கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2024
பார்வையிட்டோர்: 197 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உணர்ச்சியைக் குதிரையாகக் கொண்டு நாட்களை ஓட்டு வோருக்குப் பல விபத்துக்களும் துன்பங்களும் எதிர்ப்படும். அறிவும் சிறுநலமும் சாலைமரத்து நிழல்கள் போல் அடுத்தடுத்துக் குறுக்கிட்டுத் திகைப்பை விளைவிக்கும். 

சிவநாத சர்மா அந்த நிலையில் இருந்தார். மனசிலே பெருத்த குழப்பம். இரண்டாம் கட்டை நோக்கிக்கொண்டு முற்றத்தின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். அவர்தாம் அந்த வீட்டுச் சொந்தக்காரர். 

இரண்டாம் கட்டிலிருந்து சேதுஸ்வாமி பிடரியைத் தடவிக்கொண்டே முன்கட்டுக்கு வந்தான். அவன் அந்த வீட்டில் குடியிருப்பவன். சர்மாவண்டை வந்ததும் ஓர் உள்ளங்கையை மற்றோர் உள்ளங்கையோடு தேய்த்துக் கொண்டே தன் சங்கற்பத்தைக் தெரிவித்துவிடுவதென்று பேச ஆரம்பித்தான். 

“நாளைப்போக மறுநாள் ஜாகை மாத்தலாம்னு இருக்கேன்.” 

சிவநாத சர்மாவின் காதில் அந்தப் பேச்சு விழாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் மனசு அதை வாங்காத தால் அது வெறும் ஓசையாகவே நின்றுவிட்டது.இருந் தாலும் மனிதர்களுக்குள் ஒரு மரியாதை இருக்கிற தல்லவா?- பேசுபவர் என்ன சொல்லுகிறார் என்று புரியா விட்டாலும் ஏதோ ஒரு பதில் சொல்ல வேண்டுமென்று சிவநாத சர்மா பதில் சொன்னார். 

“இனிமேல் என்ன பண்றதுன்னு தெரியல்லே.”

சேதுஸ்வாமி ஒன்றும் புரியாமல், “எதுக்கு?” என்றான். 

“இந்தக் குட்டி இருக்கிறாளோ இல்லியோ? அவளுக்காகத்தான்.” 

“அவளுக்கா? வாஸ்தவமா இவ்வளவு பணக்காரர்களும் ஆஸ்திகர்களும் நிறைஞ்ச ஊரிலே இந்தப் பொட்டைப் பொண்ணை வச்சுக்கிண்டு நீங்க தவிக்கிற தவிப்பைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமாக இருக்கு.”

“என்ன பண்றது? பெண்ணோ ரெண்டு கண்ணும் பொட்டை. அப்பா அம்மா இல்லை. இவ பாட்டி ஒத்தி இருந்தா. அவளும் இந்த வீட்டுக்குக் குடிவந்த ரெண்டு மாசத்துக்கெல்லாம் போயிட்டா. இவாளைக் குடிவச்சிக் கிண்டதற்குப் பலன் இவ பாட்டி போனப்பறம் இந்தப் பொட்டையைக் காப்பாத்தற பாரம் என் தலையிலே விழுந் திருக்கு. நல்ல மனசு படைச்சிருந்தா அதுக்குத் தண்டனை உண்டுபோல் இருக்கு.” 

தான் ஆரம்பித்த பேச்சைத் துவக்க இடைவெளி ஏற்பட்டதாக நினைத்துக்கொண்டு மறுபடியும் ஆரம்பித்தான் சேதுஸ்வாமி. 

“நல்ல மனசு படைச்சிருந்தால் நல்ல தண்டனை உண்டு. நான் கூட நாளைப்போக மறுநாள்…”

“ஏன்? ஊரிலேயும் அதான் சொல்றா. ஒரு நாளா ரெண்டு நாளா, ஒரு வருஷமா இரண்டு வருஷமா ! ஜனமம் பூராவும் இந்தப் பொண்ணுக்குச் சாப்பாட்டுக்கு வழி செய்யறதுன்னா யாராலே முடியுங்கறா.” 

“ஆனால் எனக்கொண்ணு தெரியறது: ஒங்களைப் போல ஈரம் இருக்கிறவாளைப் பாக்கறப்போத்தான் சுவாமி ஒத்தர் இருக்கலாம்னு தோண்றது.” 

“இதிலே இன்னொரு தமாஷ் என்ன தெரியுமா? அந்தப் பொண்ணுக்குச் சாப்பாட்டுக்குக்கூட ஏற்பாடு பண்ணிடுவாளாம். ஆனால் அவளுக்கு இப்பவே பனிரெண்டு வயசாச்சே, கல்யாணத்துக்கு என்ன பண்றதூன்னு யோசிக்கிறப்பொதான் ஒண்ணுமே தோணாமே போறது.” 

“ஒரு சத்திரம் சாவடிக்கு எழுதிவைக்கறது, ஒரு அம்மனுக்கு வைர அட்டிகை இழைச்சுப் போடறது, இந்தத் தர்மத்தையெல்லாம்விட இந்தப் பொட்டை அநாதயைக் காப்பாத்த ஒரு ஏற்பாடு பண்ணினால் அவாளுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. இதையெல்லாம் விட்டூட்டு வெறுமனே கூச்சல் போடறான்களே.”

“நீங்க சொல்றது ரொம்ப நியாயம். ஆனால் நம்ப தேசத்து ஜனங்களுக்குத்தான் நெஞ்சு காஞ்சு தீஞ்சு சரகாப் போயிட்டுதே. இல்லாத போனால் இந்தத் தேசம் இப்படிப் படுகிடையாய்க் கிடக்குமா? ஒரு பணக்கார ஆஸ்திகன் ஒண்டியாய் இந்தப் பொண்ணை ஸம்ரக்ஷிக்கப் படாதா? இன்னிக்கி ஒரு பணக்கார ஸநாதனி பொறுப் பைத் தட்டிக் கழிக்கிறதற்காக ஒரு போக்குக் காட்டினார். அப்படியே செஞ்சால் என்னன்னு பார்க்கிறேன். கிறிஸ்த வப் பாதிரி கிட்டே சேர்த்தூடலாம்னார். நல்ல யோசனை தான். பொண் பொழைச்சுப்போயிடும். எனக்கும் இந்த ஊரெல்லாம் சுத்தி இந்தப் பொண்ணின் சாப்பாட்டுக் காக மூணு நாலு வசூல் பண்ற தொல்லையும் விட்டுப் போகும்”

“ஒரு வார்த்தை சொல்றேன். என்ன கஷ்டம் இருந்தா லும் கிறிஸ்தவ மதத்திலே சேர விட்டூடாதிங்கோ. என்ன அந்தரங்க சுத்தியாக் காரியம் செஞ்சாலும் நாலு பேர் நாலு தினுசாச் சொல்லத்தான் சொல்லுவான்கள். அதுக்காகப் பின்வாங்கப்படாது. உலகம் பலவிதமோ இல்லியோ?…. நான் வந்து நாளைப்போக மறுநாள்…” 

சிவநாத சர்மா மனசிலே அந்தக் கடைசி வார்த்தைகள் விழவே மறுத்தன. மனத்தின் குழப்பம் நிலைகொள்ள அலையும் ஸ்திதியில் தம் எண்ணங்களையெல்லாம் வாரி மேலே கொட்டிக்கொண்டே போனார். 

“அதுக்காக எல்லாம் நான் பயப்படல்லே. இப்பொ எல்லாம் வரவர ஒவ்வொரு மாசமும் அந்தப் பெண்ணின் சாப்பாட்டுச் செலவுக்குக்கூட வசூல் ஆகறதில்லே. நா வெறும் தரித்திரன். நீங்க குடுக்கறேளே மாசம் மூணு ரூபாய் வாடகை ; அதையும் என் கடைச்சம்பளம் பத்து ரூபாயையும் வச்சுக்கிண்டு காலத்தைக் கடத்தறேன். ஒடம் பாலே நானும் என் ஆம்படையாளும் இந்தப் பொண்ணுக் காக ஒழைக்கலாம். மேலே என்ன பண்ண முடியும்?” 

“அப்பொ என்ன முடிவு?” 

“எங்கேயோ ஒரு அநாதாச்ரமம் மாளவியாஜி ஏற்படுத்தி இருக்கிறாராம். அவாளுக்கு எழுதிப்போட்டிருக்கேன். இந்த ராஜதானியிலே, இனாமா ஒரு பொட்டையை வச்சு ரட்சிக்கறதற்கு ஒரு ஸ்தாபனமும் இல்லே பாருங்கோ? அது பலிச்சால் உண்டு; இல்லாதபோனாச் சிவனேன்னு கிறிஸ்தவப் பாதிரி கிட்டே ஒப்படைச்சூடப் போறேன்.” 

தன் தீர்மானத்தைத் திரும்ப வெளியிடக் கூடிய சந்தர்ப்பம் அதுவே என்று நினைத்தான் சேதுஸ்வாமி. 

“ஆமாம், ஆமாம். இவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டு ஒரு நல்ல காரியத்தைக்கூட எத்தனை நாள்தான் செய்ய முடியும்? நான்கூட நாளைப்போக மறுநாள் ஜாகை மாத்த லாம்னு இருக்கேன்.” 

பேச்சின் கடைசிப்பாகத்தைக் கேட்டுக்கொண்டே பொட்டைப்பெண் நண்டைப்போன்று நகர்ந்து வந்ததை அவர்கள் இருவரும் பார்க்கவில்லை. அவர்கள் கிட்டத்தில் வந்ததும், “மாமா, தப்பு செஞ்சிருக்கேன். ஆனா வேணும்னு செய்யல்லே, மாமா” என்று அவள் ஆரம்பித் ததும் சேதுஸ்வாமி கொஞ்சம் திடுக்கிட்டுப் போனான். சிவநாத சர்மா கண்ணை அகல விரித்தார். 

“மாமா, ரெண்டு மூணு நாளா ராத்திரி எழுந்து கொல்லைப்பக்கம் போனேன். அத்தையை எழுப்பாமெ நான் மாத்திரம் போனேன். கொல்லைத் தாப்பாளெத் திறக்க முடியல்லே. யாரைக் கூப்பிடறது என்னுட்டு இருந் தூட்டேன். அப்புறம் முந்தா நாள் மத்யான்னம் வேறே ஒரு பிசகு செஞ்சுப்பிட்டேன். இரண்டாம் கட்டு முத்தத் திலே வழியிலே ஒரு பொம்மை கடந்திருக்காப்போல இருக்கு: அவா குழந்தையினுடையது. நடந்து போறப்போ தெரியாமே மிதுச்சுப்பிட்டேன். அது பொதக்கின்னு நசுங்கிப்போச்சு. அதுக்குப் பேர் செல்லு லாயிட் பொம்மைங்கறா.” 

சேதுஸ்வாமி திருடனைப்போல் விழித்தான். கண் இல்லாத குழந்தை அவன் கள்ளத்தனத்தை உடைத்துக் காட்டிவிட்டாள் அல்லவா? 

“அசடு ஒளற்றது; அதெல்லாம் ஒண்ணும் காரண மில்லே. எங்களுக்கு இடம் கொஞ்சம் கீகடமா இருக்கு; அதான்.” 

அதற்குச் சிவநாத சர்மா பதில் சொல்ல ஆரம்பிப்ப தற்குள் வீட்டுக்குள் பெருங்காயக் கடைச் சேட்டும் வேறு ஒரு வடக்கத்தியாரும் வந்து சேர்ந்தார்கள். இருவருக்கும் கை கூப்பி நமஸ்கரித்துவிட்டுச் சேட்டை எதிர்நோக்கி நின்றார் சர்மா. 

இவருதான்; அந்த அநாதாச்ரமத்திலேயிருந்து இன்கி வந்திருக்கிறாங்க. உங்க கடுதாசெல்லாம் காம்பிச் சாரு. நான் அல்லாம் அவருக்குச் சொல்லிப்போட்டேன். பொண்ணை அழச்சுக்கிணு போய்ப் பந்தோபஸ்தாப் பாத் துக்குவாரு” என்றார் சேட். 

சிவநாத சர்மாவுக்கு ஓர் ஆறுதல். கிறிஸ்தவப் பாதிரியிடம் இனிப் போக வேண்டாமல்லவா? 

“என்ன குழந்தே, அவர் அவர் கூடப் போறயா?” என்றார். 

பெண் சேட் பேசிய ஓசையின் மூலம் அந்தத் திக்கை நிதானம் செய்துகொண்டு அவர்களைப் பார்த்துத் திரும்பினாள். பாப்பா தெரியாத, கறுப்பே இல்லாத இரு விழி கள்! ஒரு நிமிஷம் ஏதோ யோசனை. பிறகு, “போறேன் மாமா” என்றாள். 

மரத்தின் ஆணிவேரை அறுத்தது போன்ற ஓர் உணர்ச்சி பிறந்தது அந்த வார்த்தையின் விளைவாய்.சர்மா தம் மனநெகிழ்ச்சியை மறைக்க முயன்றார். 

சேட் எல்லோருக்கும் தைரியம் சொன்னார். “ரொம்ப ரொம்ப நல்லா அங்கே பாத்துக்குவாங்க. இதிலே அவங்க ளுக்கெல்லாம் இருக்கிற சிரத்தா பக்தி நமக்கு ஸ்வாமி கிட்டேகூட இருக்காது. இதைத்தான் அவங்க அகண்ட பூஜை என்றாங்கோ.” 

“நான் இனிமே என்ன பண்ணணும்?” என்றார் சர்மா. 

“பொண்ணெ அனுப்பிக்கச் சம்மதம்னு நீங்க அவர் கிட்டெ ஒரு கடுதாசி எழுதிக் குடுங்கோ. அவர் கொளங் தையை அழச்சிக்கிண்டு போறேன் இன்னு உங்களுக்கு ஒரு கடுதாசு தருவார். அவ்வளவுதான். 

“என்ன குழந்தே, போறயா?” என்று இரண்டாந் தரம் கேட்டார் சர்மா. 

“எவ்வளவு நாள்தான் ஒங்களை யெல்லாம் கஷ்டப் படுத்திக்கிண்டு இருக்கிறது?.. போறேன் மாமா.” 

அரை மனசோடு சர்மா கடிதத்தை எழுதிப் பூர்த்தி செய்தார். வந்தவரும் எதிர் நடையை எழுதி முடித்தார். சர்மாவுக்குத் திடீரென்று இரண்டு கடுதாசியிலும் சாட்சி வாங்கவேண்டுமென்று தோன்றிற்று. சேட் சாட்சி போட்டார். 

“சேதுஸ்வாமி, நீயும் சாட்சி போடேன்’ என்றார் சர்மா.

சர்மா எவ்வித மறைமுகமான எண்ணமும் இல்லாமல் சாட்சி போடச் சொன்னார். ஆனால் ஏனோ சேதுஸ்வாமியின் நெஞ்சிலே அது ஒரு முள்ளாய்த் தைத்தது. அதற் காக அவர் தயங்கவும் இல்லை. இரண்டு கடிதத்திலும் சாட்சி போட்டார். பிறகு சர்மாவும் வந்தவரும் ஆளுக்கு ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டார்கள். 

“அவ்வளவுதானே? எப்போ அழைச்சுக்கிண்டு போகணும், சேட்ஜீ?” 

“இப்பவே. அவரு ராத்திரி ஊருக்குப் போறாரு.”

மனது அலைபடாதவரைப் போல் சர்மா உள்ளே போய் இரண்டு பாவாடைகளையும் கிழிந்த சட்டை ஒன்றையும் சுருட்டிக் கொண்டுவந்து பெண் அருகில் வைத்தார். 

“ஏன் மாமா, அந்தக் கிழிஞ்ச சட்டையைக்கூட வச்சிருக்கேளா?” 

“ஆகா.”

“ஏன் மாமா? என்னை அழைச்சிண்டு போறவருக் குத் தமிழ் தெரியுமோ?” 

“அவருக்குத் தெரிஞ்சிருக்காது.” 

இதற்குள் சேட்டும் மற்றவரும் எழுந்துவிட்டார்கள். அந்த விஷயத்தை அந்தப் பெண் ஊகித்தறிந்துவிட்ட போதிலும் இடத்தைவிட்டு அவளால் எழுந்திருக்க முடிய வில்லை. நெஞ்சிலே அவ்வளவு பெரிய சுமை! ஆனால் சர்மா அதை ஊகிக்கவில்லை. 

“என்ன குழந்தே! அவாள் எழுந்திருந்தூட்டாளே போக. நீ போறயோ?” 

“போறேன் மாமா” என்று எழுந்திருந்தாள். திரும்பக் குனிந்து பாவாடையை எடுத்தாள். இரண்டு துளி கண்ணீர் தரையில் விழுந்தது. 

அதை நான்கு பேரும் பார்த்துவிட்டார்கள். 

“சேட்ஜீ! அந்தக் கடுதாசைக் கிழிச்சூடச் சொல்லுங்கோ; நான் அனுப்பல்லே.” 

“நான் கிளம்பிட்டேன், மாமா” என்றாள் குழந்தை, கண்ணைத் துடைத்துப் பாவாடையைச் சீர்செய்து கொண்டு. 

“குழந்தே! உன் வாய் போறேன்னு சொல்றது; மனசு சொல்லல்லே” என்று சொல்லிக்கொண்டே கடுதா சைக் கிழித்தெறிந்தார் சர்மா. 

சேட் விடை பெற்றுக்கொண்டு, “என்னா குழந்தே! நாங்க போகட்டுமா?” என்றார். குழந்தை ஒலி வந்த திக்கை நோக்கினாளே ஒழியப் பதில் சொல்லவில்லை. 

இருவரும் போய்விடவே சர்மாவின் மனத்திலே ஏதோ பொங்கிற்று. பெண்னை அணைத்து அவள் தலை மயிரைத் தடவினார். அவ்வுணர்ச்சி தணிந்தது. 

“ஜாகை மாத்தறதூன்னு சொன்னேன் பாருங்கோ. அதை அப்புறம் பார்த்துக்கலாம்னு விட்டூட்டேன்” என்றார் சேதுஸ்வாமி காதைத் தடவிக்கொண்டே. 

“செய்யுங்கோ.”

– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *