(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆறுமுக வாத்தியார் கந்தபுராணத்தைத் திரும்பத்திரும்பப் புரட்டியெடுத்து ஆகா வென்பதும் ‘ஓகோ வென்பதுமாக இருந்ததில், தாயில்லா மகள் கமலத்தின் வயதேறுவதைக் கவனிக்கவில்லை. இளைப்பாற வேண்டிய பருவம் வந்து இளைப் பாற , கந்தபுராணக் காட்சிகளின் நுணுக்கங்கள் கூடினவே தவிர, கமலத்தின் ஏக்கப் பெருமூச்சுகள் அவர் காதில் விழவில்லை . வாத்தியார் கந்தபுராணத்தைக் கட்டிக்கொண்டமூலம், கமலத்தின் தாயின் இறப்புத்தான் என்றால், கமலத்தின் தாய் பவளத்தின் ஆவி சிரிக்கும். அந்த ஆதிகாலத்துப் பண்டிதர்ப் படிப்பிற்குப் படித்த அகநாநூறும் திருக்குறளின் அடியும், விடு தூதுக்களும்’ புரிய, புரியவைக்க வந்து சேர்ந்த பவளம், போய்ச் சேர்ந்த நியாயத்திற்குப் போர்வை கந்தபுராணம். ஒரு மிகப்பெரிய கோவலனாக வாத்தியார் கொட்டமடித்துக் களைத்தபின்னர், எதனாலேயோ சூரபத்மனின் சூரத்தனத்தைச் சண்முகன் ஒறுத்ததில் திருப்தியைக் கண்டு கொண்டு உலகை மறந்துபோனார். அது வேறு.
வாத்தியாரின் சின்னஞ்சிறிய ஊரிருப்பது வெளியூராருக் குத் தெரிவது அவ்வூரின் அம்மனால் மட்டுந்தான். அது நகரங்களுக்கும், நகரப் போக்குகளுக்கும் வெகு தொலைவில், நவீனத்துவம் அதன் பயங்கரத் தாக்குதல்களால் இப்போது சற்றேதான் தாக்குகிற வகையில் அமைந்து, நெல்லும் மணியு மாய்ப் பொலிகிற ஒரு மகத்தான கிராமம். அதைவிட, இப்போது பஸ்சும் காரும் வானும் கரண்ட்டும் ஓடினாலும், அந்தக் காலமென்ன இந்தக் காலமென்ன, என்றும் பெடியளும்’ ‘பெடிச்சிகளும்’ ஒரே அடைப்படையில் தான் ஓடுகிறார்கள் என்பது தெரியாமல், அந்த ஊரின் மகாவித்தியாலயப் பெடியள்’ ‘பெடிச்சியள்’ சிலரைச் சபித்துக் கொட்டுகிற கிழடுக்கட்டைகள் நிரம்பிய ஊர் என்பதையும் சொல்ல வேண்டும்.
கமலம், வாத்தியார் இளைப்பாறு மட்டும் இந்த மகா 82 வித்தியாலயத்தில் ஒப்பாருமிக்காருமில்லாத கண்ணகியாய்த் தான் இருந்தாள். வாத்தியார் இளைப்பாற, படிப்பைப் பாதியில் போட்டுவிட்டு வீட்டில் நின்று கொண்டாள். கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் அது எவ்வளவு பெரிய தவறென்று புரிந்தது. மகா வித்தியாலயம் மாபெரும் உலகம். இது, இந்த ஒழுங்கை மூலையில், ஒழுங்கை போய்த் திரும்புகிற எல்லையைத் தவிர அதற்கு அப்பால் கற்பனையை மட்டும் ஓட்டவேண்டியதாய்ப் போயிற்றே என்பதும் கமலத்தின் குறை.
வாத்தியார் அதிகாலையில் எழும்பி , காலை அநுட்டானங் களை முடித்துச் சந்தைக்குப் போய், காய்கறிகளைக் கொண்டு வந்து கமலத்தின் கையில் போட்டுவிட்டுச் சைக்கிளில் ஏறி – இல்லாத – வேலைகளையெல்லாம் பார்த்துத் திரும்பச் சூரியன் தன் பெருமையை மந்தப்படுத்திக்கொள்ளும் நேரமாகிவிடும். இது சூரியனுடன் ஒத்த நித்திய போக்காய் அமைந்து, பிறகு கமலத்திற்கு மெத்த வசதியாய்ப் போயிற்று.
முதலில் கமலத்திற்கு அந்த கணேசனைத் தெரியாது. கணேசன் அப்போது ஒரு நறுக்கான மீசை வைத்திருந்த அழகான கறுவல் பெடியன். ஒரேயொரு தமையனும் முதுசக் கமமும் இருக்குமட்டில் தான் வேலை செய்யத் தேவையில்லையென்று யோசித்திருந்து, இளவட்டங்களைச் சேர்த்துக்கொண்டு கும்மாளமடித்துக்கொண்டிருந்த ஒரு பேர்வழி. வாத்தியாருக்கும் அவனுக்கும் அந்தக் காலகட்டத்தில் நோக்கிலும் வயசிலும் வித்தியாசமே தவிர, ஊரில் அங்குமிங்குமாக அலைவதில் வித்தியாசமில்லை. மகாவித்தியாலயத்து ஓட்டப் போட்டி, கோவில் திருவிழா என்றால் சுமப்பது தான் தான் என்பதில் கணேசனுக்குச் சந்தேகமில்லாமல் போய்விடும். இது ஒரு காலத்தில். அவைகளும் வேறுதான்.
கண்டதுந்தான் இந்தக் காதல் பிறக்கிறது. கணேசன் ஒருநாள் வாத்தியார் இல்லாத நேரத்தில் எதற்காகவோ யார் சொல்லியோ கமலத்திடம் வாத்தியாரின் கந்தபுராணப் புத்தகத்தை, சைக்கிளில் இருந்தவாறே அரைப் புன்னகையொன்றுடன், தலையைச் சிலுப்பி, மீசையை முறுக்கிக் கேட்ட பக்குவத்தில் சொக்கிப்போனாள். அவளைப் பொறுத்தமட்டில் தெய்வீகக் காதல் அன்றே பிறந்து விட்டது. புத்தகத்திற்கு வாத்தியார்தான் வரவேண்டுமென்பதை அவள் சொன்ன மாதிரியில் அவனுந்தான் சொக்கிப்போனான். கணேசன் திரும்பத்திரும்ப அங்கே போய் எதையாவது கேட்டு, எதையாவது கொடுத்துக் கமலத்தின் தரிசனத்தைப் பெற்று, மகிழ்ந்து, நெகிழ்ந்துபோய் ஒரு சரித்திரத்தைத் தொடக்கிவிட்டான். அவன் முதலில் கடுதாசிகள் எழுதிப் பெற்றுக்கொண்டான். பிறகு, கதைக்கட்டுகளில் தன் கைப்பட அடிக்கோடிட்டு அனுப்பி, அவளுக்குப் பலதையும் பத்தையும் இவ்வாறாகவே புரியவைக்க முயற்சியெடுத்தான். முன்னேறி, இரவு வேலிப்பாய்ச்சல் தொடங்கியபோதும் அயல் வீடுகளுக்கு ஒன்றும் தெரியாது; புலவரோ கந்தபுராணக் கடலைவிட்டுத் தரைக்கு வருவதாக இல்லை என்றாலும், கணேசனுடன் கூடியிருந்த கூட்டத்திற்கு இந்தச் சலசலப்புகள் தெரிந்து போனது ஒரு துரதிர்ஷ்டம்.
கணேசன் வாழ்க்கையில் நெடுநோக்கோ கொள்கைகளோ இருந்ததில்லை என்று குறைப்படுவதில் அர்த்தமில்லை. தமைய னின் ட்ராக்றரை வேகமாக ஓடித்து ஓடித்து ஓட்டுவதிலும், கோயில் திருவிழா அல்லது அது மாதிரியான ஊர்க் களியாட் டங்களில் ஓடியாடி அலுவல்கள் பார்ப்பதிலும் சீவியம் போக முடியாதா? கமலத்தின் ஒட்டுதலின் பின்னர்தான் தன் வாழ்க்கையின் இந்த அம்சம் அவனுக்குப் பெரிய குறையாகப் போய்விட்டது. “நான்…. நான் யார்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு மறுமொழி இல்லாமல் புழுங்கினான். இதைச் சுற்றி அவன் மனதில் பட்டைகள் வளரத் தொடங்கி…
அவனுக்குக் கமலத்திடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் போல இருக்கும். மனத்திலிருந்து நாக்குக்குள் வருவதற்குள் ஊற்றுகள் பல்வேறாகவும் சுரக்கும். கனகம், பத்மா இத்தியாதி ஊர்ப்பெட்டைகள் தன்னை வளைக்க முயற்சித்ததாகச் சொல்லுவான். பஸ்சில் சந்தித்த பெண்களைப் பற்றி, தன் நண்பர்களைப் பற்றி நிறையவே சொல்லுவான். அவளின் இதமான நெருக்கத்தில் உண்மைகளுக்கும் தன் கற்பனை ஊற்றுகளுக்கும் அவனுக்கு வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது. அவளின் நெருக்கம் கூடக்கூட , தான் ஒரு புருஷலக்ஷணமில்லா தொருவன் என்பது சுடத் தொடங்கி, மேலும் மேலும் கதைகளைச் சொன்னான். கமலத்திற்கே மெல்லமெல்லக் கதைகளை நம்பக் கஷ்டமாக இருந்தாலும், அவள் அவைகளை நம்ப மெத்தவும் தெண்டித்தாள். அவளு டைய இந்த முயற்சியால் அவள் மனதில் திரையொன்று குறுக்கே விழுந்து போயிற்று. அவனைச் சிலவேளைகளில் கடிந்துகொண்டாள்; கண்களை இடுக்கிக் கேள்விகள் கேட் டாள். கல்யாணம்’ என்றதொரு பேச்சைத் தொடங்கும் போதெல்லாம் அவன் அட்டை போல் சுருங்கிக்கொண்டான். “முதலில் வேலை பாக்க வேணும்…” என்றும் சொல்லிக்கொண்டான். இதற்குப் பிறகு தொடருகிற மௌனத்தைக் கமலத்தால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இதற்கு மேலாகக் கனகம், பத்மா இவர்கள் தன் ராசாவின் மேல் விழுந்துமாய்கிற கதையையும் பொறுக்கமுடியவில்லை.
ஆண்கள் இப்போதெல்லாம் கணேசனின் இனம்போலவே கமலத்திற்குத் தோன்றியது. அவர்களை இப்போது மிக நன்றாகவே மதிப்பிட முடிந்தது. சொன்னால் எதையும் செய்து தருகிறார்கள்… பின்னால் வருகிறார்கள்…அவர்களை ஒருவிதத்தில் புரிந்து கொண்டாள்.
அதுபோக, இந்தப் பரமேசுவரன் – அவனைப் பற்றியும் சொல்ல வேண்டும் – கணேசனுடன் சேர்ந்த ஒருத்தன். சரா சரியாய் எல்லோருக்கும் இருபது வயதில் தெரிவது அவனுக் குப் பத்து வயதிலேயே தெரியும். அது குறைபாடான விஷய மில்லையென்று சொன்னாலும், அவன் உலக நோக்கில் – அப்படியொன்று அவனிடம் இருக்குமென்று கருதப்பட்டால் – பல விஷயங்களில் குறைபாடுகள் உண்டு. கூட்டுறவுச் சங்கக் 84 கடையில் சாமான் நிறுப்பவனிடம் என்ன நிறை’ இருக்கும்? இந்தப் பரமேசு, கணேசுவுடன் ஒன்றாக எஸ்.எஸ்.சி. பெயிலா கிப்போன ஆத்மா. எதையும் பெருத்த குரலில் சொல்லி, அதைவிடப் பெருத்த குரலில் சிரித்து முழக்குவான். நிறுக்கும் போது குறைகிற நிறைக்குக் குரலை உயர்த்தி நிரப்பிவிடுவான். தன் சுயமுயற்சியாலும் கெட்டித்தனத்தாலும் கணேசனின் சமாச்சாரம் அவனுக்குத் தெரிந்து போய்விட்டது. கமலம் தெருவழியால் போனால் கனைப்பான்; ‘ஹாஹா ஹ’ என்று எதையாவது சொல்லுவான். அவளுக்கு மெத்தக் கோபம் வரும். பெண்களின் கோபம், தாபம் அல்லது வேறெந்த மன நிலையானதும் தனித்தே இருப்பதில்லை. அதனதன் எதிர்க் கூறுடன் சேர்ந்தே ஒன்றாக இருக்கும். சிலவேளை ஒரு கூறும் மற்றவேளை அதனெதிர்க் கூறும் என இப்படியுமப்படியுமாய் அலைபாய்ந்து உலகின் நிலையற்ற இயக்கத் தன்மையை வலியுறுத்த வந்தவர்களாக இருப்பார்கள். கமலத்திற்குக் கோபம் வரும் போலத் தோற்றும் போதெல்லாம் அவற்றைக் கோபமென்று நாங்கள் கொள்வது நியாயமல்ல. உள்ளே நீறுபூத்த தணல் போல புளகாங்கிதமும் இருக்கும். பரமேசுவுக்கு இது தெரியாதா?
கணேசன் ஒருநாளிரவு தமையனிடம் வசமாய் மாட்டிக் கொண்டு, அவனுடைய கேள்விக் கணைகளின் கூர்மையையும் பேச்சையும் தாங்க இயலாதவனாய்ப் போய்ப் படுக்கையில் விழுந்து அன்றிரவு முழுதும் தன் நிலையை – நிலையில்லாமல் போய்விட்ட தன்னுடைய திரிசங்கு நிலையை – மறுகி மறுகி முடிவு தெரியாதவனாய் விழித்துக்கொண்டே இருந்தான். திரும்பவும் தான் யாரென்ற கேள்வியே அவன் மனதில் மேலோங்கி அவனை வதைத்துப் பிழிந்து கொண்டிருந்தது. வேலை ஏதாவது கிடைத்தால் கால் சட்டையுடன் திரியலாம். கால்சட்டை, அந்த ஊரில் இன்னும் ஒரு மகாகவசம்; அரசாங்க உத்தியோகத்தரின் வசீகர ஆடை. இந்த இலக்குகளெல்லாம் உரிய காலத்தில் தன் மனதிலிருந்து அழிந்த வரலாற்றுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்று குடைந்து கொண்டான். “அண்ணர் அப்பவே படிக்கச் சொன்னவர்தான்” என்று கசப்புடன் அசைபோட்டுக் கொண்டான். எஸ்.எஸ்.சி. படித்து ஆறு வருடங்கள். என்றாலும் திரும்ப முயற்சித்தால் என்ன? கமலம் சந்தோஷப்படுவாள். கமலம் இந்த நினைவுகளுக்கெல்லாம் ஆதார சுருதி. இந்த ஊரில் திரும்பவும் இப்போ வேறு ஏதோ புதிய நாமத்துடன் வைக்கப்படுகின்றன. தான் எஸ்.எஸ்.சி. எடுக்கப்போகிற காட்சியை மனதில் எழுப்பி வருந்திக் கொண்டான். முதலில் எஸ்.எஸ்.சி ; பிறகு ஒரு வேலை ; அதற்குப் பின்னால்…
திட்டத்திற்கு என்ன தடங்கல்?
இந்த ஊரில் எப்படியும் திரும்பத் தான் எஸ். எஸ்.சி. எடுக்கப்போவதில்லை. மற்றது கமலம். அவள் நினைவே மனத்தை வாட்டி வதைக்கிறது. தன் சென்மம் சாபல்யமடைந்து முழுமை அடைந்துபோகுமென்றதொரு நினைப்புடன் கமலத்தை நெருங்கினால் தன் சீவியத்தின் சூன்யத்தை எப்படி உணரவைத்து விட்டாள்? என்றாவது உத்தியோகமொன்றும் பார்க்கவில்லை என்று குறைபட்டுச் சொன்னாளா? ‘என்ர ராசா’ என்று அவள் மெல்ல அழைப்பது நாடி நரம்புகளை உருக்குகிறது. ‘ச்சீ இவளுக்கேற்றவனாய் ஒரு உத்தியோகம் பார்க்கத்தான் வேணும்.’ தூரத்தில் பட்டிணத்திற்குப் போய் அங்கே உள்ள தன் மாமன் வீட்டிலிருந்து படித்து அங்கேயே சோதனையையும் எடுத்து ஒரு சாம்ராச்சியத்தை நிறுவுவதுதான்’ என்ற தீர்மானம் மனதில் படிய, விடிகாலையில் நித்திரை வந்தணைத்துக்கொண்டது. அது மட்டும் கமலத்தைப் பார்ப்பதுமில்லை; அவளுக்கு எழுதுவதுமில்லை.’
தமையனைப் பொறுத்தமட்டிலும், கணேசன் ஒரு பொறுப் பில்லாதவன் என்றதொரு நினைவே தவிர, அவன் என்னவாக வரவேண்டும் என்பது பற்றி எதுவித கனவுமில்லை. என்றாலும் படிப்பு என்பது ஒரு மகத்தான தவமென்ற உணர்வு அவனை விட்டுப்போவதில்லை. குடிக்கிறானோ வெறிக்கிறானோ உந்த மட்டில் போகுது’ என்றது அவன் யோசனை. கணேசனின் தீர்மானத்தைக் கேட்டு சந்தோஷப்பட்டுக்கொண்டான்.
அன்றே போய்விட வேண்டும். கமலத்திடம் சொல்லிக் கொள்வது என்ற பெரிய சம்பவத்தை நினைத்துப்பார்ப்பதற்கும் திராணியில்லாதவனாய், மனப்பாரத்துடன் மெத்தவும் ரகசிய மாய்ப் போய்ச் சேர்ந்தான் பட்டிணத்திற்கு மத்தியான பஸ்சில். தவம் தொடங்கியது.
பண்டிதர் அன்று தன் இயந்திரகதியிலிருந்து பிசகினவராய் மத்தியானம் வேறெங்கும் போகாமல் தன் மகளை மூக்குக் கண்ணாடியினிடுக்கால் பார்த்ததற்குக் காரணம் கமலத்தின் கூத்து எந்த அம்பலத்திற்குமாவது வந்து பண்டிதர் காதில் ஏறியதென்பதில்லை. அவர் அத்யந்த நண்பர் கதிர்காமத்தம்பி ஒருவகையில் நேரப்பிசகாய் கமலத்தின் நிலையைப் பண்டிதர் மண்டைக்குள் ஏற்றிவிட்டார். பண்டிதர் பத்மாசனத்தில் அமர்ந்து வெறுமே கமலத்தின் நிலையை யோசித்தால் தீர்ந்துவிடுமா? முருகனையும் கூப்பிட்டுக்கொண்டார். கமலத்திற்கு இது புதினம் தான். தகப்பனின் மனச்சுழற்சியின் மையம் தான் தானென்று புரிய , கணேசன் நினைவலைகள் அவளைச் சூழந்து எந்தவிதத் தாலாவது, எந்த அதிர்ஷ்டத்தாலாவது தன் ராசாவை நினைத் துக்கொள்ளமாட்டாரா என்று யோசிக்கையில், அவளுக்கு எரிச்சலும் வந்தது. பாத்திரங்களை ‘ணங்’ என்று வைத்தாள். ‘அவர் வாற நேரம்’ என்ற நினைப்பில், சைக்கிள் சத்தங்களைக் காது தேடத் தொடங்கிய பரபரப்பில் சமையல் ஓடுவதாக இல்லை. பண்டிதரின் இருசக்கர வாகனம் வெளியே பண்டிதரின் பிரசன்னத்தைத் தெரிவிக்க இருக்கிறதுதானே என்ற நினைவு ஓரளவு நிம்மதியைத் தந்தாலும் பரபரப்பு அடங்கவில்லை . சமையல் முடியுமட்டும் ஒன்றையும் காணவில்லை . ‘இரா வராமற் போகிறாரோ’ என்ற சுயசமாதானம் அவள் படப்படப் புக்கு மருந்தாகவில்லை. பண்டிதருக்கு முடிவெதுவும் கிடைக் காத குழப்பத்தில் சாப்பிட உட்கார்ந்தார். மாப்பிள்ளை தேடு படலம் தொடங்குவது இந்த ஊரினெல்லைக்கு அப்பால் என்ற அவர் முடிவு ஊர்ப் பொடியன்களைப் பற்றிய அவர் கணிப்பின் தீர்க்கத்தைக் காட்டும். தன் தங்கை வீட்டில் – இந்த ஊருக்கு ஒரு காத தொலைவிலுள்ள இதைப் போன்ற இன்னொரு ஊரில் – கமலத்தைக் கொண்டுபோய்க் கொஞ்ச நாளைக்கு விட்டால் என்ன? கமலத்திடம் இதைச் சொன்னபோது அவளுக்கு எரிச்சல் கூடித்தான் விட்டது. வரமாட்டேன் என்று சொல்ல, ஏன் எதுக்காக என்று விசாரணையில் இறங்கினாலும் ஆபத்து; வருகிறேன்’ என்றாலும் ராசாவைப் பிரிவது எளிதல்ல என்ற நிலைமையில் அவளுக்கு எரிச்சல் வந்ததில் தவறில்லை. இந்தப் பெண்களுக்குப் பேச்சும் ஆயுதம் . மௌனமும் ஆயுதம். இந்த முறை மௌனத்தைப் பிரயோகித்தாள். வழக்கமாய் மாமி வீட்டை போறதெண்டால் துள்ளுவாளே என்று யோசித்துக் கொண்ட பண்டதர் மேலெதுவும் யோசிக்காமல் கைகழுவிக் கொண்டார். தொண்டருக்கே உண்டானது பண்டிதருக்கில்லாமல் போகுமா? சயனமானார். கமலத்திற்கு ஏதோவொரு அந்தகாரம் அவளைச் சூழவரும் போலிருந்ததில் சாப்பாடு இறங்கவில்லை. ராசாவிடம் இதுகளைச் சொல்லுவம்’ என்ற முடிவுடன், இரவு வந்து அவர் வருவதை எதிர்பார்த்தபடியே நிலைகொள்ளாமல் தவித்தாள். வாத்தியார் வீட்டு வளவின் பின்னால் பவளம் முன்னர் மாடு வளர்த்த – இப்போது காலியாயிருக்கிற கொட்டில் இந்தக் காதலர்களின் சங்கமத்தானம். வளவு இரண்டு ஒழுங்கை களை அதன் அடுத்தடுத்த இரண்டு பக்கங்ளில் கொண்டது கணேசனின் அதிர்ஷ்டம். வெகு உள்ளால் போகிற , சந்தடியே இல்லாத ஓர் ஒழுங்கைப் பக்கத்து மூலையில் முள் கம்பிக்கட்டு விட்டுப்போன இடம் ; துவாரபாலகர்கள் எவருமில்லாத துவாரம். கொட்டிலைச் சுற்றி நெருக்கமாய்ப் பனையுமிருக்கிறது; கொட்டி லுக்கு உயரமான மறைப்பும் இருக்கிறது. இதில் வளராத காதலா? வழக்கம் போலவே அன்று இரவும் வாத்தியார் நித்திரை யாகிப் போன பிறகு, அங்கே அவள் போயிருந்து அவன் வரவைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள் வெகு நேரம். காற்றின் வீச்சில் பனை ஓலைகள் உரசுவதும் விழுவதுமாயிருந்தனவே தவிர, கணேசனின் சத்தத்தைக் காணோம். என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க இயலாதவளாய்க் கனத்த மனத்துடன் வருகின்ற அழுகையை அடக்கிக்கொண்டு போய்ப் படுத்தாள். இண்டைக்கு வாறெனெண்டு சொன்னவரே’ என்ற நினைப்பைச் சுற்றிப் பல்வேறாகவும் யோசனைகள் அலைபாய்ந்தன.
அடுத்த நாள் வாத்தியார் சந்தைக்குப் போய் வரும் கட்டத் தின் பின்னர், பழைய பெட்டியொன்றைக் குடைந்து மகளின் சாதகக் குறிப்பைக் கையிலடுத்துக்கொண்டார். இந்த ஊரில் இல்லை’ என்று திரும்பவும் உறுதியெடுத்துக் கொண்டு சாதகக் குறிப்புடன் சைக்கிளில் ஏறிப் போய்விட்டார். பொடியனும் சரியாக இருக்க வேண்டும்; அவன் சாதகமும் சரியாக இருக்க வேண்டும்; பொடியனின் தகப்பன் கேட்பதுவும் சரியாக இருக்க வேண்டும் என்ற இந்த மாதிரியான யோசனைகள் வாத்தியாரிடம் நிறையவே இருந்தன.
கொஞ்ச நாட்கள் அலைந்து திரிந்து திரும்பவும் கந்த புராணப் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அவன் விட்ட வழி’ என்று ஓய்ந்தபோதும், கமலம் சுண்டு விரல் நகத்தைக் கடித்தபடி அதே யோசனையிலேயே இருந்தாள். ஏன் அவரைக் காணேல்லை?’
கோவிலுக்குப் போகிற சாட்டில் அவனைக் கமலம் தேடினாள். அங்கே இந்தப் பரமேசுவரன்தான் நின்றான். மிகுந்த சாமர்த்தியத்துடன் குறிப்புக்காட்டி அவனைத் தனியே வரப் பண்ணிக் கேட்ட போது, அவன் கணேசன் பட்டிணத்திற்குப் போய்விட்ட கதையைத் தன் சொந்த நிறுவைப் பாணியில் சரக்கைக் குறைத்துக் கதையைக் கட்டி…. அளந்துவிட்டான். கமலம் அதிர்ந்துபோனாள். அவன் – கணேசனின் – நிலவரம் அவளுக்குத் தெரியாது என்பதில்லை. இப்படி ஒரு வெற்றுக்கிறாய் ஐயா மாப்பிள்ளை தேடுகிற நேரம் எனக்குச் சொல்லாமல் போய்விட்டாரே’ என்று சொல்லிக்கொண்டாள்.
மனதை ஆற்றுகிற முயற்சியில் பரமேசுவரனுடன் பேசத் தொடங்கிச் சரித்திரம் வேறு ஒரு பாதையில் இறங்கிவிட்டது.
பண்டிதரின் அலைச்சலும் சோர்வும் அவள் மனதில் சுவடேறாதவாறு ஒரு வெற்றுக்கோடொன்று இருந்தது. பரமேசுவரன் இந்த வெறுமையை நிரப்பப் புகுந்ததிலும் ‘நிறுவைத்தனம்’ ஓங்கியிருந்தது. முதலில் அவள் கணேசனின் விலாசத்தைக் கேட்டபோது, அதை அவன் தமையனிடமிருந்து எடுத்துக் கொடுத்ததில் குறை வைக்கவில்லை. கணேசனிட மிருந்து பதில் எதுவும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதை ஏற்கனவே எதிர்பார்த்தவனாய் இப்படியான ஒரு சரித்திரம் இவளுக்கு முன்னர் இருந்ததைத் தானும் மறந்தவனாய்ப் பாவித்துக்காட்டியதில் புதுச் சரித்திரம் தோன்ற லாயிற்று. கமலத்துக்குக் கைங்கரியம் செய்வதில் இருந்த முனைப்பு – அவனின் ஒரு பக்கம். ஊர்ப் பொடியன்களிடம் கணேசன் இவ்வாறு ஓடிப்போன கதையை, “டேய் இவளடா….” என்று விரசம் சொட்டச் சொல்வதில் இருந்த புளகாங்கிதம் மற்றப் பக்கம்.
கமலத்திற்கோ வீட்டின் வெறுமை, பின்வளவின் வெறுமை இவைகளுக்குள் கணேசனின் ஞாபகம் கரையத் தொடங்க, உயிர்த்துடிப்பின் வக்கிர விதிகளுக்கடங்காமல் திரிய இயலாத ஓருணர்வினால், அவ்வுணர்வின் உந்தலால் தன் கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்துமே எதையும் கேட்காத இந்தப் பரமேசுவரனை நம்பத் தொடங்கினாள். பரமேசுவரனின் சரித்திரத்தில் இப்படியாக ஒரு பெண் இவ்வளவு நெருக்கமாகத் தன்னை நம்புகிற நிலை இருந்ததில்லை. அது வந்தபோது, அவனால் அந்த நிலையையே நம்பமுடியவில்லை. திரும்பவும் தன்னுடன் சேர்ந்த கூட்டத்திற்குக் கதைகள் சொன்னான். கமலத்திற்கு இவற்றின் தாக்கங்கள், இந்தக் காவாலிப் பெடியள் அவளைப் பார்த்து ஒருவகைச் சிரிப்புடன் குறுக்கே போனபோதே தெரிந்தது. கமலம் துருவித்துருவிக் கேட்பாள். ‘அவங்களெல்லாம் நல்ல பெடியள்’ என்பான்.
திரும்பவும் வீரவாகுதேவரைச் சூரபதுமனின் சிங்கமுகன் 88 பாசத்தால் கட்டியாயிற்று. இனிச் சண்முகர் வரவேண்டிய கட்டம். பண்டிதர் ஆவலுடன் திரும்பவும் புரட்டிக்கொண்டி ருந்தார். அவர் இரவில் நேரத்திற்கு நித்திரையாகிப்போன பிறகு நடு இரவில் பின்வளவில் கொட்டிலில் பரமேசுவரன் பிரசன்னமாகத் தொடங்கினான். பரமேசுவரனுக்கென்று நீதி நியாயங்கள், தர்மங்கள், ஒழுக்கசீலங்கள் உண்டு. பின்கதவால், தெரிந்த நண்பனுக்கும் விசேஷமாய்ச் சீனி ‘ஒரு இறாத்தல்’ என்று கொடுக்கும் போது நம்பிக்கொண்டு போகிறவர்களைப் பார்த்தே உலகமிதுதான் என்று தீர்மானித்துக் கொள்ளுவான். அவன் பெண்களை நடத்துகிற பாங்கு விசேஷமானது. இன்ன மாதிரிப் போவார்கள் என்பது ப்ராய்ட், எல்லிஸ், அட்லர், ஜங், ப்றில் ஈறாகச் சகல மனோதத்துவப் பண்டிதர்களை விடவும் நிச்சயத்துடன் அவனுக்குத் தெரியும் என்று சொல்வதைவிட, அவன் வழிக்கு அவர்களைக் கொண்டுவரத் தெரியும் என்பதுதான் உண்மைபோலத் தெரிகிறது. எதிலும் சர்வநிச்சயத்துடன் திரிகிற ஓர் ஆசாமி அவன். ஊர்ப் பொடியன்களிடையே இந்தப் புகை நன்றாகப் பரவி, பண்டிதர் தோழர் கதிர்காமத்தம்பியின் காதுக்கு எட்டி, அவர் பண்டிதர் காதில் கதையைக் கமலத்தின் கற்பைக் காப்பாற்றி ஒருவிதமாகப் போட்டபோது, பண்டிதர் வள்ளியம்மை திருமணப் படலத்தில் நின்றுகொண்டிருந்தார். வயசுப்பிள்ளை’ என்று தொடங்கித் தங்கச்சியுடன் கொஞ்ச நாளைக்கு நிண்டிட்டு வரட்டன் என்று அவர் காதில் போட்டார், கதிர்காமத்தம்பி. பதவிசாக அந்த ஊரில் – பண்டிதரின் தங்கை யின் ஊரில் – புதிதாக வந்திருக்கிற இளம் வாத்தியாரைப் பற்றி ஒரு கோடிட்டுக்காட்டியதில் பண்டிதரின் மனதில் திருமணப் படலப் பாட்டுகள் ஒன்றொன்றாய் மனதில் வரத் தொடங்கின. ஒருநாள் பண்டிதர் கமலத்துடன் புறப்பட்டுப் போய்விட்டார், தங்கையிடம். பரமேசுவரனின் உற்சாகம் அவள் போன பிறகும் குறையவில்லை .
கமலம் நிலைகொள்ளாமல், பற்பல யோசனைகளுடன் ஊருக்குத் திரும்பி வந்தபோது, அவனுக்குத் தன் யோசனையில் நூறிலொரு பங்குதானும் இல்லையென்பதைக் கண்டு கொண் டது ஒருவகை அதிர்ச்சி சிசுருட்சையாய் முடிந்தது. கணேசனின் உள்ளும் புறமும் அவளுக்குத் தெரிந்திருந்தது. இந்தப் பரமேசு வரனைத்தான் பொதுவில் மட்டுக்கட்ட இயலாமல் இருக்கிறது. பரமேசுவரன் என்ன, கணேசன் என்ன எவனாக இருந்தாலும் ஓரம்சம் மாத்திரம் அவளுக்கு நிச்சயமாகப் புரிந்தது. இந்தப் புரிகிற விஷயம் மனதில் பாதி, ரத்தத்தில் பாதியாய் ஓடுகிறது. சிலவேளைகளில் மனதிற்கு எந்தவித கட்டுப்பாடுமில்லை. இந்தப் பெடியன்களின் மனதில் ஓடுகிற ஓட்டங்களில் இது மாத்திரம் நிச்சயத்துடன் கமலத்திற்குத் தெரிந்துவிடும். ஊர்ப் பெடியன் களின் கனைப்புகளையும் நெளிப்புகளையும் நிமிர்ந்து பார்க்கும் ஒரு துணிவு வர, இதுவே அவர்களின் உற்சாகத்திற்கும் அவளைப் பற்றிய மேலும் வக்கிரமான கதைகளுக்கும் ஆதாரமாக அமைந்து போய் …. கதிர்காமத்தம்பியின் காதுகளில் இந்தக் கதைகள் எட்டுகிறபோது, அவை நிச்சயம் பத்து மடங்காவது பெருத் திருக்கும். அவர் வாத்தியாரிடம் பல்வேறாகவும் முறைப்பாடு போட்டதில் வாத்தியார் தன் ஊருலாவைக் குறைத்துக் கெடு பிடியைக் கூட்டிக்கொள்ளக் கமலம் மூடிவைத்த கேத்திலாகிப் போனாள். பரமேசுவரனை மறந்தே போனாள்.
இப்போது அவளைப் பற்றிக் கதைகள் மட்டுமே உலாவுகின்றன.
வாத்தியார் அந்தப் புதிதாய் வந்திருக்கிற இளம் வாத்தி யாரை நெருக்கிப் பார்த்தபோது, இந்தக் கதைகள் அவன் காதுகட்கும் எட்டியிருந்தன. கண்ணகியின் பேத்தியொருத்தி தான் அவனுக்குத் தேவை; மாதவியொருத்தியிடம் தான் போனாலும், இவள் சொல்ல ஒரு நகரமே எரிய வேண்டும். ‘வேண்டாம் இவள்’ என்று திருப்பிவிட்டான். வாத்தியாருக்கு வீரவாகுதேவரைப் பானுகோபனும் சிங்கமுகனும் மாய அஸ் திரங்களால் கட்டிப்போட்டுவிட்ட படலங்கள் மனத்தில் ஓடின. இனி சேவல்தான் வரவேண்டும்.
மெத்தவும் திறமான ஒரு காலைப்பொழுதில் வாத்தியார் வீட்டிற்குக் காரொன்றில் இரண்டு அறிவாளிகள் வந்து சேர்ந் தார்கள். ஊர் பிறகொருநாள் சலசல முதல் நிகழ்வாய்… வாத்தியார் தலையைக் குனிந்து கண்ணாடியின் இடுக்கால் நெற்றிப் புருவத்தை உயர்த்திப் பார்த்தார். கமலம் சமையலறை யின் சன்னலால் பார்த்தாள். அவர்களில் வயது போனவர் பல்கலைக்கழகத்துச் சரித்திரப் பேராசிரியராம். மற்ற இள வயதுக்காரர் அவர் மாணவராம். இந்த ஊரின் புராதன சரித்திரத்தை ஆராயப் புகுந்ததில், ஊர் அம்மன் கோவிலின் சாசனங்களையும், அக்கோவில் பாடல்களையும் முதலில் கிண்டுவது கட்டாயமென்று தெரிந்து, இதற்கு உதவியாய்யாரோ சொல்லி வாத்தியாரிடம் வந்து சேர்ந்திருக்கிறார்கள். எல்லா ஊர்களுமே சூரபத்மனின் வீரமாகேந்திரங்கள் தான்’ என்று நினைத்துக்கொண்டாலும், வாழ்க்கை சாபல்யமடைந்துபோன தொரு உணர்வுடன் துள்ளியெழுந்தார் பண்டிதர். கமலம் சமையலறையின் கதவில் சரிந்து நின்றுகொண்டு அந்த மாணவரைப் பார்த்தாள். அவ்வாறு எங்கிருந்தோ வந்த இவர்களுக்குத்தான் ஊரின் சரித்திரம் ஓரளவிற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என்று வியந்து கொண்டார் பண்டிதர். கமலத்தைக் கொண்டுவித்து சிரமபரிகார பானங்கள் கொடுத்தார். கமலம் திரும்பவும் மாணவரைப் பார்த்துக்கொண்டாள். மூவருமாகப் பேராசிரியரின் காரில் ஏறிக்கொண்டார்கள். கோவிலுக்குப் போவதற்காகப் பண்டிதர் கமலத்தைப் பார்த்த விதத்தில் இவர்களுடன் மத்தியானம் உணவிற்கு வருவார் என்பது அவளுக்குப் புரிந்தது. மத்தியானம் அவர்கள் திரும்பிய போது, அவர்கள் உணவிற்கு அமர வேண்டியதாயிற்று. பேராசிரி யர் எந்தவொரு பிணக்கு நியாயமும் சொல்லாமல் அமர்ந்து கொண்டார். பேராசிரியர் அன்றே போய்விட, மாணவர் இந்த ஊரில் ஒரு மாதம் போல் தங்கியிருந்து இந்த ஆராய்ச்சி களைத் தொடரப்போவதாக இருந்தது. முறுக்கான உடை; கண்ணாடிகளுக்குப் பின்னால் அமைதியான விழிகள்; புன் முறுவல்; இடையிடையே கேள்விகள்; இந்த லக்ஷணங்களைக் கமலம் பார்த்துக் கிரகித்துக்கொண்டாள். அவர் இந்த ஊரில் தங்க வேண்டியதற்குரிய வசதிகளைச் செய்து தருகிறேன் என்று பண்டிதர் வாக்குக் கொடுத்தார். மகாவித்தியாலயத்து குவாட்டர்ஸ்’ ஒன்றில் தனியே இருக்கிற ஓராசிரியருடன் சேர்த்துத் தனி அறை; அங்கே பக்கத்து வீட்டிலிருந்து சாப்பாடு இத்தியாதி சொகுசுகளுடன் ஒழுங்குபடுத்தலாம் என்று அபயம் கொடுத்தார்.
குணசேகரம் – அந்த மாணவர் – ஒருநாளதுவரை, சரித்திர ஆராய்ச்சிக்குள்ளே இருந்து, மூளையால் மட்டுமே சீவித்துக் கொண்டிருந்த மனிதத் தோற்றம் கொண்ட ஒரு பிராணி. மன்னன், கல்வெட்டு, குளம், சாசனம், கி.மு., கி.பி., நூற்றாண்டு இவைகளோடு சாதாரண மனித இயக்கங்கள், ரசாபாசங்கள் பின்னி நெளிகிறதை , ஒரு பெண்ணின் கூர்மைக் குறுக்குப் புத்தியுடன், ஒற்றைப் போக்காய்க் குடைந்து கல்விமான்களின் பின்னல்மொழியில் எழுதப் புறப்பட்ட ஒரு சீவன். வாழ்க்கை யின் மற்ற அம்சங்கள் அதுவரையில் தெரியாதது, அவர் கல்வி மேம்பாட்டுக்குக் காரணம். என்ன இருந்தாலும் தன் மேன்மையைச் சக சரித்திர ஆசிரியர்களன்றி வேறெவருக் காவது உணர்த்த விழையாததொரு பாங்கு இருப்பதில் ஒரு தனிப்பட்ட அறிவாளியே. அவனுடைய முந்திய சரித்திரத் தால் வாழ்க்கையின் சிறுசிறு அம்சங்கள் அவனுக்குத் தெரியாதெனினும், இன்ன மாதிரியானதொரு பிரச்சினை இன்னதில் இருக்கின்றது என்றவுடன், அதற்குத் தீர்வு காணும் தெளிவு அவனிடம் உண்டு. தீர்வு சிலவேளைகளில் சுயநலம் மிக்கதாயிருப்பதும் தெரியாத சூழலில் வளர்ந்தவன். சமயம், அரசியல் இவைகளைப் பற்றிப் பத்திரிகை மதிப்பீடுகளை ஒரு நிலைவரை அவற்றின் சாதாரணத் தன்மையைச் சந்தேகிக் காமல் மனதில் சுவடேற்றிக்கொள்வதாலும், அவற்றைப் பற்றி சொந்தக் கருத்துக்கள் கொண்டிராததிலும் அவன் ஒரு சாதாரண மனிதனே. மனித உணர்வுகளைப் பற்றி இருந்து சிந்திப்பதற்கு அவன் வாழ்க்கையில் இதுவரைக்கும் ஒரு நெருக்கடியாவது இருந்ததில்லை. இருந்தாலும், அவன் நிச்சயமாக வேறொரு தளத்தில் வாழ்கிற சீவன்தான்.
அவன் இந்த ஊருக்கு வந்தது முதற்கொண்டு புதிது புதிதாகச் சில சம்பவங்கள் அவன் மனதில் பட்டுத் தெறித்தன. அவன் தங்கியிருக்க நேர்ந்தது ஓராசிரியருடன். தன் மனை வியை, அவள் ஊரில் முதல் பிரசவத்திற்காய்க் கொண்டு போய் விட்டுவிட்டுத் தற்காலிகமாகத் தனியாக இருக்கிற தருமலிங்கம் என்கிற அந்த ஆசிரியர், இந்த ஆராய்ச்சியாள ரைத் தன்னுடன் வைத்திருந்தால் அறிவு சேர்க்கலாம் என்கிற சுத்தமான ஆசையுடன் தன் வீட்டில் இடம் கொடுத்திருந்தார். பவ்யமான சீடனொருவன் பண்புடன் அவனுடைய எல்லா வேலைகளையும் செய்வதைப் பார்த்தவுடன் அவனுக்கு மனம் நெகிழ்ந்து போகும். காலையில் மகாவித்தியாலயத்துக்குப் போகும் வரையிலும் எல்லா உதவிகளையும் செய்து, ஆறுமுக வாத்தியாரிடம் அவனை அனுப்பிவிடுவார். ஆறுமுக வாத்தி யார், “தம்பீ வாருங்கோ ….” என்று அழைப்பு விடுத்தவுடன், கமலம் கதவு இடுக்கால் எட்டிப் பார்ப்பாள். இருவருமாய் அவர்கள் வெளியே போவதைப் பார்க்கும் போது ஒருவகை யான சோகமே அவள் மனதில் படரும்.
ஒன்றரை, இரண்டு மணிக்குப் பண்டிதர் தனியே வந்து சாப்பாட்டை முடித்துக்கொண்டு பழைய சுவடிக்கட்டுகளைக் குடைந்து எடுத்துக்கொண்டு ஒரு பாயில் உட்காருவார். குணசேகரம் ஒரு ‘பைல்’ கட்டு, பென்சில் இத்தியாதி சகிதம் சரியாக இரண்டரைக்கு வந்து காற்சட்டை இறுக்க இறுக்கப் பாயில் குந்துவான். பழைய பாட்டுகளும் விளக்கங்களுமாய்ப் பொழுது போவதும் தெரியாது. குணசேகரம் குறிப்பெடுத்துக் கொள்ளுவான். இப்படியானதொரு சூழலில் கமலத்தின் குறுக்கும் நெடுக்குமான ஓட்டங்கள் கொஞ்ச நாட்களுக்குப் பின்னரேதான் ஈர்த்தன. கண்ணாடிகளுக்கூடாகத் தலையை நிமிர்த்தி அவளைப் பார்ப்பான்.
அவனுக்கு இது மாதிரியான அனுபவங்கள் மிகக் குறைவு. அவனுடைய பல்கலைக்கழக வாழ்வில் அவனுடைய பிரகாசத்தை உணர்ந்து, மதித்து சகபாடிகள் அவனை ஒதுக்கியதில் இந்த அம்சங்களின் பற்பல கூறுகள் விளக்கமாய்த் தெரியாமல் போயிற்று. இதனால், அனுபவம் எதிர்நோக்குகிறபோது சமாளிக்கத் தெரியாமல் போய்விடுமா? அனுபவங்கள் எந்த மாதிரியாகவும் வரக்கூடும். வாத்தியார், ஊர்ப் பெரியவனொருவன் மெத்த அவசரம்’ என்று கூப்பிட்டதன் பேரில், ஒரு மாலை குணசேகரத் தையும் சுவடிக்கட்டுகளையும் கமலத்தையும் தனியே விட்டு விட்டுப் போய்விட்டார். கமலம் அந்தக் கதவிடுக்கால், இந்தத் தனிமையில் அவன் என்ன செய்கிறான் என்று அவளுக்கு இப்போது இருக்கிற அழுத்தலுடன், ஒரு குறுகுறுப்புடன் அவனைப் பார்த்தாள். சுவடிக்கட்டுகளை நெருக்கிக் கண்ணருகே பிடித்துக் குறிப்பெடுப்பதுவும் எழுதுவதுமாக இருந்த அவன், இப்படியானதொரு சூழல் இருக்கிறதென்பதை அறியாதவனாக, மறந்தவனாக வாத்தியார் திரும்பி வரும் வரைக்கும் இருந்த பாங்கு கமலத்திற்குப் புதியது. நரைமயிர், வாத்தியாருக்கு மனிதரை மட்டுக்கட்டும் சக்தியைத் தந்திருக்கிறது. இதில் பிழை நடக்க இடமில்லை. வந்து, எந்தவொரு சலனமுமில்லாமல் சுவடிக்கட்டுகளுடன் திரும்பவும் சங்கமித்து விளக்கங்களைச் சொல்லிக்கொண்டு போன பொழுதின் நடுவிலேதான், கமலத்தால் திரும்பவும் குறுக்கும் நெடுக்குமாக உலாவ முடிந்தது. வழக்க மாய் அவள், அவர்களிருவருக்குமாய்த் தருகின்ற பாலைக் கொண்டுவந்து அவனைப் பார்த்த கணத்தில், அவனும் அவளைப் பார்த்த கணத்தில் அவன் ஒரு புதிய அனுபவத்திற்குள்ளான வனானான். வாத்தியார் இந்தக் கணத்தில் சுவடிக்கட்டுடன் மிகவே ஆழ்ந்திருந்ததில் இந்த மின்னல்வீச்சுத் தெரியாமல் போய்விட்டது. ஒவ்வொரு மாலையும் போலவே, வாத்தியார் வீட்டிலிருந்து திரும்பிய பின்னர் தருமலிங்க மாஸ்டருடன் ஒரு மணிப் பேச்சில் சரித்திர நுணுக்கங்களை விளக்கிய பிறகு, இரவு 92 உணவு கொண்டபின்னர், அன்று பொதுவிஷயங்களில் இறங்க….
பள்ளிக்கூடப் பிள்ளைகளில் தொடங்கிக் கதையை வளர்த் துக்கொண்டுபோன தருமலிங்க மாஸ்டரை இடைவெட்டி , “இந்த வாத்தியாரின் மகள் இங்கே, இந்த மகாவித்தியாலயத்தில் தான் படித்தவளோ?” என்று குணசேகரம் ஒரு கேள்வியைக் கேட்டான். தருமலிங்க மாஸ்டர், பல யோசனைகளுடன் சிரித்துக்கொண்டார். “உம்…. உம் இங்கைதான் படிச்சவள்.” தருமலிங்க மாஸ்டர் குரலைக் குறைத்துக்கொண்டு ஒருகண யோசனைக்குப் பிறகு, சூழ்ந்த அமைதியை முறித்து, “அவள்…. அவள் ஒருமாதிரி” என்றார். குணசேகரத்துக்கு எரிச்சலாகவும் இருந்தது. “ஒருமாதிரியென்றால்…?”
“இல்லை தெரியாதே? பலவிதமான கதைகளும்.” மாஸ்டர் சுருங்கத் தொடங்கினார்.
“சொல்லுங்கோ ….” என்று குணசேகரம் வலியுறுத்த, மாஸ் டர் தொடங்கினார்.
“இது அவளுக்கு முதல்ல ஒரு பெடியன் இருந்தவன். பிறகு….” என்று பராபரியாய்த் தான் கேள்விப்பட்டது அவ்வள வையும் கொட்டினார். மாஸ்டரின் கதையில் அவளின் கற்புத் தேய்ந்து, உருக்குலைந்து மாறியே போய்விட்டது. அவள் தன்னைப் பார்த்ததை மனதில் மீட்டுக்கொண்டான். திரும்பவும் அவள் உருவமே மனதில் எழுந்தது. மாஸ்டரின் கதை முடிந்து
குணசேகரம் குறிப்புகள் எழுதப் போய்விட்டான். என்றாலும், இந்தத் தனிமனிதச் சரித்திரத்தில் உண்மை விகிதம் எவ்வளவு, இதில் பொதுப்படையாக அமைந்த விசைகளும் விளைவுகளும் எவை, மனித அளவுகோல்களின் பிரகாரம் இவள் நிலையென்ன என்பது மாதிரியான கேள்விகள் உருவகமில்லாத முறையில் அவன் மனதில் எழுந்தபடியால், அவன் இயற்கையாகவே ஒரு கல்விமான் என்பது நிரூபணமாகிவிடுகிறது என்பது அரை உண்மை . இதில், அவளுடைய ஈர்ப்புக்கும் அவளைத் தன்னோடு இசைவித்துப் பார்க்கும் ஒரு மனநிலை அவனைப் பிடித்துக் கொண்டது என்பது மற்ற அரை. அதனால், அன்று குறிப்புகள் எழுதக் கஷ்டமாக இருந்தது. அவள் மேல் பரிதாபம் எழுந்த நிலையில் அதைக் காரணப்படுத்த முயற்சித்தான். பிறகு நித்திரை வந்துவிட்டது.
இந்த விசாரணையின் தாக்கத்தில் அடுத்த நாள் அவன் கமலத்தைப் பார்க்க நேர்ந்தபோது, இவள் ஒருமாதிரி ‘ என்பது மனப்பரப்பில் அலைகளாய் உருவகித்து அசையத் தொடங்கியது. இந்த வன்னி அரசர்களும் கோயிலும் குளமும் ஆறுமுக வாத்தி யாரின் சுவடிகளும் தேய, ஓங்கி இவள் நினைவு அவனுள் எழுந்து தகித்தது. கமலம் வழக்கம்போலப் பால் கொண்டு வந்தபோது அவன் அவளைப் பார்ப்பதை வாத்தியார் கண்டார். ஒரு தப்பிதச் சூழல் கவிந்து போனதை அவர் உணர்ந்து சிலிர்த்துக் கெண்டார். அவருக்கும் சுயநினைவோட்டங்கள் இடறிப்போய் விட்டன. “இந்தச் சிறுபிள்ளை , கதிர்காமத்தம்பி சொன்னது போல்….இவன் இந்தப் பெடியன் இந்த மாதிரிச் சிக்கல்களில் இறங்காதவனென்றாலும்…இவன் நிலையென்ன? அந்தஸ்து என்ன?” என்று லயமில்லாமல் அவர் மனதில் கூச்சல். “முருகா” என்றார் பெலத்து.
குணசேகரம் விழித்துக்கொண்டான்.
கமலத்திற்கு இப்போ சூழல்களின் படங்கள் மன ஆழத்திற் குப் போவதில்லை. இதனால் தான் கணேசனென்ன, பரமேசுவர னென்ன… ஏன் இந்த அறிவாளி குணசேகரமென்ன… எல்லோ ருடைய இயக்கங்களும் மனமேற்பரப்பில் பட்டுத் தெறித்துப் போய்விட உயிரியல் விதிகளே அவளைக் கட்டி, இழுத்து இயக்குகின்றன. இவன் – இந்த அறிவாளி – தன்னைப் பார்ப் பதைவிட, இது முழுவதும் தன் ஐயாவிற்குத் தெரிகிறது என்பதை அவள் உணர்ந்துகொண்டு வேகமாய்ப் போய்விட்டாள் உள்ளே. பிறகு பாட்டுகளும் விளக்கங்களும் மந்தகதியில்…. குவாட்டர்சுக் குப் போகிற வழியில் ஏதோ நினைவாகக் ‘கமலம்’ என்று சொல்லிக்கொண்டான். போய்த் தருமலிங்க மாஸ்டருடன் சம்பாஷிக்கத் தொடங்கியதில் நேரம் கழிந்தது. மாஸ்டர் முதலில் சாதாரண சரித்திரக் கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற்றுக்கொண்டபின்னர் தன் நெடுநாள் யோசனையான “சரித்திரம் படிப்பிக்கிறதால் என்ன நன்மை?” என்பதை ஓர் எதிர்ப் பதிலை எதிர்பார்த்துக் கேட்டார். குணசேகரம் மோவா யைத் தடவிக்கொண்டான். தன் பிராந்தியத்தைச் சாராத கேள்வி மாதிரியாகவுமிருந்தது. ஒரு விரிவுரைப் பாவனையுடன் தொடங்கினான்.
“சரித்திரம் என்பது எந்த அமைப்பாய் இருந்தால் என்ன, தனிமனிதனைச் சார்ந்தே இருந்துவந்திருக்குது. ஆளுறதும் தனி மனிதன்தான். ஆளப்படுகிறதும் தனி மனிதன்தான். ஆளு கிற தனிமனிதன், தன் தனித்துவத்தைப் பாசாங்கு செய்யக் கூடிய – அதாவது, நாங்களெல்லோரும் சேர்ந்தே அலுவல்களைச் செய்யுறோம் எண்டு நாடகமாடக்கூடிய அமைப்பை ஜன நாயகம் எண்டு சொல்லுவம். அதேநேரத்தில் ஜனநாயகத்தில் ஆளப்படுகிறவனும் இந்தப் பாசாங்கை நம்பக்கூடிய நிலை யிலும், தன்ர தனித்துவத்தை மறந்த நிலையிலும் இருப்பான். இந்த மாதிரியான பாசாங்குகள் இல்லாத அமைப்புகளை ஜனநாயகமற்ற அமைப்புகள் எண்டு சொல்லுவம். உப்பிடிப் பார்த்தால், சரித்திரம் எப்பிடி, எந்த மாதிரியான சூழலில் சில தனிமனிசர்களும், தங்கட தனித்துவத்தை ஏதோ ஒருவகை யில் இழந்துபோன மனிதக்கூட்டங்களும் இயங்கியிருக்கிறார் கள் என்பதை நேரத் தொடர்ச்சியோட விளக்குகிற விஞ்ஞா னம் எண்டலாம். இதில் சில பொதுப்பாடுகள் இருக்குமெண் டால், அதுகளைக் கொண்டு எங்கட எதிர்காலத்தைத் தீர் மானிக்கலாம். இல்லியே? ‘சூழல்’ எண்டு சொல்லிறமே, அது வந்து ஒரு தொய்வான பெளதிக உயிரியல் கூட்டுநிலை. மனிசனை அது மாத்தும். மனிசனும் அதை மாத்துவான். இந்த இயக்கத்தின்ர தர்க்கங்கள் என்ன மாதிரிப் பேணப்பட்டு வந்திருக்குது எண்டு அறிஞ்சால் எங்கட எதிர்கால நிலைகளில் இதுகளைப் பிரயோகிக்கலாம். இல்லியே? ஏன்? நான் ஆராய எடுத்திருக்கிற 94 இந்த வன்னி அரசர்களின்ர சரித்திரம் இருக்குதே, இதில் இந்த அரசன் வெள்ளையர்களோட என்ன மாதிரிப் போராடு கிறான், எப்பிடிச் சிலவேளைகளில் அவர்களோட ஒத்துப் போகிறான், உதவுகிறான் எண்டு விபரிக்கிறபோது, என்னென்ன மனநிலைகள் எந்த எந்தச் சூழல்ல மேவுது எண்டதைக் காணலாம்….” தருமலிங்க மாஸ்டர் எதையோ எதிர்பார்த்து இந்தச் சிக்கலில் விழுந்து போனார். ‘… எண்டால் சரிபிழை இதுகளை எந்த மாதிரிக் கண்டுபிடிப்பியள்” “சரிபிழையெல்லாம் மனித மனவெளியில் மேவுகிற நிலைகளான படியினால், அவை ஒரு வசதியைப் பற்றியேதான் இருக்கும். வசதி தனக்காகவு மிருக்கலாம். இல்லாட்டித் தன்னோட சேர்ந்தவர்களுக்காயும் இருக்கலாம். அதுக்கள் நீங்கள் நினைக்கிற மாதிரி சொர்க்கத் திலிருந்து எறியப்பட்ட விதிகளல்ல.”
“சரிபிழை உதுகளில்லையெண்டால் உங்கட சரித்திர ஆய்வுகளினால் என்ன பிரயோசனம்?” மாஸ்டர் திரும்பவும் ஆரம்பப்புள்ளிக்கு வந்து சேர்ந்தார். “அதுதான் சொல்லுறனே. இது ஒரு விபரிப்பு விஞ்ஞானம் எண்டு . சரி – பிழை இவைய ளெல்லாம் மனநிலைகளானபடியால் வெவ்வேறு சூழல்களில் இவை எவ்வாறு மேவுகின்றன என்பதைச் சரித்திரம் காட் டும்.” – தீர்க்கமாய்ச் சொன்னான் குணசேகரம். தருமலிங்க மாஸ்டருக்கு மனம் திருப்திப்படவில்லை. “நீங்கள் சொல்லுற மாதிரியில் கண்ணகி – கோவலன் எண்டு மனுசி – மனிசன் இருந்தினம். கோவலன் மாதவியெண்டவளிட்டை போய்த் தன்ர பணமெல்லாத்தையும் குடுத்துப்போட்டுத் திரும்பிவர, அவன்ர நினைவாய்க் கற்போட இருந்த, இந்தக் கண்ணகி தன்ர காற்சிலம்பைக் குடுத்து, “வாருங்கோ இதை வைச்சுப் பிழைப்பம்” எண்டு மதுரைக்குப் போக , பாண்டியன் அவ னைக் கள்ளன் எண்டு பிடிச்சுக்கொண்டு போய்விட்டான். கடைசியாய்க் கண்ணகி ஆத்திரத்தில் பாண்டியனிட்ட விளக் கம் கேட்டுத் தன்ர கற்புத்தீயால மதுரையை எரிச்சாள் அவ்வளவுதான் – எண்டு முடிக்கிறதுதான் சரித்திரமெண்டால், அதில் என்ன இருக்கமுடியும்?” மாஸ்டருக்கு ஆவேசமும் வேறு வந்துவிட்டது. குணசேகரத்துக்கு மாஸ்டருடைய பிரச்சினை இப்போ விளங்குவதுபோல இருந்தது. “நீங்கள் கேட்கிறதில் ஒரு போக்கில் நியாயமிருக்குது தான். சரித்திர ஆசிரியர்களே பொதுவாகச் ‘சரி’, ‘பிழை’ எண்டவை வசதிகளைச் சுற்றி எழுப்பப்பட்டவை எண்டு எனக்குத் தெரிஞ்சாலும், என்ர ஆய்வில் ஓரளவு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிற சரி’, ‘பிழை ‘ கோட்பாடுகள் புகுந்துவிடும். இதுக்களைக் களைய வேண்டும். எனக்குத் தெரியிறபடியால் அதுகளைச் சொன்னேன். நீங்கள் சொல்லுகிற மாதிரி வெறுமே விபரித்துப்போட்டு இதில் என்ன இருக்குது எண்டு கேட்டால் ‘சரி’, ‘பிழை’ எண்ட இந்த மனிதக் கோட்பாடுகளுக்கு அப்பால் ஏதாவது பொது இயக்கம் இருக்குதா எண்டு பாக்க வேண்டிய கட்டாயம் இருக்குது எண்டுதான் சொல்லுவேன்” என்று நிறுத்தினான். மாஸ்டருக்கு இன்னும் கேள்விகள் மனத்தில் உதித்தாலும், “சரி, சாப்பிடப் போவோம்” என்று எழுந்தார். திரும்பவும் குணசேகரத்திற்குக் கமலத்தின் யோசனை வந்துவிட்டது.
“இந்தக் கமலத்தின்ர கதையையே எடுங்கள். அவளுக்குப் பல பெடியன்கள் இருந்தவங்களா , அவர்களுடைய தாக்கம் என்ன? எண்டு பொதுவாக உங்கட சரி’, பிழை நியாயங்களை விட்டுட்டுப் பாருங்கள், பாப்பம்” என்றான். மாஸ்டருக்கு இந்த நியாயங்கள் பிடிக்கவேயில்லை. அப்படியென்றால் எல்லார் செய்யிறதும் சரிதானே?”
“சரியெண்டு நான் சொல்ல வரேல்லையே.”
“அப்ப பிழையெண்டு சொல்லுறியளோ?”
“சரியும் பிழையும் ஒண்டுக்கொண்டு எதிரானவையெண்டு வடிவாய்த் தெரியுமா?”
“உப்பிடிப் பாத்தால் உலகில் ஒண்டுமில்லை.” மாஸ்டர் தீர்க்கமாகச் சொன்னார்.
“அப்படியில்லை . உணர்ந்து அறிவுபூர்வமாய், உள்ள உலக அறிவிலிருந்து எழுப்பப்படுகிற கோட்பாடுகள் சாத்தியமானவை. முதலில் இந்த சுயபார்வைக் கோணல்களை நிமித்திக்கொள்ள வேணும். அதுக்கு அப்பால் ஏதாவது தெரிகிறதா எண்டு பார்ப்பம்.”
மாஸ்டருக்கு யோசனை வந்துவிட்டது. பிறகு படுக்கப் போய்விட்டார்கள். குணசேகரம் பேராசிரியரிடம் எழுதி நீடிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று யோசித்துக் கொண்டான். பிறகு கமலம்.
ஒரு சந்தர்ப்பம் அவனுக்குக் கைகூடியது; ஏட்டுச்சுவடி களில் ஒரு கால்மனம், வாத்தியாரின் பாட்டில் இன்னொரு கால்மனம், மீதி அரைமனம் முழுமுற்றாய் அவள் நினைவாய் வருந்தத் தொடங்கிப் பழக்கப்பட்டுப்போன நிலையில், அவளோடு ஓரளவு சம்பாஷிக்கத் தொடங்கிய நிலையில் ஒரு சரித்திரத் தொடர்ச்சியோடுதான்… ஏட்டுச்சுவடி விளக்கத்தின் நடுவில் யாரோ கூப்பிட வாத்தியார் போய்விட்டார். வாத்தியார் போன வீச்சில் அரைமனம் முழுமனமாய்ப் போயிற்று. எழுந்து கொண்டான். அடுக்களைப் பக்கமாகப் போய்க் கமலம்’ என்றதில், கமலம் திகைப்பையும் புறக்கணித்தபடி பரபரப்புடன் நின்றது அவனுக்குத் தெரியவில்லை. “தண்ணி கொஞ்சம் தாறீங்களா?” என்று அவன் கேட்க, அவளுக்குச் சிரிப்பு வேறு வரத்தொடங்கியது. அவள் கொண்டுவர, அவள் கையைப் பிடித்துக்கொண்டான். தண்ணீரை வாங்கி மற்றக் கையால் ஒரு தொலைவில் வைத்துவிட்டு அவளை அணைத்துக்கொண் டான். ஒரு மின்னல் பொழுதில் அவள் இதை எதிர்பார்த் திருந்தாள். தன்னை விலக்கிக்கொள்ள முயற்சிப்பவள் போல் செய்த பாவனை, அவன் தொடங்கிய முத்தமாரியில் ஓடியே போய்விட்டது. கொஞ்ச நேரந்தான். “ஐயா வந்திடுவார்” என்று முனகியதற்கும் அவன் அவளைத் தன் பிடியிலிருந்து விடுவித்த தற்கும் இந்த தாமதக் கணம் சுவையாகவே இருந்தது.
“தண்ணியைக் குடியுங்கோ” என்று அவள் சொல்லிக் 96 கொடுக்க, அவன் “மடக்குமடக்” கென்று குடித்த வேகம் அவளுக்குச் சிரிப்பைத் தந்தது. “இன்னும் தரட்டா?” என்று தாமதித்து அவனை ஊடுருவிப் பார்த்ததில் திரும்பவும் ஒரு முறை இந்தக் காட்சி நடந்தேறியது. இந்தமுறை ஒழுங்கை யில் யாரோ வரும் மாதிரியாய்க் கேட்ட சத்தம் இதை நிற்பாட்டி விட்டது. ஒரு பூனைபோல வேகமாய் நடந்து பாயில் வந்து உட்கார்ந்து கொண்டான். அது ஒருத்தருமில்லை.
“இது என்ன படிக்கிறீங்கள்?” என்று கேட்டாள்.
“உம்மைப் பற்றித்தான் …” என்று தொடங்கினான் அவன். வழக்கமாய் இந்த மாதிரியான இடக்கான மறுமொழிகள் விரிவுரைகளுக்கு நடுவில் கூட சொல்வதில்லை.
“சொன்னால் விளங்காதா?” என்று அவள் திரும்பிக் கேட்டது அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. அறிவு என்று சொல்கிற பலமில்லாத பலம் தன்னை மற்றவரிலிருந்து உயர்த்த முடியாது என்பதாக உணர்ந்தவனானபடியால், இப்படி இடக்கான மறுமொழியைச் சொன்னதற்காய் வருந்திக் கொண்டான். பிறகு சொன்னான். அவள் ஆறுதலாய்க் கேட்டுக் கொண்டாள்.
இந்த அத்தியாயம் – அவன் வாழ்வில் மெத்தவும் புதிது – இப்படியாய்த் தொடங்கிவிட்டது. பிறகு, வாத்தியார் வந்து சுவடிக்கட்டுகளுடன் ஒன்றித்துத் தன் விளக்கங்களைக் கூற, என்றுமில்லாத திருநாளாய் அவன் அவற்றைக் கவனிக்காமல் இருந்ததை அவர் கவனிக்கவில்லை.
அன்று பின்னேரம் தன் அறைக்குப் போயிருந்து தன் தங்கியிருத்தலுக்கான நீடிப்பிற்குப் பேராசிரியருக்குக் கடிதம் எழுதி முடித்துவிட்டு, அதை அன்றே போட்டுவிடுவோம் என்று யோசித்துப் புறப்படும் போது, ஒரு பொடியன் கையில் ‘ரின்’கள் – பால்மா ரின்கள் – சகிதம் “தருமலிங்க மாஸ்டர் நிற்கிறாரோ?” என்று விசாரித்துக்கொண்டு வந்து நின்றான். “இல்லை. எங்கேயோ போயிட்டார். கொஞ்ச நேரத்தில் வருவார் எண்டு நினைக்கிறன். என்ன வேணும்?” “இதுகளை அவரிட்டக் குடுக்கிறியளா? பரமேசுவரன் தந்ததெண்டு சொல்லுங்கோ.” பால் ரின்களைக் கொடுத்தான்.
“ஓ…. இவன்தான் அந்தப் பரமேசுவரனோ ?” என்று குணசேகரம் நினைத்துக் கொண்டான் கொஞ்சத் தூரம் இதற் கிடையில் திரும்பிப் போய்விட்ட பரமேசுவரனை, “தம்பி” என்று அழைத்தான். பரமேசுவரன் திரும்பினான். அப்போதும் குணசேகரம் யோசனைகளிலிருந்து முற்றாக விடுபடவில்லை. பரமேசுவரன், “என்ன?” என்று கேட்டபோதுதான், நினை வோட்டங்களிலிருந்து விடுபட்டு, இவனை என்ன கேட்பது? என்கிற யோசனையுடன், ஒரு தயக்கத்துடன் இழுத்தான். “ஆறுதலாய் ஒருநாள் வாறீரா? கொஞ்சம் கதைப்பம்.”
“அதுக்கென்ன வாறன்.” இதைச் சொல்லுகையில் பரமேசுவரன் மனம் கணக்குகளைப் போடத் தொடங்கிவிட்டது.
அவனுக்கு இது ஒருவகை அவல்! “ஓஹோ !” என்று தான் வந்த சைக்கிளை அசுர மிதிமிதித்துக்கொண்டு போய் அந்த மாலை வேளையில் ஊரின் வாசிகசாலை அருகே வழக்கம் போலக் கூடியிருந்த அவன் சபையில் நடுவே புகுந்து தொடங்கினான்.
“ஆராய்ச்சியா அங்கே நடக்குது…? இளந்தாரிப் பெடி யன் … ஏதோ படிப்பு எண்டு சொல்லி…”
குணசேகரம் அன்றைய அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவளோடு தனித்துப் பேசுவதற்காய் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைக் கூட்டிக்கொண்டே வந்தான். வாத்தியாரோ முன்னைக் கெப்போதும் கவனமாக இருந்தார். கமலம் அடுக்களையில் கதவிடுக்கால் அவனைப் பார்த்துக் கொள்வாள். இந்த வெறியின் ஆதிக்கம் கூடிக்கூடி…ஒரு கடிதம் எழுதிப் பார்ப்போமா?’ என்கிற சிந்தனையில் ஒன்றை எழுதியும் ஆயத்தமாய் வைத்துக் கொண்டான். பல நாட்களுக்குப் பிறகும் ஒரு சந்தர்ப்பம் கூடவில்லை. அப்போதே தன் செய்கைகளின் நியாயங்களைப் பற்றியதான சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டான். “இவளை நான் விரும்பலாம். அவள்…? அவள் ஒருமாதிரியென்பதை உபயோகிக்கிறேனோ? இல்லை . முடியாது. அல்லது அது மனதில் அடைந்துபோக அதைக்கொண்டு அவளை விரும்பிய பின்னர் சுய உணர்வடைந்து தருக்கிக்கிறேனோ? அவள் கமலம்… இந்தப் பரமேசுவரனைச் சந்தித்துப் பார்ப்பம். இந்தக் கதைகளுக்கு ஏதேன் ஆதாரம் இருக்குதா எண்டு பார்ப்பம்.”
பரமேசுவரன் வந்து சேர்ந்தான் ஒருநாள் மாலை. அவன் வந்தபோது தருமலிங்க மாஸ்டரும் இருந்தார். இந்தச் சந்திப்பில் ஏதோ ஒருவகை அந்தரங்கம் இருக்கிறதென்பதை உணர்ந்து கொண்டு, அதில் தானும் கலந்து கொள்வது உசிதமல்ல என்று தோன்றியதாலும், பால்மாரின்னுக்குத் திரும்பவும் வேட்டை தொடங்க வேண்டியிருந்ததாலும் எழுந்து போய்விட்டார். ‘ஏதென் விவரம் தெரியவேணுமெண்டால், அதுகளை நான் விசாரிச்சுச் சொல்லுவனே’ என்ற நினைப்புடன் பரமேசுவரன் வெகு அழுத்தலுடன் வந்து நின்றான். ‘உவரென்ன கேக்கப் போறார் பாப்பம்’ என்ற நினைவின் அவசரம் கூடியது. குணசேகரம் இவனை எப்படி, என்ன மாதிரிக் கேட்கலாம் என்ற யோசனையுடன், “தம்பி வாரும்… இதில் இரும். இந்தா வாறன்” என்று கதிரையில் அவனை இருத்தினான். உள்ளே போய்த் திறந்திருந்த குறிப்புகளை மூடி வைத்துவிட்டு வந்து சேர்ந்தான். முன்பின் அறியாதவன் ஒருவனுடன் அந்தரங்கமாகப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை மனதில் அசைபோட்டுப் பார்த்திருந்தாலும் மெய்யாகவே பேச வேண்டிய சூழல் வந்தபோது, அது எவ்வளவு கடினமான காரியம் என்று புரிந்து போயிற்று. உயிரற்ற செப்பேடுகளையும் ஏட்டுச்சுவடிகளையும் கொண்டு ஆய்வதென்பது சுலபமான காரியமாகப்பட்டது.
இது ஏன்….? இதிலென்ன கேட்போம்?’ “தம்பி… இந்த ஸ்கூலிலதானோ படிச்சது?”
“ஓம்…. ஓம், எங்கட படிப்புகள் தெரியாதே? இந்த மாஸ்டர்மாரை ஆக்கினைப்படுத்துறதுதான் எங்கட படிப்பு.” பரமேசுவரன் தன்னை இவர் அழைத்ததன் பெருமையை நினைத்து உற்சாகப்பட்டுக் கொண்டான். கதையைச் சுற்றி வளைப்பதற்கான நிர்ப்பந்தத்தையிட்டு குணசேகரம் வருந்திக் கொண்டான். பல பொதுக் கேள்விகள் வித்தியாலயம் சம்பந்த மாகக் கேட்டுக் கேட்டு…
“இந்த ஆறுமுக வாத்தியாருடைய மகளும் உம்மோட தானோ படிச்சவள்?”
குணசேகரம் அமைதியாகக் கேட்டான்.
“ஓம்… ஓம், என்னத்துக்காகக் கேக்கிறியள்?” மடங்கினார்’ என்று யோசித்துக்கொண்டு பரமேசுவரன் ஒரு முறுவலுடன் கேட்டான். தான் இந்த விவகாரங்களைப் பார்க்கிற ரீதியில் இவர் இதைப் பார்க்க மாட்டார் – பார்க்க முடியாது – என்கிற நம்பிக்கை பரமேசுவுக்கு இருந்தது. ‘உவளவையை நம்புற மடையன்களில்’ குணசேகரமும் ஒருத்தன் என்று பட்டது.
“தம்பி, இவளுக்கு ஆரென் பொடியன்கள் இருந்தவங் களோ?”
பரமேசுவரனுக்கு இந்தத் ‘தம்பி’ பிடிக்கவில்லை . ‘தன் கேள்வியை உதாசீனப்படுத்திவிட்டு, இது என்ன வேறு கேள்வி என்கிற யோசனை ஓடினாலும் கேள்வியின் உருவகம் பிடித்திருந்தது.
‘ஒருத்தனுமில்லையெண்டு விடுவமோ…? இல்லை, இவ ரென்ன சொல்லுறார் பார்ப்பம். உவருக்கேன் உந்த அலுவல் கள்?’ என்கிற மாதிரியான யோசனைகள் மனதின் பரப்பில் ஓடி ஒளிந்தன.
“இருந்தவன்கள்” என்று நிற்பாட்டினான்.
குணசேகரத்துக்கு எரிந்தது. ஒரு கணம் கமலத்தைச் சபித்துக் கொண்டான்.
“சொல்லும் தம்பி.’ அவசரப்படுத்தினான். பரமேசுக்கு இது ஒருக்காலும் அவசரமில்லை .
“என்னத்துக்காகக் கேக்கிறியள்?” திரும்பவும் கேட்டான். குணசேகரத்திற்குக் கோபம் வரும் போல இருந்தது. இந்தப் பொடியன்…’ என்று கறுவிக்கொண்டே, என்ன சொல்லலாம் என்பது பற்றித் தான் ஏற்கெனவே தீர்மானித்துவைத்திருந்த தைச் சொன்னான்.
“தம்பி… மாஸ்டருக்கு யாரோ இதுகளைக் காதில் போட் டிட்டினம் போல் கிடக்கு. அந்தாள் மெத்தக் கவலைப்படுகிது. நம்மாலான உதவியைச் செய்வம் எண்டுதான்…”
பரமேசுவரன் சிரித்தான். “நீங்கள் அல்லது நான் என்ன செய்ய முடியும்? அதுவும் என்னைத்தானோ கேக்க வேணும்?”
குணசேகரத்துக்கு இப்போ திருப்தி ஏற்பட்டது. “உம்மை யும் சேத்தல்லோ கதைக்கினம்?”
பரமேசுவுக்கு இவைகள் இக்கட்டுக்கள் அல்ல. “அந்தப் பெட்டை ஒருமாதிரி…” என்று ஒறுத்துச் சொன்னான்.
“ஒருமாதிரியெண்டால்…?” குணசேகரம் ஒரு தீர்க்கமான மறுமொழியை எதிர்பார்த்தான்.
‘உவற்றை நோக்கமென்ன….? தானும் தட்டிப்போட்டு, என்னை மாட்டிற யோசனையோ?… உவரைப் போல எத்தனை பேரைப் பாத்துப்போட்டன். உவராள் யார்? என்ற யோசனையில் ஆழ்ந்து, கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தான். குணசேகரத் துக்கு இந்த யோசனை ஓட்டங்கள் விளங்காமலில்லை. இவன் இப்படித் தன்னைத் தவறாய்க் கேவலமாய் விளங்கிக்கொள்வது பற்றி எரிச்சலாகவுமிருந்தது. பரமேசுவரன் நெடுநேரம் அமைதி யைத் தொடரவில்லை.
“ஒருமாதிரியெண்டு என்ன…. கணேசன் எண்ட பெடிய னோட தொடர்பாயிருந்தவள். அவன் மேற்படிப்புக்குப் போன பிறகு என்னோட… பிறகு நான் அவளை விட்டிட்டன்…” திருப்தியுடன் சொன்னான். ஒருவித பெருமையும் அவன் குரலில் தொனித்தது. குணசேகரத்திற்கு இப்போ சஞ்சிகைகளில் வரும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை மதிப்பிடும் பாங்கு ஒன்றிப் போய்விட்டது.
“ஏன் எண்டு நான் அறியலாமோ?”
“அதில்லை . அவளை நம்ப ஏலாது. அவளுக்குப் பெடியள் கன பேர்…” இதைத்தான் குணசேகரமும் விளங்குவதென்றிருக்க, பரமேசுவரன் இதைத் தொட்டுக்கொண்டு ஓடுவது திருப் தியைத் தரவில்லை .
“கன பேர் எண்டு …. இந்த ஊரிற் பெடியள்தானோ…?”
“ஓம்” விபரிப்பதற்கு இக்கணத்தில் பரமேசுவுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. மேலும் கேட்கலாமா இல்லையா என்பது பற்றித் தீர்மானிக்கக் கஷ்டமாக இருந்தது. இவளைப் பற்றிய நம்பிக்கை எவ்வளவு’ என்று யோசித்துக் கொண்டான். “பெடியளின்ர பேர்…” குணசேகரம் நிதானமாகவே கேட்டான். ஒரு சொற்ப நேரம் இந்தக் கேள்விகளின் தாக்கத்தால் அதிர்ந்து போயிருந்த பரமேசுவரன், இதைச் சமாளிக்க உற்சாகத்துடன் பதில் சொன்னான்.
“அது, இவன்…. சுப்பிரமணியம், வேலுப்பிள்ளையற்ரை மகன் நாகராசா… உப்பிடிக் கன பேர்….”
“இவங்கள் எல்லாரும் ஏதென் கடுதாசி அது இது எழுதறது மட்டுந்தானோ? இல்லை அதுக்கும் மேலால….” குணசேகரம் நிற்பாட்டினான்.
பரமேசுவுக்கு உற்சாகம் கூடிவிட்டது. “எல்லாந்தான்….’ 100 என்றான். இதை விபரிப்பதைவிட இப்படியே விடுவது நல்லது என்கிற யோசனையுடன், குணசேகரத்துக்கு பரமேசுவரனின் கதைகளில் வலு எதுவுமில்லை என்று பட்டது. கமலத்தின் ஈர்ப்பின் சக்தியால் இந்தக் கணக்கு இப்படியிருக்கிறதோ என்று தீர்மானிக்க இயலாத நிலையினாலும், இந்த நிலை முன்னெப் போதும் அவனுக்கிருந்ததில்லையாதலாலும், அவன் மெத்த அவசரப்பட்டுக் கொண்டான். பரமேசுவரனை மேலும் கேட்டுப் பார்ப்பது பிரயோசனமில்லாதது என்பதை அறுதியிட்டுக் கொண்டு, அவனை ஒருவாறாக அனுப்பிவைத்தான்.
பரமேசு உடனே போய்த் தன் சபை நடுவிலே….
குணசேகரம் யோசனையில் ஆழ்ந்தான். இவள் எப்படி யிருந்தால் என்ன?’ என்ற எண்ணத்தையும் விட மனமில்லாத வனாய், அவனுக்குரிய தீர்க்கமான சுபாவத்தை அடியோடு வெட்டியெறிய முயலுகிற இந்தப் பிரச்சினை வேறுவேறு கிளைகளாய்த் தன் சுயம்புவைத் தாக்குவதை உணர்ந்து கொண்டான். இவளைத்தான் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும்’ என்ற ஒரு முடிவு புலப்பட்டது. அவளைக் கேட்போம் என்று தீர்மானித்தவன், அதைச் செயற்படுத்தத் தெண்டித்தான்.
கூடி வந்த வேளையில் ஒருநாள் தனியே கமலத்தைக் கேட்டான். கேட்டவுடன் கமலம் கண்கள் சிவந்து, பதைத்து அடுக்களையுள்ளே போய்விட்டது அவனுக்கு ஒருமாதிரியாக இருந்தது. கணேசன் இன்னமும் அவள் மன வானில் ஒரு துருவ நட்சத்திரம். தன்னை எரித்துப்போட்டு எங்கோ தனக்குச் சொல்லாமல் போய்விட்டவன்….’ அவளின் இந்தச் செய்கை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையற்றுப் போனவன் மேலும் தன் முயற்சிகளைத் தொடர்ந்தான். எங்கே பிழை ஏற்பட்டிருக்க முடியும்? என்பதைத் தன் புலன்களின் ஆட்சி வீச்சில் முற்றாய்த் தான் வீழ்ந்து போனதை மெல்லியதாய் உணர்ந்து தான் கேட்டுக் கொண்டான்.
‘இவள் எவளாக இருந்தால் என்ன? என் மனைவியாய் வர முடியாதோ?’ என்கிற ஓலம் மேலிட அவளைத் திரும்பவும் கேட்டான்.
அவள் தன் அழுகையை ஒரு நிலையில் நிற்பாட்டிக் கொண்டாள். இந்தக் கேள்வியின் உருவகம் அவள் மனதில் தேங்கியிருந்தாலும் மறுமொழியின் உருவகம் எழவில்லை . “ஐயாவைத்தான் கேளுங்கள்” என்றாள்.
“அவரைக் கேட்கிறது எனக்குக் கஷ்டமில்லை. உனக்கு விருப்பமெண்டால் மட்டுந்தான் கேட்பேன்.”
இதற்கு மறுமொழி அவளிடம் இல்லை . இதை உணர அவனுக்கு நேரம் சென்றது. “யோசிச்சுச் சொல்லுமன்” என்று போகத் தீர்மானித்தான்; மனதின் நிறையைச் சுமந்தவனாய்.
‘நான் இவளை விரும்புவது சாத்தியம். மற்ற நிலவரங்கள் பற்றி என்னால் கவனிக்க முடியாது அல்லது என்னால் முடிய வில்லை. முடியவில்லையென்றால் முடியாதுதான். இவள் என்றால்….? இவள் என்றால் … இவள் முழுவதும்…. இவளின் பழைய சரித்திரத்தோடு….’ என்று யோசித்துக் கொண்டான். சடுதியாய் அவளில் மிகவும் ஆத்திரப்பட்டான். ஒரு கட்டத்தில், “இவள் ஒரு வேசை” என்று முனகிக்கொண்டான். இப்படி நினைத்ததற்காய் வருந்தியும் கொண்டான்.
இவன் போனதற்குப் பிறகுதான் கமலத்திற்கு மனம் சற்றே இவைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கான மனோநிலை ஏற்பட்டது. தன்னுடைய கதையின் ஏடுகளைப் புரட்டுவது இதுவரையும் அவளுக்குத் தெரிந்ததில்லை. இருந்தாற்போல் தன் சரித்திரத் தையும் தன்னையும் மண்ணுக்குள்ளே குழி தோண்டிப் புதைத்து விட வேண்டும் என்றாற்போல் ஓர் உணர்வு அவளுக்குள்ளே எழுந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக மிதிக்கின்ற கணேசனைச் சபித்தாள். முதன்முறையாகக் கணேசன் மீது கோபம் கொண்டாள். இந்த குணசேகரத்தின் அந்தஸ்து நிலைகளால் அவள் மனம் நெகிழ்ந்திருக்க முடியாததன் நியாயம் அவள் மனம் சுதந்திரமாக இருக்கவில்லை என்பதுதான். கணேசன் மீது எழுந்த காழ்ப்பின் தாக்கத்தால் இப்படியொரு கொழுகொம்பைப் படர்வதற்கு ஒப்புகிற மனோநிலையில் தன் சரித்திரத்தின் பழைய ஏடுகள் அவனுக்குத் தெரிய வரப்போவது பற்றி அஞ்சினாள்.
வருந்திக்கொள்ள ஆரம்பித்தவள் ஒரு புதிய கமலம்.
குணசேகரம் பல்வேறாகவும் யோசிக்க ஆரம்பித்து, அவளின் பல்வேறு நிலைகளைத் தன் நிலைகளுடன் ஒவ்வாதன என்று கருதக்கூடியவற்றைத் தெரிந்தெடுத்து, அவற்றை நிராகரித்துத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான். குணசேகரம் அவன் கடமைகள் முடிந்து போக வேண்டிய நாள் வந்ததும் தருமலிங்கம் மாஸ்டரைக் கொண்டுவித்து, வாத்தியாரை இதைப் பற்றிக் கேட்பித்தான்.
“அதுக்கான வழிமுறைகளுடனல்லோ கேட்க வேணும்?” என்று தொடங்கி, “பெரியவர்கள் வரவேண்டும்” என்று வாத்தியார் முடித்தார். அவருக்கு இது சந்தோஷமே. திருமணப் படலப் பாட்டுகள் அவர் மனத்துள் சுழன்று ஆடின.
குணசேகரம் கமலத்தைக் கைப்பிடிக்க மெத்தக் கடினமா கவே போய்விட்டது. லட்சோபலட்சங்கள் சீதனம் அவன் பெற்றோரின் கனவில்லாது போனாலும் ‘ஒரு நல்ல பகுதி’ என்ற வரைவிலக்கணத்துள் வாத்தியார் விழாது போனதற்கு அவரை எப்படிப் பாத்திரவாளியாக்க முடியும்? ஒருவழியாய் ஒப்பேறிப்போய் அவர்கள் பல்கலைக்கழகத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
II
சேர்ந்த பின்னரே ஆதிக் கதாநாயகன் தன் தவத்தை வெற்றிகரமாய் முடித்துக்கொண்டு பற்பல கற்பனைகளுடன் வந்து சேர்ந்தான். அவன் சிநேகிதர்கள் ஒருவிதமாய்த் தன்னை நோக்குவது புலப்பட்டது. கமலத்தின் சரித்திரத்தின் பகுதிகள் பலவேளைகளிலும் தப்பிதமாகவே அவன் காதுக்கட்கு இவர்க ளால் எட்டத்தொடங்கின. இது அவனுக்கு அதிர்ச்சி. பரமேசு இந்தக் கணத்தில், கமலத்தின்ர புருஷன்’ தன்னைக் குறுக்கு விசாரணை செய்ததைச் சொல்லிப் பலவற்றைக் கத்தரித்துக் கொண்டான். கணேசனின் கோட்டைகள் சரிந்துதான் போயின. தன்னை நொந்து கொண்டவனுக்கு ஆவேசமும் வந்தது. பச்சைத் துரோகம் என்று தீர்க்க முடியாமல், தான் இவளுக்கு ஒன்றும் சொல்லாமல் போனதையிட்டுத் தன்னைத்தானே நொந்து கொண்டான். இவள் என்றும் என்றென்றும் இப்படியே இருப்பாள் என்றதில் ஐயமிருந்தால் போயிருப்பேனா. புது மனிதனாய் வந்து காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு….’ தவத்தைத் தொடருகின்றதுதான் அவனுக்கு ஒரேயொரு வழியென்று பட்டது. பட்டினத்திற்குத் திரும்பவும் போய்ச் சேர்ந்தான். எட்டிப்பிடிக்க வேண்டியது துரத்துகிறதாய் முதலில் மாறி….. தவத்தின் வலிமையால் எட்டுவதும் துரத்துவதும் மனத்திரையிலிருந்து அகல… அவனுக்குப் பல்கலைக்கழகப் பிரவேசமாய்க் கிடைத் தது. ஒரு சுயேச்சையான சம்பவமாய், குணசேகரம் இருந்த பல்கலைக்கழக வளாகமே அவனுக்குக் கிடைத்தது. அவன் வாழ்க்கையின் த்வனி மாறிப்போய்விட்டது.
III
வாழ்க்கையை முற்றாக எண்ணங்களால் ஓட்டுகிற அந்தச் சூழலில் பல்வேறு வாழ்க்கைமுறைகளும் நோக்குகளும் கொள்கை களும் நடைமுறைகளும் இருப்பது தெரியவந்தது புது அனுபவமாக இருந்தது. கமலமும் குணசேகரமும் அந்த வளாகத்தில் இருந்தது அவனுக்குத் தெரியும். மேலாக, குணசேகரமே அவர்களுடைய சரித்திர விரிவுரையாளனாக அமைந்தான்.
நோக்குகள் விரிய, இவையெல்லாம் எந்த அதிர்வையும் தனக்குத் தரமாட்டா என்று கூற முடிகிற ஒரு சூழலில் வாழ்க்கை இந்தக் கமலத்தோடேயோ அன்றி அவள் புருஷன் குணசேகரத்தோடேயோ தொடங்கியும் முடிந்தும் விட முடி யாது என்கிற ஒரு முடிவுடன் இருக்க முயன்ற போது….
சோறு போடுகிற கலையென்று அதுவரைகாறும் அவன் கருதியிருந்த அரசியல் மேல், அவன் நோக்கு விழுந்தது. பல்கலைக் கழகம் சேர்ந்து இரண்டு தவணைக்குள் தவத்தின் நோக்கம் என்னவென்பதை அறிந்தாயிற்று என்று யோசித்திருந்த வேளையில் சற்று இறுக்கவே இந்த அரசியலைப் பற்றிக் கொண்டான். பக்கங்களும் எதிர்ப்பக்கங்களும் கொண்ட சிக்கலுருவின் மிக நியாயமான பக்கத்தை எடுப்பதென்ற தீர்மானத்துடன் அவன் – அந்த – அவர்களுடன் போய்ச் சேர்ந்தான்.
அவர்கள் வர்க்க பேதங்களைத் தகர்த்து எறிகிற தீர்மா னத்துடன் இருக்கிறவர்கள். அவர்களின் தலைவர்கள், தங்கள் நாளாந்த அரசியல் வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளாயிருக்க வேண்டியவற்றிலிருந்து எவ்வளவு தூரம் ஒதுங்கி வந்துவிட்டோம் என்ற மன உறுத்தலை சமத்காரத்துடன் தருக்கப்படுத்தி, நியாயப் படுத்திவிட்டுப்போகிற களனாக அவர்களை நினைத்திருந்தார்கள். வந்தார்கள்; மேற்கோள்களைக் காட்டினார்கள்; திரும்பவும் காரில் ஏறிப் போனார்கள்.
இவன் அவர்களோடு போய்ச் சேர்ந்ததற்குக் கருவியாய் அமைந்தவனைப் பற்றி…. அவன் பெயர் சிவநேசன். கணேசன் பல்கலைக்கழகத்தை மிதித்த போது மூன்றாம் ஆண்டில் இருந்தான். பாரம்பரியத்துடன் கூடிவருகிற கல்விமுறையில் ஆசிரியர்கள் சொல்லித்தருவதை மட்டும் செமித்தால் புதிதைக் காண்பது கஷ்டம் என்பதை நிறுவ வந்தவன் போல் இந்தச் சிவநேசன் இருந்தான். இதையும் படித்து அதையும் படித்து அந்த அரசியல் கூட்டத்தின் தலைமையில் இடம்பிடித்து வைத்திருந்தான். அவனுக்குச் சொந்தமான கருத்துக்கள் இருந்தன என்பதும், இந்தக் கருத்துக்களின் முழு விளைகளனாக அவன் இருந்ததனால், அவன் விரிவுரையாளர்கட்கு அவனில் அசூயை இருந்தது என்பதுவும் உண்மைதான்.
அவனும் இந்த கணேசனின் தவ முயற்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். கணேசனை முதலில் சந்தித்தபோதே சிவநேசனுக்கு அவனுடைய அறிவுத் தாகத்தின் சத்தியம் மிகவும் பிடித்துப்போயிற்று. சரித்திரத்தில் வர்க்க முரண்பாடுகள் பற்றி…. கொள்ளும் நோக்கில், மெய்மையில், பொய்மையில் … உள்ள முரண்பாடுகள் பற்றி… எல்லாம் சொல்லித்தந்தான். வருங்கால சமுதாயம் பற்றி – தன்னுணர்வு நிலைகள் ‘ – கரைந்து போவதைப் பற்றி… உலகம் இதுதான் என்று வரையறுத்துக் கொடுத்தான். இந்தக் கொள்கை ஓட்டங்களில் கணேசன் அதுவரைகாறும் பெரிய தத்துவங்கள் என்று யோசித்திருந்த சில ஒழுக்கசீல நோக்குகள் மிதிபட்டுப் போயின. சிவநேசன் சிகரெட்டை வலிப்புற இழுத்து … ” அதிலென்ன கிடக்குது?” என்று ஈற்றடி வைத்துக் கேட்கும் கேள்விகட்குக் கணேசனால் மறுமொழி சொல்ல முடியாமல் போய்விடும். தன்னுடைய பழைய சரித் திரத்தைச் சிவநேசனுக்குச் சொன்னபோது, நடுவில் சிகரெட் புகையோடு கேள்வியும் சூட்டோடு வந்தது.
“ஏன் இவளுக்குச் சொல்லாமல் படிக்கப் போனாய்…?” கணேசன் முகட்டைப் பார்த்தான். இப்படியாகத் தன்னைக் கூண்டில் நிறுத்திவைத்துக் கேட்கிற நிலையைக் கற்பனை பண்ணிச் சீவித்ததில் தான் கமலம் தன் மனத் திரையிலிருந்து ஒதுங்கிப்போய்விட்டாள் என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டான். முதன் முறையாக வேறொருவன் இந்தக் கேள்வி யைக் கேட்டபோதே தான் செய்துவிட்ட தவறின் முழு வியாப கமும் தோன்றலாயிற்று.
“நான் ஏன் அவளுக்குச் சொல்லாமல் போனேன்?” என்று பெலத்தே கேட்டுக் கொண்டு தொடர்ந்தான்….
“நான் ஒரு வெறும் மனிசன் எண்டு பட்டது. வெறும் 104 மனிசன் எண்டதை நிராகரிக்கிறதுக்காகப் பல கதைகளையும்
அவளுக்குச் சொல்லித் திருப்திப்பட்டன்… ஒரு நாள், ஒரு நேரத்தில் …. ஒரு கணத்தில் அவள் அதுகளை முற்றாய் நம்பேல்லை எண்டதைத் தெரிஞ்சபிறகு…. இந்த வெறுமை என்னைச் சுட்டெரிச்சதாலதான் அவளுக்கே சொல்லாமல் ஓடிப்போக வேண்டியதாய்ப் போச்சு.”
சிவநேசன் சிகரெட்டின் இறுதி மூச்சை நன்றாய் உள்ளி ழுத்துக்கொண்டு முனையை எறிந்தான்.
“…ம்ம் பிறகென்ன நடந்தது?”
“அவள்… அவளுக்குப் பிறகு பெடியள் கன பேராம்..” சற்றே நிறுத்தித் தொடர்ந்தான்…” அதை நம்ப ஏலாமக் கிடக்கு.”
சிவநேசன் சிரித்தான். “எடேய்! எவ்வளவு தூரம் இவள் உனக்கே உனக்காயிருக்க வேணுமெண்டு யோசிக்கிறாய்? இந்த ஆண் – பெண் வித்தியாசத்தை விடு. நீ மட்டும் நேற்று அந்தப் பரமேசுவரனோட , இண்டைக்குச் சிவநேசனோட , நாளைக்கு வேறொருத்தனோட சிநேகிதமாயிருப்பாய். பெட்டையளோடை யும் சிநேகிதமாயிருப்பாய். உன்ர பெட்டைக்கு மட்டும் வெளி உலகத் தொடர்பு எல்லாம் உன்னோட துடங்கி உன்னோட முடிய வேணும் எண்டு யோசிக்கிறாய். இதுக்கள் எல்லாம் உந்தப் பழம் மரபுகளின்ர மிச்சசொச்சங்கள். தூக்கியெறி.”
“நான் அவளைப் போய்ப் பார்க்க யோசிச்சிருக்கிறான்.”
“ம்ம்… போய்ப் பார். பாத்தியா, ஒரு தனிமனிதனின்ர தன்முனைப்பு எவ்வளவு கிடக்கெண்டு? விபரங்களைத் தெரிந்து வைச்சிருந்தென்ன பிரயோசனம்? விஷயங்களைத் தூர நிண்டு பார். உனக்கு உன்ர விருப்பங்கள், தேவைகள், முனைப்புகள். மற்றவைக்கு அவை அவையின்ர. இதுகள் மோதுறது உலக இயக்கம். உனக்கு விருப்பமெண்டால், அவளுக்கும் விருப்ப மெண்டால், இதனால் சமூகத்துக்குத் தொந்தரவு இல்லை யெண்டால், நீயும் அவளும் எப்படியெண்டாலும் சம்பந்தப் படுகிறதில பிழை எங்கேயிருக்க முடியும்?”
“உண்மைதான். கணேசன் எழுந்தான். அவன் சிவநேசனை முற்றாக விளங்கிக்கொள்ளவில்லை. ‘நான் அவளைப் போய்ப் பார்ப்பதில் பிழை எங்கேயிருக்க முடியும்?’ என்ற தெம்போடு ஒரு தகுந்த பொழுது பார்த்திருந்தான்.
ஒருநாள் மாலை தன் பின்னேர நடையின் இடைவழியில் ஆறுமுக வாத்தியார் இங்குமங்கும் திரும்பிப் பச்சைப்பசேலென்ற அந்த மனோரம்யமான மாலைச் சூழலை ரசித்துக்கொண்டு வருவதைக் கண்டவன், அவர் பார்வையில் குறுக்கே போய் விழுந்தான். மகளிடம் வந்திருக்கிறார் போல இருக்கிறது.
“அட, கணேசு! உன்னையல்லோ தேடிக்கொண்டிருக்கிறான். நான் இங்கை மகளிட்டப் போறான். உண்ர கொண்ணன் ஏதோ ஒரு பார்சல் கட்டித் தந்திருக்கிறான், உன்னட்டைக் குடுக்கச்சொல்லி. அதையொருக்கா என்னோட வந்து எடுத்துக் கொண்டு போவன்” என்று மூச்சிழுத்தார். கணேசன் அவரைத் தொடர்ந்து போன நேரத்தில் கமலத்தின் பழையகால நினைவுகள் சூழ , பல நாட்கள் தன்னுடைய கோட்பாடுகள்’ என்ற சுய வேலிக்குள்ளே நின்று இவளை மறக்க முயன்றது பற்றி யோசித்துக் கொண்டு போனான். மலைப்புறத்தே இருந்த குணசேகரத்தின் அமைதியான வீட்டில் காலடி எடுத்துவைத்தான்.
அந்த விசாலமான முன் வரவேற்பு அறையின் மூலையில் இருந்த மேசையில், புத்தகக் கோபுரத்தின் நடுவில் குணசேகரம் இருந்து என்னவோ எழுதிக்கொண்டிருந்தான். வாத்தியார் மெல்ல நுழைந்து, மெதுவான குரலில், “தம்பீ , அவர் படிச்சுக் கொண்டிருக்கிறார். மெல்லக் கதையும். உதில் இரும் வாறன்” என்று கணேசனை ஒரு கதிரையில் இருத்திவிட்டு உள்ளே போனார். வாத்தியார் உள்ளே போனதைக் குணசேகரம் பார்த்தாலும் அவன் மனதில் செய்தி சுவடேறவில்லை. கணேசன் வந்திருந்ததையும் பார்க்கவில்லை. கணேசன் அங்கிருந்த புத்தகங்களின் தலைப்புகளை வாசிக்க முயன்றுகொண்டிருந்த வேளையில் வாத்தியார் முதலில் வந்தார்; கையில் பார்சலோடு. புறத்தே அந்த விசால வரவேற்பறையை ஒட்டி உள்கட்டிற்குப் போகிற ஒடுக்கத்தின் மூலையில் கமலம் வந்து கொண்டிருந்தாள். கணேசனின் இதயம் நின்றுவிடும் போல இருந்தது.
கமலத்திற்குக் கணேசன் இங்கே எப்படி வந்து சேர்ந்தான் என்பது வியப்பாக இருந்தது. இத்தனை கால இடைவெளிக்குப் பிறகு … துருவ நட்சத்திரம் எரிநட்சத்திரமாக எங்கோ மன மூலையில் எரிந்து போய்விட்டபிறகு… ஒரு சிறு அவசரத்துடன் வந்தவள், வந்து, ஒடுக்கம் வரவேற்பறையைச் சந்திக்கும் விளிம் பில் சுவரோடு சாய்ந்து கொண்டு, தனக்கு இடப்புறத்தே புத்தகக் குவியலுக்கு நடுவே முகம் புதைத்தபடி இருந்த குணசேகரத்தை ஒரு கணப்பொழுது பார்த்துவிட்டுக் கணேசனைப் பார்த்தாள். அவள் பார்வையின் தீட்சண்யத்தைப் பார்க்க முடியாமல் கணேசன் பார்வையைத் திருப்பிக்கொண்டான். வாத்தியார் அவன் படிப்புகளைப் பற்றி மெல்லிய குரலில் விசாரித்துக் கொண்டிருந்தார். கணேசனுக்கு இந்த சம்பாஷணையில் மனம் இல்லை என்பது அவருக்குப் புலப்படவில்லை. எழுத்தின் நடுவில் தலைநிமிர்ந்த குணசேகரம், சுவரில் சாய்ந்து கொண்டு நிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கமலத்தைப் பார்த்து, “என்ன?” என்று கேட்க, அவள் முன்னே காட்டியபோதுதான், வந்தவனைப் பார்த்தான். புத்தகங்களை மூடிவைத்துக் கொண்டபின்னர் எழும் பிப்போய் கணேசனைப் பார்த்து வரவேற்றான்.
“ஓ, தம்பி வாரும்… நீர் …. முதலாம் வருஷம் இல்லியே?”
கமலம் உள்ளே போய்விட்டாள். வாத்தியார் அறிமுகத்தைத் தொடர்ந்தார்.
“இவர், கணேசன் எண்டு எங்கட ஊரிற் பெடியன். நடராசா எண்டவற்றை தம்பியார். பெரிய ஆட்கள். தன்ர முயற்சியால் படிச்சு இண்டைக்குப் பல்கலைக்கழகத்துக்கும் வந்திருக்குது…கெட்டிக்காரன்.”
குணசேகரத்திற்கு இந்தப் பெயர் எங்கேயோ கேள்விப் பட்ட மாதிரி இருந்தது. ஞாபக சக்தியை நெருக்கிக்கொண் டான். தருமலிங்க மாஸ்டரின் முகமும், அவன் பரமேஸ்வரனின் முகமும் நினைவில் பாய்ந்து, ‘ஓ! அந்த கணேசன்’ என்று யோசித்துக் கொண்டான். குணசேகரம் தன்னைப் பற்றிப் பரமேசுவரனிடம் குறுக்கு விசாரணை செய்தது நினைவில் எப்போதுமே நின்று ஒரு குறுகுறுப்பைத் தந்திருந்தாலும், நான் தான் குற்றவாளியா?’ என்ற உணர்வு மேற்பட குணசேகரத்தைப் பார்த்தான்.
கமலம் கையில் தேநீர்க் கோப்பையுடன் வந்தாள். அவள் ஒரு புதிய பொலிவோடு இருப்பது கணேசனுக்குச் சந்தோஷமாகவே இருந்தது. ‘இவளுடைய இந்த நிம்மதியான வாழ்வில் நான் ஏன் குறுக்கிட வேண்டும்?’ என்று யோசித்துக்கொண்டான். இந்தக் கேள்வியின் தருக்கமும் அவனை வருத்தியது. கணேசனைக் கண்டவுடன் தான், குணசேகரமும் கமலம் எவ்வளவு தூரம் தனக்கிசைந்தவளாய் இந்த மூன்று, நான்கு வருஷங்களாய் இருந்து வந்திருக்கிறாள் என்பதை மனதில் மீட்டுக்கொண்டான். தன்னுடைய சகாக்களிடம் தன் மனைவி ஒரு கிராமத்துப் பெண் என்பதைச் சொல்லிப் பல தொந்தரவுகளைக் குறைத்துக் கொண்டது முதல் தன் படிப்புகளுக்கும் எழுத்துகளுக்கும் எவ்வாறு தடையில்லாமல் இருக்கிறாள் என்பதையெல்லாம் நினைத்துக் கொண்டான்.
‘இவள் பழைய சரித்திரம் என்னவாய் இருந்தாலும், இப்போது என்னை நேசிக்கிறாள், காதலிக்கிறாள். இதில் கணேசனுக்கோ அல்லது வேறெந்தக் கழுதைக்கோ இடமிருக்காது.’
கமலத்திற்கு அழுகை வரும் போல இருந்தது. அவள் விறுக்கென்று உள்ளே திரும்பிப் போய்விட்டது கணேசனுக்கு மனதை வாட்டியது. குணசேகரம், அவள் அவ்வாறு திரும்பிப் போனது பற்றி வருந்திக்கொண்டான். கணேசன் ஒருமாதிரி யாகத் தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.
வந்து, பழைய நினைவில் அமிழ்ந்தி, இந்தக் கல்வியைத் தான் பற்றிக்கொள்ள முனைந்த காவியத்தின் தொடக்கத்தில் கமலத்தின் நினைவே ஒரு சக்தியாக இருந்ததை நினைத்துப் புளகாங்கிதம் அடைந்தான்.
இவள் எங்கேயிருந்தாலும், எவனுக்கு வாழ்க்கைப்பட்டி ருந்தாலும், என்னுடைய கமலம். ஏனென்றால், என்னுடைய நினைவில் மட்டுமே இவளுக்கு ஓர் உறுதியான இடமும் பிரயோசனமான அர்த்தமும் இருக்கிறது.’
சிவநேசனுக்கு, தான் போய்வந்த அனுபவங்களைச் சொன்னான்.
“அவள் சோரம் போனது மறந்து போச்சோ?” சிவநேசன் கேட்டு, சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டான். கணேசனுக்கு ஆத்திரம் வந்தது.
“அதிலென்ன பிழையிருக்கு?”
தன்னுடைய அஸ்திரங்கள் தன் மேலேயே பாய்வது சிவநேசனுக்குத் தெரிந்தது.
“அது இல்லையடாப்பா. அது பிழையென்டோ அல்லது சரியெண்டோ நான் சொல்ல வரேல்லை..” சிகரெட் புகை குப்பென்று வந்தது. “பெட்டையள் தறிகெட்டுப்போறதின்ர முழுத் தாத்பரியத்தையும் யோசிச்சுப் பாக்கச் சொல்லுறன். இப்படி யோசிச்சுப் பாரன். பலரை ஏற்றுக்கொள்கிற அள வுக்குப் பெட்டையளின்ர மனம் விசாலமாகத்தான் இருக்கு. ஆனால், பெடியளோ தங்கடதங்கட பெட்டையள் தங்களுக் காகவே மட்டும் இருக்க வேணுமெண்டு யோசிக்கினம். இதை வழக்கப்படுத்திப்போட்டுத் தாங்களே தடுமாறுகிற முட்டாள்களாய் இருக்கினம். அவளை நீ எப்பவும் காதலிக்க லாம். அவளுக்கு உன்னிலை தற்போது விருப்பமில்லையெண் டதுக்கு எந்த உறுதியும் கிடையாது. ஆனால், ஒண்டு. உனக்கு இடமிருக்குமெண்டால் இன்னொருவனுக்கும் இடமிருக்கு எண்டதை நீ மறக்கப்படாது.” சிவநேசன் திரும்பவும் சிக ரெட்டை இழுத்துக்கொண்டான். இதைச் சீரணிக்க கணே சனுக்கு இன்னும் கஷ்டமாகவே இருந்தது.
“இதுகளை நாங்கள் அனுமதிக்கிறதெண்டால், ஒரு சமுதாய ஒழுங்கில்லாமல் போகும்.”
“இந்த ஒழுங்கில்லாமல் வேறு ஒழுங்கு வரும்.” சிவநேசன் சிகரெட்டையும் முடித்துக்கொண்டு எழுந்தான்.
கணேசனுக்கு இந்த வாதங்களுக்கெல்லாம் மேலாகக் கமலத்தின் நினைவு அலைபாயத் தொடங்கியது. அவனுக்குப் படிக்க நிரம்பவும் இருந்தது. முதல் வருடச் சோதனை நெருங் கியதால், திரும்பவும் ஒரு வைராக்கியத்துடன் கொஞ்சம் விடு பட்டுப்போயிருந்த தன் படிப்பைத் தொடர்ந்தான்.
கமலம், தகப்பனை மெல்ல விசாரித்து, கணேசனின் படிப்பு முயற்சிகளை அறிந்து கொண்டு ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அவன் திரும்பவும் இங்கு வரக்கூடும் என்ற ஆசை கலந்த பயம் சிலவேளைகளில் எழும். தன்னுடைய சரித்திரம் பற்றி அசைபோடவும் அஞ்சுகையில், தன் புருஷன் இவனுடைய வருகையில் காட்டிய நிர்ச்சலனம் திருப்தியை அளித்தது. சிலவேளைகளில் சன்னல் திரையை நீக்கி அந்த வீட்டிற்கு முன்னால் பள்ளத்தில் இருந்த கட்டடங்களின் பொம்மைத் தோற்றங்களை வெறித்து ரசிப்பாள்.
குணசேகரத்துக்கு கணேசன் அங்கிருப்பது பற்றிய எந்தவித உணர்வுச் சலனமும் கிடையாது. இப்போதும் போர்த்துக்கீசிய ஆட்சியில் சிதிலமடைந்துபோனவற்றைக் குடைந்து, கட்டுரை எழுதுகிற முயற்சியே வாழ்க்கையானபடியால் தான் என்பது அல்ல. இதுபற்றி அவனுக்கு ஒரு கொள்கை அமைந்து போயிற்று.
V
சோதனை முடிந்து விடுமுறையின் போது சிவநேசன் கணேசனைக் கட்சி வேலைகளுக்காகப் பல இடங்களுக்கும் கூட்டிக்கொண்டு போனான். கட்சி வேலைகள் என்பது அதிக மாகத் தோட்டப்புறங்களுக்குச் சென்று தொழிற்சங்க விவகாரங் கள், வேலைநிறுத்தங்கள் என்பவற்றைக் கவனிப்பதுதான். இந்த மக்கள், அவர்கள் துன்பம் பற்றியெல்லாம் முற்றாக அங்கே பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கிறவர்களுக்குத் தெரியுமா? புள்ளி விபரங்களாகிப்போன இந்த மக்களுக்கு உயிரும் இருக்குது, சீவிக்க வேண்டிய ஒரு சீவியமும் இருக்குது என்று ஆவேசப் பட்டுக்கொண்டான். செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்க, ‘நானுமெனதுயிரும்’ என்று அவளொருத்தியின் நினைவாய்த் தவிப்பது கசந்தது. அவள் நினைவில்லாமல் இருப்பதும் கஷ்டமாக இருந்தது. இப்படிப் போன இடமொன்றில், ஒரு கட்சிக் காரியால யத்தில் வேலாயுதம் – அங்கே கிளார்க்காக இருப்பவன் – பரிச்சயமானான். வேலாயுதத்தின் வாழ்க்கை ஒரு தனிக் கதை. அதிலும், அவன் பள்ளிக்கூடப் படிப்பை மட்டுமட்டாகத் தாண்டியது விசேஷமான அத்தியாயம். தினமும் போகவரப் பதினாறு மைல் ஏற்ற இறக்கப் பாதைகளில் மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து, கடந்து படித்துக்கொண்டு வந்தபோது, இன்னும் படிப்பு முடிய இரண்டு வருடங்கள் தான் என்று ஆனந்தப்பட்ட அவன் தகப்பன், தோட்டத்தில் நடந்த கட்சிக் கலவரத்தில் இறந்துபோக…. அவன் நிராதரவாய்ப் போனான். இதை அவன் கடந்தது அவன் சொந்த முயற்சி யாலேயே. இதுபற்றி அவனுக்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு…. “ஸ்கூலுக்குப் போயிட்டு வந்த ஒடனேயே சமைக்கச் சொல்லிருவாங்க…” என்று மீட்டுக்கொள்வான். அவன் தகப்பன் கட்சியாள் என்பது தலைவருக்குத் தெரிந்தபடியால், அவர்கள் கருணையினால் இந்த கட்சி அலுவலகத்தில் உத்தியோகம் கிடைத்திருந்தது. அவனுக்குக் கட்சியின் எதிர்காலத்தில் சரியான நம்பிக்கை. கட்சி வேலைக்காக வருகிற சிவநேசன், கணேசன் கூட்டத்தின் மீது உள்ளூர அவநம்பிக்கையே. இவனுங்களுக்கு நம்ம கஸ்டம் எல்லாம் எங்க வெளங்கப் போவுது’ என்பது தொடங்கிச் சரமாரியான கேள்விகள் அவனுக்குள்ளேயே குமையும். சம்பளம் எடுத்த கையோடு இஸ்டோருக்குப் பக்கத்தில் நின்று நிலுவைக் காசு வாங்கிக்கொள்ளும் ஆட்களின் ஞாபகமே ஒரு படம் போல இவர்களைப் பார்க்கும் போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை .
சிவநேசனுக்கு இவனுடைய தாமரை இலைத்தனமான மௌனத்தைக் கண்டு ஒருவகைப் பயமிருந்தது. தன்னோடு ஒட்ட முயற்சிப்பவர்களையே அவனுக்குத் தெரியும். இவ்வாறு வெட்டிக் கத்தரித்துக்கொண்டு போக முயல்பவனை அவனால் தீர்மானிக்க முடியவில்லை. சிவநேசனுக்குத் தலைவரோடுதான் அதிக வேலையிருந்தது. இதனால், கணேசனுக்கும் வேலாயுதத் திற்கும் அதிக நேரம் தனியே கிடைத்தது. கணேசன் வேலாயுதத் தைச் சந்தித்த போது ஆரம்ப நாட்களில் வேலையைப் பற்றித்தான் விசாரித்துக்கொள்வான். பிறகு மெல்ல மெல்ல அரசியல், தத்துவ விசாரணைகளில் அது கொண்டு போய் விட்டுவிட்டது. வேலா யுதத்திற்கு கணேசன் மீது ஏற்பட்ட பிடிப்பில், அவனோடுதான் எதையும் விவாதித்தான்.
“… நம்ம அரசியல் தலைவனுங்கள்னா நம்ப மத்தியில் இருந்தில்ல வரணும்? வேறெங்கையெல்லாமோ இருந்து வந்த தினால் தான் இன்னைவரைக்கும் நமக்குத் தீர்வில்லாமப் போயிரிச்சு … சும்மாத்தான் கேக்கிறேன். நீங்க இருக்கீங்க, அவரு சிவநேசன் இருக்காரு… நீங்கள்ளாம் இப்பிடி மாறிப்போன துக்கு…. அதான் நெறையப்பேரு பூசுவா இருக்கிறானுங்களே – அதுல நீங்க ரெண்டு பேரும் இன்னுங் கொஞ்சப் பேர் மட்டும் இப்பிடி மாறிப்போனதுக்கு என்ன காரணம்? அது ஒரு பக்கங் கெடக்குது. நான் யோசிக்கிறது என்னான்னா பேச வர்றதுன்னா நாமளும் மூட்டை தூக்கிக்கிட்டே இதுகளைப் பேசணும். இல்லாட்டி பேசாமலே இருக்கணும். இந்த மாதிரி வேறான மட்டத்தில் இருந்து நடத்தறதெல்லாம் சரிவராது” என்பான். கணேசனுக்கு இது உறைத்தது. கமலத்தின் நினைவு மனதில் ஓடிப்பாய்ந்தது. சிவநேசனும் கணேசனும் வேலைகளெல்லாம் முடிந்து, வளாகத்தை நோக்கிப் பிரயாணம் பண்ணுகையில் கணேசன், சிவநேசனை அதுவரையில் கேட்காமலிருந்த பல கேள்விகளைக் கேட்டான். தகப்பனார் பெயர்…. தொழில் … இடம்… இப்படி கணேசன் கேட்டது சிவநேசனுக்குப் புதிதாக இருந்தது. இவற்றிற்கான மறுமொழிகளின் பின் தொடர்ந்த மௌனத்தை முறித்துக் கொண்டு கணேசன் வேலாயுதத்தின் கேள்வியைக் கேட்டான்….. அதான் நெறையப் பேரு பூசுவா இருக்கிறானுங்களே – அதில் நீங்க ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சப் பேரு மட்டும் இப்பிடி இருக்கிறதுக்கு என்னா காரணம் …..?” சிவநேசன் முதலில் மோவாயைத் தடவிக் கொண்டான். பிறகு மௌனம். கணேசனே தொடர்ந்தான். “இப்பிடிக் கேக்கிறது கோட்பாட்டில் நம்பிக்கையில்லாததைக் காட்டுவது எண்டது வசதியான மறுமொழியாய் இருக்கலாம். ஆனால், அது உண்மை இல்லை. அதுவும் வேலாயுதத்தைப் பொறுத்த மட்டில்.”
“இல்லை, கணேசன்…” என்று தொடங்கிய சிவநேசன்…. ” இதைப் பற்றி விரிவான கொள்கைகள் தத்துவார்த்த ரீதியா கவும் …. சைக்கோலோஜிகலாகவுமிருக்கு ….” என்று மட்டும் சொன்னான். கணேசன் இதை, இந்த அளவோடு விடுவதாக இல்லை.
“உம்மட யோசனை என்னெண்டால் – சிலபேருக்கு மட்டுமே வர்க்கப் போராட்டத்தின் முழு உண்மைகளும் விளங்கக்கூடியவலு இருக்குது. அதோ… இல்லை …. ஒரு சரித்திரரீதியான 110 விசையின் முனைகளாக யாராவது கொஞ்சப் பேர் இருக்கத்தானே வேணும் எண்டதுதான். சரித்திர விதி எண்டதோ…?”
சிவநேசன் இதற்கும் மறுமொழி சொல்லவில்லை. அமைதி யாகிப் போனான். இந்த அமைதி கணேசனைத் தொற்றி, அவனும் சிந்தனையில் ஆழ்ந்தான். இருவரும் போய்ச் சேர்ந் தார்கள்.
விடுமுறை கழிந்து பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. கணேசனின் பெறுபேறுகள் நன்றாகவே அமைந்திருந்தன. சரித்திரம், பொருளாதாரம் இரண்டினுள் ஏதாவது ஒன்று விசேஷ படிப்புக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதியும் கிடைக்கும். கணேசனுக்கு இந்தப் பெறுபேறுகள் வந்தபோது வேலாயுதத்தின் மொழிகள் மனதில் திரும்பத்திரும்ப அதிர்ந்து கொண்டிருந்தன.
“…இப்பிடி மாறினதுக்கு என்ன காரணம்…?”
இப்பிடி மாறினது என்பதால், இப்படி அரசியல் பேசுகிற வர்களைத்தான், இப்படிப் பேசிக்கொண்டு மட்டும் இருக்கிற வர்களைத்தான் வேலாயுதம் சொல்லியிருக்கிறான் என்று மனதில் ஒரு சூடு. போராட்ட ஓலம் சிறுகச் சிறுகக் கூடி… பழைய ஆவேசத்தைப் போல இவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு ஓடிப்போய் லட்சியைத்தை அடைந்துவிட வேண்டும் என்ற ஆவேசம் குடி கொண்டது. இந்த முறை இதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, அதற்கான வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்தான்.
கட்சிக் காரியாலயத்தில் வேலை செய்வோம்’ என்று முடிவெடுத்துக்கொண்டு சிவநேசனிடம் போனான். சிவநேசன், இதை அவ்வளவாக விரும்பவில்லை.
“படிப்பை முடித்துக்கொண்டு போனாலென்ன?”
“இல்லை சிவநேசன். நாங்கள் – கட்சியின் புத்திஜீவிகள் – எல்லோரும் முற்றாக எந்த மாற்றத்துக்கும் மனதின் அடியில் தயார் இல்லை . இந்தப் பல்கலைக்கழகம் பிரளயத்தின் விளைகளனாக முடியாது. எங்கட படிப்பின்ர சமூகத் தேவைக் குறைபாடுகளைப் பற்றி யாருக்குத் தெரியாது? படிச்சுப்போட்டுப் பாக்கப்போகிற உத்தியோகம்… அதையொட்டி வரப்போற நோக்குகள், கொள்கைகள் எல்லாம் நாங்கள் பேசுகிற கொள்கைகளோட முரண்பட்டுப்போகும். நாங்களும் வர்க்கப் போராட்டத்தின்ர சுழலின்ர மையத்தில் இருக்க வேணும். வேலாயுதம் சொல்லுற மாதிரி வேற மட்டத்தில் – தூர நிண்டு சரி வராது. எங்கேயெண்டாலும் ஒரு வேலை செய்யப் போறன்.” கணேசன் பெலத்தேதான் சொன்னான். அவன் குரலின் உறுதியைக் கண்டு, “சரி, பாப்பம். தலைவரோடு கதைக்க வேணும்” என்று சிவநேசன் மறுமொழி சொன்னான். அவனுக்குள்ளே ஒரு யோசனை வேர்விட ஆரம்பித்தது. கணேசன் போவதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தான்.
பல்கலைக்கழகப் படிப்பை உதறிவிட்டுப் போவதைப் பற்றிக் கணேசனுக்கு எந்தவிதமான கிலேசமும் இல்லை. இந்தக் கொள்கையும், கமலத்திற்குக்கூடச் சொல்லாமல் போக வைத்ததன் அன்றைய வெறியைப் போலவே இன்றும் தன்னுள் ஒரு வெறியைக் கிளர்ந்தெழவைப்பதை அவனால் உணர முடிந்தது. இனிமேல் அவளைக் காணுவதற்கான சந்தர்ப்பங்கூடத் தனக்குக் கிடைக்குமோ என்ற பயத்தில், அவளை ஒருதரம் பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டான். அவளைப் பார்த்துத்தான் கேட்கப் போவது என்ன, பேசப்போவது என்ன என்பது பற்றி அவனுக்கு எதுவித தீர்மானமும் இல்லை. தான் விட்ட தவறை மன்னிக்கச் சொல்லிக் கேட்பதற்குக்கூட அவனுக்கு அச்சமாக இருந்தது. எனினும், தன் வாழ்க்கையின் திருப்தியான ஒன்றேயொன்றாகிப் போய்விட்ட கல்வியை நாடிப் போதவற்கு ஓர் ஒளியாயிருந்ததைப் பற்றி, அதற்கு அவளின் அன்பே பெரிய உறுதுணையாயிருந்ததைப் பற்றி நன்றி சொல்லவாவது தான் கடமைப்பட்டுப்போனதை யோசித்தே அவளைக் காண முயற்சித்தான்.
ஒரு நெடிய மனச் சுழற்சிக்குப் பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளைப் பார்க்கப் போனபோது குணசேகரம் இல்லை . கமலம் தனியே இருந்தாள். இவனைப் பார்த்தபோது, அதுவும் தனியாகவே பார்த்தபோது, அவள் விக்கித்துப்போனாள். அவனைப் பற்றின நினைவுகளெல்லாம் அழிந்து போக வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ளச் செய்த முயற்சியினால், அவன் நினைவு அழிந்து போனாலும் மனதின் ஒரு சிறிய மூலையில் – சிலவேளைகளில் அதுவே மனதை நிறைக்கிறது – தன் வாழ்க்கையில் சம்பந்தப் பட்டவன் என்ற மன அதிர்வு அவளுக்கு உண்டு. இவன் பிரசன்னம் இந்த அழிவை எதிர்ப்பது போலிருந்தது. அவளுள் ஒரு காழ்ப்பு ஒதுங்கியது. ” என்ன வேணும்?” என்ற அவள் கேள்வியில் இருந்த மனோரசங்களை அவனால் ஊகிக்க முடிந்தது.
“உம்மைத்தான் பாத்துட்டுப் போவம் எண்டு வந்தன்” என்று தொடங்கினான்.
“என்னைப் பாக்கிறதுக்கு இன்னும் என்ன இருக்கு?” அவள் ஒரு கதிரையின் கரையைப் பிடித்துக்கொண்டு விறைப் பாய் நின்றாள். அவன் இன்னும் வாசற்படியில் தான் நின்று கொண்டிருந்தான். அப்படியேதான் முழு நேரமும் நிற்க வேண்டும் போல இருந்தது. வெளியே மேகங்கள் மாலைச் சூரியனை மறைத்துக்கொண்டன.
“அப்பிடியில்லை. நான்… நான் இந்தப் படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போப்போறன். போறதுக்கு முந்தி நான் உம்மைக் கண்டுட்டுப் போவமெண்டு….”
“ஏன்?” “இனிமேல் நான் உம்மைக் காண முடியாது…”
சரித்திரத்தின் பழைய ஏடுகளைத் திரும்பப் புரட்டி….மாட்டுக் கொட்டிலும் தென்னங்கீற்றில் பட்டுத் தெறிக்கிற சந்திர ஒளியும், தன் ராசாவும் அவன் ஒரு கயவனைப் போல் ஓடியதும், பிறகு ‘மந்திரிமாரும்… திரும்ப இப்போது தன்னைக் கடைத் தேற்றிய ஒரு கடவுளும்…’ ஓ. . இவனை ஒட்டியே தான் விழுந்ததை யோசித்துப்பார்த்து எழுந்த காழ்ப்பில்,
“நல்லதுதான்” என்றாள். ‘மந்திரி மாரின் தொடுப்புகள் பற்றி அவனுக்கு ஏதேனும் தெரியவந்திருக்கும் என்கிற யோசனை வேறு மனவெளியில் பாய இன்னும் மிக ஆத்திரப் பட்டுக்கொண்டாள். இவனுடைய விலாசத்தைத் தெரிந்து கொள்வதற்காய்ப் பரமேசுவரனிடம் போனது முதற்கொண்டு தன் சரிந்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்க ஆத்திரம் அழுகை யாக மாற முயன்று கொண்டிருந்தது. அவள் ஆத்திரத்தை அவன் உணர்ந்துகொண்டான்.
“இல்லை…நான் சொல்லுறது…நான் போறதுக்கு முந்தி உம்மைக் கண்டு….என்ர நன்றியைச் சொல்லுவம் எண்டு தான்…”
இது எந்த விதத்தில், என்னத்துக்கான நன்றி என்று அவளுக்கு விளங்கவில்லை. நக்கல் கதையென்று அவளுக்குப் பட்டது.
“ஓ! ஆருக்கு நன்றி சொல்லுறீங்கள்…” என்று உச்சக் குரலில் தொடங்கினாள். அதற்குள் அழுகை பொத்துக் கொண்டு வந்து விட்டது. இதைத் தாங்க கணேசனால் முடியவில்லை. அவள் அப்படியாயும் கருதியிருக்கலாம் என்பது விளங்க, அவன் கவலைப்பட்டான்.
“இல்லை … இல்லை … நீர் பிழையாய் எடுக்கக்கூடாது…” அவள் அவனைத் தொடர விடவில்லை.
“நான் பட்ட கஷ்டங்கள் காணும். நான் இப்ப நிம்மதியாய் இருக்கிறான். இதில் ஆரும் குறுக்கே வர முடியாது….” அவள் விக்கல் குறைந்து கொஞ்ச நேரத்தின் பின்னர் திரும்பவும் அவள் ஆத்திரம் பழைய நினைவுகளினால் கிண்டப்பட்டுப் பொங்கத் தொடங்கியது. பேச முடியாமல், அவனை அங்கேயே விட்டுவிட்டு உள்ளே அவள் போய்விட்டாள். இவள் தன்னுடைய பக்க நியாயங்களைக் கேட்கமாட்டாளா என்ற ஆதங்கத்தில் இருந்தவன் கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுத் திரும்பி ஒரு பெருமூச்சோடு, அந்த வீட்டையும், அப்பால் ரோட்டையும் தொடுக்கும் சிறு பாதையில் இறங்கி நடந்தான். மாலை நேரத்து மேகங்கள் கவிந்து மழையைப் பொழிய ஆயத்தமாகிற நேரம் குணசேகரம் எதிரில் வந்து கொண்டிருந்தான். பல யோசனை களுடன் வந்தவனுக்குத் தன் வீட்டிலிருந்து வரும் கணேசனைப் பார்த்து ஒரு சிறு புன்முறுவலுடன் தாண்டிச்சென்ற கொஞ் சக் கணத்தின் பின்னர்தான் மனதில் உறைத்தது. கணேசனின் கண்கள் கலங்கியிருந்ததும் அப்போதுதான் அவனுக்கு உணர் வாகியது. என்ன நடந்தது?’ என்ற சிந்தனையுடன் வீட்டில் நுழைந்தான். கமலத்தின் கண்ணில் இப்போது ஒரு மிக மெல்லிய பணக் கண்ணீர்தான் இருந்தது. இதை குணசேகரம் கண்டான். அவளை இதைப் பற்றி எதுவும் கேட்காமல், வந்த உடனேயே புத்தகக் குவியலுக்குள்ளே தலையை நுழைத்துக்கொள்ள, கமலம் தேநீரைக் கொண்டுவந்து வைத்துவிட்டு – வழக்கமாய் அதிலேயே நிற்கிறவள் – உள்ளே போனாள். இதைக் கவனித்தவன் அவளைக் கூப்பிட்டு முன்னால் இருத்திக்கொள்வோம் என்று யோசித்து விட்டுப் பிறகு அதைச் செயல்படுத்தாமல் புத்தகக் குவியலுக்குள் தலையை நுழைத்துக்கொண்டான். சிறிது நேரத்தின் பின்னர் தலையை நிமிர்த்தி, இரண்டு பேரும் சும்மா கதைக்கக்கூடாதா?’ என்று யோசித்துவிட்டுத் திரும்பவும் பழைய சாம்ராச்சிய மொன்றினுள் புகுந்து கொண்டான்.
கணேசன் பிறகு மிகவும் வருத்தப்பட்டான். அவளைப் பற்றிய உணர்வு என்ன இருந்தாலும், அதைச் சொல்வதற்குத் தனக்கு உரிமையில்லை என்று யோசித்துப் பெருமூச்செறிந்து கொண்டு, தான் போகவேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி சிவநேசனிடம் நச்சரிக்கத் தொடங்கினான்.
தலைவரிடமிருந்து மறுமொழி வராத நிலையில் பல்கலைக் கழகம் தொடங்கிவிட்டது. கட்சிக் காரியாலயத்தில் வேலை வருமட்டும் தொடர்ந்து படிக்கும்படி சிவநேசன் அறிவுரை தந்தான். கணேசன் பொருளியலை விசேட படிப்பிற்கு எடுத்துக் கொண்டான். இதற்குள் யாரோ குணசேகரத்திற்கு கணேசன் பல்கலைக்கழகத்தை விட்டுப் போகப்போகிறதைச் சொல்லி விட்டார்கள். அவர்கள் அவனுடைய சக மாணவராயிருக்கலாம். குணசேகரம் , இவன் என்ன மடையனாயிருக்கிறான்’ என்று சலித்துக்கொண்டே இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ‘நான் அன்று அவனை வீட்டருகில் கண்டதனால் – அதைப் பற்றிச் சந்தேகம் கொள்வேனோ என்று ஐயப்பட்டு – அது ஆபத்தைக் கொண்டுவரும் என்று பயந்துதான் போகிறானோ என்று கவலைப்பட்டான். கணேசன் ஒரு நல்ல மாணவன். அவன் அபிப்பிராயம் ஒரு புறமிருக்க…. எதுவாக இருந்தாலும் இவனுடைய நியாயம் என்ன என்பதைக் கேட்டுப் பார்ப்போமே என்ற யோசனையுடன் அவனைக் கூப்பிடுவித்துக் கேட்டான். கணேசன் பலவித மனக் குழப்பங்களுடன் வந்து சேர்ந்தான். அவனுடைய சரித்திர ஆசிரியன் என்கிற முறையில் தான் கேள்விகள் தொடங்க வேண்டும் என்ற திட்டத்துடன் குணசேகரம் கேட்டான்.
“உமக்கு சரித்திரமும் ஸ்பெஷல் செய்யக் கிடைச்சிருக்குமே? ஏன் அதை ஸ்பெஷலுக்கு எடுக்கேல்லை?”
“பொருளியல் பிரயோசனம் கூடியது எண்டதால், அதை எடுத்தன்.” குணசேகரத்துக்கு இதை விவாதிக்கப் பொறுமை இல்லை. கணேசனுக்குத் தான் தொழிற்சங்க வேலைக்குப் போவதைப் பற்றிச் சொல்ல மனமில்லை. குணசேகரம் நேரே இறங்கினான்.
“படிப்பை விட்டுட்டுக் கட்சிக் காரியாலயத்தில் வேலைக் குப் போறீராமே. உண்மையா…?”
“ஓம் சேர்…” இதற்கு மேலே அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை .
“இதுக்கு ஏதாவது சொந்தக் காரணம் இருக்குதா? அல்லது ஏதேனும் ஒரு கொள்கை ரீதியில்….” “ஒரு கொள்கை ரீதியிலதான்…”
“இந்தக் கொள்கையை வேறு சொந்தக் காரணங்கள் புறத்தே நிண்டு இயக்கியிருக்குமோ?”
கணேசனுக்கு, குணசேகரம் பரமேசுவரனைக் குறுக்கு விசாரணை செய்தது பற்றிப் பரமேசுவரன் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்து மனதை வருத்தியது. தன் கடந்தகாலத்தின் ஒரு பகுதியைத் தெரிந்துவைத்துக்கொண்டுதான் இப்படி குணசேகரம் கேட்கிறான் என்பது அவனுக்கு உறைத்தது. அவனிடம் கமலம் என்ன சொல்லியிருப்பாள்? இதுபற்றி என்ற யோசனையும் ஓடியதில் மனம் கொந்தளிக்க ஆரம்பித்தது. இந்தச் சிந்தனைகளினால் அவனுக்குப் பதில் கூற முடியவில்லை .
“இது தனிப்பட்ட – அந்தரங்கமான கேள்வியெண்டது எனக்குத் தெரியும். தனிப்பட்ட ரீதியில் இதைக் கேட்கவும் எனக்கு உரிமையில்லை. ஆனால், ஒரு நல்ல மாணவனை இழந்துவிடலாம் எண்ட பயத்தில் கேக்கிறன்…”
கொஞ்சம் விட்டுத் தொடர்ந்தான்.
“இந்தக் கேள்விக்கு மறுமொழி எனக்குத் தேவையில்லை. இந்தக் கேள்வியை நீரே யோசிச்சுப்பார்த்து அதுக்கான மறுமொழியின்ர அடிப்படையில் நடக்கிறது நல்லது எண்டது ஒரு பக்கமிருக்க..” இதற்கு அப்பால் குணசேகரத்திற்கு வார்த் தைகள் வரவில்லை. பலவற்றைச் சொல்ல வேண்டும் என்று சிந்தித்தவனுக்கு, அவற்றை எப்படிச் சொல்வது என்று யோசிக்கும் போது கணேசன் குறுக்கிட்டான்.
“இல்லை சேர். தனிப்பட்ட முறையில் எந்தக் காரணமும் இல்லை. கட்சியில் ஒரு கணிசமான ஆக்கள் தங்களை முற்றாய் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்ளுறதில்லை. வேற மட்டங்களில் நிண்டு கதைச்சுப்போட்டுப் போய்விடு கினம். நானும் இவர்களைப் போல ஆக விரும்பேல்லை. அதுதான்…அவ்வளவுதான் சேர்.” கவிந்த ஒரு சிறு மௌனத்தின் பின் “நீங்கள் சொல்லுறது எனக்கு விளங்குது என்று சேர்த்துக் கொண்டான்.”
“என்ன விளங்குது?” என்று கேட்க, குணசேகரத்திற்கு மிகுந்த ஆவல் எழுந்தது. ஆனால், “நீர் போறதுக்கு நான் காரணமாய் அமையக்கூடாது. அதுதான் சொன்னேன்” என்று சொல்லிப் போய்விட்டான். கணேசனுக்கு இந்த வார்த்தைகள் மனதில் வேகத்துடனேதான் ஏறின. இவன் ஒரு நல்ல மனிதன் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
ஆனால், இந்த நிகழ்வுகள் எதுவும் அசைத்துவிட முடியாத படி கணேசனின் மனதில் இறுக்கம் இருந்தது. நான் போகத்தான் போகிறேன்.’
இதைத் தொடர்ந்து இதற்கு ஒரு சம்பந்தமுமில்லாமல் அந்த துயரமான சம்பவம் நடந்தது. ஒரு சிறு பிரளயத்தின் நடுவில் …. பல்கலைக்கழகம் ஒரு புரட்சி விளையும் களன் – அல்லது விளைவிக்கக்கூடிய களன் – என்று நினைக்கிறவர்களின் எண்ணத்தை உறுதிப்படுத்த முயல்வதாய். பிரளயம் எப்போ வரும் என்று யாருக்காவது தெரிகிறதா? மேகக் கூட்டங்கள் இடத்துக்கு மேலே குவிந்து கவிந்து சொரியலாம். சலித்தபடி அப்பாலும் போகலாம். அது போன்றுதான்…
அந்தக் குழப்பம் – அதை ஒரு சிறு புரட்சி என்று தோழர் கள் வர்ணித்தார்கள் – ஏற்பட்டதன் நியாய அநியாயங்களைப் பற்றியோ அதன் தர்க்கத்தைப் பற்றியோ எல்லோரும் மறந்து போனார்கள். எல்லோர் மனதில் இருந்ததும் குழப்பத்தின் மெய்மையே.
ஒரு கதையின்படி, இரவு பன்னிரண்டரைக்கு சினிமாவுக் குப் போய்விட்டு வந்து கொண்டிருந்த இரண்டு மாணவர் களை, பொலிஸ் உடையிலும் மதுவின் ஆதிக்கத்திலுமிருந்த ஒரு அதிகாரியும், அவரைச் சூழ்ந்து அதே நிலையிலிருந்த கொஞ்ச பொலிஸ்காரர்களும் – எதற்காகவோ – அடித்துப் போட்டார்கள். அடிபட்டவர்கள் விடுதிக்கு வந்து மற்ற மாணவர்களை எழுப்பி இதைச் சொல்ல, அடிபட்டவர்களைத் தோளில் சுமந்தபடி அந்த ராத்திரி வேளையில் உபவேந்தர் வீட்டுக்கு புறப்பட்டுப் போனது ஒரு பட்டாளம். இந்தப் பட்டாளத்தில் சிவநேசனும் கணேசனும் அவர்களுடைய மூத்த தோழர்களும் போனது உண்மைதான். அந்தக் கணத்தில், பல விஷயங்களில் முடிவெடுக்கிற சிவநேசனுக்கோ அல்லது அவன் உயர்மட்ட சகபாடிகளுக்கோ திட்டவட்டமான ஒரு போராட்ட யோசனையும் இருக்கவில்லை. ஆனால், சிவநேசனுக்கு மட்டும் இந்தச் சிறு சம்பவத்தின் முழு வலுவும் தெரிந்தது. பலரை விலக்கிவிட்டுக்கொண்டு முன்னே பட்டாளத்தை வழி நடத்துபவர்களைச் சேர்ந்துகொண்டான். அங்கே, உப வேந்தரின் அதிர்ஷ்டம், அவர் இல்லை. பட்டாளத்திற்கு வந்த ஆத்திரத்தில் அவர் இல்லை என்று தெரிவித்த அவர் மகனையும் தாக்கி, அவர் வீட்டிற்குக் கல்லும் எறிந்துவிட்டுக் கதவு ஜன்னல்களை நொருக்கிவிட்டு ரெஜிஸ்ட்ராரின் வீட்டை நோக்கிப் போனார்கள்.
ரெஜிஸ்ட்ராருக்கு இவர்கள் வருவது பற்றி இதற்கிடையில் துப்புக் கிடைத்துவிட்டது. கடைசி முயற்சியாகத்தான் அவர் பொலிசுக்கு அறிவித்ததென்பது உண்மையே. அதற்கு முதல் தனக்குத் தெரிந்த மேலதிகாரிகளுடன் அவர் போனில் பேசியிருந்தார். பொலிசுக்கு அவர் பதட்டத்துடன் போன் பண்ணி முடியவும், பட்டாளம் அவர் வீட்டை ஆக்ரோஷத்துடன் நெருங்கவும் சரியாக இருந்தது. ஒவ்வொரு யுகமாகக் 116 கழிந்து கொண்டிருந்த நேரக்கூறுகளில் அவர் இவர்களை ஆசுவாசப்படுத்த முயன்று கொண்டிருக்கையில் பொலிஸ் வந்து சேர்ந்தது. இரண்டு வான்கள் நிறையப் பொலிஸ்காரர்கள். முன்னிருந்த வானிலிருந்து ஓரதிகாரி வந்து ரெஜிஸ்ட்ராருடன் சேர்ந்துகொண்டார். மாணவர் தலைவர்கள் சூடாக அவர் களுடன் விவாதித்தார்கள். அச்சுறுத்தினார்கள். பொலிஸ் அதிகாரியின் கண்டிப்பான உத்தரவில் அவர்கள் தற்காலிகமாகக் கலைந்து போகவேண்டியதாய்ப் போயிற்று. கலைந்து போனவர்கள் இந்தப் பொலிஸ் அட்டூழியத்தைக் களைந்து எறிய வேண்டியதைப் பற்றி விவாதித்துக்கொண்டு போனார்கள்.
சிவநேசனும் அவனுடைய இன்னொரு தோழனும் அடுத்த நாள் காலை விடிந்ததும் விடியாததுமாகத் தலைவரிடம் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் அன்று இரவு திரும்பும் போது ஸ்ட்ரைக் தொடங்கிவிட்டிருந்தது. உபவேந்தர் வீட்டை நாசப்படுத்தியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்று அதிகாரபீடம் இறங்கியது. மாணவர்களுக்கு – புரட்சிக்காரர்களுக்கு – இது ஆத்திரத்தை மூட்டியது. சிவநேசன் வேலைநிறுத்தக்காரர்களுடன் திரும்பி வந்து சேர்ந்துகொண்டான்; கணேசனுந்தான். மாணவர்களுடைய ஒற்றுமையைக் கண்டு மகிழ்ந்து போனான். இது ஒரு சிறு போராட்டம் – அதுவும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு சிறு கூறு என்று யோசிக்கையில் இறுதிப் போராட்டத்தைப் பற்றி ஆவல் கலந்த தெம்புடன் கற்பனை பண்ணிக்கொண்டான். சுரண்டல் வேரோடு களைந்தெறியப்பட!’ என்ற சங்கற்பத்தை நினைத்து உறுதியும் கொண்டான். சுலோக அட்டைகள் தயாரித்து முன்னே நின்றான்.
வேலைநிறுத்தம் ஓர் இறுக்கமான சூழ்நிலையில் நடந்து கொண்டிருந்தது ஒரு கிழமைவரை. அடுத்த கிழமை உபவேந் தர் வீட்டை நாசப்படுத்தியவர்களைக் கைது செய்தவற்கான விசாரணைக்குப் பொலிஸ் வந்துபோக, பொதுச் சொத்துக் களைப் பாதுகாக்க வேண்டி உபவேந்தர் பொலிசைக் காவல் செய்யவும் அழைத்தது பிசகாய்ப் போயிற்று. பொலிஸ் வான்கள் குறுக்கேயும் நெடுக்கேயும் சுற்றச்சுற்ற மாணவர்களின் ஆத்திரம் கூடிக்கூடி வந்தது. சடுதியாய்…..
மழை சற்றே தூறிக்கொண்டிருந்த ஒரு நாளில் மாலை வேளையில் இந்த மழையில் நனைந்து கொண்டும், கட்டடங்களுக்கு முன்னால் இருந்த பரந்த புல்வெளியில் அமர்ந்து சுலோக அட்டைகளைத் தாங்கித் தங்களுக்குள்ளே சிரித்துப் பேசிக் கொண்டிருந்த வேலை நிறுத்தக்கார மாணவர்களைச் சுற்றி ஒரு பொலிஸ் வான் வந்து நின்றது. ஒரு வட்டம் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிவிட்டு வழக்கம் போலவேதான் வந்துநின்றது. இவர்கள் நனைவதைப் பார்த்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டு பொலிஸ்காரர்கள் நின்றது, மாணவர் பட்டாளத்தின் ஆத்திரத் தைக் கூட்டியிருக்க வேண்டும். அது ஒரு சந்தர்ப்பம். நேரங்கெட்ட வேளை. உணர்ச்சிகள் வக்கிரமான புலத்தை அமைத்துக்கொண்ட சூழல். எங்கேயிருந்தோ ஒரு கல் பொலிஸ் வானின் முன் கண்ணாடியை நோக்கிப் பறந்து வந்தது. முன்னாலிருந்த சாரதியும் பொலிஸ் அதிகாரியும் குனிந்து கொண்டார்கள். முன்கண்ணாடி நொருங்கியது. இதைத் தொடர்ந்து மலைப் பிஞ்சுகள் ஒவ் வொன்றாக வரத் தொடங்கின. அந்த நேரத்தில் கணேசன் சுலோக அட்டையொன்றைப் பிடித்துக்கொண்டு இருந்தான். பொலிஸ்காரர்கள் ஒவ்வொருவராக வானிலிருந்து குதித்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் துப்பாக்கி இருந்தது. “பொலிஸ் நாய்களே! ஒழிந்துபோக !” என்று கத்திக்கொண்டு நாலா திசைகளிலிருந்தும் மாணவர்கள் ஆவசேத்துடன் பொலிஸ் வானை நோக்கி ஓடி வந்தார்கள். இவர்களைக் கடந்து வானை எடுக்க முடியாது! கணேசன் ஓடிவந்தவர்களைப் பார்த்தான். சிவநேசனையும் காணவில்லை.
அதிகாரி உத்தரவு தர பொலிஸ்காரர்கள் மேல் நோக்கிச் சுட்டார்கள். அச்செய்கையோ அல்லது அதிகாரி மெகாபோனில் நிற்குமாறு தந்த உத்தரவோ ஒரு பலனையும் அளிக்கவில்லை. வானைச் சுற்றி பொலிஸ்காரர்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதிகாரி பிஸ்டலை எடுத்து வெளியே வைத்துக்கொண்டார். வானில் இருந்த ரேடியோவில் ஏதோ பேசினார். பின்னாலிருந்து ஓடிவந்த மாணவர் கூட்டத்துடன் சுலோக அட்டைகளைத் தாங்கிக் குந்தியிருந்த மாணவர் கூட்டம் சேர்ந்து கொண்டு அவர்களுக்கு சுமார் நூறு யார் தூரத்தே நின்றுகொண்டிருந்த வானை நோக்கி ஓடி வரத் தொடங்கினார்கள். அதில் இந்த கணேசனும் இருந்தான். அவனுள் மிகுந்த வெறி மூண்டிருந்தது. பொலிஸ் அதிகாரி இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு – அதில் ஒரு கையில் பிஸ்டல் இருந்தது – பெலத்து உத்தரவிட்டான். சுடு’ ஒரு வட்டம் தனித்தனியே சுட்டார்கள். பொத்தென்று ஐந்தாறு மாணவர்கள் விழுந்தார்கள். ஓடிவந்த கூட்டம் சட்டென்று நின்றது. மறுதரம் குண்டுகளை மாற்று வதற்குமுன் கூட்டம் கலையத் தொடங்கியது. சிலபேர் அவர்களை மறித்தார்கள். ஆனால், ஒருவரும் முன்னேறவில்லை . அதிகாரி கையைக் காட்டி மேலும் சுடவிருந்த பொலிஸ்காரர்களை மறித்தான்; வானில் ஏறச் சொன்னான். தானும் ஏறிக்கொண்டு, ஆத்திரமடைந்த திகைத்துப்போய்ச் செயலற்றிருந்த மாணவர் கூட்டத்தை விலக்கி வேகமாய்ப் போய்ச் சேர்ந்தான். வான் ஓடஓட அதைத் துரத்திக்கொண்டு கல்லெறிந்தார்கள் – கொஞ்ச தூரந்தான். வான் போய்விட்டது.
விழுந்த அறு பேரில் நான்கு பேர்களின் விழிகள் பிதுங்கி யிருந்தன. இரண்டு பேர்கள் துடித்துக்கொண்டிருந்தார்கள். கணேசனும் அந்த இருவரில் ஒருத்தன். அவன் வேதனையால் துடித்துக்கொண்டிருந்தான். யாரையோ தேடுபவன் போலப் பதறிக்கொண்டிருந்தான். மாணவர்கள் தாமதிக்கவில்லை. வந்த கார் ஒன்றை மறித்து வைத்தியசாலைக்குக் கொண்டு போக ஏற்பாடு பண்ணினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உயிர்போய்க் கொண்டிருப்பதை மாணவர்கள் உணர்ந்தார்கள்.
வேதனையையும் மீறி இந்தச் சிறு போராட்டத்தில் தன் பங்கை நினைத்து கணேசனுக்கு மகிழ்வு ஏற்பட்டது. சூன்யம் ஒன்று கவ்வுவதைப் போல் ஒரு பயம் சூழ்ந்து கொண்டது. கமலம், தன்னை முத்தமிட வருவதைப் போல் ஏற்பட்ட ஒரு கற்பனையுடன் அவன் நினைவிழந்தான். வைத்தியசாலைப் 118 படுக்கையில் தொய்ந்து, அவன் அரைச் சுய உணர்வு பெற்ற ஒரு கணத்தில், ‘கமலம்’ என்று பிதற்றியதைச் சூழ இருந்த சிவநேசன் அவதானித்தான். கணேசன் செத்துக்கொண்டிருப்பதை அவன் பார்த்த கணத்திலே கணேசனின் வைராக்கியத்தைப் பற்றி யோசித்தான். வேலாயுதத்தின் எப்போதும் கேட்கும் ஒரு கேள்வியை அடக்கிக்கொண்டு இருக்கும் முகமும் நினைவில் எழுந்தது.
இந்தப் பொடியனுக்கு நான் விளக்கியிருந்திருக்க வேணும். மனிதனில் ஏற்படுகிற மாற்றமும் அடிப்படையாய் உள்வாரி மாற்றந்தான். அதுவும் ஒரு இயக்கம். இன்ன வெளிவாரியான சம்பவத்தால் தான் நான் இப்படியிருக்கிறேன் எண்டது எப்படிச் சரியாகும்? நான் இப்படியிருக்கிறதுக்கு என் இணக்கமும் இருக்கிறதுதானே? ஒரு பழைய சூழல் அவனுக்கு இருந்திருக்கு. அதில் இருந்து அவன் விலத்தி ஓட முயல்கிற போது அரசியலில் வீழ்ந்தாலும் இவனுடைய இணக்கம் இல்லாமல் இவன் சேர முடியுமா என்று சிந்தித்தவனுக்கு மனத்தின் அடியில் கீறல் விழுந்தது.
அவன் கேட்டது இதை. எங்கடை செயல்களிலே இருக்கிற முரண்பாடுகளைச் சொல்லத் தெண்டித்தான். உண்மையில் இது போராட்டத்தின் இயக்கப் போக்கிற்குத் தடைதான்….. ஆனால், ஓ… இதுகளெல்லாம் இப்போ என்ன யோசனை?’ குணசேகரத்திடம் பொதுவாக இந்த விபத்தைப் பற்றிச் சொல்வது, கமலம் இதைக் கேட்டு என்னத்தைச் செய்தாலும் செய்து கொள்ளட்டும் என்ற முடிவுடன் போகத் தீர்மானித்தான். அவன் போகக் காலடி எடுத்து வைத்தபோது கணேசன் இறந்து விட்டிருந்தான். கணேசன் முகத்தைப் பார்த்தவனுக்கு அவன் சொல்லவருவது:
“நான் இறந்து போனேன். நீ உயிரோடு இருக்கிறாய். களத்தின் முனையில் நான் இருந்தேன். புறத்தே நீ நின்றாய்..” என்பதுபோல இருந்தது. வேலாயுதத்தின் நினைவு வந்தது. களத்தில் இறங்க வேண்டியதுதான்’ என்று முனகிக்கொண்டே குணசேகரத்தின் வீட்டிற்குப் போக ஆரம்பித்தான்.
இதற்கிடையில், மாணவர்கள் பல்கலைக்கழக வளவினுள் பிரவேசிக்கலாகாது என்று தடையுத்தரவு போட்டிருந்தார்கள். அவன் வளவுக்குள் ஒருமாதிரிப் பிரவேசிக்கும் போது இருட்டி விட்டிருந்தது. மழை இன்னும் தூறிக்கொண்டிருந்தது. குணசேகரத் தின் வீட்டுக் கதவைத் தட்டினான். மெதுவாக விஷயத்தைச் சொல்வது என்கிற யோசனையுடன். குணசேகரம்தான் கதவைத் திறந்தான். கமலம் ஒரு சாய்வு நாற்காலியில் இருந்து தைத்துக் கொண்டிருந்தவள் எழும்பினாள். ஆறுமுக வாத்தியார் கந்த புராணத்தில் ஆழ்ந்து போயிருந்தார். உள் வெளிச்சத்தின் பிரதி பலிப்பில் மழையில் நனைந்துபோயிருந்தவனின் முகமே சோகத் தைக் கொட்டியது. எல்லாக் கண்களும் இவனையே பார்த்தன. சிவநேசன் முதலில் மூன்று பேர்களையும் நோக்கிக் கண்களை ஓடவிட்டபின்னர் சொன்னான்.
“சேர், உங்களுக்குத் தெரியும் எண்டு நினைக்கிறேன். கணேசன் எண்டு…எக்கனமிக்ஸ் ஸ்பெஷல் செய்யிற பெடியன்…அவனும் இண்டைக்குச் சூடு பட்டவங்களில் ஒரு ஆள்…ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டம் – தப்புறது கஷ்டம்போல இருக்கு சேர்…”
“ஓ!” என்று குணசேகரம் கமலத்தின் பக்கம் திரும்பினான். அவளுக்கு இது கேட்டிருந்தது.
வாத்தியார், “யார் தம்பி?” என்று கேட்டபடி ஓடிவந்தார். குணசேகரம் கண்களில் இருந்த கேள்விக்குறியைக் கிரகிக்கவோ அதைப் பற்றிச் சிந்திக்கவோ முன்னர் – அவள் ஒரு கணம் அதைப் பார்த்திருக்கக்கூடும் – கமலம் நிலத்தில் மயங்கிச் சரிந்தாள். அவள் வாயிலிருந்து வாந்தி வரத் தொடங்கியது. குணசேகரம் அவளை நோக்கி ஓடினான். வாத்தியார், சிவநேசன்… “கணேசன் எண்டு…” என்று பதில் சொல்வதை அரைக்காதால் கேட்டுக் கொண்டு மகள் விழுவதைப் பார்த்து மகளை நோக்கி விரைந்தார். “முருகா” என்று அடக்கமாகவே இரைந்துகொண்டார். அவர் கையிலிருந்த ‘கந்தபுராணம்’ புத்தகம் நிலத்தில் விழுந்தது.
சிவநேசன் வெளியே மழையையும் பொருட்படுத்தாமல் இறங்கி நடப்பதற்கு முன் விழுந்த புத்தகத்தைப் பார்த்தான். உற்பத்திக் கண்டத்தின் பக்கங்கள் திறந்திருந்தன.
– 1974-1976