(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1
வாய்க்காலில் சல சலவென்று தண்ணீர் பாய்ந்து ஓடிக்கொண் டிருந்தது. தண்ணீர்க் கரை யில் கூட்டம் கூடியிருந்த தவளைகள் காலடிச் சப்தம் கேட்டு வளைகளில் பதுங்கின. கிருஷ்ணன் தண்ணீரில் இறங்கிக் கைகால் கழுவிக்கொண்டு கரை ஏறினான்.
உச்சி வானத்திலிருந்து சூரியன், ‘இந்தப் பிர பஞ்சமே என்னுடையதுதான்’ என்று சொல்லிச் சிரிப்பவன்போல் தன் அக்கினி ஜ்வாலைகளை வீசிக் கொண்டிருந்தான். வாய்க்காலின் இரு ரு பக்கங் களிலும் இருந்த வயல்வெளிகளில் பச்சைப் பசேல் என்று வளர்ந்திருந்த நெற்பயிர் காற்றில் அசைந்தாடி ஓர் இனிய ஓசையை எழுப்பிக்கொண் டிருந்தது. அடுத்தாற்போல் மேய்ந்துகொண் டிருந்த மாட்டு மந்தையிலிருந்து எப்போதாவது, “அம்மா!” என்று சப்தம் கேட்கும்.
கிருஷ்ணன் ஒருமரத்தடிக்குச் சென்று, மரத்தின் மொட்டையான கிளையொன்றில் தொங்கிக்கொண் டிருந்த சோற்று மூட்டையை எடுத்து அவிழ்த்தான். பாதி சாப்பிட்டுக்கொண் டிருக்கையில் அவனுக்குத் திடீரென்று என்னவோ ஞாபகம் வந்தது. எழுந் திருந்து மரத்தில் இருந்த ஒரு வங்கில் கையை விட்டு ஒரு சிறு பொட்டலத்தை எடுத்தான். அதைப் பிரித்து உள்ளே இருந்த எலுமிச்சங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் அவன் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. அவன் மனம் வள்ளிநாயகியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தது.
வள்ளிநாயகி, அந்த ஊர்ப் பண்ணையாரின் மகள். அவர்கள் வீட்டு மாடுகளைத்தான் கிருஷ்ணன் மேய்த் துக்கொண் டிருந்தான். பண்ணையார் போன வரு ஷந்தான் காலஞ் சென்றார். அவர் மனை வியும் நோயாளி. ஏழெட்டு வருஷங்களாகவே அவள் முடக்கு வாதம் வந்து நடமாட்டம் இல்லாமல் படுத்த படுக்கையாய் இருந்தாள். ‘இந்த அம்மாள் போயிருக்கக் கூடாதா? திடமாய் இருந்த பண்ணை ஐயா ஏன் இப்படித் திடீரென்று சாகவேண்டும் ? அவர் நன்றாக இருக்கும்போதே அம்மா போய்ச் சேர்ந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? இருந்தும் பிரயோஜனமில்லியே!-” என்று கிருஷ்ணன் நினைத்தான். அந்த எலுமிச்சங்காய் ஊறுகாய் தேவா மிர்தம்போல் அவனுக்கு ருசித்தது. நாக்கைச் சப்புக் கொட்டிச சாப்பிட்டான். அவன் அன்று காலையில் பல பல என்று விடியும் நேரத்தில் பாலைக் கறந்துவிட்டு மாடுகளை அவிழ்த்து மேய்ப்பதற்காக ஓட்டிக் கொண்டிருந்த பொழுது வள்ளிநாயகி, “கிருஷ்ணா ! கிருஷ்ணா !” என்று கூப்பிட்டாள். ஏன் வள்ளியம்மா?” என்று கேட்டுக்கொண்டே கிருஷ்ணன் எதிரில் சென்று நின்றான்.
வள்ளிநாயகி கையை நீட்டி அவன் கையில் ஒரு காகிதப் பொட்டலத்தை வைத்தாள்; “சாப்பிடும் போது திறந்து பாரு” என்றாள். ‘இவள் மனசுதான் எப்பேர்ப்பட்ட மனசு ! இவ்வளவு நல்ல மனசையும் சொத்தையும் சுதந்தரத்தையும் நிலபுலன்களையும் கொடுத்து விட்டு, பாவம், பகவான், இவளுக்குக் கண்களை மட்டும் ஏன் பொட்டையாக்கி விட்டான்? அந்தச் சாமி தலையிலே இடி விழ!’
இப்படி அவன் யோசித்துக்கொண் டிருந்த போது அவன் தலையில் லொட் என்று ஒரு சிறு கல் வந்து விழுந்தது. கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான். சற்றுத் தூரத்தில் ஒரு பெண் தலையில் ஒரு சோற்று மூட்டையுடன் அவன் பக்கம் பாராமல் வேகமாய் நடந்து போய்க்கொண் டிருந்தாள்.
“ஏ தொரையம்மா!” என்று கிருஷ்ணன் கூப் பிட்டான். அந்தப் பெண் அவன் குரல் காதில் விழாதவள்போல் நடந்தாள்.
“ஏ தொரையம்மா !…ஏ…அம்மா!” அந்தப் பெண் நின்றாள்.
“ஏன்; என்னத்துக்குக் கூப்பிடறே?” “என் தலையில் கல்லைப் போட்டது யாரு?” “யார் போட்டாங்களோ? அவங்கதான் போட்டிருப்பாங்க.”
“அது தெரியாதா எனக்கு ? இங்கே வா சொல்றேன்.”
“என்னத்துக்கு ?”
“வாயேன்…”
“சரிதான்; எனக்கு வேலை கிடக்கு. நீ சாப்பிட்டு உட்காந்துக்கிட்டு இருக்கே. நான் போவணும். எங்க அப்பா பசியா இருப்பாரு” என்று சொல்லி அவனைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுத் துரையம்மாள் நடந்தாள்.
துரையம்மாள் நல்ல பெண். குழந்தைப் பருவத்தி லிருந்து கிருஷ்ணனுக்குத் தெரியும். அவளைத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவனுக்கு ஆசை.
“தொரையம்மாளா? அது அடங்காப் பிடாரி ஆச்சே” என்பாள் அவன் தாய். தகப்பனுக்கு அவள் செல்லக் குழந்தை யாதலால் வீட்டிலே ஒருவருக்கும் அடங்காள். ஆனால், கிருஷ்ணனைக் கண்டால் அவள் பொல்லாத்தனமெல்லாம் அடங்கி விடும். இப்போது மட்டும் வரவரக் கிருஷ்ணனிடம் அவள் நடத்தை ஒரு தினுசாக மாறி வந்தது. அவள் இப்போது அவனுடைய கண்ணி லேயே படுகிறதில்லை. பட்டாலும் ஏதாவது சாக்குச் சொல்லிக்கொண்டு ஓடிவிடுவாள். இதெல்லாம் கிருஷ்ணனுக்குப் புரியவில்லை. அந்த வயசிலே பெண்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. ‘நம்மைக் கண்டால் பிடிக் காமற் போய்விட்டதா என்ன? என்ன காரணமாய் இருக்கலாம்? எப்போ கட்டிக் கொடுக்கறேன்னு மாமாவைக் கேக்க வேண்டியதுதான்’ என்று நினைத்துக்கொண்டான்.
2
மேற்கே கண்ணுக்கெட்டின தூரம் வரையில் வயல் வெளிகள் ; குளுகுளு என்று கண்ணைக் கவரும் பச்சை நிறம். அவற்றின் கோடியில், அடிவானம் பூமியை முத்தமிட்டுக்கொண் டிருந்த இடத்திலே சூரியன் முழுகி மறைந்துகொண் டிருந்தான். மாடு களின் கழுத்திற் கட்டியிருந்த மணிகள் சப்தித்தன. கிருஷ்ணன் மாடுகளை ஓட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்பினான்.
பண்ணையார் வீட்டில், மாட்டுத் தொழுவத் துக்குப் பக்கத்தில் வள்ளிநாயகி நின்றிருந்தாள். மாடு களின் சப்தம் கேட்டு ஒதுங்கி நின்றாள். கண் ணில்லாதவர்களுக்குக் கடவுள், மற்றப் புலன்களில் அதிகமான சக்தியை அளித்திருக்கிறார். பிறப்பி லிருந்து பார்வை இல்லாவிட்டாலும், வள்ளிக்கு வீடு முழுவதும் தாராளமாய்ப் பழகும் வழக்கம் உண்டு. எங்கெங்கே என்ன இருக்கிறது, எங்கெங்கே அடி வைக்கவேண்டும், எந்த எந்தப் பக்கம் திரும்ப வேண்டும், எங்கே படிகள் இருக்கின்றன என்பவை யெல்லாம் அவளுக்கு நன்றாய்த் தெரியும். மனிதர்கள் அரவம் கேட்டால், காலடிச் சப்தத்திலிருந்து வருகிறது யார் என்று அறிந்து கொள்வாள். மாடு களுக்குப் பின்னால் வந்த கிருஷ்ணன் சமீபித்ததும், “கிருஷ்ணா !” என்று கூப்பிட்டாள்.
மாடுகளைத் தும்பில் பிணைத்துக்கொண்டே, “ஏன் வள்ளியம்மா?” என்றான் கிருஷ்ணன்.
“ஊறுகாய் எப்படி இருந்தது?” என்று கேட் பதற்கு அவள் நாக்குத் துடித்தது. ஆனால் வெட்க மாய் இருந்ததால் ஆசையை அடக்கிக்கொண்டு, “வாய்க்காலில் இன்னும் தண்ணீர் ஓடுகிறதா?” என்று கேட்டாள்.
“ஆமாம் அம்மா; இன்னும் முழங்காமுட்டுத் தண்ணீர் ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.”
வள்ளிநாயகி உலகத்தைப்பற்றி அறிந்திருந்த விஷயமெல்லாம் அவளுக்குக் கிருஷ்ணன் சொல்லித் தெரிந்ததுதான். அவன் சிறு வயசிலிருந்தே அவர்கள் வீட்டில் மாடு மேய்த்துக்கொண்டு வளர்ந்தவன். வள்ளி குழந்தையாய் இருந்தபோது எப்பொழுது பார்த்தாலும் அவன்தான் அவளைத் தூக்கிக்கொண்டு திரிவான். அவளுக்கு நடக்கத் தெரிந்த பிறகு கையைப் பிடித்துப் பல இடங்களுக்கு அழைத்துக் காண்டு போவான்.
அவள் பார்வையற்றவள் என்பது அடிக்கடி அவனுக்கு மறந்துபோய் விடும். திடீரென்று, “வள்ளியம்மா ! இதோ பாத்தியா, இந்தச் செடி எவ்வளவு பூத்திருக்கு!” என்பான். இல்லாவிட்டால், இதோ பார் கிளியை!” என்பான்.
வள்ளி, குரல் வந்த திசையைப் பிடித்துக் கொண்டு தன் முகத்தை நிமிர்த்தி அவன் முகத்தைப் பார்ப்பாள். “பூவா? அது எப்படி இருக்கும், கிருஷ்ணா ?” என்பாள்.
பாவம், கிருஷ்ணனைக் கடவுள் நாவன்மையுடைய ஒரு கவியாகப் பிறப்பித்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்! அவனோ படிப்பு வாசனையே இல்லாத பட்டிக்காட்டுச் சிறுவன். புஷ்பங்களையும் கனிகளையும் அவன் எவ்வாறு வர்ணித்து வள்ளிக்கு உணர்த்துவான் ? மனோகரமான மாலை நேரத்திலே தோட்டத்தினுள் நுழைந்தால் பலவிதமான பட்சிகள் இன்னிசை பாடிக்கொண்டிருக்கும். வள்ளி நாயகியின் காதுகள் அந்த இன்னிசையைப் பருகும். ஆனால், அந்தப் பட்சிகளின் அழகையும், அவை கொஞ்சிக் குலாவி விளையாடும் ஒய்யாரத்தையும் சொற்களின் மூலம் சித்திரங்களாய்த் தீட்டி, அவள் மனக் கண்களைப் பிரமிக்கச் செய்யும் வித்தையைக் கிருஷ்ணன் அறியமாட்டான். மலருக்கு மலர் ஓடி ளையாடும் பட்டாம் பூச்சியின் சிறகிலுள்ள வர்ண விசித்திரங்களையே விவரிக்கத் தெரியாத அவனுக்கு, உதய சூரியனின் அழகையும், சூரியாஸ்தமனத்தின் ஜோதியையும், பூர்ண சந்திரனின் எழிலையும் வர்ணிக்க எவ்வாறு முடியும்? ஆகையால், “கிளி எப்படி இருக்கும்?”, “நட்சத்திரம் எப்படிப் பிரகாசிக்கும் ?”, வானவில் என்றால் என்ன ?” என்றெல்லாம் வள்ளி நாயகி கேட்கும்போது கொல்லென்று கிருஷ்ணன் சிரிப்பான். பிறகு தன்னால் முடிந்தவரையில் அவள் கேள்விக்குப் பதில் சொல்ல முயல்வான். மாடுகள் மேய்க்கும் வயற்காட்டைப் பற்றியும், நடுவில் ஓடும் வாய்க்காலைப் பற்றியும் அவன் சொல்லித்தான் வள்ளி நாயகி அறிவாள்.
“வாய்க்காலில் இன்னும் தண்ணீர் ஓடுகிறது” என்று சொல்லிவிட்டுக் கிருஷ்ணன், “ஊறுகாய் கொடுத்தயே ; ரொம்ப நல்லா இருந்ததம்மா” என்றான்.
வள்ளி ஒருகணம் பேசாமல் நின்றாள். பிறகு, “உங்கம்மா சோறு கட்டிக் கொடுக்கறாளே, உனக்கு வெறுஞ் சோத்தையா கொடுக்கறா, ஊறுகாய்கூட இல்லாமே ? வெறுஞ் சோத்தை எப்படித்தான் திங்கறது?” என்றாள்.
“என்ன அம்மா பண்ணறது? அம்மாவுக்கு வயசாயிடுத்து. ஒண்ணும் பண்ண முடியலே.”
“அது வாஸ்தவந்தான். பாவம், கிழவி எத்தனை நாளைக்குத்தான் உழைப்பாள்?”
“அதுக்குத்தாம்மா பாக்கறேன், சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு!”
வள்ளிநாயகியின் ஹ்ருதயத்தில் திக் என்றது. ஒரு விநாடி அதன் ஓட்டமே நின்றுவிட்டதுபோல் இருந்தது.
“கல்யாணமா! உனக்கா கல்யாணம்? யாரைப் பண்ணிக்கப் போறே?” என்றாள்.
“முத்தையா பிள்ளை இருக்காருல்ல, அவர் பொண்ணு தொரையம்மா இருக்குல்ல -“
அவனை மேலே பேசவிடாமல் வள்ளிநாயகி திடுக்கென்று, “மாடுகளுக்குத் தண்ணி காட்டினியா? வைக்கோலை எடுத்துப் போடு. லக்ஷ்மியை நேத்து மாதிரி ஈரத்திலே கட்டாதே” என்றாள்.
3
கிருஷ்ணன் தன் வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். கறு கறு என்று இருள் கவிந்து உலகத்தை மூடிக்கொண்டது. வானத்திலே மேலண்டைக் கோடியில் பளிச்சென்று ஒரு நட்சத்திரம் தோன்றிக் கண்ணைச் சிமிட்ட ஆரம்பித்தது. ‘எல்லாருக்கும் முந்தி நான் உதித்து விட்டேன்’ என்று அது பெருமை அடித்துக் கொள்வதுபோல் காணப்பட்டது.
வள்ளிநாயகி மறுபடியும் வீட்டுக்குள்ளிருந்து மாட்டுத் தொழுவத்தை நோக்கி வந்தாள். பகலும் இரவும் அவளுக்கு ஒன்றுதான். வெளிச்சமாக இருந்தாலும், இருட்டா யிருந்தாலும் அவள் கண்களுக்கு மட்டும் உலகம் எப்போதும் அந்த காரத்தில் ஆழ்ந்ததாகவே இருந்தது. அன்றிரவு அவள் பார்வை மட்டுமின்றி அவள் ஹ்ருதயமும் இருளுக்கு இருப்பிடமாகிவிட்டது.
‘கிருஷ்ணனுக்குக் கல்யாணம், கிருஷ்ணனுக்குக் கல்யாணம்’ என்று ஓயாமல் அவள் மனம் முணு முணுத்துக்கொண்டே இருந்தது. பிரபஞ்சத்திலே அவள் மனசைப் பாசத்தினால் அதிகமாகப் பிணைத் திருந்த பொருள் கிருஷ்ணன்தான். மற்றவர்கள் கிருஷ்ணனைத் தங்கள் கண்களினால் மட்டுமே பார்த்து அறிந்திருந்தார்கள்.
வள்ளியோ அவனைத் தன் ஹ்ருதயத்தினாலேயே பார்த்து அறிந்தவள். தகப்பனாரிடமும் தாயிடமும் அவளுக்கு அதிகத் தொடர்பு இல்லை. அவள் தகப் பனார் தமக்குப் பிள்ளைக் குழந்தை ஒன்று பிறக்க வில்லையே என்று ஏமாற்ற மடைந்து எதிலும் அதிக மாக மனசைச் செலுத்தாமல் தம் காலத்தை முடித்துக் கொண்டார். தாய்க்கோ பெண் பிறவிக் குருடாய் இருக்கிறதே என்று குறை. அதனால் தாயும் மகளும் ஒருவரை ஒருவர் சரியாக அறிந்து கொள்ளக் கூடவில்லை. அந்த மாட்டுக்காரப் பயல் கிருஷ்ணன் ஒருவன்தான் அந்தக் குருட்டுப் பெண் ணுக்கு ஓர் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவினான். அவன் தனக்கே சொந்தமானவன் என்று அவள் மனமும் அவனிடம் ஏகபோக உரிமை கொண்டாடும் நிலையை அடைந்திருந்தது. ‘கிருஷ்ணன் ஒரு நாள் கல்யாணம் செய்துகொள்வான், வேறொருத் திக்குச் சொந்தமாய் விடுவான்’ என்ற எண்ணம் அது வரையில் அவள் மனத்தில் தோன்றினதே இல்லை.
அந்த உண்மை அன்று அவளுக்கு வெளி யானதும் உலகத்தைப்பற்றி அவள் மனத்தில் ஏற்பட்டிருந்த தோற்றமே முழுவதும் மாறிப் போய் விட்டது. அவளைப் பொறுத்தவரையில் என்றுமே உதித்திராத சூரியன் அன்று திடீரென்று அஸ்த மித்துவிட்டான்.
கிருஷ்ணனுக்கு இரண்டாவதாக அவள் மனசில் இடம் பெற்றிருந்தது லக்ஷ்மி எனற பசு மாடுதான். தொழுவத்துக்குள் சென்று லக்ஷ்மியின் அருகில் உட்கார்ந்தாள் வள்ளி. அந்த வாயில்லாப் பிராணி தன் கண்ணில்லா எஜமானியின் உணர்ச்சி களை அறிந்து கொண்டதுபோல் கழுத்தை நீட்டி அவள் கையை நக்கியது. லக்ஷ்மி, லக்ஷ்மி’ என்று முணுமுணுத்துக்கொண்டு வள்ளி அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அவள் கண்களில் நீர் துளித் தது. கிருஷ்ணனுடன் தான் விளையாடின விளையாட் டுக்களும், பொழுதைப் போக்கின விதங்களும் ஞாப கத்துக்கு வந்தன.
மாடுகளைக் குளிப்பாட்டுவற்காக அவளையும் அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் தோட்டத்துக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த ஆற்றுக்குப் போவான். வள்ளியை ஆற்றங்கரையில் ஒரு மரத்தின் வேரின் மேல் உட்கார வைத்துவிட்டு ஆற்றில் இறங்குவான். ‘ஹை, ஹை’ என்று மாடுகளைத் தண்ணீரில் விரட்டு வான். ‘டப டப் என்று டப் என்று தண்ணீரைக் கைகளால் தட்டுவான்; நாலுபக்கமும் வாரி இறைப்பான். மாட்டின் முதுகின்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு, “ஆண்டிப்பண்டாரம் உனை வேண்டிக்கொண் டேனே” என்று சந்தோஷமாய்ப் பாடிக்கொண்டு சவாரி செய்வான். வாயைத் திறவாமல், அவன் உட்கார வைத்த இடத்தில் இருந்துகொண்டு இந்த வேடிக்கைகளையெல்லாம் சிரித்த முகத்துடன் தன் காதுகளினாலேயே கவனிப்பாள் வள்ளி.
பொங்கல் வந்துவிட்டால் கொம்மாளந்தான். மாலையில் மாடுகளை அலங்கரித்து வண்டியில் பூட்டிக் குழந்தையோடு குழந்தையாய் வள்ளிநாயகியையும் தூக்கி வண்டியில் உட்காரவைத்துக் கிருஷ்ணன் வண்டியைத் தெருக்களில் கனவேகமாய் ஓட்டுவான். வண்டிச் சக்கரத்தில் சாட்டைக் கம்பைக் கொடுத்துக் கடகட என்று சப்தம் செய்வான். குழந்தைகள் சந்தோஷ மிகுதியால் ‘ஹோ’ என்று இரைவார்கள். வள்ளிநாயகி பயந்துபோய்க் கிருஷ்ணன் தோள்பட் டையைக் கட்டிக்கொள்வாள்.
இப்படிக் குழந்தைப் பருவத்தில் நடந்த சம்ப வங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வரவர வள்ளி நாயகியின் துக்கம் அதிகமாயிற்று ; “வள்ளி !” என்று உள்ளே தாய் கூப்பிடும் குரல் கேட்டதும் கையுங் களவுமாய்ப் பிடிப்பட்ட திருடனைப்போல் திடுக்கிட்டுக் கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
4
பனங்குடிக் கிராமத்தில் கிருஷ்ணனை அறியாத வர்கள் இல்லை. ஆகையால் கிருஷ்ணனுக்குக் கல் யாணம் என்றால் சொல்லவேண்டுமோ! ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் கல்யாணத்திற்கு வந் திருந்தார்கள்.
இரவு பத்து மணிக்குப் பூர்ண சந்திரன் தன் மோகன நிலவை அள்ளிப் பொழிந்துகொண் டிருந்த நேரத்தில், கல்யாண ஊர்வலம் புறப்பட்டது.
தங்கள் தெருக்கோடியில் மேளச்சத்தம் கேட் டதுமே வள்ளிநாயகி தன் வீட்டில் ஜன்னல் எதிரில் வந்து தன் குருட்டுக் கண்களால் தெருவைப் பார்ப் பதுபோல் நின்றாள். அவள் மனத்தில் இவ்வளவு நாட்களாய் அலை மோதிக்கொண் டிருந்த கொந்தளிப் பெல்லாம் அடங்கிப்போய் அதற்குப் பதில் ஒரு தெய் விகமான அமைதி குடிகொண் டிருந்தது.
கிருஷ்ணனுக்கு அந்த வருஷம் கல்யாணம் நடப்பதே அவள் முயற்சியினால்தான் சாத்திய மாயிற்று. ஒரு நாள் அவள் அவனைப் பார்த்து, “கல் யாணம் எப்போது கிருஷ்ணா?” என்று கேட்ட போது, அவன் வருத்தத்துடன், “இந்த வருஷம் இல்லையம்மா” என்றான்.
“இந்த வருஷம் இல்லையா? அதென்ன?”
“ஆமாம் அம்மா. கல்யாணம்னா சும்மா ஆயிடுமா அம்மா? பணம் வேண்டாமா? எங்கிட்டே பணம் ஏது? சிறுகச் சிறுகச் சேர்த்து அடுத்த வருஷம் பண்ணிக்கலாமின்னு இருக்கேன். இல்லாவிட்டால் இந்த வருஷமே ஆகிற கல்யாணந்தான்.
திடீரென்று வள்ளிநாயகியின் மனம் சந்தோஷத் தால் பூரித்தது. கிருஷ்ணனுக்கு இந்த இந்த வருஷம் கல்யாணம் இல்லை ! இன்னும் ஒரு வருஷத்துக்கு அவன் துரையம்மாளுக்குச் சொந்தமாக மாட்டான் !
அடுத்த விநாடியே வள்ளிநாயகி துக்கித்தாள். தான் சந்தோஷப்பட்டதற்காகத் தன்னையே கடிந்து கொண்டாள்.
‘பாவம்! கிருஷ்ணன் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று எவ்வளவு ஆவலாக இருந்தான் ! எவ்வளவு சந்தோஷத்துடன் அதை எதிர்பார்த் தான்! இந்த வருஷம் கல்யாணம் இல்லை என்று சொன்னபோது அவன் குரலில் எவ்வளவு துக்கம் தொனித்தது ! அவன் வருத்தத்தைப் பார்த்து, தான் சந்தோஷப்படுவதா?’
இப்படி அவள் நினைத்துக்கொண் டிருக்கையில் கிருஷ்ணன் கேட்டான்:
“என் கல்யாணம் கிடக்கட்டும், வள்ளியம்மா ; உனக்கு இந்த வருஷம் கல்யாணமாமே?”
“சீ, விளையாடாதே” என்றாள் வள்ளி கோபத்தோடு.
“விளையாட்டு அல்ல, அம்மா; நிசமாய்த்தான் கேட்கிறேன். அம்மாவும் கணக்கப் பிள்ளை ஐயாவும் பேசிக்கிட்டிருந்தாங்க; காதிலே விழுந்திச்சு.”
“பைத்தியமா உனக்கு?”
“இல்லை, நிசம்மாத்தானம்மா.”
வள்ளி ஒன்றும் புரியாமல் கோபத்துடன் உள்ளே சென்றாள். படுத்துக்கொண்டிருந்த தாய் எதிரில் போய் நின்று, “எனக்கா கல்யாணம்?” என்று வினவினாள்.
“ஆமாம்; உட்கார். சொல்லுகிறேன்.”
“மாப்பிள்ளை யார்?”
“எல்லாம் உன் மாமன் தான். மூணு வருஷத்துக்கு முந்தியே அவனுக்கு உன்னைக் கொடுக்கணும்னு பேச்சு நடந்தது. அவன் இஷ்டப்படாமல் வேறு இடத்தில் பண்ணிக்கொண்டான். மூணு வருஷம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் உன்னை இரண்டாந்தாரமாகப் பண்ணிக்கொள்ள இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறான்.”
“எனக்குக் கல்யாணம் வேண்டாம், அம்மா.”
“சே, அசடு ! பெண்ணாப் பிறந்தால் கல்யாணம் ஆகாமல் இருக்க முடியுமா? மாமன் இல்லாவிட்டால் உன்னை வேறு யார் பண்ணிப்பார்கள்? நம் வம்சம் இத்துடன் அழிந்தல்லவா போய்விடும் ? நம் நிலபுலன் ளெல்லாம் என்ன ஆகிறது?”
வள்ளிநாயகி பெருமூச்செறிந்தாள். மாமனுக்குக் குழந்தை வேண்டும்; தாய்க்கோ பணம் பிரதானம்; தன்னை விரும்புவார் ஒருவரும் இல்லை.
“சரி அம்மா; வேறொரு விஷயம் சொல்ல வந்தேன்.”
“என்ன?”
“கிருஷ்ணனும் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறானாம். ஆனால், பணம் இல்லாததால் தடையாய் இருக்கிறதாம்.”
“சரி, அதற்கென்ன? நம் கிருஷ்ணனுக்குத்தான கல்யாணத்துக்குப் பணம் இல்லாமல் போயிட்டுது? கொடுத்தால் போகிறது. கணக்கப் பிள்ளை ஐயா இப்பத்தான் பணம் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனார்.”
“சரி, அப்படியானால் இப்பவே கொடுத்துவிடு” என்று வள்ளிநாயகி, “கிருஷ்ணா!” என்று கூப்பிட்டாள்.
கிருஷ்ணனுக்குத் தன் காதுகளையும் கண்களையும் நம்ப முடியவில்லை. அடக்க முடியாத மகிழ்ச்சியுடன் பணத்தை வாங்கிக்கொண்டு, “வள்ளியம்மா, நீயே என் குலதெய்வம் !” என்று அவள் காலில் விழுந்து நமஸ்கரித்தான்.
5
மேளச்சத்தம் வரவர அருகில் நெருங்கிவந்தது. நாகஸ்வரக்காரன் சங்கராபரண ராகத்தை அலசிப் பிழிந்துகொண்டிருந்தான். அவர்கள் வீட்டெதிரில் வந்தபோது காந்த விளக்குகளின் வெளிச்சம் பளிச் சென்று ஜன்னல் வழியாய்ப் பிரவேசித்து வள்ளியின் முகத்திலும் பின்னால் இருந்த இருந்த சுவரின் மேலும் துள்ளித் துள்ளி விளையாடியது. வள்ளியின் கால்கள் அயர்ந்தன. ஜன்னல் கம்பிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பதுமைபோல் நின்றாள்.
கல்யாணக் கூட்டம் அந்த வீதியைக் கடந்து சென்றது. வள்ளிநாயகியின் உடலில் உயிர் வந்தது. குங்குமச் சிமிழை எடுத்து நெற்றிக்கு இட்டுக் கொண்டாள். பூங்கொத்தை எடுத்துக் கூந்தலில் சொருகிக்கொண்டாள். கொல்லைப்புறம் சென்று மாட்டுத் தொழுவத்தை அடைந்து, லக்ஷ்மியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அதன் நெற்றியில் முத்தமிட்டாள். பிறகு தோட்டத்தைத் தாண்டித் தட்டுத் தடுமாறிக்கொண்டு வெளியே வந்தாள்.
எதிரில் அரசலாறு பரிசுத்தமான ஞானிகளின் இதயம் போல் தண்ணீர் தெளிந்து காணப்பட்டது. காற்றடித்து நீர்ப்பரப்பிலே அலைமோதும்போது, ஆகாயத்தில் பிரகாசித்துக்கொண்டிருந்த பூர்ண சந்திரனின் உருவம் லக்ஷக்கணக்கான வைரங்களை வாரி இறைத்ததுபோல் தண்ணீரிலே பிரதிபலித்தது.
வள்ளிநாயகி சற்று நேரம் பிரமை பிடித்தவள் போல் நின்றாள். மறுநிமிஷம் ‘குபுக்’ என்று சப்தம் கேட்டது தண்ணீரில் குமிழ்கள் தோன்றி ‘டுப்’ பென்று வெடித்தன.
வெகு தூரத்திலிருந்து, அந்த நாகஸ்வரக்காரன் ஸஹானா ராகத்தை ஆலாபனம் செய்யும் ஓசை காற்றிலே தவழ்ந்து வந்தது.
– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.