முகம் பார்க்கிற கண்ணாடி ஒன்று நல்லதாய் வேண்டும் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.வீட்டில் இருந்தது பின்புறம் ரசம் போய் அதுவுமின்றி வெவ்வேறு முகங்களைக் காட்டிக் கொண்டிருந்தது.
சரோஜினி அக்காவுக்கு தினசரி காலை அதனுடன் மல்லுக்கு நிற்பதே வேலை. சுவரில் கண்ணாடி அதன் போக்கில் தொங்கிக் கொண்டிருக்க அக்கா தன்முகத்தை அதற்கு ஏற்றாற்போல அனுசரிப்பாள்.
இடுப்பு கூன் போட்டு எல்லாத் திசைகளிலும் திரும்பி கடைசியில் குறிப்பிட்ட இடம் தப்பி பொட்டு விழுந்திருக்கும்.
எரிச்சலில் ஒரு தடவை கீழே வீசி எறிய அதன் ஆயுள் கெட்டி என்பதால் இலேசான விரிசல்களுடன் பிழைத்து விட்டது.
பிறகுதான் கோளாறுகள் அதிகப்பட்டன.. முன்பு சுமாராய்த் தெரிந்த முகம் இப்போது ஏழெட்டு விதங்களில் தெரிய ஆரம்பித்தது.
அக்காதான் முதலில் பொருமினாள்.
“இதைத் தூக்கி எறியணும்..சனி”
அம்மா குளித்து விட்டு ஈரம் சொட்டிய உடம்புடன் புடவையைச் சுற்றிக் கொண்டு வந்து நின்றாள்.
“இங்கே கொண்டா”
கையில் வாங்குவது கூடாது என்கிற சாஸ்திரப்படி சரோஜினி இன்னொரு தரம் அதைக் கீழே வீசி எறிய நினைத்தபோது அம்மாவின் உள்ளுணர்வு கண்டு பிடித்து விட்டது.
“வேணாம்டி.. வெள்ளிக்கிழமை”
அக்கா மனமிரங்கிக் கண்ணாடியைக் கீழே வைத்தாள். அம்மாவுக்குக் கண்ணாடி அனாவசியம். ஒரு ரூபாய் அகல குங்குமப் பொட்டு நெற்றி நிறைக்கப் போகிறது. பிறகு சமையல் வேலைகளில் அதன் அழகு சிதைந்து தீற்றல் மட்டும் அம்மாவின் சுமங்கலித்தன்மைக்கு சாட்சியாய் நிற்கும்.
“ஜெய ஜெய தேவி.. துர்க்காதேவி..”
அம்மாவின் குரல் நடுங்கி ஒலித்தது. இனி ஸ்லோகம் முடியுமோ சமையல் முடியுமோ என்கிற போட்டி. எதுவாயினும் அம்மா பக்தியாய் சமைத்தால் அதன் சுவையே தனி.
இன்று தீர்மானம் நிறைவேறி விட்டது.
‘இது நாள் வரை சமாளித்தது போதும். புதுக் கண்ணாடி வாங்கிவிட வேண்டியதுதான்’
எங்கள் மாநாட்டில் அப்பா சேரவில்லை. அவர் பிறவியிலேயே அதிர்ஷ்டக்காரர். இல்லாவிட்டால் அம்மாவைப் போல ஓர் அருமையான மனுஷி மனைவியாய் வாய்த்திருப்பாளா?
எல்லோர்க்கும் எல்லா வீட்டிலும் முதல் தேதி சம்பளம் என்றால் வீடே குதூகலிக்கும். எங்கள் வீட்டில் அப்படி இல்லை. அப்பா எப்போது சம்பளம் கொண்டு வந்து தருவார் என்று எங்களுக்குத் தெரியாது. ஏன், அப்பாவுக்குமே தெரியாது.ஆனால் ஒரு சிறு முனகல் கூடக் காட்டாமல் அம்மா தன் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தாள்.
பட்சண டப்பா என்றுமே காலியாய் இருந்ததில்லை. குறைந்த பட்சம் பொட்டுக்கடலை வெல்லம் வைத்து இடித்த மாவு மட்டுமாவது நிரப்பப்பட்டு இருக்கும்.
மாநாட்டில் அப்பா கலந்து கொள்ளாததற்கு அவருடைய இன்னொரு அதிர்ஷ்டமும் காரணம். – அவருடைய வழுக்கை.தலை சீவிக் கொள்ள அவருக்குக் கடந்த பத்து வருடங்களில் இயற்கை வாய்ப்பே தரவில்லை. பிறந்தபோதே அப்படித்தான் இருந்திருப்பாரோ என்ற எங்கள் சந்தேகத்தை அம்மாதான் தீர்த்து வைத்தாள்.
அப்பா, அம்மா இணைந்து எடுத்துக் கொணட ஒரே புகைப்படத்தைக் காட்டினாள்.கருகருவென்று பெண்கள் லஜ்ஜைப்படுகிற நீளத்தில் முடியுடன் அப்பா.. கருமையான அடர்த்தியான மீசை வேறு.
“நாப்பது வயசுன்னு சொல்லுவியா” என்றாள் கிசுகிசுப்பாய்.
முடியாதுதான் . அப்பா லேட் மேரேஜ். ‘வேண்டாம்’ என்று மறுத்துக் கொண்டிருந்தவர் அம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டது தன் பூர்வ புண்ணியம் என்றாள்.
வேலைவெட்டி இல்லாத மனுஷனுக்கு எவர் பெண் தரப் போகிறார்கள்? அம்மாவின் குடும்பம் ஏழ்மைக்கும் சற்று கீழே. அப்பா கரை சேர்க்க வந்தவராய்க் கருதப்பட்டதில் அதிசயம் என்ன !
பின் எப்படி முடி கொட்டியது?
சரோஜினி அக்கா பிறந்து நாலைந்து வருடங்களுக்குப் பிறகு நான் பிறந்தேனாம். ஒரு குழந்தைதான் என்கிற தீர்மானத்தில் இருந்தார்களாம். எனது வரவு எதிர்பாராதது.
“நீ பொறந்தப்புறம்தான் அவர் முடி கொட்ட ஆரம்பிச்சுது.. ஒரே வருஷம்.. முழுக்கக் கொட்டிருச்சு” என்றாள் அம்மா பாதி வசவாய்.
நான் மௌனமாயிருந்தேன். என் பெயரை அகாரணமாய் இழுத்ததில் எனக்கு அத்தனை உடன்பாடில்லை. மேலும் அப்பா எனக்கு அறிமுகமானது முதல் இதே தோற்றம்தான். இதனால் பெரிதாய் இழப்பு தோன்றவில்லை.
சரோஜினி அக்கா தன் நெடுநாள் தீர்மானத்தை வெளிப்படுத்தினாள்.
“ஆளுயரக் கண்ணாடி வாங்கணும். புடவை கட்டினா முழு உருவம் தெரிகிற மாதிரி”
கண்கள் ஆசையில் மின்னிக் கொண்டிருந்தன. மானசீகமாய் கண்ணாடி முன் நின்றாள். சிண்ட் ரெல்லா போல சட்டென்று அக்கா உருவம் மாறிப் போனது. அழகு மெருகிட்டுக் கொண்டு ஜொலித்தது.
“அய்ய.. இது என்ன வீடா.. ஷோ ரூமா” என்றேன்.
அம்மாவுக்கும் விருப்பம் இல்லை.
“வீட்டுல வச்சிக்க முடியாதுடி” என்றாள் மெல்ல ஆனால் அழுத்தமாய்.
சரோஜினியின் முகம் இறுகியது.
“எனக்குப் புடிச்சதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்”
அம்மாவுக்கு அவள் மனதை நோகடிக்க விருப்பம் இல்லை.
“விலை ரொம்ப அதிகமா இருக்குமோ” என்ற சந்தேகத்தை வெளியிட்டாள்.
“இருக்கும் .. இருக்கும் ” என்றேன்.
அக்கா என்னை முறைத்தாள். தனது ஆசைக்கு எதிரி என்ற பாவனையில்.
“போய் விசாரிச்சு பார்ப்போம்.. அப்புறம் முடிவு பண்ணலாம்”
அம்மாவுக்கு இதில் உடன்பாடுதான். ‘விலை அதிகம்’ என்று தெரிந்தால் அக்கா மனசு மாறக்கூடும்.
அப்பா பிரஸ்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வருவதற்கு ஒன்பதரை மணி ஆகிவிடும். மாலையில் எல்லோருமாய்ச் சேர்ந்து கடை வீதிக்கு போய் வரலாம் என்று நிச்சயித்தோம்.
அக்கா கீழே கால் பதியாமல் அலை பாய்ந்து கொண்டிருந்தாள்.சேமிப்பு என்று அம்மாவிடம் சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் இல்லை. கண்ணாடி பத்து இருபது ரூபாய்க்குள் அடங்கி விடும் என்பதால் அம்மாவின் மனசில் படபடப்பு இல்லை.
ஆனால் அக்கா எந்த துணிச்சலில் ஆள் உயரக் கண்ணாடி தேடினாள் என்று எனக்குப் புரியவில்லை.
டவுனில் கடை வீதி பரந்துவிட்டது. எது தேவையானாலும் அது கிடைக்கிற அதற்கே உரித்தான ஜாலக்கோடு இருந்தது. ஜவுளி என்றால் வரிசையாய் இருபது ஜவுளிக் கடைகள். தங்கம் என்றால் பதினைந்து ஜுவல்லரி மார்ட். பாத்திரம் என்றால் வரிசையாய் முன் வாசலில் கட்டித் தொங்க விடப்பட்டு மின்னும் எவர்சில்வர், பித்தளைப் பாத்திரங்க்கள். ஒரு தூக்கு வேண்டுமென்றாலும் ரகவாரியாய் தூக்கிலடப்பட்ட தூக்குகள் நிரம்பிய பாத்திரக் கடல்! கடை இல்லை.. கடல்!
பிரமிப்புடன் கூட்டத்தோடு கூட்டமாய் நகர்ந்து கொண்டிருந்தோம். எதையாவது வாங்க அல்லது வாங்கிக் கொண்டு ஆனந்தம் மற்றும் கவலை தோய்ந்த முகங்கள் எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தன.
தனி வரிசையாய்க் கண்ணாடிக் கடைகள். முதல் கடை திருப்தி தரவில்லை. சின்னச் சின்னதாய்க் கண்ணாடிகள். அடுத்ததில் வாஷ் பேசின் மேல் வைக்கிற மாதிரி கண்ணாடிகள்.
அம்மா மிரண்டிருந்தாள். ‘கையில் பணமின்றி ஏன் கடை வீதிக்கு வந்தாய்’ என்று கடை முதலாளிகள் சங்கம் மிரட்டுகிற மாதிரி சுருண்டு காட்சி தந்தாள்.
நான் கூட தைரியமாய் நிமிர்ந்து நடந்தேன். அக்காவின் மனோரதம் நின்றது ஒரு கடை வாசலில். கண்ணாடிக் கடல். பெரிய ஹால் போல கடை அமைப்பு. யார் யாரோ உள்ளே போய் வெளியே வந்தார்கள். யார் ஓனர் என்று புரியாதபடி நின்றவர்கள் அத்தனை பேருமே எங்களை வெறித்தார்கள்.
அக்காவின் காலடிக்கு இணையாய் நானும் வைத்துப் பின் தொடர்ந்தேன். அம்மாவை லேசாக இழுத்துக் கொண்டு.
“என்ன வேணுங்க” என்றான் ஒருவன்.
“கண்ணாடி” என்றாள் அக்கா.
குரல் பிசிறியது.
“என்ன மாதிரி”
“பெரிய சைஸ்ல.. ஆள் உயரம்”
“மாடிக்குப் போங்க”
இதற்கு மேல் மாடியா.
பிரமிப்புடன் நகர்ந்து எதன் மீதும் இடித்துக் கொள்ளாமல் படியேறினோம்.
கண்ணாடி பேக்கிங்க் செய்து வைத்த வைக்கோல்.. காகித ஜல்லி.. அட்டை.. என்று சிதறிக் கிடந்தன.
ஹாலில் ஏதோ வாசனை அடித்து மூச்சு முட்டியது.
மேலே போனால் அதிசயம்!
எங்கு திரும்பினாலும் சரோஜினி அக்கா.. உடன் நான்.. அம்மா.
அம்மா இப்போது மிரட்சியின் உச்சத்தில். புடவையை இன்னும் இழுத்துப் போர்த்திக் கொண்டு குறுகினாள்.
அக்கா சவடாலாய் நின்றாள்.
கைப்பையை ஒரு தரம் சுழற்றி மீண்டும் தோளில் அணிந்தாள்.
என் முகத்தை அத்தனை கண்ணாடிகளிலும் தேடிக் கண்டு பிடித்து குதூகலத்தின் உச்சத்தில் இருந்தேன்.
அக்கா என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எப்படி வேண்டுமானாலும் சமாளிக்கட்டும். இந்த நிமிடம்.. சொர்க்கத்தின் ஆதரவு பெற்ற நிமிடம். இதை இழக்கக்கூடாது.
இமை கொட்டாமல் என் உருவங்களை ரசித்துக் கொண்டிருந்தேன்.
எத்தனை விதமாய் ‘நான்’கள்.
பஸ் ஏறியபோது பத்துரூபாய் பெறுமானமுள்ள சிறிய இலேசாய் நடுவில் கோடு தெரிகிற கண்ணாடிப் பார்சல் அம்மா கையில் இருந்தது. அடுத்த இருக்கையில் நானும் .. அக்காவும்.. எங்கள் பார்வையில் பரவசம் சற்றும் குறையாமல்.
– ஜூலை 2010