கதீஜம்மாவின் சந்தோஷம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 7,234 
 
 

தங்கக்கா, என்ன செய்றீங்க என்று கேட்டபடி உள்ளே வந்தார் கதீஜாம்மா. வாங்க, எங்க சின்னவனைக் காணோம் என்றபடி ஒரு செம்பு தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தார்.

அவனை ஆசான்கிட்ட உட்கார்த்தி வச்சுட்டு வந்தேன். யாரோ உள்ள இருக்காங்க அவுங்க போனதும் வந்து கூப்பிடச் சொன்னேன். இந்த கழிச்சல்ல போவாள் நேத்து அவர்கிட்ட பாதிச் சம்பளத்தை பிடுங்கிட்டா கேட்டால் மூத்தவளுக்கு கல்யாணமாம் மொத்தமா தொகை வாங்கிட்டுத் தானே அவரை விட்டாள். இப்ப மாசாமாசம் வாங்குனா எப்படி நேத்து வந்தவர்கிட்ட மானக்கேடா பேசிட்டேன் இங்கே எங்கே புடுங்கவா வந்த? அங்க போய் புடுங்க போ’ன்னுட்டு காசை விட்டு எறிஞ்சுட்டேன் எடுத்துக்கிட்டு எதிரி வீட்டுக்கே போய்ட்டாரு. இன்னைக்கு ஆசான்கிட்ட ஆயிரம் ரூபாய் கொடுத்து எதிரி கால் கைய விளங்காமச் செய்யச் சொல்லணும். அவ மக கட்டிக்கொடுத்த இடத்துல இருந்து வாழாம வந்துரணும். என் வாழ்க்கையை கெடுத்தாள்ல அவ மகளும் திரும்பி வரணும் என்னக்கா, பெரிய பாப்பா இடுப்புக்கொடி ரெண்டு பவுனு அடகு வச்சு கொண்டு வந்து இருக்கேன். அவ நாசமா போக, பேதியில போக பொட்டு பொடுக்குனு போக, போனவழி திரும்பாம போக.
“இருங்க இருங்க ஏன் வாழற வீட்டுல வந்து உக்கார்ந்து இப்படி திட்டுறீங்க. கொஞ்சம் பொறுமையாக இருங்க என்றாள் தங்கக்கா.

வாசலில் நின்றபடி கரீம் ‘அம்மா’ என்று கூப்பிடவும் கதீஜாம்மா கிளம்பி விட்டாள்.

தங்கக்கா மகள் “யாரும்மா எதிரி” என்றாள் கதீஜாம்மா வீட்டுக்காரருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி மூணு பிள்ளை உண்டு. அவரு அப்பா, அம்மா மகளுக்குக் கல்யாணம் பண்ண காசில்லைன்னு கதீஜாம்மா அப்பாகிட்ட அஞ்சு லட்சம் வாங்கி மருமகளுக்கு ஒரு லட்சத்து கொடுத்து தீர்த்துவிட்டுட்டாங்க. அவருக்கு விருப்பமில்லை. ஆனால் அவர் அப்பா மகளை நல்லா செலவு பண்ணி கட்டிகொடுத்துட்டு கதீஜாம்மவ மகனுக்கு கட்டிவச்சு வீட்டு மாப்பிள்ளையா அனுப்பிட்டார். இந்தம்மா நேரமோ என்னவோ இவர் வந்த நேரம் அப்பா அம்மா ரெண்டுபேரும் ஒரு விபத்துல செத்துட்டாங்க. கதீஜா தம்பி இவுங்களை வேற வீட்டுக்கு அனுப்பிட்டாரு. இவரும் இப்ப முதல் மனைவி வீட்டுக்குப் போக ஆரம்பிச்சுட்டாரு. கதீஜாம்மா காசு கொடுத்து வாங்குன மாப்பிள்ளைன்னு மரியாதை இல்லாம பேசுது. போதாக்குறைக்கு தெருக்கோடியில இருக்குற மந்திரவாதிகிட்ட காசு குடுத்து மொத குடும்பத்துக்கு செய்வினை வைக்குது”

‘இனிமே இங்க வரவிடாதீங்கம்மா’ என்ற மகளிடம் “பாவம் அது. அம்மா, அப்பா பேச்சைக் கேட்டு புருஷனை புழு மாதிரி நடத்துச்சு இப்பவும் அப்படியே நெனக்குது இப்ப எல்லாம் மாறிடுச்சுன்னு அதுக்குப் புரியல”.

ஒரு நாள் ஆசான் எங்கேயோ இடம் மாறிப் போய்விட்டார். கதீஜாம்மா தங்கக்காவிடம் வந்து ஆத்திரத்தோடு புலம்பினார். இன்றைக்கு ஆசானுக்கு வரவு. “எங் காச ஆயிரமாயிரமா கொண்டு வந்து கொட்டுனேனே. சொல்லாம கொள்ளாம போயிட்டானே. இவன் விளங்குவானா இவளை பாம்பு பிடுங்க, இவன் தலையில இடிவிழ” “நிறுத்துங்க வாழற வீட்டுல இப்படி பேசாதீங்க நல்ல வார்த்தை பேசுங்க என்று அதட்டினாள் தங்கக்கா.

அக்கா, ஒங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லுவேன். மூத்தவள என் சொந்தக்காரங்க வீட்டுக்கு ஒதவிக்கு அனுப்புனேன். இப்ப அங்க இருந்துகிட்டு வர மாட்டேங்குறா அடுத்தவ ஒரு ரிச்சாக்காரன் கூட ஓடிப்போய்ட்டா. கரீமு கஞ்சா குடிச்சுட்டு வீட்டுல வந்து அசிங்கமா இருக்கான். என் குடும்பமே சிந்தி சிதறிப் போச்சு. எதிரி வீட்டுல மூத்தவ பிள்ளை பெத்துட்டா. அடுத்தவ மெட்ராசுல வேலைக்குப் போய்ட்டா. இந்த மனுசன் ரிட்டயர் ஆகும் போது எதிரி மகனுக்கு தன் வேலையை வாங்கிக் குடுத்துட்டாரு. ஆசானை நம்பி மோசம் போயிட்டேனே. இவனை ஒரு நாள் பேதியில கொண்டு போக” என்று திரும்பவும் திட்டத் தொடங்கினார்.
தங்கக்கா காபி கொடுத்து குடிக்கச் சொன்னார். முதன் முதலில் கதீஜாம்மா தன் வீட்டுக்கு வந்தப்ப தங்க விக்ரகம் போல ஜொலித்தாள். இப்போது முகத்தில் கோபமும், குரோதமும் கொப்பளிக்க அகோரமாகத் தோன்றுகிறார். தம்பி தங்கைகள் வசதியாக இருக்கிறார்கள். இவருக்குத் தான் யார் கூடவும் ஒத்துப்போகாது. நல்லா சமைப்பார். கைவேலை தெரியும். இவர் எம்பிராய்டரி போட்டுக் கொடுத்த துணியில் மகளுக்கு சட்டை தைத்தது உண்டு.

டம்ளரைக் கீழே வைத்தாள் கதீஜாம்மா “ரஹீம் எங்கே இருக்கான்” என்று கேட்டதும் “அவன் கண்ணடிக்காரன் (தம்பி) ஒர்க்ஷாப்புல இருக்கான். தன் மகளை கட்டிவைக்கப் போறானாம். போய்க் கூப்பிட்டேன். வரமாட்டேன்னான். மண்ணை வாரித் தூத்திட்டு வந்துட்டேன். ஏன் தங்கக்கா எனக்கு மட்டும் இம்புட்டு கஷ்டம் மத்தவங்க நல்லாத்தானே இருக்காங்க என்றார் கதீஜாம்மா.

“ஒங்க வாய் தான் உங்களுக்கு எதிரி. நல்லத மட்டும் பேசுங்க. பொண்ணுக்கு பொறுமை வேணும். உங்களுக்கு பொறுமையே இல்லை. பதறக்கூடாது. நீங்க எல்லாரையும் பகச்சுட்டீங்க. இப்ப யாரும் இல்லை.” என்று சொல்ல நினைத்த தங்கக்கா ஒன்றுமே சொல்லவில்லை. சொன்னால் ஒருவேளை நீ நாசமாகப் போக, உன் புள்ளைகுட்டி விளங்காம போக என்று கதீஜாம்மா திட்டிவிட்டால் என்ன செய்வது? அமைதியாக இருப்பதே நல்லது என்று இருந்தார். தட்டில் சோறு போட்டுக் கொண்டுவந்து சாப்பிடுங்ம்மா என்றார். கதீஜாம்மா சாப்பிட்டுவிட்டு கத்திரிக்காய் வைத்து ரெண்டு மூன்று ‘ரெசிபி’ சொன்னார்.

தங்கக்கா கதீஜாம்மாவுடன் பழகியதில் கிடைத்த பெரிய லாபம் பத்து பதினைந்து ரெசிபி தெரிந்துகொண்டு, வீட்டில் சமைத்து சந்தோஷப்பட்டதும் தான்.
பக்கத்து வீட்டு கமலா வந்து அக்கா கொஞ்சம் என்கூட பள்ளிவாசல் வரைக்கும் துணைக்கு வர்றீங்களா என்று தங்கக்காவை அழைத்தார். ஏன் என்னாச்சு, என்று கேட்டாள் அக்கா சின்னவனுக்கு பள்ளிவாசலுக்குப் போய் மந்திரிச்சுட்டு வரச்சொல்லி என் மாமியா அனத்துது. வாங்களேன் போயிட்டு வருவோம்.
அன்று வியாழக்கிழமை இரவு பள்ளிவாசலில் நல்ல கூட்டம். இருவருக்குமே அந்த இடம் புதுசு. அங்கு யாரோ தன்னை அழைப்பது போல தங்கக்காவுக்கு தோன்றியது. சுற்றிசுற்றி பார்த்தார். ஒரு பல்லில்லாத ஒல்லிக்குச்சிப் பாட்டி கை அசைத்தார். அருகில் சென்று பார்த்தால் அது கதீஜாம்மா. “என்ன இங்கே இருக்கீங்க.” இதுதான்க்கா நிம்மதியா இருக்கு பல்லெல்லாம் விழுந்துருச்சா என்றாள். அது ஒரு கதை என்று ஆரம்பித்தாள் கதீஜாம்மா.

என் தம்பி ஆப்பாக்காரி மகளைக் கட்டிக்கிட்டான்ல. அவன் வீட்டுக்குப் போய் ஒரு நாள் “என்வீட்ட எடுத்து கட்டி கொடு எல்லாம் இடிஞ்சுபோய் கிடக்குனு சொன்னேன்” அடிச்சு பல்ல ஒடச்சுட்டான். கண்ட கண்ட நாயெல்லாம் எங்கப்பா வீட்டுல இருக்கான்னு சொன்னது அவனுக்குக் கோபம் வந்துருச்சாம். போடா இவனேன்னு வந்துட்டேன் அதுக்குப் பெறகு ஒங்கப்பன் குடுத்த வீடே வேணாம்னு இங்க வந்துட்டேன். வந்து மூணு வருசம் ஆச்சு. இப்பதான் சந்தோசமாக இருக்கேன் ஒரு பய சிறுக்கி தயவும் வேண்டாம். ஆண்டவர் இருக்கிறார். இங்க பாரு முப்பது ரூபாய் கெடச்சுருக்க ரெண்டு புரோட்டாவும் ஒரு ஆம்லேட்டும் வாங்கி சந்தோசமா இருக்கேன். தங்கக்கா உங்க புள்ளை நல்லாருக்கா. வாராவாரம் எண்ணெய் தேச்சு குளிக்க வச்சு வெந்தயக்களி கிண்டி கொடுங்க வெயிலு அதிகமாக இருக்கு என்றார் கதீஜாம்மா.

“அக்கா இங்கேயா இருக்கீங்க ஒங்களை எங்கேயெல்லாம் தேடுறது” என்றாள் கமீலா. தங்கக்கா எழுந்து கொண்டார். கதீஜாம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார். கதீஜாம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார். கதீஜாம்மாவுக்கு கடவுள் கொடுத்த சந்தோஷத்தை நினைத்துப் பார்த்தாள். “இது பேசுற பேச்சுக்கு இதன் கடைசி காலம் எப்படி இருக்குமோ” என்று பலவேளைகளில் நினைத்ததுண்டு. “இறைவன் மிகப்பெரியவன்” அவன் கதீஜாம்மாவுக்குக் கொடுத்த சந்தோஷத்தை யாராலும் பறிக்க முடியாது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *