கமலாக்ஷி சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2024
பார்வையிட்டோர்: 1,126 
 
 

(1910ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

க.நா.சு. அவர்கள் எழுதிய முதற் ஐந்து தமிழ் நாவல்கள் (செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

7-ம் அத்தியாயம்

மயிலாபுரிக் கடைவீதி வழியாக மாணிக்சமும் இரத்தினமும் வார்த்தை யாடிக்கொண்டு வரும்பொழுது மாணிக்கம் இரத்தினத்தைப் பார்த்து இரத்தினம்! தைமாதம் முடிந்தும் வெளியூரிலிருந்து வந்த கடைகள் இன்னும் போகாமலிருப்பதன் காரணம் யாதென்றான். 

இரத்தினம் – மாசிமகமும் சமீபத்தி லிருப்பதால் அந்தத் திருவிழா பரியந்தம் கடைகளிருக்கும். கடைகள் சித்திரைமாத பரியந்தம் இருந்தாலும் எனக்குச் சந்தோஷமே. 

மாணிக்கம். – கடைகள் இருந்தால் அதனால் உனக்குச் சந்தோஷம் வர வேண்டிய காரணம் என்ன? 

இரத்தினம். – என்னுடைய விவாகத்துக்குவேண்டிய சவுளிகள் சுலபத்தில் வாங்கலா மென்பதே. 

மாணிக்கம். – விவாகத்துக்கு நாள் வைத்தாய்விட்டதா? 

இரத்தினம்.-இன்று நாள் வைத்து விடுவார்கள். அதற்காகவே பெண்வீட்டார் என்னை வரும்படி சொல்லியிருக்கிறார்கள். 

மாணிக்கம்.- நீ தனித்தா போகிறாய். மாப்பிள்ளைத் தோழன் வரவேண்டாமா? 

ரத்தினம். – உன்னைவிட்டுத் தனித்துப்போவது எனக்குச் சம்மதமில்லை. என் மாமியார் என் கருத்தை யறிந்து விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யவும் பெண்ணுக்குக் கொடுக்கப்போகும் சீதனத்தை எவ்விதம் கொடுக்கிறதென்று என்னிடத்தில் ஆராயவுமே என்னை வரச்சொல்லி யிருப்பதால் தனித்துப்போகிறேன். 

மாணிக்கம்.- சீதன விஷயம் மத்தியஸ்தரைக்கொண்டு முடிவுபடுத்திக் கொண்டால் உத்தமமாகுமே. அதைவிட்டு நீ நேரில் நின்று எனக்கு அது வேண்டாம், இதுவேண்டுமென்று சொல்லுவது அழகாயிருக்குமா?

இரத்தினம்.- அழகாயிருக்காதென்பதை அறிந்தே நான் தக்க மனிதர்களை அனுப்பிச் சொல்லும்படி செய்தேன். மத்தியஸ்தர் அங்கு ஒருவிதமாகவும் இங்கு ஒருவிதமாகவும் சொல்லி விடுவார்கள். ஆனதால் நேரில் பேசி முடிவுபடுத்திக்கொள்வதே உத்தமம் என்று தீர்மானப்படுத்தி அவர்களே என்னை வரும்படி கேட்டுக்கொண்டார்கள். 

மாணிக்கம்.- நீ நேரில் நின்று உன் மாமியாரோடு வார்த்தையாடக் கூச்சமாயிராதா? 

இரத்தினம். – அந்நியர்களாயிருந்தால் மருமகன் மாமியார் எதிரிலும் மாமி யார் மருமகன் எதிரிலும் நின்று வார்த்தையாட நாணப்படுவார்கள். நான் சிறுவனாயிருக்கும்பொழுது என் மாமியார் என்னைத் தூக்கி, விளையாடினவர்களாதலாலும்,நானும் சிறுவனா யிருக்கும்பொழுது அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வனசாக்ஷியோடு விளையாடி வந்தவனாதலாலும், ஒருவரை யொருவர் பார்த்து வெட்கப்பட நியாயமில்லை.

மாணிக்கம்.- வனசாக்ஷி புஷ்பவதியானபின் அவர்களுடைய வீட்டுக்குப் போகிறதில்லையோ? 

இரத்தினம். – அடிக்கடி போகிறதில்லை. வனசாக்ஷியை விவாகஞ்செய்து கொள்ள விருப்பம் இருந்ததால் அவர்கள் வீட்டுக்கு முன்போல் போவதில்லை. 

மாணிக்கம்.- சொல்லுகிற காரணத்தால் உன்மாமியார் எதிரில் நீ நின்று வார்த்தையாடத் தடையொன்றும் காணப்படவில்லை. சீதனம் என்ன விதம் கேட்கப்போகிறாய்? 

இரத்தினம்.- நிலம், ஆபரணம் எதற்கு? நமக்குப்பணமே வேண்டுவது. ஆனதால் பணமாகக் கொடுக்கவே வேண்டியதென்று சொல்வேன்.

மாணிக்கம்.- பணமாகக் கொடுத்தாலும் பெண் பெயரால் வைப்பார்களன்றி உன்பெயரால் வைப்பார்களா? 

இரத்தினம்.- என்பெயரில் வைக்கும்படி கேட்பதும் சந்தேகத்துக் கிடந்தரும். என் பெண்சாதி பெயரில் வைக்கும்படியே சொல்லுவேன். அவள் பெயரிலானபின் அது என் பெயரிலாக நெடுநேரமா செல்லும்!

மாணிக்கம்.- உன் பெண்சாதி தன் பெயரால் உள்ளதை உன்னுடைய பெயரிலாக்கிவிட இஷ்டப்படாதிருந்தால் என்ன செய்வாய்?

இரத்தினம். – இதென்ன பெரும் பைத்தியக்காரனாக இருக்கிறாய்! உதையும் குத்தும் என்னுடைய இஷ்டம்போல் நடக்கச் செய்யாவோ? என்னை நம்பாமல் என்னோடிருந்து எப்படி வாழப்போகிறாள்? அல்லது பண விஷயத்தில் எனக்கோர் ஆபத்து வந்தால் பணத்தைக் கொடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பாளா? 

மாணிக்கம்.- அக்காலத்தில் உதவி செய்யாம லிருந்தால் உலகம் அவளை நிந்திக்கும். உனக்குக் கடன் இருக்கிறது அவர்களுக்குத்தெரியுமா?

இரத்தினம். – அதைக் கண்டுகொள்ள ஒருவராலும் முடியாது. எனக்குள்ள கடனைக்குறித்து ஒருவரிடத்தும் மூச்சுவிடாதிருக்கும்படி எல்லாக் கடன்காரர்களுக்கும் சொல்லி வைத்திருக்கிறேன். விவாகம் முடிந்தால் தங்கள் தங்களுடைய கடன் வந்துவிடுமென்கிற எண்ணத்தோடிருப்பவர்களாதலால் எனக்கிருக்கும் கடனை வெளிப்படுத்தித் தங்களுக்குத் தாங்களே நஷ்டப்படுத்திக்கொள்ள அவர்கள் சம்மதிப்பார்களா? ஆனதால் அது விஷயத்தில் எனக்குக் கிஞ்சித்தும் பயமில்லை. கழுத்தில் தாலி ஏறு மளவுமே இந்தச் சங்கடம். தாலி ஏறிவிட்டால் என்னைக் கையால் பிடிக்க முடியுமா? 

மாணிக்கம். – விவாகம் ஆனவுடன் எனக்குப் பொருளுதவி செய்வதாக வாக்களித்தாயே! அதை மறந்து விடுவாயோ? 

இரத்தினம். – பேச்சுதவறும் பேதையர் போல் என்னையும் எண்ணவேண்டாம். என்னுடைய அவசரக்கடன் சில தீர்ந்தவுடன் உனக்குக் கொடுப்பேன் என்றதைக் கொடுத்துப் பின் மற்றக் காரியங்களைச் செய்வேன் என்பதை உண்மையாக நம்பு. 

மாணிக்கம். – எந்தக்கடன் மிக்க அவசரம் என்று நினைக்கிறாய்? 

இரத்தினம். – சீட்டாட்டத்தில் தோற்றகடனே! அதை வைத்திருப்பது அழகா? எது எப்படி போனாலும் அதை முதலில் தீர்த்துவிட்டாலல்லவா நம்மை மேன்மையாக யாவரும் மதிப்பார்கள்? 

மாணிக்கம். – சீட்டாட்டத்தில் தோற்ற கடன் எவ்வளவிருக்கும்?

இரத்தினம்.- அதிகமில்லை. பொன்னிக்கு ஐந்நூறும், அன்னத்துக்கு முந்நூறும், மீனாளுக்கு நாநூறும், ரூபாவதிக்கு ஆயிரமும், புஷ்பகாந்திக்கு இருநூறும், கமலத்துக்கு அறுநூறும், தனசுந்தரிக்கு எண்ணூறும், சாரதாம்பாளுக்குத் தொளாயிரமும், வீணை கௌரிக்கு எழுநூறும், அழகேந்திக்கு நூறும் கொடுக்க வேண்டியதேயன்றி வேறில்லை.

மாணிக்கம்.- உனக்கிருக்கும் ஞாபகச் சக்தி யாருக்கும் இருக்காது. நீ இஷ்டங் கொண்டால் அஷ்டாவதானமும் சுலபத்தில் செய்யலாம். உனக்கு இருக்கும் கடன் முற்றிலும் தாசிகளிடத்தில் இருப்பதால் அதை முதலில் தீர்த்துவிட்டே மறுவேலை பார்க்க வேண்டும். இந்தத் தாசிகளிடத்தில் எப்பொழுதாகிலும் சீட்டாடி கெலித்து வந்திருக்கிறாயா?

இரத்தினம். – எத்தனையோ தடவை. அவர்களிடத்தில் கெலித்ததை அவர்களுக்கே இனாமாகக் கொடுத்துவிடுகிறதே யல்லாமல் ஒரு சாசாகிலும் கொண்டுவருகிறதில்லை. அவர்களிடத்தில் சீட்டாடிக் கெலித்துப் பணங் கொண்டுவந்தால் நம்மை என்ன நினைப்பார்கள்? அவ்விதம் செய்தால் அவமானத்தை விலைக்கு வாங்கியதுபோ லல்லவோ முடியும்? நான் காலம் போக்க அவர்களோடு சீட்டாடப் போகிறதேயன்றிப் பொருள் சம்பாதித்து வரவேண்டியதற்காகப் போகிறதில்லை. 

மாணிக்கம்.- தாசிகளிடத்தில் சீட்டாடித் தோற்றதைக்கொடுத்திருக்கிறாயா? 

இரத்தினம்.- எனக்குச் செட்டிகளிடத்தில் இருக்கும் கடனெல்லாம் சீட்டாட்டத்தால் வந்ததேயன்றி வேறெவ்விதம் வந்தது. என் தந்தையும் என்னிஷ்டம்போல் செலவுசெய்ய ஏராளமான தனத்தைவைத்தே காலஞ் சென்றார். அவரை உலோபியென்று உலகம் சொல்லத் தேடி வைத்த பொருளை யெல்லாம், அவர் கொண்டிருந்த உலோபி யென்ற பெயர் என்னைப் பற்றாமல் என்னை யாவரும் புகழத் தாசிகளுக்கே தானம் செய்தேன். 

மாணிக்கம்.- உன் தந்தை வைத்த தனம் நீங்கினாலும் அவர் வைத்த பூஸ்திதி யிருக்கிறதல்லவா? 

இரத்தினம்.- பூஸ்திதியிருந்தால் இது பரியந்தம் தாசிகளுடைய கடன் நிற்குமா? 

மாணிக்கம்.-நீ ஒருவன் இந்த ஊரில் இல்லாமற் போனால் இந்தத் தாசிகளெல்லாம் என்ன செய்வார்கள்? எவ்விதம் பிழைப்பார்கள்?

இரத்தினம். – பணத்தைப் பூதம் காத்துக்கொண்டிருப்பதுபோல், தம்மிடத்திலிருக்கும் பொருளைத் தாசிகளுக்கு அளித்து அவர்களோடு கூடி விளையாடிச் சந்தோஷத்தை யடைய அறியாத மனிதர் இருந்தென்ன பலன்? நான் உயிரோடிருக்கும் வரைக்கும் இவ்வூரிலிருக்கும் தாசிகளுக்கு என்னாலியன்ற உதவியைச் செய்து கொண்டிருக்க வேண்டுமென்பதே என் கருத்து. 

மாணிக்கம்.- உன்னுடைய கருத்தே மேலானது. உன் தாயார் இது விஷயத்தைக் குறித்து ஒன்றும் சொல்லுகிறதில்லையா? 

இரத்தினம்.- என் தாயார் என்னுடைய மனதுக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லார்கள். ஏதாகிலும் தடுத்தால் நான் அவர்களோடு வாயாற் பேசுகிற வழக்கம் இல்லை. கையாலும் காலாலுமே! ஆனதால் வார்த்தையாட அஞ்சுவார்கள். நாம் வனசாக்ஷி வீட்டுக்கருகில் வந்துவிட்டோம். உன்னை இவ்விடத்தில் விட்டுப் போக வேண்டியதைக் குறித்து விசனப்படுகிறேன். நான் நாளை உன்னிடம் நல்ல சமாசாரத்தோடு வருவேன். 

என்று மாணிக்கத்துக்கு விடைகொடுத்தனுப்பி வனசாதியின் வீட்டின் கதவைத் தட்டினான். கதவு உடனே திறக்கப்பட்டுப் பூங்காவனம் வெளியில் வந்து தம்பி வருக என்றாள். இரத்தினம் புன்சிரிப்போடு வீட்டுக்குள் சென்று தனக்காகக் கூடத்தில் பாய்விரித்துத் திண்டு தலையணை போட்டுத் தாம்பூலம் வைத்திருப்பதைக் கண்டு உட்கார்ந்து நான்கு பக்கமும் பார்த்தான். கூடத்தில் தனக்குப்பின்னால் இருந்த அறை பூட்டப்பட்டும் மற்ற அறைகள் பூட்டில்லாமல் மூடப்பட்டும் இருந்ததைக்கண்டு, பூட்டிய அறையை ஒப்புக்கொள்ளவே எதிரில் சுதந்தரவானாக உட்கார்ந்தோம். இதிலுள்ள பொருளெல்லாம் நம்முடையதல்லவா? என்று எண்ணித் தனக்கெதிரிலிருந்த பூங்காவனத்தைப் பார்த்து, மாமி, யாராரோ வருவார்கள் என்று சொல்லி யிருந்தீர்களே. ஒருவரும் வரவில்லையா? என்று கேட்டான்.

பூங்காவனம்.–தம்பி ! அவர்கள் யாவரும் வருவார்கள் அவர்கள் வருமுன் நாம் இரண்டு சமாசாரத்தைப் பேசி முடிவு படுத்திக்கொள்ள வேண்டும்.

இரத்தினம் – எந்த விஷயத்தைக் குறித்துப்பேச இஷ்டப்படுகிறீர்கள்?

பூங்காவனம்.- வேறென்ன பேச்சு இருக்கிறது? எல்லாம் சீதன விஷயத்தைக் குறித்தே? 

இரத்தினம் – சீதனம் என்ற சொல் காதில் விழுந்தவுடன் இரத்தினம் முக மலர்ச்சியோடு சீதனத்தைக் குறித்து என்ன பேசவேண்டும். அது விஷயத்தைக் குறித்து என்னிடம் பேசவேண்டிய அவசியமில்லையே. தங்களுடைய சறததைப்போல் செய்யலாமே. 

பூங்காவனம்.- நீர் சொல்வது உண்மையே யாயினும்,பெண்ணைக் கொண்டு வாழப்போகிறவர் நீரானதால் உம்முடைய கருத்தை யறிந்து ஒன்றைச் செய்தால் என் மகள் மனது எக்காலத்திலும் சந்தோஷத்தோடிருக்கு மென்று நினைக்கிறேன். 

இரத்தினம் – மாமி! நான் சொல்வதைக் கிஞ்சித்து கவனிக்கவேண்டுகிறேன். நான் சீதனத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் மகளை விவாகம் முடிக்க நினைத்தவன் அல்ல. நான் வனசாக்ஷியைக் குறித்துத் தங்களுக் கெதிரில் புகழ்வது முகஸ்துதியாகக் காணப்படும். அப்படித் தோன்றினாலும் சொல்ல வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. வனசாக்ஷியின் வனப்பு நாளுக்கு நாள் விருத்தியாகி வருகிறதைக் கண்ட என் மனம் என்ன சந்தோஷப்படுகிறது! சுந்தரமான முகமும், பெருத்த கண்களும், மையிட்டதுபோலுள்ள இரண்டு புருவங்களும், நீண்ட நாசியும், பவழக்கிண்ணத்தில் முத்துக்களைப்பதித்ததுபோல் உள்ளவாயும், சிறுத்த இடையும், பொன்னிற முகமும், கால் தொடுங் கூந்தலும்,நயவசனமும், நற்குணமும் நிறைந்த பெண்ணுக்குச் சீதனமும் வேண்டுமா?

பூங்காவனம்.- சீதனமும் அவசியமாகக் காணப்படாமற் போனாலும், எனக் கிருக்கும் ஆஸ்தியை நான் யாருக்குக் கொடுக்கப் போகிறேன்! நிலத்தை விற்றால் ஐம்பதினாயிரத்துக்குக் குறையாமல் வரும். வீடுகளிலும் நகைகளிலும் சற்றேறக்குறைய இருபதினாயிரந்தேறும். செட்டிகளிடத்தில் வட்டிக்குக் கொடுத்திருப்பது முப்பதினாயிரம், ஆக ஒரு இலக்ஷமாகிறது. இது என் மகளை விவாகஞ செயதுகொள்ளப்போகும் உமக்கே சொந்தமாயிருக்கும். வேறொருவர் அதைக் கைப்பற்ற முடியாது 

இரத்தினம் – மாமி! என் தந்தை எனக்கு வைத்துப்போன நிலத்தால் உண்டாகும் தொந்தரவு அனேகம். ஆனதால் அதை விற்றுவிட யோசித்திருக்கிறேன். அதை வைத்துச்சொண்டிருப்பதால் வருவார் போவார் அனேகம். வந்தவர்களிடம் வார்த்தையாடி யனுப்புவதே பெருந்தொல்லை. நிலத்தை விற்றுப் பணத்தைச் செட்டிகளிடம் வட்டிக்குக் கொடுத்துவிட்டால் வரும் வட்டியால் நாம் சதா சந்தோஷத்தோடிருக்கலாம். காசுக்கு எட்டு சட்டிகள் வாங்கி சட்டியொன்று எட்டு காசுக்கு விற்றாலும் வட்டியாசாதென்ற பழமொழி யொன்று வட்டியைச் சிலாகித்துப் பேசுகிறது. உழுதவன் கணக்குப் பார்த்தால உழக்கு தானும் மிஞ்சா தென்னும் பழமொழி உழவைத் தாழத்திப்பேசுகிறது.

பூங்காவனம்.– ஆம், அது உண்மையே! நானும் நிலத்தை விற்றுவிடலாமா?

இரத்தினம் – அது தங்களுடைய இஷ்டம். என்னால் நிலத்தைப்போய் பார்க்கவும் அதற்கு வேண்டியதைச் செய்யவும் முடியாது. அது விஷயத்தில் என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன். 

பூங்காவனம் – தம்பி! கோபித்துக்கொள்ளவேண்டாம். உண்மை யோசிக்காமல் நிலத்தைவிற்றுப் பணத்தை இராமசாமி செட்டியிடம் வைத்திருக்கிறேன். நான் விற்றுவிட்டதைக் குறித்து நீர் கோபிக்கப் போகிறீர் என்று நிலத்தை விற்றுவிடலாமா என்று கேட்டேன். நான் செட்டி வீட்டில் வைத்திருக்கும பணத்துக்காகப் பத்திரம் இன்னும் எழுதி வாங்கவில்லை. உமது கருத்தை யறிந்து உமது பெயருக்கே பத்திரத்தை எழுதச் சொல்லலாமென்று நினைத்திருக்கிறேன்.உமக்கு அது விஷயத்தில் ஏதாகிலும் ஆக்ஷேபனையுண்டா? 

இரத்தினம். – என்பெயரால் என்ன காரணத்திற்கு வாங்கவேண்டும்? வனசாக்ஷியின் பெயரில் இருந்தால் உத்தமமல்லவா? 

பூங்காவனம்.- பெண்கள் கோர்ட்டுக்கு நாட்டுக்குப் போகப்போகிறவர்களா? ஆண்பிள்ளைகள் பெயரில் இருப்பதே உத்தமம். 

இரத்தினம். – விவாகம் ஆனபின் தானே பத்திரம் எழுதவேண்டும்?

பூங்காவனம்.- ஏன் அப்படி? இப்பொழுதே எழுதினால் என்ன தப்பிதம்? உம்மை நம்பாமலா இருக்கிறோம்? வனசாக்ஷிக்குச் சீதனமே வேண்டுவதில்லை யென்ற உம்மை நம்பாமல் யாரை நம்புகிறது?

இரத்தினம் தனக்கின்றே நற்காலம் வந்துவிட்டதென்றும் பணத்தை எந்தெந்த விஷயத்தில் செலவிடுகிறதென்றும் சற்றுநேரம் யோசித்து, மாமி! நான் சொன்ன சொல்லை அபத்தமென்று நினைக்க வேண்டாம். தாங்கள் வனசாக்ஷியைச் சீதனமிலலாமல் எனக்குக் கொடுத்தால் நான் மிக்க பிரியமாக ஒப்புக்கொள்ளுவேன். தாங்கள் கட்டாயப் படுத்துகிறதால் தடைசொல்ல வகையில்லாமலிருக்கிறேன் என்றான்.

பூங்காவனம்.- எல்லா நற்குணங்கள் நிறைந்து பொருளைக் கிஞ்சித்தும் கவனியாமல் என் பெண்ணை விரும்பும் நீர் எங்களுக்குக் கிடைத்தது எங்கள் தவப்பயனே. உம்முடைய பெயரில் பத்திரம் எழுதச்சொல்லத் தடையில்லையே? 

இரத்தினம் அடங்காச் சந்தோஷத்துடன் தங்கள் இஷ்டம்போல் யாவும் செய்யலாம் என்றான். அத்தருணத்தில் பூங்காவனத்தம்மாள் எங்கே என்று ஒரு செட்டியார் வீட்டுக்குள் வந்தார். 

பூங்காவனம்.- ஆரையா என்னைத்தேடுகிறது? இங்கு இரகசியமாகப் பேசிக் கொண்டிருக்கிற இடத்தில் தடைசெய்ய வந்தீர். 

செட்டியார் – அம்மா! கோபித்துக் கொள்ளவேண்டாம். நான் தங்களுக்கோர் கெட்ட சமாசாரம் கொண்டு வந்ததைக் குறித்துத் துக்கப்பபடுகிறேன். 

இரத்தினம் – கெட்ட சமாசாரமா? என்ன கெட்ட சமாசாரம்? விரைவில் சொல்லும். 

பூங்காவனம்.- என்ன சொன்னீர்? நீர் யார்? என்னைத் தேடியா வந்தீர்? என்ன கெட்ட சமாசாரம்? சொல்லும். சொல்லும். 

செட்டியார் – அம்மா! இவர்முன் எவ்விதம் சொல்லத் துணிவேன்?

பூங்காவனம்.- சொல்லும் செட்டியாரே! அவரே என் மருமகனாகப் போகிறவர். ஒன்றும் யோசியாமல் நீர் கொண்டுவந்த கெட்ட சமாசாரத்தைச் சொல்லும். 

செட்டியார் – ஐயோ அம்மா! நான் எவ்விதம் சொல்லத் துணிவேன்? சந்தோஷமாய் இருக்கும் மனதைக் கெடுக்கலாமா? 

இரத்தினம். – இவர் பெரும் பைத்தியக்காரர். 

பூங்காவனம் – செட்டியாரே! நீர் சொல்லாமல் காலதாமஸஞ் செய்வதே எங்களுக்குத் துன்பத்தைத் தருகிறது. 

செட்டியார்.- அம்மா! இராமசாமி செட்டியார் தெரியுமா? 

பூங்காவனம். – ஆம்! அவர் தெரியும். அவருக்கென்ன ? அவர் இறந்து போய் விட்டாரா? 

செட்டியார் – அவர் இறந்தால் ஒரு துன்பமும் இல்லையே. 

பூங்காவனம்.- பின் என்னதான் அவரைக் குறித்துச் சொல்லப்போகிறீர்? வீணே வார்த்தைகளை விர்த்தி பண்ணுகிறீர். 

செட்டியார் – அவருடைய கடைகள் எல்லா ஊரிலும் இருப்பது தங்களுக்குத் தெரியுமா? 

பூங்காவனம் – தெரியும். அதனால் நான் துக்கப்படக் காரணம் என்ன? அந்தக்கடைக்கு முதல் அதிகம். ஆனதால் எல்லா ஊரிலும் கடைகள் உண்டு. 

இரத்தினம் – செட்டியாரே! நீர் இரண்டொரு வார்த்தையில் முடிக்காமற் போனால் துன்பப்படுவீர். 

செட்டியார் – ஐயா! தாங்கள் துக்கத்தை எதிர்கொண்டழைக்க இஷ்டக் கொண்டால் நான் என்ன செய்கிறது! கல்கத்தாவிலுள்ள இராமசாமி செட்டியாருடைய கடை முறிந்துவிட்டதால் எல்லா ஊரிலும் உள்ள கடைகள் முறிந்துவிட்டன. இவ்வூரிலுள்ளவர்கள் அவர் கொடுக்க வேண்டிய கடனைக் கொடுக்கச் சொல்லி நெருக்கினதால் தம் கையிலிருந்த பத்திரங்கள் நகைகள் மற்றவைகளைக் கொடுத்து ஒட்டாண்டி யாய் உட்கார்ந்திருக்கிறார். அவர் கையில் காலணாவுக்கும் வழியில்லை.

இச் சமாசாரத்தைக் கேட்ட பூங்காவனம் “ஐயோ! என் செய்வேன்! என்னுடைய நிலத்தை யெல்லாம் விற்று ஐம்பதினாயிரமும், வட்டிக்காக முப்பதினாயிரமும் கொடுத்ததோடு அவரை நம்பி நகைகளையுங் கொடுத்துவிட்டேனே! ஐயோ மகளே! ஐயோ தம்பி! இனி என்ன செய்யப்போகிறேன்! மகளே! மகளே!” என்று ஓவென்றலறினாள். தாயாரின் அழுகுரலைக் கேட்ட வனசாக்ஷியும் அவ்விடம் வந்து திகைத்து நின்றாள். 

இரத்தினம் – செட்டியாரே! இவர்கள் நகைகளை ஒருவருக்குக் கொடுக்க நியாயம் இல்லை யல்லவா? 

செட்டியார் – இராமசாமி செட்டியாரிடம் இருந்த பெட்டிச் சாவியை வாங்கிப் பெட்டியைத் திறந்து அதிலடங்கி யிருந்தவைகளை யாவரும் பங்கு போட்டுக் கொண்டார்கள். 

நகைகளாவது மிகுந்திருக்காவா என்று எண்ணிய இரத்தினத்தின் எண்ணம் குலைந்து மருண்டு நின்றான். 

வனசாக்ஷி – அம்மா! ஏன் துக்கப்படுகிறாய்? 

பூங்காவனம் – ஐயோ ! மகளே! உன்னை அனாதையாக விட்டுவிட்டேன். நாம் நம்பி நம்முடைய பொருளை யெல்லாம் வைத்திருந்த செட்டிகடை முறிந்துவிட்டதாம். நான் பாவி பத்தஞ்சு வேறொருவரிடத்தில் கொடுத்திருக்கக் கூடாதா! இனி நாம் என்ன செய்கிறது? நான் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் செய்துகொண்டேனே! மகளே! ஒரு நொடியில் உன்னை ஒன்றும் இல்லாதவளாக ஆக்கிவிட்டேனே! இனியொரு க்ஷணமும் உயிரோடிருக்கத் துணியேன். (என்று மகளைக்கட்டிக்கொண்டு அலறினாள்.)

வனராக்ஷி – அம்மா! தாங்கள் நிலங்களை விற்க எண்ணங்கொண்டு தெரிவித்தபொழுதே தடுக்க உத்தேசம். தங்களுடைய மனதுக்கு வருத்தம் வரப்போகிறதென்றே மௌனமாயிருந்தேன்.(என்று அழுதாள்.)

பூங்காவனம்.- அம்மா! நீ யழவேண்டாம். இதோ உன் அத்தான் உன்னைக் காப்பாற்றுவார், நானும் உன் நிழலில் இருப்பேன். தம்பி, இனி உம்மை விட்டால் எங்களுக்குத்திக்கில்லை, எங்களைக் காப்பாற்றவேண்டிய கடமை உம்முடையதாய்விட்டது.(என்று இரத்தினத்தின் கையைப்பிடித்தாள்.)

இரத்தினம்.- (கையை விடுவித்துக்கொண்டு) என்ன சொன்னாய்? தங்களுக்கிருந்த நிலத்தை வைத்துக் காப்பாற்றிக்கொள்ள வகையில்லாமலும் ஒருவருடைய யோசனையையும் கேட்காமலும் விற்று எல்லாம் செட்டிகளுக்கு அழுதுவிட்டபின் உங்களை வைத்துக் காப்பாற்றவா வரவேண்டும்? சபாஷ்! நன்றாயிருக்கிறது! நான் அன்னசத்திரம் கட்டிவைத்திருந்தால் வருகிறவர்களை யெல்லாம் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். கையிலோர் காசுக்கும் வழியில்லாத பெண்சாதிகள் ஆயிரக்கணக்காய்ச் சம்பாதித்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட பெண்சாதியைக் கட்டிக் கொண்டு திண்டாட்டப்பட நான் உங்கள் வீட்டுக்கு வரவில்லை போதும் போதும் உங்கள் உறவு நான் போகிறேன். (என்று எழுந்தான்.)

பூங்காவனம்.- ஐயோ தம்பி! ‘வன சாக்ஷிக்கு சீதனம் இல்லாமற் கொடுத்தால் மகிழ்வோடு விவாகம் செய்துகொள்ளுவேன், எனக்கு சீதனம் வேண்டியதில்லை’ என்று அவள் அழகைப் புகழ்ந்து பேசினீரே ! இப்பொழுது எங்களைக் கைவிடப் பார்க்கிறீரே ! (என்று மீண்டும் கையைப் பிடித்தாள்.) 

இரத்தினம் – இந்தக் குரூபியையா புகழ்ந்தேன்? பொருளிழந்தால் அழகு எங்கிருந்து வரும்? என் கையைவிட்டு வழிவிடு, நான் போகவேண்டும்.

வனராக்ஷி – அத்தான்! நான் குரூபியாயிருந்தாலும் அதைக் கவனிக்காமல் நாம் சிறுபொழுதில் விளையாடிக் கொண்டிருந்த நேசத்தை யோசித்து எங்களைக் காப்பாற்றவேண்டும். 

இதை எல்லாம் பார்த்திருந்த செட்டியாரும், ஐயா! இந்த சமயத்தில் இவர்களுக்குத் தைரியம் சொல்லாமல் போகிறது நியாயமா? என்றார்.

இரத்தினம்.- ஒய் செட்டியாரே! உமக்கும் பைத்தியமா? இவ்விதமான பெண்சாதிகள் எத்தனை வேண்டு மென்றாலும் அகப்படும். வழி விடுங்கள் நான் என் காலத்தை வீணில் கழிக்க இவ்விடம் வந்தேன்.

(அத்தருணத்தில் விஸ்வநாதம் செட்டியார் வீட்டுக்குள் நுழைந்தார்.) 

பூங்காவனம்.- (விஸ்வநாதம் செட்டியாரைப் பார்த்து) செட்டியாரே, நான் இனி என்ன செய்யப்போகிறேன். (என்று அழுதாள்.)

விஸ்வநாதம் செட்டியார்.- அம்மா,நீ சந்தோஷமடைய நல்ல சமாசாரங் கொண்டுவந்தேன். இராமசாமி செட்டியார் கடை முறியவில்லை. வந்த மின்தபால் தப்பானது. உங்களுடைய ரூபாய் எண்பதினாயிரத்தையும் யாரிடம் கொடுப்பதென்று கேட்டுவரச் சொன்னார். நகைகள் யாவையும் என்னிடம் பெட்டியோடு கொடுத்துவிட்டார்.

பூங்காவனம்.- செட்டியாரே, எங்கள் வயிற்றில் பாலை வார்த்தீர்.

இரத்தினம்.- ஆம் செட்டியாரே, என் பொன் மாமியின் துக்கத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை, அவர்கள் துக்கத்தைப் போக்கவே பலவற்றைச் சொன்னேன். மாமி! நான் சொன்னவைகளையெல்லாம் உண்மையென்றோ நம்பியிருந்தீர்கள்! (என்று சிரித்தான்.) 

பூங்காவனம். – அப்பா, உனக்குச் சிருப்பும் ஒரு கேடா! நீ போக அவசரப் பட்டவன் போய் வா. உனக்குக் கொடுக்கும் பெண்ணை ஒரு குளங்குட்டையில் தள்ளிவிடலாம். போ, போ, நேரமாய்விட்டது, ஐயோ பாவம்! உன் காலத்தை வீணாய்க்கழிக்க நேர்ந்ததல்லவா? 

வனராக்ஷி – குரூபியைத்தேடி இவ்வளவு தூரம் ஏன்வந்தாய்! அந்த மூஞ்சிக்கிந்த மஞ்சளா என்றவிதம் முடிந்தது, போ, போ. 

இரத்தினம்.- வனசாக்ஷி! நான் செப்பியது தப்பிதமாகக் காணப்படின் மன்னிக்கவேண்டும். 

பூங்காவனம்.- அடே இரத்தினம்! நீ இந்த வீட்டைவிட்டுப் போகக் கால தாமதம் செய்தால் முற்றிலும் அவமானப்படுவாய்.(என்று பூட்டியிருந்த கதவைத்திறந்தாள்). 

கதவு திறக்கப்பட்டவுடன் அறைக்குள் இருந்தவர்கள் நகைத்துக் கொண்டு வெளியில் வந்தார்கள். அவர்களில் ஒரு பெண் ஒடி வனசாக்ஷியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, “வனசாக்ஷி! நான் சொன்னது முற்றிலும் உண்மையாகக் கொண்டாயா” என்றாள். இழிவு உண்டாகு மென்று கடைக்கண் பார்வையாக, வனசாக்ஷியைப் பிடித்திருக்கும் பெண்ணைப் பார்த்துக்கொண்டே இரத்தினம் நீங்கினான். 

வனசாக்ஷி.- கமலாக்ஷி! உன் சொல்லை முதலில் அவமதித்ததைக் குறித்து மன்னிக்கவேண்டும். என்னை அந்த வஞ்சகன் கையில் ஒப்பிக்காமல் காப்பாற்றிய உங்களுக்கு என்ன செய்யப் போகிறேன். (என்று மற்றவர்களைப் பார்த்துச் சொன்னாள்.) 

விஜயரங்கம், நடராஜ முதலியார், செழுங்கமலம், இவர்களும் வெளியில் வந்தார்கள். 

செழுங்கமலம்.- பூங்காவனம், நாங்களிருந்த அறையின் கதவை ஏன் பூட்டியிருந்தாய்? 

பூங்காவனம்.- இரத்தினம் ஏதாகிலும் நினைத்துக் கதவைத்திறந்து விட்டால் நம்முடைய எண்ணம் கைகூடாநென்றே பூட்டியிருந்தேன். 

விஜயரங்கம்.- செட்டிகள் இருவரும் தாங்கள் கைக்கொண்ட வேலையைச் சரியாக முடித்தார்கள். 

பெரியவர்.- பூங்காவனம், நீயும் உன்மகள் வனசாக்ஷியும் அழுததைக் கேட்டு உண்மையாக அழுதீர்களென்றே நினைத்தேன். 

ஆம், ஆம், அவர்கள் கண்ணில் தண்ணீரென்பதுமட்டும் வரவில்லை. 

(என்று செட்டியார் சொன்னதைக்கேட்ட யாவரும் சிரித்தார்கள்.)

விஸ்வநாதம் செட்டி – கமலாக்ஷி யம்மாளுக்கு இந்த யோசனை வந்தது ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது. 

பெரியவர்.- அதற்கென்ன தடையா? 

7-A அத்தியாயம்

புதுஊரில் ஓர் பெரியவீட்டில் அறைக்குள் உட்கார்ந்திருந்த இரண்டு வாலிபர் சில புத்தகங்களைப்பார்த்து அவைகளை வைத்துவிட்டு ஒருவர் மற்றவரைப்பார்த்து, சோமசுந்தரம்! என்னைப்பெரும் யோசனையில் அமிழ்த்திவிட்டாய். உன் மனைவி முற்றிலும் சுகப்படுவாளென் அறிந்தபின்னும் நீ விசனப்பட்டுக்கொண்டதன் காரணம் எனக்குக் கிஞ்சித்தும் புலப்படவில்லை. முற்றிலும் சௌக்கியமானபின் கேட்க வேண்டு மென்றிருந்தேன். உன்மனைவி சௌக்கியமாய் எத்தனை நாளாகிறது? 

சோமசுந்தரம் – முற்றிலும் சௌக்கியமாய் ஏழெட்டுநாளாகிறது. விஜயரங் கம், என் கருத்தையறிந்தால் நீயும் என்னோடு துக்கப்படுவாய் என்பதற் குச் சந்தேகமில்லை. அதைக்குறித்துப் பின் பேசலாம். ஒருநாயகன் ஒரு நாய யைக் கண்டு வார்த்தையாடி மனச்சம்மதப்பட்டு விவாகஞ் செய்து கொள்வது உத்தமம் என்று நான் சொல்லியதைத்தடுத்து நம்முன்னேர் கள் கருத்தே மேலான தென்றாயே! அதை எனக்கு விளங்கச்சொல்ல வேண்டும். 

விஜயரங்கம்.- சோமசுந்தரம், அன்று வாக்களித்தவண்ணம் எனக்குத் தெரிந் ததைச் சொல்லுகிறேன். நான் சேட்பதற்குத் தக்க விடைகொடுத்து வரவேண்டும். பெண்களை யார் தேடிப்பார்த்து விவாகம் முடித்துக் கொள்ளவேண்டு மென்கிறாய்? 

சோமசுந்தரம்.- புருடரே பெண்ணைத்தேடி அவள் குணமறிந்து ஒருவரை ஒருவர் இச்சித்தபின் விவாகஞ்செய்து கொள்ளுதலே உத்தமம் என்று நினைக்கிறேன். 

விஜயரங்கம் – ஏன் புருடரே பார்க்கவேண்டும்? வேறொருவர் அவருக்காகப்பார்த்தால் திருப்தி இல்லையா? 

சோமசுந்தரம்.- எவ்விதம் திருப்தியாகும்? பெண்ணை நேரிற்கண்டு இச்சித்த பின் விவாகம் முடிக்கவேண்டு மென்பதல்லவா கருத்து? 

விஜயரங்கம். – ஒரு வாலிபன் தான் மணந்துகொள்ளத் தகுந்த முறையிலுள்ள ஒரு சௌந்தரியமுள்ள பெண்ணைக்கண்டதும் முதல்பார்வையில் என்ன எண்ணுவான்? 

ரோமசுந்தரம். – கண்டவுடன் அவள் சுந்தரமுள்ளவளென்றும், அம்மாதை மணம்புரிய வேண்டுமென்றும் மனங்கொள்ளுவான். 

விஜயரங்கம்.-நீ அவசரப்பட்டு ஒன்றும் சொல்லவேண்டாம். அச்சுந்தரியின் குணத்தை யறிந்தபின் விவாகஞ்செய்ய மனங்கொள்ளுவானா? குணத் தை யறியாமுன்னம் விவாகஞ்செய்ய எண்ணங் கொள்ளுவானா?

சோமசுந்தரம். – குணத்தை யறிந்த பின்தான்.

விஜயரங்கம்.-குணத்தை யறிவதெவ்விதம்?

சோமசுந்தரம்.- அம்மாதோடு வார்த்தையாடியே. 

விஜயரங்கம். – அம்மாது சுந்தரம் இல்லாதவளாய் இருந்தாலோ?

சோமசுந்தரம்.- அம்மாதிடம் நெருங்கப்போகிறதில்லை.

விஜயரங்கம்.- அப்பொழுது என்ன முடிவானது? சுந்தரமானபெண்ணை நாயகன் முதலில் விரும்புவான் என்று முடிந்தது. இனி குணத்தைக் குறித்து யோசிக்கலாம். ஒருமாதின் குணத்தை அறிவதெவ்விதம்?

சோமசுந்தரம்.- அவளோடு நெருங்கி வார்த்தையாடினால் அறியலாம்.

விஜயரங்கம்.–நீ ஒருவருடன் வார்த்தையாடினால் அவருடைய குணம் இவ் விதம் என்று சொல்ல முடியுமா? 

சோமசுந்தரம். – ஏன் முடியாது? சிலநாள் பழகினால் குணத்தையறிந்து அவள் இவ்வித நடத்தையுள்ளவளென்று சொல்லக்கூடும்.

விஜயாங்கம்.- நீ ஒரு துன்மார்க்கனாயிருந்தும் ஒரு தனவந்தனுடைய பெண்ணை விவாகஞ்செய்து பொருள்தேடிக் கொள்ளவேண்டு மென்கிற விருப்பம் உனக்கிருக்குமாகில் நீ ஒரு தனவந்தன் மகளைச் சந்தித்து வார்த்தையாடும்பொழுது உன்னை எவ்விதங்காட்டிக் கொள்ளுவாய்?

சோமசுந்தரம் – என்னையோர் சற்புத்திரனென்று அம்மாது நினைக்கும்படி நடிப்பேன். 

விஜயரங்கம்.-ஏன் அப்படி நடிக்க வேண்டும்? 

சோமசுந்தரம்.-யோக்கியனாக நடித்துக்காட்டாத விஷயத்தில் அம்மாது என்னைச் சேர்ப்பாளா? என்னோடு வார்த்தை யாடுவாளா? என்னை மணம் புரிவாளா ? 

விஜயரங்கம்.-நீ மறைத்துக் காட்டும் துர்க்குணம் எது பரியந்தம் வெளி வராதிருக்கும்? 

சோமசுந்தரம் – மறைத்து வைத்திருக்கும் துர்க்குணம் மறைத்த விதமே ஒழிந்து போகிறதில்லையா? 

விஜயரங்கம்.- நாம் இங்கு சற்புத்திரரைக் குறித்துப் பேசவில்லை. துர்ப்புத்திரரைக் குறித்தே பேசுகிறோம். ஆனதால் அந்தத் துர்க்குணம் எது பரியந்தம் வெளிவராதிருக்கும் என்பதைச் சொல்லவேண்டும். சோமசுந்தரம். கோரிய காரியம் முடிவாகு மளவும் வெளிவராது.காரியம் முடிவானால் வெளிவரும். 

விஜயரங்கம்.- உன் துன்மார்க்க குணத்தைக்கண்ட உன் நாயகி என்ன சொல்லுவாள்? 

சோமசுந்தரம்.- மோசம் போனோம். நம்மை ஏமாற்றி விட்டான் என்று துக்கப்படுவாள். 

விஜயரங்கம்.- இவ்விதமாகப் பெண்களுள்ளும் தமது துர்க்குணத்தை ஒழித்துச் சற்புத்திரியாகக் காட்டும் மாதரும் இருப்பார்களா?

சோமசுந்தரம் – புருடரில் துன்மார்க்கர் இருப்பதுபோல, ஸ்திரீகளிலும் துன்மார்க்கிகள் உண்டு. எப்படி இல்லையென்று சொல்லத் துணிய லாம்? 

விஜயரங்கம். – புருடரும் முன் சொன்னவிதம் பெண்களால் ஏமாற்றப்பட்டால் என் செய்வார்கள்? 

சோமசுந்தாம்.- அவர்களும் துச்சத்தை அனுபவிக்க வேண்டியவர்களே!

விஜயரங்கம் – இதனால் குணத்தை யறிந்தபின் வதுவை செய்துகொள்ள லாமென்ற கோட்பாடு நிலைகுலைந்ததல்லவா? இனி அதனால் உண்டாகும் நன்மையையும் கெடுதியையுங் குறித்து யோசிக்கலாம்.

சோமசுந்தரம். – குணக்கேடிருந்தாலும் ரூபவதியாய்த் தேடிக்கொள்வது பிரயோசனந்தானே? 

விஜயரங்கம்.-நீ சொல்வதுபோல் புருடனே ஒருபெண்ணைத் தேடிக் கொள்வதில் வரும் இலாபம் சௌந்தரியம் என்று ஒன்றைக் கண்டு பிடித்தோம். ஒரு புருடன் ஒரு பெண்ணைக்கண்டு சினேகித்து இருவர் மனதும் சமமதப் பட்டபின் தவறாமல் விவாகம் செய்து கொள்ளுகிறார்களா? 

சோமசுந்தரம்.– எல்லாம் எப்படி நிறைவேறும்? இருபக்கத்துத் தாய்தந்தையர் உண்மையைக் கேள்விப்பட்டு, மோகவலையிற் சிக்கியவர்களுக்குக் காணப்படாத துர்க்குணத்தைத் தாங்கள் கண்டு தடுத்துவிடுகிறார்கள். மரணத்தாலும் தடைபடுகிறது. 

விஜயரங்கம்.- துர்நடத்தையைக் கிஞ்சித்து மறியாத சுகுணர்களைக் குறித்து நாம்பேசவில்லை. ஆனதால் அவர்கள் நம்மேற் கோபிக்காமலிருக்க வேண்டுகிறோம்.பிள்ளையும் பெண்ணும் ஒரு மனதாகியபின் அவர்கள் சிநேகம் நெருங்கி இரகசியத்தில் பெண்சாதியாகவும் மணந்த புருடனைப் போலவும் இருக்கிறார்கள். இவர்கள் மனது ஒருமைப்பட்டபின் தாய் தந்தை தடுத்தாலும் பலனில்லாமற் போகிறது. அதனாலுண்டாகுங் கெடுதியை விரிக்கிற் பெருகும். ஒருமைப்பட்டபின் விவாகம் ஆகாமற் போனால் பெண்ணின் சதியென்ன ? இவ்விரகசியத்தை வேறொரு நாயகன் அறிந்தால் அவளை விரும்புவானா? அல்லது வேறொரு நாயகன் அவளைக்கண்டு வார்த்தையாடினால் மறைத்துச் சொல்லவேண்டியது சடமையல்லவா? விவாகம் முடியுமுன் அவள் தாயாவதாயிருந்தால் அதைத் தடுத்துக் கொள்ளக் கொடுந் தொழிலைச் செய்யத்துணிகிறாள் அல்லவா? 

சோமசுந்தரம்.- தான் இச்சித்திருந்த நாயகன் தன் கற்பை அழித்து நீங்கினாலும், தன் தாய் தந்தை அல்லது புருடனால் விலக்கப்பட்டாலும் தெய்வச் செயலாய் நாயகன் உயிர் துறந்தாலும் பெண்களுக்குப் பெருந்துக்கமே!

விஜயாங்கம்.-புருடர் தாமே பெண்பார்த்து விவாகஞ்செய்து கொள்ளலாம் என்று சொல்வார்களுக்குள்ளும், பிள்ளையும் பெண்ணும் ஒருவரை யொ ருவர் இச்சித்தபின் தாய் தந்தையருடைய சம்மதமில்லாமல் விவாகம் முடிகிறதில்லை.ஆனதால் தாமே பெண்பார்த்து விவாகம் செய்து கொள்ளலா மென்கிற வழக்கம் அவர்களிடம் நிலைநிற்காமல் போலியாய் முடிகிறதல்லவா? 

சோமசுந்தரம்.- யோசிக்கின் அவ்விதமாகவே காணப்படுகிறது.

விஜயரங்கம்.– ஒருநாயகனை இச்சித்தபின் அவனை விவாகஞ்செய்து கொள்ள லாமென்கிற பெந்தனையைக் கைக்கொண்ட ஓர் நாயகி தான் இச்சிக்காத நாயகனை விவாசஞ் செய்து கொள்ளுகிறாளா? நாயகனும் தான் இச் சிக்காத நாயகியை விவாசஞ் செய்துகொள்ளுகிறானா? 

சோமசுந்தரம்.– அவர்களுடைய விவாகம் பெரும்பாலும் தேவஸ்தலத்தில் நடந்தேறுவதால் இச்சிக்காத நாயகனை இச்சிக்கிறேனென்று பெண்ணும, இச்சிக்காத பெண்ணை இச்சிக்கிறேனென்று பிள்ளையும் எப்படி சொல்லுவார்கள் ? 

விஜயரங்கம்.- இச்சிக்காத நாயகன் மட்டுமல்ல. பாட்டனைப்போல் இருக் கும் ஒரு கிழவனைத் தாய்தந்தையர் தொந்தரவால் தன் மனதுக்கு விரோத மாகத் தேவஸ்தலத்தில் ஒரு பெண் ஒப்புக்கொள்ளுகிறாள். புருடனும் தாய் தந்தையர் தொந்தரவால் தனக்குச் சம்மதமில்லாத ஒரு பெண்ணை ஒப்புக்கொள்ளுகிறான் என்று வாசித்ததில்லையா? 

சோமசுந்தரம்.- பெரும் பணக்காரரா யிருந்தால் நம்மவர்களுள்ளும் பணத் துக்காசைப்பட்டுக் கிழவனுக்குச் சிறுபெண்களைக் கொடுக்கிறதில்லையா?

விஜயரங்கம்.- ஆம்! அது தாய் தந்தையருடைய குற்றத்தால் அவ்விதம் முடிகிறதை நான் இல்லையென்று மறுக்கவில்லை. நாம் முதலில் ஒரு பக்ஷத்தை முடித்துக்கொண்டு நமது பக்ஷத்தைப் பின்பேசலாம். நான் இது பரியந்தம் சொல்லிவந்ததில் அவர்களுக் கனுகூலமானதை ஒழித்து வைத்திருக்கிறேனா? 

சோமசுந்தரம்.- ஒன்றுங் காணப்படவில்லை.

விஜயரங்கம்.- இனி நம்முன்னோர்கள் செய்திருக்கும் முறைமையைக் குறித்து யோசிக்கலாம். நமக்குப் பெண்தேடி விவாகத்தை முடித்து வைப்பது நமது தாய் தந்தையரே. விவாகம் என்றால் அது இன்ன தென்று அறியாத சிறு பிராயத்தில் விவாகம் முடிந்துவிடுகிறது. நாம் சகோதரர் சகோதரிகளோடு விளையாடி ஒருவரை யொருவர் நேசிப்பதுபோல் சிறு பிராயத்தில் விவாகம் முடிந்த சிறுவர்களும் நேசித்துப் பருவமடைந்தால் அவர்கள் ஒருவரை யொருவர் நேசித்திருக்கக் கேட்க வேண்டுமா?

சோமசுந்தரம் – குழந்தைப்பருவத்தில் விவாகம் முடிப்பதும் அதனால் வருங் கெடுதியும் பார்த்துச் சகிக்கக்கூடியதா? 

விஜயரங்கம். – எந்த விஷயத்தில்? 

சோமசுந்திரம் – பால்குடித்துப் பல் தேயுமுன் சிறுவர்களுக்கு விவாகஞ்செய் வதால் வருங்கெடுதியை அறியார்போல் கேட்கிறாய்! விவாகம் முடி ந்தவுடன் பிள்ளை இறந்தால் பெண்ணின் சதியென்ன? பெண்ணுக்கு மணத்தைத் தந்ததால் வந்த இலாபந்தானென்? அவள் தன் காலத் தை யெல்லாம் கைம்பெண்ணாயிருந்து கழிக்க வேண்டியவளே யன்றி என்ன சுகத்தை அனுபவித்தவளாகிறாள்? 

விஜயரங்கம்.- வாலிபதசை அடைந்தபின் விவாகமுடிந்து அன்றிரவே மாப் பிள்ளை இறந்தால் பெண்ணின் கதியென்ன? இரண்டும் ஒன்றே அல்ல வா? அவரவர்கள் வினைக்கீடாக நடப்பதைத் தடுக்க யார் வல்லவர்?

சோமசுந்தரம்.- நீ முன் சொல்லிய வண்ணம் சிறு பிராயத்தில் விவாகமாவது பிராமணர்களுக்குள்ளும் தனவந்தர்களுக்குள்ளும் நடப்பதே யன்றி எளியவருள் அதிகமாய் நடப்பதைக் காண்கிலோம். அவர்களுக்கு இச்சை எப்படி யுண்டாகும்? 

விஜயரங்கம் – நம்மவர்களுக்குள் விவாகம் நடப்பது நெருங்கிய பந்துக்களுக் குள்ளன்றி அன்னியர்களுக்குள்ளல்ல. பிள்ளையின் பெண்ணின் தாய் தந்தையர் சிறு பிராயத்தில் குறிப்பிட்டு வருவதேயன்றிப் பிள்ளை யின் பெண்ணின் குணத்தையும் நடத்தையையும் நாளடைவில் கவனித்தும் வருகிறார்கள். பிள்ளையும் பெண்ணும் சந்திக்கும்படி நே ரிட்ட காலத்தில் தங்கள் மனச்சம்மதத்தைச் சிறு பிராயத்தில் கேட்டுக் கொள்ளுகிறார்கள். மற்ற சிறுவர்களால் இதோ உன் புருடன், இதோ உன் பெண்சாதி யென்று சாட்டும்பொழுது உண்டாகும் குறிப்பினால் சிறுவர்கள் சம்மதத்தைத் தாய் தந்தையரும் மற்றவர் களும் அறிந்து கொண்டு, விவாகம் ஆகுங்காலம் சமீபித்தபோது பெண்ணின் பிள்ளையின் சினேகிதர்களால் அவர்கள் கருத்தை யறிந்து விவாகத்தை முடிக்கிறார்கள். சம்மதம் இல்லாததைக் கண்டால் விவா கத்தை முடிக்காமல் வேறு பெண் தேடியாவது வேறு நாயகனைத் தேடி யாவது முடிக்கிறார்கள். 

சோமசுந்தரம். – ஈதெல்லாம் நீ சேர்த்துச் சொல்லுகிறதே யன்றி எங்கு அவ் விதம் நடக்கிறது? முதலாவது, ஒருபெண் அந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் வேறு மாப்பிள்ளையைப் பாருங்களென்று சொல்லுவாளா? தாய் தந்தைக்கு அடங்கிய பிள்ளை எனக்கு அந்த பெண் வேண்டாம், வேறு பெண் பார்த்து விவாகஞ் செய்யுங்களென்று சொல்லுவானா? விஜயரங்கம்.–நீ சொல்லும் விதம் சொல்லாமல் புருடனைச் சம்மதிக்காத பெண் எனக்கு விவாசம் வேண்டாம்; நான் எந்த மதிலேறி குதிக்கி றேன்? எனக்குக் கலியாணஞ் செய்யப் பந்தல்போட்டால் அன்றே ஓர் குளத்தில் குட்டையில் விழுந்துவிடுவேன் என்றும்,பிள்ளை எனக்குக் கலியாணம் முடித்துவைக்க யாரிடத்தில் சொன்னேன், எனக்குக் கலி யாணம் என்றால் அன்றே தேசாந்தரம் போய்விடுவேன் என்றும் சொல் லுகிறார்கள் என்பதையாகிலும் கேட்டிருக்கிறாயா? 

சோமசுந்தரம் – சிரித்துக்கொண்டே ஆம்! ஆம் கேட்டிருக்கிறேன். பந் துக்களுக்குள் நடக்கும் விவாகம் சிறப்புடையதாயினும் காட்டிற் சென்று மாட்டை விலைக்கு வாங்கி வருவதுபோல் ஒரு பெண்ணைக் கொண்டு வருகிறார்களே, அதற்சென்ன சொல்லப்போகிறாய்?

விஜயரங்கம்.- அன்னிய சம்பந்தம் அபூர்வம் என்று முன்னதாகவே சொல் லியிருக்கிறேன். அன்னியர்களிடத்தில் பெண் தேடுவோர் படுங் சஷ் டத்தைச் சுருக்கிச் சொல்லவே பையனுக்குப் பெண் கொண்டுவரப் பத் துச் செருப்பு தேய்ந்ததென்று சொல்லும் வார்த்தை உமது காதில் விழு ந்திருக்கிறதா? பத்துச் செருப்பு எப்படித்தேயும்? எத்தனை தடவை பெண் வீட்டுக்குப் போயிருப்பார்கள் ! பெண்ணின் குணத்தையும் நடத்தையையும் நேரிலும் மற்றவர்களாலும் அறிய அல்லவா அனேக முறை போகிறார்கள்? பெண்ணை மிகச் சவனித்துப் பார்க்கிறார்கள். சவனித் துப் பார்க்கிறார்களென்றதில் அனேகம் அடங்கி யிருக்கிறது; அதைக் குறிப்பிக்க மனமில்லை. 

சோமசுந்தரம்.- மனம் இல்லாததைச் சொல்லக் கட்டாயப்படுத்தவில்லை. அன்னியர்களிடத்தில் பெண்கொண்டு வருகிற கஷ்டத்தைச் சொன்னா யேயன்றிக் கொண்டுவந்த பெண்ணின்மேல் இச்சை யெவ்விதம் உண்டாகுமென்று சொல்லவில்லை. ஆனதால் அன்னியர்களிடத்தில் உண்டாகும் சம்பந்தத்தால் இருவருக்கும் இச்சை உண்டாகாதென்று தெரிகிறது. 

விஜயரங்கம் – அவசரப்பட்டு அவ்விதம் சொல்லவேண்டாம். அன்னிய சம் பந்தத்தில் ஒன்றுகூடிய பெண்ணும் பிள்ளையும் தாங்கள் விவாகஞ் செய் துகொள்ள வேண்டுமென்கிற விருப்பத்தோடு ஒருவரிடத்தும் வார்த்தை யாடாமல் இருப்பதாலும், அவர்கள் விவாகத்துக்கு முன் ஒருவரை இச் சித்திராததாலும், இச்சையைக் கொள்ளும் இடம் வெறுமையாய் இருப் பதாலும் அழுக்கில்லாத வஸ்திரத்தில் சாயம் ஏறுவதுபோல் பெண் ணும் பிள்ளையும் அன்னியமாக இருந்தாலும் பெண்சாதி புருடன் என்ற முறையோடு ஒருவரை யொருவர் கண்டவுடன் இச்சிக்க இடம் உண் டாகிறது. தாய் தந்தையர் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் இச்சையை உண்டாக்க இருவரையும் அலங்கரித்து ஒருவரை யொருவர் பார்க்கும் படி செய்கிறார்கள். 

சோமசுந்தரம்.- நீ சொல்வது நியாயமாகவே சாணப்படுகிறது. இன்னும் இது விஷயத்தைக்குறித்து ஏதாகிலும் சொல்லப்போகிறாயா? நெடு நேரம் இதைக்குறித்து வாதிட்டுக் கொண்டிருக்கிறோம். 

விஜயரங்கம். – அதிகம் இல்லை. தாமே ஒரு பெண்ணைக்கண்டு வார்த்தையாடி இச்சித்தபின் விவாசத்தை முடித்துக்கொள்ளலாம் என்று சொல்லு கிறவர்கள் நம்மைப்போலத் தாய்தந்தை சொல்லுக்குக் கட்டுப்படவேண் டியவர்களா யிருக்கிறார்கள். அவர்கள் செளந்தரியத்தை நேறிலறிகி றார்கள். நாமும் நேறிலறிகிறோம். பெண்ணின் பிள்ளையின் குணத் தை அவர்கள் தாய் தந்தையரா லறிவதுபோல் நாமும் தாய் தந்தைய ரால் அறிகிறோம். அவர்கள் பணத்தைக் கருதித் தங்கள் பெண்ணை யோ பிள்ளையையோ கொடுப்பதுபோல் நமது தாய் தந்தையரும் கெ கா டுக்கிறார்கள். அவர்களில் விவாசத்துக்கு முன் பெண்ணைக் கண்டு வார்த்தையாடி இருவரும் தனித்து உலாவப்போகிறதுபோல் நம்மவர் களில் இல்லை. அவர்களில் ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொள்ளுகிறேன் என்று வாக்களித்த பின் விவாகத்துக்கு முன் நேரிடுங் கெடுதிகளும், விவாகஞ் செய்துகொள்ளுகிறேன் என்ற வாக்குறுதி யைக்கொண்டு அவளை வேறொருவர் விரும்பாத விதஞ்செய்து அவளை விட்டு விடுகிறதும், நம்முன்னோர் செய்திருக்கும் ஏற்பாட்டினால் உண் டாக மாட்டாமையால் நம்மவர்களிடத்தில் அத்தீமைகள் இல்லை. முடி வில் சொல்லுமிடத்து நன்மையான குணம் இருபக்கத்திலும் இருக்கி றது. தீயகுணம் நம்மவர்களிடம் இல்லையென்று நன்றாய் விளங்குகி றது. பொருள்மேல் விருப்பங்கொண்டு பெண்ணின் பிள்ளையின் மன துக்கு விரோதமாகச் செய்வது நம் முன்னோருடைய கோட்பாடல்ல. அதை நிறுத்தி நம்முன்னோர் கொண்ட கருத்தோடு நடப்போமானால் எல்லா விஷயத்திலும் மேன்மை உண்டாகும். 

சோமசுந்தரம். – விஜயரங்கம் ! இது விஷயத்தில் நான் கொண்டிருந்த சந் தேகத்தை நீக்கி நம்பவர்கள் கோட்பாடே சிலாக்கியமென்று எளிதில் அறியச்செய்த உனக்கு அனேக வந்தனம். 

விஜயரங்கம் – நம் முன்னோர் செய்திருக்கும் ஏற்பாடுகள் அனேகம் பார் வைக்குக் குற்றத்தைக் கொண்டதுபோல் காணப்படினும், அவற்றின் கருத்தை உள் நுழைந்து பார்க்கில் அவை மேன்மையானவைகளென் றே காணப்படும். நேற்று இரத்தினம் விஷயத்தில் நடந்த வேடிக்கை ஏதாகிலும் கேள்விப்பட்டதுண்டா?

ரோமசுந்தரம்.- இரத்தினத்தின் விஷயத்தைக் குறித்து ஒன்றும் விசேட மாகக் கேள்விப்படவில்லை. அவன் வனசாக்ஷியை விவாகம் செய்யப் போகிறான் என்று எப்பொழுதுங் கேள்விப்பட்டதுபோல் நேற்றுங் கேள்விப்பட்டேன். ஏதாகிலும் விசேஷம் உண்டோ?

விஜயரங்கம்.- ஆம். உண்டு. இரத்தினமும் மாணிக்கமும் கமலாக்ஷிக்குக் கொடுத்த தொந்தரவை உனக்குச் சொல்லிய பின் இரத்தினத்தைக் குறித்துக் கவனித்து வந்தேன்.இரத்தினம் வனசாக்ஷியின் தாயிட மிருக்கும் பொருளைக் கொள்ளை சொள்ளவே விவாகம் முடிக்க எண்ணங் கொண்டிருப்பதைக் கண்டு கமலாக்ஷி மூலமாக வனசாக்ஷியிடம் சொன் னபோது அவள் ஐயப்பட்டதாகக் காணப்பட்டது. கமலாக்ஷி வீட்டி லிருக்கும் நடராஜ முதலியார் விஸ்வநாதம் செட்டியாரை நேரிற் கண்டு வார்த்தையாடியபோது நான் சொன்னவைகள் உண்மையாகக் காணப் பட்டபடியால் கமலாக்ஷி இரத்தினத்தை அவமானப்படுத்த ஓர் வழி இருக்கிறதென்றும் அதை இவ்விதம் முடிக்க வேண்டுமென்றுஞ் சொன் னாள். அவள் கருத்தை யறிந்தபின் யாவரும் அவளுடைய புத்திக் கூர் மையைக் குறித்து வியப்படையவேண்டியதா யிருக்கிறது. விஜயரங்கம் இரத்தினத்தின் விஷயத்தில் நடந்த யாவும் சொல்லிமுடித்தான். அத்தருணத்திலே சமையலறையில் சந்தடிகேட்டு, சோமசுந்தரம்! அதெ ன்ன இரைச்சல்? யாரோ சோபமாய்ப் பேசுகிறதுபோல் கேட்கிற தென்று விஜயரங்கம் கேட்டான். 

சோமசுந்தரம் – அது வழக்கமாய்வரும் சப்தமே யன்றி நூதனம் அல்ல. சமையல் அறையில் கடுங்கோபமாய்ப் பேசிக்கொண்டிருப்பது என் தாய் – பேச்சியாயி அம்மாள். என் தாயோடு மற்றொருவர் பேசுவது என் தங்கை – காளியாயி அம்மாள். இவ்விடம் நின்று சாளரத்தின் வழியாகப் பார்த்தால் யாவும் தெரியும். (என்று சாளரத்தைக் காட்டினான்.)

சோமசுந்தரம் குறிப்பிட்ட இடத்தில் நின்று சமையல் அறைக்குள் நடப்பதை விஜயரங்கம் பார்த்துக்கொண்டிருந்தான். 

காளியாயி – அம்மா! மனோன்மணி அரிசி அரித்த இடத்தைப் பார்த்தீர்களா? எத்தனை அரிசிகள் சிந்திக் கிடந்தன ; நாலைந்துக்குக் குறையாதே! அவை களைப் பொறுக்கிப்போட்டால் இவளுக்கு என்ன சேடு?

பேச்சியாயி.– இவளுக்குக் கேடு வந்து கொண்டுபோகப்போகிறது. அன் றைக்கே போய் விடுவாள் என்று சந்தோஷமாயிருந்தேன். போகாமல் எழுந்து உட்கார்ந்து கொண்டாளே! 

மனோன்மணி.- அத்தை! நான் அரிசியரிக்கும்பொழுது என் கண்ணுக் ககப் படாமல் ஒன்றிரண்டு விழுந்ததோ என்னவோ நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அவைகளை எடுத்துக்கொள்ளாமல் வருவேனா? அந்தக் குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன். 

பேச்சியாயி – அடி, உனக்குக் கண் தெரியாமலா நின்று துழாவுகிறாய்?

காளியாயி.- அடி! அடி! என்ன சொன்னாய்? அம்மா! இவள் சொல்வதைக் கேட்டீர்களா? அடி! எத்தனை அரிசி இருந்ததென்று சொன்னாய். நாலரிசிகளை எறிந்துவிட்டு வரவில்லையா? அவைகளை ஒரு பிச்சைக்காரனுக்குப் போடக்கூடாதா? 

மனோன்மணி.- மச்சி ! நான் வேண்டுமென்றா எறிந்துவந்தேன்? 

காளியாயி – அடி ! நீ இல்லையென்று சத்தியம் பண்ணுவாயா?

மனோன்மணி.- மச்சி ! சத்தியம் என்று தங்கள் வாயில் வரலாமா?

காளியாயி.- அம்மா! அம்மா! சேட்டுக்கொண்டீர்களா? நீங்களும் அப்பா வும் உயிரோடு இருக்கும் பொழுதே எனக்குப் புத்தி கற்றுக்கொடுக்கப் பார்க்கிறாளே! உங்களுக்குப் பின் இந்த வீட்டில் அடியெடுத்து வைக்க வும் யோக்கியதை இருக்குமா 

மனோன்மணி.- மச்சி! நான் ஒன்றும் குற்றமாகச் சொல்ல வில்லையே! 

பேச்சியாயி – அடி! தட்டு! பேசாதே ! புழுக்கைக்கு வாய் நீளமாய் விட் டது. பயலுக்குத் தலையணை மந்திரம் போட்டு உன் சொற்படி நடக்க வைத்துக்கொண்டாயே! அதுபோல எங்களையுமா மேய்க்கப்பார்க்கிறாய்? 

காளியாயி – அம்மா! இவள் விஷயத்தில் எவ்வளவு பொறுமை காட்டி வரு கிறேன்! இந்தக் கழுதை அதை நினைக்கிறாளா? அடியே! நான் சொ ல்லி விடட்டா? சொல்லி விடட்டா? உனக்கு ஐயோ என்றால் ஆறு மாதத்துப் பாவம் பின்தொடரும். அம்மா ! இவள் அம்மியில் மிளகாய் வைத்தரைத்தாளே, அப்பொழுது என்ன நடந்தது தெரியுமா?

பேச்சியாயி – எனக்கெப்படித் தெரியும் என் கண்டணி! இந்தக் கழிச்சலில் போவாள் என்ன செய்தாள்? 

காளியாயி.- இவள் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கும் பொழுது இவள் எண்ணம் எவன்மே லிருந்ததோ? என்ன நினைவிலிருந்தாளோ ? அனி யாயமாக மிளகை யெல்லாம் சிந்திவிட்டாள். 

மனோன்மணி.-மச்சி, ஒரு மிளகுதானே கீழே விழுந்திருந்தது ?

பேச்சியாயி. – ஏண்டி! ஒரு மிளகுதான் சும்மா வந்ததோ! உன் அப்பன் வீட்டிலிருந்தா வந்தது.(என்று தாடையில் அடித்தாள். மனோன்மணி அடிபட்டவுடன் ஒன்றுஞ் சொல்லாமல் திரும்பிச் சென்று மிளகாயை அம்மியில் வைத்து அரைத்துக்கொண்டிருந்தாள்.) 

காளியாயி.- இன்று தெருவில் சாணம் தெளித்தாளே என்னமா யிருந்தது பார்த்தீர்களா? எல்லாம் கட்டியு முட்டியுமா யிருந்தது. அதைக்காட்டி இப்படித்தானா சாணந் தெளிக்கிறதென்றேன். அதற்கவள் பார்த்தப் பார்வையை நினைக்கப் பயமாக இருக்கிறது! 

பேச்சியாயி – ஆம், ஆம், நீ ஒரு பயலாயிருந்தால் வேறு விதம் பார்ப்பாள்! காளியாயி – அம்மா,அப்பா வாங்கிக்கொடுத்த கட்டுபுடவை ஒன்றை எலிக் குக் கொடுத்துவிட்டாள். சாமான் அறையில் சாமான்களைக் கீழும் மேலுமாகச் சிந்திவிடுகிறதால் வீட்டில் எலிகள் அதிகரித்து விட்டன.

பேச்சியாயி – இக்கோவேறுக் கழுதையைக் கொண்டுவந்தபின் நம்முடைய வீட்டில் எலிகள் ஒன்றையும் வைக்கவிடமாட்டோம் என்கின்றன.

என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது காளியாயி அம்மாள் திடுதி டென ஓடிப்போய் வடித்த கஞ்சிச் சட்டியைத் தூக்கிக்கொண்டுவந்து, அம்மா, இதைப் பாருங்கள் சையை விட்டுக் காட்டுகிறேன் என்று கஞ்சி யில் கையைவிட்டு இரண்டு மூன்று சாதத்தைத் தடவி எடுத்துக் காட்டி னாள். பேச்சியாயி அம்மாளுக்கு அதிக கோபம் உண்டாகி அடி துன்மார்க்கி என்னை ஒட்டாண்டியாய் ஆக்கவா இங்குவந்தாய்? உன்னப்பன் ஆத்தாள் இப்படித்தானா வேலை கற்றுக்கொடுத்தார்களென்று மகளிடத்தி லிருந்த கஞ்சிச் சட்டியைப் பிடுங்கி மனோன்மணி தலையில் போட்டு உடைத்தாள். அறைக்குள்ளிருந்து சன்னல் வழியாகப் பார்த்திருந்த விஜயரங்கம் வெளியில்போக ஓடினான். சோமசுந்தரம் ஓடிப்போய்ப் பிடித்துக்கொண்டு வெளியில் போகவேண்டாம்; மற்ற வேடிக்கையையும் இவ்விடம் இருந்தே பார் என்றான். சட்டி உடைந்து மனோன்மணியின் தலை முகம் தேகமெல்லாம் கஞ்சியால் நனைந்து அழுதுகொண்டிருந்தாள். அப்போது முத்துக்குமார முதலியார் என்ன என்று வந்தார்.

பேச்சியாயி.- என்ன சொல்லுகிறதடா படுபாவி ! இப்பிசாசை அப்பொழுதே வேண்டாம் என்றேன். என் பேச்சைக் கேட்காமல் கொண்டுவந்து என் குடியைக் கெடுக்க நீயும் இருந்தாயே தோஷி. (என்று கன்னத்தில் இடித்தாள்.) 

முத்துக்குமார முதலியார்.- உனக்கு என்ன சொன்னபோதிலும் புத்திவருகிறதில்லையா? (என்று மருமகள் தலையில் உதைத்தான்.) 

காளியாயி – புத்திநான் கற்பிக்கிறேன். (என்று துடைப்பத்தால் நாலைந்தடி மனோன்மணி தலையில் அடித்தாள்.) 

சன்னல் வழியாகப் பார்த்திருந்த விஜயரங்கம் சோமசுந்தரத்தின் முகத்தைப் பார்த்தான். அவன் கண்ணீர் சோரவிட்டு நிற்பதைக்கண்டு, சோமசுந்தரம்! இதென்ன அநியாயம் என்றான். 

சோமசுந்தரம் – விஜயரங்கம் நான் என்ன செய்வேன்! இத்துன்பங்களை அனுபவிப்பதைவிட அவள் இறந்தால் என்மனம் அதிக சந்தோஷத்தை அடையும். சில நாள்களுக்கு முன் என் தாயும் தந்தையும் தங்கையும் சேர்ந்து அடித்த அடியால் அவள் இறந்தாள் என்று அடங்காச் சந்தோஷத்தோடிருந்த என்னைத் துக்கத்தில் அமிழ்த்த வைத்தியர் தோன்றி அவளுக்கு உயிர்கொடுத்துப் போனார். 

8-ம் அத்தியாயம்

சோமசுந்தரம் வீட்டில் நடந்த அக்கிரமங்களைப் பார்த்துவந்த விஜயரங்கம் தன் அறையிலே மஞ்சத்தில் படுத்தும் நித்திரை கொள்ளாமல் ஐயோ! ஒரு சற்புத்திரியை என்ன பாடு படுத்துகிறார்கள்! மனோன்மணிக்கு ஒருவர் துணையுங் காணப்படவில்லையே ! சோமசுந்தரம் தன் தாய் தந்தைக்கஞ்சி ஒன்றும் செய்யாமலிருக்கிறான். அவன் தந்தை யாவரிலுங் கொடியவனாகக் காணப்படுகிறார். தங்கையோ! அடிக்கடி கோள்மூட்டத் தயாராக இருக்கிறாள். தாய் பத்திரகாளி சொரூபத்தோடு யாதொரு காரணமும் இல்லாமல் புருடனையே அடிக்கிறவளா யிருந்தால் மருமகளை வதைக்கக் கேட்கவேண்டுமா? சோமசுந்தரம் தன் பெண்சாதியை அழைத்துக்கொண்டு வெளி ஏறினால் உலகம் நிந்திக்கும் என்பதற்சையமில்லை. எது எப்படி முடிந்தாலும் மனோன்மணியைத் துன்பத்திலிருந்து நீக்கிவிட வேண்டியது கட்டாயம். அம்மாதைப் பெற்றவர்களிடம் அனுப்பினால் உத்தமம் என்று நினைத்தாலும் உண்மையை அவர்களிடம் சொல்லாமல் விட்டு வந்தால் பெண்மேல் தோஷங்கண்டு விட்டுப்போனதாக எண்ணுவார்கள். இது விஷயத்தில் நாமே பிரயத்தனப்பட்டுச் செய்யலாம் என்றால் அதற்கவன் ஒப்புக்கொள்ளுவானோ இல்லையோ என்று தனக்குள் அனேகமாக யோசித்து, எனக்கு விவாகமாகாதது ஓர் விஷயத்தில் அனுகூலமாகக் காணப்படுகிறது. நம்முடைய தாய் தந்தைகளை அவர்களுக் கொப்பிட்டா சொல்லுகிறது. நமக்கு வருபவளை அவர்கள் மேன்மையாக வைத்துக்கொண்டிருப்பார்கள் என்று துணிந்து சொல்லலாம். நாம் நம்முடைய கருத்தை இன்னும் தெரிவிக்காமலிருக்கிறோம் என்று பலவித யோசனை செய்து கொண்டிருக்கும் பொழுது, அடுத்த அறையில் சயனித்திருக்கும் கலியாணசுந்தர முதலியாரும் மீனாக்ஷியம்மாளும் பேசுங்குரல் கேட்டது. விஜயரங்கம் படுத்திருக்கும் அறைக்கும் தாய் தந்தையர் படுத்திருக்கும் அறைக்கும் மத்தியிலுள்ள சுவர் அதிக உயரம் இல்லாததால் அவர்கள் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் விஜயரங்கத்துக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. 

கலியாணசுந்தர முதலியார்.- மீனாக்ஷி! விஜயரங்கத்துக்கு வேண்டிய செலவுக்காக ஏதாகிலும் பணங்கொடுத்து வருகிறாயா? 

மீனாக்ஷியம்மாள் – விஜயரங்கத்தின் செலவை யோசிக்கில் அவன் நமக்குப் பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணுவான் போல் காண்கிறது. (என்று சிரித்தாள்.) 

கலியாணசுந்தர முதலியார் – மெதுவாகப்பேசு. அவன் விழித்துக்கொண்டிருக்கக்கூடும். 

மீனாக்ஷியம்மாள் – என்ன மணி என்று நினைக்கிறீர்கள்? மணி பன்னிரண்டுக்கு அதிகமாகிறதே! இது பரியந்தமா விழித்துக்கொண்டிருப்பான்?

கலியாணசுந்தர முதலியார் – ஒருவேளை விழித்துக்கொண்டிருக்கக் கூடுமென்று நினைத்தேன். நீ என்ன சொன்னாய்? அதிக செலவு செய்கிறானா? 

மீனாக்ஷியம்மாள்.- ஆம்! சென்ற வாரம் எல்லாம் ஒன்றரையணா செலவு செய்திருக்கிறான். இப்படி செலவு செய்தால் நாம் என்ன செய்கிறது. (என்று மறுபடியும் சிரித்தாள்.) 

கலியாணசுந்தர முதலியார் – அவனுக்குக் கையில் காசில்லாததால் செலவு செய்ய வகையில்லை போல் காண்கிறது. 

மீனாக்ஷியம்மாள் – நான் நாள்தோறும் அவன் சட்டையை மாற்றி வைக்கும் பொழுது சட்டைப்பையில் இருபது ரூபாய் இருக்கும்படி நான் பார்க்கிறது வழக்கம். எப்பொழுதாகிலும் குறைந்திருந்தால் அதைப் பூர்த்தி யாக்கி வருகிறேன். அதில் பத்து ரூபாய் ஒரு நாளையில் செலவானதை நான் பார்க்கவில்லை.”ஏனப்பா ! உன் சட்டைப்பையில் இருக்கும் ரூபாய் அப்படியே இருக்கிறது. செலவு செய்யப் பயப்படுகிறாயா?” என்றால் சிரிக்கிறான். நான் இன்னும் என்ன செய்யவேண்டும்?

கலியாணசுந்தர முதலியார்.- உன் கதை அது. இனி என் கதையைக்கேள். இனிவராதென்று எண்ணியிருந்த கடனை மதுரைக்குப்போய் கண்ணப்ப முதலியாரிடம் வாங்கி வந்த தொகை முதலில் பதினாயிரம், வட்டியில் மூவாயிரம். அதில் ஆயிரம் ரூபாய் அவனிடம் கொடுத்து உன்னிஷ்டம்போல் செலவு செய்துகொள்ளென்றேன். அவன் அதை வாங்கிக் சொண்டுபோய் செட்டி வீட்டில் வட்டிக்குக் கொடுத்துவிட்டான். அதைக் கேள்விப்பட்டு ஆயிரம் ரூபாய்க்காக வரும் வட்டியைச் செலவு செய்ய இஷ்டங் கொண்டிருக்கிறான் என்று எண்ணி ஆயிரம் ரூபாய்க்காக என்ன வட்டி வரப்போகிறது. அது போதாதென்று நானும் ஐயாயிரம் அந்தக்கணக்கில் கொடுத்து வட்டியை விஜயரங்கம் கேட்கும் போது கொடுக்கச்சொல்லியிருந்தேன். அதுவிஷயம் எப்படி யிருக்கிறதென்று செட்டியைக் கேட்டதில், வட்டியும் முதலும் அப்படியே யிருக்கிறதென்றும், அதில் ஒரு காசாகிலும் வாங்கவில்லையென்றும் சொன்னார். இவனையன்றி நமக்கு வேறு பிள்ளை இல்லை. இந்த ஆஸ்தியை எல்லாம் என்ன செய்யப்போகிறான். அவன் தன் பிள்ளைகளுக்கு வைத்துப்போக வேண்டியவன்தானே? 

மீனாக்ஷியம்மாள்.- ஆம், ஆம்,பிள்ளைகளுக்குத்தான் வைத்துப் போகப்போகிறான். அவனுக்கு வயது இருபதுக் கதிகமாயும் விவாகம் செய்து வைக்காமலிருக்கிறீர்கள். ஏன் இன்னும் உன் மகனுக்குக் கலியாணம் செய்யாமலிருக்கிறீர்கள் என்று என்னைக் கேட்பவர்களுக்கு மறுமொழி சொல்ல என் மனம் கூசுகிறது. 

கலியாணசுந்தா முதலியார்.- உன்னைக் கேட்பவர்களுக்குச் சொல்லுஞ் சமாதானம் சரியல்லாததால் மனம் கூசுகிறதென்றாய். என்னைக்கேட்பவர்களுக்கு நான் சொல்லும் சமாதானம் சரியல்லவென்று நான் துக்கப்படுகிறேன். 

மீனாக்ஷியம்மாள் – ஏன் இருவரும் துக்கப்படவேண்டும்? ஒரு பெண்ணைத் தேடி அவனுக்கு விவாகத்தைச் செய்துவிட்டால் எல்லாரும் சந்தோஷமாக இருக்கலாமே! 

கலியாணசுந்தர முதலியார் – நான் என்ன செய்வேன். நான் பார்க்காத இடம் எல்லாம் பார்த்தேன். கேட்காதவர்களை எல்லாம் கேட்டேன்.

மீனாக்ஷியம்மாள் – விஜயரங்கத்தைப் பார்த்தால் பெண் கொடுக்கமாட்டேன் என்றும் சொல்லுவார்களா? அவன் அழகில் குறைந்தவனா? நமக்கு ஆஸ்தியில்லையா? வீணே கதை சொல்லுகிறீர்கள்.

கலியாணசுந்தர முதலியார்.- நீ பைத்தியக்காரியாக இருக்கிறாய். நமக்குப் பந்துக்களில் அவனை அறியாதவர்கள் யார்? எல்லாம் தெரிந்தவர்களே. அனேகர் நம்முடைய வீட்டுக்கு வராமலிருப்பதை அறியாயா? நம்முடைய நெருங்கிய பந்துச்சளை எங்காகிலுங்கண்டால் அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டுபோவதை அனேகமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன். விஜயரங்கத்தைக் கருதியல்லவா அவர்களை எல்லாம் வெறுத்தேன். உன்னுடைய தமையனை நேற்றுக் கடைத்தெருவில் கண்டேன். ஏன் வீட்டுக்கு வரவில்லை என்று நான் கேட்டதற்கு என்ன சொல்லியிருப்பானென்று நினைக்கிறாய்? 

என்று மெதுவாகச் சில வார்த்தைகளைச் சொன்னார். அவைகளைக் கேட்டிருந்த விஜயரங்கம் எழுந்து உட்கார்ந்து என் காதில் என்ன விழுந்தது? இது உண்மைதானா? ஆ! கடவுளே! என்று பெருமூச்சுவிட்டு, இனி ஒருக்ஷணமும் என் தாய் தந்தையைத் துச்சத்தில் வைத்திருப்பது தகாதென்று எழுந்து தலையணையின் கீழிருந்த சாவியை எடுத்துப் பெட்டியைத்திறந்து தான் போட்டிருந்த கடுக்கன் மோதிரங்களை வைத்துப் பூட்டி, அன்று போட்டிருந்த சட்டையில் சாவியை வைத்துச் சட்டையில் இருந்த ரூபாயில் ஒரு ரூபாய் எடுத்துக்கொண்டு, கட்டியிருந்த வஸ்திரத்தோடு ஓர் அங்கவஸ்திரத்தைப் போட்டுக்கொண்டு, கதவை மெதுவாசத் திறந்து வெளியில் வந்து நின்று, நாம் நம்முடைய தாய் தந்தையை விட்டுப் பிரிய நேரிட்டதே என்று துக்கப்பட்டுக் கண்ணீர் ததும்ப சிலநேரம் நின்று, நாம் அவசரப்பட்டுத் தாய் தந்தைகளை விட்டுப்போவது நன்றல்ல வென்று வீட்டுக்குள் நுழையப் போனவன் நம்மை மேன்மையாகப் பார்க்கும் தாய் தந்தைக்குத் துக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கவா வீட்டுக்குள் நுழையப் போகிறேன்? மகன் தாய்தந்தைகளைச் சந்தோஷப்படுத்துவதை விட்டு அவர்களைத் துன்பத்தில் அழுத்துவது அடுக்காது என்று திரும்பினான். காலையில் நம்மைக் காணாவிட்டால் துக்கப்படுவார்களே அதற்கு என்ன செய்கிற தென்று மலைத்தான். பின் தன்னைத்தானே தைரியப்படுத்திக்கொண்டு தாய் தந்தைகளுக்குச் சதா துக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிற பிள்ளை சமீபத்தில் இருந்தென்ன பலன்? என்று துணிந்து வீட்டை விட்டு நீங்கி எந்த இடத்திற்குப் போவதென்று உத்தேசிக்காமல் மேற்காகப்போகும் பாதையாகச் சென்றான். மணியும் இரண்டானதால் ஊர் முற்றிலும் சந்தடியடங்கியிருந்தது. காவற்காரர்கள் மட்டும் அங்கும் இங்கும் காணப்பட்டு விஜயரங்கத்தை எங்கு போகிறாய் என்று கேட்க, அவன் அவசரமாக ஒரு இடத்திற்குப் போகவேண்டுமென்று அவர்களை நெருங்கி வார்த்தையாடாமல் சென்று, நாம் என்ன வேலைசெய்துவந்தோம், நம்முடைய சினேகனிடம் நம்முடைய கருத்து இன்னதென்று தெரிவிக்காமல் வந்ததை அவன் அறிந்தபின் நம்மை மிகக் கேவலமாக நினைக்க இடமாய் விட்டதே! சோமசுந்தரம் பெருந்துக்கத்திலிருக்க அதனோடு நம்முடைய துக்கத்தைச் சேர்க்காமல் வந்து விட்டதும் நன்மையாகக் காணப்படுகிறது. அல்லாமலும் பெரியவரிடத்தும் சமலாக்ஷி யிடத்தும் நாம் சொல்லாமல் வந்தது நம்மேல் குற்றமாயினும் அவர்களிடம் சொல்லாமல் வந்தது நாம் கொண்ட கருத்துக் அனுகூலமானது. அவர்களிடம் பயணம் சொல்லிக்கொள்ளுவோமே யானால் சுலபத்தில் நமக்கு உத்தரவு கொடுக்கமாட்டார்கள். அவர்கள் சொல்லும் நியாயத்திற்குக் கட்டுப்படாம லிருந்தால் நம்மைக் கேவலமாக நினைக்க இடந் தரும். அவர்கள் வார்த்தையைத் தட்டாமல் ஊரிலிருப்போமாகில் தாய்தந்தைக்குத் துக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கவேண்டும். நாம் வராதிருப்பதைக் கமலாக்ஷி அறிந்து விசனப்படாமலிருக்காள். நம்முடைய ஊழ்வினை நம்மைத் தள்ளிக்கொண்டுபோகிறதால் அதைத் தடங்கல்செய்ய யாரால் முடியும் என்று தனக்குள் பலவாறாக நினைத்துத் துக்கப்பட்டும், அதற்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டும் வழிநடந்து, அருணோதயத்துக்குள் பத்துமயில் வந்து விட்டதாக மைல் கற்களால் அறிந்து எந்த ஊருக்குப்போகலாம் என்று யோசித்துக் கொண்டே வழிநடந்தான். தான் வீட்டைவிட்டுப் புறப்பட்டது முதல் தனக்குள் உதித்த கேள்விகளுக்கெல்லாம் சமாதானம் தோன்றினாலும் தான் எந்த ஊருக்குப் போகிறதென்று தனக்குள் தோன்றிய கேள்விக்குமாத்திரம் பதில் சொல்ல அறியாமல் காலைக்கடனை முடித்துக்கொண்டு எட்டுமணி பரியந்தம் நடந்தபின், வெயிலாலும் எப்பொழுதும் நடந்த வழக்கமில்லாமல் அதிக தூரம் நடந்த சிரமையாலும் களைத்துக் கஷ்டத்தோடு நடப்பதை யறிந்த வழிப்போக்கர் அநேகர் இவனைக் கவனிக்கநேரிட்டது வழிப்போக்கரில் ஒருவன் நெருங்கி தம்பி ! நீ எந்த ஊருக்குப் போகவேண்டும்? அதிக கஷ்டத்தோடு நடக்கிறாயே, உனக்குத் தேக அசௌக்கியமோ? என்றான். அதற்கு விஜயரங்கம், அண்ணா! நான் தஞ்சாவூருக்குப் போகவேண்டும். வெயிலால் எனக்குக் களையாக இருக்கிறதேயன்றி எனக்குத் தேக அசௌக்கியம் இல்லை என்று வார்த்தையாடிக்கொண்டு பதினொருமணி பரியந்தம் வழி நடந்தபின் அன்னியன் விஜயரங்கத்தைப் பார்த்து, தம்பி ! நீ தஞ்சாவூருக்குப் போகவேண்டும் என்றால் வழிக்குக் கட்டுசாதமாவது தின்பண்டங்களாவது உன்னிடத்தில் காணப்படவில்லையே? உன்னைப் பார்த்தால் தனவந்தர் பிள்ளை போலவும், ஏதோ மனவருத்தத்தால் வெளிப்பட்டது போலவும் காணப்படுகிறது. சாப்பாடில்லாமல் உன்னால் நடக்கமுடியாது. நான் வேளாளர் குலம். உன்னைப்பார்த்தாலும் அப்படியே காணப்படுகிறது. என்னிடத்திலிருக்கும் கட்டமுதை இருவரும் புசித்துப் பின் நடக்கலாம் வாவென்று கையைப்பிடித்து இழுத்தான். 

விஜயரங்கம்.- அண்ணா! நீர் ஒருவருக்சென்று கொண்டு வந்ததை இருவர் பங்கு போட்டுக்கொண்டால் ஒருவருக்கும் திருப்தியாகாது. நீரே சென்று சாப்பிட்டு வரலாம். நீர் வரும் பரியந்தம் இவ்விடத்தில் இருக்கிறேன். நீர் வந்த பின் இருவரும் போகலாம். 

என்று சொல்ல, அவ்வன்னியன் தம்பி! நான் கொண்டுவந்த கட்டுசாதத்தைப் பார். வழியில் யாருக்காகிலும் பிரயோசன மாகுமென்றே அதிகமாகக் கொண்டுவந்தேன். நீ என்னோடு வந்து சாதத்தைப்பார்த்து இருவருக்கல்ல இது நால்வருக்காகும் என்று கண்டால் சாப்பிடலாம். அப்படி யில்லாமற் போனால் நீ சாப்பிடாமல் வந்துவிடலாம் வாவென்று அன்னியன் விஜயரங்கத்தைக் குளச்சரைக்கு அழைத்துச்சென்று, இரு வரும் புசித்ததுபோக மற்றச் சாதத்தை மூட்டையாகக் கொண்டு மாலை பரியந்தம் வழிநடந்து ஓர் சத்திரத்தை அடைந்தார்கள். சத்திரத்திலிருந்த பிராமணன் விஜயரங்கத்தைப் பார்த்து, இவன் ஓர் தனவந்தன் பிள்ளைபோல் காணப்படுகிறான் என்று எண்ணி, ஐயா! நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்? உமது பெயரென்ன? என்றான். 

விஜயரங்கம்.- சுவாமி! நான் மயிலாபுரியிலிருந்து வருகிறேன். என் பெயர் விஜயரங்கம். இன்றிரவை இச்சத்திரத்தில் நானும் என் சினேகரும் கழித்துப் போகலாம் என்று எண்ணிவந்தோம்.ஏதாகிலும் ஆக்ஷேஷபனை உண்டோ என்று கேட்டான். 

சத்திரத்துப் பிராமணன். – மகாராஜனாக இருக்கலாம். ஒரு ஆக்ஷேபனையு மில்லை. நீர் அதிக தூரம் நடந்திருப்பதாக எண்ணிக் கேட்டதே யன்றி வேறொன்றுமில்லை. 

விஐயரங்கம்.– அதிக தூரம் நடக்கவில்லை. மயிலாபுரியிலிருந்து வந்தது அதிக தூரமா? 

சத்திரத்துப் பிராமணன் – முப்பத்தைந்து மைல் உம்மைப் போன்றவர்களுக்கு அதிகமல்லவா? 

என்று சிரித்துக் கொண்டே அன்னியனுக்கும் விஜயரங்கத்துக்கும் இடங் காட்டிச் சத்திரத்துக்குள் சென்றான். விஜயரங்கமும் அன்னியனும் சிலநேரம் பேசியிருந்து பின் விஜயரங்கம் நித்திரைபோனான். இரவு எட்டு மணிக்குச் சத்திரத்துப் பிராமணன் விஜயரங்கத்தை எழுப்பிக் கட்டாயப்படுத்தி அன்னியனோடு அழைத்துச் சென்று உணவளித்து உபசரித்து அனுப்பினான். விஜயரங்கம் பிராமணனைத் தனித்தழைத்துத் தான் கொண்டு வந்த ஒரு ரூபாயை எடுத்து, ஐயரே ! என்னிடத்தில் தற்காலம் அதிகமில்லை, ஆனதால் இதைப் பெற்றுக்கொள்ளும் என்று வேண்டினான். 

சத்திரத்துப் பிராமணன் – முதலியாரே! உம்முடைய தயவிருந்தால் அதுவே போதுமானது. இக்காலத்தில் இல்லாமற் போனாலும் மற்றொரு காலத்தில் பெற்றுக்கொள்ளுகிறேன். இப்பொழுதொன்றும் எனக்கு வேண்டியதில்லை. நான் பணத்துக் காசைப்பட்டவனென்று நினைக்க வேண்டாம். என்னை மன்னிக்க வேண்டும். 

என்று வேண்டி அவர்களுக்கும் படுக்கை தயார் செய்து கொடுத்தான். சத்திரத்தில் இருந்த பிராமணர்கள் விஜயரங்கத்துக்குச் சத்திரத்துப் பிராமணன் செய்யும் உபசரணையைக் கண்டு ஆச்சரியப் பட்டுக்கொண்டிருந்தார்கள். விஜயரங்கம் தன்னோடிருக்கும் அன்னியனைப் பார்த்து, அண்ணா! இந்தச் சத்திரத்துப் பிராமணனைத் தனித்து அழைத்துப் போய்ப் பணம் கொடுத்தேன். அவன் வாங்காமல் நம்மை உபசரித்துப் படுக்கை முதலானதுங் கொடுத்துப் போய்விட்டது ஆச்சரியமாக இருக்கிறதென்றான். 

அன்னியன்.- பணம் வேண்டாம் என்ற பிராமணனை இன்றுதான் நான் கண்டேன். இதற்குமுன் சத்திரத்துப் பிராமணனை உனக்குத் தெரியுமா? நான் அந்தப் பிராமணனை அறிந்தவன் அல்ல என்று இருவரும் சிலநேரம் பேசியிருந்து நித்திரை போயினார். விஜயரங்கம் நல்ல நித்திரையிலிருக்கும்பொழுது, அன்னியன் எழுப்பி, தம்பி! வண்டி கட்டுகிறார்கள்; அவர்களோடு போனால் நமக்கு வழிநடையில் வருத்தம் தோன்றாது. எழுந்திருக்க இஷ்டமா? என்று கேட்டான். 

விஜயரங்கம். – ஆம் அண்ணா ! இதோ வந்தேன்; ஐயரெங்கே ? அவரிடத்தில் படுக்கையை ஒப்பித்து விடவேண்டுமே! 

சத்திரத்துப் பிராமணன் – நான் இங்கிருக்கிறேன். நீங்கள் க்ஷேமமாகப் போகலாம். 

விஜயரங்கமும் அன்னியனும் வண்டிகளோடு இரவெல்லாம் நடந்து விடிய ஒரு ஜாமத்துக்குமுன் அன்னியன் விஜயரங்கத்தைப் பார்த்து, தம்பி! நீ க்ஷேமமாய்ப் போய்வரலாம். நான் இவ்வழியாகத் திரும்பும் வண்டிகளோடு செல்லவேண்டும் என்று சுட்டிக் காட்டினான். 

விஜயரங்கம்.- அண்ணா ! நீர் என் விஷயத்தில் காட்டிய பக்ஷத்தை மறவேன், போய்வாரும். 

என்று தனக்கு வழியிலகப்பட்ட சினேகனைப் பிரிந்து மற்ற வண்டிகளோடு பின் சென்று பொழுது விடியும் சமயத்தில் வண்டிகள் வண்டி பேட்டைக்குள் நுழைவதைக்கண்டு, இனி வண்டிகள் துணை வேண்டுவதில்லை என்று நடந்து, நம்முடைய வினை நம்மை எங்கு கொண்டு போகிறதோ தெரியவில்லை; நேற்று வெயிலால் கஷ்டப்பட்டாலும் கால்கள் நோகவில்லை; இன்று இரண்டு துடைகளும் அதிகம் நோகின்றன; பாதங்கள் பூமியில் வைக்க முடியவில்லை; நாம் என்ன செய்கிறது? எவ்விதம் இந்தப் பிரயாணத்தை முடிக்கப்போகிறோம் என்று துக்கப்பட்டு, தானே தன்னைத் தைரியப்படுத்திக்கொண்டு தான் இவ்வித கஷ்டத்தோடு வழி நடப்பதைத் தன் தாய் தந்தை நேரில் பார்த்தால் சகிப்பார்களா என்று நினைத்து, அடிக்கடி உட்கார்ந்து இளைப்பாறி மாலை மூன்று மணி பரியந்தம் நடந்து, இனி தன்னால் அதிக தூரம் நடக்கமுடியா தென்று எண்ணிச் சத்திரம் சமீபத்தில் இருப்பதாக வழிப்போக்கரால் அறிந்து அதிக கஷ்டத்தோடு நடந்து போகும்போது, சவாரி வண்டி யொன்று அதிக வேகமாய் வருவதைக்கண்டு வண்டிக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று வண்டியைப் பார்த்தான். அதில் ஓர் தனவந்தன் இடுப்பிலிருந்த வெள்ளிப் பொடிச் சிமிழைக் கையில் எடுத்துத் திறந்து மூக்குப்பொடி எடுத்துக்கொண்டு சிமிழை மடியில் சொருகப் போனபோது கைதவறிக் கீழே வெள்ளிச் சிமிழ் விழுந்தது. உடனே வண்டியை நிறுத்தத் தனவந்தன் கட்டளையிட்டும் கொஞ்சந்தூரம்போய் வண்டி நின்றது. விஜயரங்கம் ஓடிச் சிமிழை எடுத்து வண்டியிலிருக்கும் தனவந்தனிடம் கொண்டுபோய்க் கொடுக்க மெதுவாகச் சென்று தனவந்தனிடம் சிமிழைத்தந்து, ஐயா! என்னை மன்னிக்கவேண்டும், என்னால் ஓடிவர முடியாததால் மெதுவாக நடந்து தங்களைப் பார்க்க வந்தேன்.

தனவந்தன்.- ஆம்! ஆம். நீர் சிலதூரம் ஓடிப்பார்த்துப் பின் உம்மால் ஓட முடியாமல் மெதுவாக வருவதை நான் பார்த்திருந்தேன். உமக்கு நான் கொடுத்த தொந்தரவை நீரல்லவா மன்னிக்கவேண்டும்? நீர் இன்னும் அதிக தூரம் போகவேண்டுமோ? நான் சமீபத்திலிருக்கும் சத்திரத்துக்குப் போகிறேன். அது டரியந்தம் வண்டியில் வரலாம், ஏறிக்கொள்ளும். (என்று வேண்டினான்.) 

விஜயாங்கம்.- ஐயா ! நானும் அந்தச் சத்திரத்திற்கே போகிறேன். தாங்கள் சௌக்கியமாய் உட்கார்ந்திருப்பதைக் கெடுக்க மனமில்லை. நான் மெதுவாக நடந்து வருகிறேன். தாங்கள் போகலாம். 

தனவந்தன்.- நாலைந்து பேர் உட்கார்ந்து போகும் வண்டியில் இருவர் உட்கார்ந்துபோக இடம் போதாமற் போய்விடுமா? ஏறி உட்காரும். 

என்று கையைப் பிடித்திழுத்து உட்காரவைத்து வண்டியை ஒட்டும்படி உத்தரவளித்து, நீர் எங்கிருந்து வருகிறீர்? உமது பெயரென்ன? என்று கேட்டான். 

விஜயரங்கம்.- நான் மயிலாபுரியிலிருந்து வருகிறேன். என் பெயர் விஜயரங்கம். 

தனவந்தன்.- மயிலாபுரியிலிருந்தா வருகிறீர்? எப்பொழுது மயிலாபுரியை வீட்டுப் பிரயாணப்பட்டீர்? 

விஜயரங்கம். – நேற்றுக் காலை. 

தனவந்தன். – நேற்றுக் காலையிலிருந்து இது பரியந்தம் அறுபத்தைந்துமைல் நடந்திருந்தால் கால்கள் நோகாமலிருக்குமா? ஐயோ! பாவம்! இளம் பிள்ளை! எங்கு போகவேண்டும்? 

விஜயரங்கம்.- சென்னைக்கு அல்லது தஞ்சாவூருக்குப் போகலாம் என்றிருக்கிறேன். 

தனவந்தன்.- நீர் போகவேண்டிய இடத்தைத் தீர்மானித்துக்கொள்ளாமலா பிரயாணப்பட்டீர்? தஞ்சை ஒருபக்கமும் சென்னை மற்றோர் பக்கமுமாக இருக்கின்றனவே! 

விஜயரங்கம்.- ஏதாகிலும் உத்தியோகம் செய்யலாம் என்று போகிறதால் எந்த ஊருக்குப் போகிறதென்ற எண்ணம் தீர்மானத்திற்கு வராமலே பிரயாணப்பட்டேன். 

தனவந்தன் – உம்மைப்பார்த்தால் தனவந்தன் பிள்ளைபோல் காணப்படுகிறதே! உமக்குத் தாய் தந்தை இல்லையா? 

விஜயரங்கம்.- இருக்கிறார்கள். அவர்கள் உத்தரவு இல்லாமலே வெளி ஏறினேன். 

இதற்குள் வண்டி சத்திரத்தண்டை வந்து நின்றது. சத்திரத்திலிருந்த சிலர் ஓடிவந்து வண்டியிலிருந்த இருவருக்கும் கைலாகு கொடுத்து இறக்கிவிட்டு, வண்டியிலிருக்கும் திண்டு, கைப்பெட்டி முதலிய சாமான்களை எடுத்துக்கொண்டு போனார்கள். தனவந்தன் சத்திரத்துக்குள் நுழைந்தவுடன், அண்ணாமலை என்றழைத்தான். ஒருவன் ஓடிவந்து ஐயா! என்று எதிரில் வணக்கத்தோடு நின்றான். விரைவில் வெந்நீர் வைத்து என்னோடு வண்டியில் வந்தவருக்குக் கால்களை உருவி அவருக்கு வேண்டியதைச் செய்து அவருடைய தேகவலியை நீக்குங்கள். அவர் ஓர் தனவந்தன் பிள்ளை. கால் நடையாக அதிக தூரம் நடந்து விட்டார். சாக்கிரதையாகப் பாருங்கள் என்றான். 

அண்ணாமலை. – எஜமான்மார் ஊருக்குப்போக எத்தனை நாள் செல்லும்? தங்களுக்கும் தங்களுடைய சினேகருக்கும் வேண்டியவைகளைச் சேகரித்துக் கொள்ளக் கேட்கிறதால் என்னை மன்னிக்கவேண்டும். 

தனவந்தன்.- நாளையதினம் காலை ஊருக்குப்போக உத்தேசித்து வந்தேன். ஆயினும் என்னோடு வந்த வாலிபனைக்கருதி இரண்டொருநாள் இருக்கும்படி நேரிடுமென்று நினைக்கிறேன். சத்திரத்திலுள்ள வேலைக்காரர் களெல்லாம் எப்படி இருக்கிறார்கள்? 

அண்ணாமலை.- நெல்லைக் களஞ்சியத்தில் சேர்ப்பதால் யாவரும் அந்த வேலை யிலிருக்கிறார்கள். 

தனவந்தன்.- இந்த வருஷத்து வேளாண்மை எப்படி? 

அண்ணாமலை.- எந்த வருஷத்திலும் இவ்வளவு விளைவு இல்லையென்று யாவரும் சொல்லுகிறார்கள். 

தனவந்தன்.- கார்பாரி போனது முதல் எனக்கு அலைச்சல் அதிகமாய் விட்டது. எதையும் நேரிலிருந்து பார்க்க முடியவில்லை. நீ விரைவில் சென்று வாலிபன் விஷயத்தில் நான் சொல்லியதைச் செய்.

சத்திரத்திலுள்ள வேலைக்காரர்கள் வெளியில் நின்ற விஜயரங்கத்தை யழைத்துச் சென்று அவன் கைகால்கள் வலி நீங்கவேண்டியதற்கேற்ற சிகிச்சை செய்து போஜனமளித்தபின், அண்ணாமலை விஜயரங்கத்தைப் படுக்கை அறையில் கொண்டுபோய் விட்டுச் சயனித்துக்கொள்ளச் சொன்னான். 

விஜயரங்கம். – கட்டில் மெத்தை எனக்குவேண்டாம். பாயொன்றிருந்தால் போதுமே ! 

அண்ணாமலை – ஐயாவே! எஜமான் தங்களை இக்கட்டிலின் மேல் படுத்துக் கொள்ளச் சொல்லும்படி உத்தரவு அளித்திருக்கிறார். தாங்கள் மறுப்பது வியாயமல்ல. 

விஜயரங்கம்.–அப்பா உன் பெயரென்ன? உன் எஜமான் பெயரென்ன? அவர் இச்சத்திரத்தில் இடும் கட்டளையைக்கேட்டு நீ நடப்ப தென்ன காரணம்? 

அண்ணாமலை – ஐயா ! என் பெயர் அண்ணாமலை; எஜமான் பெயர் இன்ன தென்றும், அவர் இந்த சத்திரத்துக்குச் சொந்தச்காரர் என்றும் நீர் அறியாமல் போனது அதிசயமாகக் காணப்படுகிறது. அவர் பெயர் வேங்கடாசல முதலியார் என்று அறியாமல் அவருக்கு எப்படி சினேகமானீர்?

விஜயரங்கம்.- அப்பா அண்ணாமலை ! நான் வரும் வழியில் அவரைக் கண்டதே யன்றி அவர் இன்னாரென்று இதற்குமுன் அறிந்தவனல்ல. முன் பின் அறியாத என்னை இவ்வளவு உபசரணை செய்து மேன்மையாக நடத்துகிறவருக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்!

அண்ணாமலை. – ஐயா தாங்கள் அதிக சிரமத்தோடு நெடுந்தூரம் நடந்து வந்திருப்பதால் தங்களுடைய தேகத்துக்கு அதிக சோர்வு இருக்கும், உம்மோடு நெடுநேரம் வார்த்தையாடிக் கொண்டிருப்பது கூடாது. எஜமான் கண்டாலும் கோபிப்பார். தாங்கள் படுத்து நித்திரை செய்யுங்கள். யாவும் சாவகாசமாய்ப் பேசலாம். 

என்று விடைபெற்றுச் சென்றான். விஜயரங்கம் கட்டிலிற் படுத்துக்கொண்டு. விளக்கொளியால் அவ்வறையிலிருந்த அலமாரியில் அனேக புத்தகங்கள் இருப்பதைக்கண்டு தன்னால் எழுந்து பார்க்கச் சக்தி யில்லாமல், சாலையில் பார்க்கலாம் என்றும், தான் தாய் தந்தையரை விட்டு வந்ததோடு, தன் சினேகன் சோமசுந்தரம் பெண்சாதி படும் துன்பத்தைக் கண்டும் அத்துன்பம் நீங்க யாதொரு நன்மையும் செய்யாமலும் வந்து விட நேரிட்டதே என்று பரிதாபப்பட்டு, அதிக தூரம் நடந்துவந்த இளைப்பால் நித்திரை போனான். மறுநாள் காலை எட்டு மணிக்கு விஜயரங்கம் படுத்திருக்கும் அரைக்குள் வெங்கடாசல முதலியார் வந்து, தம்பி விஜயரங்கம்! இன்னும் தூக்கமா? மணி எட்டாகிறது, எழுந்திருக்க வில்லையா? என்றார். விஐயரங்கம் எழுந்து, அண்ணா! தங்களுக்குப் பெருந்தொந்தரவைக் கொடுத்தேன். சாதாரணமாக நான் காலையில் எழுந்திருப்பது வழக்கமாயிருந்தும் இன்று அதிக நேரம் தூங்கிவிட்டேன் என்று சொல்ல, இருவரும் சென்று காலைக்கடனை முடித்துச் சத்திரத்துக்கு வந்து காலைப்போஜனம் உண்டபின் வேங்கடாசல முதலியார் விஜயரங்கத்தைப் பார்த்து நீர் நேற்றும் அதற்கு முந்தின நாளும் அதிக தூரம் நடந்துவந்த இளைப்பு நீங்கச் சற்றுநேரம் படுத்துக் கொள்ளும். நான் வெளியில் போய்வருகிறேன் என்றார். விஜயரங்கம் எனக்குப் பகலில் படுத்துறங்கும் வழக்கமில்லை. ஆக்ஷேபனை இல்லாத விஷயத்தில் நானும் கூடவருகிறேன் என்றான். 

வேங்கடாசல முதலியார் – தம்பி, உம்மை அழைத்துப்போக எனக்கு ஆசேபனை இல்லை. இன்று நடக்காமல் இருப்பீரேயானால் உமது கால்வலியெல்லாம் நீங்கிவிடும். தூங்க முடியாமற் போனால் நீர் படுத்திருந்த அறையில் இருக்கும் புத்தகங்களில் இஷ்டமானதை எடுத்து வாசித்துக்கொண்டிரும். 

என்று வெளியிற் சென்றார். விஜயரங்கமும் இன்று நடக்காம லிருந்தால் கால்வலி முற்றிலும் நீங்கிவிடும். நாளைப் பிரயாணப்பட அனுகூலமா யிருக்குமென்று அறைக்குள் சென்று அலமாரியில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தாலும், அவன் மனம் வெவ்வேறு விஷயங்களில் பிரவேசித்திருந்ததால் தான் வாசித்தது இன்னதென்று அறியாமல் நெடுநேரம் போக்கினான். அண்ணாமலை அச்சமயத்தில் வந்து, ஐயா! சாப்பாடு சித்தமாயிருக்கிறது. தங்களை எஜமான் அழைத்துவரச் சொன்னாரென்றான். விஜயரங்கம் தான் வாசித்திருந்த புத்தகத்தை வைத்து அண்ணாமலையோடு சென்று வேங்கடாசல முதலியாருடன் போஜனமுண்டு மற்றோர் அறையில் இருவரும் தாம்பூலம் போட்டுக் கொண்டிருக்கும்பொழுது விஜயரங்கம் வேங்கடாசல முதலியாரைப் பார்த்து, அண்ணா! தாங்கள் என் விஷயத்தில் பெருந் தொந்தரவு எடுத்துக்கொண்டீர்கள். தாங்கள் என் விஷயத்தில் காட்டின அன்பை மறவேன். நான் நாளையதினம் சாலை பிரயாணப்பட எண்ணங் கொண்டிருக்கிறேன். உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

வேங்கடாசல முதலியார் – தம்பி விஜயரங்கம்! நேற்று உம்மோடு பேசும் பொழுது நீர் உம்முடைய தாய்தந்தைமேல் மனவெறுப்பால் வெளிப் பட்டவராகக் காணப்பட்டது. நீர் போகவேண்டிய இடம் இன்ன தென்று முதலில் அறிந்து கொள்ளாமல் பிரயாணப்பட்டு வந்திருக்கிறீர் இவ்விதமாகப் போக எண்ணங்கொண்டிருக்கும் உம்மை அனுப்புவது நியாயமல்ல. நீர் என் சசோதரனைப்போல் எப்பொழுதும் என்னோடிருககலாம். நீர் எங்கும் போகவேண்டிய தில்லை. 

விஜயரங்கம்.- அண்ணா! தங்களுடைய இஷ்டத்துக்கு விரோதமாகச் சொல்லேன். ஆயினும் நான் இனி ஒருவருக்குப் பாரமாக இருக்கக் கூடாதென்று வெளிப்பட்டேன். நான் கொண்ட எண்ணத்தை நிலை நிறுத்தாமல் தங்களுக்குப் பாரமாக இருப்பது எனக்குப் பிரியமில்லை, ஆனதால் நான் சொல்வதைக் குற்றமாகக் கொள்ளாமல் எனக்கு உத்தரவு கொடுத்தனுப்ப வேண்டுகிறேன். 

வேங்கடாசல முதலியார் – தம்பி! எனக்குப் பாரமாயிருக்கப் போகிறேன் என்று சொல்வது தவறு. எனக்கிருக்கும் பொருளைச் செலவழிக்க வழியில்லாமல் இந்தச் சத்திரங் கட்டிவைத்திருக்கிறேன்.நீர் முன் கொண்ட கருத்தை நிலை நிறுத்தவேண்டுமென்று சொல்வதைத் தடுக்க எனக்கும் பிரியமில்லை. ஆனதால் நான் சொல்வதைச் சற்றுக் கவனித்துக்கேளும். என் குடும்பத்துக்கும் என் ஸ்திதிக்கும் காப்பாளியாக இருந்து காரியம் பார்த்துவந்தவர் காலஞ்சென்றது எனக்குப் பெருங் கஷ்டத்தைக் கொடுக்கிறது. உமக்கு இஷ்டம் இருந்தால் நீர் அந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். நானும் முன் சொன்னது போல் என்னோடு பிறந்த சகோதரனைப்போல் உம்மைப் பார்த்து வருவேன். உம்முடைய கருத்தென்ன? சொல்லவேண்டும்.

விஜயரங்கம் – அண்ணா! தாங்கள் என்னை இன்னானென்றும், என் குணமும் செய்கையும் இன்னவையென்றும் அறியா முன்னம் என்மேல் அன்புகாட்டி நன்மையைச் செய்ய எண்ணங் கொண்டிருப்பதற்கு நான் என்ன பிரதியுபகாரம் செய்யப்போகிறேன்? தாங்கள் என்மீது கிருபை கூர்ந்து ஓர் வரங் கொடுப்பீரானால் தாங்கள் இட்ட கட்டளைப் பிரகாரம் நடக்கச் சித்தமாயிருக்கிறேன். நான் கேட்கும் வரம்கொடுக்கத் தடை படின் எனக்கு என்ன நன்மை வருவதாயினும் அதை விட்டுப்போக வேண்டியது அவசியமாக இருக்கிறது. 

வேங்கடாசல முதலியார் – தம்பி ! என்னவரம் வேண்டும்? நீர் நியாயமானதைக் கேட்பீரே யன்றி நியாயம் அல்லாததைக் கேட்கமாட்டீர். அது எதுவாக இருந்தாலும் கொடுக்கத்தடையில்லை. உமக்கிஷ்டமானதைக் கேட்கலாம். 

விஜயரங்கம்.- அண்ணா ! நேற்று என்னைக் கண்டபொழுது என் தந்தை பெயர் என்ன என்று கேட்டீர். நான் அதற் கிதுபரியந்தம் பதில் சொல்லவில்லை யல்லவா? 

வேங்கடகல முதலியார்.- உம்முடைய தந்தை பெயரைச்சொல்ல இஷ்டம் இல்லாதிருந்தால் சொல்லவேண்டாம். உம்முடைய தந்தை பெயரை மற்றொரு முறை கேட்கவேண்டாம் என்ற வரந்தானே கேட்கப் போகிறீர்? நான் கேட்காமல் இருக்கிறேன் என்று வாக்களிக்கிறேன். அது விஷயத்தில் நீர் கவலை கொள்ளவேண்டாம். 

விஜயரங்கம்.- அண்ணா! தந்தை பெயரைச்சொல்லவே பிள்ளை பிறக்கிறான். என் தந்தை பெயரைத் தங்களிடத்தில் சொல்லத் தடையில்லை. நான் இங்கிருப்பது அவருக்குத் தெரியாமல் இருக்கவேண்டும். அவருக்குத் தெரிவிக்க வில்லை என்ற வரம் ஒன்று கிடைத்தால் போதுமானது.

வேங்கடாசல முதலியார் – தம்பி! நீர் என்னோடிருட்டதை என்னால் உமது தந்தை அறிந்து கொள்ளமாட்டார். உம்முடைய தந்தையின் பெயரை எனக்குச் சொல்லவேண்டுவதில்லை. நீர் சுகமாய் என்னோடிருக்கலாம்.

விஜயரங்கம்.- அண்ணா! என் விஷயத்தில் பேரன்பு காட்டிய தங்களிடத் தில் என் தந்தை பெயரை மறைத்து வைத்திருப்பது நியாயமா? என் தந்தை பெயர் கலியாண சுந்தர முதலியார். 

வேங்கடாசல முதலியார் – என்ன? என்ன? கலியாண சுந்தர முதலியாரா? எந்த கலியாண சுந்தர முதலியார்? 

விஜயரங்கம்.- அண்ணா! என் தந்தை பெயரைக்கொண்டு வேறொருவர் மயிலாபுரியில் தனவந்தராக இருப்பதை அறியேன். 

வேங்கடாசல முதலியார் – உம்முடைய தாயார் பெயரென்ன?

விஜயரங்கம்.- என் தாயார் பெயர் மீனாக்ஷியம்மாள். 

விஜயரங்கம் தாய் தந்தை பெயர்களைக் கேட்டவுடன் வேங்கடாசல முதலியார் எழுந்துபோய்விட்டார். விஜயரங்கம் காரணம் அறியாமல் அவர் வந்த பின் கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, அண்ணாமலை வந்து ஐயா! உம்முடைய தந்தையின் சூதையும் உம்முடைய சூதையும் அறிந்து கொண்டதாகவும், உம்முடைய இஷ்டம்போல் போகவேண்டிய இடத்திற்குப் போகலாம் என்றும் என் எஜமான் உத்தரவு கொடுத்தார் என்று விஜயரங்கத்திடம் சொன்னான்.

விஜயரங்கம் – நான் என்ன சூது செய்தேன்? என் தந்தை என்ன சூது செய்தார்? எஜமான் எங்கே? 

அண்ணாமலை.- ஐயா! உம்மிடத்தில் சொல்லவேண்டியதை என்னிடத்திற் சொல்லி உமக்குத் தெரிவிக்க உத்தரவு செய்து எஜமான் வண்டி ஏறித் தம்முடைய ஊருக்குச் சென்றார். நீர் இன்றிரவு இங்கிருந்து நாளைய தினம் சாலையில் உமக்கிஷ்டமான இடத்திற்குப் போகலாம்.

விஜயரங்கம்.- நானும் என் தந்தையும் செய்த சூது இன்னதென்று சொல்லாமல் போய்விட்டது நியாயமல்ல. இவ்விதமான அபிப்பிராயங் கொண்டவருடைய சத்திரத்தில் இனிமேல் இருப்பதும் அழகல்ல. (என்று சொல்லிக்கொண்டே சத்திரத்தை விட்டு நீங்கினான்.) 

9-ம் அத்தியாயம்

சோமசுந்தரம் தன் அறையில் நெடுநேரம் மௌனமாக உட்கார்ந்திருந்து தன் கண்களில் தாரை தாரையாக நீரை வடியவிட்டுப் பின்வருமாறு பேசலுற்றான்:- இனி என் துக்கத்தை ஆற்ற ஆரிருக்கிறார்கள்!உடலிரண்டும் உயிரொன்றுமாக இருந்த பிராணசினேகன் ஒரு வார்த்தை யாகிலும் என்னிடம் சொல்லாமல் போய்விட்டான். இன்று வந்து விடுவான், நாளை வந்துவிடுவான் என்று எட்டுநாளைக் கழித்துவிட் டேன். தேடாத இடமில்லை. இனி எங்குபோய்த் தேடுவேன்! என்ன செய்வேன்! எவ்விதம் உயிரோடு இருப்பேன்! ஓ! விஜயரங்கம் உன்னை எப்பொழுது காணுவேன்! ஐயோ ! உன் தாயார் உன் விஷயத்தில் படுந்துக்கத்தை நீ நேரில் நின்று பார்க்க முடியுமா? உன் சட் டையில் வைத்துப்போன சாவியால் உன் பெட்டியை உன் தாய் திறந்து கடுக்கன், மோதிரம், அரைஞாண் இவைகளைக் கண்டு கொண்ட துக்கத்தைக் குறிக்க முடியுமா? நீ உன் ஆபரணங்களையெல்லாம் வைத்துவிட்டு ஒரு ரூபாய்மட்டும் எடுத்துக்கொண்டு போனாயென்று அழுது அன்னம் தண்ணீர் ஒன்றுமில்லாமல் இருக்கிறாளே! உன் தந்தை என் மகனெங்கே, எங்கு போனான், கொண்டு வாருங்கள். என் மகனை எப் பொழுது பார்க்கப்போகிறேன் என்று படுத்த படுக்கையைவிட்டு எழுந்திருக்காமல் அழுத வண்ணமாக இருக்கிறாரே! தாய் தந்தைகளைத் துச்சத்தில் அழுத்தி நீ போய்விட்டது தருமமா? தாய் தந்தைகள் மேல் அதிக பற்றுள்ளவனென்று உன்னை மதித்திருந்த நடராஜ முதலியாரும் துக்கப்படுகிறாரே! கமலாக்ஷியும் அவள் அன்னையும், வனசாக்ஷியும் அவள் அன்னையும் நினைத்து நினைத்துத் துக்கப்படுகிறார்களே! யாவரையும் உனக்காகத் துக்கப்படவிட்டு நீ போன காரணம் யாது? உன் கருத்து இன்னதென்று ஓர் வரியாகிலும் எழுதியனுப்பக்கூடாதா? ஐயோ! என் மனைவி படும் கஷ்டத்தைக் கண்டு சகிக்காமல் துக்கப் பட்டாயே! பரோபசார சிந்தையைக் கொண்ட நீ யாவரையும் துக்கத்தில் விட்டு நீங்கினாயே! இது நியாயந்தானா? மற்றவர்களைக் குறித்து நான் நினைக்காமலிருந்தாலும் நீ பிறந்தது முதல் உன்னை மேன்மையாக வளர்த்துவந்த உன் தாய் தந்தையர் படுங்கஷ்டத்தைப் பார்த்துச் சகிக்க முடியாமல் இருக்கிறதே! யாதொன்றுக்கும் கவலை கொள்ளாமல் செல்வப் பிள்ளையாக இருந்து இப்பொழுது என்ன கஷ்டப்படுகிறாயோ! சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாயோ! உன் கையில் ஏராளமாகப் பொருளிருக்க அவைகளில் கொஞ்சமாகிலுங் கொண்டுபோகாமல் யாருடைய வீட்டில் சாப்பாட்டுக்கு ஏக்கத்துடன் நிற்கிறாயோ! நீ கொண்டுபோன ஒரு ரூபாய் என்ன பிரயோசனத்தைக் கொடுக்கும்? செட்டி வீட்டிலிருக்கும் பணத்தைத் தொடக்கூடாதென்ற கருத்தென்ன? என்று தனக்குள் எண்ணாது எல்லாம் எண்ணி அழுது, ஒரு வேளை விஜயரங்கம் இன்று வந்திருந்தாலும் வந்திருக்கக் கூடும். நாம் போய்ப் பார்த்து வருவதே உத்தமம் என்று கண்களைத் துடைத்துச்சொண்டு விஜயரங்சத்தின் வீட்டுக்குப்போனான். சோமசுந்தரம் வெளியிற் போகிறதைக் கண்ட அவன் தங்கை சாளியாயி தன் தாயிடம் ஒடி அம்மா! மனோன்மணியை வந்து பாருங்கள். அவள் இத்தனை நேரம் எங்கு இருந்தாள் என்று கேளுங்கள். அண்ணன் தனித்திருக்கும் அறையில் இவளுக்குப் பகலில் என்ன வேலை. அண்ணனிடம் வருவார் போவார் இருக்க மாட்டார்களா? இவள் அண்ணனோடு இருப்பதைக் கண்டால் என்ன சொல்லுவார்கள்? எல்லாவற்றையும் அடுப்பிலும் துடுப்பிலும் வைத்துவிட்டு அண்ணனிடத்தில் போய்க் கொஞ்சவும் குலாவவும் இதுதானா நேரம்? அவர் இவளுடைய சங்கடத்தைச் சகிக்க முடியாமல் வெளியிற் போன பின் ஒன்றும் அறியாதவள் போல் இருக்கிறாள்; வந்து பாருங்கள். (என்று கையைப்பிடித்து இழுத்துவந்தாள்.) 

பேச்சியாயி.- ஆம்! ஆம்! நானும் அனேக தடவையில் பார்த்திருக்கிறேன் (என்று மருமகளை எட்டி யுதைத்து) ஏண்டி! துடைப்பக்கட்டை! இது தேவடியாள் வீடா? பயலோடு இரவெல்லாம் போடுகிற குசுகுசு மந்திரம் போதாதென்று பகலிலுமா போடப்போனாய்!(என்று மறுபடியும் உதைத்தாள்.) 

மனோன்மணி.- காரணம் ஒன்றும் அறியாமல், அத்தை! நான் எங்கு போயிருந்தேன்? நான் எங்கும் போகவில்லையே! அடுப்பில் வெண்ணெயை வைத்து உருக்கிக் கொண்டிருக்கிறேனே ! நான் இதை விட்டுப்போக முடியுமா? என்னை வீணே நிந்திக்கிறீர்கள். 

காளியாயி – அம்மா! இவளுக்குப் பேச்சு அதிசமாய்ப் போய்விட்டதைக் கவனித்தீர்களா? 

பேச்சியாயி – பயலைக் கையில் போட்டுக்கொண்டதால் தைரியம் உண்டாகி நாம் எது சொன்னாலும் ஒன்றுக்கு நாலு சொல்லுகிறாள்.

மனோன்மணி. – அத்தை ! நான் தங்களோடு எதிர்த்து வார்த்தையாடுகிறதில்லையே! நான் என்னுடைய வேலையைச் செய்துகொண்டு இருந்தேன். மச்சியின் வார்த்தையைச் கேட்டு தாங்கள் என்னை உதைத்தீர்கள்.

காளியாயி – கேட்டீர்களா! கேட்டீர்களா! என்னைக் குண்டுணி யென்று சொல்லாமற் சொல்லிவிட்டாள். அடி பாதகி ! நான் குண்டுணிதாண்டி! கோள் சொல்லி உன்னைத் துறத்திவிட்டு நான் இருந்து வாழப்பார்க்கிறேன் அல்லவா? என்னைக் கோள்சொல்லி என்று சொன்னதைக் கேட்டும் நிற்கிறீர்களே! உங்களுக்குத் தருமந்தானா? (என்று முகத்தில் அறைந்துகொண்டு அழுதாள்.) 

பேச்சியாயி.- என் செல்வமே உன்னைச் கோள்சொல்லி என்று சொன்ன வாய் என்னபாடு படப்போகிறது பார்! 

என்று மனோன்மணியைக் கீழேதள்ளித் துடைப்பம் எங்கே எங்கே என்று தேடக் காளியாயி எடுத்துச்சொண்டுவந்து கொடுத்தாள். அதை வாங்கி முகத்திலும் வாயிலும் தலையிலும் கை வலிக்க அடித்து, அடிபாதகி! உன்னை இந்த வீட்டில் வைத்துக் கொண்டிருப்பது தகாது. புருடனிடத்தில் வாழ்ந்து அயர்ந்து சிலநாள் தாய்வீடு போயிருக்கலாமென்று வந்திருக்கும் பெண்ணைக் காணவிடாமல் அடிக்கிற துன்மார்க்கி! இனி யொரு நிமிஷமும் இந்த வீட்டில் இருக்கக்கூடாது, போய்விடு. நீ போகாமல் இருப்பாயேயானால் உன்னைக் கொல்லாமல் விடேன், என்று எழுந்து என்ற மனோனமணியைத் தள்ளி இடுப்பில் உதைத்தாள்.

மனோன்மணி. – அத்தை ! தங்களுடைய ஆக்கினைகளுக்கெல்லாம் உட்பட்டு இருக்கும் என்னை வீட்டைவிட்டுப் போகச் சொல்கிறீர்களே நான் எங்கு போவேன்? என்னை என்ன செய்யினும் செய்யுங்கள். என்னை வீட்டைவிட்டுப் போகச் சொல்லாமல் இருப்பது உங்களுக்குப் புண்ணியமாகும். 

பேச்சிவாயி — அடி துன்மார்க்கி! உனக்குப் போகவா இடமில்லை ! நீ போகாமல் இருப்பாயேயானால் உன் உயிரை இழப்பது நிச்சயம்! எனக்குக் கோபம் வருமுன் போய்விடு.

காளியாயி.- அடி! உன் மாப்பிள்ளைகள் எத்தனைபேரிருக்கிறார்கள்? அவர்கள் வீட்டுக்கு இரவில் போக வழிதெரிந்தவளுக்குப் பகலில் போகவா வழி தெரியாது! என் தாயார் உன்னை வீட்டை விட்டுப் போகும்படி சொல்லியும் இன்னும் என் நின்று கொண்டிருக்கிறாய்? போகிறாயா? இல்லையா? உனக்கு வெட்கம மானம் இல்லையா? நீயும் ஒரு பெண் பிள்ளையா? நீ கெட்டாயே! உன்னை வைத்துப் பெண்சாதியாக ஆள்கிறானே அவனைச் சொல்லவேண்டும்! என்று காறி முகத்தில் உமிழ்ந்தாள்.

பேச்சியாயி – அவளுக்கு வெட்கம் ஏது! மானம் ஏது ! இருந்தால் பகலில் மாப்பிள்ளையோடு கொஞ்சப்போவாளா? அடி வேசி! உன் துர்நடத்தையை அறிந்தபின் உனக்காகப் பரிந்து பேசுவோர் ஒருவரும் இல்லை. அதவா மிஞ்சி யாராகிலும வந்தால் அவர்களுக்கும் அந்தத் துடைப் பக்கட்டை பூசையே! போகாமல் ஏன் நிற்கிறாய்? இன்னும் உதை வேண்டுமோ? 

என்று பிடித்துத்தள்ளினாள். 

மனோன்மணி.- என்னைத் தனித்து விளக்கேற்றும் நேரத்தில் போகச்சொல்வது தருமமா? தங்கள் மகனை என்தாய் வீட்டில் விட்டு வரும்படி அனுப்பினால் தங்கள் உத்தரவுக் கடங்கிப்போகிறேன். தனித்து என்னைத் துறத்துவது தருமமல்ல. 

காளியாயி – அம்மா! அம்மா! பார்த்தீர்களா! இவள் அண்ணனையும் இழுத்துக்கொண்டு போக எண்ணுகிறாள். இவள் எல்லா ஜாலவித்தையையுங் கற்றவளாக இருக்கிறாள். 

பேச்சியாயி – ஜால வித்தை ஒன்றுதானா தெரியும் ? எல்லா மாயவித்தையையுங் கற்றவள். அடி! உன் மாப்பிள்ளையா உனக்குத் துணையாக வரவேண்டும்! மாப்பிள்ளையைத் துணைகொண்டுபோனால் வழியில் அவனுக்குக் குசுகுசு மந்திரம் போட்டு எங்கேயாகிலும் இழுத்துக் கொண்டு போய் விடலாம் என்ற யோசனையா கொண்டாய்? அடி, உனக்கு இந்த யோசனையைக் கற்றுக்கொடுத்தவர் ஆரடி? உன் மாப்பிள்ளையா கற்றுக்கொடுத்தான்? அடி, உன் எண்ணம் இங்கு பலிக்காது.  வீணில் உயிரை இழக்காமல் போய்விடு. 

வெளியில் போயிருந்த முத்துக்குமார முதலியார் அத்தருணத்தில் வந்து தன் மனைவியையும் மகளையும் பார்த்து இதென்ன ? எந்நேரமும் இந்தக் கழுதையோடு ஏன் வாதிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் – என்று கேட்டார். 

பேச்சியாயி – அடா படுபாவி ! நான் அக்காலத்தில் இவள் நமக்கு வேண்டாம். வேறொரு பெண் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்ன என் வார்த்தையைத்தள்ளி, இவளைக் கொண்டுவந்து, என் குடிக்குத் தீங்கை உண்டாக்கினாய்! என் வார்த்தையைக் கேட்டிருந்தால் இந்தத் துன்ப மெல்லாம் வருமா? அவளுக்குச் செய்கிற ஆக்கினைகளெல்லாம் உனக்குச் செய்தால் என் மனங்குளிரும். இந்தத் துன்பமெல்லாம் வேண்டாம். நீ வீட்டை விட்டுப்போய்விடடி என்றால் தன் மாப்பிள்ளை துணைவந்தால் போகிறேன் என்கிறாள். நீயே போய் அவளைக் கேட்டுக்கொள்ளடா படுபாவி! 

என்று தூர நின்றாள். 

முத்துக்குமாரமுதலியார்.-(மருமகளைப்பார்த்து) என்ன சொன்னாய்? உன் மாப்பிள்ளையா உனக்குத் துணைவரவேண்டும்? சபாஷ் ! நன்றாயிருக்கிறது. உனக்குத் துணையுமா வரவேண்டும்? ஒரு வினாடியில் இந்த ஊரை மூன்று சுற்று வருவாயே! வேண்டாம். நன்றாயிருக்கிற தேசத்தைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம்; போய்விடு. முதலில் உன்னைப்பார்த்த பொழுது வேண்டாம் என்ற புண்ணியவதியின் சொல்லைக்கேட்காமல் நானே சாரணமாக இருந்து யாவருக்கும் பெருந்துன்பத்தை உண்டாக் கினேன். என்னைக் கடுகடுத்து ஓர் வார்த்தையாகிலும் சொல்லாத என் பிரிய மனைவி உன்னாலல்லவா என்னைக் கோபிக்க நேர்ந்தது!

பேச்சியாயி ஓடித் தன் நாயகனைச்சட்டிப் பிடித்துச்சொண்டு என் கண்ணே! இந்தப் படுபாவி நம்முடைய வீட்டுக்கு வந்தபின் தங்களை அடிக்கடி சிந்திக்கும்படி நேரிட்டதே என்று அழுதாள். 

காளியாயி.- அப்பா ! பிறர் அறியாத நம்முடைய நற்குணமெல்லாம் இவளால் மறைந்து வெளியாருக்கு வேறுவிதமாகக் காணப்படுகிறது. நாம் வேறொருவரை நிந்திப்பதற்குச் காரணம இல்லையே. (என்று அழுதாள்.)

முத்துக்குமாரமுதலியார் – மருமகளைப்பார்த்து, அடிதுன்மார்க்கி! உன்னால் என் மானுங் கெட்டான். என் பிரியமனைவியும் அருமை மகளும் துக்கப்பட்டழ நேரிட்டது. இனியொரு க்ஷணமும் நீ இந்த வீட்டில் இருக்கக்கூடாது. உன்னிஷ்டப் பிரகாரம் உன் மாப்பிள்ளையைக் கண்டால் அழைத்துக்கொண்டுபோ; வெளியிற்போய்விடு. (என்று கடுகடுத்துச் சொன்னார்.) 

மனோன்மணி.- மாமா! தாங்களும் என்னைப் போகும்படி சொல்லுகிறீர்களே! நான் எங்குபோவேன்?எனக்கு உங்களை விடயாரிருக்கிறார்கள். நான் இன்றுமுதல் இந்த வீட்டில் வேலைக்காரியாக இருந்து வேலைகளைச் செய்து என் காலத்தைக் கழிக்கிறேன். என்னுடைய குற்றங்களை மன்னித்துக் காப்பாற்றுங்கள். 

என்று காலைப்பிடித்து ஒவென்றலறினாள். 

காளியாயி. அம்மா! தாங்கள் சொன்ன விதம் மாயம் செய்கிறதைப் பார்த்தீர்களா? 

பேச்சியாயி – எல்லா மாயவித்தையிலும் தேரியவளாச்சே! தன் மாப்பிள்ளை வரும்வரைக்கும் இந்த வித்தையைச் செய்து கொண்டிருந்தால் மாப்பிள்ளை வந்தபின் அவனுக்குப் போடவேண்டிய மந்திரத்தைப் போட்டு அவனை யழைத்துக்கொண்டு ஓடிப்போக எண்ணங் கொண்டிருப்பது நமக்குத் தெருயாமலா இருக்கிறது? 

முந்துக்குமாாரமுதலியார்.- அந்த எண்ணம் பூர்த்தியாவதை நான் பார்க்கிறேன். அடிசீலி ! உன் எண்ணம் இங்கு யாவருக்கும் நன்றாய் விளங்கியது. உன் ஜாலவித்தையை என்னிடத்திற் காட்டவேண்டாம். வீட்டைவிட்டு இந்த க்ஷணமே போகவேண்டும். 

என்று உதைத்துத் தள்ளிக்கொண்டுபோய்ப் புறக்கடைவாயிற்படிக்கு வெளியில் விட்டுவந்தார். சாளியாயி போகிறவளைச் சும்மாவிடக் கூடாதென்று ஓடிப்போய் நெடுந்தூரம் தள்ளிச்சொண்டுபோய் விட்டு, திரும்பிவந்தால் கல்லால் அடிப்பேன் பாரென்று பெரியகல் ஒன்றை எடுத்துக் காண்பித்தாள். புறக்கடைப் பாதையில் ஜனங்கள் ஒருவரும் இல்லாததால் தன் செய்கை வெளிவர ஏதுவில்லை என்று தனக்குள் மகிழ்ந்து வீட்டின் வாயிற்படியில் வந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். மனோன்மணி- காப்பாற்றும்படி தன்மாமனாரைக் கேட்டுக்கொண்டதற்கு வெளியில் தள்ளிவிட்டார். அவர்மகளும் நெடுந்தூரம் தள்ளிக்கொண்டு வந்து விட்டு, திரும்பினால் கல்லால் அடிப்பேனென்று பயமுறுத்தினாள். நாம் என்செய்கிறது! தனிவழியாகப் புருடன் உத்தரவில்லாமல் தாய்வீடு போகலாமா? போகக்கூடாதே ! அவர்கள் நம்மைத் துறத்தினாலும் நாம் வீட்டைவிட்டுப் போகக் கூடாது. நாம் வீட்டுக்குத் திரும்பிப்போவதே உத்தமம் என்று வீட்டின்பக்கம் திரும்பி இரண்டடி எடுத்துவைத்தாள். காளியாயி மனோன்மணி வருவதைச்சண்டு பெரிய கல்லால் அடித்தாள். தெய்வச்செயலால் அது மனோன்மணி மேல் படாமல் தப்பியது. மனோன்மணி வீட்டுக்குள் போகலாம் என்ற எண்ணத்தைவிட்டு இனி வீட்டுகுள் நுழையவிடார்கள். நாம் மரணத்துக்குப் பயப்படாமல் சென்றால் கல்லடியால் கைகாலை ஊனப்படுத்திக்கொண்டு பெருங்கஷ்டப் படும்படி நேரிடும். வரும்விதி இராத்தங்காது என்றிருப்பதால், நாம் அனுவிக்க வேண்டியதை நாமே அனுபவிக்கவேண்டும். நம்முடைய நாயகனும் அவர்களிடத்தில் பெருந்துன்பத்தை நம்மால் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நாம் அவ்விடம் இல்லாமற்போனால் அவரை மேன்மையாக நடத்துவார்கள். நமக்கு எனை துன்பம் வந்தாலும் வரட்டும். நம்முடைய நாயகன் சுகத்தோடு இருக்கிறார் என்று கேள்விப்பட்டால் அது ஒன்றே எல்லாத் துன்பத்தையும் நீக்கிவிடும். நாம் இன்னும் காலதாமசஞ் செய்யாமல் மயிலாபுரிக்குப் போய்விடவேண்டும். முற்றிலும் இருள் மூடினால் கஷ்டமாக இருக்கும் என்று எண்ணிப் பின்னும் நாயகனை விட்டுப்பிரிந்து போகிறசாலம் வந்தாலும் அவரைப் பார்க்கக் கொடுத்துவைக்காமல் போனது என்ன தீவினைப்பயனோ ! அது எந்த ஜென்மத்தில் செய்ததோ! நம்மை நாயகனிடத்திலிருந்து பிரிக்க எண்ணங் கொண்டதைவிட்டு, அவர் இருக்கிறவிடத்தில் நம்மைக் கொன்றிருந்தால் அவர்களுக்குப் பெரும் கண்ணியமாக இருக்குமே! நாம் மாமி மாமன், நாத்தி இவர்களால் துன்பப்பட்டு நாயகனைக் கண்டு துன்பத்தையெல்லாம் இன்பமாக அனுபவித்திருந்தோம். பிராணநாயகனை விட்டுப்பிரிய நாள் வந்ததே என்று அழுது நாயகனோடு இருக்கவேண்டிய காலம் இன்றோடு முடிவானதால் இனி அவரைப் பார்க்கப்போகிற தில்லை. 

தாயார் வீட்டுக்குப்போனால் அங்கு யாரிருக்கிறார்கள்? தமையன் வீட்டை விட்டுப்போய் அனேக வருடங்களாயின. தமக்கை நம்மைவிட நிர்ப்பாக் கியமாய்த் தன் புருடன் கூத்தியார்வீடே கதியென்றிருப்பதால் துன்பத் துக்கஞ்சித் தான் வசிக்கும் இடம் ஒருவருக்கும் தெரியாமல் இருக்கிறாள். தமையன், சகோதரி இவர்களுடைய சதி இவ்விதமிருக்க, நாம் எங்குபோகிறது? ஆரைப்போய் அணுகுவோம்! நம்முடைய தலைவிதி இவ்விதமாக முடிந்ததே! என்று கண்களில் நீர் தாரை தாரையாய் வடியச்சென்றாள். 

மனோன்மணி தனித்துப் போவதைத் தூரத்திலிருந்து கண்ட சோமசுந்தரம் இதென்ன? நமது நாயகிபோல் காணப்படுகிறதே! அவள் இந்நேரத்தில் தனித்துப்போக வேண்டிய காரணம் என்ன? அவளோ! அல்லது வேறாரோ! நாம் முகத்தைப்பார்க்காமல் தூரத்தி லிருந்து யோசிப்பது சரியல்ல; நெருங்கிப் பார்க்கலாம் என்று எண்ணினவன், நாம் என்ன வேலை செய்யப்போகிறோம்? அன்னிய ஸ்திரீயா யிருந்தால் நம்மைக் கேவலமாக நினைப்பாளே. நாம் நெருங்காமலே அறியவேண்டுமென்று மனோன்மணியைப் பின் தொடர்ந்து சென்றான். இருட்டாகுமுன் சாலையைக் கடந்துவிட வேண்டுமென்று விரைவாக நடக்கும் மனோன்மணிக்கு எதிராகத் தலையில் சரிகை தலைக்குட்டை கட்டிச்சொண்டும், நீண்ட சொக்காய்ப் போட்டுச்கொண்டும், பட்டணத்துக்குட்டை தோளில் அணிந்துகொண்டும், நீண்ட மீசையுடைய சுந்தரமான ஓர் புருடன் வந்து மனோன்மணியைப்பார்த்து, இந்நேரத்தில் தனித்து எங்கு போகிறாய்? என்று கேட்டுத் திரும்பி அவளோடு பின்தொடர்ந்தான். 

மனோன்மணி.- ஐயா ! நான் அவசரமாகப் பழைய ஊருக்குப் போகிறேன்.

சோமசுந்தரம் அவள் துக்கத்தோடு சொல்லிய குரலால் அவள் யாரென்று அறிந்துகொள்ளாமல் பின் தொடர்ந்து, வார்த்தையாடுவதால் நன்றா யறிந்து கொள்ளலாம் என்று நெருங்கித் தொடர்ந்துபோனான்.

அன்னியன்.- நீ இந்நேரத்தில் தனித்து அவசரமாய்ப் போகவேண்டிய காரணம் என்ன? உன்னைப்போன்ற வயதுள்ள பெண்கள் தனித்துப் போகலாமா? (என்று சிரித்தான்.) 

மனோன்மணி.- ஐயா ! நான் அவசரமாகப் போகவேண்டி யிருப்பதால் நான் நின்று உமக்குப் பதில் சொல்ல நேரமில்லை. என்னை மன்னியும். (என்று விரைவாக நடந்தாள்.) 

அன்னியன்.- நீ அவசரமாகப் போகிறதைத் தடுக்கவில்லை. நீ தனித்துப் போவதைப் பார்த்து என்மனம் சகிக்காமல் உனக்குத் துணையாக வருவதை அறியவில்லையா! என்ன அவசரம்? எங்கு போகவேண்டும்? 

மனோன்மணி.- என்னைப்போன்ற வயதுள்ள பெண்கள் தனித்துப் போகக்கூடாதென்றாலும் அவசரமான காரியம் ஏதாகிலும் நேரிட்டால் போகவேண்டியது தானே! எனக்குத் துணைவேண்டியதில்லை. தாங்கள் போகவேண்டிய இடத்திற்குப் போகலாம். என்னைத்தடுத்து வார்த்தை யாட வேண்டாம்.(என்று நடந்தாள்) 

அன்னியன்.- பெண்மணி! நீ அவசரப்பட்டுப் போவதிற் பிரயோசனம் இல்லை. உன் சுந்தரமான முத்தையும் உன் நயவசனத்தையுங் கேட்டுப் பின்தொடராத ஆண்மகனும் உலகத்திலிருப்பானா? உன்னைத் தனியாக விட்டு நான் வேறிடத்திற்குப் போக எண்ணங்கொள்ளேன்! தேடப் போன மருந்து காலில் அகப்பட்டதுபோல் நீ அகப்பட்டாய். என் துணையை விட்டுப்போவது அழகல்ல. நீ மிக மனவருத்தத்தோடு போகிறதாகக் காணப்படுகிறது. உன் துக்கத்தை நொடியில் ஆற்றிவிடுவேன். அருகில் வந்து என் கையைப் பிடித்துக்கொள்.

மனோன்மணி.- ஐயா! அன்னிய மாதரைக் கண்டு இவ்விதமான வார்த்தைகளைச் சொல்லுவது நியாயமல்ல. அல்லாமலும், ஆதரவற்ற பெண் பிள்ளை தனிவழியாகப் போவதைக்கண்ட ஓர் ஆண்பிள்ளை பின் தொடர்ந்து துணைவருகிறேன் என்றும், கையைப் பிடித்துக்கொள் என்றும் சொல்வது வீரத்தன்மையா? பேடித்தன்மையா? 

அன்னியன் – மாதே! அன்னிய மாதரின் கருத்தை யறியாமல் ஒன்றைச் சொல்வது குற்றமாயினும், ஆதரவற்ற பெண் தனிவழியாகத் துணை யில்லாமல் போவதைச்கண்டும் அவளுக்கு உதவிசெய்யாமலிருப்பது கொடுமையினும் கொடுமையல்லவா? நீ உன்னை ஆதரவற்றவளென்று நினைக்க வேண்டாம். இனி நான் உனக்கு வேண்டியதைச் செய்யச் சித்தமாயிருக்கிறேன். நான் உனக்குத் துணையாக வந்தபின் உனக்குத் துக்கம் இருக்கவேண்டிய அவசியமில்லை. வேறொவர் கண்டு உன்னைக் கொண்டுபோகுமுன் நீ என் கண்ணில் அகப்பட்டது நம்முடைய நற்காலம் என்று நினைக்க வேண்டும். என் கண்மணி! என்னருகில் வரத்தடைசெய்யாதே. (என்று நெருங்கினான்.) 

மனோன்மணி.- ஐயா! பெண்கள் மனதை அறியாமல் அவர்களிடம் தங்கள் இஷ்டம்போல் பேசுவது நியாயமல்ல. நான் உம்முடைய எண்ணத்திற்கு உடன்பட்டு வரத்தகுந்தவளென்று நினைக்கவேண்டாம். நான் என் புருடனைத் தெய்வமாக எண்ணி அவருடைய சந்தோஷமே எனக்குச் செல்வமாகவும், அவருடையதுக்கமே எனக்கு வறுமையாகவும், அவரே எனக்கு எல்லாச்சுற்றமும் பற்றும் என்பதாகவும் நினைத்து அவரை விட்டுப் பிரியாமலிருந்து வினைப்பயனால் பிரிந்து போகும் என்னைக் கேவலமாக மதித்துப்பேசுவது தருமம் அல்ல. நீர் சகோதரியோடு பிறக்க வில்லையா? நீர் என்னோடு வருவதைவிட்டுப் போகவேண்டிய இடத்திற்குப்போம். என்னைத் தொடர்ந்து வராமலிருப்பது உமக்குப் புண்ணியமாகும். 

அன்னியன்.- பெண்ணே! நீ என்னை விட்டுப்போக எண்ணவேண்டாம். ஆதரவற்று என்கையில் அசப்பட்ட உன்னை நான் விட்டுப் போவேன் என்று நினைக்கவும் வேண்டாம். என்னோடு வந்தால் உன்மனம் சந்தோஷம் அடையும் என்பதற் சையமில்லை. நீ என் குணத்தை யறிந்தபின் உண்மையாக என்மேல் இஷ்டங்கொள்ளுவாய். வீணே காலம் போக்குகிறாய். ஒருவரும் இவ்வழி வராமுன் என் கைக்குள் வந்துவிடு. உன் துக்கம் உன்னைவிட்டு நீங்கவேண்டியதற்கு ஏதுவானதைச் செய்வேன். (என்று கையைப் பிடிக்க நெருங்கினான்.) 

மனோன்மணி.- தூரமாக நில்லும். பெண்களுக்கு எது இருந்தாலும் இல்லாமற் போனாலும் அவர்களுக்கு இருக்கவேண்டியது கற்பு. அதைப் பிறர் அபகரிக்க விட்டு உயிர் தாங்கி உலகில் பெண் என்கிற பெயர்கொண்டு வசிப்பதைவிட உயிரைவிட்டுப் பிணம் என்கிற பெயரைத் தாங்குவதே மேன்மை. என் கற்பழியுமுன் என்னுயிரை விட்டுவிடுவேன் எனபதை உண்மையாக நம்பும். வீணாக ஓர் பெண் பழியைத் தேடிக் கொள்ள வேண்டாம் என்மேல் கொண்ட அபிப்பிராயத்தை விட்டுப் போவதே உமக்கழகு. உயிரோடிருக்கும் என்னைப் பிணமாகப்பார்க்க எண்ணங்கொள்ள வேண்டாம். 

தனிவழியாகப் போகிறவள் தன் மனைவியோ அல்லது வேறு யாரோ என்றும், அவளைக் குரலால் அறியலாம் என்று பின்தொடர்ந்துவந்த சோமசுந்தரம் – அவள் முதலில் துச்சம்மேலிட்டு அன்னியனிடம் பேசிய குரலால் அவள் தன்மனைவியென்று அறிந்து கொள்ளாமல், இருவருக்கும் சம்பாஷணை முற்றியபொழுது, போகிறவள் தன் மனைவியே, இவளைப் போன்ற பதிவிரதை உலகத்தில் இருப்பது அரிது; தன்னுடைய பதிவிரதா தர்மத்தைக் காப்பாற்ற மாமன், மாமி, நாத்தி இவர்களால் நேரிட்ட கொடுமையைச் சகித்துக் காளியோடு பிறந்த மூளி இவனென்று நம்மை வெறுக்காமல் நமக்குச் சந்தோஷம் உண்டாகும்படி நடந்து வந்தாள். இப்புண்ணியவதியை நமது தாய் தந்தை ஏன் வெறுக்கிறார்களோ அறியேன்! நமது தங்கையும் இவளுக்குத் துன்பம் விளைவிக்கவேண்டுமென்று கங்கணங்கட்டிக்கொண்டிருக்கிறாள். நாம் ஏதாவது ஒன்று சொல்லுவோமேயானால் பெண்சாதிபோட்ட தலையணை மந்திரத்தால் பரிந்து வருகிறானென்று, நாம் இல்லாத வேளையில் அவளை அதிகமாய்த் துன்பப்படுத்துவார்கள். அதை நம்முடையமனைவியால் அறியாமற் போனாலும் அடுத்த வீட்டாரால் அறிந்திருக்கிறோம். நாம் உலக நிந்தனைக்குப் பயந்திருப்பதால் நமது மனைவிக்கு எல்லாவித துன்பமும் உண்டாகிறது. இனி உலகிந்தையைக் கவனிக்காமல் இவளுக்குத் துணைநின்று இன்றுமுதல் வேறுவிதம் நடத்தவேண்டும், என்று தனக்குள் தீர்மானித்துச்கொண்டு மனோன்மணியின் மனங்களிக்க அவள் அறியாமல் அவளைக் கட்டிப்பிடித்துக் கொள்ளவேண்டுமென்று பதுங்கி வரும்பொழுது, மனோன்மணியோடு வார்த்தையாடிச்கொண்டிருந்த அன்னியன் – பெண்ணே ! நீ சொல்லியவைகளைக் கேட்டேன். நீ கொண்ட கருத்து நன்றேயாயினும் உன் காதில் இரகசியமாகச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டபின் உன் இஷ்டம்போல் நடக்கலாம்; நான் உன் மனதுக்கு விரோதமாகப் பலவந்தம் செய்யேன் என்று நெருங்கி மனோன்மணி காதில் சில வார்த்தைகளைச் சொன்னான். அன்னியன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட மனோன்மணி அவனைக் கட்டிப் பிடித்துச்சொண்டு முகத்திலும் கன்னத்திலும் அடிக்கடி முத்தமிட்டாள். அன்னியன் அதிக மகிழ்வோடு மனோன்மணியைக் கட்டியணைத்து முத்தங்கொடுத்தான். 

தன்மனைவியைச் சந்தோஷப்படுத்த எண்ணங்கொண்டு பதுங்கிவந்த சோமசுந்தரம் அன்னியன் ஆலிங்கனத்திலிருக்கும் மனோன்மணியைப் பார்த்து, அடி! துன்மார்க்கி! சொன்னவைகள் யாவையும் உண்மை யென்று நம்பி மோசம் போக இருந்தேனே! தெய்வமே உண்மையை வெளிப்படுத்திக் காட்டியது. உனனையும் இத்துன்மார்ச்சனையும் எமலோகம் குடிபுகுத்தவேண்டியது அவசியமாயினும், தன் நாயகனை விட்டுச் சோரநாயசனை இச்சித்துப் போகிறவள் படுந்துன்பம் உன்னைப்போன்ற புருஷத்துரோகிகள் அறிய உன்னை விட்டுவிடுகிறேன். உன் முகத்திலும் விழிக்கலாமா! என்று கோபப் பார்வையோடு இருவரையும் பார்த்துத் திரும்பிச் சென்றான். 

மனோன்மணி.–ஆ ! என்பிராமண ஆதாரமே ! நான் மோசம்போனேன். 

(என்று நிலத்தில் விழுந்து மூர்ச்சையாயினள்) 

அன்னியன் மனோன்மணிக்கு வேண்டிய உபசாரம்செய்து மூர்ச்சை தெளியவைத்துக் கன்னத்தில் முத்தஙகொடுத்து, என்கண்மணி! கை கலச்சவேண்டியது அவசியமாயிருந்தும் அதுதப்பி நமக்கனுகூலமாய் முடிந்ததென்று மனோன்மணி காதில் சிலவசனங்களைச் சொல்ல, அவள் சிரித்துக்கொண்டு அன்னியனைக்கட்டி முத்தமிட்டு, என்னை எங்கு அழைத்துப்போக எண்ணங்கொண்டிருக்கிறாய்? நாம் இனி புருடனும் பெண்சாதியுமாக இருக்கலாம் வாரும், என்று சிறித்தாள். 

அன்னியன் – என் கண்மணி ! உன் இஷ்டத்துக்கு விரோதம் செய்யேன் என்று முன்னதாகவே சொல்லியிருக்கிறேன். அதைத் தவறி நடவேன். இது சத்தியம். 

என்று இருவரும் வண்டிப் பேட்டைக்குச் சென்று வண்டி குடிக்கூலிக்குப்பேசி ஜாமத்தில் மற்றவண்டிகள் போகும்பொழுது தாங்கள் அந்த வண்டியையும் அவைகளோடு விடும்படி தீர்மானப்படுத்தித் தின்பண்டங்களை வாங்கி இருவரும் உண்டு வண்டியில் சயனித்துக்கொண்டார்கள். சோமசுந்தரம் தன் மனைவியைவிட்டுப் போகும்பொழுது நாம் மனோன்மணி பதிவிரதத்தில் சிறந்தவள் என்று எண்ணிய சில வினாடிக்குள் அன்னியனை ஆலிங்கனஞ் செய்து கொண்டாளே! இது அதிசயமாகவே காண்கிறது! அன்னியன் மந்திரவாதியாய் இருப்பானா? மந்திரவாதியாய் இருந்தாலும் காதில் ஓதின உடன் பலித்துவிடுமா? ஒரு தேள் கொட்டினால் அதன் விஷம் இரங்க எத்தனை தடவை மந்திரிக்கிறார்கள். அன்னியன் மனோன்மணி காதில் சொல்லியது ஒரு சொல் அல்லது இரண்டாக இருக்கவேண்டும். இது மந்திரத்தால் முடிந்ததென்று சொல்ல மனந்துணியவில்லை. ஒரு வார்த்தையில் அவள் மனதைத் திருப்பிய அன்னியன் சாமர்த்தியமே சாமர்த்தியம்! பெண்களை இவ்விதம் மயக்கிவிடுகிறார்களல்லவா? தான் பதிவிரதையாயிருந்தால் தேவடியாள் தெருவில் குடியிருக்கலாகாதா? என்று பழமொழி இருக்கிறது. நாம் எண்ணியமாதிரி மனோன்மணி நன்னடக்கை யுள்ளவளாக இருப்பாளாகில் அன்னியனை இச்சித்து அவனோடு போகச் சம்மதிப்பாளா? அவள் வெளிவேஷம் போட்டாளேயன்றி வேறொன்றுமல்ல. அந்தப் பாதகியை மிக்க மேன்மையாக நினைத்திருந்த நம்முடைய மனதைப் புண்ணாக்கிவிட்டாள்! என்று கவலையோடு வீட்டுக்குள் நுழைந்தான். தமையன் வந்ததை யறிந்த காளியாயி அவனிடம் ஓடி, அண்ணா! இந்த அநியாயமுண்டா ? இன்று அண்ணியவர்கள் அம்மாளைப் பலவகையாகத் திட்ட, நான் அம்மாளை ஏன் திட்டுகிறாய் ? என்று கேட்டதற்கு, அடி நீ உன் மாப்பிள்ளை வீட்டைவிட்டு இங்குவந்து எத்தனைநாள் இருக்க யோசித்திருக்கிறாய்? உங்களுக்கு ஆக்கிக்கொட்ட நான் உட்கார்ந்திருக்கிறேனா? உன் ஆத்தாளுக்காகப் பரிந்துபேசவா வந்தாய்? நீ தொலையாமல் இன்னும் இங்கிருந்தால் உனக்குக் கெட்ட காலம் என்று நினை. உன்னைப்போல் நான் என் தாய்வீட்டில் போயிருக்கிறேனோ? உனக்கு வெட்கம் மானமில்லையா? நாயே! பேயே! என்று இன்னும் சொல்லாத வார்த்தைகள் அனேகஞ் சொல்லித் திட்டினார்கள். இவைகளை அப்பா கேட்டுக்கொண்டே வந்து நான்குநாள் தாய்வீடு வந்திருக்கும் பெண்ணை இப்படித் திட்டுவது தருமந்தானா! என்றார்.ஐயோ! அண்ணா! நான் என்ன சொல்லுவேன்! அப்பாவி பேசினபேச்சு கணக்கில்லை.அப்பா அப்படியே மலைத்து நின்றுவிட்டார்கள். அம்மாளுக்கு மனம் கேட்காமல், என்னடி மனோன்மணி! இவ்விதம் பேசுகிறாய்? யார் என்ன சொன்னபோதிலும் பேசாதிருப்பவள் இன்று முன்பின் பார்க்காமல் பேசுகிறாய். உனக்கென்ன பேய்பிடித்ததா? என்றார்கள். அதற்கு அண்ணியவர்கள் எட்டி நெஞ்சில் உதைத்துக் கீழே தள்ளி இனி ஒரு நிமிஷமும் இந்த வீட்டில் இருக்கமாட்டேன் என்று புறக்கடைக் கதவைத்திறந்து, நான் கூப்பிடக்கூப்பிட வெளியில் சென்றார்.கள். நான் விடாமல் பின் தொடர்ந்து, அண்ணியம்மா! அவசரப்பட்டுப் போகவேண்டாம். ஒரு வயது பெண் தனிவழியே போனால் அவளைச் சாதியில் சேர்த்துக் கொள்ளார்கள் என்று கையைப் பிடித்து வீட்டுக்கு வாவென்று இழுத்தேன். அதற்கு அண்ணியவர்கள் அவனும் கெட்டான் அவனுடைய வீடும் கெட்டது. அவனுக்குப் போடுகிற முன்தானையை ஒரு இழி குலத்தானுக்குப் போடுவேன் என்று என்னையும் உதைத்துத் தள்ளி நடந்தார்கள். எனக்குண்டான நோயையும் பார்க்காமல் பின் தொடர்ந்து வருவதைக்கண்டு கல்லுங்கட்டியுங் கையில் எடுத்துக்கொண்டு வந்தால் தலையை உடைத்துவிடுவேன் என்று காட்டினார்கள். நான் அதற்கும் பயப்படாமல் பின் தொடர்ந்து வருவதைக்கண்டு கல்லாலடித்தார்கள். அந்த அடி என் மார்பில்பட்டது. பின் நடந்ததொன்றும் தெரியாமல் கண்களைத் திறந்து பார்த்தபொழுது வீட்டுக்குள் ஒரு பாயில் படுத்திருக்கக் கண்டு எழுந்து, அண்ணியம்மாள் எங்கே? என்றேன். அப்படுபாவி போய்விட்டாள் என்று அம்மா அழ, நான் அழ, அப்பா அழ, பெருங்கோரமாயிருந்தது. அண்ணா! என்னை உதைத்ததையும் கல்லால் அடித்ததையும் தாங்கள் பார்த்திருந்தால் பழி உண்டாயிருக்கும். அதை எந்த தெய்வமோ தடுத்துவிட்டது தாங்கள் வீட்டிலிருந்த பொழுது இவ்விதம் நடந்து தாங்களும் கோபத்தால் ஏதாகிலும் ஒன்றைச் செய்து விடுவீர்களானால் நாம் எல்லாருங் கோர்ட்டுக்கையுமாய் இருப்பதோடு தங்களையும் இழக்கும்படி நேரிடும. யாரை எது செய்தாலும் சொன்னாலும் பார்த்துக்கொண்டிருப்பீர். என்னை ஒருவர் ஒன்று சொல்லி விட்டால் தங்களுக்கு மனம் தாளாதென்று எனக்குத் தெரியும். அவ் விதமானாலும் இன்று அண்ணியவர்கள் என் விஷயத்திற் செய்ததை மனதில் வைக்காமல் தாங்கள் விரைவில் சென்று அண்ணியை அழைத்து வாருங்கள். ஒரு பேயைத்தேடிப் பெண்சாதியாகக் கொண்டால் அதை வைத்து ஆளவேண்டியது கொண்டவர்கள் கடமையாதலால், அண்ணியவர்கள் நெடுந்தூரம் போகுமுன்னம் அழைத்துவாருங்கள். அண்ணியில்லாமல் வீடு எங்கும் பாழாக இருக்கிறது. அண்ணா ! என்று கண்களில் நீர் வடிய அழுதாள். 

காளியாயின் குணத்தை நன்றாய் அறிந்திருந்தாலும் மனோன்மணியின் துர் நடத்தையை நேரில் கண்டுவந்த சோமசுந்தரம் – காளியாயி இன்று சொல்வது உண்மையாக இருக்கக்கூடும்; மனோன்மணிக்கு நாள் தோறும் இவர்கள் தொந்தரவு கொடுத்திருந்தாலும் வீட்டை விட்டுத் துரத்த எண்ணங்கொள்ளார்கள்; நெடுநாள் இவர்களிடத்தில் துன்பப் பட்டுத் தன்னால் சகிக்கமுடியாமல் அவள் இன்று துணிந்து காளியாயி சொன்ன வண்ணம் செய்திருக்கவேண்டும்; எப்பொழுதும் கொடுமையைச் செய்துவந்தவள் இன்று நம்மை வருந்தி அழைத்து வரும்படி சொல்லுகிற சூது இன்னதென்று தெரியவில்லை என்று எண்ணி, அம்மா காளியாயி! தனிவழியாகச் சென்ற ஓர் மாதை அழைத்துவந்து வைத்துக் குடித்தனம் பண்ணினால் பார்க்கிறவர்கள் என்ன சொல்லுவார்கள்! நம் இனத்தாரும் நம்மைக் கேவலமாக நினைப்பார்கள். ஊரார் நம்மை இசழ நான் ஒரு காரியத்தைச் செய்யமாட்டேன்; நீ என்னை மன்னித்து அம்மாளுக்கும் அப்பாவுக்கும் வேண்டியதைச் செய்து கொண்டிருப்பதே நலம் என்று விடை கொடுத்தான். 

காளியாயி – அண்ணா ! அண்ணா! தாங்கள் இப்படி சொல்வது தருமமா? ஏதோ கோபத்தால் வீட்டை விட்டுப்போனால் அதைக் குற்றமாகக் கொண்டு தள்ளி விடலாமா? 

சோமசுந்தரம்.- அம்மா காளியாயி! புருடன் விஷயத்தில் பெண்சாதி செய்யுங் குற்றங்களில் மன்னிக்கத் தகுந்ததும் மன்னிச்சுத் தகாததும் உண்டு. ஆனால் அவள் இன்று செய்திருக்குங் குற்றம் மன்னிக்கத் தகுந்ததல்ல. காளியாயிக்குத் தன் தமையன் சொல்லியது சந்தோஷமாக இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டாமல், அண்ணா! தங்களுக்குத் தெரியாத யோசனை என்ன இருக்கிறது? அண்ணியவர்கள் வீட்டை விட்டுப் போனபின் என் மனம் ஒன்றையும் நாடவில்லை யென்று வீட்டுக்குள் சென்றாள்.

– தொடரும்…

– க.நா.சு. அவர்கள் எழுதிய முதற் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.

– கமலாக்ஷி சரித்திரம் (நாவல்), இரண்டாம் பதிப்பு: 1910, தாம்ஸன் அண்ட் கம்பெனி, மினர்வா அச்சுக்கூடத்தில் பதிப்பித்தது, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *