கனவின் பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 10,233 
 

வேலைக்கான அனுமதி அட்டையை புதுப்பிப்புச் செய்ய விருப்பமுள்ளவர்கள் சூப்பர்வைசரிடம் பெயரைக் கொடுக்கச் சொல்லும் அறிவிப்பு தகவல் பலகையில் ஒட்டப்படிருந்தது. இதைப் பார்த்த பார்த்திபன் இம்முறை நீட்டிப்பு கிடைத்தால் சிங்கப்பூருக்கு தான் வந்து எட்டு ஆண்டுகளாகி விடும் என நினைத்துக் கொண்டான்.

அவன் வந்த சமயத்தில் இருந்த சிங்கப்பூர் இப்போது பலவிதமாய் மாறி விட்டதைப் போலவே அவனும் மாறியிருந்தான். சுருட்டை முடியும், ஒட்டிய வயிறுமாய் வந்தவன் இப்போது சொட்டைத்தலையும், உப்பிய வயிறுமாய் உருமாறி இருந்தான். தான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு சில தினங்களுக்கு முன் ஊரிலிருந்து புதிதாய் வேலைக்கு வந்திருந்தவர்களில் சிலர் கூட்டம், கூட்டமாக அறைக்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வேலைக்குச் செல்லும் வரை இப்படித்தான் பழையவர்களுடன் ஒட்டாமல் இருப்பார்கள். அவனும் ஆரம்பத்தில் அப்படித் தான் இருந்தான்.

பார்த்திபனுக்கு சொந்த ஊர் தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் இராமநாதபுரம். ஒரு அக்காவோடு கடைக்குட்டியாய் பிறந்தவன். உள்ளூரில் இருந்த ஐந்தாம் வகுப்புப் பள்ளியோடு அக்காவின் படிப்பை நிறுத்தி விட்ட அவன் அப்பா இவனை மட்டும் பக்கத்து ஊரில் இருந்த மேல்நிலைப்பள்ளியில் படிப்பதற்காக சேர்த்து விட்டார். எப்போதும் இவனின் தேவைக்கு முன்னுரிமை தருவார். அதற்கு அம்மாவும், அக்காவும் கூட ஆட்சேபிப்பதில்லை. ஒன்பதாவது படித்து முடித்ததும் படிக்க விருப்பமில்லை எனச் சொல்லி விட்டு நண்பர்களோடு சேர்ந்து திருப்பூரில் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றான். ஆறு ஆண்டுகள் போனதே தெரியாமல் ஓடியது. வேலைகளை சீக்கிரமே கற்றுக் கொண்டதால் சம்பளமும் ஓரளவுக்கு கிடைத்தது.

துபாயில் இருந்து விடுமுறைக்காக இந்தியா வந்திருந்த அவனுடைய தாய்மாமா அவனைச் சந்திப்பதற்காக ஒருநாள் அங்கு வந்திருந்தார். அவரின் திடீர் வருகை சந்தோசம் தர எப்ப மாமா வந்தீங்க? அத்தை, இளவரசி எல்லாம் எப்படி இருக்காங்க? என சம்பிரதாயமாக கேட்டபடி அவரை அறைக்குள் அழைத்து வந்தான்.

பல விசயங்களையும் பேசிக்கொண்டிருந்தவர். ”இன்னும் எத்தனை நாளைக்கு இங்கேயே கிடக்கப்போறீங்க மாப்ள……… வீட்டுல இன்னும் ஒரு கொமரு இருக்கு. உங்களுக்கும் கல்யாணம் காட்சின்னு காலம் இருக்கு. இங்கே இருந்துலாம் சம்பாரிச்சு ஒன்னும் செய்ய முடியாது. நான் எனக்குத் தெரிஞ்ச ஒரு ஏஜெண்ட் மூலமா நீங்க சிங்கப்பூர் போக ஏற்பாடு செய்றேன். இங்கே கொட்டுற உழைப்பை அங்கே போய் கொட்டுனா நாலு காசாது மிஞ்சும். உங்களுக்கு விருப்பமிருந்தா சொல்லுங்க” என்றார்.

”அதுக்கில்ல மாமா. வெளிநாட்டுக்குப் போறதுன்னா இலட்சக்கணக்கில் பணம் கட்டனும். இப்ப இருக்கிற நிலமையில் அவ்வளவு பணத்துக்கு என்ன செய்யிறது?” என்றான்.

”நீங்க ஏன் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படுறீங்க. உங்களுக்கு விருப்பம் இருக்குல. மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். துபாய்க்கு நான் திரும்பி போறதுக்குள்ள உங்களுக்கு ஏற்பாடு பண்ணிடுறேன். பாஸ்போர்ட் வீட்டுல தானே இருக்கு? இன்னைக்கே ஏஜண்டுக்கிட்ட பேசுறேன்” எனச் சொல்லிவிட்டு மதியச் சாப்பாட்டை முடித்த கையோடு கிளம்பி விட்டார்.

இரண்டு நாட்கள் கழிந்திருந்த நிலையில் அலைபேசியில் அழைத்த ஒருவர், ”தம்பி நீ சுந்தரலிங்கம் மருமகனா?” எனக் கேட்க

ஆமாம். நீங்க? என்றான்.

நான் திருச்சியில் இருந்து ஏஜண்ட் பேசுறேன். உங்க மாமா எல்லா விபரமும் சொன்னார். நாளைக்கு மெடிக்கல் இருக்கு. வரமுடியுமா? என்றார்.

சரி வருகிறேன் என்றவன் டிராவல்சின் முகவரியையும் வாங்கிக் கொண்டான்.

மறுநாள் திருச்சி பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியவனை டிராவல் ஏஜண்டே வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். பரிசோதணைகளை முடித்துவிட்டு பார்த்திபன் நேராக தன் வீட்டிற்கு வந்தான். அங்கு அவன் மாமாவும், அத்தையும் வந்திருந்தார்கள்.

என்ன மாப்ள……மெடிக்கல் எல்லாம் முடிஞ்சிடுச்சா? என்றவர் அவனிடமிருந்து பதிலைக் கூட எதிர்பார்க்காமல் “நல்ல கம்பெனியாம். கப்பல் கட்டுற இடத்துல பெயிண்ட் அடிக்கிற வேலையாம். ரொம்ப கஷ்டமிருக்காதாம். ஆறுமாசம் கழிச்சி அங்கேயே படிச்சிட்டு சூப்பர்வைசரா மாறிக்கிடலாங்கிறான். சம்பளம் நம்மூர் காசுக்கு நாற்பதாயிரம் கிடைக்கும். அது போக ஓவர்டைம் செஞ்சா தனிச் சம்பளம் கிடைக்குமாம். விசாவுக்கு தான் இரண்டு இலட்சம் ஆகுங்கிறான். நான் அதைப் பார்த்துக்கிறேன்” என்றார்.

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? அவன் மாமா இத்தனை பிரயாத்தனம் பட்டு அவனை வெளிநாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்வதற்கும் ஒரு காரணம் இருந்தது. அவரின் ஒரே மகளான இளவரசி பெயருக்கு ஏற்ப அவர்கள் வீட்டில் வலம் வருபவள். பத்தாம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப் போட்டு விட்டு வீட்டில் இருப்பவளுக்கு பார்த்திபனை மணமுடித்து வைப்பது தான் அவரின் திட்டம்.

விசா எப்ப வேணும்னாலும் வந்துடும். எதுக்கும் எல்லா ஏற்பாட்டோடும் இருங்கன்னு ஏஜண்ட் சொல்லி இருக்கான். அதுனால திருப்பூருக்கு போகாம கொஞ்ச நாளைக்கு வீட்டுலயே இருங்க மாப்ள…..….என மாமா சொன்னதை அப்படியே அப்பாவும், அம்மாவும் வழி மொழிந்தார்கள். அவர்கள் பேச்சைத் தட்ட முடியாததால் அவனும் வீட்டிலேயே இருந்தான்.

மாதம் பத்தாயிரம். பன்னிரெண்டு மணிநேர வேலை என இருந்த தன் வாழ்க்கை சிங்கபூர் போனதும் பிரமாதமாக மாறப்போகிறது என்ற கனவோடு இருந்தவனை அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும், தெருக்காரர்களும் சிங்கப்பூர் வாசியாகவே பார்க்க ஆரம்பித்தனர். பார்க்கிற பத்து பேரில் ஐந்து பேராவது எப்ப பயணம்? என அவனிடம் கேட்டு விடுவார்கள். ஒரு மாசம் ஆகிவிட்டதால் மற்றவர்கள் அவனிடம் கேட்ட கேள்வியை ஏஜண்டிடம் இவன் கேட்க ஆரம்பித்தான். அவனும் ஒவ்வொரு முறையும் வார்த்தை மாறாமல் ”எல்லாம் கொடுத்தாச்சாம். சீக்கிரமே வந்துடும் தம்பி” எனச் சொல்லிய படியே இருந்தான்.

இப்படியே சில வாரங்கள் போயிருந்த சமயத்தில் தெருவில் இருந்த கோயில் அரசமரத்தில் அமர்ந்திருந்தவனை நோக்கி அவன் அக்கா வேகமாக ஓடிவந்தாள். மூச்சிரைத்த படியே ”பார்த்திபா….…உனக்கு விசா வந்துடுச்சாம். மாமா வந்திருக்காக. வேகமா வா” எனச் சொன்னாள்.

வீட்டுத் திண்ணையில் அப்பாவோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த மாமா இவனைக் கண்டதும், “மாப்ள……எல்லாம் ரெடியாயிடுச்சு. விசாவுக்கு ஒரு இலட்சத்து எண்பதாயிரம் எனப் பேசி முடிச்சு ஐம்பதாயிரம் ரூபாயைக் கொடுத்துட்டு வந்திருக்கேன். உங்க அத்தை நகையை அடகு வச்சு கொஞ்சம் புரட்டிக்கிடலாம். மீதிப் பணத்துக்கு செட்டியாருக்கிட்ட சொல்லி இருக்கேன். டிக்கெட் எல்லாம் ஏஜண்டே தந்துடுவான். இரண்டு, மூன்று நாளில் கிளம்பற மாதிரி இருக்குமாம். நான் போய் பணத்துக்கான ஏற்பாட்டைச் செய்றேன். நீங்க கிளம்பறதுக்கான ஏற்பாட்டைப் பண்ணிக்கிங்க” என சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றார்.

ஒரு புதுக் கார் சொந்தமா வாங்கி ஓட்ட வேண்டும் என்பது பார்த்திபனின் பல வருட ஆசையாக இருந்தது. வாடகையாக வருமானமும் வரும் என்பதால் அது அவனின் கனவாகவே இருந்தது என்று கூடச் சொல்லலாம். அதற்காகவே டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்த நண்பனுக்கு தன் சொந்தக் காசில் அவனுக்கு வேண்டியவைகளை வாங்கித்தந்தும், அவனுக்காக செலவு செய்தும் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு லைசென்சும் எடுத்து வைத்திருந்தான். அவனுக்குள் விதையாய் விழுந்து கிடந்த இந்தக்கனவு லேசாய் இப்போது துளிர்விட ஆரம்பித்தது. சிங்கப்பூருக்கு போயிட்டு வந்த கையோடு ஒரு காரை வாங்கி ஓட்டிக் கொண்டு இங்கேயே இருந்து விட வேண்டும் வேண்டும் என நினைத்துக் கொண்டவன் தன் சட்டைப்பையில் இருந்த லைசென்சை எடுத்து ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

மூன்று தினங்கள் கழித்து ஊருக்கு வந்த மாமா, ”மாப்ள……இது விசா காப்பி. நாளைக்கு இராத்திரி பிளைட். நாம சாயங்காலம் ஏர்போர்டுல இருக்கனும். அங்கே போனதும் செலவுக்கு கம்பெனியில் பணம் தருவாங்கலாம். இருந்தாலும் நான் கொஞ்சம் சிங்கப்பூர் டாலர் மாத்திக் கொண்டு வந்திருக்கேன். பத்திரமா வச்சுக்கங்க” என சொல்லி ஒரு கவரை அவன் கையில் கொடுத்தார். பணத்தை ஒருமுறை எடுத்துப் பார்த்துக் கொண்டான். ஐம்பது டாலர், பத்து டாலர் என இருந்தது. எவ்வளவு என்று எண்ணிப்பார்க்காமலே மீண்டும் கவருக்குள் வைத்துக் கொண்டான்.

அம்மாவின் கைப்பக்குவத்தில் செய்த திண்பண்டங்கள், அக்கா செய்த ஊறுகாய், அப்பா எடுத்து வந்து கொடுத்த புதுச் சட்டை என எல்லாவற்றையும் தன் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த பெட்டியில் மாமாவே அடுக்கிக் கட்டினார். என்னடா பார்த்தி…….”உங்க அக்கா கல்யாணத்துக்கு சிங்கப்பூருல இருந்தே தங்கம் கொண்டு வந்துடுவியா?” எனக் கேட்டபடி தட்டில் ஐநூறு ரூபாய் வைத்துக் கொடுத்தாள் பக்கத்து வீட்டு பரிமளா அக்கா.

”மொதல்ல இந்த ஓட்டை மாத்திட்டு கல்லு வீடா ஆக்கின பின்னாடி தான் நான் கல்யாணம் செய்துக்கிருவேன்” என பதிலுக்கு அக்கா சொல்லிச் சிரித்தாள். ”உடம்பு நல்லா இருந்து ஆயுசு கிடந்தா எல்லாம் நல்லா நடக்கும்” என்றாள் அம்மா.

விடிந்ததும், விடியாததுமாய் தூக்கு வாளியோடு கிளம்பிய அவன் அப்பா ஆட்டு இறைச்சி வாங்கி வந்தார். சாப்பாட்டை முடித்து விட்டு வந்திருந்த காரில் திருச்சிக்கு தன் அப்பாவோடும், மாமாவோடும் கிளம்பினான். காரையும் அவன் மாமாவே ஏற்பாடு செய்திருந்தார். திருச்சி விமான நிலையத்தில் அத்தையும், இளவரசியும் இவர்களுக்கு முன்பே வந்து காத்திருந்தனர். ஒரு மணிநேரம் கழித்து வந்த ஏஜண்ட் பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாவற்றையும் கொடுத்து கவுண்டருக்கு போகச் சொன்னான். ஒருவழியாக சுங்கச் சோதனையைக் கடந்து விமானத்திற்குள் வந்தான். அவன் இருக்கைக்கு அருகில் இருந்தவனும் இவனைப் போலவே முதல் தடவையாக வேலைக்குச் சிங்கப்பூருக்கு செல்கிறவனாக இருந்தான். இருவரும் தாங்கள் செய்யப்போகும் வேலை, கிடைக்கப்போகும் சம்பளம் பற்றி பேசிக் கொண்டனர். ஒரே வேலை என்றாலும் அவனை விட தனக்குச் சம்பளம் கூடுதலாக இருப்பதை அறிந்ததும் மனதுக்குள் பார்த்திபனுக்கு ஒரு சந்தோசம்.

அதிகாலையில் விமானம் சிங்கப்பூரில் வந்திறங்கியது. விமான நிலையச் சோதனைகளை முடித்து விட்டு வெளியே வந்தான். வாசலின் முகப்பில் ஊரில் உள்ள இவனின் ஏஜண்ட் பெயரைச் சொல்லி அவர் ஆளா? என்று ஒருவர் அவனோடு வந்தவர்களை எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார். இவனைப் போலவே அந்த ஏஜண்ட் மூலம் இன்னும் சிலர் வந்திருப்பது அவனுக்கு அப்போது தான் தெரிந்தது. எல்லோரையும் மொத்தமாக ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்ட அந்த நபர் பெரிய கடைத்தொகுதிக்கு அழைத்துச் சென்று சமையல் பாத்திரம், போர்வை, தலையணை உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி கொடுத்து தங்கும் விடுதியில் கொண்டு வந்து விட்டார்.

வேலைக்குச் செல்லத் தொடங்கியதும் தான் ஏஜண்ட் சொன்ன விசயங்களில் பாதி பொய் என அவனுக்குத் தெரிந்தது. ஓவர் டைம் சேர்த்து பார்த்தாலே மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்காது என உடன் வேலை செய்த பழைய ஆட்கள் சொன்னதைக் கேட்டு பார்த்திபனுக்கு பகீரென்றாகி விட்டது. ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் கட்டி வந்திருக்கிறோம். அதுவும் மாமா கடனில் என்ற நினைப்பு அவனுக்கு கவலையைத் தந்த போதும் அதை தன் வீட்டிற்கு காட்டிக் கொள்ளவில்லை. முதல் மாதச்சம்பளம் வாங்கியதும் கட்டி வந்த ரூபாயை எடுக்க இன்னும் எவ்வளவு மாதமாகும் என கணக்குப் போட்டுப் பார்த்தான். கணக்கோ இரண்டு வருசத்திற்கு மேலேயே ஆகும் எனக் காட்டியது. எவ்வளவு கஷ்டத்திலும் நாள் தவறாது வேலைக்குச் சென்று வந்தான்.

எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அவனுக்கு இயல்பான ஒன்றாக இருந்ததால் தான் செய்கின்ற வேலையில் இருக்கும் நெளிவு, சுழிவுகளை எளிதில் கற்றுக் கொண்டான். அதற்குள் இரண்டு ஆண்டுகள் முடிந்திருந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேலை அனுமதிச் சீட்டை புதுப்பித்தவன் அதன் பின் ஆறு மாதம் கழித்தே சிங்கப்பூர் வருவதற்காக கட்டிய பணக்கடனை அடைத்து முடித்தான்.

இதற்கிடையில் கடனோடு கடனாக செய்திடனும் என்று சொல்லிக் கொண்டு வீட்டின் ஓட்டுக்கையை பிரித்துச் சிமெண்ட் கூரை போட உள்ளூர் மேஸ்திரி மூலம் வேலைகளை அவன் அப்பா தொடங்கியிருந்ததாலும், துபாயில் இருந்து அவன் மாமா பேசும் போதெல்லாம் சூப்பர்வைசரா ஆகிட்டு ஊருக்கு போங்க மாப்ள என சொல்லிக் கொண்டிருந்ததாலும், இடையில் ஊருக்குப் போகாமலே இருந்தான். உடனையே எதுவும் கேட்டு வைக்க வேண்டாம் என்பதால் அதுவரை கம்பெனியில் எதுவும் கேட்காமலிருந்தவன் மேலாளரை சந்தித்து தான் சூப்பர்வைசர் கோர்ஸ்க்கு போக விரும்புவதாய் சொன்னான். இப்போதைக்கு கம்பெனியில் இருந்து அனுப்ப முடியாது. வேண்டுமானால் நீயே சொந்தமாகப் போய்க் கொள் என்றார்.

அந்தமட்டும் அனுமதியாது கொடுத்தாரே என நினைத்துக் கொண்டு நன்றி சொன்னவன் மாலையில் பயிற்சி தரும் நிறுவனத்திற்குச் சென்றான். அங்கு சொல்லப்பட்ட விபரங்களை கேட்டவனுக்குத் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. சூப்பர்வைசர் கோர்சில் சேர இந்தியாவில் குறைந்த பட்சம் பத்தாவது படித்து முடித்திருக்க வேண்டும். அதற்கான தகுதிச் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும் எனச் சொன்னார்கள். வாடிப்போன முகத்தோடு என்னிடம் ஊரில் ஏஜண்ட் அப்படி எதுவும் சொல்லவில்லையே? என்றான்.

அங்கிருந்தவரோ அசால்டாக, ”தம்பி…..நீ வந்து இரண்டு வருசமாச்சுன்னு சொல்ற. இதைப் பத்தியெல்லாம் விசாரிக்காமல் என்ன செய்துக்கிட்டு இருந்த? ஊருல பணத்துக்காக என்னத்தையாவது சொல்லி ஏத்தி விட்டுருவானுக. அவனுக்காக எல்லாம் சிங்கப்பூர் அரசாங்கம் விதிமுறையை மாத்தாது” என்றார்.

எப்ப இருந்து இந்த விதிமுறை இருக்கு? என்று கேட்டவனிடம் அது ஐந்து வருசமா நடப்பில் இருக்கே என்று அங்கிருந்தவர் சொன்னதும் கோபம் தலைக்கேற அங்கிருந்து வெளியேறினான். துபாயில் இருந்த மாமாவை அழைத்து விபரம் சொன்னான். என்ன மாப்ள செய்றது. அவன் உண்மையைத் தான் சொல்றான்னு நினைச்சேன். ஏமாத்திட்டானே என அவர் பங்குக்கு புலம்பி விட்டு கொஞ்சம் காசு சேர்க்கிற வரைக்குமாவது இருங்க மாப்ள என அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டார். அவரிடமிருந்து ஏஜண்ட் நம்பரை வாங்கிப் பேசிய போது தனக்கு அப்படி ஒரு விதிமுறை இருப்பது தெரியாது என தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாய் அவன் சொல்லி விட நொந்து போனான்.

சூப்பர்வைசராக போவதற்கு வேலைகளைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் என உடன் வேலை செய்பவர்கள் சொல்லி இருந்ததால் தான் பார்க்கும் வேலைக்கு நேரடி சம்பந்தமில்லாத விசயங்களைகளைக் கூட மெனக்கெட்டு கற்றுக் கொண்டிருந்தான். அது எல்லாம் பயனில்லாமல் போய்விட்ட வருத்தம் அவனுக்கு அதிகமானது. சூப்பர்வைசர் ஆகிவிட்டால் மாதச் சம்பளம் கிடைக்கும். இன்றைய நிலையில் இந்திய மதிப்பில் எழுபதாயிரம் வரும். வீட்டு வேலை முடிந்த கையோடு அக்காவுக்கும் கல்யாணத்திற்கு கொஞ்சம் நகை வாங்கி விடலாம் என நினைத்திருந்த அவன் கனவு கானல் நீராய் போனது. இப்போதைய சம்பளத்தில் வீட்டு வேலையை முடிக்க அவன் அப்பா சொல்லி இருந்த மூன்று இலட்சத்தை அடைக்கவே இன்னும் ஒரு வருடமாகி விடும். அதன்பின் அக்காவுக்கு நகை வாங்க வேண்டும். இன்னும் ஒரு முறை ரினிவெல் வாங்கினால் தான் சாத்தியமாகும் என்று நினைக்கும் போதே அவனுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது.

இந்த ரினிவலோடு என்ன பாடு பட்டாவது கார் வாங்க வேண்டும் என்ற தன் கனவு விதையை முளைக்க வைத்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டான். இந்தியாவில் இருந்து எடுத்து வந்த அந்தக் கனவு விதையை மீண்டும் கனவு விதையாகவே இந்தியாவிற்கு கொண்டு செல்லக் கூடாது என முடிவு செய்தான். ஊருக்குப் போகும் முடிவை ஒத்தி வைத்து விட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு அனுமதிக்கு விண்ணப்பித்து வாங்கினான். இந்த இரண்டாண்டு சம்பாத்தியம் அக்காவுக்கு நகையும், தனக்கு காரும் வாங்க மட்டுமே என திட்டமிட்டுக் கொண்டான்.

ஊரில் இருக்கும் நண்பர்கள் மூலம் கார் வாங்குவதற்கான விபரங்கள், பிரிமியத்தொகை ஆகியவைகளைப் பெற்று அதற்கேற்ற படி திட்டமிட்டு சேமிக்க ஆரம்பித்தான். புதியதாக வாங்கிய வேலை நீட்டிப்பிற்கான தேதி காலாவதியாக ஆறு மாதமே இருந்த நிலையில் இரவு நேரத்தில் மட்டும் அழைக்கும் அவனின் அப்பா ஒருநாள் மதிய வேளையில் அழைத்திருந்தார். ”அக்காவுக்கு சொல்லி வைத்திருந்த இடத்தில் சம்பந்தம் கூடி வந்துள்ளதாகவும், அவர்கள் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைக்கச் சொல்வதாகவும், நமக்கிட்ட கொஞ்சம் அதிகம் எதிர்பார்க்கிற மாதிரி தெரியுது” என்றும் சொன்னார்.

அக்காவுக்கு பிடிச்சிருக்கா? என்றான்.

பையனுக்கும் அக்காவை பிடிச்சிருக்காம். நல்ல இடமா இருக்குடா பார்த்திபா. கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாக் கூட கடன வாங்கியாச்சும் செய்துடலாம்யா” என்றாள் அவன் அம்மா.

”சரி. நகையெல்லாம் இங்கேயே நான் வாங்கிட்டு வந்துறேன். இந்த மாதக் கடைசியில நான் வந்துறேன். அடுத்த மாதம் முதல் முகூர்த்த தேதியில் கல்யாண தேதியை வையுங்கள்” எனச் சொன்னான்.

கம்பெனியில் பிடித்தமாக இருந்த தொகையோடு, கையிருப்பில் இருந்ததையும் சேர்த்து நகை எல்லாம் வாங்கியது போக கணிசமான தொகை வங்கி இருப்பில் இருந்தது. இந்திய வங்கியிலும் இலட்சத்தில் பணம் இருந்தது. இம்முறை கார் வாங்கி விட முடியும் என்ற நம்பிக்கை முதல் தடவையாக அவனுக்குள் வந்தது.

ஐந்தரை வருடங்கள் ஊரை விட்டுப் பிரிந்திருந்தவனை வரவேற்க விமான நிலையத்திற்கு அப்பா, அத்தை, நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர். இவனைப்போலவே ஊரும் மாறியிருந்தது. காலையில் இவனைப் பார்க்க வந்த தெருக்காரர்கள் சிலர் நல விசாரிப்போடு தைலம் இருந்தா கொடேன் எனக் கேட்டனர். ”டே பார்த்திபா………….இடை வாரு கொண்டு வந்திருந்தா ஒன்னு தாடா. பொடிமட்டை வைக்கிற வாரு கிழிஞ்சு போச்சு” என்றார் எதிர் வீட்டுத் தாத்தா.

வடிவம் மாறியிருந்த ஊரில்

மாறாமலே இருந்தது

கோடாரித் தைலமும்

பச்சைக் கலர் இடைவாரும்

இருந்தா கொடேன்

என்ற கோரிக்கைகள் மட்டும்! -என்று சிங்கை தமிழ்முரசில் படித்திருந்த ஒரு கவிதை அவன் நினைவுக்கு வந்து போனது.

மாலையில் அம்மா அவனை அழைத்தாள். பார்த்தி உனக்கிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள்.

என்னம்மா? சொல்லு.

அக்காவை கட்டிக் கொடுக்கிற இடத்துல வீட்டடி இடம் கேட்கிறாங்க. உங்க அப்பாரும் தருகிறேன்னு வாக்குக் கொடுத்திருக்கிறார்.

அதைத் தான் போனிலே சொன்னியம்மா?

”அதுல ஒரு சிக்கல். அக்காவுக்கு நாம கொடுக்க நினைச்ச இடத்துல உன் சித்தப்பாவோட இரண்டாவது சம்சாரத்து பசங்க முன்னாடி போட்டிருந்த வழக்கை வாபஸ் வாங்குறோம்னு சொல்லிட்டு இப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க. பஞ்சாயத்துல வச்சுக் கேட்டதுக்கும் ஒத்துக்கிடல. ஆறு இலட்சம் தந்தா அந்தச் சொத்தை விட்டுக் கொடுக்குறதா சொல்லுறாங்க. இரண்டு இலட்சம் பெறுகிற சொத்தை வீம்புக்காக ஆறு இலட்சம்னு சொல்றானுக. கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் செய்யும் போது உங்க அக்கா பேர்ல இடத்தை கிரையம் பண்ணி பத்திரம் தருவதாக சபையில சொல்லியாச்சு. இப்ப இந்தக் காரணத்தை எல்லாம் சொன்னா தப்பாயிடும். அதுனால நம்ம வீட்டுக்கு மேற்கில் இருக்கிற இராசாங்கம் அவன் வீட்டடி இடத்தை விற்கப் போறேன்னு சொல்றான். அதை வாங்கலாம்னு உங்க அப்பா சொல்றாரு. மாமாகிட்ட கேட்டதுக்கு அவனும் அப்படியே செய்யுங்கன்னு சொல்றான்” என்றாள்.

பார்த்திபனுக்கு மெல்ல விசயம் புரியத் தொடங்கியது. உடனே அவ்வளவு பணத்துக்கு எங்கம்மா போறது? என்றான்.

முதல்ல நான்கு இலட்சம் கொடுத்தா கிரையம் போட்டுத் தருவதாக இராசாங்கம் சொல்லியிருக்கான். பாக்கிப் பணத்தை ஆறு மாசத்துக்குள்ள தரச் சொல்றான் என்றாள் அம்மா.

ஒன்றும் சொல்லாமல் அம்மாவிடமிருந்து எழுந்து வீட்டிற்குள் வந்தவன் கதவருகில் அக்கா நின்று கொண்டிருப்பதைக் கண்டான். தன்னிடம் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். அவன் எதுவும் சொல்லாமல் எழுந்து வந்து விட்டதால் அவள் தலை கவிழ்ந்து நின்றாள். அவள் முகத்தில் ஏமாற்றம் இருந்தது.

ரூமிற்குள் வந்து படுக்கையில் கிடந்த பார்த்திபனின் மனதில் அவன் அக்காவின் முகம் வந்து, வந்து போனது. இன்னொரு அம்மாவாய் இருந்து பார்த்துக் கொண்டவள். பலநாட்கள் எனக்காக சாப்பிடாமல் காத்திருந்தவள். ஒருமுறை கார்காரன் ஒருவன் அடித்து ரோட்டில் சாய்த்ததில் கால் முறிவு ஏற்பட்டு படுக்கையில் கிடந்த போது ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டதோடு. கொஞ்சமும் முகம் சுழிக்காமல் என்னுடைய சிறுநீர், மலம் எல்லாவற்றையும் சுமந்தவள். இத்தனை ஆண்டுகளில் தனக்காக எதுவும் கேட்காதவள். என்ன நகை உனக்கு வேண்டும் எனக் கேட்ட போது கூட நான் போட்டுக்க போறது என் தம்பி வீட்டுச் சீதனம். உனக்குப் பிடிச்சதையே வாங்கிக் கொடு எனச் சொன்னவள். பேசும் ஒவ்வொரு முறையும் தன்னை விட எனக்காகவே அதிகம் கவலைப்பட்டவள். அவளுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாழ்க்கையை அவளுக்குப் பிடித்தவனோடு அமைத்துத் தருவது என் கடமையல்லவா? என்ற நினைப்பும், கார் வாங்க வேண்டும் என்று இத்தனை ஆண்டு காலத் தன் கனவு இந்த வருடம் தான் நிறைவேறுவதற்கு சாத்தியமாகி இருக்கிறது. இதற்குப் பின் முடியுமா? என்பது சந்தேகம் தான். இருக்கும் பணத்தை இடத்திற்குக் கொடுத்து விட்டால் தன் கனவு மனதில் விதையாய் கிடந்து விதையாகவே மக்கிப் போய்விடுமே என்ற நினைப்பும் மாறி, மாறி அவன் மனதில் ஓடிக்கொண்டிருக்க கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த அக்கா அவனருகில் அமர்ந்தாள்.

”பார்த்தி…….இந்தச் சம்பந்தம் இல்லைன்னா இன்னொரு சம்பந்தம். வெறும் வாய் பேச்சு மட்டும் தான் நடந்திருக்கு. இன்னும் தட்டுக் கூட மாத்தல. அம்மா சொன்னதைக் கேட்டு நீ மனசைக் குழப்பிக்காதே. வந்து சாப்பிட்டுட்டு தூங்கு” என்றாள்.

சாப்பாடு பரிமாறிய தன் அக்காவின் முகத்தை ஒருமுறை உற்றுப்பார்த்தான். தன் முகத்தில் எந்தப் பாவணையையும் காட்டி விடக்கூடாது என்பது போல் அவள் இருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. சாப்பிட்டு விட்டு எழுந்தவன் திண்ணையில் அமர்ந்திருந்த அப்பாவிடம், ”நாளைக்கு இராசாங்கத்துக்கிட்ட நான்கு இலட்சம் கொடுத்து இடத்தை கிரையம் போட்டுடலாம். அவருக்குச் சொல்லி அனுப்பிடுங்க” எனச் சொல்லிவிட்டு வெளியில் கிளம்பிச் சென்றான்.

கார் விற்பனை முகவரைச் சந்திக்கச் செல்வதற்காக காத்திருந்த தன் நண்பனிடம் கார் இந்த முறை வாங்கவில்லை. அடுத்த தடவை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றான்.

ஏன்? என்னாச்சு? பணம் தான் வச்சிருக்கேன்னு சொன்னியே? என்ற நண்பனிடம், “இந்த வருசம் இல்லை என்றால் அடுத்து இரண்டு வருசத்துக்கு வேலை செஞ்சு கார் வாங்கிக்கலாம்டா. ஆனா இப்ப விட்டுட்டா என் அக்கா நினைச்சதை, விரும்பியதை என்னால் செய்ய முடியாமல் போயிடும்” என்றான்.

கல்யாணக்கடனை அடைக்கவே இன்னும் ஒரு வருடம் ஆகிவிடும் என்ற நிலையில் தன் கனவு விதையை நிஜமாக்கிக் கொள்வதற்காக ஊரில் செட்டில் ஆகும் திட்டத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க முடிவு செய்தான். தன் அக்கா கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிந்த கையோடு விமானம் ஏறி மீண்டும் சிங்கப்பூருக்கு வந்து இறங்கினான்.

தகவல் பலகையில் அறிவிப்பை பார்த்த கையோடு தன் பெயரைச் சூப்பர்வைசரிடம் கொடுப்பதற்காக அவரின் அறையை நோக்கிச் சென்றவனின் காதில் இன்னும் இரண்டு வருசத்துல பெர்மிட்டை முடிச்சிட்டு ஊருக்கு போய் செட்டிலாகி விட வேண்டும் என்றும், ஆறுமாசம் முடிஞ்சிட்டா சூப்பர்வைசராக ஆகிடலாம்னு ஏஜண்ட் சொல்லி இருக்கான் என்றும் கம்பெனிக்கு புதிதாய் வேலைக்கு வந்திருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழ மெலிதாக சிரித்துக் கொண்டான். அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் தவறாகி விடும் எனச் சொல்ல நினைத்தாலும் கனவுகளோடு இப்போது தான் வந்திருக்கும் அவர்களின் நம்பிக்கை விதைகளாவது துளிர்க்க வேண்டும் என இறைவனிடம் பிரார்தித்துக் கொண்டான். மற்றவர்களுக்காக பிரார்தித்துக் கொண்ட அவனின் கார் வாங்கும் கனவும், ஊரில் செட்டில் ஆகும் கனவும் இன்னும் விதையாகவே அடுத்த பயணத்திற்கு அவனைப் போலவே தயாரானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *