கமலாக்ஷி சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2024
பார்வையிட்டோர்: 916 
 
 

(1910ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

4-ம் அத்தியாயம்

மயிலாபுரி நாளுக்குநாள் சிறப்படைவதைக் கண்ட அனேகர் அவ்வூரில் குடியேறியதால் இடம்போதாமல் அவ்வூருக்கு அரைமயில் தூரத்திலிருந்த புன்செய் நிலத்தை யழித்து அனேக கட்டிடங்கள் கட்டப்பட்டதனாலே பெரிய பட்டணமாய் அதற்குப் புதுஊரென்று பெயர் வழங்கலாயிற்று. ஒருநாள் மாலை நான்கு மணிக்கு அப்புது ஊரில் ஒரு சிறிய மச்சுவீட்டின் கதவு தட்டப்பட்டது. உடனே ஒரு கிழவி கதவைத்திறந்து ஆ! கமலாக்ஷி அத்திபூத்தது போல் அதிசயப் பட எங்கு வந்தாய்? என்று கேட்டாள். 

கமலாக்ஷி – ஆயா! எங்களுடைய வீட்டில் வந்திருக்கும் பெரியவருக்கு இரண்டு நாளாகச் சுரம் குறைந்து இன்று அதிகரித்திருக்கிறது. என் தாயாருக்கும் வயிற்றுப் போக்கு நின்றிருந்து மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. ஆனதால் தாதா இடத்தில் சொல்லி யழைத்துப்போக வந்தேன்.

கிழவி — கமலாக்ஷி! உன் தாதாவை, அடுத்ததெரு முத்துக்குமார முதலியார் மருமகளுக்குத் தேக அசௌக்கியமென்று, மத்தியானம் அழைத்துக் கொண்டு போனார்கள். இப்பொழுது மணி நாலாகிறது. விரைவில் வந்துவிடுவார். உன்னுடைய தாதா வருமளவும் அந்த மேஜையிலிருக்கும் புத்தகத்தில் ஒன்றை எடுத்து உட்கார்ந்து வாசித்துக்கொண்டிரு; அவர் வந்தவுடன் அழைத்துக்கொண்டு போகலாம். 

கமலாக்ஷி.- ஆயா! நான் எப்பொழுதாகிலும் வந்தால் எதாகிலும் ஒரு புத்தகத்தில் கிஞ்சித்து வாசிக்காமற் போனால் என்னைத் தாங்கள் விடுகிற தில்லை. இன்று என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன். நான் அவகாசமாய் உட்கார்ந்து வாசிக்கவும் பேசிக்கொண்டிருக்கவும் நேரமில்லை. நான் தாதாவை விரைவில் அழைத்துக்கொண்டு போகவேண்டும்.

கிழவி – நீ என்ன துரிதப்பட்டாலும் உன் தாதா வந்தபின்தானே போக வேண்டும்? அல்லது அவர் வருகிறதற்கு முன் போகப்போகிறாயோ?

கமலாக்ஷி – தாதா வருமுன் போவதெப்படி? மத்தியானம் போனவர் இன்னும் வராமலிருப்பதற்குக் காரணம் என்ன? அபாயமான வியாதியாக இருக்குமோ? 

கிழவி. – எனக்கொன்றும் தெரியாது; உன் தாதா மத்தியானம் சாப்பிட்டு வெளியில் வந்தபோது அவரைக் கூப்பிட்டார்கள். மருந்துப்பையை எடுக்க வந்தவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த என்னிடம் தாம் முத்துக் குமார முதலியார் வீட்டுக்குப்போய் வருவதாய்ச் சொல்லிப்போனார். நான் வெளியிலிருந்திருப்பேனேயாகில் எல்லாம் விசாரித்திருப்பேன். உன் தாதா வந்தபின் யாவு மறிந்துகொள்ளலாம்.நீ அல்லியரசாணிமாலை படித்தால் உன் குரலுக்கு நன்றாயிருக்குமென்று கேள்விப்பட்டேன். சற்று நேரம் வாசித்தால் அதற்குள் உன் தாதா வந்துவிடுவார். அவர் வந்தவுடன் போகலாம். 

கமலாக்ஷி – தங்களுக்கிஷ்டம் இருக்கிற விஷயத்தில் வாசிக்கிறேன். (என்று மேஜையிலிருந்த புத்தகங்களில் திருவிளையாடற் புராணம், பெரிய புராணம் இன்னும் பல புத்தகங்கள் இருக்கிறதைக்கண்டு அதில் பெரிய புராணத்தை எடுத்து) ஆயா! பெரிய புராணம் வாசிக்கலாமா? 

கிழவி – பெரிய புராணமும் வேண்டாம்; சின்ன புராணமும் வேண்டாம். நேற்று வாங்கிவைத்த அல்லியரசாணிமாலை அங்கு இருக்கிறது; எடுத்து அதை வாசி. 

கமலாக்ஷி – அல்லியரசாணிமாலை வாசிக்கக்கேட்பது விசேடம் என்றா நினைக்கிறீர்கள். புண்ணிய சரித்திரங்களை வாசிக்கக்கேட்டால் அது நன்மையைத் தருமே! 

கிழவி – புண்ணியமும் கண்ணியமும் எனக்கென்னத்திற்கு? நான் இன்னும் ஒருதரம் மணை யேறப்போகிறேனா? அல்லது பிள்ளைகள் பெறப் போகிறேனா? ஒன்றும் இல்லை. எனக்கு வேண்டியது எல்லாம் வயிற்றுக்குச் சோறும் இடுப்பிற்குச் சேலையுமே தவிர வேறென்ன வேண்டும்? உனக்கு அப்படியல்ல ; நல்ல புருடன் வரவேண்டும். பணக்காரியாக வேண்டும். நல்ல பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஆனதால் நன்மையைத் தரும்படியான புத்தகங்களை நீ வீட்டில் வாசித்துக்கொண்டிருக்க வேண்டும். நான் சற்று நேரம் கேட்க அல்லியரசாணிமாலையைப் படித்துவிட்டுப்போ. 

கமலாக்ஷி – தங்களுடைய இஷ்டம்போலவே செய்வேன். எந்த இடத்திலிருந்து வாசிக்கிறது? 

கிழவி. – எந்த இடத்திலிருந்து வாசிக்கிறது என்றா கேட்கிறாய்? அரச்சுனன் பாம்பாய் அல்லியோடு படுத்துக்கொண்டிருக்கிறானே அந்த இடத்தை எடுத்து வாசி. 

கமலாக்ஷி.-  என்ன ஆயா! அதை வாசிக்கச்சொல்லுகிறீர்கள். எனக்கதைப்படிக்க இஷ்டமில்லை. அரச்சுனன் தீர்த்த யாத்திரை போகிறானே அதிலிருந்து வாசிக்கட்டுமா? 

கிழவி – நீ வீணே காலங் கழிக்கிறாம். நான் சொல்லுகிற இடத்திலிருந்து வாசிக்கிறாயா? இல்லையா? 

கமலாக்ஷி – ஆயா! கோபித்துக்கொள்ள வேண்டாம்! தங்களுக்கு இஷ்டமான இடத்திலிருந்தே வாசிக்கிறேன். (என்று நெடுநேரம் வாசித்துப் பின் கிழவியைப்பார்த்து) ஆயா ! இன்னும் தாதா வரவில்லையே. மணி ஏழரையாகிறதே. 

கிழவி. – வருகிற நேரமாயிற்று. இன்னும் சற்றுநேரம் வாசி. 

இந்தசமயத்தில் சதவு தட்டப்படுகிற சத்தங சேட்டது. உடனே கமலாக்ஷி ஓடிச் கதவைத்திறந்தாள். வைத்தியர் உள் நுழைந்து ஆ! கமலாக்ஷி! என்ன சமாச்சாரம், இந்நேரத்தில் எங்கு வந்தாய் என்று கேட்டார். 

கமலாக்ஷி.- தாதா! பெரிய்யவருக்கு இன்று குளிருக்காச்சலும் அதிமாக இருக்கிறது. என் தாயாருக்குத் திரும்ப வயிற்றுப்போக்கு உண்டாயிருக்கிறது. நான் பொழுதிருக்கும் பொழுதே வந்தும் தங்களைக் காணாததால் தங்கள் வருகையை எதிர்பார்த்திருந்தேன். 

வைத்தியர்.– கமலாக்ஷி’ நான் உன்னோடு வரவேண்டியது கட்டாயமாக இருக்கினு முத்துக்குமார முதலியார் மருமகள் நிலைமையை யோசித்தால் வரத்தடையாக இருக்கிறது. நான் உடனே சென்று அவளுக்கு வேண்டியதைச் செய்யாமல் போவேனாகில் அவளை இழக்கவேண்டியதே யாகும். 

கமலாக்ஷி – தாதா! ஒரு உயிர் அநியாயமாகப் போகவிடக்கூடாது. தங்களுடைய இஷ்டம்போல் சென்று செய்யவேண்டிய சிகிச்சையைச்செய்து வாருங்கள், நான் அது பரிபாதம் இங்கிருக்கிறேன்.

வைத்தியர்.- கமலாக்ஷி நீ எனக்காகக் காத்திருக்கவேண்டாம்; நான் கொடுக்கும் மருந்தைக் கொண்டுபோய் இருவருக்கும் கொடு. நான் போன காரியம் முடிவானவுடன் வருகிறேன். ஒருவேளை இராத்திரிக்கு வரத் தடையானால் அதிகாலையில் வருகிறேன். (என்று இரண்டு பொட்டிலங்களைக் கொடுத்துத் தனியாக வீட்டுக்குப்போக முடியுமா என்று கேட்டார்.) 

கமலாக்ஷி – புதுஊரிலிருந்து ஜனங்கள் அதிகம் நடந்துகொண்டிருப்பார் கள். அவர்கள் துணையைக்கொண்டு போகிறேன். தாங்கள் முதலியார் மருமகளைப் பாருங்கள். 

என்று இருவரிடத்தும் விடைபெற்றுக் கமலாக்ஷி வைத்தியரிடத்தி லிருந்து பெற்றுக்கொண்ட பொட்டிலங்களோடு சென்றாள். இரண்டையும் அடையாளமாக வைத்துக்கொண்டு போகும்பொழுது ஜனங்கள் சந்தடி ஊர்முடிவு பரியந்தம் இருந்தது. புதுஊர் எல்லைச்சல சமீபத்தில் வரும்பொழுது புதுஊருக்கும் பழைய ஊருக்கும் மத்தியிலுள்ள அரைமயில் தூரத்தைக் கடந்துபோகத் துணையகப்படாமல் திசைத்து நின்றாள். இருட்டதிகமாக இருப்பதோடு சாலையிலுள்ள விருக்ஷங்கள் மிக்க பயத்தைத் தரத்தச்சவைகளாக இருந்தன. கமலாக்ஷி இயற்கையில் தைரியமுள்ளவளாயிருந்தாலும் தனித்துபோகச் சம்மதியாமல் யாராகிலும் போனால் அவர்கள் துணையைப்பற்றிப்போகலா மென்று நின்றிருந்தாள். அப்பாதையில் புதுஊருக்கு வருகிறவர்கள் சிலர் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களன்றிப் புதுஊரிலிருந்து பழைய ஊருக்குப் போகிறவர்கள் ஒருவருங் காணப்பட வில்லை; இனி இவ்விடம் நின்றுகொண்டிருப்பதில் பிரயோசனமில்லை; மணியோ எட்டு எட்டரையாகிறது. நாம் வைத்தியர் வீட்டுக்குச் சென்று அவர் வந்தபின் அவரை அழைத்துப் போகலாம் என்று கமலாக்ஷி நினைத்துத் திரும்பும்பொழுது, இருவர் பழைய ஊருக்குப் போகிறவர்கள் வருவதைக் கண்டு அவர்களை நெருங்கி, அண்ணா! நீங்கள் எங்கே போகிறீர்கள்? பழைய ஊருக்குப் போகிறவர்களா யிருந்தால் நானும் வருகிறேன்; என்னை யழைத்துக்கொண்டு போய்ப் பழைய ஊரில் விட்டுவிடுகிறீர்களா? உங்களுக்குப் பெரும் புண்ணியம் சேரும் என்றாள். 

முதல் மனிதன் – நல்லது, அம்மா நாங்கள் பழைய ஊருக்குப் போகிறவர்க ளே. நீ எங்களோடு வந்தால் அழைத்துக்கொண்டுபோகத் தடையில்லை.

இரண்டாவது மனிதன்.- சந்தோஷமாய் வரலாம். நாங்களென்ன உன்னைத் தூக்கிக்கொண்டா போகப் போகிறோம்? இந்த பாரத்தை எப்படி சுமப்போம்! என்றுசொல்ல என்றான். (கமலாக்ஷி துணையகப்பட்டதென்று அவர்களோடு சென்றாள்.) 

முதல் மனிதன் – தூக்கிக்கொண்டு போக நேரிட்டாலும் நான் தூக்கப் பயப்படமாட்டேன். 

இரண்டாவது மனிதன் – ஆபத்துக்குப் பாவமில்லை என்ற ஆதாரத்தைக் கொண்டா? 

முதல் மனிதன்.- ஆம்! ஆம் ! ஆபத்தில் எது செய்தால்தானென்ன அம்மா! உன் பெயரென்ன? நீ எங்கிருப்பது ? நீ இந்நேரத்தில் தனித்துப் போக வேண்டிய காரணமென்ன? உனக்கு இன்னும் விவாகம் முடியவில்லையா? 

இரண்டாவது மனிதன்.- ஓய்! ஓய்! நீ கேட்டகேள்விகளுக்கெல்லாம் ஏக காலத்தில் பதில் சொல்ல அந்த அம்மாளுக்குப் பத்துப்பன்னிரண்டு வாய்களா இருக்கின்றன? ஒவ்வொன்றாய்க் கேட்டால் அதற்குத் தக்க விடையளித்துக்கொண்டு வருவார்கள். 

முதல் மனிதன் – ஏனம்மா ! ஒவ்வொன்றாய்க்கேட்க வேண்டுமோ?

கமலாக்ஷி.- வேண்டியதில்லை அண்ணா! என் பெயர் கமலாக்ஷி. நாங்களிருப்பது அப்பாசாமிமுதலி தெரு. என் தாயார் தேக அசௌக்கியமா யிருப்பதால் வைத்தியர் வீட்டுக்கு வந்து மருந்துவாங்கிக்கொண்டு போகிறேன். நானும் என் தாயாரும் தனித்திருக்கிறோம். 

இரண்டாவது மனிதன். – உனக்கு விவாகம் முடிந்ததா என்று கேட்டாரே! அதற்கேன் ஒன்றும் பதில் சொல்லவில்லை? 

கமலாக்ஷி – அண்ணா! நான் என் தாயாரோடிருக்கிறேன் என்று சொன்னதில் அதற்கு மறுமொழி அடங்கியிருக்க வில்லையா? 

முதல் மனிதன்.- அவ்வளவு தொனி அர்த்தமாகச் சொல்லவேண்டிய தென்ன? 

கமலாக்ஷி – அண்ணா! உலகத்தில் ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பருவம் அடைந்தகாலத்தில் அவர்களுக்கு விவாசமாவது சகஜமாயினும் பெண் பிள்ளைகள் ஆடவர்களைப்போல் பேசுகிறதில்லை. அது நாணத்தாலன்றி வேறல்ல. நான் என் தாயாரோடிருக்கிறேன் என்று சொன்னால் எனக்கு விவாகம் ஆகவில்லை யென்று அறிந்துகொள்வீர்களென்றே அவ்விதம் சொன்னேன். 

இரண்டாவது மனிதன் – புத்திசாலியாகப் புசன்றதைக் குறித்து மிக்க சந்தோஷப்படுகிறோம். உனக்கு வயது அதிகமா யிருக்கும்போல் காணப்படுகிறதே! உனக்கேன் இன்னும் விவாகம் ஆகவில்லை? 

கமலாக்ஷி – எனக்கு விவாகத்தின்மேல் விருப்பமில்லை. என் தாயாரைத் தனிமையில் விட்டுப் போகவும் மனமில்லை. 

முதல் மனிதன். – சபாஷ்! சபாஷ்!! நன்றாயிருக்கிறது. அதிசயப்படும்படியான சொல் என் காதில் இன்று விழுந்தது. மீனை விரும்பாத பூனையுமுண்டா? விவாகத்தின்மேல் பெண்களுக்கிச்சை இல்லை யென்பது பெரும் பொய். 

கமலாக்ஷி – அண்ணா ! நான் பொய் சொல்லினும் மெய் சொல்லினும் அவைகள் உங்களுக்கு நன்மையையாவது கெடுதியையாவது தரப்போகிறதில்லை. அப்பேச்சை நிறுத்திவிடுவதே உத்தமம். 

இரண்டாவது மனிதன் – நிறுத்தவேண்டாம். பெண்களின் தாய் தந்தை பெண்களுக்கு விவாகத்தின்மேல் விருப்பமிருக்கிறதா இல்லையா என்று அறிந்து கொண்ட பின்னோ மாப்பிள்ளையைத் தேடுகிறார்கள்? இல்லை! பிள்ளை ஐசுவரிய முள்ளவனாகக் கிடைப்பானானால் தங்களுடைய பெண் சௌக்கியத்தோடிருப்பாளென்று எண்ணங்கொள்ளுகிறார்கள். பெண்கள் கைநிறைந்த பொன்னைப் பார்க்கிலும் கண்ணிறைந்த புருடனே வேண்டுமென்பார்கள். புருடன் சுந்தரமாகவும், இளமையாகவும், தன் வந்தனாகவும் இருப்பானாகில் பெண்ணுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் மனச்சலிப்பு இராது. என் சினேகிதரில் ஒருவன் மன்மதனே இவன் என்று சொல்லத் தகுந்த சுந்தரமுள்ளவன். அவனுக்கு வயது இருபத்திரண்டாகிறது. அவனுடைய தாய் தந்தை வைத்துப்போன பூஸ்திதி நன்செயில் இருநூறு வேலி ; புன்செயில் நானூரு ஐந்நூறு வேலி யிருக்கக்கூடும். செட்டிகள் வீட்டில் வட்டிச்சாக சொடுத்திருப்பது ஐம்பதினாயிரம். இப்புண்ணியவானுக்கும் எனக்கும் பிராண சினேகம். இவனுக்குத் தகுந்த பெண்ணைப்பார்த்து விவாகம் நடத்துவிக்க வேண்டுமென்று எண்ணங்கொண்டிருக்கிறேன். ஆனதால் உனக்கும் உன் தாயாருக்கும் இஷ்டமாயிருந்தால் துரிதத்தில் விவாசத்தை முடித்து விடலாம். 

முதல் மனிதன் – பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப்போலாயிற்று. அதிர்ஷ்டம் வந்தால் இப்படியல்லவா வரவேண்டும்! அம்மா ! அண்ணனை நம்பினால் உன் காலம் நல்லதாக முடியும். உன் கருத்தென்ன? என்னிடத்தில் இரகசியமாகச் சொல். (என்று கமலாக்ஷியை நெருங்கி வந்தான்.)

துணையென்று நம்பி வந்தவளைத் துன்பஞ்செய்ய எண்ணி இவ்விதம் பேசுகிறார்கள் என்று கமலாக்ஷி எண்ணி இனி இவர்கள் நம்மை நெருங்கி வர இடங்கொடுக்கக் கூடாதென்று விரைவாக நடந்தாள். இருவரும் அவளை விடாமல் பின்தொடர்ந்து வந்து ஏன் வேகமாக் நடக்கிறாய்? உன்மனச் சம்மதம் சொல்லாமலிருக்கிற காரணம் என்ன என்றார்கள்.

கமலாக்ஷி – சகோதரரே! என் தாயாருக்குத் தேக அசௌக்கியம் என்று சொல்லியிருக்கிறேன். விரைவில் சென்று மருந்து கொடுக்கவேண்டும். (என்று வேகமாகவே நடந்தாள்). 

கமலாக்ஷி விரைவாக நடக்கிறதைக் கண்ட இருவரும் பின் தொடர்ந்து ஒருவன் கமலாக்ஷியைச் சரீரத்தில் இடித்து நடந்தான். இடிபட்டதும ஐயோ ! என்றலறினாள். மற்றவன் ஏன் கத்துகிறாய் என்று தன் கையால் வாயைப் பொத்தினான். கமலாக்ஷி கையைத்தள்ளி ஓடினாள். இருவரும் பின்தொடர்ந்து பிடிக்கக் கமலாக்ஷி திமிறிக்கொண்டு ஓடினாள். இருவரும் பின் தொடர்ந்தோடிப் பிடித்துக்கொண்டார்கள். இரவில் தனித்து அகப்பட்டுக்கொண்ட கமலாக்ஷி ஐயோ தெய்வமே! என்னைக் காப்பாற்றுவாரில்லையா வென்று கதறினாள். கமலாக்ஷியைப் பிடித்துக்கொண்டிருந்தவரில் ஒருவன் மற்றவனைப் பார்த்து, மாணிக்கம் ! இவளை விட்டு விட்டால் பெருங்கூச்சல் போடுவாள்; கைத்துண்டை எடு, இவள் வாயில் துறுத்துவிட வேண்டும் என்றான். 

மாணிக்கம் – ஆம்! ஆம்! இரத்தினம், அந்த வேலையை முதலில் செய்யாமற்போனால் நம்முடைய எண்ணம் நிறைவேறாது. (என்று கமலாக்ஷியின் வாயில் ஒரு துண்டைத் துறுத்தி ஒரு துண்டால் கைகளைக்கட்டி அவளைத் தூக்கினார்கள்.) 

அச்சமயத்தில் மாணிக்கத்தின் மார்பில் விழுந்த ஒரு குத்தோடு அவன் நிலத்தில் சாய்ந்தான். மாணிச்சத்தைக் குத்தியவன் யாரென்று திரும்பிய இரத்தினம் ஒரு அன்னியனைக்கண்டு கமலாக்ஷியை விட்டுத் தன் பலங்கொண்டு அன்னியன் மார்பில் குத்தினான். அன்னியன் அந்தக் குத்தைத்தடுத்து இரத்தினத்தின் மார்பிலும் குத்தி அவனையும் நிலத்தில் சாய்த்துக் கமலாக்ஷியின் வாயிலிருந்தத் துணியை எடுத்து, சட்டையும் அவிழ்த்துவிட்டு, அம்மா! பயப்படாதே, என்று தைரியப்படுத்தி இவர்கள் கையில் எப்படி அகப்பட்டாய் என்று கேட்டான். 

கமலாக்ஷி.- அண்ணா! இங்கு நின்றுபேசுவது எனக்குப் பயமாக இருக்கிறது. நாம் பேசிக்கொண்டே போகலாம். 

அன்னியன்.- உன்னிஷ்டம் போல் செய்யலாம். நான் இப்பாதகர்களை வண்டிப்பாதையிலிருந்து பாதையோரத்தில் போட்டுவருகிறேன். (என்று அவ்விருவரையும் பாதையோரத்தில் இழுத்துபோட்டுக் கமலாக்ஷியோடு சென்றான்). 

கமலாக்ஷி – அண்ணா அவ்விருவரும் இறந்தா விட்டார்கள்? 

அன்னியன்.- இல்லை இல்லை. இருவரும் மூர்ச்சையா யிருக்கிறார்கள். அவர்கள் மூர்ச்சையி லிருக்கும் பொழுது வண்டிகள் இவ்வழியில் வந்தால் இறந்து விடுவார்களென்று இருவரையும் வண்டிப்பாதையில் இல்லாமல் பாதையோரத்தில் போட்டுவந்தேன். நீ இந்நேரத்தில் அவர்கள் கையில் எப்படி அகப்பட்டாய்? உன் பெயரென்ன? 

கமலாக்ஷி – அண்ணா! என்பெயா கமலாக்ஷி. என் தாயார் தேக அசௌக்கியமா யிருப்பதால் நான் புதுஊரில் வைத்தியர் வீட்டுக்குச் சென்று மருந்து வாங்கிக்கொண்டு வரும்பொழுது துணையில்லாமல் இவர்களிடத்தில் அகப்பட்டேன். 

அன்னியன்.- இந்நேரத்தில் தனித்து வைத்தியர் வீட்டுக்குச் சென்றது ஆச்சரியமே ! 

கமலாக்ஷி – நான் மாலை நாலு மணிக்கு வைத்தியரை அழைத்துவரப்போனேன். வைத்தியர் முத்துக்குமார முதலியார் மருமகள் அபாயமான வியாதியொடு இருப்பதால் அவ்விடம் போயிருந்துவந்து சற்று நேரத்திற்குமுன் என்னிடம் மருந்து தந்து என் தாயாருக்குக் கொடுக்கச்சொல்லித் திருமபி அவ்விடத்திற்கே போய்விட்டதால் அவரை அழைத்து வர முடியாமல் போனது.

அன்னியன்.- அப்பாதகர் சிலநாள்களுக்குமுன் கடைத்தெருவுக்கு எதிர்த்த மரத்தடியில் உட்சார்ந்து உன் பெயரைச்சொல்லிப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது நானும் மற்ற ஒருவரும் அவ்வழியாகப்போனோம். இரவாயிருந்ததால் இன்னாரென்று கண்டுகொள்ள முடியாமல் போயிற்று. அப்பாதசர்களே இவர்களாயிருக்க வேண்டும். உன்னுடைய வீடு இன்னும் அதிக தூரத்திலிருக்கிறதோ? 

கமலாக்ஷி – இல்லை அண்ணா! அதோ சமீபத்தில் தெரிகிற வீடே எங்களுடையது. 

செழுங்கமலம் தன் மகள் வராமலிருப்பதன் காரணம் யாதோவென்று அடிக்கடி வெளியில் வந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அத்தருணத் திலும் வெளியில் வந்து தன் மகள் வருவதைக்கண்டு, கமலாக்ஷி! ஏன் இவ்வளவு நேரம்? என்றாள். 

கமலாக்ஷி – வைத்தியர் முத்துக்குமார முதலியார் மருமகளுக்கு ஆபத்தா யிருக்கிறதால் அவர்கள் வீட்டிலிருந்து இப்பொழுதுதான் வந்து என்னிடம் மருந்து கொடுத்துத் திருமபி அவர்கள் வீட்டுக்கே போய்விட்டார். ஆனதால் நேரமானது. 

அன்னியன்.-அம்மா, நான் போய் வருகிறேன். 

கமலாக்ஷி – அண்ணா! தாங்கள் வந்து தாகத்துக்காகிலும் சாப்பிடாமல் போகலாமா? எளியவர்கள் வீடென்ற போகிறேன் என்கிறீர்கள்? 

அன்னியன்.- அப்படி நினைக்கவேண்டாம். நான் புதுஊரில் ஒருவரைப் பார்க்கப் போனவன், உன்னைக்கண்டு உன்னோடு வந்தேன். நான் மற்றோர் வேளையில் வந்து தாகத்துக்குச் சாப்பிடுகிறேன். 

கமலாக்ஷி – அண்ண! தாங்கள் அந்த வழியாகவா போகப்போகிறீர்கள்? 

அன்னியன்.- அதற்காக யோசிக்க வேண்டாம். 

கமலாக்ஷி – அண்ணா! தங்கள் பெயர் இன்னதென்று சொல்லாமல் போகிறேன் என்கிறீர்கள். 

அன்னியன்.- அம்மா கமலாக்ஷி! நான் இவ்விடமிருந்து வார்த்தையாடிக் கொண்டிருக்கச் சாவகாசமில்லை.என் பெயர் விஜயரங்கம். நான் காலையில் வருகிறேன். (என்று சொன்னவுடன் திரும்பிப் புதுஊரை நாடிச் சென்றான்.) 

செழுங்கமலம் தன் மகளும் விஜயரங்சமும் சகோதர வாஞ்சையோடு வார்த்தையாடிக்கொண்டிருந்ததைக் கேட்டு தனக்கவன் இன்னானென்று தெரியாமல் தன் மகளைப்பார்த்து கமலாக்ஷி ! அந்த வாலிபன் ஆர்? உன்னோடு ஏன் வந்தான்? என்று கேட்டனள். 

கமலாக்ஷி.- தங்களிடத்தில் அதைச் சொல்லாமல் இருப்பேனா? முதலில் நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள். தங்களுக்கெப்படி இருக்கிறது? பெரியவருக் கெப்படியிருக்கிறது? 

செழுங்கமலம்.- எனக்குச் சிறிது சௌக்கியமாயிருக்கிறது; பெரியவர்க்குச் சுரம் குறைவுபடாமல் இருக்கிறது. 

கமலாக்ஷி – பெரியவரும் தாங்களும் மருந்து சாப்பிட்டபின் நாம் பேசிக் கொண்டிருக்கலாம்.(என்று இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.) 

5-ம் அத்தியாயம்

விஜயரங்கம் கமலாக்ஷியிடம் விடைபெற்றுக் கொண்டபின் இரவையும் நேரத்தையுங் கவனியாமல் புதுஊரை நாடிக் கமலாக்ஷியை மீட்ட இடத்திற்கு வந்து, அடிபட்டு மூர்ச்சையானவர்களின்னும் அவ்விடத்தி லிருக்கிறார்களா என்று பார்த்தான். இருவரும் அவ்விடம் இல்லாததைக் கண்டு இருவரும் மூர்ச்சையானவர்களே யன்றி அவர்களுக்கு யாதோர் கெடுதியும் நேரிடவில்லை யென்று தனக்குள் சந்தோஷப்பட்டுச் சில தூரம்போகச் சமீபத்தில் இருவர் வார்த்தையாடிக்கொண்டு போவதை யறிந்து யாரோவென்று அறிய அவர்கள் பின்சென்றான்.

மாணிக்கம். – இரத்தினம்! அவன் யாரென்று உனக்குத் தெரியுமா?

இரத்தினம் – இருட்டாயில்லாமற்போனால் அவனை இன்னானென்று அறிந்து கொள்ளக்கூடும். உனக்கு முதலில் விழுந்த குத்தால் உண்டாகிய சத்தம் யாதென்று திரும்பிப் பார்த்தவுடன் அன்னியன் ஒருவன் இருப்பதைக்கண்டு என் பலங்கொண்டு அவனைக் குத்தினேன். அந்தக்குத்து அவன் மார்பில் விழுந்திருக்குமேயானால் அவன் நம்மைப்போல் உயிரோடு எழுந்து வந்திருக்கமாட்டான். கமலாக்ஷியின் நல்லவேளையே அவனைக் காப்பாற்றியது. 

மாணிக்கம் – ஒளித்துவந்து என் மார்பில் குத்தியதால் என் பொறி கலங்கி அவனை இன்னானென்று அறிந்துகொள்ளாமல் நிலத்தில் சாய்ந்தேன். அப்படிக்கில்லாமற்போனால் குத்தினவனை இலேசாகப் போகவிடுவேனா!

இரத்தினம்.- அவனுடைய நற்காலம் இருள் துணைநின்றது. ஆனதால், தப்பித்துக்கொண்டு ஓடிவிட்டான். நாம் மூர்ச்சை தெளியும்வரைக்குமாவது இருந்திருப்பானாகில் நமக்கு இருக்கும் வல்லமை இவ்வளவென்று காட்டியிருக்கலாம். நான் எழுந்தபொழுது பாதை யோரத்திலிருந்து எழுந்தேனே! நான் மூர்ச்சையாயிருக்குமபொழுது நீ என்னைக்கொண்டு போய் அவ்விடம் போட்டாயா? 

மாணிக்கம்.- நானும் பாதை ஓரத்திலிருந்தே எழுந்தேன். அடித்தவனே நம்மை அவ்விடங் கொண்டுபோய் போட்டிருக்கவேண்டும். நாம் மூர்ச்சையி லிருக்கும்பொழுது வண்டிகள் அவ்வழி வந்திருக்குமேயானால் நம்முடைய கதி என்ன? 

இரத்தினம் – கதியென்ன? இருவர் வேலையும் முடிந்தேயிருக்கும்; அதற்குச் சந்தேகமா?கமலாக்ஷியே நம்மேல் இரக்கப்பட்டு நம்மைப்பாதை ஓரத்தில் போட்டு வரும்படி சொல்லி யிருப்பாள். 

மாணிக்கம்.- ஆம் ! அந்தத் துன்மார்க்கன் நம்மை ஒளித்துவந்து அடித்தவனாதலால் அப்பேர்ப்பட்ட தைரிய ஈனனுக்குத் தயாளகுணம் எங்கிருந்து வரும்? 

இரத்தினம். – வராது. நாம் எதிர்பார்க்காம லிருந்தது அகஸ்மாத்தாய்க் கிட்டியும் தவறிப் போனதைப் பார்த்தாயா? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போயிற்று என்று சொல்லுவார்களே அதுபோல், இன்று நமது கையிலகப்பட்ட கமலாக்ஷி தப்பித்துக்கொண்டு போனது எனக்குப் பெருவிசனமா யிருக்கிறது. இவ்வித சமயம் இனி எக்காலத்தில் கிடைக்கப்போகிறது ! நான் பாவி ஒரு முத்தமாகிலும் கொடுத்தேனா?

மாணிக்கம்.- நாம் செய்தது முற்றிலும் தப்பிதம். சிறிது முன்பாகவே கமலாக்ஷியைப் பிடித்துக் கொண்டிருப்போமாகில் நம்முடைய எண்ணத்தை முடித்துக் கொண்டிருக்கலாம். நாம் வீண் பேச்சில் காலத்தைக் கழித்தோம். 

இரத்தினம்.- அவள் நம்மோடு வார்த்தையாடிக் கொண்டிருக்கும்பொழுது இன்னும் சற்றுநேரம் வார்த்தையாட மாட்டாளா! புதுஊருக்கும் பழைய ஊருக்கும் மத்தியில் உள்ள சாலை அரைமயிலா யிராமல் ஐந்து மயிலாய் இருக்கக் கூடாதா! என்றல்லோ நான் நினைத்திருந்தேன். 

மாணிக்கம்.- நீ அவ்விதயோசனையிலிருந்தாய். நானோ இச்சுந்தரியோடு சுகிக்கப்போவது நீயேயன்றி எனக்குக்கிடைக்கப் போகிறதா என்று எண்ணி யிருந்தேன். அது விஷயத்தைக்குறித்து நீ என்னை மன்னிக்கவேண்டும். 

இரத்தினம். – ஆற்றில் போகிற எல்லாருக்கும் சொந்தம் என்பதுபோல் உன்னைவிட்டு நாள் தனித்து அனுபவிச்ச இஷ்டங் கொள்ளமாட்டேன்.

மாணிக்கம்.- இந்த நல்ல எண்ணத்திற்காக உனக்கு வந்தனம். நாம் இனி கமலாக்ஷி விஷயத்தைக் குறித்து என்ன செய்கிறது? 

இரத்தினம்.- நாம் அவளைச் சந்தையிற் கண்டபொழுது கொண்ட ஆசை, தகுதியான இடத்திலே நிலை சரியதில் தற்செயலாய் அகப்பட்டு அவளோடு வார்த்தையாடியபின் அதிகமாய் விட்டது. இனி அவள் விஷயத்தில் செய்யப்போகும் யோசனை விலையுள்ளதாகவே யிருக்கவேண்டும். இனி ஒருகாலத்தில் கமலாக்ஷி நமது கையில் அகப்படுவாளானால் முதலில் நமது எண்ணத்தை முடித்துப் பின் மற்றதைப் பேசவேண்டும். இன்னமும் ஏமாந்து போகக்கூடாது. 

மாணிக்கம்,- நமது எண்ணத்தை இன்று முடித்து அவளோடு சுகித்திருப் போமேயானால் என்ன சந்தோஷத்தோடு இருப்போம்? என்ன செய்யலாம் மிஞ்சிப் போனால் நினைத்து நினைத்துத் துக்கப்படுவதில் பயனில்லை. மீண்டும் ஒரு முறை அவள் நமது வலையிலகப்பட என்ன யோசனை செயயப்போகிறாய்? 

இரத்தினம். – அவளைக் கைப்பற்றுவது பெரும் பாடால்ல. ‘எண்ணித்துணிக’ என்ற வாக்கின் பிரசாரம் நாம் எல்லா விஷயத்தையுங் கவனித்துச்செய்ய வேண்டும்.நாம் ஆத்திரத்தோடு ஓர் காரியத்தைச் செய்து விட்டாலும் கமலாக்ஷியும் அவர் அன்னையும் தனித்திருபபதாலும் மிக்க எளியவர்களாதலாலும் அதைத் தடுத்துக்கொள்ள முடியாது. ஆயினும் நாம் செய்யும் வேலை நமக்கே கெடுதியாக முடிந்தாலும் முடியும்.

மாணிக்கம்.- எந்த விஷயத்தில் கெடுதியாக முடியும் என்கிறாய்?

இரத்தினம்.- நாம் கமலாக்ஷியை இவ்விதம் செய்தோமென்று பிறர் அறிந்தால் நான் வனசாக்ஷி விஷயத்தில் போட்டிருக்கும் புள்ளி தப்பிப்போக நேரிடும். ஆனதால் நாம் சாவதானமாக யோசித்து ஓர் காரியத்தைச் செய்யவேண்டும். நாம் ஒன்றையுங்கருதாமல் பொருளைச் செலவழித்து அவர்களுக்கு ஓர் கெடுதியைச் செய்தால் அவர்களும் பொருளைச் செலவழித்துத் தப்பித்துக்கொள்ள முடியாது. பணத்தைச் செலவழித்தால் அசாத்தியமானதை யெல்லாம் சாத்தியப்படுத்திக்கொள்ளலாம். 

மாணிக்கம்.- கமலாக்ஷியின் அன்னை பொருளின்மேல் விருப்பமுள்ளவளா யிருந்தால் சுலபத்தில் எல்லாக் காரியங்களையும் முடித்துக்கொள்ளலாமே? 

இரத்தினம். – கமலாஷியன் அன்னை பொருளின்மேல் விருப்பம் அற்றவளென்று தன்மகள் மிகு மேன்மையாகப் பார்த்து வருகிறா ளென்றக் கேள்வி. 

மாணிக்கம்.- கமலாக்ஷிக்கும் பொருளின்மேல் விருப்பம் இருக்கிறதாகக் காணப்படவில்லை அல்லவா?

இரத்தினம் – அவள் இன்று நமமோடு வார்ததையாடிய தன்மையைக் கவனித்தால் அவள் தன கற்பைக் காப்பாற்றிக்கொள்ளும் விதமாகவும் நம்முடைய மனதைச் சந்தோஷப்படுத்தும விதமாகவும் பேசிவந்தாளே யல்லது நான குறிப்பித்த தனவந்தனைக்குறித்து அவன் ஆரென்றாவது எங்கிருக்கிறான் என்றாவது கேட்டாளா? ஆனதால் நம்முடைய யோசனை வேறுவிதமாய் இருக்கவேன்டும். 

மாணிக்கம்.- வேறு என்ன யோசித்திருக்கிறாய?

இரத்தினம்.- பகலில் பக்கம் பார்த்துப்பேசு, இராத்திரியில் அதுவும் பேசாதே என்பார்கள். அதைச் கவனியாமல் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். யாராகிலும் இதுவிஷயத்தைக் கேட்டுக்கொண்டிருந்து அவர்களிடத்தில் சொல்லிவிடுவார்களானால், அவர்கள் முன் ஜாக்கிரதையாய் விடுவார்கள். உனக்குச் சொல்லாமலாவது உன்னுடைய யோசனையைக் கேட்காமலாவது ஓர் காரியத்தைச் செய்யத்துணியேன். (என்று மெதுவாகப் பேசிக்கொண்டு போனார்கள்.) 

இதற்குள் புதுஊரும் சமீபமாகவே ஜனங்கள் சந்தடியைக்கண்டு மாணிக்கமும் இரத்தினமும் ஒருபந்தம் போனவுடன் விஜயரங்கம் வேறுபக்கம் திருப்பிப் பார்த்தான். கமலாக்ஷி விஷயத்தில் கெடுதியைச் செய்யக் கங்கணங் கட்டிக்கொண்டிருக்கிறான். அவர்கள் பேசினவற்றை முற்றிலும் அறிந்தாலும் முடிவில் ஏதோ ஓர் நினைவுகொண்டு அவர்களுடைய தீர்மானத்தை இரகசியமாகப் பேசிப்போனார்கள். இதை எப்படி அறிந்துகொள்ளுகிறது. இச்சமாசாரத்தைக் கமலாக்ஷியிடத்தில் சொல்லுவோமேயானால் அவள் மிகவும் பயந்து விடுவாள். சொல்லாமற் போனாலும் கெடுதியாய் முடியும் போலிருக்கிறது. கமலாக்ஷியும் அவள் அன்னையும் பொருளற்றவர்களாயிருந்தாலும் நன்னடக்கையைக் கைப்பற்றினவர்களாகக் காணப்படுகிறார்கள். நாம் ஏதாகிலும் உதவி செய்யலாமென்றால் வழியொன்றுங் காணப்படவில்லை. கமலாக்ஷி வீட்டின் விளக்கொளியால் அவள் மிக்க சுந்தரமுள்ளவளாகவே காணப்பட்டாள். அவள் வார்த்தையும் காதுக்கு இனிமையைத் தந்தது. நாம் தாகத்துக்குச் சாப்பிடாமல் வந்ததும் அவளுக்கு மனவருத்தமா யிருக்கிறதாகக் காணப்பட்டதால், நற்குணமுள்ளவளாகவுங் காணப் பட்டாள். நாம் அனேகமுறை அவர்கள் வீட்டுவழி போயிருக்கிறோம். ஒரு தடவையாவது கமலாக்ஷியைக் கண்டதேயில்லை. பெண்களில் இவ்வளவு சுந்தரமுள்ளவர்கள் இருப்பார்களென்று நாம் நினைக்க வில்லை என்று மனதில் நினைத்து ஓர் வீட்டின் கதவைத் தட்டினான். உடனே கதவுதிறக்கப்பட்டு ஒருவன் வெளியில் வந்தான்.

விஐயரங்கம்.- இப்பொழுது தேகசௌக்கியம் எப்படியிருக்கிறது?

சோமசுந்தாம்.-யாருக்கு எப்படி யிருக்கிறது என்று கேட்கிறாய் விஜயரங்கம்? 

விஜயரங்கம் – உன் மனைவிக்கு ? 

சோமசுந்தரம்.- என் பெண்சாதிக்குத் தேக அசௌக்கியமென்று நீ எவ்விதம் அறிந்தாய்? 

விஜயரங்கம்.- எவ்விதமாகவோ அறிந்தேன். எப்படி இருக்கிறதென்று கேட்டால் அதற்கொன்றும் பதில் சொல்லாமலிருக்கிறாய்.

சோமசுந்தரம்.- இன்று மாலை எல்லாம் சந்தோஷமாக இருந்தேன். அதன் பின் மன வருத்தம் உண்டாய் விட்டது. (என்று கண்ணீர் விட்டான்.)

விஜயரங்கம்.- வைத்தியர் என்ன சொல்லுகிறார்?

சோமசுந்தரம்.- என்மனம் மேலும் மேலும் துக்கப்படவே யாவும் சொல்லுகிறார். 

விஜயரங்கம் – எத்தனை மணி பரியந்தம் உனக்குக் சந்தோஷத்தைக் கொடுக்கும்படியான ஸ்திதியிலிருந்தது? 

சோமசுந்தரம்.- எட்டுமணி பரியந்தம் ஆனந்தமாய் இருந்தேன்.

விஜயரங்கம்.- அதன் பின் நீ துச்சப்படும்படி நேரிட்டதைக் குறித்து நானும் துக்கப்படுகிறேன். எனக்கேன் சொல்லியனுப்பாமல் இருந்து விட்டாய்? 

சோமசுந்தரம். – வீணில் உனக்குத் தொந்தரவு கொடுக்க மனமில்லாமலே.

விஜயரங்கம்.- உன் மனைவியை நீ இச்சித்திருந்தாயல்லவா?

சோமசுந்தரம்.– என் தாய்தந்தை என் கருத்தை அறியாமல் எனக்குத் தேடி வைத்த நாயகியைக் கண்டவுடன் இச்சித்தேன். அம்மாதும் என்னை முற்றிலும் இச்சித்தே இருந்தாள். நாங்கள் ஒருவரையொருவர் கண்டால் எங்களுக்குண்டாகிய துன்பம் அப்பொழுதே நீங்கிவிடும்.

விஜயரங்கம். – ஒருவர்மே லொருவர் அன்பு கொள்வது அரிதல்லவா?

சோமசுந்தரம்.- தாய் தந்தைகள் தங்கள் பிள்ளைகளுக்கு விவாகஞ்செய்ய இருக்குங்காலத்தில் காட்டில் விலைக்கு வாங்கிவரும் மாட்டைப்போல் ஒரு பெண்ணைக் கொணர்ந்து மணப்பந்தலில் மாப்பிள்ளைக்குக் காட்டுகிறார்களன்றி, விவாகஞ் செய்து கொள்ளுமுன் பெண்ணைக்காட்டி மாப்பிள்ளையின் சம்மதத்தை அறிந்து விவாகத்தை முடிக்கிறதில்லை. முன்பாகப் பார்த்திராத பெண்ணை மணந்தபின் நாளடைவில் ஒருவரை யொருவர் பார்க்கவும் வார்த்தையாடவும் வழக்கத்தில் வந்தால் ஒருவரை யொருவர் இச்சிக்கிறதையும் இச்சிக்காமல் போகிறதையும், விவாகம் முடிந்தபின் இந்த பெண்சாதி எனக்கு வேண்டியதில்லையென்று சொல்லுகிறதையும் கேட்டும் பார்த்தும் இருக்கிறோம். மற்றமதஸ்தர்களைப் போல் பெண்களைக்கண்டு வார்த்தையாடி ஒருவரை யொருவர் இச்சித்து பின் விவாகம் ஆகாத குறைவால் இச்சிப்பை விலைக்குவாங்கி வைத்துக்கொள்ளவேண்டியதாய் முடிகிறது. இச்சை இயற்கையால் வருவது அரிதோ! மற்ற மதஸ்தர்களுக்கே இது விஷயத்தில் சிறப்பு.

விஜயரங்கம்.- நாம் முற்றிலும் அது விஷயத்தை உள்நுழைந்து பார்த்தால் அது சிறந்ததாகக் காணப்படாது. 

சோமசுந்தரம் – இதென்ன நீ இவ்விதஞ் சொல்லுகிறாய்? நாகரிகம் தெரியாத ஓர் பெண்ணைக் கொண்டு வந்தால் நாகரீகம் அறிந்த நாயகன் எவ்விதம் இச்சிப்பான்? 

விஜயரங்கம்.- இச்சையைக் குறித்து மற்றும் ஓர் சமயத்தில் பேசலாம். வீட்டில் அசௌக்கியமா யிருக்கும்பொழுது நாம் இங்கு என்றுகொண்டிருப்பது அழகல்ல. (அச்சமயத்தில் ஒருவர் வீட்டிலிருந்து வெளியில் வந்து நான் போய் வருகிறேன் சோமசுந்தரம் என்றார்.)

சோமசுந்தரம்.- நல்லது போய்வாரும் வைத்தியரே! 

விஜயரங்கம் – வைத்தியரே! எப்படி யிருக்கிறது? 

வைத்தியர்.– இன்னவிதமாக இருக்கிறதென்று சோமசுந்தரம் சொல்லவில்லையா? 

விஜயரங்கம்.- அவர் என்ன சொன்னாலும் தங்கள் வாயால் கேட்டால் திருப்தியா யிருக்கும். 

வைத்தியர்.- இனி எள்ளளவும் பயமில்லை. கல்லா லடித்தாலும் சாவில்லை யென்று எட்டுமணிக்கே சொன்னேன். 

விஜயரங்கம்.- எட்டுமணிக்குச் சொன்னீரா? என்ன சோமசுந்தரம்! வைத்தியர் சொல்வது நிஜந்தானா? 

சோமசுந்தரம்.- ஆம் ! ஆம் ! (என்றே சோமசுந்தரம் அழுதுகொண்டிருந்தான்.) 

6-ம் அத்தியாயம்

கமலாக்ஷி பெரியவரை அழைத்துவந்து தன் தாயார் அனுமதியால் தங்கள் வீட்டில் வைத்துப்பார்த்து வந்ததில் பெரியவருக்குப் பிரதமத்தில் நலி அதிகரித்து வந்தது. கமலாக்ஷி தனித்து வைத்தியர் வீட்டுக்குச் சென்று மருந்து வாங்கிவரும் வழியில் நேரிட்ட விபத்தை வைத்தியர் அறிந்து கமலாக்ஷியைத் தனித்துத் தன் வீட்டுக்கு வரவேண்டாமென்று தடுத்து நாள்தோறும் தாமே போய்ப் பெரியவரைப் பார்த்து வந்தார். விஜயரங்கமும் தான் வாக்களித்தவண்ணம் கமலாக்ஷியையும் அவள் அன்னை யையுங் கண்டு பெரியவர் அவ்விடம் இருப்பதன் காரணமறிந்து அடிக்கடி சென்று பெரியவரைப்பார்த்து வந்தான். பெரியவர் அவ்வீட்டிற்கு வந்து இரண்டுவாரமான பின் தேசம் கிஞ்சித்துச் சௌக்கியமானதைக் கண்ட சமலாக்ஷியும் அவள் அன்னையும் மிச்ச மகிழ் வடைந்து பெரிய வரை உபசரிப்பதில் அதிச் சவனம்வைத்து, அவருக்குத் தேசத்தில் பலம் உண்டாகும்படி வைத்தியர் சொல்லியவண்ணம் வேளைக்கு வேளை பத்தியங்கொடுத்தும் அவரோடு நயமாக வார்த்தையாடி எப்பொழுதும் அவரோடு ஒருவர் இருந்தும் வந்தார்கள். ஒருநாள் காலை பெரியவர் தன்னோடிருக்கும் கமலாக்ஷியைப்பார்த்து அம்மா! கமலாக்ஷி! நான் உங்கள் வீட்டில் வந்திருந்து உங்களுக்குப் பெருஞ் செலவை உண்டாக்கிவிட்டேன் அல்லவா? என்று கேட்டார். 

கமலாக்ஷி.- தாதா! தாங்கள் இவ்விதம் சொல்வது நியாயந்தானா?(என்று கண்களில் ஜலந்தோன்ற என்றாள்.) 

பெரியவர்.- ஐயோ அம்மா ! நான் சொன்னது உனக்கு மனவருத்தத்தை உண்டுபடுத்தியதைக் குறித்து விசனப்படுகிறேன். (என்று சமலாக்ஷியின் கண்களைத்துடைத்து) உன்னுடைய நற்குணத்திற்கு என்ன கைம்மா றிருக்கிறது.நான் தனவந்தனாயும் ஒரு குமாரனை உடையவனாயும் இருப் பேனாகில் உங்களைத் தனவந்தர்களாக்கி என்மசனுக்கே உன்னை விவா கஞ்செய்துகொள்வேன். (என்று நகைத்தார்.) 

கமலாக்ஷி.- (நகைத்துக்கொண்டே) தாதா! தாங்கள் முற்றிலும் சௌக்கியமாய் நடமாடப் பார்ப்பதே எங்களுக்கு எல்லாச செல்வமும் உண்டானது போலிருக்கும். நாங்கள் தனவந்தரா யிருக்கவேண்டு மென்கிற விருப்பம் எங்களுக் கிலாதிருந்தாலும் இத்தருணத்தில் நாஙகளும் தனவந்தரா இருப்போமாகில் தங்களுக்கு மேலான செளக்கியத்தைக் கொடுப்போமே, அஃது இல்லாமலிருக்கிறதே, என்று துச்சப்படுகிறோம்.

பெரியவர்.- கமலாக்ஷி! நீயும் உன் தாயாரும் என விவயத்தில் காட்டும் பேரன்புக்கு அளவில்லை. பொருள் இருந்தாலும் இல்லாமற் போனாலும் இப்பொழுது நடப்பதைவிட வேறென்ன செய்யமுடியும்? நோயாளிக்குக் கஞ்சியோடு பால் விட்டுக்கொடு என்று வைத்தியர் சொல்லுவாரானால் எளியவர் எவ்விதம் கொடுப்பார்? தனவந்தர் எவ்விதங்கொடுப்பார்? எல்லோரும் ஒரே விதமாகவே கொடுக்கவேண்டும். இதில் தனவந்தராயிருந்து பலன் ஏன்? இதை யோசியாமல் பேசுகிறாய்.

கமலாக்ஷி – தாதா! தாங்கள் சொல்லியது உண்மையேயாயினும், பொருளிருந்தால் தங்களுக்கு வேண்டியதை யெல்லாம வாங்கி வரலாம்.

பெரியவர்.- பொருளிருந்தால் என்னதான் செய்வாய்? நான் சாப்பிடக் கூடியவைகளும் இவ்வூரில் கிடைக்கத்தக்கவைகளுமாகிய பழவர்க்கங்கள் என் எதிரில் இருக்கும் மேஜையில் நிறைந்திருக்கின்றன. இவைகளைவிட வேறு என்ன வாங்கித் தருவாய்? 

கமலாக்ஷி – தாதா! பழவர்க்கங்கள் முற்றிலும் நாங்கள் வாங்கவில்லை. வணசாக்ஷி சில வாங்கி வந்தாள். விஜயரங்கத் தண்ணன் சில வாங்கி வந்தார்.(என் பெயர் என்னத்திற்கு வந்தது என்று விஜயரங்கமும் அவ்விடம் வந்து பெரியவரை வணங்கி உட்கார்ந்தான். பெரியவர் அருகில் உட்கார்ந்திருந்த கமலாக்ஷி, வாரும் அண்ணா! என்று எழுந்துபோக எத்தனித்தாள்.) 

பெரியவர் – கமலாக்ஷி! இரு. உன் அண்ணன்தானே வந்தவர். அவர் வந்தவுடன் ஏன் எழுந்து ஓடப்போகிறாய்? 

கமலாக்ஷி – ஓடவில்லை தாதா! அம்மாளைத் தமையனார் குடிக்க தாகத்துக்குக் கொண்டுவரும்படி சொல்லப்போகிறேன். 

விஜயரங்கம். – அம்மா கமலாக்ஷி! நான் இப்பொழுதுதான் தாகத்துக்குச் சாப்பிட்டு வந்தேன். வீண் தொந்தரவு எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கமலாக்ஷி – அண்ணா! தாங்கள் வரும்பொழுதெல்லாம் சாப்பிட்டு வந்தேன்! சாப்பிட்டு வந்தேன்! என்று சொல்லுகிறீர்களே யன்றி ஒருநாளாகிலும் சாப்பிடவில்லை. எளியவர்கள் வீட்டில் சாப்பிட்டு அவர்களை நஷ்டப் படுத்தக்கூடாதென்கிற கருத்தோ அறியேன்! 

விஜயரங்கம் – அம்மா! என்னைக் கோபியாமல் உன்னிஷ்டம்போல் கொண்டுவா. நான் சாப்பிடுகிறேன். நான் இரண்டு மூன்று தடவை உங்கள் வீட்டில் தாகத்துக்குச் சாப்பிட்டிருந்தும் வீணே என்மேல் குற்றஞ் சுமத்துகிறாய். 

கமலாக்ஷி சிரித்துக்கொண்டு தன் தாயாரிடம் சென்று விஜயரங்கம் வந்திருக்கிறாரென்று தெரிவித்து வந்தாள். 

விஜயரங்கம்.- அம்மா கமலாக்ஷி! உன்னிடத்தில் சில சமாசாரங்கள் சொல்ல எண்ணங்கொண்டிருக்கிறேன். 

கமலாக்ஷி – என்ன சொல்லப்போகிறீர் அண்ணா? தாங்கள் சொல்வதைச் கேட்கச் சித்தமா யிருக்கிறேன். 

விஜயரங்கம்.- உன் சிநேகி வனசாக்ஷியை இரத்தினம் விவாகஞ் செய்து கொள்ள எண்ணங்கொண்டு பலரிடத்தில் சொல்லித்திரிகிறான். அவன் விஷயத்தில் நான் கேள்விப்பட்டவைகள் யாவும் அவனுக்கு விரோதமாகவே காணப்படுகின்றன. ஆனதால் அவன் விஷயத்தை நன்றாய் யோசிக்கும்படி வனசாக்ஷியின் தாயாருக்குச் சொல்லியனுப்பினால் உத்தமம் என்று நினைக்கிறேன். 

கமலாக்ஷி – இரத்தினம் என்ற புண்ணியவான் என் விஷயத்திற் செய்த கெடுதியை என் சினேகை வனசாக்ஷிக்குச் சொல்லியிருப்பதால் இது விஷயத்தை நான் சொன்னால் என்ன அபிப்பிராயப் படுகிறார்களோ என்ற பயம் அதிகமாய் இருக்கிறது. 

(பயப்படவேண்டிய அவசியமில்லை என்று சொல்லிக்கொண்டே வனசாக்ஷியும் எதிரில் வந்தாள்.) 

பெரியவர்.- வனசாக்ஷி! உனக்கு நூறு வயது! இவர்கள் பேசியவைகள் யாவையுங் கேட்டுக்கொண்டா இருந்தாய்? 

வனசாக்ஷி – இல்லை தாதா! யாரோ ஒரு புண்ணியவான் பெயரை அண்ணன் சொல்லியது முதல் கேட்டுக்கொண்டே வந்தேன். 

(அச்சமயத்தில் செழுங்கமலம் தாகத்துக்குக் கொண்டுவந்து யாவருக்குங் கொடுத்தாள்.) 

விஜயரங்கம்.- அம்மா ! வனசாக்ஷி ! உன்னை இந்த வீட்டில் பார்த்தது முதல் நான் இது விஷயத்தைக் குறித்துச்சொல்ல எண்ணம் இருந்தும், இது பரியந்தம் சொல்லாமல் இருந்தேன். ஏனெனில், நூறு பொய்யையாகிலும் சொல்லி ஒரு மணத்தை முடிக்கவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ஆனதால் அதைக்கெடுக்க ஒருவரும் துணியார். உலக வழக்கம் இவ்விதம் இருந்தாலும் இரத்தினத்தின் நடத்தையையும் அவன் எண்ணத்தையும் நான் நேரில் பார்த்தும் பலரால் கேட்டும் இருப்பதால் என் மனம் சகியாமல் இன்று தங்கை கமலாக்ஷியிடம் சொல்லி உன் தாயாருக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

பெரியவர்.- அப்பா விஜயரங்கம்! இரத்தினம் எந்த விஷயத்தில் அபாத்திரனாயிருக்கிறான்? 

விஜயரங்கம்.- ஐயாவே! எல்லா விஷயத்திலுமே! அவனுடைய நடத்தை இவ்விடத்தில் இருப்பவர்கள் யாவருக்குந் தெரிந்ததே! அவன் செட்டிகளிடத்தில் பெருந்தொகையைக் கடன் வாங்கிக் கெட்டவிஷயத்திற் செலவழிக்கிறான். கடன்காரர்களுக் கெல்லாம் தான் ஓர் தனவந்தன் மகளை விவாகஞ் செய்துகொள்ளப் போகிறதாகவும், விவாக மானவுடன் கடன்களை யெல்லாம் கொடுத்துவிடுவதாகவும் சொல்லுகிறான். 

பெரியவர் – அவன் யாரிடம் சொன்னான்? 

விஜயரங்கம்.- ஓர் செட்டியாரிடத்தில்.

பெரியவர். – எந்தச் செட்டியார்? 

விஜயரங்கம்.- ஒரு பெரியகடை முதலாளி. அவர்பெயர் விஸ்வநாதம் செட்டி? 

பெரியவர்.- அந்த விஸ்வநாதம் செட்டியாரை இவ்விடம் அழைத்துவர முடியுமா? 

விஜயரங்கம்.- சற்று நேரத்திற்குள் அழைத்துவரக்கூடும். அச்செட்டியார் என்னோடு வந்து அடுத்த தெருவுக்குப்போயிருக்கிறார்.

பெரியவர்.- அவரைக் கண்டறிந்தால் யாவும் முடிவுபெறும். 

விஜயரங்கம்.- நல்லது, ஓர் நொடியில் அழைத்து வருகிறேன். (என்று விஜயரங்கம் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.) 

பெரியவர்.- அம்மா வனசாக்ஷி! செட்டியாரைக்கண்டு விசாரித்தபின் எதையும் யோசிக்க வேண்டியதேயன்றி அதற்கு முன் எந்தத் தீர்மானமும் செய்யக்கூடாது. 

செழுங்கமலம்.- ஆயிரங்காலத்துப் பயிரானதால் நன்றாயோசித்தே ஒரு காரியத்தைச் செய்யவேண்டும் அண்ணா! 

பெரியவர்.- ஆம்! ஆம்! அவசரப்பட்டு யாதொன்றைச் செய்தால் அதைக் குறித்துப்பின் வியசனப்பட வேண்டும். அம்மா! வனசாக்ஷி! உன் தாயார் பெயரென்ன? 

வனசாக்ஷி.- பூங்காவனம், தாதா! 

பெரியவர்.- உன் தகப்பனார் பெயரென்ன? அவர் காலஞ் சென்று நெடு நாளாயிற்றா? 

வனராக்ஷி – என் தந்தையின் பெயர் கந்தசாமி முதலியார். அவர் காலஞ் சென்று நெடுநாளானதென்று என்தாயார் சொல்லுகிறார்கள். எனக்கு அவர் தெரியாது. அவர் அருணாசல முதலியாருடைய நெருங்கின சினேகிதர் என்று கேள்வி. 

பெரியவர்.– அருணாசல முதலியார் என்பவர் யார்?

வனசாக்ஷி – அவர் இவ்வூரிலுள்ளவர்களில் மிக்க தனவந்தர். 

பெரியவர்.- அவர் எங்கிருக்கிறார்? நான் உங்களைவிட வயது சென்றவனாதலால் என்ன என்னவோ கேட்கிறேன். கோபித்துக்கொள்ள வேண் டாம். 

வனசாக்ஷி – கோபம் என்னத்திற்காக வரப்போகிறது! தாங்கள் எங்கள் நன்மையைக் கருதித் கேட்பதற்குக் கோபித்துக்கொள்ளவேண்டிய காரணம் இல்லை. தாங்கள் கேட்ட அருணாசல முதலியார் உயிரோடிருப் பாரானால் எங்களுக்கென்ன குறைவு! எங்கள் குடும்பத்தையும் எங்கள் சிறியதாயார் குடும்பத்தையும் கைசோரவிடாரே! 

பெரியவர் – உன் சிறிய தாயார் இருப்பதாக எனக்கிதுபரியந்தம் சொல்ல வில்லையே! உன்சிறிய தாயார் எங்கிருக்கிறாள்? 

வனசாக்ஷி.- என் சிறிய தாயார் தங்களுக்குத் தெரியாதா ? என் சிறிய தாயார் வீட்டில் தாங்களும் நானும் தற்காலம் இருக்கிறோம்.(என்று சிரித் தாள்.)

பெரியவர் – (சிரித்துக்கொண்டே) அருணாசல முதலியார் உன் தந்தைக்குச் சினேசரென்றாய்; ஆனதால் அவர் உயிரோடிருந்தால் உங்களுக்கு உதவி செய்யினும் செய்வார். செழுங்கமலத் தம்மாளுக்கு என்ன காரணத்தால் உதவி செய்வார் என்று நினைக்கிறாய்? 

வனசாக்ஷி – அருணாசல முதலியாரென்பவர் என் சிறிய தாயாரின் சகோதரர் என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா? 

பெரியவர்.- இல்லை. உங்கள் குடும்பத்துக்கும் செழுங்கமலத்தின் குடும்பத்துக்கும் ஏதாகிலும் சம்பந்தமுண்டா? 

வனசாக்ஷி – என் தந்தை வழியில் உண்டென்று என் தாயார் சொல்லியிருக்கிறார்கள்.

பெரியவர்.- அருணாசல முதலியார் இறந்துவிட்டாலும் அவருக்குப் பெண்சாதி பிள்ளைகள் சகோதரர்கள் இல்லையா? 

வனசாக்ஷி – பெண்சாதி பிள்ளைகள் இல்லை. ஜெகநாத முதலியார் என்கிற சகோதரர் ஒருவர் இருக்கிறார். 

பெரியவர்.- அவர் ஒரு உதவியும் உங்களுக்குச் செய்கிறதில்லையா?

செழுங்கமலம்.- அண்ணா! அவர் எங்களுக்கு உதவிசெய்யாமற் போனால் தோஷமில்லையே! நாங்கள் அற்ப உதவியையும் அவரிடத்திலிருந்து எதிர்பார்க்கவில்லை. எஙகள் வீட்டுக்கு வரப்போக இருந்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம். அவர் எங்களை யாரோ எவர்களோ என்று பார்க்கிறார். 

பெரியவர் – கமலாக்ஷியின் தந்தையும் காலஞ்சென்று நெடுநாளாயிற்றோ?

பெரியவர் கேட்டதற்குப் பதில் சொல்லுமுன் விஜயரங்கமும் செட்டியாரும் வீட்டுக்குள் வந்தார்கள். பெரியவர் செட்டியாரை யழைத்து ஒரு நாற்காலியில் உட்காரச்செய்து தங்கள் பெயர் என்ன விஸ்வநாதம் செட்டியாரா? என்றார். 

செட்டியார்.- ஆம் ஐயா! 

பெரியவர்.- தங்கள் கடைவிலாசம் என்ன? 

செட்டியார்.– மயிலாபுரியிலுள்ள கடைக்கு ராவன்னா மானா கானா வேனா என்று பெயர். 

பெ யவர்.- செட்டியாரே! நாம் இருவரும் தனித்து வார்த்தையாட வேண்டியதாயிருக்கிறது. நாம் தோட்டத்துப்பக்கம் போய்வரலாமா?

செட்டியார். – ஆஹா ! அப்படியே செய்யலாம். 

என்று பெரியவரும் செட்டியாரும் வீட்டுக்குப் பின்புறத்திலுள்ள தோட்டத்துக்குள் நுழைந்தார்கள். இருவரும் நீங்கியபின் விஜயரங்கம் யாவரையும் பார்த்துப் பெரியவர் நமக்குமுன் பேச இஷ்டங்கொள்ளாமல் போனதன் காரணம் தெரியுமா? என்று கேட்டான். 

வனசாக்ஷி.- இவ்விடம் இருந்து பேசினால் என்னைச் சுட்டிக்காட்ட நேரிடுமென்றும், கேவலமான பேச்சுகள் காதில் விழுந்தால் நமக்கெல்லாம் மனவருத்தமாயிருக்குமென்றும் நினைத்தே தனித்து வார்த்தையாட அழைத்துப்போனாரென்று நினைக்கிறேன். 

விஐயாங்கம்.- பெரியவர் கருத்து அவ்விதமாகவே இருக்கவேண்டும். வேறு கருத்துக்கொள்ள ஏதுவில்லை. பெரியவர் காலை மாலை வெளியில் போய் உலாவி வருகிறாரா? 

கமலாக்ஷி- சிலநாள்களாக வெளியில் போய் வருகிறார். 

விஜயரங்கம்.– பெரியவர் பெயர் என்ன என்று தெரியுமா?

கமலாக்ஷி – ஒருநாள் பெரியவர் சட்டைப்பையிலிருந்து விழுந்த கடிதம் ஒன்று அவர் படுக்கைக்குச் சமீபத்தில் இருந்தது. அதை எடுத்துப் பெரியவரிடங் கொடுக்கும் பொழுது அக்கடிதத்தில் நடராஜ முதலியார் என்றிருந்ததைப் பார்த்து மற்றதைப் பார்க்காமல் பெரியவரிடங் கொடுத்தேன். அவர் சிரித்துக்கொண்டு என் பெயரைக் கண்டுகொண்டாயா என்றார். நான் மனவருத்தத்தோடு நிற்பதைக் கண்டு என்னை நடராஜ முதலியாரென்றே அழைக்கிறார்கள். என் பெயரைக் கண்டுகொண்ட தால் நீ மனவருத்தப்படவேண்டிய காரணமில்லையே என்று நகைத்தார்.

விஜயரங்கம்.- மிக்க சந்தோஷம். அந்நியரை அழைத்துவந்து வீட்டில் வைத்துப்பார்த்து வருகிறார்களே! அவர் என்ன ஜாதியோ என்று ஐயங் கொண்டிருந்தேன். அது இன்று நீங்கியது. 

கமலாக்ஷி.- அவர் முகத்தைப் பார்க்கும்பொழுது நற்குண முள்ளவராகவும் உயர் குலத்தவரைப் போலவும் காணப்படவில்லையா? 

வனசாக்ஷி.- ஆம் ! அது உண்மையே யாயினும் யாவும் அறிந்து செய்வதே உத்தமம். 

செழுங்கமலம்.- அன்று கமலாக்ஷி பெரியவர் பெயர் நடராஜ முதலியாரென்று சொன்னவுடன் என் மனமும் சந்தோஷமடைந்தது. எச்சாதியாராக இருக்கினும் நாம் உதவிசெய்யவேண்டியது கட்டாயமானாலும் உலகத்துக்கும் பயப்படவேண்டியது அவசியமாக இருக்கிறது.

விஜயரங்கம்.- நான் இரத்தினத்தைக் குறித்துச் சொன்னவைகளை நம்பாமல் செட்டியாரை வரவழைத்து வார்த்தையாட எண்ணினார்போலிருக்கிறது.

செழுங்கமலம் – ஒருவேளை அவ்விதம் இருந்தாலும் இருக்கக்கூடும். உன்னைப் பெரியவருக்கு நன்றாய்த் தெரியாததால் அவர்மேல் குற்றஞ் சுமத்துவது நியாயமல்ல. 

வனசாக்ஷி – அதோ! அவர்களும் வந்துவிட்டார்கள்.

நடராஜ முதலியார்.- அம்மா செழுங்கமலம், இரத்தினத்தை மீட்கும் வழி ஏதாகிலும் இருக்கிறதா என்று அறிய நான் செட்டியாரிடத்தில் சில விஷயங்களைக் கேட்டத்தில் அவைகளை விசாரித்து வருகிறேன் என்று சொல்லுகிறார். ஆனதால் நாம் இன்று இரத்தினத்தின் விஷயமாக எதையும் முடிவுப்படுத்தக் கூடாது. இரத்தினத்துக்குக் கடன் அதிகமாக இல்லாதிருந்தால் அதைத் தீர்த்து அவனை நல்லவழிக்கு ஏன் கொண்டுவரக் கூடாது? வாலிபத்தில் சேர்க்கையால் கெட்டவழியில் நடப்பது சகஜம். விஜயரங்கம், நீ என்ன யோசிக்கிறாய்? 

விஜயரங்கம்.- ஐயாவே, நான் இரத்தினத்தைக்குறித்து ஆத்திரப்பட்டுச் சொல்லியது என்மேல் குற்றமே. அக்குற்றம் நீங்க நானும் செட்டியாருக்கு உதவியாக நின்று தாங்கள் விரும்பியதை விசாரித்துவந்து இருவரும் சொல்லுகிறோம். 

நடராஜ முதலியார். – வனசாக்ஷி, விஜயரங்கம் உன் விஷயத்தி லெடுத்துக் கொள்ளும் தொந்தரவுக்காக நீ சந்தோஷப்படவேண்டும்.

வனசாக்ஷி – ஆம்! தாதா ! என் விஷயத்தில் அண்ணன் எடுத்துக்கொள்ளும் தொந்தரவுக்குப் பதிலென்ன செய்யப்போகிறேன்? அவருக்கு எல்லா நன்மையும் உண்டாகும்படி கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டிருப்பேன்.

விஜயரங்கம்.- அம்மா! வனசாக்ஷி, நான் செய்யப்போகும் அற்ப காரியத்தைச் சிலாகித்துப் பேசுவது அழகல்ல. 

கமலாக்ஷி.- அண்ணா! தாதாவுக்குப் போஜன வேளையாயிற்று. தாங்களும் தாதாவோடிருந்து சாப்பிட்டுப் போகவேண்டும். 

விஜயரங்கம்.– அம்மா, கமலாக்ஷி! நான் ஐயாவோடிருந்து சாப்பிட்டுப்போக யாதொரு தடையுமில்லை. வீட்டுக்குப் போஜனத்துக்குப் போகாவிட்டால் நான் போகுமளவும் என்தாயார் சாப்பிடாமல் இருப்பார்களென்று உனக்குத் தெரிந்திருந்தும், என்னை அவர்கள் கோபித்துக் கொள்ளவோ என்னைச் சாப்பிட்டுப்போகச் சொன்னாய்? 

கமலாக்ஷி.- இல்லை அண்ணா! தங்களுடைய இஷ்டம்போல் செய்யலாம். வனசாக்ஷி! நீயாகிலும் சாப்பிட்டுப் போகலா மல்லவா? 

வனசாக்ஷி – எனக்கொன்றும் தடையில்லை.ஏதாகிலும் விசேடம் உண்டா?

விசேடம் ஒன்றும் இல்லையென்று கமலாக்ஷி தன் தாயைப்பார்த்து அம்மா ! நானும் வனசாக்ஷியும் போய் எல்லாம் சித்தப்படுத்துகிறோம் என்று சமையலறைக்குள் வனசாக்ஷியை அழைத்துச் சென்றாள். விஜயரங்கம் மாலையில் வருவதாக விடைபெற்று நீங்கினான்.

நடராஜமுதலியார்.- அம்மா! செழுங்கமலம்! விஜயரங்கத்தின் நடத்தையைக் கவனித்தாயா? அவன் மிக்க யோக்கியனாகவும் அவன் தாய் தந்தை மேல் மிக்க சவனம் வைத்தவனாகவும் காணப்படுகிறான். இவனைப் பெற்ற புண்ணிய சிலர்கள் யாரென்று உனக்குத் தெரியுமா?

செழுங்கமலம். – ஆம் அண்ணா! கலியாணசுந்தர முதலியாருடைய குமாரன் விஜயரங்கம். அவன் தாயார் பெயர் மீனாக்ஷி. அவர்கள் என் தமையனுக்குப் பின் தனவந்தரில் முதன்மையாகக் காணப்படுகிறார்கள்.

நடராஜமுதலியார் – தனவந்தனாயிருந்தும் தன் மகனுக்கு இது பரியந்தம் விவாசஞ் செய்யாமலிருக்கிறதே ஆச்சரியம்! விஜயரங்கத்துக்கு வயது இருபதுக்கதிகமாக இருக்கும்போல் காணப்படவில்லையா? 

செழுங்கமலம். – விஜயரங்கத்துக்கு இன்னும் விவாகம் செய்யாமல் இருப்பதன் காரணம் ஒருவருக்கும் தெரியவில்லை. அது எல்லாருக்கும் ஆச்சரியத்தைத் தருகின்றது. 

நடராஜமுதலியார் – இவ்விதமான புருடன் நமது கமலாக்ஷிக்குக் கிடைப்பானாகில் நாம் அதிர்ஷ்டமுள்ளவர்களென்றே எண்ணவேண்டும்.

செழுங்கமலம்.- தனவந்தர் எளியவர் வீட்டில் பெண்கொள்ளச் சம்மதப்படுவார்களா? சிலவேளை பெண்கொள்ளச் சம்மதப்பட்டாலும் அவர்களோடு சம்பந்தம் செய்வதும் நமக்கு நன்மையைத் தராது. 

நடராஜழதலியார். – ஏன் நன்மையைத் தராது? 

செழுங்கமலம்.- தனவந்தர் சந்தோஷமடையும்படி நாம் சீதனம் கொடுக்கப் போகிறதில்லை. சீதனமில்லாமல் வந்த பெண்களைக் கேவலமாக நடத்துவதைப் பார்க்கிறோம். எளியவருக்கு எளியவரே பொருத்தம். 

நடராஜமுதலியார் – ஆம், ஆம், அது உண்மையே. 

செழுங்கமலம்.- அண்ணா! எழுந்திருங்கள், நேரமாய்விட்டது; சாப்பிட்ட பின் யாவும் பேசலாம்.(என்றெழுந்தாள். பெரியவரும் எழுந்து போஜன அறைக்குள் சென்றார்.)

– தொடரும்…

– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.

– கமலாக்ஷி சரித்திரம் (நாவல்), இரண்டாம் பதிப்பு: 1910, தாம்ஸன் அண்ட் கம்பெனி, மினர்வா அச்சுக்கூடத்தில் பதிப்பித்தது, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *