கன்னி ராசியும் கந்தசாமியும்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 1,488 
 
 

எதற்குத்தான் கன்னி ராசியில் பிறந்தோம்? வேறு ராசியில் பிறந்திருக்கக்கூடாதா? எனும் கவலையில் இரவு தூக்கத்தைத்தொலைத்திருந்தார் கந்தசாமி.

மனைவி சுந்தரிக்கு  சந்தேகப்பேய் பிடித்து ஆட்டுவதே கந்தசாமியின் கவலைக்கு முழுக்காரணம்.

“பெண்களிடம் பேசினாலே பத்ரகாளியாகி விடுகிறாள். மளிகைக்கடை, ஜவுளிக்கடை, ஹோட்டல் கடை என எங்கு போனாலும் கூடவே வருவதும், தன்னை எப்போதும் டிடெக்டிவ் ஏஜென்ஸியினர் போல் சந்தேகப்பார்வை பார்ப்பதும் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக காலை எழுந்தவுடன் தனது முகம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ‘கெனாவுல எவளாச்சையும் பார்த்து பேசுனீங்களா….?’ என சந்தேகத்தின் உச்சத்தில் பேசியது தான் அவரைக்கடுப்பேற்றி அச்சம் கொள்ள வைத்தது.

உறவினர் பெண்களின் பெயரை அலைபேசியில் பதிவு செய்யும் போது கூட அவர்களின் தந்தை பெயரையோ, கணவன் பெயரையோ தான் பதிவிடுவார். பெண்கள் பெயரால் மனைவிக்கு சந்தேகம் வரக்கூடும் என்பதற்க்காக. பெண்கள் யாரேனும் அழைத்துப்பேசிவிட்டால்,’ இனிமேல் என்னோட நெம்பருக்கு மட்டுமே கூப்பிடுங்க. அவருக்கு கூப்பிடாதீங்க’ எனக்கண்டிப்புடன் கூறி அந்த எண்ணையே போனிலிருந்து அழித்து விடுவாள்.

தினசரி பத்திரிக்கை, வார, மாத பத்திரிக்கைகளில் ராசி பலன் படிப்பதும், யூடியூப்பில் ராசிபலன் கேட்பதும் கன்னி ராசிக்கு மட்டும் தான். ஆரம்ப நிலை ஜோதிடர்கள் பொதுவாக அள்ளிவிடுவதுதான் சுந்தரிக்கு கணவர் மீது சந்தேகம் வலுப்பதற்கு காரணமாகி விட்டது.

‘கன்னி ராசிக்காரர்களுக்கு எண்ணிச்சொல்லும் அளவிற்கு கன்னிப்பெண்களின் சிநேகம் இருக்கும். மனைவியாக இருப்பவர் எச்சரிக்கையுடன் தலையணை மந்திரம் உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் வேறு பெண்கள் அபகரிக்க நேரும்’ என தினசரி பலனில் தொலைக்காட்சியில் சிறுவயது ஜோதிடர் ஒருவர் சொன்னதைக்கேட்ட பின் சுந்தரியின் சந்தேகப்பார்வையின் உக்கிரம் அதிகமானது.

உண்மையிலேயே சிறுவயதிலிருந்து பெண்களிடம் பேசவே கூச்சப்படும் சுபாவம் தான் கந்தசாமிக்கு. நாற்பது வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி விட்ட இக்காலம் வரை மனைவியைத்தவிர வேறு பெண்களிடன் தவறான நோக்கத்தில் பேசியதுமில்லை, பார்த்ததுமில்லை, பழகியதுமில்லை. இப்படிப்பட்டவருக்கு மனைவியால் வந்த சோதனை, வேதனை தர காரணம் என்ன? யோசித்தவர் அனுபவம் மிக்க ஒரு வயதான ஜோதிடரிடம் மனைவியை அழைத்துச்சென்று தனது ஜாதகத்தைக்கொடுத்து பிரச்சினைக்கு விளக்கம் கேட்டார்.

“கன்னி ராசில பொறந்த ஆண்களுக்கு பெண்களோட பழக்கமோ, பெண்கள் மேல அதிக விருப்பமோ இருக்குங்களா….? நாங்க சோசியம் கேட்க வந்ததே இதுக்குத்தானுங்க” என கந்தசாமி சொல்ல, “இருங்க, அதுக்குள்ள எதுக்கு முந்திரிக்கொட்டையாட்டா முந்திட்டு கேட்கறீங்க? அவரே சொல்லட்டும்” என மனைவி பேச அமைதியானார்.

“இவருக்கு கன்னி ராசி. பொதுவா கன்னி ராசின்னாலே கன்னிப்பொண்ணுங்க இவங்களை சுத்தி,சுத்தி வருவாங்கன்னு கற்பனை பண்ணிக்காதீங்க. இவங்களும் பொண்ணுங்க பின்னாடி சுத்தமாட்டாங்க. ரொம்ப நல்லவங்க. கன்னி ராசியோட குணம் என்னன்னா பொண்ணுங்களைப்போல நடந்துக்குவாங்க. முப்பது வயசு வரைக்கும் இந்த ராசிக்காரங்க கல்யாணமாகாம அதிகமா இருக்கறாங்க. நீங்க நினைக்கிற மாதிரி இருந்துச்சுன்னா கல்யாணம் அது வரைக்கும் தள்ளிப்போகுமா….?” கேட்டவரை ஏறிட்டுப்பார்த்தாள் சுந்தரி. கந்தசாமி நிம்மதிப்பெருமூச்சு விட்டார்.

“அதிகமா ஊட்டுக்குள்ளேயே இருக்க விரும்புவாங்க. ஊட்டை கூட்டி பெருக்கறதிலிருந்து, சமையல் செய்யறது, துணி துவைக்கறது, குழந்தைகளுக்கு சோறு ஊட்டி விடறதுன்னு ஒரு தாயப்போல நடந்துக்குவாங்க. 

கன்னி ராசில பொறந்தவங்க தாயை, சகோதரிகளை மனைவிய ரொம்ப நேசிப்பாங்க. மத்த பொண்ணுங்க கிட்ட கன்னியமா நடந்துக்குவாங்க. எந்த வேலையும் கத்துகாமயே செய்யற புத்திசாலிகள். இல்லீன்னா ஊட்டு வேலை செய்வாங்களா? நீங்களே சொல்லுங்க?” என சுந்தரியின் முகத்தை நேர் பார்வையாகப்பார்த்தவாறு சொல்லி முடித்தார் ஜோதிடர் பரமசிவம்.

“நீங்க சொல்லறது என்னமோ உண்மை தானுங்க‌. கல்யாணமானபோது எனக்கு சேலை செரியா கட்ட வராது. இவருதா கட்டி உடுவாரு. வேறு ஆராச்சுக்கும் இதுக்கு முன்னால இப்படி கட்டினதுனால பழகியிருப்பாரோன்னு நான் அப்பவே சந்தேகப்பட்டனுங்க.  நான் குளிக்கிற போது தலை முடிக்கு நல்லா அரப்பு போட்டு தேச்சு குளிக்க ஒதவுவாரு. நாந்தா ஒரு நாளும் அவருக்கு முதுகு தேச்சு உட்டதில்லை. தலை கோதி உடுவாரு. ஈறு, பேனு பார்த்து உடுவாரு. நம்முளுக்கு இப்படிப்பண்ணறாரே…. யாராச்சும் மத்த பொம்பளைக இதப்பார்த்தா ஆம்பளை இப்படியிருக்கறாரேன்னு புடிச்சுப்போயி, பொறாமை வந்து, எங்களப்பிரிச்சுப்போட்டு அவரக்கூட்டிட்டு போயிட்டா என்ன பண்ணறதுன்னு பயந்து போட்டுத்தான் மத்தவங்க முன்னால இவரு எங்கிட்டவே வராம வெறுப்பக்காட்டி, பொம்பளைகள்னாலே இப்படித்தான் இருப்பாங்கன்னு அவரு மனசுல பொம்பளைங்க பேர்ல வெறுப்பு வர வைக்கோணும்னு தப்பா நெனைச்சு இப்படி பொறுப்பானவர வருத்தப்பட வெச்சுப்போட்டேன்.

கன்னி ராசியப்பத்தி எனக்கிருந்த சந்தேகம் இப்ப முழுசா போயிருச்சுங்க. ஒன்னி மேல் அவரை சந்தேகப்பட்டு இது வரைக்கும் நான் நடந்த மாதர நடந்துக்க மாட்டேன்…” மனைவி சுந்தரி வாயிலிருந்து நல்ல வார்த்தையை முதலாகக்கேட்ட போது ஜோதிடத்தின் உண்மையையைச்சொல்லி மனைவியின் மனதை மாற்றிய ஜோதிடர் பரமசிவத்துக்கு கைகூப்பி  நன்றி சொன்னார் கந்தசாமி. 

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *