கவன மறதி, கனகாவை மிகவும் வாட்டியது. யாராவது ‘உங்க பேரென்ன?’ என கேட்டவுடன் யோசிக்காமல் சட்டென தன் பெயரையே சொல்ல முடியாமல் தர்ம சங்கடத்துக்கு அவளை சில சமயம் கொண்டு போய் விட்டிருக்கிறது.
“நான் அப்பவே சொன்னனில்ல. எப்பப்பாத்தாலும் அந்தக்கருமம் புடிச்ச போனையே கையில புடிச்சுட்டு இருக்காதேன்னு, நீ கேட்டயா….? தேவையில்லாததையெல்லாம் பீரோவுல வெச்சு பூட்டி வெச்சுப்பாரு, தேவையானது தேடுனாலும் கண்டு பிடிக்க முடியாது பாத்துக்க. அந்த மாதர ஒலகத்துல நடக்கறதெல்லாம் பார்கோணும், தெரிஞ்சு போடோணும்னு நெனைச்சீன்னு வெச்சுக்கோ ஊட்ல என்ன நடக்குது, ஆபீஸ்ல என்ன வேலை பண்ணோணுமுன்னு தெரியாது. ஒடம்பும் ஒரு நாளைக்கு ஒத்துக்காமப்போயிரும். இப்பவாவது என்ற பேச்சக்கேட்டுத்தொலை…” தாய் சுகந்தி தன் மகளைத்திட்டித்தீர்த்தாள்.
யோசிக்க முடிவதில்லை. யோசித்தாலும் ஒரே விசயம் பிடிபடுவதில்லை. நூறு விசயங்கள் கண்முன் ஒரே சமயத்தில் வந்து நிற்கின்றன. காலையில் குளிக்க, பல் தேய்க்க மறந்து விடுகிறாள். ஒரு நாள் நைட்டியுடனேயே அலுவலகத்துக்கு புறப்பட்டு விட்டாள். பேருந்து நிறுத்தத்தில் பலரது கேலிப்பார்வை பட்ட பின் கனகாவின் பார்வையும் தன் மீது பட்ட போது, விசயம் புரிந்ததும் பதறியடித்து வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக போய் சுடிதாரில் மீண்டும் அலுவலகம் சென்றாள்.
ஒரு முறை அலுவலக வேலை முடிந்து மாலை ஐந்து மணிக்கு போனில் வீடியோ பார்த்துக்கொண்டே பேருந்து நிறுத்தத்தில் நின்றவள், தன் வீட்டிற்கு செல்லும் பேருந்திலேறாமல் செம்மறி ஆடு தலை குனிந்தே மற்ற ஆடுகள் பின் செல்வதைப்போல வேறு பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவள் சோர்வில் உறங்கிப்போனாள். அந்தப்பேருந்து சென்னையிலிருந்து கோவை செல்லும் பேருந்து என்பதால் நடத்துனரும் விழித்த பின் பயணச்சீட்டு கொடுத்து விடலாம் என நினைத்து விட்டதால் சேலம் வந்த போது விழிப்பு வந்து பதறிப்போய் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, நடத்துனரிடம் சண்டைக்கும் போய்விட்டாள். போனையும் சைலண்ட் மோடில் போட்டிருந்ததால் தாய் சுகந்தி பத்து முறை அழைத்தும் எடுக்கவில்லை.
உடனே தாயாருக்கு போன் செய்து நிலைமையைச்சொல்ல, அதிர்ச்சியில் உறைந்து போன தாய், திரும்பி வர விடிந்து விடும் என்பதையறிந்து ஹோட்டலில் திருமணமாகாத பெண் தனியாக போய் ரூம் கேட்டால் தவறாக நினைக்கக்கூடும் என யோசித்து விட்டு, சேலத்திலுள்ள தனது தூரத்து உறவினருக்கு போன் செய்து கனகாவை அவர்களது வீட்டிற்கு அழைத்துச்செல்லுமாறு கூற, அரை மணி நேரத்தில் பாதுகாப்பாக உறவினர் வீட்டிற்கு சென்று தங்கினாள்.
கூகுள் பே மூலமாக சம்பள பணம் தாயின் வங்கி எண்ணுடைய அலைபேசி எண்ணுக்கு அனுப்புவதற்கு பதிலாக தாயார் பெயர் கொண்ட உறவுக்காரப்பெண் எண்ணுக்கு ஐம்பதாயிரம் அனுப்பி விட்டாள். அடுத்த நாள் தாயைக்கேட்டு பணம் வரவில்லை என அதிர்ந்தவள் பணம் அனுப்பிய எண்ணில் அழைத்து கேட்க ‘கவனிக்க வில்லை’ என்றும், ‘நேற்று இரவு மொத்தமாக கணக்கில் இருந்த பணத்தை வீட்டுக்கடன் மாதத்தவணைக்கு கடன் கொடுத்த வங்கி தானாக எடுத்துக்கொண்டது’ என்றும், ‘பணம் கிடைக்கும் போது போட்டு விடுகிறேன்’ எனக்கூறிய உறவுக்காரப்பெண் இரண்டு வருடங்கள் உருண்டோடியும் தரவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக திருமணம் நிச்சயமான பின் கல்லூரியின் தான் காதலித்து வந்த வருணுக்கு ‘இனி மேல் என்னை மறந்து விடு. நாம் வெளியில் சுற்றிய போது எடுத்த போட்டோக்களையும் டெலிட் பண்ணி விடு. நான் கொடுத்த முதல் முத்தம் முதல் மொத்தமாக என்னோடு சேர்த்து அனைத்தையும் மறந்து விடு. வேலையில்லாமல் ஊர் சுற்றும் உன்னை திருமணம் செய்ய முடியாது. நல்ல சம்பளம் வாங்கும் வரன் எனக்கு அமைந்து விட்டதால் கனவிலும் குறுக்கே வந்து விடாதே….’ என பேசிய ஆடியோவை வருணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புவதற்கு பதிலாக, நிச்சயமான வரன் அருணுக்கு அனுப்பியதால் திருமணம் நின்று போனது.
பல மருத்துவர்களிடம் அழைத்துச்சென்று வைத்தியம் பார்த்தும் போன் பைத்தியம் அவளை விடவில்லை. அலுவலகத்தில் வேலை போய்விட்டது. உறவுகள், நண்பிகள் ஒதுங்கினர்.
‘போன் பார்க்கும் அனைவரும் நன்றாக, மகிழ்ச்சியாக வாழும் போது தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ என யோசித்து, தனது பக்கத்து வீட்டுப்பெண் ரகணியின் அன்றாட செயலை பரிசோதித்த போது தேவையானவற்றை மட்டும் பார்த்து விட்டு மற்ற வேலைகளைக்கவனிப்பதைக்கண்டு ஆச்சர்யம் கொண்டு பேச்சுக்கொடுத்தாள்.
“ஒரு காட்ல ஆயிரம் விதமான செடிகள், பயிர்கள் இருக்குது. அத்தனை பயிர்களோட பேரையும் தெரிஞ்சுக்கிறோமா? அத்தனையும் சாப்பிட உதவுமா? பசிக்கு சாப்பிட உதவற சில பழமரங்கள், தானியம் கொடுக்கிற சில பயிர்களைத்தெரிஞ்சு, அதப்பறிச்சு பசி போக்கி வாழறோம். இன்னுஞ்சொல்லப்போனா லட்சக்கணக்குல செலவு பண்ணி படிச்ச பாடங்களே கூட பத்து சதவீதம் தான் பயன் படுது. உலகத்துல நடக்கிற சம்பவங்களை எல்லாத்தையும் தெரிஞ்சுக்க விரும்பினோம்னா வாழ் நாளே போதாது…. அதெல்லாம் நம்ம வாழ்க்கைக்கு உதவவும் செய்யாது. தெரிஞ்சா மட்டும் போதுமா….? அது போல வாழ வேண்டாமா…? அப்படி வாழ முடியுமா….? முடியாது. முடியவே முடியாது. அதனால ராத்திரில ஒரு மணி நேரம் மட்டும் தேர்ந்தெடுத்து மனசுக்கு பிடிச்ச மாதிரி கதை, கவிதை படிப்பேன். சில வீடியோ பார்ப்பேன். செய்தி, ஆன்மீகம்னு பார்த்துட்டு விட்டிடுவேன். மற்ற நேரத்துல யாராவது கூப்பிட்டா மணிக்கணக்குல பேசாம விசயத்த சொல்லிட்டு போனை வெச்சிடுவேன்” என கூறியதைக்கேட்டவள் தானும் ரகணியைப்போல் செயல் பட ஆரம்பித்த பின் மறதி காணாமல் போனதோடு திருமணம் முடிவாகி, வேலையிலும் சேர்ந்து மகிழ்வான வாழ்வை வாழத்துவங்கினாள் கனகா!