கண்ணீர் நதி குளித்துக் கரைகண்ட,சத்திய தரிசனமான சில உண்மைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 14,286 
 

அப்போது மாலினி கிராமத்தை விட்டுத் தாலி கட்டிய கணவனே உலகமென்று நம்பி டவுனிலே வந்து வேரூன்றிய நேரம் அக்கினி சாட்சியாகப் பெரியோர் நல்லாசியோடு அவளுக்கு வந்து வாய்த்த அந்தக் கல்யாணச் செடி, ஒரு குறையுமில்லாமல் ஆழ வேரூன்றி விருட்சமாகி நிலைத்து நிற்குமென்று அவள் நம்பி வந்ததற்கு மாறாக அதை வேரோடு சாய்த்து வீழ்த்தவே அவளுக்கு அந்தக் கல்யாண விலங்கு

அது காலிலல்ல கழுத்திலே அவள் கொண்டு வந்த பாவக்கணக்கின் முதல் முடிச்சாக வந்து விழுந்த தாலியென்ற அடிமை விலங்கு அதை அவளுக்கு ஒரு வரமாக அளித்தவன் கொழும்பிலிருந்து மாற்றலாகி யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது உண்மையில் அவளைப் பெரிய மனதோடு வாழ்விக்கவல்ல

வந்தேறுகுடிகளான அவர்களுக்குப் பூர்வீகம் வேலணையென்றும் அவர்கள் அதிலும் குறிப்பாக அவளுடைய அருமை மாமனார் தொழில் செய்ய வசதி தேடியே இந்த வண்ணார்பண்ணை இருப்பு நிலையென்றும் அவள் கேள்விப்பட்டிருந்தாள் அவர் பெயர் கேட்டாலே உலகம் முகம் சுழிக்கும் பிறர் உயிரை மனதை உணர்வுகளை நோக டித்துச் சரித்து வீழ்த்துகின்ற அன்புக்கு மாறுபட்ட எதிர் முரணான கடும் போக்கு நடத்தைகளுடைய மனித முகம் கொண்ட ஒரு மிருகம் அவர் அவர் போலவே அன்பு நிலை தவறிய மிருக புத்தி சுபாவம் தான் அவர் மகன் சந்திரனுக்கும் அவனுக்கும் மாலினிக்கும் ஜாதகப் பொருத்தம் அதி விசேடமாக இருந்ததென்னவோ உண்மைதான் இதை நம்பித்தான் மாலினி சம்பந்தப்பட்ட அந்தத் தாரை வார்ப்பு ஒரு தேவதையை வாழ்விக்கும் சுப மங்கள காரியம் போல் மிக அமர்க்களமாக மேள தாள ஆரவாரத்துடன், இனிதே நடந்து முடிந்தது மாலினியைப் பொறுத்த வரை அன்பு உயிர் நதி வற்றிய கானல் நீரை முதன் முதலாக அவள் கண்டது அந்த வீட்டில் தான். பிறந்த வீட்டில் அவளுக்கு ஒரு குறையும் இருந்ததில்லை. மனதை உற்சாக கதியில் கொண்டு செல்வதற்கு, உயிரோட்டமான வாழ்க்கையனுபவங்கள் அப்போது நிறையவே இருந்தன. சிறு வயதிலிருந்தே அடம் பிடித்தே நினைத்ததைச் சாதிக்கும் ஒரு செல்லப் பிள்ளை மாதிரி அவள் இருந்ததென்னவோ உண்மை தான். வயது ஏறி நிலையற்ற வாழ்க்கையின் நிஜத்தன்மை புத்தி விளக்கமாகப் பிடிபட்ட பின், முன்பிருந்த அடம் பிடித்து எதையும் சாதித்து விடலாமென்ற குழந்தைச் சுபாவம் மாறி, தன்னிலை உணர்ந்த தெளிந்த நீரோடை போல மனம் பக்குவப்பட்டு அவள் இருந்த நேரத்திலே தான், எதிர்பாராத

விதமாக அவளுடைய அந்தக் கல்யாணம் ஒரு விபத்துப் போல் சடுதியில் நடந்தேறியது

அதுவும் சாஸ்திரரீதியாக அக்கினி சாட்சியாக, பெரியோர் முன்னிலையில் நடந்தேறிய தனது அந்தக் கல்யாண உறவு மனிதர்கள் குறித்து பரஸ்பரம் அன்பு விட்டுப் போகாத மனோ நிலையில் அவர்களுடன் சங்கமிக்கப் போகிற தன்னுடைய வாழ்க்கையே ஒரு சத்திய வேள்வியாகப் பிரகாசித்து நிலை தளும்பாது நிலைத்து நிற்கும் என்று அவள் கனவு கண்டது வெறும் கானலாகவே போனது. சந்திரனின் தகப்பன் நல்லதம்பி சுருட்டுத் தொழில் செய்பவர். அதுவும் ஒழுங்கில்லை. அதிலும் தோள் சுமக்க முடியாத பெரும் சுமை அவருக்கு. வருமானம் குறைவாக இருந்தாலும் பிள்ளைச் செல்வத்திற்குக் குறைவில்லை. செல்லரித்த வறுமைச் சூழலில் பத்துப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதென்றால், யாரையாவது இரை விழுங்கித் தான் அது முடியுமென்ற நிலைப்பாடு. அதற்கு இலக்காக வந்து அகப்பட்டவள் பாவம் இந்த மாலினி தான். அவளின் மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறிய ஒரு சாவு கூடமாகவே அந்த வீடு அவளைப் பொறுத்தவரை இருந்து வந்தது

அதிலும் குறிப்பாகச் சந்திரனுக்கு அவள் நிழல் கூடக் கரித்தது அவளை அவன் அடியோடு வெறுத்து ஒதுக்குமளவுக்கு அவள் செய்த ஒரேயொரு குற்றம் ஒரு பாவமும் அறியாமல் தாலியென்ற பொன் விலங்கு ஏற்று அவனை மணம் முடிக்க நேர்ந்த தவறுதான். அதுவும் தானாகத் தேடிக் கொண்ட வினையல்ல . பெற்றோராகப் பார்த்துச் செய்து வைத்த திருமணம். இது எப்படி அடி சறுக்கிப் போனது என்று அவளுக்கு விளங்க மறுத்தது. சந்திரனுக்கு ஏனோ ஆரம்பத்திலிருந்தே அவளைப் பிடிக்கவில்லை எடுப்பான கம்பீரமான ஆண்மைக் களை வீசுகின்ற தன் அழகுக்கு முன்னால், நடுத்தர உயரமும் மாநிறமான சுமாரான அழகும் கொண்ட அவள் கணக்கிலெடுக்க முடியாத வெறும் கழிவு ஜென்மம் என்று அவனுக்குப்பட்டிருக்கும். அதுதான் அவனுக்கு அவள் மீது இவ்வளவு தீராத பகையுணர்ச்சியும் கடும் வெறுப்பும். இதை விட அவளை அவன் வெறுப்பதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்தது,

அவர்களுக்குக் கல்யாணமான புதிது சந்திரனுக்கு யாழ்ப்பாண டவுனிலேயே வேலையென்பதால் அதை ஒரு சாட்டாக வைத்து அவள் அவர்கள் வீட்டிலேயே வந்து வாழ வேண்டிய நிலைமை. மிகவும் கஷ்டப்படுகிற ஒரு பெரிய குடும்பம் தந்தை ஒழுங்காக உழைக்காததால் சந்திரனின் வருமானத்தை நம்பியே அந்தக் குடும்பம் உயிர் பிழைத்து வந்தது. அதனாலே சந்திரனை மணக்க நேர்ந்த குற்றத்திற்காக மாலினியின் வரவு அவர்களைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்ள முடியாமல் போன ஒரு பெருந் தவறுதான். இதற்காக அவளை உதிரம் கொட்டச்

சிலுவையில் அறைந்து கொன்று தீர்த்து விடவே அவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருந்தார்கள் சந்திரனுக்கும் அதே மாறுபாடான வக்கிர மனம் கொண்ட குரூர புத்தி தான். போதாக் குறைக்கு இந்த அணையாத நெருப்புக்கு மேலும் தூபமிடுவது போல நெருடலான மற்றுமொரு சம்பவத் தீ அங்கு கேளாமலே பற்றிக் கொண்டது

அது வேறொன்றுமில்லை கல்யாணமான மறுநாள் என்று ஞாபகம். மாலினியைக் குசலம் விசாரித்துப் போகவென்று ஊரிலிருந்து ஒரு பெரிய பட்டாளமே திரண்டு வந்திருந்தது. உறவுப் பட்டாளம் தான். நாலாம் சடங்கு ஆரவாரம் கூட இல்லாமல் வீடு நிழல் தட்டி வெறிச்சோடிக்கிடக்கிறது அந்த நிழலினுள் அகப்பட்டுச் சிதைந்து அழியக் காத்திருக்கும் நிலைமையில், மாலினி அதை வெளிக்காட்ட விரும்பாத பெருந் தோரணையுடன் அவர்களை முகம் மலர்ந்து வரவேற்ற போதிலும் மேலும் அவளுக்குக் குழி பறிக்கவே சந்திரனையும் ஒரு காரண புருஷனாக வைத்து அவர்கள் முன்னிலையில் ஒரு பாவ காரியம் அவள் சற்றும் எதிர்பாராதவகையில் திடுமென அரங்கேறியது

கனத்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு சொல்லம்பு அவளின் மார்பைக் குறி வைத்துப் புறப்பட்டு வரவே அவள் அப்படியே கதி கலங்கிப் போனாள்

“என்னடி இவ்வளவு காலமும் தான் கொம்மா உங்களுக்கு ஒன்றும் சொல்லித் தரேலை உதுகளைப் பார்த்தாவது நீ செய்காரியத்தைப் பழகு “என்றாள் மாலினியின் அருமைச் சித்தி. அப்பா வழி வந்த பெரும் சொந்தம் அவள். அதைக் கனத்த குரலில் மேளம் தட்டிக் கொண்டாட இது ஒரு சந்தர்ப்பம் அவளுக்கு. அதனால் வரப் போகிற பின் விளைவுகள் பற்றி அவளுக்கென்ன கவலை அதைக் கேட்க நேர்ந்த சந்திரனுக்கு எப்படியிருக்கும் ?ஏற்கெனவே மாலினி மீது தீராத பகை நெருப்பு அதை மேலும் தூண்டி விடவே சித்தியின் அந்தப் படுமோசமான வார்த்தைப் பிழை அது மாலினியைக் காவு கொள்ளும் பெரு நெருப்பாக எரிய மாட்டாதென்று என்ன நிச்சயம்

அது மனசெல்லாம் பற்றியெரியத் தொடங்கிய போது மாலினியின் வாழ்க்கை வேள்வியே ஒரு கேள்விக் குறியாக மாறி அவளைத் தடம் புரள வைத்தது அவளை அம்புப் படுக்கையில் விழ வைத்து அழவிட்டு வேடிக்கை பார்க்கும் அந்தத் தரம் கெட்ட மனிதர்கள், மனிதர்களல்ல மனிதத் தோல் போர்த்து வந்த மிருகங்கள் அவளுக்குப் புதைகுழி தோண்டச் சித்தி சொன்ன அந்த வாய் மொழி வார்த்தை அம்பே போதும் பிறகென்ன வாயில் விரலை வைத்தால் சூப்பத் தெரியாத குழந்தை போலிருந்த சந்திரனை வழி நடத்திச் சென்று குட்டிச் சுவராக்க அந்தச் சாத்தான்கள் ஓதுகின்ற வேதமே போதும்

நரகச் சிறையாகத் தோன்றி ஒவ்வொரு கணமும் வருந்தி அழ வைத்து மாலினியைப் புடம் போட்டு அவள் அழியாத அன்பு வேதம் கற்றுத் தேறவே அவளுக்கு இந்த உயிரைக் கூறு போட்டுப் பிளக்கிற மிகவும் கசப்பான வாழ்க்கையனுபவங்கள் அவள் நீந்திக் கரையேறத் துடிக்கும் கண்ணீர் நதி வற்றிப் போகாத நிலையிலேயே, துருவத்திலிருந்து அக்கரையிலிருந்து அமானுஷ்யமாய் ஒரு மானுடக் குரல் அவளை ஒரு சமயம் அழைப்பது போல் பட்டது அவள் விழிப்புற்று வெளிச்சத்திற்கு வந்து பார்க்கிற போது அப்பாவின் நிழல் தட்டிச் சோரம் போகாத ஒளிச் சுவடு கண்ட தெய்வ தரிசனமான முகம் அவளை ஆட் கொள்ள வந்து நிற்பதாக அவள் உணர்ந்தாள்

அவரை எப்படி வரவேற்று உள்ளே அழைத்துப் போவதென்று பிடிபடாமல் அவள் கண் மயங்கி நின்ற போது உயிர் மழை பெய்து அவளைக் குளிர்விப்பது போல அப்பாவே வாய் திறந்தார் அதை அவள் மெளனமாக மனம் சிதறாது கேட்டுக் கொண்டிருந்தாள்

அவர் பேசிக் கேட்டு அவளுக்கு இதுதான் முதல் அனுபவமல்ல கல்யாணத்திற்கு முன்பு அவர் அன்பு வேதம் பேசியே கேட்டுப் பழகிய சுபாவம் அவளை அம்புப் படுக்கையிலிருந்து தூக்கி நிறுத்துவது போல அவரின் வாய்ப்பிரகடன வேத வார்த்தைகள் கணீரென்று ஒலிப்பதாய் அவளுக்கு உணர்வு தட்டிற்று

“பிள்ளை உன்ரை நிலைமை எனக்குப் புரியுது இப்ப இந்த நிலைமையிலே நான் உன்னைப் பார்க்க வந்ததே ஒரு முக்கிய சேதி சொல்லத் தான்”

“அப்பா என்ரை உறவையே துண்டிச்சுப் போடுற மாதிரித் தான் அவர் எப்பவும் இருக்கிறார் இஞ்சை அவர் மட்டுமல்ல என்னை உயிரோடு விழுங்க நீங்கள் தேடின சவக் குழி இது என்று நான் சொல்ல வரேலை எல்லாம் என்ரை பாவக் கணக்கு இதுக்கு நீங்கள் என்ன செய்வியள்?”{

“இது உன்ரை பெருந்தன்மை நீ இப்படித் தான் எப்போதும் தீமை குறுக்கிட்டு நீ கருவறுந்து போனாலும் உன்ரை சாந்த குணம் மாறாதென்று எனக்கு விளங்குது . நான் அதைச் சொல்ல வரேலை “

“அப்ப என்ன தான் சொல்ல வாறியள்?

“ தீமைகளை எரிக்கும் ஒரு தேவதையாக இரு என்று சொல்ல நினைக்கிறன்”

“அப்பா நீங்கள் சொல்லித் தாற வேதம் எனக்குப் புதிதல்ல .இந்த அம்புப் படுக்கையே எனக்கு எத்தனையோ பாடங்களைச் சொல்லிக் கொண்டிருக்கு . நீங்கள் பாருங்கோவப்பா கண்ணீர் நதி குளிச்சுக் கரை கண்ட பிறகு எல்லாம் உணர்ந்து கொண்ட நானொரு புதுப் பிறவிதான் உயிர் விழிப்புத் தட்டிய என்ரை அறிவு வெளிச்சம் அல்லது என்ரை ஆன்மீக ஞானம் உங்கள் கண்களையே திறக்கப் போகுது “

இதை எனக்கு நீ சொல்லியே தெரிய வேணும்”

“எனக்குப் புரியுதப்பா” இந்த வீட்டிலை உங்களுக்கு இடமில்லை வேலையிலிருந்து அவர் வாற நேரம் மாமா கூட இப்ப வீட்டில் இல்லை ஒற்றை வழி பார்க்கிற ஊனப் பார்வைகள் தான் என்னைச் சுற்றி”

இதற்கு இரையாகாமல் நான் போறதே நல்லது என்று உனக்குப் படுகுது” சரி உன்ரை விருப்பம். நான் போய் வாறன்”

நிஷ்டை கலைந்தது போல அவளுக்கு இருந்தது அவர் போய் மறு நிமிடமே அவசரமாகச் சந்திரன் தகரப் படலையைத் திறந்து கொண்டு சைக்கிளை வேகமாக உருட்டியபடி உள்ளே வருவது தெரிந்தது சுவர் மறைவில் நின்றபடி அவள் எட்டிப் பார்ப்பதைக் கண்டு குரல் சினந்து அவன் கேட்டான்

“என்ன கொப்பர் போறதைப் புதினம் பார்க்கிறியே? வழியிலை நான் அவரைக் கண்டனான் அவரை இஞ்சை ஆர் வரச் சொன்னது? வரச் சொல்லி நீ கடிதம் போட்டனியே?”

அதற்கு அவள் அழுகை முட்டிச் சொன்னாள்

“ எனக்கு அவர்களோடு தொடர்பு அறுந்து போய் ஒரு யுகமாகிறது நான் கடிதம் போட்டு அவர் வரேலை. தானாய்த் தான் வந்தவர்”

“இனி இஞ்சை அவர் வரப்படாது அப்படி அதையும் தாண்டி வந்தால் ஒரே போடாய் போடுவன். சொல்லிப் போடு”

அவள் மெளனமாகத் தலை ஆட்டினாள் எப்போதும் அவன் இதைத் தான் ஒரு தாரக மந்திரம் போல் சொல்லிக் கொண்டிருப்பான் அவளை நோக்கி அந்த அஸ்திரம் வரும் எதற்கெடுத்தாலும் ஒரே போடாய் போடுவேன் என்பான் அப்படி அவளைக் கொலை செய்ய அவனுக்கு உரிமை இருக்கிறது நன்றாகக் கொல்லட்டும் கொன்று பசியாறினாலும் கேட்க நாதியில்லை ஆனால் அப்பாவைக் கொலை செய்ய அவன் யார்? என்னவொரு மூர்க்க அவதாரம் அவன் அவனிடம் போய் அவள் இப்படிச் சரணடைய நேர்ந்தது யார் செய்த பாவம் இந்தப் பாவக்குட்டையிலிருந்து எப்படி

மீளப் போகிறேனோ தெரியவில்லை அவள் பெரும் மனத் தாங்கலோடு நினைவு கூர்ந்தாள்

“இப்ப இந்தப் பாவங்களையல்ல பாவிகளைத் தலை முழுக நானொரு புது அவதாரமே எடுக்க வேண்டியிருக்கு அது எனக்கு அவசியமில்லை ஏனென்றால் என்ரை பிறவிச் சுபாவம் அப்படி பாவங்களை எரிக்கும் ஒரு புனிதமான சத்திய தேவதை நான் என்னைச் சுற்றி ஏற்பட்டுள்ள இந்தத் தோஷங்களுக்காக நான் கண்ணீர் நதி குளித்துக் காயப்பட்டுப் போனாலும் பரவாயில்லை நான் விரும்புவது இவர்களுடைய பாவ நிவர்த்தி ஒன்றை மட்டும் தான் “கடவுளே இவர்களையெல்லாம் மன்னித்து விடு” முற்றாகக் கண்ணீர் நதி குளித்து கரை கண்ட அன்பு மனம் விடுபட்டுப் போகாத அந்தத் தன்னிலை மறந்த சாசுவத சத்தியப் பிழம்பாய் இப்போது அவள் உச்சத்தில் கொடி கட்டிப் பறக்க நேர்ந்தாலும் அந்தச் சத்தியப் பிழம்பு தென்படாத ஊன இருட்டில் தான் இன்னும் அவன். அந்த இருட்டைத் தாங்க ,அந்த வீடே வெட்டவெளிச் சூனியத்தில் இருண்டு போய்க் காடு பத்திக்கிடக்கிறது அந்தக் காட்டின் நடுவே தான் அவளது அந்த இருளால் சூறையாடப்படாத சத்தியப் பிழம்பின் இருப்பிடமும் கூட அப்படியொரு பிரகாசமான அன்பு தேவதை அவள் அவளுக்கு அந்தத் திருமணவிலங்கென்ற மாய வாழ்க்கை மூலம் நற்பலன் கிடைத்ததோ இல்லையோ இருட்டை அடியோடு களைகிற உறவு மனிதர்கள் சார்பான தளும்பாத மனம் குறித்த அறிவு வெளிச்சமான தரிசன உண்மைகளை அவள் ஒன்றும் விடாமல் கற்றுத் தேறத் தான் வாழ்க்கையென்ற படுமோசமான பல விழுக்காடுகளைக் கொண்ட அந்தக் கண்ணீ நதி அவளுக்கு

அதில் மூச்சுத் திணறி அவள் சாக நேர்ந்தாலும், சாகா வரம் பெற்ற உயிர்க் கவிதை போல மீண்டும் அவள் உயிர்த்தெழுவாள்… மரணமே முடிவாக இருக்கிற நிலையற்ற வாழ்க்கையில் , மனங்களை வருந்தி அழ வைக்கிற கண்மூடித்தனமான மிருக சுபாவம் விடுபட்டு உயிர்களை நேசிக்க மட்டுமே தெரிந்த அன்பு வேதமே வாழ்க்கை தரிசனம் என்றாகிவிட்ட பிரகாச நிலையில், கண்ணீர் நதி குளித்துக் கரை கண்ட பின் அவளால் அப்படித் தான் உயிர் மூச்சுக் கொண்டு எழ முடியும். அவள் என்றும் அப்படித் தான் இருப்பாள் உறவு நெருடலான அந்தக் கண்ணீர் நதி கூட அவளுக்கு நினைவில் நிற்க மறுக்கிற நிழலாக அழிந்து போகிற ஒரு வாழ்க்கைச் சுவடுதான். அதில் அழிந்து போகாத ஆத்ம சாந்தியான சாகா வரம் பெற்றுத் திகழ்கிற உயிர் கவிதை போல இன்னும் அவள்.. . இனியும் அப்படித் தான் இருப்பாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *