“”அம்மா கதவை தாழ் போட்டுக்க. நான் வேலைக்கு கிளம்பறேன்.”
பரத் சொல்ல, கட்டு போட்ட காலை தாங்கியபடி நடந்து வந்தாள் அமிர்தம்.
அம்மாவை பார்த்த பரத்திற்கு மனம் வேதனைப்பட்டது. அப்பாவும், அம்மாவும் எந்த ஒரு ஆசையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதைக் கொண்டு வாழ்ந்துகொண்டு, பரத்தை படிக்க வைத்து, அவனது ஆசைகளை மட்டும் எப்பாடுபட்டாவது நிறைவேற்றி, வயதானபிறகு வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்ள வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
“”கால் வலி பரவாயில்லையாம்மா. சாயிந்திரம் டாக்டர்கிட்டே போய்ட்டு வருவோமா?”
“”வேண்டாம் பரத். இன்னும் இரண்டு நாள் கழிச்சு தான் வரச்சொல்லியிருக்காரு. சும்மா இருக்காம, பரண் மேலே இருக்கிறதை எடுக்கிறேன்னு, ஸ்டூல் வழுக்கி கீழே விழுந்துட்டேன். இது இப்ப தேவையில்லாத செலவு என்ன
செய்யறது.”
அம்மா புலம்ப, வாசல் கேட்டை திறந்துகொண்டு பாக்டரியில் இரவு நேர வேலை முடித்து வரும் அப்பாவைப் பார்த்தான். தூங்காத கண்கள். சோர்வினால் வாடிய முகம்.
“”என்ன பரத். வேலைக்கு கிளம்பிட்டியா. சரி. போய்ட்டு வா. சாயிந்திரம் பார்ப்போம். இன்னைக்கு எனக்கு ஒ÷ர தலைவலி.” சொன்னவர், “”அமிர்தம், சூடா காபி கொண்டு வா.”
உள்ளே நுழைய, பரத் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
டூவீலர்கள் ரிப்பேர் செய்யும் ஒர்க்ஷாப் வைத்து நடத்திக் கொண்டிருந்தான்.
இதை ஆரம்பிக்கவே, அம்மாவிடம் இருந்த நகைகளை அடகு வைத்து, பாங்க் லோன் வாங்கி, இப்போதுதான் மூன்று மாதமாக, அவனால் ஓரளவு வருமானம் பார்க்க முடிந்தது.
அவன் மனதின் கனவுகள், எப்பாடுபட்டாவது பணம் சம்பாதித்து அப்பா, அம்மாவை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்கள் வசதியாக வாழ்வதற்கு சிறியதாக இருந்தாலும், மனதிற்கு பிடித்தமாக ஒரு சொந்த வீடு, அப்பாவின் உழைப்புக்கு விடை கொடுத்து அவøர நிம்மதியாக வைத்திருக்கும் அளவு பொருளாதார வசதி, அம்மாவின்
ஆசைப்படி, கோவிலுக்குச் சென்று வர ஒரு கார். இத்தனையும் என்னையும் முடியுமா. முடிய வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
“”அண்ணே, இன்னைக்கு இரண்டு வண்டி வேலை முடிஞ்சு டெலிவரி கொடுக்கிறதாக சொல்லியிருக்கீங்க.”
கடைப் பையன் ஞாபகப்படுத்த வேலையில் மூழ்கினான்.
“”பரத், இந்த சனி, ஞாயிறு நீ நாகர்கோவிலுக்கு போகும்படி இருக்குப்பா.”
“”என்னப்பா சொல்றீங்க. அங்கே என்ன வேலை.”
“”என் நண்பன் வாசுவோட பையனுக்கு கல்யாணம். அம்மாவுக்கு காலில் அடிபட்டு இருக்கு. எங்களுக்கு பதிலாக நீ போய்ட்டு வந்துடுப்பா.”
“‘என்னப்பா இது, எனக்கு அங்கே யாரையும் தெரியாது. வாசு மாமாவை மட்டும் தான் எனக்குப் பழக்கம்.”
“”அதனால் என்னப்பா, பத்திரிக்கை அனுப்பி போனில் வேறு அழைச்சிருக்கான். போகாம இருந்தா நல்லா இருக்காது. நீ போய்ட்டு வா. கல்யாணத்துக்கு என் நண்பன் வேணு வருவான். அவனை தான் உனக்கு தெரியுமே.
அவனையும் பார்த்து பேசிட்டு வா.”
அப்பாவின் சொல்லை தட்டமுடியாதவனாக கல்யாணத்திற்கு கிளம்பினான்.
கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்திருந்தவன், மண்டப வாசலில் ஸ்கார்பியோ வந்து நிற்க, அதிலிருந்து இறங்கும் வேணு மாமாவை பார்த்தான். இந்த கல்யாணத்தில் அவனுக்கு அறிமுகமான நபர் அவர் மட்டும்தான், அவருடன் உட்கார்ந்து கொள்ளலாம் என நினைத்தவனாக இடத்தை விட்டு எழுந்தான்.
“”மாமா… நல்லா இருக்கீங்களா?”
திரும்பியவர் பரத்தை பார்த்தார்.
“”பரத் பார்த்து எவ்வளவு நாளாச்சு. அப்பா வரலையா?”
“”இல்லை. நான்தான் வந்திருக்கேன்.” அதற்குள் காரிலிருந்து இறங்கிய டிரைவர், “”சார், காரை பார்க் பண்ணிட்டு வெயிட் பண்றேன்.”
“”தம்பி, நம்ப ப்ரண்ட் வீட்டு கல்யாணம்தான். போய் டிபன் சாப்பிட்டு வந்து வெயிட் பண்ணு.”
சொன்னவர், “”வா, பரத் போய் உட்கார்ந்து பேசுவோம்.” அவனை அழைத்துக்கொண்டு மண்டபத்துக்குள் நுழைந்தார்.
“”இருவருமாக சாப்பிட்டு வந்து உட்கார்ந்தார்கள்.
“”அப்புறம் சொல்லு பரத், அப்பா, அம்மா எப்படி இருக்காங்க?”
“”அம்மாவுக்கு தான் காலில் அடிபட்டிருக்கு. அதான் அப்பா, என்னைப் போகச் சொன்னாரு.”
“”நானும் உன் அப்பாவை போல சிரமப்பட்டு வாழ்க்கை நடத்தினவன்தான். கடவுள் கிருபையாலும், நான் பண்ணின அதிர்ஷ்டத்தாலும் என் பையன் டெக்ஸ்டைல் பிஸினஸ் இன்னைக்கு ஓகோன்னு வளர்ந்து, நல்ல செல்வாக்கில் இருக்கான். கார், பங்களான்னு வசதியாக இருக்கேன். அப்பா என்னைப் பத்தி சொல்லலையா?”
“”இல்லை மாமா. எனக்கே நீங்க இவ்வளவு பெரிய காரில் வந்திறங்கியது. ஆச்சரியமாக தான் இருந்தது, கேட்கணும்னு நினைச்சேன். நீங்களே சொல்லிட்டீங்க. உங்களைப் பார்க்க சந்தோஷமாக இருக்கு. வாழ்க்கையில் கஷ்டப்பட்டவங்க. நல்ல நிலைக்கு வருவதைப் பார்க்கும்போது மனசுக்கு நிறைவாக இருக்கு மாமா.”
உண்மையான புரிதலுடன் பரத் சொல்ல, அவனைப் பார்த்து புன்னகைத்தார்.
“”நீ மெக்கானிக் ஒர்க் ஷாப் வைத்து நடத்துவதாக உங்க அப்பா சொன்னானே. எப்படி போயிட்டிருக்கு.”
“”பரவாயில்லை மாமா. ஓரளவு லாபத்தில் தான் நடந்துட்டிருக்கு. ஆனா நான் நினைக்கிற அளவு பெரிய அளவில் வளர்ச்சியடைய, நிறைய நாட்கள் காத்திருக்கணும்னு தோணுது.”
அவன் குரலில் ஒருவித வருத்தம் இழையோட, “”என்ன பரத், என்னவோ போல் பேசற. வயசு புள்ளைங்க தளர்ந்து போகலாமா?”
“”உங்ககிட்டே சொல்றதுக்கென்ன மாமா. என் மனசெல்லாம் எங்க அப்பா, அம்மாவை நல்லா வச்சுக்கணும். வாழ்க்கை வசதிகளை பெருக்கணுங்கற எண்ணம் இருக்கு. ஆனா என் கனவுகள், நனவாகும் நாள்தான் என்னைக்குன்னு தெரியலை. சமயத்தில் இதைப் போல விரக்தி எட்டிப் பார்க்குது. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. உங்க பையன், இந்த வயசிலேயே முன்னறி நல்ல நிலைக்கு வந்துட்டாரு. ஆனா…நான்… இப்பத்தான் முதல் படியிலேயே காலடி எடுத்து வச்சிருக்கேன்.”
“”புரியுது பரத். உன் ஆதங்கம் எனக்கு புரியுது. இந்த உலகத்தில் எல்லாமே சாத்தியப்படும்பா. சிலருக்கு சில விஷயங்கள் உடனே நடக்குது. சில பேருக்கு காலதாமதம் ஆகுது அவ்வளவு தான். அடுத்தவங்க நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்கும்போது, நம் மனசில் ஆயாசமோ, சோர்வோ ஏற்படவிடக்கூடாது. நீ நினைச்சதும் நடக்கும். விரும்பியது கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்யறதுன்னு விரக்தியோடு வாழ்க்கை நடத்தினால், அதில் சுவாரஸ்யமே இல்லாம போய்விடும்பா. உன் மனசிலே ஒரு கனவு சாம்ராஜ்யத்தை விதைச்சிருக்கே. இப்ப அது செயல்படுவதற்கான எந்த தடயமும் உன் கண்ணுக்கு தெரியாம இருக்கலாம். அதுக்காக நீ சோர்ந்து போயிடக்கூடாது பரத். உன் வேலையை ஈடுபாட்டோடு, செய், அதற்கான காலமும், நேரமும் வரும்போது, நிச்சயம் உன் ஆசைகள் நிறைவேறும் பரத்.”
அவர் பேச, பரத் அவøரப் பார்க்கிறான். கண்களில் தெரிந்த சோர்வு மறைய, இவர் மகனைப் போல, என் தொழிலை ஈடுபாட்டோடு செய்து, என் முயற்சியால் முன்னுக்கு வந்து, என் அப்பாவை நானும் சந்தோஷமாக வைத்துக் கொள்வேன்.
எனக்கான கதவுகள் இன்றில்லாவிட்டாலும் நாளை நிச்சயம் திறக்கும். மனதின் எண்ணங்கள் முகத்தில் புத்துணர்ச்சியை வரவழைக்க, “கெட்டி மேளம், கெட்டி மேளம்’ கையிலிருந்த அட்சதையை சந்தோஷமாக மேடையை நோக்கி தூவுகிறான்.