(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘ஐயய்யோ அம்மா, என்னை கொல்றானே… பாவி” செவிப்பறையைத் தாக்கி மனசை அறுத்த கதறல்.
அடிபட்டவனைப்போல அதிர்வோடு விழித்துக் கொண்ட சிறுவன் ராமசாமி தூக்கக் கலக்கத்தில் திகைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தான். அடுப்பங்கரை வாசலில்…
அந்தப் பிஞ்சு மனம் அதிர்ச்சியில் வெட வெடத்தது.
அம்மாவின் கூந்தலைப் பற்றியிழுத்து, ஒரு சுண்டு சுண்டி, ஓங்கிய கை முதுகில் ‘டம்ம்’ மென்று மோத… அய்யா ஆங்காரமாய் கேட்கிறார். “ஏண்டி, பொட்டைக் கழுதைக்கு அம்புட்டுத் திமிரா?”
அம்மா முகமெல்லாம் வியர்வை – கண்ணீர். வாய் கோணிக் கொண்டு அழுகிறாள். கதறுகிறாள்.
“அடப்பாவி மனுசா… என்னை. எதுக்கு கொல்றே? ஐயய்யோ, கேக்க நாதியத்துப் போய்த்தானே வதைக்குறே?” என்று அழுகையோடு சேர்ந்து புலம்புகிறாள். குரல் கரகரத்து கம்முகிறது.
“காட்லே உசுரைக் குடுத்துட்டு வர்ற மனுஷனுக்கு ஒரு வாய் கஞ்சி காய்ச்சி வைக்க வக்கில்லே! ஒனக்கு நெஞ்சுலே அம்புட்டு கொழுப்பா?”
கண்களும் வாயும் அனல் துண்டுகளை வீச, கோபம் தாங்காமல் மட்டியைக் கடித்துக்கொண்டு காலை ஓங்கி அம்மாவின் நெஞ்சில் உதைக்க
ராமசாமிக்கு நெஞ்சில் வலிக்கிறது. அய்யாவைப் பார்க்கவே மனசு மிரள்கிறது. சுவரோடு ஒட்டிக் கொண்டான்.
“நா என்ன செய்யட்டும்… கொத்து வாங்கிட்டு வந்து, சோளத்தை உடைச்சு உலையிலே போட்டிருக்கேன். பசி எடுத்துட்டா, நிதானமுமா அத்துப் போகும்? பொட்டச்சியை அடிக்கிறதுதான் பெரிய வீரமாக்கும்? த்தூ!'”
“என்னடீ சொன்னே…?” என்று ஆங்காரக் குரலோடு காலை ஆவேசமாய் ஓங்க, ராமசாமி மிரட்சியுடன் நகர்ந்து கொள்கிறான்.
“இங்க என்ன சத்தம்?” என்ற சத்தத்துடன் நிழலுரு வங்கள்… சில பெண்கள். அவர்கள் அம்மாவைத் தொட்டுத் தூக்குகின்றனர். ராமசாமியின் சுவாசம் சுதந்திரமாக இயல் பாகிறது.
வந்த பெண்கள் அய்யாவைச் சினத்துடன் அதட்டு கின்றனர்.
“ச்சே… என்னய்யா நீ! பொம்பளைப் புள்ளையைப் போட்டு இப்படி வதைக்கிறீயே… நீயெல்லாம் மனுஷந் தானா!”
அய்யா முகத்தில் ஒரு லஜ்ஜை. கண்கள் தாழ்ந்து அலைகின்றன.
கரகரத்த குரலோடு அம்மா வைக்கும் ஒப்பாரி, ஒரு சோகமாய் ராமசாமியின் நெஞ்சுக்குள் குத்துகிறது.
அய்யாவின் லஜ்ஜை மீண்டும் ஆவேசமாக மாறுகிறது.
“வேஷக்காரி! அழுது பாசாங்கா பண்ணுதே!”-அனல் பார்வையை வீசிவிட்டு, துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, அங்க நிற்கமாட்டாதவனைப் போல விருட்டென்று வெளியேறினார்.
“ஏண்டி சிறுக்கி, எதுக்கு இப்படி உதைக்கான்? அந்தளவுக்கு நீ என்னடி செய்ஞ்சே?” – ஒரு கிழவி அம்மாவை ஆறுதலாய்க் கேட்கிறாள்.
”நா ஒண்ணும் செய்யலியே…” தலை நிமிராமலேயே முனகும் அம்மா. கண்களிலிருந்து மாலை மாலையாய் கண்ணீர்.
“ஒண்ணும் செய்யாதவளை எதுக்கு அடிக்கான்? அவனுக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? நீ என்னமும் பேசுனீயா?”
“இல்லையே.”
ஒரு பெண் அடுப்பில் அணைந்து கிடக்கும் நெருப்பை மூட்டுகிறாள். சோளக்கழி கொதிக்கிறது. ‘டிப், டிப்’ பென்று சப்தம் வருகிறது. சோளக்கழிக்குள்துடுப்பு கிடக்கிறது.
ஒரு கிழவி இன்னோர் பெண்ணிடம், “அடியே சோத்தைப் பாத்துக் கிண்டிவிடு” என்று உத்தரவிட்டு விட்டு அம்மாவைப் பார்க்கிறாள்.
“சரி சரி… வீடுன்னு இருந்தா சந்தோஷமும் இருக்கும், சண்டையும் இருக்கத்தான் செய்யும். கண்ணீரைத் துடைச்சுட்டு வேலையைப்பாரு. நீங்க போட்ட கூத்துலே அங்க பாரு, ஓம் மகன் அரண்டு கிடக்கான்.”
சகல பார்வைகளும் இவனை மொய்க்க, இவனை வெட்கம் சூழ்ந்துகொண்டது. பலரின் பரிதாபத்துக்கு ஆளாகி நிற்கிற அவலம், அவனுள் ஊசிகளாகப் பாய்ந்தது. உடம்பெல்லாம் கூசி ஒடுங்கியது.
ஆறுதல்கள்… புத்திமதிகள்… அனுதாபங்கள்… இவற்றை விட்டு விட்டு எல்லோரும் போய்விட்டனர்.
அநேகமாக அம்மா ஓய்ந்துவிட்டாள். தூறலைப் போல விசும்பல் மட்டும் கேட்கிறது. மெல்ல நிமிர்கிறாள். மகனைப் பார்க்கிறாள். டவுசர் மட்டும் போட்டுக்கொண்டு, உடம் பெல்லாம் தூசி ஒட்டியிருக்க, முகமெல்லாம் பீதி அப்பியிருக்கிறது.
அவனுக்குச் சங்கடமாக இருக்கிறது. தரையைப் பார்க்கிறான். மீண்டும் நிமிர்கிறபோது…
அம்மாவின் அதே பார்வை. அலுங்காத பார்வை. அடிபட்ட பறவையின் வேதனையைச் சொல்லி அழும் பார்வை.உயிர்ப்பும் உணர்ச்சியுமாக நெஞ்சுக்குள் பாய்ந்து வதைக்கிற பார்வை. அவலமும் கருணையும் கலந்த பார்வை.
அம்மாவின் முகம் மெல்லச் சலனமுற்று, ‘வா’ என்கிறது.
முட்டி மோதும் அழுகையுடன், துடிக்கும் சின்ன உதடுகளுடன்மெல்ல நகர்கிறான். அவள் ஆதரவோடு கையை நீட்டி ‘வா’ வென மீண்டும் அழைக்க, பாய்ந்து மடியில் விழுகிறான். இதயமே வெடிக்க “அம்மா” என்று அலறுகிறான்.
மகனின் பாசத்தில், கருணையில் இளகிப்போன அம்மாவும், அழுகையில் வெடித்துக் கதறுகிறாள். நேரம் நத்தையாக ஊர்கிறது.
“அம்மா… பசிக்குதும்மா…”
“நானும் காட்லே உசுரைக் குடுத்துட்டு வந்து, வீட்லேயும் இந்தப்பாடு படுதேன். உங்கப்பன்காட்லேயிருந்து வந்து நின்னவுடனே வட்டில்லே கொட்டலைன்னா கூரைக்கும் தரைக்குமா குதிப்பான்.நீ, இப்பவே குதிக்க ஆரம்பிச்சுட்டீயாக்கும்…!”
ஓடியே போய்விட்டான் ராமசாமி.
சாப்பிட்டு முடிந்து விளையாடி, வீட்டுக்குள் நுழைந்தான் ராமசாமி. வாசலில் அம்மா.
கன்னத்தில் கைவைத்து ஸ்மரணையற்று உட்கார்ந்திருந்தாள். நினைவுகளில் புதையுண்டு கிடக்கிறாள் என்பதை முகத்தின் சலனமின்மை கூறியது. அவள் பார்வை தெருவின் முடிவில் பதிந்திருந்தது.
“அம்மா…” குதூகலக் குரலில் கூவினான்.
“அய்யா எங்கடா?”
“நா பாக்கலே.”
“பாடுபட்ட மனுஷன். இன்னும் சாப்டலைடா. போய் கூட்டிட்டு வா. அய்யா சாப்ட வேண்டாம்?”
“சாப்ட வேண்டாம்.
ராமசாமி விளையாட்டாகச் சொல்லவில்லை.
“ஏண்டா?”
“அவருதான் ஒன்னை அடிச்சாரே…”
மாலைச் சம்பவத்தின் பாதிப்பு இப்போதும் அவன் முகத்தில் தெரிய, அதில் துல்லியமாய்த் தெரிந்த பாசமும் கருணையும் தாயின் மனசையெல்லாம் நிறைத்துத் தளும்ப, அவனை இழுத்து மடியில் கிடத்தி, மார்போடு சேர்த்து தலையில் மாறி மாறி முத்தமிட்டாள். ஓரிரு நீர்த்துளிகள் தலையில் விழுவதை உணர்ந்தான். மனசு நனைந்தது.
பக்கத்து வீடுகளின் வானொலி பாடலை இசைக்கிறது. எதிர் வீட்டின் எருமை மாடு ‘முடையடித்தது போல’ கதறுகிறது. நாய்கள் குரைக்கிற சப்தங்கள்…
“அம்மா… ஒறக்கம் வருது. ”
“பாடம் படிக்கலே?”
”ம்ம்ம்… ஒறக்கம் வருதும்மா…”
“சரி, படு.”
பாயை விரித்துத் தருகிறாள். வாசலை ஒட்டிக் கதவுக்குப் பின்புறம் படுத்துக் கொண்டான். மாலைச் சம்பவம் கொடூரமாய் மனசில் நிழலாடியது.
கூந்தலைப் பற்றியிழுத்த ரோமம் அடர்ந்த அய்யாவின் கை, அடிப்பதற்காக ஓங்கிய கை. உதைப்பதற்காக மடங்கிப் பாய்ந்த கால். அந்தக் காலில் படிந்திருந்த கரிசல் புழுதி. பாய்ந்து சிதறிய அனல் வார்த்தைகள்…
அய்யா மனசுக்குள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தார்.
மனசின் ஆரவாரம் சன்னஞ் சன்னமாக அடங்கி, ஓய்ந்து, தூக்கத்தில் புதைந்து போனான்.
மூளைக்குள் புகுந்து குடைந்த ஏதோசப்தத்தில் ராமசாமி விழித்துக் கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். இருட்டுத்தான் நின்றது. பக்கத்தில் படுத்திருக்க வேண்டிய அம்மாவைக் காணோம். மெல்லப் புரண்டான்.
அடுப்பங்கரைச் சுவரில் காண்டாவிளக்கு ரொம்பக் குறைந்து எரிந்தது. அதன் அழுக்கான சந்தன வெளிச்சம், இருட்டை எதிர்க்க வலுவின்றித் தவித்தது.
சுவருக்கருகில் விளக்கின் நிழலே பெரிய வட்ட இருட்டாக விழுந்திருக்க, அந்த வட்டத்திற்குள் மனிதச் சலனங்கள். மெல்லிய பேச்சு சப்தங்கள்.
உற்றுப் பார்க்கிறான். பார்வையின் கூர்மை இருட்டுக் குப் பழகி விட, இரண்டு நிழலுருவங்கள். புரியாமையில் மனசு தவிக்க பார்க்கிறான்.
அய்யாவும் அம்மாவும்தான்!
பீதியுடன் கண்களை மூடிக் கொள்கிறான். மனசு ‘திக் திக்’ கென்கிறது. வெளியிருட்டைவிட மனசுக்குள் கறுப்பான இருட்டு. புரியாமை. தவிப்பு.
”சரி சரி… வெறும்வவுறா கிடந்துட்டு, சாப்டுருக்கீக. வெருசா ஒறங்குங்க. ஒடம்புக்கு ஆகாது…”
“ஒடம்புக்கு என்ன கேடு வந்துச்சு!”
“கையை வெச்சுக்கிட்டு பேசாம இருங்களேன். “
“இருக்க மாட்டேன்”
“ஆமா… நீங்க ஒதைச்ச ஒதையிலே உடம்பெல்லாம் புண்ணாகிக் கிடக்கு.”
“இந்தா, அதா அப்பவே சொல்லிட்டேனில்லே, ‘ஏதொ பசி வெறியிலே அப்படிச் செஞ்சுட்டேன், மனசுலே வச்சுக்காதே’ன்னு.”
“அடி அடின்னு அடிச்சுட்டு… மனசுலே வச்சுக்கா தேன்னா, எப்படியாம்? என்ன காரணத்துக்காக என்னை அடிச்சீக? நா என்ன செஞ்சேன்?”
அம்மாவின் மெல்லிய குரல், சிறுவனின் மனசுக்குள் ஊசிகளாகப் பாய்ந்து புண்ணைக் குத்தின.
“சரி சரி… விடு.”
“என்ன விட! நானும் வேலைக்குப் போய்ட்டு வந்து, கொத்து வாங்கப் போனா பண்ணை மாமாவூட்லே ஆள் இல்லே. வீட்லேயும் தான்யமில்லே. கடையிலே கடன் தரமாட்டேன்னுட்டான். நா என்ன செய்யவாம்? சோறாக்க நேரமாச்சுன்னா… வாயிலே வந்தபடி பேசி, மனம் போனபடி அடிச்சா என்ன அர்த்தம்? என்ன ஏதுன்னு விசாரிச்சீகளா?”
“ந்தா… அதான் நீயும் சொல்லிட்டே. நானும் சொல்லிட்டேன். ஒனக்கு கோவம் தீரலேன்னா… இந்தா நீயும் என்னை பதிலுக்கு அடிச்சுக்கோ… சரிக்குச் சரியா போவட்டும்…’
“ச்சே, பேச்சைப் பாரு… பேச்சை..”
பேச்சு சப்தம் நின்றுவிட்டது. ஆனால் சப்தம் வருகிறது. வார்த்தைகளற்ற சப்தங்கள். உணர்ச்சிகளின் சப்தங்கள். பசிக்குப் பதில் சொல்ல முடியாத சமூக முரண்பாட்டில் வெடித்த சண்டையை விழுங்கி ஏப்பமிட்டுவிட்ட தாம்பத்ய வாழ்க்கையின் அன்புணர்வுகளின் ஓங்காரச் சப்தங்கள்… சிறுவன் ராமசாமிக்குப் புரியாத சப்தங்கள்!
ராமசாமிக்கு உறக்கம் போய்விட்டது. கண்களை மூடிக்கொண்டே மிரட்சியுடன் பார்த்தான்.
மாலைச் சம்பவம் மனசுக்குள் நிழலாடியது. ஓங்கிப் பாய்ந்த அய்யாவின் ரோமம் அடர்ந்த கை; ஆங்காரமாய் நெஞ்சில் பாய்ந்த கால்; வியர்வையும், கண்ணீரும் வழிய, வாய் கோணித்து அழுத அம்மா…
இதோ இந்த அய்யா… அம்மா…
அந்தச் சிறுவன் புரியாமையில் மலைத்துப்போய் குழம்பிக் கிடந்தான்.
வாழ்க்கை அந்த அரும்பின் கண்களைக் கட்டி விட்டு, கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது.
– குங்குமம், 22-1-84.
– சிபிகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1987, கங்கை புத்தக நிலையம், சென்னை.