கமலாக்ஷி சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2024
பார்வையிட்டோர்: 1,114 
 
 

(1910ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

க.நா.சு. அவர்கள் எழுதிய முதற் ஐந்து தமிழ் நாவல்கள் (செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

10-ம் அத்தியாயம்

நடராஜ முதலியாரும் செழுங்கமலமும் கமலாக்ஷியும் உட்கார்ந்து வார்த்தையாடிக் கொண்டிருக்கும்பொழுது நடராஜ முதலியார் செழுங்கமலத்தைப்பார்த்து, அம்மா செழுங்கமலம் ! நீ அருணாசல முதலியார் சகோதரி என்று வனசாக்ஷியால் சேள்விப்பட்டபின், உன்னுடைய தாய் தந்தைகளால் நூறு வேலி நிலம் உனக்குச் சீதனமாய்க் கொடுக்கப்பெற்றாய் என்று வெளியாரால் கேள்வியுற்றேன். அது உண்மையா?

கமலா – தாதா! எங்களுக்கு நூறுவேலி நிலம் சொந்தமாக இருந்தால் நாங்கள் பெருந்தனவந்தராய் இருப்போமே! என் மாமாவும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாரே! எங்களிடத்தில் பணமில்லாத குறை வாலல்லவா எங்கள் வீட்டை எட்டிப்பார்க்காமல் இருக்கிறார்.

செழுங்கமலம் – அண்ணா! என் விவாகத்துக்குமுன் என் தாய்தந்தையர் தங்களுக்குப்பின் என்ன நடக்குமோ வென்று அவர்கள் இருக்கும் பொழுதே நூறுவேலி நிலத்தை என்பெயருக்குப் பட்டா முதலானதும் செய்திருந்தார்கள். எனக்கு விவாகம் முடியுமுன் என்னைப்பெற்றோர்கள் இறந்ததால் அவர்களுடைய கருத்துக்கு விரோதம் வராமல் என் விவாகத்தை என் தமையனார் அருணாசல முதலியார் முடித்துவைத்து நிலத்தைச் சீதனமாகக் கொடுத்துக் காலம்சென்றார். நூறு வேலி நிலத்தின் வரும் படியை நானும் என் புருடனும் செலவழிக்க வழியில்லாமல் ரூபாய் பதினையாயிரம் செட்டியிடம் சேர்த்து வைத்திருந்தோம். கமலாக்ஷி பிறந்தவுடன் இரண்டு வேலி நிலம் விலைக்குவந்தது. அதைக் கமலாக்ஷி பெயருக்கு வாங்கினேன். நிலம் வாங்கிய சிலநாள் பொறுத்து என் தமையன் ஜெகநாத முதலியார் என்னிடம் வந்து, அம்மா! நம்முடைய அண்ணன் இறந்துபோனபின் அவருடைய ஆஸ்தி எல்லாம் என்னைச் சேர வேண்டியதால் அது விஷயத்தைக் குறித்து நியாயஸ்தலத்துக்குப் போக வேண்டியதாயிருக்கிறது; அதை முடிவு படுத்திக்கொள்ளப் பணம் வேண்டியது; செட்டிகளைக் கேட்டால் முன்பின் பார்க்கிறார்களாகையால் உன்னிடம் வந்தேன் என்றார்.நான் என்ன செய்யவேண்டு மென்று கேட்டதற்கு, ஒன்றும் வேண்டியதில்லை; கடனாக இருபதினாயிரம் ரூபாய் கொடுத்தால் மூன்று மாதத்தில் கொடுத்து விடுகிறதாகப் பத்திரம் எழுதித்தருகிறேன் என்றார். என்னிடத்தில் இருபதினாயிரம் இல்லையே. இருந்தது பதினையாயிரம், அதில் நாலாயிரத்துக்குக் குழந்தை பெயரில் நிலம் வாங்கிவிட்டேன்; ஆயிரத்துக்கு நகைகள் செய்து விட்டேன். மிகுந்திருக்கும் பதினாயிரத்தை வாங்கிக்கொள்ளுங்கள். எனக்குப் பத்திரம் வேண்டுவதில்லை; தங்களிடத்திலா பத்திரம் எழுதி வாங்கிக்கொள்ளவேண்டும்? என்றதற்கு அவர் பதினாயிரம் போதாது; எந்த செட்டியிடம் பணம் இருக்கிறதென்று பெயரைக் கேட்டுக்கொண்டு போய், மறுநாள் நான் சொன்ன செட்டியையும் ஓர் பிராமணனையும் அழைத்து வந்தார். எனக்குச் செட்டியார் எழுதிக்கொடுத்திருந்த பத்திரத்தைச் செட்டியாரிடம் கொடுத்துப் பணத்தை என் தமையனிடம் தந்து விடும்படி சொல்லிச் செட்டியாரை அனுப்பியபின், என் தமையன் தன்னோடு வந்த பிராமணனிடம் இருந்த ஒரு பத்திரத்தை வாங்கி இதிலும் ஒரு கையெழுத்து போடு என்றார். அது எதற்காக என்று கேட்க, அவர் உன்னுடைய நிலத்தை இந்த ஐயரிடத்தில் பதினாயிரத்துக்கு ஒற்றியாக வைத்திருக்கிறதென்று எழுதிய பத்திரம் – இவரிடத்தில் நான் வாங்கிக் கொள்ளப்போகும் பதினாயிரத்துக்கு வட்டியில்லாமல் நிலத்தின் வரும்படியை நான் பணம் கொடுக்கும் வரையிலும் அனுபவித்துக் கொள்ளுகிறதென்றும், மூன்று மாதத்துக்குள் பணத்தைக் கொடுத்துவிட்டால் ரூபாய் நூற்றைம்பதைப் பதினாயிரத்தோடு கொடுக்கிறதென்றும் இந்த வருடத்துப் பலனை நீயே அனுபவித்துக்கொள்ளுகிறதென்றும் எழுதியிருக்கிறது; நான் இரண்டொரு மாதத்தில் உன் நிலத்தைத் திருப்பிக்கொடுத்து விடுகிறேன்; ஒன்றும் யோசியாமல் கையொப்பம் இடு” என்றார். நான் முன்பின் யோசியாமல் கையொப்பம் வைத்தேன். என் தமையன் வாக்களித்த வண்ணம் நான் கையொப்பம் இட்டப்பத்திரம் இன்னும் வரவில்லை. வருடக்கணக்கைப் பார்த்தால் பதினாறு பதினேழாகின்றன. 

கமலாக்ஷி – அம்மா! ஈதெல்லாம் என்னிடத்தில் ஏன் சொல்லவில்லை?.

செழுங்கமலம்.- வீணில் உனக்கேன் துக்கத்தை உண்டாக்க வேண்டு மென்று சொல்லாதிருந்தேன். 

நடராஜ முதலியார் – அம்மா செழுங்கமலம்! நீ சொல்லியது ஆச்சரியமாக இருக்கிறது. உன் புருடனுக்குத் தெரியாமலா இவ்வளவையும் நடத்தினாய்? 

செழங்கமலம்.- அண்ணா! என் பொல்லாத காலத்தால் என் நாயகன் அப்பொழுது மதுரைக்குப் போயிருந்தார். அவரை யோசித்து எந்தக் காரியத்தையுஞ் செய்ய முடியாமற் போயிற்று. என் நாயகன் வந்தபின் யாவும் என்னால் அறிந்து என்னைக் கோபித்துக் குழந்தையையும் கவனிக்காமல் போய்விட்டார். 

நடராஜ முதலியார் – உன் நாயகனுக்குப் பொருள் பூமி இல்லையா?

செழுங்கமலம்.- என் நாயகனுக்குப் பொருள் பூமியனேகம் உண்டு. என் நாயகனுடைய சகோதரன் தன் மைத்துனியைத் தன் சகோதரனுக்கு விவாகஞ் செய்விக்க எண்ணங்கொண்டிருந்ததால் என்னைத் தன் சகோதரன் மணமுடிக்கும் விஷயத்தில் சம்மதப்படாமலும், தன் எண்ணத்துக்கு விரோதமாக நடப்பதால் விவாகத்துக்கு வருகிறதில்லையென்றும் பூஸ்திதியில் ஒன்றும் கொடுக்கப்போகிறதில்லை யென்றும் சொல்வதை அறிந்து என் நாயகன், தனக்குப் பூஸ்திதி வேண்டியதில்லை யென்று எழுதிக்கொடுத்துவிட்டு அவரை விவாகத்துக்கு வரும்படி செய்தார். ஆனதால் என் நாயகன் பாசமெல்லாம் அவர் தமையனைச் சேர்ந்தது.

நடராஜ முதலியார்.- உனக்குச் சொந்தமாகிய நிலத்தை ஒற்றிவைத்துப் பணம் வாங்கிய உன் தமையனுக்குப் பொருள் பூமி இல்லையா? 

செழுங்கமலம்.- என் தந்தை எனக்கு நூறுவேலியை ஒதுக்கி மற்ற நிலத்தையும் மற்றத்தனத்தையும் இருபங்காக்கி என் சகோதரர் இருவருக்குங் கொடுத்துக் காலஞ் சென்றபின், என் சகோதரரில் இளையவர் தம்முடைய பூஸ்திதியை விற்றும் பொருளைவிற்றும் வீண்செலவு செய்வ தையறிந்து என் மூத்தசகோதரன், விற்கும் நிலத்தை மற்றவர்களைக் கொண்டு விலைக்குவாங்கித் தன் பூஸ்திதியோடு சேர்த்துக்கொண்டார். ஜெகநாதமுதலியார் கையிலிருந்த யாவற்றையும் தாசிகளுக்கழித்துவிட் த் தான் புத்திஹீனமாய்ச் செய்து விட்டதாகத் தன் தமையன் அருணாசல முதலியார் காலில் விழ, அவர் சகோதரவாஞ்சையால் ஆதரித்து விவாக முதலானதும் செய்வித்துத் தம்மோடு வைத்துக் கொண்டார். 

நடராஜ முதலியார் – அருணாசலமுதலியார் இறந்தபின் அவருக்குச் சந்ததி யில்லாததால் அவருடைய ஆஸ்தியெல்லாம் சகோதரனைச் சேரவேண்டியதுதானே? அது இன்னும் அவரைச் சேராமலிருப்பதன் காரணம் என்ன? 

கமலாக்ஷி.- தாதா வக்கீல்களைப்போல் கேட்கிறார்கள். (என்று சிறித்தாள்.)

செழுங்கமலம்.- (சிரித்துக்கொண்டு) அறியாத சிறுவர்களைப்போல் பெரியவர்களும் பேசுவார்களா? (என்று மகளுக்குச்சொல்லி) அண்ணா! என் தமையன் அருணாசலமுதலியார் இறந்ததை நியாயஸ்தலத்தில் நிரூபிக்க முடியாமற்போன காரணத்தால் நாள் அதிகறித்துக்கொண்டு வருகிறது.

நடராஜமுதலியார்.- அருணாசலமுதலியார் பெரிய தனவந்தன் என்று கேள்வி. அவர் இறந்தால், சாவுக்கு ஒருவரும் வந்திரார்களா? சாவுக்கு வந்தவர்களைச் சாக்ஷியாகக் கொண்டால் ஜெகநாத முதலியார் பக்ஷம் சேரத் தடையில்லையே ! 

செழுங்கமலம்.- அண்ணா! தாங்கள் சொல்லுவது உண்மையேயாயினும் என் தமையன் இவ்வூரில் இறந்திருந்தால் ஒரு கஷ்டமும் அவருக்கிராது. அவர் வெளியூருக்குக் கப்பலேறிப்போய் அங்கு இறந்ததால் அதை நிரூபிக்கக் கஷ்டமாக இருக்கிறது. 

நடராஜ முதலியார்.- தன் சகோதரனுக்கு விவாகம் முடித்துவைத்த அருணாசலமுதலியார் பெண்சாதி இல்லாமலா இருந்தார்? 

செழுங்கமலம் – அவருக்குப் பெண்சாதியில்லையென்று சொல்லவில்லையே! அவருக்கும் எனக்கும் ஒருநாளையில் விவாகம் முடிந்தது. விவாகம் முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்குமுன்னம் என்னை என்நாயகன் ஊருக்கு அழைத்துக்கொண்டுபோய் விட்டார். அவ்விடம் போன மூன்றாம்நாள் நான் புஷ்பவதியானேன். நான் புஷ்பவதியான இலக்கினம் என் சகோதரனுக்கு ஆகாதென்று சோதிடர் சொன்னதால் அவரையும் அவர் பெண்சாதியையும் பார்க்க மனங்கொள்ளாமல் பெருந்துக் கத்தோடிருந்தேன். பின் என் சிறிய தமையனுக்கு விவாகம் என்று அழைத்துவரும்படி சொல்லியனுப்பினார்கள். அப்பொழுது நான் எட்டு மாதம் கர்ப்பம் ஆனதால் வண்டியில் ஏறிப்போவது கூடாதென்று தடுத்துவிட்டார்கள். என் நாயகன் விவாகத்துக்குப் போயிருந்தார். அவரை என் தமையன் ஜெகநாதமுதலியார் பொருளற்றவன் என்று கேவலப் படுத்தியதால் என்னை அவர்கள் வீட்டுக்கு அனுப்புகிறதில்லை யென்று தீர்மானப்படுத்திக்கொண்டு வந்துவிட்டார். அதுமுதல் அவர்கள் வீட் டுக்குப் போகாமலிருந்துவிட்டோம். அதனால் என் தமையனையும் அவர் மனைவியையும் பார்க்கக் கொடுத்துவைக்காத பாவியானேன். நான் பிரசவித்த இரண்டாம் மாதத்தில் என்தமையன் அருணாசலமுதலியார் கப்பலேறிப்போனவர் இறந்ததாகவும், அவர் மனைவி மூன்றுமாதத்துக் கர்ப்பத்தோடு இறந்ததாகவும் கேள்விப்பட்டேன். அவர் இறக்க நானே காரணமாக இருந்தேன். 

நடராஜ முதலியார் – அவர் இறக்க நீ காரணமாக இருந்தது எவ்விதம்?

செழுங்கமலம்.- நான் அசுபமான இலக்கினத்தில் புஷ்பவதியாகாமலிருந்தால் அவர் ஏன் இறக்கப்போகிறார்? 

நடராஜ முதலியார் – அம்மா! அவர் உனக்குமுன் பிறந்தவரா? பின் பிறந்தவரா? “பேரிழவின்பமோடு பிணிமூப்புச்சாக்காடென்னுமாறு முன் கரு விற்பட்டது.” என்றிருப்பதால், ஒவ்வொருவரும் தாய்வயிற்றிற் கருவிலமையும் பொழுதே எல்லா இன்ப துன்பமும் அமைக்கப்படுகின்றன என்றிருக்க, அது உன்னால் வந்ததென்றும், என்னால் வந்ததென்றும் பிள்ளைபிறந்தான் அப்பனைக்கொன்றான், மருமகள் வந்தாள் மாமனாரைப் பயணங்கூட்டிவிட்டாள், அவன் கொடிசுற்றிப்பிறந்தான் மாமனைக் கொன்றான் என்று, ஒருவர் இறந்தால் வேறொருவர்மேல் பழி ஏற்றுவது போல் நீயும் உன்னால் உன் தமையன் இறந்தார் என்று சொல்லுகிறாய். இது அறியாமையேயன்றி வேறல்ல. 

செழுங்கமலம்.- அண்ணா! தாங்கள் சொல்வது உண்மையே யாயினும் யாவரும் தங்களைப்போல் நினைக்கவில்லையே! 

நடராஜ முதலியார் – அறியாமையால் சொல்வதை நாம் கவனிக்கவேண்டிய அவசியமில்லை. ஜெசநாதமுதலியாருக்கு விவாகம் நடந்தகாலத்தில் கர்ப்பம் என்றாயே அப்பொழுது பிறந்தவளா கமலாக்ஷி? 

செழுங்கமலம். – இல்லை அண்ணா! கமலாக்ஷி மூன்றாவது குழந்தை. முதலாவதும் இரண்டாவதும் பிறந்திறந்தன. 

நடராஜ முதலியார் – அம்மா! பதினாயிரம் ரூபாய்க்காக நூறுவேலி நிலத்தை ஒற்றிவைக்கலாமா? அந்த பதினாயிரத்தை யாரிடத்திலாவது வட்டிக்கு வாங்கி ஒற்றிக் கடனைத் தீர்த்துவிட்டால் வட்டிக்கடனை இரண்டொரு வருடத்தில் தீர்த்துவிடலாமே! அதை ஏன் செய்யக்கூடாது?

செழுங்கமலம்.- அது விஷயத்தை யோசித்து அநேகமுறை என் தமையனைக் கண்டுசொன்னதில், அவ்விதம் செய்தால் தனக்குப் பெரிய அவமானம் விளையும் என்றும், சிலநாள் பொறுத்துக்கொண்டால் நிலத்தை மீட்டுக் கொடுத்து விடுகிறேனென்றும் சொல்லுகிறார். காலஞ்சென்ற என் தமையன் நிலத்தின் வரும்படியைத் துரைத்தனத்தாரால் நியமிக்கப்பட்டவர்கள் வாங்கிவந்தார்கள். சில மாதங்களாகத் துரைத்தனத்தாரால் நியமிக்கப்பட்டவர்களை நீக்கிச் செட்டிகளில் இருவரை நியமித்திருப்பதாகவும் அவர்கள் வாரத்தைத் தண்டல் செய்வதோடு முன் சேர்ந்திருந்த தொகையையும் தாங்கள் ஒப்புக்கொண்டதாகவும் கேள்வி; ஆனதால் இனி என் தமையன் என்நிலத்தை வாங்கிக்கொடுக்கத் தடைசெய்ய மாட்டார் என்று எண்ணுகிறேன். 

நடராஜ முதலியார்.-செட்டிகளைத் துரைத்தனத்தார் நியமித்தகாரணம் தெரியுமா? 

செழுங்கமலம்.-ஆம் தெரியும்! அதிக செலவு நேரிடாத வகைச்கு என் தமையன் கேட்டுக்கொண்டதே காரணம். 

நடராஜ முதலியார். -அம்மா செழுங்கமலம்! இன்று வீண்காலம் போக்கி நெடு நேரம் அனாவசியமான விஷயங்களைப்பேசிக்கொண்டிருந்தோம். விஜய ரங்கத்தின் தாய் தந்தை அநியாயமாக மரணம் அடைந்துபோவார்கள்போல் காணப்படுகிறதே ! நீ கவனித்தாயா? 

செழுங்கமலம்.- ஆம் அண்ணா! மீனாக்ஷி சாப்பிடாமல் எந்நேரமும் தன் மகனை நினைத்து அழுகிறாள். அவள் நாயகனும் ”மகனே! மகனே உன்னை என்று காண்பேன்?” என்று சொன்ன விதமாக இருக்கிறார். அவர்களுக்கு உண்டாகிய துக்கத்தைக் கண்டபின் விஜயரங்கத்தின் மேல் எனக்கு நல்ல அபிப்பிராயமில்லை. 

நடராஜமுதலியார் -நான் கலியாணசுந்தர முதலியாரைப் பார்க்கப்போன பொழுது தன்மகன் விஜயரங்கம் வருமளவும் அவ்விடம் வந்திருக்க வேண்டினார். நீங்கள் உத்தரவு கொடுத்தால் சிலநாள் அங்கு போயிருக்கி றேன். நான் தைமாதம் மத்தியில் உங்கள் வீட்டுக்கு வந்தேனாகையால் இன்று பங்குனிமாதம் பத்துத்தேதி யாகிறபடியினாலே ஏறக்குறைய நான் இங்குவந்து இரண்டுமாதம் ஆகிறது. 

செழுங்கமலம்.- அண்ணா ! தாங்கள் இந்த வீட்டுக்கு வந்தபின் எங்களுக்கு மனம் சந்தோஷமாக இருக்கிறது. தாங்கள் எங்களை விட்டுப்போவீர்களாகில் உண்மையாக எங்களையும் விஜயரங்கத்துத் தாய்தந்தையரோடு பயணங்கூட்டி அனுப்பவேண்டிவரும். ஆனதால் அதை நன்றாய் யோசித்துச் செய்யுங்கள்.

கமலாக்ஷி.- தாதா! தாங்கள் எங்களை விட்டுப் போகவில்லையென்று சொன்னாலொழிய தங்கள் பாதங்களை விடேன்.(என்று இரண்டு பாதங்களையும் பிடித்துக்கொண்டாள்.) 

நடராஜ முதலியார். – ஒரு காசுக்கும் பிரயோசனமில்லாத என்னை இருக்கும் படி கட்டாயப்படுத்துகிறீர்கள். இங்கு இருக்கவேண்டாம், எங்கேயாகிலும் போவென்றால் என்னசெய்வதென்று துக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கு நற்காலம் வந்ததுபோல் காணப்படுகிறது. உங்களுடைய இஷ்டத்துக்கு விரோதமாக நான் எங்கும் போகவில்லை, காலைவிடு, கமலாக்ஷி! 

அத்தருணத்தில் வைத்தியர் வீட்டுக்குள் வந்து, ஏன், அம்மா! கமலாக்ஷி ! உன்னைக் கட்டிக் கொள்ளும்படி தாதாவை வேண்டியா காலைப்பிடித்துக் கொண்டாய்? (என்று சிரித்துக்கொண்டே உட்கார்ந்தார்.) 

கமலாக்ஷி – ஆம்! தாதா ! தாங்களும் ஒரு வாலிபமான பெண் அகப்படவில்லை யென்று துக்கப்படுகிறீர்களல்லவா? (என்று சிரித்தாள்.) 

வைத்தியர் – நான் ஒருபெண்ணைக் கட்டிக்கொள்ளக் கூடாதா? நான் கிழவனாய்விட்டேன் என்றோ நினைக்கிறாய்? எனக்கின்னும் வயது இரட்டையில் முப்பதாக வில்லையே! 

நடராஜ முதலியார் – வைத்தியரே! நீர் இந்தப்பக்கம் வருவது அபூர்வமாய்ப் போய் விட்டதே! 

வைத்தியர்.- ஆம் முதலியாரே! என்ன செய்கிறது. வேலை அதிகமானதால் வரச்சாதியப்படவில்லை. முத்துக்குமார முதலியார் பெண்சாதி பேச்சியாயி கதி இன்னதென்று தெரியுமா? 

செழுங்கமலம்.- ஒன்றும் தெரியாது, என்ன சங்கதி? 

வைத்தியர்.- “அரசன் அன்று கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும்.” என்ற பழமொழி மாறிவிட்டது. இக்காலத்தில் அரசன் நின்று கேட்கிறான்; தெய்வம் அன்றே கேட்கிறது. பேச்சியாயியும் அவள் மகளும் சேர்ந்து சில வாரங்களுக்குமுன் மனோன்மணியை அடித்துப் பிரேதம் போல் அவளை மூர்ச்சையாக்கிவிட்டார்கள். அக்காலத்தில் அவள் மாண்டு போயிருப்பாள். தெய்வச் செயலால் தப்பித்துக்கொண்டாள். மாண்டு போயிருந்தால் ஆத்தாளும் மகளும் ஊசலாட வேண்டிவருமே என்று எண்ணாமலிருந்தவர்கள் பின்னும் முத்துக்குமார முதலியாரைத் துணையாகக்கொண்டு அவளை அடித்துத் துறத்திவிட்டார்கள். மனோன்மணி வீட்டைவிட்டுச் சென்ற அன்றே பேச்சியாயி நாக்கில் பிளவை யொன்று உண்டானதோடு ஒருகாலும் ஒருகையும் எடுக்க முடியாம லிருக்கின்றன. அவளுக்குச் சௌக்கியமாகும் என்று நான் நினைக்கவில்லை. 

செழுங்கமலம்.- மனோன்மணியை அடித்துத் துறத்திவிட்டார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? 

வைத்தியர்.- அடுத்த வீட்டுக்காரரால் யாவும் அறிந்தேன். மனோன்மணி பட்ட கஷ்டத்தைச் சொன்னால் நீங்கள் யாவரும் அதிக துக்கப்படுவீர்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. கமலாக்ஷியைக் கட்டிக்கொடுத்தால் மாமி நாத்தி உள்ள இடத்தில் கொடுக்கவேண்டாம். தாய் தங்கை இல்லாத மாப்பிள்ளை அகப்படாமற்போனால் பெண் நமது வீட்டிலேயே இருக்கட்டும். இதைச் சொல்லிப்போகவே இவ்விடம் வந்தேன்.நான் அவசரமாய்ப் போகவேண்டும். (என்று எழுந்தார்.) 

விஸ்வநாத செட்டியாரும் அத்தருணத்தில் வீட்டுக்குள் நுழைந்து, வைத்தியர் அவசரமாகப் போகிறவர்போல் காணப்படுகிறது. என்னவோ மாமி நாத்தி என்றது என் காதில் விழுந்தது என்று அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். 

வைத்தியர். – ஆம் செட்டியாரே! அது சாவகாசமாகப் பேசவேண்டும். இப்பொழுது எனக்குச் சாவகாசமில்லை.(என்று வைத்தியர் விடைபெற்றுச் சென்றார்.) 

விஸ்வநாத செட்டியார் – ஐயா! விஜயரங்கத்தின் சமாசாரம் ஏதாகிலும் தெரியுமா? அதை அறிந்துபோகவே இவ்விடம் வந்தேன். 

நடராஜ முதலியார் – ஒன்றும் தெரியவில்லை. அவனுடைய தாய்தந்தைகள் படுந்துயரத்தைப் பார்க்க முடியவில்லை.

விஸ்வநாத செட்டியார்.- ஏன் துயரப்படுகிறார்கள்? விஜயரங்கம் எங்காகிலும் சினேகிதர்களோடு போயிருப்பான். பிள்ளை சிலநாள் பிரிந்தால் துக்கப்படுவது உங்கள் ஜாதியாரில் அதிகமாகக் காணப்படுகிறது. செட்டிகளுக்குள் அவ்வித வழக்கமில்லை. பிள்ளை கப்பல் ஏறினால் மூன்று வருடத்திற்குக் குறையாமல் இருந்து வருகிறான். அதனால் நாங்கள் துயரப்பட்டுக் கொண்டா இருக்கிறோம்? 

நடராஜ முதலியார் – செட்டியாரே! நாட்டுக்கோட்டைச் செட்டிகளுக்குள்ள வழக்கம் யாவும் எங்களுக்குப் புதிதாகவே காணப்படுகின்றன. பிள்ளைகளுக்கு விவாகம் முடித்து அவர்களை வேறுவைத்து விடுகிறார்கள். மாமியார் தன் மருமகளை வைத்து ஆள வகையில்லாமல் அவள் இஷ்டம் போல் தனிக்குடித்தனம் செய்ய விட்டுவிடுகிறாள். உலக அனுபோக மில்லாத சிறுவர் கெட்டவழியிற் செல்ல இடங்கொடுக்கும் என்று எண்ணாதிருக்கிறார்கள். புருடன் தன் பெண்சாதியோடு மற்றவர்களுக்கு முன் பேசவிடாதிருக்கிறார்கள். புருடன் பெண்சாதியோடு சயனித்துக் கொள்ளத் தடைப்படுத்துகிறார்கள்.புருடன் பெண்சாதிமேலும், பெண் சாதி புருடன் மேலும் பட்சம் கொள்ளாதிருக்க வழிதேடுகிறார்கள். ஒரு பதார்த்தம் தம் சகோதரரில் ஒருவர் அதிசமாய் வாங்கிவந்தால் அதைப் பங்குபோட்டுத் தங்கள் தங்கள் விலாஸத்தை ஒலைத்துண்டுகளில் எழுதிச் சிறு குழந்தையைக்கொண்டு ஒவ்வொரு பங்கிலும் ஒவ்வொரு விலாஸம் போடுவித்து விலாசப்படி எடுத்துக் கொள்ளுகிறார்கள். அதனால் சகோதரப் பற்றில்லாது போய்விடுகிறதென்று நினையாதிருக் கிறார்கள் தன்பெண்சாதிக்கு அசந்தர்ப்பமாயிருந்தாலும் அவள் தாய் வீடு போயிருந்தாலும் அக்காலத்தில் சகோதரன் வீட்டில் சகோதரன் சாப்பிட்டால் மனைவி வந்தவுடன், எத்தனை வேளை சாப்பிட்டார் என்று கேட்டு அதற்கு அரிசியளந்து கொடுத்துவிடுகிறார்கள். ஒரு சகோதரன் குழைந்தைக்கு விவாகம் நடந்தால் அவனைச்சேர்ந்த மாமன் மாமி மைத்துனர் மற்றவர்களும் வருகிறதேயன்றி, மற்றச் சகோதரர்களுடைய பெண்சாதிகளைச் சார்ந்தோரை அழைப்பது பணச்செலவென்று வர வழைக்காதிருக்கிறார்கள். ஒரு சகோதரன் வீட்டில் நடக்கும் விசே டத்தில் மற்றச் சகோதரர்களுடைய பெண்சாதிகளை முறைபோட்டு வேலைசெய்ய விடுகிறார்கள். விசேடம் நடக்கும் சகோதரன் வீட்டிலுள்ள தட்டு முட்டு சாமான்களை எடுத்தாளவேண்டியதேயன்றி மற்றச் சகோதரர்களுடைய வீட்டுச் சாமான்களைத் தொடாமல் இருக்கிறார்கள். செட்டியாரே! இவைகள் மட்டுமல்ல. இன்னும் இதுபோல அனேகம் நடக்கின்றன. ஆனதால் உங்களுக்குள் பற்று குறைவாகிறதென்றே இவைகளைச் சொன்னேன். தாங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது.

கமலாக்ஷி.- அம்மா! நாட்டுக்கோட்டைச் செட்டிகளுடைய வழக்கம் எல்லாம் தாதாவுக்குத் தெரிந்திருக்கிறது, பார்த்தீர்களா? (என்று சிரித்தாள்.)

செழுங்கமலம்.- அண்ணன் உண்மைதான் சொன்னார். பெரிய தனவந்தர் தங்கள் மகளை விவாகஞ் செய்து கொடுத்தால் தங்கள் பெண்களுக்குப் பெருந்தொகையைச் சீதனமாகக் கொடுக்கிறார்களா? இல்லையே!

விஸ்வநாத செட்டியார்.- அம்மா! செட்டிகளுடைய வழக்கத்தைப் பார்க்கிறவர்களுக்கு அது புதிதாகவே காணப்படும். அவர்கள் சருத்தைக் கவனித்து உள் நுழைந்து பார்த்தால் அவர்கள் செய்வது யாவும் உத்தமம் என்றே தெரியவரும். 

நடராஜ முதலியார் – செட்டியாரே! உங்களுடைய வழக்கத்தை நீங்களே மேன்மையாகப் பேசுவதில் பலன் ஒன்றுமில்லை. உங்களுக்குள் இருக் கிற வழக்கம் எல்லாம் குற்றமாகக் காணப்படுகிறதால் எல்லா மேன் மையும் எங்களுக்கே என்று நன்றாய் விளங்குகிறது. 

விஸ்வநாத செட்டியார் – ஐயா! எங்களுடைய கருத்தை யறிந்தபின் மேன்மையும் தாழ்வும் சொல்லவேண்டியதே யன்றி அதற்குமுன் சொல்வது உசிதம் அல்லவே! 

நடராஜ முதலியார் – என்ன சொல்லப்போகிறீரோ? பார்ச்சலாம். உங்களுடைய கருத்தைச்சொல்லுங்கள். அதைக்கேட்டபின் யோசிக்கலாம். 

விஸ்வநாத செட்டியார். – பிள்ளைகளுக்கு விவாகமானவுடன் அவர்களை வேறு குடித்தனம் செய்ய வைக்கிறோம் என்பது உண்மையே! பெற் றோர்களுக்குப் பின் பிள்ளைகள் வெவ்வேறு குடும்பமாகிறது யாவருக் கும் வழக்கமாதலால், பெற்றோரிருக்கும் பொழுதே அவர்களை வேறு பிரித்து வைப்பதால் மாமி நாத்தி மைத்துனன் இவர்களால் உண்டா கும் துன்பம் நீங்குகிறது. ஏசகுடும்பமாசப் பிள்ளைகளை யெல்லாம் வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் மனச்சலிப்பு உண்டான பின் வேறாகிறதைவிட முன்னமே வேறாவது உத்தமம். மனச்சலிப்பு உண்டாகுமுன் வேறு குடும்பமானால் சகோதரர்களுக்கும் பெற்றோர்களுக் கும் இருக்கும் அன்பு நீங்க நியாயமில்லை. மாமியார் தன் மருமகளை வைத்தாளச் சக்தியில்லை என்றீர். ஒரு குடும்பத்தை நடத்துவது கடின மா? நாலைந்து குடும்பங்களை ஒரே வீட்டில் வைத்து மேல் பார்ப்பது கஷ்டமா? ஆளுந்திறமை அதிகம் எதற்குவேண்டும்? மருமகளைக் கெட்ட வழியில் விடாமல் மாமியார் பார்த்துக்கொள்ளுவதால் ஆளுந்திறமை மிஞ்சினவர்கள் நாங்களென்று வெளிப்படையாய்க் காணப்படுகிறது. செட்டிகள் மற்ற ஜாதியாரைப்போல் உள்ளூரிலிருந்து உத்தியோகம் செய்யாமல் வெளியூருக்குப்போய்ப் பொருள் தேடவேண்டியதாலும், வெளியூருக்குச் சென்றால் அவர்கள் மூன்று வருடம் இருந்து வரவேண்டுமென்கிற ஏற்பாடு இருப்பதாலும், அவர்கள் தொழில் விருத்தியடைய வேண்டியதாலும், பெண்சாதியோடு கூச்சமின்றிப் பேசவிடுகிறதில்லை. பெண்சாதிக்கும் புருடனுக்கும் உண்டாகிற அன்பைக் கிஞ்சித்தும் குறைக்காமவிருந்தால் வெளியூருக்குச் செல்லும் தொழில் குறைவு படும் என்பதற்குச் சந்தேசமுண்டா? ஸ்திரீகளோடு படுத்து நித்திரை செய்வது கூடாதென்றும் ஸ்திரீகளுடைய சுவாசத்தில் விஷமிருக்கிற தென்றும் அச்சுவாசம் புருடர்மேல் படக்கூடாதென்றும் முன்னோர்கள் தடுத்திருக்க, அவ்வாக்கைக் கைக்கொள்ளா திருப்பவர்மேல் குற்றஞ் சுமத்தாமல், கைக்கொண்டவரை ஸ்திரீகளோடு படுத்துறங்குகிறதில்லை யென்று குற்றஞ்சுமத்தத் துணிந்தீர்! வெவ்வேறு குடும்பமாக இருக்கும் சகோதரர்களின் பெண்சாதிகளுக்குள் சச்சரவு வராமலிருச்சு, ஒரு பதார்த்தத்தை ஒருவர் வாங்கிவந்தால் தாங்கள் சொல்லியதுபோல் பங்கு போட்டு, அவர் அதிகம் எடுத்துக்கொண்டார், எனக்குக் கொஞ்சம் கிடைத்தது என்று குறைகூறாவண்ணம் சீட்டெழுதிப்போடச் செய்து அதிர்ஷ்டத்தின்மேல் பழிபோட்டு எடுத்துக் கொள்ளுகிறோம். ஒருவருக்குக் கிஞ்சித்து அதிகமாய்ப்போனால் பெண்களுக்குள் சண்டை வருகிறதை இவ்வழக்கம் தடுக்கிறதென்று தாங்கள் நினைக்கவில்லையே! சில அசந்தர்ப்பங்களில் ஒரு சகோதரன் மற்றொரு சகோதரன் வீட்டில் சாப்பிட்டால் சாப்பிட்ட வேளைகளை எண்ணி அரிசி கொடுப்பதும் குற் றமாகக் கொண்டீர். நாட்டுக்கோட்டைச் செட்டிகள் செய்யும் தருமத்தை நன்றா யறிந்த தாங்கள் இவ்விதம் சொல்வது ஆச்சரியத்தைத் தருகிறது! பெண்டுகளுக்குள் எப்பொழுதாகிலும் மனச்சலிப்பு வந்தால் வேறு வழியில் குற்றஞ்சொல்ல ஏது இல்லாததால், உன் புருடனுக்கு எத்தனை தடவையில் சாப்பாடு போட்டிருக்கிறேன்? என்று சொல்லிக் காட்டாமல் இருக்க அவ்விதம் அரிசிகொடுத்து விடுகிறோம். ஓரகத்திகளுக்குள் சண்டை நேரிட்டுச் சகோதரர்களுக்கு மனச்சலிப்பு வராமல் தடுப்பதைத் தாங்கள் வேறுவிதமாக எண்ணுகிறீர்கள். ஒரு சகோதரன் வீட்டில் ஒரு விசேடம் நடந்தால் மற்றச் சகோதரர்களுடைய பெண் சாதிகளின் சுற்றத்தாரை வரவழைக்காமல் இருப்பது உண்மையே! பணச்செலவைக் கருதி அவர்களை வரவழைக்காமல் இருக்கிறோம் என் பது பிசகு. விசேடத்துக்கு வருகிறவர்கள் அதிகமானால் அவர்களுத் திருப்தியுண்டாக நடப்பது மிகவுங் கடினம். தன் வீட்டில் நடக்கும் விசேடத்திற்குத் தன் பெண்சாதியைச் சார்ந்தவர்கள் மட்டும் வருவார்க ளானால் அவர்களைக் கவனித்து அவர்களுக்குச் செய்யவேண்டிய மரியா தையைக் குறைவற நடத்தி அனுப்பக்கூடும். மற்றச் சகோதரர்களு டைய பெண்சாதிகளைச் சார்ந்தவர்களும் வருவார்களேயானால் அவர்க ளுக்கு நடக்கும் மரியாதையில் கிஞ்சித்துக் குறைவுபடும் பட்சத்திலே அவர்கள் அணுவை மலையாக்கிச் சகோதரர்களுக்குள் மனச்சலிப்பை உண்டாக்கி விடுவார்களென்று பயங்கொண்டு அவர்களை வரவழைக்கிற தில்லை. இது வழக்கத்திலிருப்பதால் அவர்களும் தங்களை வரவழைக் காமற் போவதைக் குற்றமாகக் கொள்ளுகிறதில்லை. ஒரு விசேடகாலத் தில் சம்பந்திகளுக்குத் தாம்பூலம் கொடுப்பதில் அவருக்கு முந்தி கொ டுத்தார்கள், எனக்குப் பிந்தி கொடுத்தார்களென்று உங்களுக்குள் மனச் சலிப்பு உண்டாகிறதைப் பார்த்திருக்கும் தங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லையே! ஒரு விசேடத்திற்குச் சினேகிதர்களை யும் அன்னியர்களையும் அதிகம் வரவழைப்பதால் பணச்செலவைச் சுருக்கு கப் பார்க்கிறோம் என்ற தங்கள் கருத்து நிலைவிற்கவில்லை. சகோ தரர்களுடைய பெண்சாதிகள் முறைபோட்டு வேலைசெய்கிறார்கள் என்பதும் உண்மையே! அதன் கருத்தைக் கவனித்துப் பார்த்தால் அது மேன்மையானதாகவே காணப்படும். சகோதரர்களுடைய பெண்சாதிகளில் இவள் இன்று மிளகாய் அரைக்கவேண்டும், அவள் கறிகாய் அறியவேண்டும், மற்றவள் சாதம் வடிக்கவேண்டும் என்றும், முதல்நாள் மிளகாய் அரைத்தவளை மறுநாள், கறிகாய் அறியச்சொல்லியும், கறிகாய் அரிந்தவளைச் சாதம் வடிக்கச் சொல்லியும், சாதம் வடித்தவளை மிள காய் அரைக்கச்சொல்லியும் நடத்துவோமேயானால் கஷ்டமான வேலை யை யாவரும் செய்யவேண்டிவரும். அதனால் ஒருவர்மேல் ஒருவருக்கு முகச்சுளிப்புவர நியாயமிராது. ஒரு சகோதரன் மற்றச்சகோதரன் வீட்டுச் சாமான்களை யெடுத்து உபயோகிக்கையில் அவைகள் கைதவறி உடைந்தாலும் காணாமற்போனாலும் பெண்டுகளுக்குள் சச்சரவு வரும் என்றே அவைகளை எடுத்தாளுகிறதில்லை. நாங்கள் செய்யும் ஒவ்வொன் றும் ஒவ்வொரு நியாயத்தைக் கருதி இருக்கிறதே யொழிய போது மான நியாயமில்லாமலிராது. 

நடராஜ முதலியார் – செட்டியாரே! தாங்கள் இதுபரியந்தம் சொல்லியது ஏறக்குறைய நியாயத்தை ஒட்டியதாகக் காணப்படினும்,ஒர் தனவந்தன் தன் பிள்ளைகளை வெவ்வேறு குடும்பமாகவைத்து அவர்களுடைய வீட்டுச் செலவுக்குக் கொடுக்கும் பணத்தை அவர்கள் பற்றெழுதி அதற்கு வட்டி போடுதலோ மேலானது? இந்த வழக்கம் மிகவும் கேவல மானதாகக் காணப்பட வில்லையா? 

விஸ்வநாத செட்டியார் – அவ்வழச்சத்தின் கருத்தை விளங்கச் சொல்லின் அது சிலாக்கியமானதென்பீர். ஒருதனவந்தனுக்கு நான்கு பிள்ளைகள் இருந்து, அவர்களில் ஒருவன் தகப்பன் சொத்தைவாங்கி வீண் செலவு செய்வானேயானால் பின்னால் சகோதரர்களுக்குப் பாகமாகும் பொழுது நஷ்டப்படவேண்டியவர்கள் யார்? ஒவ்வொருவரும் வாங்கும் பணத் தைப் பற்றெழுதிக்கொண்டு வட்டி போட்டுக் கொள்ளுவார்களேயானால் அதிகமாகப் பணம் வாங்கிச் செலவு செய்யப் பயப்படுவார்கள். பற்று வழி அதிகப்படுத்திக்கொள்ளுகிறவன் பாகம் குறைந்துபோகிறது. ஒருவன் தன் பாகத்துக்காக வரும் தொகைக்கு அதிகமாய்க் கேட்டா லும் கொடுப்பதில்லை. இந்த ஏற்பாட்டினால் மற்றச் சகோதரர்கள் நஷ் டம் அடைய நியாயமில்லை. ஒரு சகோதரன் அதிகமாய் வாங்காதிருப்ப தைக் கண்ட மற்றவன் யோசித்து வீண்செலவு செய்யாதிருப்பான். வீண்செலவு செய்யாதிருந்தால் பொருள்சேரும், புகழுண்டாகும், நல்ல வர் எண்ணிக்கையில் சேர்வான். இவ்வளவு நன்மை அதனிடத்தில் இருக்கிறதைப் பார்த்தீர்களா? (என்று சிரித்தார்.) 

நடராஜ முதலியார்.-ஓர் தனவந்தன் தன்மகளை ஒருவருக்கு விவாகஞ்செய் துகொடுத்தால் என்ன சீதனங்கொடுக்கிறான்? இருநூறு முந்நூறு வராகந்தானே!நாலாயிரம் ஐயாயிரம் ரூபாய் செலவழித்து விவாகஞ் செய்கிறவன் கொடுக்கும் சீதனம் இதுதானா? 

விஸ்வநாத செட்டியார் – இருநூறு வராகன் என்றே வைத்துக்கொள்ள லாம். பெண்ணின் புருடனுக்கு ஆஸ்தியை அதிகரிக்க இருநூறு வரா கன் கொடுக்கவில்லை. அது பெண்ணுக்கே கொடுத்தது. அப்பெண் ஓர் குழந்தையைப் பெறுமுன் இறப்பாளாகில் அந்தப் பணத்தோடு அப் பெண் கொண்டுவந்த எல்லாச் சாமான்களையும் நகைகளையும் அப்பெண். தாய்வீட்டுக்குக் கொடுத்துவிடவேண்டும். அப்பெண் குழந்தைபெறு வாளாகில் அந்தப் பிள்ளைக்குத் தன் தாயார் வீடு கொடுத்த சீதனப்பணம் சொந்தமாகிறது. பிள்ளைகளுக்கு வயது இருபதாகுமுன் இருநூறு வராகன் என்னும் சீதனப்பணம் ரூபாய் பதினாயிரத்துக் கதிகமாகிறது. பணத்தைச் செட்டிகளிடம் வட்டிக்குக் கொடுத்தால் அது நூற்றுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாயானால் ஆறுவருடத்திலும், முக்கால் ரூபாய் வட்டியானால் எட்டு வருடத்திலும் இரட்டிக்கிறது. இதை நீங்கள் கவனிக்கிறதில்லை. சீதனம் கொண்டுவந்தவள் குழந்தை பெறுமுன் வித வையானால், தகப்பனால் போடப்பட்ட நகைகளைவிற்றுச் சீதனப் பணத் தோடு சேர்த்து வட்டிக்கு வைத்து வரும் வட்டியை வாங்கிச் செல்வப் பிள்ளைபோல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். புருடன் வீட்டார் பணக் காரராயிருந்தால் தங்கள் பெண் சுவீகாரம் எடுத்துக்கொள்ளப் பொருளு தவி செய்து மற்றச் சகோதரர்களுடைய பெண்சாதிகளைப் போல் அவளுக்கும் எல்லாச்சுதந்தரத்தையும் உண்டாக்கிவிடுவார்கள்.

நடராஜ முதலியார் – செட்டியாரே! சீதனப்பணம் வட்டியால் அவ்வளவு பெரிய தொகைக்கு வரும் என்று நான் நினைக்கவில்லை. பெண்களைக் கட்டிக்கொடுத்தபின் தாயார் வீட்டுக்கு வந்தால் அவர்கள் யாருடைய வீட்டில் இருப்பார்கள்? 

விஸ்வநாத செட்டியார் – பெண்கள் எப்பொழுதும் தாயாரோடு இருப்பார் களே யன்றிச் சகோதரர்கள் வீட்டோடு இருக்கமாட்டார்கள். தாயா ரிழந்த காலத்தில் தமக்கிஷ்டமான சகோதரர் வீட்டில் இருப்பார்கள்; ஆனதால் எங்களுடைய பெண்களுக்கு நாத்திகளின் கொடுமை இல்லை.

நடராஜ முதலியார்.- செட்டியாரே ! இன்று உம்மால் அநேக விஷயங்களை அறிந்தேன். எனக்கு விரோதமாகக் காணப்பட்டவையெல்லாம் நன்மை யாக முடிந்தன. செட்டிகளுக்குள்ள வழக்கத்தை மற்றச் சாதியாரும் கைக்கொண்டால் நன்மையாக இருக்கும் என்பதற்கு ஐயமில்லை. ஆயி னும், நாட்டுக்கோட்டைச் செட்டிகள் வியாபார விஷயத்திலும் இவ்வி தம் கவனத்தைச் செலுத்தி நடத்தாத குறைவால் தாங்கள் “கொண்டு விற்று வருவதனால் தங்களுக்குத் தாங்களே கெடுதல் செய்து கொள் தேயன்றி வியாபாரம் செய்யும் ஊரையும் கெடுத்து விடுகிறார்கள். அதை நீக்கிவிட்டால் அவர்களை யாவரும் மேன்மையாக மதிப்பார்கள். 

விஸ்வநாத செட்டியார் – என்ன காரணத்தால் அவ்விதம் சொல்லுகிறீர்? கொண்டு விற்று வருவதால் ஊர் கெட்டுப்போகிற தெவ்விதம்? பணம் ல்லாதவர்களுக்குப் பணங்கொடுத்து அவர்களைப்பணந்தேடிச் சுகமாக இருக்கும்படி செய்வதாலோ ஊர் கெட்டுப்போகிற தென்கிறீர்?(என்று நகைத்தார்.) 

நடராஜ முதலியார்.- செட்டிகள் பல ஊருக்குத் தங்கள் கூட்டாளிகளை அனுப்பிப்பணம் வட்டிக்குக் கொடுத்து வாங்கும்படி செய்வதால், கூட்டாளிகள் தங்களுக்குள்ள முதலைவைத்து வட்டிக்குக் கொடுத்து வாங்காமல் வங்கி யிலும் (சாவகாரியிடத்தில்) செட்டிகளுக்குக் கடன் கொடுக்கும் செட்டிக ளிடத்திலும் தவணைக்குக் கடன் வாங்கி முதலாளிகளுக்கு அதிக இலா பத்தைக்காட்டிப் பரிசுபெற வியாபாரத்தைப் பெருக்கச் செய்கிறார்கள். முதலாளி “கடையை ஒடுக்கு” என்றால் நல்ல இனத்திலிருந்து தண்ட லைத் தாங்கள் வாங்கிய கடன்களுக்குக் கொடுத்துவிட்டு, வராத கடனைத் தங்களுடைய முதலுக்கு வைத்துக் கொள்ளுகிறார்கள். தங்களுக்குள்ள முதலை மட்டும் வைத்து வியாபாரம் செய்வார்களானால் அதை நல்ல இனத் திற் கொடுக்கலாம். அதனால் கெடுதல் ஒன்றும் நேரிடாது.

விஸ்வநாத செட்டியார்.- ஐயா! தாங்கள் சொல்லிய வண்ணம் தங்கள் முதலை மட்டும் வைத்து வியாபாரம் செய்தால் உத்தமம். அற்பமுதலாய் இருந்தால் அதனாலே வரும் இலாபம் கூட்டாளியின் சம்பளத்திற்கும் அவனுடைய செலவுக்கும் போதாதென்றே கடன் வாங்கி வியாபாரம் செய்கிறார்கள். ஆயினும் இதனால் ஊர் கெட்டுப்போக நியாயமில்லை. நடராஜ முதலியார் – செட்டிகளிடத்தில் கொடுக்கல் வாங்கல் செய்யும் செட்டிகளும் இனத்தில் கொடுப்பவர்களைப்போல் தாமும் இலாபத்தை அதிகமாகத் தங்கள் முதலாளிகளுக்குக் காட்ட, பணப்பிரியம் இல்லாத காலத்தில் வட்டியைக் கூட்டிவிட்டு வங்கியில் கடன் வாங்கி அதிக வட்டிக்கு இனத்தில் தருபவர்களுக்குக் கடன் கொடுக்கிறார்கள். அவர்கள் அதை வாங்கி இனத்தில் வட்டியை உயர்த்திக் கடன் கொடுக்கிறார்கள். இவ்விதம் செய்கிற வியாபாரத்தால் இலாபம் அடைகிறவர்கள் யாரென்று நினைக்கிறீர்? 

விஸ்வநாத செட்டியார் – செட்டிகளுக்குக் கடன் கொடுக்கும் செட்டிகளும் இனத்தில் கொடுக்கும் செட்டிகளும் இலாபம் அடைகிறார்கள். அதற் குச் சந்தேகப்படவேண்டிய காரணம் இல்லையே! 

நடராஜ முதலியார் – பார்வைக்கு நீர் சொல்வதுபோல் காணப்படுகிறது. செட் டிகளிடத்தில் கடன் வாங்கிய இனங்கள் உயர்ந்த வட்டியைக் கொடுக்கச் சக்தியற்று அனேசர் ஓடிப்போவதையும் சொடுக்கச் சந்தியில்லையென்று கோர்ட் ஆதரவைப்பெறுவதையும் பார்க்கிறோம். இனம் நஷ்டமடைந்தால் கடன் கொடுத்த செட்டிகளும் நஷ்டம் அடையவேண்டியதல்லவா? அவர்கள் நஷ்டமடைந்தால் அவர்களுக்குக் கடன்கொடுத்த செட்டிகளும் நஷ்டம் அடையவேண்டியதல்லவா? 

செழுங்கமலம்.- அண்ணா! செட்டிகள் மட்டும் நஷ்டம் அடைகிறார்கள் என்றீர்களே ! வாங்கிக்காரர் நஷ்டம் அடையமாட்டார்களா? செட்டி களுக்குள் வட்டியை உயர்த்திக் கொடுப்பவர்கள் இருப்பதுபோல வட்டி யைக்குறைத்துக் கொடுப்பவர்களும் இருப்பார்கள் அல்லவா?

நடராஜ முதலியார்.- வாங்கிக்காரர் ஏன் நஷ்டம் அடைகிறார்கள்? செட்டி களைப்போல் அவர்கள் வாய்ச்சொல்லை நம்பியா செட்டிகளுக்குக் கடன் கொடுக்கிறார்கள்? இல்லை! இல்லை! தக்க கடைகளின் கூட்டாளிகள் கையொப்பம் பெற்றாலொழியக் கடன் கொடுக்கமாட்டார்கள். ஆன தால் அவர்களுக்கு எப்பொழுதும் நஷ்டம்வராது. நகரத்தாரில் ஒரு வன் வட்டியைக் கூட்டிக் கடன் கொடுத்தானென்று கேள்விப்பட்டவுடன் அன்று செட்டிகள் வீடெல்லாம் அந்த வட்டியே நடக்கிறது. நாள்தோ றும் அவர்கள் விசாரித்துக்கொள்வது வழக்கம். ஆனதால் செட்டிகள் வீட்டில் கடன் கொடுப்பவர்கள் வட்டியை உயர்த்தினால் அவர்களு டைய தயவை எதிர்பார்த்திருக்கிற அனேகர் அவர்களுக்கு உதவியாக நிற்கிறார்களே யன்றி வட்டியைக் குறைத்துக்கொடுக்கத் துணியார்கள். ஊரிலுள்ள ஜனங்கள் அதிக வட்டி கொடுக்கச் சக்தியில்லாமல் கெட்டுப் போவதையும் அதனால் செட்டிகள் நஷ்டம் அடைவதையும் யோசித்தால் தங்களைத் தாங்களே கெடுத்துக் கொண்டதோடு ஊரையும் கெடுத்து விடுகிறார்களென்று தோன்றுகிறது. இலாபம் அடைகிறவர்கள் யா ரென்று இப்பொழுதாகிலும் தெரிகிறதா செட்டியாரே? 

விஸ்வநாத ரெட்டியார் – வாங்கிச்காரரே இலாபம் அடைகிறார்களென்று நன்றாய் விளங்குகிறதோடு அவர்களுக்கு இலாபம் தேடிக்கொடுக்கச் செ ட்டிகள் வட்டிக்குச் கொடுச்சத் தோன்றினார்களென்றும் காணப்படுகி றது. நான் இது விஷயத்தை யெல்லாம் நகரத்தாருக்குத் தெரிவித்து வீணில் வட்டியை உயர்த்தவேண்டாமென்று சொல்லுகிறேன். (என்று நகைத்தார்.) 

நடராஜ முதலியார் — நீர் ஒருவர் சொன்னால் உம்முடைய வார்த்தை ஏலாது ஊரிலுள்ள முதலாளிகளே இது விஷயத்தைக்குறித்து யோசிக்கவேண் டும். நாம் வீணில் நெடுநேரம் இதுவிஷயத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். கையில் ஒரு மூட்டை வைத்துக்கொண்டிருக்கிறீ ரே, அதில் என்ன இருக்கிறது? 

விஸ்வநாத செட்டியார்.– இது நகைப்பெட்டி. சென்னையிலிருந்து ஒருவர் விற்று அனுப்பும்படி நகைகளை அனுப்பியிருக்கிறார். பார்க்க இஷ்டமிருந்தால் பார்க்கலாம். (என்று பெட்டியைக் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தார்.) 

நடராஜ முதலியார் – நான் என்ன நகை வாங்கப்போகிறேன்! செழுங்கமலமும் கமலாக்ஷியும் வாங்குவார்கள்; எடுத்துக்காட்டும் பார்க்கலாம்.

கமலாக்ஷி- தாதா! அவைகளை ஏன் எடுக்கச்சொல்லுகிறீர்கள்? இங்கு நகைகள் வாங்கவேண்டியவர்கள் இல்லை. 

செழுங்கமலம்.-ஆம் அண்ணா ! வாங்குகிறதாயிருந்தால் பார்க்கலாம்.கையில் காசில்லாதிருக்கும்பொழுது அவைகளைப்பார்ப்பதில் பலன் என்ன?

விஸ்வநாத செட்டியார். – அம்மா! நகைகளைப் பார்க்கிறவர்களெல்லாம் வாங்கிவிடுகிறார்களா? நீங்கள் நகைகளைப் பார்க்கிறதால் அவைகள் குறைந்து போகா. 

என்று பெட்டியைத்திறந்து, மோராமாலை, வைரக்கம்மல், வைரமூக்குத்தி, வைரபுலாக்கு, இரத்தின ஜடைபில்லை, தங்கத்தில் கெம்பு இழைத்த ஒட்டியாணம், கெம்பட்டிகை, சரட்டட்டிசை, வைர மோதிரங்கள், சீல் மோதிரங்கள் எல்லாம் இருக்கின்றன, யாவையும் பாருங்கள் என்று, ஒன்றொன்றாக எடுத்துக்காட்டிப் பெட்டியில் வைத்துக்கொண்டார். அந்த நகைகளைச் செழுங்கமலமாவது கமலாக்ஷியாவது எடுத்துப்பார்க்காததைக் கண்டு, ஏனம்மா! தொட்டால் ஒட்டிக்கொள்ளும் என்றா பயப்படுகிறீர்கள்? என்று கேட்டார். 

செழுங்கமலம்.- செட்டியாரே! தாங்கள் கொண்டுவந்த நகைகளில் ஒன்றையாவது வாங்குகிறதாயிருந்தால் அதை எடுத்துப் பார்க்கலாம். இவைகளைப்போல் என்னிடத்திலிருந்த நகைகளை விற்றும், இன்னும் இருக்கிற இரண்டொன்றையும் விற்க நேரிடுமோ என்று எண்ணங்கொண்டிருக்கும் எங்களுக்கு வேறு நகைகள் எதற்கு வாங்குகிறதாயிருந்தால் பணத்திற்கு எங்குபோவேன்? எனக்கு யார் கடன் கொடுக்கப்போகிறார்கள்? 

விஸ்வநாத செட்டியார் – தங்களுக்குக் கடன் வேண்டுமானால் என்ன தொகை கேட்டபோதினும் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன். எந்த எந்த நகைகள் வேண்டும் சொல்லுங்கள். (என்று பெட்டியிலிருந்த நகைகளை மீண்டும் எடுத்துக் கீழே வைத்தார்.) 

செழுங்கமலம்.– செட்டியாரே! நான் கடன்பட்டு நகைகளை விலைக்கு வாங்கித் தங்களிடத்தில் அந்த நகைகளை அடைமானம் வைத்து வட்டி கொடுத்து வருவது மிக்க சிலாக்கியமே! 

விஸ்வநாத செட்டியார் – அவ்விதம் செய்கிறவர்கள் இல்லை என்றா நினைக் கிறீர்கள்? அனேகர் அவ்விதம் செய்கிறார்கள். அவ்வழக்கம் இருந்தாலும் நான் உங்களை அடைமானம் வைக்கச்சொல்லிக் கேட்கவில்லை.

செழுங்கமலம். – ஒன்றும் அடைமானம் இல்லாமல் கடன் கொடுக்கிறதா யிருந்தாலும் நகைகள் வாங்குகிற விஷயத்தில் கடன் கொடுப்பீர்களே யன்றி வேறு விஷயத்திற்குக் கேட்டால் கொடுப்பீர்களா? 

விஸ்வநாத செட்டியார் – எந்த விஷயத்துக்குக் கேட்டாலும் கொடுக்கத் தடையயில்லை. எவ்வளவு வேண்டும்? ஐந்நூறா? ஆயிரமா? 

செழுங்கமலம் — செட்டியாரே! எனக்குக் கடனாகப்பணமும் வேண்டாம். நகையும் வேண்டாம். 

விஸ்வநாத செட்டியார்.- அம்மா! கடன் கொடுக்க இஷ்டங்கொண்டதை அறிந்த பின் வேண்டாம் என்றதற்கு ஏது காரணம்? இப்பெருந் தொகையைக் கொடுக்கப் பயப்படுவேனென்று எண்ணினீர்களோ?

செழுங்கமலம்.- செட்டியாரே! நீர் சொல்லும் ஆயிரம் ஐந்நூறு எனக்குப் போதாது. எனக்கு வேண்டியது பதினாயிரம் ரூபாய். அந்தப்பெருந் தொகையைக் கொடுக்க முடியுமா? 

விஸ்வநாத செட்டியார் – ஆத்தே! பதினாயிரமா? பதினாயிரம் எதற்கு?

செழுங்கமலம்.- இதற்கு என்று அண்ணன் சொல்லுவார்கள். அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள். 

விஸ்வநாத செட்டியார் – ஐயா! தாங்கள் இது பரியந்தம் ஒன்றும் சொல்லாமல் இருந்தீர்கள். செழுங்கமலத்தம்மாள் கேட்கும் பதினாயிரம் எதற்கு?

நடராஜ முதலியார். – பதினாயிரம் இதற்கென்று சொல்லுகிறேன். அந்த மோராமாலையைக் காட்டுங்கள். 

விஸ்வநாத செட்டியார்.- இந்த மோராமாலை ஆயிரத் தைந்நூறுக் சதிகம் போகாது. (என்று எடுத்துக் கொடுத்தார்.) 

நடராஜ முதலியார் மோராமாலையை வாங்கிக் கமலாக்ஷி கழுத்தில் போட்டு கமலாக்ஷி! இது உனக்கு நன்றாயிருக்கிறது, போட்டுக்கொள் என்று நகைத்தார். 

கமலாக்ஷி கழுத்திலிருந்த மோராமாலையைக் கழற்றிக் கையில் பிடித்துக் கொண்டு, தாதா! தங்கள் மகனுக்கென்னைக் கட்டிக்கொள்ளப் போகிறீர்களே! அப்பொழுது இந்த மோராமாலையைமட்டும் அல்ல, இந்தப் பெட்டியிலடங்கிய நகைகளை யெல்லாம் தாங்கள் சந்தோஷமடைய அணிந்து கொள்ளுகிறேன் என்று சிரித்துக்கொண்டே மோராமாலையைச் செட்டியாரிடம் கொடுத்தாள். 

நடராஜ முதலியார் – அம்மா! செழுங்கமலம்! உன்மகள் என்னைக் கேலி செய்வது உன் காதில் விழுந்ததா? செட்டியாரே! தங்களுடைய காதிலும் விழுந்ததா? என்னை எப்பொழுதும் கேலி செய்யவில்லையென்று சொல்லும் பொழுது நீங்கள் இருவரும் சாக்ஷி சொல்லவேண்டும்.

கமலாக்ஷி.- தாதா! சாக்ஷிகள் வேண்டியதில்லை; நான் சொல்லியதை அல்லவென்று மறுத்தால் அல்லவா சாக்ஷிகள் வேண்டும்? 

11-ம் அத்தியாயம்

இரண்டு வேலி நிலத்தை உடையதாகி வாழை, கமுகு, தென்னை முதலிய நிரம்பவுற்றுப் பலவித புஷ்பச்செடிகளும் மரங்களும் அடர்ந்து அழகைக்கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு தோட்டத்தின்மத்தியில் பார்ப்பவர் கண்களைக் கவரும்படியான ஓர் அரண்மனையில் தூண்டாவிளக்குகளால் பிரகாசித்த ஓர் அறையிலே ஒருபுருடன் சோபாவில் சாய்ந்து கொண்டு எதோ ஒன்றை நினைத்து அசைவற்றிருக்கும்பொழுது, அவ் வறையின் கதவு மெதுவாகத்திறக்கப்பட்டு ஓர் வாலிபன் உள் நுழைந்து, பிரபு! குப்புசாமி ஐயர் தேவரீரைப் பார்க்கவேண்டியதாகத் தேவரீருடைய அனுமதிபெற்று வரும்படி என்னைக் கேட்டுக்கொண்டார் என்றான். 

வீட்டுக்கு எஜமான் வந்தவாலிபனைப்பார்த்து, என்ன சொன்னாய் நாகபூஷணம்! இந்நேரத்தில் என்னைப் பார்க்கவேண்டிய அவசியம் என்ன? இன்னும் சற்றுநேரத்தில் இவ்விடம் யார் வரப்போகிறார்கள் உனக்குத் தெரியாதா? என்றான். 

நாகபூஷணம் – பிரபு! யாவும் தெரியும். வந்த பிராமணன் தேவரீரிடத்தில் இரண்டொரு வார்த்தையாடிப் போவது மிக்க அவசியம் என்கிறதால் தேவரீருடைய உத்தரவைக் கேட்க வந்தேன். 

வீட்டுக்கு எஜமான். – விரைவில் வரச்செய், எனக்கு அவகாசமில்லை. 

எஜமான் உத்தரவைப் பெற்றுக்கொண்டு நாகபூஷணம் நீங்கிச் சிலவிநாடிக்குள் ஓர் பிராமணனை அறைக்குள் கொண்டுவந்து விட்டு நீங்கினான். 

குப்புசாமி ஐயர் – ஆசீர்வாதம்! ஜெகநாத முதலியார்! நான் இந்நேரத்தில் உம்மைத் தேடி வந்ததைக்குறித்து மன்னிக்கவேண்டும். 

ஜெகநாத முதலியார்.– ஏதாவதொன்று அவசியமாகக் காணப்பட்டாலொழிய நீர் வரமாட்டீர். என்ன செய்தி? 

குப்புசாமி ஐயர் – உம்முடைய தங்கையின் நிலத்தை என் பெயருக்கு ஒற்றியாக எழுதிவைத்திருக்கிறீர்களே அதைக் குறித்துப் பேசவே வந்தேன். 

ஜெகநாத முதலியார் – ஓய் ஐயரே! அந்த விஷயத்தைக் குறித்துப் பேச இதுதானா சமயம்? போம். போம். சாவகாசத்தில் பேசலாம். எனக்கிப்பொழுது சாவகாசமில்லை. 

குப்புசாமி ஐயர்.- ஐயா! வெள்ளம் வருமுன் அணைபோட்டுக்கொள்ள வேண்டும் என்பதை நினையாமற் பேசுகிறீர். அந்தப் பத்திரத்தை நாம் இன்னும் வைத்துக்கொண்டிருப்பது கெடுதியாக முடியும்போல் காணப் படுகிறது. 

ஜெகநாத முதலியார். – ஓய் ஐயரே! அப்பத்திரத்தை என் கையிலிருந்து வாங்க ஒருவராலும் முடியாதென்று உமக்கிதுபரியந்தம் ஆயிரந்தரம் சொல்லியிருந்தும் அதைக்குறித்து நான் மறுபடியும் தலையை உடைத்துக் கொள்ளவா இந்நேரத்தில் வந்தீர்? 

குப்புசாமி ஐயர்.- நீர் சொன்னவைகளை நான் மறக்கவில்லை. இத்தருணத்திலும் முன் சொன்னவிதம் சொன்னால் உமக்குக் கெடுதியாக முடியு மென்றுந் பயதே இந்நேரத்தில் உம்மைத் தேடிவந்தேன். 

ஜெகநாத முதலியார் – நிலத்தை நாம் வைத்துக் கொண்டிருப்பது கெடுதியாக முடியும் என்று நினைப்பது என்ன காரணம்? எனக்குச் சாவகாசமில்லை விரைவில் சொல்லும். 

குப்புசாமி ஐயர் – நிலத்தின் வரும்படியை நாளது பரியந்தம் நீரே அனுபவித்து வரவும், வெளிக்கு நானே சுதந்தரவாளியாகக் காட்டிவந்ததில் ஏதாகிலும் உமக்குத் துரோகம் செய்திருக்கிறேனா? 

ஜெகநாத முதலியார்.- ஐயரே! ஒருவரும் இலவசமாகச் செய்யவில்லை. பத்திரம் எழுதிய பொழுது உமக்கு ஆயிரம் ரூபாய் கொட்டவில்லையா? அதன்பின் மாதச் சம்பளமாய் நூறு நூறாகக் கொடுக்கவில்லையா? உமக்குக் கொடுத்ததை வேறொருவருக்குக் கொடுத்தால் இதைச்செய்யார்களா? போதும் போதும் உம்முடைய யோசனை.போய்வாரும்.

குப்புசாமி ஐயர்.- ஐயா! கோபித்துக்கொள்ளவேண்டாம். உமக்கு ஓர் கெடுதியைச்செய்ய நினைத்து நான் இங்குவரவில்லை. இன்று நடந்ததை யறிந்தால் என்னைக் கோபிக்கமாட்டீர். 

ஜெகநாத முதலியார்.-ஐயரே! எனக்குச் சாவகாசமில்லை என்பதை நன்றாயறிந்தபின் உம்முடைய கருத்து இன்னதென்று சொல்லாமல் வீணில் காலங் கழிக்கிறீர். நீர் நாளைவந்தால் யாவும் சாவகாசமாய்ப் பேசலாம். 

குப்புசாமி ஐயர்.- நாளையதினம் பேசி முடிவு செய்யச் சாவகாசம் இருக்குமாகில் இந்நேரத்தில் உம்மை ஏன் தேடிவருகிறேன்? பத்திரத்தின் சமாசாரம் அதிகதூரம் போயிருக்கிறது. 

ஜெகநாத முதலியார் – ஓய்! ஓய்!நீர் என்னை விடமாட்டீர் போல் காணப்படுகிறது. விரைவில் இரண்டொரு வார்த்தையில் சொல்லி முடியும். எனக்கோர் அவசரமான வேலையிருக்கிறது. என்னை அதிக நேரம் உம்முடைய வேலையில் வைத்துக்கொள்ளவேண்டாம். 

குப்புசாமி ஐயர்.- ஐயா! நொடியில் முடித்துவிடுகிறேன். சற்று நேரத்திற்கு முன் சீநிவாஸ ஐயங்கார் என்னைக் கூப்பிட்டார்; நான்போய் ஏன்கூப்பிட்டீர்? என்று கேட்டேன். அவர் உட்காரும் என்றார். நான் உட்கார்ந்தேன். 

ஜெகநாத முதலியார் – ஓய்! ஒய்!போதும் போதும்.போனதும் உட்கார்ந்ததும் சாவகாசத்தில் பேசிக்கொள்ளலாம். நீர் நாளை காலையில் வாரும். 

குப்புசாமி ஐயர்.- ஐயா! நீர் அதிக அவசரப்படுகிறீர். ஏதாகிலும் அவசிய மாக இன்றிரவில் நடத்த உத்தேசித்திருந்தால் அதை மற்றொருநாளைக்கு வைத்துக்கொண்டு நான் வந்திருக்கும் வேலையை முதலில் முடித்தால் உமக்கனுகூலமாகும். 

ஜெகநாத முதலியார் – என்ன சொன்னீர்? நான் இன்றிரவிற்காக வைத்திருக்கும் விஷயத்தை மாற்றி வைத்துக்கொள்ளவா சொல்லுகிறீர்? சபாஷ்! சபாஷ்! நன்றாய் இருக்கிறது! நீர் என் வீட்டிலிருந்து என்னை உம்முடைய உத்தரவுக் கடங்கி நடக்கச் சொன்ன தைரியம் உமக்கு ஆர் கொடுத்ததோ தெரியவில்லை! வீணில் நீர் அவமரியாதை படுமுன் போய் விடுகிறது உத்தமம். 

குப்புசாமி ஐயர்.- ஐயா! உம்முடைய வீட்டில் வந்து அதிகாரம் செய்யவாவது அவமரியாதையடைந்து போகவாவது நான் இவ்விடம் வரவில்லை. உம்முடைய நன்மையைக் கருதிச் சொன்னதை நீர் குற்றமாகக் கொள்ள வேண்டாம். நாளை உமக்குக் கெடுதியாக முடிந்தால் எல்லாருக்கும் துன்பமுண்டாகும். ஆனதால் பொறுமையோடு நான் சொல்வதைக் கேளும். நான் சீநிவாஸ ஐயங்கார்வீட்டில் அறைக்குள்போய் உட்கார்ந்தவுடன் அவர் எல்லோரையும் அனுப்பிவிட்டு நான் உட்கார்ந்திருந்த அறையின் கதவை மூடி உள்தாப்பாள் போட்டு என்னருகில் உட் கார்ந்து, என்னை உமக்குத் தெரியுமா? என்று கேட்டார். ஆம், நெடு நாளாய் உம்மையறிவேன். நானும் இன்னானென்று உமக்குத் தெரியுமா? என்றேன். 

ஜெகநாத முதலியார்.– ஐயரே ! மணி ஒன்பதாய்விட்டது. என்னுடைய காலத்தை இவ்விதம் போக்கிக்கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தால் என்ன சொல்லுவார்கள்? என்மேல் நெடுநாளாகக் கொண்டிருக்கும்ப நல்ல அபிப்பிராயம் எல்லாம் கெட்டுப்போக நீர் காலதாமசஞ் செய்து கொண்டிருக்கிறீர். இரண்டொரு வார்த்தையில் ஏன் முடித்துவிடக் கூடாது? 

குப்புசாமி ஐயர்.- ஐயா! நடந்ததை விவரமாகச் சொல்லாமற் போனால் உமக்கு நன்றாய் விளங்காதென்று நடந்த விதம் சொல்லுகிறேன். நான் அவ்விதம் சொன்னவுடன், சீனிவாஸ ஐயங்கார் என்னைப்பார்த்து, “ஐயரே! நீர் எனக்குத் தெரியும், நான் உமக்குத் தெரியும். ஆனதால் நம்மிருவருக்குள் இரகசியம் வேண்டாம். உண்மையைப் பேசும், நீர் செழுங்கமலத்தம்மாளிடம் நிலத்தை ஒற்றிக்கு வாங்கினீரே! எத்தனை ரூபாய் கொடுத்து ஒற்றிக்கு வாங்கினீர்?” என்று கேட்டார். நான் பதினாயிரம் கொடுத்து ஒற்றிக்கு வாங்கினேன் என்றேன். பத்திரம் எவ்விதம் எழுதிக்கொண்டீர்? என்று கேட்டார். செழுங்கமலத்தம்மாள் அவசர நிமித்தமாகக் குப்புசாமி ஐயரிடம் ரூபாய் பதினாயிரம் பெற்றுக்கொண்டதால் இந்த ரூபாய் பதினாயிரம் கொடுக்கும் வரைக்கும் செழுங்கமலத்தம்மாளுக்குச் சொந்தமாகிய நிலத்தை ஒற்றியாக வைத்திருப்பதால் நிலத்தின் மாசூலைக் குப்புசாமி ஐயராவது அவரது உத்தரவு பெற்றவர்களாவது வசூல் செய்துகொள்ளலாம். பணம் வாங்கிய மூன்று மாதத்திற்குமுன் பணத்தைக் கொடுத்துவிட்டால் வட்டிக்காக நூற்றைம்பது கொடுத்து மாசூலை ஒப்புக்கொள்ளுகிறதென்று அந்த அம்மாள் சம்மதித்துக் கையெழுத்து போட்டு எழுதிக்கொண்டோம் என்றேன். அதற்கு அவர் பத்திரத்திற்கண்ட பதினாயிரம் ரூபாயை அந்த அம்மாளிடம் கொடுத்தீரா? என்று கேட்டார். நான் அந்த அம்மாளிடம் கொடுக்கவில்லை. அந்த அம்மாள் உத்தரவு பிரகாரம் அவள் தமையனிடம் கொடுத்தேன் என்றேன். தமையனிடம் கொடுக்கும்படி சொல்லியதற்கு எழுத்து மூலமாக ஆதாரம் இருக்கிறதா? என்றார். எழுத்து மூலமாக ஆதாரம் இல்லாமற்போனாலும் வாங்கிக்கொண்டவர் சாக்ஷி சொல்ல எக்காலத்திலும் சித்தமாய் இருக்கிறார்; அவர் இல்லை என்று சொல்லுங்காலத்திலல்லவா எல்லா ஆதாரமும் வேண்டும்? என்றேன். ஜெகநாத முதலியாரிடம் ரூபாய் பதினாயிரம் கொடுத்தேன் என்றீரே! அந்த ரூபாய் உமக்கேது? என்றார். ஐயங்காரே! இதென்ன நீர் கேட்பது ஆச்சரியத்தைத்தருகிறது. நான் சம்பாதித்து வைத்திருந்த ரூபாய் பதினாயிரத்தைக்கொடுத்தேன். அது எங்கிருந்து வந்ததென்று நீர் கேட்டால் அது இவ்விதம் வந்ததென்று நான் சொல்லவேண்டிய அவசியமில்லையே என்றேன். பதினாயிரம் ரூபாய் பத்திரம் பிறந்த மூன்று நாளைக்கு முன் உம்மை ஐம்பது ரூபாய்க்கு வாரண்டில் பிடித்துக்கொண்டுபோனபொழுது, உம்மிடத்தில் ஒரு காசுமில்லை, மாதம் மூன்று ரூபாய் வீதம் கொடுக்கத் தீர்மானம் வேண்டும் என்று நியாயஸ்தலத்தில் தீர்மானம் பெற்றுவந்தீரே, அது உமக்கு ஞாபகம் இருக்கிறதா? அந்த ஸ்திதியிலிருந்த நீர் பதினாயிரம் கடன் கொடுத்திருக்கிறதாகச் சொல்லுகிறீர். பதினாயிரம் கொடுத்தது உண்மையென்று நீர் சாதிக்கிற விஷயத்திலே நியாயஸ்தலத்தில் சொல்லிய தப்பு வாக்கு மூலத்திற்காக நீர் தண்டனையடைய வேண்டிவரும். சொல்லிய வாக்கு மூலமே உண்மையென்றால் செழுங்கமலத்தம்மாளிடம் எழுதி வாங்கியது தப்புப்பத்திரமாகி நீரும் ஜெகநாத முதலியாரும் தண்டனையடைய வேண்டியவர்களாக வேண்டும். நீரே நன்றாய் யோசித்துப்பாரும். உலகம் நிந்தித்து உங்களை அவமானப்படுத்துமுன் உண்மையைச் சொல்லி விடுவீராயின் உம்மையும் ஜெகநாதமுதலியாரையும் ஒன்றும் செய்ய வில்லை; என் வார்த்தையை நம்பும் என்றார். நான் பேசாமல் –

ஜெகநாத முதலியார் – நீர் பேசாமல் இவ்விடம் வந்துவிட்டதே சிலாக்கியம்.

குப்புசாமி ஐயர். – ஐயோ! நான் பேசாமல் இவ்விடம் வரவில்லையே! அவர் என் வாய்ச்சொல்லால் எல்லா உண்மையையும் அறிந்துகொண்டார். நான் செய்துவந்த குற்றத்தை மன்னிக்கவேண்டும். 

ஜெகநாத முதலியார்.- ஐயரே! பேதை மதியால் நீர் யாவும் சொல்லிவந்தாலும் அதற்காக நீர் பயப்பட வேண்டாம். சீநிவாஸ ஐயங்கார் வக்கீலாய் இருப்பதால் நீர் பயப்பட்டீர். அவர் அறிந்த சட்டங்கள் நமக்கு தெரியாமற் போகவில்லை. அவர் உம்முடைய வார்த்தையைக் கேட்டு ஒன்றும் செய்யமுடியாது. அவரிடத்தில் சொல்லியவைகளை நாளை நீர் சொல்லவில்லை என்றால் என்ன செய்யமுடியும்? இதற்கா பயந்தீர் போம். போம். உம்மைப் போல அற்பகாரியக்களைக் கண்டஞ்சுவோரை நான் எங்குங் கண்டதில்லை. (என்று சிரித்தார்.) 

குப்புசாமி ஐயர் – சுளுவாக உம்முடைய தீர்மானத்தைச் சொல்லிவிட்டீர். சீநிவாஸ ஐயங்கார் என்வாக்கால் யாவும் அறிந்தபின் என்னைப்பார்த்து, ஐயரே! நீரும் ஜெகநாதமுதலியாரும் செழுங்கமலத்தின் நிலத்தை அபகரித்து அவளுடைய சுகத்தைக் கெடுத்தீர்கள். நீர் இப்பொழுது என்னிடம் சொன்னதை நாளை ஒருக்கால் மறுத்தால் என்செய்வதென நான் செய்திருக்கிற உபாயம் இன்ன தென்று உமக்குத் தெரியுமா? என்றார். எனக்கெப்படித் தெரியும்? என்றேன். ஆனால் வாரும், பாரும் என்று அவ்வறையிலிருந்த படுதாவைத் தூக்கினார். ஐயோ! நான் என்ன சொல்லுவேன்! படுதாவின் பின்னாலிருந்த மூன்று நாற்காலியில் மூன்று பேர் உட்கார்ந்து நான் சொல்வதை யெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களை யாரென்று நினைக்கிறீர்? 

ஜெகநாத முதலியார் – யார் அங்கு வரப்போகிறார்கள்? அவருடையவேலைக்காரர்களாயிருக்கக்கூடும். 

குப்புசாமி ஐயர்.- அவ்விதம் இருந்தால் நான் பயப்பட நியாயமில்லையே . அங்கிருந்தவர்களில் இருவர் கோர்ட் உத்தியோகஸ்தர்களும், ஒருவர் அரங்க ராவ் அவர்களுமே! 

ஜெகநாத முதலியார் – ஆ! ஆ! முட்டாள் பார்ப்பான். என்னவேலை செய்து விட்டீர்! எல்லாக்காரியங்களையுங் கெடுத்துவிட்டீரே! இனி என்ன செய்கிறது! நம்முடைய இரகசியம் வெளிக்கு வந்து விட்டதே! ஐயோ! என்மேல் நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்த அரங்கராவ் அவர்களுக்குக் கெட்ட அபிப்பிராயம் உண்டாகும்படி செய்துவிட்டீர். இனி கோர்ட் வியாச்சியமும் நமக்கனுகூலமாக முடியுமென்று எவ்விதம் சொல்லுகிறது! மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கயதுபோல் உம்மைத் துணைகொண்டு மோசம் போனேன். வெண்ணெய் திரளும் பொழுது தாழி யுடைந்தது போலானதே ! கோர்ட் வியாச்சியம் எனக்கனுகூலமாக முடியப்போகும் சமயத்தில் இந்த இரகசியத்தை வெளியில் கொட்டிவிட்டீரே ! (என்று தலையில் கையை வைத்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தார்.) 

குப்புசாமி ஐயர்.- ஐயா! எல்லாம் கெட்டுப்போய் விட்டதென்று நீர் கவலை கொள்ளவேண்டாம். நியாயாதிபதி அரங்கராவ் அவர்கள் உம்மை மேன்மையாகவே நினைத்திருக்கிறார். நீர் ஏதாகிலும் ஓர் காரணத்தைக் கொண்டு இவ்விதம் செய்திருக்கவேண்டுமேயன்றிச் செழுங்கமலத்தின் நிலத்தை யபகரிக்க எண்ணங்கொண்டு செய்திருக்கமாட்டீர். இன்னும் சில நாளையில் அருணாசல முதலியார் சொத்தெல்லாம் உம்மைச்சேரப் போவதால் நீர் ஒருவர் சொத்தை அபரிக்க எண்ணங் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று நினைத்து அவர் என்னைப்பார்த்து, ஐயரே! இவ்விடத்தில் நடந்த யாவும் வெளிவராதென்றும் செழுங்கமலத்தின் நிலத்தை ஒரு விநாடியும் காலதாமசஞ் செய்யாமல் அவளிடம் கொடுத்து நாளை ஜெகநாதமுதலியாரை என்னிடம் வரும்படி சொல்லுமென்றும் என்னை அவர் அனுப்பினார். ஆனதால் காலம் போக்காமல் உம்மைத் தேடி இந்நேரத்தில் வந்தேன். 

ஜெகநாத முதலியார்.- ஐயரே ! முதலில் நீர் துக்கத்தைக் கொடுத்தாலும் முடிவில் சந்தோஷமான சமாசாரத்தை உரைத்தீர். அரங்கராவ் அவர்கள் தயவிருந்தால் போதுமானது. மற்றவர்களைக் கருதவேண்டிய அவசியமில்லை. அவர் சொல்லிய விதம் செய்தால் நமது காரியம் அனுகூலப்படத் தடையொன்றுமில்லை. எந்த நியாயாதிபதியாகிலும் எனக்கு விரோதமாகத் தீர்மானஞ் சொல்ல முடியுமா? 

குப்புசாமி ஐயர்.- எவ்விதம் முடியும்! அருணாசல முதலியார் இறந்தது யாவருக்கும் தெரிந்ததே! அவர் பெண்சாதி பூரண கர்ப்பத்தோடு ஓடி விட்டது ஒருவருக்கும் தெரியாதோ? 

ஜெகநாத முதலியார்.- ஓய்! ஓய்! என்ன காணும் உளறுகிறீர். மெதுவாகப் பேசும். யாராகிலும் நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தால் நமக்குக் கெடுதியாக முடியுமென்று நினைக்கவில்லையா? (என்று சொல்லிக் கதவைத் திறந்து பார்த்து ஒரு மனிதன் தூரத்தில் போவதைக் கண்டு) யார் அங்கு போவது? (என்று கேட்டார்.) 

நாகபூஷணம் ஒடிவந்து பிரபு! தேவரீரைப்பார்க்கவேண்டுமென்று ஓரன்னியன் இவ்விடம் வந்தான். இந்நேரத்தில் தேவரீரைப் பார்க்கமுடியாதென்று சொல்லியனுப்பிவிட்டேன் என்றான். 

ஜெகநாத முதலியார் – வந்தவன் தன்பெயர் இன்னதென்று சொன்னானா?

நாகபூஷணம் – தன்பெயரைச் சொன்னால் தெரியாதென்றும், தன்னைப் பார்த்தால் இன்னவனென்று அறிந்துகொள்ளக் கூடுமென்றும் சொன்னான். 

ஜெகநாத முதலியார் – அவன் என்ன விஷயமாக வந்தான் என்று கேட்கவில்லையா? 

நாகபூஷணம் – தேவரீரிடத்தில் யாசகார்த்தமாய் வந்ததாகச் செப்பினான்.

ஜெகநாத முதலியார் – யாசகத்துக்கு வர நல்ல சமயம் பார்த்து வந்தான். ஒருவரையும் உள்ளே விடவேண்டாம். 

என்று அறைக்குள் வந்து, ஐயரே ! நீரென்ன என்தமையன் பெண்சாதி பூரண கர்ப்பத்தோடு ஓடிவிட்டாள் என்று சொன்னீரே! அவள் கர்ப்பத்தோடு இறந்தாள் என்று உம்மிடத்தில் அனேக முறை கூறியிருக்க நீர் அவள் ஓடிவிட்டாள் என்று சொன்னீரே? இதை யாராகிலும் கேட்டால் கோர்ட் வியாச்சியம் எவ்விதம் முடியும்? 

குப்புசாமி ஐயர்.- ஐயா! நாம் இருவரும் தனித்திருந்ததால் அவ்விதம் சொன்னேன். வேறொருவர் முன்னிலையில் அவ்விதம் சொல்லுவேனா?

ஜெகநாத முதலியார்.- “பகலில் பக்கம் பார்த்துப்பேசு, இரவில் அதேனும் பேசாதே” என்பதைக் கவனித்துப் பேசவேண்டும். அரங்கராவ் அவர்கள் மனம்போல் நாம் நடப்பதே உத்தமம். நான் கொடுக்கும் பத்திரத்தை நீரே கொண்டுபோய் என் தங்கையிடம் கொடுத்துப் பத்திரத்துக்குச் சேரவேண்டிய தொகையை என்னிடம் பெற்றுக் கொண்டதாகச் சொல்வதோடு, நாளை நான் வந்து பார்ப்பதாகவும் சொல்லும். (என்று இருப்புப் பெட்டியைத் திறந்து பத்திரத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்.) 

“உம்முடைய இஷ்டம்போல் செய்கிறேன்” என்று குப்புசாமிஐயர் விடை பெற்றுப் பத்திரத்தோடு சென்றார். அரங்கராவ் அவர்கள் கட்டளைப் பிரகாரம் நாம் நடந்தது நம்முடைய வரும்படியைச் சூனியமாக்கி விட்ட தென்று அவர் அறிந்தால், உடனே நம்முடைய தமையன் சொத்து நமக் குச் சேரும்படி தீர்மானஞ் செய்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு ஜெகநாத முதலியார் இருக்கும்பொழுது, நாகபூஷணம் கதவைத் திறந்து, அவர்கள் வந்துவிட்டார்கள் அழைத்துக்கொண்டு வருகிறதா? என்றான்.

ஜெகநாத முதலியார் – நாகபூஷணம், நீ இன்று பெரும்பைத்தியக்காரனாய் விட்டாய். நான் அவர்களுக்காக நெடுநேரம் காத்துக்கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா? அவர்களை வெளியில் நிறுத்தியா வைத்திருக்கிறாய்? அவர்கள் என்ன நினைத்துக்கொள்ளுவார்கள்? விரைவில் அழைத்துவா. 

நாகபூஷணம் நீங்கியபின் தனக்கு அனேக வருடங்களாகப் பெரியதொகை யைக் கொடுத்துவந்த பத்திரம் நம் கையிலிருந்து போய்விட்டதே! நாளைவரும் பலாப்பழத்தைவிட இன்று கிடைத்த களாப்பழமே மே லென்றிராமல் பத்திரத்தைக் கொடுத்துவிட்டோமே! இனி நம்முடைய செலவுக்கென்ன செய்யப்போகிறோம் என்கிற எண்ணத்தால் துக்கத் தோடிருந்த ஜெகநாத முதலியார் ஒருவாறு சந்தோஷத்தை வலுவந்தத்தால் வரவழைத்துக் கொண்டிருக்கும்பொழுது, இரண்டு சுந்தரமான பெண்கள் வருவதைக்கண்டு, எதிர்சென்று இருவரையுங் கட்டித் தழுவி என்னை நெடுநேரம் ஏன் கார்த்திருக்கச் செய்தீர்கள்? என்கண்மணிகளே! என்று இருவரையும் முத்தமிட்டார். 

முதல் பெண்.- நான் நெடுநேரம் பாலாமணிக்காகக் காத்திருந்ததால் என் மேல் தப்பித்தமில்லை. 

பாலாமணி.- தாங்கள் எங்கள் இருவருக்கும் செய்து கொடுத்திருந்த ஒட்டியாணங்களில் என் ஒட்டியாணத்தின் கொக்கி வளைந்து கொண்டதால் அதைத் தட்டானிடம் கொடுத்திருந்தேன். அவனால் நேரமானதே யன்றி ரூபாவதி சொல்வதுபோல் என்னால் நேரமாகவில்லை. 

ஜெகநாத முதலியார் – நீங்கள் முன்னேரத்தில் வந்து விடுவீர்களென்றே சாப்பாடு முதலானதும் சித்தஞ் செய்ய உத்தரவளித்திருந்தேன். இப்போது சித்தஞ்செய்யச் சொல்லுகிறதா? 

ருபாவதி. நாங்கள் சாப்பிட்டே வந்தோம். ஆயினும் தங்களுடைய மனம் சந்தோஷமடைய உட்கார்ந்து எழுந்திருக்கிறோம். 

ஜெகநாத முதலியார் – பாலாமணி! நீ என்ன சும்மா இருக்கிறாய்?

பாலாமணி.- உங்கள் மூத்தமனைவி சொல்லும்பொழுது நான் என்னசொல்ல இருக்கிறது?(என்று சிரித்தாள்.) 

ரூபாவதி.- மூத்த மனைவியின்மேல் நாயகனுக்கு ஆசை குறைவுபட்டு இளையவள்மேல் அன்பு அதிகரிப்பது சகஜமா யிருப்பதால், தங்களுடைய அன்புக்காசைப்பட்டுப் பாலாமணி இளையமனைவியாக எண்ணங்கொண்டாள். அதனால் தங்களுடைய அன்பு பாலாமணிமேல் அதிகமாயிருக்கிற தென்று சொல்லாமலே விளங்குகிறது. அதைப் பாலாமணியும் ஒப்புக் கொண்டாள். 

பாலாமணி – நான் இளைய மனைவியாக இருப்பது உனக்குச் சம்மதம் இல்லாத விஷயத்தில் நானே மூத்தமனைவியாக இருக்கிறேன். நீயே இளைய மனைவியாக இருந்து அத்தான் அன்பைக் கைக்கொள். (என்று ரூபாவதியைப் பார்த்துச் சொன்னாள்.) 

ருபாவதி. – நாயகன் அன்பிருந்தால் பிரயோசனமில்லை. அதிகாரம் இருந்தால் போதுமென்று மூத்தமனைவிக்குண்டாகிய சர்வ அதிகாரத்தையும் நீயே ஒப்புக்கொள்ளவா பார்க்கிறாய்? 

பாலாமணி – தலைக்குப்போட்டால் ரூபாவதி காலுக்குத் திருப்புவாள் காலுக்குப்போட்டால் அதைத் தலைக்குத் திருப்புவாள். அவளைப் பேச்சில் வெல்ல யாரால் முடியும் ! 

ருபாவதி. – அத்தான்! அத்தான்! என்னை ஓர் மூடச்சிறுக்கி யென்று பாலாமணி குறிப்பித்ததைப் பார்த்தீர்களா? 

ஜெகநாத முதலியார்.- பாலாமணி அவ்விதம் சொல்லவில்லையே! எப்பொழுது சொன்னாள்? 

பாலாமணி.- அத்தான்! பார்த்துக்கொள்ளுங்கள். தங்களுக்கு முன்னிலையிலேயே என்மேல் பழிபோடுகிறாள். இவ்விதமாகவே என்மேல் அடிக்கடிக் குற்றம் சுமத்துகிறாள். 

நுபாவதி.- அத்தான்! நான் பழிபோடுகிறதையும் குற்றம் சுமத்துகிறதையும் சற்றுக் கவனித்துப்பாருங்கள். காலுக்குப்போடுகிறது செருப்பு ; தலைக்குப்போடுவது குல்லாய் இவைகளை மாற்றிப்போடுவோர் யார்? தலைக்குப் போடும் குல்லாயைக் காலில் போட்டும், காலில் போடும் செருப்பைத் தலையில் போட்டும் இருப்பவரைத் தாங்கள் கண்டால் தாங்கள் என்ன சொல்லுவீர்கள்? அவர்களை மூடரிலும் பெரு மூடர் என்று சொல்லமாட்டீர்களா? 

பாலாமணி – ரூபாவதி! உன்னோடு வார்த்தையாடி வெல்ல என்னால் முடியாதென்று முன்பே அத்தானிடம் சொல்லியிருக்கிறேன். நான் பேச வில்லை. வாயை மூடிக்கொண்டேன். 

ரூபாவதி.- நான் பெரும்பட்டி. என்னோடு பேசுவது தகாதென்றோ வாயை மூடிக்கொண்டாய்? 

பாலாமணி.- இதேது! பெரிய வம்பாய் முடிந்தது. நான் பேசுகிறேன். அம்மா! 

ருபாவதி.- நீ பேசினால் அதற்குத்தக்கவிடை சொல்ல என்னால் முடியா தென்றோ பேசத்துணிந்தாய்? நான் கிழச்சிறுக்கி; நீ அப்படியில்லாது சிறிய பெண்ணாயிருக்கிறாயென்பதை என் அத்தானுக்குக் குறிப்பித்துக் காட்டவா என்னை “அம்மா” என்றழைத்தாய்? 

ஜெகநாத முதலியார் – ஏதேது! உங்களிருவரையும் சற்று நேரம் பேசவிட்டால் வீண்சண்டை உண்டாகும்போல் காணப்படுகிறது. 

என்று இருவரையும் தழுவிக்கொண்டு சாதம் பரிமாறி யிருக்கும் அறைக்குள் அழைத்துச்சென்று உட்காரவைத்து நாம் மூவரும் ஒன்றாய் இருந்து சாப்பிடலாமா? என்றார். 

நுபாவதி.- நான் இவளோடு உட்கார்ந்து சாப்பிடமாட்டேன்.

பாலாமணி.- நானும் இவளோடு உட்கார்ந்து சாப்பிடமாட்டேன். 

ஜெகநாத முதலியார் – நீங்கள் இருவரும் இன்னும் கோபமாயிருந்தால் எனக்கும் சாப்பாடுவேண்டாம். 

ருபாவதி – தங்களைப் பட்டினியாயிருக்கும்படி செய்யவா நாங்கள் வந்தோம்? வேண்டாம். வேண்டாம். நாங்களும் சாப்பிடுகிறோம். 

பாலாமணி. – அத்தானைப் பட்டினியாகப்போட்டு நாம் உயிரோடிருக்கவா? எல்லாம் ஒன்றாயிருந்து சாப்பிடலாம். 

ஜெகநாதமுதலியார் சந்தோஷமடைந்து பெரிய இலையொன்று போடச் செய்து மூவரும் ஒன்றாய் இருந்து ரூபாவதியும் பாலாமணியும் தங்கள் எச்சிலை ஜெகநாதமுதலியாருக்கு ஊட்டவும், தாசிகளுடைய வாயை எவரும் துப்பும் தம்பலப்பாத்திரத்திற்கு ஒப்பிட்டிருப்பதை நினையாமல், அவர்களுடைய எச்சிலை அமுதமாக உண்டு, தம்முடைய எச்சிலை அவர்களுக்குககொடுத்து விளையாட்டோடு போஜனத்தை யுண்டபின், இருவரையும் சற்றுநேரம் பாடும்படி செய்து, பின் பல வித கேளிக்கையில் இரவைக்கழித்தார். பொழுது நன்றாய் விடியு முன் இருபெண்களும் ஜெகநாதமுதலியாரிடம் விடைபெற்றுப் போகும்பொழுது ரூபாவதி பாலாமணியைப்பார்த்து நாம் இராத்திரி பேசியதைக்கண்டு முதலியார் உண்மையாகச் சண்டைபோட்டுக் கொண்டோமென்றே நினைத்திருந்தார். 

பாலாமணி. – ஆம்! ஆம்! அதை நான் கண்டுகொண்டே எனக்குக் கோபம் அதிகம் உண்டானதுபோல் பேசினேன். இன்று அவர் அடிக்கடி பெரு மூச்சுவிட்டுக் கொண்டிருந்ததைக் கவனித்தாயா? 

ருபாவதி – தூண்டிற்காரனுக்கு மிதப்பைமேல் கண்ணில்லாமல் வேறிடத் தில் போகுமா? அவர் சந்தோஷமாயிருந்தால் நான் ஒன்றுங் கேளா மல் வந்திருப்பேனோ? அவருடைய தமையன் பூஸ்திதியெல்லாம் அவரைச் சேரப்போகிற பிரஸ்தாபம் அதிகமாக இருக்கிறது. ஆடு கொழுக்கிறதெல்லாம் இடையனுக்கு இலாபம் என்பதுபோல முதலி யார் கையில் பொருள் அதிகப்பட்டால் நமக்கு இலாபமே!

பாலாமணி.- ஆம்! ஆம்! ஆளுக்கோர் ஐம்பது வேலியாவது தட்டிக்கொள் ளவேண்டும். முதலியாருக்குக் கொஞ்சம் சாராயம் கொடுத்துவிட்டு, எதில் கையொப்பம் வைக்கச்சொன்னாலும் தடைசெய்யார். 

ருபாவதி.- நீ பெரும் பைத்தியக்காரி ! நம்முடைய வாக்கைக் குருவாக்காக எண்ணும் முதலியாருக்குச் சாராயமேன்? அவர் சாராயங் குடித்தால் சூதாடுமிடத்திற்கு ஓடிவிடுவாரேயன்றி நம்மோடு நெருங்கி வார்த்தை யாடார். 

பாலாமணி – முதலியார் என் தாயாரை வைத்திருந்தபொழுது அளவற்ற திரவியத்தை என் தாயாருக்குக் கொடுத்ததாக என் தாயார் சொல்லி யிருக்கிறாள். 

ருபாவதி. – ஆம்! உங்களுடைய வீட்டில் கொள்ளைபோகாமலிருந்தால் நீ பெரும் பணக்காரியாக இருந்திருப்பாய். 

பாலாமணி.- ஆம்! என்ன செய்கிறது! என் தாயார்தேடிய சொத்துக்கள் அவளோடு தொலைந்தன. நம்மவர்களில் அநேகர் முதலியாராலும் சூதாடி இரத்தினத்தாலும் பொருள் தேடிக்கொண்டார்களென்று கேள்வி.

ரூபாவதி – சூதாடி இரத்தினம் இப்பொழுது எங்குங் காணப்படவில்லையே. அவன் சமாச்சாரம் ஏதாகிலும் தெரியுமா? 

பாலாமணி.- அவன் ஓர் தனவந்தன் மகளை விவாகம் செய்துகொள்ளவேண்டிய ஏற்பாடுகள் பண்ணி அது தவறினபின் கடன் அதிகப்பட்டு வெளி வராமல் இருப்பதாகக் கேள்வி. அவனும் முதலியாரைப்போல் பெரிய மடையனேயன்றி வேறல்ல. 

இவ்விதம் ரூபாவதியும் பாலாமணியும் வார்த்தையாடிக்கொண்டு அவரவா வீடு சேர்ந்தார்கள். 

காலை எட்டுமணிக்கு நடராஜமுதலியாரும் செழுங்கமலமும் வார்த்தையாடிக்கொண்டிருக்கும்பொழுது கமலாக்ஷி அவர்களுக்குக் காப்பிகொண்டு வந்து சொடுத்தாள். அத்தருணத்தில், அம்மா! செழுங்கமலம்! என்றழைத்துக் கொண்டு, ஜெகநாதமுதலியார் வீட்டுக்குள் வந்தார். செழுங்கமலம் தமையனைப்பார்த்து, அண்ணா! வாருங்கள்! எங்களுக்கு நற்காலம் பிறந்ததென்று காட்டத் தாங்கள் இவ்வளவு தூரம் வந்தீர்கள், உட்காருங்கள், என்று ஒரு நாற்காலியைக் கொண்டுவந்துபோட்டாள்.

கமலாக்ஷி – மாமா அவர்கள் நம்மை. மறந்துவிட்டார்களென்றே நினைத்திருந்தேன், உட்கார்ந்து காப்பி சாப்பிடுங்கள். (என்று காப்பி கொடுத்தாள்.)

ஜெகநாத முதலியார்.- நான் சாப்பிட்டுவந்தேன்; ஆயினும் உன் கையால் கொடுப்பதைத் தடுக்கேன். (என்று வாங்கி உண்டு) நான் இதுபரியந்தம் வராமலிருந்ததன் காரணம் நீங்களே அறிந்திருக்கக்கூடும்.

செழுங்கமலம்.- தங்கள் கருத்தை எவ்விதம் அறியக்கூடும் அண்ணா? தங்கள் கருத்தை யாரிடத்திலாவது சொல்லியனுப்பியிருந்தால் அறிந்து கொள்ளக்கூடும். 

நடராஜமுதலியார் அவ்விடம் இருப்பதைக்கண்ட ஜெகநாத முதலியார் போகச் சம்மதப்படாமல் தம் தங்கையையும் கமலாக்ஷியையும் பார்த்து, உங்களிடத்தில் தனித்துப் பேசவேண்டியதால் வீட்டுக்குள் வாருங்கள் என்று அழைத்துச்சென்று, அங்கு உட்கார்ந்திருக்கும் கிழவன் யாரென்று கேட்டார். 

செழுங்கமலம். – அண்ணா! அவர் ஒரு பரதேசி. அவர் பாதையில் களைத்து விழுந்திருந்ததைக்கண்டு கமலாக்ஷி அழைத்து வந்தாள். அதுமுதல் அவர் நம்முடைய வீட்டில் இருக்கிறார். 

ஜெகநாத முதலியார். – அவர் என்ன குலம்? உங்களுக்குத் தெரியுமா?

செழுங்கமலம்.- அவர் பெயர் நடராஜ முதலியார் என்பதால் அவர் நம்முடைய குலமாகவே இருக்கவேண்டும். 

ஜெகநாத முதலியார் – அவர் முதலியார் என்று எப்படித்தெரியும்? அவர் சொன்னதை நம்பியா முதலியார் என்கிறாய்? 

செழுங்கமலம்.- ஆம் அண்ணா! அவர் பொய் எதற்காகச் சொல்லவேண்டும். 

ஜெகநாத முதலியார் – அவரைத் தெரிந்தவர்கள் இந்த ஊரில் யாராகிலும் இருக்கிறார்களா? 

செழுங்கமலம். – ஒருவரையும் காண்கிலோம். அவர் எக்குலத்தவராயிருந்தாலும் நமக்கென்ன? நாம் கொள்ளப்போகிறோமா? கொடுக்கப்போகிறோமா? ஒன்றும் இல்லை. ஆதரவற்றிருப்பவர்களை ஆதரிப்பது பெரும் புண்ணியமே என்று நினைத்து அவரை உபசரித்து வருகிறோம்.

ஜெகநாத முதலியார் – அவரை ஆதரிக்காமல் துறத்திவிடென்று சொல்லுவார் ஒருவரும் இல்லை. நான் இவ்விடம் வந்தபொழுது நான் இன்னா னென்று அறிந்தும், எழுந்து மரியாதை செய்யாமல் இருந்தது அசங்கிய மாக இருக்கிறது. மற்றொரு காலத்தில் என்னைக் கண்டால் தக்கமரியாதை செய்யும்படி அவருக்குச் சொல்லிவையுங்கள். நான்கு பெரிய மனிதரோடு இருக்கும்பொழுது என்னைக் கண்டு மரியாதை செய்யாமலிருந்தால் அது எனக்கு மிக்க அவமானமாயிருக்கும். நேற்று இரவு எத்தனை மணிக்குக் குப்புசாமி ஐயர் பத்திரம் கொண்டு வந்தார்?

செழுங்கமலம்.- எந்த பத்திரம? 

ஜெகநாத முதலியார் – எந்த பத்திரமா! இராத்திரி சொண்டுவந்து கொடுத்தது இன்ன பத்திரம் என்று அறியாமலா வாங்கிவைத்துக் கொண்டாய்?

செழுங்கமலம்.- எந்த பத்திரத்தை வாங்கிவைத்துக் கொண்டேன்? யார் கொண்டுவந்து கொடுத்தது? இஃதென்ன தாங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் தெரியவில்லையே! 

ஜெகநாத முதலியார். – உன் நிலங்களை ஒற்றிவைத்த பத்திரத்துக்கு நேற்று நான் பணங்கொடுத்துத் தீர்த்துவிட்டுப் பத்திரத்தை உன்னிடம் கொடுத்துவிடும்படியாயும், அக்கடன் இருந்தால் நான் இவ்விடம்வர வெட்கமாயிருந்ததாயும் சொல்லும்படி அனுப்பியிருந்தேன். அவர் இன்னும் கொண்டுவந்து கொடுக்காமலிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது! இராத்திரி நேரமாய்விட்டதால் காலையில் கொண்டுபோய்க் கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறார்போல் காணப்படுகிறது. அவரை யழைத் துக்கொண்டு வருகிறேன். (என்று வெளியிற்போக எத்தனித்தார்.)

செழுங்கமலம்.- பத்திரத்துக்கொன்றும் அவசரமில்லை. தாங்கள் இன்று இங்கிருந்து சாப்பிட்டுப்போகலாம் அண்ணா. 

கமலாக்ஷி.- ஆம் மாமா! சாப்பிட்டுப்போகலாம். 

சாப்பாட்டுக்கென்ன ! நான் போய்வருகிறேன், என்று நடராஜ முதலியார் இப்பொழுதாகிலும் மரியாதை செய்கிறாரா பார்க்கலாம் என அவரைப் பார்த்துக்கொண்டே ஜெகநாத முதலியார் சென்றார். 

செழுங்கமலம் நடராஜ முதலியாரிடம் வந்து, அண்ணா! இப்பொழுது இங்கு வந்தவரே என் தமையன் ஜெகநாத முதலியார். 

நடராஜ முதலியார். – ஐயோ அம்மா என்ன காரியம் செய்துவிட்டாய்! எனக்கொரு வார்த்தை சொல்லக்கூடாதா? நான் அவருக்கு ஒரு மரியாதையும் செய்யவில்லையே! அவர் என்னைக் கேவலமாக நினைத்துக் கொள்ளுவாரே! நான் அவர் விஷயத்தில் பெரும் அபராதியானேன். ( என்று துக்கப்பட்டார்) 

செழுங்கமலம்.- தாங்கள் அவரை இன்னாரெனக் கண்டுகொள்வீரென்றே சொல்லாமல் இருந்தேன். தாங்கள் மரியாதை செய்யாமற் போனதால் தோஷம் இல்லை. அவர் எங்கள்மேல் தயவாய் நிலத்தைத் திருப்பி விட்டதாகவும், பத்திரத்தை இராத்திரியே கொண்டுபோய்க் கொடுக்கும்படி சொன்னதாகவும், பத்திரம் வந்து சேராததால் ஆளை அழைத்து வருகிறதாகவும் சொல்லிப்போயிருக்கிறார். 

கமலாக்ஷி – அம்மா! மாமாவின் வார்த்தையை நம்புவது கூடாது. 

நடராஜ முதலியார் – ஜெகநாத முதலியார் அனாவசியமாகப் பொய் சொல்ல வேண்டிய காரணம் தோன்றவில்லை. 

கமலாக்ஷி – செட்டியார் நமக்குப் பணங்கொடுப்பதாகக் கேள்விப்பட்டுப் பத்திரக்காரன் ஓடிப்போய்விட்டான்; அவன் வந்தபின் வாங்கிக் கொடுக்கிறேனென்று சொல்லுவதற்கு அஸ்திவாரம்போட எண்ணி இங்கு வந்திருக்கக்கூடாதா?

நடராஜ முதலியார். – கமலாக்ஷி சொல்லுகிறதும் உண்மையாக முடிந்தாலும் முடியக்கூடும்.நாம் அவசரப்பட்டு எந்தத் தீர்மானமும் செய்யக்கூடாது. எல்லாம் போகப்போகப் பார்த்துக்கொள்ளலாம். 

செழுங்கமலம்.- நாம் செட்டியாரிடத்தில் கடன்கேட்டது அவருக்கு எப்படித் தெரியும்? 

நடராஜ முதலியார் – அம்மா! உன் தமையன் வார்த்தையை நம்பி நாம் வார்த்தையாடிக் கொண்டிருப்பதில் ஒரு பலனுமில்லை. வேறு விஷயத்தில் நமது கவனத்தைச் செலுத்தலே உத்தமம். (என்று அவர்கள் எண்ணத்தை வேறு விஷயத்தில் மாற்றி வார்த்தையாடிக்கொண்டிருந்தார்.) ஜெகநாத முதலியார் வந்துபோன இரண்டுமணி நேரத்திற்குப்பின் நாகபூஷணம் செழுங்கமலத்தை யழைத்து, அம்மா! குப்புசாமி ஐயர் இன்னும் அகப்படவில்லையென்றும், அவரைக் கண்டுபிடிக்க வேண்டிய முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் தங்களிடம் சொல்லி வரும்படி எஜமான் உத்தரவளித்தார் என்றான். 

செழுங்கமலம்.- அப்பா நாகபூஷணம்! எனக்கதுவிஷயத்தில் மனச்சலிப் பில்லை. என் தமையனைச் சந்தோஷமாக இருக்கும்படி சொல். (என்று நாசபூஷணத்தை அனுப்பினாள்.) 

12-ம் அத்தியாயம்

நடராஜ முதலியாரும் செழுங்கமலமும் கமலாக்ஷியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்பொழுது வைத்தியர் வந்து அம்மா, செழுங்கமலம்!  உன் தமையன் ஜெகநாத முதலியார் இவ்விடம் வந்து போனதாகக் கேள்விப்பட்டேன், அது உண்மையா? என்று கேட்டார்.

நடராஜ முதலியார் – எப்பொழுது கேள்விப்பட்டீர்? வைத்தியரே! இத்தனை நாள் பொறுத்து அதைக்கேட்க வந்தது ஆச்சரியமாக இருக்கிறது!

வைத்தியர் – பெரியவரே! நான் கேள்விப்பட்டு நெடுநாளாயிற்று. நோயாளிகள் நால்வரைப் பார்த்து வருவதால் எனக்குக் கிஞ்சித்தும் சாவகா சப்படவில்லை. ஆனதால் இவ்விடம் வரத்தடைப்பட்டிருந்தது.

செழுங்கமலம். – ஆம்! அண்ணா! அண்ணன் இவ்விடம் வந்து என்னுடைய நிலத்துக்காசக் கொடுக்கவேண்டிய கடனைத் தீர்த்துவிட்டுப் பத்திரத் தை என்னிடம் கொடுத்துவிடும்படி பிராமணனை அனுப்பியதாகச் சொல்லிப், பத்திரம் வந்து சேர்ந்ததா என்று என்னைக் கேட்கவந்தார். நான் பிராமணனையும் பார்க்கவில்லை,பத்திரமும் கிடைக்கவில்லை என்ற பின், அவனைக் கொண்டுவருவதாகச் சென்றவர் மாதம் மூன்றாகியும் இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. 

வைத்தியர்.- ஜெகநாத முதலியார் சொல்வது உண்மையாக இருக்கக்கூடும். சில மாதங்களாய் அவருடைய செலவு அதிகம் குறைந்துவிட்டதாக அனேகர் சொல்லுகிறார்கள். உன்னுடைய நிலத்தின் வரும்படி அவர் கையிலிருக்கும் பொழுது அவர் செலவுக்குக் கஷ்டப்படாமலிருந்து இப்பொழுது பிரயாசைப்படுகிறதாகக் கேள்வி. 

நடராஜ முதலியார் – நிலத்தை ஒற்றிவைத்து விட்டால் நிலத்தின் வரும் படி ஜெகநாத முதலியாருடைய செலவுக்கு எவ்விதம் உபயோகமாகும்? ஒற்றிவாங்கிய பிராமணன் அல்லவா வரும்படியை அனுபவிக்கவேண்டும்? 

வைத்தியர்.- அந்த சமாச்சாரம் உங்கள் பரியந்தம் இன்னும் எட்டாமலா இருக்கிறது? ஒப்புக்குப் பிராமணன்பெயரால் ஒற்றியாக எழுதிக் கொண்டதேயன்றி, எல்லா வரவு செலவும் ஜெகநாத முதலியாரே பார்த்து வந்ததாக அனேகர் சொல்லுகிறார்கள். பிராமணனும் ஏதோ பெற்று மாசூலை வசூல் செய்து அவரிடம் கொடுத்துவந்தானாம்.

கமலாக்ஷி.- தாதா சொல்லுகிறது உண்மையாய் இராமற்போனால், அம்மாள் பதினாயிரம் கொடுத்து நிலத்தை மீட்டுக்கொள்ளுகிறே னென்று மாமாவுக்குச் சொன்னபொழுது தடைசெய்ய நியாயமில்லை அல்லவா? 

நடராஜ முதலியார் – தன் செலவைக் கருதியே நிலத்தை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.கமலாக்ஷி சொல்வது முற்றிலும் நியாயமாகவே காணப்படுகிறது. 

ரெழுங்கமலம் – பிராமணன் ஊரிலில்லாமல் போவானாகில் நிலத்தின் மாசூலை இப்பொழுது யார் வாங்குவார்கள்? 

நடராஜ முதலியார் – மாசூலை அநேக வருடம் பிராமணனே தண்டல் செய்துவந்ததால், அவன் பெண்சாதி பிள்ளைகள் வசூல் செய்யக்கூடும்.

வைந்தியர் – மாசூலைப் பிராமண வீடமாவது அவன் இனத்தாரிடமாவது கொடுக்கக்கூடாதென்று வக்கீல் மூலமாக ஜெகநாத முதலியார் தடை செயதிருக்கிறதாகக் கேள்வி. ஆனதால், பிராமணன் நேரில் வந்து தன் சுதந்தரத்தை நிரூபிக்காமல் மாசூலை ஒருவரும் பெற்றுக்கொள்ள முடியாது. 

நடராஜ முதலியார் – ஐயா வைத்தியரே! அது எப்படியானாலும் ஆகட்டும். நற்காலம் வரும்பொழுது தானே வரும். அது விஷயத்தைக் குறித் துப் பேசுவதால் செழுங்கமலத்துக்குச் சஞ்சலமாக இருக்கும். ஆனதால் அந்தப் பேச்சை நிறுத்தி முத்துக்குமார முதலியார் பெண்சாதிக்கு இப் பொழுது எப்படி யிருக்கிறதென்று சொல்லவேண்டும்.

வைத்தியர் – முத்துக்குமார முதலியார் பெண்சாதியைக் குறித்துத்தானா கேள்விப்பட்டீர்? அவருடைய சமாச்சாரம் ஒன்றும் எட்டவில்லையா? பேச்சியாயி அம்மாள் தன் மருமகள் விஷயத்தில் செய்த கொடுமையை உலகத்தில் யாவரும் கேட்டுப் பயங்கொண்டு, இனி மருமகள் விஷயத்தில் கொடுமை செய்பவர்களெல்லாம் தன்னைப்போல் துன்பப்பட்டுச் சாகவேண்டுமென்று சாக்ஷிகாட்டுதல்போல், இன்னும் உயிரோடிருந்து எல்லா நரக வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். முத்துக்குமார முதலியாரும் தன் பெண்சாதி வார்த்தையைக் கேட்டு மருமகளை அடிச்சடி உதைத்துக்கொண்டிருந்த காலில் சிறிய சிரங் கொன்று உண்டாகி உள்ளுக்குள் சதையைத்தின்று கொண்டுபோய் இப்பொழுது எலும்பும் நரம்புமட்டும்தெரிகின்றன. காலை வெட்டி வைத்தியம் செய்தால் ஒரு வேளை குணமாகும் என்றேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அவர்களிருவரும் இவ்வித துன்பப்படுவதைக் கண்டவர்கள் அவர்களுக்காகப் பரிதாபப்படாமல், மருமகள் வதையால் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறார்களென்று அவர்களுக்கெதிரிலேயே சொல்வதோடு, யாராகிலும் மருமகளைத்திட்டினாலும் அடித்தாலும் முத்துக்குமார முதலியார் சதியையும் அவர் பெண்சாதியின் சதியையும் நினைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர்களை உதகரிக்கிறார்கள். மனோன்மணி தன் மாமனார் மாமியாரிடத்தில் பட்ட கஷ்டத்தைவிட ஆயிரமடங்கு அதிக துன்பத்தை மூத்துக்குமார முதலியாரும் அவர் பெண்சாதியும் அனுபவிக்கிறார்கள். அவர் செழுங்கமலத்தைப் பார்க்கவேண்டுமென்று என்னை அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார். நானும் ஒப்புக்கொண்டு வந்தேன். இனி செழுங்கமலத்தின் இஷ்டத்தை அறியவேண்டியதே.

செழுங்கமலம் – நான் வரத்தடையொன்று மில்லை. எப்பொழுது அழைத்துப்போகிறீர்கள்? 

வைத்தியர் – அதைக்குறிக்க முடியவில்லை. நான் சலியாண சுந்தர முதலியார் வீட்டுக்குப் போகிறேன். அங்குபோனால் அவர் எப்பொழுது என்னைப் போகும்படி சொல்லுகிறாரோ தெரியவில்லை. அவர் வீட்டிலிருந்து வந்தவுடன் உன்னை அழைத்துப்போகத்தடையில்லை. 

நடராஜ முதலியார்.- ஐயா வைத்தியரே! நீர் வருமளவும் காத்துக்கொண்டிருப்பதிற் பிரயோசனமில்லை. நானும் செழுங்கமலமும் பார்த்து வருகிறோம். நேரமிருந்தால் அப்படியே கலியாணசுந்தர முதலியார் வீட்டுக்கு வருகிறோம். 

வைத்தியர்.- அது நல்லயோசனை. மணி பதினொன்றாகிறது. நானும் போய் வருகிறேன். 

செழுங்கமலம். – அண்ணா! நாம் சாப்பிட்டுப்போவதே உத்தமம். வந்து சாப் பிட அதிக நேரமாய்விடும். 

நடராஜ முதலியார்.- ஆம் அம்மா! கமலாக்ஷி! எங்களுக்குச் சாப்பாடுபோட்டு விடு. நாங்கள் வருமளவும் என்ன செய்யப்போகிறாய்?

கமலாக்ஷி – ஏதாகிலும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். யாவும் சித்தமா யிருக்கிறது; எழுந்திருங்கள். (என்று கை கால் சுத்திசெய்துகொள்ள ஜலங்கொடுத்து இருவருக்கும் வட்டித்து நின்றாள்.) 

இருவரும் சாப்பிட்டுக் கமலாக்ஷியைப் பத்திரமாக இருக்கச்சொல்லி முத்துக்குமார முதலியார் வீடு சேர்ந்தார்கள். சோமசுந்தரம் வெளியிலிருந்து வீட்டுக்குள் போகும்போது நடராஜ முதலியாரும் செழுங்கமலமும் தங்கள் வீட்டுக்கு வருவதைக்கண்டு எதிர்சென்று அழைத்துத் தன் தந்தை படுத்திருக்கும் அறையில் விட்டான். 

முத்துக்குமார முதலியார் நடராஜமுதலியாரையும் செழுங்கமலத்தையும் பார்த்து, ஐயா! ஊம் ஊம்.அம்மா! ஊம். ஊம்: வாருங்கள். ஊம். ஊம் உட்காருங்கள். ஊம்.ஊம். ஐயோ! அப்பா! ஊம்.ஊம். என் கால்வலி ஊம்.ஊம் பொறுக்க ஊம்.ஊம்.முடியவில்லையே! ஊம்.ஊம். நான் என்ன ஊம். ஊம். செய்யப்போகிறேன்! ஊம்.ஊம். அந்தப்பாவி ஊம் ஊம்.என்காலை. ஊம்.ஊம்.அறுத்துவிட ஊம். ஊம். சொல்லுகிறானே! ஊம்.ஊம்.என்கால் போனபின் ஊம். ஊம். என்ன செய்வேன்! ஊம். ஊம். ஐயா! நான் ஊம்.ஊம், பிழைத்துக்கொள்ளுவேனா ? ஊம். ஊம். அம்மா செழுங்கமலம்! ஊம்.ஊர். என்னைப் பேசவிடாமல் ஊம்.ஊ ளம். இந்த நோய் காலைத் துளைத்துக்கொண்டிருக்கிறது.ஊம்.ஊம்.

நடராஜ முதலியார்.- ஐயா! தாங்கள் விரைவில் சொஸ்தப்படுவீர். ஒன்றுக் குங் கவலைகொள்ளவேண்டாம். சோமசுந்தரம்! பெரியவருக்குத் தேக அசௌக்கியமாக இருக்கிறதென்று இன்று வைத்தியரால் கேள்விப் பட்டதேயன்றி இதற்குமுன் தெரியாது. கால் இப்பொழுது எப்படி இருக்கிறது? 

சோமசுந்தரம். – அப்பாவுக்குக் குதிக்காலில் கொப்புளங்கண்டு அது உள்ளுக்குள் வினைகொண்டு கண்டச்சதை பரியந்தம் தின்றுகொண்டுவந்து விட்டது. முழங்கால் பரியந்தம் எடுத்துவிட்டால் உத்தமமென்று யாவரும் சொல்லுகிறார்கள். அப்பா சம்மதிக்கவில்லை.

முத்துக்குமார முதலியார் – காலையா அறுக்கப்பார்க்கிறீர்கள்! ஊம். ஊம். அது மட்டும் வேண்டாம்.ஊம்.ஊம். எனக்கு விரைவில் சௌக்கியமாய் விடும். ஊம்.ஊம். அந்தக் கழுதையை உதைத்தபொழுதே ஊம்.ஊம். குதிக்கால் நொந்தது. ஊம், ஊம்.என்னவோ நோகிறதென்றிருந்தேன். ஊம்.ஊம், அது பெருந்தொந்தரவைக் கொடுத்துவிட்டது. ஊம், ஊம்.

அச்சமயத்தில் காளியாயியும் அவ்விடம்வந்து செழுங்கமலத்தைப் பார்த்து வாருங்கள் என்றாள். 

செழுங்கமலம். – அம்மா காளியாயி! அண்ணனுக்குச் சாப்பாடு ஏற்றுக் கொள்ளுகிறதா? 

காளியாயி.- நோக்காடு நோக்காடுதான். சாப்பாடு எப்போதும் போலவே. வழக்கம்போல் கிழவனுக்குச் சாப்பிட என்னகேடு! ஒரு படியரிசி சமைத்துப்போட்டாலும் விழுங்கி என் குடியைக்கெடுக்க இருக்கிறான்.

சோமசுந்தரம்.- அப்பா சாப்பிடுகிறதனாலேயா உன்குடிகெட்டுப்போகிறது?

காளியாயி.- என் குடியைக் கெடுக்காமல் வேறு யார் குடியைக்கெடுக்கக் கிழச்சாவான் இருக்கிறான் ! ஒரு நாளைக்கு மூன்றுதரம் முறம் முறம் நான் வாரிக்கொட்டுகிறேனா வேறு யாராகிலும் வந்து வாரிக்கொட்டுகிறார்களா? உன் பெண்சாதி வீட்டைவிட்டுப் போனவுடன் நான் உன்னிடம் வந்து அவளை அழைத்துவர வேண்டியதற்கு, என் குடியைக் கெடுக்க நீயும் மாட்டேன் என்றாய். 

இனி இவ்விடம் காளியாயி இருந்தால் சசோதரனுக்கும் சகோதரிக்கும் வார்த்தை வளருமென்று காளியாயியின் கையைச் செழுங்கமலம் பிடித்து, உன் தாயார் எங்கிருக்கிறார்கள்? பார்த்து வரலாம் வாவென்று இருவரும் சென்றார்கள். காளியாயி ஓர் அறைக்கெதிரில் நின்று இந்த அறையில் அவள் படுத்துக்கொண்டு என் உயிரை வதைத்துக் கொண்டிருக்கிறாள்; சாதம் சாப்பிடாமல் கஞ்சி குடிப்பதால் அடிக்கடி ஒருபடி அம்மாளுக்கு எடுத்து ஊற்றவும், அப்பாவுக்கு முறம் முறம் வாரி எடுக்கவும், மற்றவர்களுக்கு அவித்துக் கொட்டவும் இவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன்; இவள் மருமகளைப் படுத்தின பாட்டாலும் பேசிய பேச்சாலும் நாக்கில் பிளவை புறப்பட்டதோடு கால்கை உதவாமலும் போயின. எனக்கேனம்மா இந்த வில்லங்கம்! கிழவனும் கிழவியும் மாண்டால் இவர்களுடைய ஆஸ்தியை எனக்கா கொடுக்கப் போகிறார்கள்? எல்லாம் அவனைச் சேரப்போகிறது. நான் இவர்களுக்காகக் கஷ்டப்படுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை. இந்தக் கிழநாறி அந்தக் கிழப்பையலிடம்பேசி ஏதாகிலும் கொடுக்கச் சொல்லுவாள் என்று எண்ணினாலும் இவளுடைய வாயடைந்து போய்விட்டது. நான் தோட்டிவேலை செய்து கஞ்சி குடிக்கவா இவர்கள் வீட்டுக்கு வந்தேன்? என்று தன் குறைகளைச் சொல்லி, எனக் கிங்கிருக்க மனமில்லை, நாளையே என் மாமியார் வீட்டுக்குப் போகிறேன்; இவர்கள் இருந்தால் என்ன! இறந்தால் எனக்கென்ன! நான் செய்கிறவேலை யெல்லாம் செய்த பின்னும் அண்ணனுக்கு முழநீளம் கோபம் வருகிறது என்று அழுதாள். 

காளியாயி தன் தந்தைதாய் விஷயத்தில் கொண்டிருக்கும் அருவருப்பைச் செழுங்கமலம் கண்டு, அம்மா காளியாயி! நீ உன் தாய் தந்தைமேல் கோபம்கொள்ளலாமா? கோபங்கொள்ளுகிறதாக இருந்தாலும் அவர்கள் பாயும் படுக்கையுமா யிருக்கும்பொழுது அதை வெளிக்குக் காட்டலாமா? தாய் நலியாயிருக்கும் பொழுது விலகிய வஸ்திரத்தை எடுத்து மூடத் தன் மகள் அருகில் இருக்கவேண்டுமென்று உலகில் சொல்லுவார்களே? அதை எனையாமல் இவ்விதம் பேசுவது அழகா? என்று பேச்சியாயி அம்மாள் அருகில் உட்கார்ந்து, அண்ணி ! தங்களுக்கெப்படி இருக்கிறதென்றாள். பேச்சியாயி அம்மாள் பேச வகை யில்லாமல் வாயையும் சையையும் காலையும் ஒரு கையால் காண்பித்துப் பேசாமலிருந்தாள். செழுங்கமலம் கஞ்சி சாப்பிட்டீர்களா என்று கேட்டாள். அதற்குக் காளியாயி, கஞ்சியா! மணிக்கொருதரம் அரைப் படி குடிப்பாள், ஒருபடி கறந்து வைப்பாள் என்றாள். மகள் சொல்வதைக் கேட்ட பேச்சியாயி அம்மாள் கண்களில் நீரை வடிய விட்டாள். காளியாயி பேசுவதைக் கேட்கச் சகியாமல் செழுங்கமலம் அவ்விடத்தைவிட்டு நடராஜ முதலியார் இருக்கும் இடம் வந்து, அவ்விடம் நின்றிருந்த சோமசுந்தரத்தைப்பார்த்து, அப்பா! இத்தருணத்தில் உன் மனைவியையும் அனுப்பிவிட்டாய்; மனோன்மணி இருந்தால் உதவியாயிருக்காதா? என்றாள். 

சோமசுந்தரம்.- அத்தை ! நான் என்ன செய்வேன்! எல்லாம் தங்களுக்குத் தெரிந்ததே! எனக்கு மனோன்மணியின்மேல் கொண்டிருக்கும் வெறுப்பைக் கவனியாமல் அவளுடைய தாய் வீட்டுக்கு ஒருவனை அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னபோது, அவன் அவளுடைய தாய் வீட்டில் இல்லையென்று வந்தான். அவளுக்குத் தாய் தகப்பன் இல்லாதது தங்களுக்குத் தெரியும் அல்லவா? அவளுடைய சகோதரி சிந்தாமணியையாவது கண்டு கேட்கச் சொல்லலாம் என்றால் அவள் புருடனுக்குப் பயந்துபோன இடம் தெரியவில்லை. அவள் தமையன் சிவப்பிரகாசமும் சில வருடங்களுக்குமுன் வீட்டைவிட்டுப் போனவன் எங்கிருக்கிறானென்று அறிந்து சொல்லுவாரில்லை. 

நடராஜ முதலியார்.-உன்னுடைய உத்தரவில்லாமலா மனோன்மணி போய் விட்டாள்? 

சோமசுந்தரம்.- என் உத்தரவின்றியே அவள் போய்விட்டதைக் குறித்து எனக்கு வியசனமில்லை. அவள் வீட்டை விட்டுப்போனது எனக்கதிக சந்தோஷமே! அவள் இங்கிருந்து என்தாய் தந்தை தங்கை இவர்களால் பட்ட பாட்டை நினைத்தால் என் கர்ப்பம் கலங்குகிறது. ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாகத் தள்ளிவந்தாள். இந்தத் தீங்கெல்லாம் என் தங்கையால் வந்ததேயன்றி மற்றவர்கள்மேல் குற்றஞ் சுமத்துவது நியாயமல்ல. என்தாய் தன் மகள் சொல்லைக்கேட்டும் என் தந்தை தன் மனைவியின் சொல்லைக் கேட்டும் கொடுமையைச்செய்து மனோன்மணியைத் துறத்திவிட்டார்கள். தந்தையும் தாயும் இனி பிழைக்கமாட்டார்கள், தமையன் தயவைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டுமென்று காளியாயி அம்மாள் மனோன்மணி விஷயத்தில் செய்யவேண்டியதை யெல்லாம் குறைவற முடித்துவிட்டு இப்பொழுது அவளுக்காகப் பரிதாபப் பட்டுத் தன்னை மிக்க பரிசுத்தமுள்ளவளென்று பார்க்கிறவர்கள் எண்ணப் பேசுகிறாள்; அவள் எண்ணம் எதுவாக இருந்தாலும், தாய் தந்தை மேல் மனவெறுப்பைக் காட்டாமலிருந்தால் இத்ததில் என் தங்கையை என் குல தெய்வமென்றே எண்ணுவேன். மனோன்மணி மூவரிடத்தும் துயரப்பட்டிருந்தாள். இப்பொழுது நாங்கள் மூவரும் காளியாயி அம்மாளிடத்தில் அகப்பட்டுக்கொண்டு விழிக்கிறோம். விதியை வெல்ல எவரால் முடியும்! என்று துக்கப்பட்டான். 

செழுங்கமலம். – தம்பி ! உன் தந்தை தாய் மருமகள் விஷயத்தில் செய்த கொடுமையைக் காளியாயி கண்டு சகியாமல் தன் தாய்தந்தைமேல் அருவருப்பைக் கொண்டிருக்கிறாள் என்றே எண்ணினேன். 

சோமசுந்தரம்.- என் தந்தையும் தாயும் மருமகளைக் கொடுமையாக நடத்து கிறவர்களாயிருந்தாலும் என் தங்கை இவ்விடம் வராமலிருந்தால் மனோ ன்மணி வீட்டைவிட்டுப்போக நேரிடாது. மனோன்மணிமேல் பரிதா பங்காட்டிப் பேசுவதெல்லாம் என்னை ஏமாற்றவேயன்றி வேறல்ல.

நடராஜ முதலியார் – யாராகிலும் ஒரு ஆளைச் சிலநாளைக்கு வைத்துக்கொண் டால் இந்தத் தொந்தரவு இராதே? அல்லது அண்டை அயலாரையா வது உதவிக்காக கூப்பிட்டுக் கொள்ளக்கூடாதா? 

செழுங்கமலம்.- புஷ்பவதியான பெண் எனக்குக் கால்கட்டா யில்லாமற் போனால் சில நாள் இவ்விடம் இருந்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொண்டிருப்டேன். இத்தருணத்தில் அவர்களுக்கு உதவி செய்யாமற் போவதைக் குறித்துத் துக்கப்படுகிறேன். 

சோமசுந்தரம்.- அத்தை ! உங்களுக்குள்ள அசௌகரியம் எனக்குத் தெரி யாததல்ல. அடுத்த வீட்டு அம்மாள் மனவெறுப்போடு ஒரு நாள் வந் திருந்தார்கள். அவர்கள் மறுபடியும் எட்டிப்பார்க்காமலிருக்க என் தங்கை மனம் போனபடி அவர்களைப் பேசினாள். இவ்விதமான குணமுள்ள தங்கையை வைத்துக்கொண்டு நான் யாரைப்போய்க் கூட்பிடுவேன்! கேட்டசம்பளம் கொடுக்கலாமென்று ஒரு ஆளைத்தேடி திரிந்தாலும் ஒருவரும் அகப்படவில்லை. நான் என்ன செய்வேன்!

செழுங்கமலம்.– அண்ணா! கலியாணசுந்தர முதலியார் வீட்டுக்குப் போக வேண்டும் என்றீர்களே! போகவேண்டாமோ? 

நடராஜ முதலியார் – ஆம். அம்மா! போகவேண்டும். சோமசுந்தரம் ! ஆன் அகப்பட்டால் அனுப்புகிறோம். உன் தகப்பனார் நித்திரை செய்வதால் அவரை யெழுப்பிச் சொல்லிக்கொள்ள இஷ்டமில்லை. நாங்கள் இரண் டொரு நாளையில் வருகிறோம் என்று அவர் எழுந்தபின் சொல்லிவிடு. (என்று சோமசுந்தரத்திடமும் காளியாயி இடமும் விடைபெற்று வீட் டை விட்டு வந்தார்கள்.) 

செழுங்கமலம்.- அண்ணா காளியாயியை என்ன தவம் செய்து பெற்றார்களோ தெரியவில்லை! 

நடராஜ முதலியார் – அம்மா ! எல்லாத் துர்க்குணமும் அவளிடத்தில் குடி கொண்டிருக்கின்றன. இவளுக்கென்ன தண்டனை கடவுள் விதிப்பாரோ தெரியவில்லை! 

செழுங்கமலம்.- சோமசுந்தரம் சற்புத்திரனாகக் காணப்படுகிறான். அவனுக்குத் தன் பெண்சாதிமேல் வெறுப்புண்டாயிருக்கிறதுபோல் தோன்றுகிறது. காரணம் தெரியவில்லை. 

புருடன் உத்தரவில்லாமல் போனதே அவனுக்கு வெறுப்பாயிருக்கலா மென்று நடராஜமுதலியார் சொல்லி மற்றும் பலபேச்சுகள் பேசிக் கொண்டே சலியாணசுந்தரமுதலியார் வீட்டுக்குள் நுழைந்தார்கள். மீனா க்ஷியம்மாள் செழுங்கமலத்தைக்கண்டவுடன், அம்மா! என் மகன் இன் னும் வரவில்லையே! நான் என்ன செய்யப்போகிறேன்! என்று அழுதாள்.

செழுங்கமலம் – ஏனம்மா அழுகிறாய்? உன்மகன் வந்து விடுவான். அழ வேண்டாம்.(என்று மீனாக்ஷியம்மாளுடைய கண்களைத் தன் முந்தானையால் துடைத்தாள்.) 

நடராஜமுதலியார் மற்ற அறையில் வைத்தியரோடு வார்த்தையாடிக் கொண்டிருந்த கலியாணசுந்தரமுதலியாரைக் கண்டவுடன் அவர் ஐயா உட்காருங்கள். விஜயரங்கம் என்னை அநாதரவாக விட்டுப்போய்விட்டான். இனி நான் உலகில் உயிரோடிருந்தென்னபலன்! அவனைவிட்டுப்பிரிந்து மூன்றுமாதத்துக்கதிகமாயும் நான் இன்னும் உயிரோடிருக்கிறேனே! என்னைப்போல் கடின சித்தமுள்ளவர்கள் உலகில் இருப்பார்களா! என்றழுதார்.

நடராஜ முதலியார்.- ஐயா,நிர் எல்லாம் தெரிந்தவர். விஜயரங்கம் சிறுபிள்ளைத்தனமாய் முன் பின் யோசியாமல் உங்களைத் துக்கத்தில் விட்டுச் சென்றான். சென்றவன் எங்கிருக்கிறானென்று நாம் தேடிப்பார்ப்பதை விட்டு எக்காலத்திலும் துக்கத்திலிருப்பது நியாயமல்ல. விஜயரங்கம் மிக்கயோக்கியன். நற்குணமுள்ளவன். ஒருவருக்குக்கெடுதல் செய் யக் கனவிலும் எண்ணாதவன்.தாய் தந்தைமேல் அதிக அன்புள்ளவன். வினைப்பயனால் சில நாள் உங்களைவிட்டுப் பிரிந்திருக்கிறான். அவனுக்கு யாதொரு துன்பமும் அணுகாது. அவனுக்காக ஏன் துக்கப்படுகிறீர்கள்? நீர் உமது மனைவிக்குத்தைரியம் சொல்லி அவர்களுடைய துக்கத்தை மாற்றுதல் அழகு. எல்லா நற்குணமும் நிறைந்த விஜயரங்கம் தகுந்த காரணமில்லாமல் உங்களை விட்டுப்போயிரான். ஆனதால் அவனைக் கண்டு பிடிக்கவேண்டிய முயற்சியே செய்யவேண்டும். அது விஷயத்தில் ஏதாகிலும் செய்தீரா? 

கலியாணசுந்தர முதலியார்.- நான் அனேகரைப் பலவிடங்களுக்கு அனுப் பித்தேடிப்பார்த்து வரச்சொன்னதில், சிலர் வந்து அவன் எங்கும் காணப்படவில்லை என்றார்கள். எங்களைவிட்டுச் சென்ற விஜயரங்கம் உயிரோடிருப்பானாகில் இது பரியந்தம் ஒருகடிதமும் எழுதாமல் இருப்பானா? அல்லது தேடிப்போனவர்கள் பார்வையில் அகப்படமாட்டானா? அவன் இறந்துவிட்டானென்றே நினைக்கிறேன். (என்பதாகச்சொல்லிக் கண்களிலிருந்து நீரை உதிர்த்துக் கொண்டிருந்தார்.) 

நடராஜழதலியார்.- ஐயா! விஜயரங்கம் இறந்துவிட்டானென்று சொல்ல என்மனம் துணியவில்லை. அவன் கடிதம் எழுதாமலும் தன் விஷயத் தை யறிய ஒரு சங்கதியும் உங்களுக்கு எட்டவிடாமலும் இருப்பதை யோசித்தால் அவன் முக்கியமான விஷயத்தைக் கருதிப்போயிருக்கிற வனாகக் காணப்படுகிறது. எவ்விதமென்றால்-விஜயரங்கம் செழுங்கமலத் தம்மாள் வீட்டுக்கு வந்தகாலத்தில் அவனைச் சாப்பிட்டுப்போக வேண்டினால், தன்னுடைய தாயார் தானின்றிச் சாப்பிடார்களென்றும் அவர் களைக் காத்திருக்கவிட்டுத் தான் சாப்பிடக்கூடாதென்றும் வந்து விடுவான். உம்மைக்குறித்துப் பேசும்பொழுதெல்லாம் உம்மைவிட உத்தமர் உலகத்திலிருப்பது கஷ்டம் என்று சொல்லுவான். தாய் தந்தை மேல் அதிக அன்பைக்கொண்டவன் வீட்டைவிட்டுப் போகும்பொழுது ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டுபோன குறிப்பு தாய் தந்தை மேல் வேறுப்பாகப் போனதைக் காட்டவில்லை. வெறுப்பிருந்தால் அந்த ஒரு ரூபாயையும் எடுக்காமல் போயிருக்கவேண்டும். கெட்ட விஷயத்தை நாடிச் சென்றிருப்பானோ என்று யோசித்தால் அதற்கும் இடம் கொடுக்கவில்லை. அவ்வித எண்ணம் இருந்தால் தன் கையில் அகப்பட்டதை யெல்லாம் கொண்டு போயிருக்க வேண்டும். நாம் முக்கியமாக இரண்டு விஷயங்களைக் கவனித்து அதன் கருத்தை அறியவேண்டியதாயிருக்கிறது. அவைகள் எவையெனில்:- முதலாவது-ஒரு ரூபாய் மட்டும் எடுத்துப்போனதும், இரண்டாவது- கடிதம் எழுதாமல் இருப்பதுமே. 

ஒருரூபாய் எடுத்துக்கொண்டுபோன விஷயத்தை யோசித்துப்பார்க்கலாம். ஒரு ரூபாய் நெடுநாளைக்கு வேண்டியதைக் கொடுக்காதாதலால் அந்த ரூபாயைக் கைக்கொண்டது ஓரடையாளமாகவும் ஆபத்தில் உதவுமென்பதாகவுமே கைக்கொண்டதாகக் காணப்படுகிறது. தாய் தந்தையின் பொருள் தனக்கு ஆபத்தில் உதவவேண்டுமென்று கருதியதால் அவர்கள் மேல் கோபங்கொண்டு போனதாக நினைக்கலாமா? நினைக்கக் கூடாது. இரண்டாவது- கடிதம் எழுதித் தான் இந்த இடத்திலிருக்கிறேன் என்று தெரிவிக்காமற்போனது உங்கள்மேல் பேரன்பைக் கொண்டிருக்கிறதைக் காட்டுகிறது. எவ்விதமெனில் விஜயரங்கம் கடிதம் எழுதித் தான் இன்ன இடத்திலிருக்கிறேனென்று தெரிவித்தாலும், தன்னிருப்பிடத்தை யறிவிக்காமல் கடிதம் எழுதினாலும் தபாலாபீஸ் முத்திரையால் இன்ன இடத்தில் இருக்கிறானென்று கண்டு அழைத்துக் கொண்டு போய்விடுவார்களென்றும், தான் அவர்களைக் கண்டால் உடன் செல்லத் தடைசெய்ய முடியாது கட்டாயம் போகவேண்டியதால் தெரிவிக்காமலிருப்பதே நன்றென்றும் எண்ணியிருக்கிறதைக் காட்டுகிறது. இவ்விரண்டு விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும்பொழுது விஜயரங்கம் கடிதம் எழுதாததால் தாய் தந்தைகளுக்கு அடங்கினவனென்றும், அவர்கள் துணையை விரும்பியதால் ஒரு ரூபாய் கொண்டு போனானென்றும் விளங்கக் காட்டுகிறது. தாய் தந்தைகள் துணையை விரும்பியவன் அவர்களை விட்டுப்போவது அழகல்லவே! அவ்விதம் விட்டுப் போனதற்குக் காரணம் யாதென்று யோசித்தால், விஜயரங்கம் தன் தாய் தந்தைகளோடு இருப்பதில் அவனுக்காவது அவனைப் பெற்ற உங்களுக்காவது மனச்சலிப்பிருக்கிறதென்று காட்டுகிறது. அந்த மனச்சலிப்பை ஒழித்து விடுதல் நலமென்று அவன் வீட்டைவிட்டுப் போனதால், அவன் உங்களோடு இருப்பது உங்களுக்கே மனச்சலிப்பிருக்கிறதென்று வெளிப்படையாக இருக்கிறது. இதை யோசித்தறியாமல் நாம் அவன் பிரிவைப்பற்றித் துன்பப்படுவது நன்மையைத் தராது. 

இதைக்கேட்டுக் கலியாணசுந்தர முதலியார் வைத்தியரால் தன் மனைவியை வரவழைத்து, மீனாக்ஷி! நாம் விஜயரங்கம் விஷயத்தில் நினைக்காததை யெல்லாம் பெரியவர் சொல்லுகிறார். நமக்குண்டாகிய மனச்சலிப்பால் நம்மை விட்டு விஜயரங்கம் நீங்கினானென்று சொல்வதைக் கேட்டாயா? என்றார்.

மீனாக்ஷியம்மாள்.-ஐயா! ஐயா! என்ன சொன்னீர்கள்? எங்களுக் குண்டாகிய மனச்சலிப்பாலோ எங்களை விட்டு நீங்கினான்! ஐயோ ! மகனே ! அடா செல்வமே! ஏன் அவ்விதம் என்னிடத்தில் சொல்லாமல் பெரியவரிடத்தில் மட்டும் சொல்லிப் போனாய்! (என்று வயிற்றைப் பிசைந்து கொண்டு அழுதாள்.) 

நடராஜ முதலியார் – அம்மா! என்னிடத்தில் உன் மகன் ஒன்றும் சொல்லிப் போகவில்லை. விஜயரங்கத்தின்மேல் வீணாய்க் குற்றஞ் சுமத்தவேண்டாம். 

கலியாணசுந்தர முதலியார்.- மீனாக்ஷி! நம்முடைய விஜயரங்கம் பெரியவரிடத்தில் ஒன்றும் சொல்லவில்லை. அவரே அவ்விதம் சொல்லுகிறார்.

மீனாக்ஷியம்மாள் – நாங்கள் விஜயரங்கம் விஷயத்தில் மனச்சலிப்பு கொண்டிருக்கிறோமென்று தங்களுக்கு எப்படித்தெரியும்? 

நடராஜ முதலியார் – நீங்கள் அவன் விஷயத்தில் மனச்சலிப்போடு இருப்பதும் இல்லாததும் எனக்குத் தெரியாது. விஜயரங்கம் ஒரு ரூபாயைக் கைக்கொண்டு போனதையும் அவன் கடிதம் எழுதாமலிருப்பதையும் யோசித்தால் உங்களுக்கு மனச்சலிப்பிருக்கிறதைக் காட்டுகிறது. (என்று சொல்லிக் கலியாணசுந்தர முதலியாருக்குச் சொல்லிய நியாயங்களை யெல்லாம் மீண்டும் எடுத்துக்கூறினார்.) 

மீனாக்ஷியம்மாள்.- ஐயா! விஜயரங்கம் துன்மார்க்க வழியில் நடந்தால் அவன் விஷயத்தில் எங்களுக்கு மனச்சலிப்பிருக்கவேண்டும். அவன் அவ்விதம் நடக்காமலிருக்க நாங்கள் அவன் விஷயத்தில் சலிப்படையக் காரணம் வேறு என்ன இறுக்கிறது! 

நடராஜழதலியார்.- அம்மா ! நான் அதை எவ்விதம் அறிவேன்? உலகவழக்கத்தை யோசித்தால் அவனுக்கு விவாகம் முடியவில்லையென்ற துக்கம் பெற்றோருக்கு இருக்கக்கூடும். 

மீனாக்ஷியம்மாள் – (தன்நாயகனைப்பார்த்து) பெரியவருக்கும் நமக்குண்டாகிய எண்ணத்தைப்போலிருக்கிறது பார்த்தீர்களா! 

வைத்தியர் – விஜயரங்கத்தைக் கண்டுபிடித்து அவனுக்கு விவாகம் முடித்து விட்டால் ஒருவரும் துன்பப்படவேண்டியதில்லை. நானே விஜயரங்கத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறேன். இனித் துக்கத்தைவிட்டுச் சந்தோஷமாக இருங்கள். 

செழுங்கமலம்.- (மீனாக்ஷியைப்பார்த்து) அம்மா! இனிமேல் நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம். வைத்தியர் விஜயரங்கத்தைக் கொண்டுவருகிறேன் என்றபின் உங்களுக்குக் கவலை யிருக்கவேண்டிய அவசியமில்லையே.

வைத்தியர் – அம்மா செழுங்கலம்! நான் விஜயரங்கம் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துக்கொண்டு வந்துவிடுகிறேன். உன் மகளை விஜயரங்கத்துக்குக் கொடுக்கிறாயா? 

செழுங்கமலம்.- (சிரித்துக்கொண்டு) அண்ணா! நாங்கள் எளியவர்கள். தனவந்தர் எளியவர்கள் வீட்டில் பெண் கொள்ளச் சம்மதியார். அல்லாமலும், விஜயரங்கமும் கமலாக்ஷியும் அண்ணன் தங்கை என்கிற முறை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

வைத்தியர் – முறை வைத்துக் கொண்டதால் தோஷம் ஒன்றுமில்லை. நான் விவாகம் செய்து கொள்ளு முன் என் பெண்சாதியை சின்னாயி என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தேன். விவாகப்பேச்சு நடக்கவே, சின்னாயி என்ற முறை பறந்துபோய்விட்டது. 

செழுங்கமலம். – சிறிய தாயாரையா விவாகஞ்செய்து கொண்டீர்கள்? நான் அந்த அண்ணியைப்பார்த்தால், மகனைக்கட்டிக்கொண்டாய் என்று கேலி செய்யாமல்விடேன். (என்று சிரித்தாள்.) 

அதுகேட்டு, என் தாய்வழியில் அவள் சிறிய தாயார் முறையாகவேண்டும். தாய்முறையோ நாய்முறையோவென்று, தகப்பன்வழியைப் பார்த்து விவாகஞ் செய்து கொண்டேன் என்பதாகக் கலியாணசுந்தரமுதலியாருக்கும் அவர் பெண்சாதிக்கும் நகைப்பை யுண்டாக்க வேடிக்கையாக வைத்தியர் பேசிக்கொண்டிருந்தார்.

– தொடரும்…

– க.நா.சு. அவர்கள் எழுதிய முதற் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.

– கமலாக்ஷி சரித்திரம் (நாவல்), இரண்டாம் பதிப்பு: 1910, தாம்ஸன் அண்ட் கம்பெனி, மினர்வா அச்சுக்கூடத்தில் பதிப்பித்தது, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *