கனவுப் பாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 5,284 
 

மத்திய தில்லியிலுள்ள நிர்மால்யா சொசைட்டியின் பூங்காவில் பெண்களும் ஆண்களுமாக ஏகக் கூட்டம். அனைவரும் எதையோ எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள். அங்கு திருமணமான பெண்கள் ஒருவருக்கொருவர் பாபி (அண்ணி) என்று அழைத்துக் கொள்வது வழக்கம். அவரவர்களின் கணவன்மார்கள் அடுத்த பெண்களுக்கு அண்ணன், தம்பி முறைதான் என்பதைத் தெரிவிக்க.

ராஜேஷும் அவனது நண்பர்களும் பார்க் பென்ச்சில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த பென்ச் பரந்து விரிந்த அத்தி மரத்தடியில் போடப்பட்டிருந்ததால் நிறைய ஆன்ட்டிகள் அம்மர நிழலில் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டனர்..

பஞ்சாப் அமிர்தசரசிலிருந்து புதிதாகத் திருமணமாகி வந்திருக்கும் பக்கத்து வீட்டு காம்யா சிங் ஆன்டி ஹிந்தியில்

‘பாபி நான் ராஜேஷுக்கும் , சோனியாவுக்கும் ரொட்டி கொடுத்துவிடுகிறேன். சௌத்ரி பையாவின் சாப்பாட்டை நீங்கள் யாராவது பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றாள்..

தங்கள் வேலைகளை அப்போதுதான் முடித்துவிட்டு மாடியிலிருந்து இறங்கி வந்த மற்ற ஆன்டிகள் எல்லாம் ஏன் இந்தக் கூட்டம் எனக் கேட்க ஆரம்பித்தனர்.. அது மாலை வேளை என்பதால் தங்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேலைக் காரிகளும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டனர். வேலைக்காரி சுட்கி ராஜேஷைக் காண்பித்து மற்றனைவர்களிடமும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவர்களனைவரும் சிறிது தள்ளியிருந்த மாமரத்தடியில் நின்றிருந்ததால் பேசியது எதுவும் கேட்கவில்லை.

பக்கத்தில் நின்றிருந்த நித்திகா ஆன்ட்டி ஆரம்பித்தாள்.

‘பாவம் முகேஷ் பையா. இது அவருக்குத் தேவையில்லாத பிரச்சினை. இவ்வளவு நாளும் தன் அம்மாவின் உதவியுடன் தான் குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருந்தார் ’

சி பிளாக்கில் புதிதாகக் குடி வந்திருக்கும் நம்ரதா கங்குவார் ஆன்ட்டி விஷயம் தெரியாமல் சௌத்ரி பையாவுக்கு மனைவி கிடையாதா எனக் கேட்க,

மற்றவர்கள் அவரை ஷுப் ஷுப் போலோ. (நல்ல வார்த்தை சொல்லு). அவர் மனைவி பாயலுக்கு உடம்பு சரியில்லை. அதனால் தான் தகவலுக்காக நாங்கள் இங்கே நிற்கிறோம் என்றனர்.

நித்திகா ஆன்ட்டி தொடர்ந்தாள்.

பாயல் ஹரித்துவாரிலுள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாள். பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் தான் இங்கு வருவாள். கொஞ்ச நாளைக்கு முன்கூட அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. யாருடனும் பேசாமல் தனி அறையிலேயே அமர்ந்திருந்தாள். பையா கேட்டுக் கொண்டதால் நான் ரேஷ்மி, மௌமிதா, ஷாலினி, ரோமி அனைவரும் தினமும் அவள் வீட்டிற்குச் சென்றோம்.

அவளின்மாமியார் எங்களிடம் கதை கதையாகச் சொல்வார் அவளின் தினசரி செய்கைகளைப் பற்றி. பாயலுக்கு பிடித்திருப்பது மோகினியாம். அதற்கு சிவப்புதான் பிடித்த நிறம் என்பதால் அவர்கள் வீட்டில் திரைச்சீலை முதல் மேசை விரிப்பு வரை சிவப்பு நிறமாக மாற்றியிருந்தார்கள்.

எத்தனை பூசைகள் , எத்தனை விரதங்கள். எல்லாவற்றுக்கும் பிறகு மெஹந்திபூர் பாலாஜி கோவிலுக்கு கூட்டிச் சென்று பேய் ஓட்டிய பின் தான் பாயல் பாபி சாதாரணமாகப் பேச ஆரம்பித்தாள்.

சாப்ட்வேர் என்ஜினியரான நம்ரதா ஆன்ட்டியால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

டிப்ரஷனாக இருந்திருக்கும். அதற்கு ட்ரீட்மெண்ட் எடுத்திருந்திருப்பார்கள். என்றாள்

சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அனைவரும் இ பிளாக்கின் மொட்டை மாடியிலிருந்து இரண்டு குரங்குகள் பக்கத்திலிருந்த வில்வ மரத்தின் மீது தாவியதை நாங்கள் பார்த்தோம் எனக் கத்திகொண்டு வரவே கூட்டத்தினர் நர்மதாவைச் சாட ஆரம்பித்தனர்.

பார்த்தாயா மெஹந்திபூர் பாலாஜியை (அனுமனை) நம்பாமல் பேசியதால் அவரே பிரத்யட்சமாகி விட்டார். வில்வ மரத்திலிருந்து நேராக மந்திருக்குள் சென்று விடுவார் என்றனர். மங்கல்வார் (செவ்வாய்க்கிழமை) ஹனுமானுக்கு வேண்டிக்கொண்டு சொசைடி கோவிலில் மறக்காமல் பூந்திப் பிரசாதம் கொடுத்துவிடு என்றனர்.

நம்ரதா ஆன்ட்டி கூட்டத்திலிருந்துமெதுவாக நழுவத் தொடங்கினாள்.

மீண்டும் பேச்சு பாயலைப் பற்றி திசை திரும்பியது

பாயல் பாபி கி பேடா (பாயலின் பையன்) பத்தாம் வகுப்பு படிக்கிறானாம். சரியாகவே படிக்கமாட்டானாம். அதனால்தான் இப்படி ஆகிவிட்டது. பெண் சோனியாவுக்கு ரொம்ப செல்லம்.

அதைப் பல தலைகள் ஆதரித்தன. ஆமாம் சரிதான் எனத் தொடர்ந்தாள் கிரண்.

நேற்று கூட என் பையன் மானஸ் சைக்கிள் ஓட்டும்போது வேண்டுமேன்றே அவனைப் பயமுறுத்த சைக்கிளோடு குறுக்கே பாய்ந்து கொண்டே இருந்தாள். கார் பார்க்கிங்கில் ஒருகார் கூட விடுவதில்லை. எல்லாக் குழந்தைகளையும் மிரட்டி அழைத்துக்கொண்டு ஒளித்து வைத்த சிறு சிறு கற்களால் காரின் முன்புறம் (போனட்டில்) கிறுக்குவிடுவாள். தெரிந்தோ தெரியாமலோ அவரவர் குழந்தைகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் ஒன்றும் பேச முடிவதில்லை.

வெயிலடிக்க ஆரம்பித்ததால் ராஜேஷும் அவனது நண்பர்களும் இடம்மாறி எ பிளாக் அருகே போடப்பட்டிருந்த பென்ச்சில் அமர்ந்தனர்.

அங்கும் அனைவரும் மர நிழலில் எதற்காகவோ காத்துக் கொண்டு தான் நின்றார்கள். ஆனால் அவர்களின் பேச்சு சொசைட்டி சார்ந்ததாக இருந்தது.

ஷ்யாமின் அம்மா ஆரம்பித்தாள்.

மீண்டும் மீண்டும் தோபால் குடும்பத்தின் நபர் தான் சொசைட்டி பிரசிடெண்ட்டாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். போனமூன்று வருடங்கள் படே தோபால் பையா ராகேஷ் தோபால் (பெரிய அண்ணன்). இப்போது தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது சோடே தோபால் பையா சூயஷ் தோபால் ( அவரின்தம்பி)

பிரத்யுமனின் அம்மா மற்றவர்களுக்கு நினைவூட்ட ஆரம்பித்தாள். ராகேஷின் பதவிக்காலமான கடந்த மூன்றாண்டுகளில் எவ்வளவு பிரச்சினைகளைச் சந்தித்தோம். மெயின்டெனென்ஸ் பணம் தவிர எதற்கெடுத்தாலும் பணம் வசூலிக்கப்பட்டது.

தெரியாமல் உள்ளே நுழைந்த இரண்டு தெரு நாய்களால் எவ்வளவு தொல்லை. சைக்கிள் ஓட்டும் குழந்தைகள், வாக்கிங் போகும் முதியவர்கள், பார்க் சீஸா மற்றும் ஊஞ்சலில் விளையாடும் சின்னஞ் சிறு குழந்தைகள் யாரையும் விடவில்லை அந்த நாய்கள். குரைத்துக் கொண்டே பின்னால் துரத்தும்.

‘எப்’ பிளாக் பாபி தான் அதற்குத் தீர்வு கண்டாள். எவ்வளவு அழகாக அவைகளை எடுத்து வளர்த்தாள். குளிர்காலங்களில் அவைகளுக்கு சட்டை தைத்துப் போட்டு, அவைகளை ஏற்றுக் கொண்ட தினத்தை பிறந்த நாளாகக் கொண்டாட அனைத்துக் குழந்தைகளையும் கூட்டி கேக் வெட்டி நாய்களுக்கு ஊட்டச் செய்து அழகுபார்த்தாளே மறந்து விட்டீர்களா.

மிஸஸ் தியாகி பஹுத் அச்சி ஹை.( திருமதி தியாகி மிகவும் நல்லவள்).

சரிதா ஆன்ட்டியும் சம்பூர்ணா ஆன்ட்டியும் பேசிக் கொண்டனர் மெதுவான குரலில்.

நமக்குத் தெரியாதா எப் பிளாக் பாபி ஏன் அப்படிச் செய்தாள் என்று.

தான் சேர்ந்திருக்கும் NGO வில் நல்ல பெயரும் பதவியும் பெற வேண்டும் என்பதே அவளின் நோக்கம். அதற்காக ஒரு கட்டத்தில் நாயைக் கோவிலுக்குகூட்டி வந்து அதற்கு பண்டிட்டை(அர்ச்சகரை) டீக்கா (குங்குமத்தையும் அரிசியையும்சேர்த்து) இட்டுவிடச் சொன்னது அதைச் செய்ய மறுத்த பண்டிட்டை போலீசில் பிடித்துத் தருவதாக மிரட்டியது. மறக்க முடிந்த விஷயங்களா இவை.

பிரத்யுமனின் அம்மா தொடர்ந்தாள்

ராகேஷின் பதவிக்காலத்தில் உட்புறச் சாலைகள் சரியாகவே பராமரிக்கப்படவில்லை. கேஸ் கனெக்ஷன் மற்றும் கேபிள்களுக்கென பல முறை குழி தோண்டி மூடியதால் சாலைகள் பலமாகவே இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்டுவதில் எவ்வளவு சிரமம் தெரியுமா?

ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டப்படும் ஜெனரல் பாடி மீட்டிங்கிலும் கூட நியாயங்களைப் பேசிய என் கணவரை எல்லோர்முன்னிலையிலும் தோபால் பையா எடுத்தெறிந்தே பேசுவார்.

மீண்டும் மெதுவான குரலில் சரிதாஆன்ட்டி சொன்னாள்.

பேசிக் கொண்டிருப்பது யார் தெரியுமா? ராகேஷ் பையாவை எதிர்த்து நின்ற பிராஞ்சல் ஷுக்லாவின் மனைவி. அவர் தோற்றுவிட்டதால் இப்படிக் குறை கூறுகிறாள்.

யார் கண்டார்கள் அடுத்தமுறை தேர்தலில் இவர் கணவரும் பிரசிடெண்டாக ஆகக் கூடும். நமக்கெதற்கு வம்பு. பேசாமல் கேட்டுக் கொண்டிருப்போம்.

சொசைட்டி மந்திரில் (கோவிலில்) நடக்கும் பூசைக்கு வருமாறு மாலி பையா (தோட்டக்காரன்) அழைக்கவே அனைவரும் அங்கு செல்ல ஆரம்பித்தனர். அவர்களுடன் ராஜேஷும் சென்றான்.

அங்கு சௌத்ரி பையா குடும்பத்திற்காக வேண்டிக்கொண்டு பூசை நடப்பதாக பண்டிட் அறிவித்தார்.

அனைவரும் பஜனை செய்யத் தீர்மானித்தனர். மிசஸ் குப்தாவின் மருமகளான ஷர்மிலி ஆன்ட்டி தன் தோழிகளுடன் கடவுளுக்குப் படைக்க பூரி மற்றும் கேசரி செய்துவந்தாள். மிசஸ் பாண்டேயின் மருமகள் நதாஷா ஆன்ட்டி டோலக் (பஜனைகளில் வாசிக்கப்படும் மேள வாத்தியம்) வாசிக்க ரேஷ்மி ஷர்மா ஆன்ட்டி பாடல்கள் பாட பஜனை தொடங்கியது. \

ஒரு மணி நேரப் பஜனைக்குப் பின்

எல்லோரும் எழுந்து சிவலிங்கத்தை வலம் வந்து , பூக்களைத் தூவி சௌத்ரி குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

என்றார் பண்டிட்.

மிசஸ் குப்தா தன் மருமகள் ஷர்மிலி ஆன்ட்டியிடம்

பூரியை சொசைட்டிக்கு வெளியில் இருந்த குடிசைப் பகுதி குழந்தைகளுக்கு கொடுத்துவா என்றார். கேசரியை அங்கு விநியோகிக்கத் தொடங்கினார். கை நீட்டிக் கொண்டு நின்ற ராஜேஷை ஏனோ யாரும் கண்டு கொள்ளவேயில்லை.

மந்திருக்கு எதிரே இருந்த இ பிளாக்கின் வில்வ மரத்தடியில் ஆம்புலன்ஸ் வந்து நின்றதைப் பார்த்தவுடன் அனைவரும் அங்கு விரைந்தனர்.

ஆம்புலன்சின் சைரன் சரியில்லை போலும். ஊதத் தெரியாதவர்கள் சங்கு ஊத முயற்சித்தது போல் இருந்தது அதன் சைரன் எனப் பேசிக் கொண்டனர் அங்கிருந்த அங்கிள்கள். .

திடீரென்றுபெரும் கூக்குரல்கள். பாயல் பாபி…….மிசஸ் சௌத்ரி….. கஹாங் சலே கயே ஆப்….( பாயல் அண்ணி எங்கே போய்விட்டீர்கள்). ஆம்புலன்ஸிலிருந்து பாயலின் உடல் இறக்கப் பட்டது. யாரும் அழவில்லை. .அனைவரும் அவளை ஆஜா ஆஜா ( வா வா) எனக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள்.

பாயலின் தோழி மீரா தத்தா உரத்த குரலில் கூறினாள்.

நான் உனக்காக சிவப்பு லெஹங்காவும் நகைகளும் கொண்டு வந்திருக்கிறேன். ஊர்வலத்திற்கு நேரமாகி விட்டது. புறப்படு.

என்ன அநியாயம். என் அம்மாவின் இறப்பிற்காக யாரும் அழவில்லையே. ஏன் இப்படி.

ஆமாம் இந்தக் கூட்டத்தில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் வெகு நேரமாக.

யோசனையுடன் கண்விழித்தான் ராஜேஷ். மீண்டும் மீண்டும் பெருமூச்செறிந்து கொண்டே குழப்பத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தான். அம் மாலை நேரத்தில் பூஜை அறையில் அவனின் பாட்டி சங்குஊதிக் கொண்டிருந்தாள். அப்பா மலர் தூவி பூஜை செய்துகொண்டிருந்தார். தங்கை டோலக் அடிக்க அம்மா பாட்டு பாடிக் கொண்டிருந்தாள். எதிர்வீட்டு மீரா ஆண்ட்டி சிவப்பு லெஹங்கா மற்றும் நகைகளுடன் நின்றிருந்தாள். அப்பாடா நான் கண்டது வெறும் கனவு தான்.

காலையில் தேவிமா தாதியின் ( பாட்டி) ஈமச் சடங்கிற்குஉதவியது. அப்போது பார்த்த ஆன்ட்டிகளின் கூட்டம், மதியம் நடந்த சொசைட்டி மீட்டிங் எல்லாம் சேர்ந்து குழம்பி இப்படியா கனவில்வர வேண்டும்.

அதுவும் பத்தாம் வகுப்பில் பாடம் எடுத்த ஹிந்தி மற்றும்சமஸ்கிருத ஆசிரியர்களான தோபால் சகோதரர்கள் என் கனவில் சொசைட்டி பிரசிடெண்ட்டாக.

ஓ மை காட். எவ்வளவு பழகியும் சரியாக ஊதத் தெரியாத என் தாதியின் சங்கு முழக்கம் ஆம்புலன்ஸின் கொடூரமான சைரன். எல்லாம் சரிதான்.

ஆனால் நன்றாக இருக்கும் என் அம்மாவிற்கு முதலில் பேய் பிடித்ததுபோலவும் இப்போது இறந்ததாகவும் கனவு ஏன் வர வேண்டும். புரியவில்லை.

முன் எப்போதோ பார்த்த, மற்றவர்கள் பேசக் கேட்ட, படித்த சம்பவங்கள் அனைத்தும் சில சமயங்களில் குழம்பி கனவில் வரும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு கொடூரமாகவா.

முதலில் ஒரு நல்ல கவுன்சிலரைப் பார்த்து என் கனவுப் பாதைக்கான விளக்கம் கேட்க வேண்டும் தீர்மானித்தான் பட்டதாரி ராஜேஷ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *