பொழுதுதான் கண்கள் சோர்வடைந்து தூங்கத் தொடங்கி னேன். அதைக்கெடுக்க வந்தீர்.
புருடன்.- காளியாயி! இரவெல்லாம் தூங்காமல் இப்பொழுதா தூங்கப்போ கிறாய்? உன்னை அழைத்துப்போகும்படி ஆள் அனுப்பிய காலத்தில் என் வேலை அதிகமாய் இருந்ததாலும், நீயும் உன் தாய் தந்தையும் சேர் ந்து மனோன்மணியைத் துரத்திவிட்டபின் உன் தாய் தந்தை மரிக்க இருக்கும்பொழுது அவர்களுக்கு யாதொரு துணையும் இல்லாமலிருக்க விட்டு உன்னை அழைத்துவந்தால் ஊரார் கேவலமாகப் பேசுவார்க ளென்று நான் நினைத்ததாலும் வரால் இருந்தேன். அது விஷயத்தில் என்மேல் குற்றமிருந்தாலும் மன்னிக்கவேண்டும்.
காளியாயி.- அடா படுபாவி! என்ன சொன்னாய்? மனோன்மணியை வீட் டைவிட்டு நானுமா துரத்தினேன்? கொண்ட பெண்சாதிமேல் குற்றம் சொல்லும் கொடும்பாவி! என்மேல் பழியேற்ற எண்ணங்கொண்டிரு ந்த உன்னை வாரிக்கொண்டு போகார்களா! ஊரில் வருகிற வாந்திபேதி உனக்கு வராதா! நீ நன்றாய் இருப்பாயா! நீயே என் தலைமாட்டுக் கொள்ளியாயிருந்து என்னைத் தூற்றிவைக்க இருக்கிறாயே! சண்டாளா! என்று படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்து தலைமயிரை விரித்துப்போட்டுத் தாய் தந்தையர்மேல் ஒப்பாரி சொல்லி அழுதாள்.
புருடன்,- காளியாயி ! நீ ஏன் அழுகிறாய்! அழவேண்டாம். இவ்வூரில் அனேகர் என்னிடம் வந்து “உன் பெண்சாதி மனோன்மணியைத் துரத்திவிட்டாளென்று சொல்லுகிறார்களே !” அது உண்மையா என்று கேட்டதால், நெருப்பில்லாமற் புகை எழாதென்றெண்ணி உன்னிடம் சொன்னேன். இதற்காக வருத்தப்படவேண்டிய காரணமில்லை!
காளியாயி. – நான் மனோன்மணியைத் துரத்தினேன் என்று எந்தத்தேவடியாள் சொன்னாள்? எந்தக் கொடும்பாவி சொன்னான்? அவர்களை என் முன் கொண்டுவா? அவர்களுக்குப் புத்தி வரும்படி இந்தத்துடைப்பத்தால் அடிக்கிறேன். நீ அவர்களைக் கொண்டு வராமல் என்னெதிரில் நின்றிருப்பாயேயானால் இதனால் உன்னை அடிப்பேன் பார். (என்று அருகிலிருந்த துடைப்பத்தை எடுத்தாள்.)
புருடன்.- காளியாயி ! ஊராரைக் கோபித்துப் பேசுவது அழகல்ல ! அவர் கள் கேள்விப்பட்டது உண்மையாவென்று கேட்டார்கள். அவர்கள் என் னைக் கேட்டதுபோல் உன்னை நான் கேட்டேன். குற்றம் என்மேல் இருப்பதால் என்னை மன்னிக்க வேண்டும்.
காளியாயி.- அடா நாயே! நீயும் மனிதனென்று ஏன் பிறந்தாய்? வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மையை அறியாமல் எவ்விதம் பேசலாம்? இந்தப்புத்தி உனக்குக் கற்றுக்கொடுத்தவர் ஆர்? உன் ஆத்தாளா? உன் அப்பனா? உன்னையும் உனக்குப்புத்தி கற்றுக்கொடுத்தவர் களையும் இந்தத் துடைப்பத்தால் அடிக்காமல் விடேன். (என்று துடைப்பத்தை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.)
சமீபத்திலிருந்தால் அடிவிழும் என்று பயந்து புருடன் தூரமாக நின்று காளியாயி! நான் செய்தது குற்றம், அதைமன்னி, என்று கேட்டபின் கோபங்கொள்வது புத்திசாலிகளுக்கழகல்லவே! நீ கோபத்தைவிட் டுக் கையில் இருப்பதைக் கீழேபோடு. (என்று வேண்டினான்.)
காளியாயி – அடா, சண்டாளா! உன்னை அடிக்காமல் என்கோபம் தீராதடா. (என்று நெருங்கினாள்.)
அவ்விடம் நின்றிருந்தால் அடிபடவேண்டியதாக நேரிடுமென்று புருடன் ஓடினான். காளியாயி அவனைவிடாமல் பின் தொடர்ந்து தெருவாயிற் படிவரையில் சென்று, நல்லது, உன்னைப்பார்த்துக்கொள்ளுகிறேன் என்று வீட்டுக்குள் வந்து சமையலறைக்குள் நுழைந்து, இந்தப் பாழும் வீட்டில் வேலைகளெல்லாம் அப்படியே கிடக்கின்றன ; அப் பாடா என்று சில நாள் அங்கிருந்தவளை இன்னும் சிலநாள் விட்டு வைக்கக் கூடாதென்று இங்கு புழுக்கை வேலைசெய்ய அழைத்துக் கொண்டுவந்து விட்டார்கள். இந்தச்செம்பைத் துலக்கி எத்தனை நாளானதோ! நான் வந்து துலக்குவேன் என்றல்லோ வைத்திருக்கி றார்கள் என்று செம்பைக்கையில் எடுத்தாள். அருகிலிருந்த அவள் மாமியார் அம்மா, காளியாயி! காலையிலெழுந்து தெருவில் சாணம் தெளித்துக் கோலமிட்டுப் பாத்திரங்களையெல்லாம் துலக்கிச் சட்டிப் பானைகளை யெல்லாம் கழுவி அடுப்பங்கரைமெழுகி அடுப்புப் பற்ற விட்டு உலை வார்த்துவைத்து மிளகாய் அரைக்கிறேனே! செம்பு துலக்கலில்லையென்று சொல்லுகிறாயே என்றாள்.
காளியாயி – ஆம்! ஆம்! நீ செய்தவேலைகளெல்லாம் தெரியாமலா இருக்கி ன்றன? தெருவில் தெளித்தசாணம் கட்டியும் முட்டியுமாக இருக்கிறது. போட்டிருக்கும் கோலத்தைப் போவாரும் வருவாரும் பார்த்து ஆச்சிரி யப்படுகிறார்கள். அடுப்பிலுள்ள சாம்பலை அள்ளி எறியாமல் அடுப்பைப் பற்றவைத்துவிட்டாய்! நன்றாய்க்கழுவி உலையூற்றிவைத்திருக்கிறேன் என்ற பானையில் நேற்றுவடித்த கஞ்சிப் பற்று அப்படியே இருக்கிறது. அடுப்பங்கரை மெழுகியபின் அதில் ஒரு கோலம் போட்டால் என்ன குறைந்துப்போகும்? அம்மியில் வைத்தரைக்கும் மிளகாய் பாதி கீழே விழுந்திருக்கிறது. போதும் போதும் நீ செய்த வேலை! எழுந்துபோ, என்னால் முடிந்தால் செய்துகொள்ளுகிறேன். முடியாமற்போனால் அவைகள் அப்படியே கிடக்கட்டும்.
காளியாயின் மாமியார் தன் மருமகள் சொல்லுவதுபோல் மிளகாய் அம்மியின்கீழ் விழுந்திருக்கிறதோ என்று பார்த்து நசுக்குண்ட மிள காயின்தோல் ஒன்றிருப்பதை எடுத்துப்போட்டுக்கொண்டு மிளகாய் அரைத்துக்கொண்டிருந்தாள்.
காளியாயி.- காலையிலெழுந்து முடியாத வேலைகளையெல்லாம் முடித்து வைத்தவள் ஒரு செம்பு தண்ணீர் சுடவைத்துக்கொடுத்துப்பின் உலை வார்த்துவைத்தால் என்னகெட்டுப்போகும்? நான் இங்குவந்தது ஒவ் வொருவருக்கும் துக்கமாககே இருக்கிறது.
மாமியார்.- நீ வந்தநாள் முதல் காலையிலெழுந்து குளிக்காததால் வெந்நீர் வைக்கவில்லை.
காளியாயி.- எழுந்துவராமல் எப்பொழுதும் படுத்துக்கொண்டிருப்பாளென்று பார்த்தாயோ? நான் எத்தனை நாள் படுத்திருந்தாலும் உனக்குச்சம்மதந்தானே! நான் எழுந்திருக்கவேண்டும், குளிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வெந்நீர் வைத்திருக்கமாட்டாயா?
மாமீயார்.- அம்மா காளியாயி !உலைக்கு வார்த்து வைத்திருக்கும் தண்ணீர் கொதிக்கிறதுபோலிருக்கிறது. அதை விளவினால் ஒரு அண்டா வெந் நீராகும். அதை ஊற்றிக் குளித்தபின் வேறு உலை வார்த்து வைக்கிறேன். (என்று எழுந்து விளவிக்கொடுத்தாள்.)
காளியாயி.- கால்கழுவப் போதாத தண்ணீரில் தலைமுழுகச் சொல்லுகிறாய்! நல்லது அம்மா ! நான் ஆதரவற்றவளானேன். ஆளுக்கொருபக்கம் என் னைப்படுத்தவேண்டிய பாடுகளையெல்லாம் படுத்துங்கள்.
என்று மாமியார் தன்னுடைய கைகால்களைப் பிடித்துத் தேய்க்கக் குளித் துக், கட்டிக்கொண்டு குளித்த சேலையை அப்படியே போட்டுவிட் டுப் போய்த் தலைமயிரை உலர்த்திக்கொண்டு தெருவாயிற்படியில் நின்றிருந்தாள். மாமியார் தன் மருமகள் கட்டிக் குளித்த சேலை அப்படியே கிடந்தால் அவளுக்குக் கோபம் வருமென்று பயந்து அதைப்பிழிந்து உலரப்போட்டுச் சாதம் வடித்து மருமகளிடத்தில் சென்று, அம்மா, காளியாயி! என்னகறி செய்கிறதென்று கேட்டாள்.
காளியாயி.- நான் வந்தநாளாய் என்னைக் கேட்டுக்கொண்டா கறி செய் தாய்? போ, போ, உனக்கிஷ்டமான கத்தரிக்காய் புளிக்குழம்பும், உருளைக்கிழங்குபுட்டும், புடலங்காய்ப் பொரியலும், வாழைத்தண்டும் பச்சைப்பருப்பும் கூட்டமுதும் செய்துகொள்.நான் இந்த வீட்டுப் புழுக்கையானதால் என்னை ஏன் கேட்கவேண்டும்!
மாமியார் மருமகள் இஷ்டத்தை யறிந்து அவள் சொல்லிய கறிவகைகளைச் செய்திருந்தாள். காளியாயி தெருவாசலில் நின்றே தன்னை யறிந்த வர்களிடம் வார்த்தையாடிக்கொண்டே பொழுதைப் போக்கினாள்.
காளியாயின் மாமனார் சமையலறைக்குள் சென்று, அன்னபூரணி! நான் காலையிலெழுந்து குளத்தில் நீராடி வந்தபின் நெடுநேரம் வாசித்துக் கொண்டிருந்துவிட்டேன்; எனக்குச்சாப்பாடு போடுகிறாயா? எனக்குப் பசி யதிகமாக இருக்கிறது என்று கேட்டார்.
அன்னபூரணி.- காளியாயிக்குச் சாப்பாடு போட்டபின் உங்களை அழைத்துப் போடுகிறேன். நீங்கள் இன்னும் சற்றுநேரம் இருங்கள்.
அன்னபூரணி புருடன் – காளியாயி சாப்பிட நேரம் செல்லும். எனக்குப் பசி யதிகமாயிருப்பதால் எனக்கு முன் போட்டுவிடு. (என்று உட்கார்ந்தார்.)
அன்னபூரணி தன் புருஷனுக்கு அன்னம் வட்டித்து அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது காளியாயி சமையலறைக்குள் வந்து, பார்த்தீர்களா! எல்லாரும் சாப்பிட்டபின் ஏதாகிலும் மிகுதியிருந்தால் பார்த்துக்கொள், இல்லாமற் போனால் சட்டிப்பானையைக் கழுவிச் சாப்பிடென்று என்னை விட்டுவிட்டார்களே! நானும் ஆதரவற்ற வளானேன்! தெய்வமே! எனக்கிந்த விதியா விதித்தாய்! என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள். அத்தருணத் தில் அவள் புருஷன் சமையலறைக்குள் வந்து தன் தாயாரைப்பார்த்து, காளியாயி ஏனம்மா, அழுகிறாள்? என்றான்.
அன்னபூரணி. – ஒன்றும் விசேடம் நடக்கவில்லை அப்பா பஞ்சநாதம்! உன் தகப்பனாருக்குப் பசி அதிகமென்றதால் அவருக்குச் சாப்பாடு போட் டேன். அதற்கு உன் பெண்சாதி எல்லாரும் சாப்பிட்டபின் பானை யைக் கழுவிய தண்ணீரைச் சாப்பிடத் தன்னை விட்டார்கள் என்று அழுகிறாள்.
பஞ்சநாதம் தகப்பன். -இன்று காளியாயி எழுந்து வெளியில் வந்ததை நான் அறியாமற்போனதால் எனக்குச் சாப்பாடு போடென்றேன்.
பஞ்சநாதம் – காளியாயி! நீ செய்வதை அண்டை அசலில் அறிந்தால் என்ன சொல்லுவார்கள்? அப்பா சாப்பிட்டபின் நீ சாப்பிட்டால் என்ன கெட் டுப்போனது? வீணில் எல்லாருக்கும் தொந்தரவு கொடுப்பது உனக்கு அழகாயிருக்கிறதா?
காளியாயி – அடா படுபாவி ! நீ காலையில் என்னை அடித்தது போதாதென்றா இப்பொழுதும் அடிக்கவந்தாய்!வாடா! அடியடா! நான் பழிபோட்டு டுகிறேன். (என்று அருகிற்கிடந்த கட்டையொன்றை எடுத்து அடித்தாள்.)
அடித்த அடி தன்மேல் விழாமல் பஞ்சநாதம் தட்டிவிட்டுக் காளியாயின் கையிலிருந்த கட்டையைப் பிடுங்கி எறிந்து இது உனக்கு நன்மை யைத் தராதென்றான்.
தன் கையிலிருந்த கட்டைபோனபின் அவள் தன்புருடன் தலை மயிரை எட் டிப்பிடித்துக் கொண்டாள். பஞ்சநாதம் தன் தலைமயிரை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்க, அவன் தாய்- அடி! என்னடி புருடன் தலைமயிரைப் பிடித்துக்கொண்டாய்! தலைமயிரை விட்டுவி ட்டி! என்று காளியாயி கையிலிருந்த தலைமயிரை விடுவிக்கமுயன்றாள். அடி நீயுமா வந்து என்னை அடிக்கவருகிறாய்? என்று மாமியார் தலை மயிரை இழுத்துக் கீழே போட்டு உதைத்தாள். இவைகளைப் பார்த் திருந்த காளியாயின் மாமனார் உன் புருடன் தலைமயிரை விட்டுவிடு என்று காளியாயின் கையைப் பிடித்தார். அடா, கிழவா! நீயுமா வந்தாய்! என்று மாமனார் கன்னத்தில் அறைந்தாள். பஞ்சநாதம் தன் தலைமயிரை விடுவித்துக்கொண்டு காளியாயியைப் பிடித்துத்தள் ளித் தன் தாயைத்தூக்கி உபசரித்தான். மாமனார் மருமகளிடம் பட்ட ஓரறை போதுமானதென்று கைகழுவித் தெருத்திண்ணையில்போ யுட்கார்ந்தார். பஞ்சநாதம் தன் தாயை அழைத்துப்போய் வேறோர் அறையில் விட்டு, அம்மா! இனி ஒரு நிமிஷம் காளியாயியை இந்த வீட்டில் இருக்கவிடேன். அவளை வெளியில் தள்ளிக் கதவைச் சாத்தி வருகிறேனென்று கோபமாகத் திரும்பினான். உடனே அவன் அன்னை தன் மகன் கையைப்பிடித்துக்கொண்டு, அப்பா, பஞ்சநாதம்! அறியாதவள்மேல் கோபங்கொள்ளலாமா? அவள் பெற்றோரைப் பறி கொடுத்துவிட்டதால் அவளுக்கு ஒருவரும் ஆதரவில்லை யென்று அவள் விஷயத்தில் கொடுமைசெய்து துரத்தி விட்டோம் என்பதா கப் பார்க்கிறவர்களெல்லாம் சொல்லுவார்களே! அதை நினைத்துப் பார்க்கவேண்டாமா? அவள் அவ்விதம் செய்தாள், நான் இவ்விதம் செய்தேன் என்று கேவலமாக முடியுமே! இன்று அவளுக்கு அதிக பசியாயிருந்ததால் தனக்குச் சாப்பாடு விரைவில் போடவில்லை என் றழுதாள். சாப்பாடு போடவில்லை யென்று அழுகிறவர்கள் யார்? சிறு குழந்தைகளல்லவா? சிறு குழைந்தையைப்போல் ஒன்றைச் செய்தால் அதைக்குற்றமாகக் கொள்ளலாமா? நானோ பெண்ணுக்கேமாறிய பெரும்பாவி ! என் வயிற்றிற் பிறந்த பெண்ணாக இருந்து இவ்விதம் செய்தால் அவளைத் துரத்திவிட எண்ணங்கொள்ளுவாயா? நான் காளியாயியைப் பெற்ற பெண்ணைப்போல் பார்த்துவருவதால் அவ ளும் என்னைச்சொந்த தாயைப்போல் எண்ணிச்செல்வத்தோடு பேசுகி றாள். அதைக்குற்றமாகக் கொள்ளக்கூடாதென்று தன் மகனுக்குச் சமாதானம் சொல்லிச் சமையலறைக்குள் சென்றாள். பஞ்சநாதத் துக்கு வந்த கோபம் அவன் தாயார் சொல்லியவைகளைக் கேட்டுச் சிறிது அடங்கினாலும், தன் தகப்பனை அடித்தாளே! அவளை வீட் டில் வைத்திருப்பது அடாதென்று வெளியிற் போனவன் தன் தந்தை திண்ணையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, அப்பா! இது என்ன அநியாயம்! இப்படிப்பட்டவளை வீட்டில் வைத்துக்கொண்டிருப்பது தகுமா? என்றான்.
பஞ்சநாதம் தந்தை – என்னடா! அறியாதவள் என்னவோ செய்துவிட்டா ளென்று கோபத்தோடு பேசுகிறாய்? நீ சாப்பிட்டாயா? காளியாயி சாப் பிட்டாளா? கோபமாக இன்னும் சாப்பிடாமல் இருக்கிறாளோ என் னவோ தெரியவில்லையே! நான் சற்றுநேரம் பொறுத்துச்சாப்பிட்டிருந் தால் அவளுக்குக் கோபம் வந்திராதே ! என்னால் அவளுக்குக் கோபம் வரும்படி நேரிட்டது. (என்று துக்கப்பட்டார்.)
பஞ்சநாதம்.- அப்பா! வீட்டுக் குடித்தனத்தைப் பார்க்க வந்த மருமகள் மாமனாரைக் கிழவா என்று அழைப்பது அழகா? இவளைத் துரத்திவிட வேண்டுமென்று என் தாயாரிடம் சொன்னபோது அவர்கள் என் இஷ் டத்திற்கு உடன்படா திருக்கிறார்கள். இந்தக்கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லை.
பஞ்சநாதம் தந்தை – அப்பா,பஞ்சநாதம்!காளியாயி எனக்குப் பௌத்திரி முறையாக வேண்டியதால் அவள் சிறுகுழந்தையா யிருக்கும்பொழுது சிலவேளை என் பெயர் சொல்லி, சதானந்தமுதலியா ரென்றும் கிழவா என்றும் அழைப்பதுபோல் இப்பொழுதும் கிழவா என்றாள். அதற்காக நான் கோபங்கொள்ள வில்லையே!
பஞ்சநாதம்.- தங்களை அவமரியாதையாகக் கூப்பிட்டது தோஷமில்லை என் றாலும் கன்னத்தில் அறைந்ததைக் கவனிக்க வேண்டியதில்லையா!
சதானந்த முதலியார்.-விளையாட்டுக்கு என்னைக் கன்னத்தில் தட்டியதா தப்பிதம் ? நீ பெரும் பைத்தியக்காரன். காளியாயி அறியாத குழந்தை, அவளுக்கு என்னதெரியும்? ஒரு பிள்ளை இரண்டு பிள்ளை பெற்றபின் யாவும் தானே அறிந்து கொள்ளுவாள். பொம்மையை வைத்து விளை யாடும் பெண்ணை நாம் கொண்டுவந்து உலக வழக்கமெல்லாம் அவளுக் குத் தெரிந்திருக்க வேண்டுமென்று எண்ணுவது கூடாது. அவள் இன் னும் சாப்பிட்டாளோ இல்லையோ? (என்று வீட்டுக்குள் சென்றார்.)
தன் தாய்தந்தையர் காளியாயியின் துர்க்குணத்தை நீக்க இடம்கொடாம லிருகிறார்களே யென்று துக்கப்பட்டுப் பஞ்சநாதமும் வீட்டுக்குள் போனபொழுது, தன் தாயாரும் தந்தையும் காளியாயியைச் சாப்பிட வேண்டிக்கொண்டிருப்பதைக் கண்டு, காளியாயி! உன் இஷ்டம் போல் நடக்கவிட்டு உன்னைச் சாப்பிட வேண்டுவோர் கருத்துக்கு உடன்படாமல் இருப்பது நன்றல்ல ; சாப்பிட்டு அவர்களைச் சந்தோ ஷப்படுத்து என்றான்.
காளியாயி.- நீங்கள் மூவரும் சேர்ந்து முன் அடித்தது போதாதென்று இப் பொழுதும் அடிக்கவா வந்தீர்கள்? அடித்துக் கொல்லுங்கள், நான் திக் கற்றவளானேன் தெய்வமே! (என்று அழுதாள்.)
அன்னபூரணி. – அப்பா பஞ்சநாதம்! நீ கூடத்தில் போய் இரு. அங்கு உனக்குச் சாப்பாடு கொண்டுவருகிறேன். இங்கு ஒருவரும் கூப்பிட வில்லை,போ (என்று, மகனை அனுப்பி, மருமகளைப்பார்த்து) அம்மா, காளியாயி! நீ சாப்பிடாமல் இருந்தால் உன் தேகத்துக்கு உஷ்ணமுண் டாகி அஜீரணம் நேரிடக்கூடும். (என்று புருடனும் பெண்சாதியும் மரு மகளை வேண்டி அன்னம் வட்டித்துச் சாப்பிட உபசரித்தார்.)
ஒரு சுந்தரபுருடன் இரவு பத்து மணிக்கு ஒரு கிராமத்தை யடைந்து கடைத்தெருவாக வரும்பொழுது, அனேக கடைகள் மூடப்பட்டும் சில கடைகள் மூடப்போகிறதையும் கண்டு, நாம் இன்னும் சில நிமி ஷங்கள் தாமதமாய் வந்திருப்போமானால் நமக்கு ஒன்றுங் கிடைக்கா மற் போய்விடும்; நாம் வெறுங்கையோடு போவது அழகல்லவென்று, மூடப்படாத கடைகளில் பழவர்க்கங்கள் சிலவற்றையும் மிட்டாயும் வாங்கிச் சந்தோஷத்தோடு கடைத்தெருவைவிட்டு வேறொரு தெரு வழியாகச்சென்று எங்கும் அரவம் அடங்கிவிட்டதென்று கண்டு, இருட்டால் வீடு அடையாளம் தெரியாமல் நிதானித்து நின்று நின்று பார்த்துப்போகும்பொழுது, காலில் ஏதோ தட்டுப்பட்டதால் தடு மாறி விழப்போனவன் ஒருவாரு தப்பித்துக்கொண்டு காலில் தட்டுப் பட்டது என்னவென்று பார்த்து, ஐயோ ! இது என்ன ! நடக்கிற வழியில் ஒரு பெண்பிள்ளை விழுந்து கிடைக்கிறாளே! என்றான். அம்மார்க்கத்தில் எதிராக வந்த ஒருவன் இவன் சொல்லியதைக் கேட்டு ஒடிவந்து பார்த்து, ஒரு பெண்பிள்ளை அலங்கோலமாகக் கிடைப்பதைக்கண்டு நாசியில் கைவைத்துப்பார்த்து உயிரிருக்கிறது; என் கையில் தட்டுகிறது என்னவென்று தெரியவில்லையே என்ப தாக, அருகிலிருந்த வீட்டின் கதவு திரக்கப்பட்டிருப்பதைக் கண்டு, வீட்டுக்குள் ஓடி சில நிமிஷத்தில் வெளிச்சத்தோடு ஒரு வாலிபனை அழைத்து வந்தான். விளக்கோடு வந்தவன் தெருவில் விழுந்திருக் கும் பெண்ணைப்பார்த்துப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, நின்றிருந்த வனைப்பார்த்து, நீர் எப்பொழுது வந்தீர்? இது என்ன அநியாயம்! என்றான். நான் இப்பொழுது தான் வருகிறேன். என் காலில் தட் டுப்பட்டதால் என்னவென்று பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது இந்த அண்ணன் உம்மை அழைத்துவந்தார். நாம் தெருவில் வைத் துக்கொண்டு வார்த்தையாடுவது நன்றல்லவென்று பாதையில் விழுந் திருந்த பெண்பிள்ளையை வீட்டுக்குள் கொண்டுபோய் படுக்கவைத்து வீட்டிலுள்ளவர்களை அழைத்து வந்தபோது, ஒரு பெண்பிள்ளை படுத் திருக்கும் பெண்ணைப்பார்த்து, ஐயோ அம்மா! நான் என்ன சொல் வேன் மகளே! இது என்ன அநியாயம்! என்று நிலத்தில் விழுந்து மூர்ச்சையாயினாள். பெரியவர் ஒருவர் வந்துபார்த்து மலைத்து நின்று இது என்ன அநியாயம். அப்பா! நீ விறைவிற்சென்று வைத்தியரை அழைத்துவாவென்று விளக்கோடு வந்த வாலிபனை அனுப்பினார். நானும் அவரோடு செல்கிறேன் என்று அன்னியனும் நீங்கினான். மிட்டாயும் பழங்களும் கொண்டுவந்தவன் பெரியவரைப்பார்த்து, மாமா! இதென்ன அநியாயம்! இவ்விதம் முடிந்ததற்குக் காரணம் தெரியவில்லையே ! நான் இந்நேரத்தில் வந்தது இந்தக் கொடுமையை ப்பார்க்கவா? என்றான்.
பெரியவர்.- அப்பா சோமசுந்தரம்! காளியாயி சாப்பிட்டுத் தெருத்திண்ணை யில் உட்கார்ந்து ஓர்கிழவியோடு பேசிக்கொண்டிருந்தாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள், சற்றுநேரத்தில் புருடனோடுபோய்ப்படுத்துக்கொள் ளுவாளென்று எண்ணி நான் என்னுடைய படுக்கை அறைக்குள் சென் றேன். காளியாயிக்குப்பின் நடந்தது ஒன்றும் தெரியாது.
என்று, காளியாயியின் முகம் தலை தேகமெல்லாம் இரத்தம் நிறைந்திருப் தைக் கண்டு சோமசுந்தரத்தோடு உதவியாகத் துடைத்துப் பரிதபித்துக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் காளியின் புருடன் பஞ்சநாதம் அன்னியனை அனுப்பிவிட்டு வைத்தியரோடு வீட்டுக்குள் வந்தான். வைத்தியர் காளியாயியின் தலையில் பட்டிருக்குங் காயங்களைப் பார்த்து மருந்துபோட முடியாதென்று தலைமயிரையெல்லாம் கத்தரித்து மொட் டையாக்கி ப்ளாஸ்திரி போட்டும், முகத்திலும் மார்பிலும் இருக்கும் பெருங்காயங்களைத் தைத்தும் வேண்டியதைச் செய்துகொண்டிருந்தார். மருமகள் இரத்தத்தில் மூடப்பட்டிருப்பதைக் கண்ட அன்னபூரணியம் மாள் மூர்ச்சை தெளிந் தெழுந்து, அப்பா சோமசுந்தரம்! உன் தங்கை இந்த ஸ்திதியி லிருப்பதைப் பார்க்கவா வந்தாய்? ஐயோ! என் அருமை மகளை இவ்விதம் செய்தவர்கள் யாரென்று தெரியவில்லையே! அவ ளோடு முன்னேரத்தில் பேசியிருந்த கிழவியைக் கூப்பிடுங்கள். அவ ளைக் கேட்டால் யாவும் தெரிந்துகொள்ளலாம் என்றாள். பஞ்சநாதமும் தன் தாயார் சொல்வதைக்கேட்டு,ஆம்! ஆம்! கிழவியின் ஞாபகம் எனக்கு வராமற்போய்விட்டது. நான் படுக்கைக்குப் போகும்பொழுது காளியாயியும் கிழவியும் உட்கார்ந்து இரகசியமாகப்பேசிக்கொண்டிருந் தார்கள். அவர்கள் இரகசியப்பேச்சு முடிவான பின் காளியாயி படுத் துக்கொள்ளும் அறைக்குள் போய்விடுவாளென்று நான் கதவை மூடிப் படுத்துக்கெண்டேன். நான் இக்கிழவியைப்பார்த்து வருகிறேனென்று வெளியில் வந்தவன் வீட்டுக்கருகில் வரும் சில சேவகரைக்கண்டு தனக்குச் சினேகமான சேவகனொருவனையழைத்து, இந்நேரத்தில் எங்கு கும்பலாகப்போகிறீர்கள்? என்று கேட்டான்.
சேவகன்.- இன்று அநியாயமான கொலையொன்று நடந்துவிட்டது. ஒரு கிழவியையும் ஒரு வாலிபனையும் கொலைசெய்து ஒரு பெண்பிள்ளையை அநேக இடங்களில் வெட்டி ஓடிய இருவர் அகப்பட்டார்கள். விசாரித் ததில், ஒரு பெண்பிள்ளைக்கு இரண்டு சோரநாயகர்க ளிருந்தார்களென் றும், அவர்களில் ஒருவனோடு அந்தப் பெண்பிள்ளை கிழவியின் துணையி னால் சென்று சந்தோஷமாக இருக்கும்பொழுது மற்றவன் பார்க்க மனந்தாளாமல் மூவரையுங் கொன்றுவிட ஆள்களை அனுப்பியபோது அவர்கள் கிழவியையும் புருடனையுங் கொன்று பெண்பிள்ளையையும் வெட்டினார்களாம். வெட்டுப்பட்ட பெண்பிள்ளை ஒருவர் கண்ணுக் கும் அகப்படாமல் ஓடிவிட்டாளென்று அவளைத் தேடித்திரிகிறோம். பிரேதங்கள் இரண்டையும் வைத்திய சாலைக்கும் குற்றவாளிகள் இரு வரைச் சிறைச்சாலைக்கும் அனுப்பிவிட்டோம். நான் நின்று பேசிக் கொண்டிருக்கச் சாவகாசமில்லை. என்னோடு வந்தவர்கள் நெடுந்தூரம் போய்விட்டார்கள். (என்று ஓடினான்.)
சேவகன் சொல்லிப்போனதைக் கேட்ட பஞ்சநாதம் திகைத்துநின்று பின் வீட்டுக்குள் சென்று சோமசுந்தரத்தைத் தனித் தழைத்துப்போய்த் தான் சேவகனால் கேள்வியுற்றதைச் சொல்லித் துக்கப்பட்டான்.
சோமசுந்தரம்.- அத்தான் ! நீர் ஏன் துக்கப்படுகிறீர்? நமக்கிருவருக்கும் ஒரேவிதமான விதி விதித்திருக்கிறது. உம்முடைய நாயகி சோரநாய கனோடு சுகத்தை அனுபவித்து வெட்டுப்பட்டாள். என் பெண்சாதி சோரநாயகனோடு சுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறாள். ஆன தால் உம்மைவிட நான் நிர்ப்பாக்கியன் அல்லவா?
பஞ்சநாதம்.- அத்தான் ! மனோன்மணிமேல் குற்றஞ் சொல்வது அடாது. அவள் பதிவிரதைகளிற் சிறந்தவளென்று நான் எண்ணியிருக்கிறேன்.
சோமசுந்தரம்.-நீர் சொல்வதுபோல் இருந்திருப்பாளேயாகில் அவளை இக் காலத்தில் எவ்வளவு மேன்மையாக வைத்திருப்பேன்! அப்பாவி என் கண்முன் ஒரு அன்னியனைக் கட்டியணைத்து முத்தங்கொடுத்தபின் அவ ளைக் குறித்து நாம் பேசவேண்டியதென்ன இருக்கிறது? (என்று நடந்த வரலாற்றை ஆதியோடந்தமாகச் சொல்லிமுடித்து) நான் இது பரியந் தம் ஒருவரிடமும் அவள் துர்நடத்தையைக்குறித்துச் சொல்லாதிருந் தும் இன்று உம்மிடத்தில் சொன்னேன்.
பஞ்சநாதம்.– நீர் நேரில் பார்க்காமல் ஒருவரால் கேள்விப்பட்டீர் என்று சொல்லுவீரானால் நான் நம்பமாட்டேன். மனோன்மணியின் நடத்தை அவ்விதமானால் வேறு யாரை நம்பலாம்! ஆனால், இவ்வளவுக்கும் கார ணமாக நின்றவள் காளியாயி. இவ்விஷயத்தைப் பலரால் கேள்விப் பட்டு அவளைக்கேட்டதால் என்னை அடித்துத் துரத்தினாள். பெண் சாதிகளை அடிப்பவர்களை உலகம் கேவலமாக நினைப்பதால் அவளைவிட் டுச் சென்றேன்.என் தந்தை அவளுக்குமுன் சாப்பிட்டுவிட்டாரென்று யாவருடைய மனதையும் புண்ணாக்கிவிட்டாள். நான் உலகோருடைய பார்வைக்குப் பெண்சாதியைக் கொண்டிருக்கிறேனேயன்றி உண்மை யில் நாங்கள் புருடனும் பெண்சாதியுமாக இருந்ததில்லை யென்றால் வே றென்ன சொல்ல இருக்கிறது!
சோமசுந்தரம்.- என் தங்கை விஷயமாக நான் கேட்பதெல்லாம் எனக்குப் பெருந் – துக்கத்தைக் கொடுக்கிறதாக இருக்கிறது. அவள் அடிக்கடி புருடன் வீட்டுக்குப் போகவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருப்ப தைக் கேட்டுத் தன்னுடைய புருடன் மேலிருக்கும் அன்பால் அவ்வித எண்ணங்கொண்டாளென்றே நினைத்திருந்தேன்.
பஞ்சநாதம். – என்மேலுள்ள அன்பால் இவ்விடம் வரப் பிரியம் கொண்டா ளென்றும் அல்லது வேறு எண்ணத்தால் இவ்விடம்வரத் துரிதப்பட்டா ளென்றும் இப்பொழுது நன்றாய் விளங்கவில்லையா?
சோமசுந்தரம்.- அவர்கள் விஷயமாகப் பேசுவதை நிறுத்திவிடலாம். கிழவியோடு வெட்டுண்டவன் இன்னானென்று அறிந்துகொண்டீரா?
பஞ்சநாதம்.- அவன் விஷயத்தைக்குறித்து ஒன்றுங்கேட்கவில்லை. பொழுது விடிந்தால் யாவும் அறியலாம். நம்முடைய பெண்சாதிகளால் வந்த அவமானம் நமக்குத்தெரிந்திருந்தாலும் பலர் அதையறிந்து நம்மைத் தலை இறங்கச் செய்யுமுன்னம் அதைத் தடுத்துவிடவேண்டும். ஆத லால் நான் இப்பொழுதே சென்று அதற்கு வேண்டியதைச் செய்து வருகிறேன்.நீர் வீட்டிலிருந்து காளியாயிக்கு வேண்டியதைச் செய்து கொண்டிரும்.
சோமசுந்தரம்.- நானும் உம்மோடு வரக்கூடாதா?
பஞ்சநாதம்.-நீர் என்னோடு வந்தால் வீட்டில் உள்ளவர்களும் மற்றவர்க ளும் சந்தேகங்கொள்ளுவார்கள். நான் தனித்துச்சென்று எல்லா வேலை யையும் முடித்து வருகிறேன்.
என்று சோமசுந்தரத்தை அழைத்துப்போய்க் காளியாயி இருக்கும் அறை யில் விட்டுப் பஞ்சநாதம் தன்னறைக்குள் சென்று பெட்டியைத்திறந் து ஒரு பையை எடுத்துக்கொண்டு வெளியிற் சென்றான். சோமசுந்தரம்.- (வைத்தியரைப் பார்த்து) ஐயா ! காளியாயி அம்மாளுக்கு எப்படியிருக்கிறது?
வைத்தியர் – வெட்டுக்காயம்பட்டால் இருபத்தொருநாள் சுரம்வராமலிருக்கப் பார்த்துக்கொள்ளவேண்டும். காயங்கள் அதிகமாயிருக்கின்றன. உதடும் காதும் அறுப்புண்டதைத் தைத்துவிட்டேன். மார்பில் உள்ள வெட்டை யோசித்தால் பயமாயிருக்கிறது. எல்லாம் ஆயுள் பலமே யன்றி நாம் என்ன செய்ய இருக்கிறது?
நெடுநேரம் பொறுத்துப் பஞ்சநாதம் வீட்டுக்குவந்து வைத்தியருக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு அன்றிரவைத் துக்கத்தோடு கழித்தான். பொழுது விடிந்தவுடன் சோமசுந்தரம் காலைக்கடனை முடிக்கச்சென் று அனேக இடங்களில் ஜனங்கள் கும்பல் கும்பலாய் நின்று பேசிக் கொண்டிருப்பதைக்கண்டு துக்கத்தோடு செல்வதைப்பார்த்த சிலர் வந்து, அண்ணா! எப்பொழுது வந்தீர்கள்? என்று கேட்டு, அவன் தாய் தந்தை காலஞ் சென்றதைப்பற்றித் துக்கங் கொண்டாடினார்கள். சோமசுந்தரம் அவர்களிடம் வார்த்தையாடியபின், ஒருவன் அண்ணா! இராத்திரி கொலை நடந்ததைக் கேள்விப்பட்டீர்களா? இது என்ன அநியாயம்! பத்து பதினோரு மணி நேரத்தில் இந்த ஊருக்கு வந்த மூவரில் இருவரை இரண்டு திருடர்கள் வெட்டிக் கொலைசெய்து அவர்களிடத்தி லிருந்தவைகளை யெல்லாம் கொள்ளை கொண்டு ஓடும் பொழுது சேவகர் அவர்களைப் பிடித்துவந்து சிறைச்சாலையில் வைத்திருக்கிறார்கள்.
சோமசுந்தரம்.-கொலையுண்டவர்கள் இவ்வூராரா? வெளியூராரா?
முதல் மனிதன்.- அவர்களைக் கண்டுகொள்வது முடியாததாக இருக்கிறது. வெட்டுகள் அதிகம் முகத்தில் விழுந்திருப்பதால் ரூபம் தெரியாமற் போய்விட்டது.
இரண்டாவது மனிதன்.- இறந்தவர்களோடு வந்த பெண்பிள்ளை வெட்டுக் குப் பயந்து தான் போட்டிருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்து ஓடி விட்டாளென்கிறார்களே ! அது உண்மைதானா?
முதல் மனிதன்.- அவள் ஓடிப்போனது உண்மையல்லாமற் போனால் திரு டர் கையில் நகைகள் எப்படி இருக்கக் கூடும்? இறந்தவள் வயது சென் றவள். அகப்பட்ட நகைகள் இளம்பிராயமுள்ள பெண்கள் போடத் தகுந்தவைகள்.
இரண்டாவது மனிதன்.- என்னென்ன நகைகள் அகப்பட்டன? முதல் மனிதன் – கெம்பு பதித்த கம்மல், தங்கக்காப்பு, சரட்டட்டிகை, கொப்பு, வைர மூக்குத்தி, பொன் மணிகள், கால்காப்பு, இன்னும் சில சில்லரை நகைகளே.
மூன்றவது மனிதன். – ஓடிப்போனவள் நல்ல உபாயம் செய்தாள்.தன்னுடைய நகைகள் மேல் ஆசை வைத்துக் கொடுக்காமலிருந்தால் அவளும் இருவரோடு இறக்கவேண்டிவரும்.
தன்னோடு பேசிக்கொண்டிருந்தவர்களிடம் விடை பெற்றுச் சோமசுந்தரம் நீங்கித் தனக்குள் சந்தோஷப்பட்டு நாம் இப்பொழுது கேட்டதெல்லாம் புதிதாகவே இருக்கிறது. நம்முடைய மைத்துனன் தன்னைக் காப்பாற் றிக் கொண்டதோடு நம்மையும் காப்பாற்றினானென்று காலைக்கடனை முடித்து வீடு சேர்ந்து தான் கேள்விப்பட்டதை யெல்லாம் தன் மைத் துனனிடம் சொல்லி இனி காளியாயியால் நேரிட்ட அவமானம் நம்மை ஒன்றும் செய்யாதென்றான்.
பஞ்சநாதம்.- அத்தான்! நம்முடைய நற்காலத்தால் அப்பாதகர் கையிருப் பில் நகைகளும் பணமும் இருந்தன. அதனால் நமக்கெல்லாம் அனுகூலமாய் முடிந்தது. இனி காளியாயியை ஒருவரும் தேடவேண்டிய காரணமும் இல்லை.
சோமசுந்தரம்.– குற்றவாளிகளை எப்பொழுது விசாரிப்பார்கள்?
பஞ்சநாதம்.- கொலைக்கேஸ கள் எல்லாம் இவ்விடத்தில் முடிவு பெறா; எல்லாம் உங்களூருக்கே போகவேண்டும். இவ்விடத்து நியாயாதிபதி விசாரித்து அங்கு அனுப்பிவிடுவார்.
சோமசுந்தரம் – காளியாயி எப்படியிருக்கிறாள் பார்த்தீரா?
பஞ்சநாதம். – ஐயோ அவளைப் பார்க்க மனம் சகிக்கவில்லை. அவள் தலை மொட்டையாகி உதடு கிழிந்து காது மூளியாய்த் தன்னுடைய இலக்ஷ ணத்தைப் பறிகொடுத்து அவலக்ஷணத்தைக் கைக்கொண்டிருக்கிறாள்.
சோமசுந்தரம்.- வைத்தியர் காலையில் வந்தவர் என்ன சொன்னார்?
பஞ்சநாதம்.- காளியாயி பிழைத்துக் கொள்ளுவாளென்று நம்பிக்கையாய்ச் சொல்லமுடியாதென்றாலும், உடனே இறக்கமாட்டா ளென்பதை மட் டும் தைரியமாகச் சொல்லுகிறார்.
சோமசுந்தரம்.- அவள் செய்த கொடுமையின் பலனை அனுபவிக்கவா இன் னும் உயிரோடிருக்கவேண்டும்? இப்பொழுது இறந்தால் அவள் அதிக துன்பப்பட வேண்டியதில்லையே !
பஞ்சநாதம்.– என்தாயும் தந்தையும் மருமகளுக்காக அதிக துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சோமசுந்தரம்.-உம்முடைய தாய் தந்தைக்குக் காளியாயியின் நடத்தையைச் சொன்னீரா?
பஞ்சநாதம்.- அதை அவர்களுக்குச் சொல்லலாமா? நாம் இருவரும் அவமா னத்தால் துக்கமடைந்திருப்பது போதாதென்று அவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமோ? நான் இரகசியத்தை வெளிவிடாமல், காளி யாயி வெளியில் வெட்டுப்பட்டதை வெளியார் அறிந்தால் வீட்டில் வைக்க விடார்களே! வைத்தியசாலைக்கு அனுப்பிவிட நேரிடுமே! ஆனதால் காளியாயி வியாதியா யிருக்கிறாளென்று கேட்பவருக்குச் சொல்லி விடுதல் நலம் என்றதால், அவர்களும் ஒப்புக்கொண்டு ஒரு வருக்கும் சொல்லக்கூடா தென்றிருக்கிறார்கள்.
சோமசுந்தரம். – நல்ல யோசனை செய்தீர்.
பஞ்சநாதம்.- அத்தான்! நீர் இராத்திரியும் சாப்பிடாமல் படுத்துக்கொண் டீர். வாரும் தாகத்துக்குச் சாப்பிடலாம். (என்று சோமசுந்தரத்தைச் சமையலறைக்குள் அழைத்துச்சென்றான்.)
– தொடரும்…
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதற் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.
– கமலாக்ஷி சரித்திரம் (நாவல்), இரண்டாம் பதிப்பு: 1910, தாம்ஸன் அண்ட் கம்பெனி, மினர்வா அச்சுக்கூடத்தில் பதிப்பித்தது, சென்னை.