கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 2,968 
 
 

‘தாங்கள் சிறுகதைபோட்டிக்கு அனுப்பிய “கனவு ஊஞ்சல்” என்ற சிறுகதை ரூ 40,000 முதல் பரிசை வென்றுள்ளது. மகிழ்ச்சி; இத்துடன் பாராட்டு விழா அழைப்பிதழ் இணைத்துள்ளோம். ஆன்லைன் மூலம் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கக் கோறுகிறோம்’

‘வாட்ஸ்அப்’ செய்தியைப் பார்த்ததும்  துள்ளிக் குதித்தது  எழுத்தாளர் குமரேசனின் மனம்.

‘கூகுள் பே’ மூலம் பரிசுத்தொகை அனுப்பப்பட்டதற்கான ‘ஸ்கிரீன் ஷாட்’ வந்தது.

எழுத்தாளர் குழுமத்திலிருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.

கேள்விப்பட்ட முகநூல், ட்விட்டர், இன்ஸ்டா-க்ராம் நண்பர்கள் வாழ்த்துச் செய்தி பதிவிட்டார்கள்.

போன் செய்து சிலர் வாழ்த்தினார்கள்.


‘இந்தக் காசுலயாவது ஊஞ்சல் செஞ்சி மாட்டிரலாமா…?’ மனைவி சிவகாமியிடம் கேட்க நினைத்த குமரேசன் வாய் மூடிக்கொண்டார்.

காரணம் அவள் ‘டினேயலிஸத்தின்’ தீவிரப் பிரதிநிதி.

எதைச் சொன்னாலும் உடனே அதைக் கண்மூடித்தனமாக மறுத்துப் பேசுவது அவள் கேரக்டர்.

மறுத்துவிடுவாளே, என்பதால் அவளிடம் செய்தியைச் சொல்லாமலும் எதையும் செய்துவிட முடியாது.

உரத்து முணுமுணுப்பாள்…,

வாய்விட்டுப் புலம்புவாள்…

குத்திக்காட்டுவாள்…

குதர்க்கம் பேசுவாள்…

வெறுப்பேற்றுவாள்…

வீட்டில் அசாதாரணச் சூழலைத் தோற்றுவிப்பாள்.

‘ஏன் செய்தோம்…?” என்று ‘ஃபீல்’ செய்யவைத்து விடுவாள்.

‘இப்போதே சொல்லி, எடுத்த எடுப்பிலேயே ‘முட்டுக் கட்டை போட்டுவிட்டால்… ?’ யோசித்தார்.


‘நேரம் பார்த்து, காலம் பார்த்து, மூடுப் பார்த்து, மொகரைப் பார்த்து… மெதுவாக, எதபதமாகச் சொல்லிக் கொள்ளலாம்…!’ முடிவுக்கு வந்தார் குமரேசன்.

கனவிலும், கற்பனை கதைகளிலும் குமரேசன் வீசி வீசி ஊஞ்சலாடும் காட்சி உலகப் பிரசித்தம்.

நிஜத்தில் ஏக்கமாய்…! உடம்பில் தழும்பாய்…! மட்டுமே அவரின் ஊஞ்சல்  இன்றுவரை…!

மனைவியிடம் ஆன்லைன் பாராட்டு விழா பற்றி மட்டும் சொன்னார்.

அவள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. 

ஆன்ட்ராய்டு போனில் தேவையற்ற மேசேஜ்களை டெலிட் செய்து கொண்டே… ‘ம்…’ என்றாள்.

அவளைப் பொருத்தவரை குமரேசன் சொன்னதும் ஒரு தேவையற்ற மெசேஜ்.

கையோடு டெலிட் செய்துவிட்டான்.


ஊஞ்சலென்றால் உயிர் குமரேசனுக்கு.

ஊஞ்சலாட்டத்தில்  அப்படியொரு ஆசை… அப்படியொரு ஈர்ப்பு… ஏக்கம்…!

அதனால்தானோ என்னவோ, எத்தனையெத்தனையோ விதமான ஊஞ்சல்களையெல்லாம் உயிர்ப்புடன் உன்னதமாக, தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் உலவ விட்டிருக்கிறாரோ…?


குழந்தைப் பருவத்தில், சாப்பிடுவதற்கு அடம் செய்து, பிடிவாதம் பிடித்துப் படுத்தும்போதெல்லாம், குமரேசனை ஊஞ்சலில் உட்கார வைத்து ஊட்டினால் இரண்டு மடங்கு சாப்பிடுவான் .

தாத்தா வீட்டில், ஆங்காங்கே விரிசலும், ஓட்டையும் வெடிப்புமாக, ஒரு கருத்த 8 வடிவச் சங்கிலியில், ஊஞ்சல் என்ற பெயரில் தொங்கிக் கொண்டிருக்கும் பலகைதான் ராஜ சிம்மாசனம் அவனுக்கு.

நான்காவது வயதில் குமரேசனுக்கு முடியிரக்கப் போனபோது, சாப்பிட ‘அடம்பிடித்தான் குமரேசன்.

கோவில் கிணற்றில் தொங்கிய தாம்புக் கயிற்றை ஜகடையிலிருந்து உருவி எடுத்து ,மனைப் பலகையை அதில்  கட்டி, மாமாவும் அத்தையும் கோவில் மரத்தில் தொங்கவிட்டார்கள்.

அம்மா அந்தப் பலகையில் உட்கார வைத்து ஆட்டிக்கொண்டே சோறூட்டியது இன்றும் படிமமாய் குமரேசனின் நினைவுகளில்.


ஜோதிடர் சந்தான கோபாலனுக்கு வாக்கு சுத்தம்.

கட்டம் எண்ணிக் கணக்குப் போட்டு சொந்த வீடு கட்ட நேரம் வந்தாச்சு என்றார்.

நாள் குறித்துக் கொடுத்தார்.

வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, எப்போதோ வாங்கிப் போட்ட “1500 சதுர அடியில் மனை’யில், வாஸ்து பூஜைக்கு ஏற்பாடாயிற்று.

வாஸ்து பூஜையன்றே கொல்லன் பட்டறையிலிருந்து கிழங்கு போல காத்திரமாக ஊஞ்சல் கொக்கி அடித்து வாங்கி வந்து விட்டார் குமரேசன்.

“இதுக்கு என்ன இப்போ அவசரம்…!” என்று கேட்டு, மேஸ்திரி உட்பட எல்லோருமே சிரித்தனர்.

அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை அவர்.

ஆசை வெட்கமறியாது என்பதுதான் எவ்வளவு நிஜம்.


வீடு படிப்படியாக உயர்ந்தது…!

கடனும்…!

வாஸ்த்து பார்த்து, வசதி பார்த்து, ஊஞ்சல் கொக்கியும் பொருத்தியாயிற்று.

வங்கிக் கடன்…

சொசைட்டிக் கடன்…

நகைக் கடன்…

கைமாற்றுக் கடன்… என…

வலிமைக்கு மேல் பாரம் ஏற ஏறத் தோள் திணறியது. 

‘பர்மா தேக்கில் ஊஞ்சல் போட்டு ஆடவேண்டும் என்கிற குமரேசனின் ஆசை வெறும் ஊஞ்சல் கொக்கியோடு நின்றது.

புதுமனை புகு விழாவில், தங்கை பரிசாய்த் தந்த ‘பிரம்பு ஊஞ்சல்’  ஒற்றை வளையத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது.


பாகவதபுரம் மிராசு, விஸ்வமய்யா வீட்டில்,புஷ்டியான பசு, மான், மயில், அன்னம் என சங்கிலித் தொடராய் இணைந்த தீர்க்கமான, கலையம்சம் மிகுந்த பளிச்சிடும் பித்தளை உருவங்களோடு கூடிய எவர்சில்வர் சங்கிலியில் தொங்கி ஆடும் ஊஞ்சல்.

ரங்கூன் தேக்கால் இழைத்த, அழுத்தமாக ரேகைகள் ஓடும் அந்த இரண்டே முக்காலடி ஊஞ்சல் மீது ஒரு மோகம் குமரேசனுக்கு.

திருவிசலூர் பில்லட்லா வீட்டு இரண்டேகாலடி அகல ஊஞ்சல். ஆனந்த விகடன் மாலி அமர்ந்து, கேரிகேச்சர் போட்ட, ஆடி அனுபவித்த ஊஞ்சல் அது. அதன் மீது உயிரே வைத்திருந்தார் அவர்.

கிழங்கு போலப் பலாப் பலகையில் ஆடிக்கொண்டிருக்கும் வேதா மாமி வீட்டு தேக்கு  ஊஞ்சல்.

தியாகராஜ முதலியார் வீட்டு ஊஞ்சல்.

திருநகரி சீனுவாசன் வீட்டு ஊஞ்சல்.

ஆச்சாள்புரம் சேதுராமன் வீட்டு ஊஞ்சல்.

இப்படி எல்லா வீடுகளிலும் ஊஞ்சல் ஆடியவர் அவர்.

எங்கே ஊஞ்சல் பார்த்தாலும் சிறிது நேரம் ஆடிவிட்டுத்தான் நகர்வார்.


கோவில்களில் கல்யாண உற்சவத்தின்போது விக்ரகங்களைக் கட்ட ஆங்காங்கே டபிள்யூ வடிவ சங்கிலிகள் பதித்த ஊஞ்சல் 

24 வகை மூலிகை மரப் பலகைகளை நெருக்கிப் பொருத்திய அரண்மணை ஊஞ்சல்.

கல்யாண மண்டபங்களில் அசையும் கண்ணூஞ்சல்கள்.

பார்க்கில் தொங்கும் சிறுசும் பெசிசுமான ஊஞ்சல்கள்,

சிந்தடிக் ஊஞ்சல்கள்…..

…இப்படி, எந்த ஊஞ்சலைப் பார்த்தாலும் மனசு துள்ளும் அவருக்கு.


குமரேசனின் அப்பா கோவில் குருக்கள். சொற்ப வருமானத்தில்தான் குடித்தனம் நடந்தது.

குமரேசன் அரசுப் பள்ளியில் கருத்தாய்ப் படித்தான்.

பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி என பற்பல போட்டிகளில் ஜெயித்தான்.

விதி எவரையாவது சுலபமாக ஜெயிக்கவிட்டுவிடுமா என்ன…!

கோவில் குருக்களாய் பணி செய்த அப்பா திடீரென மாரடைப்பால் இறந்து போனார்.

DISABILITY, DESEASE, DEATH… இந்த மூன்று எவருக்கும் எந்த நிமிஷத்திலும் வரலாம் என்ற தத்துவக் கூற்றுதான் எவ்வளவு உண்மை.

அப்பாவின் மரணத்திற்குப் பின் குடும்பம் நிர்கதியானது.

கோவில் க்ருஹத்தை காலி செய்யச் சொல்லிவிட்டார்கள்.

அம்மா வேதபாடசாலையில் சமையல் வேலை செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டாள்.

ஹாஸ்டலில் சேர்த்துவிட்டதோடு, ஸ்ரீவரதம் அறக்கட்டளையின் மூலம் படிப்புதவியும்  செய்தார்  மனிதாபிமானமிக்க, நல்லாசிரியர் சீனுவாசன் அய்யா.

இலவச சைவாள் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்தான் குமரேசன். 


‘கூகுள் மீட்’ல் பாராட்டு விழா முடிந்தது.

‘மனைவியை எப்படிச் சமாளிப்பது ? ’ யோசித்தார். 

‘முதலில் ஆசாரியைப் பார்க்கலாமே ! ’ புறப்பட்டார்.


“வாங்கய்யா!”- குடோனைத் திறந்தபடியே வரவேற்றார் ஆசாரி.

மரப்பத்தைகள், பலகைகள், சட்டங்களெல்லாம் நேர்த்தியாய் அடுக்கப்பட்ட குடோன்.

வீசிய தேக்கு நெடியை, லேசாய்க் கண்மூடி, முகர்ந்து முழுமையாய் ரசித்தார்.

“ நீங்க கேட்ட இரண்டடி பாருங்க ” டேப் சுருளை ‘இழுத்து- நீட்டி’, ஓரத்துக்கு ஓரம் அகலம் வைத்தார்.

“ . . . ”

“கொக்கி, கொண்டி, வளையம், கூலி…ன்னு ஊஞ்சலைக் கொண்டு வந்து வீட்ல மாட்ற வரைக்கும் 40 சொச்சம் எஸ்டிமேட். ரவுண்டா 40 கொடுங்க..”

கூட்டிக் கழித்துப் பார்த்ததில், மனதிற்கு நிறைவாய் உணர்ந்தார் குமரேசன்.


பள்ளிப் பருவத்தில், செல்வி, குப்பி, உமாசங்கர், விட்டல், சந்திரா, சந்துரு, ரவி… எல்லோரும் ஊஞ்சலில் எக்ஸ்பிரஸ் ஓட்டிய வேகத்தில், சங்கிலி அறுந்து ‘தொ…பீ……ல்…’தாறுமாறாய் விழுந்தது.

அறுபட்ட சங்கிலி நெற்றிப் பொட்டில் கிழித்து வடுவாகி, எஸ் எஸ் எல் சி புத்தகத்தில் இடம்பெற்றது.

அந்த நெற்றித் தழும்பை அனிச்சையாய் ஒரு முறை தொட்டுப் பார்த்தது குமரேசனின் வலது கை.


நேரம் பார்த்து மனைவியின் காது கடித்தார் குமரேசன். 

“ரொம்ப நாளா சொல்றேள். மொத்தமா பணம் வந்த நேரத்துல ஊஞ்சலுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ…! ”

மனைவி காட்டிய பச்சைக் கொடி, ஊஞ்சலை விட அதிக மகிழ்ச்சியைத் தந்தது.

 ‘மனம் மாறுவதற்குள் ஆசாரியைப் சந்தித்து ஓகே சொல்லிவிட்டு வந்துவிட வேண்டும்..!’

ஓட்டமும் நடையுமாய்க் கிளம்பினார் குமரேசன்.

நிலைப்படியில் தடுக்கி மல்லாக்க விழுந்தார்.

‘ ஆ…… ! ’ என்ற கதறலுடன் பின் தலையைப் பிடித்துக்கொண்டார்.


அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனைப் படுக்கையில் கிடந்தார்.

செலைன் ஏறியது …

ப்ளட் டெஸ்ட்…

எக்ஸ்ரே …

ஸ்கேன் …

ஈ சி ஜி…

இத்யாதிகள் …  

ரிஸல்ட்டுக்காக காத்திருந்தார்கள்

“ஸ்டோர்க்’ அறிகுறி.

“ 2 மணி நேர அப்ஸர் வேஷனுக்குப் பிறகுதான் எதுவும் சொல்ல முடியும்… ” என்றார்கள்…


சிகிச்சை நல்லபடியாய் முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.

“சரியான நேரத்துல உங்க மனைவி உங்களைக் கொண்டு வந்து  அட்மிட் பண்ணிட்டதால அதிக பாதிப்பில்லாம தப்பினீங்க” என்றார் மருத்துவர்.

மனைவி ஒரு வித பெருமிதத்துடன் முறுவலித்தாள்.

மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் ஒரு வார சிகிச்சைக் கட்டணமாய் ஆகிப்போனது – ஊஞ்சலுக்கென ஒதுக்கிய தொகை . 

ஊஞ்சல் பலகையில்தான் உட்காரவேண்டும் என்று போன வாரம் வரை உறுதியாய் இருந்தவர் வேறு வழியின்றி, தங்கை தந்த பிரம்பு ஊஞ்சலில் முதன் முறையாய் அமர்ந்தார்.

ஊஞ்சலைப் பற்றி பேச்சு எடுக்கும்போதெல்லலாம் “இப்போ வேண்டாம்…” என்று எப்போதும் சொல்லும் மனைவி தற்போது ‘செய்த’தையும் நினைத்துப்பார்த்தார்.

கண் மூடியபடி மீண்டும் ஊஞ்சல் கனவில் மிதந்தார் குமரேசன்.

– ஆனந்த விகடன் 23 ஜூன் 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *