திருமணமாகி ஒரு வருடம் ஓடியும் மன ஒற்றுமையின்றி, ஒன்றிணைந்து வாழாமல் ஒரே வீட்டில் தனித்தனி அறையில் தனது மகனும், மருமகளும் ஊர், உறவுகளுக்காக வாழ்வது கண்டு வேதனை கொண்டாள் சுந்தரி.
“என்ன சுந்தரி, உன்ற மருமகளோட வளைகாப்புக்கு கூப்புட்டு விருந்து வைப்பேன்னு காத்துட்டே இருக்கறோம். கண்ணாலமாயி ஒரு வருசம் ஓடியும் மருமக வகுத்துல புள்ள பூச்சி ஓடலையா? கோயில் கோயிலா நீ ஓடுனாலும் அவங்க சந்தோசம் பொங்கி ஓடுனாத்தானே நடக்கறது நடக்கும். உன்ற பையனும் கண்ணாலத்தப்பண்ணிப்போட்டு சாமியாராட்ட தாடி வெச்சுட்டு இருந்தா எப்படி கொழந்தை கெடைக்கும்?” பக்கத்து வீட்டு மங்கம்மா கேட்ட கேள்விக்கு பேச்சால் பதில் கூற முடியாமல் கண்ணீர் சிந்தினாள்.
பெண் பார்த்த போது இரண்டு பேரையும் சந்தித்து பேச வைத்த போதும், அதிக நேரம் மகன் கரணை பெண்ணுடன் பேச விடாமல் பெண்ணை உறுதி செய்ய தான் அவசரப்பட்டு மோதிரம் போடச்சொன்னதும், சீக்கிரமாக திருமணம் செய்ததும் தம்பதிகளுக்குள் ஒற்றுமையில்லாமல் போனதற்கு காரணமாக இருக்குமோ...?’ என நினைத்து, வருந்தி உணவை வெறுத்து உருக்குலைந்து போனாள். ஒரு தாயாக அவளால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.
“வெளியில போற போது ஒன்னாப்போறீங்க. ஆனா ஊட்ல ஒட்டாம நடந்துக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன். ரெண்டு பேருக்குமே சந்தோசமில்லாம இப்படி வாழ்றதுக்கு நிரந்தரமா பிரிஞ்சு போயிறலாமே..?”
நண்பன் அருணின் கேள்வியால் பதில் சொல்ல முடியாமல் ஒரு திருமண நிகழ்வில் திணறினான் கரண்.
“பெத்தவங்க அவங்களோட குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சா கடமை முடிஞ்சுதுன்னு அவசரப்படறாங்க. அவங்க சந்தோசமா வாழ்வாங்களான்னு யோசிக்கிறதில்ல. கோவில்ல முதலா முகிய பார்த்தப்ப லட்சணமா இருந்தாலும் மனசு ஏனோ விரும்பல. பேசிப்பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்னு பேசப்போனப்ப என்னோட அம்மா வந்து ‘இந்த சம்மந்தத்தையும் பேசிக்கெடுத்தறாதே’ ன்னு சொல்லிட்டு முகியோட அம்மா கிட்ட சம்மதம்னு சொன்னதும், பொண்ணுக்கு என்னை மோதிரம் போடச்சொல்லிட்டாங்க. என்னால மறுக்க முடியல. அவளும் சரின்னு சொல்லிட்டா. அன்னைக்கு ராத்திரி எனக்கு தூக்கமே வரலே. பேசாம வேண்டாம்னு சொல்லிடலாம்னு நெனைச்சா அம்மா ஐம்பது பேருக்கு கால் பண்ணி மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க. அடுத்தடுத்து, மண்டபம், பத்திரிக்கை, ஜவுளின்னு யோசிக்க நேரமே கெடைக்கலே” சொன்னவன் கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது.
உறவினரைப்பார்த்ததும் கரண் பேசப்போய் விட அருணிடம் நிலைமையை எடுத்துக்கூறினாள் முகி.
“கல்யாணம் முடிவான பின்னாடி இவரோட நடவடிக்கை ஒவ்வொரு நாளும் விருப்பமில்லாம போன போது எனக்கு கவலையா இருந்துச்சு. அதே சமயம் அவரோட டிசிப்ளின் அதிகமா புடிக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்படிப்பட்டவரை மிஸ் பண்ணக்கூடாதுன்னு தோணுனதுனால கல்யாணமானா சரியாயிடும்னு நெனைச்சிட்டேன். ஒரு நாள் கூப்பிட்டு ‘உன்னை எனக்கு புடிக்கலே. கல்யாணத்த நிறுத்திடலாம்’னு சொல்லிட்டாரு. இவருக்கு மனநிலை சரியில்லையோன்னு கூட நினைச்சுட்டேன். அப்பா, அம்மா கிட்ட சொன்னா கலங்கிடுவாங்க, கதறிடுவாங்கன்னு சொல்லிட்டு அதிர்ச்சில போனை வெச்சுட்டேன். அதுக்கப்புறம் கல்யாணம் முடியற வரைக்கும் எதுவுமே பேசல. கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் போகப்போக சரியாயிடும்னு விட்டதுல ஒரு வருடம் முடிஞ்சும் எங்களுக்குள்ள நடக்க வேண்டியது எதுவும் நடக்கல” கலங்கிய முகியைக்கண்டு தானும் கலங்கினான் அருண்.
“உங்களுக்காக வேணும்னா டைவர்ஸ் பண்ணிக்கலாம். இல்லேன்னா காலம் பூராம் உங்களோட ஒரு நண்பியப்போல நானும் வாழ்ந்திடுவேன். டைவர்ஸ் பண்ணிட்டாலும் காலத்துக்கும் உங்களோட நட்பு வேணும். நான் வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நீங்க வேணும்னா இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு, குழந்தைகளை பெத்துட்டு சந்தோசமா வாழ்ந்திடுங்கன்னு சொன்னதுக்கப்புறம் என்னை ரொம்பவே மதிச்சு நடந்துக்கிறார். என்னோட சேலைகளை துவைச்சுப் போடறார். சமைச்சுப் போடறார். என்னோட வங்கிக்கணக்குல பாதி சம்பளத்தை போட்டு விடறார். என்னோட அப்பா, அம்மா, அக்கா குழந்தைகள் இங்க வந்தா நல்லா கவனிச்சுக்கிறார். லவ் ஏதாவது இருக்கும்னு பார்த்தா ஊறுகாய்க்கு கூட இல்லை. புரிஞ்சுக்கவே முடியலை. ஆனா ஒன்ன மட்டும் நல்லா புரிஞ்சிட்டேன். ஜாதகப்பொருத்தம் பார்த்தாலும், பூ வெச்சு சாமி கிட்ட வரம் கேட்டாலும் ரெண்டு பேரோட மனசும் ஒன்னா சேருவதுதான் முக்கியம்… பெத்தவங்க விருப்பத்துக்காக, வீடு, கார், நல்ல சம்பளம்னு முடிவு சொல்லக்கூடாது…” என முகி சொன்ன போது இன்னொரு நண்பருடன் பேசி விட்டு திரும்பிய கரண் ‘வீட்டிற்கு போகலாமா?’ என கேட்க முகியும் தலையாட்ட, பல வருடங்கள் பழகிய கல்லூரி நண்பன் அருணாலும் கரணைப்புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு நல்ல நாளில் புதிதாக கட்டிய வீட்டில் புதிதாகவே வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கி மகனையும், மருமகளையும் குடியேற வைத்தாள். கணபதி ஹோமமும் போடச்சொன்னதோடு, ஜோதிடர் ஆலோசனை சொன்னது போல் வளர்பிறை சஷ்டியில் திருச்செந்தூரில் முருகனை வழிபட வைத்து தானும் மனமுருகி வழிபட்டாள் சுந்தரி.
பூனை பால் பாத்திரத்தை உருட்ட கண் விழித்த சுந்தரி தன் கண்களில் கண்ணீர் வடிந்து தலையணை நனைந்திருந்ததைக்கண்டு தான் கண்டது கனவானாலும் நிஜத்தில் கண்ணீர் விட்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தவள், விடிந்ததும் பெண் புரோக்கர் வந்து பெண் ஜாதகத்தைக்கொடுத்த போது அதில் பெண்ணின் பெயர் முகி என இருந்ததைக்கண்டு மன பயம் கூடியது. அபோது வந்த மகன் கரண் பெண்ணின் போட்டோவைப்பார்த்ததும் பிடித்துப்போக, ‘இந்தப்பெண்ணையே பார்க்கலாம்’ என்றான்.
கனவில் வந்த அனுபவம் கை கொடுக்க “பொண்ணோட ஒரு மாசமாச்சும் பேசிப்பழகு. உனக்கு மனசுக்கு புடிச்சா மட்டும் சரின்னு சொல்லு. பொண்ணக்கட்டிக்கப்போற உன்ற விருப்பத்துக்கு மாத்தமா என்ற விருப்பத்துக்கு உன்னக்கட்டாயப்படுத்தி கண்ணாலத்தப்பண்ணி கெனாவுல நாஞ் சிரமப்பட்ட மாதர நெஜத்துல சிரமப்பட மாட்டம்பாத்துக்க. நானாக ஒன்னுஞ்சொல்லப்போறதில்ல. எல்லாமே உன்ற இஷ்டந்தான்” என தாய் கூறியதில் மகிழ்ந்த கரண் முகியை நேரில் சந்தித்தவுடன் பிடித்துப்போக, திருமணம் செய்து கொள்ளும் சம்மதத்தை உறுதி செய்ய மோதிரம் அணிவித்தான்.
‘கடவுளே முருகா…. என்ற மகனோட நெஜ வாழ்க்கைல நாங்கெனாவுல கண்டது மாதர உண்மைல நடந்திடவே கூடாது. அதுக்காகத்தான் நீ எனக்கு முன் கூட்டியே கெனாவுல எச்சரிக்கை பண்ணிட்டே. அதனால பொண்ண அவனுக்கு புடிச்ச பின்னால கல்யாணம் பண்ணினங்காட்டி ஒற்றுமையா, சந்தோசமா இருக்கறாங்க. அதுக்கு பிரதியுபகாரமா என்ற தலை முடியைக்காணிக்கையா உனக்கு கொடுக்கறேன்’ என அப்பாவியாய் வேண்டிக்கொண்டாள்.
திருமணமாகி ஒரு வருடத்திற்குள் அழகான ஆண்குழந்தையைப்பெற்றெடுத்த முகியும், கரணும், அக்குழந்தையை சுந்தரியின் கையில் கொடுத்த போது அவளடைந்த பரவசத்திற்கு அளவில்லை. அவர்களின் ஒற்றுமையை ஊரே மெச்சியது!