கனவான் அவதாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 6,926 
 
 

சுவர்க்கடிகாரம் நான்கு முறை ஒலித்து ஓய்ந்தது. கந்தசாமி பதறியடித்துக் கொண்டு எழும்புகிறார்.

‘கடவுளே கடவுளே மணி நாலாயிற்றே’ என்று குழறிக் கொண்டு ‘பட் பட் ‘டென நெற்றியில் நாலு குட்டுகளுடன் குளியலறைக்குத் தாவுகிறார்.

குழாயைத் திறந்தார்.

சளசளவென பீச்சியடித்த தண்ணீரில் காக்காய் குளியல்.

மனிதவுரிமை சங்கத்தின் கூட்டம் நாலரை மணிக்கு. சமூக சேவா மினிஷ்டர் திருமதி… வருவதாகத் தகவல். கூட்டத்தில் பேசுவதற்காக அருமையான சொற்பொழி வொன்றினை தயார் செய்து ஒத்திகை செய்து கொண்டிருந்த போதுதான் மத்தியானச் சாப்பாட்டின் களைப்பு காரணமாக கோழித் தூக்கம் குபீரென தாவி அணைத்துக் கொள்ள கும்பகர்ணனாகிவிட்டார். அசுரத் தூக்கத்தில் அயர்ந்துவிட்டார். நித்திரை மோகினியின் பாசமான அணைப்பில் நேரம் மின்னல் வேகத்தில் பறந்தது.

‘சா எழுதிய சொற்பொழிவு முழுவதையும் நினைவில் பதித்து வைக்க முடியவில்லையே….’

மனத்திற்குள் அலட்டல், கவலை புழுவாய் நெளிந்தது.

‘மனுஷி வீட்டில் இருந்திருந்தால் எப்படி யென்றாலும் எழுப்பிவிட்டிருப்பாள். அவளும் வேலைக்கார பெட்டையைக் கூட்டிக்கொண்டு ஷொப்பிங் போட்டாளோ… கண்டறியாத ஷொப்பிங்’ மனத்திற்குள் கடுகடுப்பு. சுடு எண்ணெயில் கடுகாய் படபடக்கிறது.

குழாய் பீச்சியடிக்கும் நீரில் நனைந்தவாறே கண்ணாடி முன் நின்று முகத்தை அஷ்ட கோணலாக நெளித்து, உதடுகளைப் பிதுக்கி, கண்களை உருட்டிப் பிரட்டி சொற்பொழிவு நிகழ்த்துவது போல் நாலு வார்த்தைகளை உதிர்த்தார்.

நெஞ்சிற்குள் சத்தம் கேட்கும் மௌன உச்சரிப்பு.

ஊமைப் பிரசங்கம்தான். ஆனாலும் சில வார்த்தைகள் முண்டியடித்துக் கொண்டு ‘நான் மினிஷ்டர்’ என வெளியில் எம்பிக் குதித்தன – குஞ்சுத் தவளைகள் சேற்றிலிருந்து எம்பியெம்பிப் பாயுமே அதுபோல.

‘யாரேனும் கேட்டு விட்டார்களோ!’

மனதில் அச்சம் சிறு நீர்க்குமிழியென கிளர்ந்து விரிந்து சலனமிடுகிறது.

‘சே ஒருத்தரும் இல்லே .’

நெஞ்சைத் தட்டி சாந்தப்படுத்திக்கொண்டு தன்னையே கிண்டலடிப்பது போல் மென்மையாகப் புன்னகைக்கிறார்.

குழந்தையின் புன்சிரிப்பு. என்றாலும் ஓர் அச்சம் புழுவென நெளிந்து ஊர்ந்திட பாத்ரூம் கதவை சட்டெனத் திறந்து எட்டிப் பார்க்கிறார்.

யாரையும் காணவில்லை.

‘அட மனுஷியும், வேலைக்காரப் பெட்டையும் ஷொப்பிங் பொய்ட்டினம் தானே!’

நினைவு மீண்டவராகப் புறுபுறுத்துவிட்டு மடாரென கதவை மூடுகிறார்.

‘ஓனர் மினிஷ்டர் இந்த நாட்டின் சிறுவர் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவை அனைத்தையும் இல்லாதொழிக்க சட்ட திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்…’

பாத்ரூமிற்குள் மறுபடியும் சொற்பொழிவு ஒத்திகையின் அரங்கேற்றம்.

கந்தசாமி தபால் அதிபராகவிருந்து ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் மூவரும் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் ஆகிவிட்டதன் பின்னர், கந்தசாமி சமதர்மினி அகிலாண்டேஸ்வரி சமேதராய் கொழும்பு வாசியாகிவிட்டார்.

மாதத்தின் ஒழுங்கான வருமானம் பென்ஷன் மட்டும் தான். வீட்டு வாடகை அதனை அப்படியே வாரியெடுத்துக் கொள்கிறது.

எப்படியோ அவ்வப்போது பிள்ளைகளிடமிருந்து பறந்துவரும் அமெரிக்க டாலர்கள் சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்து ஆசனத்திலிருந்து நழுவிவிழாமல் காப்பாற்றி விடுகின்றன.

என்றாலும் என்ன? ஆண்டியின் தரித்திரம் ஐயனே அறிவான்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

என்ன செய்யலாம்?

யோசனை! யோசனை! யோசனை!

சாய்வு நாற்காலியில் கைகளை தலைக்கு மூட்டாக்கி கண்களை மூடிக்கொண்டு தபசுநிலை. இப்படியே ரிட்டையர்ட் தபால் அதிபரின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது.

ஒரு நாள் …

முன்னேறுவதற்கு என்ன வழி என்று ஆலோசனை கேட்டு சமதர்மினியின் காதுகளில் குசுகுசுத்தார்.

”என்னப்பா முன்னேற்றம், கண்டறியாத முன்னேற்றம். வயது 65 ஆகுது. சிவனே என்று போய்ச் சேருகிற வழியைப் பாருங்கோ ” இது அகிலாண்டேசுவரியின் தாழிப்பு .
அகிலாண்டேசுவரி ஒன்றும் மோசமான பெண்மணி அல்ல. என்றாலும் எதை எப்பொழுது பேசுவது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமோ!

காலையிலிருந்தே அம்மாவுக்கு ஜலதோஷமும் வயிற்றுக் குத்துமாகவிருந்தது. இவற்றின் அவஸ்தையில் நெளிந்து கொண்டு சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான் ஆலோசனைக்காக உள்ளே நுழைந்தார்.

“என்னப்பா, முருங்கைக்காய சொதி. கமகமக்குது” என்ற கிண்டலோடுதான் உள்ளே நுழைந்தார். வாங்கிக் கட்டிக் கொண்டார்.

என்றாலும் தன் முயற்சியை கந்தசாமி கைவிடவில்லை. மனிதவுரிமைக் குழுவொன்றுடன் ஒட்டிக் கொண்டார்.

மாதம் இருமுறை என்றாலும் பொதுக் கூட்டம், கலந்துரையாடல், காரசாரமான விவாதம், பல்வேறு விவகாரங்கள் குறித்து அலசல், பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுதல், கலைஞர் முதல் அரசியல்வாதிவரை எவராவது மண்டையைப் போட்டுவிட்டால் உடனே அநுதாப அறிக்கை விடுதல் என மனிதவுரிமைக் குழுவின் செயல்கள் சுறுசுறுப்படைந்தன. சில பத்திரிகை ஆசிரியர்களையும் பிடித்துக் கொண்டார். ஓர் அறிக்கையை அனுப்பியதன் பின்னர் தொடர்ச்சியாக நாலு கோல்களையும் அடித்துவிட்டு ‘அவசரம்’ என அவரையும் உசுப்பிவிட்டு எப்படியோ அறிக்கையை பிரசுரித்து விடுவார். பத்திரிகைகளில் அடிக்கடி பெயர் பிரசுரமாக சுற்றுவட்டாரத்தில் ஐயாவைக் கண்டதும் கும்பிடுதல்கள் அதிகரித்தன.

***

பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டபம் பொது மக்களால் நிறைந்து பேரிரைச்சலுடன் காணப்படும் என்ற மனவுணர்டன் சென்றவருக்குப் பேரிடி.
கைகளைப் பின்னால் மூட்டுக் கொடுத்து, கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்து கிடக்கிறார் மனிதவுரிமைக் குழுத் தலைவர் கந்தசாமி.

நாலைந்து பேர் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் கழக உறுப்பினர்கள்.

“என்னடாப்பா என்ன விசயம்?”

கந்தசாமி போட்ட சத்தத்தில் ‘கொட்டாவிகள்’ பதைத்து சிதறின.

“கூட்டம் நடத்த முடியாது ஐயா!” செயலாளர் பையன் தலையைச் சொறிந்து கொண்டு முனகினான்.

”ஏன்? என்ன விசயம்?”

”மினிஷ்டர் வரமாட்டாராம்.”

“யாரடா, சொன்னது.”

”நடேசன்தான்.”

”நடேசனோ, அவன்தானே கூட்டிக்கொண்டு வாறனெண்டு சொன்னவன். இப்ப என்னவாம். கூப்பிடு ஆளை !”

”அவன் வர இல்லை சார். மெசேஜ் ஒன்று அனுப்பியிருக்கிறான்.’

கந்தசாமி இடிந்து போனார்.

***

சாய்வு நாற்காலி.

கைகளைப் பின்னால் மூட்டுக் கொடுத்து, கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்து கிடக்கிறார் மனிதவுரிமைக் குழுத் தலைவர் கந்தசாமி.

மனத்தில் விசனம்.

சமூக சேவை அமைச்சரின் அபிமானத்தைப் பெற முடியவில்லையே என்ற துயரம். உலக சிறுவர்கள் படுகின்ற துயரத்தை எத்தகையதொரு அற்புதமான சொற்பொழிவாக அவர் எழுதியிருந்தார். ‘சா, பொன்னான வாய்ப்பு நழுவி விட்ட தே .”

வாசலில் சந்தடி.

ஷொப்பிங் முடித்துவிட்டு அகிலாண்டேசுவரியும் வேலைக்காரச் சிறுமியும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். சிறுமி பாரம் தாங்க முடியாமல் பார்சல் ஒன்றை கை தவற விட்டுவிட்டால் போலும். அகிலாண்டேசுவரி திட்டுகிறாள்.

“ஏண்டி, கழுத. இதைத் தூக்க முடியவில்லையோ உனக்கு.”

மனிதவுரிமைக்குழுத் தலைவரின் கண்கள் திறந்தன.

விழித்துப் பார்க்கிறார். “என்னது பார்சலைக் கீழே போட்டுட்டாளா?” நெஞ்சில் சினம் தீயாக எழுகிறது. பல்லை நெரித்துக்கொண்டு ஓடி சிறுமியின் தலைக் கூந்தலை பிடித்து மடால் மடாலென காலால் உதைக்கிறார். சிறுமி வேதனையில் அலறுகிறாள். “ஐயோ விடுங்கோப்பா” என தாவிய அகிலாண்டேசுவரியின் செவிகளில் ‘இந்த சனியண்ட தரித்திரம்தான் மினிஷ்டரை பார்க்க முடியாது போய்ட்டு” என்ற கந்தசாமியின் அரட்டலில் வீடு ஓர் ஆட்டம் போடுகிறது.

– நூல் தலைப்பு: அன்னையின் நிழல், மணிமேகலைப் பிரசுரம், முதல் பதிப்பு: 2004

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *