கனவுகள் கலையட்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2022
பார்வையிட்டோர்: 2,829 
 

(1988 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று காலையில் அதிபர் பொன்னுத் துரையின் வீட்டுக்கு வந்த நண்பர் செல்லப்பா, அவரோடு பல விஷயங்கள் பற்றிப் பேசினார். ஆனால் அவர் சொன்ன ஒரே விஷயத்தைச் சுற்றித்தான் பொன்னுத்துரையின் சிந்தனை சுழன்ற வண்ணம் இருந்தது.

அது அவரை வெகுவாகப் பாதித்தது. ஐம்பத்தெட்டு வயது வரை எந்தவிதப் பொறுப்பும் இன்றித் தாம் உண்டு, தம் பாடசாலை உண்டு என்று இருந்து வந்தவருக்குத் தமது குடும்பப் பொறுப்பின் பாரச் சுமையை உணர்வதற்குச் செல்லப்பா வழிவகுத்துச் சென்றுவிட்டார்.

“இங்கை பார் பொன்னுத்துரை, நீ பெரிய அறிவாளி தான். சிறந்த அதிபர் தான். நான் மறுக்கேல்லை . ஆனால்…” செல்லப்பர் தாம் சொல்ல வந்ததைப் பூர்த்தி செய்யாது தயங்கினார்.

“ஆனால்… ஏன் தயங்கிறாய்? நீ எனக்கு நெருங்கிய சினேகிதன். எதெண்டாலும் மறைக்காமல் சொல்லு” –

செல்லப்பா செருமினார். “எப்படிச் சொல்வது?” என்ற தயக்கத்தின் தொடர்ச்சிதான் அந்தச் செருமல், ஆனால் இனியும் மறைக்கக்கூடாது. உண்மையான நன்பனுக்குரிய கடமையைச் செய்துதான் ஆகவேண்டும்.

“உனக்கு மூண்டு குமர்கள் வீட்டிலை இருக்கிறதைப் பற்றி எண்டைக்காவது நினைச்சுப் பார்த்தியே? ஒண்டு படிச்சு முடிச்சிட்டுப் பட்டதாரி ஆகியும் வேலையில்லாமல் வீட்டிலை இருக்குது. மற்றதுகளும் இரண்டொரு வருசத் திலை படிப்பை முடிச்சுப் போடும். மூத்தவளுக்கு எத்தினை வயசு..?”

“வாற மார்கழியோடை இருபத்தொன்பது முடிஞ்சு முப்பது தொடங்கிவிடும்.”

“அந்தப் பிள்ளைக்கு ஒரு கலியாணம், கார்த்திகை நடத்திப் பார்க்கிறது பற்றி. எப்பவாவது யோசிச்சுப் பார்த்தியே?”

பொன்னுத்துரை சிரித்தார். “அவளுக்கென்ன? இரண்டொரு மாசத்திலை வேலை கிடைச்சிடும் பட்டதாரி ஆசிரியருக்கு இப்ப சம்பளம் இரண்டாயிரத்துக்கு மேலை, படிச்ச பொம்பிளையை ஆர் வேணாமெண்டு சொல்லுவான்? அவளுக்கு வேலை கிடைக்கட்டும். பிறகு நீ சொன்னது பற்றி யோசிப்போம்.”

செல்லப்பாவிற்குப் பொன்னுத்துரையின் அப்பாவித் தனமும் அநுபவமற்ற பேச்சும் எரிச்சலை மூட்டின. “நீ ஒரு படிச்ச மடையன். உலக நேச்சர் உனக்குத் தெரியாது. தொழில் கிடைச்சாலும் மாப்பிளை கிடைக்கிறது அபூர்வம். வயசு ஏற ஏறப் பொம்பிளைக்குக் கலியாண மாக்கட்டிலை மதிப்புக் குறைஞ்சு குறைஞ்சுதான் வரும். சீதன மீட்டரோ மேலை மேலை ஏறிக்கொண்டு போகும். நீ என்ன லட்சாதி பதியே? சாதாரண பாடசாலை அதிபர். பணங்காசெண்டு சேர்த்து வங்கியிலை போட்டு வட்டியை எண்ணிப் பார்க்கிற தொழிலே வாத்தித் தொழில்? என்னவோ சொல்ல வேண்டி யதைச் சொல்லீட்டன். இனி உன்ர பாடு.”

செல்லப்பா போய்விட்டார்.

இது நாள்வரை எந்தவித பாரமுமின்றி இலேசாக இருந்த பொன்னுத்துரையின் நெஞ்சிலே பாறாங்கல்லைச் சுமத்தி விட்டு அவர் போய்விட்டார்.

அவர் போகும் வரை காத்திருந்தவள் போலப் பொன்னுத்துரையின் மனைவி இராஜேஸ்வரி மொலு மொலுவென்று பேசிச் செல்லப்பாவின். பிரேரணையை வழி மொழிந்து அவரைச் சித்திரவதையே செய்துவிட்டாள். “நான் எத்தனை நாள் சொல்லியிருப்பன்? நான் அழுது குழறித் தலையிலை அடிச்சதெல்லாம் உங்கடை செவியிலை ஏறேல்லை. இப்ப அந்தப் பெரிய மனிசன் சொன்னதாவது உங்கடை மண்டைக்குள்ளை ஏறிச்சுதே? நான் என்ன சொன்னாலும் அதட்டி வெருட்டி அடக்கிப் போடுவியள். உங்களுக்கென்ன? காலமை பள்ளிக்கூடத்துக்கெண்டு வெளிக்கிட்டால் பின்னேரம் ஐந்து மணிக்குத்தான் வீடு திரும்புவியள். இதுகளோடெ உத்தரிக்கிறது நானல்லோ? ஒண்டையெண்டாலும் கரைசேர்த்தாலாவது கொஞ்சம் நிம்மதி. அதையாவது பொறுப்பாய்ச் செய்யப்பாருங்கோ.”

இராஜேஸ்வரியின் பேச்சு எஞ்சியிருந்த கொஞ்ச நிம்மதியையும் போக்கடித்துவிட்டது. இருந்தாலும் ஒரு நப்பாசை, ‘பாடசாலை அதிபர் என்ற வகையிலே எனக்கு ஒரு சமூக அந்தஸ்து இருக்கிறது. என் மகளோ பட்டதாரி. அழகி என்று இல்லாவிட்டாலும் அவலட்சணம் என்றும் சொல்வதற்கில்லை . வீடு, நகை வேறு இருக்கிறது. சீதனம் என்று பெருந்தொகைக் காசு கைவசம் இல்லாவிட்டாலும் கடனோ உடனோ பட்டுச் சமாளித்துவிடலாம், பார்ப்போம்’.

இவ்வாறு சிந்தித்துப் பொன்னுத்துரை மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கினார்.

ஆனால்…

பற்றாத கம்பளியால் போர்த்துக் கொள்பவன் படும் அவஸ்தை போல ஒரு பக்கம் சரி வந்தால் மறுபக்கம் சரிவராது அவர் அடைந்த ஏமாற்றங்கள் கொஞ்சமல்ல. ‘கல்கி’யின் வரலாற்று நாவலாய் அவரது ஏமாற்ற வரலாறு அத்தியாயம் அத்தியாயமாக நீண்டு கொண்டே சென்றது.

“பாருங்கோ. எல்லாப் பொருத்தமும் நல்லாய்த்தான் இருக்குது. ஆனால் பாவப்பொருத்தந்தான் உதைக்குது. ஆணின்ரை சாதகத்திலை பாவம் ஐம்பத்திரண்டு. பெண்ணின்ர சாதகத்தில் பாவம் இருபத்தைஞ்சு. உது சரிவராது. வேறை இடம் பாருங்கோ.” இராமலிங்கச் சாத்திரியார் தமது சோடாப் போத்தல் கண்ணாடியை மூக்கு நுனிக்கு வரச்செய்து கொண்டு, கண்களை மேலே உயர்த்தியபடி அனுதாபம் சொற்களிலே இழையோடக் கூறியவை. இவை களத்திரதோஷம், யோனிப்பொருத்தம், அது இது என்று ஆறு மாதங்களிலே சாத்திரியார் பொன்னுத்துரையை அரைச்சோதிடர் நிலைக்குப் பயிற்றி உயர்த்திவிட்டார். இப்பொழுது பொன்னுத்துரை, தாமே பஞ்சாங்கத்தையும் சாதகக் குறிப்புக்களையும் பார்ப்பதால் அவருக்குஒவ்வொரு தடவையும் இருபது ரூபா மிச்சம்! –

“சாதகப் பொருத்தம் மிகத் திறந்தான். ஆனால் பொடியன் உங்கடை பிள்ளையளவு படிச்சவனல்ல. உத்தியோகமும் அவ்வளவு உயர்வில்லை. பொடியன்ர தாய் தகப்பன் சகோதரங்களுக்குச் சம்மதம் எண்டாலும் பொடியன் தன்னிலும் கூடின படிப்பு உள்ள பொம்பிளை தனக்கு வேண்டாம் எண்டு பிடிவாதம் செய்யிறான். நான் என்ன செய்யிறது?” இவை கலியாணத் தரகர் கந்தையாவின் அலுப்புச் சலிப்பு நிறைந்த கூற்றுக்கள்.

“என்ன படிச்சென்ன? பிள்ளைக்குக் கிட்டடியில உத்தியோகம் கிடைக்கப் போறதில்லை. எங்கடை மோனுக்கு உத்தியோகம் பார்க்கிற பிள்ளைதான் தேவையாம்” என்று தட்டிக் கழிக்கிறவர் சிலர் என்றால், “உத்தியோகம் பார்ப்பதே தவறு. நாளைக்கு உங்கடை பிள்ளை உத்தியோகம் பார்க்கப் பிடிவாதம் பிடித்தால் என்ன செய்யிறது?” என்று. சாட்டுச் சொல்பவர்களும் பலரான பொழுது பொன்னுத்துரையால் இந்த வேடிக்கை மனிதரைப் புரிந்து கொள்வது கடினமாகத்தான் இருந்தது. ‘உலக நேச்சர் உனக்குத் தெரியாது. நீ ஒரு படிச்ச மடையன்’ என்ற செல்லப்பரின் கூற்றுக்கள் அவ்வேளை களில் பொன்னுத்துரையின் நினைவுத்தரங்கிலே பெருங் கோஷத்துடன் அலை எறிகையில், அவர் அது உண்மை தான் என்று அங்கீகரிக்கக் கூடிய நிலையிலேதான் இருந்தார்.

குலம் கோத்திரத்தால் கூடியது, குறைந்தது, சீதனம் போதாது, இன்னும் வேண்டும் என்ற காரணங்களாலே கைவிட்டுப்போன சம்பந்தங்களும் பொன்னுத்துரையைப் பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி அவரை வேதனையால் சாம்ப வைத்தன. உலகம் முழுவதுமே தமக்கு எதிராகவும் தம் மகளுக்கு எதிராகவும் சதி செய்வதுபோல அவருக்குத் தோன்ற, அவர் விரக்தியின் விழிம்பிலே நின்று தவித்தார். வீட்டிலே சிறிது நிம்மதிக்கும் இடமில்லாது போய்விட்டது. மனைவியின் ஏக்கப் பார்வையும் கலங்கிய கண்களும் அவரைச் சந்நியாச நிலைக்கு விரட்டியடித்தன. மகள் மில்லாமல் பிடிக்கும் சண்டைகளும் அளவு கடந்த கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர் அதை வெளிப்படுத் தாமல் நெஞ்சுக்குள்ளேயே மறுகலானார். “பாவம் காலா காலத்தில் செய்யவேண்டியதைச் செய்து வைத்திருந்தால் என் மகள் சிடுசிடுப்பான சுபாவத்திற்கு உள்ளாகியிராள். தந்தையாகிய எனது கையாலாகாத் தனத்திற்கு நான் என்னையே நோகவேண்டும். அவளை நோவது பெரும் பாவம்” என்ற ஞானத்தை அடைந்த அவர், எவ்வளவு தான் வீட்டில் அமளிதுமளி நடந்தாலும் மௌனத்தையே தமது கவசமாகக் கொள்ளத் தொடங்கினார்.

ஒரு காலத்தில் பொன்னுத்துரை பெரும் புத்தகப் புழு. ஒரு புத்தகத்தையோ, பத்திரிகையையோ, சஞ்சிகை யையோ, கையில் எடுத்தால் அவருக்கு உலகமே மறந்து விடும். முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கக் கடைசிச் சொல்வரை படித்த பின்புதான் மீண்டும் அவர் உலகுக்குத் திரும்புவார். அந்த நேரத்தில் யாராவது பேசினாலோ, இரைந்தாலோ அவருக்குக் கெட்ட கோபம் வரும். இராஜேஸ்வரி இப்படியான சமயங்களில் ஏதாவது அவசிய கருமமாய் இருந்தால், அவருக்கு அருகிலே தயங்கித் தயங்கி வந்து “இஞ்சருங்கோ கொஞ்சம் இறங்கி வாங்கோ” என்று மன்றாடும் குரலில் வேண்டிக்கொள்வது வழக்கம். அவ்வேளையில் பொன்னுத்துரை சீற்றத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்து, அவளின் அசட்டுச் சிரிப்புக்கு இரங்கி இந்த உலகத்துக்கு இறங்கி வருவார்!

செல்லப்பரின் இடிப்புரையைக் கேட்ட நாளிலிருந்து அவர் தமது வாசிப்புப் பித்திலிருந்து சிறிது சிறிதாக விடுபடாலானார். வாசிக்க நேரம் இல்லாது மகளின் சம்பந்த விஷயமாக அலைந்து திரியவேண்டியிருந்தது ஒரு காரணம் என்றால் அதிலும் காத்திரமான பலவேறு காரணங்களும் இருக்கத்தான் செய்தன. அமைதியாகவும் மெய்ம்மறந்தும் வாசிப்பதற்கான மனநிலை அவரைவிட்டுக் குடிபோய் விட்டது. வாசிக்கக் கிடைக்கும் விஷயங்களிலே பெரும் பாலானவற்றில் கலியாணமாகாது கன்னிகளாய் இருந்து பெருமூச்சுவிடும் பெண்கள் பற்றிய பரிதாபமான செய்திகளும் சீதனப் பசாசின் கொடூரம் பற்றிய சங்கதி களும் தலைகாட்டி அவரைப் பெரிதும் பயமுறுத்தின.

“பெண் சமத்துவத்திற்காகப் பாரதி குரலெடுத்த காலத்திலிருந்து இன்றுவரை எத்தனையோ பேர் எவ்வள வோ சொல்லிவிட்டார்கள். இன்று கல்வியிலும் தொழிற் றிறமைகளிலும் பெண்கள் ஆண்களை விட எவ்வளவோ முன்னேறிக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் எங்கள் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் எவ்வளவுதான் படித்து முன்னேறி வந்தாலும் பெண்களைச் சீதனக் கொடுமைக்கு ஆளாக்கி அவர்களின் உரிமைகளை அடக்கி ஒடுக்குவதில் படித்தவர்கள் என்று பெருமை பேசும் யாழ்ப்பாணச் சமூகத்தினர் மும்முரமாக இருந்து வருகின் றனர். ஒட்டு மொத்தமாகத் தமிழினத்தையே எடுத்துக் கொண்டால் தமிழ் நாட்டிலே வரதட்சணையும் யாழ்ப்பாணத் திலே சீதனமும் எமது தாய்க் குலத்தைப் பெரிதும் வாட்டி வதைத்து வருகின்றன. இந்த உண்மையை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது” என்று பெண்ணொ ருத்தி உள்ளங் குமுறி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை வாசித்த அன்று அவருடைய மனத்தில் ஏற்பட்ட குழப்பம் இன்றுவரை சிரஞ்சீவியாகவே இருந்து வருகின்றது.

ஆனாலும் அதற்காக அவர் தமது முயற்சியைக் கைவிட முடியுமா? வானத்தில் எவ்வளவுதான் உயர உயரப் பறந்தாலும் பருந்து தனது இரைக்காக மண்ணுக்குத்தானே வரவேண்டியிருக்கிறது?

பருந்தை நினைத்த பொழுது தாமும் ஒரு காலத்தில் பருந்தைப் போலவே இலட்சிய வானத்தில் சிறகடித்துப் பறந்ததெல்லாம் அவருக்கு நினைவில் அலை அலையாக எழுந்தன.

பொன்னுத்துரையின் ஒரே மகன் தொழில்நுட்ப உதவியாளனாக அராசாங்கத்தில் உத்தியோகம் பெற்றுத் தனது உத்தியோக காலத்தில் தான் உத்தியோகம் பார்த்த பணிமனையில் தட்டச்சாளராக இருந்த சிங்களப் பெண் ணொருத்தியைக் காதலித்துத் தன் காதல் பற்றித் தந்தைக் குக் கடிதம் எழுதினான். உலகமே தலைகீழாகி விட்டது போல இராஜேஸ்வரியை ஒப்பாரி வைத்துப் புலம்பி அழ வைத்த இந்தக் கடிதம், பொன்னுத்துரையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

“உனக்கு வயது இருபத்தெட்டு. அதாவது நீ மேஜராகி ஏழு வருடம் ஆகிவட்டது. உன்னைக் கட்டுபடுத்த எனக்கு உரிமை இல்லை. நீ காதலிப்பவள் உன் விருப்பத்திற்கும் நம்பிக்கைக்கும் உரியவள் என்பது உனது நம்பிக்கையானால் அதற்குக் குறுக்கே நிற்க நான் யார்? இனம் மொழி என்ற எல்லாம் மனிதன் ஏற்படுத்திக் கொண்டவைதானே? ஆனால் மனிதர் யாவரும் ஒரு குலம் என்ற நம்பிக்கை உடையவன் நான், என் எதிர்கால மருமகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்” என்று அவர் மகனு க்குக் கடிதம் எழுதியதோடு, மனைவி எவ்வளவோ தடுத்தும் கேளாது, மகன் இருந்த ஊருக்கும் சென்று, அவன் திருமணத்தை நடத்தி வைத்து நல்லாசியும் கூறித் தீரும்பினார்.

“பாத்தியளே? அண்டைக்கு அந்தக் குத்தியனை அவன்ரை வழியிலை போகமால் தடுத்திருந்தியளெண்டால் இண்டைக்குக் கொழுத்த சீதனத்தோட, தாரிணுக்கு டொனே சனும் வாங்கி-அவனுக்கு முப்பத்தொரு வயசுதானே? குறைந்தது மாற்றுச் சம்பந்தம் எண்டாலும் செய்திருக் கலாம்…. நாய்ப் பயல்…. இப்ப அவன் எங்களுக்கு ஒரு கடிதம் கூடப் போடுறதில்லை ” என்று இராஜேஸ்வரி அடிக் கடி சொல்வதை ஆரம்பத்தில் மறுத்துத் தாம் இலட்சிய வாதி என்று நிலை சாட்ட முற்பட்ட பொன்னுத்துரை அண்மைக் காலத்தில் “மனைவி சொல்வது நியாயந்தான்” என்று அங்கீகரிக்கவும் தொடங்கிவிட்டார்!

சென்ற கிழமைதான் தாரிணிக்கு ஒரு சம்பந்தம் வயது முப்பத்திரண்டு. சாதகமும் நல்ல பொருத்தம்.

எல்லாம் சரிதான். ஆனால் அவன் பக்கத்தார் கேட்ட சீதனந்தான் பொன்னுத்துரையை நிலைகுலைய வைத்தது. வீடு, வளவு, இருபது பவுண் நகை, மாப்பிள்ளையின் தங்கச்சிமாருக்கு ஒவ்வொரு லட்சம் டொனேஷன், கலியாணச்செலவாக ஐம்பதினாயிரம், இதைவிடச் சீதன மாக ஐந்து லட்சம் ரொக்கம்!

இவ்வளவும் வேண்டாமா!

இராஜேஸ்வரி இந்தச் சம்பந்தத்தை எவ்விதமாவது முடித்து விடவேண்டும் என்று ஒரே பிடிவாதமாய் இருந்தாள். பொன்னுத்துரைக்கோ “இவ்வளவும் கொடுக்கவேண்டுமா? கொடுக்கத்தான் வழி உண்டா ?’ என்று ஒரே கலக்கம். அவர் தமது நண்பர் செல்லப்பரிடம் சென்று தமது மனப் போரட்டாத்தையும் கலக்கத்தையும் ஒரு பாட்டம் கொட்டித் தீர்த்தார்.

“இங்கை பார். மாப்பிளை பக்கத்தாரையும் குறை சொல்ல முடியாது. அவை மாப்பிளையின் உழைப்பை நம்பியிருந்தவை. அவன் தனிக்குடும்பமாய்ப் பிரிஞ்சு போனால் அவன்ரை தங்கைமாருக்கு என்ன கதி? அது களின்ரை எதிர்காலத்தையும் அவை யோசிக்கத்தானே வேணும். எப்படியவாது அவை கேட்கிறதைக் குடுத்து உந்தச் சம்பந்தத்தை முடிச்சுப் போடு” என்று செல்லப்பா அமைதியாகச் சொன்னார்.

“நீ சுகமாகச் சொல்லிப் போட்டாய். நான் ஏழரை லட்சத்துக்கு எங்கே போறது?’

பொன்னுத்துரை “உன்ரை வளவுக் காணியிலை மூண்டு பரப்பை வித்தாவது பணத்தைப் புரட்டப் பார்.”

இண்டையில் நேச்சர் உனக்குத் தெரியாது. வெளி நாட்டுக் காசுகள் இங்கை தாரளமாய்ப் புளங்கிறதாலை சீதன றேற் போலை காணியளின்ரை றேற்றும் உச்சாணிக் கொப்புக்கு ஏறியல்லோ போச்சு? நீ ஒண்டுக்கும் யோசிக் காதை. உன்ரை காணியைப் பரப்பு நாலு லட்சத்துக்குக் குறையமால் வித்துத்தாறது என்ரை பொறுப்பு. நீ போய் மற்றக் காரியங்களைப் பார்” என்று அவரின் தோளில் மெல்லத் தட்டியபடி செல்லப்பா சொன்னார்.

பொன்னுத்துரையின் கண்கள் நன்றிப் பெருக்கால் நிரம்பி வழிந்தன. “நீ தெய்வம் அப்பா. என்ரை மகளைக் கரையேத்தியது நீ தான். இதை நான் மறக்கமாட்டன்” என்று தளதளத்த குரலில் அவர் சொன்னபொழுது அநுபவ, சாலியான செல்லப்பா அதனால் மகிழ்ச்சியடையவில்லை.

“உந்த அளவில் சந்தோஷப்படாதை. கலியாணம் நடந்து உன்ரை மகளின்ரை கழுத்திலை தாலி ஏறும்வரை எதையும் நம்பமுடியாது. இப்ப நடக்க வேண்டியதைப் போய்ப் பார்.”

– புத்தெழில் (புரட்டாதி 1988) , சொக்கன் சிறுகதைகள், வெளியீடு: நயினை கி.கிருபானந்தா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *