கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 5,926 
 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

சூப்பர் மார்க்கெட்டில் நுழையும் போதே… சற்று தூரத்தில் பொருட்களை தேர்வு செய்து கொண்டிருந்த அவளை… ‘அவள் தான்” என்று உறுதி செய்து கொண்டான் அர்விந்த்.

உடனே ஓடிச் சென்று அவள் முன் நிற்காமல்… எட்டவிருந்தே அவளை இன்ச்பை இன்ச்சாய் கவனித்தான்.

நிதானமாய், கவனமாய் பேக்கிங் மேலிருந்த எக்ஸ்பயரி காலத்தை உன்னிப்பாய் கவனித்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

‘அந்த கவனம்’ அர்விந்தை கவர்ந்தது.

‘எல்லாவற்றிலும் எச்சரிக்கையான பெண் வெரிகுட்!’ அர்விந்தன் மெல்ல நடந்து பொருட்களை பார்வையிடுவதுப் போல… அவளை பார்வையிட்டான். அவள் இவனை கவனிக்கவில்லை. இவனை மட்டுமல்ல…. அங்கிருந்த யாரையுமே கவனிக்காமல் காரியமே கண்ணாக இருந்தாள்.

தேர்வு செய்த பொருட்களோடு பில் கவுண்டர் பக்கம் வந்தாள்.

‘யாரிவள்? இந்த ஊர்க்காரியா? பார்த்தால் படித்தப் பெண்ணாட்டம் இருக்கிறாள். சொல்லாமல் கொள்ளாமல் ஏன் ஓடிப்போனாள்? அதற்கான பதிலை தெரிந்து கொள்ளாமல் தன் மனம் சாந்தியடையாது’ என்பதை தெளிவாக உணர்ந்திருந்தான்.

பணத்தை செலுத்திவிட்டு… தன்னை தாண்டிப் போனவளை புன்னகையுடன் பின் தொடர்ந்தான்.

”ஹலோ… எக்ஸ்க்யூஸ்மீ”

குரல் கேட்டு திரும்பிய ரேகா…அர்விந்தை கண்டு ஸ்தம்பித்து போனாள்.

”ஹவ் ஆர் யூ?”

“…”

“டு யூ ரிமெம்பர் மீ?”

“…”

“உங்க முகத்தை பார்த்தா… என்னை நீங்க இன்னும் மறக்கலேன்னு புரியுது. ஏன் மேடம் சொல்லாம, கொள்ளாம ஓடிப்போய்ட்டீங்க?”

“ஸாரி”

“இட்ஸ் ஓக்கே! ஏன் போனீங்கன்னு சொன்னாதான் எனக்கு நிம்மதி! ப்ளீஸ்… டெல் மீ?”

“என்னால் யாருக்கும் கஷ்ட வரக்கூடாதுன்னு தான் போய்ட்டேன்!”

”கஷ்டமா? எனக்கென்ன கஷ்டம்?”

“நீங்க எனக்காக செலவு பண்றது பிடிக்கலே!”

“இதிலென்னங்க இருக்கு? என்னால் தானே உங்களுக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சு?” வியப்பாய் கேட்டான்.

“சாதாரண அடிதானே? தவிர, நான் அவசரமா ஒரு இடத்துக்கு போக வேண்டியிருந்தது!…”

”அதை என்கிட்டே சொல்லியிருந்தா. நானே அழைச்சிட்டுப் போயிருப்பேனே? பை..த..புை.. என் பேர் அர்விந்த். சாஃப்ட்வே கம்பெனி நடத்திட்டிருக்கேன்!”

“….”

அவள் ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் அங்குமிங்கும் தவித்த… அவள் கண்களை ரசித்தான். நேர்க்கோடாய் இறங்கி வளைந்த நாசி… அதில் கண்ணுக்கு தெரியாதளவிக்கு சின்ன சைஸில் ஒட்டிக் கொண்டிருந்த ஒற்ற சிவப்புக்கல் மூக்குத்தி, கச்சிதமான ரோஸ்நிற உதடுகள், வட்ட முகத்தில் கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு, அடர்த்தியான கூந்தல்… கோதுமை நிறம், ஐந்தடி உயரம்… அளவான உடல்வாகு… என்று ஒவ்வொரு ஓவியனுக்கும் பிடித்த கற்பனை உருவத்தின் நிஜமாக நின்றிருந்தவளை… தன்னையும் அறியாமல் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் அர்விந்த்.

“அப்ப…நான் வர்றேன் சார்!” என்று நகர்ந்தாள்.

“ஒன் மினிட் ப்ளீஸ்!”

“என்ன?” என்பதுப் போல் பார்த்தவளுக்கு அவனின் பார்வை அவளுள் தகித்தது. அவனிடமிருந்து கண்ணிற்கு புலப்படாத ஏதோவொன்று இடம் மாறி அவளுல் பாய்ந்தது. பார்வையை தழைத்து கொண்டவளின் உடல் நடுங்கியது.

”யுவர் குட் நேம் ப்ளீஸ்!”

”அவசியம் தெரிஞ்சுக்கணுமா?”

அந்த கேள்வி அர்விந்தை தாக்கியது.

“அது… வந்து… அப்படியெல்ல இல்லே… பரஸ்பரம் தெரிஞ்சுக்கலாம்னு…”

“ஸாரி… எனக்கு விருப்பமில்லே! எனக்கு வேற வேலையிருக்கு… ” குரலில் கடுமையை தேக்கி வார்த்தை அம்பை வீசியெறிந்து விட்டு திரும்பி பாராமல் நடந்தாள்.

அர்விந்தின் முகம் அவமானத்தில் கறுத்துப் போய் விட்டது.


அறை கடிகாரம் இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. கொசுக்களின் ரீங்காரம் ள்ளிரவில் கர்ண கடூரமாய் கேட்டது.

தூக்கம் வராமல் படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தாள் ரேகா.

‘நானா.. நானா அப்படி நடந்துக் கொண்டேன்? அந்தளவு கடுமையாய் கூட எனக்கு பேச வருமா? என்னாகி விட்டது எனக்கு? பெயர் என்ன என்று தானே கேட்டான்? அதற்கேன் அப்படி கோபம் வந்தது?’

‘நீ பேசியதில் எந்த தவறுமில்லை ரேகா… பாதர் சொன்னதை மறந்து விடாதே! பெரும்பாலான மனிதர்கள் பாசாங்குமிக்கவர்கள். அக்கறை கொண்டவர்கள் போல் நடித்து அழிவைத் தேடி தருபவர்கள். இந்த அர்விந்தனும் பாசாங்கான மனிதனாக ஏன் இருக்க முடியாது?’

‘ஏன் அவன் நல்லவனாகவும் இருக்கலாமல்லவா? தன்னால் விபத்து நேர்ந்து விட்டதே என்கிற பதைப்பில் உன்னைக் காப்பாற்ற விழைந்தவனிடம் நாகரீகமாய் ‘நன்றி ‘ என்ற ஒரு சிறு வார்த்தையையாவது கூறிவிட்டு வந்திருக்கலாமே! இது தான் ஆண்டவன் உனக்கு கற்றுத்தந்த விசுவாசமா?’

‘அதற்காக… அந்நிய ஆணொருவன் பெயரென்ன என்று கேட்டால் கூறிவிட முடியுமா என்ன?’

‘தவறில்லை தான்! நீயும் முகத்திலடிப்பதுப் போல் சொல்ல முடியாது என்று கூறிவிட்டு வந்து விட்டாய்? பிறகென்ன வேதனை? உன் வார்த்தையால் அவன் முகம் வாடிப்போனதே… அதனாலா?’

‘ஏன் பதில் சொல்ல முடியவில்லை ரேகா? உன்னையறியாமல் உன் மனம் அவனை நோக்கி ஓடுவதால் தானே? எப்பேர்ப்பட்ட பணக்காரன்? அவனை நினைக்கக்கூட நமக்கு தகுதியில்லை என்ற தாழ்வுணர்ச்சியால் தானே?’

தாம் ஒரு அனாதை என்று தெரிந்தால்…. அலட்சியமாய் எண்ணி விடுவான் என்று தானே? நீ செய்தது சரிதான் ரேகா! குதிப்பதற்கு முன் குனிந்து பார்க்க வேண்டும். முடிப்பதற்கு முன் எண்ணிப் பார்க்க வேண்டும். மனசை எப்போதும் கடிவாளம் போட்டு கட்டியிருப்பது தான் உன்னைப் போன்ற, ஏனென்று கேட்க உறவில்லாத அபலைகளுக்கு நல்லது. அந்த அர்விந்தன் நல்லவனாகவே இருக்கட்டும். ஆனால், அவன் நிழலில் நிற்கக் கூட தகுதியில்லாத உன் மனசை அலைபாய விடாதே! ஒழுங்காய் மனசை துடைத்துவிட்டு நிம்மதியாய் உறங்கு!’

மனசாட்சி அவளை அதட்ட… ரேகா பெருமூச்சுடன் படுத்தாள். இப்போது எண்ணங்களின் கனம் குறைந்திருந்ததால்… உறக்கம் வந்து தழுவிக் கொண்டது.


மாடிப்படியிலிருந்து நிதானமாய் இறங்கிக் கொண்டிருந்த அர்விந்தை கவனிக்கத் தவறவில்லை வடிவுக்கரசி.

‘என்னாச்சு என் பிள்ளைக்கு? நான்கு நான்கு படிகளாய் தாவித்தாவி இறங்குபவன்… இன்று ஒவ்வொன்றாய் எண்ணிக் கொண்டு வருகிறான்? நேற்றிரவும் பசியில்லை என்று சாப்பிடாமல் படுத்து விட்டான். முகத்தில் கலகலப்பே காணோம்’.

நின்றிருந்த அம்மாவை கவனிக்காமல் கடந்து சென்றான்.

“அர்விந்த்!”

“ம்… என்னம்மா?”

“என்னப்பா… எல்லாம் ரெடியா எடுத்து வச்சிருக்கேன்! டிபன் சாப்பிடாம கிளம்பறே?” என்றாள்.

“பசிக்கலேம்மா”

“அதெப்படிப்பா பசிக்காமப் போகும். உட்காரு.” மகனின் கையை பிடித்து சேரில் அமர்த்தினாள்.

தட்டு வைத்து டிபன் பரிமாறினாள்.

அர்விந்த் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய் சாப்பிட்டான்.

”அர்விந்த்!”

“என்னம்மா?”

“வர்ற இருபத்திரெண்டாம் தேதி உன் பிறந்தநாள் வருது.”

‘ஆமாம்!”

“இருபத்தியேழு முடிஞ்சு…இருபத்தியெட்டு வயசாகப் போகுது.”

“….”

“நம்ப பரம்பரையிலே ஆம்பளைங்க இருபத்தியெட்டு வயசாகியும் கல்யாணமாகாம யாரும் இருந்ததில்லே!”

“அப்ப., தான் அந்த ரெக்கார்டை உடைச்சிட்டேன்னு சொல்லுங்க”

“இது. விளையாடற விஷயமில்லே அர்விந்த். உங்கப்பாவுக்கு கல்யாணமாகறப்ப இருபது வயசு தெரியுமா?”

“அம்மா… அதெல்லாம் எதுக்கு இப்ப?” என்றான் எரிச்சலுடன்.

“நீ என்ன சொன்னாலும் சரி. இனி உன் பேச்சை கேக்கற நிலைமையில் நாங்க இல்லே. உடனடியா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவுப் பண்ணிட்டோம்.”

“அம்மா…”

“வயசுப் பிள்ளைக்கு எதெது எப்பப்ப நடத்தணும்னு எங்களுக்குத் தெரியும். கருவேப்பிலை கொத்து மாதிரி ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு பெத்து வளர்த்து… இன்னும் கல்யாணம் பண்ணாம வச்சிருக்கீங்களேன்னு பார்க்கறவங்க எல்லாம் கேக்கறப்ப.. மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்குப்பா!”

“எப்படியோ….கோபுரங்கள் சாய்வதில்லை சுகாசினி மாதிரி உனக்கொரு மருமகளை கொண்டு வந்து மணவறையிலே என் பக்கத்துல உட்கார வைக்கப்போறே…. அப்படித்தானே?”

“அம்மா… உனக்கு அப்படியா கண்ணை மூடிக்கிட்டு பொண்ணு பார்ப்பேன்? என் பிள்ளைக்கு ராணி மாதிரி அழகா, பெரிய இடத்துல பார்க்க மாட்டேனா? எல்லாரும். மூக்கில விரலை வைக்கப்போறாங்க பார்!”

“போரடிக்குது.. நேரமாச்சு நான் கிளம்பறேன்.” பாதியிலேயே எழுந்து கையை கழுவிக் கொண்டு புறப்பட்டான்.

“அர்விந்த், அர்விந்த்” வடிவுக்கரசி அழைத்ததையும் பொருட்படுத்தாமல் போர்டிகோவிலிருந்த காரை உருவி எடுத்துக்க கொண்டு புறப்பட்டான்.

எடுத்ததும் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் பறப்பவன் ஆமை வேகத்தில் காரை செலுத்தினான்.

‘ஸாரி.. எனக்கு விருப்பமில்லே.. எனக்கு வேற வேலையிருக்கு.’

ரேகா பேசிய வார்த்தை காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதுப் போல் எரிந்தது.

அந்த வார்த்தையில் ஒளிந்திருந்த அர்த்தம்….எரிச்சலுடன் வெளிப்பட்ட தொனி…ஆறடி உயர ஆண்மகனை சாண் உயரத்துக்கு தலையில் அறைந்தது.

‘அர்விந்த்… அவள் யாரோ எவளோ. அவள் சொன்ன வார்த்தைக்காக நீ இப்படி அப்செட் ஆகலாமா?’

வேறு யார் பேசியிருந்தாலும் தாங்கிக் கொண்டிருந்திருப்பான். ஆனால் அவள் பேசியதைத்தான் ஏனோ தாங்க கொள்ள முடியவில்லை. தூக்கத்தை பசியையும் பறித்து அவனை கலங்கடித்துக் கொண்டிருக்கிறாள்.

அத்தியாயம்-6

ஒரு வாரமாகியும் மனம் சமாதானமாகவில்லை அர்விந்துக்கு. மனதை வேறெதிலாவது திசை திருப்பினால் தேவலை என்று தோன்ற… சட்டென்று சுபத்ராவின் முகம் நினைவிற்கு வந்தது.

அன்று அவளால் தானே… சுபத்ராவின் போனை கட் பண்ணிவிட்டு ஓடினேன். பாவம்…என்னை என்ன நினைத்திருப்பாள். அதன் பிறகு நானும் போன் பண்ணவில்லை. இப்போது போனில் பேசுவதைவிட நேரிலே போனால் என்ன?

ஆபீஸிலிருந்து உடனே ஏகாம்பரத்தின் வீட்டை நோக்கிப் புறப்பட்டான். வாசலில் இவனை பார்த்ததும் முகம் மலர்ந்துப் போனாள் அம்பிகா.

“வாங்க.. தம்பி… உள்ளே வாங்க!”

“நல்லாயிருக்கீங்களா ஆன்ட்டி”

“ரொம்ப நல்லாயிருக்கேன். ரொம்ப நாளா ஆளேக் காணோம். சுசீலாவோட பிறந்தநாள் விழாவுல ஒவ்வொரு வருஷமும் கலந்துக்குவீங்க. இந்த வருஷமும் எதிர்பார்த்தேன்!”

“எதிர்பாராம சில வேலைகள் வந்துடுச்சி. வரமுடியாம போய்டுச்சு ஸாரி ஆன்ட்டி!”

“அடடா. அதுக்கு எதுக்கு ஸாரியெல்லாம்?”

“அங்கிள் இல்லையா?”

“இன்னும் ஆபீஸ்லேர்ந்து திரும்பலே!”

“ஹாய் அர்விந்த்…ஹவ் ஆர் யூ?” ஆர்ப்பாட்டமாய் அழைத்த படி உள்ளிருந்து வந்தான் தினேஷ்.

“ஃபைன்.. !” என்றபடி கையை பற்றி குலுக்கினான்.

“பிஸினஸெல்லாம் எப்படி போகுது அர்விந்த்?”

“இந்தப்பக்கமாகத்தான்!” கிண்டலாய் இடதுபக்கம் கையை காட்டினான்.

“எத்தனை வயசானாலும் குறும்பு மட்டும் மாறலே?”

விளையாட்டாய் தோளில் தட்டினான் தினேஷ்.

“சுபத்ரா….காலேஜ்லேர்ந்து வந்துட்டாளா?” என்றான் அர்விந்த்.

“காலேஜ்லேர்ந்து வந்துட்டாளாவா? ஒரு வாரமா அவள் காலேஜிக்கே போகலே தம்பி!”

“ஏன் ஸ்டடி லீவா?”

“ஒரு லீவுமில்லே! ஏன்டி போகலேன்னு கேட்டா…! ஏன் நான் இந்த வீட்லே இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையான்னு சம்மந்தமில்லாம எரிஞ்சு விழறா! அம்மாடி…. நீ போகறதும், போகாததும் உன் இஷ்டம்னு கப்சிப்புனு வாயை மூடிக்கிட்டோம்.” சிரித்தபடி சொன்னாலும் அம்பிகாவின் குரலில் கவலை இருந்தது.

“அடடா…!”

“வயது ஏறிக்கிட்டே போகுது. ஆனா, குழந்தைதனமா எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் பிடிக்கிறா!”

“எங்கே இருக்கிறா?”

“அவனோட ரூம்லதான்!”

“நான் அவளை பார்த்துட்டு வர்றேன் – ஆன்ட்டி!” என்று மாடிப்படியேறிப் போனான்.

சுபத்ராவின் அறைக்கதவு திறந்தே இருந்தது. அர்விந்த் இருவிரல்களால் தட்டி சப்தமெழுப்பினான்,

“கதவு திறந்துதானே இருக்கு” குரல் மட்டும் வந்தது.

“அதுக்காக… தட்டாம உள்ளே வர்றது தப்பில்லையா அம்மணி?”

குப்புற கவிழ்ந்து படுத்திருந்த சுபத்ரா அந்த குரலைக் கேட்டதும்… வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

“அ…ர்..வி..ந்..த்?”

“நானே தான்!” மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு கதவோரம் சாய்ந்தபடி நின்றான்.

வாடிய பயிர் மழைத்தண்ணீரை கண்டது போல் அவளுன் புத்துணர்ச்சி பாய்ந்தது. பொங்கிய சந்தோஷத்தை உடனே உள்ளிழுத்துக் கொண்டு..முகத்தை பழையபடி உம்மென்று வைத்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் கட்டிலில் போய் அமர்ந்தாள்.

அவளின் கோபம் உணர்ந்தவனாய் சிரித்தபடி அவள் எதிரேப் போய் அமர்ந்தான் அர்விந்தன்.

“உன் ரூமுக்கு வந்தவனை வான்னு கூப்பிட மாட்டியா சுபி?”

“நான் ஏன் கூப்பிடணும்? நீங்க யாரோ? நான் யாரோ?”

“அப்ப நான் எந்திரிச்சி போய்டவா?”

“அது உங்க இஷ்டம்! போன்ல பேசிட்டிருக்கும் போதே… முகத்திலடிக்கிற மாதிரி கட் பண்ணிட்டு போகிற மாதிரி… இப்பவும் எந்திரிச்சி போய்டலாம்… தப்பில்லே!”

“ஓஹோ… அம்மணிக்கு அதான் கோபமா? சுபி… நிஜமாகவே அன்னைக்கு ரொம்ப அர்ஜென்ட்டான ஒரு விஷயத்துக்காக போனை கட் பண்ணிட்டு ஓட வேண்டியதாயிருந்தது!”

”ஆனா, சுபி இன்னும் உயிரோட தானே இருக்கா?. அதுக்குப் பிறகு ஒரு போன் பண்ணக் கூட தோணலே இல்லே?”

சொல்லும்போதே கண்கலங்கியது.

“சேச்சே…இப்படியெல்லாம் பேசக்கூடாது சுபி!”

அவள் வாயைப் பொத்தினான். கண்ணீர் அவன் கையை நனைத்தது. சுபத்ரா இந்தளவு உடைந்துப் போயிருப்பாள் என்று அர்விந்த் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதயம் துணுக்குற கண்களை துடைத்து விட்டான்.

“எல்லாரும் மாறி போய்ட்டாங்க! அம்மா அப்பாதான் மாறிப் போய்ட்டாங்கன்னா… நீங்களும் என்னை அவாய்ட் பண்றீங்க?”

“உன்னை எப்படி சமாதானப் படுத்தறதுன்னே தெரியவே. யாரும் மாறவுமில்லே… நான் உன்னை அவாய்ட் பண்ணவுமில்லே! சரி… ஏன் காலேஜுக்குப் போகலே?”

“போக பிடிக்கலே!”

“அதான் ஏன்?”

“உங்க மேல கோபம்!”

“வாட்? என் மேலயா? ஏன்?” என்றான் திடுக்கிட்டு.

“இந்த வீட்டுக்கு புதுசா ஒரு அனாதை வந்திருக்கா. அவளைக் கண்டாவே எனக்கு பிடிக்கலே அர்விந்த்! அவளை ஒரு வார்த்தை சொன்னாக்கூட அப்பாவும் அம்மாவும் என்னைத் திட்டறாங்க! என்னை விட அவதான் முக்கியமா போய்ட்டா அவங்களுக்கு! சரி.. நீங்க இல்லேன்னா என்ன? எனக்கு என் அர்விந்த் இருக்கார்ன்ற தைரியத்துல இருந்தேன்! ஆனா நீங்களும் என்ளை அவாய்ட் பண்ணினதும் நொந்துப் போய்ட்டேன் தெரியுமா? வாழவேப் பிடிக்கலே… வெளியே போகவே பிடிக்கலே!”

“சு…ப…த்…ரா” திகைப்புடனும், பயத்துடனும் அவளைப் பார்த்தான்.

“என்ன சொல்றே சுபத்ரா? என்னால என்னால வெளியே போகலியா? ஏன்?”

“பிகாஸ்… ஐ லவ் யூ! ஐ லவ் யூ ஸோ மச் அர்விந்த்” அவன் கையைப் பற்றி கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டு சுபத்ரா கண்களை முடிக்கொண்டாள்.

அந்த செய்தியும், அவன் செய்கையும் புதிராயிருக்க… அர்விந்த் செய்வதறியாமல் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான்.

“என்னால… நீங்க இல்லாம வாழ முடியாது அர்விந்த்! நீங்க எனக்கில்லேன்னா செத்துப் போய்டுவேன் அர்விந்த்! என்னை… என்னை நீங்களும் லவ் பண்றிங்க தானே? எனக்குத் தெரியும்…. என்னை லவ் பண்றீங்க!” பதறியபடி அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் சுபத்ரா.

அர்விந்த் நடுங்கிப் போய்விட்டான்.

‘என்ன சொல்கிறாள் இவள்? நான் இவளை காதலிக்கிறேனா?’

நெஞ்சில் முகம் புதைத்திருந்த அவளை விலக்கவும் பயமாயிருந்தது. தொடகூட அச்சமாயிருந்தது. இருதலை கொல்லை எறும்பாய் தவித்தான் அர்விந்த்,


“அம்மா… டெலிபோன் பில்லை கட்டிட்டு, நீங்க சொன்ன மாதிரி பரங்கிமலை போய் சித்ராம்மா வீட்லே அந்த கவரை கொடுத்துட்டு வந்துட்டேன்!”களைத்து போய் திரும்பியிருந்த ரேகா அம்பிகாவிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தாள்.

”நான் கொடுத்தனுப்பிய கவர்ல என்ன இருந்ததுன்னு தெரியுமா ரேகா?”

“தெரியாதும்மா! கொடுத்தனுப்பியதை பத்திரமா ஒப்படைச்சிட்டு வந்துட்டேன்! அதுதான் என்னோட வேலை”

அம்பிகா சிரித்துக் கொண்டாள்.

“சரி.. எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணிக் கொண்டு வா ரேகா!”

“இதோ வந்துட்டேம்மா!”

சில நொடிகளில் தண்ணீரோடு வந்தாள்.

“என்ன ரேகா… என் செல்போன் பில் கட்டிட்டியா?” தினேஷ் அங்கு வந்தான்.

“ஆச்சு சார்…இதோ ரிஸீப்ட்” தந்தாள்.

“ஒக்கே… தாங்க்ஸ்…” வாங்கிக் கொண்டு நகர்ந்தான்.

“ரேகா…நீ போய் சமையல்காரம்மாகிட்டே ரெண்டு பாதாம்கீர் வாங்கிக்கிட்டு மாடியில உள்ள கெஸ்ட்டுக்கு கொண்டு போய் கொடு!” என்றாள் கனகா.

ரேகா சமையலறை நோக்கி சென்றாள். “கனகா… உனக்கு எத்தனை முறை சொல்வேன்? ரேகாவை இந்த மாதிரி எடுபிடி வேலையெல்லாம் செய்ய விடாதேன்னு?”

“இதிலே என்ன தப்பிருக்கு? ஒரு வேலையும் செய்யாம சும்மா மூணு வேளையும் சாப்பிட்டு சம்பளம் வாங்கறதுக்கு நம்ம வீட்லே ஒண்ணும் பணம் மரத்திலே காய்க்கலியே!”

“ரேகாவும் படிச்ச பொண்ணுதான் கனகா! அதுக்காகதான் சொல்றேன். அவ படிச்ச படிப்புக்கு மரியாதை தர வேண்டாமா? நான் அவளை சித்ராம்மா வீட்டுக்கு அனுப்பினதுக்கு ஒரு காரணமிருக்கு. அவகிட்டே ஒட்டாம கொடுத்தனுப்பின கவருக்குள்ளே அஞ்சாயிரம் ரூபாய் வச்சிருந்தேன். ஒரு சின்ன டெஸ்ட்டுக்காக! அந்த கவருக்குள்ளே என்ன ஏதிருக்குன்னு பிரிச்சு பார்க்காம கொடுத்த அந்த நேர்மை அவளிடம் இருக்கான்னு தெரிஞ்சுக்கதான் அனுப்பினேன். ரேகா நான் வச்ச டெஸ்ட்டுல ஜெயிச்சுட்டா”

“அத்தை ஏன் இப்படி வெகுளியா இருக்கீங்க?” என்ற கனகா முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ரேகா ட்ரேயில் இரண்டு டம்ளர் பாதாம்கீருடன் வந்தாள்.

“ரேகா… அதை இப்படிக் கொடு! வந்திருக்கிறவர் நம்ம வீட்டுக்கு ரொம்ப வேண்டியவர். நானே கொடுத்துடறேன். வேற வேலை எதுவுமில்லே. நீ ரெஸ்ட் எடுக்கணும்னு நினைச்சா.. உன் ரூமுக்கு போய்டலாம்!”

“சரிங்கம்மா” என்றபடி ட்ரேயை அம்பிகாவிடம் கொடுத்து விட்டு அவுட் ஹவுஸை நோக்கி நடந்தாள்.

“கொஞ்சம் விட்டா இவளை தானே தத்தெடுத்து வளர்த்தாலும் ஆச்சர்யப் படறதுக்கில்லே!” தனக்குத்தானே புலம்பியபடி நகர்ந்தாள் கனகா.

அம்பிகா பாதாம்கீருடன் மாடியேறிச் சென்றாள்.

அறைக்குள் செல்ல முயன்ற அம்பிகா… உள்ளிருந்து வந்த பேச்சுக் குரல் கேட்டு அப்படியே நின்றாள்.

”என்னை… என்னை நீங்களும் லவ் பண்றீங்க தானே? எனக்குத் தெரியும். என்னை லவ் பண்றீங்க!”

சுபத்ராவின் நெகிழ்ந்த குரலும்… அதன் சின் தொடர்ந்த மௌனமும் அம்பிகாவை முதலில் அதிர்வுற செய்தாலும் அடுத்த நொடியே சந்தோஷம் நெஞ்சை நிரப்பியது.

‘முருகா.. உனக்கு கோடானு கோடி நன்றியப்பா’ உணர்ச்சி பெருக்குடன் மானசீகமாக கரம் குவித்தாள்.

சுபத்ராவிற்கும் அர்விந்துக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாருமே ஆசைப்பட்டது நிஜம். ஆனால், இவர்களுக்குள் அப்படியொரு எண்ணம் இருக்கிறதா என்று தான் புரிபடவில்லை. இதோ… இப்போது புரிந்து விட்டதே!

அவர்களை தொந்தரவு செய்ய விரும்பாமல் மெல்ல கீழிறங்கி வந்த அம்பிகா, தன் கணவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னாள்.

– தொடரும்…

– தேவியின் பெண்மணி, பிப்ரவரி 2001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *