பிரபல தமிழ் எழுத்தாளர் எழிலரசு அவர்கள் தன்னுடைய 86 – வது வயசில் காலமானார்.
கடந்த ஒரு வாரமாக தமிழ் நாட்டிலிருந்து வெளி வரும் அனைத்துப் பத்திரிகைகளிலும், அவரைப் பற்றிய செய்திகளையும், கட்டுரைகளையும் பிரசுரம் செய்து சிறப்பு செய்தன.
சில வாரப் பத்திரிகைகள் எழுத்தாளரின் போட்டோவை கறுப்பு வண்ணத்தில் அட்டைப் படமாகப் பிரசுரம் செய்து கௌரவப் படுத்தியிருந்தன.
அவர் எழுதுவதை நிறுத்தி பதினைந்து வருடங்களுக்கு மேலாகி விட்டன. எழுத்தாளர் எழிலரசு தன்னுடைய 86 – வது வயசிலும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். நல்லா இருந்த மனுஷன் இடுப்பு எலும்பு முறிந்து அகால மரணம் அடைந்ததில் நெருங்கிய உறவினர்களுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம்.
பதினாறாம் நாள் காரியத்திற்கு வந்திருந்த ஒரு உறவுக்காரக் கிழவி, எழுத்தாளரின் மனைவியை துருவித் துருவிக் கேட்டாள்!
“ மாமி!…அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீங்க?…பரண் மேல் ஏற ஏணி வைத்து ஏறி தவறி விழுந்திட்டார்!…”
“வயசான காலத்தில் கொஞ்சமாவது அறிவு வேண்டாம்?….ஏணி மேல் ஏறுகிற வயசாடி அவருக்கு?…அப்படி பரண் மேல் எதற்கடி ஏறினார்? …”
“ பரண் மேலே அவர் 50 வருஷத்திற்கு முன்பு அவர் எழுதி பத்திரிகைகளிலிருந்து திரும்பி வந்த கதைகளையெல்லாம் கட்டிப் போட்டு இன்னும் பத்திரமா வச்சிருக்கார்!…அதையெல்லாம் எடுக்கத் தான் ஏறினார்….”
“அதெல்லாம் இப்ப எதுக்குத் தேவை?….”
“ பாட்டி! ஐப்பசி மாசம் பல பத்திரிகைகள் தீபாவளி மலர் வேலையை ஆரம்பிச்சிடுவாங்க!.இவரிடம் கதை கேட்டு இரண்டு மூன்று பத்திரிகைகளிலிருந்து போன வாரமே லெட்டர் வந்திட்டது…”
“ இவர் தான் பத்து வருஷமா கதை எழுதறதில்லையே?..”
“ அது என்னமோ இந்தப் பத்திரிகைக்காரங்க இவங்க மாதிரி வயசானவங்களை விடறதில்லே! தீபாவளி மலர் தயாரிக்கும் பொழுது, எழுதறதை மறந்தவங்களை எப்படியாவது தேடிப் பிடிச்சு அவங்க பேரிலே ஒரு கதையைப் போட்டிருவாங்க!
அதனால் தான் பரண் மேல் ஏறி 50 வருஷத்திற்கு முன்பு திரும்பி வந்த கதைகளை எடுத்து எந்தக் கதையை எந்தப் பத்திரிகை திருப்பி அனுப்பியதோ அதே பத்திரிகைக்கு அனுப்பி அதை அவங்க தீபாவளி மலரிலேயே வரவச்சிடுவார்! .இவரைப் போல தீபாவளி மலர் எழுத்தாளர்கள் என்று ஒரு இருபது பேர்கள் இருக்கிறாங்க!…10 வருஷத் தீபாவளி மலர்களை எடுத்துப் பாருங்க! எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும்!…தீபாவளி மலரிலே ஒருத்தர் கதை எழுத வேண்டுமென்றால் அவருக்கு குறைந்தது 15 வருடம் தீபாவளி மலர்களில் எழுதிய அனுபவம் இருக்க வேண்டும்!…”
“ இவரும் பரண் மேல் இருக்கும் குப்பையைத்தான் இந்த பத்து வருஷமா காலி பண்ணிட்டு இருந்தார்!…என்னவோ அவருக்குப் போதாத நேரம்!!…இந்த வருஷம் தவறி விழுந்திட்டார்!…” என்று சொல்லி விட்டு கண்ணைக் கசக்கினாள் அந்த எழுத்தாளரின் மனைவி! .
– பாக்யா நவம்பர் 7-13 2014 இதழ்